Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.- Ingmar Bergman
இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கான ஜாடோர் நடந்து கொண்டிருக்கிறது. உடல் துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. கழுகுகள் அழைக்கப்படுகின்றன.
வெட்டப்பட்ட உடல் – Mountain Patrol குழுவைச் சேர்ந்த காவலாளி.தனியாக காவல் காத்துக்கொண்டிருக்கும் போது வேட்டைக்காரர்களால் பிடிக்கபட்டு கொல்லப்படுகிறான். Mountain Patrol. கிட்டத்தட்ட 5000அடி உயரத்தில் திபெத்திய மலைப் பகுதியில் அமைத்திருக்கும் 'பத்தாயிரம் மலைகளின் அரசன் என்றழைக்கபடும் "கோக்ஷில்" மலையின் கண்காணிப்புக் குழுவினர். இதில் முக்கிய விஷயம், அது அரசாங்கம் நியமித்த குழுவோ.....அல்லது வேறு அரசு சார்ந்த குழுவோ அல்ல.முற்றிலும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு.தொடங்கியவர் – முன்னாள் திபெத்திய படை வீரரான – ரிதாய். அப்படி ஒரு குழுவை அமைத்து மலையை கண்காணிக்கும் அளவிற்கு இவர்களை உந்தியது எது.ஆண்ட்லோப் அல்லது சிரு என்றழைக்கப்படும் அரிய வகை மான் அதிகளவில் நடமாடும் பகுதியே அது.பென்ட்லோப்ஸ் என்ற மானினத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இனமான சிரு உலகளவில் நடமாடும் ஒரே இடம், இந்திய – திபெத்திய – சீன – பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் தான். ஒருகாலத்தில் உலகளவில் பத்து லட்சம் சிருக்கள் இருந்தன. ஆனால், பேராசையுடன் கண்மூடித்தனமாக வேட்டையாடப்பட்டதால், நாற்பது ஆண்டுகளுக்குள் பத்தாயிரத்திற்க்கும் கீழாக குறைக்கப்பட்டது. ஷதூஷ் என்றழைக்கப்படும் அதன் தோலுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டது.என்ன கொடுமை என்றால், கொல்லாமலே அதன் தோலை எடுக்க முடியுமென்றாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாத வேட்டையாடுபவர்களால் வெறித்தனமாக கொல்லப்பட்டது. அதை தடுக்க அமைக்கப்பட்டதுதான் குழு. ஒழுங்கான சம்பளம் இல்லை – உணவு இல்லை – இடம் இல்லை. இருந்தாலும் அவர்களை உந்தியது எது.விடை படத்திலேயே இருக்கிறது.
1996. பீஜிங் நகரத்தில் இருந்து அந்த காவலாளி இறந்த நிகழ்வு குறித்து எழுத வருகிறான் பத்திரிகையாளன் கா.முதலில் அவனை ஏற்க மறுக்கும் ரிதாய், அவன் அவர்களது நோக்கத்திற்கு உதவுவதாய் கூறவே, தங்களுடன் அவனையும் வேட்டையாளர்களை பிடிக்கச் செல்லும் போது அழைத்துச் செல்கின்றார். அன்றிலிருந்து தொடங்குகிறது பல வியப்பான – விசித்திரமான – உருக்கமான – அதிர்ச்சியான அனுபவங்கள். மூன்று ஆண்டுகளாக ஒற்றை ஆளாய் தனியாக காவல் காக்கும் வீரன் -பேறுகாலத்தில் இரக்கமேயில்லாமல் கொல்லப்பட்ட மான்களின் எலும்புகள்-மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருந்த மான் தோல்கள் -கைது செய்யப்பட்டவர்களுக்கும் காவலாளிகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள் - பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் இருந்தாலும் எல்லாவகையான குசும்பும் செய்யும் ஒரு வேட்டைக்கார கிழவன் – மாணவனாக, செவிலியனாக இருந்து இக்குழுவிலும் வேட்டைக்கார கும்பலிலும் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் – ஒரு காதல் – கடும் பனிப் பொழிவுகள் - அனைத்திருக்கும் மேலாக, எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் இழப்புகளுக்கு ஆளானாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ரிதாய்,இந்த எல்லா பயணத்திலும் கா-வுடன் சேர்ந்து நாம் அனைவருமே பங்கேற்கிறோம். என்ன ஒரு இணக்கம்–ஒற்றுமை அக்குழுவினர்களுக்குள். பல்வேறு உயிரிழப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.இருந்தாலும் வேட்டைக்கார தலைவனை பிடித்தே தீருவது என்ற முடிவில் இருந்து பின்வாங்காத ரிதாய் உறுதியாக தன் பயணத்தை தொடருகிறார்.முடிவில் அவரும் கொல்லப்படுகிறார். எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த கா,தனது கட்டுரையின் மூலம் அப்பகுதிக்கு விடிவு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
ஏன் உணவு இல்லாமல் – சுத்தமாக பணம் இல்லாமல் – அன்றாட வாழ்கையே கேள்விக்குறியாக இருந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு போராட வேண்டும்.காரணம் – இயற்கையின்பால் அவர்களுக்கு இருக்கும் நேசம். நாய், எலி, பல்லி, பன்றி, யானை, காக்கை, மாடு என்று எல்லா விலங்குகளையும் பறவைகளையும் – பெயரளவில் – கடவுள்களாக வழிபடும் நம் நாட்டு ஆட்கள் இல்லை அவர்கள். யானை ஊருக்குள் புகுந்தது, இயற்கையின் கோரத் தாண்டவம் – இதெல்லாம் தான் இயற்கை பற்றிய நமது மதிப்பீடுகள். ஆனால் அவர்களுக்கு இயற்கைதான் வாழ்க்கை (இந்த இடத்தில வேதாந்தா போன்ற நிறுவனங்கள் செய்யும் அட்டூழியங்களும் நம் நாட்டில் மலைவாழ் பூர்வகுடிகள் படும் அவஸ்தையும் ஞாபகம் வந்து தொலைக்கிறது). 8500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறப்பது நமக்கு மூன்றாம் பக்க செய்தி.அவர்களுக்கு ஒரு மான் இறப்பதே கடும் துக்ககரமான நிகழ்வு.ஆனால் அதே ஆட்கள் தான் வேட்டையாடுவதிலும் உதவி புரிந்தனர். காரணம் – வறுமை.இருந்தாலும் அத்தகைய கடும் வறுமையிலும் தடம் மாறாமல் இத்தகைய முயற்சி எடுத்த அந்த குழுவினரும் ரிதாயும் எப்பேர்பட்ட மனிதர்கள்.அவர்களைப் பற்றி இப்படத்தின் மூலமாக தெரிந்து கொண்டது நிஜமாகவே நிறைவாக இருந்தது.
இந்தப் படம், ஒரு சிறந்த திரைப்படத்திலிருந்து மகத்தான கலைப்படைப்பாக எனக்குத் தெரிகிறது (என்னளவில்). 2004லாம் ஆண்டு படம் வெளிவருகிறது. சீனாவில் மட்டுமல்லாமல் திரையிடப்பட்ட அனைத்து நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. விளைவு – மான் வேட்டை கடுமையாக தடை செய்யப்பட்டதுடன்,அவ்விடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் சீனா அறிவிக்கின்றது. அதுமட்டுமில்லால், ஆண்ட்லோப் மானின் தோல் விற்பனையையும் உலக நாடுகள் தடை செய்கின்றன. இதைவிட ஒரு படைப்பு என்ன செய்து விட முடியும்.
படத்தை National Geographic Channel தான் தயாரித்து உள்ளது.இன்னொரு முக்கிய அம்சம், வெகு சிலரே படத்தில் தேர்ந்த நடிகர்கள். மற்ற அனைவரும் அங்குள்ள மக்களே. படத்தின் இயக்குனர் LuChuan . உலகளவில் சமகாலத்தின் முக்கியமான படைப்பாளியாக அறியப்படுகிறார். இதுவரை மூன்று படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.அதில் முக்கியமான படம் – City of Life & Death (நாங்கிங் படுகொலைகளை பற்றியது)இதுபற்றி நண்பர் ஒருவர் எழுதுகிறேன் என்று சொல்லியிருப்பதால், மற்றொரு படமான "The Missing Gun" பற்றி விரைவில் எழுதுகிறேன்.இந்த இயக்குனர் எனக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டார். ஜப்பான்–கொரிய படங்களின் இயக்குனர்கள் தெரிந்த அளவிற்கு சீன இயக்குனர்கள் எனக்கு தெரியாது, Zhang Yimou (Red Sorghum, The Raod Home, House of flying daggers புகழ்) நீங்கலாக.இந்த இயக்குனரை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த படத்திற்காக படக்குழுவினர் பட்ட கஷ்டம், ரொம்பவும் உருக்கமானது. இயக்குனர் உட்பட பெரும்பாலானவர்கள் நோய்வாய்ப்பட, 32 வயதேயான படக் குழுவினர் ஒருவர் விபத்தில் இறக்கவும் நேரிடுகிறது.ஆனாலும் அனைத்தையும் கடந்து படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என்ற மனவுறுதி நெகிழச் செய்கிறது.அசல் கலைஞன்.
ஒளிப்பதிவாளர்................என்ன சொல்ல. இன்றிரவே ஒரு சுனாமி வந்து என்ன சுருட்டிக் கொண்டு போனாலும், பல்வேறு கடைசி எண்ணங்களுக்கு மத்தியில்–இவரது காட்சிகளும் வந்து போகும். இயற்கையை இயற்கையாகவே காட்டியிருக்கிறார். வாய்பேயில்லை. என்னவொரு தாக்கம். ஒரேயொரு குறைச்சல்,எந்திரனில் மச்சு-பிச்சுவை வன்புணர்ச்சி செய்தது போல ஒரு வன்புணர்வு காட்சி வரும் என்று மிகுந்த ஜொள்களுக்கு இடையே எதிர்பார்த்தேன். ஒன்றும் வராதது,பெருத்த ஏமாற்றமே. கடைசியாக ஒன்று, இந்த படத்தில் வரும் இறப்புகள் – எந்த உயிரினமாக இருந்தாலும் – அனைத்தும் நிஜம். நடந்தவைகளே. படம் பார்க்கும் போது கண்டிப்பாக கஷ்டம் ஏற்படும் (மறுபடியும் பெர்க்மானின் மேற்கோளை படிக்க வேண்டுகிறேன்). Truth is naked & it will (should) hurt.
ஒளிப்பதிவாளர்................என்ன சொல்ல. இன்றிரவே ஒரு சுனாமி வந்து என்ன சுருட்டிக் கொண்டு போனாலும், பல்வேறு கடைசி எண்ணங்களுக்கு மத்தியில்–இவரது காட்சிகளும் வந்து போகும். இயற்கையை இயற்கையாகவே காட்டியிருக்கிறார். வாய்பேயில்லை. என்னவொரு தாக்கம். ஒரேயொரு குறைச்சல்,எந்திரனில் மச்சு-பிச்சுவை வன்புணர்ச்சி செய்தது போல ஒரு வன்புணர்வு காட்சி வரும் என்று மிகுந்த ஜொள்களுக்கு இடையே எதிர்பார்த்தேன். ஒன்றும் வராதது,பெருத்த ஏமாற்றமே. கடைசியாக ஒன்று, இந்த படத்தில் வரும் இறப்புகள் – எந்த உயிரினமாக இருந்தாலும் – அனைத்தும் நிஜம். நடந்தவைகளே. படம் பார்க்கும் போது கண்டிப்பாக கஷ்டம் ஏற்படும் (மறுபடியும் பெர்க்மானின் மேற்கோளை படிக்க வேண்டுகிறேன்). Truth is naked & it will (should) hurt.


























