The problem with Hollywood, is the audience expects to get the answers like a pill. They expect to know not just whodunnit, but the motives of the characters, the how and why. Real life is not like that. Even our closest friend – we don't know what he really thinks. In films we want more than in real life, everything being made clear. That means this kind of cinema is a lie. I cannot make cinema that way  

-  Nuri Bilge Ceylan
சமீபத்தில் இன்டர்வியு நிமித்தமாக டெராடூன் செல்ல வேண்டியிருந்தது. முற்றிலும் புதிய சூழல். அதைச் சமாளிப்பதொன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை(நாடு விட்டு நாடே மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்). ஆனால், சமாளிக்க மிகக்கடினமாக இருந்தது - குளிர்....அதுவும் மைனஸில். வெயிலும் வெயில் சார்ந்த இடமுமாகவே  இருந்துவிட்டு, சட்டென்று அந்தக் குளிரை தாக்குப்பிடிப்பது சிரமமாகவே இருந்தது. ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வரை அக்குளிர் உறைக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல தனது ஆக்கிரமிப்பை என்மீது முழுமையாக செலுத்தத் தொடங்கியது. வெயிலைக் கூட ஒருவாறு சமாளித்து விடலாம். ஆனால், இந்தக் குளிர்......இரவு நேரத்தில், போர்வை சிறியது என்பதால்  கால்களின் வழியாகக் உடல் முழுவதும் சர்வ அலட்சியமாக விளையாடத் தொடங்கியது. அங்கிருந்த நாட்களில் எங்கு சென்றாலும் குளிர் பற்றிய நினைப்பே முதலில் வந்தது. குளிரின் பிரதான குணங்களில் ஒன்று,உஷ்ணப் பிரேதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் - என்னதான் அதற்குரிய ஆயத்தங்கள் செய்திருந்தாலும், அதன் நினைப்பை நம்மிடமிருந்து அகற்ற முடியாது. எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு ஓரத்தில் அதன் நினைப்பு இருந்தே தீரும். நான் உணர்ந்த வரை, குளிர் - மழை எல்லாம் ஒரு வகையான கிரியாஊக்கிகள். சட்டென்று பல நினைவுகளை கிளப்பிவிடும் வல்லமை பொருந்தியவைகள்.

ஊருக்கு போயிருந்தேன்; தாங்கமுடியாத அளவிற்கு செமத்தியான குளிர், என்று ஒற்றை வரியில் முடித்திருக்க வேண்டிய விஷயத்தை, romanticize செய்து நீட்டி முழுக்கி ஒரு பத்தியாக சொல்வேன் என்று நானே நினைத்ததில்லை. ஒரே ஒரு காரணம், இந்தப் படத்தின் தாக்கம். பார்த்து முடித்த கையேடு இதனை தட்டச்ச ஆரம்பித்துவிட்டேன். துருக்கியின் அனடொலியா என்ற நகரமும் அதன் வளைந்து நெளிந்த மலைப்பாதைகளும் படர்ந்த வெளிகளும் நாய்களும் அந்தச் சூழலில் உலாவிக் கொண்டிருந்த மனிதர்களும், அந்தக் குளிரைப் போல முழுவதுமாக என்னை ஆட்கொண்டு விட்டனர். சட்டென்று எனக்கு மேற்கூறிய அனுபவமே ஞாபகத்திற்கு வந்தது. வேறு எதனுடனும் என்னால் தொடர்புபடுத்த இயலவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதனை எழுதுவது எனக்கே நன்றாகத் தெரிகிறது. அதனை மறைக்க விரும்பவில்லை. படத்தின் தாக்கம் அவ்வளவு வீரியமானது. இவ்வளவு அழுத்தமானதொரு படத்தை சமீபத்தில் நான் பார்த்திருக்கவில்லை.


மூவர். நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம். வெகு இயல்பாக சிரித்தபடி உணவருந்திக் கொண்டிருக்கின்றனர். 

ஒரு கொலை. அதைத் தானே செய்ததாக ஒப்புக் கொண்ட ஒரு மனிதனையும் அவனுக்குத் துணையாக இருந்த மற்றொருவனையும் - கொலை செய்யப்பட இடத்தையும் பிணத்தையும் அடையாளம் காண்பிக்க போலீஸ் ஆட்களும்,அரசாங்க அதிகாரியும்,ஒரு மருத்துவரும், குழி தோண்டும் ஆட்களும் அந்தி சாயும் பொழுதில் அனடொலியா நகரத்திற்கு வெளியே இருக்கும் மலைப்பாதைகளில் சென்று தேடத் தொடங்குகின்றனர் என்பதாக ஆரம்பிக்கிறது கதை. இருட்டத் தொடங்கியதால், வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர். இங்குதான் ஒரு பெரிய சிக்கல் தொடங்குகிறது. கொன்று புதைத்த ஆளுக்கு எந்த இடத்தில் புதைத்தோம் என்று தெரியவில்லை. சொல்லும் இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தி, அதன் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் தேட வேண்டிய நிலைமை. நேரம் செல்லச் செல்லச் உயர்அதிகாரிகள் பொறுமை இழந்து, அந்த வெறுப்பைக் கைதிகளிடம் காட்ட ஆரம்பிக்கின்றார். பல மணிநேரம் செலவழித்தும் ஒன்றும் பயனளிக்காததால், பக்கத்து ஊரின் மேயர் வீட்டில் அன்றிரவைக் கழிப்பது என்று முடிவெடுக்கின்றனர். அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் போது, பட்டென்று மின்சாரம் தடைபடுகிறது. மேயர் தன் மகளிடம் விளக்கு கொண்டு வரச் சொல்ல.......அவரது மகளைப் பார்த்த மாத்திரத்தில், கொலைகாரன் மூத்த காவலதிகாரியிடம் அனைத்தையும் ஒப்புக் கொள்கிறான். இங்கு இன்னொரு  உண்மையும் தெரிய வருகிறது. பொழுது புலர்ந்த சிறிது நேரத்தில், மறுபடியும் பிணத்தைத் தேடிச் செல்கின்றனர். இந்தமுறை அவர்களை சரியான இடத்திற்கே கொலையாளி(?) அழைத்துச் செல்ல......ஒருவழியாக பிணத்தைக் கண்டுபிடிக்கின்றனர். பிணத்தைத் தூக்க Bag போன்ற விஷயங்களை ஆட்கள் எடுத்துவர மறந்ததால், வேறு வழியில்லாமல் வண்டியின் பின்புறம் அப்படியே பிணத்தை சரித்து வைத்தபடி - ஒரு காவலாளி மறக்காமல் பப்பாளி பழங்களை பிணத்தின் அருகிலேயே வைத்துக் கொள்ள - அனைவரும்  ஊருக்கு திரும்புகின்றனர். இறந்தவனின் மனைவி தன் மகனுடன் அங்கு வந்து பிணத்தை அடையாளம் காட்ட, பிரேதப் பரிசோதனை செய்யப்பட, எலும்புகள் உடையும், பிரேதம் அறுபடும் சத்தமும் பின்னணி "இசை"யாக ஒலிக்க படம் முடிவடைகிறது.


சினிமாவை பொறுத்தவரை Exposition என்றொரு பதம் உண்டு. இந்த கதாபாத்திரம்/சம்பவத்திற்கு, பின்னணியில் சில காரணங்கள் உள்ளன, அந்தக் காரணங்களால்தான் இதுபோன்றதொரு விஷயம் நடந்தது என்று பார்வையாளருக்கு ஒரு விளக்கம் கூறுவதைப் போன்ற விஷயத்திற்குப் பெயர் தான் Exposition. ஆனால் நிஜ வாழ்க்கையில் இதுபோன்றதொரு விளக்கம் நம் யாருக்கும் முன்னதாகவே கிடைப்பதில்லை, தெரிவதில்லை. சமீபத்தில் டெல்லியில் நடந்த வன்கொடுமையை ஒட்டி, ஒரு ஆங்கில நியூஸ் சேனலில் (NDTV என்று ஞாபகம்) ஒரு குற்றவாளியின் குடியிருப்பு பகுதிக்குச் சென்று அந்நபரின் பக்கத்து வீட்டு ஆட்களிடம் பேட்டி கண்டனர். அனைவரும் சொன்னது, அந்தப் பையன் இருக்கும் இடமே தெரியாது. கடும் உழைப்பாளி. பெற்றோரை மதிக்கும் ஆள்.......இதுபோன்று தான் (கேமரா, அனுமதியே இல்லாமல், படாரென்று அவர்களது வீட்டிற்குள் நுழைந்தது வேறு விஷயம்). இதுபோன்றதொரு  பையன் இப்படியான காரியம் செய்வான் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள் ? இவ்வளவு ஏன், நாம் நெருங்கிப் பழகும் நண்பர்கள் கூட சில சமயம் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு மனதில் ஒன்றை வைத்துப் பேசுவார்கள். ஊர்வன,பறப்பன என்று அனைத்து உயிரினங்களும் திடீரென்று புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களைச் செய்யும். பல உதாரணங்கள் உண்டு.விஞ்ஞானிகளால் இன்றுவரை அவற்றிக்கு விடையளிக்க முடியவில்லை. மனித மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. அச்சமயங்களில் அதற்குரிய விளக்கத்தை யாராலும் தர இயலாது. சமீபத்தில் இந்தச் செய்தியை நம்மில் பல பேர் படித்திருப்போம். இதற்கு 90 % காரணம், குடியாக இருந்தாலும் - கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் மனதில் என்ன இருந்தது ? முன்விரோதமா ? அல்லது விபத்தா ? எப்படி அந்த வெறி வந்தது......தெரியாது. இதனடிப்படையிலேயே, நூரி பில்கே ஜெலான் இக்கதையை முன்னகர்த்துகிறார்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒருவிதமான பிரச்சனை, நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் போல. அவர்களது ஒருநாள் நிகழ்வை மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வே இந்தப் படம். பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அருகிலிருக்கும் ஆப்பிள் மரத்திலிருந்து பழங்களை எடுத்துக் கொண்டிருக்கும் காவலாளியில் தொடங்கி கடைசி கட்டத்தில், பிரேதப் பரிசோதனை செய்யும் ஆள்(படத்திலேயே மிகப் பிடித்தது இந்தக் கதாபாத்திரம் தான்) - பிணத்தை வைத்துக் கொண்டு சாவகாசமாக, எலக்ட்ரிக் ரம்பம் இருந்திருந்தால் சுலபமாக,வேகமாக அறுக்கலாம் என்று புகார் பட்டியல் வாசிப்பது வரை, அவரவர் கவலை அவரவருக்கு. படம் முழுமைக்கும் ரெண்டு பெண்களே காட்டப்பட்டாலும், படம் நெடுகிலும் பெண்கள் இருப்பதைப் போன்றதொரு உணர்வு. மற்றவர்களிடம் எரிந்துவிழும் காவல் அதிகாரி, மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் பம்முவதும், அரசாங்க அதிகாரி ஒரு பெண்ணைப்பற்றிக் கூறும் கதையும்(இது மிக முக்கியமானது), விவாகரத்தான மருத்துவரின் மனைவி என்று முகம் தெரியா பெண்களின் தாக்கத்தை படம் நெடுகிலும் உணரலாம். கூட வந்தவன் நான்தான் கொலை செய்தேன் என்று சொல்ல வாயெடுக்கும் போது, சும்மா இரு என்று அவனை அதட்டிவிட்டு, நான்தான் கொலை செய்தேன் என்று ஏன் இன்னொரு ஆள் ஒப்புக் கொள்ள வேண்டும் ? திரும்பத் திரும்ப இறந்த போன ஒரு பெண்ணின் கதையை பற்றி அரசாங்க அதிகாரி ஏன் கிளற வேண்டும் ? புதைக்கப்படும் போது உயிருடன் இருந்தான் என்று தெரிய வந்ததை ஏன் மருத்துவர் மறைக்கக் வேண்டும் ? மருத்துவமனை வாசலில், உள்ளே கணவன் பிணமாக இருக்கும் போது, வெளியே அவனது மனைவி காலை ஆட்டிய வண்ணம் சாவதானமாக உட்காந்திருந்ததன் காரணம் என்ன ? மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் ஜெலானின் வார்த்தைகளை படித்துவிட்டு, படத்தைப் பாருங்கள்.


இவ்வளவு அளப்பரிய தாக்கத்தை இப்படம் ஏற்படுத்த மற்றொரு காரணம், இதன் ஒளிப்பதிவு. வார்த்தைகளே இல்லை. பொருட்செலவு செய்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எல்லாம் இந்த ஒளிப்பதிவின் அருகில் வரவே முடியாது. "ஹாலிவுட் தரத்தை" விடுத்து நமது படங்கள் இதுபோன்ற தரத்தை நோக்கி நகர்ந்தால் நலம். கதாபாத்திரங்களின் உளவியலோடு, அந்த சூழ்நிலையை நாம் உள்வாங்குவதற்குரிய வெளியை (Space) போதிய அளவுக்கு நம்மூர் படங்கள் மட்டுமல்ல, நமது ஆதர்ஷமான ஹாலிவுட் படங்கள் கூடத் தருவதில்லை. இவனுக்கு இப்படி நடந்தது -> அதனால் இப்படி செய்தான் -> அதனால் இது நடந்தது..........அதோடு படம் முடிந்தது.

இதுபோன்ற படங்களை அடுத்த தளத்திற்கு எவ்வாறு ஒளிப்பதிவு எடுத்துச் செல்கிறது என்பதனை இதில் வரும் க்ளோஸ்-அப் காட்சிகளாகட்டும், மிட்/லாங் ஷாட்களாகட்டும் வெகு இயல்பாக பார்வையாளர்கள் உணரலாம். கார்களின் முகப்பு விளக்கு ஒளியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டியது, ஒளிப்பதிவு எங்கேயும் துருத்திக்கொண்டு தெரியாமல், நம்மை கதையுடன் ஐக்கியப்படுத்தும் ஊடகமாக மட்டுமே திகழ்கிறது. படத்தை மீறி இசையாகட்டும், ஒளிப்பதிவாகட்டும் - துருத்திக் கொண்டு தெரிவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று புரியாமல் விழிக்கும் பல திரைப்பட ரசிகர்களில் நானும் ஒருவன். ஒளிப்பதிவு நேர்த்தியுடன் வர இன்னொரு காரணாம், ஜெலான் - ஓவியராக வரத் திட்டமிட்டு - பின் புகைப்படக் கலைஞராக மாறியதாகவும் இருக்கலாம்.

உலகின் மிகச் சிறந்த பல இயக்குனர்களைப் போல, நூரி பில்கே ஜெலான் இலக்கிய நாட்டம் உள்ளவர் (there u go.....).

"I don't like puzzles. But in real life, we have to deal with half of reality, and we have the habit, or the reflex, of guessing the rest – because we're always lying to each other; everybody's protecting himself. If the audience doesn't join in the process, it's impossible to make it deeper, like literature."


சில இயக்குனர்கள் வாழ்கையின், மனிதர்களின் மீதான தங்களது மதிப்பீடுகளை பார்வையை எவ்வித சமரசமும் இன்றி அப்படியே திரையில் பிரதிபலிக்க விரும்புவார்கள். தாங்கள் எந்த நிலையில் வாழ்வை அணுகுகிறார்களோ அத்தளத்திற்கே பார்வையாளர்களும் வர வேண்டும் என்று விரும்புவார்கள். "இதோ இந்த உச்சியின் மீது நின்று பார்....கீழிருக்கும் ஊர் அட்டகாசமாகத் தெரியும்" என்று நம்மை அந்த உச்சிக்கு அழைத்து செல்ல விருப்பப்படுவார்கள். தர்கொவ்ஸ்கி, பெர்க்மன், பெல்லா டார் போன்ற ஆட்களைப் போல. ஜெலானும் அந்த வகையிலயே வருகிறார். என்னதான் உச்சிக்கு நாம் சென்றாலும் நம் கண்களின் வழியாகவே தான் நாம் அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கும். நமக்கான கோணங்களை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். இலக்கியத்தைப் போல. ஏன் இந்த கதாபாத்திரங்கள் இவ்வாறு பேசுகின்றன, மிக நீண்ட மௌனங்கள் எதற்கு, வெறுமையான பார்வைகள் எதற்கு என்றெல்லாம் யோசித்தோமானால் கதாபாத்திரங்களின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்தில் மேயரின் வீட்டில் அனைவரும் உணவருந்தும் போது, கொலையாளி மேயரின் மகளைப் பார்த்து அழத் தொடங்குவான். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், ஜெலானுக்கு அக்காட்சி எவ்வாறு தோன்றியது ?
"Definitely. In The Brothers Karamazov, you remember, Dmitri wakes up and realizes somebody has put a pillow under his head. That makes him confess to a murder he hasn't committed "

மேலும் ஜெலான், ஆன்டன் செகாவின் தீவிர ரசிகர். அவரே அதற்கான விளக்கத்தையும் கூறுகிறார்.

"Yes, actually in all my films I believe there is an element of Chekhov, because Chekhov wrote so many stories. He had stories about almost every situation, and I love them very much. So maybe he's influenced the way I look at life. Life follows Chekhov for me, in a way. After reading Chekhov, you begin to see the same kind of situations in life. And in the script writing stage, I remember the stories somehow, so yes, Chekhov is here "

இங்கு இன்னொரு கேள்வி இயல்பாகவே வரலாம். இயக்குனர் இலக்கிய பிடிப்புள்ளவர், செகாவின் ரசிகர் என்ற தகவல்களை எல்லாம் தெரிந்துகொண்டு பார்த்தால் மட்டுமே படத்தை மேலதிகமாக ரசிக்க முடியமா.......என்ற கேள்வி வரலாம். சினிமா குறித்தான தளத்தில்  ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்த பொழுது, கீழ இருக்கும் ட்ரைலர் அந்தத் தளத்தில் இருந்தது. படத்தின் பெயர் ஆர்வத்தை தூண்டவே, ட்ரைலரை பார்த்தேன். அவ்வளவுதான். டவுன்லோட் செய்ய ஆரம்பித்துவிட்டேன். டவுன்லோட் முடிந்து தான் இது துருக்கி மொழிப் படம் என்றே தெரியும். படம் பிடித்துப்போய், - வழக்கம் போல - இயக்குனரைப் பற்றித் தேடி, அவரது பேட்டிகளை பார்த்து/படித்து..........இப்போது மனதுக்கு பிடித்த இயக்குனராக ஆகி விட்டார். அவரது மற்ற படங்களையும் டவுன்லோட் செய்து பார்க்க ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், அடுத்த முறை அவரது படத்தை பார்க்கும் போது - அவரது படத்தை தாண்டிய விஷயங்கள், இலக்கிய ரசனைகள் குறித்தெல்லாம் நாம் பார்த்தால் - அப்படத்தின் மேல் ஒருவித முன்முடிவும், இலக்கிய ரசிகர் இவரு..."இன்ன  காரணத்திற்காக வெச்சிருப்பாரோ" என்ற அனுமானமும் நிச்சயம் எழ வாய்ப்புண்டு. அதை மீறி படம் பார்ப்பது அவரவர் கையில் தான் இருக்கிறது.


நான் முதன்முதலில் பார்க்கும் துருக்கி மொழிப் படம் இதுதான். இதனால் ஏற்பட்ட மற்றோரு நல்ல விஷயம்,  Semih Kaplanoğlu என்ற மற்றோரு துருக்கி இயக்குனரைப் பற்றியும் அவரது The Yusuf Trilogy பற்றித் தெரிந்து கொண்டதுமே ஆகும். இதுவே சிலபல மாதங்கள் முன்பு என்றால், நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பாருங்கள் என்று மெயில்,மெசேஜ்  செய்திருப்பேன் (அதுகூட பரவாயில்லை, எஸ்எம்எஸ் எல்லாம் அனுப்பிய காலம் உண்டு). அந்த பித்துக்குளித்தனத்தை இப்போது விட்டாயிற்று. ஒன்றே ஒன்று மட்டும், இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்திருந்தால், என் வாழ்வில் ஒரு நல்ல படைப்பை சர்வநிச்சயமாக இழந்திருப்பேன்.

இணையத்தில் அவரது இரண்டு படங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இந்தப் படம் உட்பட, ஏனைய படங்களும் டொரன்ட்ல் உள்ளது.

நூரி பில்கே ஜெலானின் இன்டர்வியுக்கள்: