Friday, February 1, 2013

Bad 25: A Spike Lee's Joint

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமலேயே இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன். இதற்கு முன்னர், ப்ரூஸ் லீ பற்றிய பதிவில் எவ்வாறு ஆரம்பிப்பது என்று மிகக் குழப்பமாக இருந்ததுண்டு. இதுவரை நான் சந்தித்த ஆட்களில் ப்ரூஸ் லீ, மைக்கல் ஜாக்சன் பற்றி ஏதேனும் பேச்சு வந்தால்.......இருவரையும் தெரியாது என்று ஒருவர் கூட சொன்னதில்லை. இதுபோன்ற ஆட்களைப் பற்றியெல்லாம் ஆரம்பிக்கும் போது, எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழுப்பம் ஏற்படுவது சகஜமே. அந்த குழப்பத்தை சாக்கிட்டு, வழக்கம் போல் சொந்தக் கதையில் இருந்து தொடங்குகிறேன்.

சிடி ப்ளேயர் என்ற உபகரணம், முதன்முதலில் எங்கள் வீட்டிற்கு வந்தது - 2003ல் தான். டிவி கூட, பரவலாக எல்லா பக்கமும் வந்த பிறகே வாங்கினோம். கேபிள், காலேஜ் சேர்ந்த பிறகே நிரந்தரமாக வீட்டில் இணைக்கப்பட்டது(ஓவரா க்ரிகெட் பாத்ததுனால லீவ்ல மட்டும் தான் கேபிள் குடுப்பாங்க...பல பேர் வீட்டிலும் அப்ப அதுதான் வழக்கம்னு நெனைக்கிறேன்). ஆக, சிடி ப்ளேயரும் சற்று தாமதமாகவே வாங்கப்பட்டது. ப்லிப்ஸ் சிடி ப்ளேயர். கூடவே Jackson's Greatest Hits என்ற வீடியோ சிடி. அதன் விலை 120 ரூ. ஒரிஜினலாக இருந்து இவ்ளோ விலை என்றால் பரவாயில்லை. அது பைரேட்டட் விசிடி(அப்பவே அப்பிடி). திண்டுக்கல்லில் பத்து வருடங்கள் முன்பு திருட்டு டிவிடி எல்லாம் அநியாய விலை.ஒரிஜினல் ஆங்கில சிடிகள் எல்லாம் அந்த ஊரில் மிகமிக அரிது(அப்படியான ஊரில் இருந்து ஒரு பதிவுலக ஆளுமை உருவாகி உள்ளது காலத்தின் கட்டாயம்). எனக்கு இந்த சிடி ப்ளேயர் இதிலெல்லாம் அப்போது ஆர்வம் இல்லை. வாங்கி வந்தது, என் அப்பா. கூடவே ஜாக்ஸனின் சிடியையும் கையேடு அவர்தான் வாங்கி வந்தார். இங்கு இன்னொன்றை சொல்லியாக வேண்டும், எந்தளவுக்கு ஜாக்ஸனின் பாடல்கள் எனக்கு பிடிக்குமோ அதைவிட அதிகமாக என் அப்பாவிற்கு பிடிக்கும். ACDCயை அதிக வால்யுமில் அலற விட்ட போது, என்னைவிட அதிகமாக ரசித்தவர் அவரே. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், தலைமுறை இடைவெளியின்றி ஜாக்ஸனின் இசையில் இருந்த துள்ளலுக்கு அனைவரும் அடிமை என்பது கவனிக்கப்பட வேண்டியது. தொடர்ந்து லூப்பில் அந்த விசிடியே ஓடிக்கொண்டிருந்தது. காலை, மாலை, இரவு என்று கணக்குவழக்கே இல்லை. அதற்கு முன்னர், கேபிள் இருந்த காலத்தில் அவ்வப்போது MTvயில் மட்டுமே ஜாக்ஸனை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, நினைத்த நேரத்தில் கேட்க முடிந்ததே பெரிய விஷயமாகப்பட்டது. என் பாட்டி கூட, "அந்த பொண்ணு பாட்ட போட்டுட்டியா " என்று கேட்கும் அளவுக்கு சிடியை போட்டு தேய்தாகிவிட்டது. அதற்குப் பின்னர் MP3, இன்டர்நெட் என்று பாடல்களை தேடிக் கேட்கும் விதம் மாறியது.


அந்த ஜாக்ஸனின் Greatest Hit's சிடியில் ஏறக்குறைய அவரது எல்லா புகழ் பெற்ற பாடல்களும் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உன்மத்தம் பிடிக்க வைக்கும் அளவிற்கு இருந்தாலும், மற்ற எல்லாவற்றில் இருந்தும் வித்தியாசமான அனுபவத்தை அழுத்தத்தை கொடுத்த பாடல் - Bad. ஜாக்சனின் குரலில் பெண்/சிறுவன் போன்றதொரு தன்மை இருக்கும். Thrillerல் கூட நல்ல "பையன்" வகையான பாடல்களை, அந்தக் குரலிலேயே பாடியிருப்பார். ஆனால் Bad பாடல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு rugged வகையான பாடலாக இருப்பதைக் கவனிக்கலாம். அதே ஆல்பத்தில் இருந்த Dirty Dianaவும் பின்னாட்களில், They Don't Care about usசிலும் அந்த ஆக்ரோஷத்தைக் காணலாம்.

1982ல் த்ரில்லர் வெளியாகிறது(இதுபோன்ற விஷயங்களை மாமூலான வார்த்தைகளைப் போட்டுத் தான் எழுத முடியும்). த்ரில்லரைப் பொறுத்தவரை, இன்று வரை உலகளவில் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆல்பம் என்பதிலிருந்து - வாங்கிய விருதுகள் வரை, சாதனைகள் அன்றி வேறொன்றும் இல்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், EPIC. கற்பனைக்கும் எட்டாத வெற்றியைக் கண்ட பின், ஜாக்ஸன் 1987ல் அடுத்த ஆல்பத்திற்கு தயாரான பொழுது – மிக தீர்க்கமானதொரு முடிவில் இருந்தார். த்ரில்லரை விட அதிகளவில் இந்த ஆல்பத்தை விற்கச் செய்வது. அறைகளின் கண்ணாடியில் 100 மில்லியன் என்று எழுதி வைத்திருந்தாராம். அதுதான் இலக்கு என்பதை நினைவுறுத்த. அப்படிப்பட்ட ஒரு ஆல்பம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி (1987 - 2012) சிலபல மாதங்கள் முன்பு, ஸ்பைக் லீயின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அட்டகாசமானதொரு டாகுமென்டரி தான் Bad 25. ஆல்பத்தைப் பற்றி மட்டுமல்லாமல் ஜாக்ஸனைப் பற்றியும் பல விஷயங்களை மிக மிக சுவாரசியமாக பதிவு செய்துள்ளனர்.


கவர் போட்டோவில் ஆரம்பித்து ஏகப்பட்ட சுவாரசியங்கள் Bad ஆல்பத்தைப் பொறுத்தவரை நடந்தேறியுள்ளன. உதாரணமாக, முதலில் ஆல்பம் கவராக வேறொரு படம் தான் முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் அது வேண்டாமென்று முடிவு செய்யப்பட்டு, இந்த ஐகானிக் படம் தேர்வு செய்யப்பட்டது. மேலே சொன்னது போல, மென்மையான/சாக்லேட் பாய் என்று சொல்வோமே, அதுபோன்ற தனது இமேஜய் அவர் மாற்ற விரும்பியதற்கு பொருத்தமாக இருந்தது இந்தக் கவர் இமேஜ். அதற்குப் பிறகு, க்வின்சி ஜோன்ஸும்(தயாரிப்பாளர்) ஜாக்ஸனும் எடுத்த முடிவுதான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை. முற்றிலும் உண்மை.


Bad பாடலுக்குப் பிறகு, வீடியோவை உருவாக்குவது என்று முடிவானது. ஜாக்ஸனின் த்ரில்லர் வீடியோ உலகம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வு, பூகம்பத்தின் aftershock போல இன்றளவும் ஏதாவதொரு வடிவில் இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், மலேசியாவில் யுவன் நிகழ்ச்சி நடந்ததை டிவியில் காண நேர்ந்தது. அதில், த்ரில்லர் ரெட் ஜாக்கட்டையே அவர் அணிந்திருந்தார். அப்படிப்பட்டதொரு வீடியோவிற்குப் பிறகு வரும் வீடியோ.......ஜாக்சனின் பரிணாமத்தை மாற்றிக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.....ஒரு rawness இருக்க வேண்டும். பாடலில் இருக்கும் ஆக்ரோஷம் அத்தனையும் வீடியோவில் வெளிப்பட வேண்டும். இத்தனைக்கும் பொருத்தமான நபர் வேறு யாராக இருக்க முடியும்.......சாட்சாத் நமது மார்டின் ஸ்கார்சேஸி தான். மைக்கல் ஜாக்ஸன் இதனை வீடியோ என்றே அழைக்க விரும்பாமல், Short Film என்று அழைப்பதையே விரும்பினார் என்றால், ஸ்கார்சேஸி அதற்கும் ஒருபடி மேலே போய், ஸ்க்ரிப்ட் எழுத – Color of money படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டரை அமர்த்தி, பல மாதங்கள் கொஞ்ச கொஞ்சமாக கான்செப்ட்டை செதுக்கி இந்த வீடியோவை உருவாகினார். இதற்கு மேல் இதுபற்றிய விஷயங்களை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். நீங்களே டாகுமென்டரியைப் பார்க்கும் பொழுது  ஸ்கார்சேஸி + ஜாக்சனின் மேதைமை புரியும்.  இந்த வீடியோ ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், ஒரே காரணம் - ஷாட்கள். ஒவ்வொன்றும் ஸ்கார்சேஸியின் ட்ரேட்மார்க் விஷயங்கள். கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து, தெருவில் ஜாக்ஸன் போகும் போது வரும் லாங் ஷாட்கள் என்று.....முழுக்க முழக்க ஸ்கார்சேஸியன்தனமான வீடியோ. என்ன மாதிரியான க்ளோஸ்-அப் காட்சிகள்....இன்றும் நினைவில் உள்ளது. அதுவரை பாடல்களுக்கனா வீடியோவில் இதுபோன்றேல்லாம் க்ளோஸ் – அப் காட்சிகள் இருந்ததே இல்லை. பாடல் ஆரம்பிக்கும் போது, ஜாக்ஸன் கையை மேல உயர்த்தும் போது ஒரு ஷாட் வரும். அட்டகாசம். என்னால் மறக்க முடியாத ஓப்பனிங்களில் ஒன்று. தொடர்ந்து கால்கள், கைகள் என்று அதுவரை பாடல்களுக்கான வீடியோக்களுக்கு இருந்த மரபை உடைத்தது ஸ்கார்சேஸி தான். கேமேராவும் ஜாக்ஸனுடன் சேர்ந்து நடனம் புரிந்திருக்கும். ஜாக்ஸனின் டான்ஸ் மூவ்கள் உருவான விதம பற்றிய அட்டகாசமான தகவல்கள் இதில் உள்ளன. West Side Story மாதிரியான படங்களில் இருந்து எவ்வாறு மூவ்களை எடுத்தக் கொண்டார் என்பது குறித்தெல்லாம் பல விஷயங்கள் இதில் உள்ளன. உபரித் தகவல், ஸ்கார்சேஸி இந்த வீடியோவை டைரக்ட் செய்த பிறகு இப்பொழுதுதான், இந்த டாகுமெண்டரிக்கா இந்த வீடியோவைப் பார்க்கிறார். இந்த ”Short Film”மை எடிட் செய்தது.........வேறு யார்.......தெல்மா ஸ்கூமேக்கர் தான்.

பின் Liberian Girlல் ஆரம்பித்து Man in the Mirror வரையிலான Bad ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும் எவ்வாறு உருவானது, அதில் நடந்த சுவாரசியங்கள், பின்னணித் தகவல்கள் என்று போகப்போக ஒரே ரகளை தான். உதாரணமாக, Smooth Criminal வீடியோவில் வரும் வொயிட் ஜாக்கட்டை மிக நேர்த்தியாக, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டிசைன் செய்தது ஜாக்ஸன் தான். Get my kenny shoes now.......அதே ஸ்மூத் க்ரிமினல் வீடியோ எதனைத் தழுவி எடுக்கப்பட்டது தெரியுமோ ?? நுவார் பதிவில் சிலாகித்து எழுதியிருந்த The Third Man தான் அந்தப் படம். நீண்ட நிழல்கள்.....நினைவிருக்கும் என்று நம்புகிறேன். "Annie are you ok ? " ஞாபகம் உள்ளதா ?? ஏகப்பட மாடுலேஷங்களில் ஸ்மூத் க்ரிமினல்  பாடலில் வருமே.......அந்த Annie யார் தெரியுமோ ??? CPR முதலுதவி சிகிச்சைக்கு ஜாக்ஸன் பயன்படுத்திய  பொம்மையின் பெயர் தான் ஆனி.........செம ட்ரிவியா அது.


உச்சஸ்தாயிலிலும் ஜாக்ஸனால் வெகு சுலபமாக பாட முடியும். ஆண்மை கலந்த குரல்.....ஸ்மூத் க்ரிமினால் மாதிரி. ஆனால் இந்த சிறுவன் மாதிரியான குரலையே அவர் விரும்பியிருக்கிறார். ஹார்ட் ராக்கிஷ் Dirty Diana, Leave me alone, They way u make me feel என்று எல்லா பாடல்களுக்கும் ஒரு குட்டி வரலாறே உள்ளது. அதேபோல், முதன்முதலில் விரலில் சொடுக்கு போடுகிறோம் இல்லையா........அதையும் ஒரு சின்ன இசைக் கோர்ப்பாகக் கருதி (ரஹ்மான் சைக்கிள் பெல்லை உபயோகித்தது ஞாபகம் வருகிறது) அதற்கு தனக்குத்தானே க்ரெடிட் கொடுத்தவர், ஜாக்ஸன் தான். Bad ஆல்பத்தில் பல சொடுக்கு "இசை" உண்டு.



மற்றொரு மறக்க முடியாத பாடல்....."Man in the mirror". ஜாக்ஸன் காந்தியைப் பற்றி விரும்பி படித்தவர். காந்தியின் "Be the Change you wish to see in the world" மேற்கோள் கூட இந்தப் பாடல் வரிகளை எழுத அவருக்கு உதவியிருக்கலாம் என்பது என் அனுமானம். மன்டேலாவை வெகுவாக மதித்தவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த man in the mirror இடம் மனவிட்டு பேசினாலே தீர்க்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. Obviuosly, நாம செய்வதைத் தான் கண்ணாடி காட்டும். அடுத்தவர்களுக்கு எதையாவது செய்யும் முன் இதை ஒருமுறை யோசித்தால் நலம். நமக்கே ஒருநாள் அது திரும்பும்.

ஜாக்ஸனை அணுகுகிறவர்களில் ரெண்டு விதமான ஆட்களை நான் பார்த்திருக்கிறேன், அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் ஜாக்ஸன் வெறியர்கள் நீங்கலாக. ஒன்று, இது வெறும் பாப் இசை தானே....இதில் அவர் ஏதோ செய்தார் என்ற அளவிலான ஆட்களும், கண்மூடித்தனமாக என்னமோ அவர் பிறக்கும் போதே ஜீனியசாக பிறந்து(ராமானுஜம், பிகாசோ போல) தானாகவே அவருக்கு எல்லாம் கைவந்தது என்று நினைப்பவர்கள். சிறுவர்களுக்குரிய எந்தவித சந்தோஷங்களும் கிடைக்காமல், கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல், மிகமிக கடுமையான ராணுவ ஒழுங்குடன் கூடிய பயிற்சியினாலயே அவர் ஜீனியஸாக மாறியவர். இந்த ஆல்பம் தாயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு அவர் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவாரம். இந்த ஆல்பம் என்று மட்டுமில்லாமல், ஏறக்குறைய எல்லா ஆல்பங்களிலும் அவரது கற்பனைக்கும் எட்டாத உழைப்பு உள்ளது. ப்ரூஸ் லீயிடமும் இந்த வெறித்தனமான உழைப்பைக் காணலாம். அதில் முக்கியமானது, மிகமிக ஒழுங்குடன் ஒரு முனிவர் தவம் செய்வதைப் போலத்தான இவர்களது உழைப்பு இருந்தது. செய்யும் வேலையின் மீது அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு, செய்நேர்த்தி. மேடை அமைப்பது முதல் இப்படிதான் இருக்க வேண்டும் என்று Industry Standards என்று சொல்வார்களே அதைச் செய்து காட்டியது அவர்தான். எவ்வளவு உயரத்திற்கு அவர் போயிருந்தாலும், கொடுங்கனவு போல் பல்வேறு பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் துரத்தி துரத்தி கடைசியில் அவரை சாகடித்தே விட்டது. விடுங்கள். அதைப்பற்றி பேச ஆரம்பித்தால் போய்க் கொண்டேயிருக்கும். மேல சொன்ன ரெண்டு விதமான ஆட்களும், ஏன் மூன்றாவது வகை ஆட்களும் கூட - இந்த டாகுமென்டரியைப் பார்த்தால், அவரின் மீதான மதிப்பு+மலைப்பு நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். பதிவெழுதுவது முதற்கொண்டு, செய்யும் வேலையை இன்னும் ரசித்து செய்ய வைக்கும்/வைத்தது.

இந்த டாகுமென்டரி அட்டகாசமாக வர இன்னொரு காரணம், ஸ்பைக் லீ. எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்(யார தான் நா அப்பிடி சொல்லல). ஜாக்ஸனின் ரசிகர் என்பதை விட, வெறியர் என்று சொல்லலாம். மால்காம் X, 25th Hour போன்றவற்றின் இயக்குனர். ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருபவர்.  சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு சர்ச்சைக்குள்ளாவார். இவருக்கும் க்வின்டினுக்கும் ஏழாம் பொருத்தம். ஜாங்கோ வரை அது தொடர்கிறது. இவரின் படங்களை, Spike lee presents, Spike Lee's film என்றெல்லாம் மாமூலாக ஆரம்பிக்க மாட்டார்...... A Spike Lee's Joint. அவ்ளோதான். ஆப்ரிக்க - அமெரிக்க இளம் தலைமுறையினர் மீதான இவரின் positive influence மிக அதிகம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், போன வாரம் வெளிவந்த இந்தப் பாடல் தான்.

Facebookers..

12 comments :

  1. Excellent. I read the complete article. Liked it too. Cheerz.

    ReplyDelete
  2. // Excellent. //

    Obviously......ஹி..ஹி..ஹூ...ஹூ..

    ReplyDelete
  3. //எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்(யார தான் நா அப்பிடி சொல்லல).//
    உங்களுடைய பதிவுகளில் எங்கயுமே நீங்க எங்க தலைவர்கள் பேரரசு, ஹரி ஆகியோரை பிடித்த இயக்குனர்கள் என்று கிறிப்பிட்டதில்லை. இதை வண்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு. வாழ்த்துகள். ;-)

    ReplyDelete
  5. வாயைக் கொடுத்து டேஸை புண்ணாக்குவதில் ஸ்பைக் லீ நிகர் ஸ்பைக் லீ தான். 25th Hourக்கு பிறகு, உருப்படியான ஒரு படமும் வரவில்லை. ஆனால், வாய் மட்டும் முழ நீளம். கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் 'Flags of Our Fathers'இல் ஆரம்பித்து, இன்று 'Django' வரைக்கும் எல்லாத்தையும் பகுமானமாக விமர்சனம் பண்ண வேண்டியதே இந்தாளுக்கு வேலையா போச்சு.

    ஸ்பைக் டிவின்னு ஒன்னு ஆரம்பிக்க, அந்த டிவி மேல ஸ்பைக் லீ காப்பிரைட் கேஸ் போட, மொத்த அமெரிக்காவே ஒரே சிரிப்பா சிரிச்சுச்சு. இதனாலேயே ஸ்பைக் லீ மேல் இருந்த மொத்த மதிப்பும் காலியாகிவிட்டது.

    இந்த டாகுமென்ட்ரி பார்த்தேன். இதை இயக்க ஸ்பைக் லீ தேவையில்லை. ப்ராண்ட் நேம் வேண்டுமில்லையா. ..

    ReplyDelete
  6. விஷயங்களுக்காக படித்தாலும் நான் உங்க பதிவு படிக்கிறது நகைச்சுவை துனுக்குக்காகவே... உ.ம். //(அப்படியான ஊரில் இருந்து ஒரு பதிவுலக ஆளுமை உருவாகி உள்ளது காலத்தின் கட்டாயம்)//

    மத்தபடி நான் காலேஜ்லே மைகேல் ஜாக்சன் பாட்டு கேட்டதோட சரி - அதுவும் பீட்டர் பெண்களுக்காக தொடங்கி பின் எனக்காக...

    ReplyDelete
  7. அடப்பாவிகளா.....நா ஃபீல் செஞ்சு ஒரு ஸ்டெட்மென்ட் விட்டா......நகைச்சுவை துணுக்காயிருச்சா.....

    ReplyDelete
  8. // ஸ்பைக் டிவின்னு ஒன்னு ஆரம்பிக்க, அந்த டிவி மேல ஸ்பைக் லீ காப்பிரைட் கேஸ் போட, மொத்த அமெரிக்காவே ஒரே சிரிப்பா சிரிச்சுச்சு. இதனாலேயே ஸ்பைக் லீ மேல் இருந்த மொத்த மதிப்பும் காலியாகிவிட்டது. // செம காமெடி.......

    இந்த டாகுமென்டரி - தானா முன்வந்து ஸ்பைக் லீ எடுத்தது...அதுவும் ப்ரீ டெலிகாஸ்ட் போல...ஜாக்சன் பத்தி மற்ற டாகுகளை விட நல்லாவே இருந்தது

    ReplyDelete
  9. நன்றி நண்பா

    ReplyDelete
  10. நானும் அவர்களது வெறிப பிடித்த ரசிகன்

    ReplyDelete
  11. படிக்கும் போதும் னமக்கல் ஜாக்சன் பாடல் போல் மெய் சிலிர்க்கிறது நன்றி

    ReplyDelete