War crimes are defined by the winners. I am a winner. So i can make my own definitions

இது ஏதோ ஒரு சர்வாதிகாரி உதிர்த்த வார்த்தைகள் அல்ல. படத்தில் வரும் சாமான்ய கதாபாத்திரம் உதிர்க்கும் வார்த்தைகள். இந்தளவுக்கு என்னைச் சலனப்படுத்திய – வெகுவாக பாதித்த - கேள்விக்குள்ளாக்கிய படம்.....கிட்டத்தட்ட  எதுவுமே சட்டென்றுஞாபகத்திற்கு வர மறுக்கிறது. Hardest surrealistic film i've ever seen. சில படங்கள் நமது பார்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வல்லமை கொண்டது. சக மனிதர்கள் மீது என்ன மாதிரியான மதிப்பு வைத்திருக்கிறோம் ? என்னென்ன அளவுகோல்களின்படி அவர்களை அணுகுகிறோம் ? அடுத்தவர்களை காயப்படுத்தாமல் ஒரு idealistic மனநிலையில் வாழ்வது சாத்தியம் தானா ? என்பதில் தொடங்கி பக்கத்து தெரு - ஊர் - மாநிலம் - நாடு வரையில், மனிதன் என்ற உயிரினம் சக உயிரினத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், அடக்குமுறைகள் வரை ஏதாவதொரு சந்தர்பத்தில் பல கேள்விகள் எழுந்தே தீரும். ரோட்டில் நடந்துபோகும் போது ஏற்படும் சிறுசிறு சம்பவங்கள் கூட சிலசமயம் பெரிய கேள்விகளுக்கு வழிவகுக்கும் அல்லவா. அதுபோன்றதொரு அனுபவமே இந்தப்படம்.

த ஆக்ட் ஆஃப் கில்லிங்

சக மனிதன்/உயிரினங்கள் மீதான வன்முறை என்பது ஆதிகாலம் தொட்டே நமது உடம்பில் ஊறிய உணர்வு. ஆனால் அன்று அதற்கான காரணங்கள் வேறாக இருந்தது. மனித இனம் வளர வளர – குறிப்பாக இனக் குழுக்கள் பெருகப் பெருக, அமைப்புகளும் கூடவே பிரச்சனைகளும் பெருக ஆரம்பித்தன. இந்தக் குழுக்களின் வாயிலாகவே, நோம் சோம்ஸ்கி சொல்வது போல – ஒரு common medium/platformமிற்கான தேவையின் காரணமாக  – சமூகம் என்ற அமைப்புத் தோன்றியது. இந்த சமூக அமைப்பிலிருந்துதான் அரசு – ஆட்சி – அதிகாரம் போன்ற வரையறைகள் தோன்றின. மனித இனம் வளர வளர இந்த அமைப்பு பல்வேறு மாறுதல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இது இயற்கையான ஒன்றுதானே. இதுபோன்ற பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் மிகமுக்கிய பங்குவகித்தது(வகிக்கின்றது). அரசியலின் வாயிலாகவே அரசு – ஆட்சி – அதில் மக்களின் பங்கு போன்றவைகள் பற்றிய பார்வைகள் மாறத்தொடங்கின; இசங்களும் தோன்றின என்பது வரலாறு. இன்று, அரசியல் என்ற வார்த்தை அரசு – அதிகாரம் போன்றவைகளின் எல்லைகளைத் தாண்டி, டூத் ப்ரஷ் முதற்கொண்டு அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வரிகளில் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது- மக்களைப்போல் ராஜ்யம். ஆனால் யாருக்காக, எந்த மக்களுக்காக இந்த ஆட்சி - அரசு - அமைப்பு எல்லாம் தோற்றுவிக்கப்பட்டதோ-மாற்றி எழுதப்பட்டதோ, அம்மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்களிடம் மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கப்பெறும் பொழுது........எவ்வாறு நடந்து கொள்வார்கள் ? இன்றளவும் யாராலும் விடையளிக்க முடியாத கேள்வி இது. மாவோ & ஸ்டாலின் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஹிட்லர் ஆட்சியில் இறந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் ஆட்சியில் இறந்தவர்கள் அதிகம்.

actofkillin1

இந்தியாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு மிகப்பெரிய கலகம் நடந்து அதிகாரம்/அமைப்பு எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மைக் கேட்க, கட்டுக்குள் வைத்திருக்க யாரும் இல்லை. என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுவோம் ? இன்னும் விபரீதமாக யோசிப்போம். குறிப்பட்ட இன/மொழி/ஜாதி மக்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு கலகம் எழுப்பப்படுகிறது. அதனினும் மோசமாக அரசே அதனை முன்னின்று நடத்துகிறது (சீக்கியர்கள்/குஜராத் கலவரம் எல்லாம் ஞாபகம் வந்தால்....அது தற்செயலானதே). மக்களாகிய நாம் எப்படி நடந்து கொள்வோம் ?

பெல்லா தாரின் Wereckmeister harmonies, வேறொரு பரிணாமத்தில்  மேற்கூறிய கேள்விகளை எழுப்பிய படம். முன்பு நான் பார்த்து புரிந்துகொண்டதைவிட  இப்பொழுதுதான் அதன் முழுவீரியமும் புரிகிறது.


எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில், காந்தி மட்டுமே இதுகுறித்து மிகத்தீவிரமாக கேள்விகளை எழுப்பியவர். குழு மனப்பான்மை(Mob psychology) எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை பல்வேறு தளங்களில் வைத்துப் பேசியவர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவர் சொன்னதுதான் - Be the change that you wish to see in the world. ஆரம்பகாலம் தொட்டே இந்தவொரு விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருந்தார். இது சரியாக புரிந்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பலவாறு விமர்சிக்கப்பட்டார். சௌரி சௌரா நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1922 ஃபிப்ரவரி 4. காந்தியின் தலைமையில் பல மாதங்களாக ஒத்துழையாமை போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. உத்தர்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்றொரு பகுதி. போலீஸுக்கும் – போராட்டத்தில் பங்குபெற்ற மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்று பொதுமக்கள் இறக்க நேரிடுகிறது. கொதிப்படைந்த மக்கள், போலீஸ்ஸ்டேஷனுக்கு தீ வைத்ததில் 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகின்றனர். காந்தியை இந்நிகழ்வு வெகுவாக பாதிக்கிறது. உடனே ஒத்துழையாமை போராட்டத்தை கைவிடுகிறார்.காந்தியின் இந்த முடிவை போஸ், நேரு உட்பட பலரும் மிகக்கடுமையாக விமர்சித்தனர் (To sound the order of retreat just when public enthusiasm was reaching the boiling point was nothing short of a national calamity - Bose).

இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் ஹைகோர்டில் காந்தி தனது முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் “பம்பாய், சென்னை, சௌரி சௌரா முதலான இடங்களில் நிகழ்ந்த வன்முறை செயல்களுக்கு நான்தான் பொறுப்பு என்று அட்வகேட் ஜெனரல் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதைபற்றி பலவாறு சிந்தித்தும், என்னையே ஆராய்ந்து பார்த்தும் நான் தெரிந்து கொண்டது, மக்கள் அஹிம்சை வழிக்கு பழகும் முன்னரே அவர்களை அவசரப்படுத்தி விட்டேன்....” என்று  ஆரம்பித்து மிகத்தெளிவாக தனது நிலைபாட்டை முன்வைக்கிறார் (இங்கே படிக்கலாம்). இன்றளவும் காந்தியின் இந்த முடிவை மிகப்பெரிய தவறாக பலரும் கூறுகின்றனர். ஆனால் காந்தி பிரிட்டிஷ் – விடுதலை – காங்கிரஸ் என்பதையெல்லாம் தாண்டி, ஒன்றில் மிகத்தெளிவாக இருந்தார். Civic responsibility – மக்களின் பொறுப்புகள். பொறுப்புணர்வு குறித்து பல இடங்களில் அவர் சொன்னதான் சாராம்சமாக இதைச் சொல்லலாம் “ஒரு நாட்டின் சுயராஜ்யம் என்பது  அம்மக்கள் ஒவ்வொருவரும் எய்தியுள்ள சுயாட்சியின் – தம்மை அடக்கியாளுதளின் மொத்தத் தொகையே  (Swaraj of a people means the sum total of the self-rule of individuals & Swaraj can only be achieved through an all-round consciousness of the masses)“. இந்த முக்கிய விஷயத்தை குழப்பாமல் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. காந்தியின் சுயராஜ்யம் -> பொறுப்புகள் பற்றிய கருத்துக்களில் மிகமுக்கியமானவைகள் சிலவற்றை இங்கே படித்துப் பார்க்கலாம். இன்னொரு இடைச்செருகல்: காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1920களில் 15 -16 வயதான, பஞ்சாபை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். காந்தி போராட்டத்தை கைவிட்டது அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம்தான் பின்னாளில் அவர்களின் பாதையைத் தீர்மானித்தது என்றுகூட சொல்லலாம். அந்தச் சிறுவர்கள், பகத் சிங் & சுக்தேவ்

1965களின் பிற்பகுதி. இந்தோனேசியாவில் சுகர்னோவின் ஆட்சியை கலகத்தின் மூலம் ராணுவம் கைப்பற்றுகிறது. வழக்கம்போல் ஆரம்பகாலங்களில் நல்லாட்சி அதுஇது என்று பேசியவர்கள் கொஞ்சநாட்களில் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். ராணுவத்தையும் அதன் ஆட்சி முறைகளையும் விமர்சிப்பவர்கள் அனைவைரும் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------

குறிப்பாக ஏன் கம்யூனிஸ்ட்களைக் கண்டு இவ்ளோ பயம், கோபம், வெறுப்பு ? 1960 – 1970களை உலக வரலாற்றின் மிகமிக முக்கியமான ஆண்டுகள் எனச் சொல்லலாம். மாவோ சீனாவில் மிகப் பலமாக காலூண்டியதாகட்டும், கியுபா – அமெரிக்காவிற்குமான பிரச்சனை, சே குவராவின் எழுச்சி, அல்ஜீரிய/தென் அமெரிக்க நாடுகளின் உள்நாட்டு போர், வியட்நாம் போர், மார்டின் லூதர் கிங்ன் போராட்டம் என்பதில் ஆரம்பித்து கலை – இசை – இலக்கியம் - அறிவியல் என்று எல்லாத்தளங்களிலும் மாற்றம் நிகழ்ந்த வருடங்கள் இவைகள். திரைப்படங்கள், விண்வெளி யுத்தம், ஹிப்பி’ஸ், கே உரிமைகள், பெண்ணிய சிந்தனைகள், போஸ்ட்மாடர்ன் சிந்தனைகள் உச்சத்திற்கு சென்றது என்று ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கலாம். சமகால உலக வரலாறு/அரசியலைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் 1960களைப் பற்றிப் படித்தாலே போதுமானது. ஏற்கனவே ரஷ்ய புரட்சிக்குப் பிறகு பல நாடுகளில் கம்யூனிஸ்ம் வெகுமாக மக்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது. பிற்பாடு, மாவோவின் எழுச்சியும் சேர்ந்து கொள்ள ஒவ்வொரு நாடாக மாவோயிசம்/கம்யூனிஸம் பரவத் தொடங்கியது. 60களில் தென்னமெரிக்க நாடுகளிலும் க்யுபா  போன்ற நாட்டிலும் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து கொள்ள பல நாடுகள் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் வந்தன. இந்தியாவிலும் நம்பூத்ரிபட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மாதிரியான ஆட்கள் தீவிரமாக களத்தில் இறங்க ஆரம்பித்தது பின்-ஐம்பதுகளில் தான்.


இந்தளவிற்கு கம்யூனிஸ்ம் பரவுவதை, யார் படுபயங்கர எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருப்பான் ? சாட்சாத் நமது பெரியண்ணன் + அவர்தம் கூட்டாளிகள் தான். பொலிவியாவில் ஆரம்பித்து எந்தெந்த நாடுகளில் எல்லாம் கம்யூனிஸம் வளருவது போல் தெரிகிறதோ அங்கெல்லாம் அதனைத் தடுக்க மிகமிக தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அநேகமாக அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தோனேஷியாவிலும் இவர்களுது கைங்கரியம் பலமாக உண்டு. ஆனால் மிகமிக சொற்பமாகவே இந்தோனேஷியப் படுகொலைகள் உலகளவில் பேசப்பட்டிருக்கிறது. நம்மிலேயே எத்தனை பேர் இதுவரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ?

-----------------------------------------------------------------------------------------

அப்படி கம்யூனிஸ்ட்களாகக் "கண்டறியப்பட்ட" அனைவரையும் இந்தோனேஷியா ராணுவமும் அவர்களின் ஆதரவுடன் செயல்பட்ட லோக்கல் குழுக்களும் என்ன செய்தன என்பது குறித்தான தேடல்தான் இந்தப் படம். 2004ஆம் ஆண்டில் ஜோஷ்வா ஓபன்ஹைமர், இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் உலகமயமாக்கலின் விளைவு -> யூனியன் பிரச்சனை குறித்தான ஆவணப்படம் எடுப்பதில் முனைந்திருக்கிறார். அங்கு யூனியன் போன்ற விஷயங்களைக் குறித்து பேசவே அந்த மக்கள் அச்சப்பட.......ஏன் என்று விசாரிக்கும் போதுதான் எந்தளவுக்கு இந்தப் படுகொலையின் கோரப்பிடியில் இந்தோனேஷியா 1965ல் சிக்கியிருந்தது என்பது அவருக்கு உறைக்க ஆரம்பிக்கிறது. இதை எப்படியாவது பதிவு செய்தாக வேண்டிய கடமை தனக்கிருப்பதாக உணர்ந்தேன் என்று ஜோஷ்வா கூறுகிறார். காரணம்......அவரின் குடும்பத்தினர் நாஜிகளால் பெருமளவில் பாதிப்படைந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தபொழுது, அச்சத்தின் காரணமாக மக்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். சரி...இவர்களை விட யார் இந்தக் கொடுமைகளை செய்தார்களோ அவர்களையே பேட்டி கண்டால் என்ன என்று தோன்றி......அவர்களை அணுகுகிறார். இந்த முக்கிய முடிவு ஆவணப்படத்தின் போக்கையே மாற்றுகிறது. எந்த படுகொலைகளைப் பற்றி பேச மக்கள் பயந்தார்களோ.......அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்கள் ஜோஷ்வாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து.....அவரை வரவேற்று எப்படி எப்படியெல்லாம் “கம்யூனிஸ்ட் புல்லுருவிகளை, அரக்கர்களை, கொலைகாரர்களை” அம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் உன்னத வேலையை செய்தோம் என்று மிகமிக விலாவரியாக, பேருவகையுடன் கூற ஆரம்பிக்கின்றனர். ஜோஷ்வா மிரட்சியுடன் இந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறுகிறார் “I felt  if i had walked into Nazi Germany 40 years later....with the Nazis still running the country and the Gestapo considered national heroes”. இப்படி அவர் சந்திக்க ஆரம்பித்த நபர்கள் 1,2,3,10,20,40......என்று நீண்டுகொண்டே செல்கிறது. அப்பிடி அவர் 41வதாக சந்தித்த நபர்தான் அன்வார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்த உங்களையும் என்னையும் போன்ற சாமான்யன். எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகன். கம்யூனிஸ்ட்கள் என்று கண்டறியப்படும் நபர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்ட பின்னர் ஒரு பெரிய தலைவன் நிலைக்கு உயர்கிறான்.

அன்வார்: முதலில் பிடித்து வரப்படும் நபர்களை தாறுமாறாக அடித்தே கொல்வோம். இங்குதான் ஒரு சின்ன சிக்கல். அந்த இடம் முழுக்க ரத்தவெள்ளமாக காட்சியளிக்கும். சுத்தப்படுத்தினாலும் வாடை போகாது. இந்த ரத்தவாடைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து ஒருபுது உத்தியை செயல்படுத்தத் தொடங்கினேன்.என் வாழ்கையில் எத்தனனையோ திரைப்படக் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக்காட்சி அளவிற்கு என்னை பாதித்த காட்சிகள் மிகமிகக்குறைவு. எப்படி கொன்றேன் என்பதை சொல்லி முடித்த அடுத்தநொடி.........அன்வார் ஆடும் ஆட்டம். உலகின் எப்பேர்ப்பட்ட கலைஞனாலும் இந்தக் காட்சியின் கனத்தை இசையாகவோ, ஓவியமாகவோ, வார்த்தைகளாகவோ வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனித மனம் ஏன் இத்தணை விசித்திரமாக நடந்து கொள்கிறது ? ஒரு சாதாரண டிக்கட் கிழித்துக்கொண்டிருந்த ஆசாமி. காலில் அடிபட்ட வாத்திற்காக இரக்கப்படும் ஆள்(ஹிட்லருக்கு விலங்குகள் மீது அளப்பரிய பிரியம் உண்டு).  மற்ற நேரங்களில் சாதாரண ஆட்களாகத் தான் அன்வார் போன்ற ஆட்கள் நடந்து கொள்கிறார்கள். இந்தளவுக்கு வெறி, வன்முறை எங்கிருந்து வந்தது ? எங்கே இந்த தவறு நிகழ்ந்தது ? இதற்கு யாரைக் குற்றம் சாட்ட முடியும் ?

இந்த அன்வாருக்கு சினிமா மீது பயங்கர ஆர்வம் இருப்பதால், ஜோஷ்வாவுக்கு முழுஒத்துழைப்புத் தருகிறான். அதற்கும் ஒருபடி மேலே போய், தாங்கள் செய்த விஷயங்களை திரையில் மீள்கொணர விரும்புகிறான். ஆம்...அவ்விஷயங்களையே திரைப்படமாக்க விரும்புகிறான். அதற்கான “நடிகர்களையும்”, உடை முதற்கொண்டு அனைத்தும் அவனே தேர்ந்தேடுக்கிறான். அவர்களனைவரும் ஒருவிஷயத்தில் மட்டும் தீர்க்கமாக உள்ளார்கள். எண்ண ஆனாலும் சரி, உண்மையை மட்டுமே திரையில் காண்பிப்பது. கொலையாளிகளே கொல்லப்பட்டவர்களாக திரையில் உலா வர ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமாக தாங்கள் செய்தவைகளை நடித்துக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் யாருடைய படத்தைப் பார்க்கிறோம், ஜோஷ்வாவினுடயதா - அன்வாரினுடையதா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. மிகப்பெரும் திகிலூட்டும் mazeற்குள் மாட்டிக்கொண்டதைப் போன்றதொரு சர்ரியலிஸ உணர்வு முழுவதுமாக நம்மைச் சூழ்ந்துவிடும். ஆரம்பத்தில் ஒன்றும் அவ்வளவு ‘சுவாரசியாமாக’த் தெரியாத காட்சிகள், அதன் வீரியம் உறைக்க உறைக்க – யாராக இருந்தாலும் பாதிக்காமல் போகாது. மனித உளவியலின் மீது ஏகத்துக்கும் கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பும் காட்சிகள். போகிறபோக்கில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்......அவ்வளவு அப்பட்டம். Naked. படத்தில் மலிவாக நமது உணர்ச்சிகளை தூண்டும் காட்சிகள் எதுவுமே இல்லை. நேரடியான வன்முறை இல்லை. ரத்தம் இல்லை. ஆனாலும் எல்லாவற்றையும் மீறிய தாக்கம் படத்தில் உண்டு. பிற்பகுதியில் அன்வாரின் அண்டை வீடுக்காரரான சுரயோனோ என்ற கதாபாத்திரம் படத்தை எடுக்க சில யோசனைகளை தெரிவிப்பார். சிரித்துக் கொண்டே...தனது வளர்ப்புத் தந்தை எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தனது ஆற்றாமையை கொட்டித் தீர்த்துவிடுவார். இது இயக்குனருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட ஒன்று. இதை ஷூட் செய்த மூன்று வருடத்திற்குள் உடல்நலக் குறைவு காரணமாக சுரயோனோ இறந்து விடுகிறார். ஜோஷ்வா அவரது மனைவியிடம், இந்தக் காட்சியை வைப்பதா, இதைப்பற்றி எதுவும் சொன்னாரா.....என்ற கேட்டதற்கு அவர் மனைவி சொன்னது “Yes, he had this awful experience as a child, and wanted it to be seen, wanted the public to know what he went through”. இந்தப் படத்தின் அடிநாதமே இதுதான். இந்த வழிலாவது உலகத்திற்கு தாங்கள் அனுபவித்த கொடுமைகளை கொட்டித்தீர்த்துவிட வேண்டும். அன்வார் போன்ற ஆட்களும் இதையே செய்ய விரும்புகின்றனர். எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து இதனைச் செய்கிறார்கள். நிதர்சனத்தில் இருந்து தப்பிக்கும் மனநிலை. வெளிப்படையாக இதனை அவர்கள் சொல்லாவிட்டாலும் பல காட்சிகள் இதனை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அன்வாரின் சிஷ்யனாக வரும் ஹெர்மானைப் பற்றி தனிபபதிவே எழுத வேண்டும். அத்தனை விஷயங்கள் உண்டு ஹெர்மானிடம்.

actofkilling_2

படத்தைப் பற்றிய இன்னொரு மிகமுக்கியமான விஷயம், கிட்டத்தட்ட 1000 பேர் வரை கொலை செய்த அன்வாரில் இருந்து யாரையும் ஒருபக்க சார்பாக சாடுவதில்லை. நூற்றுக்கணக்கான கொலையாளிகளில் அன்வாரும் ஒருவன். அவ்வளவே. எங்கே படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்றால்.....ஏன் ? ஏன் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும் பொழுது. அன்வார் போன்ற ஆட்கள் எல்லாம் - அது கம்யூனிஸ் அரசாகட்டும், எந்தவொரு அரசாகட்டும் – எல்லா அரசுகளுக்கும்/கட்சிகளுக்கும்/கொள்கைவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கும்,மசூதியை இடிக்கவும் ரயிலைக் கொளுத்தவும் குடிசைகளுக்கு தீவைக்கவும் தேவை. இதில் ஒருசிலரை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாதே. இதுவொரு மிகசிக்கலான கட்டமைப்பு. வரலாற்றை புரட்டிப் பார்த்தல் ஒருநாடு கூட இத்தகைய சிக்கல்களில் இருந்து தப்பவில்லை என்பது புரியும்.

பார்ப்பவர்களுக்கு ஏன் சில உறுத்தல்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது என்றால், மறைமுகமாக நமக்கும் சகமனிதன் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களில் பங்குள்ளது என்ற உண்மை உறைப்பதனால் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். ஆப்ரிக்க வைரச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஆள் முதல் நம்மூரில் மலம் அள்ளும் ஆள் வரை, நாம் வசதியாக இருக்க ஏதாவதொரு மூலையில் ஒரு மனிதன் கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நமக்கு இதெல்லாம் மிகநன்றாகவே தெரியும் (தெரிய வேண்டும்). இருந்தும், இப்படி மனிதாபிமான போர்வையில் பதிவுகளை எழுதிவிட்டு, நிதர்சனத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்லவே விரும்புகிறோம். இதற்குமேல், உளமார சொல்கிறேன்....இந்தப் படத்தை பற்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. பார்த்துமுடித்தவுடன் பல்வேறு கேள்விகள் மட்டுமே தலை முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது. “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை என்ன காரணத்திற்காக சில பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் ஏழெட்டு வருடமாக திணறிக் கொண்டிருக்கிறேனோ....அதே காரணம் தான்.

மிகமிக முக்கியமானதொரு விஷயம், கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக "திரைப்படங்களின்" மூலமே பெருமளவில் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. சினிமா பொழுதுபோக்கு தானே என்ற ஜல்லித்தனமான கோஷம் எப்பொழுதுமே கடும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமைக் குழுக்கள், இந்தோனேஷியா அரசை பகிரங்க மன்னிப்பு கேட்டக் கோரியும் அவர்களுது வரலாற்றில் இந்தப் படுகொலைகளை பதிவுசெய்யக் கோரியும் வற்புறுத்தி வருகின்றனர். இலங்கை, இந்தோனேஷியா, அர்மேனியா, போஸ்னியா என்று எந்த நாடாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகாட்டும்.........உண்மையான சமத்துவம் அடக்குமுறைகளில் தானே நிலவுகிறது. அதனால் இப்படத்தை பார்க்கும் போது அதன் புவியில்பரப்பைப் பற்றியெல்லாம் கவனிக்கத் தோன்றாது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தப் படத்தைப் பார்ப்பது நமது கடமை என்றே தோன்றுகிறது.

ருவாண்டா இனப்படுகொலை
ருவாண்டா இனப்படுகொலையில் பாதிப்படைந்த ஒரு சிறுவன்

சமீபத்தில், இந்த செய்தியை படிக்க நேர்ந்தது. Young India irony: 75% will vote but 52% support dictatorship தாங்கமுடியாத கடுப்பைக் கிளப்பிய செய்தி இது. சே குவாரா டிஷர்ட்டை அணிந்தாலே போராளி என்ற நினைப்பிருப்பவர்கள் தான் இதற்கு ஆதரவாக ஓட்டு போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். Dictatorshipன் அடிச்சுவடு கூட தெரியாத ஆட்கள் இவர்கள். ஒருபக்கம் Save tamilsல் ஆரம்பித்து காஸா வரை என்று உருக்கமாக ஃபேஸ்புக் முழுவதும் செய்திகளை பகிர்கிறார்கள். இன்னொரு பக்கம் – சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்கள். என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. கொஞ்சம்கூட அடிப்படை புரிதல்கள் இல்லாமல் விடலைத்தனமான மனநிலையில் விஷயங்களை அணுகுவதால் ஏற்படும் விளைவுகள் இவை. ஜனநாயகம் பற்றி காந்தி சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது There is no human institution but has its dangers. The greater the institution the greater the chances of abuse. Democracy is a great institution and therefore it is liable to be greatly abused. The remedy, therefore, is not avoidance of democracy but reduction of possibility of abuse to a minimum. சை.....ஜனநாயகத்தைப் பத்தி பேசுவது தற்போது out of fashion & trendiness இல்லாத விஷயம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன்.
மனிதன் அமைத்த எந்தவொரு நிறுவனமானாலும் அதற்குரிய ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அந்நிறுவனம் எவ்வளவு பெரிதாய் இருக்கின்றதோ அவ்வளவுக்கு அதில் ஆபத்துக்களும் மிகஅதிகம். ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். பிழைகள் நிகழ ஏரளாமான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆனால் இதற்கான பரிகாரம் ஜனநாயகத்தையே தவிர்ப்பதில் இல்லை. மாறாக அதில் நிகழும் தவறுகளை முடிந்தளவில் குறைக்கப் பார்ப்பதே ஆகும்

  • படத்தை இந்த டொராண்டல் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் - Torrent link

Yes.....there were times, I'm sure you knew
When I bit off more than I could chew
But through it all......when there was doubt
I ate it up and spit it out
I faced it all and I stood tall and did it my way
 

இதுவரையிலான நமது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க 1) வயதாகியிருக்க வேண்டும் 2) மரணப் படுக்கையில் இருக்க வேண்டும், இவைகள் தவிர வேறு வழி இல்லையா ? (நானும் "நாளை ஒரு விபத்தின் காரணமாக நான் மரணப் படுக்கையில் இருக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்" என்றுதான் இப்பதிவை ஆரம்பித்தேன். பின்பு ஏன் இந்த ஹாலிவுட்தனமான போலி உணர்வுச்சுரண்டல் என்று விட்டுவிட்டேன்). என்னைக் கேட்டால் இப்பொழுது வேண்டுமானாலும் இந்த நினைப்பு வரலாம். தன்னுணர்தல் (Self realization ?) ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ வந்தேதீரும் என்று நம்புகிறேன். வாழ்க்கை தாறுமாறாக நம்முடன் பிங்-பாங் ஆடியிருந்தால், அதனை நோக்கி தானாகவே நமது பயணம் இருக்கும்(இருக்க வேண்டும்). இந்தத் தன்னுணர்தலின் ஒரு முக்கிய பகுதியாக எனக்குப்படுவது self acceptance. இதுவரை என்னென்ன செய்தோம் என்பதை தயவுதாட்சண்யமின்றி ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.சுயபரிசோதனையின் முதற்படி. இந்த self acceptanceக்கு பாஸிடிவ் - நெகடிவ் என்று இரண்டு பக்கங்கள் உண்டு தானே. அந்த பாஸிடிவ் பக்கத்திற்கான ஒரு சிறந்த tributeடாகத்தான் இந்தப் பாடல் எனக்கு எப்பொழுதுமே தோன்றும். பெரும்பாலும் பிரபலங்களின், மிகக் குறிப்பாக சினிமா ஆட்களின் அருமைபெருமைகளை மட்டுமே மாய்ந்து மாய்ந்து பேசும் நாம், நம்முடைய - நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பாசிடிவ் அம்சங்களை பற்றி என்ன மதிப்பீடு வைத்திருக்கிறோம் ? (என்னைக் கேட்டால் எல்லாரும் ஒருவகையில் பிரமுகர்கள் தான்). இந்தப் பாடத்தை என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். செய்யும் வேலையை லயிப்புடனும் நேர்த்தியுடனும் செய்யும், "எளிய" மனிதர்களாக நாம் கருதும், எங்கள் வீட்டின் அருகே இருந்த பலரையும் சிலாகித்து அவர் பேசிய கணங்களில் இருந்து தெரிந்துகொண்ட பாடமது. தனக்கான வாழ்வை வாழத்தான் எல்லோருக்கும் ஆசை உண்டு. ஆனால் சூழ்நிலைகள், பொறுப்புகள் பலரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. ஏகப்பட்ட அசௌகரியங்களுக்கும் அனுசரிப்புகளுக்கும் விரும்பியோ விரும்பாமலோ தங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யாராக இருந்தாலும் "என்ன செஞ்சுகிட்டு இருக்கோம் ?" என்ற கேள்வி ஒரு சமயத்தில் எழாமல் போகாது. ஆனால் பலருக்கும் இந்தக் கேள்வி அன்றிரவோடு முடிந்துவிடும். அதான் சிக்கல். ஒருவித தீவிரத்துடன் இக்கேள்வியை அணுகினால்......நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ள அது உதவும் என்று நம்புகிறேன். மேற்கொண்டு இதனைப் பற்றியே ஜல்லி அடித்துக் கொண்டிருதேன் என்றால் "வாழ்வை வாழ்வது எப்படி ?" ரீதியிலான மேலாண்மை புத்தகத்தை படிக்கும் நினைப்பு வந்துவிடக்கூடும் என்பதால், நிறுத்திக் கொள்கிறேன். பேசிப்பேசி இவ்விஷயத்தின் வீரியத்தைக் குறைக்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருவோம்.

ஃப்ரான்க் சினட்ரா

பாடலில் வருவது போல, எனக்குத் தெரிந்தவரை நான் மிகப் பிடிவாதக்காரனாகவே இருந்திருக்கிறேன். என் அப்பா அடிக்கடி என்னைத் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தைகள், Impractical ideologist & Utopian (கா-த-கு-பொ-கு). ரிலையன்ஸ் கம்பனியின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், என் துறை சார்ந்த பெரிய வேலை வந்தபோது அப்ளை செய்யக்கூட மாட்டேன் என்று சண்டை பிடித்தேன். என்ஜினியரிங் சேர தாராளமான மதிப்பெண்கள் இருந்தும், ஃப்சிகிஸ் தான் சேருவேன் என்று அடம்பிடித்து சேர்ந்தேன். என் பெற்றோர் சொல்லிப் பார்த்துவிட்டு என் இஷ்டத்திற்கே விட்டு விட்டனர். இன்னும் சில விஷயங்களை சொன்னால்....படிப்பவர்களுக்கு தலைசுத்தல் எல்லாம் நேர வாய்ப்புண்டு. சமீபத்தில் கூட வேலையில்லாமல் பல மாதங்கள் இருக்க நேரிட்ட போதும், பிடித்தமாதிரி வேலை வந்தாலொழிய சேர்வதில்லை என்று முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருந்து, பல அறிவுரைகளை கேட்க வேண்டிவந்தது தனிக் கதை. இதுபோன்ற பல பிடிவாதங்களை அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். ஆனால் அதற்கான பின்விளைவுகளை (பின்விளைவு என்பதே நாம் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துதானே), குறிப்பாக என் அப்பாவின் மருத்துவ செலவினங்களின் போது நினைத்து கொஞ்சம் வருந்தியது உண்டு. ஆனால் அது கொஞ்சநேரத்திற்கு மட்டுமே. இதுவரையிலான என் வாழ்கையின் பல முக்கிய முடிவுகளை நானே எடுத்தேன் என்பதில் எனக்கொரு திருப்தி உண்டு. "தீதும் நன்றும் பிறர்தரா வாரா" என்பதில் எனக்கு அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு. இதுகுறித்து போனவாரம் கூட ராஜேஷும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் (எந்த விஷயத்திற்கு என்று நினைவில்லை. ராஜேஷ் முன்பெல்லாம் அவர் பதிவுகளில் இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த விஷயங்களை எழுதி வந்தார். இப்பொழுது வேறு கட்டத்தில் இருப்பதால், அதுபோன்ற பழக்கத்தை வழக்கொழித்துவிட்டார்/நேரமில்லை. சுயபரிசோதனை பற்றி அன்னாரிடம் பல விஷயங்கள் உண்டு). எவ்வளவு தீர்க்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நமக்கான வாழ்வை யாராலும் ஏற்படுத்தித் தரவோ/கெடுக்கவோ முடியாது. நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதத் தவறுகளும் அவர்களுது விருப்பு வெறுப்புகளுமே காரணமாக இருக்குமேயன்றி, ஒரு வெளிப்புற சக்தி இதற்கெல்லாம் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக நம்பும் கட்சி நான்(ஒரு ஃப்சிகிஸ் மாணவனுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டால் தான் ஆச்சர்யம்).பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்தப் பத்தியும்,இதற்கு முந்தைய பத்தியும் கொஞ்சம் ரொமான்டசைஸ் செய்யப்பட்டதாக தோன்றாலும். ஆனால் கொஞ்சம் பொறுமையாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.நான் சொல்ல நினைப்பது புரியும். இந்தப் பாடலை பல வருடங்களுக்கு முன் எப்போது கேட்டேனோ, அன்றிலிருந்து மனதிற்கு மிகநெருக்கமான ஒரு பாடலாக உள்ளது. மேலே வார்த்தைகளால் சொன்ன/சொல்ல முடியாத பல விஷயங்களை மிகத்தெளிவாக பூடகமின்றி இப்பாடலில் உணரலாம். இப்பொழுதுதான் இந்தப் பாடலை நீங்கள் முதன்முதலில் கேட்பதாக இருந்தால், நிச்சயம் மில்லிமீட்டர் அளவிற்காவது உங்களை அசைத்துப் பார்க்கும்.பல்வேறு பொறுப்புகள்,நிர்பந்தங்கள்,சூழ்நிலைகளில் உழன்று கொண்டிருக்கும் பலரும் தாங்களே கவனிக்க மறந்த தங்களது இன்னொரு பக்கத்தை இப்பாடல் நினைவுக்கு கொண்டுவரலாம்.


சினட்ராவின் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு ஒப்பானது. பள்ளி காலம் முதல் (ஜெயிலுக்கு போனதெல்லாம் உண்டு) பிந்தைய வாழ்க்கைவரை ஏகப்பட்ட பிரச்சனைகள், மனஅழுத்தங்களுடன் அல்லாடியவர். திருமண வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை(Ava Gardnerரை இவர் சந்தித்தது ஒரு சுவாரஸ்யமான சிறுகதைக்கு ஒப்பானது). புரிந்துகொள்ள இயலாத உணர்ச்சிகள் நிரம்பிய மனிதராகவே நண்பர்களும் உறவினர்களும் அவரைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு obsessive compulsiveவான ஒரு ஆள். பல பெண்களுடன், சிக்கலான உறவுநிலையில் இருந்தாலும் (I'm supposed to have a Ph.D. on the subject of women. But the truth is I've flunked more often than not. I'm very fond of women; I admire them. But, like all men, I don't understand them) "Fly me to the moon" போன்ற அற்புதமான காதல் பாடல்களை உணர்ச்சித் ததும்ப பாடியுள்ளார். இன்னொரு குறிப்பிடத்தக்க  விஷயம், மிகசொற்ப பாடல்களையே அவர் எழுதி பாடியுள்ளார்/சேர்ந்து எழுதியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் அவர் பாடகர் என்ற அளவிலயே நின்று விட்டார். ஆனாலும் தனது அடர்ந்த கனமான குரலில் அவர் பாடும்பொழுது, என்னமோ அவரே அனைத்து பாடல்களையும் எழுதியது போன்றதொரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

ஃப்ரான்க் சினட்ரா - எனது விருப்பத்திற்குரிய ஜாஸ்/ஸ்விங் குரல்களில் ஒன்று. பாடும் போது மிகமிக சர்வசாதாரணமாகப் பாடுவது போலத் தோன்றும். ஆனால் பாடலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள்........வாய்பேயில்லை. My way பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது பாராவில் "Flash flood" மாதிரி ஹைபிட்சில் பாடிகொண்டே சட்டென்று கீழிறங்கும். பாடும் முறையின் மீதி  இதுபோன்றதொரு அளப்பரிய ஆதிக்கம் அவருக்கு இருந்தது. அந்தக்குரலை இறுதிவரை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். பாடும் முறையைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் இதற்கென அவர் பிரத்தியேக பயிற்சி எதுவும் எடுக்காவிடினும், தாளம் - பிட்சிங் போன்றவற்றில் அளப்பரிய உள்ளுணர்வு அவருக்கு இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். Mic effects எனப்படும் மைக்கின் உதவியுடன் குரலில் ஜாலங்கள் காட்டுவதில் அவர் வித்தகர். இந்த ஜாலத்தை அவர் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, தொடர்ந்து அறுபது ஆண்டுகளாகச் செய்து வந்தார் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பே ஏற்படுகிறது.


சினட்ராவிற்கு நடிகர் என்றொரு முகமும் உண்டு. The Manchurian Canditate (டென்சல் வாஷிங்டன் நடிப்பில் இதனை ரீமேக்கினார்கள்), From here to eternity போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இதைவிட முக்கியாமான மற்றொரு விஷயம் "Rat Packs" என்ற குழுவில் இவர் + Dean Martin + Sammy Davis Jr சேர்ந்து அடித்த கூத்துகள். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பதுதான் இவர்களது வேலை. கென்னடியும் (இவரின் நெருங்கிய நண்பர்) அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவது உண்டு. Reservoir dogs முதல் Oceans 11 வரை இவர்களது தாக்கம் உண்டு.

m-ratpack2

இப்படியான சினட்ராவிற்கு இன்னொரு இருண்ட பக்கமும் உண்டு. அது மாஃபியாயுடனான தொடர்பு. J.Edgar, என்று சில வருடங்கள் முன்பு ஈஸ்ட்வுட் இயக்கத்தில் டி காப்ரியோ நடிப்பில் ஒரு படம் வெளிவந்ததே ஞாபகம் உள்ளதா....அமெரிக்க FBIயின் முதல் இயக்குனர்...அந்த எட்கர், சினட்ராவிற்கும் மாஃபியாவிற்குமான தொடர்பு குறித்து மிகவிரிவாக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியுள்ளார் (இங்கே). காட்ஃபாதர் படம்......அனைவரும் பார்த்திருப்போம். அதில் ஜானி ஃபான்டைன் என்றொரு பாடகர் கதாபாத்திரம் வருமே...இந்தக் காட்சி ஞாபகம் உள்ளதா .....அந்தக் கதாபாத்திரத்தின் அசல் - சினட்ராதான் என்று சொல்கிறார்கள். அப்படித்தான் அதலபாதாளத்தில் தனது மார்கெட் இருந்த பொழுது, From here to eternity படத்தின் வாய்ப்பைப் பெற்றதாக சொல்கின்றனர் (க்ளிக்கி படிக்கலாம்). என்னதான் முரண்பாடுகளின் மூட்டையாக சினட்ரா திகழ்ந்தாலும் அவரைப் பற்றி அவரே சொன்னதுதான் அவரின் மொத்த வாழ்கையின் பிரதிபலிப்பாக உள்ளது.

Whatever else has been said about me personally is unimportant. When I sing, I believe...I'm honest

"My way" பாடலுக்கு பல சுவாரசியமான பின்னணித் தகவல்கள் உண்டு. பால் ஆங்கா என்பவர், ஃப்ரான்சில் தான் கேட்ட கணவன் - மனைவிக்கு இடையான உறவைப் பற்றி விவரிக்கும் பாடலை மாற்றி எழுதியதுதான் "My Way". ஆரம்பத்தில் இந்தப் பாடலின் மீதி சினட்ராவிற்கு பெரியளவில் பிடிப்பொன்றும் இல்லை. பாப் தன்மை உள்ள பாடல் என்றே குறைபட்டுக் கொண்டார். இன்றளவும் உலகில் அதிகமாக Cover Versionக்கு உட்படுத்தப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. எல்விஸ் முதற்கொண்டு நினா சிமோன் வரை நூற்றுக்கணக்கான பேர் இதனை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். இதில் எனக்குப் பிடித்த ஐந்து கவர் வெர்ஷன்கள் - Elvis, Aretha Franklin, Nina Simone, Sid Vicious.....ஐந்தாவது ?? :) சஸ்பென்ஸ்.

Frank Sinatra for dummies: (Right click & download):

சினட்ராவை கேட்டிராதவர்கள், இரவு நேரத்தில் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மறக்க இயலாத ஒரு அனுபவமாக இருக்கும் (320kbpsசா தேடிபுடிச்சு லிங்க் குடுத்திருக்கேனாக்கும்)


பி கு:

என் அப்பா, என்னை utopian என்று சொல்வார் என்று மேல சொல்லி இருந்தேனே. அதுபற்றி சட்டென ஞாபகம் வந்த விஷயம் ஒன்று. இந்த வார்த்தையை முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் தாமஸ் மூர் என்ற ஆள் தான் புழக்கத்தில் விட்டது...தனது Utopia என்ற நாவலின் மூலமாக. சுருங்கச் சொல்வதென்றால், பாரதி படத்தில் பாரதியின் தந்தை சொல்வதாக ஒரு வசனம் வரும் "காலத்தை மீறி கனவு காணுதல்"....அதைபோல நிகழ்காலத்தை மீறி தனக்கென ஒரு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு சமூகம் உண்டென்று நம்பும் ஆட்களுக்கு பெயர் தான் utopians. Dystopianனுக்கும் (George Orwell's 1984)  - Utopianனுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. Dystopian எதிர்மறையான எண்ணங்களை பெருமளவில் முன்னிறுத்தும். Utopian, அதற்கு நேரெதிர். இந்த Utopia நாவலை எழுதிய தாமஸ் மூர் பற்றி - A man for all seasons என்றொரு படம் உண்டு. முக்கியமான படம். இந்தப் படம் எனக்குக் கிடைத்தது இன்னொரு சுவாரசியமான கதை. ஆனால் படத்தை கொஞ்சம் பார்த்துவிட்டு அப்படியே விட்டுவிடேன். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்லவேளையாக இந்தப் பதிவின் போது ஞாபகம் வந்தது.