Tuesday, April 19, 2016

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்


மிக எதேச்சையாகவே இந்த க்ளிப் கண்ணில்பட்டது. Michael Shermerன் The Moral Arc: How Science Leads Humanity Toward Truth, Justice, and Freedom புத்தகத்தை பற்றிய டிஸ்கஷனில், எப்படி அதீத உணர்ச்சிவசப்படல் நமது reactionகளை பாதிக்கிறது என்பதுபற்றி இந்த வீடியோவை வைத்து Shermer விளக்குவார். 10/20 கட்டுரைகள் எழுதிக்கூட புரிய வைக்க முடியாத விஷயத்தை 20 நொடிக்குள் இந்த வீடியோ புரிய வைத்துவிடும். கடந்த 40/50 ஆண்டுகளாக ஒருசில விஷயங்கள் தாண்டி, ஏன் இந்தியா/தமிழ்நாட்டால் கழிசடையான பல சமூக அவலங்களில்(எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்) தெளிவான முடிவை எட்ட முடிவதில்லை என்பதற்கான விடை இந்த வீடியோவில் உள்ளது.

பிடிக்காவிட்டாலும் வீடியோவை சற்று விளக்கியாக வேண்டியுள்ளது. நான்/எனது நண்பர் - இன்னொரு நபரிடம் - ஒரு ரயில்வே ஜங்கஷனில் - கடுமையாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அந்த இன்னொரு நபர் என் நண்பரை ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிடுகிறார். நான் முதலில் என்ன செய்ய வேண்டும் ? எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் ?. 



உணர்ச்சிகளின் வழியாக மட்டுமே பிரச்சனைகளை அணுகி அணுகி, நமது 5 நிமிட தார்மீக கோபங்கள் அனைத்தும் நீர்த்துவிடுகின்றனவோ என்ற வருத்தம் உண்டு. ஒரு விஷயத்தில் எது முக்கியம் ? எது தேவை ? யாருக்கு பாதகம்/சாதகம் ? எப்படியெல்லாம் இது மற்றவரை பாதிக்கும் ? இந்த அளவிற்கு கூட போகாமல் அடுத்த நொடியே ரியாக்ட் செய்யவே பழகி இருக்கிறோம்/பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். ஜல்லிகட்டா.....தமிழ் பாரம்பரியம், ஈழப்பிரச்சனையா....தமிழன் என்றால் இளப்பம் (அவர்கள் தெலுங்கு பேசும் மக்களாக இருந்தாலும் இதே பிரச்சனை வந்திருக்கும்; இதே படுகொலைகள் நடந்திருக்கும்), இந்தியன், தமிழ் தேசியம்/திராவிடம்....இதெல்லாம் கேட்க அருமையாக இருக்கும். உணர்ச்சிகளை உச்சியில் நிற்க வைக்கும். ஆனால் யதார்த்தம் என்ன ? கூடவே இருக்கும் அதே தமிழனைத்தான் சாக்கடை அள்ள வைப்போம், காதல் செய்தால் நடுரோட்டில் கழுத்தை அறுப்போம், அந்த கோஷ்டிகளுக்கு தேர்தலில் சீட்டும் கொடுத்து அரசாங்க செலவில் வருடாவருடம் குருபூஜைகளும் நடத்துவோம். பல்லூயிர் ஓம்புதல் குறித்து தமிழனுக்கு யாரும் சொல்லித்தரத்தேவையில்லை என்று வெட்டிப்பெருமை பேசுவோம்...பீகார், MP போன்ற ஊர்களிலிருந்து வரும் ஆட்களை கேவலாக நடத்துவோம்.

1) Dimapur lynching:



மிகநன்றாக ஞாபகம் இருக்கிறது. போன வருடம் இந்த நிகழ்வு நடத்தபோது சோஷியல் மீடியாவில் ஏகோபித்த ஆதரவு குரல்கள். ஒரு பெண்ணை ரேப் செய்தவனை இப்படித்தான் செய்ய வேண்டும்; அப்பொழுதான்தான் பயப்படுவார்கள்....blah blah blah. அதற்குபிறகு அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது ? தெரியாது; இனி அவளது வாழக்கை எவ்வாறு அமையப் போகிறது ? தெரியாது; நாம்தான் என்றுமே victimsகளைப்பற்றி கவலைப்படுவதில்லையே. நமது கூட்டு மனசாட்சிக்கு ஒரு வடிகால் தேவை.

எல்லாவற்றையும்விட பெரிய ட்விஸ்ட் அடுத்த சில மாதங்களில் வெளிவந்தது.  இது ரேப் அல்ல; consensual sex. இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஒருபக்கம் இருக்கட்டும். ரேப் குற்றம்சாட்டப்பட்ட ஆள் - பங்களாதேஷி என்ற வதந்திதான் எல்லாவற்றிக்கும் ஆரம்பம். இதில் எத்தனைவிதமான பின்னணி விஷயங்கள் இருக்கின்றன என்றால்...




2) Rohtak sisters



இதுவும் சோஷியல் மீடியாக்களில் சக்கைபோடுபோட்ட விஷயம் தான். ஆனால் நடந்தது என்ன  ? ஏன் இதுபோன்ற வீடியோக்கள் வெளிவந்த பத்து நிமிடத்திற்குள் hystericalலாக எல்லாவற்றிக்கும் ரியாக்ட் செய்கிறோம் ?


பெண்களுக்கெதிரான வன்முறைகள் அப்படியேதான் இருக்கிறது. அதை எப்படி மாற்றுவது, பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது ? அதற்கு அரசாங்கம்/நாம் என்ன திட்டங்கள்/பார்வைகளை வைத்திருக்கிறோம் ? இதைப்பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு உணர்ச்சிகளை மொத்தமாக ஒரேயிடத்தில் கொட்டிவிட்டு நமது வேலை முடிந்ததாக கிளம்பிவிடுகிறோம்.

இதுமாதிரியான உணர்ச்சிநிலை கோஷங்கள் காலங்காலமாக பேணிபாதுகாக்கப்பட்டு, அதைப்பற்றி பேசுவதையே தவிர்த்துவிட்டு ஓடிஒளிந்து நினைக்கும் இன்னொரு அவலம்   - குழந்தைகள் மீதான வன்கொடுமைகள். முன்பிருந்ததைவிட இதைபற்றி அவ்வப்போது பேச்செழுகிறது என்றாலும், யதார்த்தம் மிகமோசமாக உள்ள சூழ்நிலையில் இதெல்லாம் போதாது என்றுதான் தோன்றுகிறது. ஒரு சிறிய உதாரணமாக, கூகிளில் வேறொன்றைத் தேடப்போக Auto-complete எதையெல்லாம் காண்பிக்கிறது என்று பாருங்கள். நாலைந்து சிஸ்டம்/மொபைலில் தேடியபோதும் இதுதான் வருகிறது. இதிலும் ஆண் - பெண் வேறுபாடு நிறைய இருக்கிறது. மகன் - மகள், நல்ல உதாரணம்.



இரண்டு வருடங்கள் இருக்கும். Claire Denisன் Bastards படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். Child sexual abuse பற்றின கதை. கொஞ்சநேரத்தில் இந்தியாவில்/தமிழில் இதுமாதிரியான படங்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்ற யோசனை கிளம்பியது. பெயருக்காகவாவது இதுபற்றி பேசிய தமிழ் படங்கள் இருக்கின்றனவா  என்று யோசித்தால்(நடுநிசி நாய்கள், கொஞ்சமேனும் கொஞ்சம் காதல் கொண்டேன் நீங்கலாக) எதுவுமே ஞாபகம் வரவில்லை. எதாவது புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்றால் - Child abuse என்ற வகையில் - யூமா வாசுகியின் ரத்த உறவு தான் ஞாபகம் வரும். சைக்கலாஜிகலாக மிகவும் பாதித்த புத்தகம். என் அப்பா பாதிக்கு மேல் படிக்க முடியாமல் வைத்துவிட்டார். லக்ஷ்மி சரவணகுமாரின் "நீலப்படம்" இதனைப்பற்றி பேசும்புத்தகமென்று நண்பர் சொன்னார் (வாங்கி வைத்ததோடு சரி. இன்னும் படிக்கவில்லை. அதனால் எப்படியானது என்று சொல்ல இயலவில்லை). வேறு புத்தகங்கள் இருக்கின்றனவாவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, ஒரு டாக்குமென்ட்ரி...அப்படி எதுவும் வந்தமாதிரி எனக்குத்தெரியவில்லை. ஹிந்தி என்றால், பத்து படங்கள் வரை சொல்ல முடியும். உலகளவில் கடகடவென்று ஒரு பெரிய லிஸ்ட்டே போடமுடியும். எத்தனை டாக்குமென்டரிகள். Vaticanனில் ஆரம்பித்து அதிகாரம் நிரம்பிய பலதளங்களிலும் நடந்த/நடக்கும் இக்கொடுமையை வெளிக்கொண்டு வந்த பல டாக்குமென்ட்டரிகள் உள்ளன. இதுமாதிரி....



ஆனால் இங்கே என்ன நடக்கிறது ? பாசமலர்கள், தங்கமீன்கள் வகை படங்கள் மட்டுமே இங்கு தொடர்ந்து வெளிவருகின்றன. அதில் ஒரு சிக்கலும் இல்லை. பார்க்கும்போதே மக்கள் பொளக்கென்று கண்ணீர்விட்டுக்கொண்டே பார்க்கிறார்கள். நல்லதுதான். ஆனால் யதார்த்தம் இதற்கு முற்றிலும் அந்தப்பக்கமாகவே இருக்கிறதே....அதுதான் சிக்கல். உலகளவில் குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் நடக்கும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா திவ்யமாக உட்கார்ந்திருக்கிறது. இங்குதானே இதைப்பற்றி அதிகளவில் பேசப்பட வேண்டும் ? ஆனால் ஏன் அது நடப்பதில்லை ? நமது மகன்/மகள் மீது பாசம் வருவது இயற்கை. நமது சந்ததி; நமது ஜீன்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்போகிறவர்கள் என்ற அடிப்படையில் இது சகஜம். Selfish genes. ஆனால் இதையே மிகைப்படுத்திக்கொண்டே இருந்தால்...அதிலிருக்கும் பிரச்சனைகளை எப்பொழுதுதான் பேசுவது ? யதார்த்தத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா..Here we go

2007 வரை இந்தியாவில் குழந்தைகள் மீதான வன்கொடுமை பற்றிய எந்தவொரு கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை. முதன்முறையாக நடத்தபட்ட இந்த கணக்கெடுப்பில் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியே வந்தன.



பல நிறுவனங்களும் அவ்வப்போது இதுபோன்ற கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன. எல்லா கணக்கெடுப்பும் ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத்திரும்ப ஊர்ஜிதப்படுத்துகின்றன. பெரும்பாலானா குற்றவாளிகள் குழந்தைகளுக்கு தெரிந்தவர்களே. இரண்டு வருடங்கள் முன்புநடந்த கணக்கெடுப்பில், குழந்தைகள் மீதான கொடுமைகள் குறித்து பதிவான கேஸ்களில் - 88% குற்றவாளிகள் யார் ? பெற்றொர்கள் தான்.


Abuse என்பது sexual abuse என்பதைத்தாண்டி ஏகப்பட்டது உண்டு. அடிப்படையிலயே மாற்றுத்திறனாளிகள் ஆரம்பித்து விலங்குகள் வரை abuse செய்வதில் நாம் வல்லவர்கள். குழந்தைகள் மட்டும் விதிவிலக்கா என்ன ? 


Abuse...மனரீதியிலான பிரச்சனை, உடல்ரீதியிலான பிரச்சனை அல்லது ஆட்டிஸத்தை கூட எடுத்துக்கொள்வோமே. அக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஏற்கனவே பலவகையிலும் பெரிய போராட்டத்தில் இருப்பார்கள். அப்படியான குழந்தைகள் வெளியே சகஜமாக நடமாட நம் சமூகம் எத்தனை தூரம் அனுமதிக்கிறது ? அதற்கான வசதிகள் எந்தளவிற்கு உள்ளன ? மிகமிக சொற்பம். இந்த இம்சைக்கு பயந்தே பலரும் உள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாலபாரதியின் கட்டுரைகளை நிச்சயம் பலரும் படித்திருக்கக்கூடும் (அதன் தொகுப்பு இங்கே உள்ளது). இவரளவிற்கு தெளிவு எத்தனை பேருக்கு வாய்க்கும் ? சற்று முயற்சி செய்தால் சரிசெய்துவிடக்கூடிய ஆட்டிஸ பிரச்சனை உள்ள குழந்தைகளையே சகஜமாக இருக்க இச்சமூகம் விடுவதில்லை என்பதே நிதர்சனம். அதைத்தாண்டி உடல்நல/மனநல பிரச்சனைகள் உள்ள குழந்தைகள் நிலைமை படுமோசம். மேலும் மேலும் அவர்களது/அவர்களது பெற்றோர்களின் சுமையை அதிகரித்தபடியே இருக்கிறோம். என்னைக்கேட்டால் இதுவே மறைமுகமான abuse தான். 

குழந்தைகளை வேலைக்கு வைப்பதில் தொடங்கி, குழந்தைத் திருமணம் வரை....லிஸ்ட் மிகப்பெரியது. இதில் கூறியுள்ள abuseகளை வைத்துப்பார்த்தால், ஏகப்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும் பற்றி பேச வேண்டியிருக்கும். 


ரேப், கொலை - மரண தண்டனை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நாம் ஒன்றே வசதியாக மறந்து விடுகிறோம். நமக்கும் அதில் பங்குண்டு என்பதை. ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத்திரும்ப வலியுறுத்த விரும்புகிறேன். Conditionசனை மாற்றாமல், மாற்றங்கள் குறித்து பேசிப்பலனில்லை.


மேலே இருப்பதைப்போல ஏகப்பட்ட புள்ளி விவரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதிலொரு பிரச்சனை....வெறும் புள்ளி கணக்குகளாகவே இதை பார்த்துவிட்டு கடந்துபோய்விடும் ஆபத்து உண்டு. நாம் பேசிக்கொண்டிருப்பது கோடிக்கணக்கான குழந்தைகள் பற்றி. குழந்தைகள் மீதான வன்முறை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறதென்று பேசிக்கொண்டிருந்தமே....அப்பிடி முன்னணியில் இருக்கும் மற்றொரு நாடு - இங்க்லாந்த். அவர்களது கட்சியின் தேர்தல் அறிக்கைகளை பாருங்கள். நமது நாட்டின் தேர்தல் அறிக்கைகளை பாருங்கள். 120 கோடி மக்கள்தொகையில், 44 கோடி பேர் 18 வயதிற்கும் கீழ். ஓட்டு போடும் ஆட்களின் எண்ணிக்கையை விட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் எந்த தேர்தலின்போதாவது....எந்தவொரு கட்சியின் அறிக்கையிலாவது, முட்டை போடுவது - சீருடை - பஸ் பாஸ் தாண்டி, அசலான பிரச்சனைகள் குறித்து....குறைந்தபட்சம் வாக்குறுதிகளாவது கொடுக்கபட்டு நான் பார்த்ததில்லை.

1) 70 Percent Child Abuse Cases in Kerala: Incest Cases

2) Eight cases of child abuse every day but conviction rate at an abysmal 2.4%

3) Break This Deafening Silence

புள்ளிவிவரங்கள் பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், நமது நாட்டில் குடும்ப அமைப்புகளைத்தாண்டி உறவினர்கள்/பெற்றோர்களது அக்கிரமங்கள் வெளியே வருவது மிகமிகக் கடினம். நிதர்சனம், இதைவிட அதிகமாக இருக்குமென்றேபடுகிறது.

நாங்கள் இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் 2வது படிக்கும் பெண் குழந்தை உண்டு.மிகசூட்டிகையான குழந்தை. துறுதுறுவென்று பேசிக்கொண்டு திரியும். போனவருடம் திடீரென்று மிகுந்த சோர்வுடன் சுணக்கமாக காணப்பட்டாள். ஒருவேளை எதாவது abuse நடந்திருக்குமோ என்று கலக்கமாக போய்விட்டது. நான் மிககேவலமாக உணர்ந்தது....அப்படி நடந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி எதுவுமே எனக்குத்தெரியவில்லை. வெறும் பதட்டம் மட்டுமே நிரம்பியிருந்தது. எதவாது நடந்திருந்தா...நடந்திருந்தா...அதைத்தாண்டி எதுவுமே என்னால் யோசிக்க முடியவில்லை. என் அம்மாவிடம் சொல்லி விசாரிக்கலாம் என்றபோது..என் அம்மா முன்பே அந்தக்குழந்தையுடன் பேசி அப்படியாக எதுவும் நடக்கவில்லை என்பதை ஊர்ஜித்படுத்தியிருந்தார். கடைசியில் பார்த்தால், சத்துக்குறைபாடு காரணமாக சுணக்கமாக இருந்திருக்கிறாள். என்றாலும், மிகப்பெரிய பாடத்தைக்கற்றுக் கொண்டேன். Headphone பற்றி, படத்தை பற்றி, டவுன்லோட் லிங்க் எல்லாம் என்னால் சொல்ல முடிகிறது; 30 வயதில் குறைந்தபட்சம் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றுகூட தெரியவில்லையே என்று படுவெட்கமாக இருந்தது. 

இரண்டாவது, Facebookல் நண்பர் ஒருவர் "மகள் வளர்கிறாள். உலகம் கொஞ்சம் யோக்கியமாக மாறினால் பரவாயில்லை" என்ற ரீதியில் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். சுருக்கென்றிருந்தது. சில விஷயங்களை மிகப்பெர்ஸனலாக எடுத்துக்கொள்வேன். குறிப்பாக, so-called சமூகம் என்று வரும்போது. சமூகத்தில் இருப்பவர்கள் எல்லாம் வேற்றுகிரக ஜந்துக்களா என்ன. என்ன பிரச்சனை நடந்தாலும் என் பங்கும் நிச்சயம் உண்டு. அதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்த போஸ்ட்டிற்கு காமென்ட் போட்ட இன்னொரு நண்பர், "ஜாக்கிரதையா இருக்குறதுக்கு கத்து தர்றதுதான் இப்போதைய தேவை" என்ற ரீதியில் காமென்ட் போட்டிருந்தார். அதுதான் நிதர்சனம்;யதார்த்தம். இத்தனை புள்ளிவிவரங்களும் திரும்பத்திரும்ப அதையே சொல்கின்றன. உணர்ச்சிகளின் வழியாக இவ்விஷயங்களை அணுகினால் ஒரு மயிரும் செய்ய முடியாது. என் office பாஸ், ஆஸ்திரேலியாக்காரர். மனைவி - இந்தியா. அவர்களது பெண் குழந்தை பெங்களூரின் புகழ்பெற்ற இன்டர்நேஷனல்  ஸ்கூல் ஒன்றில் படிக்கிறது. மியுசிக்கில் ஆர்வம் ஏற்பட்டு அதற்கான வகுப்பில் சேர்க்கும்பொழுது, இந்த ஒரு குழந்தை மட்டுமே அந்த க்ளாஸில் சேர்ந்திருக்கிறது(விருப்பப் பாடம்). ஆசிரியரும் - இந்தக் குழந்தையும் மட்டும் இருக்கும் வகுப்பு. என் பாஸ் - அவரது மனைவி, அதுகுறித்து தங்கள் கவலையை/கேள்வியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு அந்த ஆசிரியர் கோபித்துக்கொண்டு, பாடம் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். ஒருவேளை, நான் அந்த ஆசிரியர் இடத்தில் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். இப்படியான எல்லாவற்றையும் சந்தேகப்படும் காலத்தில் வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். வேறுவழியே இல்லை.

விலங்குகளையும், குழந்தைகளும் ஒரு சமூகம்/நாடு எப்படி கையாளுகிறதோ அதைவைத்துதான் அந்நாட்டின்/சமூகத்தின் திறனை/பண்பாட்டை மதிப்பிட வேண்டும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. விலங்குகள், குழந்தைகள் - இருவருக்குமே தனக்கு என்ன நடக்கிறது/ஏன் நடக்கிறது என்பதுபற்றிய புரிதல் இருக்க வாய்ப்பேயில்லை. ஒரே மொழி, இனம், பாரம்பரியம், தொன்மை, வரலாறு என்றெல்லாம் நன்றாக பேசுவோம். ஆனால், நாம் - பேச தெரியாதவர்களுக்கும்,திருப்பி அடிக்க முடியாதவர்களுக்கும் என்றுமே உருப்படியாக எதுவுமே செய்ததில்லை. Society, so called சக மனிதன் போன்றவைகளின் மீது அத்தனை நம்பிக்கை இருக்குமானால், நாளுக்குநாள் க்ரைம் ரேட் குறைந்துகொண்டே தானே வர வேண்டும் ? இதெல்லாம் வெற்றுக்கோஷம் என்பதை புரிந்துகொண்டு முடிந்தளவு நம்மை தற்காத்து கொள்வதும், இன்னொருவருக்கு - இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய முடியுமோ  அதைச்செய்வதும்/நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பதுமே நாம் செய்யக்கூடியது என்று தோன்றுகிறது. 

உளவியல்ரீதியாக எத்தனை ஆண்டுகளானாலும், எவ்வளவுதூரம் இதுபோன்ற கொடுமைகள் பாதிக்கும் என்பதற்கு Barkha Duttன் இந்த கட்டுரையே உதாரணம். 



Facebookers..

7 comments :

  1. மனதை நடுங்க வைக்கும் நிகழ்வைத் தொட்டிருக்கிறீர்கள்.இதனின் முக்கியத்துவம் மக்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.அதற்கான விழிப்புணர்வு கொண்டுவர அரசு ஆதரவுடன் இயக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்.அதற்கு வாய்ப்பே வெகுதூரம் வரை இல்லை.செய்தித்தாளில் ஒவ்வொருநாளும் இதன் தொடர்பான நிகழ்வுகளை வாசிக்கும்போது அந்நாளைய மனநிலை குலைந்துவிடுகிறது.இதனுடன் தொடர்பான விஷயங்கள் பிறந்தகுழந்தைகள் கடத்தபடுவது,மற்றும் சிறுவர் சிறுமிகள் காணமல் போவது....
    விடியும் முன் என்ற திரைப்படம் ஓரளவுக்கு இப்பிரச்சினையைத் தொட்டுள்ளது.

    ReplyDelete
  2. Sari.. ippo itha patthi enna pannalam?

    ReplyDelete
  3. Kolantha, Amazing article .I think one tamil movie came casting by Prasanna and Sneha, and movie happens in Abroad. That movie Plot is child abuse only
    .
    https://en.wikipedia.org/wiki/Achchamundu!_Achchamundu!
    .
    This is the link for that movie
    .

    ReplyDelete
  4. True lines..விலங்குகளையும், குழந்தைகளும் ஒரு சமூகம்/நாடு எப்படி கையாளுகிறதோ அதைவைத்துதான் அந்நாட்டின்/சமூகத்தின் திறனை/பண்பாட்டை மதிப்பிட வேண்டும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு. விலங்குகள், குழந்தைகள் - இருவருக்குமே தனக்கு என்ன நடக்கிறது/ஏன் நடக்கிறது என்பதுபற்றிய புரிதல் இருக்க வாய்ப்பேயில்லை.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Excellent article sir. உணர்ச்சி வசப்படுவதை தான்டி எதார்த்ததை பேச இங்கு யாரும் தயாராகவும் இல்லை மேலும் இப்படியான Negative கள நிலவரங்களை பேசுவதை அவர்கள் விரும்புவதும் இல்லை. Here everyone including me jus need goose bumps in the name of culture, tamilian, indian blah blah....

    ReplyDelete