போன மாதம் கோர்ட் படத்தைப் பார்த்தவுடன் எழுத ஆரம்பித்த பதிவு. சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய்விட்டேன். போன வாரம் சென்னை கார்ப்பரேஷன் வெப்சைட் கண்ணில்பட, கோர்ட் படத்தை பற்றி பெரிதாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. இதுமாதிரி லிங்க்கை சிலபல வருடங்கள் முன்பு பாத்திருந்தால், அதீத உணர்ச்சிவசப்பட்டு ஒரு போஸ்ட் எழுதியிருப்பேன். ஏற்கனவே அப்படி ஒன்று எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமுறை இது பழகிவிட்டது. நீங்களும் பெரிதாக ஜெர்காக மாட்டீர்கள் என்று தெரியும். தினமும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம். ஆமென்.... வாழ்க பாரதம்.

1996. மாதம், தேதி எல்லாம் நினைவில்லை. இந்தியா விளையாடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு மேட்ச். அவ்வளவுதான் ஞாபகம். நாங்கள் இருந்தது flat சிஸ்டத்தில். எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்கு, ரயில்வேயில் வேலை பார்த்து ரிட்டையரான 60+ ஆள் - அவர் மனைவி - அவர்கள் மகன், குடிவந்து சிலபல மாதங்களே இருக்கும். எங்கள் வீட்டு டிவியில்  ஏதோ பிரச்சனை என்று அவர்கள் வீட்டில்தான், பத்தியின் முதல் வரியில் சொல்ல ஆரம்பித்த மேட்ச்சை பார்க்க நேர்ந்தது. அந்தகால வெஸ்ட் இண்டிஸ் - இந்திய வீரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர்... திடீரென்று ஒரு இந்திய வீரர் ஆட வந்ததும்... படுடென்ஷனாக பேச ஆரம்பித்தார். "இவுங்கள எல்லாம் உள்ள வுட்டுத்தான் டீம் நாசமா போச்சு" என்று ஆரம்பித்து டீம் - > கிரிக்கெட் -> சமூக காமென்ட்ரி என்று வேறுவேறு ரூட்டில் என்னென்னமோ கடுமையாக புலம்ப ஆரம்பித்தார். எந்தளவிற்கு பேசியிருந்தால்... கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்துக்கூட  என்னால் அதை ஞாபகம் வைத்துக்கூற முடிகிறதென்று பாருங்கள்.

அந்த வீரர் - வினோத் காம்ப்ளி
Court - அப்படியே மனதை நெகிழச்செய்து, ஒரேநாளில் நமது அறிவுக்கண்ணை திறக்கும் படமா...என்றால் நிச்சயம் இல்லை. அதன் நோக்கமும் அதில்லை. இந்திய சினிமாவை தலைகீழாக புரட்டிப்போடப் போகும் படமா என்றால் அதுவும் இல்லை. இதுவொரு மிக எளிமையாக, அலட்டிக்கொள்ளாமல் நமது சிஸ்டத்தை ஆவணப்படுத்த முயன்றிருக்கும் படம். Passive observerராக நம்மை இருக்க வைக்கும் படம். தினமும் அப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறோம். வதவதவென்று கருத்து மழை பொழிந்து தள்ளுவதைவிட, passivenessல் தான் தெளிவு பிறக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை (ஜென்னின் அடிப்படையும் இதுவே). Mass psychology (மராட்டிய நாடகம் முடிந்து – கேமரா staticகாக – படுகிளர்ச்சியாக கைதட்டிக்கொண்டிருக்கும் ஆட்களை காமிக்கும் காட்சியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்), Judicial absurdity, Bureaucracy என்று இந்தியா இன்று சந்திக்கும் பலமுக்கிய – வெளியே பரவலாக தெரியாவிட்டாலும் – இருப்பே தெரியாமல், மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் விஷயங்களை படுயதார்த்தமாக காட்டியுள்ள படம். மேலிருக்கும் நான்கு வாக்கியங்கள் படத்தைப் பற்றி வித்தியாசமாக எழுத வேண்டுமே என்று வலிந்து திணித்த வார்த்தைகள் அல்ல. சத்தியமான உண்மை.


கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்காவிட்டால்...இந்தாள் இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த லின்க்கைப் படித்துப்பாருங்கள். மீடியாக்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சிறு எடுத்துக்காட்டு. “தூக்கு தண்டனை” மாதிரியான விஷயங்களில் எல்லாம் உணர்ச்சிபிழம்புகளாக பல பத்திரிக்கைகளும்/செய்தித்தாள்களும் கட்டுரை எழுதி வருவது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

கோர்ட் படத்தை பார்க்கும் முன்னர் அதன் இயக்குனரின் கலந்துரையாடல் ஒன்றைக் காண நேரந்தது. அவருக்கு இருக்கும் தெளிவு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அந்த கலந்துரையாடலில் தான் (இங்கே பார்க்கலாம்) மேற்சொன்ன ஜிதன் மராண்டி பற்றி தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல், தன்னை பாதித்த Krzysztof Kieślowskiன் குறும்படம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். இது கீஸ்லோவ்ஸ்கி திரைத்துறை மாணவனாக இருக்கும்போது எடுத்த படம். இந்தப் படத்தை பார்த்தபொழுது, நமது ரிஜெஸ்ட்ர் ஆஃபிஸ்களிலும் ட்ரஷரிகளிலும் தாலுகா அலுவலங்களிலும் ஒளிந்திருந்து எடுத்ததைப்போல..சத்தியமாக உணர்ந்தேன் (அரசு அலுவலங்களில் எனக்கு ஏகப்பட்ட அனுபவம் உண்டு. ஆனால்  கதவின் அந்தப்பக்கத்தில் நின்றபடி. அதைபற்றி பதிவின் கடைசியில் சொல்கிறேன்). அவர் 1966 எடுத்த படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து ஒரு 27 வயது ஆளை பாதித்திருக்கிறது என்றால்.....கீஸ்லோவ்ஸ்கிக்கு – ஜீனியஸ் என்ற பெயரெல்லாம் சும்மா வந்துவிடவில்லை. (http://bombmagazine.org/article/7129714/chaitanya-tamhaneஓ...சொல்ல வந்து மறந்தே போனேன். கோர்ட் படத்தில் வரும் "குற்றவாளியின்" பெயர் - நாராயன் காம்ப்ளே.

அரசும் அதிகாரவர்க்கமும் எடுக்கும் ஒரு முடிவு, போடப்படும் ஒரு கையெழுத்து: ஒருவரை தூக்கில் ஏற்றும்; ஒருவரை விடுவிக்கும்; ஒரு பக்கம்  திருநங்கைகளுக்கு சமஉரிமை உண்டு என்று அறிவிக்கும்; மறுபக்கம் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கும்; இன்னும் போபால் விஷவாயு கொடுமைக்கே சரியான நிவாரணம் கிடைக்காத நிலையில் புதிய அணுஉலைகளை திறக்கச் சொல்லும்; தனி மனிதனாக இதுபற்றியெல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் சுற்றி நடப்பவைகள் குறித்த  பிரக்ஞையுடன் இருக்கலாம். அந்த உரிமையை யாரும் நம்மிடம் இருந்து பிடுங்க முடியாதுதானே. நடுவில் நம்மை திசை திருப்ப லெக்கிங்ஸ்  குறித்த கட்டுரைகள் வரும்; மாட்டுக் கறி தடை என்று வரும்; ஒவ்வொரு வெள்ளியும் ஒரு படம் ரிலீஸ் ஆகும்; Facebookல் நம்மை unfriend செய்துவிட்டார்கள் என்ற சீற்றத்தில் நாம் இருக்கக் கூடும் X இதற்கு அப்படியே அந்தப் பக்கத்தில் அதிகார வர்க்கத்தால் பல முக்கிய முடிவெடுக்கள் எடுக்கப்படும். அம்முடிவுகள் நம்மை நேரடியாக பாதிக்கதாவரை......."குமுதம் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிக்கையிடம் இருந்து...."  

July 2015:
நெக்குருகி நிற்க நேர்ந்தது. ஷஷி தரூரின் இந்தப் பேச்சைக் கேட்டு. அதை சிலாகித்து நண்பர்கள் சோஷியல் தளங்களில் எழுதிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தபொழுது.....கிட்டத்தட்ட அழுதேவிட்டேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.

Barve Committee (1955) -  Malkani Committee (1957) - X Committee - Y Committee - Z Committee இப்படி பல கமிட்டிக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன...மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது பற்றி. "வேண்டிய வசதிகள் செஞ்சு குடுத்து....இந்த வேல பாக்கச் சொல்லுங்க" என்பதில் ஆரம்பித்து வேறுவேறு வகையான பரிந்துரைகளை இந்தக் கமிட்டிகள் வழங்கியுள்ளது. 

இந்த விஷயத்தில் முக்கிய மாற்றம் (குறைந்தபட்சம் சட்ட அளவில்) நடந்தது Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 அறிவிக்கப்பட்ட போதுதான். இதன்படி இப்படி கழிவுகளை அகற்ற ஆட்களை அமர்த்தும் நிறுவனங்கள்/ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் - ஒரு வருடம் ஜெயில்/2000. Rs அபராதம். ஆச்சா...இனி 2012ற்கு வருவோம்.

இதுவரை இருக்கும் சட்டங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி "The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill, 2012" என்ற மற்றொரு சட்டத்தை பாய்ச்சுகிறார்கள். நேரமிருப்பவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி படித்துப் பார்க்கலாம். ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நேரடியாக "இது சட்டபடி குற்றம்" என்று சொல்லித் தொலைய வேண்டியது தானே. கிட்டத்தட்ட 16 பக்கம். தேவையேயில்லாத விவரணைகள், வார்த்தை ஜோடிப்புகள். எல்லோருக்கும் புரியும்படி ரெண்டு பக்கத்தில் அடக்கி எழுத முடியாதா என்ன ?

ஆனால், மேலே பார்த்த அனைத்து சட்டங்களும் - ஒரு விஷயத்தை (ஒப்புக்காகவாவது) முன்வைத்தன. "மனிதக் கழிவுகளை/சாக்கடைகளை அகற்றும் பணியில், தகுந்த பாதுகாப்பின்றி ஆட்களை வேலைக்கு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்"

சென்னை - எனது Phd ஆய்வுக்குரிய பகுதி அதுதான் என்பதால், சென்னையின் கட்டிடங்கள் பற்றி எப்படியெல்லாம்/எப்போதெல்லாம் data திரட்ட முடியுமோ அப்பொழுதெல்லாம் data திரட்டுவது வழக்கமாகவே போய்விட்டது. அப்படி போன வாரம் Chennai Corporation Websiteக்கு சென்றபோது, உண்மையாகவே இது பெரிய அதிர்ச்சியையும்...இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் புரியாத நிலையும் ஏற்படுத்தியது. இப்பொழுது வரை இதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. முதல் பக்கம்...வெப்சைட்ன் முதல் பக்கமே அதுதான். அதில் இப்படியொரு லிங்க். 

நிறைய பேர் இந்த வாதத்தை (?) முன்வைத்து கேட்டிருக்கிறேன். "ஏன் இந்த மக்கள் வேலை செய்ய போக வேண்டும் ? முடியாது என்று சொல்ல வேண்டியது தானே...". விடை இந்த pdfல் இருக்கிறது. அடடா....எவ்வளவு அக்கறையுடன் மொபைல் நம்பர் முதற்கொண்டு துல்லியமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த லிஸ்டை பார்த்தால் சில patternகள் துல்லியமாகப் புரியும். ஒரே வீட்டில் இருந்து நான்கு பேர் கூட இதே வேலையைச் செய்வதைப் பார்க்கலாம். அதே முதல் பக்கத்தில் சுகாதார நிலையங்கள் குறித்தோ, ஹாஸ்பிடல் குறித்தோ ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்த்தால்...ம்ஹும். (சில டீடைல்களை நானும் பொதுவில் போட ஒப்பவில்லை. அதனால் erase செய்துள்ளேன்).
எனக்கு சென்னை கார்ப்பரேஷனிடம் மூன்றே மூன்று கேள்விகள் உள்ளன.

1)  மனித கழிவுகளை அகற்றும்  பணியாளர்களின் விபரப் பட்டியல் என்றே போட்டிருக்கிறது. எப்பிடி அகற்றுகிறார்கள் ? எவ்வாறு அகற்றுகிறார்கள் ?

2) இந்த pdfன் அவசியம்/பயன் என்ன ?

3) 2012 சட்டத்தின் வரைவுகளுக்கு உட்படாமல் இவ்வேலைகளை நீங்கள் வாங்கிக் கொண்டிருந்தால், (மனசாட்சியை விடுங்கள்) அது சட்டபடி குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா ?

திராவிட கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, தமிழ் தேசியம், ஆண்ட பரம்பரை கட்சிகள், ஆளப் போகும் பரம்பரை கட்சிகள்....இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்ளது தேர்தல் அறிக்கையில் இதுவரை "மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது " குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் ? சொல்லியிருக்கிறார்கள் என்று நான் சொல்வது தேர்தல் அறிக்கையைத் தாண்டி - அடிப்படை கட்டமைப்பை எவ்வாறு செயலாக்கப்  போகிறோம் என்ற தெளிவு கொஞ்சமாவது உண்டா ? பொதுக் கழிப்பிடங்களை கட்டுவோம் என்று சொன்னால் மட்டும் போதுமா ? எவ்வாறு... அதைவிட முக்கியமாக யார் அதை பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் இவர்களது பார்வை என்ன ? திடக்கழிவு மேலாண்மை என்பதெல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில குப்பையைக் குவித்து வைத்து எரிப்பதுதானா

கிழட்டுப் பயல் மாதிரி ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி சொல்லி போர் அடிக்கிறது. மிகமிக அடிப்படை வசதிகளான...."காலையில எந்திருச்சா கக்கா போகும்..அத கழுவ தண்ணி வேணும் (அ) வேற எதாவது வேணும்..." போன்றவைகள் குறித்து என்றைக்கு சீரியசாக செயல் படுகிறோமோ அன்று தான்..Developing country என்றாவது சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்குண்டு. கோர்ட் படத்தில், நாராயன் காம்ப்ளே உட்பட பல பிரதான கதாபாத்திரங்களும் மராட்டியர்களே. ஜாதி மட்டும் வேறு. அந்த pdfல் இருக்கும் அநேகரும் தமிழரே. ஜாதி என்னவாக இருக்கும் ? இவர்களுக்கு தமிழ் தேசியத்திலாவது இடமுண்டா ? 

இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாமே பெரிதும் உணர்ச்சி நிலை சார்ந்தே இருந்துவருகிறது. Social structure சார்ந்த அரசியலுக்கெல்லாம்  இங்கு வழியுண்டா என்று தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் ஊழல் (உங்கள் ஆட்சியில் ஊழல் - போன ஆட்சியை விடவா - அதற்கு முன்னால்  இருந்ததை விடவா - அதற்கு முன்னாடி நீங்கள்  என்ன செய்தீர்கள் என்று தெரியாதா...) - தமிழ்/திராவிடம் - தமிழர்கள்...இந்த பாய்ன்ட்களில் வந்துதான் இவர்கள் அரசியல் நிற்கும். நீங்கள் என்ன காரணம் வேண்டுமென்றாலும் சொல்லலாம்...இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று  புள்ளி விவரங்கள் தரலாம். அந்த pdfயையே என் கேள்வியாகத் தருகிறேன். இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிந்தால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். Word..

அரசு அலுவலகங்களில் பரிச்சயம் உண்டென்று முன்னாடி சொல்லியிருந்தேன் அல்லவா. என் அப்பா, துணை ஆட்சியராக இருந்து ரிட்டையர் ஆனவர். என் இரண்டு தாத்தாக்களும் (அம்மா + அப்பா) தாசில்தாராக இருந்தவர்கள் (களில் எல்லாம் தாசில்தார் என்பது மிகப்பெரும் பதவி). என் அப்பாவின் தாத்தா, ப்ரிட்டிஷ் + போஸ்ட் - ப்ரிட்டிஷ் காலத்தில் கோர்ட்டில்  துபாஷியாக(மொழிபெயர்ப்பாளராக) இருந்தவர். என் அப்பா துணை தாசில்தாராக இருந்து - துணை ஆட்சியராக இருந்தது வரையில் எல்லாவித அரசு அலுவலகங்களுக்கும் போயிருக்கிறேன். இந்த அரசாங்க அலுவலகங்கள் குறித்தெல்லாம் என்றுமே ஒரு அசூயை கலந்த fascination எனக்குண்டு. இப்படி சிறு வயதில் என் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு ஓடியதில் ஏகப்பட்ட விஷயங்களும் மறக்க முடியாத பல நிகழ்சிகளும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.
ஆனால் இந்தப் பையனுக்கு என்னைப்போல் அப்பாவுடன் சுற்றியவைகளில் சில, நினைவில் நிற்காமல், அடியோடு மறந்து போனால் நல்லது என்று நினைக்கிறேன். சின்னப் பையன் என்பதால் பெரிதாக எதுவும் இவனுக்குத் தெரியவில்லை (இந்த வீடியோ எடுத்தது 2012ல். இந்நேரம் வளந்திருப்பான்). ஸ்ரீலாங்கா, சிரியாவில் - கொத்து கொத்தாக நடந்ததை....நாம் தவணை முறையில் வேறுவிதமாக செய்து கொண்டிருக்கிறோம்.
Must Read:
1) In Modi's Swachh Bharat, manual scavenging is now a career option

I used to smoke weed and I don’t even smoke weed anymore. Because, it’s like… the world’s intense enough as it is.
- Kevin Parker
சரக்கு, லாகிரி வஸ்துகள் எல்லாம் குப்பைகள் என்று நான் உறுதியாக நம்ப பல காரணங்கள் இருந்தாலும், மிக எளிமையான அடிப்படைக் காரணம் - World itself is so gloriously intense & trippy. சுற்றி இருக்கும் பல விஷயங்கள் வெளிப்படுத்தும் உக்கிரத்தையும் பரிமாணங்களையும் உணர்ந்துகொள்ளவே ஆயுள் போதாது. அதைத்தாண்டி இதெல்லாம் என்ன செய்துவிடப் போகிறதென்ற இறுமாப்பு தான். பைக் ரைடில் தொடங்கி வீட்டுக் காய்கறித் தோட்டம் வரை.... Pleasure of doing things தரும் போதைக்கு அருகில் வேறெதுவும் வர முடியாது. என் அகராதியில் இதற்கு “Feynman’s state of mind” என்று பெயர்.

எதற்கு இந்தப் பேச்சை எடுத்தேன் என்றால், சினிமா பாடல்கள் தொடாத தளங்கள், உணர்வு நிலைகள் வெண்முரசின் பக்கங்களை விட அதிகம். நமக்கான வெளி – அதற்கான இசை என்பதெல்லாம் இங்கு மிகமிகக் குறைவு (ப்ளீஸ்....இந்த so called காதல் பாடல்களை எல்லாம் உதாரணம் சொல்லி கடுப்பேத்தாதீர்கள்). உதா: படு உக்கிரமான anti establishment மனநிலையில் இருக்கிறேன். எனக்கு அந்த மனநிலையின் sonic interpretationனாக ஒரு இசை தேவை. அப்படியான சினிமா பாடல் ஏதாவது இருக்கிறதா ?. நிஜமாகவே தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன். எனக்கு ஒன்றும் ஞாபகம் வரவில்லை. Pleasure of doing things, விட்டேத்தி, உக்கிரம், வன்மம், trippiness, அமானுஷ்யம், வெறுப்பு போன்ற மனநிலைகளை எல்லாம் சினிமா பாடல்கள் வெளிப்படுத்துமா என்பது கேள்வியே (Of course, இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு என்ற டிஸ்கியைச் சேர்த்துக்கொள்ளவும்). சிலருக்கு “ஊரு சனம் தூங்கிருச்சு...ஊத காத்தும் அடிச்சிருச்சு” என்பதே Psychedelicகாகத் தோன்றலாம். சினிமா பாடல்களை எல்லாம் தற்போது கேட்க வேண்டும் என்ற நினைப்பே வருவதில்லை. பாடல்களில் இருக்கும் Phoniness மிகுந்த எரிச்சலையும் ஆயாசத்தையும் தருகிறது. படங்களை வைத்துதான் பாடல்கள் எனும்போது.... இது நிகழக்கூடியது தான் என்று புரிகிறது(ஆனாலும்....).


60களில், இங்கலாந்து – அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் – Punk, Hippie, Beat கல்ச்சர் – போர்கள் – ரவி ஷங்கர் போன்ற இந்திய இசையாளுமைகளின்/இந்திய நரம்புக் கருவிகளின் பிரபலம் – Free love/Sex போன்றவைகள் பற்றிய பார்வைகள் – பல சமூக அழுத்தங்கள் காரணமாக பலரும் LSD, Mushroom, MDMA போன்ற போதை வஸ்துக்கள் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தனர். இதுவரை அனுபவித்திராத உணர்வுவெளி......மி...த...ப்...ப...து போன்ற feeling. இது மெல்ல மெல்ல அந்த காலகட்டத்தின் பலவகை இசையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. LSDயை அடித்த பின் ஒரு அமானுஷ்ய வெளியில் மிதக்கிறோமே....அதே உணர்வை நமது இசையிலும் கொண்டு வந்தால் ? வந்தார்கள்.

Folk இசை முதல் ராக் இசை வரை அனைத்திலும் இதன் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கியது. அதிகம் விளக்க முற்படாமல், சில பாடல்களின் டைட்டில்களையே எடுத்துக்கொள்வோமே.. Lucy in the Sky with Diamonds (The Beatles), White Rabbit (Jefferson Airplane), Journey to the Center of the Mind (Amboy Dukes), Interstellar Overdrive (Pink Floyd). உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 60களின் இசை பற்றியும், அதில் Psychedelic Rock பற்றியும் குறைந்தது பத்து பதிவாவது எழுதியாக வேண்டும். (என் அம்மா லார்ட் முருகன் பக்தை. “உனக்கு முருகன் மாதிரி....எனக்கு இவன்” என்று Psychedelic eraவைச் சேர்ந்த ஒரு ஆளை நான் சொல்வதுண்டு. அதுபோலவே, விடலை Beatlesசை விட Psychedelic Beatles தான் எனக்கும் அவ்வளவு பிடிக்கும். Sgt. Pepper's Lonely Hearts Club Band தான் அன்றும் – இன்றும் – என்றும் எனது திருவாசகம்). ஏகத்துக்கும் இருக்கிறது எழுத. இன்னொருநாள் சாவகாசமாக பேசுவோம்).

Psychedelic rockன் அடிப்படைகளாக இரண்டு விஷயங்களைக் கூறலாம். 1) இதுவரை உணர்ந்திராத அனுபவங்களை பெறுவது 2) அவ்வாறான உணர்வு நிலையை நீட்டிப்பது. ஜாஸ் இசையின் சாரத்தை பயன்படுத்துவது, இந்திய/ஆசிய இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது, Flanging/Phase shifting (என் favorite), Pitch Shifting/Delay போன்ற நுணுக்கங்களை உபயோகிப்பது என்று பல வித்தைகளின் மூலம் ஒரு இசைக்கோர்ப்புக்கு Psychedelic தன்மையை கொடுக்க முற்பட்டனர். அதனை முழுக்க முழுக்க இசையை மட்டுமே வைத்தோ (Pow R. Toc H போல), பாடலின் வரிகளோடும்/பாடப்படும்  முறையை மாற்றியும்(When the music is over போல....And what a trip it was) என்று இருவகையாக வெளிப்படலாயிற்று.

             


என்னதான் ஜோராக ஆரம்பித்தாலும், 60களின் இறுதியிலேயே Psychedelic rock தளர்ந்துபோக ஆரம்பித்துவிட்டது. பல இசை ஆளுமைகளும் - போதை வஸ்துகளின் துணையுடன் ஒரு பாடல் இயற்றலாம்...ரெண்டு...மூன்று....பிறகு ? என்பதை உணர்ந்து அந்தப்பழக்கத்தில் இருந்து விடுபட ஆரம்பித்ததும் ஒரு முக்கிய காரணம். Pink Floyd போன்ற குழுக்கள் அவ்வகை இசையை உருவாக்க முற்பட்டனர் என்றாலும் நாங்கள் Psychedelic music போடுகிறோம்...கேட்டீர்களா...என்பது போல – போன்சாய் மரம் டைப்பில் - வீரியமற்றே அந்த ஆல்பம்கள் இருந்தன (அவர்களும் போகப்போக Psychedelicல் இருந்து Progressive rock நோக்கி நகர ஆரம்பித்தனர்). இதே 70களின் ஆரம்பகட்டங்களில் தான் ஸின்த் இசைக் கருவிகளும், டெக்னோ இசைக் கருவிகளும் பெருமளவு உள்ளே வர ஆரம்பித்தன. Psychedelic Trance (சுருக்கமாக Psytrance.... அதனுடைய நேரடி வாரிசுதான் Goa trance) போன்ற வகைகள் எல்லாம் இளைஞர்களை ஆக்ரமிக்கத் தொடங்கியது. மறுபக்கத்தில் டிஸ்கோத்தே க்ளப்களின் வளர்ச்சியும் படுபயங்கரமாக இருந்தது என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். கொஞ்சகொஞ்சமாக LSDவகை Psychedelic rock இசை காணாமல்போய், Psychedelic Trance, Psychedelic pop, Psychedelic Folk என்று உருமாறத்தொடங்கின. Electronic – R & B – Funk போன்ற புதுவகை இசைகளில் psychedelic தன்மையை புகுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக, electronic. மனித இனம் அப்பொழுதுதானே ஸின்த் இசையை முதன்முறையாக கேட்கிறது. அந்த பிரம்மிப்பே படுகிளர்ச்சியான அனுபவத்தை தர ஆரம்பித்தது. அதனால் இயல்பிலேயே அதற்கு instant psychedelic தன்மை கிடைக்கலாயிற்று (ஆனால்....போகப்போக அனைவரும் அதனை உபயோகிக்க ஆரம்பித்து...நாயடி பேயடி வாங்கி...படுமொன்னையான இசையாக மழுங்கடிக்கப்பட்டது). என்ன ஆனாலும், Psychedelic rock – அதன் சத்தெல்லாம் போய் படுத்தபடுக்கையாகவே கிடந்தது என்பதே நிதர்சனம். ஆனால் 90களில் Alternative Rock எப்பொழுது புகழ்பெறத் தொடங்கியதோ.....அதனோடு கூடவே Psychedelicம் ஒட்டிக்கொள்ள அர்மபித்தது. காரணம் மிக எளிமையானது. 90களின் 20 – 25 வயது இசைக்கலைஞர்கள், நிச்சயம் 60/70களின் ராக் இசைக் கேட்டுதானே வளந்திருப்பார்கள். தாங்கள் அனுபவித்த psychedelic இசையை மீள்கொணர்வு செய்து வேறு வடிவில் வழங்க முற்பட்டனர். அவ்வளவே.

90களுக்கு பிறகு Alternative rock இசையின் அடிப்படையே முற்றிலுமாக மாறத்தொடங்கியது. Nirvana போன்ற குழுக்கள் கட்டி வைத்திருந்த Alt rockன் பிம்பம் முற்றிலுமாக சரியத்தொடங்கியது. ஒரு பக்கம் Electronic/Techno மியூசிக் சக்கை போடுபோட...மற்றொரு பக்கம் Hip hop/Rap தவிர்க்கவே இயலாத இசையாக வளர – இப்படி பல தரப்பட்ட கூறுகளையும் உள்ளடக்கியதாகவே Alternative rock இசை இன்றுவரை இருந்து வருகிறது (Classical/Pure -  Alternative rock music குழுக்களை எல்லாம் இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம்). அப்படியான பல இசைக்கூறுகளையும் உள்ளடக்கிய இசைக்குழுக்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த – எனக்கு மிகமிகப்பிடித்த மூன்று இசைக்குழுக்களை பற்றி பேசுவதற்குதான்...மேல இருக்கும் சிறிய முன்னோட்டம். இம்மூன்று குழுக்களும் Psychedelic தன்மை அதிகம் உள்ள Alternative rock இசைக் குழுக்கள். Neo – psychedelia என்று இவர்களது இசை வகையைக் கூறலாம்.

Tame Impala:


சிலபல மாதங்கள் முன்னால், Muganool (ஃபேஸ்புக்) நண்பர் ஒருவரிடம் ஹோம் தியேட்டர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. பலதடவை, எப்படியும் முழுமையான ஹோம் தியேட்டர்(ரிசீவர் இல்லாத ஹோம் தியேட்டர்கள் வேஸ்ட் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தியாவில் வெறும் ஸ்பீக்கர்கள் கொண்ட சிஸ்டமை வாங்கும் மக்கள், ரிசீவர் பற்றிய கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனென்று தெரியவில்லை. விலையும் கூட காரணமாக இருக்கலாம்) வாங்கிவிடுவதென்று உணர்ச்சிபீறிட, மாடல் எல்லாம் பார்த்து வைத்து....அப்பறம் அந்த நினைப்பை கிடப்பில் போட்டுவிடுவேன். இந்தமுறை, என்ன ஆனாலும் சரி...வாங்கியே தீருவது என்ற வெறியுடன் ரெண்டு மூன்று வாரங்கள் பல ஷோரூம்களுக்கு ஏறி இறங்கினேன். இதுபோன்ற வேலைக்கென்றே பத்து இசைக் கோர்ப்புகளை/பாடல்களை பென் டிரைவ்ல் வைத்திருப்பேன். MP3யாக அல்ல. Flac formatல் (Uncompressed music formatகளுக்கும் MP3 போன்ற formatக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, வேறு வழியில்லாமல் MP3ல் இசையை சகித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் என் சஹிருதையர்). Of course, மொபைல் போன்ற வஸ்துகளில் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. ஆனால் நல்ல ரீசிவருடன் கூடிய ஹோம் தியேட்டர்களில் MP3 போட்ட உடன் பல்லிளித்துவிடுகிறது. பத்து இசைக் கோர்ப்புகளை/பாடல்களை பென் டிரைவ்ல் வைத்திருப்பேன் என்று சொன்னனே...Classical, Techno, Soft Rock, Tribal, R & B, Live recording (அதில் ஒரு பாடல் The Hateful Eight ட்ரைலரில் வருகிறது) என்று எல்லா வகையிலும் வைத்திருப்பேன். பெரும்பாலான ஷோரூம்களில் அவர்கள் டெமோ காட்டும் இசை/பாடல் எல்லாம் bass அதிகம் உள்ளதாகவே இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு, bass அதிர அதிர கேட்டால் அது நல்ல சிஸ்டம் என்ற நம்பிக்கை இருப்பதைக் கவனித்திருக்கிறேன். நாம் சற்று கவனமாக இல்லாவிட்டால், அப்படியான சிஸ்டமை தலையில் கட்டிவிடுவார்கள்.....நாம் விரும்பி கேட்கும் இசையில் இருக்கும் பலவித intricate levelகளை கவனிக்காமலே கடைசி வரையில் இருந்துவிடுவோம். அப்பிடி, பலவித ஷோரூம்களுக்கு சென்று...முதலில் டெமோ காட்டச் சொன்னது...இந்தப் பாடலைத்தான். அந்தளவு Let it happen என்னை பாதித்திருக்கிறது. இதை பற்றி ரெண்டு – மூன்று பத்திகள் தாண்டிச் சொல்கிறேன். அந்தோ பரிதாபம்...சொல்லேனா துயரம்....நான் என்ன கற்பனை செய்து வைத்திருந்தேனோ....அதில் 50 – 60% மட்டுமே எல்லா ரிசீவர்களும் வழங்கியது. 30,000 ஆரம்பித்து....40K – 50K – 60K – 70K என்று விலை ஏறிக்கொண்டே போயிற்றே தவிர....ஒன்றும் திருப்தியாக இருக்கவில்லை. கடைசியில் 1,20,000 பக்கம் ஒன்று பிடித்தது. 80,000 கம்மியாக இருந்ததால்...வழக்கம்போல் இல்லாத மாடலைக் கேட்டு விட்டு.....அடடா...அதிருந்தா இப்பவே வாங்கியிருப்பேனே...வந்தா மறக்காம கால் பண்ணுங்க ....சொல்லிவிட்டு ஓடிவந்து விட்டேன்.


என்ன எழவுக்கு இந்த தகவல்கள் என்ற எரிச்சல் மண்டுவது இயல்பே....நாம் ஒருவித மனநிலையில் இருக்கிறோம் என்றால், அதனை முழுமையாக embrace செய்யும் இசை வாய்க்கப்பெறும் போது அதனை அந்த இசைக்குரிய soundscape.....zoneல் தான் கேட்க வேண்டும் என்பதில் மிகமிகப் பிடிவாதமாக இருக்கிறேன். அதனால் தான், வாங்கினால் அப்படியொரு அட்டகாச ஹோம் தியேட்டர் வாங்குவது....இல்லையென்றால் மூடிக்கொண்டிருப்பது என்று கொள்கையுடன் திரிந்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசைக்குமான zone பற்றி சொன்னேனே... Tame Impala அப்படியாக எனக்கும் மிகவும் பழக்கமான – விருப்பமான – தெரிந்த ஒரு zoneற்கு இசை வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது soundscape எனக்கு மிகவும் பழக்கமானதொரு தளம். Home ground மாதிரி. அது – Loneliness. அவர்கள் பாஷையில்....Lonerism


முதன்முதலாக Tame Impalaவை தெரிந்துகொண்டது, Solitude is bliss பாடலின் மூலம் தான். டைட்டிலை பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிட்டது......நிச்சயம் இந்த band நம்மை ஆக்கிரமிக்கப் போகிறதென்று. இந்த இன்ஸ்டிங்ட் இதுவரை என்னை (பெரும்பாலும்) ஏமாற்றியதில்லை.“Solitude is bliss” எனக்காவே எழுதப்பட்ட பாடல். பாடலில் இருக்கும்.... ”விட்டுத் தொலைங்க...” மனநிலை எப்பொழுதுமே எனக்குண்டு.

Space around me where my soul can breathe

I've got body that my mind can leave

Nothing else matters...I don't care what I miss

Company's okay, solitude is bliss

There's a party in my head and no one is invited

And you will never come close to how I feel

இந்த வரிகள் தந்த ஆனந்தம்....அதை சொல்லி விவரிக்க முடியாது. இதற்கடுத்து கேட்ட பாடல்.. It’s it meant to be....அந்த கிடார் கார்ட்ஸ்.....அதுவும் அந்த ஆரம்பம். அதற்கடுத்து தான்...

Tame Impala பாடல்கள் மீது ஒருவித அப்செஷனே வரக்காரணம் இந்தப் பாடல் தான். Kevin Parkerன் குரலில் இயல்பிலேயே Falsetto உண்டு. ஜான் லெனன்தனமான குரல். அது மிகக்கச்சிதமாக வெளிப்பட்ட பாடல் இது. பல லைவ் வெர்சன்களிலும் இதேபோன்றே இந்தப் பாடல் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறேன். Stuck in the past தான் இதன் அடிநாதமே. இதற்கு மேல் விளக்கம் சொல்லி...அனுபவத்தைக் கெடுக்க விரும்பவில்லை.


இதற்குப்பிறகு தான் தீவிரமாக Tame Impala/Kevin Parker பற்றி தெரிந்தகொள்ள ஆரம்பித்தது. ஒருவித அல்டாப்பான ஆள் தான் இந்த Kevin Parker. Astronomyயை மிகவும் விரும்பும் ஆள். Stargazingகை விடாமல் செய்து வருகிறார். படு perfectionist. Tame Impalaவின் ஆல்பம்களில் ஏறக்குறைய 90% இசை சம்பந்தமான வேலைகளை தனி ஆளாக செய்து முடிப்பார். Brick by brick.....ஒவ்வொரு லேயராக இழைத்து இழைத்து வேலை செய்வதில் அப்படியொரு அலாதி இன்பம். இந்த டெக்னிகாலிட்டியைக் கூட விடுங்கள்....பாடல்களின் டைட்டிலைப் பாருங்கள்.

Be above it -> Why won't they talk to me -> Feels like we only go backwards -> Nothing that has happened so far Has Been anything we could control -> Why won't you make up your mind -> Solitude is bliss -> I don't really mind...இதற்குப் பிறகு தான் அவர்களது சமீபத்திய Currents ஆல்பம் வருகிறது. அதில் இந்த மனநிலைகள் எவ்வாறு தொடர்கிறதென்றால், Let it happenல் ஆரம்பித்து – Yes i am changingல் ஊர்ஜிதமாகி - New person, Same old mistakesல் முடிகிறது. இந்தத் டைட்டில்களை திரும்ப ஒருமுறை படிங்களேன். அதிலிருக்கும் pattern புரிந்துவிட்டால்...நிச்சயம் Tame Impalaவின் இசை  உங்களுக்கு மிகநெருக்கமானதாக மாறிவிடும்.

Let it happenக்கு வருவோம். முதல் கேட்பில் “நல்ல” டெக்னோ பாடலைப்போலத் தோன்றலாம். அநேகமாக நாம் பலரும் இந்தச் சூழ்நிலையை சந்தித்திருக்கலாம்/கொண்டிருக்கலாம்; சிலபல விஷயங்களில் இருந்து எப்பிடி வெளியே வருவது...என்ற புலிவாலை பிடித்த மனநிலை. விட்டுத்தொலையவும் முடியாது....விடாமல் இருக்கவும் முடியாது. அந்த மனநிலையின் கார்பன் காப்பி தான் இந்தப் பாடல். கிட்டத்தட்ட பாடலின் நடுவில் ஒன்றரை நிமிடங்களுக்கு கீறல் விழுந்த ரிகார்ட் போல....திரும்ப திரும்ப சுற்றிக்கொண்டிருக்கிறதே....ஏன் ? அதைத் தாண்டியவுடன்....”யப்பா....போய் தொலைஞ்சது சனியன்” என்ற உணர்வு வரவில்லை ? அந்த 2:40க்கு பிறகு வரும் Shift....too much of awesomeness.

Currents ஆல்பம், வழமையான Tame Impalaவின் ராக் கலந்த ஆல்பம் போலல்லாமல், Techno Pop வகையே அதிகளவில் இருக்கிறது. ரசிகனாவது....ஒண்ணாவது....எவன் என்ன நினைத்தால் என்ன....எனக்கு தோன்றியதைச் செய்வேன் என்று...Kevin Parker – அவர்களது முந்தைய ஆல்பம்களைப் போல – தனது மனநிலையை வேறுவிதமாக வெளிப்படுத்தியுள்ளார். The show must go on என்பார்களே...அதன் Currents ஆல்பத்தின் under current. என்னென்னவோ நடந்துவிட்டது...சரி...அடுத்தது என்ன ? அவ்வளவுதான் மேட்டர். Let it happenல் ஆரம்பித்து...எங்கே இது நிலைகொள்கிறது என்றால்... Yes i am changingல். இந்த ஆல்பத்தில் மிகப்பிடித்த பாடல் என்றால் இதைத்தான் சொல்வேன்.


Glass Animals:

Neurology படித்த மருத்துவ மாணவன்; ஹிப் ஹாப் இசையின் ரசிகன்; The Island of Dr.Moreau - 20,000 leagues under the sea – The Invisible man போன்ற கதைகளின் விரும்பி; சமீபத்தில் அந்தாள் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் Isabel Allende எழுதிய The House of the Spiritsஸாம்.

William Steig(Shrek இவரின் கைவண்ணமே) எழுதிய The Zabajaba Jungle என்ற குழந்தைகள் புத்தகத்தின் வெறிப்பிடித்த ரசிகன்;  யாருமே இதுவரை சென்றிறாத அடர்ந்த – படுவித்தியாசமான விலங்குகள்/பறவைகள்/செடிகள் நிறைந்த காட்டுக்குள் செல்லும் சிறுவனைப் பற்றிய....ம்ஹும்..அந்தக் காட்டைப் பற்றிய கதை.


ஹாஸ்டலில் தங்கி நியுராலாஜி படித்துக்கொண்டிருந்த போது.... தனக்குப் பிடித்த The Zabajaba Jungle புத்தகத்திற்கு இசை வடிவம் கொடுத்தால் என்ன...ஒரு விபரீத எண்ணம் அவனுக்கு தோன்றியது. தனது வளர்ப்பு விலங்குகளான முயல், நாய் எல்லாவற்றையும் microphoneனை கடிக்க வைத்ததில் ஆரம்பித்து.....பக்கத்தில் இருக்கும் காட்டிற்குச் சென்று அங்குள்ள ஓசைகளை ஒலிப்பதிவு செய்வதில் தொடங்கி, தனக்குப் பிடித்த ஹிப் ஹாப் இசையின் கூறுகளை உள்ளடக்கி ஒரு பாடலை தனது லேப்டாப்பின் உதவியால் ரிகார்ட் செய்து முடிக்கிறான். தனது நெருங்கிய நண்பர்களுக்கு அதனைப் போட்டுக்காட்ட....அப்படி ஆரம்பிக்கப்பட்ட குழுதான் Glass Animals. அந்த நியுராலாஜி மாணவன் – David Bayley. அவர்களது முதல் ஆல்பத்தின் பெயர் – ZABA (போன பத்தியின் முதல் வரியைத் திரும்பப் படிக்கவும்). காடுகளுக்கென்று இருக்கும் வசீகர அமானுஷ்யம் தான் இவர்களது இசையின் அடிப்படை. அதுவும் இந்தப் பாட்டு.....குறிப்பாக அந்த Tribal வகை percussions.....என்னவோ போங்கள்.


Glass Animalsன் மிகப்பெரிய பலமே அவர்களது production & David Bayleyன் குரல் தான். இத்தனை அட்டகாசமான ரேன்ஜ் உள்ள குரலைக்கேட்டு நீண்டநாள்கள் ஆயிற்று. போன பாடலுக்கு அப்படியே நேரெதிராக.....முழுக்க முழுக்க காட்டின் அமானுஷ்யத்தை வெளிப்படுத்தும் மற்றொரு பாடல். எத்தகைய கச்சிதமான ட்ரம்மிங்.


Grizzly Bear:


மற்ற இரு குழுக்களைப் போலல்லாமல் 2000தின் ஆரம்பித்திலேயே இக்குழு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிலசமயங்களில் படுமினிமலிஸ்ட்க்காக அடக்கி வாசிப்பார்கள்; சிலசமயங்களில் Avant garde வகை என்று கலந்து கட்டி.....பின்னி எடுக்கிறார்கள். இசையில் Psychedelicதன்மை எந்தளவிற்கு உள்ளதோ அந்தளவிற்கு வரிகளிலும் இருக்கும். உதா: Sleeping Ute


யார்ரா இவுங்க என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.... இந்தப் பாடலுக்குப் பிறகுதான்.

The sky keeps staring at me

Frozen in my tracks ....Nothing else to see

And when I move my face left

You're always standing there ...A shadow I can't see


இவர்களது Psychedelic இசையின் உச்சமாக நான் நினைப்பது இந்தப் பாடலைத்தான். Sun in your eyes...

கடைசியாக, நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தால் இதுபோன்ற பாடல்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது.


உங்கள் கலெக்ஷனில்(அப்படி எதாவது இருந்தால்) இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். டவுன்லோட் செய்துகொள்வது உங்கள்பாடு:
  • Tame Impala - Innerspeaker
  • Tame Impala - Lonerism
  • Tame Impala - Currents
  • Grizzly Bear - Veckatimest
  • Grizzly Bear - Shields
  • Glass Animals - ZABA