Saturday, August 7, 2010

அபோகாலிப்ஸ் நவ்: நரகம் உண்டு



1940 வரை வியட்நாம் பிரான்ஸ் வசமே இருந்தது. 1941இல் தான் ஜப்பான் பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. ஜப்பானாவது நம்மை கைதூக்கிவிடும் என்று வியட்நாம் மக்கள் நம்பினாலும் ஹோசிமின் (அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்) மட்டும் நம்மை அடிமைப்படுத்தும் அனைத்து நாடுகளும் ஒன்றே என்றார். இவர் இதுபோல் பேசுவதைக் கண்ட ஜப்பான் இவரை கைது செய்ய முனைந்த போது அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி பேரும் கொரில்லா படையை உருவாக்கினார். 1945 II உலகப்போரில் ஜப்பான் வீழ்ச்சியடைந்த தருணத்தின் போது மறுபடியும் ஹோசிமின் தாக்குதல் நடத்தி வியட்நாமை கைப்பற்றினார். இப்போது பிரான்ஸ் திரும்பி தாக்குதல் நடத்தி, ஹோசிமினின் படைகளை சமாளிக்க முடியாமல் மண்ணைக் கவ்வியது. இருந்தாலும் தெற்குப் பகுதியை இன்னமும் தன்வசமே வைத்திருந்தது. வடக்குப் பகுதியை ஹோசிமினின் படைகள் கைப்பற்றி இருந்தன(1952)

பிரான்ஸ் பார்த்தது. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வேற மாதிரியான பிரச்சாரங்களை செய்ய ஆரம்பித்தது. ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர். இவரை வளரவிட்டால் இந்தப் பகுதி முழுவதையுமே கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடுவார் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தது. இது போதாதா அமெரிக்காவிற்கு.. பிரான்சிற்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்ய ஆரம்பித்தது. 1952-1965 வரை நேரடியாக போரில் ஈடுபடா விட்டாலும் இந்த உதவி தொடர்ந்தது.
                                     
கடைசியாக நாமே போரில் இறங்கலாம் என்று முடிவு செய்து 1965ல் போரில் குதித்தது. சின்னஞ்சிறிய நாடான வியட்நாமிற்கு எதிராக பெருமாளவில் ஆயுதங்களையும் விமானத்தாக்குதல்களையும் நடத்தியது. இதனால் ஆரம்பத்தில் அமெரிக்காவின் கை ஓங்கி இருந்தது. ஆனால் வெகு சீக்கிரமே நிலைமை மாறியது. சதுப்புநிலக் காடுகள்; மைனஸில் வாட்டி எடுக்கும் குளிர்; அடர்ந்த காட்டிற்குள் எங்கிருந்து எப்போது கொரில்லா தாக்குதல் நடக்கும் என்று தெரியாது-இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு பழக்கப்படாத அமெரிக்க வீரர்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாயினர். விரக்தியுற்ற பலர் படையை விட்டே ஓடினர். ஹோசிமினின் கொரில்லாப் படை வெற்றி மேல் வெற்றியை பல இழப்புகளுக்கு நடுவே ஈட்டி வந்தது. கடைசியில் ஆனானப்பட்ட அமெரிக்காவே சமாதானத்திற்கு முன்வந்தது. ஆனால் ஹோசிமின் தெற்கு-வடக்கு இணையும் வரை அந்த பேச்சிற்கே இடமில்லை என்று மறுத்துவிட்டார்.இதனால் கோபமுற்ற அமெரிக்கா தான் டம்மியாக தெற்கு வியட்நாமில் அமர்த்தியிருந்த ஆட்சியை உசுப்பிவிட்டு கடும் தாக்குதலுக்கு வழிவகுத்தனர். கண்மூடித்தனமாக அனைத்து தரப்பு மக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து பிக்குகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தினர்.


இது போக Napalm எனப்படும் கொடுமையான குண்டை வீசியும் தாக்குதல் நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட (கீழே உள்ள) புகைப்படம் அனைத்து தரப்பு மக்களையும், அமெரிக்கர்களையும் சேர்த்து உலுக்கியது
.
இந்தப் பெண்மணியை எழுத்தாளர்.அ.முத்துலிங்கம் தேடிப் பேசியுள்ளார். இது சமீபத்தில் விகடனில் வந்திருந்தது. அது கிடைக்குமா என்று தேடிய போது இது கிடைத்தது. அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன் 
ஏனென்றால் போர்கள் குறித்து உடனுக்குடன் செய்தி தரும் முறையை தொலைகாட்சிகள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. (இப்பதான் நம்மளுக்கு இதெல்லாம் பழகிருச்சே). உலகத்தின் குரலுக்கு செவிசாய்க்க அதிபர் நிக்சன் முடிவெடுத்து படைகளை திரும்பப் பெறுவதாக அவசர அவசரமாக அறிவித்தார் (1972). ஒருவழியாக, அமெரிக்க சரித்திரத்திலேயே அதிக நாட்கள் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் அமெரிக்கா பல வகையிலும் படுதோல்வியைச் சந்தித்தது. சொந்த நாட்டிலும் பல எதிர்ப்புகள்.

இந்தப் படத்தை பல படங்களில் பார்த்திருப்போம். அவசர அவசரமாக காலி செய்யும் அமெரிக்க படையினர்.
லென்னான் (Give peace a chance இக்காலகட்டத்தில்தான் இயற்றப்பட்டது), முகமது அலி, பால் நுமன், ஸ்டீவி வொண்டர் போன்ற பல புகழ் பெற்ற கலைஞர்களும் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினர். (பாப் டிலனில் ஆரம்பித்து U2 போனோ வரை எப்போதுமே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதைக் காணலாம்).

                                                       இப்படத்தை புரிந்து கொள்ள இந்த தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தன. ஆகவே தான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இதுல என்ன கொடுமைன்னா அமெரிக்கா போன்ற நாடுகளின் போரினால் எவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் ஒரே தீர்வா நான் நினைப்பது காந்தியப் பாதை தான். அதற்கு சிறந்த உதாரணம்-தென் ஆப்பிரிக்கா(மண்டேலா). மோசமான உதாரணம்-இந்தியா. அவுங்க எப்படி ஒற்றுமையா உலகக்கோப்பை கால்பந்தை நடத்தினாங்க. இங்க.. 35,000 கோடி வெட்டியா ஒதுக்கி... இதுலயும் ஊழல்.
..............


" Saigon, shit. I'm still only in Saigon. Every time I think I'm gonna wake up back in the jungle" 

பெஞ்சமின் வில்லார்ட்-ஏற்கனவே வியட்நாமில் பணியாற்றிவிட்டு, வீடு திரும்பிய போதும் போரின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் விவாகரத்திற்கு ஒத்துக்கொண்டு மறுபடியும் தானாகவே மாறுதல் கேட்டு வியட்நாமிற்க்கு வந்துள்ளான். மிகுந்த விரக்தியுற்ற மனநிலையில் இவ்வாறு புலம்பிக்கொண்டும் எப்போது மறுபடியும் போருக்கு போவோம் என்ற வெறியுடனும் பயங்கர குடியில் விழுந்து கிடக்கிறான். யாரும் விரும்பி போருக்கு செல்வதில்லை. வில்லார்ட் சொல்வதிலிருந்தே எந்த அளவிற்கு போரினால் மனதளவில் பதிக்கப்பட்டுள்ளான் என்று தெரிந்து கொள்ளலாம். (குறிப்பாக அந்த கண்ணாடியை நொறுக்கும் காட்சி ஒன்று போதும்). பிறகு அவன் மற்றொரு முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறான். மூன்று உயரதிகாரிகள் அவன் இதுவரை செய்த வேலைகளைப் பற்றியும் அவன் CIAஇன் ஆளாகவும் பணியாற்றியதைப் பற்றியும் விசாரிக்கிறார்கள். பின்பு அவனிடம் முக்கியமான வேலை ஒன்றை செய்யச் சொல்கிறார்கள். பல பதக்கங்களையும், பாராட்டுகளையும், கல்வி அறிவு நிறைய உள்ள, அடுத்த ஜெனரல் அவர்தான் என்று அனைவரும் நினைத்த ஒரு மனிதன் தானே ஒரு படையை வியட்நாம் ஆதிவாசிகள் உதவியுடன் திரட்டி பயங்கரமான வகையில் போர் செய்து வருகிறான். யாராலும் அவனைக் கட்டுப்படுத்தவோ, முறியடிக்கவோ இயலவில்லை. “Every man has got a breaking point. You and I have. He has reached his. And very obviously, he has gone insane.” (இந்த டயலாக்கை கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே. இது கூட காப்பியா..). நீ அவனை கொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை என்று சொல்லி அவனை அந்த மனிதன் இருப்பதாக நம்பப்படும் வியட்நாம்-கம்போடியா எல்லையில் உள்ள காட்டிற்கு ஒரு படகில் மூவர் துணையுடன்(a surfing champion, a teenager, a cook மூவருமே கட்டாய பணியிருப்பில் உள்ளவர்கள்) அனுப்பி வைக்கின்றனர். யார் அந்த மனிதன்?


அந்த மனிதன்தான் Col.வால்டர் கர்ட்ஸ் (மர்லன் பிராண்டோ). அவனது வாழ்க்கைக் குறிப்புகளை படித்துகொண்டே பயணிக்கும் வில்லார்ட், எப்படி இத்தனை திறமைமிக்க, கற்றறிந்த ஒரு சிறந்த மனிதன் இத்தகைய கொடுமையான செயல்களை செய்யத்துணிந்தான் என்றெண்ணி அதிர்ச்சியடைகிறான். பின்பு போர் எத்தகைய மனிதனையும் மாற்றி விடும் என்பதையும் உணர்கிறான். அவர்கள் பயணித்து மற்றொரு இடத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை சென்றடைகிறர்கள். அங்கிருந்து அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பது Lt.Col.பில் கில்கோரின் பொறுப்பாகும்(ராபர்ட் டுவால்). இந்த கில்கோர் surfingஇல் மிகுந்த ஆர்வம் கொண்டவன். போர்களத்திலும் கூட தனக்கு தோன்றியதை (surfing உட்பட) செய்பவன். முதலில் வில்லார்ட் குழுவை ஏற்க மறுக்கும் கில்கோர், அவர்கள் குழுவில் surfing சாம்பியனான ஒரு வீரனும் இருப்பதை அறிந்து அவர்களை கொண்டு சேர்க்க ஒப்புக்கொள்கிறான்-மறுநாள் தனக்கு surfing கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். அடுத்த நாள் இவர்கள் surfing செய்வதற்காகவே கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு கிராமத்தின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றனர். அதற்காக ஹெலிகாப்டர்களில் ஒப்ரா இசையான “Ride of the Valkyires”ய் ஒலிக்கச்செய்து கொண்டே தாக்குதலை ஆரம்பிக்கின்றனர். “இந்த இசை அந்த கிராமத்தான்களுக்கு மிகுந்த பயம் கொடுக்கும் ஒன்றாகும்” என்று வெறியுடன் கில்கோர் கொக்கரிக்கிறான். பயங்கர கொண்டு மழை பொழிகிறது. கடைசியாக மிக சக்தி வாய்ந்த Napalm குண்டை வீசி தாக்குதலை முடிக்கின்றனர். இதற்கடுத்து கில்கோர் சொல்லும் வார்த்தை “Napalm, son. Nothing else in the world smells like that. I love the smell of napalm in the morning”. இதை விட போரில் வெறி கொண்ட மனிதனைக் கான முடியாது.அந்தக் காட்சியை நீங்களே காணுங்கள். மேலே உள்ள சிறுமியின் படத்தையும் இந்த வார்த்தைகளையும் நினைத்துப் பாருங்கள்.


மறுபடியும் வில்லார்ட் குழுவினர் தங்களது பயணத்தை தொடங்குகிறார்கள். வழி நெடுக வில்லார்ட் கர்ட்ஸ்சின் கடிதங்களேயும், குறிப்புகளையும் படித்துக் கொண்டிருக்கிறான். ஓருவாரக அவனால் கர்ட்ஸ்சின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அப்போது அங்கு வரும் படகை சோதனையிடும் போது நடக்கும் காட்சி ஒரு காட்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
நீங்களே பாருங்கள்.


தனிமை,விரக்தி,பெரும் மனஉளைச்சலுக்கிடேயே வில்லார்ட் குழுவினர் பயணிக்கின்றனர்.கர்ட்ஸ்சின் இருப்பிடத்தை நெருங்கும் போது ஏற்படும் தாக்குதலில் ஒரு வீரன் உயிரிழக்கிறான். surfing வீரனும் கிட்டத்தட்ட மனநிலை பாதிப்புடன் வில்லார்டுடன் சேர்ந்து கர்ட்ஸ்சின் ஆதிவாசிகள் சூழ்ந்திருக்கும் இருப்பிடத்தை அடைகிறார்கள். அங்கு அவர்களை ஒரு புகைப்படக்காரன் வரவேற்கிறான். கர்ட்ஸ்சின் நடவடிக்கைகளாள் வசியம் செய்யப்பட்டவனைப் போல் அப்புகைப்படக்காரன் காணப்படுகிறான். அவனே வில்லார்டை கர்ட்ஸ்சிடம் அனுப்பி வைக்கிறான்.இதுவரை யாரைக்காண விரும்பினானோ, யாரைக் கொல்ல அனுப்பப்பட்டானோ அவனைக் கண்டானா..கர்ட்ஸ் எப்படிப்பட்டவன்? வில்லார்டு கர்ட்சை கொன்றானா? இதை எல்லாம் தெரிந்து கொள்ள படத்தை பார்ப்பதே நல்லது.


இப்படம் Joseph Conrad என்பவர் எழுதிய Heart of Darkness நாவலை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வசனங்களெல்லாம் மிகக் கூர்மையாக உள்ளன. ஒலிப்பதிவும் மெய்மறக்கச் செய்யும் வகையில், நாமே அக்களத்தில் இருப்பதைப்போல் உணர்வைத் தருவதாய் உள்ளன. இசையில்லாமல் இப்படத்தைப் பார்த்தால் தலையில்லாத உடம்பைப் பார்ப்பதைப் போன்ற உணர்வையே தரும்.


மர்லன் பிராண்டோ
படத்தில் மொத்தமே ஒரு 12 நிமிடங்கள்தான் வருகிறார். ஆனால் படமுழுவதும் வியாபித்திருப்பது போல் அனைவருக்கும் தோன்றும். கர்ட்ஸ் பேசியதாக வில்லார்டிற்கு ஒரு டேப்பை போட்டுக் காண்பிப்பார்கள். “I watched a snail crawl along the edge of a straight razor. That's my dream; that's my nightmare” என்று ஒரு பிரண்ட மனநிலையில் பிராண்டோ பேசுவார். ஒரு மனிதனின் குரலில் கூட நடிப்பு வெளிப்படும் என்பதை பிராண்டோவை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நிஜமாகவே ஒரு அமர்க்களமான modulated குரலில் பேசியிருப்பார்.
                 அதே போன்றுதான் மொட்டைத் தலையை தடவிக்கொண்டே முகத்தைக் கூட காட்டாமல் (இதற்கு காரணம், அவர் ஸ்கிரிப்டையோ நாவலையோ படிக்காமலே அசாத்திய எடையுடன் குடித்து விட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். பின் கப்போலா நாவலை வாசிக்க வாசிக்க அதை உள்வாங்கி நடித்துள்ளார் ) நடித்திருப்பார். சத்தியமா நா மிரண்டே போய்ட்டேங்க. பார்த்தா தான் உங்களுக்கு புரியும்.

மார்டின் ஷீன்:
இதில் நடிக்கும் போது இவருக்கு நெஞ்சு வலி வேறு வந்ததாம். இருந்தாலும் ஒரு உக்கிராமான மனநிலையிலேயே அற்புதமாக நடித்திருப்பார். The Departedஇல் அனைவரும் இவரைப் பார்த்து ரசித்திருப்போம்.

பிரான்சிஸ் போர்ட் கப்போலா: இதற்காக 6 மாதம் அங்கேயே தங்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இப்படத்திற்கு எடிட்டிங்கிற்கு மட்டும் 3 ஆண்டுகள் எடுத்துள்ளாராம்.
.................................
வியட்நாம் போருடன் தொடர்புடைய நான் பார்த்த வேறு படங்கள்: (இதெல்லாம் அமெரிக்க பார்வையிலேயே சொல்லப்பட்ட படங்கள். வியட்நாம் படங்களை நான் பார்த்ததில்லை)


  • The Deer Hunter (Robert De niro)
  • Good Morning Vietnam (Robin Williams)
  • Full Metal Jacket (Kubrick)
  • Platoon & Born on the 4th of July(Tom Cruise) இந்த இரண்டு படங்களின் டைரக்டர் ஒலிவர் ஸ்டோன் வியட்நாம் போரில் பணியாற்றியவர்.
  • American Gangster – போரின் போது அமெரிக்க படையில் ஏற்பட்ட மாற்றங்களைச் ஒரு பகுதியாக சொல்லும் படம்



ஆனா ஒண்ணுங்க. அமெரிக்காவ என்னதான் குறை சொன்னாலும் அந்த நாட்டிலிருந்து நம்ம கத்துக்க சில விஷயங்களும் இருப்பத நான் நினைக்கறேன். அதுல ஒன்னு எல்லா வகையான விமர்சனங்களுக்கும் இடமளிப்பது-அது அரசுக்கு எதிராகவே இருந்தாலும் (இந்தப்படம் மாதிரி). இப்படித்தான் ஒரு பாதிரியார்-டிராபிக் போலீஸ் சர்சைல ஒபாமாவே அவர்களைக் கூப்பிட்டு, பீர் பார்ட்டி கொடுத்தார்னு படிச்சிருப்போம். இங்க..ஒரு கவுன்சிலருக்கு எதிரா பேசுனாவே..அவ்வுளோதான். முடிஞ்சது.
Facebookers..

6 comments :

  1. நண்பா,மிகச்சிறந்த படம்
    மார்டின் ஷீனும்,மர்லனும் அதகளம் செய்த படம்,நாம் -என சொல்லக்குடிய வியட்நாம் போரினால் மக்கட்செல்வங்களை இழந்த அமெரிக்கர்கள் ஏகம் பேருண்டு,ஏன் குடும்பத்துக்கு ஒரு சித்தப்பாவோ பெரியப்பாவோ கூட போரில் இறந்திருப்பர்,எனக்கு டீர்ஹண்டரும்,ப்ளாடூனும்,ஃபுல்மெட்டல் ஜாக்கெட்டும் மிகப்பிடிக்கும்,பார்த்து பார்த்து ஒன்றை ஒன்று மிஞ்சும் படி எடுக்கப்பட்ட படங்கள் அவை.நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  2. @கீதப்ப்ரியன்
    மிக்க நன்றி நண்பரே.
    டீர் ஹண்டர் போன வருடம் பார்த்தது. இந்த வாரத்தில் மறுமுறை பார்த்து பகிர முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக உள்ளன உங்கள் விமர்சனங்கள்! நன்றிகளும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  4. @ எஸ்.கே
    பாஸ்..வாழ்த்துக்கள் சரி. அது என்ன நன்றிகள். ரொம்ப கூச்சமா இருக்கு.
    நீங்களும் நெறைய படம் பார்ப்பவராயிருந்தால் நீங்களும் உங்கள் ப்ளாக்ல் அதைப் பற்றி எழுதலாமே? (நானே எழுதுறேன்)

    ReplyDelete
  5. பாஸ்..
    இதுக்கு எதுனா கமென்ட் போடணும்னு நெனச்சா, சமீபத்திய போஸ்ட்ல போடுங்க.

    ReplyDelete
  6. அருமையான விமர்சனத் தொகுப்பு

    ReplyDelete