நீல் ப்லோம்கேம்ப்ன் எலிஸியம் படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் வாசிக்கும் வாய்ப்பு எனக்குகிட்டவேயில்லை. வேறு வழியில்லாமல் தொலைக்காட்சியின் குறுந்திரையில் நேற்று ஒருவழியாக வாசித்து முடித்தேன். நீல் ப்லோம்கேம்ப்ன் முந்தைய படமான மாவட்டம் - ஒன்பது (District 9), நிறவெறி மற்றும் சர்வாதிகாரம் சார்ந்த அடக்குமுறையை லாவகமாகச் தொட்டுச் சென்றது. அவரின் அடுத்தபடமென்பதால், இதிலும் இலைமறைகாயாக குறியீடுகளால் சூழப்பட்ட காட்சிகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும் என்ற உந்துதலினாலேயே ஆவலுடன் எலிஸியம் திரைப்படத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

வருடம் 2154 (கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் அவ்வாறே உள்ளது). உலகில் இரண்டே இரண்டு வகையான ஜாதிகள் மட்டுமே உள்ளன. உள்ளவன் - இல்லாதவன். இல்லாதவர்கள் உலவும்,வாழும் பகுதி தான் நமது பூமி. அவர்களுது வேலை - எலிசியம் என்ற சுருளமைப்புக் கொண்ட வானூர்தி நிலையத்தில்  இருக்கும் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களைம் இன்னபிற விடயங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது. அவ்வாறான ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவருபவன் தான் படத்தின் பிரதான கதைமாந்தனான மேக்ஸ். மிகத் திறமையான மகிழ்வுந்துத் திருடனும் கூட. ஒருநாள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், அளவுக்கதிகமான  கதிரியக்கம் அவன் மீது முழுமையாகப் பாய்ந்துவிடுகிறது. அப்படியே அவனை அங்கயே இருக்கவிட்டு, சில நேரங்கள் கழித்து தான் வந்து அள்ளிக்கொண்டுச் செல்கின்றனர். அதுவும் ஒரு இயந்திரம் தான் வந்து அவனைத் தூக்கிச் செல்கின்றது. அவ்வியந்திரமே அவனை பரிசோதித்து, இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே அவன் உயிருடன் இருப்பான் எனவும், அதுவரை வலியை சமாளிக்க ஒரு மருந்துப் புட்டியையும் வீசி எறிந்துவிட்டுச் செல்கின்றது. உடலுறுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக பாதிக்கத் தொடங்க மிகுந்த தள்ளாட்டத்துடனும் சிரமத்துடனும் விசனத்துடனும் வெறுமையுடனும் வீடு திரும்புகின்றான். எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வான உயிர் வாழ எத்தனிக்கும் உணர்வு மேலோங்க, தனது தோழனுடன் சேர்ந்து அப்பிரதேசத்தின் முக்கிய குற்றதொழிற்முனைவோர் கூட்டமொன்றில் உதவிகோரி செல்கிறான். எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் வசதியுடைய எலிசியத்திற்கு சட்டத்திற்குப்புறம்பான வழியில் கள்ளத்தனமாக தன்னை அனுப்பும்படி கேட்கிறான். ஆனால் அக்கூட்டத்தினர் பதிலுக்கு மற்றொரு விஷயத்தை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேட் டெமன்

இந்த இடத்தில் இருந்துதான் திரைப்படம் வேறு தளத்திற்குச் செல்கிறது. அதிகாரம்,மதம்,அரசியல்,விஞ்ஞானம் என்று பல விடயங்களும் எவ்வாறு தற்போதைய சமகாலத்தில் ஒருசிலரால் மட்டுமே கையாளப்படுகிறது, அநேக மக்களுக்கு இவ்வசதிகள் எல்லாம் மறுதலிக்கப்படுகிறது என்பதை முற்றிலும் புதிய கோணங்களின் மூலமும் குறியீடுகள் மூலமும் இயக்குனர் அனாயாசமாக நம்முன் காட்சிகளாக அடுக்கிச் செல்கின்றார். அக்கோணனங்களில் இரண்டு கோணங்களை மிகமுக்கியமானதாகச் சொல்லலாம்.

பொருள்முதல்வாதத்தின் வழி காட்சிப்படிமங்களை நகர்த்துதல் & திரிபு நிலை அரசியல்:

திரைப்படம் தொடங்கி, பெயர்கள் வரத்துவங்கும் போதே இது எப்படியான படம் என்பதை இயக்குனர் மிகத்தெளிவாக நமக்கு உணர்த்திவிடுகிறார். அதற்கு சாட்சி, கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம்.  "In Association With Media - Rights - Capital". அதாவது, ஊடகம் (Media) - உரிமைகள்(Rights) - மூலதனம் (Capital). இம்மூன்றும் எத்தகைய முரண்பாடுகள் நிறைந்த வார்த்தைகள், சமகாலத்தில் ஒவ்வொன்றும் இவ்வாறு வெவ்வேறான தளத்தில் இயங்கி மக்களின் மீது கட்டற்ற ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு கட்டியம் கூறவது போன்ற எழுத்துவடிவக்காட்சி தான் இது. இதனை வேறு வகையாகவும் கட்டுடைக்கலாம். Capital - என்பதனை மூலதனம் என்பதாகக் கொள்ளாமல், Capital - தலைநகர் என்பதாக எடுத்துக் கொண்டால், எவ்வாறு உலகின் பல நாடுகளிலும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும் அந்நாடுகளின் தலைநகர்களிலேயே குவிந்து கிடக்கின்றன என்பதாகவும் இதனைப் பார்க்கலாம்.

ely

உலகத்தைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்திலும் உருப்பெற்றது. சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல்வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும் எதிர்த்து அடிமைச் சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கு முற்போக்கு சிந்தனை எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அச்சிந்தனையின் சில கீற்றுகளை இப்படத்தில் எடுத்தியம்பப்பட்டுளன. உதாரணமாக, மேக்ஸ் எதிர்தரப்பு ஆட்களிடம் இருந்து கடும்காயங்களுடன் தப்பி வரும் காட்சியைச் சொல்லலாம். முந்தைய தலைமுறையின் மூதாட்டி ஒருவர், மேக்ஸ்சை கட்டை வண்டியின் கீழ் ஒளிந்துகொள்ளச் சொல்வார். அந்த வண்டியின் மேல் என்ன இருக்கிறது என்பதைக் கவனித்தோமானால்..............கீழே படத்தைப் பாருங்கள்

எலிஸியம்

பண்டைய வேத காலம்தொட்டு பன்றிகளை சூத்திரர்களோட ஒப்பிட்டு பேசினர் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அத்தைகைய பன்றிகளுகுக் கீழ மேக்ஸ் ஒளிந்து கொள்வதன் பின்னால் மிகநுட்பமான வரலாற்றரசியல் உள்ளதை ஊன்றி கவனித்தால் புரியும். அக்காட்சி முடியும் தருவாயில், மேக்ஸ் அத்துணை களோபரங்களுக்கு இடையிலும் அம்மூதாட்டிக்கு நன்றி சொல்வான். எத்துனை கொடுமைகளுக்கு இடையில் மனிதன் வாழ்ந்துவந்தாலும் அடிப்படைப் பண்புகள் இன்னனும் செத்துவிடவில்லை, அதற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் நிச்சயம் சிலமனிதர்கள் ஈடுபடுவார்கள் என்பதனை மிகஉணர்வுப்பூர்வமாக சொன்ன கட்டம் அது. திருட்டு வானூர்தியில் மக்கள் தப்பிச் செல்வது, உலகெங்கும் பல மக்கள் அகதிகளாக செல்வதை குறிப்பதாகத் தோன்றவில்லை ? இதைதான் படத்தின் இயக்குனரும்  Although set in 2154, Elysium's director has stated that it is a comment on the contemporary human condition "No, no, no. This isn't science fiction. This is today. This is now" என்று ஒரு நேர்முகத்தில் கூறுகின்றார். ஏகப்பட்ட விழுமியங்களை பட்டென்று இயக்குனரின் இப்பதில் தகர்த்தெரிகிறதல்லவா.

படேல். ஆம் இதில் எலிசியமின் தலைமைப்பொறுப்பில் ஒரு இந்தியர் தான் இருக்கிறார். அவர் பெயர்தான் படேல். இதுவரை எந்தவொரு அமெரிக்க திரைப்படத்திலும் வராத விடயம் இது. இதன் பின்னணியில் இருக்கும் நுட்ப அரசியல் குறித்தான பகடியையை உங்களது பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.  இன்று உலகம் முழுவதும் இன்னநாடென்று பிரித்தறிய முடியாவண்ணம், அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளை காட்சிக்கு காட்சி தெளிவாக நம் முன்வைக்கின்றார். மிகமுக்கியமான மற்றொரு விடயம்.....மருத்தவ வசதிகளும் அதன் செலவுகளும். சில நாடுகளில் அரசாங்கமே மக்களுக்குரிய மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில், வசதியுடையவர்களுக்கு மட்டுமே தரம்வாய்ந்த மருத்துவ வசதிகள் போய்ச் சேருகின்றன. அடித்தட்டு மக்களில் பல பேருக்கு அவ்வசதி கிடைப்பதில்லை என்பது கண்கூடு. இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளிலும் இதுதான் நிதர்சனம். இப்படி காட்சிக்கு காட்சி அடிச்சரடாக பல குறியீடுகள் திரைப்படம் முழுமைக்கும் வியாபித்திருக்கின்றன. அதனை அன்னப்பறவைப் போல், பிரித்தறிந்து கண்டுணர்ந்து கொள்வது நம்முன் இருக்கும் கடமை. எவ்வாறு பொருளாதார/அரசியல் ஏற்றத் தாழ்வுகள் உலகின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பதற்கான கட்டியம் தான் இப்படம். இணையத்தில் இப்படத்தைப் பற்றி மிகவிரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. முடிந்தால் தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

படம் எனக்குள் எதிரொலிக்கவிட்ட கேள்விகளில் சில:

1) மேக்ஸ்(Max) - லத்தீனில் இதற்குப் பொருள், மிகஉயர்ந்த - அதாவது Greatest. ஒரு சாதாரண அடித்தட்டு கதைமாந்தனுக்கு இந்தப் பெயரை இயக்குனர் வைக்கக் காரணம் ?

2) ஜோடி ஃபாஸ்டர் கதாபாத்திரத்திற்கு Delacourt என்ற பொருளாதார மேதையின் பெயரை சூட்டியது ஏன் ?

3) ஏன் மேக்ஸ்ன் பரோல் அதிகாரி - ஒரு இயந்திரமாக உள்ளது ?

4) ஏன் படத்தில் ஆங்கிலம் - லத்தீன் என்று இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன ? இதன் பின்னணியில் இருக்கும் மொழி அரசியல் என்ன ?

5) ஏன் எலிஸியத்தின் வான்வெளிப் பகுதி கருப்பாக உள்ளதாகக் காட்டப்படுகிறது ?

6) ஏன் இயந்திரங்கள் சிவப்பு வண்ணத்தில் உலா வருகின்றன ?

7) ஏன் கதாநாயகி இறுதிக் கட்டங்களில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடும் போது - சூரியன் உதிப்பதாகக் காட்டப்படுகிறது ?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு எனக்கு தோன்றிய விடைகளை என் முகநூல் அதாவது Facebook பக்கத்தில் காணலாம். உங்களது கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல்.