பெரும்பாலானவர்களைப் போல நானும் மைக்கேல் ஜாக்சன் மூலமா தான் ஆங்கில பாடல்களையே கேட்க ஆரம்பிச்சேன். அதுவும் கடந்த ஆறு வருடங்களாகத்தான் நெறைய கேட்கவே முடிஞ்சது. ஏன்னா பத்தாவது வரைக்கும் எங்க வீட்டில கேபிள் கிடையாது. பத்தாவதுக்கப்பறம்-அதுவும் முழுப்பரீட்சை லீவ்ல தான் கேபிள் கொடுப்போம். கேபிள் வாடகையும் அதிகம்- கொடுத்தா நா ரொம்ப பார்ப்பேன்னு வேற கொடுக்க மாட்டாங்க. 12வது முடிச்சு காலேஜ் ரெண்டாவது வருசத்தில இருந்து தான் முழுநேரமும் கேபிள் இருந்தது. அப்ப இருந்து என் ராஜ்ஜியம் தான். எங்க வீட்டில யாருக்கும் சீரியல் பார்க்குற பழக்கம் இல்லாதது ரொம்ப வசதியா போச்சு. காலேஜில இருந்து வந்த உடனே vh1 சேனலத்தான் முதல்ல போடுவேன். ராத்திரி ஏதாவது எழுதிகிட்டு இருந்தாலும் எனக்கு பாட்டு ஓடிகிட்டே இருக்கணும். அப்ப இருந்துதான் பெருமளவில் நிறைய கேட்க ஆரம்பிச்சேன்.


அப்ப எனக்கு AC/DC, Bob Dylan,John Lennon,Marley இந்த மாதிரி யாரையுமே தெரியாது. ஏதோ முன்னாடி 10வது லீவ்ல பார்த்தத வெச்சு Robbie Williams, Metallica மாதிரி கொஞ்சம் பேரை மட்டுமே தெரியும்.இத எதுக்கு சொல்றேன்னா இசையில் முக்கியமான ஆளுமைகள தெரியாட்டியும் முதல் முறையா கேட்க்கும் போதே பல இசை வடிவங்கள் பெருமளவில் என்னை ஈர்த்திருச்சு. AC/DC-Back in Black கேட்ட உடனே ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்பறம் அவுங்க பாடல்கள் எல்லாத்தையும் தேடித்தேடி கேட்க ஆரம்பிச்சேன்(எல்லோரும் அப்படித்தானே...). எனக்கு அப்படியே வேற வேற இசை வடிவங்களை கேட்டுகிட்டே இருக்கணும். இதுல திருப்தியே வர மாட்டேங்குது. வலையபட்டி தவில், ஷேய்க் சின்ன மௌலானா இந்த மாதிரியே ஒரு டிவிடி முழுவதும் வெச்சுருக்கேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி பெண்கள் தப்பாட்டக் குழுவுடைய இசையமைப்பையும் கேட்டிருக்கேன். திடீர்ன்னு Eminemகு தாவிருவேன். அதுக்கு சம்பந்தமே இல்லாம Bach, Mozartன்னு கேட்பேன். எனக்கு புதுசு புதுசா கேட்டுகிட்டே இருக்கணும். அதே சமயம் மேலோட்டமா கேட்கவும் பிடிக்காது. எதுக்கு இவ்வளோ சுயதம்பட்டம்...நிஜமா எனக்கே தெரியல...எந்தவொரு பதிவுக்கும் Intro வேணுமில்ல..இத அதுமாதிரி எடுத்துக்கோங்க...
                                       Mission Impossible 2 படத்த பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அந்தப் படத்தின் OST ஞாபகமிருக்கா...ஒண்ணு Metallica-I Disappear இன்னொன்னு Limp Bizkit-Take a look around. ரெண்டுமே செமையா இருக்கும். அப்படித்தான் எனக்கு Hard Metal Rock அறிமுகமானதே. இதுல Metallicaவின் பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.அப்பயிருந்து அவுங்களப் பத்தி தேட ஆரம்பிச்சது...கொஞ்ச கொஞ்சமா வளந்து பல ராக் இசை குழுக்களைப் பற்றிய தேடல்ல முடிஞ்சது. இப்ப உள்ள Green Day, Wolfmother, White Stripes, Linkin Park மாதிரி பல குழுக்கள் பிடித்திருந்தாலும் 70's-80'sல வந்த ராக் இசை பெருமளவில் என்னை கவர்ந்துள்ளது. அதிலிருந்து சில பாடல்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்த வகை இசைக்கு புதியவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுட்டு அதை விரும்ப ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம். மத்தபடி ராக் இசை காட்டுக் கூச்சல், ஏகாதிபத்தியத்தின் எதிரொலி..இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்காது...

Led Zeppelin:


70'sக்கு அப்பறம் என்பதால Beatles, Elvis, Rolling Stone மாதிரி முன்னோடிகள தவிர்த்து நேரா கலக்கலானா ராக் வகையான Heavy Metal-Hard Rock வகைக்கு போயிர்றேன்.

இதுல மிகப் பெரிய மாற்றதை கொண்டு வந்த குழுவினர் இங்கிலாந்தைச் சேர்ந்த Led Zeppelin. இதுக்கு முக்கியக் காரணம் இந்தக் குழுவில் இருந்த ஜிம்மி பேஜ்(Jimmy Page)-கிடாரிஸ்ட். உலகின் மிகச் சிறந்த 3 கிடாரிஸ்ட் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. எலெக்ட்ரிக் கிடாரில் மிகப் பெரிய அளவில் மாறுதல்களை கொண்டு வந்தவர். 


அதுமட்டுமில்லாம இந்தக் குழுவின் பாடகரான ராபர்ட் பிளான்டின்(Robert Plant) குரலும் ஒரு முக்கியக் காரணம். எந்த ஒரு ராக் குழுவிற்கும் stage presence என்பது ரொம்ப முக்கியம்.குறிப்பாக..அதன் பாடகருக்கு. நீங்க ராபர்ட் பிளான்ட் பாடுவதைக் கேட்டால்-பார்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். Queen குழுவின் பாடகரும் உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்றான Freddie Mercury கூட தன்னை மிகப் பாதித்த குரலில் ஒன்று ராபர்ட் பிளான்டின் குரல் என்று கூறியுள்ளார்.


2008ல் Led Zeppelin குழுவினரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்திச்சு. அதன் தலைப்பு - When Giants Walked the Earth. என்ன ஒரு தலைப்பு பாருங்க..இவுங்க பாடலை இப்ப கேட்கும் எனக்கே இப்படினா... 70's-80'sல கேட்டவுங்களுக்கு எப்படி இருக்கும்...உங்களுக்கு தெரிந்தவர்களோ..உறவினர்களோ..ஏன் நீங்க கூட அந்த காலகட்டத்திலேயே இவர்களைக் கேட்டிருந்தீங்கன்னா அது குறித்து ஏதும் சொல்ல முடியுமா....இவர்களது பாடல்களில் எனக்கு மிகப் பிடித்த சில பாடல்களை பகிர்ந்துக்கிறேன்.
இதைத் தவிர பல பாடல்கள் இருந்தாலும்-சட்டுன்னு தோன்றுனது இவைகளே. Right Click-Save Target கொடுத்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.

சற்றே பெரிய பி.கு:
இதைத் தவிர நிறைய குழுவினர்களைப் பற்றியும் நான் ரசிக்கும் இசை வகைகள் பற்றியும் எழுதலாமா வேணாமன்னு ஒரு பெரிய குழப்பம்.எனக்கு இசை நுணுக்கங்கள குறித்து அளப்பரிய அறிவு கிடையாது.ஒரு சாமானிய ரசிகனாகத்தான் இருக்கேன்.பார்ப்போம்.சும்மா name dropping மாதிரி பாடல்கள்-குழுவினர்களை சொல்லிட்டு போக விருப்பம் இல்லை. முதல்ல நா எழுதுறது எனக்கு திருப்தியா இருக்கணும். அப்பறம்தான் எல்லாம்.என்னித படிக்கிற பத்து பேர்ல ஒருத்தராவது பாடல்களைக் கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும். யாருக்கும் ப்ளாகில் பாடல்களைக் கேட்கும் அளவிற்கு நேரம் இருக்காது என்று தெரியும். டவுன்லோட் செஞ்சு அப்பறம் கேட்டா கூட சந்தோஷம்.   
                                    Reporter: Mr.Lenin whom do you want to meet ?
                                        Lenin: Chaplin is the only man in the world I want to meet.

----------------------------------

                        1939 - இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கிறது. 1940ல் ஹிட்லர் அதிகார வெறியின் உச்சத்தில் இருந்த நேரம். போலந்து,டென்மார்க்,பெல்ஜியம்,நோர்வே,நெதர்லாந்து,பிரான்ஸ் என்று அத்தனை நாடுகளையும் ஜெர்மானியப் படைகள் அடுத்தடுத்து கைப்பற்றியது. யாருமே ஹிட்லரை கேள்விகேட்க முடியாத நிலை - அவனை எதிர்ப்பதை நினைத்தே பார்க்க முடியாது.அது ஜெர்மனியாக இருந்தாலும் சரி..பிற நாடுகளாக இருந்தாலும் சரி. இந்தத் சூழ்நிலையில் 1940ல் ஹிட்லரை படுகேவலமாக சித்தரித்து - நாடகமோ, கதையோ அல்ல - ஒரு முழுநீளத் திரைப்படமே வெளிவந்தது.The Great Dictator. சாப்ளின் -அப்போது அமெரிக்காவில் இருந்ததால் தைரியமாக இப்படத்தை எடுத்ததாகக் கருதலாம். ஆனால் இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் எந்தப் பக்கமும் சேராமல் அமெரிக்கா அடக்கியே வாசித்தது(Pearl Harbour தாக்குதலுக்கு பிறகே வெறியுடன் களத்தில் இறங்கியது). அதனால் சாப்ளின் இப்படத்தை எடுத்த போது அமெரிக்காவில் - எதுக்கு தேவையில்லாம இந்த ஆளு ஹிட்லர் வம்புக்கு போறார் - என்று முணுமுணுப்புகளும் எழுந்தது. 


மேலும் பெருமளவில் கடன் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். அதுவரையில் மௌனப் படங்களை மட்டுமே எடுத்து வந்தவர், முதல் முறையாக பேசும் படத்தை எடுக்கிறார் - அதுவும் இதைப் போன்ற ஒரு கருவுடன். படத்தின் கதை..வழக்கமான ஆள்மாறாட்டக் கதை. ஒரு சாப்ளின்-நாவிதர்,யூதர். ஜெர்மனிக்காக போரில் ஈடுபட்டு அம்னிசியாவிற்கு ஆளாகி மருத்துவமனையில் இருக்கிறார். மற்றொரு சாப்ளின் - அடினாய்டு ஹென்கல். டோமானியா நாட்டின் சர்வாதிகாரி. யூதர்களை பல விதங்களில் கொடுமைப்படுத்தியும், சொந்த நாட்டு மக்களைப் பற்றி எவ்வித கவலையின்றி சர்வாதிகாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்து வருகிறான். அவனுக்கு உடந்தை அமைச்சர் கார்பேஜ். ஒருகட்டத்தில் சர்வாதிகாரிக்குப் பதில் நாவிதர் ஆட்சிக்கு வர என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை. யாரையும் விட்டுவைக்காமல் சகலரையும் பயங்கரமாக கேலி செய்திருப்பார். ஹிட்லர்(ஹென்கல்), கோயபல்ஸ்(கார்பேஜ்), ஜெர்மனி(டோமானியா - டோமைன், விஷத்தின் பெயர்), முசோலினி(நபலோனி), இத்தாலி(பாக்டீரியா-ஏன் என்று உங்களுக்கே புரிந்திருக்கும்) என்று ஒருவர் பாக்கியில்லை. ஹென்கல் வரும் அணைத்து காட்சிகளும் அட்டகாசம். சிரித்துக் கொண்டே இருப்பேன்(எத்தனை முறை பார்த்தாலும்). நகைச்சுவை பிரதானமாக இருந்தாலும் யூதர்களின் நிலையையும், ஜெர்மானிய வீரர்களின்-மக்களின் நிலையையும் அப்பட்டமாக காட்டியிருப்பார்.    


                                                   மேலும் குறிப்பிடத்தக்க விஷயம்-முதல்முறையாக பேசும் படம் எடுத்தாலும் என்ன ஒரு குரலிசைவு,உடல் மொழி. Downfall படம் பார்த்த அனைவருக்கும் ஹிட்லரின் உடலசைவு நன்றாக புரிந்திருக்கும். ஆனால் 1940லேயே அந்த உடல்மொழியை தத்ரூபமாக திரையில் எப்படிக் கொண்டுவர முடிந்ததோ.ஹிட்லரின் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரியாத போது இந்தப் படம் உலகளவில் அதை எடுத்துரைத்தது. ஆனாலும் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு முழுஉண்மைகளும் வெளியே தெரிந்த பொழுது, சாப்ளின்-இந்தக் கொடுமையான விஷயங்கள் முழு அளவில் எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் இந்தப் படத்தை எடுக்கும் மனோதிடம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே என்று பின்னர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். "தமிழ் படம்" போன்ற படங்களை எடுப்பதே தைரியமான முயற்சி என்று சொல்லும் ஊரில் வாழும் எனக்கு , 1940லேயே ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படத்தை என்ன சொல்ல என்றுத் தெரியவில்லை... 


எனக்கு மிகப்பிடித்த ஆளுமைகளில் ஒருவர்-சார்லி சாப்ளின். நானும் ஆரம்பத்தில் அவரை ஒரு நகைச்சுவை நடிகர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். போகப்போக அவரது படங்களைப் பார்த்ததும், அவரைப் பற்றி படித்ததும் அந்த நினைப்பை அடியோடு மாற்றியது. குறிப்பாக இந்தப் படம் அவரது திறமையின் உச்சம் என்று தோன்றுகிறது. முதல்முறையாக பேசும் படத்தை இயக்குகிறார். அதுவும் எத்தகைய கதைக்கரு பாருங்கள்...(பேசும் படங்கள் பெருமளவில் வர ஆரம்பித்த காலத்திலேயே மௌனப் படங்களையே ரொம்ப விரும்பினார். ஆனாலும் இப்படத்திற்காக அந்த முடிவை தளர்த்திக்கொண்டார்.)அவர் நடிகர்-தயாரிப்பாளர்-இயக்குனர் மட்டுமின்றி இப்படத்தின் இசையமைப்பிலும் பல புதுமைகளை புகுத்தியுள்ளார்(உ.தா-சலூனில் முடிவெட்டுவதேர்கேற்ப சிம்போனி இசை ஓடும் காட்சி). பின்னாளில் சிறந்த இசையமைப்பாளராகவும் பரிமளித்தார். அது மட்டுமின்றி இன்னொரு மிகப்பெரிய விஷயம் அவர் நடித்த அணைத்துப் படங்களின் தயாரிப்பாளர்-கதாசிரியர்-நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் எல்லாம் அவரே. விளையாட்டிலும் வல்லவர். இதையெல்லாம் தாண்டி சிறந்த சிந்தனாவாதியும் கூட. சொந்த வாழ்க்கையில பல கஷ்டங்களை சந்தித்தாலும் அவை எதுவும் தன் படங்களில் பிரதிபலிக்காதவாறு பார்த்துக் கொண்டார். தன்னை வருத்தி பிறரை மகிழ்விக்கும் கலையின் பிதாமகன் அவர். அவரது சுயசரிதையை படித்துப் பார்க்க வேண்டும்(நானும் கூட). குழந்தைகள்-சிறுவர்களுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்ளின் படங்களை தாராளமாக கொடுக்கலாம்(எனக்கு இதுவரை யாரும் கொடுத்ததில்லை).இந்தப் படத்தின் கடைசி காட்சியில் ஹென்கலுக்கு பதிலாக ஆட்சியில் இருக்கும் நாவிதர் சாப்ளின் பேசும் இந்த வசனங்களே போதும்-சாப்ளினின் ஆளுமையை வெளிப்படுத்த.அது ஒரு அற்புதமான பேச்சு. தயவுசெய்து அதைப் பாருங்கள்.


பி.கு: 
  • நேற்று இந்தப் படத்தை UTV Worldmoviesல் பார்த்தேன். முதல்தடவ பார்ப்பத போல விழுந்து விழுந்து சிரிச்சேன். அதுனால ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்னய மாதிரி சின்னப் பசங்களை எல்லாம் கூப்பிட்டு வெச்சுகிட்டு இந்தப் படத்தப் பாருங்க (பெரும்பாலானவங்க பார்த்திருப்பீங்க,மறுபடியும் பாருங்க). கண்டிப்பா நீங்களும் நல்லா ரசிப்பீங்க.
  • ஹிட்லரே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம்
இணைப்பு:
பின்னூட்டத்தில் சில விஷயங்களை இணைத்து உள்ளேன். அதே இங்கேயும் பகிர்ந்து கொண்டால் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
----------*********----------
ஹிட்லரே இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியதாக எங்கேயோ படித்த ஞாபகம் இருக்குதுன்னு சொன்னேனே..அது சம்பந்தமாக நெட்டில் பதிவெழுதி முடித்தவுடன் தேடியபோது இவைகள் கிடைத்தன

1) http://www.dailymail.co.uk/news/article-520648/Nazi-propaganda-book-reveals-Charlie-Chaplin-Hitlers-death-list.html
http://www.telegraph.co.uk/news/uknews/1579971/Nazi-propaganda-book-targeted-Charlie-Chaplin.html

இந்த இரண்டு லிங்க்-ல் ஹிட்லரின் படுகொலைப் பட்டியலில் சாப்ளின் ஏற்கனவே இருந்ததாகவும் (1930) இந்தப் புத்தகமே சாப்ளினை மேலும் கிளறி விட்டதாகவும் ஒரு தகவல். அப்படினா தெரிஞ்சே எவ்வளவு தைரியத்துடன் எடுத்திருக்கார் பாருங்க.

2) எஸ்.ரா அவர்களும் சாப்ளினை பற்றி எழுதியுள்ளவை: http://www.sramakrishnan.com/deep_story.asp?id=66&page=6

இந்த லிங்க்-ல் அக்னிப்பார்வை என்ற பதிவர் சிறப்பாக சாப்ளினின் படங்களை குறித்து எழுதியுள்ளார்.     http://www.thamizhstudio.com/serials_2_index.php.


3) ஹிட்லருடன் சேர்த்து நிறைய பேர் சாப்ளின்-ஒரு யூதர் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் இது குறித்து சாப்ளின் ஒரு பேட்டியில்-எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று கூறியுள்ளார்.

-----*******-----
இப்ப முக்கியமான கேள்வி - ஹிட்லர் இந்தப் படத்த பார்த்தானா?

http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/tramp-and-the-dictator.shtml

இந்த லிங்க் bbc சாப்ளின் பத்தி எடுத்த ஒரு documentaryல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
//But did Hitler ever see it? Screenwriter Budd Schulberg, who was present at the Nuremberg trials, noticed that the title was mentioned twice in a list of films that had been sent to Hitler; moreover, an eyewitness who was a member of Hitler's inner circle at the time is absolutely convinced that he did see it//

அதேபோல் IMDB triviaவிழும் http://www.imdb.com/title/tt0032553/trivia
//When this film was released, Adolf Hitler banned it in Germany and in all countries occupied by the Nazis. Curiosity eventually got the best of him and he had a print brought in through Portugal. He screened it not once but twice. Unfortunately, history did not record his reaction to the film. When told of this, Charles Chaplin said, "I'd give anything to know what he thought of it."//

மேலும் சில வலைத்தளங்களிலும் இது போன்ற செய்தியுள்ளது. அதைப் போன்றே ஹிட்லர் தனது மீசையை சாப்ளினை பார்த்து சற்று திருத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இருவரது பிறந்த நாட்களும் இடையே 4 நாட்கள் மட்டுமே இடைவெளி. சிறுவயதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஒரே மாதிரி முக அமைப்பு. இது போன்ற ஒற்றுமைகளும் உள்ளன.
                               முதல்முதலாக கேமராவில் நீங்க எடுத்த படம் ஞாபகமிருக்கா? கேமரான்னு ஒண்ணு கைல கிடச்சவுடன் நா பண்ண அலும்பு...நியூட்டனுடன் சேர்ந்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த மாதிரி விட்டத்த வெறிச்சு பார்க்கச் சொல்லி யாரையாவது போட்டோ எடுக்குறது, ஹென்றி ஷாரியருக்கு அப்பறம் பல நாட்கள் சிறையிலிருந்ததுக்கப்பறம் சூரியோதயத்தை பார்க்குற மாதிரி சூரியன போட்டோ எடுக்குறது, பக்கத்து வீட்டில படுத்திருக்கும் பாட்டி,காக்கா,ஆடு,புல்லு,ஏதயுமே விட்டு வைக்கல. என் தொல்லைக்கு பயந்தே Post-Apocalypseக்கு அப்பறம் இருக்கும் நகரம் மாதிரி எங்க ஏரியாவே காலியாயிருச்சு.

                                 ஆறாப்பு படிக்கும் போது முதலில் Kodak KB-10 எங்க அப்பா வாங்கிக் கொடுத்தார். அதுல எடுத்த போட்டோக்களை இங்க போடலாம்னு பார்த்தேன். பின்னாடி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபோகும் படங்களை இப்பவே எதுக்கு வெளியில விட்டுட்டுன்னு அந்த ஐடியாவை கை கழுவிட்டேன்.இப்பவும் என்ட பெரிய கேமராலாம் ஒண்ணும் இல்ல. பிலிம் போட்டு எடுக்குற ஒரு Kodak கேமராதான். யூனிவர்சிட்டில எங்க டிபார்ட்மெண்ட் டிஜிட்டல் காமிராவில் நா தான் எடுப்பேன்.நண்பர்களுடைய டிஜிட்டல் காமிராவிலும் எடுத்திருக்கேன். ஆனா lightingக கணக்கிட்டு-அதுக்கேத்த பிலிம் உபயோகித்து-போட்டோஷாப் மாதிரியான செயற்கைத்தனமான விசயங்களை உபயோகிக்காம manual film கேமராவில எடுத்து அது பிரிண்ட் போட்டு கையில வரும் போது இருக்கும் சந்தோஷம் டிஜிட்டல் காமிராவில எடுக்கும்போது எனக்கு வரல. அமெச்சூருக்கும் கீழ ஏதாவது வார்த்தையிருந்தா அதை போட்டுட்டு = கணேஷ் = ஃபோட்டோகிராஃபி என்று புரிஞ்சுக்கோங்க. அதுனாலயே இந்தப்படம் எனக்கு மிகப் பிடித்தது. Ofcourse....படம் சினிமா கேமராவை மையமாக கொண்டுள்ள படம் என்றாலும்...படத்தின் கதாப்பாத்திரத்திற்கு சினிமா கேமராவின் மீதுள்ள ஈடுபாடு எனக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தியது. கண்டிப்பாக உங்களுக்கும் பழையத ஞாபகப்படுத்தும்.
                            எனக்கு மிகப்பிடித்த ஒரு இயக்குனர்-கிறிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கி. அவரது புகழ் பெற்ற Three Colours படங்களை பார்க்கும் முன்னரே Amator படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.அப்ப எனக்கு கீஸ்லோவ்ஸ்கிய பற்றி ஒன்றும் தெரியாது. ஆனா படத்தின் தலைப்பு (Camera Buff) என்னைப் பார்க்கத் தூண்டியது. பார்த்திட்டு அசந்தே போனேன். எனக்கு Three Colours படத்தை விட இப்படமே மிகவும் பிடித்துள்ளது (எனக்கு குடும்ப உறவு-ஆண்-பெண் மனச் சிக்கல்கள் குறித்த படங்கள் அவ்வளவா புரியாததும் ஒரு காரணம்).ஒரு விஷயத்தின் மீது ரெண்டு வகையான ஈடுபாடு இருக்கலாம்- விருப்பம்(Passion) & வெறி(Obsession).இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கு சினிமா கேமராவின் மீது ரெண்டு கலந்த ஒரு ஈடுபாடு .

                                            பிலிப் மோஸ்க்கு ஒரு பெண் குழந்தை பிறக்கயிருக்கிறது. அதன் நடவடிக்கைகளை படம்பிடிப்பதற்க்காகத் தன் ரெண்டு மாத சம்பளத் தொகையை செலவழித்து ஒரு 8mm கேமிராவை வாங்குகிறான். எப்பொழுது முதல்முதலாக கேமிராவின் லென்ஸ் வழியாக பார்க்க ஆரம்பிக்கிறானோ அதிலிருந்து அவன் வாழ்க்கை அடியோடு மாறத்தொடங்குகிறது. கண்களுக்கு பதில் கேமிராவின் கோணத்தைக் கொண்டே அனைத்தையும் பார்க்க ஆரம்பிக்கிறான். கண்ணில் படும் அனைத்தையும், பறவைகள், நண்பர்கள், இடங்கள் என்று சகலத்தையும் தன் கேமிராவில் சிறை பிடிக்க ஆசைப்படுகிறான். இந்நிலையில் தன் நிறுவனம் 20வது நிறைவு விழாவை கொண்டாடுவதை ஒட்டி அந்நிறுவனத்தின் தலைவர் - கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் -  அவ்விழாவின் கொண்டாட்டங்களை படம்பிடிக்க அவனை அணுகுகிறார். அவன் எடுத்த சில காட்சிகளினால் நிறுவனத்தினர் அதிருப்தி அடைகின்றனர். இருந்தாலும் பிலிப் அக்குறும்படத்தை ஒரு போட்டிக்கு அனுப்பி வைக்க அவனுக்கு அதற்கு மூன்றாம் பரிசு கிடைக்கிறது. இப்பரிசு படங்களின் மீது அவனுக்குள்ள ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. ஆனால் குடும்பத்தில் இதனால் குழப்பம் தலைதூக்க ஆரம்பிக்கிறது. பின்னே..குடும்பத்தை மறந்து கேமராவும் கையுமாகவே ஒருவன் சுற்றிக்கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. வேலையா..குடும்பமா ..சினிமாவா என்ற குழப்பத்தில் சிக்கித் தொடங்குகிறான்.  
அவன் கலந்து கொண்ட போட்டியின் மூலம் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பும், சினிமா ஆர்வலர்கள் பலரின் நட்பும் கிடைக்கிறது.அவர்கள் (அவளும்) அவனின் பட ஆர்வத்தை கிளறி விட மேலும் சில குறும்படங்களை இயக்கும் வேலையில் இறங்குகிறான்.ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் உருவ -வளர்ச்சி குறைபாடுள்ள ஒருவரின் நடவடிக்கைகளை படம் பிடிக்கிறான். இதனிடையில் மனைவியுடன் கடும் சண்டை ஏற்படுகிறது. மனைவி அவனை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.சிதிலமடைந்த தன் நகரத்தைக் குறித்தும் ஒரு குறும்படத்தையும் இயக்குகிறான். நகர மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியாக உபயோகிக்கப்படாததும் அப்படத்தின் மூலம் தெரிய வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதைக் கண்டு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அதை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் அப்படத்தினால் அவன் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. பிலிப்பும் பல உளைச்சல்களுக்கு ஆளாகி வெறுத்துப்போய் இனி படமே எடுக்கக்கூடாது என்ற முடிவோடு படம்பிடித்து வைத்திருந்த படச்சுருளை எடுத்து வெளியே எரிகிறான். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை எண்ணி மனம் நொந்தவாறு வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறான். புதிதாக வாங்கியிருந்த 16mm கேமராவைப் பார்க்கிறான். இனி அடுத்தவர்கள் கதையைச் சொன்னது போதும். தன் கதையை தானே சொல்வதென தீர்மானித்து கேமராவை தன்னை நோக்கி திருப்புவதுடன் படம் முடிவடைகிறது.


பிலிப் தன் மேலாளரிடம் விவாதிக்கும் போது திரைப்படங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறான்...படங்கள் உங்களது கொண்டாட்டங்களின் தம்பட்டமாக இருக்க வேண்டியதில்லை. அன்றாட நிகழ்வுகளை அவற்றில் இருந்து நான் உள்வாங்கியதை வெளிப்படுத்துவதே என்னளவில் சினிமா என்று விளக்கமளிக்கிறான். அதற்கு மேலாளர்..ஆட்கள் போவதையும் வருவதையும் பேசுவதையும் பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது..என்று கேட்கிறார். இதே கேள்வியை கீஸ்லோவ்ஸ்கியிடம் யாரவது கேட்டிருந்து ஒருவேளை இப்படத்தின் மூலம் அவர்களுக்கு பதிலளித்திருக்கிறாறோ என்னவோ. படத்தில் அவ்வளவு இயல்பு. மிக சுவாரசியமாகவே நகர்கிறது.


படம் எடுக்கப்பட்ட ஆண்டு-1979. எப்படி இப்படி ஒரு ஒளிப்பதிவு என்று சத்தியாம என்னால நம்ப முடியல(கீஸ்லோவ்ஸ்கியே வந்து துண்டப்போட்டு தாண்டுனாலும் நம்புவேணாங்கிறது சந்தேகமே). படம் முழுக்க பிலிபின் கேமரா வழியாகவே நாமும் அங்கு நடப்பதை பார்ப்பதைப் போன்ற உணர்வு நிச்சயம் வரும். எனக்கு மூன்று காட்சிகள் ரொம்ப பிடிச்சது. உருவ-குறைபாடுள்ளவரோடு அமர்ந்து பிலிப் -அவரைப்பற்றிய குறும்படத்தை பார்க்கும் காட்சி, மனைவி ரொம்ப கோபமா சண்டை போட்டுத் திரும்பும் போது பிலிபும் கோபத்துடன்-திட்டுவான்னு தான் நான் நெனச்சேன்-டக்குனு கைவிரல்கள் வழியா கேமரா கோணத்துடன் மனைவி போவதை பார்க்கும் காட்சி, கடைசியாக 16mm கேமராவை தன் பக்கம் திருப்பி அதை இயக்கம் போது (ஒரு சின்ன jerk முகத்தில் வரும்-class) அந்த 16mm கேமராவில் பிலிப்பின் எதிரொளி விழும் காட்சி. நடிப்பு - அவர் யாரென்றே தெரியவில்லை. ஆனா பார்வையாளர்களை பிலிப்பின் நடவடிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்னு ரொம்ப சுலபமாக நம்பவைத்து விடுகிறார். படத்தில் கம்யூனிஸ ஆட்சியின் அடக்குமுறைகளையும் சொல்லியிருக்காங்க. செட்டிங்க்ஸ் எவ்வித செயற்கைத்தனங்களும் இல்லாம இயல்பாயிருந்தது. நா பகிர்ந்திருக்குறது ஒரு 5% தான். கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு பல வித தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் போன மாதம் மதுரையில் வாங்கினேன். நேற்றுதான் பார்க்க முடிந்தது. பாஸ்கரன் சார் கடைல இருக்க வாய்ப்பிருக்கு. இல்லைன்னா இங்கிருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க.

பி.கு: 

Cinema is not the reflection of reality, but the reality of the reflection -- Jean Luc Godard. 

இது இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்று என்று நினைக்கிறேன்.இந்த quote குறித்து உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து பின்னூட்டமிடவும்.
                 (9)
                 என் பெயர் Turkish.என்ன..பிராய்லர் கோழி பேரு மாதிரி இருக்குன்னு நெனக்கிரீங்களா..என் மம்மியும் டாடியும் ஒரு விமான விபத்துல தான் சந்திச்சுகிட்டாங்க.அந்த ப்ளேன் பேரயே எனக்கு வெச்சுட்டாங்க. இந்தா..என் பக்கத்தில உக்காந்திருக்காரே என் நண்பன் Tommy...அவன் பெயருக்கு என்ன காரணம்னா....வேற வேலையில்ல.ரைட்.மேட்டருக்கு வரேன்.நா குத்துச்சண்டை போட்டிகள ஏற்பாடு பண்ணுறவன்.குத்துச்சண்டைனா உங்க படத்தில வர மாதிரி ஒரு குத்துவிட்டு அவரு அ...அ..ஆ.ஆ.ஏ..ஏ.ன்னு தமிழில் எல்லா உயிர் எழுத்துக்களையும் சொல்லி எக்கோ விட்டுகிட்டு கீழே விழ ஆரம்பிப்பார்.நீங்க நைட் சாப்பட்டையும் முடிச்சு காலையில எழுந்திரிச்சு சிலபல வேளைகள முடிச்சிட்டு டிஃபனுக்கு உக்காதீங்கன்னா அப்பதான் விழுந்து முடிப்பார்.நா சொல்றது அந்த மாதிரி பாக்ஸிங் இல்ல. திருட்டுத்தானமா லைசென்ஸ் வாங்காத பாக்ஸிங். அடி ஒவ்வொன்னும் சும்மா நங்குனு இறங்கும். ஆளுக அப்பப்ப மௌத் ஆகுறதும் உண்டு. இந்த வேலயத்தான் போன வாரம் வரை செஞ்சுகிட்டு இருந்தேன்.இப்ப எல்லாம் தலைகீழா மாறிருச்சு. எனக்கு வைரங்களைப் பத்தி இதுவரைக்கும் ஏதாவது தெரியுமா... வைரங்க என்ன Antwerpலயிருந்தா வருது?  
(2)

(சில பாதிரியார்கள்(1,2,3,4,5)-செக்யூரிட்டி ஆட்கள்)
                       1: ஆதாம்-ஏவாள் கதை தெரியும்ல...Nice story.
                       2: அத நம்பச் சொல்லுறீங்களா?
செக்யூரிட்டி: இதென்ன..இதென்னனு கேக்குறேன்ல....
                       1: அட..என்னப்பா நீ..பேன்ட் நீக்க வேணாம..கொஞ்சம் பெரிய 
                           பெல்ட்.வேணா பெல்ட கிழிச்சி பார்த்துக்க..
செக்யூரிட்டி: சரி..சரி..போங்க...
                       1: கத்தோலிக் மதமே.....
                       3: சாமி....நிறுத்தமாட்டீங்களா...போர் அடிக்குது. நாம யாரப் பார்க்கப் 
                           போறோம்.
                       1: மைக்கேல்
(ரூமின் வெளியேயிருந்து கதவைத் தட்டுகிறார்கள்) 
 மைக்கேல்: யாரது?..
                      1: நா தான்-முட்டி
 மைக்கேல்: ரூடி...அவுங்கள உள்ள அனுப்பு.....வா வா வா..முட்டி.எவ்வளோ 
                         நேரம் வையிட் பண்றது...யூ முட்டி???? 
                 -Gunshots-                                 -நிறைய  Gunshots-
                     1: எல்லாரும் கீழ படுங்க.now.கீழ படுங்கன்னு சொல்றேன்ல யு   F^*##
             
(7 நிமிடங்கள்..33 நொடிகள்.. முடிந்து)
                     1: மைக்கேல்..எங்க அந்த வைரம்...சொல்லுப்ப ராஜா....
----------
                     4: உன் ப்ளேன் எப்ப கிளம்புது...
      1@Franky: இன்னும் 20 நிமிசத்தில..
                     4: உன் துப்பாக்கிய கொடுத்திட்டு போ..அப்பறம் நீ லண்டன் 
                         போனதுக்கப்பறம் துப்பாக்கி தேவைப்பட்ட இந்த நம்பருக்கு கால்            
                         பண்ணு. உனக்கு தேவைப்படுற ஏத வேணாலும் இவர் ஏற்படுத்திக் 
                         கொடுப்பார்.
            Franky: என்ன பேரு...Boris the Blade....

(7)

Turkish: இங்க பாரு ...இந்த மாதிரி உளுத்துப்போன caravan வண்டிய வெச்சுக்கிட்டு 
             எப்படி நா ஆபீஸ் நடத்துறது..எவனாது மதிப்பான..நீ எனக்கு ஒரு caravanன 
             ஏற்பாடு பண்ற டாமி..
Tommy: why me?
Turkish: ஏன்னா நீ ஒரு மாசம் caravanல இருந்திருக்கே.so..என்ன விட உனக்கு 
            அதிகமா உனக்கு அதைப்பத்தி தெரியும்.Thats why you.ஒண்ணும் 
            கவலப்படாத.ஏற்கனவே எல்லாம் பேசியாச்சு.இந்த அட்ரஸ்ல போய் 
            எடுத்துகிட்டு வந்துரு.
Tommy: யோவ்..என்ன லந்தா..இந்த அட்ரஸ்ல இருக்குறவங்க pikeys. சத்தியமா 
             எனக்கு ஆகாது. 
Turkish: இந்தா..இதுல ஒரு லட்சம் இருக்கு. மீதிய கரெக்ட்டா கொடுத்திரு.
Tommy: F***
Turkish: ஏ..என்னாது...என்னமோ நீட்டிக்கிட்டு இருக்கு.
Tommy: அது என் பெல்ட்.
Turkish: ப்ச்..பெல்டில்ல...அதுல சொருகி வச்சிருக்கியே gun அதைப் பத்தி.உனக்கு 
             எதுக்கு அது..உக்காரும் போதும் வெடிச்சு கண்டது தெறிக்க போகுது.
Tommy: ஒரு பாதுகாப்புக்கு..
Turkish: எங்க கிடச்சது உனக்கு..
Tommy: Boris The Blade.
Turkish: யாரு அந்த F****** ரஷ்யனா...கிழிஞ்சது

(6)
Tommy & Borris the Blade - சில நாட்கள் முன்பு:
Tommy: Gun ரொம்ப வெயிட்டா இருக்கே...
  Borris: வெயிட்தான் எப்பவும் நல்லது பையா..ஒருவேள சுடலைனா கூட 
             அடிச்சே ஆளக்காலி பண்ணிரலாம்.
Tommy: ஓகே..நா வாங்கிக்கிறேன்

மக்களே..புதுசா டாமிக்கு துப்பாக்கிகள் மேல ஆர்வம் பீறிடுவதற்கு காரணமிருக்கு = Brick Top

(1)
Turkish & Brick Top கொஞ்சம் சில நாட்கள் முன்பு: 
Brick Top ஆட்களை அப்புறப்படுத்துவதில் அலாதியான அணுகுமுறை இருக்கும். ஒரு ஸ்டன் கன்-பிளாஸ்டிக் பை(பிளாஸ்டிக் சுற்றுப்புறத்திற்கு கேடு)-அப்புறம் பன்றிகள்-நிறைய பன்றிகள். இந்த வரிசைலதான் இருக்கும். அந்த ஆள்ட்ட சர்வ ஜாக்கிரதைய டீல் பேசணும். நாம அந்தாளுக்கு கைமாத்து தர வேண்டிய நெலமைலா மாட்டுனோம்...தொலைஞ்சோம்.

Brick Top: இந்த பாரு Turkish..நா முடிவுபண்ற மாதிரிதான் இந்த குத்துச்சண்டை 
                 போட்டி இருக்கனும். என்ன நம்பி பல பேர் பெட் கட்டுவாங்க. ஒழுங்கா 
                  நடந்தா உனக்கு பல விதத்துல நல்லது(இந்த வார்த்தைலதான் 
                 விழுந்திட்டேன்.).என்ன வெறுப்பேத்துற மாதிரி ஏதாவது ஆச்சு...
-
(4)
இதற்கிடையில்.........
4: Boris.....Franky கல்லு சைஸ்க்கு ஒரு வைரத்தோட லண்டன் வரான். வைரத்த ஒரு பெட்டில வெச்சு கையோட மாட்டியிருப்பான்.உன்ட துப்பாக்கி வாங்க சொல்லியிருக்கேன்.நீ இதுல இறங்காத. என் அண்ணன் மாதிரி யோசி..வேற யாராவது விவரமான ஆட்கள ஏறக்கு.அப்பறம் இன்னொன்னு..அவனுக்கு சூதாட்டம் ரொம்ப பிடிக்கும்...

(3)
அதே சமயத்தில்........
     Avi: 86 காரட்டா...... வெரி குட் Franky boy. எப்ப நியூயார்க் திரும்புற?
 Frank: எனக்கு லண்டன்ல கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சவுடனேயே 
           நியூயார்க்தான்.
    Avi: ரொம்ப முக்கியமா Frank சூதாட்டத்திலிருந்து தள்ளியேயிரு. முடிஞ்சா என் 
           மாமா பையன் Dougக போய் பாரு.அவன்ட நீ வந்த விசயத்த சொல்லி 
           வைக்கிறேன்.

(இந்த Doug வேற யாருமில்ல-நகைகள விக்கனும்னா-திருட்டு நகைகள விக்கனும்னா இவன்தான் அதுக்கு சரியான ஆளு)

(5)
Boris & Frank-சந்திப்பு:
Boris: வெய்ட்ட இருக்குற துப்பாக்கிகள்தான் எப்பவுமே நம்பகமானது. 
          வெயிட்டா இருக்குறதுல இன்னொரு உபயோகமும்மிருக்கு.
Frank: சரி..எடுத்திக்கிறேன். எவ்வளோ...
Boris: ஒண்ணும் வேண்டாம்..
Frank: எதுக்கு இந்த சகாயம்....
 Boris: எனக்கு ஒரு உதவி பண்ணனும்.இன்னும் கொஞ்ச நாள்ல இங்க 
           லைசென்ஸ் இல்லாத பாக்ஸிங் போட்டி நடக்கப்போகுது. என் சார்பா நீ   
           பெட் கட்டனும்.
Frank: நீயே பண்ணலாமே.....
Boris: எனக்கு தெரியாதா...அதுல சில வில்லங்கம் இருக்குனுதானே உண்ட 
          கேக்குறேன்..முடியுமா-முடியாதா?ஆமா... உனக்கு சூதாட்டம்-பெட்டிங் 
           எல்லா வருமா.....
Frank: ஹே..ஹேய்....

(8)
Tommy & Mikey:
   Tommy: I hate F****** pikeys Gorgeous
Gorgeous: சரி...வந்த வேலைய முடிப்போம். இத முடிச்சிட்டு சீக்கிரம் போயி நா 
                 நடக்கப்போற பாக்ஸிங்க்கு ப்ராக்டிஸ் பண்ணனும்.
   Tommy: இங்க...Mr. O'Neilகறது..
            X: அதோ அவந்தா...
    Tommy: Mr. O'Neil??
    Mickey: F****. என்ன மிக்கினே கூப்பிடு.
    Tommy: இந்த caravan சம்மந்தமா....
    Mickey: யா.ரைட்..ஒரு ட்ரிங்க போட்டுகிட்டே talkகடிக்கலாம். 

(வாட்ச்ச பாருங்க கொஞ்ச நேரம் ஆச்சா...)
    Mickey: ஓகே பாஸ்..பேசுனபடி அந்த வண்டி ஓகே தான..எடுத்துகோங்க

(....டாமி caravanனை ஓட்டிப் பார்க்க அது கரகாட்டக்காரன் வண்டி டைப்ன்னு தெரியுது..)
Tommy: பாரு மிக்கி...பணத்த கொடுத்துரு...வண்டிய நீயே வெச்சுக்க..
Mickey: அ..ஆங்..டீல் அதில்லேயே..பார்த்த வண்டிய எடுத்துக்கன்னு தான 
             சொன்னேன்.
Tommy: இதெல்லாம் ரொம்ப ஏமாத்துற வேல. 
Mickey: சரி..இந்த Gorgeousக்கும் எனக்கும் சண்ட வெச்சுக்கலாம். அவன் ஜெயிச்சா 
             கேட்ட வண்டிய கொடுக்ககுறேன். எப்படி வசதி.

.....சண்டைல முதல்ல மிக்கி செமத்தியா அடிவாங்குனான்.ஆனா திருப்பி அடிக்கல. அப்பறம்தான் எங்களுக்கு தெரிய வந்துச்சு.மிக்கி bare-knuckle boxing champion. bare-knuckleன்னா கையுறை,வேற பாதுகாப்பு எதுவுமில்லாம கைய வெச்சு சொம்மா மங்குனு குத்துறது. ஒரே அடிதாங்க Gorgeousய அடிச்சான். அப்ப விழுந்தவந்தான். ஹாஸ்பிடல்ல தா எந்திரிச்சான்.....
(10)
                       இந்த Gorgeousத்தான் நா Brick Top ஏற்பாடு பண்ண பாக்ஸிங் மேட்ச்சுக்கு ரெடி பண்ணி வெச்சுருந்தேன். இப்ப அவன் வாயில கம்பியோட பேச கூட முடியாம ஹாஸ்பிடல்ல கிடக்கான்.Brick Top இந்த மேட்ச நம்பி பல திட்டங்கள் போட்டு வெச்சிருந்தான். அவன நாம எரிச்சல் படுத்துனா என்ன ஆகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஸ்டன் கன்-பிளாஸ்டிக் பை-பன்றிகள். வேற என்ன பண்றதுன்னு தெரியாமதான் Brick Topட்ட இந்த விசயங்கள சொல்லப்போனோம். அப்ப புடிச்ச சனி..அவன் விரிச்ச வலைல விழுந்துட்டோம். அதுலயிருந்து பல இழப்புகள். ஏகப்பட்ட குழப்பங்கள்.சாவுகள்.அபத்தங்கள்.இதுல மிக்கிகும் பெரும் பங்குயிருக்கு. எல்லாம் முடிஞ்சு கைல இந்த 86-காரட் வைரத்தோட இந்த வியாபாரி முன்னாடி ஒக்காந்திருக்கோம். இந்த ஒரு வாரத்திலதான் இத்தன விசயங்களும் நடந்திருக்கு. நா அத சொல்ல ஆரம்பிக்கும் போதுதான் நீங்க இதை படிக்க ஆரம்பிச்சீங்க.முழுசா சொன்னா யாரும் பொறுமையா படிக்கமாட்டாங்க. பொறுமை இல்லாத ஆட்கள் Guy Ritchieன் Snatch படத்தப் பாருங்க. முழுசா சொல்லுங்க...கேட்போம்ன்னு சொல்லுற வேலவெட்டி இல்லாதவங்க....இருங்க இந்த வைரத்தா பேசி முடிச்சிட்டு வந்து மீதி கதையையும் சொல்றேன். இந்த ஆளட்ட போய் விக்க வந்தோம் பாருங்க..சொம்மா நொச்சு நொச்சுன்னு பேசிகிட்டு.க்கும்...எங்ககிட்டயே பேசி முடிக்கல..இதுல தொரை போன்ல வேற பேசுறாரு...
              "ஹலோ Avi...நா Doug பேசுறேன்.நாமா தேடிக்கிட்டுயிருந்த........................  "

                
எனக்கு ரொம்ப பிடித்த இந்த தலைமுறையை சேர்ந்த டைரக்டர்களில் ஒருவர் Guy Ritchie.ரெண்டு காரணங்கள்: செமத்தியான மேக்கிங், ரகளையான மியூசிக். இப்ப Rock-n-Rollaல வந்த ஒரு சரியான பாடல் சாம்பிளுக்கு. தினம் ஒரு தடவையாவது இத கேட்டிருவேன். நீங்களும் இத கேட்டுகிட்டே மேற்கொண்டு படிச்சா ஒண்ணும் தப்பில்ல.

              
Lock, Stock& Two Smoking Barrels தான் நான் பார்த்த ரிட்சியின் முதல் படம். அது ஒரு 5-6 வருசமிருக்கும். அப்ப எனக்கு Guy Ritchie பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனாலும் LSATSB படம் வெகுவாக என்னை கவர்ந்தது. குறிப்பா டைட்டில் போடும் போது வரும் ஸ்லோ-மோசன் காட்சிகள்.இன்னும் நன்றாக ரசித்தது ஞாபகமிருக்கு. இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தாலும்கூட(Revolver சற்றே மாறுபட்டது) கண்டிப்பா பார்வையாளர்களை உள்ள இழுத்துரும். ஆனா சப்-டைட்டிலுடன் பார்த்தா மட்டுமே முழுதாக ரசிக்க முடியுமென்று எனக்குத் தோணுது. அமெரிக்காவிற்கு டரண்டினோ மாதிரி இங்கிலாந்திற்கு இவர் என்று சொல்லலாம். ஆனா டரண்டினோ படத்திலிருக்கும் சிலது கண்டிப்பா மிஸ்சாகும். மேலும் இவர் படத்தில நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். அதே போன்று casting. எடிட்டிங்க்கு-Snatch படம் சரியான உதாரணம். டைட்டில் போடும் போது வரும் கட்டிங் செம...இந்தப் படத்தின் நான்-லீனியாரிட்டி குழப்பமாகயிருக்குனு சிலர் சொல்லறாங்க.எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. இதுல பிராட் பிட் பத்தி சொல்லியே ஆகணும்.Pikey கதாபாத்திரத்தை(நம்ம ஊர் நரிக்குறவர்கள் மாதிரின்னு நெனைக்கிறேன்) ரொம்ப அநாயசியமாக பண்ண மாதிரி தெரியுது. இதைப் போன்றே Burn it after readingளையும் பின்னியிருப்பார். So, கண்டிப்பா எல்லாரும் பாருங்க. முக்கியமா என்ன மாதிரி இங்லிபீசு தெரியாதவங்க சப்-டைட்டிளோட பார்த்தா தான் இன்னும் நல்லா ரசிக்க முடியும்.நா சொன்னது ஒரு கால் சதவிதம் தான். நீங்க பாருங்க (பார்த்தவங்க மறுபடியும் ஒருமுறை) இன்னும் ரகளையா இருக்கும். முடிஞ்சா Guy Ritchieன் அனைத்து படங்களையும் பாருங்க (மடோனா ஆண்ட்டி நடிச்ச ஒரு அட்டு படத்தைத் தவிர)