இந்தப் பதிவு, கருந்தேளின் ஸ்வதேஷ் பதிவைப் படித்த போது - அதன் தீம் இசையை கேட்ட மாத்திரத்தில் - நினைவு நாடாக்கள் சுழன்ற பாதிப்பில் எழுதியது. ரஹ்மானின் பாடல்களைத் தவிர தீம் இசை மாதிரியான, அதிகம் கவனம் பெறாத பின்னணியில் மட்டும் ஒலித்த - சிடிகளில் இல்லாத பாடல்களை பற்றி யோசித்தபொழுது, சட்டென்று ஞாபகம் வந்தவைகளை அப்பொழுதே பதிவில் சேர்த்து விட்டேன். அதற்கூறிய விவரனைகளை எழுத சோம்பேறித்தனமாக உணர்ந்ததால், இவ்வளவு தாமதம். எனக்கு மிகப் பிடித்த, ரஹ்மானின் சில இசைக் கோர்ப்புகள். அவ்வளவே. ஒருவேளை இந்த பதிவையோ - விடியோ இணைப்புகளையோ நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றாலும் கூட, மறக்காமல்,

- இப்போதைக்கு இது மூன்றையும் மட்டுமாவது தரவிறக்கிக் (இதுவரை கேட்காமலிருந்து) கேட்டால்.....சந்தோஷம்.

1. Rang de basanti:
மூன்று கைதிகள். இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்கு தூக்கு. ஒவ்வொருவராக தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுபோன்ற உணர்ச்சிமயமான - சோக நிகழ்வுக்கான இசை எவ்வாறு காலங்காலமாக இருக்கும் ? ஒரு வயலின் கதற ஆரம்பிக்கும், "லாலலலலாலா" என்று சோக ரசத்தில் கோரஸ் கேட்க ஆரம்பிக்கும். எப்படியாவது பார்ப்பவர்களை emotional cornering செய்யும் வகையில் இருக்கும். பார்ப்பவர்களும் கண்கள் கலங்க, இதுவல்லவா இசை.....சிலிர்கிறது என்று உணர்ச்சிமாயமாகப் பேசிக் கொண்டிருப்போம்.


ஆனால்.......இந்தத் தூக்குக் கைதிகள் யார் ? பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு....."நேரமாகிவிட்டது...." என்று பகத்சிங்கிடும் சொன்னபொழது, "கொஞ்சம் பொறுங்கள். ஒரு புரட்சிவாதி இன்னொரு புரட்சிவாதியுடன்(லெனின்) உரையாடிக் கொண்டிருக்கிறான்" என்று மிக இயல்பாக பதில் அளித்தவன். இம்மூவரைப் போல, மரணத்தை கண்டு கொஞ்சமும் பயப்படாதவர்களின் மனநிலை எப்படி இருக்கும் ? "I am a man and all that affects mankind concerns me" என்று சொன்னவனின்(பகத் சிங்) மனநிலை எப்படி இருக்கும் ? 23 வயதில் தூக்கில் ஏறிய பகத்சிங் -சுக்தேவ், 22 வயதில் தூக்கில் ஏறிய ராஜகுரு.....இவர்கலெல்லாம் மரணத்தை கண்டு பயப்படக்கூடிய ஆட்களா ?


இவர்கள், தங்களது இறப்பை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலைக்கான இசை எவ்வாறு இருக்கும் ? மேலே சொல்லியது போல மிகச் சுலபமாக சோகமயமான இசையை இசைக்கவிட்டு, பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்யலாம். ஆனால்.....அது முற்றிலும் பார்வையாளர்களின் கோணத்திலே - ஐயோ, இவர்கள் தூக்கில் தொங்கப் போகிறார்களே - தானே இருக்கும்.

இறப்பை வீரமான - கிட்டத்தட்ட ஒரு சாகசமாகக் - கருதும் மனநிலையில் இருப்பவர்களது கண்ணோட்டத்தில் இசைத்தால் ? அதை நீங்களே கேட்டுப் பாருங்கள். எனக்குப் பெரிதாக இசை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.ஆனால்....எனக்கு தெரிந்த வரையில், இதுபோன்ற ஒரு அட்டெம்ப்ட் செய்ய நிச்சயம் அசாத்திய தைரியம் வேண்டும். மிகச் சுலபமான சோகமயமான இசையை இசைப்பதை விடுத்தது, இதுபோன்ற முயற்சியில் இறங்க ரஹ்மானால் மட்டுமே முடியும். 

பார்வையாளர்களின் Point of Viewவில் (POV) இருந்து காண்பிக்கும் உத்தியில் இருந்து மாறுபட்ட விதமாக, கதை - கேமெரா கோணங்கள் என்று இசை வரை, படத்தினுடைய கதாபாத்திரங்களின் தன்மைக்கும் மனநிலைக்கும் ஏற்ப காண்பிப்பது பல "உலக" சினிமாக்களில் இருக்கும் நடைமுறைதான். இசை என்று எடுத்தக் கொண்டால், சமீபமாக - கொரிய மொழி திரைப்படங்களில் இந்த போக்கினை அதிகமாகக் காண முடிகிறது. ரசித்து ஒருவன் கொலை செய்கிறான் என்றால் - அவனது மனநிலைக்கு ஏற்ப இசையமைப்பது - ஒரு சின்ன உதாரணம். 

இந்திய சினிமாக்களில் இந்த மாதிரியான இசை சார்ந்த முயற்சி மிக மிகக் குறைவு. அதிலும், பகத்சிங் போன்ற ஆளுமைகள் தூக்கிலிடப்படும் போது - யாராவது இதுபோன்ற கிதாரின் எகத்தாளமான மீட்டல்கள் (பகத் சிங் முகத்தில் இருக்கும் அந்த நக்கல் + நெஞ்சுரம் கலந்த சிரிப்பை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்), DJying வகையான scratching(3:50ல் ஆரம்பித்து 4:00 வரும் அந்த  கதறல்......oh...man) + ஆர்கெஸ்ட்ட்ரேஸன், ரஹ்மானின் மிகப் பெரிய பலம் இது........இதுபோன்றதொரு ரகளையான இசையை - இந்த மாதிரியான ஒரு சூழ்நிலைக்கு யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா..........ஏனென்றால், இவர்களது இறப்பு நம்மை பாதிக்க  வேண்டும். ஆனால் எந்த வகையில் ? சோகமயமாக - இந்த நாடு இவர்களை கைவிட்டு விட்டது, நாடு இருக்கும் நிலை சரியில்லை, லொட்டு லொசுக்கு என்று நம்மை அதைரியப்படுத்தும் விதத்திலா அல்லது என்னவொரு வீரம், எவனாக இருந்தாலும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் வந்துபாரு என்று நம்மை inspire செய்யும் விதத்தில் இருக்க வேண்டுமா ? பகத் சிங்கின் வாழ்வும் நமக்கு அதைத்தானே கூறுகிறது.....அதற்கு இதைத்தவிர ஒரு பொருத்தமான இசையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.நமது தலைமுறைக்கான இசை.கேட்டுப் பாருங்கள்.....இதுவரை கேட்டதில்லை என்றால், u will be hooked forever....


பின்நவீனத்துவம்(Postmodernism என்று தமிழில் சொல்வார்கள்) என்று பல இலக்கியவாதிகள் சொல்லக் கேட்டிருப்போம். இதனை ரஹ்மான் தனது இசையில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த இசை.

2) Bombay:
இதுல என்ன இருக்கு......ஏன் புடிச்சுதுன்னு நானும் பல தடவ யோசிக்கிறேன். ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது. இதுல இருக்கும் அந்த குறுகுறுப்பு கலந்த - simpleness தான் காரணமாக இருக்கு முடியும்.3) Dil se:
எனக்கு மட்டுமில்லாமல், பலபேரின் இசை கேக்கும் விதத்தையே தலைகீழாக போட்டு திருப்பின ஆல்பம் என்றால் இதுவாகத்தான் இருக்கு முடியும். Soundscape, இந்திய திரையிசை அகராதியில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் - முதல் definition - தில் சே என்று தான் இருக்கு முடியும். 1998. நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன் (மறக்க முடியாத ஆண்டுன்னு எழுதி ராஜேஷை ஸ்பூப் செய்ய ஒரு ஆசை இருந்தாலும், மரியாதை காரணமாக அதனைக் கைவிடுகிறேன்). எனக்கு அன்றும் - இன்றும் இதில் பிடித்த பாடல்கள், சந்தோஷக் கண்ணீரே - என்னுயிரே - தய்யா தய்யா தான். (ஹிந்தி பாடல்களின் வார்த்தை பிரயோகத்தை விட தமிழ் அபராமாக இருந்தாக நான்(னே) நினைகிறேன்). பூங்காற்றிலே.......தூங்கிருவேன். அந்த பாட்டுக்கு ரஹ்மான் தேவையில்லை என்பது என் கருத்து.

அந்த படத்தில், ஷாருக்கும் - மனிஷாவும் லடாகில் இருக்கும் போது, பின்னணியில் "விண்மீன்களைத் தாண்டி வாழும் காதல் இது"ன்னு - ஸ்ரீனிவாஸ்ன்னு நினைகிறேன் - ஒரு தீம் இசை வரும். க்ளைமேக்சில் கூட அதே இசை வரும். இன்றளவும் நினைவில் இருக்கும் தீம் இசை அது. இங்கு ஹிந்தியில் தான் உள்ளது. தமிழ் தேடியவரை கிடைக்கவில்லை.

"இந்த" லிங்க்கில் இருக்கும், 1998 Filmfare awrds நிகழ்ச்சியை பாருங்கள். இந்த விடியோவின் கமென்ட் செக்ஷனில் ஒருவர் சொல்லியிருப்பது போல - நாமினேட் செய்யப்பட்ட மற்ற படங்களின் இசைக்கும் - இதற்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். இதற்குமேல் நான் சொல்லி ஒன்றும் தெரியப் போவதில்லை.4) Swadesh:
ஏற்கனவே சொன்னது போல இந்தப் பதிவை எழுத கருந்தேள் எழுதிய ஸ்வதேஷ் பதிவு தான் காரணம். குறிப்பாக அதன் இசை. இந்த தீம்.........ஏன் ரஹ்மானை நமது தலைமுறை கொண்டாடுகிறது என்பதற்கு விடை - இது போன்ற இசையை கேட்கும் போது சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

கொசுறு: ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில், ஜமாலின் சகோதரன், சலீமின் ரிங்டோன் - இந்த இசைதான் (இணையத்தில் கண்ணில்பட்ட தகவல்)5) திருடா திருடா:
ரஹ்மானே - தனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த இசைக் கோர்ப்புகளில் திருடா திருடாவும் ஒன்று என்று பல பேட்டிகளில் சொல்லிப் பார்த்திருகிறேன். ஐரோப்பிய பரோக்(Baroque) பாணியிலான இசையில் அட்டகாசமான பல பாடல்கள் இதிலிருக்கும். ஆரம்பத்தில் வரும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் - அதில், ஆற்றில்(?) ஜீப் ஒன்று குடை சாய்ந்த மாதிரி இருக்கும். அந்த காட்சியின் ஒளிப்பதிவு......இன்னும் கண்ணுகுள்ளேயே நிற்கிறது. அந்த பாடலின் கிதார் பீட்கள் வார்த்தைகள் என்று.....15 - 16 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பல விஷயங்கள் ஞாபகப்படுத்துகிறது.

அந்த படத்தின் தீம் இசை...முத்து படத்திலும் இது பயன்படுத்தபட்டதாக ஞாபகம்.6) ஆய்த எழுத்து:
அப்பப்ப இதுபோன்ற இடைச் சொருகலாக அமையும் பாடல்களில் ரஹ்மானை அடிக்க ஆளில்லை. Uber cool.
7) 1947: Earth
இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை. பிட்டு பிட்டாக அவ்வப்போது பார்த்ததோடு சரி.ஆனால், இசையை முழுவதும் கேட்டிருக்கிறேன். ஒரு தமிழ் பாடலின் மற்றொரு வெர்ஷன் கூட இதில் உண்டு.
8) Rock star:
படத்தில் மட்டுமே வரும் இசை இது. "Tum ho" என்ற பாடலின் இன்ஸ்ட்ருமெண்ட்டல். எனக்கு கிதார் இசை மிகப் பிடிக்கும் என்பதால், இதில் பாடலுக்கும் இதற்குமான - வித்தியாசம் கலந்த - அந்த rendition , ஏனோ தெரியவில்லை ரொம்ப பிடித்து விட்டது.

9) Meenaxi: A tale of three cities:
இந்திய அளவில் பல முக்கிய ஆட்கள் - கோவிந்த் நிஹிலாணி, ஷ்யாம் பெனகல், M.F.Hussain மாதிரியான ஆட்களுடன் எல்லாம் ரஹ்மான் பணி புரிந்திருக்கிறார்.அதுகுறித்தெல்லாம் யாரும் விரிவாக இதுவரை எழுதி நான் படித்ததில்லை.

ஹுஸைனின் - மீனாக்ஷி - படத்தின் இசை, பல வகையில் தனித்துவமானது. செக் குடியரசின் இசை, ஹைதிராபாத், ராஜஸ்தானிய இசை என்று ஒவ்வொன்றும் அட்டகாசம். ஹோசம் ராம்சே என்ற எகிப்தைச் சேர்ந்த  percussionist(இந்த பெயர் நேம் ட்ராபிங் என்று நினைக்க வேண்டாம் அவரது சில ஆல்பங்களைக் கேட்டிருக்கிறேன்) இதில் பங்காற்றியுள்ளார். உலகளவில் மிகப் பிரபலமான இசை ஆளுமைகளில் ஒருவர். பில்லி கொபாம் மாதிரியான ஆட்களின் வரிசையில் இவரையும் சொல்லலாம். அவரின் தனித்துவம் இந்தப் படத்தின் இசையில் அழகாகத் தெரியும். "ரஹ்மானின் இசை ஆளுமையை யாரும் இன்னும் சரிவர பயன்படுத்தவில்லை" என்று கூறியிருக்கிறார். ரஹ்மான் இவரின் சர்வதேச ஆல்பமான "Rock the tabla"வில் கூட பங்காற்றியுள்ளார்.இதொன்றும் சாதாரணமான ஆல்பம் கிடையாது. உலக இசையின் பல பெருந்தலைகள் இதில் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இப்போது, மீனாக்ஷிக்கு வருவோம். என்னவொரு பாடல்கள்.......யப்பா....ஆஷா போன்ஸ்லே பாடியிருக்கும் Dhuan Dhuan பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள்....மிக சர்வசாதாரனமாக பல அடுக்குகளுக்கு தாவிச் செல்லும் இசையைக் கேக்கலாம்.அற்புதம் இந்தப் பாடல். இந்தப் படத்தின் இசைக்கு ரஹ்மான் சம்பளமாகப் பெற்றது - ஹுஸைன் தன் கைப்பட பிரத்தியேகமாக வரைந்து கொடுத்த ஒரு ஓவியம்.

இந்த தீம் இசை - சைக்கிள் பெல் சத்தத்தை வைத்து "இசையமைக்கப்பட்டது". வளையல் ஓசை, சைக்கிள் பெல், புறா பறக்கும் ஓசை என்று பலவற்றையும் இசையாக்குவதில் ரஹ்மான் வல்லவர். எனக்கு இதுபோன்ற - வழக்கமான விஷயங்களில் இருந்து மாறுபட்ட அட்டெம்ப்ட்கள் என்றுமே பிடித்தமானவைகள்.