ப்ளூஸ் இசையில் மதங்களின் தாக்கம் மிகமிக முக்கியமானது.ஆப்ரிக்க அடிமைகளின் இசையாகவே ப்ளூஸ் வளர்ந்ததினால், ஆரம்ப காலங்களில் ஆப்ரிக்க கடவுள்கள், சடங்குகள் குறித்த பல பாடல்கள் பாடப் பெற்றன.தங்களது நாட்டின் மாந்தரீக விஷயங்களையும் – உதாரணமாக: Hoodoo Magic – அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தியதோட மட்டுமல்லாமல்,பாடல்களிலும் அவற்றை வெளிப்படுத்தினர்.இதுபோன்ற விஷயங்கள் அவர்களது கிறிஸ்தவ எஜமானர்களையும் சர்ச்களையும் பெரிதும் கலக்கமுற செய்தது,மிக முக்கியமாக ஒருவிஷயத்திற்காக.உணர்வுப்பூர்வமான பழைய விஷயங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தால்,எங்கே கலகத்திற்கு அது வழிவகுத்து விடுமோ என்ற பயம் தான்.இதனை எப்படித் தடுப்பது ? பாடல்களை தடை செய்வது, தணிக்கை செய்வது,இன்ன வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது போன்றவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். நம்மவர்கள் சளைத்தவர்களா...இதுபோன்ற அடக்குமுறையால் நிகழ்ந்த நன்மை,பல குறியீடுகளான விஷயங்களை(Metaphor) பாடல்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். வார்த்தைகளை மௌனமாக்கி இசையின் மூலமாகவே எல்லாவற்றையும் வெளிப்படுத்த முயன்றனர்.ஆனாலும், மனதின் அடியாழத்தில் தேங்கியிருந்த தங்கள் நாட்டின் விஷயங்களை,ஏன் மாந்தரீகம் போன்றவற்றைக் கூட, விடாமல், தொடர்ந்து பல பாடல்களில் பாடி வந்தனர். இங்குதான் மற்றொரு முக்கிய நபர் வருகிறார், சாத்தான்.

கிறித்தவ மதத்திற்கும் சாத்தானிற்கும் உள்ள “பகை” நாம் அனைவரும் அறிந்ததே.தவிர, சாத்தன் போன்ற ஆட்கள் ஆப்ரிக்க வரலாற்றிலும் உண்டு(எந்த மதத்தில் - நாட்டில் தான் இல்லை). அடிமையாயிருந்த ஆப்ரிகர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.சாத்தானை சபிப்பது, அதன் கொடூரங்களை சாடுவது போன்ற சாக்கில் தன் எஜாமானர்களை குத்திக் காட்ட, கேலி பேச தொடங்கினர்.

The Devil is mad & I’m glad 
He lost the soul he thought he had

இந்த பாடல் வெறும் சாத்தனை மட்டுமா குறிக்கிறது? நாட்கள் செல்லச் செல்ல, இந்த சாத்தானை தங்களுது மனநிலையினை பிரதிபலிக்கவும்,பெண்களை குறிக்கவும்,உலக வாழக்கையின் அவலங்களை குறிக்கவும் பயன்படுத்தலாயினர்.இதில் இன்னொரு முக்கிய விஷயம்,கடவுள் எதிர்ப்பாளர்கள் கூட பின்னாளில் ப்ளூஸில் வரும் நாத்திக கருத்துகள் கொண்ட பாடல்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.




ப்ளூஸ் இசை- ஏன் கலை சார்ந்த பல விஷயங்களை பொறுத்த வரையிலேயே ஆன்மாவை சாத்தானிற்கு விற்றேன் (Sold my soul to the devil) என்ற சொற்றொடர் மிக முக்கியமானது.9ஆம் நூற்றாண்டு முதலே இந்தப் பதம் நடைமுறையில் இருந்துள்ளது.மனிதசக்திக்கு மீறிய ஆற்றல் இருந்ததாக - எந்த துறையானாலும் – நம்பப்படும் ஆட்கள் நிறைய பேர், வயது,செல்வம்,ஏதாவது கலை நுணுக்கம போன்ற விஷயங்களில் மிதமிஞ்சிய மேதமை வேண்டி,சாத்தானிடம் தங்கள் ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அந்த நுணுக்கங்களை பெற்றுக் கொண்டனர் என்பது புராணம்(இங்கே பார்க்கவும்).

பல ஐரோப்பிய இசைக் கலைஞர்கள், இது போன்ற ஆன்மா அற்றவர்கள் என்று சொல்கின்றனர்.....அவர்களே கூட சொல்லிக் கொண்டனர்.இது குறித்து சோனட்டா இசைக் கோர்ப்புக்கள் (இங்கே கேளுங்கள்.17நிமிடம்)கூட இயற்றியுள்ளனர். இத்தாலியின் மிகப் புகழ் பெற்ற வயலினிஸ்ட் – நிக்கலோ பாகினி மற்றொரு உதாரணம். ப்ளூஸ் இசைசை பொறுத்த வரை இந்தச் சொற்றொடர்,முதல் முதலாக அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டது, Clara Smith என்பவர் 1924 ஆண்டு பாடிய பாடலான "Done, Sold My Soul To the Devil" என்பதுதான்.பின்னர், இந்தப் பதத்தை பெருமளவில் பயன்படுத்தியவர் – Robert Johnson தான்(இவரைப் பற்றி – ஆளுமை பதிவில் நிறைய பார்ப்போம்). அமெரிக்காவின் Highway 61 – 49 என்ற மிசிஸிபி மாகாணத்தில் இருக்கும் (Bob Dylanன் மிகப் புகழ்பெற்ற Highway 61 – Revisited தொகுப்பு ஞாபகம் வருகிறதா?) ஹைவே ரோட்டில் ஓர் இரவில், சாத்தானை தான் சந்தித்து, தனது ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அற்புதமான கிடார் வாசிக்கும் திறனை கைவரப்பெற்றதாக அவரே கூறிக் கொண்டார்(அவரது ஒரு பாடலை கீழே கொடுத்துள்ளேன்).




ப்ளூஸ் இசையை பொறுத்த வரை, அதனை போருக்கு(Civil War) முந்தைய – பிந்தைய என்றே அநேக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர். தவிர, முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ப்ளூஸ் பல்வேறு பரிமாணங்களை எடுத்தது. அதற்கெல்லாம் வித்திட்டது Gospel Music என்ற அழைக்கபட்ட சர்ச் பாடல்கள். அமெரிக்காவில் 18ஆம் நூற்றாண்டு முதலே ஆப்ரிகர்களுக்கென்று தனியாக சர்ச்கள் இருந்தன.நாளடைவில் தனித்தனியாக இசைத்துக் கொண்டிருந்த ப்ளூஸ் கலைஞர்கள் 19ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச்களுக்கும் சென்று இசைக்க ஆரம்பித்தனர்; மற்றவர்களுக்கு பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தனர்.மேலும், சர்ச்களுக்கென்றே தனியாக குழுக்கள் ஆரம்பித்தன.இதுபோன்ற குழுக்களில் இருந்த பல ஆட்கள்,இன்னும் குறிப்பாக பெண்கள் பின்னாளில் புகழ் பெற்ற கலைஞர்களாக அறியப்பட்டனர். B.B.King போன்ற ஆட்கள் கூட சர்ச்களில் இசைத்தவர் தான். ஆனால், இதெல்லாம் “The Black Church” என்றழைக்கபட்ட ஒரு பகுதியினர்களுக்குள்ளேயே இருந்தது. வேறு சர்ச்கள் வெகு தாமதமாகவே இவர்களை “ஏற்றுக்கொண்டனர்”

1920 - 1940: உத்வேகமான காலகட்டம்:

ஆரம்பத்தில், வெள்ளையர்கள் மிகுந்த அசூயையுடனே இந்த இசையை அணுகினர்.எல்லாவற்றையும் விட, கறுப்பர்களின் இசைக்கு தாங்கள் மயங்குவதை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.ஆனாலும், அவர்களால் மயங்குவதை நிறுத்தவும் முடியவில்லை.அந்த இசை போதை முழுமையாக அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியது.இன்னும் சொல்லப்போனால், இந்த இசையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல வகையிலும் அதனை ஆவணப்படுத்தவும், ஒருங்கினைப்பதிலும், பதிவு செய்வதிலும் வெள்ளையர்களே பெரும் பங்காற்றினர்.இதில் குறிப்பிடத்தகுந்தவர், ஜான் லோமக்ஸ். 30’களில் இவர்தான் பெரும் முயற்சி எடுத்து பல பாடல்களை பதிவு செய்தது.ஆனால், அதிகாரப்பூர்வமாக – உலகின் முதல் ப்ளூஸ் குறிப்புகள் அடங்கிய இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது 1912 ஆம், ஹார்ட் வான்ட் என்பவரின் “Dallas Blues” என்ற பாடல் தான். ஆம், 1912ஆம் ஆண்டு தான் ப்ளூஸ் என்ற வார்த்தையே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அதுவரை வாய்மொழியாகவே புழங்கி வந்தது.அதே ஆண்டில்,குறிப்புகளாக வெளிவந்த மற்றொரு முக்கிய பாடல், The Memphis Blues. அதன் காரணகர்த்தாவான W.C.Handyஎன்பவரே Father of blues என்றழைக்கப்படுகிறார்.

ஏற்கனவே பல இடங்களில் கூறியது போல முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டம் ப்ளூசை பொறுத்தவரை மிக முக்கியமானது, மூன்று காரணங்களுக்காக.

1. ரெகார்டிங் என்ற இசையை பதிவு செய்யும் முறை பெருமளவில் வளர ஆரம்பித்தது.

2. புதிய புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் வரவு

3. ரேடியோ நிலையங்களின் பெருக்கும், மெல்ல மெல்ல அவர்களும் இந்த இசையை ஒலிபரப்ப ஆரம்பித்தது.

இதெல்லாம் 1920கள் 1930கள் வரை நடந்தேறியது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டிருந்தது.தொழில்துறை சார்ந்த வளர்ச்சி,ஐரோப்பாவில் வளர்ந்து வந்த புதிய கொள்கைகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகமும் வேகமாக சூழலத் தொடங்கிய காலம் அது.பல விஷயங்களில் மக்களின் மனநிலை மாறி வந்தாலும்,நிறக்கொள்கையில் சற்று மந்தமாகவே முன்னேறினர்.அதனால் இந்த வடிவத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டனர் என்ற சொல்ல முடியாது (இன்று வரையிலும் கூட). அதேசமயம் நிறைய மக்கள் – வெள்ளையர்கள் இதன்பால் பெரிதும் கவரப்பட்டனர் என்பதும் உண்மை. அதுமட்டுமின்றி, பல இசை வகைகளும் அக்காலகட்டத்தில் கிளர்த்தெழுந்தன. முக்கியமாக ஜாஸ்.  ஜாஸ் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், 30களில் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டும் –பரஸ்பர தாக்கங்களுடனும் வேகமாக வளர்ந்து வந்தது.

1940களில் ப்ளூஸ் இசை நன்றாகவே பக்குவடைந்திருந்தது. ப்ளூஸின் பெரிய பலம் – தனித்துவம் அதன் வெளிப்படைத்தன்மை. அதன் சாட்சியாக, அந்த காலகட்டத்தில் காமம் சார்ந்த பாடல்கள் பெருமளவில் வர ஆரம்பித்தன.முக்கல் முனகல்கள் நிறைந்த பாடல்கள். பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் காமம் சார்ந்த பாடல்களை அவர்களின் கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடாகக் கருதினர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்பது அவர்களது வாதம். மேலும் லெஸ்பியன் - இருபால் உறவு ஆகியவை 30களில் புகழ் பெற்றிருந்த ப்ளூஸ் ஆட்களிடம், குறிப்பாக பெண்களிடம் சகஜமாக இருந்தது. நிறைய பேர் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தனர். இதுபோன்ற விஷயங்களை, புனித அங்கிகள் தாங்கியிருந்த பல உயர்மட்ட வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியவில்லை.கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதெல்லாம் என்ன இசை என்று ஐரோப்பிய வகை சார்ந்த இசைகளையே உயர்வுபடுத்தி பேசி வந்தனர் (நம்மூர் கதை மாதிரி இல்லை ??). ஆனாலும் பல வெள்ளையர்கள் பெரிதும் இந்த வகையினால் ஈர்க்கப்பட்டனர். கற்றுக்கொள்ளவும் தொடங்கினர்.இதனால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தேறின. ஒன்று கறுப்பினர் – வெள்ளையர் இடைவெளி குறைய ஆரம்பித்தது.மற்றொன்று பல புதிய இசை வகைகள் தோன்றக் காரணமாயிருந்தது.
டிசம்பர் 22, 1849. ருஷ்யாவின் செம்னோவ்ஸ்கி ப்ளாசா. -20 செல்சியஸ் உறைகுளிர். இருபத்தியொரு பேர் - ஒருசில உள்ளாடைகளுடன் அக்குளிரில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மூம்மூன்று பேராக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.சுடத்தயாராக துப்பாக்கியை, அவர்களை நோக்கி உயர்த்தியவாரு ஜார் மன்னனின் வீரர்கள். இரண்டாவது வரிசையில் முதல் ஆளாக அந்த இருபத்தியெட்டு வயது இளைஞன் நின்றிருக்கிறான். இந்த வரிசைக்கு வந்து சேரும் முன் - அரசாங்கத்திற்கு எதிராக துரோகமிழைத்த குற்றத்திற்காக - எட்டு மாதம் தனிமைச் சிறையில் இருந்தவன். தனிமைச் சிறை – ஒலிகளில் இருந்து கூட தனிமை. ஆம். அவன் காதில் தங்களுது நடையின் ஓசைகூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கால்களில் வெல்வட் துணிகளை கட்டிக் கொண்டிருந்த வீரர்கள் நிறைந்த தனிமைச் சிறை. அதிலேயே எட்டு மாதம். மரணத்தை ஒருவிடுதலையாகக் கூடக் கருதி, அந்த வரிசையில் அவன் நின்றிருக்கலாம். எல்லாம் முடியப் போகிறது என்று நினைத்து பொழுது, இதுவொரு ஒத்திகை, அனைவரின் மரண தண்டை குறைக்கப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகிறது (ருஷ்யாவில் ஜார்களின் ஆட்சியில் இதுபோன்ற ஒத்திகை பழக்கம் நடைமுறையில் இருந்தது). ஆனாலும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இளைஞன் கடும்சூழ்நிலையில், சைபீரியாவின் சிறைச்சாலையில் நான்கு ஆண்டுகளை கழிக்க நேரிடுகிறது. பின்னாளில் இந்த அனுபவங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வெகுவாக அந்த இளைஞனை பாதிக்கிறது. அந்த இளைஞனின் பெயர் – ஃபியோதர் தஸ்தாவெஸ்கி. உலகின் ஆகச்சிறந்த எக்ஸிஸ்டென்சியலிஸ்ட்களில் ஒருவர். 

அவரை பற்றி இங்கே குறிப்பிட காரணம்? ப்ளூஸ் இசையும் ஒருவகையில் எக்ஸிஸ்டென்சியலிஸம் தான். என்னைக் கேட்டால், உலகின் முதல் ப்ளூஸ் இலக்கியவாதி – தஸ்தாவெஸ்கி. அவரது Notes from the undergorund, சற்றே நீண்டதொரு ப்ளூஸ் இசை. இந்த கருத்தை இன்னும் வலுவாக நிறுவுவதற்காகவே அவரைப் பற்றிய நீண்ட முன்னோட்டம் தேவைப்பட்டது. ப்ளூஸின் இந்த குணாதிசயத்தை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால், மிகச் சுலபமாக அதன் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும். எக்ஸிஸ்டென்சியலிஸம் + ப்ளூஸ், நேற்றுதான் எதேச்சையாக இந்த தொடர்பு தோன்றியது.இணையத்தில் இதுபோன்ற தொடர்புபடுத்துதல் இருக்கின்றனவா என்று தேடிய போது, Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism என்றிருந்ததை பார்த்த போது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். கீழ்க்கண்ட விளக்கம், ப்ளூஸ் பற்றிய ஒரு மிகச் சிறந்த விளக்கமாக எனக்குப்படுகிறது. 

The blues is an impulse to keep the painful details and episodes of a brutal experience alive in one's aching consciousness, to finger its jagged grain, and to transcend it, not by the consolation of philosophy but by squeezing it from a near-tragic, near-comic lyricism. 

ஏற்கனவே குறிபிட்டிருந்தது போல, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அமெரிக்காவிற்குள் ஆப்ரிக்க மக்கள் அடிமைகளாக வர ஆரம்பித்தனர்.அந்த காலகட்டத்தில் நாட்டுப்புற இசையின் வடிவமாகவே ப்ளூஸ் இருந்து வந்துள்ளது. ஆப்ரிக்கர்களின் அசரவைக்கும் தாளம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்.அவ்வகையான இசையினை ஓய்வு நேரங்களில் மனநெருக்கடிகளில் இருந்து விடுபடவும் தளர்ந்து விடாமல் இருக்கவும் இசைத்து வந்தனர். கையில் கிடைதவைகளை வைத்து கருவிகளை உண்டாக்கினர். மிகமுக்கியமாக விதவிதமான drumகள். அதோட ஏற்கனவே தங்கள் நாட்டில் உபயோகித்து வந்த ஒற்றை – இரட்டை நரம்பு கொண்ட - கிடார் போன்ற கருவிகளையும், சற்றே பெரிய புல்லாங்குழல் போன்ற கருவிகளையும் உபயோகிக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அந்த கூட்டத்தினருக்கென்றே ஒரு தனிவகையான இசை கருக்கொள்ள ஆரம்பித்தது. தங்களுக்கு தோன்றியவைகளை – பெரும்பாலும் வாழ்க்கை முறையினை பற்றியவைகளாகவே இருக்கும் - பாட ஆரம்பித்தனர். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்


சட்டென்று ஒரு பொறி தட்டுமே...கிட்டத்தட்ட நமது கிராமிய இசையினை போல இல்லை ? இவர்களின் உடைகளை மட்டும் மாத்தி போட்டு கற்பனை செய்து பாருங்கள்.நமது நாட்டுபற இசையின் பல கூறுகள் இதிலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.நமது இசையுடன் ஒப்பிட்டால், ப்ளூஸ் மிக இளைமையானதுதான் தான். ஆனாலும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது(யாராவது தெளிவுபடுத்தினால் நலம்). ப்ளூஸும் பெருமளவு வாய்மொழியாகவே வளர்ந்தது.தாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். மிக முக்கியாமாக வாழ்வியல் சார்ந்த விஷயங்களே மிகப் பெரும்பான்மையான பாடல்களில் வெளிப்படும்.எசப்பாட்டு என்று நாம் சொல்கிறோம் அல்லவா.....ப்ளூஸ் கூட ஆரம்பகாலங்களில் இதுபோன்ற அமைப்பினைக் கொண்டிருந்தது. Call & Response – அதாவது, சுரங்கங்களிலோ வயல்வெளிகளிலோ வேறு கடும் வேலைகளிலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு வரியைப் பாடினால், ஒரு கூட்டமே எதிர்ப்பாட்டு பாடும் (இதை எசப்பாட்டு என்றழைப்பது சரியா என்று தெரியவில்லை). இந்த அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும்.ஏனென்றால் பின்னாளில் குரல்களுக்குப் பதில் இசைக் கருவிகள் "எசப்பாட்டு" பாட ஆரம்பித்தது.

   

இதுபோல மிகச் சீராகவும் பல புதிய கருவிகளின் துணையுடன் நாட்டுபுறத்தன்மையே மேலோங்கியிருந்த இந்த இசை வளர ஆரம்பித்தது. 

1861: சிவில் வார்: 
Civil War-அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகளவிலேயே மிக முக்கியமானதொரு நிகழ்வு. சிவில் வாரின் அடிநாதமே இந்த அடிமை முறைக்கு எதிரான போக்குதான். 1861 ஆம் ஆண்டு, கருப்பின மக்களிடையே ஒருவித எழுச்சி காணப்படுகிறது.இந்நிலையில் தான் தேர்தல் வேறு வருகின்றது. லிங்கன் ஜனாதிபதியாகிறார்.எல்லாம் சேர்ந்து – இன்னும் பல காரணிகளை வேறு கூறுகின்றனர் – 1861 முதல் 1865 வரை கடும் போர் நிகழக் காரணமாகின்றது. 10,30,000 பேரைக் காவு கொண்ட (மூன்றில் இரண்டு பங்கினர் நோயினாலேயே இறந்தனர். சிவில் போர் ஒரு மாபெரும் கொடுங்கதை. தனியாக பக்கம் பக்கமாகவே எழுதலாம்) இந்தப் போர் 1865 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.அமெரிக்க கருப்பின மக்கள் இனி சுதந்திரமானவர்கள் என்று லிங்கன் அறிவித்தார். கிட்டத்தட்ட 4 மில்லியன் கருப்பின மக்கள் அந்த சமயத்தில் அடிமைகளாக அமெரிக்காவில் இருந்ததுக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அதே ஆண்டு, லிங்கன் ஜான் வில்கீஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டது, நாம் அனைவரும் அறிந்ததே. 



சரியாக சொல்ல வேண்டுமானால் 1867ல், உலகின் முதல் ஆப்ரிக்க – அமெரிக்க பாடல்களைக் கொண்ட தொகுப்பான Slave Songs of the United States என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதுவொரு மிக முக்கியமானதொரு நிகழ்வு. கன்ட்ரி ப்ளூஸ்(Country Blues) இசை, முறையாக ஆவணப்படுத்தப்பட்டது அன்று முதல்தான் என்று சொல்லலாம். மற்றொரு முக்கிய விஷயம், அதுவரைக்கும் நாட்டுப்புற இசைக்கும் ப்ளூஸ் இசைக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருந்தது.சிவில் வார்க்கு பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக முன்-1900களில் பல புதிய முறை இதில் புகுந்து கன்ட்ரி ப்ளூஸ் என்ற வடிவத்தை அடைந்தது(வகைகளைப் பற்றி பின்னர் தனிப் பதிவில் பார்க்கலாம்). முதல் முறையாக கறுப்பினத்தவர்களின் பாடல்களும் இசையும் பதிவு செய்யப்படலாயின. ஆனால் மறுபடியும் வேற வகையான தீண்டாமைமுறை உட்புகுத்தப்படுகிறது. ஜிம் க்ரோ லா’ஸ்(Jim Crow law’s). அதன் மூன்று முக்கிய சட்டங்கள்: 

1. பொது இடங்களில்,பள்ளிகளில் என்று அனைத்து பொது வெளிகளிலும் ஆப்ரிகர்களுக்கு, மெக்சிகர்களுக்கு இன்ன பிற “நிற”த்தவர்களுக்கு தனி இடம் 

2. ஆப்ரிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது 

3. கலப்பின, திருமணம் – உறவு ரெண்டும் நிச்சயமாகக் கூடாது. 















இந்த சட்டம் நமக்கு ஒன்று புதிதில்லை.தென்னாப்ரிக்காவில் கூட ஒருஆள் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டது ஒரு ஓரத்தில் ஞாபகம் வருகிறதல்லவா.ஆக, அமெரிக்கர்களும் தீண்டாமைதாசர்கள் தான். இந்த சட்டம் வெவ்வேறு வடிவில் 1960கள் வரை நடைமுறையில் இருந்தது. ரோசா பார்க்ஸ் – பேருந்து நிகழ்ச்சி, மார்டின் லூதர் கிங், மால்கம் X, குடியுரிமை இயக்கம் எல்லாம் அதன் நீட்சிகளே.

முதலாம் உலகப் போர் & The Great Migration: 


இதுபோன்ற சட்டங்கள் சமூகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும் பிற நாட்டினர் அதிகளவில் அமெரிக்காவிற்கு குடியேற ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான், 1900களில்.ஏற்கனவே உள்ள குழப்பம் போதாமல் புதிதாக வந்தவர்கள் வேறு. ஆப்ரிகர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை பெருக ஆரம்பித்தது.வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க, மெதுவாக அமெரிக்காவின் தென் மாகாணங்களில் இருந்து மக்கள் புலம் பெயரத் தொடங்குகின்றனர். 

இதற்கிடையில் முதல் உலகப் போரும் வந்து சேர, கடும் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்து கொள்கின்றது.1910 – 1930 வரை ஆறு மில்லியன் மக்கள் - அதில் 99% சதவீதம் கறுப்பின மக்கள், புலம் பெயர்ந்தாக சொல்கின்றனர். தென் பகுதிகள் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்க, வடக்கே இருந்த சிகாகோ, நியு யார்க், டெட்ராய்ட் போன்ற நகரங்கள் பெரு நகரங்களாக உருவெடுத்திருந்தன. ஆனால் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அமெரிக்கர்களே - (கார்லியோனியும் ஐரோப்பியர் தானே...)  

இந்நிலையில் ஏற்கனவே கூறியதைப் போல புதிதாக பல்வேறு நாட்டினரும், உதாரணமாக ஐரிஷ், உள்ளே வர அதுவே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின்றது.தக்கன பிழைக்கும் – வலியதே வாழும். இந்த போராட்டம் தான். அதுகாறும் தங்கள் ஊரில் கிராமப்புறம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், நகர சூழ்நிலைக்கு தக்கவாறு தொழிற்சாலைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நகரச் சூழல் பல வாழ்வியல் சார்ந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உணவு – உடை – இசை என்று அவர்கள் நகரங்களின், ஐரோப்பியர்களின் கூறுகளையும் உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். ப்ளூஸ் இசையை பொறுத்த வரை – மிக முக்கிய மாற்றம் - அசரடிக்கும், சுண்டியிழுக்கும், நம்மை எல்லாம் கண்டபடி கிறங்கடிக்கும் எலெக்ட்ரிக் கிடாரின் வரவு.
பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம். தென் அட்லாண்டிக் கடல் பகுதி. இரவு நேரம். அடிமைகளின் கப்பல் ஒன்று கடலை கிழித்துக்கொண்டு அமெரிக்கப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அடிமை மற்றொரு அடிமையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறான். கை – கால் விலங்குகளினால் ஏற்பட்ட காயங்களையும் மீறி கழுத்தை நெறிப்பது சிரமமாகவே இருக்கிறது. நெறிபடுபவனிடம் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் நெறிக்கச் சொன்னதே அவன்தானே. ஏன் ? தான் இறந்தால் மட்டுமே இந்த அவல சூழ்நிலையில் இருந்து விடுபட்டு மறுபடியும் தனது நாட்டிற்க்கும் வீட்டிற்கும் சென்று சேர முடியும் என்ற உறுதியான – குழைந்தைத்தனமான நம்பிக்கை. இயற்கையோட இயைந்த அவர்கள் மனது பின் எவ்வாறு சிந்திக்கும். வெற்றிகரமாக இறந்தும் விடுகிறான். சற்று நேரங்கழித்து காவலாளி ஒருவன் உள்ளே வர, இறந்தவனின் உடலைக் காண நேரிடுகிறது. உடலை எடுத்து கடலில் வீசினானா? அதான் இல்லை. நீண்ட கத்தி; ஒரே வெட்டு: தலை வேறு – உடல் வேறாக. தற்கொலை செய்து வீடு போய் சேரலாம் என்று நினைத்தால் அதைக் கூட நடக்க விட மாட்டோம் என்ற கொடூரமான புத்தி.


ஆப்ரிக்க அடிமை முறை:
                        இந்த அடிமை முறை ஆதிகாலம் தொட்டே – எகிப்தியர்களால் திறம்பட தொடங்கிவைக்கப்பட்டது.பின் எட்டாம் நூற்றாண்டில் "மூர்ஸ்” என்றழைக்கபட்ட வட-ஆப்ரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஸ்பெயின & போர்ச்சுகல் பகுதிகளை கைபற்றிய போது மீண்டும் அந்த பகுதிகளில் அடிமை முறை செழிப்படையத் தொடங்கியது. அதற்கு முன்னரே, பல நூற்றாண்டுகளாக “அரேபிய அடிமை வணிகமுறை” உலகளவில் மிக பிரபலமாக நடைமுறையில் இருந்ததை கவனத்தில் கொள்க.

1492ஆம் ஆண்டு கிறிஸ்தவ படைகள் – யாரின் தலைமையில் என்று உங்களுக்கே தெரியும் – ஏற்கனவே ஸ்பானிய படைகள் கைப்பற்றியிருந்த க்ரானடா போன்ற பகுதிகளுடன் சேர்த்து, புதிதாக மேற்கிந்திய பகுதிகளையும் கைப்பற்றியது. அதற்கப்பிறகு உலக வரலாறே மாறியது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த கடல் பயணம் கொடுத்த தைரியமும், மிதமிஞ்சிய லாபமும் புதிய நாடுகளை நோக்கி ஐரோப்பியர்களை வெறிகொண்ட குதிரைகள் போல ஓடச் சொன்னது. சேனமில்லாமல் குதிரைகளா......இந்த ஐரோப்பிய குதிரைகளின் சேனம் – மதம். இந்த அனைத்து படையெடுப்புகளிலும் மதம் மிகப்பெரிய பங்காற்றியது.

இவ்வாறு பல புதிய நாடுகளை பிடித்தாயிற்று. குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளை.அதன் அற்புதமான வளங்களையும் இயற்கை செல்வங்களையும் பல முக்கிய பொருட்களையும் சுரண்டியாயிற்று. சுரண்டப்பட்ட அனைத்தையும் தத்தமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அவரவர் நாட்டில் ஏற்றுமதி செய்யபட்ட பொருட்களையும் பிற வசதிகளையும் வைத்து -  புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களில், உதராணமாக சுரங்கம், கடும் வயல் வேலைகள், கட்டுமான பணிகள் போன்ற தொழில்களில் வேலை செய்வதற்குரிய ஆட்களை எங்கே பிடிப்பது? அவரவர் நாட்டில் மிக சொற்ப அளவிலேயே ஆட்கள் கிடைத்தனர்.ஐரோப்பியர்களுக்கோ இதுபோன்ற கடுமையான காலநிலை நிலவும் இடங்களில் வேலை செய்து பழக்கம் இல்லை.என்ன செய்வது? யோசித்தனர்..........இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பல வகை பொருட்களை எடுத்து வந்தாகிவிட்டது.வேறு என்ன அங்கிருந்து எடுக்க முடியும் ? அபரிதமாக அங்கிருக்கும் மனித வளங்கள் தான் அவர்கள் கண்ணில்பட்டது. திடகாத்திரமான உடல். எதை சொன்னாலும் நம்பிவிடும் அறியாமை.இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாலும் அதன் சில விஷயங்களின் மீது பயம். இதுபோதாதா....

நியூ வேல்ட்(New World) பகுதிகள் என்றழைக்கபட்ட அமெரிக்க பகுதிகளை நோக்கியே பெரும்பாலான கடல் வழி அடிமை வியாபரம் அமைந்திருந்தது. முக்கோண வணிகம்(Triangle Trade) என்ற வியாபார முறை தொடங்கிற்று. கீழுள்ள படத்தைப் பார்த்தாலே நான் சொல்ல வந்துது மிகச் சுலபமாகப் புரியும்.


செனகல் போன்ற ஆப்ரிக்க கடல் பகுதிகளில் இந்த அடிமை வணிகத்திற்க்காகவே ஒன்றல்ல....ரெண்டல்ல.......அறுபது சந்தைகள் நிறுவப்பட்டன. சந்தைகளுக்கு மக்களை எங்கிருந்து பிடித்து வந்தனர்?. அனைவரையும் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துதான். ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு “அழைத்து” வந்தனர்? கை விலங்கிட்டு நடைபயணமாகவே. 1000 மையில் தூரத்தை கூட நடந்தே கடந்து வந்தனர்.மிக கடுமையான பாதைகளில் இந்த கொடுமையான பயணத்தினாலேயே பாதிபேர் உயிரிழந்து விடுவர்.இந்த பயணமே சில சமயம் மாதக்கணக்கில் ஆகும். உயிர் பிழைத்திருப்பவர்களை மாட்டுக் கொட்டடி போன்ற சந்தைகளில் அடைத்து வைத்திருந்தனர்.

கடல் பயணம்:

                 கப்பல்,படகு என்றெல்லாம் அழைக்கவே தகுதியற்ற வஸ்துக்களில் தான் அனைவருக்கும் அமேரிக்கா போன்ற நாட்டை நோக்கி பயணம். கப்பலின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? கீழுள்ள படத்தைப் பாருங்கள்.


ஒருவரோடு ஒருவர் கை – கால்களுடன் சேர்த்து விலங்கிடப்பட்டு, ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவரின் பிடறி மயிரின் மேல்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அளவுக்கு நெருக்கமான சூழ்நிலை.தனது மலஜலம் - ரத்தம், எது பிறரின் மலஜலம் - ரத்தம் எது என்று பிரித்தறிய முடியாத இடப்பற்றாக்குறை.இந்த அவலம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர்கள் அநேகம்.அவல சூழ்நிலையின் தாக்கத்தால் சின்னம்மை, கொடுங்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்தவர்களும் அநேகம். குறைந்தபட்சம் இருபது நாட்கள் முதல் மாதக்கணக்கில் இந்தக் கொடூரமான பிரயாணம் நீளும். 















சில விவரங்கள்.

1.இந்த வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்ட நாடுகள் – இங்கிலாந்து,ஸ்பெயின,போர்ச்சுகல்,பிரான்ஸ்,நெதர்லாந்து

2. 16 – 18ஆம் ஆண்டின் தொடாக்கம் வரை – ஐரோப்பியர்கள், இந்த கடல் வழி வணிகத்தில் எத்தனை முறை ஈடுபட்டுள்ளனர் தெரியுமா......50,000 தடவ..

3. 15 - 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் முழுவதுமாக – இந்த கடல் பகுதியில் மட்டும் – குறைந்தபட்சம் 150 லட்சம் பேர் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 20 இருபது லட்சம் பேர் வரை கடல் பிரயானத்திலேயே உயிரிழந்து விட்டனர். ஆம்...முழுவதுமாக 150 லட்சம் பேருக்கும் மேல்.

4. ஆரம்பத்தில் போர்ச்சுகல் தான் இந்த வணிகத்தின் தாதா. பின்பு அந்த இடத்தை முறையே இங்கிலாந்தும் அமெரிக்காவும் எடுத்துக்கொண்டன

5. இந்தியாவில் இதுபோல அடிமை முறை இருந்ததா என்று யாருக்கும் கேள்வியெழ வாய்ப்பில்லை.நாம்தாம் சொந்த மக்களையே மனுதர்மம்,லொட்டு லொசுக்கு என்ற பல பேர்களில் அடிமைகளாக வைத்திருந்தோமே.

6. அதேசமயம் ஆப்ரிக்காவின் குழுக்களுக்கும் இந்த அடிமைமுறை இருந்தது, அவர்களை கொடூரமாக பலியிடும் பழக்கமும் இருந்தது என்பதும் உண்மை.


அமெரிக்காவில் ஆரம்பித்த அடிமை முறை:


1619ஆம் ஆண்டு. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம்.அமெரிக்க மண்ணில் முதல் ஆப்ரிக்க அடிமைகளைத் தாங்கிய கப்பல் கரை சேர்கிறது. அன்றிலிருந்து இரண்டு நூற்றண்டுகள், அமரிக்காவின் ஏறக்குறைய எல்லா வகையான கடினமான வேலைகளிலும் பங்கேற்று அல்லது பங்கெடுக்க வைக்கபட்டு, அந்நாட்டை முன்னேற்றியது ஆப்ரிக்கர்களே. 1808ஆம் ஆண்டு, அரசாங்கமே அடிமைகளை “இறக்குமதி” செய்வதற்கு தடைவிதித்தது. இறக்குமதி செய்யத்தான் தடையே தவிர அடிமைமுறை ஒழியவில்லை. 1861ஆம் ஆண்டு “சிவில் வார்’ ஆரம்பிக்கின்றது.அமெரிக்க சரித்திரமே அதற்குப்பிறகு முற்றிலுமாக மாறியது.

ஏற்கனவே கூறியது போல, ஆப்ரிக்க நாடுகளிலும் அடிமைமுறை இருந்தாலும், பிற நாடுகளிலும் இந்த அடிமை முறை இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை முற்றிலும் மற்ற நாடுகளைவிட மாறுபட்டது.மிக கொடூரமானதொரு பழக்கம் நடைமுறையில் இருந்தது. என்ன அது ? ஒரு அடிமைக்கு பிறக்கும் குழைந்தையும்.....பிறக்கும் போதே அடிமைதான்.அந்த எஜமானனாக பார்த்து மனது வைத்தால் தான் உண்டு.இல்லாவிட்டால் அக்குழந்தையும் அதன் பிறகு வரும் தலைமுறையும் கூட அடிமைதான்.கொடூரம்.


ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யக் கூடிய மிகபெரிய கொடுமை எதாக இருக்க முடியும்......அவன் வாழ்வாதாரத்தை சிதைப்பது, உணவு இருப்பிடம் போன்ற அத்தியாவசிய விஷயங்களை மறுப்பது....இவைகளா....இவை மட்டும்தானா ? எனக்கு தெரிந்த வரையில் ஒரு மனிதனின் கலாசாரத்தை – அவனது வரலாற்றை அழித்தொழிப்பதுதான் மிகப்பெரிய கொடுமையாக இருக்க முடியும். And the americans precisely did that. முதலில் பெயரை மாற்றினர் (இதன் காரணமாகவே மால்கம் லிட்டிலாக இருந்தவர் மால்கம் X சாக மாறினார்). அவர்களின் நாட்டுடன் எவ்வித தொடர்பில்லாமல் செய்தனர்.அவரது மத நம்பிக்கைகளை குழைத்தனர்.

எவ்வளவுதான் தடுக்க முயற்சித்தாலும் நமது இதய துடிப்பை நிறுத்த முடியாதல்லவா....அதுபோலவே ஆப்ரிக்கருக்கு – இசை. உலகின் மூத்த குடி – மிக பழமையான பழங்குடியினர் அவர்கள்தானே.... அதிரவைக்கும் தோல் இசை முதற்கொண்டு பல்வேறு வகை உணர்ச்சிகரமான – நேரடியான இசை அங்கிருந்ததானே பிறந்தது...சாப்பிடுவது உறங்குவது ஏன் சிறுநீர் கழிப்பது போல, இசை என்பது ஆப்ரிகர்களுக்கு வாழ்கை முறை. அப்படிப்பட்ட இனத்தை சேர்ந்த ஆப்ரிக்க அடிமைகளிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தாலும், இசையை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அடிமைகளை கொண்டு வரும் கப்பலில் இருந்தே – ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளவும், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் - இந்த இசைதான் அவர்களுக்கு வடிகால். அதுவும் 18ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில்தான் இதுபோன்ற “கொண்டாட்டங்களுக்கு” அனுமதி கிடைத்தது.


வயல்களில் வேலை பார்க்கும் பொழுது அலுப்பு தெரியாமல் இருக்கவும், தன் இயலாமை, கோபம், வருத்தம், காதல், காமம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளை வெளிப்படுத்துவும்,எல்லாவற்றையும் விட முக்கியமாக – தனது தாய்நாட்டிற்கும் தனக்குமான தொடர்பை பேணிக் காக்கவும் இசையே அவர்களுக்கு உற்று துணையானது. மலையுச்சியில் இருந்து கூக்குரலிட்டால் ஏற்படும் எதிரொலிப்பு போல, அவர்களது எண்ணங்களின் எதிரொலிப்பாக இசை மாறிப்போகிறது.இசையின் மூலமே இந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விட்டு விடுதலையாகி எங்கெங்கோ, பெயர் தெரியாத பறவைகள் போல பறந்து செல்லமுடியுமென்று நம்பினர். கிடார் - அவர்களது உற்ற தோழனானது. குடும்பத்தில் ஒரு உறுப்பினரானது. அவர்கள் பேசுவதற்கு பதிலாக தனது நரம்புகளின் மூலமாக பதிலளிக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து பிறந்ததுதான் உலகளவில் Rock n Roll, Jazz, Rhythm & Blues(R & B) போன்ற இசை வகைளுக்கு நேரடியாகவும் பிற்பாடு வந்த Rock, Ska, Reggae, Hip – Hop, Rap போன்றவற்றிக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்த, சாத்தானின் இசை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட – ப்ளூஸ் இசையாகும்.


1. Outdoor Excursion: Spring – 1999
சில விஷயங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஆறு – பாலம் – அதில் கடக்கும் ரயில், இது போல. அதுபோன்று ஒரு சூழல். சற்றே நடுத்தர வயதான ஆட்கள், ஒரு 10-15 பேர் அங்கே குழுமியிருக்கின்றனர். இருபது வருடங்களுக்கு முன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி. அனைவரும் உற்சாகமாக பாடிக் கொண்டும் பழைய கதைகளை பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று எங்கிருந்தோ புதிதாக ஒரு ஆள், கோட் சூட்டுடன் வருகிறான். முதலில் அவனை யார் என்று தெரியாதவர்கள், பின்னர் அவன்தான் ஓங்கோ என்று கண்டுகொள்கின்றனர். அவனும் பழைய மாணவன் தான்.ஆனால் அவனை யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.அதற்காக அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவனிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போகின்றது – ஓங்கோ பாட ஆரம்பிக்கும் வரை.ஒருமாதிரியான பிறழ்ந்த மனநிலையியே அவன் இருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. திடீரென்று வெறி கொண்டு ஆற்றில் இறங்கி அக்கரையினை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். பாலத்தில் மீது ஏறி தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு கண்டபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத நண்பர்கள், தூரத்தில் ஒரு ரயில் வர ஆரம்பித்தவுடன் பதட்டமடைகின்றனர்.அவனை இறங்கச் சொல்லி கூக்குரலிடுகின்றனர்.அதனை எல்லாம் கேக்கும் மனநிலையிலே யே அவன் இல்லை.ஆனால் எதிர்பாராவிதமாக ரயில் அடுத்த தண்டவாளத்தில் கடந்து போகின்றது. தெரிந்துதான் விளையாடுகின்றான் போல என்று நண்பர்கள் சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். இருந்தாலும் அவன் கீழே இறங்கி வருவதாய் இல்லை. கொஞ்சநேரத்தில் அவன் நின்றிருக்கும் தண்டவாளத்திலேயே ரயில் வருகின்றது. அனைவரும் திடுக்கிட்டு பயங்கரமாக கூச்சலிடுகின்றனர்.அவன் வேறொரு உலகில் இருக்கும் போது எப்படி இதெல்லாம் கேக்கும்.ரயில் மிகக்கிட்ட வருகிறது. ரொம்பவும் அசுவாரசியமாக ரயிலை நோக்கி திரும்புகிறான். மிகுந்த உக்கிரமான மனநிலையில் இருக்கிறான்.ரயில் மிகவும் அருகே வந்துவிட்டது. தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொண்டு "I m going back" என்று ரயிலை நோக்கிக் கத்துகிறான்.

திரை ஸ்தம்பிக்கிறது
ஆரம்பிக்கிறது.....ஓட.....பின்னோக்கி....அப்படியே.....ரயில்.....

ஏன் அவன் தற்கொலை முடிவுக்குச் சென்றான்(அவன் இறந்தானா என்பது குறித்து எதுவும் காட்டப்படவில்லை), யாருமே அவனை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் எப்படி அங்கு வந்தான், நண்பர்கள் அவனிடம் பேசுவதை வைத்துப்பார்க்கும் போது, ஒரு சாதாரணமான மாணவன்-நண்பனாக இருந்தவன் ஏன் இந்த நிலைக்கு ஆளானான் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆறு பகுதிகளில் விடை தெரிய வருகிறது.

ஓங்கோ – என்ற ஒரு 19-20 வயது மாணவனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் கால ஓட்டத்தில் சீரழிகின்றது என்பதே படத்தின் அடிநாதம். அப்பொழுதுதான் முதல் காதல் அரும்ப தொடங்கியிருந்த காலகட்டம்(அதுதான் படத்தின் கடைசிப் பகுதியான Picnic: Fall – 1979). ஒரு புகைப்படக்கலைஞனாக ஆவதே லட்சியம் என்று அலைந்து கொண்டிருப்பவன் சுகிம் என்ற மாணவியை அப்பொழுதான் சந்திக்கிறான். சிறிதுனாட்களுக்குள் ராணுவ நடவடிக்கைகளில், சக நாட்டுக்காரர்கள் போல -அவனும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தபடுகிறான்.பல கொடூரமான மனத்தாக்குதல்களை அவன் அதன்மூலம் சந்திக்க நேரிடுகிறது. உக்கிரமான மனநிலையில் அதற்குப் பிறகு அவன் நடந்து கொள்ள அந்த காலகட்டமே காரணமாகிப் போகின்றது. பாதியிலே அவன் ராணுவத்தில் இருந்து விடுபட்டாலும்கூட, மிகுந்த மனபாதிப்புகளுக்கு உள்ளாகின்றான்.அது உடனே வெளியே தெரியாவிட்டாலும் கூட நாளடைவில் மூர்க்கத்தனம் சிறுகச்சிறுக கசிய ஆரம்பிக்கின்றது.


பின்பு போலீஸ் வேலை – கம்யூனிச கொள்கை கொண்ட மாணவர்கள் - சொந்தமாக தொழில் – வேண்டாவெறுப்பாக காதலித்து, கடனுக்கே என்று மணந்து கொண்ட மனைவி – அவளுக்கு இருக்கும் வேறொரு தொடர்பு – வியாபாரத்தில் ஏமாற்றிய நண்பன் – முதல் காதலியின் கணவன் என்று அவனது வாழ்கையே படத்தின் மீதி ஆறு பகுதிகள்

2. The Camera: Three days ago: Spring – 1999
3. Life is beautiful: Summer – 1994
4. Confession: Spring – 1987
5. Prayer: Fall – 1984
6. Military Visit: May – 1980
7. Picnic: Fall – 1979

மேற்கொண்டு ஆறு பகுதிகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த ஆறு பகுதிகளில் என்ன விஷேசம் என்றால், அனைத்துமே தனித்தனியான ஒரு சிறுகதைபோலவே இருந்தது. ஓங்கோ – என்ற மனிதனின் வரலாற்றை காலம் கச்சிதமாக ஆறு பகுதிகளாக கிழித்தெறிந்து அதனை ஒருவர் படமாக இயக்கி இருந்தால், அது இப்படமாகத் தான் இருந்திருக்கும்.கிழித்தெறியப்பட்ட அந்த வரலாற்றை எழுதியது கொரியா. ஏனென்றால் கொரியாவின் ராணுவ ஆட்சி – மாணவர் புரட்சி – பொருளாதார வீழ்ச்சி போன்ற 1980 - 2000 வரையிலான கொரியாவின் மிக முக்கிய நிகழ்வுகள் தான் ஓங்கோவை ஒருவகையில் பாதிக்கின்றது. முக்கியமாக, கட்டாய ராணுவ சேவை. விடாது துரத்தும் கொடுங்கனவு போல அந்நிகழ்ச்சிகளே அவனை உள்ளிருந்து எதையோ நோக்கி தொடர்ச்சியாக தள்ளிக்கொண்டே இருக்கின்றது. மேலும் சரியான இளமைப்பருவம் கிடைக்காமால் போவதைவிட – இளமைப்பருவம் மறுக்கப்படுவதே மிகக் கொடுமையானது. குறிப்பாக, ராணுவ ஆட்சிகள் நிறைந்த நாடுகளைச் சொல்லலாம். மாபெரும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதியாகவே ஓங்கோவை பார்க்க வேண்டியுள்ளது.

படத்தின் கடைசிப் பகுதியில் – ஆரம்பத்தில் வரும் அதேமாதிரியான பிக்னிக், அதே மாணவர்கள், அதே இடம், அதே ஓங்கோ. ஆனால், அனைவரும் இருபது வயதில். மிகவும் வெகுளினயான ஓங்கோ, சுகிம் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். அதன் பின்பு வரும் ஐந்து நிமிடக் காட்சிகள்.............புதிர் நிறைந்த ஒரு கவிதை.அதிலொரு சின்ன விஷயம் உண்டு.நான் சொல்ல விரும்பவில்லை. பார்த்துவிட்டு(?) நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்.



டைரக்டர் – லீ சாங் டாங். இவரது மற்ற படங்களும் இதே போன்று வீரியத்துடனே இருப்பதாக இணையத்தில் அவரைப் பற்றி படிக்கும் போது தெரிகிறது.  இதில் ஓங்கோவாக வரும் சொல் யுங் கு பற்றி என்ன சொல்ல. 20 வருடமாக அலைபாயும் ஒருவனது வாழ்கையை இவரளவிற்க்கு வேறு யாரும் காட்டமாக திரையில் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று தெரியவில்லை. 

படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், ஓங்கோ – ரயில் – பெப்பர்மின்ட் கேண்டி. ரயில் - அனைத்து பகுதியிலுமே, முக்கிய காட்சிகளை - இரவில் நிலவை சுமந்து ஓடும் ஆற்றினைப் போல, எங்கோ எடுத்துச் செல்கின்றது. சற்றே வித்தியாசமாக பின்னோக்கி. படம் குறித்து எவ்வளவோ சொல்ல ஆசை இருந்தாலும்......வேண்டாம்....நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஹெர்சாக் – டார் – கோடார்ட் போன்றவர்களின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். ஆனால், அது எல்லாவற்றையும் விட இந்தப் படம், பார்க்கும் போதே ரொம்பவும் பாதித்துவிட்டது. Emotionally intense. பார்க்காமல் விட்டீர்கள் என்றால் பெரிய இழப்பு
When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart 
 - Bela Tarr

கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இந்தப் படம் அதையே எனக்கு ஞாபகப்படுத்தியது.


ஹங்கேரியன் ஒரு சிறிய ஊர்.பனியும் காரணமே தெரியாத பீதியும் சேர்ந்தே படர்ந்திருக்கும் ஊர். யானுஸ் வலுஸ்கா என்ற பேப்பர் போடும் ஆள்.பேப்பர் போடுவதைத் தவிர ஊரின் முக்கிய பிரமுகரான கியோர்கி எஸ்டர் என்பவர்க்கு பணிவிடை செய்யும் வேலையையும் செய்து வருகிறான். கியோர்கி Andreas Werckmeister என்ற ஹங்கேரியின் இசை கோட்பாட்டாளரின் இசை குறித்தான ஆராய்ச்சி செய்து வருகிறார். Werckmeisterன் ஹார்மனியானது இயற்கையின் முழுமையான ஒலி அளவை எட்டவில்லை, வெளிக்கொனரவில்லை. அதனடிப்படையில் அமைந்த அவரின் அனைத்து இசைக் கோர்ப்புகளுமே தவறு என்பதாகப் போகிறது அவரது ஆராய்ச்சி. கியோர்கி மனைவி அவரைப் பிரிந்து அவ்வூரின் முக்கிய போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வருகிறார். புரட்சி இயக்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு இயக்கத்தின் முக்கியமான ஆளும் கூட.


வழமை போல மிகுந்த அசுவாரசியமாக நாட்கள் நகர்கிறது. ஒருநாள் இரவில் நீண்ட நிழல்களை படரவிட்டபடி மிகப்பெரிய ராட்சஸ வண்டி ஒன்று ஊருக்குள் வருகிறது. புகழ் பெற்ற – உலகின் மிகப்பெரிய திமிங்கலமும் ப்ரின்ஸ் என்ற ஆளும் இன்னபிற விசித்திர ஜந்துக்கள் கொண்ட சர்க்கஸ் வண்டிதான் அது. திமிங்கலமும் ப்ரின்ஸும் எந்த ஊருக்கெல்லாம் இதுவரை சென்றிருந்தார்களோ அவ்விடங்கள் எல்லாம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.அதனால் சர்க்கஸ் வண்டி வந்தவுடன் மொத்த ஊரின் கலக்கமும் பலமடங்கு உயர்கிறது. ஆளாளுக்கு அதைபற்றி மட்டுமே பேசுகின்றனர்.வலுஷ்கா எங்கு சென்றாலும் யாவரும் இதைபற்றியே பேசிக்கொண்டிருப்பதும் இவனிடமும் அதைபற்றியே கேட்பதும் வாடிக்கையாகிப்போனது.


இதெல்லாம் கேட்டுக் கேட்டு வலுஷ்கா அத்திமிங்கலத்தின் பால் கடுமையாக ஈர்க்கப்படுகிறான். சர்க்கஸ் திறந்த முதல்நாளே முதல் ஆளாக திமிங்கலத்தை மிகுந்த ஆசையுடனும் ஒருவிதமான பரவசத்துடனும் காண்கிறான்.வார்த்தைகளே இல்லாத மொழியில் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.பெரும் தாக்கத்துடன் வெளியே வருகிறான்.ஆனால் ப்ரின்ஸ் மட்டும் யாருக்கும் வெளியே காமிக்கப்படவில்லை.

இந்நிலையில், கியோர்கியின் மனைவி தங்களது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கண்ணியாமாக மிரட்டல் விடுக்கிறார்.எப்படி ? தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மறுபடியும் கியோர்கியுடன் சேர்ந்து வாழ அவர் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று.அதிலேயே அவர் அரண்டு போய் அவர்களது நிர்பந்தத்திற்கு அடிபணிகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட வலுஷ்காவின் நினைவில் திமிங்கலம் தன் நீச்சலை ஜோராக அடித்துக் கொண்டிருக்கிறது.கியோர்கியிடமும் கடவுளின் எத்தகைய உயர்ந்த படைப்பு என்ற ரீதியில் அடிக்கடி சிலாகித்து பேசி வருகிறான்.


வலுஷ்கா மறுபடியும் திருட்டுத்தனமாக திமிங்கலத்தை பார்க்கச் செல்கிறான்.அந்த வண்டி ஊரின் முக்கிய சந்திப்பில் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.குளிரடைந்த அந்த இரவில் பலபேர் அங்கு குழுமியிருந்தனர்.ஒருவகையான மூர்க்கத்தனம் ஏறிய மனநிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களுக்கிடையே நழுவிச்சென்று திமிங்கலத்தைக் காண்கிறான்.இம்முறை, ப்ரின்ஸ்சை பார்க்க முடியாவிட்டாலும், தன் முதலாளியுடன் ப்ரின்ஸ் ஒரு சிறிய கூண்டினுள் இருந்துகொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளனின் உதவியுடன் தனக்கு இங்கிருந்து விடுதலை வேண்டும் - மக்கள் அனைவரும் என் பின்னாள் அணி திரள்வார்கள் - இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அடியோடு மாற்றப் போகும் புரட்சி நடக்கப்போகிறது என்று உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான்.என்னமோ ஒருவகையான ஆபத்து ஊரைத் தாக்கப்போவதாக அனைவரும் நினைத்தார்களே.........அது இதுதானோ.....

பெரும் கலக்கமுற்றவனாக ஓடத் துவங்குகிறான். இருளைக் கிழித்துக் கொண்டு தீ ஜுவாலைகள் எரிய ஆரம்பிக்கின்றன.ஒவ்வொரு ஆளாக ஒன்றுகூடுகின்றனர். ப்ரின்ஸ் அவர்களுக்கு இடையே இருக்கிறானா ? தெரியவில்லை.கூட்டம் மெல்ல நடைபோட ஆரம்பிக்கிறது.வேகம் அதிகமாகிறது.இன்னும் கொஞ்சம் வேகமாக.இன்னும் கொஞ்சம் வேகமாக. இப்போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே நடக்கிறோம். அதோ , ஆதரவற்றவர்களுக்கான மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.மிகுந்த கட்டுக்கோப்புடன் – கட்டிலில் இருக்கும் நோயாளிகளை முதியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.கண்ணில்படும் அனைத்து பொருட்களையும் – மருத்துவ உபகரணங்கள் உட்பட, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.இதை அனைத்தையும் ஒளிந்திருந்து யானுஸ் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அறையாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.அப்படி நுழைந்த ஒரு அறையில் குளியலறை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கிறது. ஆவேசத்துடன் அதை கிழித்து எரிகிறார்கள்..........அங்கே..................



இதை கண்ட மொத்த கூட்டமும் அப்படியே திரும்பிச் செல்கின்றனர். ஒருவேளை மனித வாழ்கை அவ்வளவுதான் என்று உணர்ந்தவர்கள் கொண்டார்களா.

வலுஷ்கா மிகுந்த மன அழுத்தத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.தூங்காமல் இரவை ஒரு நொறுக்கப்பட்ட கட்டிடத்தில் கழித்த பின், அதிகாலையில் அங்கிருந்து வெளியேறுகிறான்.பெரிதும் கலங்கிய மனநிலையில் ஒரு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்குகிறான்.திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.

ஒரு மனநல மருத்துவமனையில் வலுஷ்கா அமர்ந்திருக்கிறான்.அருகில் கியோர்கி.அவனிடம் அளவளாவி விட்டு வெளியே வருகிறார். சதுக்கத்தை கடக்கும் போது அங்கு இதுவரை வலுஷ்கா வற்புறுத்தியும் பார்க்காத – திமிங்கலம் தனியாக உருக்குலைந்து கிடக்கிறது.விவரிக்கமுடியாத துக்கத்துடன் அதை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.


நானும் பல்வேறு நாடுகளின் சினிமாக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.ஆனால், இந்த அளவுக்கு என்னை ஒளிப்பதிவு தாக்கிய படங்கள் ரொம்ப குறைவு. ஊழிப்பெருவெள்ளம் மாதிரியான அப்படியே மொத்தமாக மூழ்கடிக்கும் வகையான ஒளிப்பதிவு இல்லை.சிறுகச்சிறுக அப்படியே உள்ளிழுத்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட பார் காட்சி ஆகட்டும், அந்த திமிங்கலம் ஊருக்குள் வரும் காட்சியாகட்டும், அந்த மாபெரும் கூட்டம் முன்னேறும் காட்சி ஆகட்டும் உண்மையாகவே அவைகளையெல்லாம் பார்த்தால் தான் நான் சொல்ல வருவது புரியும்.

கதாபாத்திரங்களின் நிழலுக்கு உயிர்வந்து கையில் கேமேராவுடன் நடமாடி இருக்கும் போல.அத்தனை நெருக்கம் + தாக்கம்.வீடு சம்பந்தமான காட்சிகளில், அழையா விருந்தாளி போல கேமெரா - கதாபாத்திரங்கள் வரும் முன்னரே வீட்டினுள்ளே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு படம் பிடித்ததைப் போல தோன்றுகின்றன.

படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.கதாபாத்திரங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாமும் அப்படத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக உள்ளிழுக்கப்படுவதாக எனக்குப்படுகிறது.கருப்பு & வெள்ளை படங்கள் என்றாலே தானாகவே ஒரு ஆழம் படத்தில் குடிகொண்டுவிடும்.அதையும் தாண்டி இவர் வைத்திருக்கும் கோணங்கள்...........

அடிக்கடி வலுஷ்கா கடவுள் குறித்து பேசுவதால், அந்த திமிங்கலத்தை கடவுள் சார்ந்த குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா................இல்லை....ஹங்கேரி ஆரம்பகாலத்தில் கடுமையான கம்யூனிசத்தின் பிடியில் இருந்தது.அந்த காலகட்டத்தில் நிலவிய அசாத்திய சூழ்நிலைகளை குறிக்கிறதா..............................கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயமாக்கலால் பல்வேறு தொழில் சிதைவுகள் ஹங்கேரியில் நிகழ்ந்துள்ளதே(அங்கு மட்டும் தானா)........அந்த காப்டலிசம் குறித்தான பார்வையா............அல்லது கியோர்கி செய்து வரும் ஆராய்ச்சி - பேதம் இருப்பதாக அவர் கருதும் இசையமைப்பு போல – சமன்குழைந்த அவ்வூர் மக்களின் வாழ்வு குறித்தானதாகவும் இருக்கலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாமலே கூட அதன் இயக்குனர் கையாண்டிருக்கலாம். அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து இவை எல்லாம் வேறுபடலாம். மேலே குறிப்பிட்டிருக்கும் டாரின் மேற்கோளை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன். (இந்த தகவல்கள், கோணங்கள் எல்லாம் பிறகு நெட்டில் தேடியபோது புலப்பட்டவைகள்).

எனக்கு இந்த படத்தின் முடிவில் அந்த திடுக்கிடும் காட்சி, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடை ஞாபகப்படுத்தியது.அப்படிப் பார்த்தால் இந்தப் படம் நம் நாட்டிற்கே பல சமயங்களில் பொருந்தும். மேற்குறிய அதே மதம் – இசங்கள் காரணமாகவே.






பெல்லா டார் (Bela Tarr) – சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர். 16வயது வரை ஒரு தத்துவவாதியாக ஆவதயே லட்சியமாக் கொண்டிருந்தவர் 17 வயதில் திடீரென்று சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இதில் இறங்கினார்.அவரைப்பற்றி கொஞ்சமே கேள்விப்பட்டுள்ளேன்.தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் டர்கொவ்ஸ்கி ஆகட்டும் பெல்லா டார் ஆகட்டும், தங்களின் படங்களில் குறியீடுகளை எல்லாம் வேண்டுமென்றே வைப்பதில்லை என்று மறுத்தவர்கள்.மேலும் டார் – ஹெர்சாக் போன்றவர்கள் ஸ்டோரி போர்டு சமாச்சாரத்தை நம்பாதவர்கள்.கேமரா...என்ன சொல்ல. Master of long takes என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் வெறும் காட்சியின் அழகியலுக்காக கேமெரா கோணங்களையும் நீண்ட காட்சிகளையும் இவர் வைப்பதாகத் தெரியவில்லை.


இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). இன்னொரு முக்கியமான விஷயம், இவருக்கும் ஹங்கேரியின் எழுத்தாளரான Lazlo Krasznarhokai உள்ள நட்பு.அவரது பல நாவல்களையே – இந்தப் படம் உட்பட – டார் படமாக்கி உள்ளார்.அப்படியே நாவலை தழுவி எடுக்காமல், ஒவ்வொரு முறையும் எழுத்தாளருடன் அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பாருங்கள்.ஆண்டுக்கணக்கில் நீண்ட காட்சியமைப்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் திட்டமிட்டு................அபாரம் போங்கள். அவரது மிக முக்கியமான திரைப்படம் Satango (Satan + Tango).கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஓடும் திரைப்படும் அது.ஏழரை மணிநேரமாக இருந்தாலும் கூட பார்வையாளர்களை மொத்தமாகத் தன்வயப்படுத்திய படம் என்று தெரிகிறது.
இனி அவரது மற்ற படங்களி தேடிப்பிடித்து பார்ப்பதுதான் என் வேலை.நேற்று இந்த படத்தைப் பார்த்து முடித்த கையோடு மற்றொரு படத்தை தரவிறக்கி விட்டேன்.மற்றவைகளும் இனி பார்க்க வேண்டும்.
  1. Family Nest (1977)
  2. The Outsider (1981)
  3. The Prefab People (1982)
  4. Autumn Almanac (1985)
  5. Damnation (1988)
  6. Satan's Tango (1994)
  7. Werckmeister Harmonies (2000)
  8. The Man from London (2007)
  9. The Turin Horse (2011)

படத்தை இங்கே தரவிறக்கலாம்:
நா அப்ப எட்டாப்பு படிச்சுகிட்டு இருந்தேன். படிச்ச ஸ்கூல் – எம்.எஸ்.பி, திண்டுக்கல். 6 – 12 வரை அங்கதான் படிச்சேன். ஒருகாலத்துல தொடர்ந்து வருஷாவருஷம் ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்கள உருவாக்கிகிட்டு இருந்த ஸ்கூல்.நாங்கெல்லாம் சேர்ந்த பெறகு எப்புடி உருப்புடும் ? இப்பலாம் கழுத தேய்ஞ்சு கட்டெறும்பான கததான். எங்க வுட்டேன், ஆங்....எட்டாப்பு. சுப்பிரமணியன்னு ஒரு வாத்தியார் இருந்தார்.ரொம்ப அருமையான வாத்தியார்.ஏன் அருமைனா, பாடம் நடுத்துவத தவிர, நெறைய விசயங்கள மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவுரு வீட்டில பழைய Mad, National Geographic இதழ்கள் எல்லாம் நெறைய இருக்கும்.அப்ப இருந்துதான் அந்த புத்தகங்கள் தெரிய வந்தது.அவுரு யாரையும் டியுஷன் வாங்கன்னு கூப்பிடாட்டியும் கூட வம்படியா போய் சேர்ந்தோம்.அவுரு பாடங்களை தவிர, பிற வாத்தியார்களின் பாடங்களையும் கஷ்டமாயிருக்குனு சொன்னா, அதையும் சேத்து நடத்துவார்.

ஒருதடவ இந்த தூதரகங்கள்(Embassy) பத்தி பேச்சு வந்துச்சு.அப்ப, அவர் எங்ககிட்ட நீங்க ஏதாவது தூதரகங்களுக்கு – உங்க நாட்டை பத்தி தெரிஞ்சுக்க விரும்புறோம்,அதுனால உங்க நாட்டை பத்தி எதுனா புக் அனுப்புங்க – அப்புடின்னு லெட்டர் போட்டா அவுங்க ஒரு புக் மாதிரி அனுப்பி வைப்பாங்க.கூடவே சில ஸ்டாம்ப்களும் அனுப்பி வைப்பாங்கனு சொன்னார்.மொதல்ல எனக்கொன்னும் பெருசா தெரியல.ஆனா எங்க க்ளாஸ் பசங்க நாலஞ்சு பேருக்கு நோர்வே,சீனா - அப்பறம் சிலநாடுகள் ஞாபகம் இல்ல – அங்கிருந்து ரிப்ளை வர ஆரம்பிச்சது.அவ்வளவுதான்.எதித்த பாய் கடையில போஸ்ட் கவருக்கு டிமான்ட் ஏற ஆரம்பிச்சுது.நாங்க சரமாரியா லெட்டர் போட ஆரம்பிச்சோம்.வெறும் ஸ்டாம்ப்போட வுட்டோமா...உங்க நாட்டு நாணயங்கள் எப்புடி இருக்குன்னு பார்க்க விரும்புறோம், பணம் எப்படி இருக்குன்னு பாக்க விரும்புறோம்....இந்த பிட்டுகளையும் சேர்த்தே போட்டோம்.ஒருத்தர் ரெண்டு பேருக்கு ஒருசில சில்லற காசும் வந்திச்சு.பாருங்க....அப்பவே எப்புடி நேக்கா அவுங்ககிட்ட இருந்து காச கறந்தோம்னு.ஆனா, கொஞ்சநாள்ல சுதாரிச்சுட்டாங்க.அப்பறம் வெறும் புக்கும் ஸ்டாம்ப்களும் மட்டும்.

அதுக்கு முன்னாடி சிலபல ஸ்டாம்ப்கள சேத்து – அதை சேகரிப்புன்னு சொல்ல முடியாது, கோலி குண்டு, பிலிம் துண்டு மாதிரி சேத்து வெச்சது – வெச்சிருந்தேன்.இந்த தூதரக விஷயத்துக்கு அப்பறம் திடீர்னு ஸ்டாம்ப் சேகரிக்கும் வெறி ஏறிருச்சு.எங்க போனாலும் – யார பாத்தாலும் உங்ககிட்ட எதுனா வெளிநாட்டு ஸ்டாம்ப் இருக்கான்னு கேட்டு உசுர வாங்குறதே பொழப்பா போச்சு.நெறைய ஸ்டாம்ப்கள் ஆப்படவும் செஞ்சது.அப்பத்தான் நண்பர்கள் மூலம் இந்த ஸ்டாம்ப்கள சேகரிச்சு வைக்குறதுக்குனே ஒரு புக் இருக்கு, அதோட கடையில் மொத்த விலைக்கே ஒரு ஆல்பம் மாதிரி ஸ்டாம்ப்கள் விக்குறாங்கன்னு தெரிய வந்தது. அப்ப எங்கூர்லயே பெரிய புத்தக கடை சகாய பேப்பர் ஸ்டோர்ன்னு ஒரு கடைதான்.அங்க போயி அந்த ஆல்பத்தையும் ஸ்டாம்ப் ஸ்டாக் புக்கையும் வாங்கின போது இருந்த பரவசம் இன்னும் நினைவிருக்கு. அன்னைக்கு நைட்டே உக்காந்து எல்லாத்தையும் அடுக்கி அடுத்த நாள் ஸ்கூல்ல எல்லார்கிட்டயும் காமிச்சு ஒரே கலக்கல். என்ன ஒண்ணு, கடையில மொத்தமா வாங்குனதுனால ஏதோ ஒரு குறை.நாம சேகரிக்காம சுலபமா வாங்கிட்டோமேன்னு(இப்பலாம் போஸ்ட் ஆபிஸ்களிலேயே இந்த மாதிரி ஆல்பங்கள் வந்திருச்சு). அப்பறம் என்ன கொஞ்சம் கொஞ்சமா அந்த போதை உச்சத்துக்கு போயி சுருதி குறைய ஆரம்பிச்சிருச்சு.இப்பலாம் கிட்டத்தட்ட அந்த பழக்கம் உட்டே போயிருச்சு.ஸ்டாம்ப்களோட பழைய நாணயங்களும் நெறைய வெச்சிருக்கேன். பிரிட்டிஷ் நாணயங்கள் நெறைய இருக்கு.


சரி..............இந்த ஸ்டாம்ப்கள முதல்முதல்ல எங்க – எந்த நாடு வெளியிட்டிருக்கும் ? எதுனா யூகிக்க முடியுதா........ஒருவேள நீங்க இங்கிலாந்து என்று யூகிச்சிருந்தீங்கன்னா.....கரெக்ட். 1840 ஆம் ஆண்டு மே 1 – உலகின் முதல் தபால்தலையான Penny black: க்வீன் விக்டோரியாவின் உருவம் தாங்கியது இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இங்கிலாந்து வெளியிடும் அனைத்து ஸ்டாம்ப்களையும் இங்கிலாந்து ராணிதான் அப்ரூவ் செய்ய வேண்டும்.இன்னொரு முக்கிய விஷயம், இதுவரை தான் வெளியிட்ட அனைத்து ஸ்டாம்ப்களிலும் – இன்ன நாடு – என்று அச்சடிக்காத ஒரே நாடும் இங்கிலாந்துதான்.சரி....ரெண்டாவதாக ஸ்டாம்ப்பை வெளியிட்ட நாடு, ஆச்சரியமாக – பிரேசில்.

Penny Black

தபால்தலை சேகரிப்பும் தபால்தலை வெளியிடப்பட்ட கொஞ்சநாளிலேயே தொடங்கிருச்சு.அரிதான தபால்தலைகள சேகரிக்கும் போட்டியில இங்கிலாந்தில் 1890வாக்கில் கொலை கூட நடந்திருக்காம்.ரெகுலரான தபால்தலைகள் போக ஸ்பெஷலான தபால்தலைகள ஒவ்வொரு நாடும் சிலபல சமயங்களில் வெளியிடும்.யாராவது முக்கிய ஆளுமைகள பெருமைப்படுத்த, முக்கிய நிகழ்வுகளை குறிக்க, விலங்குகள் – இயற்கை சார்ந்தவைகள், அரசியல் ரீதியிலான நிகழ்வுகள், ஏதாவது சமூக விஷயத்த ப்ரோமொட் பண்ண, விளையாட்டு – அறிவியல் போன்ற ஏறக்குறைய எல்லா துறைகளுக்கும் ஸ்டாம்ப் வெளியிடுவாங்க.நாணயங்களும் அதுபோலவே.

ஸ்டாம்ப்கள், சும்மா தபால் அனுப்ப மட்டும் பயன்படுவதில்ல.ஒவ்வொரு ஸ்டாம்ப்க்கும் ஒரு வரலாறு உண்டு.எத்தனையோ முக்கிய விஷயங்கள அதன் மூலம் தெரிஞ்சுக்கலாம். அந்தகாலத்தில் இருந்த முக்கிய ஆட்கள், முக்கிய நிகழ்வுகளின் ஆவணம் தான் தபால்தலைகள். பாக்குற ஒரே வினாடில எங்கேயோ இழுத்துகிட்டு போயிரும். ஒரு தபால்தலை எத்தனை மனிதர்கள் எத்தனை நிகழ்வுகள் எத்தனை போஸ்ட் ஆபிஸ்களை பாத்திருக்கும். உணர்ச்சிகள் நிரம்பிய எத்தனை கடிதங்கள கொண்டு போய் சேர்த்திருக்கும். நீங்ககூட உங்க வீட்டில பழைய ஸ்டாம்ப் எதுனா இருந்தா எடுத்து பாருங்க.நா சொல்றது புரியும். முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேனே, அதுக்கு உதாரணமா எங்கிட்ட இருக்குற ரெண்டு ஸ்டாம்ப்களயே பாப்போம்.

மொதல்ல இது...


ஹாங்காங் – வரலாறு சற்றே குழப்பமானது. சீனாவுக்கும் பிரிட்டிஷ்க்கும் இடையேயான முதலாம் ஓபியம் போர்க்கு (1839–42) பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அங்கு அரசாட்சி செலுத்தியது.ஒருவழியா 1997ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு தன்னாட்சி கெடச்சு சீனாவின் முதல் சிறப்பு நிர்வாகப் பகுதியாக(Special Administrative Regions) இணைந்தது.இந்த ஸ்டாம்ப் அதுகுறித்து இல்லை என்றாலும், இதுல பாத்தா பிரிட்டிஷ் முத்திரை இருக்கும். இப்ப இருக்குற ஹாங்காங் குறித்து மட்டுமே தெரிந்தவர்கள் இத பாக்கும் போது என்னடா பிரிட்டிஷ் க்ரௌன் இருக்கேன்னு ஆச்சரியப்படலாம், மேலும் அதுகுறித்து தெரிஞ்சுக்கவும் இந்த ஸ்டாம்ப் தூண்டலாம்.

ரெண்டாவது....இந்த ஸ்டாம்ப்:


எண்ணெய் கிணறுகள் பிரச்சனைல ஈராக் – குவைத் மீது 1990ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது. இது கண்டு பொங்கிய உலக பாதுகாவலன் அண்ணன் அமெரிக்கா குவைத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று பேருல உள்ள நொழஞ்சது. விளைவு – கல்ஃப் போர்.அதுக்கப்பறம் நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே. அண்ணைக்கு இருந்து இந்த எண்ணெய் வளங்கள மறைமுகா கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சார் பெரியண்ணன். ஈராக்ல அப்ப ஆட்சில இருந்தது சதாம் உசைன். அமெரிக்காவில பெரிய புஷ். இந்த கதைய ஆரம்பிச்சு போயிகிட்டே இருக்கும்.அதுனால, ஸ்டாம்ப் பத்தி மட்டும் பாப்போம். ஈராக்கின் 1990ஆம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு குறித்தே இந்த தபால்தலை


இந்த ஸ்டாம்ப் சேகரித்தல் நெறைய பேருக்கு வருமானம் ஈட்டித்தரும் விஷயமாகவும் இருக்கு.ஏன்னா, பெரும்பாலான சமயங்களில் தலைவர்களின் உருவம் – சில முக்கிய நிகழ்வுகள் தாங்கிய தபால்தலையோ நாணயமா ஒருமுறை அச்சடித்தால் திரும்ப அடிக்க மாட்டங்க.உதாரணமா இந்திராகாந்தி உருவம் பொறித்த பழைய பெரிய சைஸ் நாணயம்(எங்கிட்ட ரெண்டு இருக்கு) இப்ப நாலாயிரம் ரூபாய் வரை விலை போறதா இங்க படிச்சேன்.அதுமாதிரிதான் பல ஸ்டாம்ப்களும். அரிதான ஸ்டாம்ப்கள், நாணயங்கள என்ன விலை கொடுத்தாவது வாங்கவும் ஆட்கள் இருக்காங்க.


சரி.....எப்படி தபால்தலைகள சேகரிக்க ஆரம்பிக்க ? அது ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.சில பேர் கையில கெடச்சதெல்லாம் சேகரிப்பாங்க(என்னைய மாதிரி).சில பேர் எதுனா ஒரு குறிப்பட்ட வகை சார்ந்த – திரைப்படம், அறிவியல், விலங்கு, தலைவர்கள் – இப்படி சேகரிப்பாங்க. தவிர மெட்ராஸ் மூர் மார்கட் மாதிரியான இடங்களில் இதுபோன்ற கடைகளே உள்ளன.முக்கியாம ரெண்டே ரெண்டு விஷயங்கள் சொல்லி முடிக்கிறேன்.

1) வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் – உங்களுக்கு போர் அடிச்சா ஒருமாறுதலுக்கு, அந்தநாட்டின் ஸ்டாம்ப்கள சேகரிச்சு பாருங்க. கொஞ்சநாள்லயே அந்நாட்டின் வரலாறு, முக்கிய விஷயங்கள் கூட தெரிய வரலாம். முடிஞ்சா முயற்சி செஞ்சு பாருங்க.சுவராசியமா இருக்கும்.



2)    நம்மூர் ஆளுங்களுக்கு, பெரிய போஸ்ட் ஆபிஸ்கள் அனைத்திலும் Philatelic bureau என்ற அமைப்பு இருக்கும்.அதுக்கு சந்தா கட்டினோம்னா சில முக்கிய தபால்தலைகள் வெளியிடும் போதோ ஸ்பெஷல் கவர்கள் வெளியிடும் போதோ நமக்கும் அனுப்பி வைப்பாங்க.
  1. தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.  
  2. இங்கேயும் பார்க்கலாம். 
உங்களுக்கு தெரிந்த பசங்க யாராவது இருந்தாங்கனா அவுங்க பிறந்தநாள் போன்ற விஷயங்களுக்கு இதுபோல அவுங்க பேருல சந்தா கட்டிவிட்டா அவுங்களுக்கு நல்ல ஒரு தொடக்கமா இருக்கும்.