... humans, who were identified as life unworthy of life, including but not limited to the criminal, degenerate, dissident, feeble-minded, homosexual, idle, insane, and the weak, for elimination from the chain of heredity. More than 400,000 people were sterilized against their will, while 275,000 were killed under Action T4, a euthanasia program.
1) சிம்மச் சந்திரன். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, சென்னை - பாண்டிச்சேரிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். கண்டக்டர் வந்து....தன்னுடைய இருக்கை..நீங்கள் எழுந்திருங்கள் என்று சொல்ல....மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இன்னொருவர் உக்கார்ந்திருக்கிறார், அந்த சீட்டை காலி செய்து எனக்கு கொடுங்கள்....என்று இவர் கேட்க....கண்டக்டர் பதிலுக்கு ஏதோ சொல்ல... இவரும் ஏதோ சொல்ல.... கண்டக்டர் சிம்மச்சந்திரனின் காலிப்பரை ஜன்னல் வழியாக வீசிவிடுகிறார். பஸ்சில் இருந்த சில ஜனங்கள் இறங்கி அதை எடுக்கு முயற்சிக்கும் போது..... யாராவது இறங்கினால்... அவர்களை விட்டுவிட்டு பேருந்து கிளம்பிவிடும்...என்று எச்சரிக்கிறார். சிம்மச்சந்திரனையே இறங்கிபோய் எடுத்துவருமாறு சொல்கிறார். இவரும் சிரமப்பட்டு இறங்கி போய் தன் ஸ்டிக்கை எடுக்கும்போது....கண்டக்டர் பஸ்சை விசிலடித்து கிளப்பிவிடுகிறார்.
2) பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆட்கள் - தங்களது உரிமைகளைப்பெற (இதையே போராட்டம் நடத்தித்தான் வெளியதெரிய வைக்க வேண்டிய நிலமை) போன வருடம் சென்னையில் போராட்டம் நடத்தியதுப் பற்றி பரவலாக செய்திகள் வந்தததை நம்மில் பலர் கவனித்திருக்கலாம். அந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவம் இது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்களை, போலீஸ் அரெஸ்ட் செய்கிறோம் என்று சொல்லி...வேனில் அழைத்து செல்கிறார்கள். அப்பறம், உங்களை அரெஸ்ட் செய்யவில்லை..அங்கிருந்து கிளப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சொல்லி....செங்கல்பட்டு வரை சென்று இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிடிவாதமாக இறங்க மறுத்து....சென்னைக்கு உள்ளேயே இறக்கி விடுங்கள் என்று கேட்கிறார்கள். சரியென்று சொல்லி...கண்ணகி சிலை பக்கத்தில் விட்டுவிடுகிறோம் என்று அழைத்துச் சென்று.....இரவு இரண்டரை மணிபோல ஒரு இடத்தில விட்டுவிடுகிறார்கள். கடற்காத்து அடிக்கவே, இவர்களும் கண்ணகி சிலை தான் போல என்று நினைத்து....விடியும்வரை அங்கயே இருந்துவிடுவது என்ற முடிவோடு...தூங்கி விடுகிறார்கள். காலையில் அந்தப்பக்கம் வந்த ஒருவர் சொல்லித்தான் தெரிகிறது...அது சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏதோவொரு ஊரின், சுடுகாட்டு பாதை என்று.
ஆட்டோகிராப் என்று ஒருபடம் வந்ததே....அந்த சமயத்தில் எல்லாம் இந்தளவிற்காவது தெளிவாக யோசிக்கத் தெரியாத உயிரினமாகத்தான் இருந்தேன். ஆனால் "ஒவ்வொரு பூக்களுமே' பாட்டை முதல்தடவை பார்க்கும்போதே ஒருவித எரிச்சலே ஏற்பட்டது (சேரன் நல்லது செய்வதாகக் நினைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு முறை அந்தப்பாடலைப் பார்க்கும் பொழுதும் ஒரு மெல்லிய எரிச்சலே ஏற்பட்டது/படுகிறது. நான் என்ன செய்வது). ஒரு ஷாட்டில், பார்வைகுறைபாடுள்ள ஆள் ஒருவர் வருவார். தேவையேயில்லாமல் அவர் கண்களுக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து...அழவிட்டு. என்ன சொல்ல வருகிறார்கள் ? மற்றவர்கள்/உயிரினங்கள் மீது அன்பு தானே வரவேண்டும்....ஏன் பச்சாதாபம் வர வேண்டும் ? இரண்டுக்கும் ஏக வித்தியாசம் உண்டல்லவா. நம்மைப் பார்த்து இன்னொருவர் பச்சாதாபப்படுகிறார் என்றால்...அங்கு முதலில் அடிபடுவது நம் சுயமரியாதை தான். நமக்கு எப்பொழுதும் பரிதாபப்பட (அதோடு, நமது உபதேசங்களை கொட்டவும், நான் இதெல்லாம் படிக்கிறேன்/பார்க்கிறேன்/கேட்கிறேன்/போட்டோ எடுக்கிறேன் - நமது அலைவரிசைக்கு மாற்றாக இருக்கும் ஆட்களை ஜாடைமாடையாக மட்டப்படுத்தவும்) எப்பொழுதும் ஒரு ஜந்து தேவைபட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படியான பரிதாப உணர்ச்சி....ஒரு எழவுக்கும் பயன்படாது என்பதுதான் நிஜம்.
அந்த ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியின் பார்ட் - 1 பாருங்கள். அந்தப் பெண்மணி ப்ளாட்ஃபாரத்தில் ஒருகாலை வைத்து....சின்ன தயக்கத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட குதித்து தான் கடந்து போகிறார். பார்க்கும்போதே சுருக்கென்று என்னமோ செய்கிறது. தினமும் அவர் இவ்வாறுதான் சென்றாக வேண்டும். கோட்டூர்புறத்திற்கு போக வீல்சேர் உள்ளே போகும் பஸ் என்று ஒன்றே ஒன்று தான் உள்ளது போல். இவரும் இன்னொரு பெண்மணியும் பத்து மணியில் இருந்து காத்திருக்கிறார்கள். பஸ் வந்தபாடில்லை. டைம் கீப்பரிடம் கேட்டால், அடுத்த வண்டி பனிரெண்டு மணிக்கு தான்; இதுதவிர வேறு வண்டியில்லை; ஒருவேளை உங்களுக்கு அந்தமாறி வீல் சேர் போகும் பஸ், வேறு பாய்ண்ட்ல் ஓடுவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று இவர்களிடமே கேட்கிறார். இதில் எத்தனை சிக்கல்கள்...எத்தனை மன உளைச்சல்கள் - ஒழுங்கான ப்ளாட்ஃபாரம் இல்லை, பஸ் இல்லை, உள்ள பஸ்களும் இவர்கள் ஏற வசதியாய் இல்லை, வேலைக்கு போயாக வேண்டும், ஆட்டோ மாதிரி வண்டிகளில் போனால் நிச்சயம் காசு அதிகமாகும். இதுவொரு செயின் ரியாக்ஷன் மாதிரி அவர்களது குடும்பம்வரை பாதித்துக்கொண்டே இருக்கும். வீட்டை விட்டு, வேலைக்கு - அன்றாடம் சராசரியான ஆட்கள் செய்யும் வேலை இது - போகும் அடிப்படை விஷயத்திற்கே இவர்கள் இவ்ளோ பாடுபட வேண்டியுள்ளது. இதில் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவது எத்தகையை ஒரு வன்முறையான செயலாக இருக்க முடியும் ? இதுபோன்ற ஒரு சம்பவத்தை ஏதேச்சையாக அன்றைக்கு பார்த்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்......நான் தான் இளகிய மனம்கொண்டவன் ஆயிற்றே......சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் படும்பாட்டை பார்த்தாலே லிட்டர் லிட்டராக கண்ணீர்விடும் புண்ணியாத்மா நான்.. இப்பொழுது கேட்கவும் வேண்டுமா...பொழக்கென்று அழுதுவிடுகிறேன். அவ்ளோதான். நமக்கும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொண்டு..என் பஸ் வந்ததும் ஓடிசென்று ஏறி...அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். இந்த அதீத உணர்ச்சிவசப்படுதலை விட்டுவிட்டு, ஒரு சக மனிதன் மற்றொரு சக மனிதனுக்கு என்ன செய்திருக்க முடியும் ? சரி, எனக்கு உடல்ரீதியாக சில வேலைகளை செய்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்களுக்கு அதில் பிரச்சனை உள்ளது...என்ன செய்யலாம் ? அவர்களை நான் மற்றொரு பஸ்சில் ஏற்றி விடலாமா.....முதலில் அவர்கள் நிச்சயமாக அதனை விரும்ப மாட்டார்கள் (ஏனென்று தெரிந்தவர்கள் இந்தப்பதிவை படிக்க வேண்டியதே இல்லை). அடுத்து, யார் அவர்களை இறக்கி விடுவது ?
மாறாக, போக்குவரத்து கழகத்திடம் சென்று இதுபற்றி ஏதாவது கேட்கவாவது செய்யலாம். பத்துபேர் கேட்டல், ஒரு சின்ன அசைவாவது இல்லாமலா போய்விடும் (ஆனால் நிஜத்தில் நூறுபேர் போய் கேட்டும்/போராடியும் இந்த விஷயம் பெருமளவு அப்படியே தான் உள்ளது). இந்தியாவின் ஒருசில மெட்ரோகளிலாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உண்டு (அது நிச்சயம் போதாது என்பது வேறுகதை). ஆனால், மற்ற எல்லா இடங்களிலும் மாற்றுதிறனாளிகள் யார் உதவியுமின்றி தங்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு குறைந்தபட்ச வசதிகளாவது இருக்கிறதா என்று பார்த்தால்.....ஒரு _______ம் இல்லை. பேங்க், ஸ்கூல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் இதே நிலைமை தான். ஒன்று, அவர்கள் மற்றவர்களது தயவை எதிர்பார்க்க வேண்டும். இல்லையென்றால், படுசிரமப்பட்டு உள்ளே சென்று..மிகுந்த ஆயாசத்துடன் அந்த வேலையை முடிக்க வேண்டும். இதிலேயே அவர்களுக்கு ஏகப்பட்ட நேர விரயமும், உடல் உழைப்பும் போய்விடும். இன்னமும் என்னால் மறக்க முடியாத விஷயம்...நான் படித்த பல்கலைகழகத்தில், பாத்ரூமில்.....மற்றொரு பிரிவைச் சேர்ந்த, போலியோ பாதிப்பிற்குள்ளான மாணவன் ஒருவன்.....உள்ளே தரையில் அந்த ஈரத்துடன் தவழ்ந்து தவழ்ந்து வந்து....சின்ன ப்ளாட்ஃபார்மில் ஏறி...பீங்கான் கோப்பை அருகே உக்கார்ந்து தான் யூரின் போயாக வேண்டும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும்பொழதே...பயங்கரமான நினைவுகளை இது கிளப்பிவிட்டுவிட்டது. என் வயசு தான் அவனுக்கும். மனிதனின் மிகஅடிப்படை தேவை - சிறுநீர் கழிப்பது. அந்த அடிப்படை தேவையை, காலில் உள்ள பிரச்சனையால், ஏகப்பட்ட சிரமத்தைக கடந்து தினமும் படிக்க வரும் ஒருவனுக்கு - சுலபமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு தானே நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்......ஆனால் இங்கு ஏன் எல்லாம் தலைகீழாக இருக்கிறது ? அதேபோல....பஸ் பிரயாணத்தின் போது - நமது அம்மாவோ/தங்கையோ/தோழியோ/சுற்றி இருக்கும் பெண்கள்....எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோமா ?
ஒருவீட்டில் உள்ள கழிப்பறையை /யார் அதை சுத்தம் செய்கிறார்கள் என்பதை வைத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் பற்றி சர்வ நிச்சயமாக சொல்லிவிட முடியும். அதேபோல, ஒரு நாடு பெரிய வல்லரசு நல்லரசு என்றால் அதன் அடிப்படை கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து சொல்லிவிடலாம். சத்தியமாக இது என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. அணுவுலை வேண்டும் என்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அனைத்தும் அதைத்தான் உபயோகிக்கிறது என்று சொல்கிறார்கள். சரி. போகட்டும். சந்தோஷம். ஆனால் வளந்த நாடுகளில்/ வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இப்படி மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் ஒண்ணுக்கு அடிக்க கூட இடம் தேடி ஓட வேண்டிய நிலைமையில்லையே ? அங்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பூர்த்திசெய்துவிட்டு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். நம் நாட்டில் செய்யப்பட வேண்டிய அடிப்படை விஷயங்களே ஏகத்துக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு.....
ஊமை, நொண்டி, அலி, மெண்டல்......இவர்களுக்கு எல்லாம் இந்தியா முழுவதும் ஒரே பெயர் தான். தனியாக தமிழ் ஊமை, கன்னட நொண்டி, மராத்திய அலி, பைத்தியம் என்று யாரும் மொழி/இனம்/ஜாதி/மாநிலத்தை வைத்தெல்லாம் இதில் பிரித்துபேசுவதில்லை. என்னவொரு ஒருமைப்பாடு.சகோதரதத்துவம். இதில் தமிழன், திராவிடம், ஹிந்தி , லொட்டு லொசுக்கு என்ற பேச்சு வேற. எரிச்சல் மண்டிக்கொண்டு தான் வருகிறது. உலகின் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை - நம் நாட்டுக் குழந்தை. இப்படிபிறப்பு முதல், வளரும் பொழுது பாலியல் கொடுமைகளில் ஆரம்பித்து...ஏகப்பட்ட பிரச்சனைகள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இதில் சத்துக்குறைபாடு வேறு இருந்தால்..... recoverable என்ற நிலையில் இருந்து ஒரேடியாக பலஆட்கள் irrecoverable நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.
(நம்நாட்டில் அவர்கள் வாழ்கையை மிகுந்த சிரமத்திற்கு இடையே தள்ளித்தான் ஆக வேண்டும். எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு அரசியல் கட்சியும், இதுவரை மாற்றுத்திறனாளிகள் குறித்த தெளிவான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் படுமோசம். தமிழ், திராவிடம், தனிக்கட்சி என்று பேசிப்பேசியே கண்ணெதிரே உள்ள பல முக்கிய விஷயங்களை கவனிப்பாதோ...பேசுவதோ இல்லை...ஓ..சாரி..நமக்குதான் எல்லாம் நன்றாகத்தானே உள்ளது (ஆண் என்றால் இன்னும் வசதி). நமக்கெதுக்கு இதுபற்றிய பேச்செல்லாம்....என் கவனம் எல்லாம் என் பெயரை கணேஷ் என்று எழுதுவதா...கணேசு என்று எழுதி என் தமிழ் ஆர்வத்தை நிரூபிப்பதா என்பதில் தான் இருக்கிறது. இதுவரை தமிழுக்காக ஒரு மயிரையும் கிழித்தது இல்லை. குறைந்தபட்சம் விக்கியில் என் துறை சார்ந்த கட்டுரை எழுதியிருப்பேனா என்றால்...அதுவும் இல்லை. ஆனால் பேச்சு மட்டும் வாய்கிழியும். செய்வதற்கும்/மாற்றப்பட வேண்டியதுற்கும் ஓராயிரம் விஷயங்கள் நம்முன்னாடி தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது)
இந்த பவர்பாய்ண்ட் - இந்திய சென்சஸ் டிபார்ட்மெண்டே தயாரித்தது. இதில் பல முக்கிய புள்ளிவிவரங்கள் உள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.
இன்னொரு பகீர் விஷயமும் உண்டு. இன்ஷுரன்ஸ். நானும் முடிந்தமட்டும் பல இன்ஷுரன்ஸ் கம்பனிகளின் தளத்திற்குச் சென்று பார்த்துவிட்டேன். ஒருசில இன்ஷுரன்ஸ் தவிர, பலதளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் இன்ஷுரன்ஸ் திட்டங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சரி, LIC - Indian Postal Insurance போன்றவைகளாவது மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி திட்டங்களைப் பற்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறதே என்று சந்தோசப்படும்பொழுது...பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியை சேர்ந்த - பார்வை குறைபாடுள்ள ஒரு வக்கீல், indian postal insuranceல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அவருடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - 5 லட்சம். ஆனால் அவருக்கோ....1 லட்சம் மட்டுமே. மற்றொரு கொடுமை....மாற்றுத்திறனாளிகள் அதிக ப்ரீமியம் தொகை செலுத்தியாக வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை......மருத்துவ செலவு, உபகரணங்கள், குடும்ப செலவு என்று ஏகப்பட்ட விஷயங்களோட சேர்த்து அவர்கள் ப்ரீமியம் தொகையை அதிகளவில் செலுத்தியாக வேண்டும். என்ன எழவு லாஜிக் இது என்று யாராவது விளக்கவும். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தாலும்..தற்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்ஷுரன்ஸ் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதை கொஞ்சம் விளக்கினால் நலம்
நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக - அமர்த்தியா சென், 2004ஆம் ஆண்டு உலக வங்கியின் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய....இக்கட்டுரையைச் சொல்லலாம்.
பொளேரென்று முகத்தில் அறை வாங்கியதைப் போன்ற உணர்வு பலஇடங்களில் நிச்சயம் எழுந்தே தீரும். முக்கியமாக இந்த வாக்கியங்கள் "Given what can be achieved through intelligent and humane intervention, it is amazing how inactive and smug most societies are about the prevalence of the unshared burden of disability". இதில் unshared burden....என்னைப் பொறுத்தவரை இந்த burdenனை எப்பொழுதுமே நாம் பலரும் தட்டிக்கழிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறோமேயன்றி....சுமையை பகிர்ந்துகொள்ள முயற்சிப்பதேயில்லை. உடல் உழைப்பு - பொருளாதாரம் - கல்வி என்று பலவிதங்களிலும் இதனை நாம் செய்ய முடியும். ஒரு வேலையைச் செய்தால்......பதிலுக்கு அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும்.....இப்படியாக மட்டுமே எனது யோசனைகள் எல்லாம் குறுகிக்கொண்டே வருவது எனக்கே நன்றாக தெரிகிறது (இதனை படிப்பவர்கள் சார்பிலெல்லாம் என்னால் கருத்து சொல்ல முடியாதுதானே... அதனால் நீங்களே இதனைப்பற்றி யோசித்துக்கொள்ளுங்கள்). இவருக்கு இந்த வேலையை செய்து கொடுப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்....இந்த பதிவை எழுதுவதால் எனக்கு என்ன கிடைக்கும்....யாருக்காவது பொருளாதாரரீதியிலான வேலை செய்தால் அதிலிருந்து என்ன கிடைக்கும்......ஒருவிதமான முதலீட்டு மனநிலைக்கு நான் பழகப்பட்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது.
இதில் மூன்று முக்கிய விஷயங்களை அமர்த்தியா சென் முன்வைக்கிறார்
1) Utilitarianism (தமிழில் என்ன ?) - தனிபட்ட மனிதர்களின் மகிழ்ச்சி/திருப்தி/சந்தோஷம் - இவைகளின் அடிப்படையில், ஒருவருக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை மதிப்பிடுவது
2) ஒருவரது பொருளாதார நிலைமையை வைத்து மதிப்பீடு செய்வது
3) மூன்றாவது - Rawlsian Theory of justice. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம், அவனுக்கான வெளி, உரிமைகள் அவனுக்கு அவனுக்கு விருப்பமான விஷயங்களின் மீது இருக்கும் தேர்வு...அடிப்படையான நல்லெண்ணங்கள் மூலம்....சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
Rawls's theory of justice revolves around the adaptation of two fundamental principles of justice which would, in turn, guarantee a just and morally acceptable society. The first principle guarantees the right of each person to have the most extensive basic liberty compatible with the liberty of others. The second principle states that social and economic positions are to be (a) to everyone's advantage and (b) open to all - Source: Link
இந்த விஷயத்தை என்னால் எளிமையாக விளக்கமுடியவில்லை. தெரியவில்லை. ஓரளவுக்கு இதனை நான் புரிந்துகொள்ள இந்த வீடியோவும், இதுவும் உதவியது
(இதையெல்லாம் கணியன் பூங்குன்றனார் அப்போதே சொல்லிவிட்டார். பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இப்போது சொல்லப்படும் பல கோட்பாடுகளின் பீட்டா வெர்ஷனாக இதனைச் சொல்லலாம்)
மாற்றுத் திறனாளிகள் என்று வரும்பொழுது இந்த மூன்று விஷயங்களும் அடியோடு அடிபட்டு போய்விடுகிறது. ஒன்றும் வேண்டாம்.....திண்டுக்கல் மாதிரி ஒரு ஊரில் மாற்றுத்திறனாளி ஒருவர் சினிமா பார்க்க பிரியப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அதிலொரு பொழுதுபோக்கு...சந்தோஷம். கொஞ்சம் பணவசதிபடைத்தவராக இருந்தால், கார் - பிரத்தியேக சேர் என்று கொஞ்சமாவது சமாளிக்கலாம் (சரி, அப்படியே அவர் உள்ளே சென்றாலும்.....எப்படியான கழிவறை வசதி இருக்கும் ?). கொஞ்சம் பின்தங்கிய நிலையில் உள்ள ஆள் என்றால் சொல்லவே வேண்டாம். கைவண்டி போன்றவற்றை தான் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள். அவர்களால் எப்படி உள்ளே செல்ல முடியும் ? மிகச்சாதாரண ஒரு பொழுதுபோக்கு அம்சம்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. இதுபோன்ற எந்த பிரச்சனையும் சந்திக்காத நாம்...படத்தின் இன்டர்வெல்லில் காண்பிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் ட்ரைலர் தரம் குறித்து காரசாரமாக விவாதித்திக் கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசத்தின் தாக்கம் குறித்து ஓரளவு நாம் யோசித்தாலே கொஞ்சமேனும் மாற்றம் ஏற்படும் என்று நம்பலாம். மற்றொரு மிகமுக்கியமான விஷயத்தையும் அமர்த்தியா சென் தனது பேச்சில் குறிப்பிடுகிறார். "Earning handicap & Conversion handicap". மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கிடைபப்தும்/ஒரு நிலையான வருமானம் வருவதிலும் உள்ள சிரமம் & வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், அந்த வருமானத்தை எவ்வாறு/எதற்காக செலவிடுகிறார்கள் என்பதும் தான் அது. இன்ஷுரன்ஸ் - ஒரு நல்ல உதாரணம். தவிர, மாற்றுத்திறனாளிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒரு வேலையை செய்ய - அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் - செலவிடப்படவேண்டிய நேரம் மிகதிகமாகவே உள்ளது. சொந்தமாக/பிற வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளை இந்த நேர விரயம் பெரிதும் பாதிக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதுயில்லை.
Jacques Audiard, மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உரிய மரியாதையோடும் உரிமைகளோடும் நடத்தும் ஃப்ரான்சில் Rust & Bone மாதிரியான படத்தை எடுப்பதற்கும், நம்நாட்டில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி/அவர்களை வைத்து எடுக்கப்படும் படத்திற்கும்/படைப்பிற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டுதானே. இங்கு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என்று பலரையும் கேவலமாகத்தான் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவே பயங்கர கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை எந்த சினிமாவும்/படைப்பும் நேர்மையாக, இந்தியாவில் பதிவு செய்துள்ளதாக எனக்குத்தெரியவில்லை. வரும் ஒன்றிரண்டு படைப்புகளும் "கவித்துவமான, யதார்த்த" வாழ்கையை பிரதிபலிப்பதாக நீங்கள் நம்ப, உங்களுக்கு பூரண உரிமை உண்டு. அதில் யாரும் தலையிடவே முடியாது. ஆனால் நிதர்சனம் அதுவல்ல ஐயா. மிகக்கொடுமையானது. மாற்றுத்திறனாலிகள் பலரும் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சகிப்புத்தன்மையை "யதார்த்தம்" என்று நம்பினால்....ஒன்றும் செய்ய முடியாது. நானும் இதுவரை ஒன்றுமே கிழித்துவிடவில்லை தான். அந்த கையாலாகாததனம்தான்...இப்படி போலிபாவனைகளுடன் கூடிய பதிவாக வந்திருக்கிறது. பொருளாதாரரீதியில் நான் ஏதாவது செய்வது கூட....நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றஉணர்வின் காரணமாகவே இருக்கும். Escapist mentality. தனிமனிதனுக்கும் - சமூகத்துக்கும் உள்ள இந்த கட்டமைப்பு பற்றி அடிக்கடி யோசிப்பது உண்டு. எப்பொழுதுமே ஒருவித எரிச்சலான மனநிலைக்கு அது கூட்டிச்சென்று விடுகிறது. சூது, காமம் - இது இரண்டிற்கும் தான் அதிகமாக பயப்படுவேன் என்று பாரதி சொன்னமாதிரி...."இந்த சமூகம் இருக்கே...."என்று ஆரம்பிப்பவர்களைக் கண்டு எனக்கு படுபயங்கர பயம் உண்டு. அப்படியே ஓடிவிடுவேன். சமூகம் என்ன MiBல் வரும் வேற்றுகிரகவாசியா.....எங்கிருந்தோ வந்து இங்கே இறங்கி....தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க. நான்/நீங்கள்/அவன்/அவள்/அது - இதானே சமூகம். Collective conscience தானே அது. நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு அதிர்வும் எங்காவது முடிந்துதானேயாக வேண்டும் ?
போன வருடம் சுப்ரீம் கோர்ட், அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இதுவே 1995ல் வந்த சட்டத்தின் விளைவாக 18 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு - இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை - வந்துள்ளது.
போன மாதம் Rights of persons with disabilities bill 2014 ஒன்று நடைமுறைக்கு வந்தது. இதுபற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இதன் சாதகபாதகங்கள் குறித்து இன்னும் நான் படிக்க வேண்டியுள்ளது
புதிய தலைமுறையில், ஒவ்வொரு ஞாயிறும் வரும் ரௌத்திரம் பழகு மிகநல்ல/அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்று. அதனை முன்னின்று நடத்துபவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும். ஒரேயொரு வேண்டுகோள். வாய்ஸ் ஓவரை அவர்கள் குறைத்தால்....நிகழ்ச்சி எங்கோ சென்றுவிடும். வாத்து மேய்க்கும் ஒருவரைப் பற்றி - போனவாரம் என்று ஞாபகம் - நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். நள்ளிரவு. அவர் தீவட்டியை பற்ற வைக்கிறார். இது எல்லாமே மிகத்தெளிவாக விஷ்வலாக தெரிகிறது. அதை ஏன் வாய்ஸ் ஓவரில் வேறு சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே ஒருவித சஞ்சலமாகவே இருந்தது. சரியாக, இந்த ரெண்டு வாரத்தில் இணையத்தில்/Facebookல் போட்டப்பட்ட சில பதிவுகளும் காமென்ட்களும்.....சற்று எரிச்சலை ஏற்படுத்திவிட்டது (நானெல்லாம் எரிச்சல்படுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை தான்).
While in the hospital, i was thinking....maybe i should live a more thoughtful life...now that they have repaired me. Then my eyes caught the ass of the nurse, who just made my bed and my dick stood up instantly. Not a chance.
- Takeshi Kitano, படுபயங்கரமான விபத்திற்குப் பிறகு
தகெஷி கிடானோ: மேடை நகைச்சுவையாளர்/நடிகர்/இயக்குனர்/படத்தொகுப்பாளர்/பாடகர்/தயாரிப்பாளர்/ஓவியர்/ எழுத்தாளர்/கவிஞர் என்று அவருக்கு டஜன் முகங்கள் உண்டு. கவனிக்க வேண்டிய விஷயம், எந்தத்துறையையும் அவர் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கவில்லை. It just happened என்பார்களே.....அப்படித்தான் நடந்தது. பட்டென்று அவரைப்பற்றி புரியவைக்க, அவரின் இந்த வேலையே போதும்
ஹிரோஷிமா - நாகசாகி- இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம், ஜப்பான் முழுமைக்குமே சோதனையான காலங்கள். அந்தப் பின்னாற்பதுகளில் குடிகார சூதாடி அப்பா(
பெயர், கிகுஜிரோ); ஏகப்பட்ட உடன்பிறப்புகள்; தனது சக்திக்கு மீறி உழைப்பை கொட்டிக்கொண்டிருந்த தாயார் என்று நெருக்கடியான சூழ்நிலையில் தான் கிடானோ வளர்ந்தார். கிடானோவின் அம்மா குழந்தைகளின் படிப்பில் மிகக்கண்டிப்பானவர். கடுமையான உழைப்பின் காரணமாக அனைத்து குழந்தைகளுக்கும் அதனை சாத்தியமாக்கினார். கடும்வறுமை நிலை குழந்தைகளது படிப்பை எவ்விதத்திலும் பாதிக்க அவர் விடவில்லை. ஆனாலும் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத கிடானோ தவளைகளின் டிக்கியில் பட்டாசுகளை கொளுத்திவிட்டு விளையாண்டு கொண்டிருந்தார். பயங்கர குசும்பனாகவே அவர் வளர்ந்தார். அவரது எல்லா படங்களிலும் இந்த குசும்புத்தனத்தை யாரும் எதிர்பாக்காத நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதேயில்லை. ஒருபக்கம் ஜாலியாக வாழ்கையை கழித்துக்கொண்டிருந்தாலும், முக்கித்தக்கி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு என்ஜினியரிங் படிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறார்.
இங்குதான் அவரது வாழ்க்கைமுறை அடியோடு மாறத் தொடங்கியது. 18 வயதில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் விட்டேத்தித்தனமான, Rebel without a cause மனநிலை. ஜப்பானிய மொழியில் இதற்கு “Futen” என்று பெயர். ஹிப்பித்தனமான வாழ்க்கைமுறை. மணிக்கணக்காக ஜாஸ் இசையை கேட்டுக் கொண்டும், Sartreல் ஆரம்பித்து Camus வரை 60களில் மேற்குலக சித்தாந்தங்களை அசைத்த அனைவரையும் அங்குதான் கண்டுகொண்டார். இந்த காலகட்டத்தில் அவரை பாதித்த இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை என்று அனைத்து விஷயங்களும் வெவ்வேறு வடிவில் பின்னாட்களில் அவரது படைப்புகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இந்த விட்டேத்தி மனநிலை உச்சத்திற்கு போய், தனக்கான வாழ்க்கையை வாழாமலேயே செத்து விடுவோமோ என்ற ஞானோதயத்தின் காரணமாக படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். இன்னதென்று இல்லாமல், கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்துகொண்டு நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தாலும் வருங்காலம் பற்றி ஒரு முக்கிய முடிவெடுக்கத் தவறவில்லை. அது - காமெடியனாக ஆவது. இந்த முடிவை அவரெடுக்க பல தீர்க்கமான காரணங்கள் உண்டு. சிறுவயதில் அவர் எதைச் செய்தாலும், அம்மா - குடும்பம் - ஆசிரியர் என்று அனைவரும் சொல்லிவைத்தது போல, இதை செய்யாதே - அதை செய்யாதே - இதெல்லாம் பாவம் - பேசக்கூடாத விஷயம் என்று பயங்கரமாக அவரை கட்டுப்படுத்தவே செய்தனர். ஆனாலும் காமெடியனுக்கு இந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாதே. கிடானோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "As a comedian says and does what he thinks is funny, by expressing himself, the choice of becoming one was another act of defiance. Thus to defy became self-realization and the means to become independent and live my own life".
இங்கிருந்துதான் அவரது ஒரு ஈகோ – Beat, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கிறது. கொஞ்சகொஞ்சமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஆரம்பித்து, ஒரு சுபயோக தினத்தில் இன்னொரு நடிகரும் இவரும் சேர்ந்து The Two Beats என்ற பெயரில் ஸ்டான்ட்–அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆரம்பத்தில் “நல்ல” பிள்ளையாக நிகழ்ச்சியில் வலம்வந்த தகெஷி, போகப்போக உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த பல ஆற்றாமைகளை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார். சமூகத்தின் பல புனித பிம்பங்களை போகிறபோக்கில் உடைக்க ஆரம்பித்தார். எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தனது தாயார் முதல் ஆசிரியர்கள் வரை தடுத்தார்களோ, அதெல்லாம் அந்நிகழ்ச்சியின் வாயிலாக செய்ய ஆரம்பித்தார். நம்மைத் தான் இத்தனை நக்கல் செய்கிறார் என்று மக்களுக்கு பிடிபடவே பலமாதங்கள் ஆயிற்று. பயங்கர பகடியுடனே அனைத்து விஷயங்களையும் சொன்னதன் விளைவு - நிகழ்ச்சி அமோக வெற்றி. ஜப்பான் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் அந்நிகழ்ச்சி கொண்டுபோய் சேர்த்தது.
எண்பதுகளின் காலகட்டத்தில் தான் அவரது மற்றொரு ஈகோ – தகெஷி வேறுமாதிரி வெளிப்படத் துவங்கினான். புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஒஷிமா நாகிஷாவின் Merry Christmas Mr Lawrence என்ற மிகமுக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தத. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே, சைக்கோவாகக் கூட தொலைக்காட்சியில் சீரியஸ் வேடங்களிலும் நடித்தார். ஆனால்.......ஜப்பானிய மக்கள் அவரை அவர் நினைத்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. பழைய பீட் கிடானோவாகவே பார்த்தனர். மிகுந்த எரிச்சலுடன் இதனை ஒரு நேர்முகத்தில் அவர் பதிவு செய்துள்ளார். “நான் மேடை நிகழ்ச்சி நடத்தும் பொழுது.....பார்த்தவர்கள் சிரித்தனர். என் நோக்கமும் அதுதான். ஆனால், மிகுந்த சீரியஸாக நான் படத்தில் நடித்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். படுபயங்கர அதிர்ச்சியாக இருந்தது”. ஓஹோ.....என்னை இப்படித்தான் பார்க்கிறீர்களோ.....ஒருநாள் இதற்கு வேறுமாதிரி பதில் சொல்லிக்கொள்கிறேன் என்று அவர் முடிவெடுத்தது அப்பொழுதான். தன்னைத்தானே கட்டுடைத்துக் கொண்டு வேறுமாதிரியான ஆளாக வெளிப்பட வேண்டும் என்று முனைப்பு தோன்றியதும் அப்பொழுதிருந்துதான்.
1989. Violent Cop என்றொரு படம் ஆரம்பிக்கப்படுகிறது. முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் லீட் ரோல் செய்யும் வாய்ப்பு. ஆனால் இயக்குனர் படமாக்கும் முறையுடன் கிடானோவால் ஒன்ற முடியவில்லை. பல Takeகளாக இயக்குனர் எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடானோவைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது spontaneous reactioனாக இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. கிடானோ இவ்வாறு பேசிக்கொண்டு திரிவதை கேள்விப்பட்ட இயக்குனர், கிடானோ படத்தில் நடிப்பதாய் இருந்தால் நான் வெளியேறிவிடுவேன் என்று மிரட்ட...தயாரிப்பாளர் இதனை கிடானோவிடம் சொல்ல.....படத்தை நானே இயக்குகிறேனே என்று டக்கென்று களத்தில் குதிக்கிறார். படங்களின் தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாது. சொல்லப் போனால் அதிகளவில் படங்கள் கூட அவர் பார்த்ததில்லை. தான் படித்த, தன்னை பாதித்த அனைத்து விஷயங்களையும் (Futen வாழ்க்கைமுறை....நினைவுக்கு வருகிறதா ?) படத்தின் உள்ளே கொண்டுவருகிறார். ஆக்சன் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், உணர்வுப்பூர்வமான காட்சிகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் போன்ற எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், தான் நினைத்ததை செய்யத் தொடங்குகிறார். விளைவு......உலகிற்கு கிடானோ என்ற Auteurரின் வரவு. அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களில் இருந்தும் இன்றும்கூட Violent Cop தனித்துத்தெரிவதைக் காணலாம்.
ஜப்பானிய கலாச்சாரத்தில் – மௌனத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்வதில் ஆரம்பித்து.....மரியாதை வரை பல அடுக்குகளில் மௌனம் அங்கு ஒரு அனுபவமாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒருவர் பேசும்பொழுது மற்றொருவர் படக்கென்று குறுக்கிடுவதையும், மற்றொருவர் அமைதியாக இருக்கும் தருணத்தை தேவையில்லாமல் கெடுப்பதையும் மிகப்பெரிய அவமதிப்பாகவே அங்கே கருதுவார்கள். ஏன் பல ஜப்பானிய மாஸ்டர்களின் படங்களில் பல இடங்களில் மௌனமாக கேமரா அசைவற்று நிற்கும் என்பதற்கான விடையும் இதுதான்.
அப்படியான மாஸ்டர்களுக்கெல்லாம் மாஸ்டர் தான் – யஜிரோ ஓசு. குரோசாவாவிற்கும் ஒசுவிற்கும் உள்ள வித்தியாசம், சத்யஜித் ரேவிற்கும் ரித்விக் கட்டகிற்கும் உள்ள வித்தியாசம். குரோசாவாவிடம் சற்று ஹாலிவுட் தன்மை இருக்கும். ஒசுவிடம் முழுக்க முழுக்க ஜப்பானிய தன்மை மட்டுமே நிரம்பியிருக்கும். பார்வையாளர்களை தனது மௌனமொழியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடுவார். அப்போது தொடங்கி....கிடானோ வரை இந்த மௌனம் ஜப்பானிய படங்களில் முக்கிய அம்சமாகும்.
1991ல் A Scene at the sea படம் வெளிவருகிறது. குழந்தைத்தனம் கலந்த அவரது ஆர்டிஸ்டிக் முகம் வெளிப்படத்தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். அதேபோல, கிடானோவின் ஏறக்குறைய அனைத்து படங்களிலும் கடல் நிச்சயம் பங்குபெற ஆரம்பித்ததும் இந்தப்படத்தில் இருந்துதான். அதற்கடுத்து வந்த படம் தான் Sonatine. உலகம் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் சேர்த்த படம். குறிப்பாக அமெரிக்காவிற்கு. அமெரிக்காவில் வீடியோ கடை ஒன்றில் எண்பதுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவனை தகெஷியின் திரைமொழி பயங்கரமாக பாதிக்கிறது. பின்னாட்களில் அந்த இளைஞன் எடுத்த பல படங்களிலும் தகெஷியின் பாதிப்பை முழுமையாக உணரலாம். அதே இளைஞன் தான், Sonatine திரைப்படத்தை அமெரிக்காவில் கொண்டுபோய் சேர்த்தது (அந்தாளின் பெயர் ?) Sonatine - கிடானோவின் ட்ரேட்மார்க் ரகளைகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற படம் அது. யகுசா குழுவை கிடானோ தனது படங்களில் காட்ட ஆரம்பித்ததும் அதிலிருந்துதான். எல்லாவற்றையும் தாண்டி Sonatine படத்தில் மிகமுக்கியமானதொரு விஷயம் இருந்தது. கிடானோவின் பல படங்களில் இசையமைப்பாளரான ஜோ ஹிஷாஷியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “his most bleak film”. படம் பார்த்தவர்களுக்கு இதற்கான காரணம் புரியும். மிகுந்த மனஉளைச்சலுடன் கிடானோ திரிந்துகொண்டிருந்த காலம் அது. கொதிகலன் போல் எந்நேரமும் யார் மீதாவது எரிந்துவிழுந்து கொண்டிருந்தார்.
1994. ஒரு படுபயங்கரமான விபத்து. எப்படி நடந்தது என்று இன்றுவரை அவருக்கே சரியாகத் தெரியவில்லை. உடலின் ஒருபக்கம் முழுமைக்கும் செயலிழந்துவிட்டது. மிகநீண்ட போரட்டத்திற்கு பிறகே முகத்தில் கொஞ்சமாவது அசைவுகளை அவரால் கொண்டுவர முடிந்தது. இதன் காரணமாகவே அவரது முகம் இப்பொழுதும் சலனமற்று, பாவனையற்று இருக்கும். இந்த விபத்து அவரது வாழ்கையை, அடியோடு மாற்றியது என்று ரெடிமேடாக சொல்வோமே.....அப்படியல்லாமல் நிஜமாகவே தலைகீழாக மாற்றியது. இந்த விபத்திற்குப் பிறகு மிகநேர்மையான இன்டர்வியுவை அவர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தார். முகத்தின் ஒரு பக்கம் எவ்வித அசைவும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையில், ஒரு கட்டத்தில் உடைந்து அழுது......தான் செய்த பல தவறுகளை ஒப்புக்கொண்டார். அந்த காலகட்டத்தில் தான், சிகிச்சையின் போது வீட்டில் இருக்கும் சமயங்களில் ஓவியம் வரைய ஆரம்பித்தது. இந்த விபத்திற்கு பிறகு வந்த படங்கள் அனைத்திலும் ஓவியங்கள் தவறாது இடம்பெற ஆரம்பித்தன. அதன் உச்சமாக வந்த படம் தான் Hana-bi. எனக்கு மிகப்பிடித்த கிடானோவின் படம்.
மிகப்பிடித்த கிடானோவின் காட்சியமைப்புகளில் ஒன்று. முழுப்படமும் பார்த்தாலொழிய இதன்வீரியம் புரியாது. சென்டிமென்ட் இசையைப் போலவே தோன்றக்கூடிய வாய்ப்பு ஏகத்துக்கும் உண்டு.
ஓகே. இதுவரை Arihantன் General Knowledge 2014 போல, செய்திகளாகவே பார்த்த உணர்வுதான் எனக்கிருக்கிறது. Hana-biக்குப் பிறகு அவர் எடுத்த படங்கள், அதுபற்றிய விஷயங்கள், மேல சொன்ன பல விஷயங்கள்....இவை அனைத்தும் எனக்குத் தெரிய வந்தது இந்த டாகுமென்டரி மூலமாகத்தான். அதனால், ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக இந்த டாகுமென்டரியை பார்த்துவிடுவதே நலம்.
Slim Shady, Beat Takeshi என்று Alter-Egoகளின் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அவர்கள் தங்களைத் தாங்களே பகடி செய்துகொள்வதாகட்டும், கட்டுடைத்துக் கொள்வதாகட்டும்..... அதுவொரு தனிஅனுபவம். பல இயக்குனர்களின் படங்களைப் பார்த்தவன் என்று முறையில் இதனைச் சொல்கிறேன்...இன்றைய உலக சினிமா அரங்கில் தகெஷி கிடானோ பாணியில் படமெடுக்கக்கூடிய ஒரே ஆள்......தகெஷி கிடானோ மட்டுமே. அவரது பாதிப்பை டாரண்டினோவில் ஆரம்பித்து.... நமது அனுராக் காஷ்யப், மிஷ்கின் வரை பலரிடமும் பார்க்கலாம். ஆனால், தகெஷி படங்களில் யாருடைய சாயலும், பாதிப்பும் துளிகூட கிடையாது. சர்வநிச்சயமாக இதனைச் சொல்ல முடியும். இதற்கு காரணம், அவர் “உலக திரைப்படங்களை” பார்த்து வளர்ந்த ஆள் இல்லை; திரைப்படங்கள் தொடர்பான படிப்பு படித்தவரில்லை; தொழில்நுட்பம் அறிந்த ஆள் இல்லை; இப்படிதான் சினிமா இருக்க வேண்டும், இங்குதான் ஷாட்டை முடிக்க வேண்டும், திரைக்கதை எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும், இப்படி பல வேண்டும்கள் பற்றிய எவ்வித முன்முடிவுகளோ, பழக்கமாமோ இல்லாத ஆள் அவர். இதுவே அவரது படங்களின் மிகப்பெரிய வரம்.தான் உள்வாங்கிய விஷயங்களை வெளிப்படுத்த அவருக்கு ஒரு மீடியம் தேவை. பெரும்பாலான சமயங்களில் சினிமாவை அதற்காக பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவே. வேறுதுறையை அவர் தேர்ந்தெடுத்திருந்தாலும் இப்படிதான் ஒரு ஆளுமையாக வளர்ந்திருப்பார்.
கிடானோ போன்ற “Auteur”களின் படைப்புகள் அனைத்துமே, சுய பிரதிபலிப்புகள் (Self Reflexive). வாழ்க்கை – சமூகம் - தத்துவவிசாரணைகள் – பாலினம் – சினிமா – இசை – அரசியல் என்று பல விஷயங்கள் பற்றிய அவர்களது பார்வைகள். இந்தப் பிரதிபலிப்பு என்பது வெறும் அழுகைக் காவியமாக இருந்தால் மட்டுமே மனதை பாதிக்கும்/நெகிழச் செய்யும் படைப்பு, என்ற குறுகிய சந்தில் வைத்து ஒரு படைப்பைப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எள்ளலாக/பகடியாக /பூடகமாக இருக்கலாம். படைப்பாளிகளைப் பொறுத்து அது மாறுபடும். ஹாலிவுட் போன்ற அமைப்பை எடுத்துக் கொண்டால், இதுபோன்ற பிரதிபலிப்புகளுக்கெல்லாம் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதன் காரணமாகவே ஹாலிவுட் Auteurகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் ப்ளாஸ்டிக் வாளிகளைப்போல (உவமை உபயதாரர்: சாரு) Production houseகளில் இருந்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்களை சுவாரசியமான காட்சிகள் மூலம் எப்படிக் கவர்வது......இதுதான் அவர்களது ஆகப்பெரிய நோக்கம். மற்றொரு முக்கிய விஷயம், திரைக்கதை. அது முற்றிலும் மற்றொருவரின் visionனாக இருக்கும். பல இடங்கள் மாறி கடைசியாக ஒரு இயக்குனரிடம் வந்து சேரும். ஸ்டூடியோக்களின் தலையீடுகளையும் சேர்த்துக்கொள்ளவும். இதில் அந்த இயக்குனரின் தனிப்பட்ட பிரதிபலிப்பு எங்கு இருந்துவிடப் போகிறது (வெகு அபூர்வமாக அப்படி நிகழ்வதும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை). Auteur என்பதை வைத்தே நூறு பதிவுகள் எழுதலாம். இப்படித்தான் இருக்க வேண்டும்...என்று எந்தளவுக்கு பார்த்துபார்த்து பிடிவாதத்துடன் படத்தை செதுக்குவார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறிய உதாரணம் - இதோ
இந்தவொரு விஷயத்தின் காரணமாகவே ஸ்கார்சேஸியை Auteurகளில் சேர்ப்பதில் மெல்லிய சிக்கல் உண்டு. அவரது பெரும்பாலான படங்களுக்கான திரைக்கதை அவருடையது கிடையாது. ஆனாலும் ஆரம்பகாலங்களில் அவரது மனநிலையை பிரதிபலிப்பது போன்ற திரைக்கதைகளயே தேர்ந்தெடுத்தார். பல திரைக்கதைகளை கூட சேர்ந்து மெருகேற்றவும் செய்தார். ஆனால் Gangs of new yorkகிற்குப் பிறகு அவரது படங்களில் அவரது தனிப்பட்ட பிரதிபலிப்புகள் பெருமளவில் குறைந்துபோய் – ஷாட் கட்ஸ், இசை, Poetic violence – போன்ற விஷயங்கள் மட்டும் எஞ்சியுள்ளது. அவரே பல இன்டர்வியுக்களில் இதனை ஒப்புக்கொண்டும் உள்ளார்.
அதனால், ஆத்தர்களின் படைப்புகளை பார்க்கும்பொழுது, அவர்கள், தாங்கள் உள்வாங்கியவற்றை கண்ணாடி போல பிரதிபலிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அக்கண்ணாடி அதிகப்படியான வெளிச்சத்தை உமிழலாம்; பாதரசம் போயிருக்கலாம்; திராபையான ஒளியைக் கொடுக்கலாம்; நம்மிடம் கூட பார்வைக் குறைபாடு இருக்கலாம். அதற்காக, நமக்கு பிடிக்கவில்லை – புரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய படைப்புகள் குப்பைகள் ஆகிவிடாது. திரைப்படம் என்றில்லாமல், இசை – ஓவியம் – இலக்கியம் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் தானே.
தனிமை, உச்சபட்ச வெறுப்பு, இயலாமை, வாழ்கையை எதிர்கொள்ளல் இந்தச்சிக்கல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறும் ஒரு கதாபாத்திரமாவது அவரது படங்களில் கண்டிப்பாக இருந்தே தீரும். அதேசமயம், அப்படியே அதற்கு நேர்மாதிரியான இன்னொரு கதாபாத்திரமும் அப்படங்களில் இருக்கும். அதுவும் ஒரு பெண்ணாகவே பெரும்பாலும் இருக்கும். Sonatine, Hana-bi போன்ற படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள். எங்கு தகெஷி மற்ற இயக்குனர்களது பாணியில் இருந்து மலையளவு வேறுபடுகிறார் என்றால், இந்தப் பத்தியின் முதல்வரியில் பார்த்த இவ்விஷயங்களை அவர் திரைமொழியாக்கும் விதம். எங்குமே அழுகையோ, உணர்ச்சியை கறக்கும் இசையோ எதுவும் இருக்காது. மாறாக பகடியாகத்தான் இருக்கும். For me comedy and violence has a lot in common. Just as you expect, comedy always lurks behind the most unexpected of circumstances என்றவர் சொன்னதன் காரணமும் இதுவே. (Black Comedy என்றொரு பதத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கமுடிகிறது. அதன் உச்சங்களில் ஒன்று கிடானோ. அவரது படங்களைப் பார்த்தாலொழிய அக்காட்சிகளைக் குறித்து பேசுவது மிகக்கடினமான ஒன்று)
இன்னொரு விஷயத்தையும் பலதடவை மேல குறிப்பிட்டிருந்த ஞாபகம். கட்டுடைத்தல். தகெஷியின் Takeshis படத்தை எடுத்துக்கொள்வோமே. இரண்டு பிரதான பாத்திரங்கள். பீட் தகெஷி மற்றும் தகெஷி கிடானோ. பீட் தகெஷி - புகழ்பெற்ற நடிகர். தகெஷி – ஸ்டூடியோவில் கோமாளி வேலைபார்க்கும் ஆள். தகெஷியின் முந்தைய படங்களின் காட்சியமைப்புகள், நடிகர்கள் முதற்கொண்டு அத்தனையும் படத்தில் வரும். ஒரு தகெஷி மற்றொரு தகெஷியை கொலை செய்யப்பார்க்கும் முயற்சிகள் எல்லாம் படத்தில் உண்டு. தன்னைத்தானே ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் பகடியின் மூலம் கட்டுடைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தப்படம் அட்டகாச உதாரணம். உலகளவில் இத்தகைய சர்ரியல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த படம் முழுவதுமே கிடானோ பார்வையாளர்களோடு ஆடும் ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம். எந்த கிடானோவை நாம் பார்க்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. பார்வையாளர்களை நக்கல் செய்யவே இந்தப் படத்தை அவர் எடுத்ததாக எனக்குப்படுகிறது. அதுவும் பிம்ப/ஹீரோயிச வழிபாடுகளில் பட்டம் வாங்கிய ஆட்கள் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டும். கிடானோவா....சே....என்னமாதிரி நடிகர்/இயக்குனர்....சான்சேயில்ல....என்று சிலாகிக்கும் அடுத்தநொடி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். மயிறு மாதிரி எடுத்திருக்கான் என்று நினைக்கத் தோன்றும். இந்த முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கிடானோ.
திரைப்படங்கள் குறித்த எவ்வித முன்முடிவுகளும் தெரிவுகளும் இல்லாத ஆள் தகெஷி. அது தொழில்நுட்ப விஷயங்களாக இருந்தாலும் சரி; ஷாட் வைப்பதானாலும் சரி; இசையை பயன்படுத்தும்விதமாக இருந்தாலும் சரி. ஒரு மிகமிகச்சிறிய உதாரணம் இதோ. Hana-Bi படத்தில் வரும் இக்காட்சி. ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவியின் உடல்நிலைக் குறித்து, டாக்டரிடம் தகெஷி பேசிக்கொண்டிருப்பார். முந்தைய காட்சியில் நர்ஸ், வழக்கமான படங்கள் போல கேமராவிற்குள் வராமால்...அவர்களின் டேபிள் அருகே செல்வார். ஆனால் திரும்பி வரும்போது...அப்பொழுது கூட frameமிற்குள் இருக்க மாட்டார்...வந்து அமரும்போது..மிகச்சரியாக கேமராவின் நடுவில் out of focusல் சாவகாசமாக அமருவார். கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கு கேமரா அதேபோலவே இருக்கும். ஏன் இந்தக் காட்சியை இவ்வாறே இருக்க விட்டுவிட்டார் என்று எனக்கு தோன்றியதைச் சொல்லி...உங்கள் யோசனையை கெடுக்க விரும்பவில்லை. கிடானோவின் மொழியைப் புரிந்துகொண்டால் இதெல்லாம் வெகுசாதாரணம்.
அதேபோல, இந்தக் காட்சி. இசையையும் Cutsம். சினிமாவின் மிகஅடிப்படையான, எளிமையான நுட்பங்கள் மூலமே எத்தகைய விளைவை கிடானோவால் ஏற்படுத்த முடிகிறது ! கிடானோ பற்றி பேசும்பொழுது அவரது ஆஸ்தான/எனக்கும் மிகப்பிடித்த இசையமைப்பாளர் ஜோ ஹிசாஷி பற்றி சொல்லியே ஆகவேண்டும். ரொம்ப யோசிக்க வேண்டாம்..மற்றொரு ஜீனியஸ் ஹயோ மியஸாகியின் பிரதான இசையமைப்பாளரும் கூட. ஜோ ஹிசாஷியை இதுவரை கேட்டிராதவர்கள் இதிலிருந்து ஆரம்பியுங்கள். நிச்சயம் பிடித்துப்போகும். குறிப்பாக ராஜா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
கிடானோவைப் பற்றி பக்கம்பக்கமாக, கஷ்டப்பட்டு வலிய திணித்த எழுத்து நடையில் எழுதிக்கொண்டே செல்லலாம். அதைவிட உத்தமம்.....இதோடு நிறுத்திக்கொள்வது. விஷ்வல் மீடியத்தை/அதன் ஒரு மிகப்பெரிய ஆளுமையைப் அவரது படங்கள் மூலம் தெரிந்துகொள்வது தானே நல்ல தொடக்கமாக இருக் முடியும்... ஒருவேளை நீங்கள் முதல்பாரா - இந்தப் பாரா என்று வந்திருந்தால, பதிவின் முதலில் இருக்கும் அந்த படத்தை மட்டும் சில நொடிகள் பாருங்கள். அந்த ரகளை/நக்கல்/வெறுமை/எதிர்பார்ப்பு/எத்தனிப்பு = கிடானோ
கிடானோவை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்றால், Outrage - Outrage beyond இரண்டில் இருந்தும் ஆரம்பித்தால் "சுவாரஸ்யமான" தொடக்கமாக அது அமையும். இந்த பதிவை ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்தது. ஏன் இத்தனை நாட்கள் கழித்து போஸ்ட் செய்கிறேன் என்றால்.....ஒரேயொரு காரணம்...Outrage Beyond. பலமுறை பார்த்த Outrageயை மீண்டும் பார்த்தமுடித்த கையேடு Beyond பார்த்தேன். அடுத்த பாகம் வேறு இதில் வரஉள்ளது. ஜப்பானிய Godfather என்று அடித்துக் கூறலாம். Outrage சீரிஸ் பற்றி தனிப்பதிவே போட்டுக் கொள்கிறேன் (Office Kitano, Kitano Castle - ரெண்டையும் கூகிள்ல அடித்துப்பாருங்களேன்).
This morning an exceptional defecation. Two small turds in the shape of a rhinoceros horns
- 27, July 1952; The Diary of a Genius; Salvador Dali
இந்தப் பதிவை படிப்பதென்ற முடிவில் இருந்தால்............முதலில் இந்த அற்புதத்தை கேட்டு விடுங்கள். உங்களை எந்தவிதத்திலும் ஈர்க்கவில்லை என்றால்....மேற்கொண்டு படிப்பது அசுவாரசியமாகவே இருக்கக் கூடும். முதல்முறை இதனைக் கேட்டபொழுது, i was levitated. கொஞ்சம் உடைந்தாலும் அழுகையாக மாறிவிடக்கூடிய குரல்....அந்த க்ளாப்பிங்.....பியானோ.....எல்லாவற்றிக்கும் மேலே, பட்டென்று நடுவில் அப்படியே ஊடுருவும் ஸின்த் (like the dawn out of darkness....ஆனால் பாடல் வரிகளோ darkness of the dawn. Oxymoron).....பாடலின் வரிகள்.....எங்கேயோ கூட்டிச் சென்றுவிட்டது. இந்தப் பாடலின் மூலம் தான் James Blake பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது. ப்ளேக்ன் இசைக் கோர்ப்பு ஒரு mazeற்க்கு ஒப்பானது. உணர்ந்து கேட்க ஆரம்பித்தால்...எங்கு சிக்குண்டோம், எவ்வாறு வெளியேறுவது என்று ஒன்றும் புரியாது. கேட்பவர்களோட இடைவிடாத பகடையாட்டம் ஆடுகிறார். இதுபோன்ற பல இசைக் கோர்ப்புகள் எனக்கு பரிச்சயம் என்றாலும், ஏன் இந்த ஈர்ப்பு என்று விளங்கவில்லை. 2001: A Space Odysseyன் காட்சிரீதியிலான அனுபவத்திற்கு ஈடானது ப்ளேக்ன் இசை. அதென்னமோ தெரியவில்லை, Blake என்று பெயரில் என்னவோ இருக்கிறது. எனக்குப் பிடித்த மற்றொரு ப்ளேக், William Blake.
தனது பத்தொன்பது வயதில் ஒரு நைட் க்ளப்பில் இந்த இசைக் கோர்ப்பை கேட்க நேரிடுகிறது. Music Programming, குறிப்பாக dubstep மீதான அடங்கமாட்டா காதல் ப்ளேகிற்கு அப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது. ஆறு வயதில் பியானோ வாசிக்கத் தொடங்கி பதினைந்து வயதிற்குள் பியானோவின் அனைத்து க்ரேட்களிலும் தேர்ச்சி; க்ளாசிக்கல் இசை முதற்கொண்டு ஜாஸ் வரையிலான இசை என்று கிளாசிகல் தன்மை சார்ந்துதான் தன் இசை பயணத்தை ப்ளேக் ஆரம்பித்தது. ஆனால் போகப்போக அதில் நாட்டம் குறைகிறது. அதற்கு அவர் சொல்லும் காரணம் "It's been done. I wanted to make sounds that I'd never heard before". இந்த சமயத்தில் தான் Coki’s Hauntedடை கேட்க நேரிடுகிறது. க்ரியேட்டிவ் ஸ்பார்க் எங்கிருந்து வேண்டுமானலும் அடிக்கலாம். அதற்கு இது உன்னதம் - இது அசிங்கம் - இது தேவைப்படாதது - இது இரைச்சல் என்ற வரைமுறைகள் எல்லாம் கிடையாது தானே. பட்டென்று அந்தத் தீ ப்ளேகிற்கு பற்றிக்கொள்கிறது ( "The DJ played a Coki track called Haunted, and it took me so far into my own head that I couldn't work out how it was happening. When I thought of dance music I thought of trance "). க்ளப் இசை.....ராக்.....ஹிப் ஹாப்...ஏன் DJவாகக் கூட இன்னமும் வேலை செய்துகொண்டுதான் உள்ளார். எதையும் அவர் ஒதுக்குவதே இல்லை. ஆனாலும் அவரது இசைக்கான அடிப்படை க்ளாசிகல் இசைதான். க்ளாசிக்கல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு லேயர் பை லேயராக இசைக் கோர்ப்புகளை உருவாக்குகிறார். ப்ளேகிற்கு என்ன மாதிரியான சுதந்திரத்தை ப்ரோக்ராமிங் வழங்கியது ? அவரே சொல்கிறார் “I could record them and look at them, almost physically...graphically....and just chop up what I did like and I didn't like. It didn't have to be all in one take, it could be something I designed from the ground up, visually“ (கவனிக்க: ப்ளேக்ன் இசையை வெறும் டப்ஸ்டெப் என்று சுருக்க முடியாது. சொல்லப் போனால் அவரிடமிருந்து முழுமையான டப்ஸ்டெப் இசைக்கோர்ப்பு ஒன்று கூட வரவில்லை. அதன் தெறிப்புகளை மட்டுமே அவர் கோர்ப்புகளில் கேட்கலாம்).
Dubstep – பலரும் நினைப்பதைபோல இது இசைக்கருவி கிடையாது. டப்ஸ்டப் – சுருங்கச் சொன்னால், மியுசிக் ப்ரோக்ராமிங்ல் ஒருவகை. டப்ஸ்டெப்பிற்கு என்று சில பிரத்தியேக குணநலன்கள் (?) உண்டு. Tempo, Rhythm, Heavy bass & Sub bass. இம்மூன்றும் தான் அதிமுக்கிய விஷயங்கள்.
Tempo (வேகம் என்று சொல்லலாமா) - நமது இதயத்துடிப்பின் டெம்போ, நிமிடத்திற்கு - 72 அல்லவா. அதேபோல், ஒரு டிபிகல் டப்ஸ்டெப்ன் டெம்போ 140 - 150 beats per minute. இதுவே 70 bpm உள்ள டப்ஸ்டெப்களும் உண்டு
Rhythm - இங்குதான் டப்ஸ்டெப் ஒரு கட்டற்ற சுதந்திரவெளி. சொல்லப்போனால் டப்ஸ்டெப்பை பொறுத்தவரை...ரிதம் என்ற வார்த்தையே ஒரு முரண்தொடைதான். டப்ஸ்டெபிற்கென்று ஒரு ரிதம் வடிவம் கிடையவே கிடையாது. அதன் மிகப்பெரிய பலமும் அதுவே. ஒரு சட்டகத்திற்குள் அதனை அடைக்க முடியாது. எல்லாமே ஒரு சிதறுண்ட (Fragmented) வடிவிலேயே இருக்கும்
Heavy bass & Sub bass - பேஸ் இசை மிகஅதிகளவில் இருக்கும். வுர்ர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்வுர்ர்ர்ர்ர்ர்ர்ம் என்று அதிருகிறதே..அதான் பெரும்பாலான டப்ஸ்டெப்களில் பேஸ். சப் - பேஸ் என்பது, மிகக்குறைந்த அளவில் பின்னாடி சன்னமாக ஒலிக்கும். இது கிடாராக இருக்கலாம், கடமாக இருக்கலாம், வயலினாக இருக்கலாம்
இந்த அடிப்படை விஷயங்களை நான் விளக்குவதைவிட, இந்த வீடியோவைப் பார்த்தால் மிக எளிமையாகப் புரியும். இதில், கீழே Gary Cone என்பவரது காமென்டை கவனிக்க . இதைப் பற்றி இங்கேயும் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
டப்ஸ்டெப் - 90களில் ப்ளேக்ன் ஊரான லண்டனில் தான் வளரத்தொடங்கியது. 2000த்திற்கு பிறகு மெல்லமெல்ல அதன் வடிவங்கள் மாறி இன்று அமெரிக்காவைப் பொறுத்தவரை, Brostep என்றும்...இங்க்லாந்து போன்ற நாடுகளில் Post Dubstep என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. அமெரிக்க ப்ரோஸ்டெப், அதிதீவிர aggressive டப்ஸ்டெப் இசை. க்ளப்களை குறிவைத்தே பெரும்பாலான டப்ஸ்டெப்கள் அங்கு கோர்க்கப்பட்டு வருகின்றன. EDM(Electronic Dance Music) + Dubstep என்று எங்கெல்லாம் பேச்சு அடிபடுகிறதோ அங்கெல்லாம் தவறாமல் ஒரு பெயரைப் பார்க்கலாம். Skrillex. Flux Pavillion, Rasco, Skrillex என்று டப்ஸ்டெப் கமர்ஷியல் ஹீரோக்கள் அநேகம் உண்டு. ஆனால் இவர்களது பெரும்பாலான இசை, வெறும் EDM + Party music என்ற அளவிலயேயே தேங்கிவிடுகிறது. Hearing pleasureக்காக வேண்டுமானால் கேட்கலாம். அவ்வளவே. Alternative dubstep வகையை கேட்க விரும்புவர்கள் Benga, Bassnectar, Digital Mystikz போன்றவர்களில் இருந்து தொடங்கலாம். ஆனாலும், இவர்கள் அனைவரின் இசைக் கோர்ப்பும் – ஹாலிவுட் படங்கள் மாதிரி, style over substance மாதிரியான விஷயங்களே. டப்ஸ்டெபின் அதிரடிக்கும் இசை நம்மை திணறத்திணற மூழ்கடிக்குமே தவிர....நமக்கான ஒரு வெளியை இவர்களது இசை நிச்சயமாக உருவாக்காது. வெறும் தொழில்நுட்ப அளவிலயே பெரும்பாலான சமயங்களில் நின்றுவிடுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இன்றுவரை முழுமையான Dubstep இசை வெளிவரவில்லை என்பதே நிதர்சனம். Heavy Synth + Weird beats என்பது மாதிரியான இசையை ரஹ்மான் 90களிலேயே ஆரம்பித்துவிட்டார். மிக சமீபமாக Ek deewana tha & கடல், இரண்டிலும் டப்ஸ்டெப்பின் மெல்லிய சாயலை தொட்டிருந்தார். யுவன், மூன்று பேர் மூன்று காதலில் ஒரு டப்ஸ்டெப் வகைப் பாடலைக் கொடுத்திருந்தாலும்...அதுவும் டப்ஸ்டெபின் முழுமையான வடிவம் இல்லை.
அமித் த்ரிவேதி. இந்தப் பாடல். Skirillexன் புகழ்பெற்ற டப்ஸ்டெப்களின் பிரதியாகவே இருந்தாலும்...அட்டகாசமான பாடல் என்பதில் சந்தேகமேயில்லை. முழுமையான டப்ஸ்டெப் வகைப் பாடல் என்றே சொல்லலாம். ஸ்னேஹா கன்வல்கர் – MTVn Sound Trippin. அதகளம். இந்த Sound Trippinல் ஸ்னேஹாவின் அனைத்து எபிசோட்களுமே செமத்தியானவைகள். நூரன் சகோதரிகளின் கீழே இருக்கும் பாடல்....Desi dubstep (சிலபல வருடங்கள் முன் ரஹ்மான் தனது முகநூலில் இதனைப் பகிர்ந்திருந்தார். இதே சகோதரிகள் தான் Highwayன் Patakha Guddi பாடலைப் பாடியது).
மேலே ப்ளேக் சொல்லியிருக்கும் Visually என்ற வார்த்தை மிகமுக்கியம். ப்ரோக்ராமிங்ல் ஒவ்வொரு ஏற்ற – இறக்கதிற்கும் ஒரு விளைவு உண்டு (Crests & Troughs). ஒவ்வொன்றையும் மிகமிக நுணுக்கமாக செதுக்கியாக வேண்டும். இந்த இடத்தில் இந்த துணுக்கை சேர்க்கும் பொழுது இன்னமாதிரியான வெளிபாடு இருக்கும் என்பதை உருவகப்படுத்திப் பார்த்தாக வேண்டும். இதுதான் நல்ல - சிறந்த - ஜீனியஸ் இசையமைப்பாளர்களுக்கிடையே இருக்கும் வித்தியாசம். ப்ரோக்ராமிங் இசை என்பது ஒரு கட்டற்ற சுதந்திரம். கியூபிசம் போன்றது. கற்பனைக்கும் எட்டாத இசைவெளிகளை(Soundscapes) அதில் உருவாக்க முடியும். முழுக்க முழுக்க அது தனிமனித படைப்பூக்கத்தின் வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருக்கும். தயைகூர்ந்து சில நிமிடங்களை ஒதுக்கி இந்த வீடியோவை பார்க்க வேண்டுகிறேன். ரஹ்மான் சொல்லும் காரணத்தை கவனியுங்கள். இப்பொழுது திரும்ப மேல ப்ளேக் சொன்னதை படியுங்கள். இதற்கு மேல் நான் விளக்கவும் வேண்டுமா ?
ஆனால் நமது ஆட்கள், என்னமோ ப்ரோக்ராமிங் இசை என்பது தீண்டத்தகாத இசை போலவே கருதுகிறார்கள். இதெல்லாம் அடிப்படைவாத பார்வை. பன்னெடுங்காலமாக நமக்கு இசை என்றால் சினிமா இசை மட்டும்தானே....அதில் மெலடி என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்....சரணம்,பல்லவி இத்யாதிகள் இருக்க வேண்டும்....வயலினையோ, புல்லாங்குழலயோ இசைக்கவிட்டால் போதும்...அது மனதை அறுக்கும் இசை என்று ஏகப்பட்ட முன்முடிவுகள் உண்டு. எப்பொழுதெல்லாம் நமது சினிமா இசைக்குள்ளயே அந்த முன்முடிவுகள் தகர்க்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், தாம் இசை பற்றி கட்டி வைத்திருக்கும் பிம்பம் உடைவதை பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உடனேயே இதெல்லாம் இசையா...வெறும் சத்தம்....உன்னதமாக எதுவுமே இல்லை....ஐயையோ......இரைச்சல்....ஆன்மாவை தொடவில்லை.....இதயத்தை கசக்கவில்லை....லொட்டு லொசுக்கு என்று ஏதாவது சொல்லி தமது அதிர்ச்சியை வேறுவகையில் வெளிக்காட்டுவார்கள் (அனுபவம் ஏறஏற சிலபல விஷயங்கள் பற்றி நமக்கிருக்கும் மதிப்பீடுகள், பிம்பங்கள் மாறும் என்பதை உணராத வரையில் எதையுமே கற்றுக்கொள்ளாமல் தேக்கமடைந்து விடுவோம் என்பது என் கருத்து). சினிமா இசைக்கே இந்த நிலைமை.
ப்ளேக் ஒரு ஜீனியஸ் என்பதில் சந்தேகமே இல்லை. Programming + Dubstep + EDM போன்ற தொழில்நுட்பங்களை, ஒரு பூடக (abstract) ஓவியத்தைப் போலவோ.....ஹைக்கூ போலவோ....ஜென் கதையைப் போலவோ மாற்றிவிடுகிறார். இவரது இசைக் கோர்ப்புகளைக் கேட்பவர்கள் அவரவரது மனோநிலைக்கு ஏற்ப உள்வாங்கிக் கொள்ளலாம். இந்த இசையை எடுத்துக்கொள்வோமே. இதில் “My brother and my sister don't speak to me But I don't blame them........” அவ்வளவே வரிகள். திரும்பதிரும்ப இந்த ரெண்டு வரிகள் தான். ஆனால் இசைகோர்ப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஒருவித அசௌகரியம், தயக்கம் என்று அனைத்தையும் துல்லியமாக உணரலாம். ஏதோ சொல்ல வந்து...அப்படியே அந்தரத்தில் நிற்கும் உணர்வு. I’ve never learnt to share. Period.
எந்த இசையும் அவர் ஒதுக்குவது இல்லை என்று பார்த்தோமே...சிறந்த உதாரணம்... Life round here & Take a fall for me. இரண்டுமே ராப் இசை ஃப்யுஷன். இதில் Take a fall for meல் RZA போன்ற லெஜன்ட் இருப்பதால் அதன் வீரியமே தனி. என்னமாதிரி ரகளையான வரிகள். Life round here.....ப்ளேக் இசை மூலம் எனக்குக் கிடைத்த மற்றொரு பொக்கிஷம்..Chance the Rapper. இருபதே வயது. அட்டகாசமான flow. கேன்ட்ரிக் லமார் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்...அதேபோல இன்னும் சில வருடங்களில் ப்ரின்ஸ் என்று Chance பற்றி ஒரு பதிவு எழுதுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். நம் ஆட்கள் தற்பொழுது தான் எமினெம் வரிகளை ஷேர் செய்வது, profile picture வைப்பது என்று ஆரம்பித்திருகிறார்கள். Chanceற்கு எல்லாம் வருவதற்குள்.....
Limit to your love. ப்ளேக் கவர் வெர்ஷன்(நம் பாஷையில் ரீமிக்ஸ்) செய்வதில் வல்லவர். இந்தப் பாடலும் அதுபோன்ற ஒரு பாடல் தான். ஆனால், என்னவொரு டைனமிக்ஸ். இசை கேட்பவரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கும். ப்ளேகின் குரல் மிக அசாத்தியமானது. இயற்கையாகவே ஒரு நெகிழ்வுத்தன்மை உண்டு. Voyeur பாடலில் அவரது குரல் ரேன்ஜ் அட்டகாசமாக வெளிப்படுவதைக் காணலாம். ப்ளேகின் பல பாடல் வரிகளும் பயங்கர பூடகத்தன்மையுடனே உள்ளது. நல்ல தேர்ந்த வாசிப்பாளர் என்று அவரது பல இன்டர்வியுக்களில் இருந்து தெரிகிறது. " I was reading this passage from Murakami's Norwegian wood and it was about the protagonist sending a letter to his girlfriend, and I remember wondering, if you make a piece of work, and it is about someone, how much are they actually reading it, or reading into it? ". இதன் விளைவாக அவரிடமிருந்து கிளம்பிய பாடல் தான் Life round here.
Lindisfrane, The Wilhems Scream என்று ஒவ்வொரு பாடலாக எனக்குத் தோன்றுவதை விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால் abstract இசையைப் பற்றிப் பேசும்பொழுது இத்தனை வார்த்தை விவரிப்புகள் தேவையா என்ன...தவிர, என் பார்வையிலேயே நீங்களும் இந்த இசையை கேட்டுவிடக் கூடிய அபாயம் இருப்பதால்....இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
கடந்த ரெண்டு மாசமா அடிக்கடி ரெண்டு ரீபீடட் கனவுகள் வந்து "ஞே" முழிக்க வெச்சது. ஒண்ணு, என்னைவிட ஆறேமுக்கால் வயது குறைவான, ஒண்ணே கால் வயதுடைய - பி ப ஒருவரின் - கொழந்தைக்கு (இதுவொரு குறியீடு...பெரிய ஆளுங்க கிட்ட சொன்னா என் சாயம் வெளுத்துரும்ல) எப்பிடி போட்டோ எடுக்குறதுனு ரொம்ப பொறுமையா சொல்லிக் குடுக்கிறேன். இதுவொரு ரெண்டு மூணு தடவ வந்திருச்சு. ரெண்டாவது தான் அதகளம்.....பறவைகள் பத்தின கனவு.....அதன் துல்லியம் தான் ரொம்ப புடிச்சது. ஒரு White rumped Vulture அப்பிடியே அலேக்காக கொட்டாங்குச்சி மாதிரியான என் மண்டையைக் கொத்தி....தூக்கிகினு பறக்குது.....பறக்குது....ப...ற....க்....கு..து. என்ன நெனச்சுதோ...படார்னு ஒரு கெணத்துக்குள்ள தூக்கி வீசிறுது. எனக்கோ நீச்சல் தெரியாது (Centre of Buoyancy எல்லாம் பரிட்சயமான ஆள் என்பதால்....அத்தனை நேரம் தண்ணிய உள்ள முழுங்காம இருந்திருக்கக் கூடும் என்று யூகிக்கிறேன்). இப்படியே போய்கிட்டு இருக்கும் போது..தீடீர்னு ஒரு ராட்சஸ Spot-billed duck (புள்ளி மூக்கு வாத்து).....அப்பிடியே தூக்கி..என்னை பத்திரமாக கரையேற்றி விடுகிறது. Batman Returnsல பெங்க்வின் காட்சி ஞாபகம் இருக்கா...கிட்டத்தட்ட அப்படிதான் நடந்தது. இந்த டைப்ல தொடர்சியா ரெண்டு மூணு தடவ இப்படியான வந்திருச்சு. 28 வயசுல (இன்னும் ரெண்டு மாசத்தில் 29) இப்பிடித்தான் பல கனவு வருது. ராட்சஸ ஓணான்களில் ஆரம்பிச்சு தினுசு தினுசா வரும். என்ன எழவோ. இதுல என்ன ஸ்பெஷாலிட்டி என்றால்,White rumped Vultureரை பாத்தது கூட இல்ல. ஒருவேள சில மாதங்கள் முன்ன படிச்ச இந்த நியுஸ்ன் தாக்கமாக இருக்கலாம். புள்ளி மூக்கு வாத்தின், மஞ்சள் அலகு + அதுக்கு கொஞ்சம் மேல, சிவப்பு + ஆரஞ்சு நிறம் அத்தனையும் அட்டகாசமான துல்லியத்தோடு தெரிஞ்சது மட்டும் நல்லா நினைவிருக்கு (REM Phase). ஏற்கனவே பறவைகள் தொடர்பா எதனா பங்களிப்பு செய்யணும்னு பொச முட்டிகினு இருந்த சமயத்தில......இப்பிடி தொடர்ந்து கனவுகள்.
அதாகப்பட்டது, கருந்தேள்+பாலாவின் War of the Rings புத்தகம் வெளிவந்த சமயத்தில் கே.என்.சிவராமன் கொஞ்சம் பழக்கம். அதுவும் ஒண்ணு ரெண்டு மெயில் மூலமாகத்தான். பின்னாடி தான் அவர் தினகரன் பத்திரிக்கைகளின் எடிட்டர்னு தெரியவந்தது. அவர் வந்தபிறகு, தினகரன் வெள்ளி மலர் முதல் பலதிலும் நெறய நல்ல மாற்றங்களை கொண்டுவந்தது பத்தி இணையத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும். நெறய பிரபல பதிவர்களை பத்திரிக்கைக்குள்ள இழுத்துப் போட்டத்தில் அவருக்கு பெரிய பங்குண்டு. கொஞ்சம் புதிய முயற்சிகளுக்கு அவர் எதுனா செய்வார்...என்றே ஒரே அடிப்படையில் ஒரு மெயில தட்டி விட்டேன்.
இந்தமாறி....நவம்பர் முதல் தமிழ்நாட்டுக்கு பல பறவைகள் வலசை வரும். இந்த சமயத்தில் பறவைகள் பத்தி, குறைஞ்சது ஒரு அரை பக்கத்துக்காவது எதுனா உங்க பத்திரிக்கையில் வந்தால்....மிகப்பெரிய விஷயமா இருக்கும். அநேகபேர் பொத்தாம்பொதுவா சைஸ் சின்னதா இருந்தா குருவி, மீடியாம மூக்கு கூர்மையா இருந்தா கழுகு என்ற ரேஞ்சுலய பறவைகள் பத்தி தெரிஞ்சுவெச்சுருக்காங்க. நெறய பேருக்கு இதுலலாம் ஆர்வம் இருந்தாலும், வாழ்க்கைய ஓட்ட வேண்டிய கட்டாயம் + நடைமுறை சிக்கல்கள் காரணமா இதுகுறித்த தெரிஞ்சுக்காம இருப்பாங்க. அப்பிடியான ஆட்களுக்கு இப்பிடியான கட்டுரைகள், நெறய பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் வந்தால்...நிச்சயம் சில நூறு பேராவது கவனிப்பாங்க; குறிப்பா கொழந்தைங்க கிட்ட எளிதா அவர்களது பெற்றோர் மூலமா போய் சேரும்...
இவ்ளோதான் அந்த Fb மெசேஜ்ல சொன்னது. இதுமட்டும் தான் என் நோக்கம். கூடவே தியோடர் பாஸ்கரன், ச.முகமது அலி, வி.சாந்தாராம் போன்ற ஆட்கள் உங்களுக்கு பரிச்சயம் இருக்கும்பட்சத்தில் அவர்கள்ட்ட பேசி பாருங்கன்னு வேற கேட்டிருந்தேன். ஆனா அவர் என்னயவே எழுதச் சொன்னார். சத்தியமா எனக்கு இதுல பயங்கர தயக்கம் இருந்தது உண்மை. திறமை சார்ந்தோ, விஷயம் சார்ந்த தயக்கம் இல்ல - என்ன எழுதப் போறோம், என்னென்ன பறவைகள் என்பதில் ரொம்ப தெளிவா இருக்கேன் - வேற சில தயக்கம். நீட்டி முழக்கி எழுதி, ஆர்வம் உள்ளவங்களையும் கெடுத்திர கூடாதே என்ற தயக்கம். ஆனாலும் சிவராமன் நல்லா வரும்; எழுதங்கனு சொல்லிட்டார். வழக்கம்போல, ராஜேஷ் (இவரது தளத்தை இங்கே படிக்கலாம். நல்லா எழுதுவாப்ல) & பாலா (இவரது தளத்தை இங்கே அமுக்கி படிக்கலாம். ரிட்டையர் ஆயிட்டார். வயசானாலும் வீரியம் குறையாம அவ்வப்போது எதுனா எழுதி வருகிறார்) யோசனைகளை கேட்டேன். பல - பெர்சனல் விஷயங்கள் உட்பட - மேட்டர்களுக்கு இவர்களிடம் நான்(னே) ஆலோசனை கேட்பது உண்டு. எல்லாரும் நல்லபடியா உசுப்பி விட்டதன் விளைவு.....
சினிமா சம்பந்தாமன நியுஸ் எதுனா அந்த இடத்தில போட்டிரலாம். இன்னும் பலபேர் அத விரும்பி படிப்பாங்க. ஆனா, சூழலியல் தொடர்பான இதுபோன்ற விஷயத்துக்கு ஒரு பக்கத்தை ஒதுக்குவது...இன்னும் என்னால நம்பமுடியல. நெஜாமவே இதுபெரிய விஷயம். முன்னாடி, சிறுவர்மலரோ சிறுவர்மணியோ பறவைகள் பத்தி வாராவாரம் பத்திகள் வந்த ஞாபகம். ஆனா அது பெரும்பாலும் நாம பாத்திரத பறவைகள் பத்தின பத்திகள் என்றும் ஞாபகம் (என்ட அந்த கட்டிங்க்ஸ் இருக்கு. அடுத்த தடவ ஊருக்கு போகும்போது பாக்கணும்). இந்தத் தொடரின் நோக்கம் மிகமிக எளிமையானது. அத முதல் வார பத்திலயே படிச்சு தெரிஞ்சுக்கலாம். ஆயிரக்கணக்கான பேர் படிக்கிறதுல நூறு பேருக்காவது இதுல ஆர்வம் வந்து....சூழலியல் சார்ந்த கவனிப்பை அது உருவாக்காதா என்ற நப்பாசை தான் காரணம். வேற யார் எழுதியிருந்தாலும் இதே அளவுக்கான எக்சைட்மென்ட் நிச்சயம் என்ட இருக்கும். சிவராமனுக்கு பெரிய நன்றிகள். வார்த்தைக்காக சொல்ல. நிச்சயம் அவர் ஆரம்பிச்சிருக்குறது பெரிய விஷயம்.
நீல் ப்லோம்கேம்ப்ன் எலிஸியம் படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் வாசிக்கும் வாய்ப்பு எனக்குகிட்டவேயில்லை. வேறு வழியில்லாமல் தொலைக்காட்சியின் குறுந்திரையில் நேற்று ஒருவழியாக வாசித்து முடித்தேன். நீல் ப்லோம்கேம்ப்ன் முந்தைய படமான மாவட்டம் - ஒன்பது (District 9), நிறவெறி மற்றும் சர்வாதிகாரம் சார்ந்த அடக்குமுறையை லாவகமாகச் தொட்டுச் சென்றது. அவரின் அடுத்தபடமென்பதால், இதிலும் இலைமறைகாயாக குறியீடுகளால் சூழப்பட்ட காட்சிகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும் என்ற உந்துதலினாலேயே ஆவலுடன் எலிஸியம் திரைப்படத்தை வாசிக்கத் தொடங்கினேன்.
வருடம் 2154 (கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் அவ்வாறே உள்ளது). உலகில் இரண்டே இரண்டு வகையான ஜாதிகள் மட்டுமே உள்ளன. உள்ளவன் - இல்லாதவன். இல்லாதவர்கள் உலவும்,வாழும் பகுதி தான் நமது பூமி. அவர்களுது வேலை - எலிசியம் என்ற சுருளமைப்புக் கொண்ட வானூர்தி நிலையத்தில் இருக்கும் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களைம் இன்னபிற விடயங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது. அவ்வாறான ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவருபவன் தான் படத்தின் பிரதான கதைமாந்தனான மேக்ஸ். மிகத் திறமையான மகிழ்வுந்துத் திருடனும் கூட. ஒருநாள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், அளவுக்கதிகமான கதிரியக்கம் அவன் மீது முழுமையாகப் பாய்ந்துவிடுகிறது. அப்படியே அவனை அங்கயே இருக்கவிட்டு, சில நேரங்கள் கழித்து தான் வந்து அள்ளிக்கொண்டுச் செல்கின்றனர். அதுவும் ஒரு இயந்திரம் தான் வந்து அவனைத் தூக்கிச் செல்கின்றது. அவ்வியந்திரமே அவனை பரிசோதித்து, இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே அவன் உயிருடன் இருப்பான் எனவும், அதுவரை வலியை சமாளிக்க ஒரு மருந்துப் புட்டியையும் வீசி எறிந்துவிட்டுச் செல்கின்றது. உடலுறுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக பாதிக்கத் தொடங்க மிகுந்த தள்ளாட்டத்துடனும் சிரமத்துடனும் விசனத்துடனும் வெறுமையுடனும் வீடு திரும்புகின்றான். எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வான உயிர் வாழ எத்தனிக்கும் உணர்வு மேலோங்க, தனது தோழனுடன் சேர்ந்து அப்பிரதேசத்தின் முக்கிய குற்றதொழிற்முனைவோர் கூட்டமொன்றில் உதவிகோரி செல்கிறான். எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் வசதியுடைய எலிசியத்திற்கு சட்டத்திற்குப்புறம்பான வழியில் கள்ளத்தனமாக தன்னை அனுப்பும்படி கேட்கிறான். ஆனால் அக்கூட்டத்தினர் பதிலுக்கு மற்றொரு விஷயத்தை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்த இடத்தில் இருந்துதான் திரைப்படம் வேறு தளத்திற்குச் செல்கிறது. அதிகாரம்,மதம்,அரசியல்,விஞ்ஞானம் என்று பல விடயங்களும் எவ்வாறு தற்போதைய சமகாலத்தில் ஒருசிலரால் மட்டுமே கையாளப்படுகிறது, அநேக மக்களுக்கு இவ்வசதிகள் எல்லாம் மறுதலிக்கப்படுகிறது என்பதை முற்றிலும் புதிய கோணங்களின் மூலமும் குறியீடுகள் மூலமும் இயக்குனர் அனாயாசமாக நம்முன் காட்சிகளாக அடுக்கிச் செல்கின்றார். அக்கோணனங்களில் இரண்டு கோணங்களை மிகமுக்கியமானதாகச் சொல்லலாம்.
பொருள்முதல்வாதத்தின் வழி காட்சிப்படிமங்களை நகர்த்துதல் & திரிபு நிலை அரசியல்:
திரைப்படம் தொடங்கி, பெயர்கள் வரத்துவங்கும் போதே இது எப்படியான படம் என்பதை இயக்குனர் மிகத்தெளிவாக நமக்கு உணர்த்திவிடுகிறார். அதற்கு சாட்சி, கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம். "In Association With Media - Rights - Capital". அதாவது, ஊடகம் (Media) - உரிமைகள்(Rights) - மூலதனம் (Capital). இம்மூன்றும் எத்தகைய முரண்பாடுகள் நிறைந்த வார்த்தைகள், சமகாலத்தில் ஒவ்வொன்றும் இவ்வாறு வெவ்வேறான தளத்தில் இயங்கி மக்களின் மீது கட்டற்ற ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு கட்டியம் கூறவது போன்ற எழுத்துவடிவக்காட்சி தான் இது. இதனை வேறு வகையாகவும் கட்டுடைக்கலாம். Capital - என்பதனை மூலதனம் என்பதாகக் கொள்ளாமல், Capital - தலைநகர் என்பதாக எடுத்துக் கொண்டால், எவ்வாறு உலகின் பல நாடுகளிலும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும் அந்நாடுகளின் தலைநகர்களிலேயே குவிந்து கிடக்கின்றன என்பதாகவும் இதனைப் பார்க்கலாம்.
உலகத்தைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்திலும் உருப்பெற்றது. சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல்வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும் எதிர்த்து அடிமைச் சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கு முற்போக்கு சிந்தனை எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அச்சிந்தனையின் சில கீற்றுகளை இப்படத்தில் எடுத்தியம்பப்பட்டுளன. உதாரணமாக, மேக்ஸ் எதிர்தரப்பு ஆட்களிடம் இருந்து கடும்காயங்களுடன் தப்பி வரும் காட்சியைச் சொல்லலாம். முந்தைய தலைமுறையின் மூதாட்டி ஒருவர், மேக்ஸ்சை கட்டை வண்டியின் கீழ் ஒளிந்துகொள்ளச் சொல்வார். அந்த வண்டியின் மேல் என்ன இருக்கிறது என்பதைக் கவனித்தோமானால்..............கீழே படத்தைப் பாருங்கள்
பண்டைய வேத காலம்தொட்டு யாரையாவது கேவலமாக பேசுவதென்றால் பன்றிகளுடன் ஒப்பிட்டு பேசினர் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அத்தைகைய பன்றிகளுகுக் கீழாக மேக்ஸ் ஒளிந்து கொள்வதன் பின்னால் மிகநுட்பமான வரலாற்றரசியல் உள்ளதை ஊன்றி கவனித்தால் புரியும். அக்காட்சி முடியும் தருவாயில், மேக்ஸ் அத்துணை களோபரங்களுக்கு இடையிலும் அம்மூதாட்டிக்கு நன்றி சொல்வான். எத்துனை கொடுமைகளுக்கு இடையில் மனிதன் வாழ்ந்துவந்தாலும் அடிப்படைப் பண்புகள் இன்னனும் செத்துவிடவில்லை, அதற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் நிச்சயம் சிலமனிதர்கள் ஈடுபடுவார்கள் என்பதனை மிகஉணர்வுப்பூர்வமாக சொன்ன கட்டம் அது. திருட்டு வானூர்தியில் மக்கள் தப்பிச் செல்வது, உலகெங்கும் பல மக்கள் அகதிகளாக செல்வதை குறிப்பதாகத் தோன்றவில்லை ? இதைதான் படத்தின் இயக்குனரும் Although set in 2154, Elysium's director has stated that it is a comment on the contemporary human condition "No, no, no. This isn't science fiction. This is today. This is now" என்று ஒரு நேர்முகத்தில் கூறுகின்றார். ஏகப்பட்ட விழுமியங்களை பட்டென்று இயக்குனரின் இப்பதில் தகர்த்தெரிகிறதல்லவா.
படேல். ஆம் இதில் எலிசியமின் தலைமைப்பொறுப்பில் ஒரு இந்தியர் தான் இருக்கிறார். அவர் பெயர்தான் படேல். இதுவரை எந்தவொரு அமெரிக்க திரைப்படத்திலும் வராத விடயம் இது. இதன் பின்னணியில் இருக்கும் நுட்ப அரசியல் குறித்தான பகடியையை உங்களது பார்வைக்கே விட்டுவிடுகிறேன். இன்று உலகம் முழுவதும் இன்னநாடென்று பிரித்தறிய முடியாவண்ணம், அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளை காட்சிக்கு காட்சி தெளிவாக நம் முன்வைக்கின்றார். மிகமுக்கியமான மற்றொரு விடயம்.....மருத்தவ வசதிகளும் அதன் செலவுகளும். சில நாடுகளில் அரசாங்கமே மக்களுக்குரிய மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில், வசதியுடையவர்களுக்கு மட்டுமே தரம்வாய்ந்த மருத்துவ வசதிகள் போய்ச் சேருகின்றன. அடித்தட்டு மக்களில் பல பேருக்கு அவ்வசதி கிடைப்பதில்லை என்பது கண்கூடு. இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளிலும் இதுதான் நிதர்சனம். இப்படி காட்சிக்கு காட்சி அடிச்சரடாக பல குறியீடுகள் திரைப்படம் முழுமைக்கும் வியாபித்திருக்கின்றன. அதனை அன்னப்பறவைப் போல், பிரித்தறிந்து கண்டுணர்ந்து கொள்வது நம்முன் இருக்கும் கடமை. எவ்வாறு பொருளாதார/அரசியல் ஏற்றத் தாழ்வுகள் உலகின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பதற்கான கட்டியம் தான் இப்படம். இணையத்தில் இப்படத்தைப் பற்றி மிகவிரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. முடிந்தால் தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.
படம் எனக்குள் எதிரொலிக்கவிட்ட கேள்விகளில் சில:
1) மேக்ஸ்(Max) - லத்தீனில் இதற்குப் பொருள், மிகஉயர்ந்த - அதாவது Greatest. ஒரு சாதாரண அடித்தட்டு கதைமாந்தனுக்கு இந்தப் பெயரை இயக்குனர் வைக்கக் காரணம் ?
2) ஜோடி ஃபாஸ்டர் கதாபாத்திரத்திற்கு Delacourt என்ற பொருளாதார மேதையின் பெயரை சூட்டியது ஏன் ?
3) ஏன் மேக்ஸ்ன் பரோல் அதிகாரி - ஒரு இயந்திரமாக உள்ளது ?
4) ஏன் படத்தில் ஆங்கிலம் - லத்தீன் என்று இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன ? இதன் பின்னணியில் இருக்கும் மொழி அரசியல் என்ன ?
5) ஏன் எலிஸியத்தின் வான்வெளிப் பகுதி கருப்பாக உள்ளதாகக் காட்டப்படுகிறது ?
6) ஏன் இயந்திரங்கள் சிவப்பு வண்ணத்தில் உலா வருகின்றன ?
7) ஏன் கதாநாயகி இறுதிக் கட்டங்களில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடும் போது - சூரியன் உதிப்பதாகக் காட்டப்படுகிறது ?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு எனக்கு தோன்றிய விடைகளை என் முகநூல் அதாவது Facebook பக்கத்தில் காணலாம். உங்களது கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல்.
War crimes are defined by the winners. I am a winner. So i can make my own definitions
இது ஏதோ ஒரு சர்வாதிகாரி உதிர்த்த வார்த்தைகள் அல்ல. படத்தில் வரும் சாமான்ய கதாபாத்திரம் உதிர்க்கும் வார்த்தைகள். இந்தளவுக்கு என்னைச் சலனப்படுத்திய – வெகுவாக பாதித்த - கேள்விக்குள்ளாக்கிய படம்.....கிட்டத்தட்ட எதுவுமே சட்டென்றுஞாபகத்திற்கு வர மறுக்கிறது. Hardest surrealistic film i've ever seen. சில படங்கள் நமது பார்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வல்லமை கொண்டது. சக மனிதர்கள் மீது என்ன மாதிரியான மதிப்பு வைத்திருக்கிறோம் ? என்னென்ன அளவுகோல்களின்படி அவர்களை அணுகுகிறோம் ? அடுத்தவர்களை காயப்படுத்தாமல் ஒரு idealistic மனநிலையில் வாழ்வது சாத்தியம் தானா ? என்பதில் தொடங்கி பக்கத்து தெரு - ஊர் - மாநிலம் - நாடு வரையில், மனிதன் என்ற உயிரினம் சக உயிரினத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், அடக்குமுறைகள் வரை ஏதாவதொரு சந்தர்பத்தில் பல கேள்விகள் எழுந்தே தீரும். ரோட்டில் நடந்துபோகும் போது ஏற்படும் சிறுசிறு சம்பவங்கள் கூட சிலசமயம் பெரிய கேள்விகளுக்கு வழிவகுக்கும் அல்லவா. அதுபோன்றதொரு அனுபவமே இந்தப்படம்.
சக மனிதன்/உயிரினங்கள் மீதான வன்முறை என்பது ஆதிகாலம் தொட்டே நமது உடம்பில் ஊறிய உணர்வு. ஆனால் அன்று அதற்கான காரணங்கள் வேறாக இருந்தது. மனித இனம் வளர வளர – குறிப்பாக இனக் குழுக்கள் பெருகப் பெருக, அமைப்புகளும் கூடவே பிரச்சனைகளும் பெருக ஆரம்பித்தன. இந்தக் குழுக்களின் வாயிலாகவே, நோம் சோம்ஸ்கி சொல்வது போல – ஒரு common medium/platformமிற்கான தேவையின் காரணமாக – சமூகம் என்ற அமைப்புத் தோன்றியது. இந்த சமூக அமைப்பிலிருந்துதான் அரசு – ஆட்சி – அதிகாரம் போன்ற வரையறைகள் தோன்றின. மனித இனம் வளர வளர இந்த அமைப்பு பல்வேறு மாறுதல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இது இயற்கையான ஒன்றுதானே. இதுபோன்ற பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் மிகமுக்கிய பங்குவகித்தது(வகிக்கின்றது). அரசியலின் வாயிலாகவே அரசு – ஆட்சி – அதில் மக்களின் பங்கு போன்றவைகள் பற்றிய பார்வைகள் மாறத்தொடங்கின; இசங்களும் தோன்றின என்பது வரலாறு. இன்று, அரசியல் என்ற வார்த்தை அரசு – அதிகாரம் போன்றவைகளின் எல்லைகளைத் தாண்டி, டூத் ப்ரஷ் முதற்கொண்டு அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வரிகளில் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது- மக்களைப்போல் ராஜ்யம். ஆனால் யாருக்காக, எந்த மக்களுக்காக இந்த ஆட்சி - அரசு - அமைப்பு எல்லாம் தோற்றுவிக்கப்பட்டதோ-மாற்றி எழுதப்பட்டதோ, அம்மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்களிடம் மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கப்பெறும் பொழுது........எவ்வாறு நடந்து கொள்வார்கள் ? இன்றளவும் யாராலும் விடையளிக்க முடியாத கேள்வி இது. மாவோ & ஸ்டாலின் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஹிட்லர் ஆட்சியில் இறந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் ஆட்சியில் இறந்தவர்கள் அதிகம்.
இந்தியாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு மிகப்பெரிய கலகம் நடந்து அதிகாரம்/அமைப்பு எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மைக் கேட்க, கட்டுக்குள் வைத்திருக்க யாரும் இல்லை. என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுவோம் ? இன்னும் விபரீதமாக யோசிப்போம். குறிப்பட்ட இன/மொழி/ஜாதி மக்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு கலகம் எழுப்பப்படுகிறது. அதனினும் மோசமாக அரசே அதனை முன்னின்று நடத்துகிறது (சீக்கியர்கள்/குஜராத் கலவரம் எல்லாம் ஞாபகம் வந்தால்....அது தற்செயலானதே). மக்களாகிய நாம் எப்படி நடந்து கொள்வோம் ?
பெல்லா தாரின் Wereckmeister harmonies, வேறொரு பரிணாமத்தில் மேற்கூறிய கேள்விகளை எழுப்பிய படம். முன்பு நான் பார்த்து புரிந்துகொண்டதைவிட இப்பொழுதுதான் அதன் முழுவீரியமும் புரிகிறது.
எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில், காந்தி மட்டுமே இதுகுறித்து மிகத்தீவிரமாக கேள்விகளை எழுப்பியவர். குழு மனப்பான்மை(Mob psychology) எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை பல்வேறு தளங்களில் வைத்துப் பேசியவர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவர் சொன்னதுதான் - Be the change that you wish to see in the world. ஆரம்பகாலம் தொட்டே இந்தவொரு விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருந்தார். இது சரியாக புரிந்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பலவாறு விமர்சிக்கப்பட்டார். சௌரி சௌரா நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1922 ஃபிப்ரவரி 4. காந்தியின் தலைமையில் பல மாதங்களாக ஒத்துழையாமை போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. உத்தர்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்றொரு பகுதி. போலீஸுக்கும் – போராட்டத்தில் பங்குபெற்ற மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்று பொதுமக்கள் இறக்க நேரிடுகிறது. கொதிப்படைந்த மக்கள், போலீஸ்ஸ்டேஷனுக்கு தீ வைத்ததில் 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகின்றனர். காந்தியை இந்நிகழ்வு வெகுவாக பாதிக்கிறது. உடனே ஒத்துழையாமை போராட்டத்தை கைவிடுகிறார்.காந்தியின் இந்த முடிவை போஸ், நேரு உட்பட பலரும் மிகக்கடுமையாக விமர்சித்தனர் (To sound the order of retreat just when public enthusiasm was reaching the boiling point was nothing short of a national calamity - Bose).
இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் ஹைகோர்டில் காந்தி தனது முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் “பம்பாய், சென்னை, சௌரி சௌரா முதலான இடங்களில் நிகழ்ந்த வன்முறை செயல்களுக்கு நான்தான் பொறுப்பு என்று அட்வகேட் ஜெனரல் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதைபற்றி பலவாறு சிந்தித்தும், என்னையே ஆராய்ந்து பார்த்தும் நான் தெரிந்து கொண்டது, மக்கள் அஹிம்சை வழிக்கு பழகும் முன்னரே அவர்களை அவசரப்படுத்தி விட்டேன்....” என்று ஆரம்பித்து மிகத்தெளிவாக தனது நிலைபாட்டை முன்வைக்கிறார் (இங்கே படிக்கலாம்). இன்றளவும் காந்தியின் இந்த முடிவை மிகப்பெரிய தவறாக பலரும் கூறுகின்றனர். ஆனால் காந்தி பிரிட்டிஷ் – விடுதலை – காங்கிரஸ் என்பதையெல்லாம் தாண்டி, ஒன்றில் மிகத்தெளிவாக இருந்தார். Civic responsibility – மக்களின் பொறுப்புகள். பொறுப்புணர்வு குறித்து பல இடங்களில் அவர் சொன்னதான் சாராம்சமாக இதைச் சொல்லலாம் “ஒரு நாட்டின் சுயராஜ்யம் என்பது அம்மக்கள் ஒவ்வொருவரும் எய்தியுள்ள சுயாட்சியின் – தம்மை அடக்கியாளுதளின் மொத்தத் தொகையே (Swaraj of a people means the sum total of the self-rule of individuals & Swaraj can only be achieved through an all-round consciousness of the masses)“. இந்த முக்கிய விஷயத்தை குழப்பாமல் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. காந்தியின் சுயராஜ்யம் -> பொறுப்புகள்பற்றிய கருத்துக்களில் மிகமுக்கியமானவைகள் சிலவற்றை இங்கே படித்துப் பார்க்கலாம். இன்னொரு இடைச்செருகல்: காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1920களில் 15 -16 வயதான, பஞ்சாபை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். காந்தி போராட்டத்தை கைவிட்டது அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம்தான் பின்னாளில் அவர்களின் பாதையைத் தீர்மானித்தது என்றுகூட சொல்லலாம். அந்தச் சிறுவர்கள், பகத் சிங் & சுக்தேவ்
1965களின் பிற்பகுதி. இந்தோனேசியாவில் சுகர்னோவின் ஆட்சியை கலகத்தின் மூலம் ராணுவம் கைப்பற்றுகிறது. வழக்கம்போல் ஆரம்பகாலங்களில் நல்லாட்சி அதுஇது என்று பேசியவர்கள் கொஞ்சநாட்களில் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். ராணுவத்தையும் அதன் ஆட்சி முறைகளையும் விமர்சிப்பவர்கள் அனைவைரும் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.
குறிப்பாக ஏன் கம்யூனிஸ்ட்களைக் கண்டு இவ்ளோ பயம், கோபம், வெறுப்பு ? 1960 – 1970களை உலக வரலாற்றின் மிகமிக முக்கியமான ஆண்டுகள் எனச் சொல்லலாம். மாவோ சீனாவில் மிகப் பலமாக காலூண்டியதாகட்டும், கியுபா – அமெரிக்காவிற்குமான பிரச்சனை, சே குவராவின் எழுச்சி, அல்ஜீரிய/தென் அமெரிக்க நாடுகளின் உள்நாட்டு போர், வியட்நாம் போர், மார்டின் லூதர் கிங்ன் போராட்டம் என்பதில் ஆரம்பித்து கலை – இசை – இலக்கியம் - அறிவியல் என்று எல்லாத்தளங்களிலும் மாற்றம் நிகழ்ந்த வருடங்கள் இவைகள். திரைப்படங்கள், விண்வெளி யுத்தம், ஹிப்பி’ஸ், கே உரிமைகள், பெண்ணிய சிந்தனைகள், போஸ்ட்மாடர்ன் சிந்தனைகள் உச்சத்திற்கு சென்றது என்று ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கலாம். சமகால உலக வரலாறு/அரசியலைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் 1960களைப் பற்றிப் படித்தாலே போதுமானது. ஏற்கனவே ரஷ்ய புரட்சிக்குப் பிறகு பல நாடுகளில் கம்யூனிஸ்ம் வெகுமாக மக்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது. பிற்பாடு, மாவோவின் எழுச்சியும் சேர்ந்து கொள்ள ஒவ்வொரு நாடாக மாவோயிசம்/கம்யூனிஸம் பரவத் தொடங்கியது. 60களில் தென்னமெரிக்க நாடுகளிலும் க்யுபா போன்ற நாட்டிலும் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து கொள்ள பல நாடுகள் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் வந்தன. இந்தியாவிலும் நம்பூத்ரிபட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மாதிரியான ஆட்கள் தீவிரமாக களத்தில் இறங்க ஆரம்பித்தது பின்-ஐம்பதுகளில் தான்.
இந்தளவிற்கு கம்யூனிஸ்ம் பரவுவதை, யார் படுபயங்கர எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருப்பான் ? சாட்சாத் நமது பெரியண்ணன் + அவர்தம் கூட்டாளிகள் தான். பொலிவியாவில் ஆரம்பித்து எந்தெந்த நாடுகளில் எல்லாம் கம்யூனிஸம் வளருவது போல் தெரிகிறதோ அங்கெல்லாம் அதனைத் தடுக்க மிகமிக தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அநேகமாக அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தோனேஷியாவிலும் இவர்களுது கைங்கரியம் பலமாக உண்டு. ஆனால் மிகமிக சொற்பமாகவே இந்தோனேஷியப் படுகொலைகள் உலகளவில் பேசப்பட்டிருக்கிறது. நம்மிலேயே எத்தனை பேர் இதுவரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ?
அப்படி கம்யூனிஸ்ட்களாகக் "கண்டறியப்பட்ட" அனைவரையும் இந்தோனேஷியா ராணுவமும் அவர்களின் ஆதரவுடன் செயல்பட்ட லோக்கல் குழுக்களும் என்ன செய்தன என்பது குறித்தான தேடல்தான் இந்தப் படம். 2004ஆம் ஆண்டில் ஜோஷ்வா ஓபன்ஹைமர், இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் உலகமயமாக்கலின் விளைவு -> யூனியன் பிரச்சனை குறித்தான ஆவணப்படம் எடுப்பதில் முனைந்திருக்கிறார். அங்கு யூனியன் போன்ற விஷயங்களைக் குறித்து பேசவே அந்த மக்கள் அச்சப்பட.......ஏன் என்று விசாரிக்கும் போதுதான் எந்தளவுக்கு இந்தப் படுகொலையின் கோரப்பிடியில் இந்தோனேஷியா 1965ல் சிக்கியிருந்தது என்பது அவருக்கு உறைக்க ஆரம்பிக்கிறது. இதை எப்படியாவது பதிவு செய்தாக வேண்டிய கடமை தனக்கிருப்பதாக உணர்ந்தேன் என்று ஜோஷ்வா கூறுகிறார். காரணம்......அவரின் குடும்பத்தினர் நாஜிகளால் பெருமளவில் பாதிப்படைந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தபொழுது, அச்சத்தின் காரணமாக மக்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். சரி...இவர்களை விட யார் இந்தக் கொடுமைகளை செய்தார்களோ அவர்களையே பேட்டி கண்டால் என்ன என்று தோன்றி......அவர்களை அணுகுகிறார். இந்த முக்கிய முடிவு ஆவணப்படத்தின் போக்கையே மாற்றுகிறது. எந்த படுகொலைகளைப் பற்றி பேச மக்கள் பயந்தார்களோ.......அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்கள் ஜோஷ்வாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து.....அவரை வரவேற்று எப்படி எப்படியெல்லாம் “கம்யூனிஸ்ட் புல்லுருவிகளை, அரக்கர்களை, கொலைகாரர்களை” அம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் உன்னத வேலையை செய்தோம் என்று மிகமிக விலாவரியாக, பேருவகையுடன் கூற ஆரம்பிக்கின்றனர். ஜோஷ்வா மிரட்சியுடன் இந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறுகிறார் “I felt if i had walked into Nazi Germany 40 years later....with the Nazis still running the country and the Gestapo considered national heroes”. இப்படி அவர் சந்திக்க ஆரம்பித்த நபர்கள் 1,2,3,10,20,40......என்று நீண்டுகொண்டே செல்கிறது. அப்பிடி அவர் 41வதாக சந்தித்த நபர்தான் அன்வார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்த உங்களையும் என்னையும் போன்ற சாமான்யன். எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகன். கம்யூனிஸ்ட்கள் என்று கண்டறியப்படும் நபர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்ட பின்னர் ஒரு பெரிய தலைவன் நிலைக்கு உயர்கிறான்.
அன்வார்: முதலில் பிடித்து வரப்படும் நபர்களை தாறுமாறாக அடித்தே கொல்வோம். இங்குதான் ஒரு சின்ன சிக்கல். அந்த இடம் முழுக்க ரத்தவெள்ளமாக காட்சியளிக்கும். சுத்தப்படுத்தினாலும் வாடை போகாது. இந்த ரத்தவாடைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து ஒருபுது உத்தியை செயல்படுத்தத் தொடங்கினேன்.
என் வாழ்கையில் எத்தனனையோ திரைப்படக் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக்காட்சி அளவிற்கு என்னை பாதித்த காட்சிகள் மிகமிகக்குறைவு. எப்படி கொன்றேன் என்பதை சொல்லி முடித்த அடுத்தநொடி.........அன்வார் ஆடும் ஆட்டம். உலகின் எப்பேர்ப்பட்ட கலைஞனாலும் இந்தக் காட்சியின் கனத்தை இசையாகவோ, ஓவியமாகவோ, வார்த்தைகளாகவோ வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனித மனம் ஏன் இத்தணை விசித்திரமாக நடந்து கொள்கிறது ? ஒரு சாதாரண டிக்கட் கிழித்துக்கொண்டிருந்த ஆசாமி. காலில் அடிபட்ட வாத்திற்காக இரக்கப்படும் ஆள்(ஹிட்லருக்கு விலங்குகள் மீது அளப்பரிய பிரியம் உண்டு). மற்ற நேரங்களில் சாதாரண ஆட்களாகத் தான் அன்வார் போன்ற ஆட்கள் நடந்து கொள்கிறார்கள். இந்தளவுக்கு வெறி, வன்முறை எங்கிருந்து வந்தது ? எங்கே இந்த தவறு நிகழ்ந்தது ? இதற்கு யாரைக் குற்றம் சாட்ட முடியும் ?
இந்த அன்வாருக்கு சினிமா மீது பயங்கர ஆர்வம் இருப்பதால், ஜோஷ்வாவுக்கு முழுஒத்துழைப்புத் தருகிறான். அதற்கும் ஒருபடி மேலே போய், தாங்கள் செய்த விஷயங்களை திரையில் மீள்கொணர விரும்புகிறான். ஆம்...அவ்விஷயங்களையே திரைப்படமாக்க விரும்புகிறான். அதற்கான “நடிகர்களையும்”, உடை முதற்கொண்டு அனைத்தும் அவனே தேர்ந்தேடுக்கிறான். அவர்களனைவரும் ஒருவிஷயத்தில் மட்டும் தீர்க்கமாக உள்ளார்கள். எண்ண ஆனாலும் சரி, உண்மையை மட்டுமே திரையில் காண்பிப்பது. கொலையாளிகளே கொல்லப்பட்டவர்களாக திரையில் உலா வர ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமாக தாங்கள் செய்தவைகளை நடித்துக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் யாருடைய படத்தைப் பார்க்கிறோம், ஜோஷ்வாவினுடயதா - அன்வாரினுடையதா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. மிகப்பெரும் திகிலூட்டும் mazeற்குள் மாட்டிக்கொண்டதைப் போன்றதொரு சர்ரியலிஸ உணர்வு முழுவதுமாக நம்மைச் சூழ்ந்துவிடும். ஆரம்பத்தில் ஒன்றும் அவ்வளவு ‘சுவாரசியாமாக’த் தெரியாத காட்சிகள், அதன் வீரியம் உறைக்க உறைக்க – யாராக இருந்தாலும் பாதிக்காமல் போகாது. மனித உளவியலின் மீது ஏகத்துக்கும் கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பும் காட்சிகள். போகிறபோக்கில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்......அவ்வளவு அப்பட்டம். Naked. படத்தில் மலிவாக நமது உணர்ச்சிகளை தூண்டும் காட்சிகள் எதுவுமே இல்லை. நேரடியான வன்முறை இல்லை. ரத்தம் இல்லை. ஆனாலும் எல்லாவற்றையும் மீறிய தாக்கம் படத்தில் உண்டு. பிற்பகுதியில் அன்வாரின் அண்டை வீடுக்காரரான சுரயோனோ என்ற கதாபாத்திரம் படத்தை எடுக்க சில யோசனைகளை தெரிவிப்பார். சிரித்துக் கொண்டே...தனது வளர்ப்புத் தந்தை எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தனது ஆற்றாமையை கொட்டித் தீர்த்துவிடுவார். இது இயக்குனருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட ஒன்று. இதை ஷூட் செய்த மூன்று வருடத்திற்குள் உடல்நலக் குறைவு காரணமாக சுரயோனோ இறந்து விடுகிறார். ஜோஷ்வா அவரது மனைவியிடம், இந்தக் காட்சியை வைப்பதா, இதைப்பற்றி எதுவும் சொன்னாரா.....என்ற கேட்டதற்கு அவர் மனைவி சொன்னது “Yes, he had this awful experience as a child, and wanted it to be seen, wanted the public to know what he went through”. இந்தப் படத்தின் அடிநாதமே இதுதான். இந்த வழிலாவது உலகத்திற்கு தாங்கள் அனுபவித்த கொடுமைகளை கொட்டித்தீர்த்துவிட வேண்டும். அன்வார் போன்ற ஆட்களும் இதையே செய்ய விரும்புகின்றனர். எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து இதனைச் செய்கிறார்கள். நிதர்சனத்தில் இருந்து தப்பிக்கும் மனநிலை. வெளிப்படையாக இதனை அவர்கள் சொல்லாவிட்டாலும் பல காட்சிகள் இதனை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அன்வாரின் சிஷ்யனாக வரும் ஹெர்மானைப் பற்றி தனிபபதிவே எழுத வேண்டும். அத்தனை விஷயங்கள் உண்டு ஹெர்மானிடம்.
படத்தைப் பற்றிய இன்னொரு மிகமுக்கியமான விஷயம், கிட்டத்தட்ட 1000 பேர் வரை கொலை செய்த அன்வாரில் இருந்து யாரையும் ஒருபக்க சார்பாக சாடுவதில்லை. நூற்றுக்கணக்கான கொலையாளிகளில் அன்வாரும் ஒருவன். அவ்வளவே. எங்கே படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்றால்.....ஏன் ? ஏன் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும் பொழுது. அன்வார் போன்ற ஆட்கள் எல்லாம் - அது கம்யூனிஸ் அரசாகட்டும், எந்தவொரு அரசாகட்டும் – எல்லா அரசுகளுக்கும்/கட்சிகளுக்கும்/கொள்கைவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கும்,மசூதியை இடிக்கவும் ரயிலைக் கொளுத்தவும் குடிசைகளுக்கு தீவைக்கவும் தேவை. இதில் ஒருசிலரை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாதே. இதுவொரு மிகசிக்கலான கட்டமைப்பு. வரலாற்றை புரட்டிப் பார்த்தல் ஒருநாடு கூட இத்தகைய சிக்கல்களில் இருந்து தப்பவில்லை என்பது புரியும்.
பார்ப்பவர்களுக்கு ஏன் சில உறுத்தல்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது என்றால், மறைமுகமாக நமக்கும் சகமனிதன் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களில் பங்குள்ளது என்ற உண்மை உறைப்பதனால் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். ஆப்ரிக்க வைரச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஆள் முதல் நம்மூரில் மலம் அள்ளும் ஆள் வரை, நாம் வசதியாக இருக்க ஏதாவதொரு மூலையில் ஒரு மனிதன் கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நமக்கு இதெல்லாம் மிகநன்றாகவே தெரியும் (தெரிய வேண்டும்). இருந்தும், இப்படி மனிதாபிமான போர்வையில் பதிவுகளை எழுதிவிட்டு, நிதர்சனத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்லவே விரும்புகிறோம். இதற்குமேல், உளமார சொல்கிறேன்....இந்தப் படத்தை பற்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. பார்த்துமுடித்தவுடன் பல்வேறு கேள்விகள் மட்டுமே தலை முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது. “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை என்ன காரணத்திற்காக சில பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் ஏழெட்டு வருடமாக திணறிக் கொண்டிருக்கிறேனோ....அதே காரணம் தான்.
மிகமிக முக்கியமானதொரு விஷயம், கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக "திரைப்படங்களின்" மூலமே பெருமளவில் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. சினிமா பொழுதுபோக்கு தானே என்ற ஜல்லித்தனமான கோஷம் எப்பொழுதுமே கடும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமைக் குழுக்கள், இந்தோனேஷியா அரசை பகிரங்க மன்னிப்பு கேட்டக் கோரியும் அவர்களுது வரலாற்றில் இந்தப் படுகொலைகளை பதிவுசெய்யக் கோரியும் வற்புறுத்தி வருகின்றனர். இலங்கை, இந்தோனேஷியா, அர்மேனியா, போஸ்னியா என்று எந்த நாடாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகாட்டும்.........உண்மையான சமத்துவம் அடக்குமுறைகளில் தானே நிலவுகிறது. அதனால் இப்படத்தை பார்க்கும் போது அதன் புவியில்பரப்பைப் பற்றியெல்லாம் கவனிக்கத் தோன்றாது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தப் படத்தைப் பார்ப்பது நமது கடமை என்றே தோன்றுகிறது.
ருவாண்டா இனப்படுகொலையில் பாதிப்படைந்த ஒரு சிறுவன்
சமீபத்தில், இந்த செய்தியை படிக்க நேர்ந்தது. Young India irony: 75% will vote but 52% support dictatorship தாங்கமுடியாத கடுப்பைக் கிளப்பிய செய்தி இது. சே குவாரா டிஷர்ட்டை அணிந்தாலே போராளி என்ற நினைப்பிருப்பவர்கள் தான் இதற்கு ஆதரவாக ஓட்டு போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். Dictatorshipன் அடிச்சுவடு கூட தெரியாத ஆட்கள் இவர்கள். ஒருபக்கம் Save tamilsல் ஆரம்பித்து காஸா வரை என்று உருக்கமாக ஃபேஸ்புக் முழுவதும் செய்திகளை பகிர்கிறார்கள். இன்னொரு பக்கம் – சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்கள். என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. கொஞ்சம்கூட அடிப்படை புரிதல்கள் இல்லாமல் விடலைத்தனமான மனநிலையில் விஷயங்களை அணுகுவதால் ஏற்படும் விளைவுகள் இவை. ஜனநாயகம் பற்றி காந்தி சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது There is no human institution but has its dangers. The greater the institution the greater the chances of abuse. Democracy is a great institution and therefore it is liable to be greatly abused. The remedy, therefore, is not avoidance of democracy but reduction of possibility of abuse to a minimum. சை.....ஜனநாயகத்தைப் பத்தி பேசுவது தற்போது out of fashion & trendiness இல்லாத விஷயம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன்.
மனிதன் அமைத்த எந்தவொரு நிறுவனமானாலும் அதற்குரிய ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அந்நிறுவனம் எவ்வளவு பெரிதாய் இருக்கின்றதோ அவ்வளவுக்கு அதில் ஆபத்துக்களும் மிகஅதிகம். ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். பிழைகள் நிகழ ஏரளாமான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆனால் இதற்கான பரிகாரம் ஜனநாயகத்தையே தவிர்ப்பதில் இல்லை. மாறாக அதில் நிகழும் தவறுகளை முடிந்தளவில் குறைக்கப் பார்ப்பதே ஆகும்