Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ..... Be water my friend

மதுரை - 1970களிள் ஒரு நாள். ஒரு அதிரடியான திரைப்படம் மாப்ளை விநாயகரில் வெளியாகிறது.விருதுநகரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் - படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் - மதுரைக்கு வந்து அந்தத் திரைப்படத்தைக் காண்கிறார். மிகப்பெரிய அளவிலான ஒரு தாக்கத்தை அவருள் அந்தப் படம் உண்டு பண்ணுகிறது.மறுபடியும் அந்தப் படத்தை அடுத்த நாளும் பார்க்கிறார்.ம்ஹும்...அப்படியும் ஆர்வம் அடங்கவில்லை.இதுபோல 3 - 5 - 7 - 8 என்று எட்டு முறை அந்தப் படத்தை பார்ப்பதற்காகவே விருதுநகரில் இருந்து மதுரை வந்து செல்கிறார். அவர் - என் அப்பா.அந்தப் படம் - என்டர் தி டிராகன். எங்கப்பா முதல்முதலாக அந்தப் படத்தை பார்க்கும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலை - குதூகலம் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இப்படத்தை மறுபடியும் காணும் போது அவருக்கு இருக்கும். போன தலைமுறையை சேர்ந்த அவரைப் போன்ற ஆட்களை எந்த அளவிற்கு அப்படமும் ப்ரூஸ்லீயும் ஈர்த்திருந்தனரோ - அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் என் தலைமுறையும் - இதற்கடுத்த தலைமுறையையும் ப்ரூஸ்லீ முழுவதுமாக வசீகரித்துள்ளார். நான் எத்தனையோ ஹீரோக்களை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ப்ரூஸ்லீ அளவிற்கு வசீகரமான Screen- Presence உள்ள ஹீரோவை நான் பார்த்ததில்லை. இந்த கட்டுரையை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் How Bruce Lee Changed the World  என்ற ஹிஸ்டரி சேனலின் டாகுமெண்டரியை காண நேர்ந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.


டாகுமெண்டரியின் முக்கிய நோக்கம் லீயின் பிறப்பு வளர்ப்பு, திரைப்பட வாழ்க்கை இவைகளை மட்டுமே பேசும் ஆவணப்படமாக இல்லாமல், லீயின் தனித்தன்மை - வாழ்க்கை குறித்து அவரது கோட்பாடுகள் - அவரது வாழ்க்கை முறை - முக்கியமாக லீயின் வரவால் உலகளவில் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளின் தாக்கம் குறித்தே.அதனாலேயே இதை ஒரு முக்கியமான டாகுமெண்டரியாக நான் கருதுகிறேன்

ஹாங்காங்கில் தன் வீட்டருகே ஒரு தெருச் சண்டையில் லீ மும்முரமாக இருந்தார்.அந்த சண்டையில் அவர் தோற்க நேரிடுகிறது.லீ முதலும் கடைசியுமாக தோற்ற சண்டை அது ஒன்றுதான்.அதற்குப்பிறகு யாராலும் எந்த சூழ்நிலையிலும் அவரை தோற்கடிக்க இயலவில்லை. தோல்வியுற்றது அவரை பெரிதும் பாதிக்கிறது. அதற்ககாகவே ஒரு குங்-ஃபூவை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்து ஒரு மாஸ்டரை நாடுகிறார். அவர்தான் Yip Man என்றழைக்கப்பட்டவராவார்.வுங் சுன் என்ற கலையின் நிபுணர்.லீயின் வாழ்வில் பெரிய மாறுதலை உண்டு பண்ணியவர்.அவர் வெறும் சண்டை முறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாழ்வியல் முறை சார்ந்த தற்காப்பு கலைகளையே பெரிதும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.அவரது சொற்கள் லீயின் மனதில் வெகு ஆழமாகவே பதிந்து விட்டன. தெருச் சண்டைகளுக்காக பள்ளியில் மிகுந்த “நல்ல” பெயர். பலமுறை அவரது பெற்றோரை ஆசிரியர்கள் கூப்பிட்டு கண்டிக்க செய்தனர்.ஆனாலும் அவர் அடங்குவதாய் இல்லை.பெரிதாக ஒன்றும் படிக்கவும் இல்லை.ஆனால் இசை - நடனங்களில் சிறு வயது முதலே மிகுந்த நாட்டம் உள்ளவர்.


                       1959, தன் பதினேழு - பதினெட்டு வயதில் கையில் சொற்ப பணத்துடன் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு வருகிறார். வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் நாடக மேற்படிப்பு மேற்கொள்கிறார். இடையே அனைத்து நாட்டின் தத்துவங்களையும் அளப்பரிய ஆர்வத்துடன் படிக்கிறார். இதற்கிடையே காதல் திருமணமும நடைபெறுகிறது. குங்-ஃபூ கற்றுக் கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்து ஓரளவு அந்தப் பகுதியில் பிரபலமடைய ஆரம்பிக்கிறார்.ஒரு கண்காட்சி போட்டியில் அவரைப் பார்த்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் ஒருவர் The Green Hornet என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க அழைப்பு விடுக்கிறார்(இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு நிகழ்வு ரொம்பவே முக்கியமானது. அதை பிறகு பார்ப்போம்).பின்னர் படிப்படியாக முன்னேறி Enter the dragon என்ற அவரது நான்காவது படமும் வெளியானது. The rest is history. ஆனால் அந்த படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை. வெறும் தற்காப்பு கலைகளுடன் மட்டும் நின்று விடாமல் நடனம், பாக்சிங் போன்றவைகளிலும்  திறமையான ஒருவராக விளங்கினார். தேடித்தேடி படிப்பதிலும் ஆர்வம் உடையவர். அவர் ஒரு Perfectionist. இதுதான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தான் நினைத்த மாதிரி வரும் வரை எந்த விஷயத்தையும் விடுவதில்லை. அவர் இருந்திராவிட்டால் ஹாங்காங் சினிமா வெளிய தெரிய இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். மேலும் அவரது தாக்கம் எந்த அளவிற்கு – எந்தெந்த துறைகளில் எல்லாம் இருந்தது என்பதை இந்தப் படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள். மேலும் ரெண்டு விரல்களாலேயே தண்டால் எடுப்பது – ஒரு குத்தில் எதிராளியை கதிகலங்கச் (One inch punch) – மின்னல் வேகத்தில் தாக்குவது என்று அவரின் திறமைகள் அதிகம். அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனர். இதெல்லாம் கடும் உழைப்பினால் வந்தவைகள்.உழைப்பு என்றால் அளப்பரிய உழைப்பு. மனம் சொல்வதை உடல் செய்யும் உழைப்பு. விசையுறு பந்தினைப் போல ஒரு உடம்பு.



The Green Hornet தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னேன் இல்லையா...ஒரு கராத்தே போட்டிக்கு லீயை ஒருவர் சண்டைக்கு வரச் சொல்லி சவால் விட லீயும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.ஆனாலும் மிகுந்த மன உளைச்சல்.ஏன்.....சண்டையில் ஜெயிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆனதே அதற்குக் காரணம்.தான் இதுவரை கற்றதை வைத்து ஒருவரை இவ்வளவு நேரங்கழித்தா தோற்கடிப்பது என்று ஒரே வருத்தம். இதுவே அவரை ஜி-குன்-டோ என்று அழைக்கப்படும் பல்வேறு வகையான மார்ஷல் ஆர்ட்களின் கலவையான ஒரு சண்டைப் பயிற்சி முறையை கண்டறியத் தூண்டியது. மேலும் உடற் பயிற்சிகளில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மைல் அளவிற்கு ஓடுவதும், சொந்தமாக பல்வேறு உபகரணங்களை வடிவமைப்பதும் என்று பல பயிற்சிகளில் ஈடுபட்டார்.

ஜி-குன்-டோ:
ஒரு ஜென் கதை.சிறந்த வில்லாளி ஒருவன்,தான் சிறப்பான வில்லாளன் தானா என்ற சந்தேகத்தை போக்கிக்கொள்ள ஜென் குருவை நாடுகிறான்.எல்லா பயிற்சியும் முடிந்து வந்தவனிடம் "எங்கே உனது வில்லும் அம்புகளும் ?" என்று ஒருவன் கேட்க, இனி தனக்கு அது தேவையில்லை என்று கூறிச் செல்கிறான். வில் - அம்பு எதுவும் இல்லாமலேயே பார்வையாலேயே அனைத்தையும் வீழ்த்தும் ஆற்றல் உடையவனாக இருந்தான்.உண்மையான ஆற்றல் கொண்டவன் எப்போதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலவீனமானவனும் பயந்தவனும் மட்டுமே ஆற்றல உள்ளவர்கள் போல் தங்களை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.இந்தக் கதையில் வரும் வில்லாளியைப் போன்ற மனநிலை கொண்டவர்தான் லீ.
இது போன மாதம் என் ஊரில் எதேச்சையாக கண்ணில் தட்டுப்பட்டு எடுத்தது

ஜி-குன்-டோவின் அடிப்படை கோட்பாடே மேற்ககூறிய கதையில் அடங்கியுள்ளது. The art of fighting without fighting, style without style – இதுவே அதன் சாரம்சம்.எதிராளி நம்மை தாக்குவதற்கு முன்பாகவே மனதளவில் அவர்களை தோற்கடிப்பது.இதை விட ஒரு சண்டையில் உச்சம் என்ன இருக்க முடியும். அதையும் மீறி அடிக்க வருபவரை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடிகிறது என்பதும் முக்கியம்.அதற்கு ஒரு கலையை மட்டும் உபயோகிப்பது போதுமானதாக இருக்காது என்று கருதி பல கலைகளில் இருந்தும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டார். இதை நான் மேல கூறியுள்ள மேற்கோளில் காணலாம்.சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவது இந்தக் கலையின் முக்கியக் கோட்பாடாக இருந்தது. மேலும் ஜி-குன்-டோ நடைமுறை சண்டைகளில் பெரிதும் கவனம் செலுத்தியது. தேவையில்லாத சண்டைகளில் ஆற்றலை செலவழிக்கக் கூடாது என்பதும் இதன் இன்னொரு முக்கிய அம்சம்.இதை லீயின் பல சண்டை காட்சிகளில் காணலாம். முதல் அடியை பெரும்பாலும் அவர் அடிப்பது இல்லை.

இதுபோன்று தனக்கேன தனி கோட்பாடுகளுடன் வாழ்ந்தவர்தான் லீ.அதுவே அவரையும் பிற ஆக்சன் ஹீரோக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.வெறும் உடல் பலத்தை மட்டும் நம்பாமல் – உண்மையான கோபமும் பலமும் மனதில் இருந்தே வர வேண்டும் எனபதை அவரை பார்க்கும் யாராலும் தெரிந்து கொள்ள முடியும். Enter the dragon படம் வந்த பிறகு தமிழ்நாட்டில் எந்த மாதிரி சூழ்நிலை நிலவியது என்று அப்போது இருந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.ஏன்...அசோகமித்திரனே கூட லீயை பற்றி எழுதிய கட்டுரையை நான் படித்திருக்கிறேன். உலகளவில் அந்த படம் வந்த பிறகு அனைவரும் சட்டையில்லாமல் கண்ணாடி முன் நின்று கத்திப் பார்ப்பது வழக்கமாகிப் போனது.முக்கியமாக பெண்களும் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். பல ஒல்லி உடம்பு "சுள்ளான்களுக்கு" அவர் அளித்து தாக்கம் மிக அதிகம். இன்றும் கூட லீயின் உருவம் தாங்கிய பெயர் பலகைகளை பல ஊர்களில் - குறிப்பாக மதுரையில் - பார்க்கலாம்.மைக்கல் ஜாக்சனின் மூன்-வாக்கையும் லீயை போல கண்ணாடியை பார்த்து நெஞ்சை விறைப்பாக வைத்து அழகு பார்க்காதவர்களும் – அது எந்த நாடாக இருந்தாலும் - மிகச் சில பேரே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எந்த வேலையில் ஈடுபட்டாலும் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக ஈடுபடும் அனைவரும் ப்ருஸ் லீக்கள் தான்.

பி.குகள்:
  • அவரது முக்கிய குருவான Yip manயைப் பற்றி ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட உலகப் புகழ் பெற்ற ஹாங்காங்கின் Wong - kar -wai எடுக்கும் The Grandmasters என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரயிருக்கிறது. தனக்குள் இருக்கும் லீயின் வெறியனுக்காக இந்த படம் என்று அவரே கூறியிருக்கிறார்.
  • இந்த வீடியோக்களையும் பாருங்கள்.



Every child is an artist. The problem is how to remain an artist once we grow up.
- Pablo Picasso


                                

                                     ஒரு பிறழ்ந்த ஊர் (dystopian society). அந்த ஊர்ல ஒரு விஞ்ஞானி இருந்தார்.அதிகப்படியான அறிவுள்ள விஞ்ஞானி.அவருக்கு மனைவி குழந்தைகள்னு யாருமில்ல.இந்த சூழ்நிலை ரொம்பவும் அலுப்பா இருக்கவே....மனைவியையும் குழந்தைகளையும் தன் அறிவியல் திறமையினால பரிசோதனை கூடத்துல தயார் செய்கிறார்.பரிசோதனைல என்ன கோளாறு ஏற்பட்டுச்சோ அவர் நெனச்ச மாதிரி ஏதுவும் வரல. மனைவி வளர்ச்சியில்லாத ஒரு அடி உருவமுள்ள பெண்மணியாகவும், மகன்கள் - மரபணு நகலாக்க (Cloning) முறையில் உருவாக்கப்பட்டவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறைபாட்டுடன் இருக்கின்றனர். வெறுத்துப்போன நம்ம விஞ்ஞானி மேலும் ஒரு மூளையை மட்டும் உருவாக்கி தண்ணிதொட்டிகுள்ள வெச்சு வளர்க்க ஆரம்பிக்கிறார்.அதுவும் போதாம இன்னொரு மனிதனை - தனக்கு இருக்கிற எல்லா ஆற்றலையும் அறிவையும் கொண்டு - உருவாக்குகிறார். அந்த மனிதனின் பெயர் - கிரான்க் (இந்த கதைய படிக்கிறவர்கள் இவன ஞாபகம் வெச்சுக்கோங்க). ஒருநாள் ஏற்படும் தகராறுல கிரான்கும்,அந்த பெண்மணியும் சேர்ந்து நம்ம விஞ்ஞானி மண்டையில அடிச்சு கடலுக்குள்ள தள்ளிற்றாங்க.ஆனாலும் எப்படியோ உயிர் தப்பிக்கிறாரு,அம்னீசியா குறைபாட்டுடன்.கடலுக்கடியில என்னமோ பண்ணி வாழ்கையை ஓட்டிகிட்டிருக்கார்.



அதே ஊர்ல மோசமான சயாமீஸ் இரட்டையர்கள் (Siamese Twins - உடம்பு ஒட்டியே பிறந்த இரட்டையர்கள்)இருக்காங்க.அவுங்க வேல - குழந்தைகளை நல்ல முறையில் தயார் செஞ்சு சீரும் செம்மையுமா - திருட வைக்கிறது. அந்த திருட்டு குழந்தைகளின் கும்பல்ல மியாட் என்ற தலைவி அந்தஸ்துல ஒரு பெண் குழந்தையும் இருக்கு.இந்த குழந்தைகளால, ஒருநாள் ரோட்டுல வித்த காமிச்சிகிட்டு இருக்குற ஒரு ஆள் சாக நேரிடிகிறது. செத்த ஆள்ட வேல செஞ்சுகிட்டு இருக்குறவந்தான் - ஒன் (One). எப்புடியாப்பட்ட சங்கிலில பிணச்சாலும் அத ஓடச்சுகிட்டு வெளிய வரக்கூடிய திறமை உள்ளவன்.மீச வெச்ச கொழந்த - என்ற வாக்கியத்துக்கு பொருத்தமானவன். அவுங்க கூடவே - வீட்டவிட்டு காணாம போய் இவுங்க கையில கிடச்ச-டென்ரீ என்ற சின்ன குழந்தையும் இருக்கான்.நம்ம ஒன் இந்த குழந்தை மேல உசுரயே வெச்சிருக்கான். இப்புடி போய்கிட்டு இருக்கு இவுங்க வாழ்க்கை.

தொட்டி மூளை
ஆறு க்ளோனிங்கள்










ஆங்......நம்ம கிரான்க்க ஞாபகம் வெச்சுக்க சொல்லியிருந்தேனே....அவன பத்தி ஒரு ரொம்ப முக்கியமான விஷயத்த சொல்லாம விட்டுட்டேன். இவன்ட என்ன பிரச்சனைனா,விஞ்ஞானி இவன உருவாக்குனதிலிருந்து - இவன் பிறந்ததிலிருந்து இவனுக்கு கனவுகளே வரதில்லை. கூடவே அழுகையும் வரதில்ல. அதுனால ரொம்ப வேகமாவே வயசு இவனுக்கு கூடிகிட்டு போகுது.இத எப்புடி தடுக்கன்னு யோசிச்சு...ஒருவழிய கண்டுபிடிக்கிறான். உலகத்திலேயே அற்புதமான தூய்மையான கனவுகள காணக் கூடியவர்கள் யாரா இருக்க முடியும்?குழந்தைகளைத் தவிர.அதுனால அந்த ஊர்ல இருக்குற குழந்தைகள கடத்திட்டு வந்து அவுங்க கனவை திருடப் பார்க்கிறான்.இருந்தாலும் எல்லா முயற்சியும் தோல்வி அடைஞ்சுகிட்டே வருது.ஒரு குழந்தையும் அவன் முயற்சிக்கு ஏதுவா இல்லை.


Cyclops
One & Miyat









Cyclops என்ற கண்பார்வை அற்ற கும்பல் ஒண்ணும் அந்த ஊருக்குள்ள இருக்கு. அவுங்களுக்கு "மூன்றாவது கண்" என்ற செயற்கை கண்ணை தயாரிச்சு தந்து பதிலுக்கு அவர்களை குழந்தைகள கடத்திட்டு வர பயன்படுத்திக்கிறான் நம்ம கிரான்க்.இப்புடி ஒவ்வொரு குழந்தையா அந்த ஊருலயிருந்து காணாம போய்கிட்டிருக்கு. Cyclops ஒரு தடவ நம்ம டென்ரீயவே கடத்தி கொண்டுபோயிர்றாங்க. டென்ரீய பாத்த கிரான்க் ரொம்பவே சந்தோசமாயிடுறான். ஏன்னா அவன் நெனச்ச மாதிரி-அவனின் ஆராய்ச்சிக்கு ஏத்த மாதிரி டென்ரீ இருக்கான். ஒன் - துடிச்சுப் போயிர்றான். எப்படியாவது அந்த குழந்தைய மீட்க துடிக்கிறான். அவனுக்கு இதுல திருட்டு குழந்தைகளும் குறிப்பா மியாட்டும் ரொம்பவே உதவி செய்யுறாங்க.இருந்தாலும் பல கடுமையான சோதனைகள சந்திக்க வேண்டியிருக்கு. இதற்கிடையில அம்னீசியாவால பாதிக்கபட்டிருந்த நம்ம விஞ்ஞானிக்கும் நினைவு திரும்புது. இவர்கள் எல்லாம் சேர்ந்து கிரான்க்ட இருந்து டென்ரீயயையும் பிற குழந்தைகளையும் மீட்க முடிஞ்சதா.....ஒன் - டென்ரீ கூட சேர்ந்தானா.....ஒன் மேல அளப்பரிய பாசம் வச்சிருக்கும் சிறுமி மியாட் என்னானாள்.....


உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. Stunning visualsன்னு சொல்வாங்களே........அதுக்கு உதாரணம் இதுதான். எல்லா காட்சிகளும் ஒரு தேர்ந்த சர்ரியலிச ஓவியம் போலவே இருந்தது. இந்த படத்தை குறித்து நெட்டில் படிக்கும் போது - ஒரு சிறுவனின் @ சிறுமியின் பாதி கலைந்த கனவு (Half- Remembered dream) மாதிரியே இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளது தெரிந்தது. அது நிஜமும் கூட.பெரும்பாலான குழந்தைகளுக்கு அஞ்சு வயசுக்கப்பறம் - எல்லா நாட்டிலுமே - nightmare என்று சொல்லக்கூடிய பயமுறுத்தலான கனவுகளே வருகிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. அந்த மாதிரி ஒரு nightmarish yet enjoyableஆனா ஒரு அனுபவமே இந்தத் திரைப்படம். மேலோட்டமாக இந்த படத்தை பார்த்தால் ஒரு சாதரணமான குழந்தைகள் திரைப்படம் என்றே இருக்கும். ஆனால் போகிற போக்கில் பல கேள்விகளை எழுப்பும் என்பது நிச்சயம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்பவும் அருமையான முறையில் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளோனிங்காக ஆறு பேரை வெளிப்படுத்தியவரின் நடிப்பு அபாரம். ஒன் – ஏற்கனவே நமக்கு பரிச்சயமான Ron Perlman (Hell boy) தான். கிரான்க்காக வருபவர் Daniel Emilfork.

           இந்த படத்தின் டைரக்டர்கள் Marc Caro & Jean - Pierre Jeunet. இவர்கள் இதற்கு முன்னர் எடுத்த Delicatessen படமும் சிறப்பான, இதே மாதிரி அமைப்பு கொண்ட என்ற திரைப்படம். குறிப்பாக இப்படத்தை இயக்கிய Jean - Pierre Jeunet மற்றுமொரு திரைப்படம்தான் - Amelie . Del Toro மாதிரியே இவரது படங்களும் குழந்தைகளுக்கான படங்களில் மிகுந்த தனித்தன்மை வாய்ந்தவை.

எனக்கு தெரிந்த வரை படத்தில் வரும் கிரான்க்கை விட நிறைய பெற்றோர்களது நடவடிக்கைகள் இம்சையாக இருக்குது.கிரான்க்காவது குழந்தைகளின் கனவுகளைத் திருட மட்டுமே செய்கிறான்.இங்கே பெற்றோர்கள் குழந்தைகளை கனவு காணவே விடுவதில்லையே. ஒண்ணு, ஸ்ட்ராவ போட்டு அவுங்க கனவுகளை உறிஞ்சிர்றாங்க.இல்ல,இங்க் ஃபில்லர்ல சொட்டு சொட்டா தங்களது கனவுகளை குழந்தைகளின் தலைக்குள் விடுறாங்க.குழந்தைகளுக்கும் சேர்த்தே அவுங்களே கனவு காண ஆரம்பிச்சிர்றாங்க. Materialistic வகையான கனவோ இல்ல அப்துல் கலாம் வகையான கனவுகளையோ மட்டுமே நிறைய குழந்தைகள் காண வேண்டி இருக்கு. இதுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு குழந்தைகள் வெயில்ல காஞ்ச தேங்காய் சிரட்டை மாதிரி ஆயிறாங்க.

City of lost children. நான் மேல கொடுத்துள்ள மேற்கோளை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.இந்த படத்தின் தலைப்புக்கும் அதற்கும் உள்ள தொடர்பு புரியும்.ஒருவேள நமக்குள்ள உள்ள குழந்தைத்தனம் வயது வளர வளர காணமல் போவதைத்தான் lost childrenன்னு அர்த்தப்படுத்துறாங்களோ. கிரான்க் – குழந்தை ரெண்டுமே நாமதான.வெறும் கார்டூன் படங்கள் பார்ப்பதும்,அப்பாவியா பேசுவதும் மட்டுமே குழந்தைத்தனம் ஆயிராது.யார்டையாவது சண்ட போட்டா – தூங்கும் போதே அத மறந்திட்டு – அடுத்தநாளே பழைய மாதிரி பேசிக்கும் மனசு குழந்தைகளோடது. அது வேணும். 

1940களில் ஒரு நாள்:
                        ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்....கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.

1944:
             ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.

1959:
               திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.


“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.


         தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.

பி.யூ.சின்னப்பா:

                                                  
M.T.B - ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை 
                     
“பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்:


                                   
கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக  - அந்த ஏழு ஆண்டுகளிலும்  மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் - மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு "தீராக்காதலி" என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.

எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:

எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா...எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்" என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?. புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலம் என்பது கழங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்

                                                                                                                           – மனோன்மணீயம்


                                                                             
இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு - Circle of Zen - உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு - பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட - சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்" இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு யாராவது ஒரு இசை விமர்சகர் ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி.

ஏனென்றால் சாரு அவர்களே, இந்த புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ - சாரு அவர்களைத் தவிர்த்து - எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் - காதல் - இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயத்தை எழுத்தாளர்களாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

              இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் - அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்தும் தாராளமாக நீங்களும் சொல்லலாம்.
ஒருவழியாக அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்தே விட்டது. இன்செப்ஷன் படத்தை நல்ல தரமான ப்ரின்ட்டில் நேற்றுதான் பார்க்க முடிந்தது. படம் ரிலீஸ் ஆன போதே தியேட்டருக்கு அடிச்சுபிடிச்சு போனா நம்ம ராமநாராயணனின் படத்துடன் “The Last Airbender” படத்தின் போஸ்டரே இருந்தது. இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு கவுன்டரில் விசாரித்த போது இன்செப்ஷன் அடுத்த வாரம் தான் இங்க ரிலீஸ்  என்ற  அதிர்ச்சிகரமான தகவலைச் சொன்னார்கள். The Last Airbender டிக்கெட் இருக்கு..தரட்டான்னு இன்னொரு அதிர்ச்சிகரமான கேள்வியை கேட்டார். ஏற்கனவே அந்த படத்தின் ட்ரைலர் பார்த்திட்டே கொல்லிமலை பக்கம் ரெண்டு நாள் பதுங்கிட்டேன். இப்படியாக எனக்கும் நோலனுக்குமான சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. நேற்றுதான்(இந்த நேற்று - ரெண்டு வாரங்கள் முந்தி) திருப்தியாக நல்ல ஒரிஜினல் ப்ரிண்டில் பார்த்தேன்.


              ஏற்கனவே பல ஜாம்பவான்களும் இப்படத்தை பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி எழுதிவிட்டதால் எனக்கு படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் கூறுகிறேன். நான் ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். சிறிது ஏமாற்றமே மிஞ்சியது.ஒருவேளை சப்-டைட்டிலுடன் பார்த்ததால் வந்த வினையோ..Memento அளவிற்கு இந்தப் படம் என்னை ஈர்க்கவில்லை. படத்தின் முக்கிய திருப்பங்களில் ஒருவித deliberateness இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.சிறிய அளவே ஏமாற்றமே தவிர பல விஷயங்கள் கையாளப்பட்ட விதம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. குறிப்பாக நம் ஆழ்-மனதின் எண்ணங்களை நம்மால் ஒருபோதும் கட்டுக்குள் வைக்க இயலாது என்ற விஷயம். அப்பறம் இன்னொரு விஷயம்..ஏற்கனவே Paprika என்ற அனிமேஷன் திரைப்படம் இதே கதைக் கருவுடன் வந்துள்ளதாகவும்...நோலன் அதிலிருந்து சுட்டதாகவும் ஒருபேச்சிருக்கிறதே..யாராவது விளக்கினால் தேவலை..

       கனவு – என்றவுடன் எனக்கு உடனே வேறு பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும்.அதில் குறிப்பிடத்தகுந்த மூன்று விஷயங்களை இங்கே பகிர ஆசைப்படுகிறேன். இதற்கு மேலும் தெரிந்து கொள்ள நம் எஸ்.கேவைத் தொடர்புக் கொள்ளவும்.

தமிழ்மறை:
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இதற்கு உங்களுக்கே அர்த்தம் தெரிந்திருக்கும். இதில் முக்கியமானதாக நான் நினைப்பது, இந்த குறள் உள்ள அதிகாரம் -  நிலையாமை

சல்வடோர் டாலி:

இருக்கு ஆனா இல்ல – அதாங்க Surrealism - அந்த வகை ஓவியங்களில் மிகக் கைதேர்ந்தவர். இம்சை அரசன் மாதிரி மீசை வைத்திருப்பார்.“உலகத்தின் இயக்கத்தை மீசையின் மூலமே உணர்கிறேன்” என்று சொன்னவர். தன்னுடைய ஓவியங்களுக்கு கனவுகளே உந்துசக்தியாக இருப்பதாக சொன்னவர்.மக்கள் ஏன் அதிதமாக கனவு காண்பதில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டவர். புகழ் பெற்ற இயக்குனர் லூயி புனுவேலுடன் ஒரு படத்திலும் ஹிட்ச்காக்குடன் ஒரு படத்திலும்(Spellbound) சேர்ந்து பணியாற்றி உள்ளார். எனக்கு இவரைக் குறித்து மிகக் குறைவாகவேத் தெரியும். இவர் குறித்த ஒரு டாகுமெண்டரியை சு.மோகன் அவர்கள் கொடுத்துள்ளார். இன்னும் பார்க்கவில்லை. எதற்கு இவரைப்பற்றி ஆரம்பித்தேன் என்றால் இவரது இந்த ஓவியம் எப்போதுமே என்னை வசிகரித்துள்ளது. 


இந்த ஓவியத்தை எப்போது முதலில் பார்த்தேன் என்று நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை (இருங்க..கொஞ்சம் விட்டத்த பார்த்து யோசிக்கிறேன்...ஆங்...வாவ் 2000-ஆனந்த விகடன்). But persistence of vision is still persisting in my memory. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தைக் கூட இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். நம் கனவுகளும், ஏன் வாழ்க்கையும் கூட இதுபோல் ஒரு கரையும் வஸ்து தானே...முடிந்தால் இவரது பிற ஓவியங்களை இங்கே காணுங்கள்.அனைத்திலும் ஒரு கனவுத்தன்மை இருப்பதைக் காணலாம்.

ஜென்:
எனக்கு ஜென் கதைகள் மிகவும் பிடிக்கும்.அதில் இந்த கதை ரொம்பவும் பிடிக்கும்.

சீடன் கேட்கிறான் “என்ன ஆழ்ந்த யோசனை குருவே’”. குரு “நேற்று என் கனவில் ஒரு பட்டாம்பூச்சி வந்தது”. “இதில் என்ன வியப்பு குருவே” – சீடன். “ஒன்றுமில்லை.என் கனவில் பட்டாம்பூச்சியா இல்லை பட்டாம்பூச்சியின் கனவில் நானா என்பதுதான் குழப்பமே ”.

                                            எனக்கு ஒரு மொக்கையான எண்ணம் தோன்றுகிறது. Multiverse கோட்பாட்டை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.சூரியனின் கிரணங்கள் பூமியை அடைய 8 நிமிடங்கள் 31 நொடிகள் ஆகும். ரொம்ப தூரமான கிரகத்திலிருந்தோ...நட்சத்திரத்திலிருந்தோ இதைவிட அதிக நேரமெடுத்துக் கொள்ளும். ஒருவேளை அந்த உலகில் ஒரு பட்டாம்பூச்சி கனவு காண்கிறது – 3 நிமிடங்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ண அலைகள் பூமியை அடைய கண்டிப்பாக மாதங்கள் ஆகலாம். அதுவே 30 நிமிடங்கள் என்றால்...வருடங்கள் ஆகலாம். அதுதான் நம் வாழ்நாளோ...பட்டாம்பூச்சி உறங்குவது போலுஞ் சாக்காடு அது உறங்கி விழிப்பது போலும் நம் பிறப்பு.

சற்றே பெரிய பின் குறிப்புகள்:

  • ஒருமாதமாக செம வேலை. உடம்பு வேறு கொஞ்சம் சரியில்லை (நடந்தா கூடவே வருது). அதான் கொஞ்சம் இடைவெளி. புத்தாண்டு வாழ்த்து சொன்ன நண்பர்களுக்குக் கூட பதிலளிக்கவில்லை. புத்தாண்டு மீது அவ்வளவாக பிடிப்பில்லாததும் ஒரு காரணம். எனக்கு எப்படியோ லீவ் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.
__________________நா இனிமேல் கையை ஆட்டிகிட்டி போஸ் கொடுக்க மாட்டேன் – ஓபாமா
__________________நா இனிமேல் சட்டை இல்லாம போஸ் கொடுக்க மாட்டேன் – புடின்
__________________நா இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் – பெர்லூஸ்கோனி
__________________நா இனிமேல் தான் ஏதாவது பண்ணுவேன் – மன்மோகன் சிங்
__________________நா குஷ்பு கூட இனி பேச மாட்டேன். மானாட மயிலாட பார்க்க மாட்டேன் – கலைஞர்
__________________நா எங்க வீட்டு டெலிபோன் பில்ல கட்ட மாட்டேன் – ஆ.ராசா
__________________ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா – அழகிரி
__________________நா கருந்தேள் பேரில் பதிவு எதையும் போட மாட்டேன் – குருணாநிதி
__________________ணா...சாகும் வரை என் படங்களை நானே தொடர்ந்து பார்க்கும் போராட்டத்தை தொடங்குவேன் – விஜய்.
__________________நா இனி நடிக்க மாட்டேன் – சுந்தர்.C (ஓ....அப்புடியே நடிச்சிட்டாலும்.....)
__________________நா என் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன். டெனிம் மோகன ஹீரோவாவும் என்னை யாருன்னு தெரியாதுனு சொன்ன சு.மோகனை வில்லனாகவும் நடிக்க வெச்சிட்டு நா ஒதுங்கிக்க போறேன் – சாம் ஆண்டர்சன் (தல..அவுங்களுக்கு நீங்களே பரவாயில்லை)
__________________ஆபிரகாம் லிங்கனை கொன்னவனுக்கும் சோனியா குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட மாட்டேன் – சுப்பிரமணிய சுவாமி
__________________சும்மா இருத்தலே சுகமன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே - நித்தியானந்தர்

மேலே இருக்கும் கோட்டுல என்ன வரும்? அதாவது கொழந்த சீக்கிரம் பதிவு போடா விட்டால் – னு வரும்...இப்ப படிச்சு பாருங்க.கரெக்ட்டா வருதா...நா பதிவு போடாட்டி உலகளவுல கொந்தளிப்பு இருக்கும்...குறைந்தபட்சம் பதிவுலகத்திலயாவது ஏதாவது இருக்கும்னு பார்த்தா...ம்கும்..ஒன்னும் நடக்கல..அதான் பூன கண்ண மூடுனா உலகமே இருண்டிருமாம்..சரிதான்..ரைட்..முதல் paraவை எப்படியோ தேத்தியாச்சு.

கலக்கல் காமெடி: Naked Gun Series
  • From the Files of Police Squad!
  • The Smell of Fear
  • The Final Insult
டிஸ்கி: படத்தின் தலைப்பை பார்த்திட்டு ஏதோ வேற மாதிரி படத்தை எதிர்பார்த்து ஏமாந்தீங்கன்னா நான் பொறுப்பில்லை.

Spoof – Parody வகைப் படங்கள் உங்களுக்கு பிடிக்குமா?(எனக்கென்னவோ பல தமிழ் படங்களே Spoof  மாதிரிதான் தெரியுது). Spoof படங்கள் குறித்து இதில் எழுத இணையத்தில் தேடியபோது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தது. முதல்முதலாக பரவலாக அறியப்பட்ட Spoof படம் எப்ப வந்திருக்கும்னு நினைக்குறீங்க – 1922.படம்:Mud & Sand. அந்த காலகட்டத்தில் வெளிவந்த Blood & Sand படத்தின் Spoofவாம் அது. அதை தொடர்ந்து Dr. Pyckle and Mr. Pryde - 1925. டைட்டில பார்த்த உடன் தெரிந்திருக்கும் - Dr. Jekyll and Mr. Hyde படத்தின் Spoof இதுன்னு. 1940களில் ஒரு உலக புகழ்பெற்ற ஆளிடமிருந்து வந்த Spoof படம் குறித்து ஏற்கனவே நான் எழுதியுள்ளேன்.

அப்படியே கொஞ்சகொஞ்சமாக வளர்ந்துவந்த Spoof படங்களுக்கு தனி பாணியை ஏற்படுத்தியவர் – Mel Brooks. இவரது History of the World படத்தை நாம் பலரும் பார்த்திருப்போம். பின்னி பெடலேடுத்திருப்பார். அவரை தொடர்ந்து பிரிட்டைனை சேர்ந்த Monty Python குழுவினரும் கலக்க ஆரம்பித்தனர்(இந்த பேரை மட்டும் எங்கேயோ கேட்டிருக்கேனே தவிர அவர்களது எந்த படத்தையும் நாடகத்தையும் பார்த்ததில்லை).இதற்கு அடுத்ததாக வந்தவர்கள்தான் David Zucker, Jim Abrahams, and Jerry Zucker கூட்டணி. அவர்கள் எடுத்த Airplanes, Naked Gun Series படங்கள் இன்றளவும் சிறந்த Spoof படங்களாக கொண்டாடப்படுகின்றன. இந்த Naked Gun Series படங்களில் நடித்து புகழ் பெற்றவர் - லெஸ்லி நீல்சன்.


மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்காம காமெடி பண்ணுவார். பார்த்த உடனே யாராயிருந்தாலும் சிரிப்பது நிச்சயம். நம்ம மிர்ச்சி சிவாவுக்கெல்லாம் காமெடில தாத்தா இவர்.இவரது சேட்டைகளை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. முதல் பாகத்தில Clint Eastwood – Dirty Harry படத்தில் ஒரு புகழ் பெற்ற டயலாக் வரும்
[Harry Callahan - Clint Eastwood] 
Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy.
The Mayor: Intent? How did you establish that?
Harry Callahan:  When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross!
The Mayor: He's got a point.

அத இந்த படத்தில் இவர் சொல்லுவார் பாருங்க......

Frank:  When I see five weirdos stabbing a guy in broad daylight, I shoot the bastards. That's my policy.
The Mayor:  That was a Shakespeare In The Park production, you moron! You killed five actors! Good ones!

இந்த படம் மூன்று பாகங்களா வெளிவந்தது. முடிஞ்சா தொடர்ந்து மூன்று பாகத்தையும் பாருங்க. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து நமது பதிவுலகத்தின் மூத்த பதிவர்களில் ஒருவர் – பல ஆண்டுகளாக பதிவுலகில் இயங்கிவரும் – உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் என்னைப் போன்ற சிறுவர்களுக்கும் வழிகாட்டியாய் திகழும் - பதிவுலக பூந்தோட்டத்தின் காவல்காரன் – புலன் விசாரணை புலி – பதிவுலகத்து வல்லரசு – தங்கத்திலும் சொக்கத் தங்கம் – மரியாதைக்குரிய – எங்கள் அண்ணா – கேப்டன் கருந்தேள் எழுதியுள்ளதை படித்து கதை குறித்தும் படம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    
அட்டகாசமான திரில்லர்:

Seven, Fight Club – போன்ற செமையான படங்களின் இயக்குனர் - எனக்கும் உங்களுக்கும் பிடித்த David Fincherன் இன்னொரு அட்டகாசமான திரில்லர் தான் Zodiac திரைப்படம். ஒரு சைக்கோ கொலையாளி – சும்மா கொலை மட்டும் பண்ணாம ஒவ்வொரு தடவையும் சின்ன சின்ன க்ளுவை பத்திரிக்கைகளுக்கு அனுப்புறான். அது எப்படிப்பட்ட க்ளுனா Zodiac letters – அதாவது Special charactersன்னு சொல்லுவோம்ல, அதான், அந்த வகைல இருக்கும். அவனுக்கும் ஒரு பத்திரிக்கையாளனுக்கும் நடக்கும் ஆட்டம் தான் கதை. போஸ்டர் பார்த்தாலே பார்க்கணும்ன்னு தோணனும். சில பேருக்கு இந்தப் படம் பிடிக்காம கூட இருக்கலாம். எனக்கு ரொம்பவும் பிடித்தது. இது குறித்து தனியாவே ஒரு பதிவு எழுத நினைத்திருப்பதால் இப்போதைக்கு இந்த ரெண்டு போஸ்டரோட அப்பீட் ஆகிக்கிறேன். திரில்லர் பிரியர்கள் இந்தப் படத்தை இதுவரைக்கும் பார்க்கலைனா கட்டாயம் உடனே பாருங்க.(ஆனா ஒரே பேருல ரெண்டு படம் இருக்கு - ஜாக்கிரதை). 


மேற்கொண்டு இந்தப் படத்தை பற்றி விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
2, ஈபிள் டவர் அருகில், பாரிஸ்,
பிரான்ஸ்.

போன்:  ஏக் சூன்ய சூன்ய சூன்ய தோ சார் ஏக்.........

முதல் மொக்கை:
இது ஒரு தமிழ் படம்...அதோட நிறுத்திகிட்டு உங்க ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன். என்னால சமாளிக்க முடியாதுப்பா....

ரெண்டாவது மரண மொக்கை:
இவ்வளவு நேரமா படிச்சும் அது என்னனு தெரியலைனா உங்கள மாதிரி பச்ச மண்ணுக்கு இந்த ரத்த பூமில என்ன வேல...

பி-கு: இது போன பதிவுக்கு முன்னாடியே எழுதியது. அதான் போன போஸ்ட்லயே ஒரு மொக்க பதிவுன்னு எச்சரிச்சிருந்தேனே...அப்பறமும் ஏன் படிச்சீங்க...அது உங்க தப்பு..மேலும் நானும் எத்தன நாள் தான் சுவாரசியமாவே எழுதுறது (எங்க ஓடுறீங்க), என்னாலயும் மொக்கையா எழுத முடியும்ன்னு நிரூபிக்கவே இது...                      
ரொம்ப நாள் கழித்து எழுதுவதால் ஒரு மொக்க பதிவ தான் யோசிச்சு வெச்சிருந்தேன். ஆனா எப்ப இந்த பாடல்களை கேட்டேனோ அப்ப இருந்து இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாட்டி தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு ஏன் ரகுமான் பிடிக்கும் என்பது குறித்தும் அவரது இசையில் – ஏதோ என் அறிவிற்கு எட்டிய வரை - தெரியும் உலகளாவிய தன்மை குறித்தும் தனியே எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு எண்ணம். அதுக்கு ஒரு முன்னோட்டமா இதை ஆரம்பிக்கிறேன்.


இப்ப உங்க முன்னாடி ரெண்டு வாய்ப்பு இருக்கு. ஒண்ணு - வரிசைல நின்னு கும்பலா ஒருத்தர் முதுகு நம்ம முகத்தில உரச ஒரு 5 நிமிஷம் குற்றாலத்தில குளிக்கிறது. இன்னொன்னு – ரொம்ப தூரமா, கடினமான நடை தேவைப்படும், அதேசமயத்தில சுவாரசியம் நிறைந்த பாதையில போனா மட்டுமே சென்று குளிக்கக் கூடிய இன்னொரு அருவி இருப்பது தெரிய வருது. ரெண்டுல எதை நீங்க தேர்ந்தேடுப்பீங்க?. மாமூலான முதல் வகைனா இந்தப் இசைத் தொகுப்பு உங்களுக்கு பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ரெண்டாவது வகையறாக்களுக்காகவே இந்த ஆல்பம் என்று கூட சொல்லலாம்.
                                        
தனித்தனியா ஒவ்வொரு பாடலா பிரிச்சு சொல்லக் கூடிய அளவிற்கு எனக்கு இசை அறிவோ பொறுமையோ கிடையாது.அதுனால மொத்தமா சொல்றேன். மத்த எல்லா இசை அமைப்பாளர்களை விட ரஹ்மான் எனக்கு ரொம்ப பிடித்துப் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்று – அவர் எந்த இசையையும் ஒதுக்குவதில்லை. அதற்கு சரியான மற்றுமொரு உதாரணம் இந்தத் தொகுப்பு. ஏன்..நீங்க தாள் ஹிந்தி படத்தின் தீம் இசையை கேட்டிருப்பீங்க. அதுல தண்ணி விழுவதை கூட சிவமணியும் ரகுமானும் சேர்ந்து பின்னி பெடலேடுத்திருப்பாங்க. இத எதுக்கு சொல்லுறேன்னா இசை அவர்ட இருக்கு இவர்ட இருக்கு இங்கிருக்கு அங்கிருக்குனு காமெடிக்கு சொன்னாலும் அதுதான் நிஜம். அதை முழுமையா எனக்கு புரிய வெச்சதுல பெரும் பங்கு ரகுமானையே சாரும்.



127 HOURS - Track Listing:
1. Never Hear Surf Music Again - Free Blood
2. The Canyon - A.R. Rahman
3. Liberation Begins - A.R. Rahman
4. Touch of the Sun - A.R. Rahman
5. Lovely Day - Bill Withers
6. Chopin: Noctrne No. 2 in E flat, Op. 9 No. 2
7. Ca Plane Pour Moi - Plastic Bertrand
8. Liberation In A Dream - A.R. Rahman
9. If You Love Me (Really Love Me) - Esther Phillips
10. Acid Darbari - A.R. Rahman
11. R.I.P. - A.R. Rahman
12. Liberation - A.R. Rahman
13. Festival - Sigur Ros
14. If I Rise - Dido / A.R. Rahman


இந்த ஆல்பத்தில் இருக்கும் Acid Darbaariல வரும் குரல் அது மாதிரியான ஒரு பெரிய அனுபவமா கேக்குறவங்களுக்கு இருக்கும். உலகப் புகழ் பெற்ற உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்று என்று பெரும்பாலானவர்கள் சொல்லும் பிரெஞ்சுன் Edith Piafன் ஒரு version – மற்றொரு ஆங்கில பாடகி பாடியதுதான் If You Love Me (Really Love Me). சத்தியமா தூங்கிருவீங்க. அட்டகாசம். இன்னொரு ரகளை - Ca Plane Pour Moi. இந்தப் பாடல் கூட 1977லேயே வந்ததாம். அதை ரகுமானின் Orchestrationல கேட்கும் போது என்னவொரு துள்ளல்,உற்சாகம். வாய்ப்பேயில்லை.Liberation Begins, Liberation in a dream, Liberation – படத்தோட கதை தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம ரொம்ப சுலபமா புரிஞ்சிடும். Johnny Gaddaar ஹிந்தி படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். அந்த படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்(Shankar-Ehsan-Loy).அதில் வரும் ஒரு அட்டகாசமான பாடல் Move your body. அதைப் பாடிய Hard Kaurரை ரஹ்மான் R.I.P பாடலில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று நீங்களே கேளுங்கள்.மற்றுமொரு புகழ் பெற்ற 70’s R & B வகைப் பாடல் Lovely Day by Bill Withers. இன்னொரு அட்டகாசம் (இந்த தகவல்கள் நெட்டில் தேடிய போது கிடைத்தவைகள்). ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த Sigur Roosன் இசையே Festival. நீங்க Eminemன் Stan என்ற செமத்தியான பாடலை நிச்சயமாக கேட்டிருப்பபீர்கள். அதில் introintroவாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் – புகழ் பெற்ற பாடகி Dido. அவரோட நம்ம ஆளு இணைந்து பாடி இருக்கும் பாடல் If i rise. இந்த வருடம் ஆஸ்காருக்கு இந்தப் பாடல் தேர்ந்தேடுக்கப்டும் என்று நெட்டில் பேச்சு அடிபடுகிறது.இன்னொரு பொக்கிஷம் Chopin: Nocturne No. 2 in E flat, Op. 9 No. 2. Classical வகை இசை.பாருங்க...ஒரு ஆல்பத்தில் எத்தனை வகை இசை.. எத்தனை நாட்டின் இசை என்று. அதான் ரஹ்மான். 


கடைசியா ஒரு பாடலை சொல்றேன். அதுதான் ஆல்பத்தின் முதல் பாடல் - Never Hear Surf Music Again – Free blood குழுவினரின் பாடல். ட்ரைலரில் கூட இதான் வரும். ஒருமாதிரியான psychelidic வகை பாடல். சத்தியமா மிரண்டே போய்ட்டேன். இது வேற குழுவின் பாடல் என்றாலும் கூட ரகுமானின் இசைச் சேர்ப்பு மிரட்டுகிறது. இதன் ஒரிஜினலே இப்படித்தானா என்று தெரியவில்லை.ஆக மொத்தம் டெல்லி-6க்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடித்த ரகுமானின் இசைத் தொகுப்பு. Haunting music.அப்படியே எங்கேயோ இழுத்திட்டு போயிருது. அவசரமா எழுதுவதால் சரியாக சொல்ல நினைத்தவைகளை சொல்ல முடியவில்லை. தயவுசெய்து யாரும் மிஸ் பண்ணக் கூடாத - பண்ண முடியாத இசைத் தொகுப்பு. உங்களது எல்லாவித ரசனையும் சோதித்துப் பார்க்கும். அதற்கு சரியான தீனியும் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.