கொஞ்சம் நக்கலாகவும் கொஞ்சம் சோகமாகவும் உள்ளது
Facebookல் ரெண்டு/மூன்று மாதங்கள் முன்புவரை பிரபலமாக இருந்த வாக்கியம். இதன் etymology எல்லாம் தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறை யாராவது இதை உபயோகப்படுத்தும்போது....எனக்கு இந்தப்பாடல் தான் ஞாபகத்துக்கு வரும்.


எப்படியிருந்தாலும் நீங்கள் கவனிக்கப்போவதில்லை. நானே சொல்லித் தொலைகிறேன். 1:00 இருந்து பியானோவை கவனிக்கவும். முதல்முறையாக இந்தப் பாடலை கேட்கும்/பார்க்கும்பொழுது – ஒரு reviewன் மூலம் தான் இந்த பியானோ மேட்டர் தெரியவந்தது. ஆனால் அதில் என்ன விஷயம் என்று குறிப்பிடப்படவில்லை – ஆரம்ப சில நிமிடங்களுக்கு குசும்பெடுத்த ஆளுய்யா இவன் என்ற சந்தோஷம், பாடலின் கடைசியில் வேறு லெவலுக்குச் சென்றது. காரணம், பாடலில் வரும் அந்தச் சிரிப்பு(கள்). John Misty உட்பட எல்லாருமே படுசீரியஸாக இருப்பார்கள்; ஆனால் அந்த சிரிப்பு மட்டும்... கொஞ்சம் நக்கலாகவும் கொஞ்சம் சோகமாகவும் இருந்தது. அப்பறம் என்ன, வழக்கம்போல Father John Misty – Interviews – Albums தான்.

இந்த Bored in the USA பாடலை ஒரு ரெண்டு ஸ்கேல் அதிகமாக்கி கற்பனை செய்து பாருங்கள்; அவ்ளோதூரம் போகவேண்டாம். டைட்டில் ? Bored in the USA. எதையுமே ஞாபகப்படுத்தவில்லையா ? Born in the USA. மிகத்தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட பாடல். அதுவொருபக்கம் கிடக்கட்டும். இந்தப் பாடல் பற்றி ஒரு interviewவில் John Misty சொன்னது.”இந்தப் பாடலுக்கென்று ஒரு ideology உண்டு. Ideology is always very sophisticated. அந்த பிம்பத்தை பங்ச்சர் செய்வதற்காகவே, வம்படியாக கிண்டலான வரிகளை எழுதினேன். ஆனால்...அதேசமயம் பாடல் முன்வைக்கும் அமெரிக்க வாழ்க்கையின் அபத்தங்களையும் சொல்லியிருப்பேன்”


Josh Tillmanனின் பாடல்களை டவுன்லோட் செய்து கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சரியமாக/மிகச்சரியாக Fear Fun மற்றும் I Love You, Honeybear ஆல்பம் தவிர பெரிதாக எதுவுமே எனக்குப்பிடிக்கவில்லை. அப்பறம் தான் தெரிந்தது, இந்த இரண்டு ஆல்பம்கள் தான் J Tillman - Transformation - Father John Mistyயாக இயற்றியது. ஏன் இந்த ஆல்பம்களின் பாடல்கள் மட்டும் நமக்குப்பிடித்து என்பதற்கான விடை Father John Misty ஒரு இன்டர்வியுவில் சொன்ன போதுதான் பட்டென்று உரைத்தது. “இதுபோல பெயரை மாற்றி ஏதாவது செய்யும்போது ஒரு cheap thrill கிடைக்கிறது. நான் இசைத்துறைக்குள் நுழைந்தபொழுது, அடையாளத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் அந்த காலகட்டத்தில் எனது இசை கொஞ்சம்கூட என்னை பிரதிபலிக்கவில்லை. “Rose எவ்வளவு சிகப்பாகயிருக்கிறது” போன்ற ரொமாண்ட்டிசைஸ் செய்யப்பட்ட வரிகளை எழுதிக்கொண்டிருந்தேன். இதுபோன்ற இசையின்/பாடல்களின் மூலம்தான் சீரியஸான ஆள் என்று பெயரெடுக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் இது சலித்துப்போய்.....அசலான முகத்துடன், எனக்குரிய சென்ஸ் ஆஃப் ஹியுமர் + சொந்தவாழ்க்கையின் அபத்தங்களை, அசுவாரஸ்யங்களை சொல்ல ஒரு வழி தேவைப்பட்டது. அதற்கு goofyயான ஒரு பெயரும் தேவைப்பட்டது. Father John Misty. இந்தப்பெயரில் பாடுவது மிகச்சுலபமானதாகவும், ஒரிஜினல் ஆள் – Josh Tillman ஆல்டர் ஈகோ போன்றும் தோன்ற ஆரம்பித்தது”.



டிட்டோ....இதே approach உள்ள நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். நானும் அவரும் ஒரே சமயத்தில் தான் ப்லாக் எழுத ஆரம்பித்தோம். இத்தனை பதிவர்கள் மத்தியில் ஒரு அடையாளம் வேண்டுமென்பதற்காக அவர் ப்லாகில் செய்யாத சேட்டைகள் இல்லை. “பிடித்த ஆளுமைகள்/பிடித்த படங்கள்” என்று slideshow எல்லாம் போட்டார் (Bloggerயில் அதுவொரு விட்ஜெட்). தனித்து தெரிகிறாராம். படத்தைப்பற்றி எழுதினால் – அடுத்தமுறை புத்தகம் – அப்பறம் இசை, இப்பிடி எல்லா துறைகளிலும் தனது ஆளுமையை காமிக்கிறேன் என்று சுற்றிக்கொண்டிருந்தார். இப்பொழுது அவர் இருக்கும் இடமே தெரியவில்லை. சுத்தமாக காணாமல் போய்விட்டார். கேட்டால் மேலே ஜாஷ் டில்மென் சொன்ன அதே பதிலைத்தான் சொல்கிறார்.

இப்படி, personality-wiseசாக(வும்) கவர்ந்துவிட்ட ஒரு ஆளின் இசை எப்படி பிடிக்காமல் போகும் ?


Father John Mistyயின் இசை, neofolk வகையைச் சார்ந்தது (மேட்ரிக்ஸ் படப்பிரியர்களுக்கு “Neo” பெயரின் முக்கியத்துவம் தெரியும். அதே காரணம் தான் இங்கேயும்). இதன் வேர் - Country/Folk இசை. 60களின் “Industrial Music”ன் கிளைவடிவம். Industrial music – பின் 60களில், ரெகார்ட் செய்யும் முறையில் இருந்து இசைக்கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது வரை, ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்தேறின. கூடவே எலெக்ட்ரானிக் இசைக்கருவிகளின் வரவும் சேர்ந்துகொள்ள, புதுப்புது இசை வகைகள் முளைக்கத்தொடங்கின. இந்த பலதரப்பட்ட இசையின் கூட்டுப்பெயர் தான், Industrial music (இதுபற்றி, நான் கேட்டதிலேயே தெளிவான விளக்கம் என்றால் – இதைச் சொல்வேன்). அதற்கு ஏராளமான கிளைகள் உண்டு. அதில் ஒன்று தான் “Neofolk”.

Now, இந்த Neofolk இசையில், பல உட்பிரிவுகள் இருந்தாலும் இரண்டு முக்கிய உட்பிரிவுகள் உண்டு. 1) Electronicதன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அதன் வேர் folk இசையே, 2) ஜாஸ், ப்ளூஸ், கன்ட்ரி இசையின் கூறுகளை அதிகளவில் உள்ளடக்கியது. முதல் வகைக்கு உதாரணம், எனக்கு மிகப்பிடித்த “Woodkid”. இதுவொரு க்ரூப்; Band கிடையாது. Tribal/Folk இசையை இவர்கள் வெளிப்படுத்தும் முறை மிகஅலாதியானது. இருக்கட்டும். இவர்களைப் பற்றி இன்னொருநாள் பார்ப்போம். ஒரு இன்ட்ரோவுக்கு, இந்தப் பாடல். அடிக்கடி விரும்பிப் பார்க்கும்/கேட்கும் பாடல் இது. ஏனென்றால்....நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள் ?





---------------------------------------------------------------


இந்த ரெண்டு பாடலுக்கும், எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியாது (lyrically speaking). அட்டைக்கடி வரிகள் தான் இரண்டிலும். வேடிக்கை என்னவென்றால், Backstreet boysன் இந்த சூரமொக்கை பாடலை ஆதர்ஷமாக கேட்பவர்கள், பூவே உனக்காக மாதிரியான பாடல்களை கிண்டல் செய்து நான் பார்த்ததுண்டு. அது எதுக்கு நமக்கு. சொல்ல வந்தது, ஆரம்பம்முதலே இதுபோன்ற அட்டைகடி வரிகள் மீது பெரிய அசூயை உண்டு. கொஞ்சம்கூட கற்பனையை ஆழப்படுத்தாது; புது அனுபவங்களை/அவஸ்தைகளைத் தராது.



John Mistyன் பாடல்கள்,straightaway நெத்தியடி தான். சுத்திவளைப்பெல்லாம் இல்லை. உதா: இந்தப் பாடல்.



ஏறக்குறைய அனைத்து பாடல்களிலும் Cynical, quirky, contradictory toneனை உணரலாம். பாடலின் வரிகள் irony கொட்டிக்கிடக்கும். பாடல்களில் இருக்கும் absurdnessசைத் தாண்டி, கொஞ்சம் தெளிவாக யோசித்தால்....வேறொரு கோணத்தில் விஷயங்கள் புலப்படும். The Night Josh Tillman Came To Our Apt பாடலைப் போல

She says, like literally, music is the air she breathes
And the malaprops make me want to fucking scream
I wonder if she even knows what that word means
Well, it's literally not that

இந்தாளின் பாடல்கள் மட்டுமில்லாமல், அதன் டைட்டிலே ரகளையாக இருக்கும். The Night Josh Tillman Came To Our Apt என்றிருக்கும்; ஆனால் பாடல் வரிகள் பெண்ணைப்பற்றியதாக இருக்கும்; வீடியோவைப் பார்த்தால் – லிட்ரலாக – அப்படியே வரிக்கு வரி எடுக்கப்பட்டிருக்கும். Well, You Can Do It Without Me – வழக்கம்போல நக்கல் டைட்டில். ஆனால், பாடல் அதற்கு நேர்மாற். Country இசையின் vibe பக்காவாகப் இந்தப் பாடலில் இருப்பதைக் கேட்கலாம்.

அதேபோல, Mistyன் இசையை விஷ்வலைஸ் செய்து பார்க்கவே ரகளையாக இருக்கும். உதாரணமாக, I’m writing a novel பாடலில்..இந்த “சீன்” எனக்கு மிகப்பிடிக்கும்.

I went to the backyard to burn my only clothes
And the dog ran out and said "you can't turn nothing into nothingness with me no more"
Well I'm no doctor but that monkey might be right
And if he is, I'll be walking him my whole life


Musically speaking, Mistyயின் production அட்டகாசமானது. இந்தப் பாடலில் லேயரிங் பின்னி எடுக்கும். குறிப்பாக, அந்த Changeover. And, what an opening...



ஜாஸ் – ப்ளூஸ் – கன்ட்ரி – folk – கொஞ்சம் ஸின்த் என்று ஏகப்பட்ட genreகளையும் இசைக்கருவிகளையும் கேட்க முடியும்; என்றாலும், பியானோ & கிதார் – பிரதானம். கொஞ்சம் ஸின்த் என்று சொன்னேனே...this is one such brilliant song.


ஆனால் எல்லா பாடல்களிலும் – இசை complimentaryயாகவே இருப்பதாகப் எனக்குப்படும். வரிகளும் + குரலும் ஆதிக்கம் செலுத்தும். இதுவொரு பக்கம் என்றால், பாடல்களுக்கான வீடியோக்கள் தனி ரகளை. ஏறக்குறைய எல்லா பாடல்களின் வீடியோக்களும் contradictoryயாக இருப்பதைக் காணலாம். இதைப்போல



அதேசமயம், அப்படியே பாடலின் வரிகளை அதே கோணத்தில், அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் வீடியோக்களும் உண்டு. இதைப்போல



Mistyயின் பாடல்களை கேட்க ஆரம்பித்திருந்தால், இந்நேரத்திற்கெல்லாம் – அதன் awkwardness பாதிக்காமல் இருக்காது. அந்த நக்கல், explicitதன்மை, சுயபச்சாதாபம், அபத்த வரிகளின் வழியே escapism. அனைத்துமே Rare combinations. இந்த zone உங்களுக்கு பரிச்சயம் என்றால், John Misty ஒரு நல்ல companion. சந்தேகமேயில்லை.



Kingdom: Animalia

Order: Odonata

Genus: Pantala

Species: P. flavescens

Other Names: Globe Skimmer (அ) Wandering Glider

Size: மிஞ்சிப்போனால் 4 - 4.5 cm

Weight: சில மில்லிகிராம்கள்

Color: அழுக்கு படர்ந்த வெளிறிய ப்ரௌன் + மஞ்சள்

Distribution: இதை பார்க்காத ஆளே இருக்க முடியாது. ரொம்ப சிரமப்பட வேண்டாம்

Wandering Glider
Img Src: Flickr


ஸ்கூல் படிக்கும் காலம்தொட்டே தட்டான்களின் மீது பெரிய fixation உண்டு. தட்டானைப் பார்த்துதான் ஹெலிகாப்டரை உருவாக்கியிருப்பார்கள் என்பது சிறுவயதில் என் அசைக்க முடியாத நம்பிக்கை. "பறவையைக் கண்டான்...விமானம் படைத்தான்" என்று சைக்கிளில் சென்ற சிவாஜி பாடி...அதை ஊர்ஜிதப்படுத்தினார். ரெண்டு வருஷமாக இதை சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்றிருந்து....இந்த தட்டான் வலசை விஷயத்தை ஒரு நண்பரிடம் நேரில் சொல்ல வாயெடுக்கும் போதுகூட....முழுதாக சொல்லக்கூட இல்லை...அவ்வளவு பீடிகை; அவ்வளவு உணர்ச்சிவசப்படல்; அவ்வளவு அலட்டல். சும்மா பதிவுக்காகவெல்லாம் சொல்லவில்லை. ஒவ்வொரு முறை இதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் பெரும் புல்லரிப்பு ஏற்படும். இரண்டே இரண்டு காரணங்கள்.

-  நம்மைச்சுற்றி மிக சர்வசாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஜந்து, என்னவெல்லாம் செய்கிறது.

- “இயற்கையின் அற்புதம்” என்று நிறுத்திக்கொள்ளலாம் (அ) “கடவுளின் செயல்” என்று இந்த நிகழ்வையே மட்டையாக்கி பூரிக்கலாம். ஆனால்....scientific approach ஒன்றே நம்மைச் சுற்றி நடக்கும் ஏகப்பட்ட விஷயங்களை உணர்ந்து அதை முழுவதுமாக ரசிப்பதற்கான வழி என்பதை Charles Anderson நமக்கு உணர்த்தியமைக்காக

நிற்க: 

1) கடைசியாக, கொத்து கொத்தாக தட்டான்களை எப்பொழுது பார்த்தோம் ?

2) பார்த்த அன்றைக்கோ அல்லது அதற்கு சிலநாட்கள் முன்னரோ மழை பெய்ததை ஞாபகப்படுத்த முடிகிறதா ?

3) ஞாபகம் வரும்வரை அடுத்த பத்திக்கு தாவ வேண்டாம்

தொடருவோம். இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியாகவேண்டிய கட்டாயம். ஏன் முக்கியம் என்று ஒருசில பத்திகள் தாண்டி தெரியவரும். தவிர, இந்த விஷயமெல்லாம் மழைக்காலங்களில் சிலபல புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

இந்தியாவிற்கு பருவமழை இரண்டு வகைகளில் கிடைக்கிறது. தென்மேற்கு (SouthWest Monsoon) & வடகிழக்கு (NorthEast Monsoon) பருவப்பெயர்ச்சிக் காற்றுகள். இது எவ்வாறு உருவாகிறது ? ஏன் உருவாகிறது ?


சூரியனை பூமி சுற்றும்பொழுது, சில குறிப்பிட்ட காலங்களில் சில பகுதிகளுக்கு மட்டும் வெப்பம் அதிகளவில்படும் கோணத்தில் சுற்றும். “Solstice” என்று படித்திருப்போமே. ஜூன் மாதம் – Summer Solstice; டிசம்பர் மாதம் – Winter Solstice. மேலே இருக்கும் படத்தைப் பார்த்தால் தெளிவாகப் புரியும். இந்த Solstice காலங்களில் வெப்பம் அதிகளவில் இருக்கும் என்று பார்த்தோம் அல்லவா....இது மிதமிஞ்சிய வெப்பச் சலனத்தை சூரியனுக்கு நேராக இருக்கும் பகுதியில் ஏற்படுத்தும். இந்த வெப்ப சலனமும் வேறுசில வானிலை மாற்றங்களும் நடைபெறும் - zone/band என்று வைத்துக்கொள்வோமே - இடத்திற்கு Inter Tropical Convergence Zone (ITCZ) என்று பெயர். இது ஜூன் மாதத்தில் இந்தியாவில் ராஜஸ்தானில் ஆரம்பித்து - அருணாசல பிரதேசம் வரை படரும். இதன் காரணமாக அந்த இடங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை(Low Pressure) உண்டாகும். 



Now, ஒரு விஷயத்தை எப்பொழுதுமே ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே மேட்டில் இருந்துதானே பள்ளத்திற்கு நீர் பாயும். அதுபோலவே காற்றும், High Pressureல் இருந்து Low Pressure பகுதிக்கே பாயும். Current – High Potential(+ve)ல் இருந்து Low potential(-ve)க்கு பாய்வதால் உண்டாகிறது. எப்பொழுதுமே இந்த equilibriumமை நோக்கியே இயற்கையின் நிகழ்வுகள் அமைந்திருக்கும். 

ராஜஸ்தான் to அருணாசல பிரதேசம் வரை உண்டாகும் குறைந்த தாழ்வுநிலையை சமன்படுத்தியாக வேண்டுமே. அதற்காக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து (High Pressure area) காற்றுக் கிளம்பி.....அந்த Low Pressure ஏரியாவை நோக்கி நகரும். ஆனால் வழியில் நந்தி மாதிரி............வேறென்ன.........மேற்குத்தொடர்ச்சி மலைகள் நீண்டிருக்கின்றன. அதனைத் தழுவி/தாண்டித்தான் அந்த high pressure காற்று சென்றாக வேண்டும் இந்த நந்தி இருப்பதால் தான் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் பருவமழை தொடங்குகிறது. தேனி, கம்பம் பகுதிகளுக்கும் சாரல் மழை கிடைக்கிறது. இந்த high pressure காற்று அப்படியே கர்னாடகா – மகாராஸ்ட்ரா என்று ஒவ்வொரு ஏரியாவாக நகரநகர அந்தந்த இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கிறது (SouthWest Monsoon உபயத்தால்).

அக்டோபர் மாதத்தில் மேல சொன்ன ICTZ இந்தியப் பெருங்கடல் பகுதியில் படர ஆரம்பிக்கும். டிசம்பரில் உச்சத்தை அடையும் (Winter Solsticeன்போது). அப்பொழுது அந்தப்பகுதியில் low pressure உருவாகும். இதை சமன்படுத்தியாக வேண்டுமே. அதற்காக இமயமலைப் பகுதியில் இருந்து high pressure காற்று கிளம்பி, அக்டோபர் மாதம் முதலே மெல்ல மெல்ல – மத்திய இந்தியா – ஆந்திரா – தமிழ்நாடு என்று நகர ஆரம்பிக்கும். இதுதான் நமக்கு வடகிழக்கு பருவமழை கிடைக்கும் கதை. தென்மேற்கு பருவக்காற்றை தடுக்க மேற்குத்தொடர்ச்சி மலைகள் உள்ளன. ஆனால், வடகிழக்கு பருவக்காற்றை தடுக்க எந்த அரணும் இல்லாதால்தான் வட தமிழ்நாட்டு பகுதிகளில் செமத்தியான மழை இந்த காலங்களில் கிடைக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியினை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது மற்றுமொரு காரணம்



ஒருவழியாக முக்கிய கதைக்குள் நுழைந்துவிட்டோம்.

Charles Anderson. Marine Biologist. இங்கிலாந்த் நாட்டுக்காரர் என்றாலும், மாலத்தீவில்தான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். 1983ல் ஆராய்ச்சி வேலைக்காக மாலத்தீவிற்கு குடியேறுகிறார். ஆரம்ப காலங்களில் தனது கடல்சார்ந்த ஆராய்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவரின் ஆர்வத்தை ஒரு விஷயம்/நிகழ்வு கண்டபடி தூண்டுகிறது. (அறிவியல் ஆர்வலர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயல்பிலேயே எழும் curiosity) அது, Global Skimmer என்ற வகை தட்டான்களின் வரவு. ஆரம்பத்தில் அவர் அதைப்பற்றி பெரிதாக யோசிக்காவிட்டாலும், மூளையின் ஓரத்தில் என்னமோ ஒன்று நெருடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலங்களில் கொத்து கொத்தாக அதன் வரவு இருந்ததை போகப்போக படுஆர்வத்துடன் கவனிக்கத்தொடங்கினார். ஏன் அவ்வளவு ஆச்சரியம் என்றால், // அன்றைக்கோ அல்லது அதற்கு சிலநாட்கள் முன்னரோ மழை பெய்ததை ஞாபகப்படுத்த முடிகிறதா ? // இதை காரணம் இல்லாமல் எழுப்பவில்லை. ஏறக்குறைய உலகின் அனைத்துவகை தட்டான்களும் Fresh waterரில்(நன்னீர்) தான் முட்டையிடுகின்றன. அந்த முட்டைக் குஞ்சு வளர்வதற்கும் Fresh water தான் தேவை (இதன் காரணமாகவே மழைக்காலங்களில் தேங்கிய நீரில் அருகில் தட்டான்கள் பறந்து கொண்டிருப்பதைக் பார்க்கலாம். கவனமாகப்பார்த்தால், அந்த நீரில் அவை முட்டையிடுவதைக் காணலாம்). மாலத்தீவு – Surface fresh water இல்லாத பகுதி. மழை பெய்தாலும், அவை உடனே உறிஞ்சப்பட்டுவிடும். அப்படி இருக்கும்பொழுது, ஏன் இவ்வளவு தட்டான்கள் இங்கு வருகின்றன என்ற கேள்வி அவரை படாதபாடுபடுத்துகிறது. 

இனிதான் அறிவியல் மூலம் எவ்வாறு ஒரு விஷயத்தை அணுகுவது என்ற செமத்தியான journey ஆரம்பம். 1983ல் அவர் மாலத்தீவு சென்ற ஆண்டில் இருந்தே இதை பார்த்து வந்தாலும், சரி....இது எங்கிருந்துதான் வருகிறது என்று பார்த்துவிடுவது என்ற முடிவில் 90களின் ஆரம்பத்தில் காரியத்தில் இறங்குகிறார். 1996ல் ஆரம்பித்து 2008 வரை ஒவ்வொரு ஆண்டும் (ஒன்றல்ல, ரெண்டல்ல....முழுவதுமாக 14 ஆண்டுகள்) தட்டான்களின் முதல் வரவு – என்ன மாதிரியான தட்டான் – எத்தனை நாட்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று எல்லாவற்றையும் ரிகார்ட் செய்ய ஆரம்பிக்கிறார். தன்னுடன் லோக்கல் ஆர்வலர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு இந்த வேலையை ஒவ்வொரு ஆண்டும் செய்கிறார். இங்குவொரு சுய தம்பட்டம். இந்த விஷயம் தெரியும் முன்னர், இந்தியாவில் Amur Falcon, Indian Roller, Bee-Eater போன்ற பல பறவைகள் வலசை போகும் பாதை பற்றி எனக்குத் தெரியும். எப்பொழுது இந்த தட்டான் விஷயத்தை படித்தேனோ அடுத்த நொடி அந்த பறவைகளின் பாதை பற்றித்தான் ஞாபகம் வந்தது. எனக்கே இது ஞாபகம் வரும்போது, Charles Anderson போன்ற ஆள் கவனிக்காமலா இருப்பார். அதையும் ரிகார்ட் செய்கிறார். ரிகார்ட் செய்த அனைத்து டேட்டாகளையும் வைத்து அனலைஸ் செய்யும்பொழுது ஒருசில விஷயங்கள் தெள்ளத்தெளிவாக புலப்படுகின்றன



1) ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில்தான் தட்டான்களின் வரவு ஆரம்பிக்கிறது. நவம்பர் கடைசி வாரம் – டிசம்பர் முதல் வாரங்களில் மிகஅதிகமான வரவு நிகழ்கிறது

2) எல்லா தட்டான்களும் வடக்குப் பகுதியில் இருந்துதான் (Northern side of Maldives) வருகின்றன.

3) நாலைந்து வகை தட்டான்கள் வந்தாலும், 98% Global Skimmer (அ) Wandering Glider தட்டான்கள் தான்.

4) தட்டான்கள் வரும் அதே சமயத்தில், Amur Falcon – European Roller – Blue-Cheeked Bee eater போன்ற சில பறவைகளின் வரத்தும் அதிகமாக இருக்கிறது.

5) மாலத்தீவு மற்றும் வேறு சில நாட்டின் வானிலை மையத்தில் இருந்து – காற்றின் வேகம் சார்ந்த டேட்டாக்களை வாங்கிப் பார்த்தபொழுது, காற்றின் வேகம் அதிகமாக அதிகமாக தட்டானின் வரத்தும் அதிகமாக இருக்கிறது


ஏன் அக்டோபர் மாதத்தில் தட்டான்களின் முதல் வரவு ஆரம்பிக்கிறது ? அங்குதான் இருக்கிறது சூட்சமம். வடகிழக்கு பருவக்காற்று (NorthEast Monsoon). இந்திய பெருங்கடல் நோக்கி நகர்கிறது என்று பார்த்தோமே....அதை மிகலாவமாக பயன்படுத்திக்கொண்டு இந்த தம்மாத்துண்டு தட்டான்கள் லட்சக்கணக்கில் தென்இந்தியாவிலிருந்து இடம் பெயருகின்றன. அதுவும் கடலின் மேலே. இதுதான் பல விஞ்ஞானிகளை படுஆச்சரியத்திற்கு தள்ளியிருக்கும் விஷயம். பறவைகளும் இதுபோன்றுதான் பருவக்காற்றுகளின் துணைகொண்டு இடம்பெயருகின்றன என்றாலும், தட்டான்கள் எவ்வளவு சிறியது; கடலைத்தாண்டி பறப்பதென்றால்... 

ஆனால், மாலத்தீவில் தான் Fresh water கிடையாதே. பின்பு எவ்வாறு அவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்....முதலில் ஏன் இவ்வளவு தூரம் – தண்ணியில்லாத இடத்திற்கு பறந்து வருவானேன் ? என்று Anderson யோசிக்கும் பொழுதுதான் அவருக்கு இன்னொரு சூட்சமுமும் பிடிபடுகிறது. தட்டான்கள் மாலத்தீவிற்கு வரவில்லை – அதைத் தாண்டி பறந்து செல்கின்றன. அவ்வளவுதான். அப்படியானால் எங்கு ? East Africa. ஏனென்றால் வடகிழக்கு பருவமழை East Africa பகுதிகளில் தான் கடைசியாக கரையைக் கடக்கிறது. அப்பொழுது அந்தப்பகுதிகளில் பெருமழையும் பெய்கிறது. அந்த மழையை பயன்படுத்திக்கொள்ளவே Wandering Gliders தென்னிந்தியாவில், வடகிழக்கு பருவக்காற்றுடன் ஜோடி போட்டு புறப்பட்டு மாலத்தீவு – செஷல்ஸ் – ஆப்ரிக்கா சென்று பயணத்தை முடிக்கிறது. இதை எவ்வாறு கண்டுபிடித்தனர் என்றால், செஷல்ஸ் தீவில் தட்டான்கள் முதல் வரவு, East Africaவில் தட்டான்களின் முதல் வரவு – அனைத்தும் வடகிழக்கு பருவமழையுடன் கச்சிதமாக ஒத்துப்போனது. இந்தியாவில் இருந்து East Africaவிற்கு கிட்டத்தட்ட 7000Km. மூச்சுமுட்டவில்லை ? ஆனால் அதகளம் இதோடு முடியவில்லை. திரும்ப, East Africaவை ஒட்டிய கடல் பகுதிகளில் இருந்து கிளப்பும் High Pressure – SouthEast Monsoon காற்றை பிடித்துக்கொண்டு திரும்ப இந்தியாவிற்கு இன்னொரு ட்ரிப். திரும்ப அக்டோபரில் NorthWest Monsoonல் ஒட்டிக்கொண்டு இன்னொரு ட்ரிப். இப்படியாக ஒவ்வொரு வருடமும் ஒரு ரவுன்ட் ட்ரிப் அடிக்கிறது. தூரம்: அதிகமில்லை மக்களே. 14000 – 16000Km மட்டுமே, ஆனால் ஒரே தட்டான்கள் இவ்வாறு ரவுன்ட் ட்ரிப் அடிக்க முடியாது. மூன்று  - நான்கு ஜெனெரேஷன்கள் இந்த ட்ரிப்ல் பங்குகொள்கின்றன. இந்தியாவில் முதல்தலைமுறை பயணத்தை ஆரம்பிக்கிறது என்றால், திருப்ப மூன்றாவது - நான்காவது  தலைமுறை அடுத்தாண்டு அதே இடத்திற்கு வருகிறது. ஏனென்றால் தட்டான்களின் அதன் ஆயுசுகாலம் கம்மி. ஆனால் Global Skimmer's 38 - 65 நாட்களுக்குள் முட்டையிட்டு - குஞ்சாக மாறிவிடும். அதன் காரணமாக அதிகளவில் இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.


பறவைகள்...East Africaவில் இந்தத் தட்டான்கள் வரத்தொடங்கும் அதே நேரத்தில் தான் Bee-Eater போன்ற பூச்சிகளை/தட்டான்களை பிரதானமாக உண்ணும் பறவைகள் ஆப்ரிக்காவின் பிற பகுதியில் இருந்து அங்கு வலசை (Migration) வருகின்றன. அவ்வளவு ஏன், இந்தியாவில் Amur Falconகள் செய்யாத வேலையா (இந்த லிங்க்கை தயவுசெய்து படித்துப்பாருங்கள்). இதுபோன்ற வலசை போகும் பறவைகள், போகும் வழியிலேயே இந்தத் தட்டான்களை உணவாக்கிக் கொள்கின்றன. இதன்மூலம், தட்டான்கள் எண்ணிகையும் கட்டுக்குள் இருக்கும்; பறவைகளுக்கும் உணவு கிடைக்கிறது/வலசை போக தேவையான சக்தியும் கிடைக்கிறது.

Dragonfly/Damselfly (தட்டான்/தும்பி):

 இரண்டின் வாழ்நாள் சுழற்சியும் ஒன்றுதான். வளர்ச்சியடைந்த தட்டானிற்கும் – தும்பிக்கும் தான் உருவ வேறுபாடுண்டு. இரண்டுமே பல பூச்சிகளைப் போல வியத்தகு life cycleயைக் கொண்டது. ஒரு தட்டானின் வாழ்நாளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

முட்டை (Egg):

நம்மாட்கள் பலரும் செய்யும் கூத்துகளில் ஒன்று, இயற்கையை/அறிவியலை romanticize செய்வது. ஆனால் இயற்கை நேர்மாறானது. தட்டான்கள் மட்டுமல்லாது, பல உயிரினங்களும் – ஒரே இனமாக இருந்தாலும் – தான்/தனது வாரிசு என்பதில் மிகுந்த சிரத்தை/extreme level சிரத்தை எடுக்கும். Survival of the fittest. ஆண் தட்டான், பெண் தட்டானுடன் மேட்டர் செய்யும்பொழுது தனது உறுப்பை கொக்கிபோல பயன்படுத்தி, பெண் உறுப்பில் முதலில் துழாவிவிட்டு பின்புதான் ஸ்பெர்மை செலுத்தும். எளிமையான காரணம்: வேறு தட்டான்கள் முட்டையிட்டிருந்தால் ? அதை காலிசெய்து விட்டு...தனது வாரிசுதான் வரவேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை. 

இவ்வாறு பறந்துகொண்டே – அப்பறம் உட்கார்ந்துகொண்டு – மேட்டர் செய்து முடித்தவுடன் – வழக்கம்போல் ஆணின் வேலை முடிந்துவிடும். பின்பு, பெண் – முட்டையிட Fresh waterரைத் தேடி அலையும்; தண்ணீரில் ஏதாவது செடிகொடிகள் இருந்தால் அதில் முட்டையிடும். இல்லாவிட்டால் நீரில் அப்படியே முட்டையிடும்.



குஞ்சு (Nymph):

முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுக்கு பெயர் தான் Nymph. தட்டான்களின் வாழ்நாளில் இந்தப்பருவம்தான் மிகஅதிகம். சிலவகை தட்டான்களின் ஆயுள் நான்கு – ஆறு ஆண்டுகள். அதில் கிட்டத்தட்ட மூன்று – ஐந்து ஆண்டுகள் வரை நீருக்குள்ளேயே குஞ்சாக இருக்கும். வேறு சிலவகை தட்டான்களின் ஆயுள் ஒரு வருடம் என்றால், கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் வரை குஞ்சாக இருக்கும். குஞ்சு கொஞ்சகொஞ்சமாக உருமாறத்தொடங்கும். இந்த காலத்தில் தண்ணீரில் இருக்கும்பொழுது, சின்ன மீன்கள், புழுக்கள், நத்தைகளை சாப்பிடும். மற்றொரு பிடித்த உணவு – திருவாளர் கொசுவின் முட்டைகள்.

முழுவதுமாக வளர்ச்சியடைந்த தட்டான் (Adult):

குஞ்சு, நீரில் இருந்து வெளியே வந்து தனது தோல் போன்ற அமைப்பில் இருந்து திமிறிக்கொண்டு – கஷ்டபட்டு, கிட்டத்தட்ட ஒருமணி நேரம் - கிளப்பும். இந்த தோலை (Exuvia) செடிகள் நாம் பார்க்கலாம். பின்பு, மற்ற பூச்சிகளை வேட்டையாடத் தொடங்கும். பெண் இணையத் தேடி மேட்டர் செய்ய ஆரம்பிக்கும். பெண் – முட்டையிட ஆரம்பிக்கும். இந்த சைக்கிள் அப்படியே தொடரும்.

வளர்ந்த தட்டான்களில் 90% இயற்கையாக இறப்பதில்லை. கரைக்கு வந்து பறக்கத்தொடங்கிய கொஞ்சநாட்களிலேயே பறவைகளுக்கு உணவாகியே இறக்கின்றன.



ஏறக்குறைய உலகின் அனைத்து பூச்சிகளும் Ectothermic வகையச் சார்ந்தவைகள். அதாவது, தங்களுது உடல் வெப்பத்திற்கு – புறசூழலையே நம்பி இருக்கும். உதா: பட்டாம்பூச்சி. தங்களது உடல்வெப்பநிலையை சமப்படுத்திக்கொள்ளவே வெயில் ஏறிய பிறகே பட்டாம்பூச்சிகள் சுறுசுறுப்பாக வெயிலில் சுற்றும்.உட்காரும் போது இறக்கையை விரித்தபடியே உட்காரும்(Sunbath). இதற்கு Basking என்று பெயர். வெப்பம் அதிகமானால், நிழல்பகுதிக்கு சென்றும்/இறக்கைகளை மடக்கியும் உட்காரும். ஆனால் தட்டான்களுக்கு இன்னொரு தனித்தன்மை உண்டு. தங்களது இறக்கைகளை வேகமாக அடிப்பதன் மூலமும்/வேறு சில வேலைகள் மூலமும் சிறிய அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும் திறன் தட்டான்களுக்கு உண்டு. பலசமயம் டிக்கியை தூக்கியபடி தட்டான்கள் உட்காந்திருப்பதை கவனித்திருப்போம். காரணம்: வெப்பத்தை மட்டுப்படுத்த. இறக்கைகளை மடக்குவதும்/விரித்தபடியே உட்காருவதும் இதன் காரணமாகவே.

இரண்டு விஷயங்களில் தட்டான்களில் அடித்துக்கொள்ள ஆளில்லை. 1) வேட்டையாடுதல் 2) பார்வைத் திறன். பார்த்திருப்போமே...தலையில்...ஏறக்குறைய தலை முழுவதும் கண் தான். தட்டான்கள், தங்களது மூளையின் செயல்பாட்டில் 80%த்தை பார்க்கும் விஷயத்தை அனலைஸ் செய்யவே ஒதுக்குகிறது. மனித ஜந்துக்களை விட அதிக கலரை (பல பறவைகள், பூச்சிகள் போல) தட்டானால் பார்க்க முடியும்.

திரும்ப Charles Andersonற்கு வருவோம். அவரது ஆராய்ச்சி பேப்பரை படித்துப்பார்த்தீர்களானால், ஒருவிஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரியும். பக்கவானா Scientific approach. 

Observation – அதைத் தொடர்ந்து Data collection – அதுவும் 14 ஆண்டுகளுக்கு (Testable, Repeatable) – அதை பக்கவாக analysis செய்கிறார் – அதிலிருந்து ஒரு hypothesisசை உருவாக்குகிறார். முக்கியமானது: அவரது ஆராய்ச்சி கட்டுரையில் அவர் பலதையும் circumstantial evidences என்று தான் சொல்கிறார். கட்டுரையின் தலைப்பே கூட கேள்வியோடு இருப்பதைக் காணலாம். ஆதாரம் கிடைக்கும் வரை அறிவியல் எதையும் ஏற்றுக்கொள்ளாது. இதுதான் pseudoscienceக்கும் scienceக்கும் உள்ள வேறுபாடு. பேப்பர் போட்ட கையோடு Anderson சும்மா இருக்கவில்லை. அடுத்த கட்டமாக இதனை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது என்ற முயற்சியில் இறங்குகிறார். அதன் விளைவுதான்....தட்டான்களைப் பிடித்து அதன் உடலில் isotope துகளை செலுத்தி அதன் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். விளைவு.... இதோ.



பின்குறிப்புகள்:

1) "Granite Ghost" என்ற பெங்களூரில் அதிகளவில் தென்படும் தட்டானைப்பற்றி தேடத்தொடங்கி அது இங்குபோய் (100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த Migration பற்றி பேசியுள்ளனர்)...இந்த pdfயில் சுற்றி வந்து நின்றது. பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அளித்த கொடைகளில் ஒன்று இந்தப்புத்தகம்: The Fauna of British India - Download

2) அக்டோபர் மாதத்தில் பெங்களூரில் Wandering Glider தட்டான்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, அடுத்த சில வாரத்தில் தாண்டிக்குடி (Part of Western ghats) பகுதியில் பலமுறை பார்த்துள்ளேன்

3) சூழலியல் - தட்டான்கள் - பறவை - பூச்சிகள் இந்த link ரொம்ப delicateடானது. தட்டான்கள் எல்லாம் 350 மில்லியன் ஆண்டுகளாக இங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றன. சும்மா போகிறபோக்கில் வளர்ச்சி என்ற பெயரில் பல திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். அது எந்த உயிரினத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றியே கவலையேயில்லாமல். 

கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா....கூவம் எங்களை தாய் மடியாக தாலாட்டுமடா.....ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடுமடா

- காக்கா முட்டை
A Woman under the influence. எனக்கு மிகப்பிடித்த John Cassavetesன் படங்களில் ஒன்று. Cassevetes பற்றித் தெரியும், படங்கள் பார்த்ததுண்டு என்றாலும் படத்தின் டயலாக் அளவுக்கு எல்லாம் தெரியாது. அதனால் Savagesன் Silence Yourself ஆல்பமை கேட்டபொழுது, முதல் பாடல் - Shut upல் முதலில் சில டயலாக்கள் வரும். என்ன அது என்று தேடியபொழுது....Cassavetesன் “Opening Night” படத்தின் டயலாக். இயல்பாகவே ஒரு க்யுரியாஸிட்டியை கிளப்புமில்லையா.....பிறகு, ஆல்பமில் “Husbands” என்ற பாடல்(I woke up and I saw the face of a guy....I don't know who he was) மறுபடியும் பல்பை எரியவிட்டது.

மேலே சொன்ன விஷயத்திற்கு, கொஞ்சநேரம் முன்னர்தான் Fuckers பாடலைக் கேட்டு முடித்திருந்தேன். இந்தப் பதிவை இப்படித்தான் எழுத வேண்டுமென்ற mapபை இந்தப்பாடலே போட்டுக்கொடுத்தது. “Don’t let the fuckers get you down” போன்ற வார்த்தைகள் நம்மைப்போன்ற ஆட்களிடம் எப்பொழுதுமே ஒருவித - intriguing என்று சொல்வதை விட – alluringகான விளைவை ஏற்படுத்தும். அப்படி உற்சாகமாகி, இந்தப் பாடலை கூகுள் செய்தபொழுது கிடைத்த விஷயம் தான்: nolite tes bastardes carborundorum (don't let the bastards grind you down). இது எங்கிருந்து எடுக்கப்பட்டது ? மார்கரெட் அட்வுட் எழுதிய - A Handmaid's Tale என்ற நாவலில் இருந்து. இது படமாகவும் வந்துள்ளது (படத்தில் இந்த விஷயம் இல்லை). The Tin drum எடுத்த Volker Schlondorff இயக்கத்தில். Never mind.



நாவலை படித்துக் கொ...ண்...டே...யிருக்கிறேன். அதனால் முழுமையாக அதுபற்றி கூற முடியவில்லை. ஆனால் நாவலில் இந்த லத்தீன் வாக்கியம் மிக முக்கியமானது. கிட்டத்தட்ட அந்த நாவலின் அடிப்படையே இந்த வாக்கியம் தான் என்று சொல்லலாம்.

அப்படியே ஜம்ப் கட் செய்து....Punk Rockக்கிற்கு வந்தால், Punkன் அடிப்படையும் இதேதான். Anti – establishment, Anti-authoritarianism, anarchy, free thoughts எல்லாம் கலந்தது. Don't let the _________ grind you down. _______ல் எதை வேண்டுமென்றாலும் நிரப்பிக் கொள்ளலாம். Punk இசையை புரிந்துகொள்ள இந்த “anti” மனநிலை ரொம்ப முக்கியம். மேலும், Punk ராக் என்பது மியுசிக் என்பதைத் தாண்டி, freedom/attitude...a form of expression(இசையே அதானே) என்பதாகத்தான் இருந்தது.

முழுக்கமுழுக்க சினிமா பாடல்கள் மட்டுமே இசை என்றாகிவிட்ட நம்மூர் சூழலில் இதுபோன்ற இசை வடிவமெல்லாம்....கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. உதராணத்திற்கு, இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரில் ஒருவர் தலித். பெண்ணாக இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றுபோலத்தான் இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை. இது நம் முன்னால் நடந்து கொண்டிருக்கும் விஷயம். சிரமப்பட்டு உதாரணத்தை தேடுவானேன். “லேடீஸ வேலைக்கு எடுத்தா...மாசத்துல ஒருநாள் - பீரியட்ஸ் டயத்துல எப்பிடியாவது லீவ் எடுத்துருவாங்க. எரிச்சலா வேல செய்வாங்க. இதெல்லாம் தேவையா. நாம கம்பனி ஆரம்பிச்சா..பசங்கள மட்டும் தான் வேலைக்கு எடுக்கணும்” என்று என்னிடம் சொன்ன ஆட்களும் உண்டு.  இதை பற்றியெல்லாம், பெயருக்காவது – சினிமாவில்/சினிமா பாடல்களில் வருகிறதா ?. சிலபல மாதங்கள் முன்பு, நீயா நானாவில் பெண்கள் – பாடல்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி வந்தது. எல்லா பெண்களும் நாலே நாலு வகையான emotionகளை குறிக்கும் பாடல்களைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள். வேறு உணர்வுநிலைகளை emulate செய்வதற்கான இசையெல்லாம் சுத்தமாக இங்கு இல்லவே இல்லை. இந்தவொரு காரணத்திற்காகவே சினிமா பாடல்கள் மீது வரவர எரிச்சல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 


ஒரு பக்கம் காதலைப் போற்றிப்பாட வேண்டியது; அந்தப்பக்கம் கழுத்தறுத்து தண்டவாளத்தில் போட வேண்டியது. ஒரு பக்கம் நதி, ஆறு, குளம், குட்டை, கக்கூஸ் என்று எல்லாவற்றிக்கும் பெண்கள் பெயரை வைக்க வேண்டியது; அந்தப் பக்கம் படுகேவலமாக பெண்களை “நடத்த” வேண்டியது. ஒரு பக்கம் மாடுகளுக்காக கண்ணீர் விடுவது, இன்னொரு பக்கம் ஆட்களைக் கொல்வது. ரியாலிட்டி என்று ஒன்று உண்டல்லவா...அதிலிருந்து வெகுதூரம் நம்மை தள்ளி வைத்திருப்பதையே மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள்/அவை போற்றும் மீடியம்கள் விரும்பும். தன்னைச் சுற்றி என்ன/ஏன்/எப்படி நடக்கிறது, யாரெல்லாம் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்ற பிரக்ஞை உள்ள ஒரு ஆள், திரைப்படங்களை/பாடல்களை பொழுதுபோக்கு என்ற அளவில் மட்டும் வைத்துப் பார்ப்பதற்கும், பெருந்திரளான மக்கள் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது – என்று உணரவே முடியாமல்....இதில் மூழ்கிக் கிடப்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டுதானே. I always believe, அந்த “பிரக்ஞை”யை நோக்கி நம்மைத் தள்ளுவதே so-called art formகளின் வேலை. அது நமக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் என்பது வேறு. நிற்க: “so-called art formகளின் வேலை”. இந்த art formகள் என்னென்ன ? இதுதான் சிக்கல். தாதாயிஸத்தின் அடிப்படையும் இதுதான். Punk rockன் அடிப்படையும் இதுதான். Anti establishment. ராக் இசைக்கு மாற்றாக இன்னொரு ராக் இசை. Subculture...இன்னும் சரியாகச் சொல்வதென்றால் counter culture.

1) நம்மைச்சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள், நாம் யார் என்பதில் தொடங்கி...நமக்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சனைகள். இந்த லட்சணத்தில் Psychedelic rock, Progressive rock எல்லாம் தேவையா

2) நானே பலமுறை நண்பர்களிடம், “நல்ல சிஸ்டமில் கேளுங்கள்” என்று சொல்வது வழக்கம். நல்ல சிஸ்டமை நோக்கி போகப்போக காசு செலவழித்தேயாக கட்டாயம் உண்டு. எங்கு வருகிறேன் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். தவிர, 7 – 10 நிமிட இசை, ஆர்கெஸ்ட்ரேஷேன், பிரம்மாண்டமான மியூசிக் ப்ரோடக்சன்(Pink Flyod)...நம்மைப் பாதிக்கும் விஷயங்களைப்பற்றி சொல்வதற்கு இத்தனை அலப்பறை தேவையா ? 

பல புகழ்பெற்ற Punk பாடல்களைக் கவனித்தால், 3 – 4 நிமிடங்களுக்கு மேல் அவை இருக்காது. இசை, கேட்க “ஏதுவாக” இருக்காது. ரெண்டு – மூன்று இசைக்கருவிகளுக்கு மேல் இருக்காது. கொரில்லா தாக்குதல் பாணியிலான வார்த்தைகள்.....இசை அமைப்பு. பலருக்கும் Punk rock இசை பிடிக்காமல் போகக்காரணம் அதன் “எரிச்சல்” படுத்தும் இசை தான். ஆனால் வார்த்தைகள்/vent out தான் முக்கியமேயன்றி இசையில்லை என்றுதான் ஆரம்பகால Punk இருந்தது. இதுவொரு பக்கம் இருக்க.....திருநங்கைகளைக் கண்டால் எரிச்சல், மாட்டுக் கறி தின்பவர்களைக் கண்டால் எரிச்சல், சேரிப்பகுதிகளைக் கண்டால் எரிச்சல், ஓரினச்சேர்க்கையாளர்களைக் கண்டால் எரிச்சல் என்று நாம் எவ்வளவு பேரைப்பார்த்து எரிச்சல்/அசூயை அடைகிறோம். இவர்களைப் போன்ற ஆட்களுக்கு எல்லாம் ஏற்கனவே விலக்கி வைக்கப்பட்ட இசையாக இருந்த Punk rock அடைக்கலம் தரலாயிற்று. கிடார் வாசிக்கத் தெரியாது; வேறு இசைக் கருவிகளும் தெரியாது; ஆனால் வெளிப்படுத்த ஏராளமான அனுபவங்கள் உண்டு, காயங்கள் உண்டு, கோபம் உண்டு. இவர்களை மிகஇயல்பாகவே Punk rock தன்வசப்படுத்தியது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம்...Punk attitude. அது பலகாலம்தொட்டே கலைஞர்களிடம் உண்டு. மொஸார்டிடம் இல்லாத Punkதனமா. உதாரணமாக, Nina Simone. அவரின் மிகமுக்கியமான பாடல்களில் ஒன்று “Goddamn Mississipi”. நாலு கறுப்பின குழந்தைகளின் படுகொலையை எதிர்த்து, ஒருமணி நேரத்தில் அவர் இயற்றிய பாடல். Just look at her....எதிர்க்க உட்காந்திருக்கும் பெரும்பாலானோர் வெள்ளையர்கள். ஆனால் அவரது attitudeயைப் பாருங்கள். அதேபோன்று தான் “Sinner man” பாடலிலும் அவரது attiudeயைப் பாருங்கள். தனது வேர் எது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதன் வெளிப்பாடுதான் அந்த ஆப்பரிக்க நடனம்.



அதேயளவிற்கு எனக்குப்பிடித்த இன்னொரு பெண், Patti Smith. அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு. “Godmother of Punk”. Gloria பாடலை மட்டும் எடுத்துக்கொள்வோமே. What an epic opening.....” Jesus died for somebody's sins but not mine”. 

அதுபோலவே......Rock n Roll Nigger

Baby was a black sheep, baby was a whore

Jimi Hendrix was a nigger

Jesus Christ and grandma, too...

Jackson Pollock was a nigger 



(ஆனால் அதே Patti Smith இப்பொழுது வாடிகன் எல்லாம் சென்று பாடிக்கொண்டிருக்கிறார்).

Attitude பற்றி பேசிக்கொண்டிருந்தோம் அல்லவா......இரண்டு இடைச்சொருகல்கள்.
  • Persepolis. நாவல் -> திரைப்படம். எழுதியவரே இயக்கிய அனிமேஷன் படம். இந்த முழு sequenceம் ரகளையானது. Jachael Mickson
  • இந்த டாகுமெண்டரி. எப்படி மாட்டுக்கறி என்பது வெறும் உணவு மட்டுமில்லையோ...அதுபோன்றே சைக்கிள் என்பது, வெறும் சைக்கிள் மட்டுமல்ல

திரும்ப “ I always believe, அந்த “பிரக்ஞை”யை நோக்கி நம்மைத் தள்ளுவதே so-called art formகளின் வேலை “ என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். இந்த “தள்ளுதல்” – ரெண்டு வகையானதாக இருக்கலாம். பிரச்சாரம் அல்லது நமக்கு யோசிக்க ஒரு வெளியை ஏற்படுத்தி, தன்போக்கில் விஷயங்களை உள்வாங்க விடுவது (இதுதான் எனக்கு பிடித்தமான/நம்பும் ஒரு path. ஜென்னின் அடிப்படைகளில் ஒன்று). 

70களின் மத்தியில் ஆரம்பித்த Punk rock, உக்கிரமான நேரடி பிரச்சாரத்தன்மை வாய்ந்ததாக இருந்தது (1 & 2 – நினைவுபடுத்திக் கொள்ளவும்). ஆனால் எல்லா விஷயங்களும் மாற்றத்திற்கு உட்பட்டது தானே. Punk ராக் என்பதே vent out வகையிலான இசை என்றான பிறகு, நேரடியான பிரச்சாரத்தைத் தாண்டி...தங்களுக்கு ஏதுவான மொழியில் வெளிப்படுத்தலாயினர். Neo – punk, Post punk revival, Pop punk போன்ற genreகளும் உருவாகலாயின. ஆனால் இதுபோன்ற genreகளில் ஒரு நளினம் வந்து ஒட்டிக் கொண்டது......ஆரம்பகால punk rock வெறுத்தே அதே நளினம். இதன் காரணமாகவே puristகள் Savages போன்ற குழுக்களை punk என்று ஏற்றுக்கொள்வதில்லை. எனக்கதில் உடன்பாடில்லை. ஏன் என்று சில பத்திகள் தாண்டி சொல்கிறேன்.

70களில் Sex Pistols, The Clash, Dead Kennedys இவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகம் பிடித்த The Ramones என்று பல குழுக்களும் வீரியத்துடன் Punk இசையை முன்னெடுத்துச் சென்றாலும் – வழக்கம்போல் – ஆண்களின் இசையாகவே Punk இசை பார்க்கப்பட்டது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மிகநெருக்கமானதாகவும் தேவையானதாகவும் இருந்து Punkல், Siouxsie and the Banshees, The Runaways (இவர்கள் கதை படமாகவும் வந்துள்ளது), Joan Jett (தெறி பாட்டு இது) என்று ஒருசில குழுக்களும்/பெண்களும் மட்டுமே பெரிய அளவில் வெளியே தெரியத்தொடங்கினர். 

90களின் ஆரம்பத்தில் தான் படுவீரியத்துடன் ஒரு இயக்கம் (என்று தான் சொல்ல வேண்டும்) தொடங்கப்பட்டது. கோதார்த் – த்ரூஃபா – எரிக் ரோமர் போன்றவர்களால் எப்பிடி French new wave தொடங்கப்பட்டதோ...அதுபோலவே சமூகத்தை விட.....ராக் இசையுலகதிற்குள்ளேயே பெண்கள்/மாற்று பாலினத்தவர்கள் எவ்வாறு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற கோபத்தில் தொடங்கப்பட்டது தான் Riot grrrl. நான் இதைப்பற்றி விவரிப்பதை விட....அவர்களது Manifestoவே போதும். 



Riot grrrl என்பது தனிக்குழு கிடையாது. அதுவொரு movement. அவ்வளவே. இந்த movementன் முக்கிய இசைக்குழுக்கள் பற்றிய அட்டகாச கட்டுரை இது. Riot grrrl: 10 of the best (வெள்ளையின பெண்களுக்கு மட்டுமே இந்த அமைப்பு முன்னுரிமை கொடுக்கிறது, நிறவெறியும் உண்டு என்ற குற்றச்சாட்டும் உண்டு. Again...இரண்டு பெண்கள்...ஒருவர் தலித்)
ஆமாம்.....Bikini, Pussy, Slut போன்ற பெயர்கள் ஏன் பல குழுக்களின் பெயராக உள்ளது ? 
நேரடி பிரச்சாரத்தன்மை....இந்தப் பாடலைக் கேளுங்கள். One of the most kick-ass songs i've ever heard.



எழுத்தாளர்களை சுலபமாக கிண்டல் செய்து விடலாம்; நடிகர்ளை....விளையாட்டு வீரர்களை..... ஆனால் நம்மால் கைவைக்க முடியாத ஒரு வர்க்கம் உண்டு. அதிகாரவர்க்கம். கிண்டல், நக்கலை எல்லாம் தாண்டி...அவர்களது அடிமடியிலேயே கைவைத்தால்....அதுவும் ரஷ்யா போன்ற நாட்டில். Pussy Riot செய்தது அதைத்தான். என்னவொரு கொழுப்பிருந்தால் விளாதிமிர் புடினை எதிர்த்தே பாடல் பாடுவார்கள். அதுவும் ஒன்றல்ல....ரெண்டல்ல....இதுவரை ஏகப்பட்ட பாடல்களை புடினுக்கு எதிராகவும் ரஷ்யாவின் அதிகாரவர்கத்தின் நடவைக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதற்காக இந்தக்குழுவின் சில மெம்பர்கள் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததும் நடந்தது. கடுமையான அதிர்வலைகளை கிளப்பிய அவர்களது பாடல் தான் இது. ரஷ்யாவின் புகழ்பெற்ற சர்ச்களில் ஒன்றில் நுழைந்து ஒரு Punk பாடலை இயற்ற முயன்றனர் (முழு பாடலையும் வேறொரு சர்ச்சில் எடுத்தனர்)



Pussy Riot பற்றி நல்லதொரு டாகுமென்டரி உண்டு, ஆர்வமிருப்பின் பார்க்கவும்

Noise Punk – அதற்கு மிகச்சரியான உதாரணம்...இந்தப் பாடல்.



சரி...இப்பொழுது Savagesக்கு வருவோம். Jehnny Bethன் இந்த பேட்டி (?).... stole my words என்று சொல்வோமே...அப்படியே இருந்தது. Pessimism – Optimism, துக்கம் – மகிழ்ச்சி இதிலெல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கை. எல்லாமே state of mind தானே. எதாவது விரும்பத்தகாத நிகழ்வு நடந்தால்..சோகமான மனநிலைக்கு நம்மை அது தள்ளினாலும் அதையும் ஒரு கை பார்த்துவிட்டு சரி, அடுத்து என்ன என்று போய்கொண்டே இருக்க வேண்டியது தான். அதை விடுங்கள்.



Jehnny Beth போன்றே Savages குழுவின் மற்றொரு மெம்பரின் பேட்டியையும் படிக்க நேர்ந்தது. அதில் அவர் சொல்லியிருந்த விஷயத்தை சுருங்கச் சொல்வதென்றால், “மியூசிக் ஒரு vehicle தான். உள்ளே நாம் யார் என்பது தான் மேட்டர்”. That is what punk is all about.
போன மாதம் கோர்ட் படத்தைப் பார்த்தவுடன் எழுத ஆரம்பித்த பதிவு. சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய்விட்டேன். போன வாரம் சென்னை கார்ப்பரேஷன் வெப்சைட் கண்ணில்பட, கோர்ட் படத்தை பற்றி பெரிதாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. இதுமாதிரி லிங்க்கை சிலபல வருடங்கள் முன்பு பாத்திருந்தால், அதீத உணர்ச்சிவசப்பட்டு ஒரு போஸ்ட் எழுதியிருப்பேன். ஏற்கனவே அப்படி ஒன்று எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமுறை இது பழகிவிட்டது. நீங்களும் பெரிதாக ஜெர்காக மாட்டீர்கள் என்று தெரியும். தினமும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம். ஆமென்.... வாழ்க பாரதம்.

1996. மாதம், தேதி எல்லாம் நினைவில்லை. இந்தியா விளையாடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு மேட்ச். அவ்வளவுதான் ஞாபகம். நாங்கள் இருந்தது flat சிஸ்டத்தில். எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்கு, ரயில்வேயில் வேலை பார்த்து ரிட்டையரான 60+ ஆள் - அவர் மனைவி - அவர்கள் மகன், குடிவந்து சிலபல மாதங்களே இருக்கும். எங்கள் வீட்டு டிவியில்  ஏதோ பிரச்சனை என்று அவர்கள் வீட்டில்தான், பத்தியின் முதல் வரியில் சொல்ல ஆரம்பித்த மேட்ச்சை பார்க்க நேர்ந்தது. அந்தகால வெஸ்ட் இண்டிஸ் - இந்திய வீரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர்... திடீரென்று ஒரு இந்திய வீரர் ஆட வந்ததும்... படுடென்ஷனாக பேச ஆரம்பித்தார். "இவுங்கள எல்லாம் உள்ள வுட்டுதான் டீம் நாசமா போச்சு" என்று ஆரம்பித்து டீம் - > கிரிக்கெட் -> சமூக காமென்ட்ரி என்று வேறுவேறு ரூட்டில் என்னென்னமோ கடுமையாக புலம்ப ஆரம்பித்தார். எந்தளவிற்கு பேசியிருந்தால்... கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்துக்கூட  என்னால் அதை ஞாபகம் வைத்துக்கூற முடிகிறதென்று பாருங்கள்.

அந்த வீரர் - வினோத் காம்ப்ளி




Court - அப்படியே மனதை நெகிழச்செய்து, ஒரேநாளில் நமது அறிவுக்கண்ணை திறக்கும் படமா...என்றால் நிச்சயம் இல்லை. அதன் நோக்கமும் அதில்லை. இந்திய சினிமாவை தலைகீழாக புரட்டிப்போடப் போகும் படமா என்றால் அதுவும் இல்லை. இதுவொரு மிக எளிமையாக, அலட்டிக்கொள்ளாமல் நமது சிஸ்டத்தை ஆவணப்படுத்த முயன்றிருக்கும் படம். Passive observerராக நம்மை இருக்க வைக்கும் படம். தினமும் அப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறோம். வதவதவென்று கருத்து மழை பொழிந்து தள்ளுவதைவிட, passivenessல் தான் தெளிவு பிறக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை (ஜென்னின் அடிப்படையும் இதுவே). Mass psychology (மராட்டிய நாடகம் முடிந்து – கேமரா staticகாக – படுகிளர்ச்சியாக கைதட்டிக்கொண்டிருக்கும் ஆட்களை காமிக்கும் காட்சியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்), Judicial absurdity, Bureaucracy என்று இந்தியா இன்று சந்திக்கும் பலமுக்கிய – வெளியே பரவலாக தெரியாவிட்டாலும் – இருப்பே தெரியாமல், மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் விஷயங்களை படுயதார்த்தமாக காட்டியுள்ள படம். மேலிருக்கும் நான்கு வாக்கியங்கள் படத்தைப் பற்றி வித்தியாசமாக எழுத வேண்டுமே என்று வலிந்து திணித்த வார்த்தைகள் அல்ல. சத்தியமான உண்மை.


கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்காவிட்டால்...இந்தாள் இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த லின்க்கைப் படித்துப்பாருங்கள். மீடியாக்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சிறு எடுத்துக்காட்டு. “தூக்கு தண்டனை” மாதிரியான விஷயங்களில் எல்லாம் உணர்ச்சிபிழம்புகளாக பல பத்திரிக்கைகளும்/செய்தித்தாள்களும் கட்டுரை எழுதி வருவது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

கோர்ட் படத்தை பார்க்கும் முன்னர் அதன் இயக்குனரின் கலந்துரையாடல் ஒன்றைக் காண நேரந்தது. அவருக்கு இருக்கும் தெளிவு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அந்த கலந்துரையாடலில் தான் (இங்கே பார்க்கலாம்) மேற்சொன்ன ஜிதன் மராண்டி பற்றி தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல், தன்னை பாதித்த Krzysztof Kieślowskiன் குறும்படம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். இது கீஸ்லோவ்ஸ்கி திரைத்துறை மாணவனாக இருக்கும்போது எடுத்த படம். இந்தப் படத்தை பார்த்தபொழுது, நமது ரிஜெஸ்ட்ர் ஆஃபிஸ்களிலும் ட்ரஷரிகளிலும் தாலுகா அலுவலங்களிலும் ஒளிந்திருந்து எடுத்ததைப்போல..சத்தியமாக உணர்ந்தேன் (அரசு அலுவலங்களில் எனக்கு ஏகப்பட்ட அனுபவம் உண்டு. ஆனால்  கதவின் அந்தப்பக்கத்தில் நின்றபடி. அதைபற்றி பதிவின் கடைசியில் சொல்கிறேன்). அவர் 1966 எடுத்த படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து ஒரு 27 வயது ஆளை பாதித்திருக்கிறது என்றால்.....கீஸ்லோவ்ஸ்கிக்கு – ஜீனியஸ் என்ற பெயரெல்லாம் சும்மா வந்துவிடவில்லை. (http://bombmagazine.org/article/7129714/chaitanya-tamhane



ஓ...சொல்ல வந்து மறந்தே போனேன். கோர்ட் படத்தில் வரும் "குற்றவாளியின்" பெயர் - நாராயன் காம்ப்ளே.

அரசும் அதிகாரவர்க்கமும் எடுக்கும் ஒரு முடிவு, போடப்படும் ஒரு கையெழுத்து: ஒருவரை தூக்கில் ஏற்றும்; ஒருவரை விடுவிக்கும்; ஒரு பக்கம்  திருநங்கைகளுக்கு சமஉரிமை உண்டு என்று அறிவிக்கும்; மறுபக்கம் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கும்; இன்னும் போபால் விஷவாயு கொடுமைக்கே சரியான நிவாரணம் கிடைக்காத நிலையில் புதிய அணுஉலைகளை திறக்கச் சொல்லும்; தனி மனிதனாக இதுபற்றியெல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் சுற்றி நடப்பவைகள் குறித்த  பிரக்ஞையுடன் இருக்கலாம். அந்த உரிமையை யாரும் நம்மிடம் இருந்து பிடுங்க முடியாதுதானே. நடுவில் நம்மை திசை திருப்ப லெக்கிங்ஸ்  குறித்த கட்டுரைகள் வரும்; மாட்டுக் கறி தடை என்று வரும்; ஒவ்வொரு வெள்ளியும் ஒரு படம் ரிலீஸ் ஆகும்; Facebookல் நம்மை unfriend செய்துவிட்டார்கள் என்ற சீற்றத்தில் நாம் இருக்கக் கூடும் X இதற்கு அப்படியே அந்தப் பக்கத்தில் அதிகார வர்க்கத்தால் பல முக்கிய முடிவெடுக்கள் எடுக்கப்படும். அம்முடிவுகள் நம்மை நேரடியாக பாதிக்கதாவரை......."குமுதம் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிக்கையிடம் இருந்து...."  

July 2015:
நெக்குருகி நிற்க நேர்ந்தது. ஷஷி தரூரின் இந்தப் பேச்சைக் கேட்டு. அதை சிலாகித்து நண்பர்கள் சோஷியல் தளங்களில் எழுதிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தபொழுது.....கிட்டத்தட்ட அழுதேவிட்டேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.

Barve Committee (1955) -  Malkani Committee (1957) - X Committee - Y Committee - Z Committee இப்படி பல கமிட்டிக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன...மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது பற்றி. "வேண்டிய வசதிகள் செஞ்சு குடுத்து....இந்த வேல பாக்கச் சொல்லுங்க" என்பதில் ஆரம்பித்து வேறுவேறு வகையான பரிந்துரைகளை இந்தக் கமிட்டிகள் வழங்கியுள்ளது. 

இந்த விஷயத்தில் முக்கிய மாற்றம் (குறைந்தபட்சம் சட்ட அளவில்) நடந்தது Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 அறிவிக்கப்பட்ட போதுதான். இதன்படி இப்படி கழிவுகளை அகற்ற ஆட்களை அமர்த்தும் நிறுவனங்கள்/ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் - ஒரு வருடம் ஜெயில்/2000. Rs அபராதம். ஆச்சா...இனி 2012ற்கு வருவோம்.

இதுவரை இருக்கும் சட்டங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி "The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill, 2012" என்ற மற்றொரு சட்டத்தை பாய்ச்சுகிறார்கள். நேரமிருப்பவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி படித்துப் பார்க்கலாம். ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நேரடியாக "இது சட்டபடி குற்றம்" என்று சொல்லித் தொலைய வேண்டியது தானே. கிட்டத்தட்ட 16 பக்கம். தேவையேயில்லாத விவரணைகள், வார்த்தை ஜோடிப்புகள். எல்லோருக்கும் புரியும்படி ரெண்டு பக்கத்தில் அடக்கி எழுத முடியாதா என்ன ?

ஆனால், மேலே பார்த்த அனைத்து சட்டங்களும் - ஒரு விஷயத்தை (ஒப்புக்காகவாவது) முன்வைத்தன. "மனிதக் கழிவுகளை/சாக்கடைகளை அகற்றும் பணியில், தகுந்த பாதுகாப்பின்றி ஆட்களை வேலைக்கு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்"

சென்னை - எனது Phd ஆய்வுக்குரிய பகுதி அதுதான் என்பதால், சென்னையின் கட்டிடங்கள் பற்றி எப்படியெல்லாம்/எப்போதெல்லாம் data திரட்ட முடியுமோ அப்பொழுதெல்லாம் data திரட்டுவது வழக்கமாகவே போய்விட்டது. அப்படி போன வாரம் Chennai Corporation Websiteக்கு சென்றபோது, உண்மையாகவே இது பெரிய அதிர்ச்சியையும்...இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் புரியாத நிலையும் ஏற்படுத்தியது. இப்பொழுது வரை இதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. முதல் பக்கம்...வெப்சைட்ன் முதல் பக்கமே அதுதான். அதில் இப்படியொரு லிங்க். 

நிறைய பேர் இந்த வாதத்தை (?) முன்வைத்து கேட்டிருக்கிறேன். "ஏன் இந்த மக்கள் வேலை செய்ய போக வேண்டும் ? முடியாது என்று சொல்ல வேண்டியது தானே...". விடை இந்த pdfல் இருக்கிறது. அடடா....எவ்வளவு அக்கறையுடன் மொபைல் நம்பர் முதற்கொண்டு துல்லியமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த லிஸ்டை பார்த்தால் சில patternகள் துல்லியமாகப் புரியும். ஒரே வீட்டில் இருந்து நான்கு பேர் கூட இதே வேலையைச் செய்வதைப் பார்க்கலாம். அதே முதல் பக்கத்தில் சுகாதார நிலையங்கள் குறித்தோ, ஹாஸ்பிடல் குறித்தோ ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்த்தால்...ம்ஹும். (சில டீடைல்களை நானும் பொதுவில் போட ஒப்பவில்லை. அதனால் erase செய்துள்ளேன்).




எனக்கு சென்னை கார்ப்பரேஷனிடம் மூன்றே மூன்று கேள்விகள் உள்ளன.

1)  மனித கழிவுகளை அகற்றும்  பணியாளர்களின் விபரப் பட்டியல் என்றே போட்டிருக்கிறது. எப்பிடி அகற்றுகிறார்கள் ? எவ்வாறு அகற்றுகிறார்கள் ?

2) இந்த pdfன் அவசியம்/பயன் என்ன ?

3) 2012 சட்டத்தின் வரைவுகளுக்கு உட்படாமல் இவ்வேலைகளை நீங்கள் வாங்கிக் கொண்டிருந்தால், (மனசாட்சியை விடுங்கள்) அது சட்டபடி குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா ?

திராவிட கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, தமிழ் தேசியம், ஆண்ட பரம்பரை கட்சிகள், ஆளப் போகும் பரம்பரை கட்சிகள்....இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்ளது தேர்தல் அறிக்கையில் இதுவரை "மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது " குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் ? சொல்லியிருக்கிறார்கள் என்று நான் சொல்வது தேர்தல் அறிக்கையைத் தாண்டி - அடிப்படை கட்டமைப்பை எவ்வாறு செயலாக்கப்  போகிறோம் என்ற தெளிவு கொஞ்சமாவது உண்டா ? பொதுக் கழிப்பிடங்களை கட்டுவோம் என்று சொன்னால் மட்டும் போதுமா ? எவ்வாறு... அதைவிட முக்கியமாக யார் அதை பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் இவர்களது பார்வை என்ன ? திடக்கழிவு மேலாண்மை என்பதெல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில குப்பையைக் குவித்து வைத்து எரிப்பதுதானா

கிழட்டுப் பயல் மாதிரி ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி சொல்லி போர் அடிக்கிறது. மிகமிக அடிப்படை வசதிகளான...."காலையில எந்திருச்சா கக்கா போகும்..அத கழுவ தண்ணி வேணும் (அ) வேற எதாவது வேணும்..." போன்றவைகள் குறித்து என்றைக்கு சீரியசாக செயல் படுகிறோமோ அன்று தான்..Developing country என்றாவது சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்குண்டு. கோர்ட் படத்தில், நாராயன் காம்ப்ளே உட்பட பல பிரதான கதாபாத்திரங்களும் மராட்டியர்களே. ஜாதி மட்டும் வேறு. அந்த pdfல் இருக்கும் அநேகரும் தமிழரே. ஜாதி என்னவாக இருக்கும் ? இவர்களுக்கு தமிழ் தேசியத்திலாவது இடமுண்டா ? 

இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாமே பெரிதும் உணர்ச்சி நிலை சார்ந்தே இருந்துவருகிறது. Social structure சார்ந்த அரசியலுக்கெல்லாம்  இங்கு வழியுண்டா என்று தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் ஊழல் (உங்கள் ஆட்சியில் ஊழல் - போன ஆட்சியை விடவா - அதற்கு முன்னால்  இருந்ததை விடவா - அதற்கு முன்னாடி நீங்கள்  என்ன செய்தீர்கள் என்று தெரியாதா...) - தமிழ்/திராவிடம் - தமிழர்கள்...இந்த பாய்ன்ட்களில் வந்துதான் இவர்கள் அரசியல் நிற்கும். நீங்கள் என்ன காரணம் வேண்டுமென்றாலும் சொல்லலாம்...இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று  புள்ளி விவரங்கள் தரலாம். அந்த pdfயையே என் கேள்வியாகத் தருகிறேன். இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிந்தால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். Word..

அரசு அலுவலகங்களில் பரிச்சயம் உண்டென்று முன்னாடி சொல்லியிருந்தேன் அல்லவா. என் அப்பா, துணை ஆட்சியராக இருந்து ரிட்டையர் ஆனவர். என் இரண்டு தாத்தாக்களும் (அம்மா + அப்பா) தாசில்தாராக இருந்தவர்கள் (களில் எல்லாம் தாசில்தார் என்பது மிகப்பெரும் பதவி). என் அப்பாவின் தாத்தா, ப்ரிட்டிஷ் + போஸ்ட் - ப்ரிட்டிஷ் காலத்தில் கோர்ட்டில்  துபாஷியாக(மொழிபெயர்ப்பாளராக) இருந்தவர். என் அப்பா துணை தாசில்தாராக இருந்து - துணை ஆட்சியராக இருந்தது வரையில் எல்லாவித அரசு அலுவலகங்களுக்கும் போயிருக்கிறேன். இந்த அரசாங்க அலுவலகங்கள் குறித்தெல்லாம் என்றுமே ஒரு அசூயை கலந்த fascination எனக்குண்டு. இப்படி சிறு வயதில் என் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு ஓடியதில் ஏகப்பட்ட விஷயங்களும் மறக்க முடியாத பல நிகழ்சிகளும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.




ஆனால் இந்தப் பையனுக்கு என்னைப்போல் அப்பாவுடன் சுற்றியவைகளில் சில, நினைவில் நிற்காமல், அடியோடு மறந்து போனால் நல்லது என்று நினைக்கிறேன். சின்னப் பையன் என்பதால் பெரிதாக எதுவும் இவனுக்குத் தெரியவில்லை (இந்த வீடியோ எடுத்தது 2012ல். இந்நேரம் வளந்திருப்பான்). ஸ்ரீலாங்கா, சிரியாவில் - கொத்து கொத்தாக நடந்ததை....நாம் தவணை முறையில் வேறுவிதமாக செய்து கொண்டிருக்கிறோம்.




Must Read:
1) In Modi's Swachh Bharat, manual scavenging is now a career option