Wednesday, June 10, 2020

Amusing Ourselves To Death

ஜூலை 1936. ஸ்பானிஷ் சிவில் வாரின் ஆரம்பம். ஸ்பெயினின் தலையெழுத்தையே மாற்றிய உள்நாட்டு போர். ஒருபக்கம், சோஷியலிஸ்ட்கள் + கம்யூனிஸ்ட்டுகள் + விவசாயிகள் + தொழிலாளிகள் (Republicans), மற்றொருபக்கம், கத்தோலிக் அமைப்புகள் + நிலச்சுவான்தார்கள் + முதலாளிகள் + அரச குடும்பத்தவர்கள் + ஏன் ராணுவமும் கூட (Nationalists). இந்த நேஷனலிஸ்ட்களுக்கு ஹிட்லரும் முசொலினியும் ஆதரவு.

டிசம்பர் 1936. 33 வயதான, சோஷியலிஸத்தின்பால் ஈர்ப்புகொண்ட ஒரு ப்ரிடீஷ் பத்திரிகையாளர்/எழுத்தாளர் பார்சிலோனாவுக்கு வருகிறார். வந்து சேர்ந்த கொஞ்சநாளில் ரிபப்ளிகன்ஸ்களுடன் சேர்ந்து போராட்டக்களத்தில் இறங்குகிறார். அதே சமயத்தில்தான் ரஷ்யாவில் "புகழ்பெற்ற" Moscow Trails நடந்துகொண்டிருந்தது. ஸ்டாலின், அசைக்கமுடியாத சக்தியாக ஐரோப்பா முழுமைக்கும் மாறத்தொடங்கிய காலகட்டம். ஸ்டாலினின் போக்கு, ஸ்பெயினில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கைகள், கம்யூனிஸ்ட்டுகளால் செய்யப்பட்ட படுகொலைகள் இப்படி பலதும் அந்த எழுத்தாளரைப் பெரிதும் பாதிக்கிறது. அக்காலகட்டத்தில் அவர் பெற்ற பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு - Homage to Catalonia என்ற புத்தகம். வெளியிடப்பட்டு பல ஆண்டுகளாகியும் புத்தகத்தை சீந்துவாரில்லை. 1939க்கு பிறகு அந்த ப்ரிடீஷ்காரர் இரண்டாம் உலகப்போரில், இந்தமுறை தனது தாய்நாடான இங்கிலாந்து சார்பாக யுத்தகளத்தில் இறங்குகிறார். அங்கும் கம்யூனிஸ்ட்களுடனான சந்திப்புகள், அனுபவங்கள் மூலம் ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிய அவரது பார்வை வலுப்பெறுகிறது. தனது உள்ளக்குடைச்சல் எல்லாவற்றையும் சேர்த்து satirical நாவலொன்றை 1944ல் எழுதுகிறார். ஆனால் வெளியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒருவழியாக 1945ல் அந்தப் புத்தகம் வெளியாகிறது. அப்புத்தகம் - Animal Farm. ஆனாலும் ஆள் அந்த ஒரு புத்தகத்துடன் அடங்குவதாகயில்லை. ஹிட்லரிடமிருந்து உலகம் தப்பித்து ஸ்டாலின் போன்ற totalitarian ஆளிடம் சிக்கினால் என்னவாகும், அப்படியான authoritarian regime எப்படியிருக்குமென்ற அவரின் பயம்தான் 1984.

1984. லண்டன், Oceania superstate. English Socialist Party (IngSoc) தான் அங்கு எல்லாம். அவர்களது தலைவர் "Big Brother". Omnipresent. பிக் பிரதருக்கும் அரசுக்கும் தெரியாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது. கடுமையான கண்காணிப்புகள். தனிமனித சிந்தனையிலிருந்து மொழி/வார்த்தைகள் வரையில் அனைத்திற்கும் தடைகள், கட்டுபாடுகள். அவ்வளவு ஏன் thoughtcrimeற்க்குகூட அங்கு வாய்ப்பில்லை. அப்படியான ஊரில் "Ministry of Truth" துறையில் வரலாற்று திரிப்பாளானாக வேலை பார்ப்பவன், வின்ஸ்டன் ஸ்மித். அரசுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக டயரி எழுதும் பழக்கம் உள்ளவன். Individualityயே இருக்கக்கூடாதென்று நினைக்கும் அரசாங்கம், டயரி எல்லாம் எழுத விடுவார்களா. ஆனாலும் அதையும் மீறி பிக் பிரதருக்கு தெரியாமல் பல கஷ்டங்களுக்கிடையே டயரி எழுதிக்கொண்டிருப்பான். கூடவே காதலும் ஒட்டிக் கொள்ளும். இதற்கிடையில் புரட்சி இயக்கமான revolutionary brotherhood பற்றி தெரியவர, அப்படியே தோழர் ஓ ப்ரைனின் பழக்கமும் ஏற்படும். மாபெரும் புரட்சிக் கனவோடு, சர்வாதிகாரத்திலிருந்து தாம் விடுபடப்போகிறோமென்று ஸ்மித் உணர்ச்சிப்பெருக்கில் இயங்கிக்கொண்டிருப்பான். கடைசியில் பார்த்தால், revolutionary brotherhoodடிலிருந்து ஓ ப்ரைன் வரை அனைத்துமே பிக் ப்ரதரின் வேலையாகயிருக்கும். Surveillance, thought police, newspeak - மொழியின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றுவது (Don't you see that the whole aim of Newspeak is to narrow the range of thought? In the end we shall make thought-crime literally impossible, because there will be no words in which to express it), doublespeak என்று நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் பலவற்றையும் துல்லியமாக கணித்த பெருமை ஆர்வெல்லுக்கு உண்டு. And, it has one of the greatest opening lines of all time - It was a bright cold day in April and the clocks were striking thirteen.

1984ரை படித்திராதவர்கள்கூட "Orwellian" என்ற டெர்மை நிச்சயமாக கடந்து வந்திருப்பார்கள். நான் அந்தப்புத்தகத்தைப் படித்து ஆல்மோஸ்ட் 12/13 வருடங்களிருக்கும். அந்த சமயத்தில்தான் அரேப் ஸ்ப்ரிங், சீனாவின் அடாவடித்தனங்கள், Post 9/11 US mass surveillance போன்ற போஸ்ட்-2000ன் பல முக்கிய நிகழ்வுகள் இன்டர்நெட்டின் புண்ணியத்தால் மேலதிகமாக தெரிய வரத்தொடங்கின. "Big brother is watching you" என்ற வாசகம் - pop culture ரெஃபரன்ஸாகிப் போனது. நானும் நரம்புகள் முறுக்கேற, அரசாங்கம் நம்மை கண்டபடி கட்டுப்படுத்துகிறது - பல விஷயங்களை நம்மிடமிருந்து மூடி முறைக்கிறது - அதைப்பற்றியெல்லாம் பேசுவாரில்லையே என்பது மாதிரியான பல புரட்சி அங்கலாய்ப்புகளுடன் வெகுகாலமாகவே சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே - என்னதான் அரசாங்கமும், சிலபல அமைப்புகளும் நம்மிடமிருந்து பல விஷயங்களை மறைக்க\மறக்கடிக்க\குறைத்து மதிப்பிட பழக்கப்படுத்தினாலும் - எனது ஒத்துழைப்பின்றி அது சாத்தியமில்லை என்று புரிய ஆரம்பித்தது. Meaning, i must be willfully ignorant.

Brave New World, ஒரு க்ளாசிக். அதனால்தான் அதுவரையில் அதனை படிக்காமலிருந்தேன். Greatest books என்று போடப்படும் லிஸ்ட்கள் அனைத்திலும் Brave New World இடம்பெற்றிருப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் ஏனோ அதனை வாசிக்க வேண்டுமென்று தோன்றியதேயில்லை. முற்றிலும் எதிர்பாராதவிதமாக எங்கிருந்தோ நூல்பிடித்து வந்து Amusing Ourselves to Death படிக்க ஆரம்பித்து, புத்தகத்தின் Foreword படித்துவிட்டு ஸ்தம்பித்துவிட்டேன் (Foreword பற்றிய நல்ல illustrations இங்கே).

We were keeping our eye on 1984. But we had forgotten that alongside Orwell's dark vision, there was another - slightly older, slightly less well known, equally chilling: Aldous Huxley's Brave New World. Orwell warns that we will be overcome by an externally imposed oppression. But in Huxley's vision, no Big Brother is required to deprive people of their autonomy, maturity and history. As he saw it, people will come to love their oppression, to adore the technologies that undo their capacities to think. 

What Orwell feared were those who would ban books. What Huxley feared was that there would be no reason to ban a book, for there would be no one who wanted to read one. Orwell feared those who would deprive us of information. Huxley feared those who would give us so much that we would be reduced to passivity and egoism. Orwell feared that the truth would be concealed from us. Huxley feared the truth would be drowned in a sea of irrelevance. Orwell feared we would become a captive culture. Huxley feared we would become a trivial culture, preoccupied with some equivalent of the feelies, the orgy porgy, and the centrifugal bumblepuppy. 

As Huxley remarked in Brave New World Revisited, the civil libertarians and rationalists who are ever on the alert to oppose tyranny "failed to take into account man's almost infinite appetite for distractions." In 1984, Huxley added, people are controlled by inflicting pain. In Brave New World, they are controlled by inflicting pleasure. In short, Orwell feared that what we hate will ruin us. Huxley feared that what we love will ruin us. This book is about the possibility that Huxley, not Orwell, was right.

இதைமட்டும் படித்துவிட்டு Brave New World படித்து முடித்தபின்தான் Amusing Ourselves to Deathதை படிக்க ஆரம்பித்தேன்.

Brave New World. dystopian நாவல் கிடையாது. ஒரு anti-utopian நாவல். இரண்டிற்கும் வேறுபாடுண்டு. கதை ஆரம்பிப்பதே conditioning centerல்தான். Central London Hatchery and Conditioning Centre. மனித உற்பத்திக் கூடம். 5 வகையான மனிதர்கள் உற்பத்தி செய்யப்படுவார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒரு கலருண்டு. கீழ்நிலை மனிதரென்றால் - கருப்பு; மேல்நிலை, சுப்பீரியர் பீயிங் - க்ரே கலர்.


பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அந்தந்த "ஜாதி"க்கேற்ப condition செய்யப்படுவார்கள். உதாரணத்திற்கு, Delta குழந்தைகளின் அருகில் பூக்கள், புத்தகங்கள் - இரண்டும் வைக்கப்படும். குழந்தைகள் ஆர்வத்துடன் இரண்டையும் தொடும்போது மெல்லிய எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். இதுபோல ஏறத்தாழ 200 முறை ஷாக் கொடுக்கப்படும். இதற்குப்பிறகு எந்த குழந்தைக்காவது புத்தகத்தையும் பூக்களையும் தொடுமுணர்வு எழுமா ?. Instinctive hatred தான் ஏற்படும், சாரி - ஏற்படுத்தப்படும். என்ன காரணத்திற்காக இந்த வெறுப்பு விதைக்கப்படுகிறது ? இவர்களெல்லாம் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டால் வேலைகளை யார் செய்வது ? அதைவிட முக்கியமாக "சுயம்" வளர்ந்துவிடக்கூடுமல்லவா. தவிர இயற்கையின்பால் ஈர்ப்பிருந்தால் இயந்திரத்தனமான வாழ்கையின் மீதிருக்கும் பிடிப்பு போய்விட்டால்.  

Epsilon ஜாதியின் நிலைமையோ படுமோசம். Hatchery centreல் உருவாக்கப்படும்போதே ஆக்ஸிஜன் அளவை சற்று குறைவாகக்கொடுத்து மந்த புத்தி ஆட்களாகவே பிறக்க வைக்கப்படுவார்கள். ஆனால் உடல்ரீதியாக படுவலுவானவர்கள். உள்ளதிலேயே மோசமான வேலைகள், மற்ற நான்கு ஜாதிகளுக்கு defaultடாக இன்முகத்துடன்பணிசெய்து கிடப்பது - இதுமட்டுமே இவர்களது வேலை. அவ்வாறே conditionனும் செய்யப்பட்டிருப்பார்கள்.

அச்சமூகத்தின் கடவுள் - Henry Ford (லிட்ரலாக, Oh my Ford என்றுதான் விளிக்கப்படுவார்) . காலங்கள் கூட Before Ford - After Ford என்றே வகுக்கப்பட்டிருக்கும். Consumerismமே அங்கு எல்லாவற்றிற்குமான அடிப்படை "Ending is better than mending" என்பதுமாதிரியான வாசகங்களே அரசின் அதிகாரப்பூர்வ செய்திகள். யாரும் யாருக்கும் சொந்தம் கிடையாது. Everyone belongs to everyone else. Individuality...அப்படியென்றால் ?. முதுமை கிடையாது. நோய்கள் கிடையாது. "அம்மா" என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை. கவலை..ம்ஹும். மருந்துக்கும் கிடையாது. காதல், குடும்பம், அன்பு, மதம், கடவுள் - இதற்கெல்லாம் தடையாயென்றால் அதுதான் இல்லை. Simple. அதற்கெல்லாம் அவசியமில்லை. Everyone is happy. அதற்கு முக்கிய காரணம் - Soma. Hypnopaedia என்ற முறையில் - தூக்கத்தின்போதே அரசாங்கம் சோமா குறித்தான தனது போதனையை ஆரம்பித்துவிடும். “A gram is better than a damn.” சற்று சோர்வாக இருந்தால் சில மில்லிகிராம்கள் சோமா. கவலையின் கீற்று தென்பட ஆரம்பித்தால், கொஞ்சம் கூடுதல் டோஸ் சோமா. பெருங்கவலையா - அரசாங்கமே சோமா விடுமுறைகளை அளிக்கும். அவ்வப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து களியாட்டத்தில் ஈடுபடுவார்கள். Orgy - Porgy.

இப்படியான உலகத்தில் சைக்காலஜிஸ்டாக வேலை பார்ப்பவன் - Bernard Marx. சற்று "வித்தியாசமான" ஆள். சுயத்தின் ருசியை உணர தொடங்கியிருப்பவன். "I want to know what passion is. I want to feel something strongly" என்ற மனநிலையில் இருப்பவன். இவனது நண்பன், Helmholtz Watson. வார்த்தைகளின்பால் ஈர்க்கப்பட்டவன். இவனைப்பற்றி புரிந்துகொள்ள...“Did you ever feel, as though you had something inside you that was only waiting for you to give it a chance to come out? ". எல்லாரையும்விட முக்கியமானதொரு ஆள் - John. The Savage. ஆதிவாசி மாதிரியான ஆள். ரிசர்வேஷன் முகாமில் பிறந்து, வளர்ந்தவன். ஷேக்ஸ்பியர் பிரியன் (அவனுக்கு படிக்கக் கிடைத்த ஒரே புத்தகம் . ஜான், பெர்னார்டின் புண்ணியத்தால் brave new worldக்கு வந்துசேர்ந்து, அங்கு அவனுக்கு கிடைக்கும் அனுபவங்களே கதையின் மையம். அவனது மனநிலைக்கு ஒரு சான்று, இந்த உரையாடல்

"We don't," said the Controller. "We prefer to do things comfortably."

"But I don't want comfort. I want God, I want poetry, I want real danger, I want freedom, I want goodness. I want sin."

"In fact, you're claiming the right to be unhappy" said the Controller

"All right then," said the Savage defiantly, "I'm claiming the right to be unhappy"

------------

Aldous Huxely இப்புத்தகத்தை எழுதியது 1932ல். ஆனால், 1958ல் திரும்ப - அப்போதைய சூழ்நிலைகளுடன் புத்தகம் எப்படி பொருந்திப்போகிறது என்ற வகையில் - சில commentaryகளுடன் Brave New Worldடை ரிவிஸ்ட் செய்கிறார். Propaganda in democratic society அத்யாயத்தில் அவரின் இந்த commentary தான் Amusing ourselves to death தான் ஆரம்பப்புள்ளி "In a word, they failed to take into account man's almost infinite appetite for distractions"


Amusing ourselves to death: டிவி போன்ற எலெக்ட்ரானிக் மீடியம் (சோஷியல் மீடியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்) - எவ்வாறு  நம் சொல்லாடல்களை மாற்றி அமைக்கிறது, எது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவைகள் , எங்கு விவாதிக்கப்படுகிறது, எவ்வாறு விவாதிக்கப்படுகிறது போன்ற கேள்விகளுக்கான -  பதிலென்று சொல்ல முடியாது - சோஷியல் கமென்ட்ரி தான் இப்புத்தகம். சைகைகளின் மூலம் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்ற காலம் தொடங்கி பின்பு பேச்சு வழக்கு - சொல்லாடல்கள் - அச்சு ஊடங்கங்கள் - ரேடியோ - டிவி வரை அனைத்தையும் அலசுகிறது. போஸ்ட்மென், அச்சு ஊடகங்கள்\புத்தங்கங்கள் மூலமாக நடைபெற்ற சொல்லாடல்கள் (அச்சுத்துறை கிட்டதட்ட 600 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது) தீவிரமாகவும், கருத்தச்சிதறல்கள் குறைவாகயிருந்ததாக சொல்கிறார் (Age of Typography). ஆனால் டிவி போன்ற ஊடகங்களில் அவ்வாறான தீவிரத்தன்மைக்கு வாய்ப்பேயில்லை என்பது அவரது வாதம். காரணம் - டிவியின் இயல்பே பொழுதுபோக்கு மட்டுமே (Age of Show business). தலைபோகிற விஷயமாகயிருந்தாலும் அதனை dilute செய்யாமல் டிவியால் அந்நிகழ்வுகளை அணுக முடியாது. "Our politics, religion, news, athletics, education and commerce have been transformed into congenial adjuncts of show business, largely without protest or even much popular notice.  The result is that we are a people on the verge of amusing ourselves to death". இதுதான் அவரது தீஸிஸ். Text-based contentகளிலிருந்து image-based contentடிற்கு எப்பொழுது மாறினோமோ அன்றிலிருந்து சொல்லாடல்களின் தீவிரம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார். It was a hard read. ஏனென்றால் பல உதாரணங்கள் முற்றிலும் அமெரிக்கா சார்ந்தவைகள். அதுவும் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய அமெரிக்கா பற்றிய பல குறிப்புகள். அந்த context பிடிபட சற்று நேரமானது. புத்தகத்தில் எனக்கு ஏற்பில்லாத சில அம்சங்களும் உண்டு. ஆனால் அதைவிட முக்கியமாக, இதுவரை எனக்கிருந்த சிலபல கேள்விகளுக்கு நல்ல புரிதல்களை வழங்கிய புத்தகம். புத்தகத்தின் அடிப்படை கருத்துகளாக - கூடவே தற்போதைய மீடியாக்களையும் மனதில்கொண்டு  சில பாய்ண்ட்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்வதைவிட அப்படியே விடுவதே நல்லது.

1) Trivializing important issues - Sensitizing trivial issues

2) Sea of irrelevance

3) Irony of emotional responses and insensitivity

4) Illusion of knowing something

5) Dominating public discourse

6) Everything is entertainment

7) World of memes, soundbites, catchy phrases

8) Rise of social media utopians

நிற்க: அமெரிக்காவில் டெலிவிஷன் சேனல்கள் 1939லிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை ஏறத்தாழ 80 ஆண்டுகள். அமெரிக்கர்களின் கூட்டு மனநிலையை இன்றளவும் பாதிக்குமொரு ஊடகம். அமெரிக்காவில் 1940 முதல் 1995 வரையில் (அங்கு 1995களில் சோஷியல் மீடியா தலையெடுக்கத் தொடங்கிவிட்டது) ஏறத்தாழ 55 ஆண்டுகள் தொலைக்காட்சி பெரும் சக்தியாக இருந்துவந்துள்ளது. இன்று, சக்தியின் வீரியம் குறைந்திருக்கிறதேயன்றி மக்களின் மனநிலையின் மீதான தாக்கம் பலமானதாகவே இருக்கிறது. Late Night Showகளுக்கு போகாத - செனட் முதல் பிரசிடென்ட் பதவி வரை - அமெரிக்க தேர்தல் வேட்பாளர்கள் இல்லை. இன்றெல்லாம் இன்னும் ஒருபடி மேலே சென்று, podcastகளில் கூட பங்கெடுக்கிறார்கள். இந்தியாவில் - 1995களுக்கு பிறகுதான் cable networkகள் அதிகளவில் உள்ளே வர ஆரம்பித்தன. 2007/2008 சோஷியல் மீடியாக்களின் தொடக்கம். 1995 - கேபிள் டிவி. 2007 - சோஷியல் மீடியா, இந்தியாவில் இந்த transition நடந்தது - பன்னிரண்டு ஆண்டுகளில். அதிக இன்டர்நெட் யூசர்கள், smartphones, WhatsApp - இதையெல்லாம் கணக்கில்கொண்டால் தொலைக்காட்சி to சோஷியல் மீடியாவுக்கான நம்நாட்டின் ஜம்ப் - 20 வருடங்கள் மட்டுமே. அதனால் மீடியா என்று பேசும்போது நாம் சோஷியல் மீடியாவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

---------------------

ஒருவேளை சோஷியல்/மாஸ் மீடியாக்களில், சேனல்களில் - news of the day, தலைப்புச்செய்திகள் போன்றவைகளே இல்லாவிட்டால் ? Neil Postman, இதுமாதிரியான "News of the day"  வகை contentகளை முன்னிறுத்துவதன் மூலம் "Medium is the metaphor" என்ற கருத்தை முன்வைக்கிறார். அதாவது, என்ன விஷயம்/செய்தி - அதிலுள்ள தீவிரத்தன்மை, முக்கியத்துவம் - போன்றவைகள் எல்லாம் எதன்மூலம் எவ்வாறு சொல்லப்படுகிறது/பரப்பப்படுகிறது என்பதை பொறுத்து என்று அர்த்தத்தில்.

November 2019. ஏற்கனவே பல மாதங்களாக/சில வருடங்களாக - HLL Lifecareரென்ற அரசுத்துறையின் பங்குகளை தனியாருக்கு விற்கும் disinvestment ப்ளானை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. HLLல் என்னமாதிரியான வஸ்துக்களை தயாரிக்கிறார்கள் ? காண்டம்ஸ், சர்ஜிகல் க்ளொவ்ஸ், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள். ஜனவரி 31. இந்தியாவின் முதல் கோவிட் கேஸ் அடையாளங்காணப்படுகிறது. அன்றே PPE, masks, gloves போன்றவைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் தடை விதிக்கிறது. அதற்கடுத்து நடந்ததுதான் இன்றுவரை புரியாத புதிராக உள்ளது. ஒரே வாரத்தில் தடையை தளர்த்தி ஒருசில ஐட்டங்களை ஏற்றுமதி செய்யலாம் என்று இந்திய அரசாங்கம் அனுமதியளிக்கிறது. மீண்டும் அடுத்த ஒரு வாரத்தில் தடையில் மேற்கொண்டு சில தளர்வுகளை சேர்க்கிறது. தவிர, HLL அமைப்பின்மூலம்தான் நாட்டின் பிற PPE, body coverall மாதிரியான மருத்துவ உடைகளையும், மாஸ்க், க்ளொவ்ஸ் போன்றவைகளையும் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி, தரப்பரிசோதனை செய்து மத்திய/மாநில அரசாங்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற ஆணையை பிறப்பிக்கிறது. முழுக்கதையும் இங்கே.

மத்திய அரசின் தடுமாற்றம் ஆரம்பித்தது இங்கிருந்துதான். ஒழுங்கான திட்டமிடல், SOP, என்ன மாதிரியான management plan வைத்திருக்கிறோம்...ம்ஹும். இந்த குளறுபடிகள் பற்றி (மிகமிகக் குறைவான) குரல்கள் எழத்தொடங்கியபோது, வசமாக சிக்கிய விஷயம்தான் - தப்லிகி விவகாரம். முட்டாள்தனமான காரியம். சந்தேகமேயில்லை. ஆனால் அதை முஸ்லீம் - இந்து விவகாரமாக்கி, தப்லிகி மசூதியிலிருந்து அதன் தலைவர் வெளியேற ரகசிய குகைகள் இருக்கின்றன என்றவரைக்கும் sensationalize செய்து, முழு கவனத்தையும் அதன்பக்கம் திரும்ப - வேறேந்த conversationகளும் எழவில்லை. விவாதிக்கப்பட ஏகப்பட்ட முக்கிய விஷயங்கள் இருந்த நிலையில் மீடியாக்களில் 99.9% விவாதங்கள் அனைத்தும் இதைச்சுற்றியே இருந்தது. அதில் மத்திய அரசின் குளறுபடிகள் அனைத்தும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. கூடவே - புலம்பெயர் தொழிலார்களின் நிலைமையும். இன்னொன்றும் வசதியாக மறக்கடிக்கப்பட்டுவிட்டது. Contact tracingயின் போது அச்சமயத்தில் டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா  போன்ற பல மாநிலங்களில் தப்லிகி அமைப்பினரை மட்டுமே தேடிப்பிடித்து சோதனை செய்தனர். ஒருவேளை டெல்லி போன்ற மாநிலங்கள் அப்பொழுதே சோதனை முறையை விரிவுபடுத்தியும். சற்று மாற்றியுமிருந்தால் - இன்றிருக்கும் மோசமான நிலைமை மாறியிருக்குமோ ?.

இன்னொருபக்கம், மத்திய அரசின் வெளியில் தெரியாத குளறுபடிகள் மாஸ் மீடியாக்களில் - ஒப்புக்கு, மேம்போக்காக விவாதிக்கப்பட்டது/படுகிறது -  ஏன் பெரிதாக பேசப்படவேயில்லை ? . மார்ச் 25. மோடி முதல் லாக்-டவுனை (நாலு மணி நேரம் மட்டுமே கொடுத்து) அறிவித்தார் அல்லவா. அந்த அறிவிப்பிற்கு ஆறு மணி நேரம்முன்பு ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. // On 24 March, Modi personally asked over twenty owners and editors from the mainstream print media to publish positive stories about the COVID-19 pandemic. The owners and editors represented media organisations working in 11 different languages, including the senior-most members of national media houses such as the Indian Express Group, the Hindu Group and the Punjab Kesari Group. According to a report on Modi’s official website, the prime minister asked the participants to “act as a link between government and people and provide continuous feedback” on the government’s handling of the COVID-19 crisis //

மிகமிக முக்கியமான நிகழ்வாக இதைச் சொல்லுவேன். முழுக் கட்டுரையையும் படித்தீர்களானால் மீடியா ஆட்கள் பலரின் பூரிப்புகள், மோடி பற்றிய சிலாகிப்புகள் தெரியவரும். கரோனா கவரேஜில் - 90% மீடியாகளின் செய்திகள் - அரசின் பார்வையோடு ஒத்திருப்பதை கவனிக்கலாம். இது தற்செயலானதா ? 

மோடி - ஆறு ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாத ஒரே பிரதமர் (அமித் ஷா ப்ரஸ்மீட் கணக்கில்வராது). என்ன கொடுமையென்றால், பேரிழப்புகள், வன்கொடுமைகள், பேரிடர்கள் நிகழும்போதுகூட பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் வெறும் ட்வீட்கள் மூலம் ஆறுதல்களையும் அறிவிப்புகளையும் அள்ளி வீசுகிறார். அதுதான் பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக மீடியாக்களில் வெளிவருகிறது, பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது. இது எவ்வளவு அபத்தமானது, ஆபத்தானது ?.  ஆனால் அதே பிரதமர் "முக்கிய" மீடியா ஆட்களை கூப்பிட்டு என்ன எதிர்பார்ப்பில் வீடியோ கான்ஃபரன்ஸிங் நடத்துகிறார் ?. 

--------------

“The best things on television are its junk and no one and nothing is seriously threatened by it. Besides, we do not measure a culture by its output of undisguised trivialities but by what it claims as significant. Therein is our problem, for television is at its most trivial and, therefore, most dangerous when its aspirations are high, when it presents itself as a carrier of important cultural conversations "

நீயா நானா டைப் நிகழ்ச்சிகள், செய்திச் சேனல்களில் தினமும் நடக்கும் "இன்றைய விவாதம்", "புரட்சிகர" கருத்துகளைக்கொண்ட திரைப்படங்கள் - இப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கும் பல நிகழ்ச்சிகளும், மீடியம்களும் நிஜமாகவே முக்கியத்துவமிக்கவைகள் தானா ?  சாதிய கருத்துகளை தாங்கிவரும் திரைப்படங்களை கலாய்ப்பது முக்கியமா இல்லை நமது விருப்பத்திற்குரிய கட்சிகளின் அமைப்புக்குள்ளேயே நிலவும் ஜாதிய பாகுபாடுகளை கேள்வி கேட்பது முக்கியமா ?

----------------

"There is no more disturbing consequence of the electronic and graphic revolution than this: that the world as given to us through television seems natural, not bizarre"

மனித மலத்தை மனிதனே அள்ளுதல் - பற்றி தொடர்ச்சியாக பல வருடங்களாக பேசி (மட்டுமே) வருகிறேன். இதே ப்ளாகில் 2012ல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அக்கட்டுரையின் கவர் ஃபோட்டோ - மலத்தை கைகளால் அள்ளும் ஒரு பெண்மணியினுடையது. "ஷாக்கிங்கான" ஃபோட்டோ. ரைட் ?. போன வாரம் - Facebookல் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதைப் பற்றிய ஒரு photo storyயை பகிர்ந்திருந்தேன். லிங்க்கை மட்டும் பகிராமல் - அதிலிருந்த சில "உணர்ச்சிகரமான, அதிர்ச்சியான"  ஃபோட்டோக்களை collage செய்து பகிர்ந்தேன். வேண்டுமென்றேதான் செய்தேன். "மனித மலத்தை மனிதனே அள்ளுகிறான் " இதை படிக்கும்போதே நமக்கு கோபமும் தீர்வுகாணும் முனைப்பும் வரமால் போனது எப்பொழுது ? அடைப்பெடுத்த கக்கூஸின் ஓட்டையை ஒரு மனிதர் காலை உள்ளே விட்டு அடைப்பெடுக்கும் ஃபோட்டோவை காட்டினால்தான் அக்கொடுமையை மேலதிகமாக புரிந்து கொள்ள முடியுமா ? அந்தளவிற்கா நாம் போய்விட்டோம் ? மாஸ் மீடியாக்களில் இந்த மாற்றம் படுவீரியத்துடன் வளர்ந்து நிற்கிறது. டிவிக்களில் இது ஒரு மாதிரியாக செயல்படுகிறது; சோஷியல் மீடியாக்களில் மற்றொருவடிவில். எப்பொழுதெல்லாம் ஒரு பேரிழப்பு, மரணங்கள், படுகொலை, வன்புணர்வு, வன்முறை நிகழ்கிறதோ - அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் சோக மியூசிக்குடன் அந்நிகழ்வுகளை ஒளிபரப்புவது. ஏன் சோக மியூசிக் ? ஒன்று - மக்கள் படுமொன்னையாகிப்போன உணர்ச்சியற்ற ஆட்களாகயிருக்க வேண்டும். உணர்ச்சியை தட்டியெழுப்ப சோக இசை தேவை. இல்லையா, தொலைக்காட்சி சேனல்கள் அந்நிகழ்வுகளை ஒரு மணிநேர entertainment packageகா கருத வேண்டும். Entertainmentடிற்குதான் இதெல்லாம் தேவை. 1200 கிலோமீட்டர்கள் பசி பட்டினியில் மக்கள் நடந்தார்கள் என்ற ஒரு வரி செய்தி - நம்மையெல்லாம் வேதனைக்கும் அவமானத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாக்காது; Black and Whiteல் வெடித்து சிதறிய பாதங்களை க்ளோஸ்-அப்பில் காண்பித்து, அதற்கு பின்னணி இசையும் சேர்த்துதான் நமக்கெல்லாம் அதன் கொடுமை புரியுமென்றால் - irreparably deeply flawed society. அவ்வளவுதான். இதன் மற்றொருவடிவம்தான் சோஷியல் மீடியாக்களில் profile pictureகளை மாற்றுவது. புலம்பெயர் தொழிளாலர்கள் - movie of the month. Simple as that. கடந்த இரண்டு மாதங்களாக வேறெந்த படமும் ரிலீஸாகாததால் இதனை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நிலைமை இதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது; இதற்கு பிறகும் இப்படித்தான் இருக்கப்போகிறது. இதற்கு முன்னர் பான்பராக் வாயன்கள் என்றழைக்கப்பட்டனர். இனி என்ன பெயர் வைத்து அழைக்கப்படுவர் என்று பார்ப்போம்.

----------

“What is happening here is that television is altering the meaning of ‘being informed’ by creating a species of information that might properly be called disinformation. Disinformation does not mean false information. It means misleading information —misplace, irrelevant, fragmented or superficial information — information that creates the illusion of knowing something but which in fact leads one away from knowing.”

இதற்கு மிகச்சமீபத்திய உதாரணம், விவசாயத்திற்கான இலவச மின்சாரம். இலவச மின்சாரத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட/ஏற்படும் நன்மைகளைவிட பிரச்சனைகளே அதிகம். இந்த சமயத்தில் - இலவச மின்சாரத்தில் கைவைப்பது மிகப்பெரிய அநியாயம். அதுவும் விவசாயிகளின் பிரச்சனைகளை அலட்சியத்துடனே கையாண்டு வரும் மத்திய/மாநில அரசுகள் ஏகப்பட்ட உள்குத்துடன்தான் இதனைத் தற்போது செயல்படுத்தத் துடிக்கிறார்கள். அது ஒருபக்கமிருக்க, இலவச மின்சாரத்தால் விவசாயிகள் எந்த வகையில் பலனடைகிறார்கள் என்று தெளிவுடன்தான் இத்தகைய சொல்லாடல்கள் நிகழ்த்தப்படுகின்றனவாயென்றால் நிச்சயமாக இல்லை. "எல்லையில் ராணுவ வீர்கள்...." கோஷத்தின் மாற்று வடிவம்தான் "ஒவ்வொரு விவசாயியும்...". உணர்ச்சிபூர்வமாக யாராவது எதையாவது எழுதுவதை, அதை ஷேர் செய்வதால் மட்டுமே அதனைப்பற்றிய புரிதல் வந்துவிட்டதென்ற "illusion of knowing something" மிகமிக ஆபத்தானது. ஆனால் இங்கே  இதுதான் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.

-----------------

Is this medium suitable for any kind of serious discussion ? போஸ்ட்மெனின் முக்கிய கேள்வியே இதுதான். என்னை யாராவது இப்படியொரு கேள்விகேட்டால் எனது பதில் - absolutely not (அவர் சொன்ன மீடியம் - தொலைக்காட்சி மட்டும். நாம், சோஷியல் மீடியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்).

மூன்று வகை இந்தியாக்கள் உண்டு.

1) 1984 India. Kashmir lockdown போல. சோஷியல் மீடியாக்களில் "லால் சலாம், காம்ரேட்" போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதே குற்றம் என்ற அளவில் அடாவடியான இந்தியா.

2) Brave new world India. எந்த பிக் ப்ரதரும் தேவையில்லை; எந்த கண்காணிப்பும் தேவையில்லை; கட்டுபாடுகளும் தேவையில்லை. தாமாகவே கட்டுப்படும் இந்தியா. Willingly surrender oneself to the state.   
3) இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இந்தியா. இவர்களது அடிப்படை, அன்றாட தேவைகள் தீர்க்கப்படுமானால் எந்த கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள். யாரையும் சப்போர்ட் செய்வார்கள். இவர்களே இந்தியாவின் பெரும்பான்மையினர்.

Brave new world இந்தியாவில் இரு உட்பிரிவுகள் உண்டு. முதல் பிரிவு - Taali Bajao, விளக்கேத்தும் கோஷ்டி. இரண்டாம் பிரிவு - அதை எதிர்ப்பதால் மட்டுமே மாற்றம் வந்துவிட்டதாக நம்பும் கோஷ்டி. ட்விட்டரில் trending செய்வதன் மூலம் கிடைக்கபெறும் கவனஈர்ப்புக்கள் மட்டுமே போதுமென்று நம்பும் கோஷ்டி. சினிமா காட்சிகளை வைத்து போதிய புரிதலில்லாமல் "political, anti-casteist" meme போடுவதும் அதனை ஷேர் செய்வதாலேயே மிகத்தீவிரமாக பேசப்பட வேண்டிய பிரச்சனைகளை பற்றி தங்களுக்கு தெரிந்துவிட்டதென்று நம்பும் கோஷ்டி. என்ன சிக்கலென்றால் இவ்விரு கோஷ்டிகள்தான் மாஸ் மீடியாக்களை பெரிதும் ஆக்கிரமிக்கிறன. தலித் பிரச்சனையா, மூன்றாம் பாலினத்தவர் பிரச்சனையா, பூர்வகுடி மக்களின் பிரச்சனையா - இப்படி எல்லா பிரச்சனைக்கும் இவ்விரு கோஷ்டிகளுமே தீர்வு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். "Comrade" போன்ற வார்த்தைகள் buzz wordsகளாக மாறிவிட்ட சூழ்நிலையில் இவர்கள் memeகள் மூலம் கருத்துக்களை பரப்புவதாக நம்பிக்கொண்டிருக்க - அசாமிலோ அந்த வார்த்தைகளை உபயோகிப்பதாலேயே தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வதைபற்றி பேச ஆளில்லை. டெக்னாலஜி இவ்வளவு தூரம் வளர்ந்த பின் - அதன் தயவால் இதுவரை வெளியில்வராத குரல்கள் ஒலிக்கத் தொடங்கும்போது அவர்களை பேசவிடாமல் Taali Bajao கோஷ்டி செயல்படுகிறதென்றால், இவர்களை எதிர்க்கிறேன் பேர்வழியென்று, இன்னொரு தரப்பு அதனைவிட அதிகமாக கத்துவதில் - victimsகளின் குரல் அமுங்கியே போய்விடுகிறது. 

மோடி 2019ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தென்னிந்தியாவில்/தமிழகத்தில்...மதவெறியர்கள் ஜெயிக்க வைத்துவிட்டார்கள், படிக்காத வட இந்தியர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள், நாமெல்லாம் படித்த மாநிலம், திராவிடத்தின் வெற்றி என்று ஏக வசனங்கள். ஒரு பேச்சுக்கு அதெல்லாம் உண்மையென்று வைத்துக்கொள்வோம் - 2018 தூத்துக்குடி படுகொலைகள். பெரும் அதிர்வலையை கோபத்தை ஏற்படுத்திய படுகொலைகள். மாஸ் மீடியாக்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பினரால் "விவாதிக்கப்பட்ட" நிகழ்வு. 2019 by-elections. அந்தப் படுகொலைகளுக்கு காரணமான அதிமுக அரசு - 22 தொகுதிகளில் 9ல் வெற்றி பெறுகிறது. பதிவான மொத்த வாக்குகளில் 38.5% பெற்றது (வழக்கின் தற்போதைய நிலை என்ன ?). இதை எப்படி எடுத்துக்கொள்வது ?. (தனிப்பட்ட முறையில், தமிழ்நாட்டைப் பற்றி மேலதிகமாக புரிந்தகொள்ள உதவிய எலெக்சன் ரிசல்ட்ஸ் அது)

மாறாக, மோடிக்கு ஓட்டு போட்டவர்களில் - மத்திய அரசு அறிவித்த/செயல்படுத்திய ஒருசில திட்டங்களுக்காக ஓட்டு போட்டவர்கள் எத்தனைபேர் இருந்திருப்பார்கள், தலித் வேட்பாளர்கள் பலரை BJP நிறுத்த காரணமென்ன, BJP தலித் விரோத அரசு என்று தெரிந்தும் ஏன் அவர்கள் அந்தப்பக்கம் சாய்கிறார்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இந்தியா democratic country. இரண்டு கட்சிகள்தான் மத்தியில். ஒரு கட்சி சரியாக களத்தில் இறங்காவிட்டால் மற்றொரு கட்சிக்குதான் மக்கள் ஓட்டு போடுவார்கள்...இப்படி சிக்கலான பலபிரச்சனைகளை பற்றி பேசாமல் குண்டாங் குதிரையாக ஓட்டு போட்டவர்கள் அனைவைரையும் மத வெறியர்கள் கேட்டகிரியில் சேர்ப்பது எவ்வளவு சுலபம் ?. ஒருவேளை BJP செயல்படுத்தியதாக சொன்ன பல திட்டங்களின் லட்சணத்தை பொதுவெளியில் இன்னும் தீவிரமாக விவாதித்திருந்தால் ஒட்டுக்களின் எண்ணிக்கை சற்று மாறியிருக்கும்.

மாஸ் மீடியாவை குற்றம்குறை சொல்வதில் லாபமில்லை. அதன் டிசைனே அப்படித்தான். Emotional response தான் அதன் மூலதனம். எல்லா தரப்பு ஆட்களுக்கும் மீடியாக்களின் - குறிப்பாக சோஷியல் மீடியாக்கள் - மூலம் emotional closure தேவைப்படுகிறது. அதற்காக ஒரு சாதிவெறியனின் closureம் சாதி மறுப்பாளராக தன்னை மாற்றிக்கொள்ள முனைபவரின்  closureம் ஒன்று என்று சொல்லும் அளவிற்கு நான் முட்டாளில்லை. ஆனால் சாதி பற்றி தனக்குள்ள அசல் புரிதல்கள் என்ன, இன்னும் கடக்க வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது, தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கிறது - இதற்கான பதில்களையோ/கேள்விகளையோ/விவாதங்களையோ செயல்படுத்தக்கூடிய மீடியம்கள் தானா நமது சோஷியல் மீடியாக்களும்/காட்சி ஊடகங்களும் ? Self - retrospectionனுக்கு வேலையேயில்லாமால் மீடியாக்கள் நமக்கு காண்பிக்கும் செய்திகளுக்கும், ஷேர் செய்யப்படும் போஸ்ட்களுக்கும் படக்படக்கென ரியாக்ட் செய்வதன் மூலம் நாமாகவே ஒரு limboவில் மாட்டிக்கொள்கிறோம். போஸ்ட்மெனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "In the Huxleyan prophecy, Big Brother does not watch us, by his choice. We watch him, by ours. There is no need for wardens or gates or Ministries of Truth. When a population becomes distracted by trivia, when cultural life is redefined as a perpetual round of entertainments, when serious public conversation becomes a form of baby-talk". 
Facebookers..

6 comments :

  1. Still im wondering ahy your old post is removed from fb. Or you deleted intentionally.

    ReplyDelete
  2. If mass media/social media have these issues, do you have an alternate solution (atleast in theory)? Or do you think it is completely irreparable?

    ReplyDelete
    Replies
    1. // Or do you think it is completely irreparable? //

      On individual level - Yes

      En masse - வாய்ப்பேயில்ல. I believe in "man's almost infinite appetite for distractions"

      Delete
  3. In india, do you see any media house as exception to follow? Heard caravan magazine is better. Any other channel/magazine to follow?

    ReplyDelete
    Replies
    1. Caravan subscribe பண்ணிருக்கேன்.

      The Wire, Scroll, The Telegraph, Quartz, Quint - Usual Suspects.

      ஆனா என்ன கேட்டா, நமக்கு நாமே தான் மிகப்பெரிய சோர்ஸ். In this day and age, நா யாரையும் நம்ப மாட்டேன். பெர்சனலா தேடி தெரிந்துகொள்வதே நல்லதுன்னு தோணுது.

      Delete