ஒரு ஊரில் ஒரு மனமொத்த தம்பதி வாழ்ந்து வந்தார்கள். எல்லாம் திருப்தியாக அமையப்பெற்றும் இருவருக்கும் தீராத மனக்குறை ஒன்று இருந்தது. குழந்தை இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை. சில ஆண்டுகள் கழித்து ஆண்டவனின் கருணையால், அவர்களின் வேண்டுதலின்படி அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தாங்க முடியாத சந்தோஷம். ஆனால் சந்தோஷம் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை. பையனுக்கு பேச்சு வரவில்லை. மறுபடியும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒருநாள் திடீரென்று பையன் “ங்க........ங்.....ஞ” என்று பேச முயற்சிக்கிறான். நம்பமுடியாத சந்தோசத்துடன் அந்தப்பெண் கணவர், உறவினர்கள், அண்டைவீட்டார் என்று அனைவரையும் அழைக்க...........மிகுந்த பரபரப்புடன் எல்லோரும் பையன் என்ன பேச போகிறானோ என்று ஆவலுடன் காத்திருக்க.....பையனும் பேசத் தொடங்கினான் “நீ எப்பம்ம்மா தாலி அறுப்ப......”  
“நீங்க பாத்தீங்கன்னா எல்லா எடத்திலும் நகைச்சுவை கொட்டி கெடக்கு” சர்வசாதாரணமாகத் தொலைக்காட்சி முதல் பத்திரிக்கைகள் வரை திரும்பின பக்கமெல்லாம் இந்த வசனத்தை ஓராயிரம் முறை கேட்டிருப்போம். இவ்வசனத்தின் நடைமுறை அபத்தத்தையும் தாண்டி, இதிலுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எகத்தாளம், ஏகடியம், நையாண்டி, பகடி, அபத்தம் போன்ற பலவற்றை நாம் சந்தித்திருப்போம். பலபேர் அவ்வனுபவத்தை உணராமல் போயிருக்கலாம். சிலர் உணர விரும்பாமல் கடந்திருக்கலாம். மேளே குறிப்பிட்டவற்றுள் முக்கியமானதொரு வகை தான் ப்ளாக் காமெடி மற்றும் டார்க் காமெடி. “நான் தான் முகேஷ் பேசுறேன்..”. புற்றுநோய்க்கு எதிரான செய்திப்படத்தில் வரும் இவ்வசனம் எவ்வாறு இன்று நகைச்சுவையாக பல்வேறு சந்தர்பங்களில் முன்வைக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ப்ளாக் காமெடி என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இதனைச் சொல்லலாம்.

டார்க் மற்றும் ப்ளாக் காமெடி, இரண்டும் ஒன்றே போலவே தோன்றினாலும் இரண்டும் மிகநுட்பமான வேறுபாடுகளைக் கொண்டது. ப்ளாக் காமெடி பெரும்பாலும் தனிமனித அனுபவங்களையே முன்னிறுத்தும். அவர்களின் பார்வையிலேயே காட்சி விவரிப்புகள் இருக்கும். ஆனால், டார்க் காமெடி குழுமனப்போக்கின் வழியாகவே செயல்படும். ஒட்டுமொத்த கட்டமைப்பை, சூழ்நிலைகளை பகடிக்குள்ளாக்குவது டார்க் காமெடி. அதில் சிக்குண்ட மனிதர்கள் தங்களது அனுபவங்களை நகைச்சுவையாக முன்வைப்பது ப்ளாக் காமெடி. எவ்வளவுதான் இதுகுறித்து பேசப்பட்டாலும், இவ்வேறுபாடுகள் குறித்தான குழப்பங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. ஆனால், இரண்டுக்கும் பொதுவான, அடிப்படையான அம்சங்கள் சில உள்ளன.

1) பிம்பங்களை கட்டுடைத்தல் (Iconoclasm) - புனிதம், தீட்டு, பேசாப்பொருள் என்று நம்பப்படும் அனைத்தையும் பகடிக்குள்ளாக்குவது. இறப்பில் ஆரம்பித்து சித்தாந்தங்கள் வரை அநேக விஷயங்கள் இதில் அடங்கும்.

2) சுய எள்ளல் (Self Parody) – மிகமிக முக்கியமானதொரு அம்சம். மிகச்சிறந்த கலைஞர்களிடமும் அவர்தம் படைப்புகளிலும் இந்தத்தன்மையைக் காண முடியும்

3) தப்பிக்கும் மனநிலை (Escapism) – Momentary denial of the painful present. ஒருவித வெட்டேத்தியான போக்கு. மிகுந்த நெருக்கடியான தருணங்களில் அவற்றிலிருந்து தப்பிக்க/மறக்க நகைச்சுவையுடன் அத்தருணங்களை அணுகுவது. நல்ல உதாரணம் - மருத்துவமனை

இம்மூன்று அம்சங்களில் ஏதாவது ஒன்றையாவது அழுத்தமாகப் பதிவு செய்த படைப்புகளே டார்க் காமெடி/ப்ளாக் காமெடி என்ற வரையறைக்குள் வரும். இதனை சற்று ஹாஸ்யத்துடன்(Humour) மட்டும் அணுகினால், ப்ளாக் ஹியுமர் என்ற அளவிலயே அப்படைப்பு நின்றுவிடும். இம்மூன்று அம்சங்களும் எம்மாதிரியான காட்சியனுபவத்தை பார்வையாளனுக்குக் கொடுக்கிறது என்பதில் தான் தேர்ந்த படைப்பிற்கும் முற்றுப்பெறாத படைப்பிற்குமான வித்தியாசம் உள்ளதாகப்படுகிறது. உதாரணமாக ப்ளாக் காமெடி வகைத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பல இடங்களில் நாம் சிரித்தாலும், காட்சி முடிந்து சிறிது நேரம் கழித்து இதற்குப்போயா சிரித்தோம் என்ற குற்றவுணர்வை (Guilty Pleasure)  மிகச்சிறந்த படைப்புகள் எழுப்பும். அதன்மூலம் பார்வையாளனுக்கு வேறொருக் கோணத்தில் மிகுந்த வீரியத்துடன் எடுத்துக்கொண்ட கருப்பொருளை இப்படங்கள் பதிய வைக்கின்றன. குறிப்பாக, சமூக சித்தாந்தங்கள்,மதிப்பீடுகள் சார்ந்த படைப்புகளில் இவற்றைக் கண்டுணரலாம்.

ஹாலிவுட்.....ஏன், உலக திரைப்பட வரலாற்றைப் பார்த்தோமேயானால், ப்ளாக் காமெடியின் பிதாமகன் என்று ஒருவரைச் சொல்லலாம். சாப்ளின். நிகரில்லா முழுமையான கலைஞன். தனது மௌனப்படங்களில் இருந்தே ப்ளாக் காமெடியை திரையில் உலாவ விட்டவர். 1925ல் அவர் இயக்கி நடித்த The Gold Rushல், ப்ளாக் காமெடியை அடுத்த தளத்திற்கு அவரையும் அறியாமல் எடுத்துச் சென்றுள்ளார். பசியின் காரணமாகத் தனது காலணியை வேகவைத்து, மிகுந்த  மிடுக்குடன் உண்ணத் தொடங்குவார். எளிதில் மறக்க முடியாத காட்சி அது -


19வது நுற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பல இடங்களில் கடும் பஞ்சம், போர்க்காலங்களில் மக்கள் இவ்வாறு காலணிகளை சமைத்து உண்டதற்கான ஏராளமான சான்றுகள் உண்டு. Modern Times. மாபெரும் வீழ்ச்சி(Great Depression) காலகட்டத்தில் வெளிவந்த படம். எவ்வளவு இயந்திரத்தனமாக மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்பதை அட்டகாசமாக பகடி செய்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் ஆட்டு மந்தை தொழிற்சாலைக்குள் நுழையும் காட்சி ஒன்றே போதும். ஏன் சாப்ளின் ஒரு மேதை என்றால், ஊன்றி கவனித்தால் ஒரேயொரு கருப்பு ஆடு அக்கூட்டத்தில் இருக்கும்.


The Great dictator. எத்தனை வீரியமிக்க படைப்பு. ப்ளாக் மற்றும் டார்க் காமெடி, இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பு. இத்தனைக்கும் ஹிட்லரது அராஜகங்கள் அப்படம் வந்த காலகட்டத்தில் அவ்வளவாக வெளியே தெரிந்திருக்கவில்லை. அடுத்த மிகமுக்கியமான படம் தான், Monsieur Verdoux(1947). இது ஏன் மகத்தானதொரு ப்ளாக் காமெடி என்றால், சாப்ளினின் சுய எள்ளல். அதுவரை நகைச்சுவை நடிகராக, தனக்கு ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த வழமையான பாத்திரப்படைப்பில் இருந்து முற்றிலும்மாறி பணத்திற்காக பெண்களை மணந்து கொலைசெய்யும் பாத்திரத்தில் அதகளம் புரிந்திருப்பார். இவ்வாறாக அன்று தொடங்கி இன்று வரையில் ஹாலிவுட் திரைப்படங்கள் ப்ளாக் காமெடியில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளன. சற்று கூர்ந்து கவனித்தால், இதற்கு பெரும்பாலும் Indie இயக்குனர்களே காரணம். டொரண்டினோ, ஜிம் ஜார்முஷ் என்று நீண்ட வரிசையே உள்ளது. இதில் மார்டின் ஸ்கார்சேஸி போன்றோரது படங்களில் தீவிரமான ப்ளாக் காமெடி இருக்கும். டொரண்டினோ படங்களில் மிகையுணர்வு சற்று தூக்கலாகத் தெரியும். கோயன் சகோதரர்களின் படங்களில் இவ்வுணர்வு படுகூடுதலாக இருப்பதைப் பார்க்கலாம். வூடி ஆலன் போன்றோர் ப்ளாக் ஹியுமரையே அதிகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.


ஹாலிவுட்டைப் பற்றிப் பேசும்பொழுது, இங்கலாந்த் படங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இங்கலாந்தில் இதற்கு Gallows Comedy என்றொரு பெயரும் உண்டு. ஹாலிவுட்டின் கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி இங்கலாந்தில் குடியேறிய ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் மிகமுக்கியமான டார்க் காமெடித் திரைப்படங்களாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb மற்றும் A Clockwork Orange. இயக்குனர் யார் என்பதை சொல்லத்தான வேண்டுமா ? முதலாவது படத்தில் மிகையுணர்வு தூக்கலான டார்க் காமெடி இருக்கும். போர் – அவற்றிற்கான கற்பிதங்கள் – அதிகாரிகள், அவர்தம் அதிகாரங்கள் போன்றவைகள் குறித்தெல்லாம் ஏகத்துக்கும் பகடிக்கு உட்படுத்திய படம்.ஆனால் இதைவிட மிகுந்த தீவிரத்தன்மையுடன் டார்க் காமெடி வெளிப்பட்ட படம் தான் A Clockwork Orange. அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான பிணைப்பு, மக்கள் மேல் அரசாங்கள் செலுத்தும் கட்டுப்பாடு, பிறழ்ந்த உலகு (Dystopian society), ஓர்பால் சார்பு என்று அக்காலத்திலேயே உட்பொருளில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இப்படம் இயங்கியது. பொதுவாக இசை மனதை சாந்தப்படுத்தும் என்றுதானே கேள்வி. ஆனால் படத்தில் இப்பிம்பம் உடைக்கப்பட்டிருக்கும்.


மற்றொரு காட்சியில், அலெக்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தின் ஆசனவாயை சிறைச்சாலை அதிகாரி கைகளால் விரித்து, டார்ச் அடித்து சோதனை செய்துபார்ப்பார். இது எத்தகைய அசூயயை ஏற்படுத்தும் காட்சி. ஆனால் மாறாக பார்ப்பவர்களுக்கு இக்காட்சி இன்றும் சிரிப்பை ஏற்படுத்தும். குப்ரிக்கின் பெரும்பாலான படங்கள், பார்வையாளனை சிக்கல்கள் நிறைந்த புதிர்பாதைக்குள்(maze) உள்ளிழுக்கும்தன்மை கொண்டவை. பல சமயங்களில் அப்பாதைக்குள் சுற்றிக்கொண்டிருப்பதையே நாம் உணர்ந்திருக்க மாட்டோம். மேலே சொன்னது போன்ற பல காட்சிகளோ எவ்வாறு நாம் உள்வாங்குகிறோம் என்பதன் மூலம், நமது மனநிலைக் குறித்தான கேள்விகளைக் குப்ரிக் எழுப்புகிறார். ப்ளாக் காமெடியின் வேலை பாடம் புகட்டவதன்று. மாறாக, பார்வையாளனின் சுயசிந்தனையை தூண்டிவிடுவது.அதுவும் நகைச்சுவையின் மூலம். கய் ரிட்சி தொடங்கி இன்றும்கூட இங்க்லாந்து திரைப்படங்களில் ப்ளாக் காமெடிக்கென்று தனி இயக்குனர் பட்டாளமே உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் இங்க்லாந்து நாட்டுப் படங்களே பெரும்பாலும் இடம்பிடித்திருக்கும்.

ஐரோப்பிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், சர்ரியலிசம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கிய அதே கோஷ்டி தான் ப்ளாக் ஹியுமர் என்ற பதத்தையும் வழக்கில்விட்டது. லூயி புனுவெல், அலயந்திரோ ஹொடரோவ்ஸ்கி முதலான முக்கிய சர்ரியலிஸ படைப்பாளிகளின் திரைப்படங்களில் ப்ளாக் காமெடியின் சாயல்களை அதிகளவில் காணலாம். நாப்பதுகளில் இத்தாலியில் உருப்பெற்ற நியு வேவ் திரைப்பட இயக்கம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் ப்ளாக் காமெடியில் படங்கள் வெளிவரத் தொடங்கின. பிரான்சில், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அன்றைய கோதார்த் முதல் இன்றைய ழான் ஜெனே(Delicatessen) வரை சில ப்ளாக் காமெடிப்படங்கள் வெளிவருகின்றன. ஜெர்மனி நாஜிக்களின் பிடியில் இருந்த காரணத்தால் இயல்பாகவே நாஜிக்களை பகடிக்குள்ளாக்கும் படங்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். ஜெர்மன் புது அலையின் இயக்குனர்களான ஹெர்ஸாக், ஃபாஸ்பைன்டர் போன்றவர்களது படங்களில் ப்ளாக் ஹியுமரின் தன்மை அதிகளவில் உண்டு. ஆசியாவை எடுத்துக் கொண்டால், கொரியாவில் 90களில் தொடங்கிய புது அலையின் காரணமாக பார்க் ஜான் வூ, கிம் ஜா வூன், கிம் கி டுக் என்று பல படைப்பாளிகள் ப்ளாக் காமெடியை கையாண்டுள்ளனர். ஜப்பானைப் பொறுத்தவரை, தகெஷி கிடானோவை ப்ளாக் காமெடியின் உச்சம் என்று சொல்லலாம். அரசியல் ப்ளாக் காமெடி என்று வரும்பொழுது, கியூபாவின் தாமஸ் கிதராஸ் அலயா தான் என் ஆதர்சம். தான் நம்பிய/நம்பிக்கொண்டிருந்த சித்தாந்தத்தை திரைப்படங்களின் வழியாக அவரளவிற்கு விமர்சனப்பகடி செய்த இன்னொரு படைப்பாளியை நான் கண்டதில்லை.


இந்திய சினிமா என்று பார்த்தால், நானறிந்த வரையில் மிகக்குறைவாகவே ப்ளாக் காமெடி வகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஷ்யாம் பெனகல் போன்ற ஆட்கள் அவ்வப்போது இதில் முத்திரை பதித்ததுண்டு. அவரது மண்டி (Mandi, 1983) இந்திய சினிமாவின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இன்று விஷால் பரத்வாஜ், அனுராக் கஷ்யாப், அனுஷா ரிஸ்வி(பீப்ளி லைவ்) போன்றோர் ப்ளாக் ஹியுமர்/காமெடிப் படங்களில் பல பரிச்சார்த்த  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், பெரியளவில் இவ்வகைப் படங்கள் வந்ததே இல்லை என்பதே நிதர்சனம். எம்.ஆர்.ராதாவின் வசனங்களில் ப்ளாக் ஹியுமர்  சகஜமாக இழையோடுவதைப் பார்க்கலாம்(ஒரு கைய வெச்சுகிட்டு எப்பிடி சாமீ கும்பிடுவ.....சலாம் போடுவியா). குறிப்பிடத்தக்க மற்றொரு ஆள், கமல். பேசும் படம் தொட்டே அவ்வப்போது படங்களிலும் வசனங்களிலும் ப்ளாக் ஹியுமரைக் கையாண்டவர். மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் அதனை வேறொரு கட்டத்திற்கு அவர் நகர்த்தினார். அதற்குப்பிறகு தமிழ்ப் படத்தில் அட்டகாசமானதொரு டார்க் ஹியுமரைக் கொண்ட படமாக வெளிவந்த படமாக  ஆரண்ய காண்டத்தைச் சொல்லலாம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகளவில் “நகைச்சுவை” படங்கள் வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் ஏறக்குறைய அனைத்து படங்களுமே போகிறபோக்கில் பார்த்துவிட்டுச் செல்லும் Run of the mill வகைப் படங்களே.பெரும்பாலான படங்களில் சந்தானம் இருப்பார். நிச்சயம் பல டாஸ்மாக் காட்சிகள் உண்டு. காதல், நட்பு, பெண்கள் குறித்தெல்லாம் தத்துவார்த்த மேற்கோள்கள் இருக்கும். வேறு பொழுதுபோக்க தெரியாத, அதற்கு வழியில்லாத மக்களும் இதுபோன்ற படங்களையே திரும்பத் திரும்ப பார்த்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சமீபமாக இக்குறுகிய வட்டத்தைத் தாண்டி சற்றேனும் புதிய வகை முயற்சியில் வெளிவந்த நகைச்சுவைப் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்கூடு. சூது கவ்வும், நேரம் தொடங்கி தற்போதைய மூடர் கூடம் வரை மாறுபட்ட நகைச்சுவையையும் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற சூது கவ்வும், மூடர் கூடம் இரண்டு படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதை கவனிக்கலாம். கொள்ளை, கடத்தல் என்று இரண்டு படத்திலும் ப்ளாக்/டார்க் காமெடிக்கான களம் இருந்தும், அதற்கான முயற்சி என்ற அளவிலேயே இரண்டு படமும் நின்றுவிட்டதாக எனக்குப்படுகிறது.

மூடர் கூடம். இரண்டு விஷயங்களுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஒருவனை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை சற்றேனும் பதிவு செய்தமைக்காக. எப்படி நம்மூரில் முஸ்லிம்களுக்கும், திருநங்கைகளுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் ஆரம்பித்து...பல பிரச்சனைகள் உள்ளனவோ அதேபோன்றுதான் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஆட்களின் நிலையும். மற்றொரு பாராட்டப்பட வேண்டிய அம்சம், அந்தச் சிறுமிக்கு “பாஸ்” மீது ஏற்படும் ஈர்ப்பு. கைக்குட்டையை எடுத்துத் தருவதில் ஆரம்பித்து கதாநாயகன் பளார் என்று அறைவிடும்போது ஏற்படும் ஸ்பரிசத்தினாலும் அவன்தம் ஆண்மையினாலும் காதல் வயப்படும் கதாநாயகிகளை எத்துனை படங்களில் பார்த்திருப்போம். படத்தில் வரும் சிறுமி அவ்வாறான ஈர்ப்பில் விழும்பொழுது திரையரங்கே அதிர்கிறது (எங்கே மக்கள் அதனை புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களே என்று அக்காட்சிக்கு முன்னுரை  கூறும் காட்சி ஒன்றும் உள்ளது) இவைகளைத் தாண்டி மேலும் சில கவனிக்கத்தக்க காட்சிகள் படத்தில் உள்ளன. இயக்குனர் தெரிந்தே செய்தாரா என்று தெரியவில்லை. வெள்ளையனின் அப்பா – ஜெயபிரகாஷிற்கு இடையேயான, சாப்ளின் கால மௌனப்படங்களுக்கு ட்ரிபியூட் போன்றவரும் அக்காட்சி கச்சிதமாக மிகச் சரியாகத் பொருந்திப்போகிறது. இயக்குனர் தெரிந்தே செய்திருந்தால், மிகபெரிய பாராட்டுக்கள். ப்ளாக் காமெடியின் மன்னனுக்கு வேறெப்படி மரியாதை செய்துவிட முடியும். இசையைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். ஓப்ரா வகை, வெஸ்டர்ன் க்ளாசிகல் என்று பலதரப்பட்ட வகையிலான இசைக் கோர்ப்புகள் படம் முழுவதும் உலா வருகின்றன.   அட்டகாசமாக படமாக்கப்பட்ட பாடல் ஒன்றும் சென்ராயனுக்கு உண்டு. இதில் பயன்படுத்திப்பட்டிருக்கும் பல இசைக் கோர்ப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவாக நடந்தேறாதது. ஆனால் பின்னணி இசையைப் பொறுத்தவரை சிறிது ஏமாற்றமே. பல இடங்களில் ஒரே மாதிரியான துணுக்கிசை(Leitmotif) பயன்படுத்தப்பட்டிருப்பது சற்று அலுப்பைத் தருகிறது. பட்டென்று தெறிக்கும் வசனங்கள், ஆப்பிள் லைஃப் போன்ற போகிறபோக்கில் வரும் நகைச்சுவைகள், இயல்பான முகங்கள், வலுவில் திணிக்கப்பட்ட ஆபாச வசனங்கள் இல்லாமை என்று பல நல்ல விஷயங்கள் உண்டு. மேற்சொன்னவைகளையும் தாண்டி சில குறிப்பிடத்தக்க காட்சிகள் இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத என் நிலைமையையும்  அதற்கான  காரணத்தையும் பின்னர் பார்க்கலாம்.


படத்தில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. முதலில் நினைவுக்கு வருவது சில இடங்களில் துருத்திக்கொண்டுத் தெரியும் பிரச்சார நெடி. நாம் ஏன் திருடக் கூடாது என்பதற்கான வாதங்களில் ஆரம்பித்து, கம்யூனிஸம், சோஷியலிசம், குழந்தை வளர்ப்பு என்று பலவற்றிற்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். பாடம் புகட்டுவதைவிட பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டும் படங்கள் இங்கே மிகமிகக் கம்மி. அதனால் இப்படத்தை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. நம் வாழ்வின் அபத்தங்கள் எல்லாம் சொல்லிவைத்துக் கொண்டா வருகிறது. சட்டென்று நம்மைச் சூழும் தானே. ஆனால் படத்தில், இதுபோன்ற காட்சிகளுக்கான முன்னோட்டங்கள் மிகவெளிப்படையாக இருந்தமையால் அடுத்தது என்ன என்பது சிறிது நேரத்தில் புரிந்து விடுகிறது. ப்ளாக் காமெடியைப் பொறுத்தவரை, “Surprise element” மிகமிக முக்கியம். கூடவே அக்காட்சியின் நேரமும் அதன் நீட்சியும். படத்தில் அதுபோன்ற இடங்களில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களும் சற்றுமிகையான நடிப்பையே வாரிவழங்குகின்றனர். அதுவும் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு. ஆரம்பத்தில் ரசிக்க வைத்த இக்காட்சிகள், போகப்போக சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாய் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்புலக் கதை ஆரம்பிக்கும்பொழுது வழக்கமான தமிழ் சினிமா மரபுகளை உடைக்கும் படமாக இருக்கப்போகிறதோ என்ற எகிறத் தொடங்க....பிற்பகுதியில் அதே மரபுக்குள் படம் சிக்கிக் கொண்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ராபின் ஹுட்தனமாக அனைவரும் பணத்தை தூக்கிக் கொடுப்பது, டாம் & ஜெர்ரி பார்க்கும் அதே வழக்கமான வில்லன், வைரக் கடத்தல் என்று பின்பாதியில் சற்று தள்ளாட்டமாகவேப் படம் நகர்ந்ததாக எனக்குப்பட்டது.

முன்னமே சொன்னதுபோல் படத்தை முழுமையாக ரசிக்கமுடியாத சங்கடத்திற்கு என்னைத் தள்ளிய விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம். பரவாயில்லை, முதல் படத்திலேயே வித்தியாச முயற்சிகளுடன் ஒரு படம் அதன் இயக்குனர் என்ற திருப்தியில் வீட்டிற்கு வந்து இணையத்தைத் திறந்தால், Attack the gas station பற்றிய செய்திகள். அந்தத் தென்கொரிய படத்தையும் பார்த்தாகிவிட்டது (தமிழ் சினிமா தன் ரசிகர்களை தேடுதலுக்கு உட்படுத்துவதிலை என்று இனியாரும் குற்றம் சாட்ட முடியாது). வேறொரு படைப்பினால் பாதிப்படையாத கலைஞனே உலகில் இல்லை. திரைப்படங்களில் அது மிகமிக சகஜமானதும் இயற்கையானதும் கூட. குரோசாவா (The Virgin Spring பற்றி பெர்கமான் சொன்னது “It's touristic, lousy imitation of Kurosawa” ) -> பெர்க்மான் -> தர்கொவ்ஸ்கி.....இப்பிடி மாஸ்டர்களுக்குள்ளேயே ஒருவர்மேல் ஒருவர் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பேச ஆரமபத்தில் பக்கம்பக்கமாகப் போகும். இவர்களைத் தாண்டி மார்டின் ஸ்கார்சேஸி போன்ற ஆட்கள் வேறு வகை. ஒரு நேர்காணலில் எப்படி ராபர்ட் ப்ரெஸானின் ஒளிப்பதிவு கோணத்தை அப்படியே ஒரு படத்தில் தான் பயன்படுத்தினேன் என்பதை சிலாகித்து விவரித்திருப்பார். இவர்களைப் போன்ற ஆட்களிடம் மற்றவர்களது பாதிப்பை உணர முடியுமே தவிர, ஒருபோதும் “போலச் செய்தல்” இருக்காது. இவ்வளவு ஏன், டொரண்டினோ அடிக்காத கூத்துக்களா. கிடானோ தொடங்கி, பல இரண்டாம் தர ஆசிய/ஹாலிவுட் ஆக்ஷன் படக் காட்சிகளின் சாயலை டொரண்டினோ படங்களில் காணலாம். அதை க்வெண்டினே, விலாவரியாக எந்தெந்த படங்கள் என்று விவரிக்கும் அழகே அழகு. ஆனால், எப்படி தான் கேமராவை திருடியதை ஹெர்சாக் இயல்பான விஷயமாகப் பார்த்தாரோ, அதேபோல் க்வெண்டின் மிகஉரிமையுடனும் வெளிப்படையாகவும் இதைச் செய்வார். இருந்தபோதிலும் அக்காட்சிகள் முற்றிலும் க்வெண்டின் பாணியிலும் வலிய திணித்ததைப் போன்ற உணர்வுகளைத் தராமலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகச் சொல்வதென்றால் க்வெண்டின் பாணியிலான படைப்பு என்பது கொலாஜ்(Collage) போன்றதொரு கலவையான கலை வெளிப்பாடு. மேல நீட்டிமுழக்கி சொன்னதுபோல இந்த இன்ஸ்பிரேஷன் சமாச்சாரத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் அப்பட்டமான உருவல், அதோடு தனது சொந்த கண்டுபிடிப்பு போன்று பேசும் பொழுதுதான் அதிர்ச்சியும் எரிச்சலும் ஏற்படுகிறது (தெய்வத்திருமகள் சிறந்த உதாரணம்). மூடர் கூடத்திற்கும் Attack the gas stationனிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், மட்டமான மொழிபெயர்ப்புபோல் அப்படியே கொரிய படத்தில் இருந்து இப்படத்தை எடுக்காமல் அதன் பாதிப்பில் இயக்குனர் இப்படத்தை தனது பார்வையில்/பாணியில் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஆனால் மூடர் கூடத்தில் தனித்துவமான காட்சிகள் என்று முதலில் எனக்குப்பட்ட - வெள்ளையன் தப்பித்து ஸ்கூட்டரில் போகும் போது கூடவே ஆட்கள் வரும் காட்சி, தொலைபேசியின் எதிர்முனையில் ஐஸ்க்ரீம் கேட்கும் சிறுமி என்று பல காட்சிகளின் மூலம் அந்தக்கொரியன் படம் தான் என்பதை உணர்ந்தபொழுது சற்று வருத்தமே மிஞ்சியது. சென்ராயனின் மிகைப்படுத்தப்பட உடல்மொழிகளில் ஆரம்பித்து உச்சி மீது வானிடிந்து பாடல் நிகழும் காட்சியமைப்பு வரை பல காட்சிகள், கேமரா கோணங்கள் உட்பட அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. என்னடா இது என்று ஒரு பெரிய ஏமாற்றம் மனதில் வந்து ஒட்டிக் கொண்டதென்னவோ உண்மை.


உலக நாடுகளின் திரைப்பட வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதெல்லாம் ஒரு நாடு அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுகிறதோ, அதற்குப்பின்னர் அந்நாட்டிலிருந்து வெளிவரும் பல படங்களில் நிச்சயம் அவ்வடக்குமுறை குறித்துப் பேசப்பட்டிருக்கும். இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, போலந்து என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கொரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 90களுக்குப் பிறகு வந்த கொரிய புது அலைப் படங்கள் பலவற்றிலும் 60 – 90வரை கொரியா சந்தித்து வந்து நெருக்கடிகள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதைக் கொரியப் பட ரசிகர்கள் அறிவோம்.கிம் கி டுக் படங்களில் ஆரம்பித்து....Peppermint Candy போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். Attack the gas stationல் இதன் மெல்லிய தீற்றலைக் காண முடிகிறது. ஆனால் மூடர் கூடத்தில் அதன் சட்டகம் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறதேயன்றி, பின்புலங்கள் பல இடங்களில் மாறுபடுகின்றன என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இயக்குனர் நவீனின் பேட்டிகள் பலவற்றையும், மூடர் கூடம் பற்றியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை பார்த்ததிலிருந்து நவீன், படத்தின் அனைத்து துறைகளின் மீதும் நல்ல ஆதிக்கம் உடையவர் என்பது தெரிந்தது. இசையில் இருந்து நடனம் வரை இப்படித்தான் வர வேண்டும் என்ற பிடிவாதமும் தெரிந்தது. நிறைய இயக்குனர்களுக்கு இப்பிடிவாதம் வாய்ப்பதில்லை. அடுத்தடுத்த படங்களில் இதே பிடிவாதத்துடன் அவர் வேறொரு படத்தின் சாயல் இல்லாமல், அட்டகாசமானதொரு படத்தை தருவார் என்று நம்பலாம். அதற்கான  திறமை நிச்சயம் அவரிடம் உள்ளது கண்கூடு. அதுவும் ப்ளாக் காமெடி போன்ற தமிழ் சினிமா பெரிதும் பயணப்படாத தளத்தில் அவர் பயணப்பட்டால் கூடுதல் மகிழ்ச்சி. நம் நாட்டில் நகைச்சுவைக்கா பஞ்சம். மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நாட்டில், நிலாவுக்கு மனிதனை அனுப்பப் போகிறோம் போன்ற ப்ளாக் காமெடிகள் எப்போதும் செழிப்பாக வளையவரும் ஊரல்லவா இது. புதிய இயக்குனர்கள் இதையெல்லாம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் சினிமா ரசிகர்களான நமக்குக் கொண்டாட்டம் தானே. ஆரம்பிப்பார்கள் என்றே நம்புவோம்.


பிகு: ஆறு மாதம் முன்னாடி....மூடர் கூடம் வந்த சமயத்தில் "படப்பெட்டி" இதழுக்காக எழுதியது. போனமாதம் தான் சிலபல நடைமுறை சிக்கல்கள் தாண்டி இதழ் வெளிவந்தது. அதுனால...இத இப்ப ஷேர் செய்யுறேன்