I used to smoke weed and I don’t even smoke weed anymore. Because, it’s like… the world’s intense enough as it is.
- Kevin Parker
சரக்கு, லாகிரி வஸ்துகள் எல்லாம் குப்பைகள் என்று நான் உறுதியாக நம்ப பல காரணங்கள் இருந்தாலும், மிக எளிமையான அடிப்படைக் காரணம் - World itself is so gloriously intense & trippy. சுற்றி இருக்கும் பல விஷயங்கள் வெளிப்படுத்தும் உக்கிரத்தையும் பரிமாணங்களையும் உணர்ந்துகொள்ளவே ஆயுள் போதாது. அதைத்தாண்டி இதெல்லாம் என்ன செய்துவிடப் போகிறதென்ற இறுமாப்பு தான். பைக் ரைடில் தொடங்கி வீட்டுக் காய்கறித் தோட்டம் வரை.... Pleasure of doing things தரும் போதைக்கு அருகில் வேறெதுவும் வர முடியாது. என் அகராதியில் இதற்கு “Feynman’s state of mind” என்று பெயர்.

எதற்கு இந்தப் பேச்சை எடுத்தேன் என்றால், சினிமா பாடல்கள் தொடாத தளங்கள், உணர்வு நிலைகள் வெண்முரசின் பக்கங்களை விட அதிகம். நமக்கான வெளி – அதற்கான இசை என்பதெல்லாம் இங்கு மிகமிகக் குறைவு (ப்ளீஸ்....இந்த so called காதல் பாடல்களை எல்லாம் உதாரணம் சொல்லி கடுப்பேத்தாதீர்கள்). உதா: படு உக்கிரமான anti establishment மனநிலையில் இருக்கிறேன். எனக்கு அந்த மனநிலையின் sonic interpretationனாக ஒரு இசை தேவை. அப்படியான சினிமா பாடல் ஏதாவது இருக்கிறதா ?. நிஜமாகவே தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன். எனக்கு ஒன்றும் ஞாபகம் வரவில்லை. Pleasure of doing things, விட்டேத்தி, உக்கிரம், வன்மம், trippiness, அமானுஷ்யம், வெறுப்பு போன்ற மனநிலைகளை எல்லாம் சினிமா பாடல்கள் வெளிப்படுத்துமா என்பது கேள்வியே (Of course, இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு என்ற டிஸ்கியைச் சேர்த்துக்கொள்ளவும்). சிலருக்கு “ஊரு சனம் தூங்கிருச்சு...ஊத காத்தும் அடிச்சிருச்சு” என்பதே Psychedelicகாகத் தோன்றலாம். சினிமா பாடல்களை எல்லாம் தற்போது கேட்க வேண்டும் என்ற நினைப்பே வருவதில்லை. பாடல்களில் இருக்கும் Phoniness மிகுந்த எரிச்சலையும் ஆயாசத்தையும் தருகிறது. படங்களை வைத்துதான் பாடல்கள் எனும்போது.... இது நிகழக்கூடியது தான் என்று புரிகிறது(ஆனாலும்....).


60களில், இங்கலாந்து – அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் – Punk, Hippie, Beat கல்ச்சர் – போர்கள் – ரவி ஷங்கர் போன்ற இந்திய இசையாளுமைகளின்/இந்திய நரம்புக் கருவிகளின் பிரபலம் – Free love/Sex போன்றவைகள் பற்றிய பார்வைகள் – பல சமூக அழுத்தங்கள் காரணமாக பலரும் LSD, Mushroom, MDMA போன்ற போதை வஸ்துக்கள் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தனர். இதுவரை அனுபவித்திராத உணர்வுவெளி......மி...த...ப்...ப...து போன்ற feeling. இது மெல்ல மெல்ல அந்த காலகட்டத்தின் பலவகை இசையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. LSDயை அடித்த பின் ஒரு அமானுஷ்ய வெளியில் மிதக்கிறோமே....அதே உணர்வை நமது இசையிலும் கொண்டு வந்தால் ? வந்தார்கள்.

Folk இசை முதல் ராக் இசை வரை அனைத்திலும் இதன் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கியது. அதிகம் விளக்க முற்படாமல், சில பாடல்களின் டைட்டில்களையே எடுத்துக்கொள்வோமே.. Lucy in the Sky with Diamonds (The Beatles), White Rabbit (Jefferson Airplane), Journey to the Center of the Mind (Amboy Dukes), Interstellar Overdrive (Pink Floyd). உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 60களின் இசை பற்றியும், அதில் Psychedelic Rock பற்றியும் குறைந்தது பத்து பதிவாவது எழுதியாக வேண்டும். (என் அம்மா லார்ட் முருகன் பக்தை. “உனக்கு முருகன் மாதிரி....எனக்கு இவன்” என்று Psychedelic eraவைச் சேர்ந்த ஒரு ஆளை நான் சொல்வதுண்டு. அதுபோலவே, விடலை Beatlesசை விட Psychedelic Beatles தான் எனக்கும் அவ்வளவு பிடிக்கும். Sgt. Pepper's Lonely Hearts Club Band தான் அன்றும் – இன்றும் – என்றும் எனது திருவாசகம்). ஏகத்துக்கும் இருக்கிறது எழுத. இன்னொருநாள் சாவகாசமாக பேசுவோம்).

Psychedelic rockன் அடிப்படைகளாக இரண்டு விஷயங்களைக் கூறலாம். 1) இதுவரை உணர்ந்திராத அனுபவங்களை பெறுவது 2) அவ்வாறான உணர்வு நிலையை நீட்டிப்பது. ஜாஸ் இசையின் சாரத்தை பயன்படுத்துவது, இந்திய/ஆசிய இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது, Flanging/Phase shifting (என் favorite), Pitch Shifting/Delay போன்ற நுணுக்கங்களை உபயோகிப்பது என்று பல வித்தைகளின் மூலம் ஒரு இசைக்கோர்ப்புக்கு Psychedelic தன்மையை கொடுக்க முற்பட்டனர். அதனை முழுக்க முழுக்க இசையை மட்டுமே வைத்தோ (Pow R. Toc H போல), பாடலின் வரிகளோடும்/பாடப்படும்  முறையை மாற்றியும்(When the music is over போல....And what a trip it was) என்று இருவகையாக வெளிப்படலாயிற்று.

             

என்னதான் ஜோராக ஆரம்பித்தாலும், 60களின் இறுதியிலேயே Psychedelic rock தளர்ந்துபோக ஆரம்பித்துவிட்டது. பல இசை ஆளுமைகளும் - போதை வஸ்துகளின் துணையுடன் ஒரு பாடல் இயற்றலாம்...ரெண்டு...மூன்று....பிறகு ? என்பதை உணர்ந்து அந்தப்பழக்கத்தில் இருந்து விடுபட ஆரம்பித்ததும் ஒரு முக்கிய காரணம். Pink Floyd போன்ற குழுக்கள் அவ்வகை இசையை உருவாக்க முற்பட்டனர் என்றாலும் நாங்கள் Psychedelic music போடுகிறோம்...கேட்டீர்களா...என்பது போல – போன்சாய் மரம் டைப்பில் - வீரியமற்றே அந்த ஆல்பம்கள் இருந்தன (அவர்களும் போகப்போக Psychedelicல் இருந்து Progressive rock நோக்கி நகர ஆரம்பித்தனர்). இதே 70களின் ஆரம்பகட்டங்களில் தான் ஸின்த் இசைக் கருவிகளும், டெக்னோ இசைக் கருவிகளும் பெருமளவு உள்ளே வர ஆரம்பித்தன. Psychedelic Trance (சுருக்கமாக Psytrance.... அதனுடைய நேரடி வாரிசுதான் Goa trance) போன்ற வகைகள் எல்லாம் இளைஞர்களை ஆக்ரமிக்கத் தொடங்கியது. மறுபக்கத்தில் டிஸ்கோத்தே க்ளப்களின் வளர்ச்சியும் படுபயங்கரமாக இருந்தது என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். கொஞ்சகொஞ்சமாக LSDவகை Psychedelic rock இசை காணாமல்போய், Psychedelic Trance, Psychedelic pop, Psychedelic Folk என்று உருமாறத்தொடங்கின. Electronic – R & B – Funk போன்ற புதுவகை இசைகளில் psychedelic தன்மையை புகுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக, electronic. மனித இனம் அப்பொழுதுதானே ஸின்த் இசையை முதன்முறையாக கேட்கிறது. அந்த பிரம்மிப்பே படுகிளர்ச்சியான அனுபவத்தை தர ஆரம்பித்தது. அதனால் இயல்பிலேயே அதற்கு instant psychedelic தன்மை கிடைக்கலாயிற்று (ஆனால்....போகப்போக அனைவரும் அதனை உபயோகிக்க ஆரம்பித்து...நாயடி பேயடி வாங்கி...படுமொன்னையான இசையாக மழுங்கடிக்கப்பட்டது). என்ன ஆனாலும், Psychedelic rock – அதன் சத்தெல்லாம் போய் படுத்தபடுக்கையாகவே கிடந்தது என்பதே நிதர்சனம். ஆனால் 90களில் Alternative Rock எப்பொழுது புகழ்பெறத் தொடங்கியதோ.....அதனோடு கூடவே Psychedelicம் ஒட்டிக்கொள்ள அர்மபித்தது. காரணம் மிக எளிமையானது. 90களின் 20 – 25 வயது இசைக்கலைஞர்கள், நிச்சயம் 60/70களின் ராக் இசைக் கேட்டுதானே வளந்திருப்பார்கள். தாங்கள் அனுபவித்த psychedelic இசையை மீள்கொணர்வு செய்து வேறு வடிவில் வழங்க முற்பட்டனர். அவ்வளவே.

90களுக்கு பிறகு Alternative rock இசையின் அடிப்படையே முற்றிலுமாக மாறத்தொடங்கியது. Nirvana போன்ற குழுக்கள் கட்டி வைத்திருந்த Alt rockன் பிம்பம் முற்றிலுமாக சரியத்தொடங்கியது. ஒரு பக்கம் Electronic/Techno மியூசிக் சக்கை போடுபோட...மற்றொரு பக்கம் Hip hop/Rap தவிர்க்கவே இயலாத இசையாக வளர – இப்படி பல தரப்பட்ட கூறுகளையும் உள்ளடக்கியதாகவே Alternative rock இசை இன்றுவரை இருந்து வருகிறது (Classical/Pure -  Alternative rock music குழுக்களை எல்லாம் இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம்). அப்படியான பல இசைக்கூறுகளையும் உள்ளடக்கிய இசைக்குழுக்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த – எனக்கு மிகமிகப்பிடித்த மூன்று இசைக்குழுக்களை பற்றி பேசுவதற்குதான்...மேல இருக்கும் சிறிய முன்னோட்டம். இம்மூன்று குழுக்களும் Psychedelic தன்மை அதிகம் உள்ள Alternative rock இசைக் குழுக்கள். Neo – psychedelia என்று இவர்களது இசை வகையைக் கூறலாம்.

Tame Impala:


சிலபல மாதங்கள் முன்னால், Muganool (ஃபேஸ்புக்) நண்பர் ஒருவரிடம் ஹோம் தியேட்டர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. பலதடவை, எப்படியும் முழுமையான ஹோம் தியேட்டர்(ரிசீவர் இல்லாத ஹோம் தியேட்டர்கள் வேஸ்ட் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தியாவில் வெறும் ஸ்பீக்கர்கள் கொண்ட சிஸ்டமை வாங்கும் மக்கள், ரிசீவர் பற்றிய கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. விலையும் கூட காரணமாக இருக்கலாம்) வாங்கிவிடுவதென்று உணர்ச்சிபீறிட, மாடல் எல்லாம் பார்த்து வைத்து....அப்பறம் அந்த நினைப்பை கிடப்பில் போட்டுவிடுவேன். இந்தமுறை, என்ன ஆனாலும் சரி...வாங்கியே தீருவது என்ற வெறியுடன் ரெண்டு மூன்று வாரங்கள் பல ஷோரூம்களுக்கு ஏறி இறங்கினேன். இதுபோன்ற வேலைக்கென்றே பத்து இசைக் கோர்ப்புகளை/பாடல்களை பென் டிரைவ்ல் வைத்திருப்பேன். MP3யாக அல்ல. Flac formatல் (Uncompressed music formatகளுக்கும் MP3 போன்ற formatக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, வேறு வழியில்லாமல் MP3ல் இசையை சகித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் என் சஹிருதையர்). Of course, மொபைல் போன்ற வஸ்துகளில் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. ஆனால் நல்ல ரீசிவருடன் கூடிய ஹோம் தியேட்டர்களில் MP3 போட்ட உடன் பல்லிளித்துவிடுகிறது. பத்து இசைக் கோர்ப்புகளை/பாடல்களை பென் டிரைவ்ல் வைத்திருப்பேன் என்று சொன்னனே...Classical, Techno, Soft Rock, Tribal, R & B, Live recording (அதில் ஒரு பாடல் The Hateful Eight ட்ரைலரில் வருகிறது) என்று எல்லா வகையிலும் வைத்திருப்பேன். பெரும்பாலான ஷோரூம்களில் அவர்கள் டெமோ காட்டும் இசை/பாடல் எல்லாம் bass அதிகம் உள்ளதாகவே இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு, bass அதிர அதிர கேட்டால் அது நல்ல சிஸ்டம் என்ற நம்பிக்கை இருப்பதைக் கவனித்திருக்கிறேன். நாம் சற்று கவனமாக இல்லாவிட்டால், அப்படியான சிஸ்டமை தலையில் கட்டிவிடுவார்கள்.....நாம் விரும்பி கேட்கும் இசையில் இருக்கும் பலவித intricate levelகளை கவனிக்காமலே கடைசி வரையில் இருந்துவிடுவோம். அப்பிடி, பலவித ஷோரூம்களுக்கு சென்று...முதலில் டெமோ காட்டச் சொன்னது...இந்தப் பாடலைத்தான். அந்தளவு Let it happen என்னை பாதித்திருக்கிறது. இதை பற்றி ரெண்டு – மூன்று பத்திகள் தாண்டிச் சொல்கிறேன். அந்தோ பரிதாபம்...சொல்லேனா துயரம்....நான் என்ன கற்பனை செய்து வைத்திருந்தேனோ....அதில் 50 – 60% மட்டுமே எல்லா ரிசீவர்களும் வழங்கியது. 30,000 ஆரம்பித்து....40K – 50K – 60K – 70K என்று விலை ஏறிக்கொண்டே போயிற்றே தவிர....ஒன்றும் திருப்தியாக இருக்கவில்லை. கடைசியில் 1,20,000 பக்கம் ஒன்று பிடித்தது. 80,000 கம்மியாக இருந்ததால்...வழக்கம்போல் இல்லாத மாடலைக் கேட்டு விட்டு.....அடடா...அதிருந்தா இப்பவே வாங்கியிருப்பேனே...வந்தா மறக்காம கால் பண்ணுங்க ....சொல்லிவிட்டு ஓடிவந்து விட்டேன்.


என்ன எழவுக்கு இந்த தகவல்கள் என்ற எரிச்சல் மண்டுவது இயல்பே....நாம் ஒருவித மனநிலையில் இருக்கிறோம் என்றால், அதனை முழுமையாக embrace செய்யும் இசை வாய்க்கப்பெறும் போது அதனை அந்த இசைக்குரிய soundscape.....zoneல் தான் கேட்க வேண்டும் என்பதில் மிகமிகப் பிடிவாதமாக இருக்கிறேன். அதனால் தான், வாங்கினால் அப்படியொரு அட்டகாச ஹோம் தியேட்டர் வாங்குவது....இல்லையென்றால் மூடிக்கொண்டிருப்பது என்று கொள்கையுடன் திரிந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசைக்குமான zone பற்றி சொன்னேனே... Tame Impala அப்படியாக எனக்கும் மிகவும் பழக்கமான – விருப்பமான – தெரிந்த ஒரு zoneற்கு இசை வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது soundscape எனக்கு மிகவும் பழக்கமானதொரு தளம். Home ground மாதிரி. அது – Loneliness. அவர்கள் பாஷையில்....Lonerism


முதன்முதலாக Tame Impalaவை தெரிந்துகொண்டது, Solitude is bliss பாடலின் மூலம் தான். டைட்டிலை பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிட்டது......நிச்சயம் இந்த band நம்மை ஆக்கிரமிக்கப் போகிறதென்று. இந்த இன்ஸ்டிங்ட் இதுவரை என்னை (பெரும்பாலும்) ஏமாற்றியதில்லை.“Solitude is bliss” எனக்காவே எழுதப்பட்ட பாடல். பாடலில் இருக்கும்.... ”விட்டுத் தொலைங்க...” மனநிலை எப்பொழுதுமே எனக்குண்டு.

Space around me where my soul can breathe
I've got body that my mind can leave
Nothing else matters...I don't care what I miss
Company's okay, solitude is bliss
There's a party in my head and no one is invited
And you will never come close to how I feel

இந்த வரிகள் தந்த ஆனந்தம்....அதை சொல்லி விவரிக்க முடியாது. இதற்கடுத்து கேட்ட பாடல்.. It’s it meant to be....அந்த கிடார் கார்ட்ஸ்.....அதுவும் அந்த ஆரம்பம். அதற்கடுத்து தான்...

Tame Impala பாடல்கள் மீது ஒருவித அப்செஷனே வரக்காரணம் இந்தப் பாடல் தான். Kevin Parkerன் குரலில் இயல்பிலேயே Falsetto உண்டு. ஜான் லெனன்தனமான குரல். அது மிகக்கச்சிதமாக வெளிப்பட்ட பாடல் இது. பல லைவ் வெர்சன்களிலும் இதேபோன்றே இந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். Stuck in the past தான் இதன் அடிநாதமே. இதற்கு மேல் விளக்கம் சொல்லி...அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை.


இதற்குப்பிறகு தான் தீவிரமாக Tame Impala/Kevin Parker பற்றி தெரிந்தகொள்ள ஆரம்பித்தது. ஒருவித அல்டாப்பான ஆள் தான் இந்த Kevin Parker. Astronomyயை மிகவும் விரும்பும் ஆள். Stargazingகை விடாமல் செய்து வருகிறார். படு perfectionist. Tame Impalaவின் ஆல்பம்களில் ஏறக்குறைய 90% இசை சம்பந்தமான வேலைகளை தனி ஆளாக செய்து முடிப்பார். Brick by brick.....ஒவ்வொரு லேயராக இழைத்து இழைத்து வேலை செய்வதில் அப்படியொரு அலாதி இன்பம். இந்த டெக்னிகாலிட்டியைக் கூட விடுங்கள்....பாடல்களின் டைட்டிலைப் பாருங்கள்.

Be above it -> Why won't they talk to me -> Feels like we only go backwards -> Nothing that has happened so far Has Been anything we could control -> Why won't you make up your mind -> Solitude is bliss -> I don't really mind...இதற்குப் பிறகு தான் அவர்களது சமீபத்திய Currents ஆல்பம் வருகிறது. அதில் இந்த மனநிலைகள் எவ்வாறு தொடர்கிறதென்றால், Let it happenல் ஆரம்பித்து – Yes i am changingல் ஊர்ஜிதமாகி - New person, Same old mistakesல் முடிகிறது. இந்தத் டைட்டில்களை திரும்ப ஒருமுறை படிங்களேன். அதிலிருக்கும் pattern புரிந்துவிட்டால்...நிச்சயம் Tame Impalaவின் இசை  உங்களுக்கு மிகநெருக்கமானதாக மாறிவிடும்.

Let it happenக்கு வருவோம். முதல் கேட்பில் “நல்ல” டெக்னோ பாடலைப்போலத் தோன்றலாம். அநேகமாக நாம் பலரும் இந்தச் சூழ்நிலையை சந்தித்திருக்கலாம்/கொண்டிருக்கலாம்; சிலபல விஷயங்களில் இருந்து எப்பிடி வெளியே வருவது...என்ற புலிவாலை பிடித்த மனநிலை. விட்டுத்தொலையவும் முடியாது....விடாமல் இருக்கவும் முடியாது. அந்த மனநிலையின் கார்பன் காப்பி தான் இந்தப் பாடல். கிட்டத்தட்ட பாடலின் நடுவில் ஒன்றரை நிமிடங்களுக்கு கீறல் விழுந்த ரிகார்ட் போல....திரும்ப திரும்ப சுற்றிக்கொண்டிருக்கிறதே....ஏன் ? அதைத் தாண்டியவுடன்....”யப்பா....போய் தொலைஞ்சது சனியன்” என்ற உணர்வு வரவில்லை ? அந்த 2:40க்கு பிறகு வரும் Shift....too much of awesomeness.

Currents ஆல்பம், வழமையான Tame Impalaவின் ராக் கலந்த ஆல்பம் போலல்லாமல், Techno Pop வகையே அதிகளவில் இருக்கிறது. ரசிகனாவது....ஒண்ணாவது....எவன் என்ன நினைத்தால் என்ன....எனக்கு தோன்றியதைச் செய்வேன் என்று...Kevin Parker – அவர்களது முந்தைய ஆல்பம்களைப் போல – தனது மனநிலையை வேறுவிதமாக வெளிப்படுத்தியுள்ளார். The show must go on என்பார்களே...அதன் Currents ஆல்பத்தின் under current. என்னென்னவோ நடந்துவிட்டது...சரி...அடுத்தது என்ன ? அவ்வளவுதான் மேட்டர். Let it happenல் ஆரம்பித்து...எங்கே இது நிலைகொள்கிறது என்றால்... Yes i am changingல். இந்த ஆல்பத்தில் மிகப்பிடித்த பாடல் என்றால் இதைத்தான் சொல்வேன்.


Glass Animals:

Neurology படித்த மருத்துவ மாணவன்; ஹிப் ஹாப் இசையின் ரசிகன்; The Island of Dr.Moreau - 20,000 leagues under the sea – The Invisible man போன்ற கதைகளின் விரும்பி; சமீபத்தில் அந்தாள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் Isabel Allende எழுதிய The House of the Spiritsஸாம்.

William Steig(Shrek இவரின் கைவண்ணமே) எழுதிய The Zabajaba Jungle என்ற குழந்தைகள் புத்தகத்தின் வெறிப்பிடித்த ரசிகன்;  யாருமே இதுவரை சென்றிறாத அடர்ந்த – படுவித்தியாசமான விலங்குகள்/பறவைகள்/செடிகள் நிறைந்த காட்டுக்குள் செல்லும் சிறுவனைப் பற்றிய....ம்ஹும்..அந்தக் காட்டைப் பற்றிய கதை.


ஹாஸ்டலில் தங்கி நியுராலாஜி படித்துக்கொண்டிருந்த போது.... தனக்குப் பிடித்த The Zabajaba Jungle புத்தகத்திற்கு இசை வடிவம் கொடுத்தால் என்ன...ஒரு விபரீத எண்ணம் அவனுக்கு தோன்றியது. தனது வளர்ப்பு விலங்குகளான முயல், நாய் எல்லாவற்றையும் microphoneனை கடிக்க வைத்ததில் ஆரம்பித்து.....பக்கத்தில் இருக்கும் காட்டிற்குச் சென்று அங்குள்ள ஓசைகளை ஒலிப்பதிவு செய்வதில் தொடங்கி, தனக்குப் பிடித்த ஹிப் ஹாப் இசையின் கூறுகளை உள்ளடக்கி ஒரு பாடலை தனது லேப்டாப்பின் உதவியால் ரிகார்ட் செய்து முடிக்கிறான். தனது நெருங்கிய நண்பர்களுக்கு அதனைப் போட்டுக்காட்ட....அப்படி ஆரம்பிக்கப்பட்ட குழுதான் Glass Animals. அந்த நியுராலாஜி மாணவன் – David Bayley. அவர்களது முதல் ஆல்பத்தின் பெயர் – ZABA (போன பத்தியின் முதல் வரியைத் திரும்பப் படிக்கவும்). காடுகளுக்கென்று இருக்கும் வசீகர அமானுஷ்யம் தான் இவர்களது இசையின் அடிப்படை. அதுவும் இந்தப் பாட்டு.....குறிப்பாக அந்த Tribal வகை percussions.....என்னவோ போங்கள்.


Glass Animalsன் மிகப்பெரிய பலமே அவர்களது production & David Bayleyன் குரல் தான். இத்தனை அட்டகாசமான ரேன்ஜ் உள்ள குரலைக்கேட்டு நீண்டநாள்கள் ஆயிற்று. போன பாடலுக்கு அப்படியே நேரெதிராக.....முழுக்க முழுக்க காட்டின் அமானுஷ்யத்தை வெளிப்படுத்தும் மற்றொரு பாடல். எத்தகைய கச்சிதமான ட்ரம்மிங்.


Grizzly Bear:


மற்ற இரு குழுக்களைப் போலல்லாமல் 2000தின் ஆரம்பித்திலேயே இக்குழு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிலசமயங்களில் படுமினிமலிஸ்ட்க்காக அடக்கி வாசிப்பார்கள்; சிலசமயங்களில் Avant garde வகை என்று கலந்து கட்டி.....பின்னி எடுக்கிறார்கள். இசையில் Psychedelicதன்மை எந்தளவிற்கு உள்ளதோ அந்தளவிற்கு வரிகளிலும் இருக்கும். உதா: Sleeping Ute


யார்ரா இவுங்க என்று தோன்றியது.... இந்தப் பாடலுக்குப் பிறகுதான்.

The sky keeps staring at me
Frozen in my tracks ....Nothing else to see
And when I move my face left
You're always standing there ...A shadow I can't see


இவர்களது Psychedelic இசையின் உச்சமாக நான் நினைப்பது இந்தப் பாடலைத்தான். Sun in your eyes...

கடைசியாக, நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தால் இதுபோன்ற பாடல்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.


உங்கள் கலெக்ஷனில்(அப்படி எதாவது இருந்தால்) இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். டவுன்லோட் செய்துகொள்வது உங்கள்பாடு:
  • Tame Impala - Innerspeaker
  • Tame Impala - Lonerism
  • Tame Impala - Currents
  • Grizzly Bear - Veckatimest
  • Grizzly Bear - Shields
  • Glass Animals - ZABA
My dear boy, do you ask a fish how it swims? .....Or a bird how it flies? .... Of course not. They do it because they were born to do it
- Willy Wonka

“என்ன சொல்ல...தமிழில் இதுபோன்ற,

வாவ். சூப்பர்,

கடும் உழைப்பு தெரிகிறது...ராயல் சல்யுட்,

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்,

இதுமாதிரியான காமென்ட்கள் தேவையா ? டிப்ளமேட்டிகாக காமென்ட் போட்டு....பதிலுக்கு நானும் அதே டிப்ளமஸியுடன் பதில் போட்டு....ஏனென்றால், டிசைன் இத்யாதிகள் எல்லாம் திருப்தியாக இருக்கப்போய்த்தானே இதனை வெளியே விடுகிறோம். தவிர நாங்கள் ஏற்கனவே படுபயங்கர narcissistகள். நீங்கள் வேறு தனியாகப் பாராட்டி..... மாறாக, எதாவது தப்பு/குறை/அபத்தம் கண்ணில்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதனைச் சுட்டிக்காட்டினால் டக்கென்று அதனைத் திருத்தி வேறு வெர்ஷன் அப்லோட் செய்ய உதவியாக இருக்கும். எல்லாவற்றையும் மீறி பாராட்டியே ஆக வேண்டும் என்ற உந்துதல் முட்டிக்கொண்டு நின்றால்....இதனை வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்: ஏதாவது லீவு நாளில் உங்கள் மகளையோ/மகனையோ/யாரை வேண்டுமென்றாலும்...சும்மா ஒரு அனுபவத்திற்காகவாவது – இதுவரை நீங்கள் இதனைச் செய்திருக்காவிட்டால் – அவர்களைப் பக்கத்தில் பறவைகள் நிறைய வரும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பறவை பார்த்தல் என் ஆளுமையை(?) நிறைய பாதித்திருக்கிறது. இந்த வயதில் நான் உணர்ந்தவைகளை பசங்கள் சின்ன வயதிலேயே உணர்ந்தால் நிச்சயமாக அட்டகாசமான ஆட்களாக பின்னாட்களில் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.


பாம்பு போன்ற பல ஊர்வனவைகளுக்கு ஒரு தனிப்பட்ட இயல்பு உண்டு. சட்டை உரிப்பது என்று சொல்கிறோமே...அதுதான் (Ecdysis). ஏன் என்று இங்கே படித்துக்கொள்ளவும். என்னதான் சொல்ல வருகிறேன் என்றால், என்னைப் பற்றி எனக்கே இருக்கும் பிம்பங்கள்/கற்பிதங்கள், அடுத்தவர்களைப் பற்றி இருக்கும் பிம்பங்கள்/கற்பிதங்கள், ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி இருக்கும் முன்முடிவுகள்/லொட்டு லொசுக்கு என்று பலதையும் அவ்வப்போது உதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவ்விஷயங்கள் பெரிய psychological barrierராக மாறி வருவதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்(டுள்ளேன்). நிரூபிக்க முயல்வது (என்னைவிட உனக்கு கம்மியாகத் தெரியும் (அ) உன்னைவிட எனக்கு இது அத்துப்படி), எப்பொழுது பார்த்தாலும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பது (இவுங்க நம்மள பத்தி எதுனா தப்பா நெனச்சுட்டா ?), அடுத்தவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பது (அடுத்தவர்களுக்கு ஒரு ____ம் புரிய வைக்க வேணாம், நான் உணர்ந்தவற்றை அவர்களும் உணரச் செய்தாலே போதும்... ஜென்னின் ஒரு கூறு. ) இப்படி நிறைய உண்டு. அதனை விளக்க முற்படுவதே அபத்தமாகப்படுகிறது. அதனால், இப்படி எந்தவொரு பதிவையும் எழுதாமல் வெறும் நாலு லிங்க் மட்டும் போட்டு போஸ்ட் செய்வதாக இருந்தேன். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியாக வேண்டியுள்ளது.

1) பறவை பார்த்தல் என்பது முழுக்க முழுக்க விஞ்ஞானரீதியிலானது. இதுபோன்ற documentationகள் எல்லாம் விஞ்ஞானத்தின் அடிப்படையான கூறு. சினிமா/இசை என்பதெல்லாம் அவரவர் ரசனை சார்ந்தது. அதனால் நான் எனக்குப்பிடித்த ஒரு படத்தைப்பற்றி எப்படி வேண்டுமென்றாலும் எழுதிவிட்டு....என் ரசனை/உரிமை அதுஇதுவென்று தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் அப்படி முடியாது. இதெல்லாம் facts. தவறு வரவே கூடாது. மிகை உணர்ச்சி இருக்கக்கூடாது. “அழகு” போன்ற வார்த்தையைக் கூட மிக ஜாக்கிரதையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் (நமக்குதான் இந்த வித்தியாசம் எல்லாம்; பறவைகளுக்கு இல்லையே). இத்தனை ஜாக்கிரதை உணர்வையும் மீறி எங்காவது தப்பு செய்திருக்கிறோமோ - அது படிப்பவர்களை mislead செய்துவிட்டால் ? - என்ற பயம் இப்பொழுது வரை உண்டு. அதனால்தான் ஏதாவது தப்பு கண்ணில்பட்டால் உடனே சொல்லுங்கள் என்று சொன்னது.
  • மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்த பறவைகளைப் பற்றி மட்டுமே(ஐந்து பறவைகள் நீங்கலாக) எழுதி உள்ளேன். இன்னும் சில பறவைகளின் புகைப்படங்கள் இருந்தாலும், எனக்கு அந்தப்பறவைகள் குறித்து அதிகம் தெரியாதென்பதால் எழுதாமல் விட்டுவிட்டேன்.
  • இது தினகரனில் முன்னொரு காலத்தில் வந்த பறவைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே இல்லை. அதில் 76 பறவைகளைப் பற்றி எழுதியிருந்தேன். இது 150 பறவைகள், அவைகளைப் பற்றி சிறிய அறிமுகம் என்ற அளவில் இருக்கும். கவனிக்க: இது பறவைகள் பற்றிய புத்தகம் இல்லை. பறவை பார்த்தல் பற்றிய புத்தகம்.
  • சொல்லப்போனால், முழுப்புத்தகமுமே என் பெர்சனல் குறிப்புகள் மாதிரிதான். இதுவரை நான் கற்றுக்கொண்டவைகளை சரிதானா என்று பார்த்துக்கொள்வதற்கும், புதிதாக பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உதா: மரங்கொத்தி. " இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அட்டகாசமான தகவமைப்பை (adaptation), மரங்கொத்திகளிடம் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட 12,000 தடவை ஒரு உயிரினம் கடினமான மரங்களை கொத்திக்கொண்டே இருக்கிறது, அதுவும் மணிக்கு 20 - 25 KM வேகத்தில். அப்படியானால் மூளை எப்பிடி இத்தனை வேகத்தை, அழுத்தத்தைத் தாங்குகிறது? அதன் கடினமான மண்டையோடுகள், சிறிய மூளை அளவு + அதனைச் சுற்றி இருக்கும் ஹெல்மெட் போன்றதொரு அமைப்பு" அட....ஏன் இத்தனை நாட்களாக தோணவில்லை நாயே...என்று கடித்துக்கொண்டேன்.
2) தினகரன் கட்டுரைகள் சும்மா தான் இருக்கிறது....ஏன் ஈபுக் போடக்கூடாது என்று உமாமஹேஸ்வரன் அடிக்கடி உசுப்பிவிடுவார். சரி என்று தினகரன் கட்டுரைகளை மட்டும் கம்பைல் செய்வது என்று ஆரம்பித்தேன். என் தமிழில் எலுத்துபிழைகள் இருக்கவே இருக்காது. விளையாடும். அதனால் படக்கென்று MS Wordல் போட்டு....pdfக்கு கன்வர்ட் செய்துவிடலாம் என்ற முடிவில் இருந்தேன். எனக்கே மனசு கேட்கவில்லை.

இங்குதான் மனித உருவில் நடமாடும் தெய்வம் – ஹாலிவுட் பாலா சீனுக்குள் வருகிறார். நீங்கள் நாமக்கல் ஆஞ்சநேயரை பார்க்க வேண்டுமா...அவர் பாலா உருவத்தில்தான் மனிதனாக சுற்றிக்கொண்டிருக்கிறார். Pdf, epub, mobi, itunes என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி டிசைன் செய்தாக வேண்டும். போதாகுறைக்கு எனக்கு “Find birds by color” மாதிரி எதாவது தோன்றும் (கடைசியில் பார்த்தால், சாலிம் அலியின் புத்தகத்தில்கூட இப்படியொரு விஷயம் உண்டு; எனக்கு அப்பொழுது இது தெரியாது. Find birds by color வேலை முடிந்த பின்னாடி தான் இது தெரியும். ஜீனியஸ்கள் எல்லாம் ஒன்று போலவே சிந்திப்பார்கள் என்று பாலா சொன்னார். அதுக்கு என்ன அர்த்தம் ?). அசுரத்தனமான உழைப்பு. இத்தனைக்கும் அவருக்கு ஆர்வம் இல்லாத துறை இது. ஈபுக் என்று எடுத்துக்கொண்டால், அதில் extreme level என்று என்ன உள்ளதோ அது எல்லாவற்றையும் இதில் அவர் செய்திருக்கிறார். கவர் பேஜ் டிசைனில் இருந்து டைட்டில் பெயர் வரை அன்னாரது கைங்கரியமே. இன்னும் நிறைய சொல்லலாம். Long story short.....இந்தப் படம் தான். (தூர்தர்ஷன் பார்க்காமல் வளர்ந்தவர்கள் எதாவது ஆபாசமாக நினைத்துத்தொலையக்கூடும் என்பதால், வேதாளத்திடம் மாட்டிய விக்கிரமாதித்தன்).



Gokul Ranga, Enviro Ganeshwar, P.K.Ramkuar - பறவைகளின் idயில் சில சந்தேகங்களை தீர்க்க உதவினார்கள். அவர்களுக்கு நன்றி. விக்கிபீடியா போன்ற தளங்களில் முக்கி முக்கி தமிழில் பல கட்டுரைகளை டைப் அடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

போதும். எனக்கே நாக்கு தள்ளுகிறது.

Technical glitches காரணமாக சில தளங்களில், உதா: News hunt - புக் டிசைன் சரியாக தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. Find birds by color எல்லாம் interactive. Pdf/epub ரீடரைப் பொறுத்தே வேலை செய்யும். நல்ல pdf/epub ரீடர் இருக்கும் என்று நம்புகிறோம்




Newshunt: Link 

Interactive Map


“Important Bird Areas of Tamilnadu”


ராப் இசை என்பது, வெறும் fuck - bitch - போன்ற வார்த்தைகள் நிரம்பியது, துள்ளல் இசை - அவ்வளவே, அமெரிக்க இசைக்கு இவ்ளோ அர்பாட்டமா, இத்யாதிகள்...... என்ற கற்பிதம் உள்ளவர்கள் இந்தப் பதிவை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. ராப் இசை - முழுக்க முழுக்க ஒரு கலக இசையாகத் தான் வளர்ந்தது. Protest music. இன்றுவரையிலும் பல நாடுகளில் ஒரு கலகக் குரலாகவே ராப் இசை இருந்து வருகிறது. என்ன....அந்தப் பாடல்களின் அர்த்தம் நமக்கு விளங்காது. மொழிபெயர்ப்பின் உதவியுடனே சில ஆப்ரிக்க ராப் பாடல்களை புரிந்து கொண்டேன். அழுத்தம் நிறைந்த வரிகள் அவை. அதில் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதால் நம் எல்லாருக்கும் ஓரளவிற்கு பரிட்சயமான மெயின்ஸ்ட்ரீமை பற்றி எழுதலாம் என்ற கணநேர சிந்தனையின் விளைவு இந்தப் பதிவு.  என்னளவில், ராப் மிகமிக பிடித்தமான ஒன்று. ராப் பாடல்கள் - பதிவு பற்றி, வேறொரு ஐடியா இருப்பதால் இதில் மிகமேலோட்டமாக மட்டுமே சில விஷயங்களை சொல்ல முயற்சித்திருக்கிறேன். எமினெம் தாண்டி உங்களுக்கு ராப்பில் எதுவும் பெரிதாக தெரியாதென்றால், கடைசியாக நீங்கள் பார்த்த இங்க்லிஷ் படம் ஷோலேவாகத்தான் இருக்கும். அப்படியான ஆட்கள் அப்டேட் செய்து கொள்ள இந்தப் பதிவு உதவும் என்று நம்புகிறேன்.

அமெரிக்க Mainstream rapபை பொறுத்தவரை 2000த்துக்கு பிறகு மிகமிக வறட்சியான காலகட்டம். பின்-80களில் ராகிம் (Rakim), ஜக் டி (Chuck D), பிக் பன் (Big Pun); 90களில் நாஸ்(Nas), ஜே - சி (Jay z), டூபாக் (Tupac), நோடோரியஸ் பிக்கி (Biggie), கேஆர்எஸ் ஒன்(KRS One); 2000த்தின் ஆரம்பத்தில் எமினெம்(Eminem) என்று ஏகப்பட்ட லெஜன்ட்களை பார்த்தாகிவிட்டது. ஆனால், கடந்த பத்து வருடங்களாக மிகவீரியமான மெயின்ஸ்ட்ரீம் ராப்பர் என்று யாரும் வரவில்லை (. அதில் மேல்கூறிய அனைவரையும் விட சில காத்திரமான ஆட்கள் - Underground Rapல் உண்டு. சாவகாசமாக அவர்களைப் பற்றி ஒருநாள் எழுத உத்தேசம்). இவர்களில் பல பேர் கடந்த பல வருடங்களாக எந்த புது ஆல்பதையும் வெளியிடவில்லை. வெளியிட்ட Nas, Jay Z, Eminem போன்ற ஆட்களும் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தையே பாடல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர். அதுவும் எமினெம் எல்லாம் கமல்ஹாசன் "நா எப்பிடி நடிக்கிறேன் பாத்தியா" என்று ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்சை காட்டுவது போல், தற்போது ராப் செய்து கொண்டிருக்கிறார். இதுவாவது பரவாயில்லை. செய்வதை திருந்தச் செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம், Gangster/Mafioso rapல் ஆரம்பித்து pop rap வரையிலான ஆட்களின் அட்டகாசம் தான் தாங்க முடியவில்லை. Gangster/Mafioso rapயை பொறுத்தவரை Tupac, Biggie ஆரம்பித்து வைத்த விஷயம் அது. Jay Z அதே காலகட்டத்தில் Mafioso rapயை ஆரம்பித்தார். கறுப்பின மக்களுக்கு, குறிப்பாக டீன்ஏஜ் ஆட்களுக்குள் அப்போதிருந்த கேங்-வார், லாகிரி வஸ்துக்களின் பழக்கம், அவர்களது வாழ்க்கைமுறை என்பதாக அந்தப் பாடல்கள் நீளும். ஆரம்பத்தில் இதுபோன்ற பாடல்களை பாடும் போது ஒருவித குற்றஉணர்வு அப்பாடல்களில் இருந்தது. அமெரிக்க அரசுகள் எவ்வாறு பின்தங்கிய - பகுதிகளில் வாழும் கறுப்பினத்தவர்களை நடத்தியது, கறுப்பின அரசியல் என்பது குறித்தெல்லாம் பாடல்கள் இந்த genreல் வெளிவந்துள்ளது. ஆனால்......போகப்போக பாடல்களில் வன்முறையை glorify செய்ய ஆரம்பித்தனர். அந்த glorification முழு வடிவம் பெற்றது 50 Cent காலத்தில் தான். 50 சென்ட்ன்,ஒருசில பாடல்கள் தவிர அநேக பாடல்களை இரண்டாவது முறையாக கேட்க வேண்டும் என்று தோன்றியது கூட இல்லை. படுதிராபையான லிரிசிஸ்ட் வேறு. Robin Thickeகுடன் சேர்ந்து, இதுபோன்ற முயற்சிகளை செய்திருந்தாலும் - Get Money Fuck Bitches இதுதான் இவரது பல பாடல்களின் தாரக மந்திரமாக இருக்கம். GMFB என்ற வார்த்தை பிரயோகம் 90களில் ஆரம்பித்திருந்தாலும்(அது வேறு அர்த்தத்தில் அப்போது புழக்கத்தில் இருந்தது) 2000க்கு பிறகு ஏகத்துக்கும் பிரபலம். இதுபோன்ற பாடல்களில், லிரிகல் கன்டென்ட் என்று பார்த்தல்...

ஃபெராரி காரை ஓட்டிக்கிட்டு போகும் போது அவள பாத்தேன்.அவ என்ன பாத்தா.
ரெண்டு பேரும் படுத்து உருண்டோம்.
எதிரி கேங்கின் ஆட்கள் அடுத்தநாள் என்ன போட பாத்தாங்க.
ரெண்டு புல்லட் உரசிட்டு போச்சு. ஒண்ணு உள்ள பாஞ்சது.
ஹாஸ்பிடல்ல இருந்தேன். உள்ள ஒரு ஒளி தெரிஞ்சது.
திரும்ப வந்து பாத்தா எதுவுமே இல்ல. அந்த ______ம் என்ன வுட்டுட்டு ஓடிட்டா.

இந்த ரீதியில் தான் இருக்கும். இதுபோல ஒரு பாடல், ரெண்டு பாடல் கேட்கலாம். நூற்றுக்கணக்கான பாடல்கள் என்றால் ? எரிச்சல்தான் மண்டிக் கொண்டு வரும். இதற்கு எடுக்கப்படும் வீடியோக்களில், ஸ்ட்ரிப் க்ளப் தவறாமல் இடம்பெறும். க்ளோஸ்-அப் ஷாட்களில் பெண்களின் புட்டத்தை காண்பிப்பார்கள். இது ரெண்டும் இல்லாத gangster rap பாடல்களை மிகமிக அரிதாகவே பார்த்திருக்கிறேன். அடுத்து, அந்தகால LL Cool Jவில் ஆரம்பித்து Akon, Drake, Wiz khalifa,Flo Rida பெண்களில் Nicki Manaj மாதிரியான ஆட்களின் அலப்பறை. நல்ல சிந்தசைசர் இசை + உடனே கவரும் ஹூக்ஸ் + அட்டகாசமான கண்கவர் வீடியோக்கள் என்று மிகமிக எளிமையான வரிகளுடன் க்ளப்களில் போட்டு ஆடுவதற்கென்றே உருவாக்கப்படும் பாடல்கள் இவை.  1-2, 1-2, 1-2 என்ற தாளத்தில் ஒலிக்கும் சிந்தசைசர் இசை, உலகத்தில் எந்த மூலையில் இருப்பவரையும் ஈர்க்கவே செய்யும். ஆனால் ராப் இசையின் அடிநாதம் இசையில் இல்லை - பாடல்களின் வரிகளிலேயே உள்ளது. Catchyயான  வார்த்தைகள் வேண்டும் என்பதற்காக கண்டதையும் பாடி சாகடிக்கிறார்கள்.

நான் 97 - 98களில் ராப் கேட்க ஆரம்பித்த போது, வெறும் அதன் இசைவடிவம் மட்டுமே கவனத்தில் இருக்கும். அப்போது வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் வேறு புரியாது. நல்ல "பூம்.......பூம்..." என்ற bass உள்ள பாடல் நல்ல பாடல். அவ்வளவுதான் புரிந்து வைத்திருந்தேன். 2002ல் எமினெம் Lose Yourself வெளியானது. ராப் பற்றிய எனது பார்வையை முற்றிலுமாக மாற்றிய பாடல் அது. அர்த்தம் புரிந்து கேட்ட - இப்போது கூட முழு பாடலையும் ஒப்பிப்பேன் - முதல் பாடல் அதுதான். ராப்பின் டெக்னிகல் விஷயங்களான Flow, Rhyme.... போன்றவைகள் எல்லாம் கொஞ்சகொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. அடுத்த சில ஆண்டுகளில் இணையம் வீட்டிற்குள் வரத் துவங்க....மலைப்பிற்குரிய பல விஷயங்கள் தெரியவர ஆரம்பித்தன. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக மெயின்ஸ்ட்ரீம் ராப்பின் மீதான நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. Underground & Conscious rap தான் அதிகமாக கேட்பது.

KendrickLamar

இப்படியாக மெயின்ஸ்ட்ரீமின் க்ளிஷேக்களின் மீது வெறுப்பு மண்டிய நிலையில், போன வருடம் கீழிருக்கும் Swimming Pools பாடலைக் கேட்க நேர்ந்தது. வாவ்.......எத்தனைநாட்கள் ஆயிற்று இதுபோன்ற ஒரு லிரிக்ஸ் + Flow + Rhyme + Spittingகை கேட்டு (அபூர்வமாக Kanye West 2000ற்கு பிறகு சில பாடல்களில் இதனை செய்தது உண்டு). K Dot aka Kendrick Lamarன் பாடல்கள் அறிமுகமானது இப்படியாகத்தான். West coast hip hop எனப்படும், Tupac - Dr.Dre - Snoop Dog - Ice Cube போன்ற ஆட்கள் வளர்ந்த கலிபோர்னியா - காம்ப்டனில் (ராப் ரசிகராக இருந்தால், கலிபோர்னியா என்றவுடன் இந்தப் பாடல் ஞாபகம் வர வேண்டும்) இருந்துதான் லமாரும் வந்திருக்கிறார். ஒரு ஆர்டிஸ்ட் பிடித்துப் போய் விட்டால், வழக்கபோல் அவரது முழு டிஸ்கோக்ராஃபியையும் டவுன்லோட் செய்வதுதானே அடுத்த வேலை நமக்கு......


தனிபட்ட முறையில், எனக்கு எப்படியான ராப் ஆர்டிஸ்ட்களை பிடிக்கும் என்றால்........கீழிருக்கும் டெக்னிக்ஸ்சை வைத்தே அவர்களை அணுகுவேன்.

Flow:

First & foremost, Flow. Staying on the beats. அதாவது தாளத்துடன் எவ்வாறு பாடுகிறார்கள் என்பதாகக் கொள்ளலாம்... வெண்ணையில் கத்தி மாதிரி சொற்கள் இலகுவாக, கோர்வையாக தாளத்துடன் பயணிக்க வேண்டும். Flow காம்ப்ளெக்ஸாகவோ எளிமையாகவோ இருந்தாலும், பாடுவது புரிய வேண்டும். அதுதான் மிக அடிப்படையான விஷயம். வார்த்தைகளில் தெளிவில்லையெனில் எவ்வளவு நல்ல பாடலாக இருந்தாலும் வேலைக்காகாது.

Rhyme:

இதை பாடலில் உள்ள வார்த்தைகளின் ஓசை நயம் என்று சொல்லலாம். மொக்கையாக சொல்வதென்றால், நமது பாடல்களில் "மானே - தேனே ' என்று கடைசி வரியில் முடிக்கிறோமே......அதுபோல, வரிகளின் ஆரம்பத்தில் - இடையில் - முடிவில் என்று எங்கு வேண்டுமானாலும் ஒரு சீரான ஓசை நயத்தை கொண்டு செல்வதே, ரைம். இதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன.

Perfect Rhyme - சாதாரண, ஆரம்பநிலை ரைம். Cat - Rat - hat என்று வரிகளின் வார்த்தைகள் முடியும்

Assonance - Vowel Sound(A,E,I,O & U)டுடன் கூடிய வார்த்தைகள் சீரான இடைவெளியில் வந்துவிழும்.

Consonance - Consonant soundடுடன் கூடிய வார்த்தைகள் சீரான இடைவெளியில் வந்துவிழும்.

Multisyllable Rhyme - மிக சுவாரஸ்யமான ஸ்டைல் இது. ஒரு வார்த்தையின் ஆரம்பமோ - இடையிலோ - முடிவிலோ வரும் ஓசையைக் கொண்டு அதேபோன்ற ஏகப்பட்ட வார்த்தைகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவார்கள்.  A A B B A B A B என்று மாறிமாறி வரும். மாறாக மேலே பார்த்த மற்ற ரைம்கள்  A B A B இதுபோன்றே வரும். இந்தவகை ரைமிங்கில் எமினெம் ஒரு ஜீனியஸ். அநேகருக்கு தெரிந்த Lose Yourself பாடலை எடுத்துக் கொள்வோம்

His palms are sweaty, knees weak, arms are heavy
There's vomit on his sweater already, mom's spaghetti
He's nervous, but on the surface he looks calm and ready to drop bombs,
but he keeps on forgetting what he wrote down,
the whole crowd goes so loud
He opens his mouth, but the words won't come out
He's choking how, everybody's joking now
The clock's run out, time's up over, bloah!
Snap back to reality Oh there goes gravity

(Boldல் இருக்கும் வார்த்தைகளை கவனிக்கவும். பாடலைக் கேட்டுக் கொண்டே இதனைப் படித்தால் நலம். இதுபோக, ரைம்ஸ் பற்றி இங்கிருந்து விஷயங்களை தெரிந்து கொண்டு நீங்களும் உங்கள் நண்பர்களிடம் கதையளக்கலாம்)
Story telling:

தான் சொல்ல வந்ததை எவ்வளவு சுவாரசியமாக சொல்ல ம=முடிகிறது என்பதும் முக்கியம். கேட்பவர்களை கொஞ்சகொஞ்சமாக உள்ளிழுக்க வேண்டும். என்னவோ பெரிதாக வரப்போகிறது என்ற எதிர்பார்பை கிளற வேண்டும்.

Content:

இதுமிக முக்கியமானது அல்லவா. புரட்சிகரமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் romanticize செய்யப்பட மிகமிக சாதாரண, திரும்பத்திரும்ப ஒரே விஷயத்தை பேசும் பாடல்களின் மீது எனக்கு விருப்பம் இல்லை.

ராப்பை பொறுத்தவரை மேலிருக்கும் மூன்றும் தான் மிகமிக முக்கியம். நல்ல - சிறந்த - லெஜன்ட்ஸ் என்ற வகைகள் எல்லாம் இந்த மூன்றை வைத்தே பிரிக்கப்படுகின்றன. கேன்ட்ரிக் லமாரை பொறுத்தவரை மூன்றிலுமே பிய்த்து உதறுகிறார். மேலிருக்கும் "Swimming Pools" பாடலே சிறந்த எடுத்துக்காட்டு. அவரது பல பாடல்களில் Swimming Pools பாடலில் வருவதைப் போல், இருகுரல்களில் பாடுவார். மனசாட்சியாம். ஆனால் கேட்க என்னவோ சுவாரசியமாகவே உள்ளது.

இதுதான் முக்கியமாக சொல்ல வந்தது. வார்த்தைகள். தனது internal strugglesசை மிகக்காட்டமாக வெகுசில ராப்பர்களாலேயே வெளிக்கொணர முடியும். அந்த வரிசையில் லமாருக்கு நிச்சயமாக ஒரு பெரிய சிம்மாசனம் காத்திருக்குகிறது. Cartoons and Cereals என்ற அட்டகாசமான பாடல் ஒன்று உண்டு. சற்றே complexசான பாடல் தான். வழமையான ராப் பாடல்களை கேட்டவர்களுக்கு இதன் அர்த்தம் பிடிபட சற்று நேரம் பிடிக்கலாம்.


வன்முறைகள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் வளர்ந்த சிறுவனின் வன்முறைக்கும் அந்தப் பாதையில் இருந்து விலகிச் செல்வதற்குமானஅல்லாட்டாங்களை அனாயாசமாக வெளிப்படுத்துகிறார். இந்தவகையான பாடல்கள் தற்போதையை சூழ்நிலையில் மிகமிக அரிதாகவே வெளிவருகிறது.


Metaphors - மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ராப்பர்கள் பெரிதும் நம்புவது உவமைகளைத்தான் . பாடல்களை அடுத்த கட்டத்திற்கு அதுதான் எடுத்துச் செல்லும். பல அட்டகாசமான metaphorsகளை லமாரின் பாடல்களில் கேட்டிருக்கிறேன். உதாரணமாக, Hiipower பாடலில்

I'm standing on the field full of land mines
Doing the moonwalk......hoping I blow up in time ஒரு மிகச் சிறிய உதாரணம்.

தொடர்ந்து கோனார் உரை மாதிரி, வரிகளை நிரப்பிக் கொண்டு செல்ல விருப்பம் இல்லை. எனக்குப் பிடித்த வரிகளுடன் + லமாரின் பாடல்களுடன் நிறுத்திக் கொள்கிறேன். டவுன்லோட் செய்து கேட்டுவிட்டு சொல்லுங்கள். (Lyrics Source - Rapgenius.com )
If you look inside my mind you'll probably see atomic bomb
Loaded with explosive grenades holding dope rhymes
And it's potent
You never heard of heroic flow more divine
As a poet I know I'm the don
- Super Genius

I'll make an album that'll put a smile on Malcolm
Make Martin Luther tell God I'm the future for Heaven's talent

- Ignorance is a bliss

My itinerary is very hectic
I break records on every record...... i am truly wreckless

-  Thanksgiving

I'm just a messenger
Yeah I know life's a bitch
Get the best of her

- Fuck Your Ethnicity

You killed the nigga, I stole a bible, is that a sin
Part of me though, is searching for answers

- Is this love

My future so bright I'd probably go blind before I blink twice, I ain't lying

-  Heart pt 2

Living in a world that come with Plan B
Cause Plan A only can make another mistake
And you can’t see success coming from plan C
-  Real



My favourite kendrick lamar's tracks: (லிங்க்குடன்)

கடைசியாக, கீழிருக்கும் இந்தப் பாட்டை கேட்க முடிந்தால் நலம். A$AP Rocky, Big K.R.I.T அனைவருமே இந்தத் தலைமுறையின் ராப்பர்கள். லிரிக்ஸ்சை கேட்டுப் பாருங்கள்.......அட்டகாசம்.

Barely even conscious, talking to my conscience - Moonwalkin' on the sun, barefoot, with shades on - B.B. King saw the king in me, so why can’t you? In order to come up close/you’ll have to dig up Cash and Elvis, too/ Muddy water flow (இதில் B.B.King, Muddy Waters யாரென்று தெரிந்தால் தான் முழுமையாக சில விஷயங்கள் புரியும். அதுபோல போகர்ட் - அவுட்லா விஷயமும்)

ஒரு ஊரில் ஒரு மனமொத்த தம்பதி வாழ்ந்து வந்தார்கள். எல்லாம் திருப்தியாக அமையப்பெற்றும் இருவருக்கும் தீராத மனக்குறை ஒன்று இருந்தது. குழந்தை இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை. சில ஆண்டுகள் கழித்து ஆண்டவனின் கருணையால், அவர்களின் வேண்டுதலின்படி அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தாங்க முடியாத சந்தோஷம். ஆனால் சந்தோஷம் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை. பையனுக்கு பேச்சு வரவில்லை. மறுபடியும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒருநாள் திடீரென்று பையன் “ங்க........ங்.....ஞ” என்று பேச முயற்சிக்கிறான். நம்பமுடியாத சந்தோசத்துடன் அந்தப்பெண் கணவர், உறவினர்கள், அண்டைவீட்டார் என்று அனைவரையும் அழைக்க...........மிகுந்த பரபரப்புடன் எல்லோரும் பையன் என்ன பேச போகிறானோ என்று ஆவலுடன் காத்திருக்க.....பையனும் பேசத் தொடங்கினான் “நீ எப்பம்ம்மா தாலி அறுப்ப......”  
“நீங்க பாத்தீங்கன்னா எல்லா எடத்திலும் நகைச்சுவை கொட்டி கெடக்கு” சர்வசாதாரணமாகத் தொலைக்காட்சி முதல் பத்திரிக்கைகள் வரை திரும்பின பக்கமெல்லாம் இந்த வசனத்தை ஓராயிரம் முறை கேட்டிருப்போம். இவ்வசனத்தின் நடைமுறை அபத்தத்தையும் தாண்டி, இதிலுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எகத்தாளம், ஏகடியம், நையாண்டி, பகடி, அபத்தம் போன்ற பலவற்றை நாம் சந்தித்திருப்போம். பலபேர் அவ்வனுபவத்தை உணராமல் போயிருக்கலாம். சிலர் உணர விரும்பாமல் கடந்திருக்கலாம். மேளே குறிப்பிட்டவற்றுள் முக்கியமானதொரு வகை தான் ப்ளாக் காமெடி மற்றும் டார்க் காமெடி. “நான் தான் முகேஷ் பேசுறேன்..”. புற்றுநோய்க்கு எதிரான செய்திப்படத்தில் வரும் இவ்வசனம் எவ்வாறு இன்று நகைச்சுவையாக பல்வேறு சந்தர்பங்களில் முன்வைக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ப்ளாக் காமெடி என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இதனைச் சொல்லலாம்.

டார்க் மற்றும் ப்ளாக் காமெடி, இரண்டும் ஒன்றே போலவே தோன்றினாலும் இரண்டும் மிகநுட்பமான வேறுபாடுகளைக் கொண்டது. ப்ளாக் காமெடி பெரும்பாலும் தனிமனித அனுபவங்களையே முன்னிறுத்தும். அவர்களின் பார்வையிலேயே காட்சி விவரிப்புகள் இருக்கும். ஆனால், டார்க் காமெடி குழுமனப்போக்கின் வழியாகவே செயல்படும். ஒட்டுமொத்த கட்டமைப்பை, சூழ்நிலைகளை பகடிக்குள்ளாக்குவது டார்க் காமெடி. அதில் சிக்குண்ட மனிதர்கள் தங்களது அனுபவங்களை நகைச்சுவையாக முன்வைப்பது ப்ளாக் காமெடி. எவ்வளவுதான் இதுகுறித்து பேசப்பட்டாலும், இவ்வேறுபாடுகள் குறித்தான குழப்பங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. ஆனால், இரண்டுக்கும் பொதுவான, அடிப்படையான அம்சங்கள் சில உள்ளன.

1) பிம்பங்களை கட்டுடைத்தல் (Iconoclasm) - புனிதம், தீட்டு, பேசாப்பொருள் என்று நம்பப்படும் அனைத்தையும் பகடிக்குள்ளாக்குவது. இறப்பில் ஆரம்பித்து சித்தாந்தங்கள் வரை அநேக விஷயங்கள் இதில் அடங்கும்.

2) சுய எள்ளல் (Self Parody) – மிகமிக முக்கியமானதொரு அம்சம். மிகச்சிறந்த கலைஞர்களிடமும் அவர்தம் படைப்புகளிலும் இந்தத்தன்மையைக் காண முடியும்

3) தப்பிக்கும் மனநிலை (Escapism) – Momentary denial of the painful present. ஒருவித வெட்டேத்தியான போக்கு. மிகுந்த நெருக்கடியான தருணங்களில் அவற்றிலிருந்து தப்பிக்க/மறக்க நகைச்சுவையுடன் அத்தருணங்களை அணுகுவது. நல்ல உதாரணம் - மருத்துவமனை

இம்மூன்று அம்சங்களில் ஏதாவது ஒன்றையாவது அழுத்தமாகப் பதிவு செய்த படைப்புகளே டார்க் காமெடி/ப்ளாக் காமெடி என்ற வரையறைக்குள் வரும். இதனை சற்று ஹாஸ்யத்துடன்(Humour) மட்டும் அணுகினால், ப்ளாக் ஹியுமர் என்ற அளவிலயே அப்படைப்பு நின்றுவிடும். இம்மூன்று அம்சங்களும் எம்மாதிரியான காட்சியனுபவத்தை பார்வையாளனுக்குக் கொடுக்கிறது என்பதில் தான் தேர்ந்த படைப்பிற்கும் முற்றுப்பெறாத படைப்பிற்குமான வித்தியாசம் உள்ளதாகப்படுகிறது. உதாரணமாக ப்ளாக் காமெடி வகைத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பல இடங்களில் நாம் சிரித்தாலும், காட்சி முடிந்து சிறிது நேரம் கழித்து இதற்குப்போயா சிரித்தோம் என்ற குற்றவுணர்வை (Guilty Pleasure)  மிகச்சிறந்த படைப்புகள் எழுப்பும். அதன்மூலம் பார்வையாளனுக்கு வேறொருக் கோணத்தில் மிகுந்த வீரியத்துடன் எடுத்துக்கொண்ட கருப்பொருளை இப்படங்கள் பதிய வைக்கின்றன. குறிப்பாக, சமூக சித்தாந்தங்கள்,மதிப்பீடுகள் சார்ந்த படைப்புகளில் இவற்றைக் கண்டுணரலாம்.

ஹாலிவுட்.....ஏன், உலக திரைப்பட வரலாற்றைப் பார்த்தோமேயானால், ப்ளாக் காமெடியின் பிதாமகன் என்று ஒருவரைச் சொல்லலாம். சாப்ளின். நிகரில்லா முழுமையான கலைஞன். தனது மௌனப்படங்களில் இருந்தே ப்ளாக் காமெடியை திரையில் உலாவ விட்டவர். 1925ல் அவர் இயக்கி நடித்த The Gold Rushல், ப்ளாக் காமெடியை அடுத்த தளத்திற்கு அவரையும் அறியாமல் எடுத்துச் சென்றுள்ளார். பசியின் காரணமாகத் தனது காலணியை வேகவைத்து, மிகுந்த  மிடுக்குடன் உண்ணத் தொடங்குவார். எளிதில் மறக்க முடியாத காட்சி அது -


19வது நுற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பல இடங்களில் கடும் பஞ்சம், போர்க்காலங்களில் மக்கள் இவ்வாறு காலணிகளை சமைத்து உண்டதற்கான ஏராளமான சான்றுகள் உண்டு. Modern Times. மாபெரும் வீழ்ச்சி(Great Depression) காலகட்டத்தில் வெளிவந்த படம். எவ்வளவு இயந்திரத்தனமாக மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்பதை அட்டகாசமாக பகடி செய்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் ஆட்டு மந்தை தொழிற்சாலைக்குள் நுழையும் காட்சி ஒன்றே போதும். ஏன் சாப்ளின் ஒரு மேதை என்றால், ஊன்றி கவனித்தால் ஒரேயொரு கருப்பு ஆடு அக்கூட்டத்தில் இருக்கும்.


The Great dictator. எத்தனை வீரியமிக்க படைப்பு. ப்ளாக் மற்றும் டார்க் காமெடி, இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பு. இத்தனைக்கும் ஹிட்லரது அராஜகங்கள் அப்படம் வந்த காலகட்டத்தில் அவ்வளவாக வெளியே தெரிந்திருக்கவில்லை. அடுத்த மிகமுக்கியமான படம் தான், Monsieur Verdoux(1947). இது ஏன் மகத்தானதொரு ப்ளாக் காமெடி என்றால், சாப்ளினின் சுய எள்ளல். அதுவரை நகைச்சுவை நடிகராக, தனக்கு ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த வழமையான பாத்திரப்படைப்பில் இருந்து முற்றிலும்மாறி பணத்திற்காக பெண்களை மணந்து கொலைசெய்யும் பாத்திரத்தில் அதகளம் புரிந்திருப்பார். இவ்வாறாக அன்று தொடங்கி இன்று வரையில் ஹாலிவுட் திரைப்படங்கள் ப்ளாக் காமெடியில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளன. சற்று கூர்ந்து கவனித்தால், இதற்கு பெரும்பாலும் Indie இயக்குனர்களே காரணம். டொரண்டினோ, ஜிம் ஜார்முஷ் என்று நீண்ட வரிசையே உள்ளது. இதில் மார்டின் ஸ்கார்சேஸி போன்றோரது படங்களில் தீவிரமான ப்ளாக் காமெடி இருக்கும். டொரண்டினோ படங்களில் மிகையுணர்வு சற்று தூக்கலாகத் தெரியும். கோயன் சகோதரர்களின் படங்களில் இவ்வுணர்வு படுகூடுதலாக இருப்பதைப் பார்க்கலாம். வூடி ஆலன் போன்றோர் ப்ளாக் ஹியுமரையே அதிகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.


ஹாலிவுட்டைப் பற்றிப் பேசும்பொழுது, இங்கலாந்த் படங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இங்கலாந்தில் இதற்கு Gallows Comedy என்றொரு பெயரும் உண்டு. ஹாலிவுட்டின் கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி இங்கலாந்தில் குடியேறிய ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் மிகமுக்கியமான டார்க் காமெடித் திரைப்படங்களாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb மற்றும் A Clockwork Orange. இயக்குனர் யார் என்பதை சொல்லத்தான வேண்டுமா ? முதலாவது படத்தில் மிகையுணர்வு தூக்கலான டார்க் காமெடி இருக்கும். போர் – அவற்றிற்கான கற்பிதங்கள் – அதிகாரிகள், அவர்தம் அதிகாரங்கள் போன்றவைகள் குறித்தெல்லாம் ஏகத்துக்கும் பகடிக்கு உட்படுத்திய படம்.ஆனால் இதைவிட மிகுந்த தீவிரத்தன்மையுடன் டார்க் காமெடி வெளிப்பட்ட படம் தான் A Clockwork Orange. அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான பிணைப்பு, மக்கள் மேல் அரசாங்கள் செலுத்தும் கட்டுப்பாடு, பிறழ்ந்த உலகு (Dystopian society), ஓர்பால் சார்பு என்று அக்காலத்திலேயே உட்பொருளில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இப்படம் இயங்கியது. பொதுவாக இசை மனதை சாந்தப்படுத்தும் என்றுதானே கேள்வி. ஆனால் படத்தில் இப்பிம்பம் உடைக்கப்பட்டிருக்கும்.


மற்றொரு காட்சியில், அலெக்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தின் ஆசனவாயை சிறைச்சாலை அதிகாரி கைகளால் விரித்து, டார்ச் அடித்து சோதனை செய்துபார்ப்பார். இது எத்தகைய அசூயயை ஏற்படுத்தும் காட்சி. ஆனால் மாறாக பார்ப்பவர்களுக்கு இக்காட்சி இன்றும் சிரிப்பை ஏற்படுத்தும். குப்ரிக்கின் பெரும்பாலான படங்கள், பார்வையாளனை சிக்கல்கள் நிறைந்த புதிர்பாதைக்குள்(maze) உள்ளிழுக்கும்தன்மை கொண்டவை. பல சமயங்களில் அப்பாதைக்குள் சுற்றிக்கொண்டிருப்பதையே நாம் உணர்ந்திருக்க மாட்டோம். மேலே சொன்னது போன்ற பல காட்சிகளோ எவ்வாறு நாம் உள்வாங்குகிறோம் என்பதன் மூலம், நமது மனநிலைக் குறித்தான கேள்விகளைக் குப்ரிக் எழுப்புகிறார். ப்ளாக் காமெடியின் வேலை பாடம் புகட்டவதன்று. மாறாக, பார்வையாளனின் சுயசிந்தனையை தூண்டிவிடுவது.அதுவும் நகைச்சுவையின் மூலம். கய் ரிட்சி தொடங்கி இன்றும்கூட இங்க்லாந்து திரைப்படங்களில் ப்ளாக் காமெடிக்கென்று தனி இயக்குனர் பட்டாளமே உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் இங்க்லாந்து நாட்டுப் படங்களே பெரும்பாலும் இடம்பிடித்திருக்கும்.

ஐரோப்பிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், சர்ரியலிசம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கிய அதே கோஷ்டி தான் ப்ளாக் ஹியுமர் என்ற பதத்தையும் வழக்கில்விட்டது. லூயி புனுவெல், அலயந்திரோ ஹொடரோவ்ஸ்கி முதலான முக்கிய சர்ரியலிஸ படைப்பாளிகளின் திரைப்படங்களில் ப்ளாக் காமெடியின் சாயல்களை அதிகளவில் காணலாம். நாப்பதுகளில் இத்தாலியில் உருப்பெற்ற நியு வேவ் திரைப்பட இயக்கம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் ப்ளாக் காமெடியில் படங்கள் வெளிவரத் தொடங்கின. பிரான்சில், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அன்றைய கோதார்த் முதல் இன்றைய ழான் ஜெனே(Delicatessen) வரை சில ப்ளாக் காமெடிப்படங்கள் வெளிவருகின்றன. ஜெர்மனி நாஜிக்களின் பிடியில் இருந்த காரணத்தால் இயல்பாகவே நாஜிக்களை பகடிக்குள்ளாக்கும் படங்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். ஜெர்மன் புது அலையின் இயக்குனர்களான ஹெர்ஸாக், ஃபாஸ்பைன்டர் போன்றவர்களது படங்களில் ப்ளாக் ஹியுமரின் தன்மை அதிகளவில் உண்டு. ஆசியாவை எடுத்துக் கொண்டால், கொரியாவில் 90களில் தொடங்கிய புது அலையின் காரணமாக பார்க் ஜான் வூ, கிம் ஜா வூன், கிம் கி டுக் என்று பல படைப்பாளிகள் ப்ளாக் காமெடியை கையாண்டுள்ளனர். ஜப்பானைப் பொறுத்தவரை, தகெஷி கிடானோவை ப்ளாக் காமெடியின் உச்சம் என்று சொல்லலாம். அரசியல் ப்ளாக் காமெடி என்று வரும்பொழுது, கியூபாவின் தாமஸ் கிதராஸ் அலயா தான் என் ஆதர்சம். தான் நம்பிய/நம்பிக்கொண்டிருந்த சித்தாந்தத்தை திரைப்படங்களின் வழியாக அவரளவிற்கு விமர்சனப்பகடி செய்த இன்னொரு படைப்பாளியை நான் கண்டதில்லை.


இந்திய சினிமா என்று பார்த்தால், நானறிந்த வரையில் மிகக்குறைவாகவே ப்ளாக் காமெடி வகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஷ்யாம் பெனகல் போன்ற ஆட்கள் அவ்வப்போது இதில் முத்திரை பதித்ததுண்டு. அவரது மண்டி (Mandi, 1983) இந்திய சினிமாவின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இன்று விஷால் பரத்வாஜ், அனுராக் கஷ்யாப், அனுஷா ரிஸ்வி(பீப்ளி லைவ்) போன்றோர் ப்ளாக் ஹியுமர்/காமெடிப் படங்களில் பல பரிச்சார்த்த  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், பெரியளவில் இவ்வகைப் படங்கள் வந்ததே இல்லை என்பதே நிதர்சனம். எம்.ஆர்.ராதாவின் வசனங்களில் ப்ளாக் ஹியுமர்  சகஜமாக இழையோடுவதைப் பார்க்கலாம்(ஒரு கைய வெச்சுகிட்டு எப்பிடி சாமீ கும்பிடுவ.....சலாம் போடுவியா). குறிப்பிடத்தக்க மற்றொரு ஆள், கமல். பேசும் படம் தொட்டே அவ்வப்போது படங்களிலும் வசனங்களிலும் ப்ளாக் ஹியுமரைக் கையாண்டவர். மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் அதனை வேறொரு கட்டத்திற்கு அவர் நகர்த்தினார். அதற்குப்பிறகு தமிழ்ப் படத்தில் அட்டகாசமானதொரு டார்க் ஹியுமரைக் கொண்ட படமாக வெளிவந்த படமாக  ஆரண்ய காண்டத்தைச் சொல்லலாம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகளவில் “நகைச்சுவை” படங்கள் வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் ஏறக்குறைய அனைத்து படங்களுமே போகிறபோக்கில் பார்த்துவிட்டுச் செல்லும் Run of the mill வகைப் படங்களே.பெரும்பாலான படங்களில் சந்தானம் இருப்பார். நிச்சயம் பல டாஸ்மாக் காட்சிகள் உண்டு. காதல், நட்பு, பெண்கள் குறித்தெல்லாம் தத்துவார்த்த மேற்கோள்கள் இருக்கும். வேறு பொழுதுபோக்க தெரியாத, அதற்கு வழியில்லாத மக்களும் இதுபோன்ற படங்களையே திரும்பத் திரும்ப பார்த்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சமீபமாக இக்குறுகிய வட்டத்தைத் தாண்டி சற்றேனும் புதிய வகை முயற்சியில் வெளிவந்த நகைச்சுவைப் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்கூடு. சூது கவ்வும், நேரம் தொடங்கி தற்போதைய மூடர் கூடம் வரை மாறுபட்ட நகைச்சுவையையும் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற சூது கவ்வும், மூடர் கூடம் இரண்டு படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதை கவனிக்கலாம். கொள்ளை, கடத்தல் என்று இரண்டு படத்திலும் ப்ளாக்/டார்க் காமெடிக்கான களம் இருந்தும், அதற்கான முயற்சி என்ற அளவிலேயே இரண்டு படமும் நின்றுவிட்டதாக எனக்குப்படுகிறது.

மூடர் கூடம். இரண்டு விஷயங்களுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஒருவனை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை சற்றேனும் பதிவு செய்தமைக்காக. எப்படி நம்மூரில் முஸ்லிம்களுக்கும், திருநங்கைகளுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் ஆரம்பித்து...பல பிரச்சனைகள் உள்ளனவோ அதேபோன்றுதான் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஆட்களின் நிலையும். மற்றொரு பாராட்டப்பட வேண்டிய அம்சம், அந்தச் சிறுமிக்கு “பாஸ்” மீது ஏற்படும் ஈர்ப்பு. கைக்குட்டையை எடுத்துத் தருவதில் ஆரம்பித்து கதாநாயகன் பளார் என்று அறைவிடும்போது ஏற்படும் ஸ்பரிசத்தினாலும் அவன்தம் ஆண்மையினாலும் காதல் வயப்படும் கதாநாயகிகளை எத்துனை படங்களில் பார்த்திருப்போம். படத்தில் வரும் சிறுமி அவ்வாறான ஈர்ப்பில் விழும்பொழுது திரையரங்கே அதிர்கிறது (எங்கே மக்கள் அதனை புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களே என்று அக்காட்சிக்கு முன்னுரை  கூறும் காட்சி ஒன்றும் உள்ளது) இவைகளைத் தாண்டி மேலும் சில கவனிக்கத்தக்க காட்சிகள் படத்தில் உள்ளன. இயக்குனர் தெரிந்தே செய்தாரா என்று தெரியவில்லை. வெள்ளையனின் அப்பா – ஜெயபிரகாஷிற்கு இடையேயான, சாப்ளின் கால மௌனப்படங்களுக்கு ட்ரிபியூட் போன்றவரும் அக்காட்சி கச்சிதமாக மிகச் சரியாகத் பொருந்திப்போகிறது. இயக்குனர் தெரிந்தே செய்திருந்தால், மிகபெரிய பாராட்டுக்கள். ப்ளாக் காமெடியின் மன்னனுக்கு வேறெப்படி மரியாதை செய்துவிட முடியும். இசையைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். ஓப்ரா வகை, வெஸ்டர்ன் க்ளாசிகல் என்று பலதரப்பட்ட வகையிலான இசைக் கோர்ப்புகள் படம் முழுவதும் உலா வருகின்றன.   அட்டகாசமாக படமாக்கப்பட்ட பாடல் ஒன்றும் சென்ராயனுக்கு உண்டு. இதில் பயன்படுத்திப்பட்டிருக்கும் பல இசைக் கோர்ப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவாக நடந்தேறாதது. ஆனால் பின்னணி இசையைப் பொறுத்தவரை சிறிது ஏமாற்றமே. பல இடங்களில் ஒரே மாதிரியான துணுக்கிசை(Leitmotif) பயன்படுத்தப்பட்டிருப்பது சற்று அலுப்பைத் தருகிறது. பட்டென்று தெறிக்கும் வசனங்கள், ஆப்பிள் லைஃப் போன்ற போகிறபோக்கில் வரும் நகைச்சுவைகள், இயல்பான முகங்கள், வலுவில் திணிக்கப்பட்ட ஆபாச வசனங்கள் இல்லாமை என்று பல நல்ல விஷயங்கள் உண்டு. மேற்சொன்னவைகளையும் தாண்டி சில குறிப்பிடத்தக்க காட்சிகள் இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத என் நிலைமையையும்  அதற்கான  காரணத்தையும் பின்னர் பார்க்கலாம்.


படத்தில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. முதலில் நினைவுக்கு வருவது சில இடங்களில் துருத்திக்கொண்டுத் தெரியும் பிரச்சார நெடி. நாம் ஏன் திருடக் கூடாது என்பதற்கான வாதங்களில் ஆரம்பித்து, கம்யூனிஸம், சோஷியலிசம், குழந்தை வளர்ப்பு என்று பலவற்றிற்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். பாடம் புகட்டுவதைவிட பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டும் படங்கள் இங்கே மிகமிகக் கம்மி. அதனால் இப்படத்தை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. நம் வாழ்வின் அபத்தங்கள் எல்லாம் சொல்லிவைத்துக் கொண்டா வருகிறது. சட்டென்று நம்மைச் சூழும் தானே. ஆனால் படத்தில், இதுபோன்ற காட்சிகளுக்கான முன்னோட்டங்கள் மிகவெளிப்படையாக இருந்தமையால் அடுத்தது என்ன என்பது சிறிது நேரத்தில் புரிந்து விடுகிறது. ப்ளாக் காமெடியைப் பொறுத்தவரை, “Surprise element” மிகமிக முக்கியம். கூடவே அக்காட்சியின் நேரமும் அதன் நீட்சியும். படத்தில் அதுபோன்ற இடங்களில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களும் சற்றுமிகையான நடிப்பையே வாரிவழங்குகின்றனர். அதுவும் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு. ஆரம்பத்தில் ரசிக்க வைத்த இக்காட்சிகள், போகப்போக சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாய் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்புலக் கதை ஆரம்பிக்கும்பொழுது வழக்கமான தமிழ் சினிமா மரபுகளை உடைக்கும் படமாக இருக்கப்போகிறதோ என்ற எகிறத் தொடங்க....பிற்பகுதியில் அதே மரபுக்குள் படம் சிக்கிக் கொண்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ராபின் ஹுட்தனமாக அனைவரும் பணத்தை தூக்கிக் கொடுப்பது, டாம் & ஜெர்ரி பார்க்கும் அதே வழக்கமான வில்லன், வைரக் கடத்தல் என்று பின்பாதியில் சற்று தள்ளாட்டமாகவேப் படம் நகர்ந்ததாக எனக்குப்பட்டது.

முன்னமே சொன்னதுபோல் படத்தை முழுமையாக ரசிக்கமுடியாத சங்கடத்திற்கு என்னைத் தள்ளிய விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம். பரவாயில்லை, முதல் படத்திலேயே வித்தியாச முயற்சிகளுடன் ஒரு படம் அதன் இயக்குனர் என்ற திருப்தியில் வீட்டிற்கு வந்து இணையத்தைத் திறந்தால், Attack the gas station பற்றிய செய்திகள். அந்தத் தென்கொரிய படத்தையும் பார்த்தாகிவிட்டது (தமிழ் சினிமா தன் ரசிகர்களை தேடுதலுக்கு உட்படுத்துவதிலை என்று இனியாரும் குற்றம் சாட்ட முடியாது). வேறொரு படைப்பினால் பாதிப்படையாத கலைஞனே உலகில் இல்லை. திரைப்படங்களில் அது மிகமிக சகஜமானதும் இயற்கையானதும் கூட. குரோசாவா (The Virgin Spring பற்றி பெர்கமான் சொன்னது “It's touristic, lousy imitation of Kurosawa” ) -> பெர்க்மான் -> தர்கொவ்ஸ்கி.....இப்பிடி மாஸ்டர்களுக்குள்ளேயே ஒருவர்மேல் ஒருவர் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பேச ஆரமபத்தில் பக்கம்பக்கமாகப் போகும். இவர்களைத் தாண்டி மார்டின் ஸ்கார்சேஸி போன்ற ஆட்கள் வேறு வகை. ஒரு நேர்காணலில் எப்படி ராபர்ட் ப்ரெஸானின் ஒளிப்பதிவு கோணத்தை அப்படியே ஒரு படத்தில் தான் பயன்படுத்தினேன் என்பதை சிலாகித்து விவரித்திருப்பார். இவர்களைப் போன்ற ஆட்களிடம் மற்றவர்களது பாதிப்பை உணர முடியுமே தவிர, ஒருபோதும் “போலச் செய்தல்” இருக்காது. இவ்வளவு ஏன், டொரண்டினோ அடிக்காத கூத்துக்களா. கிடானோ தொடங்கி, பல இரண்டாம் தர ஆசிய/ஹாலிவுட் ஆக்ஷன் படக் காட்சிகளின் சாயலை டொரண்டினோ படங்களில் காணலாம். அதை க்வெண்டினே, விலாவரியாக எந்தெந்த படங்கள் என்று விவரிக்கும் அழகே அழகு. ஆனால், எப்படி தான் கேமராவை திருடியதை ஹெர்சாக் இயல்பான விஷயமாகப் பார்த்தாரோ, அதேபோல் க்வெண்டின் மிகஉரிமையுடனும் வெளிப்படையாகவும் இதைச் செய்வார். இருந்தபோதிலும் அக்காட்சிகள் முற்றிலும் க்வெண்டின் பாணியிலும் வலிய திணித்ததைப் போன்ற உணர்வுகளைத் தராமலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகச் சொல்வதென்றால் க்வெண்டின் பாணியிலான படைப்பு என்பது கொலாஜ்(Collage) போன்றதொரு கலவையான கலை வெளிப்பாடு. மேல நீட்டிமுழக்கி சொன்னதுபோல இந்த இன்ஸ்பிரேஷன் சமாச்சாரத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் அப்பட்டமான உருவல், அதோடு தனது சொந்த கண்டுபிடிப்பு போன்று பேசும் பொழுதுதான் அதிர்ச்சியும் எரிச்சலும் ஏற்படுகிறது (தெய்வத்திருமகள் சிறந்த உதாரணம்). மூடர் கூடத்திற்கும் Attack the gas stationனிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், மட்டமான மொழிபெயர்ப்புபோல் அப்படியே கொரிய படத்தில் இருந்து இப்படத்தை எடுக்காமல் அதன் பாதிப்பில் இயக்குனர் இப்படத்தை தனது பார்வையில்/பாணியில் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஆனால் மூடர் கூடத்தில் தனித்துவமான காட்சிகள் என்று முதலில் எனக்குப்பட்ட - வெள்ளையன் தப்பித்து ஸ்கூட்டரில் போகும் போது கூடவே ஆட்கள் வரும் காட்சி, தொலைபேசியின் எதிர்முனையில் ஐஸ்க்ரீம் கேட்கும் சிறுமி என்று பல காட்சிகளின் மூலம் அந்தக்கொரியன் படம் தான் என்பதை உணர்ந்தபொழுது சற்று வருத்தமே மிஞ்சியது. சென்ராயனின் மிகைப்படுத்தப்பட உடல்மொழிகளில் ஆரம்பித்து உச்சி மீது வானிடிந்து பாடல் நிகழும் காட்சியமைப்பு வரை பல காட்சிகள், கேமரா கோணங்கள் உட்பட அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. என்னடா இது என்று ஒரு பெரிய ஏமாற்றம் மனதில் வந்து ஒட்டிக் கொண்டதென்னவோ உண்மை.


உலக நாடுகளின் திரைப்பட வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதெல்லாம் ஒரு நாடு அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுகிறதோ, அதற்குப்பின்னர் அந்நாட்டிலிருந்து வெளிவரும் பல படங்களில் நிச்சயம் அவ்வடக்குமுறை குறித்துப் பேசப்பட்டிருக்கும். இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, போலந்து என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கொரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 90களுக்குப் பிறகு வந்த கொரிய புது அலைப் படங்கள் பலவற்றிலும் 60 – 90வரை கொரியா சந்தித்து வந்து நெருக்கடிகள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதைக் கொரியப் பட ரசிகர்கள் அறிவோம்.கிம் கி டுக் படங்களில் ஆரம்பித்து....Peppermint Candy போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். Attack the gas stationல் இதன் மெல்லிய தீற்றலைக் காண முடிகிறது. ஆனால் மூடர் கூடத்தில் அதன் சட்டகம் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறதேயன்றி, பின்புலங்கள் பல இடங்களில் மாறுபடுகின்றன என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இயக்குனர் நவீனின் பேட்டிகள் பலவற்றையும், மூடர் கூடம் பற்றியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை பார்த்ததிலிருந்து நவீன், படத்தின் அனைத்து துறைகளின் மீதும் நல்ல ஆதிக்கம் உடையவர் என்பது தெரிந்தது. இசையில் இருந்து நடனம் வரை இப்படித்தான் வர வேண்டும் என்ற பிடிவாதமும் தெரிந்தது. நிறைய இயக்குனர்களுக்கு இப்பிடிவாதம் வாய்ப்பதில்லை. அடுத்தடுத்த படங்களில் இதே பிடிவாதத்துடன் அவர் வேறொரு படத்தின் சாயல் இல்லாமல், அட்டகாசமானதொரு படத்தை தருவார் என்று நம்பலாம். அதற்கான  திறமை நிச்சயம் அவரிடம் உள்ளது கண்கூடு. அதுவும் ப்ளாக் காமெடி போன்ற தமிழ் சினிமா பெரிதும் பயணப்படாத தளத்தில் அவர் பயணப்பட்டால் கூடுதல் மகிழ்ச்சி. நம் நாட்டில் நகைச்சுவைக்கா பஞ்சம். மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நாட்டில், நிலாவுக்கு மனிதனை அனுப்பப் போகிறோம் போன்ற ப்ளாக் காமெடிகள் எப்போதும் செழிப்பாக வளையவரும் ஊரல்லவா இது. புதிய இயக்குனர்கள் இதையெல்லாம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் சினிமா ரசிகர்களான நமக்குக் கொண்டாட்டம் தானே. ஆரம்பிப்பார்கள் என்றே நம்புவோம்.


பிகு: ஆறு மாதம் முன்னாடி....மூடர் கூடம் வந்த சமயத்தில் "படப்பெட்டி" இதழுக்காக எழுதியது. போனமாதம் தான் சிலபல நடைமுறை சிக்கல்கள் தாண்டி இதழ் வெளிவந்தது. அதுனால...இத இப்ப ஷேர் செய்யுறேன்

... humans, who were identified as life unworthy of life, including but not limited to the criminal, degenerate, dissident, feeble-minded, homosexual, idle, insane, and the weak, for elimination from the chain of heredity. More than 400,000 people were sterilized against their will, while 275,000 were killed under Action T4, a euthanasia program. 

1) சிம்மச் சந்திரன். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் செயலாளர். சுமார் இரண்டு வருடங்கள் முன்பு, சென்னை - பாண்டிச்சேரிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். கண்டக்டர் வந்து....தன்னுடைய இருக்கை..நீங்கள் எழுந்திருங்கள் என்று சொல்ல....மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் இன்னொருவர் உக்கார்ந்திருக்கிறார், அந்த சீட்டை காலி செய்து எனக்கு கொடுங்கள்....என்று இவர் கேட்க....கண்டக்டர் பதிலுக்கு ஏதோ சொல்ல... இவரும் ஏதோ சொல்ல.... கண்டக்டர் சிம்மச்சந்திரனின் காலிப்பரை ஜன்னல் வழியாக வீசிவிடுகிறார். பஸ்சில் இருந்த சில ஜனங்கள் இறங்கி அதை எடுக்கு முயற்சிக்கும் போது..... யாராவது இறங்கினால்... அவர்களை விட்டுவிட்டு பேருந்து கிளம்பிவிடும்...என்று எச்சரிக்கிறார். சிம்மச்சந்திரனையே இறங்கிபோய் எடுத்துவருமாறு சொல்கிறார். இவரும் சிரமப்பட்டு இறங்கி போய் தன் ஸ்டிக்கை எடுக்கும்போது....கண்டக்டர் பஸ்சை விசிலடித்து கிளப்பிவிடுகிறார்.

2) பார்வைத்திறன் குறைபாடுள்ள ஆட்கள் - தங்களது உரிமைகளைப்பெற (இதையே போராட்டம் நடத்தித்தான் வெளியதெரிய வைக்க வேண்டிய நிலமை) போன வருடம் சென்னையில் போராட்டம் நடத்தியதுப் பற்றி பரவலாக செய்திகள் வந்தததை நம்மில் பலர் கவனித்திருக்கலாம். அந்த போராட்டத்தின் போது நடந்த சம்பவம் இது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்களை, போலீஸ் அரெஸ்ட் செய்கிறோம் என்று சொல்லி...வேனில் அழைத்து செல்கிறார்கள். அப்பறம், உங்களை அரெஸ்ட் செய்யவில்லை..அங்கிருந்து கிளப்பத்தான் அப்படி சொன்னோம் என்று சொல்லி....செங்கல்பட்டு வரை சென்று இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். இவர்கள் பிடிவாதமாக இறங்க மறுத்து....சென்னைக்கு உள்ளேயே இறக்கி விடுங்கள் என்று கேட்கிறார்கள். சரியென்று சொல்லி...கண்ணகி சிலை பக்கத்தில் விட்டுவிடுகிறோம் என்று அழைத்துச் சென்று.....இரவு இரண்டரை மணிபோல ஒரு இடத்தில விட்டுவிடுகிறார்கள். கடற்காத்து அடிக்கவே, இவர்களும் கண்ணகி சிலை தான் போல என்று நினைத்து....விடியும்வரை அங்கயே இருந்துவிடுவது என்ற முடிவோடு...தூங்கி விடுகிறார்கள். காலையில் அந்தப்பக்கம் வந்த ஒருவர் சொல்லித்தான் தெரிகிறது...அது சென்னையில் இருந்து பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஏதோவொரு ஊரின், சுடுகாட்டு பாதை என்று.


ஆட்டோகிராப் என்று ஒருபடம் வந்ததே....அந்த சமயத்தில் எல்லாம் இந்தளவிற்காவது தெளிவாக யோசிக்கத் தெரியாத உயிரினமாகத்தான் இருந்தேன். ஆனால் "ஒவ்வொரு பூக்களுமே' பாட்டை முதல்தடவை பார்க்கும்போதே ஒருவித எரிச்சலே ஏற்பட்டது (சேரன் நல்லது செய்வதாகக் நினைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒவ்வொரு முறை அந்தப்பாடலைப் பார்க்கும் பொழுதும் ஒரு மெல்லிய எரிச்சலே ஏற்பட்டது/படுகிறது. நான் என்ன செய்வது). ஒரு ஷாட்டில், பார்வைகுறைபாடுள்ள ஆள் ஒருவர் வருவார். தேவையேயில்லாமல் அவர் கண்களுக்கு க்ளோஸ்-அப் எல்லாம் வைத்து...அழவிட்டு. என்ன சொல்ல வருகிறார்கள் ? மற்றவர்கள்/உயிரினங்கள் மீது அன்பு தானே வரவேண்டும்....ஏன் பச்சாதாபம் வர வேண்டும் ? இரண்டுக்கும் ஏக வித்தியாசம் உண்டல்லவா. நம்மைப் பார்த்து இன்னொருவர் பச்சாதாபப்படுகிறார் என்றால்...அங்கு முதலில் அடிபடுவது நம் சுயமரியாதை தான். நமக்கு எப்பொழுதும் பரிதாபப்பட (அதோடு, நமது உபதேசங்களை கொட்டவும்,  நான் இதெல்லாம் படிக்கிறேன்/பார்க்கிறேன்/கேட்கிறேன்/போட்டோ எடுக்கிறேன் - நமது அலைவரிசைக்கு மாற்றாக இருக்கும் ஆட்களை ஜாடைமாடையாக மட்டப்படுத்தவும்) எப்பொழுதும் ஒரு ஜந்து தேவைபட்டுக்கொண்டே இருக்கிறது. அப்படியான பரிதாப உணர்ச்சி....ஒரு எழவுக்கும் பயன்படாது என்பதுதான் நிஜம்.

அந்த ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியின் பார்ட் - 1 பாருங்கள். அந்தப் பெண்மணி ப்ளாட்ஃபாரத்தில் ஒருகாலை வைத்து....சின்ன தயக்கத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட குதித்து தான் கடந்து போகிறார். பார்க்கும்போதே சுருக்கென்று என்னமோ செய்கிறது. தினமும் அவர் இவ்வாறுதான் சென்றாக வேண்டும். கோட்டூர்புறத்திற்கு போக வீல்சேர் உள்ளே போகும் பஸ் என்று ஒன்றே ஒன்று தான் உள்ளது போல். இவரும் இன்னொரு பெண்மணியும் பத்து மணியில் இருந்து காத்திருக்கிறார்கள். பஸ் வந்தபாடில்லை. டைம் கீப்பரிடம் கேட்டால், அடுத்த வண்டி பனிரெண்டு மணிக்கு தான்; இதுதவிர வேறு வண்டியில்லை; ஒருவேளை உங்களுக்கு அந்தமாறி வீல் சேர் போகும் பஸ், வேறு பாய்ண்ட்ல் ஓடுவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று இவர்களிடமே கேட்கிறார். இதில் எத்தனை சிக்கல்கள்...எத்தனை மன உளைச்சல்கள் - ஒழுங்கான ப்ளாட்ஃபாரம் இல்லை, பஸ் இல்லை, உள்ள பஸ்களும் இவர்கள் ஏற வசதியாய் இல்லை, வேலைக்கு போயாக வேண்டும், ஆட்டோ மாதிரி வண்டிகளில் போனால் நிச்சயம் காசு அதிகமாகும். இதுவொரு செயின் ரியாக்ஷன் மாதிரி அவர்களது குடும்பம்வரை பாதித்துக்கொண்டே இருக்கும். வீட்டை விட்டு, வேலைக்கு - அன்றாடம் சராசரியான ஆட்கள் செய்யும் வேலை இது - போகும் அடிப்படை விஷயத்திற்கே இவர்கள் இவ்ளோ பாடுபட வேண்டியுள்ளது. இதில் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவது எத்தகையை ஒரு வன்முறையான செயலாக இருக்க முடியும் ? இதுபோன்ற ஒரு சம்பவத்தை ஏதேச்சையாக அன்றைக்கு பார்த்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம்......நான் தான் இளகிய மனம்கொண்டவன் ஆயிற்றே......சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் படும்பாட்டை பார்த்தாலே லிட்டர் லிட்டராக கண்ணீர்விடும் புண்ணியாத்மா நான்.. இப்பொழுது கேட்கவும் வேண்டுமா...பொழக்கென்று அழுதுவிடுகிறேன். அவ்ளோதான். நமக்கும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று திருப்திபட்டுக் கொண்டு..என் பஸ் வந்ததும் ஓடிசென்று ஏறி...அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். இந்த அதீத உணர்ச்சிவசப்படுதலை விட்டுவிட்டு, ஒரு சக மனிதன் மற்றொரு சக மனிதனுக்கு என்ன செய்திருக்க முடியும் ? சரி, எனக்கு உடல்ரீதியாக சில வேலைகளை செய்துகொள்ள முடிகிறது. ஆனால் இவர்களுக்கு அதில் பிரச்சனை உள்ளது...என்ன செய்யலாம் ? அவர்களை நான் மற்றொரு பஸ்சில் ஏற்றி விடலாமா.....முதலில் அவர்கள் நிச்சயமாக அதனை விரும்ப மாட்டார்கள் (ஏனென்று தெரிந்தவர்கள் இந்தப்பதிவை படிக்க வேண்டியதே இல்லை). அடுத்து, யார் அவர்களை இறக்கி விடுவது ?

மாறாக, போக்குவரத்து கழகத்திடம் சென்று இதுபற்றி ஏதாவது கேட்கவாவது செய்யலாம். பத்துபேர் கேட்டல், ஒரு சின்ன அசைவாவது இல்லாமலா போய்விடும் (ஆனால் நிஜத்தில் நூறுபேர் போய் கேட்டும்/போராடியும் இந்த விஷயம் பெருமளவு அப்படியே தான் உள்ளது). இந்தியாவின் ஒருசில மெட்ரோகளிலாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக சில அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உண்டு (அது நிச்சயம் போதாது என்பது வேறுகதை). ஆனால், மற்ற எல்லா இடங்களிலும் மாற்றுதிறனாளிகள் யார் உதவியுமின்றி தங்களது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு குறைந்தபட்ச வசதிகளாவது இருக்கிறதா என்று பார்த்தால்.....ஒரு _______ம் இல்லை. பேங்க், ஸ்கூல், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களிலும் இதே நிலைமை தான். ஒன்று, அவர்கள் மற்றவர்களது தயவை எதிர்பார்க்க வேண்டும். இல்லையென்றால், படுசிரமப்பட்டு உள்ளே சென்று..மிகுந்த ஆயாசத்துடன் அந்த வேலையை முடிக்க வேண்டும். இதிலேயே அவர்களுக்கு ஏகப்பட்ட நேர விரயமும், உடல் உழைப்பும் போய்விடும்.  இன்னமும் என்னால் மறக்க முடியாத விஷயம்...நான் படித்த பல்கலைகழகத்தில், பாத்ரூமில்.....மற்றொரு பிரிவைச் சேர்ந்த, போலியோ பாதிப்பிற்குள்ளான மாணவன் ஒருவன்.....உள்ளே தரையில் அந்த ஈரத்துடன் தவழ்ந்து தவழ்ந்து வந்து....சின்ன ப்ளாட்ஃபார்மில் ஏறி...பீங்கான் கோப்பை அருகே உக்கார்ந்து தான் யூரின் போயாக வேண்டும். இதை டைப்படித்துக் கொண்டிருக்கும்பொழதே...பயங்கரமான நினைவுகளை இது கிளப்பிவிட்டுவிட்டது. என் வயசு தான் அவனுக்கும். மனிதனின் மிகஅடிப்படை தேவை - சிறுநீர் கழிப்பது. அந்த அடிப்படை தேவையை, காலில் உள்ள பிரச்சனையால், ஏகப்பட்ட சிரமத்தைக கடந்து தினமும் படிக்க வரும் ஒருவனுக்கு - சுலபமாக பூர்த்தி செய்யும் அளவிற்கு தானே நமது கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்......ஆனால் இங்கு ஏன் எல்லாம் தலைகீழாக இருக்கிறது ? அதேபோல....பஸ் பிரயாணத்தின் போது - நமது அம்மாவோ/தங்கையோ/தோழியோ/சுற்றி இருக்கும் பெண்கள்....எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறோமா ?


ஒருவீட்டில் உள்ள கழிப்பறையை /யார் அதை சுத்தம் செய்கிறார்கள் என்பதை வைத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் பற்றி சர்வ நிச்சயமாக சொல்லிவிட முடியும். அதேபோல, ஒரு நாடு பெரிய வல்லரசு நல்லரசு என்றால் அதன் அடிப்படை கழிப்பறை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை வைத்து சொல்லிவிடலாம். சத்தியமாக இது என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. அணுவுலை வேண்டும் என்கிறார்கள். வளர்ந்த நாடுகள் அனைத்தும் அதைத்தான் உபயோகிக்கிறது என்று சொல்கிறார்கள். சரி. போகட்டும். சந்தோஷம். ஆனால் வளந்த நாடுகளில்/ வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இப்படி மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் ஒண்ணுக்கு அடிக்க கூட இடம் தேடி ஓட வேண்டிய நிலைமையில்லையே ? அங்கு அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் பூர்த்திசெய்துவிட்டு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். நம் நாட்டில் செய்யப்பட வேண்டிய அடிப்படை விஷயங்களே ஏகத்துக்கும் உண்டு. அதைவிட்டுவிட்டு.....

ஊமை, நொண்டி, அலி, மெண்டல்......இவர்களுக்கு எல்லாம் இந்தியா முழுவதும் ஒரே பெயர் தான். தனியாக தமிழ் ஊமை, கன்னட நொண்டி, மராத்திய அலி, பைத்தியம் என்று யாரும் மொழி/இனம்/ஜாதி/மாநிலத்தை வைத்தெல்லாம் இதில் பிரித்துபேசுவதில்லை. என்னவொரு ஒருமைப்பாடு.சகோதரதத்துவம். இதில் தமிழன், திராவிடம், ஹிந்தி , லொட்டு லொசுக்கு என்ற பேச்சு வேற. எரிச்சல் மண்டிக்கொண்டு தான் வருகிறது. உலகின் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தை - நம் நாட்டுக் குழந்தை. இப்படிபிறப்பு முதல், வளரும் பொழுது பாலியல் கொடுமைகளில் ஆரம்பித்து...ஏகப்பட்ட பிரச்சனைகள். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். இதில் சத்துக்குறைபாடு வேறு இருந்தால்..... recoverable என்ற நிலையில் இருந்து ஒரேடியாக பலஆட்கள் irrecoverable நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

(நம்நாட்டில் அவர்கள் வாழ்கையை மிகுந்த சிரமத்திற்கு இடையே  தள்ளித்தான் ஆக வேண்டும். எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு அரசியல் கட்சியும், இதுவரை மாற்றுத்திறனாளிகள் குறித்த தெளிவான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் படுமோசம். தமிழ், திராவிடம், தனிக்கட்சி என்று பேசிப்பேசியே கண்ணெதிரே உள்ள பல முக்கிய விஷயங்களை கவனிப்பாதோ...பேசுவதோ இல்லை...ஓ..சாரி..நமக்குதான் எல்லாம் நன்றாகத்தானே உள்ளது (ஆண் என்றால் இன்னும் வசதி). நமக்கெதுக்கு இதுபற்றிய பேச்செல்லாம்....என் கவனம் எல்லாம் என் பெயரை கணேஷ் என்று எழுதுவதா...கணேசு என்று எழுதி என் தமிழ் ஆர்வத்தை நிரூபிப்பதா என்பதில் தான் இருக்கிறது. இதுவரை தமிழுக்காக ஒரு மயிரையும் கிழித்தது இல்லை. குறைந்தபட்சம் விக்கியில் என் துறை சார்ந்த கட்டுரை எழுதியிருப்பேனா என்றால்...அதுவும் இல்லை. ஆனால் பேச்சு மட்டும் வாய்கிழியும். செய்வதற்கும்/மாற்றப்பட வேண்டியதுற்கும் ஓராயிரம் விஷயங்கள் நம்முன்னாடி தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருக்கிறது)


இந்த பவர்பாய்ண்ட் - இந்திய சென்சஸ் டிபார்ட்மெண்டே தயாரித்தது. இதில் பல முக்கிய புள்ளிவிவரங்கள் உள்ளன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளிவிவரங்கள்.

இன்னொரு பகீர் விஷயமும் உண்டு. இன்ஷுரன்ஸ். நானும் முடிந்தமட்டும் பல இன்ஷுரன்ஸ் கம்பனிகளின் தளத்திற்குச் சென்று பார்த்துவிட்டேன். ஒருசில இன்ஷுரன்ஸ் தவிர, பலதளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கும் இன்ஷுரன்ஸ் திட்டங்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சரி, LIC - Indian Postal Insurance போன்றவைகளாவது மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ஷுரன்ஸ் பாலிசி திட்டங்களைப் பற்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறதே என்று சந்தோசப்படும்பொழுது...பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லியை சேர்ந்த - பார்வை குறைபாடுள்ள ஒரு வக்கீல், indian postal insuranceல் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். அவருடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - 5 லட்சம். ஆனால் அவருக்கோ....1 லட்சம் மட்டுமே. மற்றொரு கொடுமை....மாற்றுத்திறனாளிகள் அதிக ப்ரீமியம் தொகை செலுத்தியாக வேண்டுமாம். எப்படி இருக்கிறது கதை......மருத்துவ செலவு, உபகரணங்கள், குடும்ப செலவு என்று ஏகப்பட்ட விஷயங்களோட சேர்த்து அவர்கள் ப்ரீமியம் தொகையை அதிகளவில் செலுத்தியாக வேண்டும். என்ன எழவு லாஜிக் இது என்று யாராவது விளக்கவும். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கியிருந்தாலும்..தற்போதைய நிலைமை என்னவென்று தெரியவில்லை. இன்ஷுரன்ஸ் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இதை கொஞ்சம் விளக்கினால் நலம்
நான் படித்த மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக - அமர்த்தியா சென், 2004ஆம் ஆண்டு உலக வங்கியின் மாற்றுத் திறனாளிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் பேசிய....இக்கட்டுரையைச் சொல்லலாம்.
பொளேரென்று முகத்தில் அறை வாங்கியதைப் போன்ற உணர்வு பலஇடங்களில் நிச்சயம் எழுந்தே தீரும். முக்கியமாக இந்த வாக்கியங்கள் "Given what can be achieved through intelligent and humane intervention, it is amazing how inactive and smug most societies are about the prevalence of the unshared burden of disability". இதில் unshared burden....என்னைப் பொறுத்தவரை இந்த burdenனை எப்பொழுதுமே நாம் பலரும் தட்டிக்கழிப்பதிலேயே முனைப்பாக இருக்கிறோமேயன்றி....சுமையை பகிர்ந்துகொள்ள முயற்சிப்பதேயில்லை. உடல் உழைப்பு - பொருளாதாரம் - கல்வி என்று பலவிதங்களிலும் இதனை நாம் செய்ய முடியும். ஒரு வேலையைச் செய்தால்......பதிலுக்கு அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும்.....இப்படியாக மட்டுமே எனது யோசனைகள் எல்லாம் குறுகிக்கொண்டே வருவது எனக்கே நன்றாக தெரிகிறது (இதனை படிப்பவர்கள் சார்பிலெல்லாம் என்னால் கருத்து சொல்ல முடியாதுதானே... அதனால் நீங்களே இதனைப்பற்றி யோசித்துக்கொள்ளுங்கள்). இவருக்கு இந்த வேலையை செய்து கொடுப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்....இந்த பதிவை எழுதுவதால் எனக்கு என்ன கிடைக்கும்....யாருக்காவது பொருளாதாரரீதியிலான வேலை செய்தால் அதிலிருந்து என்ன கிடைக்கும்......ஒருவிதமான முதலீட்டு மனநிலைக்கு நான் பழகப்பட்டுவிட்டேன் என்றே தோன்றுகிறது.

இதில் மூன்று முக்கிய விஷயங்களை அமர்த்தியா சென் முன்வைக்கிறார்

1) Utilitarianism (தமிழில் என்ன ?) - தனிபட்ட மனிதர்களின் மகிழ்ச்சி/திருப்தி/சந்தோஷம் - இவைகளின் அடிப்படையில், ஒருவருக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை மதிப்பிடுவது

2) ஒருவரது பொருளாதார நிலைமையை வைத்து மதிப்பீடு செய்வது

3) மூன்றாவது - Rawlsian Theory of justice. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய சுதந்திரம், அவனுக்கான வெளி, உரிமைகள் அவனுக்கு அவனுக்கு விருப்பமான விஷயங்களின் மீது இருக்கும் தேர்வு...அடிப்படையான நல்லெண்ணங்கள் மூலம்....சமூக ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
Rawls's theory of justice revolves around the adaptation of two fundamental principles of justice which would, in turn, guarantee a just and morally acceptable society. The first principle guarantees the right of each person to have the most extensive basic liberty compatible with the liberty of others. The second principle states that social and economic positions are to be (a) to everyone's advantage and (b) open to all  - Source: Link

இந்த விஷயத்தை என்னால் எளிமையாக விளக்கமுடியவில்லை. தெரியவில்லை. ஓரளவுக்கு இதனை நான் புரிந்துகொள்ள இந்த வீடியோவும், இதுவும் உதவியது

(இதையெல்லாம் கணியன் பூங்குன்றனார் அப்போதே சொல்லிவிட்டார். பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இப்போது சொல்லப்படும் பல கோட்பாடுகளின் பீட்டா வெர்ஷனாக இதனைச் சொல்லலாம்)

மாற்றுத் திறனாளிகள் என்று வரும்பொழுது இந்த மூன்று விஷயங்களும் அடியோடு அடிபட்டு போய்விடுகிறது. ஒன்றும் வேண்டாம்.....திண்டுக்கல் மாதிரி ஒரு ஊரில் மாற்றுத்திறனாளி ஒருவர் சினிமா பார்க்க பிரியப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு அதிலொரு பொழுதுபோக்கு...சந்தோஷம். கொஞ்சம் பணவசதிபடைத்தவராக இருந்தால், கார் - பிரத்தியேக சேர் என்று கொஞ்சமாவது சமாளிக்கலாம் (சரி, அப்படியே அவர் உள்ளே சென்றாலும்.....எப்படியான கழிவறை வசதி இருக்கும் ?). கொஞ்சம் பின்தங்கிய நிலையில் உள்ள ஆள் என்றால் சொல்லவே வேண்டாம். கைவண்டி போன்றவற்றை தான் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கிறார்கள். அவர்களால் எப்படி உள்ளே செல்ல முடியும் ? மிகச்சாதாரண ஒரு பொழுதுபோக்கு அம்சம்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.  இதுபோன்ற எந்த பிரச்சனையும் சந்திக்காத நாம்...படத்தின் இன்டர்வெல்லில் காண்பிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் ட்ரைலர் தரம் குறித்து காரசாரமாக விவாதித்திக் கொண்டிருக்கிறோம். இந்த வித்தியாசத்தின் தாக்கம் குறித்து ஓரளவு நாம் யோசித்தாலே கொஞ்சமேனும் மாற்றம் ஏற்படும் என்று நம்பலாம். மற்றொரு மிகமுக்கியமான விஷயத்தையும் அமர்த்தியா சென் தனது பேச்சில் குறிப்பிடுகிறார். "Earning handicap & Conversion handicap". மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கிடைபப்தும்/ஒரு நிலையான வருமானம் வருவதிலும் உள்ள சிரமம் & வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள், அந்த வருமானத்தை எவ்வாறு/எதற்காக செலவிடுகிறார்கள் என்பதும் தான் அது. இன்ஷுரன்ஸ் -  ஒரு நல்ல உதாரணம். தவிர, மாற்றுத்திறனாளிகளும்  அவர்களைச் சார்ந்தவர்களும் ஒரு வேலையை செய்ய - அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் - செலவிடப்படவேண்டிய நேரம் மிகதிகமாகவே உள்ளது. சொந்தமாக/பிற வேலை செய்யும் மாற்றுத் திறனாளிகளை இந்த நேர விரயம் பெரிதும் பாதிக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதுயில்லை.





Jacques Audiard, மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு உரிய மரியாதையோடும் உரிமைகளோடும் நடத்தும் ஃப்ரான்சில் Rust & Bone மாதிரியான படத்தை எடுப்பதற்கும், நம்நாட்டில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றி/அவர்களை வைத்து எடுக்கப்படும் படத்திற்கும்/படைப்பிற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டுதானே. இங்கு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என்று பலரையும் கேவலமாகத்தான் நடத்துகிறோம். மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளவே பயங்கர கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதை எந்த சினிமாவும்/படைப்பும் நேர்மையாக, இந்தியாவில் பதிவு செய்துள்ளதாக எனக்குத்தெரியவில்லை. வரும் ஒன்றிரண்டு படைப்புகளும் "கவித்துவமான, யதார்த்த" வாழ்கையை பிரதிபலிப்பதாக நீங்கள் நம்ப, உங்களுக்கு பூரண உரிமை உண்டு. அதில் யாரும் தலையிடவே முடியாது. ஆனால் நிதர்சனம் அதுவல்ல ஐயா. மிகக்கொடுமையானது. மாற்றுத்திறனாலிகள் பலரும் சகித்துக்கொண்டுதான் இங்கு வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த சகிப்புத்தன்மையை "யதார்த்தம்" என்று நம்பினால்....ஒன்றும் செய்ய முடியாது. நானும் இதுவரை ஒன்றுமே கிழித்துவிடவில்லை தான். அந்த கையாலாகாததனம்தான்...இப்படி போலிபாவனைகளுடன் கூடிய பதிவாக வந்திருக்கிறது. பொருளாதாரரீதியில் நான் ஏதாவது செய்வது கூட....நான் ஒன்றுமே செய்யவில்லை என்ற குற்றஉணர்வின் காரணமாகவே இருக்கும். Escapist mentality. தனிமனிதனுக்கும் - சமூகத்துக்கும் உள்ள இந்த கட்டமைப்பு பற்றி அடிக்கடி யோசிப்பது உண்டு. எப்பொழுதுமே ஒருவித எரிச்சலான மனநிலைக்கு அது கூட்டிச்சென்று விடுகிறது. சூது, காமம் - இது இரண்டிற்கும் தான் அதிகமாக பயப்படுவேன் என்று பாரதி சொன்னமாதிரி...."இந்த சமூகம் இருக்கே...."என்று ஆரம்பிப்பவர்களைக் கண்டு எனக்கு படுபயங்கர பயம் உண்டு. அப்படியே ஓடிவிடுவேன். சமூகம் என்ன MiBல் வரும் வேற்றுகிரகவாசியா.....எங்கிருந்தோ வந்து இங்கே இறங்கி....தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க. நான்/நீங்கள்/அவன்/அவள்/அது - இதானே சமூகம். Collective conscience தானே அது. நம்மால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்தப்படும் ஒவ்வொரு அதிர்வும் எங்காவது முடிந்துதானேயாக வேண்டும் ?

போன வருடம் சுப்ரீம் கோர்ட், அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது. இதுவே 1995ல் வந்த சட்டத்தின் விளைவாக 18 ஆண்டுகள் கழித்து நடைமுறைக்கு - இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை - வந்துள்ளது.
போன மாதம் Rights of persons with disabilities bill 2014 ஒன்று நடைமுறைக்கு வந்தது. இதுபற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இதன் சாதகபாதகங்கள் குறித்து இன்னும் நான் படிக்க வேண்டியுள்ளது
  1. Disabilities Bill tabled in Rajya Sabha
  2. Why are disability rights activists divided over the Disability Bill?

மேலும் சில முக்கிய லிங்க்கள்:

பிகு:
புதிய தலைமுறையில், ஒவ்வொரு ஞாயிறும் வரும் ரௌத்திரம் பழகு மிகநல்ல/அரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்று. அதனை முன்னின்று நடத்துபவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும். ஒரேயொரு வேண்டுகோள். வாய்ஸ் ஓவரை அவர்கள் குறைத்தால்....நிகழ்ச்சி எங்கோ சென்றுவிடும். வாத்து மேய்க்கும் ஒருவரைப் பற்றி - போனவாரம் என்று ஞாபகம் - நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். நள்ளிரவு. அவர் தீவட்டியை பற்ற வைக்கிறார். இது எல்லாமே மிகத்தெளிவாக விஷ்வலாக தெரிகிறது. அதை ஏன் வாய்ஸ் ஓவரில் வேறு சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. ரௌத்திரம் பழகு நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே ஒருவித சஞ்சலமாகவே இருந்தது. சரியாக, இந்த ரெண்டு வாரத்தில் இணையத்தில்/Facebookல் போட்டப்பட்ட சில பதிவுகளும் காமென்ட்களும்.....சற்று எரிச்சலை ஏற்படுத்திவிட்டது (நானெல்லாம் எரிச்சல்படுவதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை தான்).