Wednesday, December 16, 2015

The Wandering Glider


Kingdom: Animalia

Order: Odonata

Genus: Pantala

Species: P. flavescens

Other Names: Globe Skimmer (அ) Wandering Glider

Size: மிஞ்சிப்போனால் 4 - 4.5 cm

Weight: சில மில்லிகிராம்கள்

Color: அழுக்கு படர்ந்த வெளிறிய ப்ரௌன் + மஞ்சள்

Distribution: இதை பார்க்காத ஆளே இருக்க முடியாது. ரொம்ப சிரமப்பட வேண்டாம்

Wandering Glider
Img Src: Flickr


ஸ்கூல் படிக்கும் காலம்தொட்டே தட்டான்களின் மீது பெரிய fixation உண்டு. தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டரை உருவாக்கியிருப்பார்கள் என்பது சிறுவயதில் என் அசைக்க முடியாத நம்பிக்கை. "பறவையைக் கண்டான்...விமானம் படைத்தான்" என்று சைக்கிளில் சென்ற சிவாஜி பாடி...அதை ஊர்ஜிதப்படுத்தினார். ரெண்டு வருஷமாக இதை சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்றிருந்து....இந்த தட்டான் வலசை விஷயத்தை ஒரு நண்பரிடம் நேரில் சொல்ல வாயெடுக்கும் போதுகூட....முழுதாக சொல்லக்கூட இல்லை...அவ்வளவு பீடிகை; அவ்வளவு உணர்ச்சிவசப்படல்; அவ்வளவு அலட்டல். சும்மா பதிவுக்காகவெல்லாம் சொல்லவில்லை. ஒவ்வொரு முறை இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் பெரும் புல்லரிப்பு ஏற்படும். இரண்டே இரண்டு காரணங்கள்.

-  நம்மைச்சுற்றி மிக சர்வசாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஜந்து, என்னவெல்லாம் செய்கிறது.

- “இயற்கையின் அற்புதம்” என்று நிறுத்திக்கொள்ளலாம் (அ) “கடவுளின் செயல்” என்று இந்த நிகழ்வையே மட்டையாக்கி பூரிக்கலாம். ஆனால்....scientific approach ஒன்றே நம்மைச் சுற்றி நடக்கும் ஏகப்பட்ட விஷயங்களை உணர்ந்து அதை முழுவதுமாக ரசிப்பதற்கான வழி என்பதை Charles Anderson நமக்கு உணர்த்தியமைக்காக

நிற்க: 

1) கடைசியாக, கொத்து கொத்தாக தட்டான்களை எப்பொழுது பார்த்தோம் ?

2) பார்த்த அன்றைக்கோ அல்லது அதற்கு சிலநாட்கள் முன்னரோ மழை பெய்ததை ஞாபகப்படுத்த முடிகிறதா ?

3) ஞாபகம் வரும்வரை அடுத்த பத்திக்கு தாவ வேண்டாம்

தொடருவோம். இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியாகவேண்டிய கட்டாயம். ஏன் முக்கியம் என்று ஒருசில பத்திகள் தாண்டி தெரியவரும். தவிர, இந்த விஷயமெல்லாம் மழைக்காலங்களில் சிலபல புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவிற்கு பருவமழை இரண்டு வகைகளில் கிடைக்கிறது. தென்மேற்கு (SouthWest Monsoon) & வடகிழக்கு (NorthEast Monsoon) பருவப்பெயர்ச்சிக் காற்றுகள். இது எவ்வாறு உருவாகிறது ? ஏன் உருவாகிறது ?


சூரியனை பூமி சுற்றும்பொழுது, சில குறிப்பிட்ட காலங்களில் சில பகுதிகளுக்கு மட்டும் வெப்பம் அதிகளவில்படும் கோணத்தில் சுற்றும். “Solstice” என்று படித்திருப்போமே. ஜூன் மாதம் – Summer Solstice; டிசம்பர் மாதம் – Winter Solstice. மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெளிவாகப் புரியும். இந்த Solstice காலங்களில் வெப்பம் அதிகளவில் இருக்கும் என்று பார்த்தோம் அல்லவா....இது மிதமிஞ்சிய வெப்பச் சலனத்தை சூரியனுக்கு நேராக இருக்கும் பகுதியில் ஏற்படுத்தும். இந்த வெப்ப சலனமும் வேறுசில வானிலை மாற்றங்களும் நடைபெறும் - zone/band என்று வைத்துக்கொள்வோமே - இடத்திற்கு Inter Tropical Convergence Zone (ITCZ) என்று பெயர். இது ஜூன் மாதத்தில் இந்தியாவில் ராஜஸ்தானில் ஆரம்பித்து - அருணாசல பிரதேசம் வரை படரும். இதன் காரணமாக அந்த இடங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை(Low Pressure) உண்டாகும். 



Now, ஒரு விஷயத்தை எப்பொழுதுமே ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே மேட்டில் இருந்துதானே பள்ளத்திற்கு நீர் பாயும். அதுபோலவே காற்றும், High Pressureல் இருந்து Low Pressure பகுதிக்கே பாயும். Current – High Potential(+ve)ல் இருந்து Low potential(-ve)க்கு பாய்வதால் உண்டாகிறது. எப்பொழுதுமே இந்த equilibriumமை நோக்கியே இயற்கையின் நிகழ்வுகள் அமைந்திருக்கும். 

ராஜஸ்தான் to அருணாசல பிரதேசம் வரை உண்டாகும் குறைந்த தாழ்வுநிலையை சமன்படுத்தியாக வேண்டுமே. அதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து (High Pressure area) காற்றுக் கிளம்பி.....அந்த Low Pressure ஏரியாவை நோக்கி நகரும். ஆனால் வழியில் நந்தி மாதிரி............வேறென்ன.........மேற்குத்தொடர்ச்சி மலைகள் நீண்டிருக்கின்றன. அதனைத் தழுவி/தாண்டித்தான் அந்த high pressure காற்று சென்றாக வேண்டும் இந்த நந்தி இருப்பதால் தான் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்குகிறது. தேனி, கம்பம் பகுதிகளுக்கும் சாரல் மழை கிடைக்கிறது. இந்த high pressure காற்று அப்படியே கர்னாடகா – மகாராஸ்ட்ரா என்று ஒவ்வொரு ஏரியாவாக நகரநகர அந்தந்த இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கிறது (SouthWest Monsoon உபயத்தால்).

அக்டோபர் மாதத்தில் மேல சொன்ன ICTZ இந்தியப் பெருங்கடல் பகுதியில் படர ஆரம்பிக்கும். டிசம்பரில் உச்சத்தை அடையும் (Winter Solsticeன்போது). அப்பொழுது அந்தப்பகுதியில் low pressure உருவாகும். இதை சமன்படுத்தியாக வேண்டுமே. அதற்காக இமயமலைப் பகுதியில் இருந்து high pressure காற்று கிளம்பி, அக்டோபர் மாதம் முதலே மெல்ல மெல்ல – மத்திய இந்தியா – ஆந்திரா – தமிழ்நாடு என்று நகர ஆரம்பிக்கும். இதுதான் நமக்கு வடகிழக்கு பருவமழை கிடைக்கும் கதை. தென்மேற்கு பருவக்காற்றை தடுக்க மேற்குத்தொடர்ச்சி மலைகள் உள்ளன. ஆனால், வடகிழக்கு பருவக்காற்றை தடுக்க எந்த அரணும் இல்லாதால்தான் வட தமிழ்நாட்டு பகுதிகளில் செமத்தியான மழை இந்த காலங்களில் கிடைக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியினை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது மற்றுமொரு காரணம்



ஒருவழியாக முக்கிய கதைக்குள் நுழைந்துவிட்டோம்.

Charles Anderson. Marine Biologist. இங்கிலாந்த் நாட்டுக்காரர் என்றாலும், மாலத்தீவில்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். 1983ல் ஆராய்ச்சி வேலைக்காக மாலத்தீவிற்கு குடியேறுகிறார். ஆரம்ப காலங்களில் தனது கடல்சார்ந்த ஆராய்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவரின் ஆர்வத்தை ஒரு விஷயம்/நிகழ்வு கண்டபடி தூண்டுகிறது. (அறிவியல் ஆர்வலர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயல்பிலேயே எழும் curiosity) அது, Global Skimmer என்ற வகை தட்டான்களின் வரவு. ஆரம்பத்தில் அவர் அதைப்பற்றி பெரிதாக யோசிக்காவிட்டாலும், மூளையின் ஓரத்தில் என்னமோ ஒன்று நெருடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலங்களில் கொத்து கொத்தாக அதன் வரவு இருந்ததை போகப்போக படுஆர்வத்துடன் கவனிக்கத்தொடங்கினார். ஏன் அவ்வளவு ஆச்சரியம் என்றால், // அன்றைக்கோ அல்லது அதற்கு சிலநாட்கள் முன்னரோ மழை பெய்ததை ஞாபகப்படுத்த முடிகிறதா ? // இதை காரணம் இல்லாமல் எழுப்பவில்லை. ஏறக்குறைய உலகின் அனைத்துவகை தட்டான்களும் Fresh waterரில்(நன்னீர்) தான் முட்டையிடுகின்றன. அந்த முட்டைக் குஞ்சு வளர்வதற்கும் Fresh water தான் தேவை (இதன் காரணமாகவே மழைக்காலங்களில் தேங்கிய நீரில் அருகில் தட்டான்கள் பறந்து கொண்டிருப்பதைக் பார்க்கலாம். கவனமாகப்பார்த்தால், அந்த நீரில் அவை முட்டையிடுவதைக் காணலாம்). மாலத்தீவு – Surface fresh water இல்லாத பகுதி. மழை பெய்தாலும், அவை உடனே உறிஞ்சப்பட்டுவிடும். அப்படி இருக்கும்பொழுது, ஏன் இவ்வளவு தட்டான்கள் இங்கு வருகின்றன என்ற கேள்வி அவரை படாதபாடுபடுத்துகிறது. 

இனிதான் அறிவியல் மூலம் எவ்வாறு ஒரு விஷயத்தை அணுகுவது என்ற செமத்தியான journey ஆரம்பம். 1983ல் அவர் மாலத்தீவு சென்ற ஆண்டில் இருந்தே இதை பார்த்து வந்தாலும், சரி....இது எங்கிருந்துதான் வருகிறது என்று பார்த்துவிடுவது என்ற முடிவில் 90களின் ஆரம்பத்தில் காரியத்தில் இறங்குகிறார். 1996ல் ஆரம்பித்து 2008 வரை ஒவ்வொரு ஆண்டும் (ஒன்றல்ல, ரெண்டல்ல....முழுவதுமாக 14 ஆண்டுகள்) தட்டான்களின் முதல் வரவு – என்ன மாதிரியான தட்டான் – எத்தனை நாட்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று எல்லாவற்றையும் ரிகார்ட் செய்ய ஆரம்பிக்கிறார். தன்னுடன் லோக்கல் ஆர்வலர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு இந்த வேலையை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார். இங்குவொரு சுய தம்பட்டம். இந்த விஷயம் தெரியும் முன்னர், இந்தியாவில் Amur Falcon, Indian Roller, Bee-Eater போன்ற பல பறவைகள் வலசை போகும் பாதை பற்றி எனக்குத் தெரியும். எப்பொழுது இந்த தட்டான் விஷயத்தை படித்தேனோ அடுத்த நொடி அந்த பறவைகளின் பாதை பற்றித்தான் ஞாபகம் வந்தது. எனக்கே இது ஞாபகம் வரும்போது, Charles Anderson போன்ற ஆள் கவனிக்காமலா இருப்பார். அதையும் ரிகார்ட் செய்கிறார். ரிகார்ட் செய்த அனைத்து டேட்டாகளையும் வைத்து அனலைஸ் செய்யும்பொழுது ஒருசில விஷயங்கள் தெள்ளத்தெளிவாக புலப்படுகின்றன



1) ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில்தான் தட்டான்களின் வரவு ஆரம்பிக்கிறது. நவம்பர் கடைசி வாரம் – டிசம்பர் முதல் வாரங்களில் மிகஅதிகமான வரவு நிகழ்கிறது

2) எல்லா தட்டான்களும் வடக்குப் பகுதியில் இருந்துதான் (Northern side of Maldives) வருகின்றன.

3) நாலைந்து வகை தட்டான்கள் வந்தாலும், 98% Global Skimmer (அ) Wandering Glider தட்டான்கள் தான்.

4) தட்டான்கள் வரும் அதே சமயத்தில், Amur Falcon – European Roller – Blue-Cheeked Bee eater போன்ற சில பறவைகளின் வரத்தும் அதிகமாக இருக்கிறது.

5) மாலத்தீவு மற்றும் வேறு சில நாட்டின் வானிலை மையத்தில் இருந்து – காற்றின் வேகம் சார்ந்த டேட்டாக்களை வாங்கிப் பார்த்தபொழுது, காற்றின் வேகம் அதிகமாக அதிகமாக தட்டானின் வரத்தும் அதிகமாக இருக்கிறது


ஏன் அக்டோபர் மாதத்தில் தட்டான்களின் முதல் வரவு ஆரம்பிக்கிறது ? அங்குதான் இருக்கிறது சூட்சமம். வடகிழக்கு பருவக்காற்று (NorthEast Monsoon). இந்திய பெருங்கடல் நோக்கி நகர்கிறது என்று பார்த்தோமே....அதை மிகலாவமாக பயன்படுத்திக்கொண்டு இந்த தம்மாத்துண்டு தட்டான்கள் லட்சக்கணக்கில் தென்இந்தியாவிலிருந்து இடம் பெயருகின்றன. அதுவும் கடலின் மேலே. இதுதான் பல விஞ்ஞானிகளை படுஆச்சரியத்திற்கு தள்ளியிருக்கும் விஷயம். பறவைகளும் இதுபோன்றுதான் பருவக்காற்றுகளின் துணைகொண்டு இடம்பெயருகின்றன என்றாலும், தட்டான்கள் எவ்வளவு சிறியது; கடலைத்தாண்டி பறப்பதென்றால்... 

ஆனால், மாலத்தீவில் தான் Fresh water கிடையாதே. பின்பு எவ்வாறு அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்....முதலில் ஏன் இவ்வளவு தூரம் – தண்ணியில்லாத இடத்திற்கு பறந்து வருவானேன் ? என்று Anderson யோசிக்கும் பொழுதுதான் அவருக்கு இன்னொரு சூட்சமுமும் பிடிபடுகிறது. தட்டான்கள் மாலத்தீவிற்கு வரவில்லை – அதைத் தாண்டி பறந்து செல்கின்றன. அவ்வளவுதான். அப்படியானால் எங்கு ? East Africa. ஏனென்றால் வடகிழக்கு பருவமழை East Africa பகுதிகளில் தான் கடைசியாக கரையைக் கடக்கிறது. அப்பொழுது அந்தப்பகுதிகளில் பெருமழையும் பெய்கிறது. அந்த மழையை பயன்படுத்திக்கொள்ளவே Wandering Gliders தென்னிந்தியாவில், வடகிழக்கு பருவக்காற்றுடன் ஜோடி போட்டு புறப்பட்டு மாலத்தீவு – செஷல்ஸ் – ஆப்ரிக்கா சென்று பயணத்தை முடிக்கிறது. இதை எவ்வாறு கண்டுபிடித்தனர் என்றால், செஷல்ஸ் தீவில் தட்டான்கள் முதல் வரவு, East Africaவில் தட்டான்களின் முதல் வரவு – அனைத்தும் வடகிழக்கு பருவமழையுடன் கச்சிதமாக ஒத்துப்போனது. இந்தியாவில் இருந்து East Africaவிற்கு கிட்டத்தட்ட 7000Km. மூச்சுமுட்டவில்லை ? ஆனால் அதகளம் இதோடு முடியவில்லை. திரும்ப, East Africaவை ஒட்டிய கடல் பகுதிகளில் இருந்து கிளப்பும் High Pressure – SouthEast Monsoon காற்றை பிடித்துக்கொண்டு திரும்ப இந்தியாவிற்கு இன்னொரு ட்ரிப். திரும்ப அக்டோபரில் NorthWest Monsoonல் ஒட்டிக்கொண்டு இன்னொரு ட்ரிப். இப்படியாக ஒவ்வொரு வருடமும் ஒரு ரவுன்ட் ட்ரிப் அடிக்கிறது. தூரம்: அதிகமில்லை மக்களே. 14000 – 16000Km மட்டுமே, ஆனால் ஒரே தட்டான்கள் இவ்வாறு ரவுன்ட் ட்ரிப் அடிக்க முடியாது. மூன்று  - நான்கு ஜெனெரேஷன்கள் இந்த ட்ரிப்ல் பங்குகொள்கின்றன. இந்தியாவில் முதல்தலைமுறை பயணத்தை ஆரம்பிக்கிறது என்றால், திருப்ப மூன்றாவது - நான்காவது  தலைமுறை அடுத்தாண்டு அதே இடத்திற்கு வருகிறது. ஏனென்றால் தட்டான்களின் அதன் ஆயுசுகாலம் கம்மி. ஆனால் Global Skimmer's 38 - 65 நாட்களுக்குள் முட்டையிட்டு - குஞ்சாக மாறிவிடும். அதன் காரணமாக அதிகளவில் இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.


பறவைகள்...East Africaவில் இந்தத் தட்டான்கள் வரத்தொடங்கும் அதே நேரத்தில் தான் Bee-Eater போன்ற பூச்சிகளை/தட்டான்களை பிரதானமாக உண்ணும் பறவைகள் ஆப்ரிக்காவின் பிற பகுதியில் இருந்து அங்கு வலசை (Migration) வருகின்றன. அவ்வளவு ஏன், இந்தியாவில் Amur Falconகள் செய்யாத வேலையா (இந்த லிங்க்கை தயவுசெய்து படித்துப்பாருங்கள்). இதுபோன்ற வலசை போகும் பறவைகள், போகும் வழியிலேயே இந்தத் தட்டான்களை உணவாக்கிக் கொள்கின்றன. இதன்மூலம், தட்டான்கள் எண்ணிகையும் கட்டுக்குள் இருக்கும்; பறவைகளுக்கும் உணவு கிடைக்கிறது/வலசை போக தேவையான சக்தியும் கிடைக்கிறது.

Dragonfly/Damselfly (தட்டான்/தும்பி):

 இரண்டின் வாழ்நாள் சுழற்சியும் ஒன்றுதான். வளர்ச்சியடைந்த தட்டானிற்கும் – தும்பிக்கும் தான் உருவ வேறுபாடுண்டு. இரண்டுமே பல பூச்சிகளைப் போல வியத்தகு life cycleயைக் கொண்டது. ஒரு தட்டானின் வாழ்நாளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

முட்டை (Egg):

நம்மாட்கள் பலரும் செய்யும் கூத்துகளில் ஒன்று, இயற்கையை/அறிவியலை romanticize செய்வது. ஆனால் இயற்கை நேர்மாறானது. தட்டான்கள் மட்டுமல்லாது, பல உயிரினங்களும் – ஒரே இனமாக இருந்தாலும் – தான்/தனது வாரிசு என்பதில் மிகுந்த சிரத்தை/extreme level சிரத்தை எடுக்கும். Survival of the fittest. ஆண் தட்டான், பெண் தட்டானுடன் மேட்டர் செய்யும்பொழுது தனது உறுப்பை கொக்கிபோல பயன்படுத்தி, பெண் உறுப்பில் முதலில் துழாவிவிட்டு பின்புதான் ஸ்பெர்மை செலுத்தும். எளிமையான காரணம்: வேறு தட்டான்கள் முட்டையிட்டிருந்தால் ? அதை காலிசெய்து விட்டு...தனது வாரிசுதான் வரவேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை. 

இவ்வாறு பறந்துகொண்டே – அப்பறம் உட்கார்ந்துகொண்டு – மேட்டர் செய்து முடித்தவுடன் – வழக்கம்போல் ஆணின் வேலை முடிந்துவிடும். பின்பு, பெண் – முட்டையிட Fresh waterரைத் தேடி அலையும்; தண்ணீரில் ஏதாவது செடிகொடிகள் இருந்தால் அதில் முட்டையிடும். இல்லாவிட்டால் நீரில் அப்படியே முட்டையிடும்.



குஞ்சு (Nymph):

முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுக்கு பெயர் தான் Nymph. தட்டான்களின் வாழ்நாளில் இந்தப்பருவம்தான் மிகஅதிகம். சிலவகை தட்டான்களின் ஆயுள் நான்கு – ஆறு ஆண்டுகள். அதில் கிட்டத்தட்ட மூன்று – ஐந்து ஆண்டுகள் வரை நீருக்குள்ளேயே குஞ்சாக இருக்கும். வேறு சிலவகை தட்டான்களின் ஆயுள் ஒரு வருடம் என்றால், கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் வரை குஞ்சாக இருக்கும். குஞ்சு கொஞ்சகொஞ்சமாக உருமாறத்தொடங்கும். இந்த காலத்தில் தண்ணீரில் இருக்கும்பொழுது, சின்ன மீன்கள், புழுக்கள், நத்தைகளை சாப்பிடும். மற்றொரு பிடித்த உணவு – திருவாளர் கொசுவின் முட்டைகள்.

முழுவதுமாக வளர்ச்சியடைந்த தட்டான் (Adult):

குஞ்சு, நீரில் இருந்து வெளியே வந்து தனது தோல் போன்ற அமைப்பில் இருந்து திமிறிக்கொண்டு – கஷ்டபட்டு, கிட்டத்தட்ட ஒருமணி நேரம் - கிளப்பும். இந்த தோலை (Exuvia) செடிகள் நாம் பார்க்கலாம். பின்பு, மற்ற பூச்சிகளை வேட்டையாடத் தொடங்கும். பெண் இணையத் தேடி மேட்டர் செய்ய ஆரம்பிக்கும். பெண் – முட்டையிட ஆரம்பிக்கும். இந்த சைக்கிள் அப்படியே தொடரும்.

வளர்ந்த தட்டான்களில் 90% இயற்கையாக இறப்பதில்லை. கரைக்கு வந்து பறக்கத்தொடங்கிய கொஞ்சநாட்களிலேயே பறவைகளுக்கு உணவாகியே இறக்கின்றன.



ஏறக்குறைய உலகின் அனைத்து பூச்சிகளும் Ectothermic வகையச் சார்ந்தவைகள். அதாவது, தங்களுது உடல் வெப்பத்திற்கு – புறசூழலையே நம்பி இருக்கும். உதா: பட்டாம்பூச்சி. தங்களது உடல்வெப்பநிலையை சமப்படுத்திக்கொள்ளவே வெயில் ஏறிய பிறகே பட்டாம்பூச்சிகள் சுறுசுறுப்பாக வெயிலில் சுற்றும்.உட்காரும் போது இறக்கையை விரித்தபடியே உட்காரும்(Sunbath). இதற்கு Basking என்று பெயர். வெப்பம் அதிகமானால், நிழல்பகுதிக்கு சென்றும்/இறக்கைகளை மடக்கியும் உட்காரும். ஆனால் தட்டான்களுக்கு இன்னொரு தனித்தன்மை உண்டு. தங்களது இறக்கைகளை வேகமாக அடிப்பதன் மூலமும்/வேறு சில வேலைகள் மூலமும் சிறிய அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும் திறன் தட்டான்களுக்கு உண்டு. பலசமயம் டிக்கியை தூக்கியபடி தட்டான்கள் உட்காந்திருப்பதை கவனித்திருப்போம். காரணம்: வெப்பத்தை மட்டுப்படுத்த. இறக்கைகளை மடக்குவதும்/விரித்தபடியே உட்காருவதும் இதன் காரணமாகவே.

இரண்டு விஷயங்களில் தட்டான்களில் அடித்துக்கொள்ள ஆளில்லை. 1) வேட்டையாடுதல் 2) பார்வைத் திறன். பார்த்திருப்போமே...தலையில்...ஏறக்குறைய தலை முழுவதும் கண் தான். தட்டான்கள், தங்களது மூளையின் செயல்பாட்டில் 80%த்தை பார்க்கும் விஷயத்தை அனலைஸ் செய்யவே ஒதுக்குகிறது. மனித ஜந்துக்களை விட அதிக கலரை (பல பறவைகள், பூச்சிகள் போல) தட்டானால் பார்க்க முடியும்.

திரும்ப Charles Andersonற்கு வருவோம். அவரது ஆராய்ச்சி பேப்பரை படித்துப்பார்த்தீர்களானால், ஒருவிஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரியும். பக்கவானா Scientific approach. 

Observation – அதைத் தொடர்ந்து Data collection – அதுவும் 14 ஆண்டுகளுக்கு (Testable, Repeatable) – அதை பக்கவாக analysis செய்கிறார் – அதிலிருந்து ஒரு hypothesisசை உருவாக்குகிறார். முக்கியமானது: அவரது ஆராய்ச்சி கட்டுரையில் அவர் பலதையும் circumstantial evidences என்று தான் சொல்கிறார். கட்டுரையின் தலைப்பே கூட கேள்வியோடு இருப்பதைக் காணலாம். ஆதாரம் கிடைக்கும் வரை அறிவியல் எதையும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் pseudoscienceக்கும் scienceக்கும் உள்ள வேறுபாடு. பேப்பர் போட்ட கையோடு Anderson சும்மா இருக்கவில்லை. அடுத்த கட்டமாக இதனை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது என்ற முயற்சியில் இறங்குகிறார். அதன் விளைவுதான்....தட்டான்களைப் பிடித்து அதன் உடலில் isotope துகளை செலுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். விளைவு.... இதோ.



பின்குறிப்புகள்:

1) "Granite Ghost" என்ற பெங்களூரில் அதிகளவில் தென்படும் தட்டானைப்பற்றி தேடத்தொடங்கி அது இங்குபோய் (100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த Migration பற்றி பேசியுள்ளனர்)...இந்த pdfயில் சுற்றி வந்து நின்றது. பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அளித்த கொடைகளில் ஒன்று இந்தப்புத்தகம்: The Fauna of British India - Download

2) அக்டோபர் மாதத்தில் பெங்களூரில் Wandering Glider தட்டான்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, அடுத்த சில வாரத்தில் தாண்டிக்குடி (Part of Western ghats) பகுதியில் பலமுறை பார்த்துள்ளேன்

3) சூழலியல் - தட்டான்கள் - பறவை - பூச்சிகள் இந்த link ரொம்ப delicateடானது. தட்டான்கள் எல்லாம் 350 மில்லியன் ஆண்டுகளாக இங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. சும்மா போகிறபோக்கில் வளர்ச்சி என்ற பெயரில் பல திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். அது எந்த உயிரினத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியே கவலையேயில்லாமல். 

Facebookers..

8 comments :

  1. இது மாதிரி எளிய நடையில் சிரத்தையான அறிவியல் பொஸ்தகம் பலது இருந்திருந்தா தமிழ்நாட்ல அறிவியலும் வளர்ந்திருக்கும். தட்டான் திரும்ப எப்படி வருதுன்னு நீங்களாவே சொன்னீங்களே.... இதான் நல்ல பதிவருக்கு அழகு. கேட்காமல் புரிஞ்சுக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. உங்க பசங்களுக்கு சொல்லி குடுத்திருப்பீங்கன்னு நம்புறேன். அதான் மேட்டர்

      Delete
  2. Nice to read., Simple to read , easy understand.

    An informative write up.

    Thanks .


    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Semma Interesting Bro..இந்த சந்தேகம் படிச்சிட்டு இருக்கும் பொழுது டமால்னு வந்துச்சி ....The above mentioned planetary wind from Northeast after reaching equator(Male Islands)deflected towards their left (i.e) towards mid Indian Ocean not to East Africa according to ferrels law of deflection(Coriolis Force). How come they reach East Africa?

    ReplyDelete
    Replies
    1. முழுவீச்சுல அந்த wind இல்லாட்டியும் Africaவ தழுவிதான போகுது. தவிர, தட்டான் பறந்துகினே இருந்தா எப்பதான் தரைய பாக்க - முட்டை போட..

      Delete