When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart- Bela Tarr
கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இந்தப் படம் அதையே எனக்கு ஞாபகப்படுத்தியது.
ஹங்கேரியன் ஒரு சிறிய ஊர்.பனியும் காரணமே தெரியாத பீதியும் சேர்ந்தே படர்ந்திருக்கும் ஊர். யானுஸ் வலுஸ்கா என்ற பேப்பர் போடும் ஆள்.பேப்பர் போடுவதைத் தவிர ஊரின் முக்கிய பிரமுகரான கியோர்கி எஸ்டர் என்பவர்க்கு பணிவிடை செய்யும் வேலையையும் செய்து வருகிறான். கியோர்கி Andreas Werckmeister என்ற ஹங்கேரியின் இசை கோட்பாட்டாளரின் இசை குறித்தான ஆராய்ச்சி செய்து வருகிறார். Werckmeisterன் ஹார்மனியானது இயற்கையின் முழுமையான ஒலி அளவை எட்டவில்லை, வெளிக்கொனரவில்லை. அதனடிப்படையில் அமைந்த அவரின் அனைத்து இசைக் கோர்ப்புகளுமே தவறு என்பதாகப் போகிறது அவரது ஆராய்ச்சி. கியோர்கி மனைவி அவரைப் பிரிந்து அவ்வூரின் முக்கிய போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வருகிறார். புரட்சி இயக்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு இயக்கத்தின் முக்கியமான ஆளும் கூட.
வழமை போல மிகுந்த அசுவாரசியமாக நாட்கள் நகர்கிறது. ஒருநாள் இரவில் நீண்ட நிழல்களை படரவிட்டபடி மிகப்பெரிய ராட்சஸ வண்டி ஒன்று ஊருக்குள் வருகிறது. புகழ் பெற்ற – உலகின் மிகப்பெரிய திமிங்கலமும் ப்ரின்ஸ் என்ற ஆளும் இன்னபிற விசித்திர ஜந்துக்கள் கொண்ட சர்க்கஸ் வண்டிதான் அது. திமிங்கலமும் ப்ரின்ஸும் எந்த ஊருக்கெல்லாம் இதுவரை சென்றிருந்தார்களோ அவ்விடங்கள் எல்லாம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.அதனால் சர்க்கஸ் வண்டி வந்தவுடன் மொத்த ஊரின் கலக்கமும் பலமடங்கு உயர்கிறது. ஆளாளுக்கு அதைபற்றி மட்டுமே பேசுகின்றனர்.வலுஷ்கா எங்கு சென்றாலும் யாவரும் இதைபற்றியே பேசிக்கொண்டிருப்பதும் இவனிடமும் அதைபற்றியே கேட்பதும் வாடிக்கையாகிப்போனது.
இதெல்லாம் கேட்டுக் கேட்டு வலுஷ்கா அத்திமிங்கலத்தின் பால் கடுமையாக ஈர்க்கப்படுகிறான். சர்க்கஸ் திறந்த முதல்நாளே முதல் ஆளாக திமிங்கலத்தை மிகுந்த ஆசையுடனும் ஒருவிதமான பரவசத்துடனும் காண்கிறான்.வார்த்தைகளே இல்லாத மொழியில் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.பெரும் தாக்கத்துடன் வெளியே வருகிறான்.ஆனால் ப்ரின்ஸ் மட்டும் யாருக்கும் வெளியே காமிக்கப்படவில்லை.
இந்நிலையில், கியோர்கியின் மனைவி தங்களது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கண்ணியாமாக மிரட்டல் விடுக்கிறார்.எப்படி ? தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மறுபடியும் கியோர்கியுடன் சேர்ந்து வாழ அவர் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று.அதிலேயே அவர் அரண்டு போய் அவர்களது நிர்பந்தத்திற்கு அடிபணிகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட வலுஷ்காவின் நினைவில் திமிங்கலம் தன் நீச்சலை ஜோராக அடித்துக் கொண்டிருக்கிறது.கியோர்கியிடமும் கடவுளின் எத்தகைய உயர்ந்த படைப்பு என்ற ரீதியில் அடிக்கடி சிலாகித்து பேசி வருகிறான்.
வலுஷ்கா மறுபடியும் திருட்டுத்தனமாக திமிங்கலத்தை பார்க்கச் செல்கிறான்.அந்த வண்டி ஊரின் முக்கிய சந்திப்பில் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.குளிரடைந்த அந்த இரவில் பலபேர் அங்கு குழுமியிருந்தனர்.ஒருவகையான மூர்க்கத்தனம் ஏறிய மனநிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களுக்கிடையே நழுவிச்சென்று திமிங்கலத்தைக் காண்கிறான்.இம்முறை, ப்ரின்ஸ்சை பார்க்க முடியாவிட்டாலும், தன் முதலாளியுடன் ப்ரின்ஸ் ஒரு சிறிய கூண்டினுள் இருந்துகொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளனின் உதவியுடன் தனக்கு இங்கிருந்து விடுதலை வேண்டும் - மக்கள் அனைவரும் என் பின்னாள் அணி திரள்வார்கள் - இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அடியோடு மாற்றப் போகும் புரட்சி நடக்கப்போகிறது என்று உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான்.என்னமோ ஒருவகையான ஆபத்து ஊரைத் தாக்கப்போவதாக அனைவரும் நினைத்தார்களே.........அது இதுதானோ.....
பெரும் கலக்கமுற்றவனாக ஓடத் துவங்குகிறான். இருளைக் கிழித்துக் கொண்டு தீ ஜுவாலைகள் எரிய ஆரம்பிக்கின்றன.ஒவ்வொரு ஆளாக ஒன்றுகூடுகின்றனர். ப்ரின்ஸ் அவர்களுக்கு இடையே இருக்கிறானா ? தெரியவில்லை.கூட்டம் மெல்ல நடைபோட ஆரம்பிக்கிறது.வேகம் அதிகமாகிறது.இன்னும் கொஞ்சம் வேகமாக.இன்னும் கொஞ்சம் வேகமாக. இப்போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே நடக்கிறோம். அதோ , ஆதரவற்றவர்களுக்கான மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.மிகுந்த கட்டுக்கோப்புடன் – கட்டிலில் இருக்கும் நோயாளிகளை முதியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.கண்ணில்படும் அனைத்து பொருட்களையும் – மருத்துவ உபகரணங்கள் உட்பட, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.இதை அனைத்தையும் ஒளிந்திருந்து யானுஸ் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அறையாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.அப்படி நுழைந்த ஒரு அறையில் குளியலறை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கிறது. ஆவேசத்துடன் அதை கிழித்து எரிகிறார்கள்..........அங்கே..................
இதை கண்ட மொத்த கூட்டமும் அப்படியே திரும்பிச் செல்கின்றனர். ஒருவேளை மனித வாழ்கை அவ்வளவுதான் என்று உணர்ந்தவர்கள் கொண்டார்களா.
வலுஷ்கா மிகுந்த மன அழுத்தத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.தூங்காமல் இரவை ஒரு நொறுக்கப்பட்ட கட்டிடத்தில் கழித்த பின், அதிகாலையில் அங்கிருந்து வெளியேறுகிறான்.பெரிதும் கலங்கிய மனநிலையில் ஒரு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்குகிறான்.திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.
ஒரு மனநல மருத்துவமனையில் வலுஷ்கா அமர்ந்திருக்கிறான்.அருகில் கியோர்கி.அவனிடம் அளவளாவி விட்டு வெளியே வருகிறார். சதுக்கத்தை கடக்கும் போது அங்கு இதுவரை வலுஷ்கா வற்புறுத்தியும் பார்க்காத – திமிங்கலம் தனியாக உருக்குலைந்து கிடக்கிறது.விவரிக்கமுடியாத துக்கத்துடன் அதை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
நானும் பல்வேறு நாடுகளின் சினிமாக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.ஆனால், இந்த அளவுக்கு என்னை ஒளிப்பதிவு தாக்கிய படங்கள் ரொம்ப குறைவு. ஊழிப்பெருவெள்ளம் மாதிரியான அப்படியே மொத்தமாக மூழ்கடிக்கும் வகையான ஒளிப்பதிவு இல்லை.சிறுகச்சிறுக அப்படியே உள்ளிழுத்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட பார் காட்சி ஆகட்டும், அந்த திமிங்கலம் ஊருக்குள் வரும் காட்சியாகட்டும், அந்த மாபெரும் கூட்டம் முன்னேறும் காட்சி ஆகட்டும் உண்மையாகவே அவைகளையெல்லாம் பார்த்தால் தான் நான் சொல்ல வருவது புரியும்.
கதாபாத்திரங்களின் நிழலுக்கு உயிர்வந்து கையில் கேமேராவுடன் நடமாடி இருக்கும் போல.அத்தனை நெருக்கம் + தாக்கம்.வீடு சம்பந்தமான காட்சிகளில், அழையா விருந்தாளி போல கேமெரா - கதாபாத்திரங்கள் வரும் முன்னரே வீட்டினுள்ளே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு படம் பிடித்ததைப் போல தோன்றுகின்றன.
படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.கதாபாத்திரங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாமும் அப்படத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக உள்ளிழுக்கப்படுவதாக எனக்குப்படுகிறது.கருப்பு & வெள்ளை படங்கள் என்றாலே தானாகவே ஒரு ஆழம் படத்தில் குடிகொண்டுவிடும்.அதையும் தாண்டி இவர் வைத்திருக்கும் கோணங்கள்...........
அடிக்கடி வலுஷ்கா கடவுள் குறித்து பேசுவதால், அந்த திமிங்கலத்தை கடவுள் சார்ந்த குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா................இல்லை....ஹங்கேரி ஆரம்பகாலத்தில் கடுமையான கம்யூனிசத்தின் பிடியில் இருந்தது.அந்த காலகட்டத்தில் நிலவிய அசாத்திய சூழ்நிலைகளை குறிக்கிறதா..............................கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயமாக்கலால் பல்வேறு தொழில் சிதைவுகள் ஹங்கேரியில் நிகழ்ந்துள்ளதே(அங்கு மட்டும் தானா)........அந்த காப்டலிசம் குறித்தான பார்வையா............அல்லது கியோர்கி செய்து வரும் ஆராய்ச்சி - பேதம் இருப்பதாக அவர் கருதும் இசையமைப்பு போல – சமன்குழைந்த அவ்வூர் மக்களின் வாழ்வு குறித்தானதாகவும் இருக்கலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாமலே கூட அதன் இயக்குனர் கையாண்டிருக்கலாம். அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து இவை எல்லாம் வேறுபடலாம். மேலே குறிப்பிட்டிருக்கும் டாரின் மேற்கோளை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன். (இந்த தகவல்கள், கோணங்கள் எல்லாம் பிறகு நெட்டில் தேடியபோது புலப்பட்டவைகள்).
எனக்கு இந்த படத்தின் முடிவில் அந்த திடுக்கிடும் காட்சி, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடை ஞாபகப்படுத்தியது.அப்படிப் பார்த்தால் இந்தப் படம் நம் நாட்டிற்கே பல சமயங்களில் பொருந்தும். மேற்குறிய அதே மதம் – இசங்கள் காரணமாகவே.
பெல்லா டார் (Bela Tarr) – சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர். 16வயது வரை ஒரு தத்துவவாதியாக ஆவதயே லட்சியமாக் கொண்டிருந்தவர் 17 வயதில் திடீரென்று சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இதில் இறங்கினார்.அவரைப்பற்றி கொஞ்சமே கேள்விப்பட்டுள்ளேன்.தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.
அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் டர்கொவ்ஸ்கி ஆகட்டும் பெல்லா டார் ஆகட்டும், தங்களின் படங்களில் குறியீடுகளை எல்லாம் வேண்டுமென்றே வைப்பதில்லை என்று மறுத்தவர்கள்.மேலும் டார் – ஹெர்சாக் போன்றவர்கள் ஸ்டோரி போர்டு சமாச்சாரத்தை நம்பாதவர்கள்.கேமரா...என்ன சொல்ல. Master of long takes என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் வெறும் காட்சியின் அழகியலுக்காக கேமெரா கோணங்களையும் நீண்ட காட்சிகளையும் இவர் வைப்பதாகத் தெரியவில்லை.
இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). இன்னொரு முக்கியமான விஷயம், இவருக்கும் ஹங்கேரியின் எழுத்தாளரான Lazlo Krasznarhokai உள்ள நட்பு.அவரது பல நாவல்களையே – இந்தப் படம் உட்பட – டார் படமாக்கி உள்ளார்.அப்படியே நாவலை தழுவி எடுக்காமல், ஒவ்வொரு முறையும் எழுத்தாளருடன் அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பாருங்கள்.ஆண்டுக்கணக்கில் நீண்ட காட்சியமைப்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் திட்டமிட்டு................அபாரம் போங்கள். அவரது மிக முக்கியமான திரைப்படம் Satango (Satan + Tango).கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஓடும் திரைப்படும் அது.ஏழரை மணிநேரமாக இருந்தாலும் கூட பார்வையாளர்களை மொத்தமாகத் தன்வயப்படுத்திய படம் என்று தெரிகிறது.
இனி அவரது மற்ற படங்களி தேடிப்பிடித்து பார்ப்பதுதான் என் வேலை.நேற்று இந்த படத்தைப் பார்த்து முடித்த கையோடு மற்றொரு படத்தை தரவிறக்கி விட்டேன்.மற்றவைகளும் இனி பார்க்க வேண்டும்.
- Family Nest (1977)
- The Outsider (1981)
- The Prefab People (1982)
- Autumn Almanac (1985)
- Damnation (1988)
- Satan's Tango (1994)
- Werckmeister Harmonies (2000)
- The Man from London (2007)
- The Turin Horse (2011)
படத்தை இங்கே தரவிறக்கலாம்:



















