நிச்சயம் இதுமாதிரி,இவ்ளோ நேரம் யாராவது வீடியோ பதிவு என்ற பேரில் எதுனா போட்டா, நா பாப்பனே என்பது சந்தேகமே. பதிவுகளையே முதல் பேரா - கட் - கடைசி பேரான்னு படிக்கும் ஆட்கள் நாம. இதெல்லாம் தெரிஞ்சாலும், இப்படி அப்லோட் செய்யத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. நெஜமா எத்தன பேர் பாப்பாங்க பத்தி ஒரு கவலையும் இல்ல. ஒரு பத்து இருபது நிமிஷத்தில் பேசி முடிக்கும் அளவுக்கு ஸ்கார்சேஸி மொக்க டைரக்டரா என்ன ? 

இதுல வரும் காட்சிகள் - இணையத்தில் இருந்தும், என் டிவிடிகளில் இருந்தும், ரொம்ப குறிப்பா.......இந்த Fan montage tribute videoல இருந்து கட் செஞ்சது. அவரே கோல்டன் க்ளோப் வீடியோல இருந்து தான் கட் செஞ்சிருக்கார்.

அடுத்த பார்ட் - கொஞ்சம் அதிர்ச்சிய ஜீரணிக்க 5,6 பேர் மட்டுமே பாத்தாலும், அவுங்களும் பாவம் தான - மூணு நாள் டைம் குடுத்து, திங்கள் கிழமை அப்லோடுகிறேன்.




ஒரு வேகத்தில் ரெண்டு தப்பு வுட்டுடேன்.
  • ஸ்கார்சேசே டிவில மொதல்ல பாத்த படம், ரோஸிலினி யோட - பைசான்(Paisan).
  • Neo realismத்தின் முக்கிய ஆட்கள் - விட்டோரியோ டி சிகா, லுசினோ விஸ்காண்டி(முதல் neo realistic படம் எடுத்தவரு இவர்தான்) ஆகியோர்களை குறிப்பிடக்கூட மறந்துட்டேன்.


மத்தபடி, பாத்துட்டு சொல்லுங்க. இதுவே ரொம்ப நேரம் போனதால மீதி நாளிக்கு அப்லோடுகிறேன். 640px விடியோ போடலாம்னா, சைஸ் ரொம்ப அதிகமா வந்திருச்சு. இந்த குவாலிட்டியை பொறுத்தருள்க.

எனது இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் First day First show பார்த்த ஒரே படம், The Dark Knight

- பிரபல  (கல்ட்)பதிவர்  கொழந்த 

பேட்மேன் பத்தி ஒரு நாலு பதிவாவது எழுதுனும் என்ற முடிவுல இருந்தேன். "உனக்கு எதுக்கு இந்த கருந்தேள் வேல எல்லாம் ?"  ஹேராம் ஹேமமாலினி குரலில் ஒரு அசரிரீ. அப்புடியே வுட்டுட்டேன். இதுவெளிய சொல்லிக்கிற காரணம் என்றாலும், நிஜக்காரணம் - எனக்கு பேட்மன் காமிக்ஸ் எல்லாம் கடந்த மூன்று வருடங்களாகத் தான் பரிட்சயம். கவனிக்க, பரிட்சயம். படிக்க ஆரம்பிச்சது என்னவோ போன வருஷத்தில் இருந்துதான். அதுனால கூட்டதுல கோவிந்த போடுறேன் பேர்வழி, எங்க இந்த படத்த பத்தி குறைந்தபட்சம் ஒரே ஸ்டேடஸ் கமென்ட் கூட போடாட்டி facebookல நம்மள என்ன நெனைப்பாங்கன்னு நானும் எனது "இருப்பை" நிரூபிக்க எழுதுறேன்னு  அபத்தமாக, சரியாக தெரியாதை எழுத விரும்பவில்லை. ராஜேஷ் மாதிரியான ஆட்கள் எழுதுறதே சரியாக இருக்கும்(அவர் வீட்டு புக் ஷெல்ப்ல ஒரு முழு வரிசையும் காமிக்ஸ் தான்).

ஆனால், பேட்மேனின் எல்லா படங்களையும் பல கார்டூன்களையும் - இதை வாசிக்கும் பெரும்பாலானவர்கள் போல - பல முறை பார்த்துள்ளேன். அந்தப் படங்களை மட்டும் பார்த்திருந்து, இதுதான் பேட்மேன் - ஙஞனநமணவென்று கவட்டையை கவ்விப் பிடிக்கும் அளவிற்கு டைட்டான உடையுடன் சுவர்களுக்கு இடையே சிரமப்பட்டு தவ்விக்கொண்டிருக்கும் ஒருஆள் என்ற அளவில் மட்டும் தெரியும். அப்பொழுது பேட்மேனுக்கு பெரிய ரசிகன் எல்லாம் கிடையாது. 2007. The Dark Knight பட ட்ரைலர் வெளியானது. ஒரு உலுக்கு உலுக்கியது என்றால் மிகையில்லை. குறிப்பாக ஜோக்கர் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும். ஏன் ட்ரைலர் அத்தனை மிரட்சிக்கு உட்படுத்தியது ?. அதுவரை - Batman beginsசை அப்போது நான் பார்த்திருக்கவில்லை - நான் திரைப்படங்களில் பார்த்த பேட்மேன், குழந்தைத்தனமான காட்சிகள், (எனக்குதான் அப்படி தோணுதோ) ரொம்பவும் காமிக்தனமான சண்டைகள் என்றே இருக்கும். டிம் பர்டனின் பேட்மேன் ரசிக்கக் கூடியதுதான். ஆனால், காட்சிக்கு காட்சி காமிக்ஸ் போலவே இருக்கும். அதுவும் பேட்மேன் & ராபின்(Joel Schumacher) எல்லாம் சகிக்க முடியாத அளவிற்கு கொடுமை. அதனால் டார்க் நைட் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. பின்பு எத்தனை தடவை டார்க் நைட் பார்த்தேன் என்ற கணக்கே இல்லை. மற்ற எல்லா காமிக் ஹீரோக்களின் படங்களை விடவும் நோலனின் படம் ஏராளமான ஆட்களுக்கு பிடிக்க காரணம்....அதன் darkness. Batman begins'ல் அட்டகாசமான ஒரு ப்ளாட்ஃபாரமை ஏற்படுத்திய பிறகு, டார்க் நைட் படம் முழுக்கவே உளவியல் ரீதியிலான "சண்டை (?)" காட்சிகளாகவே நோலன்கள் கையாண்டிருப்பர்.

இந்த பதிவு முழுக்க முழக்க எப்படி, நோலனின் பேட்மேன் ஒரு சினிமா ரசிகனாக என்னை பாதித்தது(தெரிஞ்சு  யாருக்கு என்ன ஆகப்போகுது) என்பது குறித்தும் பேட்மேனின் உளவியல் குறித்ததும், ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆசையில் எழுதுவது Full stop 

பேட்மேனது சைக்காலஜி பற்றிய ஒரு பட்டையைக் கிளப்பும் டாகுமெண்டரி இது. இதிலிருக்கும் சிலபல விஷயங்களைத்தான் கீழே நீட்டி முழக்கி சொல்லியிருப்பேன். மற்ற காமிக் ஹீரோக்களுக்கும் பேட்மேனுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரியும். தவிர, நோலனின் பேட்மேன் எப்படி பல வகைகளில் ஸ்பெஷலாக இருக்கிறது என்பது குறித்தும் அலசுகிறது. எப்படியும் இதற்கு  பிறகு பதிவை யாரும் வாசிக்க போவதில்லை.அதனால், இந்த டாகுமென்டரியை பார்க்காதவர்கள், உடனேயே தரவிறக்கி பாருங்கள். இன்னும் மேலதிகமாக வெள்ளியன்று பேட்மேனை ரசிக்கலாம்.



Fear & Guilt:

சிறுவன் ப்ரூஸ் வெய்ன் , தவறி ஒரு குகைக்குள் விழ நேரிடுகிறது. விழுந்த அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாமல் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்பவனின் முகத்தை உரசியவாறு ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அவனது தலைக்கு மேல பறக்கின்றன. நிச்சயமாக, எந்தவொரு சிறுவனின் மனதிலும் இதுபோன்றதொரு சூழ்நிலைய eternal fear ஒன்றை ஏற்படுத்திவிடும். 
-----------------------------------------
இந்த விபத்து நடந்த சிறிது காலத்திற்கு பிறகு, ப்ரூஸ் வெய்ன், தனது பெற்றோர்களுடன் "Mask of the Zorro" மேடை நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். நாடகத்தில் கறுப்பு முகமூடியுடன் ஆட்கள் நடமாடுவதும், கயிறிலிருந்து இறங்குவதுமான காட்சிகள், வவ்வால்கள் முகத்தை உரசியதையே ஞாபகப்படுத்த - அந்த இடத்தைவிட்டு கிளம்பலாம் என்று பெற்றோரை கிளப்புகிறான். வெளிய வருபவர்கள், ஒரு வழிப்பறித் திருடனால் ப்ரூஸ் வெய்னின் கண் முன்னரே கொலை செய்ப்படுகின்றனர்.

மேலிருக்கும் இரண்டு காட்சிகளையும் Batman begins படத்தில் மிக நேர்த்தியாக நோலன் வெளிப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்ததே.

தனது பெற்றோர்கள் தனது கண் முன்னரே இறந்ததும், அதற்கு - அவர்களை வெளியே அழைத்து வந்த தாம்தான் காரணம், தன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும்படி ஆகிவிட்டதே என்றும், அவர்களை வெளிய அழைத்து வர - தனது பயமே காரணம் என்றும் - ப்ரூஸ் வெய்ன் குற்றஉணர்வில் தவிக்க ஆரம்பித்தது அன்றுமுதல் தான். சூப்பர்மேனில் இருந்து (காதலி) ஸ்பைடர்மேன் வரை(uncle இறப்பது) இந்த குற்றஉணர்வை எல்லா காமிக்ஸ் ஹீரோக்களின் வாழ்விலும் காணலாம்.இந்த குற்றஉணர்வு - சூப்பர் ஹீரோக்களை மட்டுமின்றி நம்மைப் போன்ற ஆட்களையும் வெகுவாக பாதிக்கப் கூடியதுதானே. வேட்டைநாய் போல் வாழ்நாள் முழுவதும் அது துரத்திக் கொண்டே இருக்கும். ப்ரூஸ் வெய்ன்க்கும் அதுதான் நடந்தது. 

இடையில், கோதம் நகரின் முதன்மைக் குடிமகனான தாமஸ் வெய்னுக்கும் அவரது மனைவிக்குமே பாதுகாப்பு இல்லாத பொழுது, நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அந்நகரின் மக்கள் கலவரமடைய ஆரம்பிக்கின்றனர். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடடைய தொடங்கியிருந்தது. ஊழல் மெல்ல மெல்ல மலிவுற ஆரம்பித்திருந்தது. அதனோடு தாமஸ் வெய்ன் மரணமும் சேர்ந்துகொள்ள, முற்றிலுமாக அனைத்தும் மாறத் தொடங்கியது. பல ஆண்டுகள் கழித்து நடக்கும் நீதிமன்ற விசாரணையின்போது தனது பெற்றோரை கொன்றவனை பழிவாங்கும் நோக்கத்துடன் செல்லும் ப்ரூஸ், அவனை மற்றொரு கும்பல் சாகடிப்பதை கண்ணுற நேரிடிகிறது. குற்றவாளி அவன் இல்லை - இந்த நகரமே அந்த சூழ்நிலைக்கு அவனைத் தள்ளியது, சரி செய்ய வேண்டியது இந்நகரத்தையே என்று முடிவுக்கு வருகிறான். இதற்கு அவன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவது எப்படி என்பதை நாம் அனைவரும் Batman begins மூலம் அறிவோம்.

ப்ரூஸ் வெய்ன் இதற்கு பின்னர் எடுக்கும் இரண்டு முடிவுகள்தான் எனக்கு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான  ஆட்களுக்கு பேட்மேனை பிடிக்கக் காரணாமாக இருக்க முடியும். இதை எல்லாம் செய்ய ஒரு அடையாளம் தேவை என்றான பிறகு, எதனை தேர்ந்தெடுப்பது ? மிகத் துணிச்சலான ஒரு முடிவு. பயத்தை பயத்தின் மூலம் எதிர்கொள்ளுதல். (உளவியலில் இதுவொரு வகையான ட்ரீட்மெண்ட்). படத்தில் மிகமிக அற்புதமாக இது காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக வசனங்கள். காமிக்ஸில் இது அவ்வளவு விஸ்தாரமாக காமிக்கப்படவில்லை என்றாலும், Year Oneல் ஒரு அட்டகாசமான காட்சி வரும். ப்ரூஸ், இதுபற்றிய யோசனையில் இருக்கும் பொழுது, ஜன்னலை உடைத்துக் கொண்டு ஒரு வவ்வால், அவனது தந்தையின் சிலையின் மீது உட்காரும். அதகளமாக வரையப்பட்டிருக்கும்.



இரண்டாவது, குற்றஉணர்வினால் ஒடிந்து போகாமல். அதனையே அடிப்படையாகக் கொண்டு - ஓகே, தனது பெற்றோரின் சாவிற்கு அந்த ஒரு ஆள் மட்டுமே காரணமல்ல, இந்நகரத்தின் சீர்கேடடைந்த மனிதர்களே காரணம் என்ற முடிவிற்கு வருகிறான். 

இந்த முடிவை எடுத்தபின்னால், கன்னாபின்னாவென்று யாரையும் பேட்மேன் கையாளுவதில்லை. அவனாக வகுத்துக் கொண்ட சட்டதிட்டங்கள் உள்ளன. (யாரையும் கொல்வதில்லை என்பது குறித்து நிறைய கருத்துகள் உள்ளன). அந்த சட்ட திட்டங்களின் எல்லைக்கே அவனை இட்டுச் சென்று ஒரு கதாபாத்திரம் உண்டென்றால், அது ஜோக்கர் மட்டுமே.

ஜோக்கர் - ஆலன் மூரின் The Killing Joke ஜோக்கரைப் பற்றிய பின்புலத்தை தெளிவாக விளக்குகிறது. இந்த ஆலன் மூர் என்பவரே, ஒரு அல்டாப் பேர்வழி. V for Vendetta, From hell என்ற பல புகழ்பெற்ற காமிக்ஸ்களை உருவாக்கியவர். இவரது காமிக்ஸ்கள் பலவற்றையும் சற்று கூர்ந்து நோக்கினால், நகரம் - அதனது மனிதர்கள் - அவர்களது சமூகம் குறித்த சிக்கலான தொடர்புகள் குறித்து விவரணைகள் நிறைந்திருக்கும். அவரைப் பற்றிய ஒரு அட்டகாசமான டாகுமென்டரி, The mindscape of Allan moore. ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் தவறவே விடக்கூடாத டாகுமென்டரி இது.




அவர் ஒரு பேட்டியின் போது சொன்னதே "psychologically Batman and the joker are mirror images of each other". 

மற்ற எல்லா கதாபாத்திரங்களை விட ஜோக்கர் மட்டும் ஏன் மிக சிக்கலான ஆள் என்றால், மற்றவர்கள் பணம், அதிகாரம், இத்யாதிகள் என்ற ரீதிலேயே யோசிப்பார்கள். வெகுசிலர், பேட்மேனை தோற்கடித்து அவனைவிட தாங்கள் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முனைவார்கள். ஆனால், ஜோக்கர் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு சிந்திக்கும் ஆள் ஆயிற்றே. அவனுக்கு விளையாட சரிக்கு சமமாக ஒருஆள் தேவை. பேட்மேனின் மொத்த valueகளையும் போகிறபோக்கில் கேள்விக்குள்ளாக்கியது ஜோக்கர் மட்டுமே. இந்த ஒரு காட்சி மட்டுமே போதும் இருவரைம் பற்றி புரிந்து கொள்ள. 



உளவியல் ரீதியாக மிகப்பெருமளவில் பேட்மேன் மீது ஆதிக்கம் செலுத்தியது ஜோக்கர் தான். உறவு சார்ந்த இழப்புகள், வலிகள் என்பதோட மட்டுமல்லாமல், பேட்மேனை போலீசிடம் இருந்து ஓடுமாறு செய்ததும் அவனே (Dark Knight க்ளிமேக்ஸ்). இதுமிக முக்கியமான திருப்பம். பல இழப்புகளை சந்தித்தாலும், எப்படியாவது நகரத்தை சீர் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை - யாருக்காக இதெல்லாம் செய்கிறானோ அவர்களைக் கொண்டே வில்லன் என்றழைக்கப்பட வைப்பது. அவனது identityயே முற்றிலுமாக மாறிப்போகிறது. நோக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. வேறெந்த சூப்பர் ஹீரோவும் இந்தளவிற்கு தாக்குதலுக்கு ஆளானதில்லை. அதனாலேயே பேட்மேன் சூப்பர் ஹீரோ ஸ்தானத்தில் இருந்து நமது மனதுக்கு நெருக்கமான ஆள்போல் மாறிவிடுகிறான். தவிர, தனது இந்த கேரக்டரை மறைப்பதற்காக ப்ரூஸ் வெய்ன் கூட போலித்தனமான பல வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மற்றொரு identity crisis. 


இவ்வளவு வலிமையான - தனது அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, மற்றொரு அடையாளம் ப்ளேபாய்தனமாக பார்க்கப்படுகிறது, தன்னால் பல பேர் உயிரிழப்பது, கோர்டனின் குடும்பத்தாருக்கு ஆபத்து ஏற்படுவது, காதலியின் இறப்பு, டென்ட்யின் இறப்பு, அதைவிட two faceசாக அவனது மனமாற்றம், தாம் ஏதற்காக போராடுகிறோமா அது சிதைந்து விடுமோ என்ற பயம் -  உளவியல் ரீதியிலான தாக்குதலை Dark Knightல் பேட்மன் மீது தொடுத்த ஜோக்கரை விட Dark Knight Risesல் யாரும் பெரிதாக ஏதேனும் செய்ய முடியாம என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உடல்ரீதிலான தாக்குதலாகவே பெருமளவில் இருக்க வாய்ப்புண்டு. இதுவொரு பக்கம் இருந்தாலும், டார்க் நைட், பல emotional conflictsகளை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்திய படம். ரியலிஸ்டிக்தன்மையுடன் கூடிய பல காட்சியமைப்புகள் - Batman beginsல் கூட காமிக்ஸ்தனமான சில சண்டைக்காட்சிகள் இருந்தன, இப்படத்தில் அது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது -  CG திணிப்பு இல்லாமை, எப்பொழுதுமே ஒருவித பதட்டத்தில் பார்வையாளர்களை வைத்திருத்தல் என்று நம்மை முழுவது உள்ளிழுக்குமாறு அப்படம் இருந்தது. காமிக்சை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதை எல்லாம் தாண்டி - The Dark Knight, முற்றிலும் வேறு தளத்தில் இயங்கிய படம். பேட்மேனையும் ஜோக்கரையும் மாஃபியாகளாக யோசித்துப்பார்த்தால், Godfatherக்கு இணையானதொரு படமாக நிச்சயம் டார்க் நைட் இருந்திருக்கும். நான் கட்டியம் கட்டிக் கூறுக்கிறேன் - Dark Kinght Rises உட்பட - இனி காமிக்ஸ் ஹீரோக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் எந்தவொரு படமும் Dark Knight அளவிற்கு வரவே முடியாது. Almost perfect.  அந்த மேஜிக் மீண்டும் Dark Knight Rises படத்தில் நிகழுமா ? 




பி.கு:
  • Batman Unmasked: The Psychology of the Dark Knight, டாகுமெண்டரி டவுன்லோட் செஞ்சாச்சா ? ஒரு தபா பாத்துருங்க. 
  • இப்ப, கருந்தேளின் இந்த பதிவகள இந்த ஆர்டர்ல திரும்ப ஒருக்கா படித்தால் உத்தமம்.
  • வெள்ளியன்று வவ்வால் மனிதனின் இந்த குணாதிசயங்கள மனசுல வெச்சுகிட்டு படத்த பார்க்கும் போது, இன்னும் நல்லா ரசிக்க முடியும் என்பது என் கருத்து. 
  • Facebookல ராஜேஷ் ஷேர் செஞ்சிருந்து...நம்ம இலுமி எழுதியது....
          1. http://illuminati8.blogspot.in/2010/07/batman-begins-revelation.html

          2. http://illuminati8.blogspot.in/2010/07/killing-joker-18.html

          3. http://illuminati8.blogspot.in/2010/08/dark-knight-at-war.html

அட்டகாசம். இதையும் சேர்த்து மொத்தமா படிச்சா - எனக்கே புரியும் போல இருக்கே - அல்லாம் சுளுவா புரியும்.

இந்த பதிவுல இருக்குற அனைத்து விஷயங்களும் ஏறக்குறைய எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.ஆனாலும் இத பதிவா எழுதுறது எனக்கென்ன பெருமையா....கடம.எப்புடியோ பேட்மேன் பத்தி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன். ஒரு முக்கிய புள்ளியா இனி என்னை இந்த உலகம் அங்கீகரிச்சிரும். அடுத்து, அந்த படத்தின் டிக்கட்டை போட்டோ புடிச்சு போடணும். அத வெள்ளிக்கிழம செய்றேன். 


இந்தப் பதிவு, கருந்தேளின் ஸ்வதேஷ் பதிவைப் படித்த போது - அதன் தீம் இசையை கேட்ட மாத்திரத்தில் - நினைவு நாடாக்கள் சுழன்ற பாதிப்பில் எழுதியது. ரஹ்மானின் பாடல்களைத் தவிர தீம் இசை மாதிரியான, அதிகம் கவனம் பெறாத பின்னணியில் மட்டும் ஒலித்த - சிடிகளில் இல்லாத பாடல்களை பற்றி யோசித்தபொழுது, சட்டென்று ஞாபகம் வந்தவைகளை அப்பொழுதே பதிவில் சேர்த்து விட்டேன். அதற்கூறிய விவரனைகளை எழுத சோம்பேறித்தனமாக உணர்ந்ததால், இவ்வளவு தாமதம். எனக்கு மிகப் பிடித்த, ரஹ்மானின் சில இசைக் கோர்ப்புகள். அவ்வளவே. ஒருவேளை இந்த பதிவையோ - விடியோ இணைப்புகளையோ நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றாலும் கூட, மறக்காமல்,

- இப்போதைக்கு இது மூன்றையும் மட்டுமாவது தரவிறக்கிக் (இதுவரை கேட்காமலிருந்து) கேட்டால்.....சந்தோஷம்.

1. Rang de basanti:
மூன்று கைதிகள். இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்கு தூக்கு. ஒவ்வொருவராக தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுபோன்ற உணர்ச்சிமயமான - சோக நிகழ்வுக்கான இசை எவ்வாறு காலங்காலமாக இருக்கும் ? ஒரு வயலின் கதற ஆரம்பிக்கும், "லாலலலலாலா" என்று சோக ரசத்தில் கோரஸ் கேட்க ஆரம்பிக்கும். எப்படியாவது பார்ப்பவர்களை emotional cornering செய்யும் வகையில் இருக்கும். பார்ப்பவர்களும் கண்கள் கலங்க, இதுவல்லவா இசை.....சிலிர்கிறது என்று உணர்ச்சிமாயமாகப் பேசிக் கொண்டிருப்போம்.


ஆனால்.......இந்தத் தூக்குக் கைதிகள் யார் ? பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு....."நேரமாகிவிட்டது...." என்று பகத்சிங்கிடும் சொன்னபொழது, "கொஞ்சம் பொறுங்கள். ஒரு புரட்சிவாதி இன்னொரு புரட்சிவாதியுடன்(லெனின்) உரையாடிக் கொண்டிருக்கிறான்" என்று மிக இயல்பாக பதில் அளித்தவன். இம்மூவரைப் போல, மரணத்தை கண்டு கொஞ்சமும் பயப்படாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ? "I am a man and all that affects mankind concerns me" என்று சொன்னவனின்(பகத் சிங்) மனநிலை எப்படி இருக்கும் ? 23 வயதில் தூக்கில் ஏறிய பகத்சிங் -சுக்தேவ், 22 வயதில் தூக்கில் ஏறிய ராஜகுரு.....இவர்கலெல்லாம் மரணத்தை கண்டு பயப்படக்கூடிய ஆட்களா ?


இவர்கள், தங்களது இறப்பை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலைக்கான இசை எவ்வாறு இருக்கும் ? மேலே சொல்லியது போல மிகச் சுலபமாக சோகமயமான இசையை இசைக்கவிட்டு, பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்யலாம். ஆனால்.....அது முற்றிலும் பார்வையாளர்களின் கோணத்திலே - ஐயோ, இவர்கள் தூக்கில் தொங்கப் போகிறார்களே - தானே இருக்கும்.

இறப்பை வீரமான - கிட்டத்தட்ட ஒரு சாகசமாகக் - கருதும் மனநிலையில் இருப்பவர்களது கண்ணோட்டத்தில் இசைத்தால் ? அதை நீங்களே கேட்டுப் பாருங்கள். எனக்குப் பெரிதாக இசை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.ஆனால்....எனக்கு தெரிந்த வரையில், இதுபோன்ற ஒரு அட்டெம்ப்ட் செய்ய நிச்சயம் அசாத்திய தைரியம் வேண்டும். மிகச் சுலபமான சோகமயமான இசையை இசைப்பதை விடுத்தது, இதுபோன்ற முயற்சியில் இறங்க ரஹ்மானால் மட்டுமே முடியும். 

பார்வையாளர்களின் Point of Viewவில் (POV) இருந்து காண்பிக்கும் உத்தியில் இருந்து மாறுபட்ட விதமாக, கதை - கேமெரா கோணங்கள் என்று இசை வரை, படத்தினுடைய கதாபாத்திரங்களின் தன்மைக்கும் மனநிலைக்கும் ஏற்ப காண்பிப்பது பல "உலக" சினிமாக்களில் இருக்கும் நடைமுறைதான். இசை என்று எடுத்தக் கொண்டால், சமீபமாக - கொரிய மொழி திரைப்படங்களில் இந்த போக்கினை அதிகமாகக் காண முடிகிறது. ரசித்து ஒருவன் கொலை செய்கிறான் என்றால் - அவனது மனநிலைக்கு ஏற்ப இசையமைப்பது - ஒரு சின்ன உதாரணம். 

இந்திய சினிமாக்களில் இந்த மாதிரியான இசை சார்ந்த முயற்சி மிக மிகக் குறைவு. அதிலும், பகத்சிங் போன்ற ஆளுமைகள் தூக்கிலிடப்படும் போது - யாராவது இதுபோன்ற கிதாரின் எகத்தாளமான மீட்டல்கள் (பகத் சிங் முகத்தில் இருக்கும் அந்த நக்கல் + நெஞ்சுரம் கலந்த சிரிப்பை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்), DJying வகையான scratching(3:50ல் ஆரம்பித்து 4:00 வரும் அந்த  கதறல்......oh...man) + ஆர்கெஸ்ட்ட்ரேஸன், ரஹ்மானின் மிகப் பெரிய பலம் இது........இதுபோன்றதொரு ரகளையான இசையை - இந்த மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா..........ஏனென்றால், இவர்களது இறப்பு நம்மை பாதிக்க  வேண்டும். ஆனால் எந்த வகையில் ? சோகமயமாக - இந்த நாடு இவர்களை கைவிட்டு விட்டது, நாடு இருக்கும் நிலை சரியில்லை, லொட்டு லொசுக்கு என்று நம்மை அதைரியப்படுத்தும் விதத்திலா அல்லது என்னவொரு வீரம், எவனாக இருந்தாலும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் வந்துபாரு என்று நம்மை inspire செய்யும் விதத்தில் இருக்க வேண்டுமா ? பகத் சிங்கின் வாழ்வும் நமக்கு அதைத்தானே கூறுகிறது.....அதற்கு இதைத்தவிர ஒரு பொருத்தமான இசையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.நமது தலைமுறைக்கான இசை.கேட்டுப் பாருங்கள்.....இதுவரை கேட்டதில்லை என்றால், u will be hooked forever....


பின்நவீனத்துவம்(Postmodernism என்று தமிழில் சொல்வார்கள்) என்று பல இலக்கியவாதிகள் சொல்லக் கேட்டிருப்போம். இதனை ரஹ்மான் தனது இசையில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த இசை.





2) Bombay:
இதுல என்ன இருக்கு......ஏன் புடிச்சுதுன்னு நானும் பல தடவ யோசிக்கிறேன். ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது. இதுல இருக்கும் அந்த குறுகுறுப்பு கலந்த - simpleness தான் காரணமாக இருக்கு முடியும்.



3) Dil se:
எனக்கு மட்டுமில்லாமல், பலபேரின் இசை கேக்கும் விதத்தையே தலைகீழாக போட்டு திருப்பின ஆல்பம் என்றால் இதுவாகத்தான் இருக்கு முடியும். Soundscape, இந்திய திரையிசை அகராதியில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் - முதல் definition - தில் சே என்று தான் இருக்கு முடியும். 1998. நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன் (மறக்க முடியாத ஆண்டுன்னு எழுதி ராஜேஷை ஸ்பூப் செய்ய ஒரு ஆசை இருந்தாலும், மரியாதை காரணமாக அதனைக் கைவிடுகிறேன்). எனக்கு அன்றும் - இன்றும் இதில் பிடித்த பாடல்கள், சந்தோஷக் கண்ணீரே - என்னுயிரே - தய்யா தய்யா தான். (ஹிந்தி பாடல்களின் வார்த்தை பிரயோகத்தை விட தமிழ் அபராமாக இருந்தாக நான்(னே) நினைகிறேன்). பூங்காற்றிலே.......தூங்கிருவேன். அந்த பாட்டுக்கு ரஹ்மான் தேவையில்லை என்பது என் கருத்து.

அந்த படத்தில், ஷாருக்கும் - மனிஷாவும் லடாகில் இருக்கும் போது, பின்னணியில் "விண்மீன்களைத் தாண்டி வாழும் காதல் இது"ன்னு - ஸ்ரீனிவாஸ்ன்னு நினைகிறேன் - ஒரு தீம் இசை வரும். க்ளைமேக்சில் கூட அதே இசை வரும். இன்றளவும் நினைவில் இருக்கும் தீம் இசை அது. இங்கு ஹிந்தியில் தான் உள்ளது. தமிழ் தேடியவரை கிடைக்கவில்லை.

"இந்த" லிங்க்கில் இருக்கும், 1998 Filmfare awrds நிகழ்ச்சியை பாருங்கள். இந்த விடியோவின் கமென்ட் செக்ஷனில் ஒருவர் சொல்லியிருப்பது போல - நாமினேட் செய்யப்பட்ட மற்ற படங்களின் இசைக்கும் - இதற்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். இதற்குமேல் நான் சொல்லி ஒன்றும் தெரியப் போவதில்லை.



4) Swadesh:
ஏற்கனவே சொன்னது போல இந்தப் பதிவை எழுத கருந்தேள் எழுதிய ஸ்வதேஷ் பதிவு தான் காரணம். குறிப்பாக அதன் இசை. இந்த தீம்.........ஏன் ரஹ்மானை நமது தலைமுறை கொண்டாடுகிறது என்பதற்கு விடை - இது போன்ற இசையை கேட்கும் போது சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

கொசுறு: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில், ஜமாலின் சகோதரன், சலீமின் ரிங்டோன் - இந்த இசைதான் (இணையத்தில் கண்ணில்பட்ட தகவல்)



5) திருடா திருடா:
ரஹ்மானே - தனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த இசைக் கோர்ப்புகளில் திருடா திருடாவும் ஒன்று என்று பல பேட்டிகளில் சொல்லிப் பார்த்திருகிறேன். ஐரோப்பிய பரோக்(Baroque) பாணியிலான இசையில் அட்டகாசமான பல பாடல்கள் இதிலிருக்கும். ஆரம்பத்தில் வரும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - அதில், ஆற்றில்(?) ஜீப் ஒன்று குடை சாய்ந்த மாதிரி இருக்கும். அந்த காட்சியின் ஒளிப்பதிவு......இன்னும் கண்ணுகுள்ளேயே நிற்கிறது. அந்த பாடலின் கிதார் பீட்கள் வார்த்தைகள் என்று.....15 - 16 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பல விஷயங்கள் ஞாபகப்படுத்துகிறது.

அந்த படத்தின் தீம் இசை...முத்து படத்திலும் இது பயன்படுத்தபட்டதாக ஞாபகம்.



6) ஆய்த எழுத்து:
அப்பப்ப இதுபோன்ற இடைச் சொருகலாக அமையும் பாடல்களில் ரஹ்மானை அடிக்க ஆளில்லை. Uber cool.




7) 1947: Earth
இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. பிட்டு பிட்டாக அவ்வப்போது பார்த்ததோடு சரி.ஆனால், இசையை முழுவதும் கேட்டிருக்கிறேன். ஒரு தமிழ் பாடலின் மற்றொரு வெர்ஷன் கூட இதில் உண்டு.




8) Rock star:
படத்தில் மட்டுமே வரும் இசை இது. "Tum ho" என்ற பாடலின் இன்ஸ்ட்ருமெண்ட்டல். எனக்கு கிதார் இசை மிகப் பிடிக்கும் என்பதால், இதில் பாடலுக்கும் இதற்குமான - வித்தியாசம் கலந்த - அந்த rendition , ஏனோ தெரியவில்லை ரொம்ப பிடித்து விட்டது.





9) Meenaxi: A tale of three cities:
இந்திய அளவில் பல முக்கிய ஆட்கள் - கோவிந்த் நிஹிலாணி, ஷ்யாம் பெனகல், M.F.Hussain மாதிரியான ஆட்களுடன் எல்லாம் ரஹ்மான் பணி புரிந்திருக்கிறார்.அதுகுறித்தெல்லாம் யாரும் விரிவாக இதுவரை எழுதி நான் படித்ததில்லை.

ஹுஸைனின் - மீனாக்ஷி - படத்தின் இசை, பல வகையில் தனித்துவமானது. செக் குடியரசின் இசை, ஹைதிராபாத், ராஜஸ்தானிய இசை என்று ஒவ்வொன்றும் அட்டகாசம். ஹோசம் ராம்சே என்ற எகிப்தைச் சேர்ந்த  percussionist(இந்த பெயர் நேம் ட்ராபிங் என்று நினைக்க வேண்டாம் அவரது சில ஆல்பங்களைக் கேட்டிருக்கிறேன்) இதில் பங்காற்றியுள்ளார். உலகளவில் மிகப் பிரபலமான இசை ஆளுமைகளில் ஒருவர். பில்லி கொபாம் மாதிரியான ஆட்களின் வரிசையில் இவரையும் சொல்லலாம். அவரின் தனித்துவம் இந்தப் படத்தின் இசையில் அழகாகத் தெரியும். "ரஹ்மானின் இசை ஆளுமையை யாரும் இன்னும் சரிவர பயன்படுத்தவில்லை" என்று கூறியிருக்கிறார். ரஹ்மான் இவரின் சர்வதேச ஆல்பமான "Rock the tabla"வில் கூட பங்காற்றியுள்ளார்.இதொன்றும் சாதாரணமான ஆல்பம் கிடையாது. உலக இசையின் பல பெருந்தலைகள் இதில் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இப்போது, மீனாக்ஷிக்கு வருவோம். என்னவொரு பாடல்கள்.......யப்பா....ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கும் Dhuan Dhuan பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள்....மிக சர்வசாதாரனமாக பல அடுக்குகளுக்கு தாவிச் செல்லும் இசையைக் கேக்கலாம்.அற்புதம் இந்தப் பாடல். இந்தப் படத்தின் இசைக்கு ரஹ்மான் சம்பளமாகப் பெற்றது - ஹுஸைன் தன் கைப்பட பிரத்தியேகமாக வரைந்து கொடுத்த ஒரு ஓவியம்.

இந்த தீம் இசை - சைக்கிள் பெல் சத்தத்தை வைத்து "இசையமைக்கப்பட்டது". வளையல் ஓசை, சைக்கிள் பெல், புறா பறக்கும் ஓசை என்று பலவற்றையும் இசையாக்குவதில் ரஹ்மான் வல்லவர். எனக்கு இதுபோன்ற - வழக்கமான விஷயங்களில் இருந்து மாறுபட்ட அட்டெம்ப்ட்கள் என்றுமே பிடித்தமானவைகள்.


இன்று பல கடவுள்கள் நிறைய "அற்புதங்களை" நிகழ்த்தித்தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. Survival of the fittest. இல்லையென்றால், சக்திமிக்கதொரு வேறொரு கடவுளைத் தேடி மக்கள் சென்று விடுவர். மூலவர்களுக்கே இந்த கதி என்றால் பூசாரிகளுக்கு? காற்றிலிருந்து கோல்ட் வாட்ச் வரவழைத்த சாய்பாபா முதல் நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் பேர்வழிகள் வரை பல உதாரணங்களைக் கூறலாம். 

அந்தரத்தில் மிதக்க வைப்பேன் என்று யாராவது சொன்னால், அறிவியலை நம்பும் ஆட்கள், இதைப் பற்றி சட்டை செய்யக்கூட மாட்டார்கள். காரணம், மிக எளிது. அந்தரத்தில் மிதப்பது என்றால் - புவியீர்ப்பு விசை இருப்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதற்கெதிராக செயல்பட இன்னென்ன வழிமுறைகள் உள்ளன எனபது நமக்குத் தெரியும். ஆக, ஒரு நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைக்கெதிராக செயல்படும் போது - மிக அதிகமான சான்றுகள், நிரூபணங்கள் தேவை. ஒருவரும் இதுவரை உருப்படியான ஒரு நிரூபனத்தையும் தந்ததில்லை(ஏறக்குறைய எல்லா அற்புதங்களின் போதும் இதுதான் வாடிக்கை). ஆகவே இதுபோன்றதொரு action - based வழிமுறையை நம்பி இவர்கள் இறங்கியதால், அறிவியலின் பணி சுலபமாகப் போயிற்று. 

இதுவே ஒரு தனிப்பட்ட அனுபவமாக முன்னிறுத்தப்படும் போது?  இதுதான் மிகப் பெரிய சிக்கலே.எப்படியோ பல பேர் நம்புகின்ற அற்புதம் போன்ற விஷயங்கள் மெல்ல மெல்ல படர்ந்து குழுக்கள் சார்ந்த நம்பிக்கையாக, ஒரு மாபெரும் குமிழியாக உருவெடுக்கும் போதெல்லாம் அறிவியலின் துணை கொண்டு பல பேர் அக்குமிழியை உடைத்ததிருக்கின்றனர். ஆனால், தனிப்பட்ட அனுபவங்கள் என்று வரும் பொழுது, அறிவியல் அதை விளக்க ஒரு காலத்தில் சிரமப்பட்டது உண்மை. ஏனென்றால் இது முழுக்க முழக்க மூளை சார்ந்த விஷயம். முன்னர் எல்லாம் இந்தளவுக்கு மூளையின் நடவடிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யும் வசதிகள் இல்லை. கடந்த இருபது வருடங்களாக, அளப்பரிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்தக் குறை தீர்ந்தது.சக்திவாய்ந்த எலெக்ட்ரான் மைக்ரோஸ்கொப்களை பயன்படுத்தினால் கூட, அது உமிழும் ஒளியானது மூளையை ஆராய இடையுறாக இருந்தததால், புறுஊதா கதிர்கள் கொண்டு இயங்கும் மிக மிக உன்னிப்பாக மூளையை ஆராயும் அளவிற்கு உபகரணங்கள் வந்து விட்டன. And the best part of science is, போதும் என்றே நினைக்காமல் இன்னும் இன்னும் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது. 
------------------------------- 
“நேற்றிரவு கடவுள்(irrespective of religion) என்னுடன் அமர்ந்து Last temptation of jesus christ படம் பார்த்தார்”. நான் இதுபோன்றதொரு ஸ்டேட்மென்ட் விடுகிறேன். இதை எப்படி இல்லை என்று மறுப்பீர்கள் ? (மறுபடியும் ரஸ்ஸிலின் teapot உதாரணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்). எத்தனை பேர் இதனை நம்புவார்கள் அல்லது குறைந்தபட்சம் சீரியசாகவாவது எடுத்துக் கொள்ள முயல்வார்கள். (இதே போன்றதொரு அறிக்கையை முக்கிய இடத்தில இருக்கும் ஒரு பிஷப் வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது எத்தனை பேர் இதனை நம்புவார்கள்? எதனடிப்படையில் இவர்களது நம்பிக்கை மாறும் ? இந்த கோணத்தை வைத்தே பல பதிவுகள் எழுதலாம்)

மேல நான் சொன்ன பிரசன்னத்தை நம்பாதவர்கள் - நம்புகிறவர்கள், என்ற இரு பிரிவினரையும் தாண்டி, நிச்சயம் ஒரு சாரர் எனது கூற்றை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுவார்கள் (கவனிக்க: சங்கடப்படுவார்கள்). கடவுள் குறித்த நம்பிக்கை இருந்தாலும், ஏன் இவர்கள் இதனை ஏற்க சங்கடப்பட வேண்டும் ? அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஓரத்தில் – either knowingly or unknowingly - இது சாத்தியமில்லை என்று இதுகுறித்து சந்தேகத்தை (அ) தெளிவை இவர்களிடம் எழுப்பியது எதாக இருக்க முடியும் ?  

இந்த கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டே இருங்கள். கேள்வியை அப்படியே freeze செய்துவிட்டு அடுத்த பதிவில் தொடருவோம். இப்பொழுது கொஞ்சம் மூளையப் பற்றிப் பார்ப்போம். இது மிக மிக முக்கியம். படிக்க அசதியாகக் கூட இருக்கலாம். ஆனால், மூளை தூண்டுகிறது - மூளையில் பதிகிறது - அதை செய்கிறது இதை செய்கிறது என்று வெறும் வாயில் முழம் போடுவதை விட, தகுந்த தகவல்களுடன் பகிர்ந்தால் விஷயங்களை சொல்ல ஏதுவாக இருக்கும் என்ற ஒரே காரணம் தான்.
--------------------------- 
உடம்பின் மொத்த எடையில் வெறும் 2%. ஆனால் இயங்க, 25% சக்தியை எடுத்துக் கொள்கிறது. மூளை. இயற்கையின் உச்சகட்ட டிசைன் இதுதான் எனலாம் - எந்த உயிரினமாக இருந்தாலும் சரி. ஒருசில வரிகளில் இதன் மகத்துவத்தை விளக்குவது கடினம். நீங்களே, இதை படிப்பதை நிறுத்திவிட்டு....................சிந்தியுங்கள்.  

இன்றளவும் விஞ்ஞானிகளை அதிசயப்பட வைக்கும், மூளையின் இரண்டு அம்சங்கள், அதன் கணிக்க முடியாதன்மை (unpredictability) மற்றும் நெகிழ்வுத்தன்மை(elasticity). ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி அது ரியாக்ட் செய்கிறது என்று உறுதியாக அறுதியிட்டு கூறவியலாது. ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஏற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஒவ்வொரு வகையான செயலுக்கும் ஒரு குறிப்பட்ட பகுதியை மூளையே நியமித்து வைத்திருக்கிறது.

மூளையை, அதன் செயல்பாட்டை வைத்து மூன்று பகுதியாக பிரித்திருக்கின்றனர். 
  • Hind brain
  • Limbic system
  • Neocortex
 அதன் துணைப் பிரிவுகளை படத்தில் காணலாம். 
தகவல்களை திரட்டியது இங்கிருந்து.               படம் எனது வேலை

Source: Click here

----------------------------------------------------------

நாம் நம் புலன்களின் வழியாக உள்வாங்கும் விஷயங்களை எப்படி மூளை தன்னகத்தே பதிவு செய்யும் ? சுருக்கமாக ஒரே பதிலில் சொன்னால், நியூரான்கள். மூளை + முதுகுத் தண்டு என்று மொத்தமான நரம்பு மண்டலம் அனைத்திருக்கும் மிக மிக அடிப்படையான விஷயம், இந்த நியூரான்கள் தான். Nothing but nerve cells. இந்த செல், தபால்காரர்கள் போல. உடம்பு முழுமைக்குமான செய்திகளை மூளையிலிருந்து அதற்குரிய இடங்களுக்கும் & vice - versa, எடுத்து செல்வதுதான் இதன் வேலை.


ஒரு ஸினாரியோவைப் பார்ப்போம். க்ளீன் ஸ்லேட்டாக இவ்விஷயத்தை அணுகினால் மட்டுமே விளக்க சுலபமாக இருக்கும். உங்கள் ரீடரில் இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள். உங்கள் கண் பார்க்கிறது. உடனே கண், மின் அலைகளை(Electrical impulses) மூளைக்கு அனுப்பும். என்னவென்று ? இதுபோல கொழந்தையின் புதுபதிவு ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. கண் அனுப்பும் electrical impulsesகளை மூளைக்கு கடத்திச் செல்ல ஒரு ஆள் வேண்டாமா ? அதுதான் நியூரான்கள். ஒருவித ரிலே ரேஸ் மாதிரி தான் இந்த நிகழ்வுகள். ஒரு நியூரான் to மற்றொரு நியூரான் to அடுத்த நியூரான் to அடுத்த நியூரான் என்று இந்த செய்தி போகும். சரி, ஒரு நியூரானும் மற்றொரு நியூரானும் எப்படி அந்த செய்தியை பரிமாறிக்கொள்ளளும்? Neurotransmitters. இந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் தான், பார் உன் காலில் முள் குத்துகிறது, உனக்கு பிடித்த பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது போன்ற நாம் முழுமையாக உணரும் விஷயங்கள் முதல், இதயம் - நுரையிரல் என்று அதது அதனதன் வேலையைச் செய்யவென்று - இதுபோல நம் உணராமலே நடக்கும் விஷயங்கள் உட்பட - அனைத்திருக்கும் காரணம்.
Source: Click here
மேலிருக்கும் படத்தைப் கொஞ்சம் சற்று பொறுமையாக கவனித்தாலே சுலபமாக புரிந்து விடும். ஒரு நியூரான் மற்றொரு நியூரானுக்கு (Axonகள் வழியாக) செய்தியை அனுப்புகிறது. செய்தியை வேர் போன்ற அமைப்பின்(Axon Terminal) மூலமாக பரிமாறிக் கொள்ளும். அதனை ஜூம் செய்து தனியாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு வேர் மற்றொரு வேரை தொடும் இடத்தில் தான் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் வெளியேறும். வெளியேறியவற்றை வாங்கிக் கொள்ள ஏதுவாக, ரிஸப்டார்கள்(Receptors) தயாராக இருக்கும். செய்தியை வாங்கிக் கொண்டு, இந்த ரிஸப்டார்கள் மறுபடியும் மின்வேதியில் வினைகளுக்கு(Electrochemical reaction) உட்பட்டு, மறுபடியும் வேரைச் சென்றடையும். 


இதில் என்ன முக்கியாமான விஷயம் என்றால், ஒவ்வொரு விஷயத்திற்கும் மூளை தனியாக நியூரான்கள் வைத்திருக்கின்றன. கொழந்தையின் பதிவா, மொக்கை - கருந்தேளின் பதிவா, படிக்கலாம் - பாலாவின் பதிவா, அவர் எழுதுவதே இல்லையே, என்று முடிவு செய்யும். பதிவு என்பது ஒரே விஷயம் தான் அதில் துணைப் பிரிவுகளாக இது பிடித்தது, இது பிடிக்காதது, இது தேவையில்லை என்று ஏற்கனவே பிரித்து வைத்திருந்த விஷயத்தை மறுபடியும் கோழி கிளறுவது போல கிளறிப் பார்க்கும். இந்த ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும், பிடித்த பதிவர் - மொக்க பதிவர் - பிடிக்காத பதிவர் - காமெடிப் பதிவர், அவரவரது பதிவுகள் என்று - தனித்தனியாக நியூரான்கள் இருக்கின்றன(Specialised neurons). மூளை இந்த பிரிக்கும் வேலையை கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேகத்தில் நடத்தி முடிக்கும். படிக்க ஆரம்பிக்கும் போதே இதை மூளை முடிவு செய்துவிடும். நீங்கள் முன்முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருக்கலாம். ஆனால், மன்னிக்க. மூளை நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அதனை செய்து முடித்துவிடும். ஒருவேளை படித்த பிறகு முடிவில் சிறிது மாறுதல் ஏற்படலாம். அப்பொழுது மூளை அதற்கேற்றவாரு சில மாறுதல்களை செய்துகொள்ளும். ஒருவேளை தொடர்ந்து நீங்கள், முன்னர் மொக்கை என்று நினைத்திருந்த பதிவை - நல்லாயிருக்கே என்று ரசிக்க தொடங்கினால், அதையும் சேமித்து வைத்துக் கொள்ளும். ஆனால், ஒரு போதும், அந்த பழைய - இதுமொக்கை - நினைப்பு மறையாது அல்லது மறைவது மிகக் கடினம்.


மூளையியை மடல்களை(lobe), மடிப்புகள் போன்று இருக்குமே - அதன் செயல்பாட்டை வைத்து நான்கு பகுதிகளாக பிரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. (கீழே படத்தில் உள்ளது). 
ஆக, பதிவு -> எழுத்து -> அப்படி என்றால் communication, அதற்குரிய மூளையின் பகுதி முதலில் தூண்டப்படும்.Temporal lobe will be initiated.  அதே சமயத்தில் இந்தப் பதிவைப் படிக்கலாமா வேண்டாமா - யார் எழுதியது - இவர் இப்பொழுது எழுதுவதே இல்லையே, என்று எல்லாவற்றையும் சடுதியில் மூளை முடிவு செய்து(Frontal lobe) அததற்குரிய நியூரான்களை தூண்டிவிடும்.  எத்தனை ஒரு காம்ப்ளெக்சான - அற்புதம் நிறைந்த உறுப்பு, நமது மூளை.

இரண்டு நியூரானுக்கு இடையே செய்தியை பரிமாறும் ட்ரான்ஸ்மிட்டர்கள் குறித்து மேலே குறிப்பிட்டிருந்ததை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.  நமது உடம்பில் ஏறத்தாழ 40 - 100 வகையான நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உள்ளன.இதை மூன்று விரிவான பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அதிலொன்று தான், Biogenic amine neurotransmitters. இதன்கீழ் வரும் முக்கிய நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள்  
  • Serotonin
  • Norepinephrine
  • Epinephrine
  • Dopamine
  • Histamine
  • Acetylcholine 
ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதில் ஒன்றான டொபமைன் தான் பல அதிமுக்கிய விஷயங்களுக்கு காரணம். அது என்னென்ன என்பது அடுத்த பதிவில்.....

- கடவுள்களும் மதங்களும் geneகளின் சேட்டையா - 3

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே, ஒரு பீங்கான் தேநீர்க் கோப்பை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் எவராலும் அக்கூற்றை தவறென்று நிரூபிக்க முடியாது -  நமது சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் கூட கண்டறிய முடியாத அளவிற்கு சிறிய கோப்பை அது என்ற வார்த்தைகளை நா எனது கூற்றில் கவனமாக சேர்த்திருந்தால் ஒழிய. சரி, யாராலும் இக்கூற்றை தவறென்று நிரூபிக்க இயலவில்லையே என்று தொடர்ந்து இதை சொல்லிக் கொண்டிருந்தால், அப்படியொரு கோப்பை இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதே கூட நமது பகுத்தறிவின்படி சகிக்கவே முடியாத ஒரு அனுமானமாகத் தானே இருக்க முடியும். ஒருவேளை, எப்படியானாலும் - இதுபோன்றதொரு தேநீர்க் கோப்பையின் இருப்பை பழங்கால நூல்கள் ஊர்ஜிதப்படுத்தியிருந்தால், ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் போதும் இந்தக் கூற்று புனிதம் பொருந்திய உண்மையாக போதிக்கப்பட்டிருந்தால், பள்ளிக் குழந்தைகளின் மனதில் தொடர்ச்சியாக இவ்விஷயம் கற்பிக்கப்பட்டிருந்தால், அறிவு எழுச்சி மிக்கதொரு காலகட்டத்தில் இவ்வாறான கோப்பையின் இருப்பை சந்தேகிப்பதே கூட மனப்பிறழ்வின் அடையாளமாகவும், சந்தேகிப்பவர் மனநல மருத்துவரின் கவன ஈர்ப்புக்கும் ஆளாக நேரிடும்.

மேலிருக்கும் வார்த்தைகள் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ் பெற்ற "Russel's Teapot" என்ற ஒப்புமை ஆகும்.  
Nobody can prove that there is not between the Earth and Mars a china teapot revolving in an elliptical orbit, but nobody thinks this sufficiently likely to be taken into account in practice. I think the Christian God just as unlikely. 
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விழுந்த முதல் பொறி, நெருப்பினுடையதே. நெருப்பு - perhaps the greatest discovery of mankind. நெருப்பின் கண்டுபிடிப்பு தாமதப்பட்டுப் போயிருந்தால், பல நிகழ்வுகள் தள்ளிப் போயிருக்கலாம். யார் கண்டது. சாப்பிடும் பொருட்களை அதில் வாட்டுதல்-இருள்,குளிரை சமாளித்தல்-ஆயுதம் செய்யவென்று பல அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு நெருப்பே பிரதானம். அதனினும் முக்கியமாக ஒரு நிகழ்வை-அட, கற்களை உரசினால் டக்கென்று பொறி வருகிறதே-தன்வசப்படுத்த முடிந்த பெருமை உளவியல் ரீதியாக மிகப் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். அதனைத் தொடர்ந்து புலம் பெயர்தல் - குழுக்கள் உருவாகுதல் என்று ஆரம்பித்து, படிப்படியான மனித இன வளர்ச்சியின் சுழற்சி குறித்து ஆறாம் வகுப்பிலேயே படித்திருப்போம்(திருக்க வேண்டும்). 

மனித இனம் அதன் வளர்ச்சியின் ஓட்டத்தில், பல புதிய விஷயங்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த புலம்பெயர்வுகள் இருந்தன. ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். அபாரமான சிந்திக்கும் திறன் கொஞ்ச கொஞ்சமாக வளர ஆரம்பித்தது இதுபோன்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே.இதை ஏதோவொரு தேவ தூதரோ வேற்றுகிரகவாசியோ வந்து நிகழ்த்திவிட்டு செல்லவில்லை.முழுக்க முழக்க பரிணாம வளர்ச்சியின் விளைவே இது.சுமார் 3,00,000 கிமுவின் போதே நெருப்பு பரவலாக உபயோகத்தில் இருந்தது என்று பல ஆராய்ச்சிளார்கள் கூறுகின்றனர். ஆக, அன்று தொடங்கி எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் - எத்தனை விஷயங்களை மனித இனம் கடந்து வந்திருக்கும். எத்தனை புதிய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணை புரிந்தது, Adaptation - சூழ்நிலைக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன். இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திற்கும் உண்டு, ஒரு செல் உயிரி முதல் பல செல் உயிரினம் வரை. இந்த தகவமைக்கும் பண்பே மனித இனத்தின் நடவடிக்கை சார்ந்த வளர்ச்சிக்கு(behavioral evolution) முக்கிய காரணி.அன்று நிகழ்ந்த பல உளவியல் சார்ந்த மாற்றங்கள், இன்றளவும் நமது ஜீன்களில் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

பல மானுடவியளாலர்களின கூற்றப்படி, மனித இனம் குழுக்களாக வாழ ஆரம்பித்து ஒரு மாதிரியான வாழ்க்கை முறைக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்ட பின்தான் சடங்குகள் - அது சார்ந்த கடவுள்கள் என்ற விஷயங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த சடங்குகளுக்கும் கடவுள்களுக்கும் பின்னணியில் இருந்தது பயம், பயம் மட்டுமே. Fear of the unknown. பெரும்பாலும் இயற்கை நிகழ்வுகள் குறித்த பயம் தான் முழுமுதல் காரணம். பின்னர் விலங்குகள். சில சடங்குகள் செய்தால் இதிலிருந்து தப்பி விடலாம் என்று ஆதி மனிதர்கள் ஆரம்பித்த விஷயங்கள் தான் மதம், அதற்குறிய சடங்குகள் என்று ஒரு வடிவெடுக்க வழிவகுத்தது. இயற்கை குறித்த பயம், மிரட்சி என்றால் ஆதி காலத்தில் என்னவாக இருந்திருக்க முடியும்? பல விஷயங்கள் இருந்தாலும், முதலில் சூரியன் குறித்த பயமே பிரதானமாக இருந்திருக்கலாம். என்னடா இது, இதனை ஏறெடுத்துக் கூட பல சமயங்களில் பார்க்க முடியவில்லையே - தோன்றுகிறது - மறைகிறது - மறுபடியும் தோன்றுகிறது என்று, இந்த சுழற்சி ஆதி மனிதர்களுக்கு புதிராகவே இருந்திருக்கும். இந்த தினசரி நடவடிக்கைகளுக்கு அவர்கள் பழகியிருக்கும்பொழுது, கிரகணங்கள் ஏற்படும் காலங்களை, குறிப்பாக சூரிய கிரகணம் - நினைத்துப் பார்ப்போம். ஆதி மூளையில் அது எத்தகையதொரு பீதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நிமிடக் கணக்கில் நீடித்த கிரகணங்கள் நிச்சயம் பெரும் பயத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக மின்னல் - இடி. இன்றுவரை பலரையும் பயமுறுத்தி வரும் இவ்விஷயங்கள், அக்காலகட்டத்தில் மிகுந்த பயத்திற்குரியதாய் இருந்திருக்கும் என்பது தெளிவு. ஆக, சூரியன், வானம் - அது சார்ந்த நிகழ்வுகள் தொன்றுதொட்டே மனிதர்களுக்கு புதிர் நிறைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 
இதில் இன்னொன்றை கவனித்தோமானால், உலகின் பெரும்பாலான மதங்களின் கடவுள்கள், வானம் - வெளி (space) சார்ந்த ஒன்றிலிருந்தே விவரிக்கபட்டிருப்பர். கடவுள் தோன்றினார் என்ற யாராவது சொன்னால், அனிச்சையாக பல பேர்களின் கழுத்து மேல் நோக்கியே திரும்பும். கடவுள் தோன்றினார் - பிரசன்னமானார் என்பதே கூட வெளி சார்ந்த ஒரு விவரிப்பு தானே.
இந்த வானம் - வெளி சார்ந்த விஷயங்கள் மீது ஆதி மனிதனுக்கு இருந்த தீராவேட்கையை அவர்களது மேலிருந்து ஒளி இறங்குவது போலவோ,அமானுஷ்ய உருவங்கள் இருப்பது போலவோ வரைந்த(?) அல்லது செதுக்கிய குகை ஓவியங்கள் - சுவர் சித்திரங்கள் - சிற்ப வேலைகள் போன்றவைகளிலிருந்து நாம் மிகச் சுலபமாக உணரலாம். எப்பொழுதுமே வானம் அவனுக்கு எட்டா தொலைவு தான். மலை - கடல் - காடு என்று எல்லாவற்றுடனும் அவனுக்கு ஒரு physical contact இருந்தது. ஆனால், வானத்துடன் மட்டும், mere psychological contact. 

ஒருபுறம் பயம் இருந்தாலும், வானம் -> வானியல் சார்ந்த நிகழ்வுகளை எவ்வடிவிலாவது பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலும் வளரத் தொடங்கியது. கி.பி.15,000 போன்ற காலகட்டத்திலேயே நிலவின் வளர்பிறை - தேய்பிறை சுழற்சியினை (lunar calendar) வரைந்து வைத்துள்ளனர். Stonehenge மாதிரியான விஷயங்கள் நிறுவப்பட்டு வந்தன. சில கட்டுமானங்களின் பயன் தெரியாவிட்டாலும், பெரும்பாலும் இதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் நட்சத்திரங்கள், சூரியன், நிலவு போன்றவைகளின் இடங்களை - திசையை கண்டறியவே (sort of a calendar) கட்டப்பட்டது (உம். நாஸ்கா லைன்ஸ்). தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், வானியல் நிகழ்வுகள் கூர்மையாக கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஆவணப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்தே வெகு சீராக ஏதோவொரு வகையில் வான்வெளியை கூர்ந்து நோக்கும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. 

ஆனால், ஒருகட்டத்தில் வானியல் நிகழ்வுகளை தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் விஷயமும் நடைமுறைக்கு வந்தது (Astrology). ஒருசில பேர் அறிவியல் ரீதியாக இவ்விஷயங்களை அணுக முற்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு கடும் மழை, புயல், வெள்ளம, எரி நட்சத்திரம் போன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்து பயம் இருந்தபடியால், சடங்குகள் ரீதியிலான வழிமுறையே அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. இந்த சடங்குகளைச் செய்தால், இதிலிருந்து தப்பிக்கலாம் எனும் போது, சர்வ நிச்சயமாக அந்த வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தவறோ - வியப்போ இல்லை. Emergency exit. 

இந்த இயற்கை - வானியல் குறித்த நிகழ்வுகளை அக்காலகட்டத்தில் எவ்வாறு கையாண்டனர் என்பது மிக மிக முக்கியமானதொரு விஷயம். காரணம், இதன் பின்னணியில் மதம் பெரும் பங்காற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
  • இதுகுறித்த மிக முக்கியமானதொரு கட்டுரை 1795ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுள்ளது. The History of Astronomy by Adam Smith. 
  • யார் இந்த ஆடம் ஸ்மித் ? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, 18ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு சமூக தத்துவியலாளர். 
  • Father of economics என்று பலர் இவரை அழைக்கின்றனர். அவரின் இந்தக் கட்டுரை மிக உன்னிப்பாக - வானியல் சார்ந்த மூட பழக்கங்களையும் மனிதர்களிடம் அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெகுவாக பதிவு செய்திருக்கிறது.
  • அவர் எதனடிப்படையில் இவ்விஷயத்தை அணுகினார் எனபது குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மிகச் சிறந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை இதிலிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். 
  • இவரது புகழ் பெற்ற மற்றொரு புத்தகம் குறித்து - The Wealth of nations - எகனாமிக்ஸ் படித்த நண்பர்கள் பின்னுட்டத்தில் விவரித்தால் நல்லது. ஆனால், தெரிந்தோ - தெரியாமலோ அப்புத்தகத்தில் பல கேபிட்டலிச கருத்துகள் இறைந்துகிடப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் பொருட்டே Father of capitalism என்றழைக்கப்படுபவர்.

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல, அறிவியலின் அளப்பரிய வளர்ச்சியால் மதம் – கடவுள் குறித்து பார்வைகள் முற்றிலும் மாறிப் போனது. வெளி - வளி மண்டலம் - சூரியன் - அண்டம் போன்றவைகள் பற்றிய நமது பார்வை விரிவடைய விரிவடைய, அதன் மர்மங்கள் - சூட்சமங்கள்  - பிரமாண்டம் ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது (ஆனால், இன்னும் அதில் நாம் முழுமையடவில்லை. முடியுமா என்பதும் கேள்விக்குறியே).அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவந்த போதிலும், மனித மூளையில் அளப்பரிய அளவிற்கான radical change ஏற்பட வழிவகுத்த போதிலும், இன்னும் பல வகைகளில் மதங்களின் பெயரால் சில (போலி)நம்பிக்கைகள் உலா வந்துகொண்டே தான் இருக்கின்றன. சுருக்கமாக இதுபோன்றவைகளை "அற்புதங்கள்" என்று அதனை நம்புகிறவர்கள் அழைக்கிறார்கள். 


இதை அவர்கள் நம்புவது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், அவர்கள் நம்பும் விஷயங்களை அறிவியல் எப்படி பார்க்கிறது என்பது குறித்து பல நாட்களாக எழுத நினைத்ததன் விளைவே இந்த மிகச் சிறிய முயற்சி. Everyone will(should) have their own ideology. அதுபோல எனக்கிருக்கும் ஐடியாலஜியின் அடிப்படையில் இவ்விஷயங்களை நான் எப்படி பார்க்கிறேனோ அதை அப்படியே இங்கே பகிர்கிறேன். That's it. 

இதற்கு குறிப்புகள் எடுக்க உதவிய நூல்கள், டாகுமென்டரிகள் பற்றிய பட்டியலை(ஹி..ஹி..) கடைசியாக வெளியிடுகிறேன். அதேபோல் தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற முன்முடிவுகளுக்கு இப்பொழுதே வர வேண்டாம். சற்றே அடுத்த பதிவு வரை பொறுக்கவும்