Thursday, March 10, 2016

பல்லுயிர் ஓம்புதல்

எப்பொழுது, எங்கே படித்தேனென்று ஞாபகம் இல்லை. “Ants, as important as Tigers” என்ற ரீதியில் தலைப்பிருக்கும். அது போகட்டும். அதிலிருந்த விஷயம் இதுதான். புலிகள், எந்தளவிற்கு சூழலியலுக்கு முக்கியமோ அதேயளவிற்கு எறும்புகள் மாதிரியான உயிரினங்களும் மிகமிக முக்கியம். ஆனால் நமது “Policy makers” இதுபற்றியே பிரக்ஞையேயில்லாமல்தான் பல திட்டங்களை செயல்படுத்துகின்றனர். புலிகள், யானைகள், பறவைகள் பற்றியாவது தற்போது ஓரளவிற்கு எதிர்க்குரல்கள் எழுகின்றன. பூச்சிகள், தவளைகள், பாம்புகள் – சுத்தம். பாலிஸி மேக்கர்ஸ் வரைக்கும் போவானேன். நமக்கே நம்மைச்சுற்றி இருக்கும் உயிரினங்கள் குறித்த புரிதல் எந்தளவிற்கு உள்ளது ? அபூர்வத்திலும் அபூர்வமாக எங்காவது இந்த சூழலியல் – பூச்சிகள் – பறவைகள் – விலங்குகள் பற்றிய பேச்சு வந்தால், பேச்சு இப்படியாகத்தான் முடியும்: “நம்ம வீட்டில மொதல்ல என்னென்ன இருக்குன்னு பாரு. அப்பறமா, நாம bird watching எல்லாம் போவோம்”. எறும்புகள், வண்டுகள், குளவிகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், சிலந்திகள், தட்டான்கள், தவளைகள், வெட்டுக்கிளிகள், ஓணான்கள். பெரிய லிஸ்ட், இல்லையா ?
Wood ants வகை எறும்புகள், மரத்தின் ரெசினை தங்களது புற்றுகளில் பயன்படுத்துகிறது. இந்த ரெசினை எடுக்கும்பொழுது, பல நேரங்களில் ஏகப்பட்ட எறும்புகள் ரெசினால் அப்படியே மூடப்பட்டு (ஜூராசிக் பார்க் - ஆம்பர் - கொசு) இறந்துபோக நேரிடுகிறது. இந்த ஆபத்து இருந்தாலும் மீண்டும் மீண்டும் இவ்வெறும்புகள் ரெசினை நாடக்காரணம் ? ரெசின் இயற்கையாகவே பூஞ்சை, பேக்ட்டீரியா போன்றவைகளை எதிருக்கும் தன்மையுண்டு. Natural disinfectants. போன மாதன் Facebookல் படிக்க நேர்ந்தது. தமிழர்கள், செம்பு (Copper) பாத்திரங்களையே நிறைய உபயோகப்படுத்திவந்தனர். காரணம், செம்பு - பேக்ட்டீரியா போன்றவைகளை எளிதில் அண்டவிடாது. தமிழராக இருந்தால் ஷேர் செய்யவும்

உலகம் முழுவதும் 12,000+ வகைகள். உருவாகி, ஜஸ்ட் 140 – 168 மில்லியன் வருடங்கள்தான் ஆகிறது. தங்களது உடல் எடையைவிட 5000 மடங்கு அதிகமாக எடை தூக்கும் திறனாளிகள். இப்பிடி ஏகப்பட்ட சுவாரசியமான “facts”களைத் தாண்டி எறும்புகள் உலகம் மிகஅலாதியானது. கிட்டத்தட்ட மனித இனக்குழுக்களுக்கு இணையான (சிலபல விஷயங்களில் அதைவிட கூடுதலான) செயல்திறன், குணாதிசயங்களைக் கொண்டது. மனிதர்கள் அனைத்தையுமே நம்முடைய PoVவிலிருந்தே பார்த்து பழகிவிட்டதால், எறும்புகள் – பூச்சிகள் பற்றியெல்லாம் ஆரம்பகாலத்தில் மிகத்தட்டையான புரிதல்களே இருந்தன. அறிவியல் வளரவளர, இந்த மாபெரும் சூழலியலில் நாமும் ஒரு பகுதி, எறும்புகள் போன்ற உயிரினத்திற்கும் complexசான அமைப்பு உண்டு என்பது கொஞ்சகொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது. எனக்கெல்லாம், சிறுவர் மலர் காலத்தில் "எறும்பு பாதையை கையை வைத்து அழித்தால்....எறும்புகள் குழம்பிப்போகும்"  என்று படித்துவந்த ஆர்வம் தான். Pheromones பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. கடந்த சிலபல வருடங்களாகத்தான் நுண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விட, அதன் ஒழுங்குகிற்கு என்றுமே பெரிய ரசிகன் நான். Of course, அதன் ஜீன்களே இதற்கு காரணமென்றாலும் (ஒரு பக்கமாவான programmed organisms) ஆச்சரியம் விலகியபாடில்லை. அதன் காம்ப்ளக்ஸ் அமைப்பு எத்தகையது - ஆண்/பெண் உறவு எப்படிப்பட்டது - ஆண்களின் வேலை என்ன - வேலைகளின் அடிப்படையில் எத்தனை வகையான எறும்புகள் உள்ளன என்பது பற்றியெல்லாம், ஏற்கனவே இருக்கும் அட்டகாசமான கட்டுரை இது - எறும்புகளின் அதிசய உலகம்


Src: https://askabiologist.asu.edu


மற்ற பல பூச்சிகளைப்போல எறும்புகளும் மண்ணில் பல ஜாலங்களை செய்யும் திறன் கொண்டது. ஏகபட்ட இடங்களை குடைந்து, ஓட்டை போடுவதுன் மூலம் என்ன நடக்கும் ? மிகச்சுலபமாக நீரும் ஆக்ஸிஜனும் பூமிக்கடியில் போய்ச்சேரும். மரங்கள், செடிகளின் வேர்களுக்கு வேலை மிச்சம். இறந்த உயிரினங்களை, செடிகளை, விதைகளை உட்கொள்வதன் மூலமும் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.  கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். "Barn for Aphids". Aphids - அஸ்வினி பூச்சிகள். செடிகள் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் இதனைப்பற்றி தெரிந்திருப்பார்கள். அதற்கும் எறும்புகளுக்கும் என்ன தொடர்பு ? இதுதான்

Src: https://cmoe.com
Worker ants - அனைத்துமே, பெண்கள் தான். Happy women's day
In search of ant ancestors – இந்த பேப்பரில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, “On average, ants monopolize 15–20% of the terrestrial animal biomass, and in tropical regions where ants are especially abundant, they monopolize 25% or more ”. Monopoly நமக்கு மட்டுமே உண்டான குணாதியசம் இல்லை. எல்லா உயிரினங்களும் தங்களது க்ரூப்பை/சந்ததிகளை விஸ்தரிக்கவே நினைக்கும். ஆனால் நம்மைப்போல மற்றவைகளுக்கு ஆறறிவு கிடையாதே. விளைவுகளைப்பற்றி பிற உயிரினங்கள் யோசிப்பதில்லை (நாம் யோசிப்பதாக சொல்லிக்கொள்கிறோம்). இந்த விஸ்தரிப்புக்கு இயற்கையே வைத்த check mate தான் Ecology cycle. எளிமையான உதாரணம்: பூச்சிகள் – தவளைகள் – பாம்புகள் – பறவைகள்/விலங்குகள். “Policy makers” பற்றி முதல் பாராவில் பேச்சையெடுக்கக் காரணம் இதுதான். யானைகள், புலிகள் என்று மட்டுமில்லாமல் ஏகப்பட்ட உயிரினங்களின் உதவியில்லாமல் நம்மால் காலம் தள்ள முடியாது. இந்த சூழலியல் சைக்கிள் பற்றியே உணர்வே இல்லாமல், இந்த chainனில் எதையாவது உடைத்துவிட்டோமேயானால் அதன் விளைவு பலதளங்களிலும் இருக்கும். திடீரென ஒரு இடத்தில், பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிறதென்றால், அதை உட்கொள்ளும் உயிரினத்திற்குகளுக்கு எதாவது ஆகியிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இதை ஊர்ஜிதப்படுத்திய பல எக்ஸ்பெரிமென்ட்களில் இதுவும் ஒன்று. கென்யாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து, அதுவரை அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த யானைகள் – ஒட்டகச்சிவிங்கிகளை மீண்டும் அப்பகுதிக்குள் வராதமாதிரி செய்கின்றனர். பத்து ஆண்டுகள். அப்பகுதியில் இருக்கும் Acacia வகை மரங்கள் + அப்பகுதியின் எறும்புகளைப்பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். முடிவு ? - Biological Domino Effect - No Elephants = No Ants = No Trees

ஆச்சரியகரமான விஷயம் Slavery. தங்களது வேலைக்கு ஆட்கள் தேவை என்பதற்காக மற்றொரு கேங்கை நோக்கி படையெடுத்துப்போகும் Slave-maker ants குழுக்கள் உண்டு - Slavemaker Ants

சரி. அடிமைகள் இருந்தால், ஸ்பார்டகஸ்கள் இல்லாமலா ?  The rebellion of the ant slaves

இது இரண்டையும் தாண்டி பலவருடங்களாக என்னை குடைந்துகொண்டிருக்கும் இன்னொரு விஷயம்: Individuality. எறும்பு கூட்டத்திற்கு – Superorganisms என்று பெயர். எல்லா நடவைக்கைகளும்/முடிவுகளும் அந்தக்குழுவின் நன்மை கருதியே இருக்கும். “எப்படி நமது இனத்தைக் காப்பது/சந்ததியை நீட்டிப்பது”. இப்படியான குழுக்களில் “individuality” எந்தளவிற்கு இருக்கும் ? இதற்கின்னும் சரியான விடை கிடைத்தபாடில்லை.

Self-organizing mechanism:

எல்லாவற்றையும் விட, இதுதான் அட்டகாசம். Self organization. மனித இனத்திற்கு பலசமயம் வரவே வராத விஷயம் இது. எந்த எறும்பு கூட்டத்தைப் பார்த்தாலும், அதன் ஒழுங்கில் பிசகை பார்க்கவே முடியாது. யார்யார் எந்த வேலையை செய்ய வேண்டும் ? எவ்வளவு தூரம் இலைகளை வெட்ட வேண்டும் ? எதாவது ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் ? எல்லாவற்றிக்கும் பக்காவான ப்ளான் உண்டு. சும்மாவா...மில்லியன் வருட ஜீன்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்திருக்கின்றன. 

மழை காலங்களில்/வெள்ளங்களில் இருந்து எறும்புகள் எவ்வாறு தப்பிக்கின்றன ? இந்த வீடியோவைப் பாருங்கள். இதற்கும் மனித இனத்திற்கும் உண்டான தொடர்பை யோசிக்க முடிகிறதா ? குறிப்பாக, “உதவி” செய்கிறேன் என்று சொல்கிறோமே...அந்த PoVவில்.





எறும்புகள் எவ்வளவு தூரம் சூழலியலுக்கு உதவி செய்கின்றன, சூழலியலில் அதன் பங்கு எத்தகையது ? அதன் அமைப்பு என்ன ? ராணி எறும்புகளுக்கு மட்டும் ஏன் இறக்கை தேவை, ஆண் எறும்புகளின் பங்கு என்ன ? எல்லாவற்றிக்கும் தெளிவான பதில்களை இந்த டாக்குமெண்டரிகளில் காணலாம். குறிப்பாக எறும்புப்புற்றின் அமைப்பு – பிரம்மாண்டம். படு காம்ப்ளக்ஸ் அமைப்பு. எவ்வளவு தான் எழுதினாலும் விஷ்வலாக பார்த்தாலோழிய அதன் பிரம்மாண்டம் பிடிபடுவது கடினம். 

  1. Ants: Nature's Secret Power
  2. Wild City Of Ants
  3. Planet Ant Life Inside The Colony
சரி. நமது வீட்டிலிருக்கும் எறும்புகளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா ?
---------------------------------------------

இதை பலதடவை நம்மில் சிலர் கவனித்திருக்கலாம். முதலில் ஒன்றிரண்டு தேனீக்கள் மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும். கொஞ்சநேரம் கழித்து பார்த்தோமேயானால் ஏகப்பட்டது சுற்றிக்கொண்டிருக்கும். எப்பிடி ஒரு தேனீ மற்றவைகளுக்கு இந்தத்தகவலை பரிமாறியது ? விடை – Waggle Dance. டிக்கியை ஆட்டி சமிக்கை தருவது பெரிதில்லை. சூரியன் - உணவு போன்றவைகளின் இருப்பிடத்தை, சரியான ஆங்கிளில் குறித்துக்காட்டும் oriented dance தான் அட்டகாசம்.
Src:
https://www.herstat.com/blog/23-can-bees-communicate-the-location-of-propolis-by-dancing.html

தேனீக்களைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் பேசவே முடியாது. அதன் வேலையின் magnitude அப்படி. மூன்று பழங்கள் இருக்கிறதென்றால், அதில் ஒன்று - தேனீக்களின் உதவியால் நமக்குக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். எத்தனை வகையான மரங்களின் வளர்சிக்கு தேனீக்கள் காரணமாக இருக்கின்றன என்று பார்த்தால்....மலைப்பாக இருக்கிறது. நாம் நிச்சயம் இதைப் பார்க்கமால் இருந்திருக்க முடியாது. ஒரு தேனீ எதாவது பூக்குள் நுழைந்து மகரந்ததூள்களை சிதறடிப்பதை. அதுவும் Bumblebee மாதிரியான ஆள் என்றால் பின்னி எடுக்கும். Hand pollination - கேட்க காமெடியாக இருந்தாலும், இப்படிவொரு நடந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையாக பூக்களுக்கு இடையே மகரந்த சேர்க்கை நடந்தால்தானே பழங்கள் கிடைக்கும் ? அதற்கு பெருமளவில் தேனீக்கள் தேவையல்லவா. அதன் எண்ணிக்கை குறைந்துவரும்பட்சத்தில் ? கையால் மகரந்த தூள்களை சேர்க்கும் முயற்சிக்குப்பெயர் தான் Hand pollination. உலகின் பலநாடுகளிலும் இது நடந்துகொண்டிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை. Crazy people. Decline of bees forces China's apple farmers to pollinate by hand

2012ல் வந்த டாகுமெண்டரி இது. பலரும் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும், குறிப்பாக  US, Australia போன்ற நாடுகளில் ஏன் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது என்பது பற்றி முக்கியம் விஷயமும் இதில் (ஓரளவிற்கு) அலசப்பட்டுள்ளது.



தேனீக்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்துகொண்டே வர என்ன காரணம் ? மூன்று முக்கிய காரணிகள்

1) Obviously, செடிகளில் உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள்

2) அதனால் தேனீக்களின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, தங்களை தாக்கும் பூச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் போதல்

3) Stress. Yes, நமக்கு ஏற்படும் அதே ஸ்ட்ரெஸ் தான். வேறு வகையில் அதற்கும் ஸ்ட்ரெஸ் ஏற்படும் தானே. 


இந்த ட்ரென்டிற்கு இந்தியாவும் தப்பவில்லை. நாம் பயன்படுத்தும் paper cup உட்பட பலதும் தேனீக்களின் எண்ணிக்கை குறையக்காரணம் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.


இந்த நான்கு லின்க்களையும் பொறுமையாக படித்துப்பாருங்கள். இது அனைத்துமே facts. யாருக்குத் தெரியும். இன்னும் இருபது - முப்பது வருடங்கள் கழித்து தேனீக்களை ஃபோட்டோவில் மட்டுமே பார்க்கும்நிலை ஏற்படலாம்.
  1. Global Honey Bee Decline
  2. Death and Extinction of the Bees
  3. Honey, where are the bees?
  4. Would we starve without bees?
---------------------------------------------

குளவிகளின் கூட்டில் ஏன் பச்சை புழுக்கள் இருக்கின்றன ?. வண்டியின் ஹேண்டில் பார் அருகில், வீட்டில் சுவற்றின் மூலையில் எப்பொழுதெல்லாம் குளவிகளின் கூட்டைக் கலைக்கிறோமே, அப்பொழுதெல்லாம் (பெரும்பாலான சமயங்களில் பச்சைப் புழுக்கள்) புழுக்களைப் பார்த்திருப்போம். என்ன காரணம் ? இயற்கையை romanticize செய்யவே நம்மை பழகப்படுத்திவிட்டதால் சிலருக்கு இதுமாதிரியான விஷயங்கள் அதிர்ச்சியாக இருக்கலாம். 

குளவி, ஒரு பச்சை புழுவைப்பிடித்தவுடன் படக்கென்று தனது கொடுக்கால் ஒரு கொட்டு. புழு சாகாது; மாறாக செயலிழந்துவிடும். இனிதான் விஷயமே. குளவி, உயிருடன் இருக்கும் புழுவில் தனது முட்டையையிடும். அந்த முட்டை பக்கவாக புழுவின் வயிற்றில் வளரும். வளர்ந்து வெளியே வந்தவுடன், உணவு ? இருக்கவே இருக்கிறதே - புழு. அதையே உணவாக்கிக்கொள்ளும். சிலசமயங்களில் புழு உயிர்பிழைப்பதும் உண்டு. இதன் காரணமாக, புழு and அதிலிருந்து வெளிவரும் பட்டாம்பூச்சி - genetic mutation நடப்பதும் உண்டு. படத்தைப் பாருங்கள். எப்படி முட்டையிடுகிறது, அதிலிருந்து எப்படி குட்டி குளவி கிழித்துக்கொண்டு வருகிறதென்று.


Parasitic wasps that are genetically modifying butterflies

இப்படி குளவிகள் புழுவைக் கொல்வதால் நமக்கென்ன நன்மை ? விவசாயிகளிடம் பச்சை புழுக்கள் பற்றிக்கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். குளவிகள் கொல்லும், புழுக்கள் - சிலந்திகளில் 95% விவசாயத்திற்கு கெடுதல் விளைவிக்கும் உயிரினங்கள். அதை இயற்கையாகவே கட்டுக்கள் வைக்க குளவிகள் பெரிதும் உதவுகின்றன. இவைகள் அனைத்தும் Parasitoid Waspகளின் கீழ் வரும். இதுதவிர Social Wasps, Solitary Waspsகளும் உண்டு.

Types Of Wasps

Fig Wasps வகை குளவிகள் செய்யும் வேலையைப் பாருங்கள். 


சரி, குளவிகளுக்கும் தேனீக்களுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது. 


மேலும் படிக்க:
தொல்லை தராதீர் .......குளவிகள் கூடுகட்டுகின்றன.

---------------------------------------------
எறும்புகள்(Ants), குளவிகள் (Wasps) & Bees (தேனீக்கள்) மூன்றுக்கும் என்ன சம்பந்தம் ? Bees & Wasps - இரண்டிற்கும் ஒரே மூதாதையர் தான். Ants, குளவி போன்ற மூதாதையரில் இருந்து தோன்றியது (இல்லை, தேனீக்களைப் போன்ற உயிரினத்திலிருந்துதான் வந்தது என்ற கூற்றையும் பார்க்க முடிகிறது). மிக சர்வசாதாரணமாக நாம் இந்த உயிரினங்களை கடந்து போகிறோம். ஆனால், நம்மைவிட பல விஷயங்களிலும் இம்மூன்றும் கச்சிதமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நம்மைவிட பல மில்லியன் வருடமாக மூத்தவர்கள். நமது இனம் இல்லாவிட்டாலும், அவைகள்பாட்டிற்கு தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் இவைகளப்போன்ற பூச்சிகள் இல்லாவிட்டால்...நாம் தொலைந்தோம் என்பதே நிதர்சனம். 

தவறவிடக்கூடாத டாக்குமென்டரி இது. ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு புரிதலை வழங்கக்கூடியது. இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதை ரிக்வெஸ்டாகவே வைக்கிறேன். 

Facebookers..

4 comments :

  1. அருமையான எழுத்து நடை...

    ReplyDelete
  2. சுஜாதாவின் சாயலில்லாமல் அறிவியல் கட்டுரை எழுதுவது கடினம்.
    நீஙக இத மாத்திட்டீங்க ....
    வாழ்த்துகள்...

    ReplyDelete