Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ..... Be water my friend
மதுரை - 1970களிள் ஒரு நாள். ஒரு அதிரடியான திரைப்படம் மாப்ளை விநாயகரில் வெளியாகிறது.விருதுநகரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் - படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் - மதுரைக்கு வந்து அந்தத் திரைப்படத்தைக் காண்கிறார். மிகப்பெரிய அளவிலான ஒரு தாக்கத்தை அவருள் அந்தப் படம் உண்டு பண்ணுகிறது.மறுபடியும் அந்தப் படத்தை அடுத்த நாளும் பார்க்கிறார்.ம்ஹும்...அப்படியும் ஆர்வம் அடங்கவில்லை.இதுபோல 3 - 5 - 7 - 8 என்று எட்டு முறை அந்தப் படத்தை பார்ப்பதற்காகவே விருதுநகரில் இருந்து மதுரை வந்து செல்கிறார். அவர் - என் அப்பா.அந்தப் படம் - என்டர் தி டிராகன். எங்கப்பா முதல்முதலாக அந்தப் படத்தை பார்க்கும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலை - குதூகலம் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இப்படத்தை மறுபடியும் காணும் போது அவருக்கு இருக்கும். போன தலைமுறையை சேர்ந்த அவரைப் போன்ற ஆட்களை எந்த அளவிற்கு அப்படமும் ப்ரூஸ்லீயும் ஈர்த்திருந்தனரோ - அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் என் தலைமுறையும் - இதற்கடுத்த தலைமுறையையும் ப்ரூஸ்லீ முழுவதுமாக வசீகரித்துள்ளார். நான் எத்தனையோ ஹீரோக்களை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ப்ரூஸ்லீ அளவிற்கு வசீகரமான Screen- Presence உள்ள ஹீரோவை நான் பார்த்ததில்லை. இந்த கட்டுரையை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் How Bruce Lee Changed the World என்ற ஹிஸ்டரி சேனலின் டாகுமெண்டரியை காண நேர்ந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.
டாகுமெண்டரியின் முக்கிய நோக்கம் லீயின் பிறப்பு வளர்ப்பு, திரைப்பட வாழ்க்கை இவைகளை மட்டுமே பேசும் ஆவணப்படமாக இல்லாமல், லீயின் தனித்தன்மை - வாழ்க்கை குறித்து அவரது கோட்பாடுகள் - அவரது வாழ்க்கை முறை - முக்கியமாக லீயின் வரவால் உலகளவில் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளின் தாக்கம் குறித்தே.அதனாலேயே இதை ஒரு முக்கியமான டாகுமெண்டரியாக நான் கருதுகிறேன்
ஹாங்காங்கில் தன் வீட்டருகே ஒரு தெருச் சண்டையில் லீ மும்முரமாக இருந்தார்.அந்த சண்டையில் அவர் தோற்க நேரிடுகிறது.லீ முதலும் கடைசியுமாக தோற்ற சண்டை அது ஒன்றுதான்.அதற்குப்பிறகு யாராலும் எந்த சூழ்நிலையிலும் அவரை தோற்கடிக்க இயலவில்லை. தோல்வியுற்றது அவரை பெரிதும் பாதிக்கிறது. அதற்ககாகவே ஒரு குங்-ஃபூவை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்து ஒரு மாஸ்டரை நாடுகிறார். அவர்தான் Yip Man என்றழைக்கப்பட்டவராவார்.வுங் சுன் என்ற கலையின் நிபுணர்.லீயின் வாழ்வில் பெரிய மாறுதலை உண்டு பண்ணியவர்.அவர் வெறும் சண்டை முறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாழ்வியல் முறை சார்ந்த தற்காப்பு கலைகளையே பெரிதும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.அவரது சொற்கள் லீயின் மனதில் வெகு ஆழமாகவே பதிந்து விட்டன. தெருச் சண்டைகளுக்காக பள்ளியில் மிகுந்த “நல்ல” பெயர். பலமுறை அவரது பெற்றோரை ஆசிரியர்கள் கூப்பிட்டு கண்டிக்க செய்தனர்.ஆனாலும் அவர் அடங்குவதாய் இல்லை.பெரிதாக ஒன்றும் படிக்கவும் இல்லை.ஆனால் இசை - நடனங்களில் சிறு வயது முதலே மிகுந்த நாட்டம் உள்ளவர்.
1959, தன் பதினேழு - பதினெட்டு வயதில் கையில் சொற்ப பணத்துடன் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு வருகிறார். வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் நாடக மேற்படிப்பு மேற்கொள்கிறார். இடையே அனைத்து நாட்டின் தத்துவங்களையும் அளப்பரிய ஆர்வத்துடன் படிக்கிறார். இதற்கிடையே காதல் திருமணமும நடைபெறுகிறது. குங்-ஃபூ கற்றுக் கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்து ஓரளவு அந்தப் பகுதியில் பிரபலமடைய ஆரம்பிக்கிறார்.ஒரு கண்காட்சி போட்டியில் அவரைப் பார்த்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் ஒருவர் The Green Hornet என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க அழைப்பு விடுக்கிறார்(இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு நிகழ்வு ரொம்பவே முக்கியமானது. அதை பிறகு பார்ப்போம்).பின்னர் படிப்படியாக முன்னேறி Enter the dragon என்ற அவரது நான்காவது படமும் வெளியானது. The rest is history. ஆனால் அந்த படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை. வெறும் தற்காப்பு கலைகளுடன் மட்டும் நின்று விடாமல் நடனம், பாக்சிங் போன்றவைகளிலும் திறமையான ஒருவராக விளங்கினார். தேடித்தேடி படிப்பதிலும் ஆர்வம் உடையவர். அவர் ஒரு Perfectionist. இதுதான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தான் நினைத்த மாதிரி வரும் வரை எந்த விஷயத்தையும் விடுவதில்லை. அவர் இருந்திராவிட்டால் ஹாங்காங் சினிமா வெளிய தெரிய இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். மேலும் அவரது தாக்கம் எந்த அளவிற்கு – எந்தெந்த துறைகளில் எல்லாம் இருந்தது என்பதை இந்தப் படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள். மேலும் ரெண்டு விரல்களாலேயே தண்டால் எடுப்பது – ஒரு குத்தில் எதிராளியை கதிகலங்கச் (One inch punch) – மின்னல் வேகத்தில் தாக்குவது என்று அவரின் திறமைகள் அதிகம். அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனர். இதெல்லாம் கடும் உழைப்பினால் வந்தவைகள்.உழைப்பு என்றால் அளப்பரிய உழைப்பு. மனம் சொல்வதை உடல் செய்யும் உழைப்பு. விசையுறு பந்தினைப் போல ஒரு உடம்பு.
The Green Hornet தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னேன் இல்லையா...ஒரு கராத்தே போட்டிக்கு லீயை ஒருவர் சண்டைக்கு வரச் சொல்லி சவால் விட லீயும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.ஆனாலும் மிகுந்த மன உளைச்சல்.ஏன்.....சண்டையில் ஜெயிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆனதே அதற்குக் காரணம்.தான் இதுவரை கற்றதை வைத்து ஒருவரை இவ்வளவு நேரங்கழித்தா தோற்கடிப்பது என்று ஒரே வருத்தம். இதுவே அவரை ஜி-குன்-டோ என்று அழைக்கப்படும் பல்வேறு வகையான மார்ஷல் ஆர்ட்களின் கலவையான ஒரு சண்டைப் பயிற்சி முறையை கண்டறியத் தூண்டியது. மேலும் உடற் பயிற்சிகளில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மைல் அளவிற்கு ஓடுவதும், சொந்தமாக பல்வேறு உபகரணங்களை வடிவமைப்பதும் என்று பல பயிற்சிகளில் ஈடுபட்டார்.
ஜி-குன்-டோ:
ஒரு ஜென் கதை.சிறந்த வில்லாளி ஒருவன்,தான் சிறப்பான வில்லாளன் தானா என்ற சந்தேகத்தை போக்கிக்கொள்ள ஜென் குருவை நாடுகிறான்.எல்லா பயிற்சியும் முடிந்து வந்தவனிடம் "எங்கே உனது வில்லும் அம்புகளும் ?" என்று ஒருவன் கேட்க, இனி தனக்கு அது தேவையில்லை என்று கூறிச் செல்கிறான். வில் - அம்பு எதுவும் இல்லாமலேயே பார்வையாலேயே அனைத்தையும் வீழ்த்தும் ஆற்றல் உடையவனாக இருந்தான்.உண்மையான ஆற்றல் கொண்டவன் எப்போதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலவீனமானவனும் பயந்தவனும் மட்டுமே ஆற்றல உள்ளவர்கள் போல் தங்களை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.இந்தக் கதையில் வரும் வில்லாளியைப் போன்ற மனநிலை கொண்டவர்தான் லீ.
ஜி-குன்-டோவின் அடிப்படை கோட்பாடே மேற்ககூறிய கதையில் அடங்கியுள்ளது. The art of fighting without fighting, style without style – இதுவே அதன் சாரம்சம்.எதிராளி நம்மை தாக்குவதற்கு முன்பாகவே மனதளவில் அவர்களை தோற்கடிப்பது.இதை விட ஒரு சண்டையில் உச்சம் என்ன இருக்க முடியும். அதையும் மீறி அடிக்க வருபவரை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடிகிறது என்பதும் முக்கியம்.அதற்கு ஒரு கலையை மட்டும் உபயோகிப்பது போதுமானதாக இருக்காது என்று கருதி பல கலைகளில் இருந்தும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டார். இதை நான் மேல கூறியுள்ள மேற்கோளில் காணலாம்.சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவது இந்தக் கலையின் முக்கியக் கோட்பாடாக இருந்தது. மேலும் ஜி-குன்-டோ நடைமுறை சண்டைகளில் பெரிதும் கவனம் செலுத்தியது. தேவையில்லாத சண்டைகளில் ஆற்றலை செலவழிக்கக் கூடாது என்பதும் இதன் இன்னொரு முக்கிய அம்சம்.இதை லீயின் பல சண்டை காட்சிகளில் காணலாம். முதல் அடியை பெரும்பாலும் அவர் அடிப்பது இல்லை.

பி.குகள்:
- அவரது முக்கிய குருவான Yip manயைப் பற்றி ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட உலகப் புகழ் பெற்ற ஹாங்காங்கின் Wong - kar -wai எடுக்கும் The Grandmasters என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரயிருக்கிறது. தனக்குள் இருக்கும் லீயின் வெறியனுக்காக இந்த படம் என்று அவரே கூறியிருக்கிறார்.
- அனைவரும் கையோடு இங்கே அப்படத்தை தரவிறக்கி பார்க்க வேண்டும்.
- இந்த வீடியோக்களையும் பாருங்கள்.