Thursday, March 20, 2014

THE Beat is back......



While in the hospital, i was thinking....maybe i should live a more thoughtful life...now that they have repaired me. Then my eyes caught the ass of the nurse, who just made my bed and my dick stood up instantly. Not a chance.

- Takeshi Kitano,  படுபயங்கரமான விபத்திற்குப் பிறகு


தகெஷி கிடானோ: மேடை நகைச்சுவையாளர்/நடிகர்/இயக்குனர்/படத்தொகுப்பாளர்/பாடகர்/தயாரிப்பாளர்/ஓவியர்/ எழுத்தாளர்/கவிஞர் என்று அவருக்கு டஜன் முகங்கள் உண்டு. கவனிக்க வேண்டிய விஷயம், எந்தத்துறையையும் அவர் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கவில்லை. It just happened என்பார்களே.....அப்படித்தான் நடந்தது. பட்டென்று அவரைப்பற்றி புரியவைக்க, அவரின் இந்த வேலையே போதும்


ஹிரோஷிமா - நாகசாகி- இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டம், ஜப்பான் முழுமைக்குமே சோதனையான காலங்கள். அந்தப் பின்னாற்பதுகளில் குடிகார சூதாடி அப்பா(

பெயர், கிகுஜிரோ); ஏகப்பட்ட உடன்பிறப்புகள்; தனது சக்திக்கு மீறி உழைப்பை கொட்டிக்கொண்டிருந்த தாயார் என்று நெருக்கடியான சூழ்நிலையில் தான் கிடானோ வளர்ந்தார். கிடானோவின் அம்மா குழந்தைகளின் படிப்பில் மிகக்கண்டிப்பானவர். கடுமையான உழைப்பின் காரணமாக அனைத்து குழந்தைகளுக்கும் அதனை சாத்தியமாக்கினார். கடும்வறுமை நிலை குழந்தைகளது படிப்பை எவ்விதத்திலும் பாதிக்க அவர் விடவில்லை. ஆனாலும் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத கிடானோ தவளைகளின் டிக்கியில் பட்டாசுகளை கொளுத்திவிட்டு விளையாண்டு கொண்டிருந்தார். பயங்கர குசும்பனாகவே அவர் வளர்ந்தார். அவரது எல்லா படங்களிலும் இந்த குசும்புத்தனத்தை யாரும் எதிர்பாக்காத நேரத்தில் அவர் வெளிப்படுத்த தவறுவதேயில்லை. ஒருபக்கம் ஜாலியாக வாழ்கையை கழித்துக்கொண்டிருந்தாலும், முக்கித்தக்கி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு என்ஜினியரிங் படிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழைகிறார்.

இங்குதான் அவரது வாழ்க்கைமுறை அடியோடு மாறத் தொடங்கியது. 18 வயதில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் விட்டேத்தித்தனமான, Rebel without a cause மனநிலை. ஜப்பானிய மொழியில் இதற்கு “Futen” என்று பெயர். ஹிப்பித்தனமான வாழ்க்கைமுறை. மணிக்கணக்காக ஜாஸ் இசையை கேட்டுக் கொண்டும், Sartreல் ஆரம்பித்து Camus வரை 60களில் மேற்குலக சித்தாந்தங்களை அசைத்த அனைவரையும் அங்குதான் கண்டுகொண்டார். இந்த காலகட்டத்தில் அவரை பாதித்த இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை என்று அனைத்து விஷயங்களும் வெவ்வேறு வடிவில் பின்னாட்களில் அவரது படைப்புகளில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இந்த விட்டேத்தி மனநிலை உச்சத்திற்கு போய், தனக்கான வாழ்க்கையை வாழாமலேயே செத்து விடுவோமோ என்ற ஞானோதயத்தின் காரணமாக படிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிடுகிறார். இன்னதென்று இல்லாமல், கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்துகொண்டு நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தாலும் வருங்காலம் பற்றி ஒரு முக்கிய முடிவெடுக்கத் தவறவில்லை. அது - காமெடியனாக ஆவது. இந்த முடிவை அவரெடுக்க பல தீர்க்கமான காரணங்கள் உண்டு. சிறுவயதில் அவர் எதைச் செய்தாலும், அம்மா - குடும்பம் - ஆசிரியர் என்று அனைவரும் சொல்லிவைத்தது போல, இதை செய்யாதே - அதை செய்யாதே - இதெல்லாம் பாவம் - பேசக்கூடாத விஷயம் என்று பயங்கரமாக அவரை கட்டுப்படுத்தவே செய்தனர். ஆனாலும் காமெடியனுக்கு இந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாதே. கிடானோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "As a comedian says and does what he thinks is funny, by expressing himself, the choice of becoming one was another act of defiance. Thus to defy became self-realization and the means to become independent and live my own life".

இங்கிருந்துதான் அவரது ஒரு ஈகோ – Beat, மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கிறது. கொஞ்சகொஞ்சமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஆரம்பித்து, ஒரு சுபயோக தினத்தில் இன்னொரு நடிகரும் இவரும் சேர்ந்து The Two Beats என்ற பெயரில் ஸ்டான்ட்–அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆரம்பத்தில் “நல்ல” பிள்ளையாக நிகழ்ச்சியில் வலம்வந்த தகெஷி, போகப்போக உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த பல ஆற்றாமைகளை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார். சமூகத்தின் பல புனித பிம்பங்களை போகிறபோக்கில் உடைக்க ஆரம்பித்தார். எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தனது தாயார் முதல் ஆசிரியர்கள் வரை தடுத்தார்களோ, அதெல்லாம் அந்நிகழ்ச்சியின் வாயிலாக செய்ய ஆரம்பித்தார். நம்மைத் தான் இத்தனை நக்கல் செய்கிறார் என்று மக்களுக்கு பிடிபடவே பலமாதங்கள் ஆயிற்று. பயங்கர பகடியுடனே அனைத்து விஷயங்களையும் சொன்னதன் விளைவு - நிகழ்ச்சி அமோக வெற்றி. ஜப்பான் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் அந்நிகழ்ச்சி கொண்டுபோய் சேர்த்தது.

எண்பதுகளின் காலகட்டத்தில் தான் அவரது மற்றொரு ஈகோ – தகெஷி வேறுமாதிரி வெளிப்படத் துவங்கினான். புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனர் ஒஷிமா நாகிஷாவின் Merry Christmas Mr Lawrence என்ற மிகமுக்கியமான படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தத. இப்படம் வெளிவருவதற்கு முன்னரே, சைக்கோவாகக் கூட தொலைக்காட்சியில் சீரியஸ் வேடங்களிலும் நடித்தார். ஆனால்.......ஜப்பானிய மக்கள் அவரை அவர் நினைத்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. பழைய பீட் கிடானோவாகவே பார்த்தனர். மிகுந்த எரிச்சலுடன் இதனை ஒரு நேர்முகத்தில் அவர் பதிவு செய்துள்ளார். “நான் மேடை நிகழ்ச்சி நடத்தும் பொழுது.....பார்த்தவர்கள் சிரித்தனர். என் நோக்கமும் அதுதான். ஆனால், மிகுந்த சீரியஸாக நான் படத்தில் நடித்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர். படுபயங்கர அதிர்ச்சியாக இருந்தது”. ஓஹோ.....என்னை இப்படித்தான் பார்க்கிறீர்களோ.....ஒருநாள் இதற்கு வேறுமாதிரி பதில் சொல்லிக்கொள்கிறேன் என்று அவர் முடிவெடுத்தது அப்பொழுதான். தன்னைத்தானே கட்டுடைத்துக் கொண்டு வேறுமாதிரியான ஆளாக வெளிப்பட வேண்டும் என்று முனைப்பு தோன்றியதும் அப்பொழுதிருந்துதான்.

1989. Violent Cop என்றொரு படம் ஆரம்பிக்கப்படுகிறது. முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் லீட் ரோல் செய்யும் வாய்ப்பு. ஆனால் இயக்குனர் படமாக்கும் முறையுடன் கிடானோவால் ஒன்ற முடியவில்லை. பல Takeகளாக இயக்குனர் எடுத்து தள்ளிக்கொண்டிருந்தார். கிடானோவைப் பொறுத்தவரை, நடிப்பு என்பது spontaneous reactioனாக இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. கிடானோ இவ்வாறு பேசிக்கொண்டு திரிவதை கேள்விப்பட்ட இயக்குனர், கிடானோ படத்தில் நடிப்பதாய் இருந்தால் நான் வெளியேறிவிடுவேன் என்று மிரட்ட...தயாரிப்பாளர் இதனை கிடானோவிடம் சொல்ல.....படத்தை நானே இயக்குகிறேனே என்று டக்கென்று களத்தில் குதிக்கிறார். படங்களின் தொழில்நுட்பங்கள் குறித்தெல்லாம் அவருக்கு ஒன்றும் தெரியாது. சொல்லப் போனால் அதிகளவில் படங்கள் கூட அவர் பார்த்ததில்லை. தான் படித்த, தன்னை பாதித்த அனைத்து விஷயங்களையும் (Futen வாழ்க்கைமுறை....நினைவுக்கு வருகிறதா ?) படத்தின் உள்ளே கொண்டுவருகிறார். ஆக்சன் காட்சிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், உணர்வுப்பூர்வமான காட்சிகள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் போன்ற எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், தான் நினைத்ததை செய்யத் தொடங்குகிறார். விளைவு......உலகிற்கு கிடானோ என்ற Auteurரின் வரவு. அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களில் இருந்தும் இன்றும்கூட Violent Cop தனித்துத்தெரிவதைக் காணலாம்.
ஜப்பானிய கலாச்சாரத்தில் – மௌனத்திற்கு மிகப்பெரிய இடம் உண்டு. தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்வதில் ஆரம்பித்து.....மரியாதை வரை பல அடுக்குகளில் மௌனம் அங்கு ஒரு அனுபவமாக எதிர்கொள்ளப்படுகிறது. ஒருவர் பேசும்பொழுது மற்றொருவர் படக்கென்று குறுக்கிடுவதையும், மற்றொருவர் அமைதியாக இருக்கும் தருணத்தை தேவையில்லாமல் கெடுப்பதையும் மிகப்பெரிய அவமதிப்பாகவே அங்கே கருதுவார்கள். ஏன் பல ஜப்பானிய மாஸ்டர்களின் படங்களில் பல இடங்களில் மௌனமாக கேமரா அசைவற்று நிற்கும் என்பதற்கான விடையும் இதுதான். 

அப்படியான மாஸ்டர்களுக்கெல்லாம் மாஸ்டர் தான் – யஜிரோ ஓசு. குரோசாவாவிற்கும் ஒசுவிற்கும் உள்ள வித்தியாசம், சத்யஜித் ரேவிற்கும் ரித்விக் கட்டகிற்கும் உள்ள வித்தியாசம். குரோசாவாவிடம் சற்று ஹாலிவுட் தன்மை இருக்கும். ஒசுவிடம் முழுக்க முழுக்க ஜப்பானிய தன்மை மட்டுமே நிரம்பியிருக்கும். பார்வையாளர்களை தனது மௌனமொழியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடுவார். அப்போது தொடங்கி....கிடானோ வரை இந்த மௌனம் ஜப்பானிய படங்களில் முக்கிய அம்சமாகும். 

1991ல் A Scene at the sea படம் வெளிவருகிறது. குழந்தைத்தனம் கலந்த அவரது ஆர்டிஸ்டிக் முகம் வெளிப்படத்தொடங்கியது இந்தப் படத்தில் இருந்துதான். அதேபோல, கிடானோவின் ஏறக்குறைய அனைத்து படங்களிலும் கடல் நிச்சயம் பங்குபெற ஆரம்பித்ததும் இந்தப்படத்தில் இருந்துதான். அதற்கடுத்து வந்த படம் தான் Sonatine. உலகம் முழுமைக்கும் கிடானோவைக் கொண்டுபோய் சேர்த்த படம். குறிப்பாக அமெரிக்காவிற்கு. அமெரிக்காவில் வீடியோ கடை ஒன்றில் எண்பதுகளில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவனை தகெஷியின் திரைமொழி பயங்கரமாக பாதிக்கிறது. பின்னாட்களில் அந்த இளைஞன் எடுத்த பல படங்களிலும் தகெஷியின் பாதிப்பை முழுமையாக உணரலாம். அதே இளைஞன் தான், Sonatine திரைப்படத்தை அமெரிக்காவில் கொண்டுபோய் சேர்த்தது (அந்தாளின் பெயர் ?) Sonatine - கிடானோவின் ட்ரேட்மார்க் ரகளைகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற படம் அது. யகுசா குழுவை கிடானோ தனது படங்களில் காட்ட ஆரம்பித்ததும் அதிலிருந்துதான். எல்லாவற்றையும் தாண்டி Sonatine படத்தில் மிகமுக்கியமானதொரு விஷயம் இருந்தது. கிடானோவின் பல படங்களில் இசையமைப்பாளரான ஜோ ஹிஷாஷியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “his most bleak film”. படம் பார்த்தவர்களுக்கு இதற்கான காரணம் புரியும். மிகுந்த மனஉளைச்சலுடன் கிடானோ திரிந்துகொண்டிருந்த காலம் அது. கொதிகலன் போல் எந்நேரமும் யார் மீதாவது எரிந்துவிழுந்து கொண்டிருந்தார்.

1994. ஒரு படுபயங்கரமான விபத்து. எப்படி நடந்தது என்று இன்றுவரை அவருக்கே சரியாகத் தெரியவில்லை. உடலின் ஒருபக்கம் முழுமைக்கும் செயலிழந்துவிட்டது. மிகநீண்ட போரட்டத்திற்கு பிறகே முகத்தில் கொஞ்சமாவது அசைவுகளை அவரால் கொண்டுவர முடிந்தது. இதன் காரணமாகவே அவரது முகம் இப்பொழுதும் சலனமற்று, பாவனையற்று இருக்கும். இந்த விபத்து அவரது வாழ்கையை, அடியோடு மாற்றியது என்று ரெடிமேடாக சொல்வோமே.....அப்படியல்லாமல் நிஜமாகவே தலைகீழாக மாற்றியது. இந்த விபத்திற்குப் பிறகு மிகநேர்மையான இன்டர்வியுவை அவர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்தார். முகத்தின் ஒரு பக்கம் எவ்வித அசைவும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையில், ஒரு கட்டத்தில் உடைந்து அழுது......தான் செய்த பல தவறுகளை ஒப்புக்கொண்டார். அந்த காலகட்டத்தில் தான், சிகிச்சையின் போது வீட்டில் இருக்கும் சமயங்களில் ஓவியம் வரைய ஆரம்பித்தது. இந்த விபத்திற்கு பிறகு வந்த படங்கள் அனைத்திலும் ஓவியங்கள் தவறாது இடம்பெற ஆரம்பித்தன. அதன் உச்சமாக வந்த படம் தான் Hana-bi. எனக்கு மிகப்பிடித்த கிடானோவின் படம்.

மிகப்பிடித்த கிடானோவின் காட்சியமைப்புகளில் ஒன்று. முழுப்படமும் பார்த்தாலொழிய இதன்வீரியம் புரியாது. சென்டிமென்ட் இசையைப் போலவே தோன்றக்கூடிய வாய்ப்பு ஏகத்துக்கும் உண்டு.



ஓகே. இதுவரை Arihantன் General Knowledge 2014 போல, செய்திகளாகவே பார்த்த உணர்வுதான் எனக்கிருக்கிறது. Hana-biக்குப் பிறகு அவர் எடுத்த படங்கள், அதுபற்றிய விஷயங்கள், மேல சொன்ன பல விஷயங்கள்....இவை அனைத்தும் எனக்குத் தெரிய வந்தது இந்த டாகுமென்டரி மூலமாகத்தான். அதனால், ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக இந்த டாகுமென்டரியை பார்த்துவிடுவதே நலம்.

Slim Shady, Beat Takeshi என்று Alter-Egoகளின் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அவர்கள் தங்களைத் தாங்களே பகடி செய்துகொள்வதாகட்டும், கட்டுடைத்துக் கொள்வதாகட்டும்..... அதுவொரு தனிஅனுபவம். பல இயக்குனர்களின் படங்களைப் பார்த்தவன் என்று முறையில் இதனைச் சொல்கிறேன்...இன்றைய உலக சினிமா அரங்கில் தகெஷி கிடானோ பாணியில் படமெடுக்கக்கூடிய ஒரே ஆள்......தகெஷி கிடானோ மட்டுமே. அவரது பாதிப்பை டாரண்டினோவில் ஆரம்பித்து.... நமது அனுராக் காஷ்யப், மிஷ்கின் வரை பலரிடமும் பார்க்கலாம். ஆனால், தகெஷி படங்களில் யாருடைய சாயலும், பாதிப்பும் துளிகூட கிடையாது. சர்வநிச்சயமாக இதனைச் சொல்ல முடியும். இதற்கு காரணம், அவர் “உலக திரைப்படங்களை” பார்த்து வளர்ந்த ஆள் இல்லை; திரைப்படங்கள் தொடர்பான படிப்பு படித்தவரில்லை; தொழில்நுட்பம் அறிந்த ஆள் இல்லை; இப்படிதான் சினிமா இருக்க வேண்டும், இங்குதான் ஷாட்டை முடிக்க வேண்டும், திரைக்கதை எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும், இப்படி பல வேண்டும்கள் பற்றிய எவ்வித முன்முடிவுகளோ, பழக்கமாமோ இல்லாத ஆள் அவர். இதுவே அவரது படங்களின் மிகப்பெரிய வரம்.தான் உள்வாங்கிய விஷயங்களை வெளிப்படுத்த அவருக்கு ஒரு மீடியம் தேவை. பெரும்பாலான சமயங்களில் சினிமாவை அதற்காக பயன்படுத்திக்கொண்டார். அவ்வளவே. வேறுதுறையை அவர் தேர்ந்தெடுத்திருந்தாலும் இப்படிதான் ஒரு ஆளுமையாக வளர்ந்திருப்பார். 

கிடானோ போன்ற “Auteur”களின் படைப்புகள் அனைத்துமே, சுய பிரதிபலிப்புகள் (Self Reflexive). வாழ்க்கை – சமூகம் - தத்துவவிசாரணைகள் – பாலினம் – சினிமா – இசை – அரசியல் என்று பல விஷயங்கள் பற்றிய அவர்களது பார்வைகள். இந்தப் பிரதிபலிப்பு என்பது வெறும் அழுகைக் காவியமாக இருந்தால் மட்டுமே மனதை பாதிக்கும்/நெகிழச் செய்யும் படைப்பு, என்ற குறுகிய சந்தில் வைத்து ஒரு படைப்பைப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எள்ளலாக/பகடியாக /பூடகமாக இருக்கலாம். படைப்பாளிகளைப் பொறுத்து அது மாறுபடும். ஹாலிவுட் போன்ற அமைப்பை எடுத்துக் கொண்டால், இதுபோன்ற பிரதிபலிப்புகளுக்கெல்லாம் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதன் காரணமாகவே ஹாலிவுட் Auteurகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் ப்ளாஸ்டிக் வாளிகளைப்போல (உவமை உபயதாரர்: சாரு) Production houseகளில் இருந்து படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்களை சுவாரசியமான காட்சிகள் மூலம் எப்படிக் கவர்வது......இதுதான் அவர்களது ஆகப்பெரிய நோக்கம். மற்றொரு முக்கிய விஷயம், திரைக்கதை. அது முற்றிலும் மற்றொருவரின் visionனாக இருக்கும். பல இடங்கள் மாறி கடைசியாக ஒரு இயக்குனரிடம் வந்து சேரும். ஸ்டூடியோக்களின் தலையீடுகளையும் சேர்த்துக்கொள்ளவும். இதில் அந்த இயக்குனரின் தனிப்பட்ட பிரதிபலிப்பு எங்கு இருந்துவிடப் போகிறது (வெகு அபூர்வமாக அப்படி நிகழ்வதும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை). Auteur என்பதை வைத்தே நூறு பதிவுகள் எழுதலாம். இப்படித்தான் இருக்க வேண்டும்...என்று எந்தளவுக்கு பார்த்துபார்த்து பிடிவாதத்துடன் படத்தை செதுக்குவார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறிய உதாரணம் - இதோ
இந்தவொரு விஷயத்தின் காரணமாகவே ஸ்கார்சேஸியை Auteurகளில் சேர்ப்பதில் மெல்லிய சிக்கல் உண்டு. அவரது பெரும்பாலான படங்களுக்கான திரைக்கதை அவருடையது கிடையாது. ஆனாலும் ஆரம்பகாலங்களில் அவரது மனநிலையை பிரதிபலிப்பது போன்ற திரைக்கதைகளயே தேர்ந்தெடுத்தார். பல திரைக்கதைகளை கூட சேர்ந்து மெருகேற்றவும் செய்தார். ஆனால் Gangs of new yorkகிற்குப் பிறகு அவரது படங்களில் அவரது தனிப்பட்ட பிரதிபலிப்புகள் பெருமளவில் குறைந்துபோய் – ஷாட் கட்ஸ், இசை, Poetic violence – போன்ற விஷயங்கள் மட்டும் எஞ்சியுள்ளது. அவரே பல இன்டர்வியுக்களில் இதனை ஒப்புக்கொண்டும் உள்ளார்.

அதனால், ஆத்தர்களின் படைப்புகளை பார்க்கும்பொழுது, அவர்கள், தாங்கள் உள்வாங்கியவற்றை கண்ணாடி போல பிரதிபலிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல சமயங்களில் அக்கண்ணாடி அதிகப்படியான வெளிச்சத்தை உமிழலாம்; பாதரசம் போயிருக்கலாம்; திராபையான ஒளியைக் கொடுக்கலாம்; நம்மிடம் கூட பார்வைக் குறைபாடு இருக்கலாம். அதற்காக, நமக்கு பிடிக்கவில்லை – புரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அத்தகைய படைப்புகள் குப்பைகள் ஆகிவிடாது. திரைப்படம் என்றில்லாமல், இசை – ஓவியம் – இலக்கியம் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் தானே.



தனிமை, உச்சபட்ச வெறுப்பு, இயலாமை, வாழ்கையை எதிர்கொள்ளல் இந்தச்சிக்கல்களை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறும் ஒரு கதாபாத்திரமாவது அவரது படங்களில் கண்டிப்பாக இருந்தே தீரும். அதேசமயம், அப்படியே அதற்கு நேர்மாதிரியான இன்னொரு கதாபாத்திரமும் அப்படங்களில் இருக்கும். அதுவும் ஒரு பெண்ணாகவே பெரும்பாலும் இருக்கும். Sonatine, Hana-bi போன்ற படங்கள் மிகச்சிறந்த உதாரணங்கள். எங்கு தகெஷி மற்ற இயக்குனர்களது பாணியில் இருந்து மலையளவு வேறுபடுகிறார் என்றால், இந்தப் பத்தியின் முதல்வரியில் பார்த்த இவ்விஷயங்களை அவர் திரைமொழியாக்கும் விதம். எங்குமே அழுகையோ, உணர்ச்சியை கறக்கும் இசையோ எதுவும் இருக்காது. மாறாக பகடியாகத்தான் இருக்கும். For me comedy and violence has a lot in common. Just as you expect, comedy always lurks behind the most unexpected of circumstances என்றவர் சொன்னதன் காரணமும் இதுவே. (Black Comedy என்றொரு பதத்தை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கமுடிகிறது. அதன் உச்சங்களில் ஒன்று கிடானோ. அவரது படங்களைப் பார்த்தாலொழிய அக்காட்சிகளைக் குறித்து பேசுவது மிகக்கடினமான ஒன்று)



இன்னொரு விஷயத்தையும் பலதடவை மேல குறிப்பிட்டிருந்த ஞாபகம். கட்டுடைத்தல். தகெஷியின் Takeshis படத்தை எடுத்துக்கொள்வோமே. இரண்டு பிரதான பாத்திரங்கள். பீட் தகெஷி மற்றும் தகெஷி கிடானோ. பீட் தகெஷி - புகழ்பெற்ற நடிகர். தகெஷி – ஸ்டூடியோவில் கோமாளி வேலைபார்க்கும் ஆள். தகெஷியின் முந்தைய படங்களின் காட்சியமைப்புகள், நடிகர்கள் முதற்கொண்டு அத்தனையும் படத்தில் வரும். ஒரு தகெஷி மற்றொரு தகெஷியை கொலை செய்யப்பார்க்கும் முயற்சிகள் எல்லாம் படத்தில் உண்டு. தன்னைத்தானே ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் பகடியின் மூலம் கட்டுடைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்தப்படம் அட்டகாச உதாரணம். உலகளவில் இத்தகைய சர்ரியல் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்த படம் முழுவதுமே கிடானோ பார்வையாளர்களோடு ஆடும் ஒருவித கண்ணாமூச்சி ஆட்டம். எந்த கிடானோவை நாம் பார்க்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. பார்வையாளர்களை நக்கல் செய்யவே இந்தப் படத்தை அவர் எடுத்ததாக எனக்குப்படுகிறது. அதுவும் பிம்ப/ஹீரோயிச வழிபாடுகளில் பட்டம் வாங்கிய ஆட்கள் இந்தப்படத்தைப் பார்த்தாக வேண்டும். கிடானோவா....சே....என்னமாதிரி நடிகர்/இயக்குனர்....சான்சேயில்ல....என்று சிலாகிக்கும் அடுத்தநொடி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும். மயிறு மாதிரி எடுத்திருக்கான் என்று நினைக்கத் தோன்றும். இந்த முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கிடானோ. 

திரைப்படங்கள் குறித்த எவ்வித முன்முடிவுகளும் தெரிவுகளும் இல்லாத ஆள் தகெஷி. அது தொழில்நுட்ப விஷயங்களாக இருந்தாலும் சரி; ஷாட் வைப்பதானாலும் சரி; இசையை பயன்படுத்தும்விதமாக இருந்தாலும் சரி. ஒரு மிகமிகச்சிறிய உதாரணம் இதோ. Hana-Bi படத்தில் வரும் இக்காட்சி. ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவியின் உடல்நிலைக் குறித்து, டாக்டரிடம் தகெஷி பேசிக்கொண்டிருப்பார். முந்தைய காட்சியில் நர்ஸ், வழக்கமான படங்கள் போல கேமராவிற்குள் வராமால்...அவர்களின் டேபிள் அருகே செல்வார். ஆனால் திரும்பி வரும்போது...அப்பொழுது கூட frameமிற்குள் இருக்க மாட்டார்...வந்து அமரும்போது..மிகச்சரியாக கேமராவின் நடுவில் out of focusல் சாவகாசமாக அமருவார். கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கு கேமரா அதேபோலவே இருக்கும். ஏன் இந்தக் காட்சியை இவ்வாறே இருக்க விட்டுவிட்டார் என்று எனக்கு தோன்றியதைச் சொல்லி...உங்கள் யோசனையை கெடுக்க விரும்பவில்லை. கிடானோவின் மொழியைப் புரிந்துகொண்டால் இதெல்லாம் வெகுசாதாரணம்.


அதேபோல, இந்தக் காட்சி. இசையையும் Cutsம். சினிமாவின் மிகஅடிப்படையான, எளிமையான நுட்பங்கள் மூலமே எத்தகைய விளைவை கிடானோவால் ஏற்படுத்த முடிகிறது ! கிடானோ பற்றி பேசும்பொழுது அவரது ஆஸ்தான/எனக்கும் மிகப்பிடித்த இசையமைப்பாளர் ஜோ ஹிசாஷி பற்றி சொல்லியே ஆகவேண்டும். ரொம்ப யோசிக்க வேண்டாம்..மற்றொரு ஜீனியஸ் ஹயோ மியஸாகியின் பிரதான இசையமைப்பாளரும் கூட. ஜோ ஹிசாஷியை இதுவரை கேட்டிராதவர்கள் இதிலிருந்து ஆரம்பியுங்கள். நிச்சயம் பிடித்துப்போகும். குறிப்பாக ராஜா ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.



கிடானோவைப் பற்றி பக்கம்பக்கமாக, கஷ்டப்பட்டு வலிய திணித்த எழுத்து நடையில் எழுதிக்கொண்டே செல்லலாம். அதைவிட உத்தமம்.....இதோடு நிறுத்திக்கொள்வது. விஷ்வல் மீடியத்தை/அதன் ஒரு மிகப்பெரிய ஆளுமையைப் அவரது படங்கள் மூலம் தெரிந்துகொள்வது தானே நல்ல தொடக்கமாக இருக் முடியும்... ஒருவேளை நீங்கள் முதல்பாரா - இந்தப் பாரா என்று வந்திருந்தால, பதிவின் முதலில் இருக்கும் அந்த படத்தை மட்டும் சில நொடிகள் பாருங்கள். அந்த ரகளை/நக்கல்/வெறுமை/எதிர்பார்ப்பு/எத்தனிப்பு = கிடானோ

கிடானோவை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்றால், Outrage - Outrage beyond இரண்டில் இருந்தும் ஆரம்பித்தால் "சுவாரஸ்யமான" தொடக்கமாக அது அமையும். இந்த பதிவை ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்தது. ஏன் இத்தனை நாட்கள் கழித்து போஸ்ட் செய்கிறேன் என்றால்.....ஒரேயொரு காரணம்...Outrage Beyond. பலமுறை பார்த்த Outrageயை மீண்டும் பார்த்தமுடித்த கையேடு Beyond பார்த்தேன். அடுத்த பாகம் வேறு இதில் வரஉள்ளது. ஜப்பானிய Godfather என்று அடித்துக் கூறலாம். Outrage சீரிஸ் பற்றி தனிப்பதிவே போட்டுக் கொள்கிறேன் (Office Kitano, Kitano Castle - ரெண்டையும் கூகிள்ல அடித்துப்பாருங்களேன்).


Facebookers..

13 comments :

  1. செம எழுத்துநடையில் சொல்றீங்க. அதுக்காகவேணும் நீங்க சொன்னதை செய்யலாம்னு தோணுது.

    ReplyDelete
  2. அருமை..... மாஸ்டர் Back in action

    ReplyDelete
  3. As usual, a fantastic post again.

    ReplyDelete
  4. அந்த நபர் தான்... டாராண்டினவ். நல்ல கட்டுரை, நன்றி குழந்தை

    ReplyDelete
  5. looks like this is a nice print http://thepiratebay.se/torrent/8371645/Outrage_Beyond_2012_576p_BRRip_x264_AAC-JYK

    ReplyDelete
  6. கொழந்தApril 3, 2014 at 2:27 AM

    உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு என் வணக்கங்கள்.

    ReplyDelete
  7. கொழந்தApril 3, 2014 at 2:27 AM

    Fbயா இருந்தா..K.R.Vijaya போட்டோ போட்டிருப்பேன்...

    நன்றிண்ணே

    ReplyDelete
  8. கொழந்தApril 3, 2014 at 2:28 AM

    Getting Any...S..missed it....ஆனா கிக்குஜிரோ - அல்லாரும் மிஷ்கின் புண்ணியத்துல பாத்திருப்பாங்கனு நெனைக்கிறேன்

    ReplyDelete
  9. கொழந்தApril 3, 2014 at 2:29 AM

    போட்டோ காமெண்ட்ஸ் இருந்தா...எவ்ளோ நல்லாயிருக்கும்

    ReplyDelete
  10. கொழந்தApril 3, 2014 at 2:29 AM

    தாங்க்ஸ் பாஸ்.

    ReplyDelete
  11. கொழந்தApril 3, 2014 at 2:30 AM

    வாவ்..சூப்பர் ப்ரின்ட்டா இருக்கும் போல..அப்டேட் பண்ணிர்றேன்

    ReplyDelete
  12. தமிழ்ப்பிரபாNovember 19, 2014 at 8:07 PM

    பெர்சு பெர்சா போஸ்ட் போடுங்கன்னு எங்கள அந்தாண்ட கலாய்க்க வேண்டியது.. இங்க சீனப் பெருஞ்சுவர் சைஸ்''ல...

    ReplyDelete