
என் அறிவுக்கு எட்டிய வரை ரெண்டே ரெண்டு வகையான இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சினிமா - எடுக்கத் தெரிந்தவர்கள்; சினிமா மட்டுமே, அதுவும் சினிமாவை சினிமாவாக எடுக்கத் தெரிந்தவர்கள்.இதில் ஹெர்சாக் எந்தவகை என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இவரை நான் தெரிந்து கொண்டதை பற்றி சின்ன சுருள்.ஏற்கனவே
இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.இருந்தாலும் மறுபடியும் எழுதுவதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை(அது படிப்பவர்களுக்குத் தானே).உயிர்மையின் ஒரு கட்டுரையில் - ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன் – சாரு, கின்ஸ்கியின் கிட்டே கூட சிவாஜி நெருங்க முடியாது, இதை நான் சொல்லவில்லை உலக திரைப்பட மக்கள் அனைவரும் சொல்கின்றனர் என்று ரீதியில் ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்.எனக்கு பயங்கர கோபம்.சிவாஜியை இப்படியா மட்டம் தட்டுவது.யார் இந்த கின்ஸ்கி ? என்று தேடத் தொடங்கி அது ஹெர்சாக்கில் போய் நின்றது.சரி....இந்த கதை போதும்.இருங்க....மற்றொரு விஷயம்.அகுர் பற்றிய எனது பழைய பதிவில் கருந்தேள்,க.காதலன் போன்றோரது லிங்க்களை உபயோகப்படுத்தியிருந்தேன். அதில் கருந்தேள் தளத்தில் மட்டும் காப்பிரைட் அதுஇது என்று இருந்ததால் மெர்சலாகி அவர் தளத்தில் உங்க லிங்கை பயன்படுத்தியிருக்கிறேன் என்று கமென்ட் போட்டிருந்தேன்.பாருங்க.......அந்தளவிற்கு வெகுளியாக இருந்திருக்கிறேன்.இப்போது..................
சினிமா – இயக்கம் என்று யாராவது சொன்னால், தானியங்கியாக எனது மனம் இரண்டு பேரிடம் போய் நிற்கும்.ஒருவர் –
ஸ்கார்சேஸி. மற்றொருவர் – ஹெர்சாக்.இரண்டு பேரின் அநேக திரைப்படங்களையும் பார்த்து விட்டேன். அலுக்காமல் சலிக்காமல் மறுபடிமறுபடியும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
ஹெர்சாக் அளவிற்கு versataility கொண்ட மற்றொரு இயக்குனர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை (என் அறிவு சின்னது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்). அண்டார்டிகாவில் – அமேசான் காடுகளில் – இந்தியாவின் உதய்பூரில் – இந்தோனேசியாவில் – ரஷ்யாவில் – திபெத்தில் என்று எங்கெங்கோ சுற்றிச் சுற்றிப் படம் எடுக்கிறார்.அதனால் மட்டுமே அவர் படங்கள் என்னை கவர்ந்து விடவில்லை.அந்த படங்கள் ஏற்ப்படுத்திய தாக்கம்.எப்பேர்ப்பட்ட இயக்குனராக இருந்தாலும் அதானே முக்கியம். ஹெர்சாக் பற்றி ஓரளவு எனக்கு தெரிந்தவைகளை –இணையத்தில் படித்தவைகளை வைத்து – இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
ஹெர்சாக்கின் குழந்தை பருவம், வளர்ந்த சூழல் இதெல்லாம் குறித்து தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.ஏன் என்று கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே புரியும். மியூனிக் நகரில் பிறந்து ஜெர்மனின் Chiemgau Alps மலைத்தொடரின் அருகில் இருந்த பவேரிய பகுதிக்கு அவர் குடும்பம் குடியேறுகின்றனர். அற்புதமான மலையும் மலை சார்ந்த சூழ்நிலையும் நிலவும் பகுதி.பனிபடர்ந்த மலைத் தொடர் – ஒளியை சிதறடிக்கும் ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகள்.இதுபோன்ற சூழ்நிலையில் வளரும் எந்தவொரு மனிதனின் நினைவிலும் இயற்கை வியாபித்திருப்பது......இயற்கையே.இரண்டாம் உலகப்போர் சமயம்.ஹெர்சாக்கின் பக்கத்து வீட்டில் பெரும் குண்டு விழுந்து அவ்வீட்டார் அனைவரும் இறக்க நேரிடுகிறது.போர் குறித்த பார்வையை அவர் மனதில் இந்நிகழ்ச்சி ஆழமாக பதிக்கிறது.அவரின் படங்களில் தீர்க்கமாக இவ்விரண்டு விஷயங்களும் வெளிப்படுவதைக் காணலாம்.
12 வயதில் மறுபடியும் மியூனிக். 14 வயதில் திரைப்படங்கள் குறித்த ஒரு புத்தகத்தை படிக்க நேரிடுகிறது.முழுக்க முழுக்க சினிமாவை விரும்ப ஆரம்பிக்க அப்புத்தகம் ஒரு காரணம் என்று அவரே குறிப்பிடுகிறார்.அதற்கடுத்த ஆண்டே – 15வது வயதிலேயே, ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்து வைத்திருக்கிறார். பதினாறு – பதினேழு வயதிலேயே முதல் படத்தை இயக்கம் வேலையை ஆரம்பிக்கிறார். அதற்கு கேமெரா? மியூனிக் திரைப்பட பள்ளியில் இருந்து ஒரு 35mm கேமேராவை "எடுத்துக் கொண்டு" வருகிறார். ஊரார் மொழியில் – திருடிக்கொண்டு.அதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.
"I don't consider it theft, it was just a necessity. I had some sort of natural right for a camera, a tool to work with."
இந்த காலகட்டத்தில் தான் அவரும் – தாயாரும்(தந்தை அவர்களை விட்டுச்சென்ற பலகாலம் ஆகின்றது)வேறு வீட்டிற்குக் குடியேறுகின்றனர்.இங்குதான் மிக முக்கியமான ஒரு சந்திப்பு-அவருக்கும்,சினிமாவுக்கும்.கிளாஸ் கின்ஸ்கி அவர்கள் குடியேறிய வீட்டில் ஒரு பகுதியில் இருந்தார்.தனது முதல் படத்தை எடுப்பதற்காக அந்த காலகட்டத்தில்-வெல்டராக,பார்கிங் பகுதிகளில் வாகன ஒழுங்கமைப்பாளராக, ஏன் மெக்சிகோவின் எல்லை வழியாக டிவிகளை கடத்தும் ஆளாக -என்று பல வேலைகளில் ஈடுபடலானார்.
1964ஆம் ஆண்டு, இருபத்தி மூன்றாம் வயதில் சிறந்த திரைக்கதைக்கான கார்ல் மேயர் பரிசினை வெல்கிறார்.அந்த திரைக்கதையே அவரது முதல் முழுநீள படமாகவும் – Signs of life(1968) பின்னர் ஆயிற்று. ஆனால் இதற்கெல்லாம் முன்னரே பத்தொன்பது வயது முதலே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்திருந்தார். Herakles (1962) - Game in The Sand (1964) - The Unprecedented Defence of the Fortress Deutschkreuz (1966) - Last Words (1968).
1969ஆம் ஆண்டு மிக முக்கியமான படமான Even dwarfs started small வெளியாகிறது. என்ன படம் அது ?உருவ குறைபாடுள்ள ஆட்கள் குறித்த கதை.ஒருவகையான ஒவ்வாத சமூக கட்டமைப்பிற்குள் சிறைப்பட்ட ஆட்கள் அதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவதே அக்கதை. கற்பனைதான். இருந்தபோதிலும் இது போன்ற கருத்துக்கள் அவரது மற்ற படங்களிலும் விரவியிருப்பதைக் காணலாம். உண்மையான, நடிக்கத் தெரியாத உருவ குறைபாடுள்ள ஆட்களை வைத்து - நான் கடவுளில் பாலா செய்ததை விட அதிகமாகவே - 41 ஆண்டுகளுக்கு முன்னரே ஹெர்சாக் செய்து விட்டார். படத்தை பார்த்தல் ஒழிய நான் சொல்வது புரியாது.
1970 – மிக மிக முக்கிய(உலகளவிலும் கூட) இன்றளவிலும் கொண்டாடப்படும்,
Aguirre, the Wrath of God வெளியாகின்றது.இந்த படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து தனியாக பத்து பதிவே எழுதலாம்.நூறு பன்றிகளுக்கு மத்தியில் உறங்கி – சாப்பிட உணவில்லாமல் கஷ்டப்பட்டு – பல்வேறு நோய்களுக்கு மத்தியில் – ஹெர்சாகின் ஹிம்சைகளுக்கு நடுவே – ரெண்டு ஆதிவாசி குழுவினர்களுக்கு இடையே – கரைபுரண்டோடும் வெள்ளத்தைத் தாண்டி – இதுகுறித்தெல்லாம் விரிவாக
My Friend Klaus Kinski டாகுமென்டரியில் காணலாம். மற்ற யாராக இருந்தாலும் இதுபோன்ற சிரமங்களுக்கு அப்பறம் மறுபடியும் அங்கே செல்லவே மாட்டார்கள். ஆனால் இவரோ, மறுபடியும்
Fitzcaraldo என்ற படத்திற்காக மறுபடியும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கு திரும்புகிறார்.
Fitzcaraldo..............இந்த படத்தை பற்றி சொல்வததெற்கேல்லாம் ஒரு தனி தகுதி தேவை.அது எனக்கு சத்தியமாக கிடையாது.இருந்தாலும்,சொல்ல முயற்சிக்கிறேன்.
Fitzcaraldo – காட்டின் நடுவே பெரிய ஓபெரா குழுவை அமைக்க பாடுபடும் ஒருவனது கதை.ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.சரி, இதிலென்ன விஷேசம்?அமேசான் காட்டில் இரண்டு கிளை ஆறு சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஒரு சிறிய குன்று.அதற்கு இந்தப்பக்கத்தில் Fitzcaraldo குழுவினர் இருக்கிறார்கள்.தனது ரப்பர் வியாபாரத்திற்கு அந்த பக்கம் சென்றால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்ற அதற்காக 320 டன் எடைகொண்ட அந்தக்கப்பலை மெதுவாக குன்றின் மேலே நகர்த்தி இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் கொண்டு செல்ல திட்டமிடுகிறார், பழங்குடியினரின் உதவியுடன். இதுதெரிந்து அவரது குழுவினர் விட்டுச்செல்ல, பழங்குடியின மக்களின் உதவியுடன் அதை கடைசியில் சாதித்தும் காட்டுகிறார். Fitzcaraldoவாக, வேறு யார் இருக்க முடியும், கின்ஸ்கிதான். இந்த படத்தில் வரும் அத்தனையும் நிஜம். 320டன் கப்பல் – பழங்குடியினர் – அவர்கள் பட்டபாடு – கப்பல் பாறையில் மோதியது – அத்தனையும். பாறையில் கப்பல் மோதிய விபத்தில் கேமேராமேன் காயத்துடன் உயிர்தப்புகிறார்.இந்த படத்தை எடுத்த "வரலாறு" குறித்தே தனியாக
மற்றொரு படமே உள்ளது.

இவர் 1974ஆம் ஆண்டு எடுத்த மற்றொரு அற்புதம் The Enigma of Kaspar Hauser.1810ஆம் ஆண்டு ஜெர்மனியின் நுரேம்பெர்க் நகரில் பிறந்த காஸ்பர் ஹவூர் என்ற மனிதன் பற்றிய கதை. தன் வாழ்நாளின் முதல் ஒன்றல்ல – ரெண்டல்ல – பதினேழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு தெரிந்த ஒரே ஆள் கருப்பு கோட்டுடன் அவனுக்கு உணவு வைப்பவன் மட்டுமே.இந்நிலையில் 1828ஆம் ஆண்டு, பதினேழு ஆண்டுகள் கழித்து முற்றிலும் ஒரு புதிய மனிதனால் விடுவிக்கப்படுகிறான்.சுத்தமாக ஒன்றும் காஸ்பருக்கு புரியல்வில்லை.யாரிடம் – எவ்வாறு – எப்படி நடந்து கொள்வது....ம்ஹும்...ஒன்றும் விளங்கவில்லை.அவனது இயலாமையை பயன்படுத்தி சர்க்கஸ்காரர்களால் பிடித்துச் செல்லப்படுகிறான்.ஒருவாறு எழுத – படிக்க – வேற சில வாழ்க்கை முறைகளை கற்றுக் கொள்கிறான். இருந்தாலும் கூட இசையின் மீது அளப்பரிய ஆர்வம்.உடனே கிரகிக்கும் குணம் இருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து ஒருசில முகம் தெரியாதவர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு - வெளியே வந்த ஐந்து ஆண்டுகளிலேயே - இறக்கிறான். பலவேறு தளங்களில் இந்த படம் கேள்வி எழுப்புகிறது.சமூகத்தால் எப்படி இதுபோன்ற ஒரு ஆள் சீரழிக்கப்பட்டான், மனிதர்களின் பொது புத்தி என்ன இதுபோன்ற பல கேள்விகளை எள்ளலுடன் இப்படம் முன்வைக்கிறது.இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இதுவொரு உண்மைக்கதை.நிஜ காஸ்பரின் கடிதங்களை – பொருட்களையே படத்திலும் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் காஸ்பராக நடித்த, ப்ருனோ என்பவர் கூட சிறுவயதில் இதேபோல கொடுமையை அனுபவித்தவர்.நடிப்பே சுத்தமாக வராதவர்.இருந்தாலும் அவரை நடிக்க வைப்பதால் ஒரு எதார்த்தம் வரும் என்று கருதி பெரும் சிரமங்களுக்கு அப்பறம் – ஒரு காட்சியை எடுக்கவே சிலநேரம் மாதக்கணக்கில் ஆகுமாம் – படமாக்கி இருப்பார்.
ஒரு படத்தில் நடித்த அனைவரும் hypnotize செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா............ஹெர்சாகின் Heart of Glass (1976) படத்தில் அது நடந்திருக்கிறது.ரூபி க்ளாஸ் என்ற வித்தியாசமான கண்ணாடி தயாரிக்கும் முறை தெரிந்த அந்நகரத்தின் ஒரே ஆளும் இறக்க நேரிடுகிறது.அதுபோன்ற கண்ணாடிகள் இனி தயாரிக்க முடியாமல் அந்நகரமே பித்து பிடித்து நிலைக்கு ஆளாகின்றது(என்னயிருந்தாலும் ஊரின் பெருமை பறிபோகின்றது அல்லவா). இதுபோன்ற மனநிலையில் இருக்கும் ஊர் மக்களின் கலங்கிய மனநிலையை பிரதிபலிக்கவே அந்த ஹிப்னாடிசம்.
இவரது மற்றொரு மிக முக்கியமான டாகுமென்டரி Grizzly man. பதிமூன்று ஆண்டுகள், அலாஸ்காவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் கரடிகளுடன் பழகிய திமோதி ட்ரட்வெல் பற்றிய படம்.பல தடவைகள் கரடிகளுடன் நெருங்கிப்பழகி அதை படம்பிடித்து கரடிகள் வேட்டையாடப்படுவதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.ஓரளவு கரடிகளுடன் தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கமும் வந்தது.ஆனால் முற்றிலும் எதிர்பாராதவிதமாக ஒருநாள் தன் காதலியுடன் கரடியின் நடவடிக்கைகளை படம்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கரடியால் ரொம்பவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை பிளக்கப்பட்டு உயிரிழக்கிறார்.அவரது இறப்பு மரணக் கூச்சல் அத்தனையும் அவரது வீடியோ காமேராவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.சாகும் தருவாயில் தான் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து காதலியை தப்பிச் செல்லுமாறு கூறுவதும் பதிவாகி உள்ளது.ஏன் ஹெர்சாக் இந்த படத்தை,மனிதரை குறித்து படம் எடுக்க வேண்டும் ? திமோதி ட்ரட்வெலே ஒரு சமயம் தன் காதலியிடம் ஏதோ ஒரு உள்ளுணர்வில், தனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால்,அதையும் படமாக எடுக்க வேண்டும்.கரடிகள் குறித்த விழிப்புணர்வுக்கு அது பெரிதும் பயன்படும். அத்தகைய படம் எடுக்க ஹெர்சாக் போன்ற ஒருவராலேயே முடியும் என்று கூறியிருக்கிறார்.
இடைசொருகலாக ஒன்று.ஹெர்சாக் வளர்ந்து வந்த இந்த காலகட்டம்தான், எழுபதுகள், German New Wave Cinema Period என்றழைக்கபட்டது. 50களில் முடிவுற்ற Italian Neorealism, 58ல் தொடங்கி 60கள் வரை நீண்ட French New Wave ( Godard – Truffaut – Chabrol போன்றவர்களெல்லாம் அப்பொழுதுதான் பிரெஞ்சு சினிமாவை மட்டுமின்றி,உலக சினிமாவையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்).இவைகளின் நீட்சியாக ஜெர்மன் நியு வேவை சொல்லலாம்.அப்பொழுதுதான் ஹெர்சாக் – விம் வெண்டர்ஸ் (Paris:Texas, Wings of Desire) – வோல்கர் ஸ்க்ராஃப் (குந்தர் கிராஸின் புகழ் பெற்ற நாவலான The Tin Drumமை எடுத்தவர்) – ஃபாபின்டர் (Fear Eats the Soul) போன்றவர்கள் கிளர்த்தெழுந்து வந்தனர்.1962 – 1982 வரை இந்த காலகட்டமாக கூறுகின்றனர்.
இப்படியாக பல்வேறு கதையாடல்கள் கொண்ட – கலிடோஸ்கோப்பை உருட்டினால் தெரியும் விதவிதமான வடிவங்கள், நிறங்கள் போல – படங்களையும் அதைவிட முக்கியமாக டாகுமெண்டரிகளையும் எடுக்க ஆரம்பித்தார். இவரது பரந்துபட்ட பார்வைக்கு சான்றாக – உதய்பூர் மகாராஜா குறித்த Jag Mundir – திபெத்தில் நடைபெறும் பௌத்தர்களின் புனித காலச்சக்கர சடங்கு குறித்த Wheel of Time(தலாய் லாமா உடன் ஒரு அற்புத உரையாடலும் உண்டு) – வியட்நாம் போரில் மாட்டிக்கொண்ட ஒரு ஆளை பற்றிய Little Dieter Needs to Fly (பின்னாளில் இதுவே Rescue Dawn படமாக எடுக்கப்பட்டது) – புகழ் பெற்ற ஜெர்மனிய இசைகோர்ப்பாளரான ரிச்சர்ட் வேக்னர் பற்றிய The Transformation of the World Into Music – 92ஆம் ஆண்டு கல்ஃப் போரின் பின்னணி,அதுமுடிந்து அங்கு நிலவிய சுழல், எண்ணைக் கிணறுகள் குறித்த பரந்துபட்ட பார்வை என்று மிக விலாவரியாக அலசும் Lessons of Darkness – ரஷ்யாவின் மிஸ்டிக்தன்மை குறித்தான Bells from the Deep – டாகுமென்டரிகளைக் கூறலாம்.எத்தனை வகையான தேடல் உள்ள மனிதர்.
கிளாஸ் கின்ஸ்கி உடனான இவரது “நட்பு” குறித்த
My Friend Klaus Kinski டாகுமெண்டரியை யாரும் தவற விட வேண்டாம்.ஒரு இயக்குனர் எந்தளவுக்கு நடிகரின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியும், அற்புதங்களை வெளிக்கொணர முடியும் போன்றவைகளை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஹெர்சாகின் படங்களில் நான் பார்த்த வரை மூன்று விஷயங்கள் இருக்கும்:
இயற்கை....இயற்கை......இயற்கை:
தமிழ் படங்களில் தவறாது இடம்பெறும் வன்புணர்வு காட்சி பெருமளவில் இயற்கை சார்ந்ததாகவே இருக்கும்.சமீபத்திய உதாரணம் – எந்திரன்:மச்சு பிச்சுவில் எடுக்கபட்ட கிளிமான்ஜாரோ பாடல்.என்ன மாதிரியான இடம் அது..........அதில் சங்கர் வகையறாக்கள் செய்த கொடுமை சொல்லிமாளாது. அதே இடத்தில்தான் ஹெர்சாக் அகுர் படத்தை எடுத்தார்.அதுகுறித்து My friend klaus kinski டாகுமென்டரியில் அவர் கூறுகையில் “கின்ஸ்கி எவ்வளவோ வற்புறுத்தினார்.தன் முகத்திற்கு க்ளோஸ் அப்பும், ஹாலிவூட் வகையான ஒரு ஷாட்டும் மச்சு பிச்சுவை நோக்கி வைக்குமாறு. ஆனால், எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை.நான் என்ன போஸ்ட் கார்டில் அச்சிடவா போட்டோ எடுக்கிறேன்.இயற்கையை உள்ளபடி உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது”. அவரது படங்களில் nature will be explored, not exploited. பெரும்பாலான படங்களில்(ஹாலிவுட்டில் நிறையவே) இயற்கை சுரண்டலுக்கு உள்ளாகும்.ஹாலிவுட்டை ஆதர்சமாக நினைக்கும் நம்மாட்கள் எடுப்பது மட்டும் எப்படி இருக்கப்போகின்றது.
பரந்துவிரிந்த நிலப்பரப்புகள், மேகங்கள், புல்வெளிகள், காடுகள், மரங்கள், விலங்குகள்,பறவைகள் என்று அனைத்தின் மொழியையும் கேமேராவின் வழியாக மொழிபெயர்ப்பதையே முழுநேர தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் போல. ஹெர்சாகின் இந்த இயற்கை மீதான தேடலுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தைப் போல சிறுவயதில் இயற்கை சார்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததும் கூட ஒரு காரணம்.இதுகுறித்து ஒரு பேட்டியில்
“I like the jungle against my better judgment. You see I have always functioned well when it comes to a real physical sort of filmmaking. I wouldn’t be that good in the sterile atmosphere of a studio.”
கதாபாத்திரங்களின் வயப்பாட்டுத்தன்மை(Obsession):
அகுர் ஆகட்டும் – ஃபிட்ஸ்கரால்டோ ஆகட்டும் – பேட் லெப்டினன்ட் ஆகட்டும், அந்த கதைகளின் முக்கிய கதாபாத்திரம் ஒருவகையான obsessionனிலேயே இருப்பார்கள்.இது ஹெர்சாகின் ஆல்டர் – ஈகோ என்று பலரும் கூறுகின்றனர். இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அது வரும் வரை விடவே மாட்டாராம்.அது எத்தனை ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் கூட - தனக்கும் தன் குழுவினருக்கும் – அதிலிருந்து பின்வாங்க மாட்டார்.ஒன்றல்ல, ரெண்டல்ல – ஐந்து முறை உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. அகுர் படப்பிடிப்பிற்காக அவர் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட, அந்த விமானம் பெரும் விபத்திற்குள்ளாகின்றது.பயணம் செய்த அனைவரும் இறக்க, ஒரே ஒரு பெண்மணி மட்டும் உயிர்பிழைக்கிறார்.பத்து நாட்கள் காடெல்லாம் அலைந்து கடைசியாக ஒரு கிராமத்தை அடைகிறார்.அங்கு அவர் சந்தித்த ஒரு ஆள் அகுர் படத்தில் அப்போது நடித்துக் கொண்டிருந்தார்.அவர் மூலம் ஹெர்சாகிற்க்கு இவ்விஷயம் தெரியவர, மிகுந்த ஆச்சரியம் + அதிர்ச்சி அடைந்து அவர் ஒரு படமே எடுக்கிறார். Wings of Hope.
மற்றொரு விஷயம், ஹெர்சாக் குறித்து விஷயங்களை இணையத்தில் தேடிய போது, இந்த obsession தொடர்பாக ஒரு தளத்தைக் காண நேரிட்டது.அதில் அவரையும் மற்றொரு இயக்குனரையும் ஒப்பாய்வு செய்து ஒரு கட்டுரை உள்ளது.ரெண்டு பேருக்குமே இவ்விஷயத்தில் படுபொருத்தம் போங்கள்.அவர்..................
ஸ்டான்லி குப்ரிக். அந்த கட்டுரையை
இங்கே படிக்கலாம். மேலும் போர், காலனியாதிக்கும் போன்ற விஷயங்களும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.
தத்துவார்த்த கூறுகள்,சமூகத்தை நோக்கி எதிர்கேள்வி எழுப்புதல்: அனைத்தையும் மௌனமாக:
அகுர், ட்வார்ஃப், ஃப்ளூ யான்டர் போன்ற பல படங்களில் அடிநாதமாக ஒரு கேள்விக்குறி ஓடிக்கொண்டே இருக்கும்.அது நம்மை நோக்கியா இல்லை நாம் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகளா என்பதை பார்ப்பவர் மனநிலையை பொறுத்தது. அவரது படங்களில் எல்லாமே யதார்த்தமும் புனைவும் மெல்லிய மூடுபனியால் மூடப்பட்டிருக்கும்.அதை விலக்கிப் பார்க்க முற்படுவதற்க்கு பதில் அதை ஒரு கோப்பை தேனீருடன் ரசிப்பதே மிகவும் பொருத்தமாய் இருக்கும்.
ஹெர்சாக் தனது படங்களை டாகுமெண்டரி – திரைப்படம் என்று பிரித்துப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை.அவரை பொறுத்த வரை அவருக்கு படம் மட்டுமே எடுக்கத் தெரியும்.அவை அந்த வகையா இந்த வகையா என்றெல்லாம் பிரிப்பது அவர் வேலை இல்லை.Passion – என்ற வார்த்தைக்கு ஜெர்மனிய அகராதியில் ஹெர்சாக் என்று அர்த்தம் இருக்குமோ என்னவோ. தேடித்தேடிப் போய் விஷயங்களை சேகரிக்கிறார்.வெறும் பணத்துக்காகவோ புகழுக்காகவோ இதெல்லாவற்றையும் ஒருவரால் செய்ய முடியாது. அதற்கெல்லாம் மேலான அளப்பரிய ஆர்வம் ஈடுபடும் செயலின் மீது இருக்க வேண்டும். மேலும் தான் கற்றுக் கொண்டவைகளை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் நிறைய இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார்.
நான் எழுதியதில் மிகவும் சந்தோசப்படும் பதிவுகளில் நிச்சயமாக இதுவும் ஒன்று.இது போன்ற ஒரு ஆளை குறித்து எழுதியதற்கு ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களில் ஏறக்குறைய அனைத்தையும் நான் பார்த்து விட்டேன்.அந்த படங்களை பார்த்து முடிக்கவே இத்தனை நாள் ஆயிற்று.இல்லாவிட்டால் எப்போதோ இவரைப் பற்றி எழுதியிருப்பேன். அனைவரும் தவறாது
My Friend Klaus Kinski டாகுமென்டரியையாவது பார்க்க வேண்டும்.ஹெர்சாக் தவிர கின்ஸ்கி என்றொரு மகத்தான நடிகனையும் தெரிந்து கொள்ளலாம்.என் பதிவுகளை வாசிப்பவர்கள் மொத்தமே ஒரு 100 - 150 பேர்தான் இருக்கும்.அதிலும் ஒருசிலரை தவிர பெரும்பாலவர்கள் தலைப்பு -----> கமென்ட் செக்ஷன், அப்படியே போய்விடுவார்கள். மீதி படிக்கும் ஒருசிலரில் வெகுசிலராவது இந்த படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.இதுவரை ஹெர்சாக்கை பாத்திராதவர்கள் கூட இந்த டாகுமெண்டரியிலிருந்து ஆரம்பியுங்கள்.
You will be hooked forever.
Facts per se are not so interesting for me. Facts do not illuminate; they create norms. The Manhattan phone directory has 4 million entries which are factually correct, but as a book it doesn't really illuminate you. I've always said we have to look beyond realism, beyond facts. We have to dig into a deeper stratum of truth which is somehow deeply inherent in cinema but which is very hard to find and to create. I'm looking for moments that are somehow illuminating.