A cinematographer is a visual psychiatrist......moving the audience from here to there, there to here...through a movie..... making them think the way you want them to think.....painting pictures in the dark

- Gordon Willis


1991. தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, படத்திற்காகவும் படத்தைச் சுற்றி நிகழ்ந்த விஷயங்களுக்காகவும் இன்றுவரை பேசப்படும் படம் வெளியானது. படத்தின் கதாநாயகன் 45 டிகிரி கோணத்தில் தலையை திருப்பி வைத்திருக்க, backlightடாக சூரிய ஒளி அவரது முடிகளில் பட்டுத்தெறிப்பது போன்றதொரு ஸ்டில். இன்றுவரை அந்நடிகரின் மேற்சொன்ன புகைப்படமே, சலூன் கடைகளில் ஆரம்பித்து பல இடங்களின் வாசல்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மதுரையில் அதிகளவில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன் (அது என்ன படம் என்று உங்களால் ஊகிக்க முடிந்தால்.........பின்னூட்டத்தில் சொல்லவும்). என் அப்பாவிற்கு எப்பொழுதுமே புகைபடங்கள் மீது அலாதி பிரியம் (நல்ல நிலைக்கு உயர்ந்தபிறகு பெரிய கேமரா ஒன்றை அவருக்கு வாங்கித்தர வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். தற்போது நான் எடுக்கும் - திராபையான புகைப்படங்கள்தான் என்றாலும் கூட, ஒன்றை கூட அவரிடம் காண்பிக்க முடியாது என்ற நினைப்பு ஓவ்வோருமுறை எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை. இதைபற்றி பேச ஆரம்பித்தல் புலம்பகளாகவே இந்தப்பதிவு தொடரும். இனிமேலாவது எடுத்தவுடன் விஷயத்திற்குள் வரப்பழக வேண்டும்). படத்தின் அதே ஸ்டில் போல், என்னை(ஐந்து வயது) புகைப்படம் எடுக்க விரும்பினார். முதல்நாள், சாயங்காலவேளையில் புகைப்படக்காரரின் வீட்டிற்கே சென்றோம். ஆனால் டல்லான லைட்டிங்கே இருந்தது. என்னப்பாவிற்கு அது திருப்தியாக இல்லாதபடியால் அடுத்தநாள் கொஞ்சம் சீக்கிரம் போவது என்று முடிவு செய்து, அதன்படி சென்றாகியும்விட்டது. இந்தமுறை வெகுதிருப்தியாகவே அனைத்தும் அமைய, எனது வரலாற்றில் இடம்பெறப் போகும் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அந்தப் புகைப்படத்தை பார்த்தபொழுது - அந்த லைட்டிங், கலரிங், கோணம், மெல்லிய பொன்னிறமுடிகள் என்று அந்தப்புகைப்படத்தை பார்த்தபொழுது அது கொடுத்த தாக்கத்தை/மகிழ்ச்சியை என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாது.சில கணங்கள் அப்படியே நினைவின் அடுக்குகளில் தங்கிவிடும். அதுபோன்றதொரு அனுபவம் அது. அதே அளவிற்கான தாக்கத்தை எனக்குத்தந்த திரைப்படம்: ரோஜா. வேறு எதற்காகவும் அல்ல. இசைக்காக கூட அல்ல. முழுக்க முழுக்க அதன் ஒளிப்பதிவிற்காக மட்டுமே.

பின் 70கள், 80களின் காலங்களில் இளையராஜா, பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து போன்றோரது பாதிப்பில்லாத திரைப்பட ஆர்வலர்களை தமிழ்நாட்டில் பார்ப்பது கடினம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேயளவிற்கு, பாலு மகேந்திரா, அசோக் குமார், பி.சி.ஸ்ரீராம் என்று ஒளிப்பதிவாளர்களுகென்றே ஒரு தனிரசிகர் பட்டாளம் உருவானது இந்த காலகட்டத்தில் தான் (இன்றும் கூட இவர்களுது பெயர் திரையில் வரும்போது கைதட்டும் கூட்டம் ஒன்று உண்டு). அப்பட்டாளத்தின் முடிசூடா மன்னன், பாலு மகேந்திரா தான். அவரின் தொப்பிக்கெல்லாம் கூட ரசிகர்கள் இருந்தார்கள்(வேறு யாரை எனக்குத் தெரியும்..........என் அப்பாதான்). பார்ட்லே, கே.வி.ப்ரசாத் போன்ற ஒளிப்பதிவாளர்கள் குறித்தெல்லாம் என் அப்பா சொல்லிக் கேட்டதுண்டு. தாதா மிராஸி இயக்கத்தில் வெளிவந்த புதிய பறவையின் ஒளிப்பதிவு (கே.வி.பிரசாத்) குறித்து, அவரது சிறுவயதில் திரையில் ரசித்த காட்சிகளை சிலாகித்து கூறுவார் (பத்து வயதிற்குள் இருக்கும் சிறுவனிடம் தாதா மிராஸி, கே.வி.பிரசாத் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா என்பது சந்தேகமே. தமிழ் சினிமாவைப் பற்றி அதிகம் நான் பேசுவதில்லையே தவிர, தமிழ் சினிமாபற்றியும் அதன் ஆளுமைகள் பற்றியும் மிகஅதிகமாகவே எனக்குத் தெரியும் என்பதை சற்றே தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன்). பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் ஆரம்பிக்கும் முன் சிவாஜி சிகரெட் புகையை ஊதும் காட்சி ஆகட்டும், தண்டவாளத்தை ஒட்டி நடக்கும் காட்சிகள் ஆகட்டும், எங்கே நிம்மதி பாட்டில் வரும் நுவார் வகை ஒளிப்பதிவாகட்டும் - பழைய தமிழ் சினிமாவின் மிகத்தரமான ஒளிப்பதிவுகளில் ஒன்று என்று தாராளமாக புதிய பறவையைச் சொல்லலாம். ஸ்ரீதர் படங்களிலும் இதுபோன்றதொரு தரத்தைக் காணாலாம். குறிப்பாக, கேமரா கோணங்களை கொஞ்சம் புதுமையாக வைப்பதில் ஸ்ரீதர் வல்லவர். அசோக்குமார் (நெஞ்சத்தைக் கிள்ளாதே), பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் என்று தொடர்ந்து இயக்குனர்கள் + ஒளிப்பதிவார்களை கவனிக்க சொல்லிக் கொடுத்தது என் அப்பாதான் (எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் எந்த நடிகருக்கும் பெரிய ரசிகனாக நான் இருந்ததில்லை. ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை).

இப்படியாக போய்க்கொண்டிருக்க, முகத்தில் அறைந்தது போல் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது சந்தோஷ் சிவன் தான்(ரோஜா). குறிப்பாக இந்தக் காட்சி. பக்கத்தில் உக்கார்ந்து கொண்டு என் அப்பா ரன்னிங் கமென்டரி கொடுத்துக் கொண்டே இருந்தது மறக்கவே மறக்காது. ஆனால், மீண்டும் இந்தப் படங்களை/மணிரத்னத்தின் பல படங்களை இப்பொழுது பார்க்கும் பொழுது - ஒளிப்பதிவு பல இடங்களில் காட்சியின் அழகியலுக்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியிலான ஒளிப்பதிவு. Style over substance. இருந்தாலும், சந்தோஷ் சிவன் + மணிரத்னம் கூட்டணியில் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பதிவுகளில் ஒன்றாக தனிப்பட்ட முறையில் நான் கருதும் படம்: இருவர். படத்தை எவ்வாறு கொண்டுசொல்வதென்ற மணிரத்னத்தினத்தின் குழப்பத்தைப்(அவரது பல படங்கள் மாதிரியே) படம் நெடுகிலும் காணலாம். பொலிடிகல் ட்ராமாவாக எடுப்பதா, புனைவாக்குவாதா, அப்பட்டமாக அப்படியே நிகழ்வுகளை காண்பிப்பதா என்று படம் சுற்றிச்சுற்றிச் செல்லும். எனது பள்ளி நாட்களில் இந்தப் படத்தை கருணாநிதி தியேட்டரில் பார்த்தார் என்ற போட்டோவுடன் கூடிய செய்தி முதல் பக்கத்தில் வந்தது நன்றாக நினைவிருக்கிறது.

இருவரை ஏன் நான் முக்கியமானதாக கருதுகிறேன் என்றால், சினிமா: விஷ்வல் மீடியம் என்ற அடிப்படையின் அத்தனை அம்சங்களையும் படத்தில் காணலாம். ஹாலிவுட்டின் வழமையான ஒளிப்பதிவு முறையினை தவிர்த்து, Deep Focus Photography அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்தியப் படம் இதுவாகத்தான் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். மெல்ல மெல்ல எம்ஜியார், மன்னிக்க - ஆனந்தன் அதிகாரத்தை நோக்கி நகர்வது, பிரகாஷ்ராஜின் மனப்போராட்டங்கள், இருவருக்குமான நட்பு, ஈகோ என்று எல்லாவற்றையும் ஒரு தேர்ந்தமொழிபெயர்ப்பாளன் போல் ஒளிப்பதிவு பார்வையாளரிடம் கொண்டு சேர்க்கும் (பல இடங்களில் பின்னணி இசையை அதிகமாக ஒலிப்பதைக் கேட்கலாம். அதற்கு காரணம், நிறைய வசனங்கள் சென்சார் செய்யப்பட்டதே). குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மோகன்லால் என்ற ராட்சஷனின் நடிப்பு. பழைய ஆனந்தாக இருக்கும் பொழுது அவரது உடல்மொழியும், அதிகாரம் ஏறஏற மாறும் அவரது உடல் மொழியும் - அப்படியே எம்ஜியாரை உள்வாங்கியது போலவே இருக்கும். எம்ஜியார்ரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு அவரின் விஷேஷ உடல்மொழிகள் தெரிந்திருக்கும். படத்தில் அப்படியே மோகன்லாலிடம் அதனைப் பார்க்கலாம். படத்தில் எனக்கு மிகப் பிடித்த காட்சிகளில் இவை இரண்டும் அடங்கும். கதாபாத்திரங்களின் மனநிலையை மிகத் துல்லியமாக நமக்கு புரியவைத்து விடும். எனினும், இரண்டாவது காட்சியில் "ஏன் லேட்டா போறீங்கனு தெரியும்" போன்ற வசனங்களை தவிர்த்திருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும்.தவறாமல் படிக்கவும்: Iruvar: a doomed masterpiece. முடிந்தால் ஒளிப்பதிவு தொடர்பான பிற பதிவுகளையும் சேர்த்தே

இயக்குனராக பாலு மகேந்திராவின் அநேக படங்கள் - சந்தியா ராகம், வீடு என்று ஒருசில படங்கள் நீங்கலாக - மீது எனக்கு ஈடுபாடில்லை . பல வெளிநாட்டு படங்களை அப்படியே மொழிமாற்றம் செய்து எடுப்பார். ஏன் இதைச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஒளிப்பதிவில் அவருக்கு நிகர் அவரே என்பதில் எனக்கு மட்டுமல்ல - பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன். கர்த்தருக்கு நன்றி: அவர் ஹாலிவுட் பாணியை சட்டை செய்யாமல், ஐரோப்பிய பாணியிலான ஒளிப்பதிவிலேயே உறுதியாக நின்றதற்கு. ஒளிப்பதிவை கதைசொல்லும் ஒரு முறையாக மாற்றியதில் அவருக்கு பெரும்பங்குண்டு(சந்தியா ராகம், வீடு இரண்டிலும் இதனைக் கண்கூடாக பார்க்கலாம்). ஆனால், கிட்டதட்ட அந்தப் பழக்கம் இன்று குற்றுயிரும் கொலையுயிருமாக கிடக்கிறது. ஒருசில படங்களில் இதனை முயற்சித்த மணிரத்னம் கூட கடல் படத்தில் பெருமளவு இதனைவிட்டு விலகிச் சென்றிருப்பதைக் காணலாம். பஸ்ஸில் முட்டாய் விற்பவர்கள் போல், படம் முழுக்க வசனங்களே வளவளவென்று கடல் படத்தில் வழிந்தோடியது. பாலு மகேந்திராவிடம் மிகப்பிடித்ததே, உள்ளதை உள்ளபடியே காண்பிப்பது. அவர் படத்தில் இயற்கையின் மீது கேமராவின் exploitation இருக்காது. மாறாக, exploration மட்டுமே இருக்கும். ஒளியை அவர் உள்வாங்கி வெளிப்படுத்தும் விதம் மிகஅலாதியானது. சுஜாதா கூட எழுதியிருப்பார், ஒரு தெர்மகோல் & கேமராவை வைத்துக் கொண்டு ஒரு மேஜிக்கே செய்கிறார் என்று. அதிகாலை ஒளி - pure magic. அதனை அப்படியே பிரதிபலிப்பதென்பது என்பது மிகமிக சிரமமான காரியம். வெளிநாடுகளில் சூரியனது கோணம் வேறுமாதிரி இருக்கும். அதனால் அங்கு செய்யப்படும் ஒளிப்பதிவு இங்கு எடுபடாது. ஆனால் சூரியன் நெட்டுகுத்தலாக ஒளியை உமிழும் நமது நாட்டில் பாலு மகேந்திரா செய்த வேலைகள் அசாத்தியமானது. ஒரேயொரு ஃபரேம் போதுமானது, அவரின் ஒளிப்பதிவு என்று சொல்ல. ஒருசில மாதங்கள் முன்பு, எந்த சேனல் என்று ஞாபகம் இல்லை - சேனலை மாற்றிக் கொண்டிருக்கும் போது லக்ஷ்மி (பழைய நடிகை) காட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறார். அதிகாலை என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. அனைத்திற்கும் மேலாக லைட்டிங் + அதனை படமாக்கிய விதம், அட பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு போலயே என்று பார்த்த சில வினாடிக்குள் மூளை அனிச்சையாக முடிவு செய்துவிட்டது. ஆனால் அதனை எப்படி உறுதிப்படுத்த என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச நேரத்தில் படத்தில் கமல் வந்தார். ஆதிவாசி வேடம். இதனை வைத்து இணையத்தில் தேடிப் பார்த்தால், படத்தின் பெயர்: பொன்னி. நினைத்தபடியே ஒளிப்பதிவு பாலு மகேந்திரா தான். ஜூலி கணபதியின், "எனக்குப் பிடித்த பாடல்". ம்யூட் செய்துவிட்டு அப்பாடலைப் பார்த்தால் கூட, மழையின் ஸ்பரிசத்தை உணர முடியும். அடுத்து, பி.சி.ஸ்ரீராம். டெக்னிக்கலாக தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது, குருதிப்புனல் வெளிவந்தபோது, டைட்டிலில் பி.சி.ஸ்ரீராம் என்ற பெயர்வர, விசில் சத்தம் காதைப் பிளந்தது. இருளின், நிழல்களின் காதலர். இதனாலயே, மணிரத்னம் படம் என்றாலே இருட்டு என்ற பெயர் வந்தது.
balu
எதற்கு மூன்று பக்கத்திற்கு தலைப்பிற்கு தொடர்பே இல்லாதது போன்ற விஷயங்கள் என்ற யோசனை இந்நேரம் தோன்றியிருக்குமே. நிற்க: மேல நான் சிலாகித்து சொன்ன புகைப்படம்,படங்கள் அனைத்திற்குமான பொதுவான விஷயம் - எல்லாமே ஃப்லிமில் எடுக்கபட்டவைகள். இந்த விஷயத்தில் நோஸ்டால்ஜியா கணிசமான அளவிற்கு இருந்தாலும், அதனை மீறி பல படங்களைப் பார்த்த அனுபவத்திலேயே இதனை அணுக முயல்கிறேன். ஃப்லிம் கேமரா, அடிப்படை இயற்பியலின் எளிமையான விதிகளின் கீழ் இயங்குவது. பொருட்களின் மேல் பட்டுத்தெறிக்கும் போட்டான் பொட்டலங்களை கேமராவின் உள்ளே இருக்கும் சில்வர் பூச்சு கொண்ட ஃப்லிம்கள் சிறைபிடிக்கும் ( இந்த ஃப்லிம் துண்டுகளை வைத்து நம்மில் பலபேர் படம் காட்டியிருப்போம்). இதில் உட்புகும் போட்டான் பொட்டலங்களின்(ஒளியின்) அளவைக் கூட்டி குறைத்து, வடிகட்டி, நெறிபடுத்தி, ஏகப்பட வேலைகள் செய்து ஒரு இயக்குனரின் கற்பனையை திரையில் உலாவவிடுபவர்களே ஒளிப்பதிவாளர்கள். மேலே கோர்டன் வில்லிஸ் சொன்னபடி, visual psychiatrists. தர்கொவ்ஸ்கி போன்ற ஆட்கள் ஒளிப்பதிவை தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி "கலை" (அவர் சொன்னதன் அர்த்தம், ஸ்டீரியோடைப்பிக்காக உபயோகப்படுத்தப்படும் 'கலை' என்ற அர்த்தத்தில் அல்ல) என்ற நிலையிலையே இதனை வைத்துப் பார்த்தனர்.

சினிமா தொடங்கிய காலம்தொட்டு, 80கள் வரை தொடர்ந்து ஒளிப்பதிவிற்கென்று ஃப்லிம் சுருள்களே பயன்படுத்தப்பட்டதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் எப்பொழுது என்பதுகளின் மத்தியில் சோனி கேமரா ரெக்காடர்களை(Camcorder) அறிமுகப்படுத்தியதோ அன்றுமுதல் ஃப்லிம் தொழில்நுட்பம் சினிமா மட்டுமின்றி, புகைப்படத் துறையிலும் கொஞ்சகொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியது. டிஜிட்டல் கேமராவின் வரவிற்குபின் - 2000ல் இருந்து ஃப்லிம் தயாரிப்பும் உபயோகப்படுத்துதலும் அதளபாதாளத்திற்கு சென்றது. புகைப்படத் துறையில் ஏறக்குறைய ஃப்லிம்களின் உபயோகம் வழக்கொழிந்துவிட்டது என்றே சொல்லலாம். சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் கேமராவில் படம்பிடிக்கப்படும் படங்களின் பட்ஜெட் ஃப்லிமிற்கு ஆகும் செலவைவிடக் கம்மி என்பதை உணர்ந்தனர் (ஆனால் இந்தப் விஷயத்தில் பல குழப்பங்கள் உண்டு. கிட்டத்தட்ட இரண்டும், படம் முடிந்து பார்க்கும்பொழுது Archive போன்ற விஷயங்கள் எல்லாம் சேர்த்து - ஒரேயளவிற்கான பணம் தான் செலவாகிறது என்கிறார்கள்). படங்களை டிஜிட்டல் முறையில் எடுத்தால் மட்டும் போதுமா.......அதை எவ்வாறு திரையிடுவது ? இங்குதான் டிஜிட்டல் ப்ரோஜெக்சன் என்ற முறை உள்ளுக்குள் வருகிறது. இதைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதுவதைவிட, கருந்தேள் எழுதியுள்ள இந்தப் பதிவைப் படியுங்கள். இதனை படிக்காமல் மேற்கொண்டு தொடர்ந்தால் சிலவிஷயங்கள் குழப்பமாகத் தோன்றலாம்.
இந்தக் கட்டுரையின் முக்கிய சாராம்சம், டிஜிட்டல் ப்ரோஜெக்சன் பற்றியது. டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு முந்தைய நிலைகளாக சில விஷயங்கள் உண்டு.
  •  ஃப்லிமில் ஒரு படம் எடுக்கப்பட்டு, டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தகுந்தமாதிரி மாற்றப்பட்டு -> டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறையில் திரையில் காட்டப்படும். நாம் கூட நம்மூர்களில் UFO Systems என்றெல்லாம் பார்த்திருப்போமே....அந்தமுறை.
  • டிஜிட்டல் கேமாராவில் ஒரு படம் எடுக்கப்பட்டு -> டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறையில் திரையில் காட்டப்படும்.

இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நவீன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சினிவை, டிஜிட்டல் ப்ரோஜெக்சன் உதவியுடன் திரையில் பார்ப்பதற்கும், ஃப்லிமில் எடுக்கப்ட்ட ஒரு சினிமாவை டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தக்கபடிமாற்றி திரையில் பார்ப்பதற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டு. நோலன், ஸ்பீல்பெர்க், க்வென்டின் போன்ற ஆட்கள் இரண்டாவது முறையின் பிரதான எதிரிகள். சமீபத்தில் க்வென்டின் - ஃப்லிமில்தான் படங்கள் எடுப்பேன்...இல்லாவிட்டால் படங்களில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சொன்னதாக பல இடங்களில் படித்திருப்போம். அதுமிகத் தவறாக பலரால் புரிந்துகொள்ளப்பட்ட செய்தி. அவர் சொன்னது, ஃப்லிமில் எடுத்தபடங்களை டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தக்கபடி மாற்றுவது சகிக்கவில்லை. தரம் குறைகிறது. பழைய அனலாக் முறையிலான ப்ரோஜெக்சனில் தான் தனது படங்களைக் காட்ட விருப்பம். ஆனால் தற்போதைய ஹாலிவுட்டில் அதற்கான சூழ்நிலை குறைந்துகொண்டே வருகிறது என்பதே அவர் சொன்னதின் சாராம்சம். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.

கன்வர்ட் செய்யப்படும்போது தரம் சற்றே அடிபடுவதை டிஜிட்டல் ப்ரோஜெக்சனின் ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் ப்ரோஜெக்சனில், 2K- 4K resolutionகளை (போனமாதம் புதிதாக 8K அறிவிக்கப்பட்டுள்ளது) மிக எளிதாக ஒரு 35/70mm கடந்துவிடும்......ஆனால் முக்கிய விஷயம் (அ) விடயம் ஃப்லிம் மிகநல்ல முறையில் இருக்க வேண்டும். பழைய, மங்கிய ஃப்லிம் என்றால் ஏகத்துக்கும் பிரச்சனைகள் உண்டு. இந்த டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறைப்படி மாற்றப்பட்டபோது ஏற்பட்ட தரமாற்றத்தை நானே சிலமுறை திரையில் பார்த்திருக்கிறேன். கண்களில் விளக்கெண்ணெயய் விட்டதுபோல கொஞ்ச மசமச என்று காட்சிகள் தெரியும். பக்காவாக மாற்றம் செய்யப்படும்போது தரமாற்றம் கொஞ்சம் குறைவாகவே ஏற்படும். தவிர, 4K என்பது - சற்று யோசித்துப் பார்த்தால், இப்போதெல்லாம் 1080Pகளில் டிவிக்களிலே படம் பார்க்கிறோம். அதனைவிட நாலு மடங்கு அதிகத்திறன் தான், ப்லிமில் எடுத்து டிஜிட்டல் ப்ரோஜெக்சனில் மாற்றப்படும் படங்களில் கிடைக்கும். இணையத்தில் பல இடங்களில் இதுகுறித்து படித்த பொழுது, சற்று அருகே உட்காந்திருப்பவர்களுக்கு பிக்ஸல்கள் கூட துல்லியமாக தெரிகிறது என்ற குற்றச்சாட்டை காணமுடிகிறது. ஆனால் நமது நாட்டில் அவ்வளவு பக்கத்தில், சின்ன திரையரங்குகள் கம்மி என்பதால் இந்த வித்தியாசம் நமக்குப் புலப்படுவதில்லை. இதைதான் டாரண்டினோ (I can't stand digital filmmaking, it's TV in public), பால் தாமஸ் ஆன்டர்சன், நோலன் போன்ற பல ஆட்கள் சொல்லிவருவது.

----------------------------------------------------------------------------------

இங்கு, IMAX(Image MAXimum) பற்றி சொல்லியாக வேண்டும். சென்னை, கோவையில் கூட imax இருப்பது உங்களுக்கு தெரியுமா ? சந்தேகம் இருப்பின், IMAXன் இந்தியத் தளத்தைக் காணவும். ஆனால் அசல் ஐமேக்ஸ் என்பது 76அடி ஸ்க்ரீன் உள்ள தியேட்டர். யோசித்துப் பாருங்கள். 76அடி. ஹைதிராபாத்தில் இருக்கும் பிரசாத் ஐமேக்ஸ் உலகின் மிகப்பெரிய 3d ஐமேக்ஸ் தியேட்டர் ஆகும். ஆனால் சென்னை -  கோவை போன்ற இடங்களில் இந்த அளவா என்று தெரியவில்லை. சமீபத்தில் உலகின் பல இடங்களில் 76 அடிக்குப் பதில், சிலபல வேலைகள் செய்து 28அடி ஸ்க்ரீனில் ஐமேக்ஸ் இதுபோல் தனது பெயரைப்போட்டு ஏமாற்றுகிறது என்ற கடும்குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. பெங்களூரில் இருக்கும் ஐமேக்ஸ் எந்த வகை என்று தெரியவில்லை. டிக்கட் விலை, 600ரூ என்று கேள்விபட்டேன். ஆனாலும் போகலாம் என்று கிளம்பி - இந்தக் குழப்பத்தால் விட்டுவிட்டேன்

[caption id="attachment_974" align="aligncenter" width="895"]ஐமேக்ஸ் Source: IMAX or LieMax[/caption]
----------------------------------------------------------------------------------

கீழே உள்ள படத்தைப் பார்த்தால், 2015ஆம் ஆண்டுகள் கிட்டத்தட்ட பழைய ப்ரோஜெக்சன் முறை மிகமிக சொற்ப அளவிலேயே இருக்கும் என்பது கண்கூடு. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கும் வெகுவேகமாக பழைய அனலாக் முறை டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறைக்கு மாற்றப்பட ஒரு படமே பிரதான காரணம் என்றால் நம்ப முடிகிறதா ? அவதார். அவதார் படத்திற்காகவே அவசரஅவசரமாக உலகெங்கும் ஏராளமான தியேட்டர்கள் டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு மாறின (மாறாவிட்டால், அடுத்தடுத்து அந்தத் தியேட்டர்களுக்கு ஹாலிவுட் படங்கள் கிடைக்காது. ஹாலிவுட்டின் வழமையான monopoly கொள்கைகளில் தலையாயது இது). ஏனென்றால் அவதார் 3Dயில் நம்மைத் திணறத் திணற மூழ்கடிப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம். அதை டிஜிட்டல் ப்ரோஜெக்சன் இல்லாமல் பார்ப்பது சாத்தியமே இல்லை. ஆச்சரியமான இன்னொரு விஷயம், ஸ்பீல்பெர்க் ஃப்லிமில் படம் எடுப்பதையே விரும்பும் ஆசாமி என்பது. நோலன், டரண்டினோ போன்ற ஆட்கள் பற்றி பலபேருக்கு தெரிந்திருக்கும் என்று நினைகிறேன். பால் தாமஸ் ஆன்டர்சனின் சமீபத்திய படமான The Master முழுக்க முழுக்க 70mmயில் எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஃப்லிம்கள் சார்பாக வாதாடிக்கொண்டிருப்பவர், ஸ்கார்சேஸி. ஆனால் அவரே முதன்முறையாக - Hugoவிற்காக - டிஜிட்டலில் எடுக்கவேண்டி வந்தது குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருந்தார்.

chart-film

இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழும். இவ்வளவு சிரமப்பட்டு ஃப்லிமில் எடுத்து டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு மாற்றுவதற்குப் பதில், நேரடியாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கலாமே. அதுதான் இப்போது வெகுவேகமாக உலகம் முழுக்க பரவி வருகிறது. எவ்வளவு தூரம் இதற்கு ஆதரவு இருக்கிறதோ, அதேஅளவுக்கு எதிர்ப்பும் உண்டு. எதிர்ப்பாளர்கள் டெக்னிகல் ரீதியாக சொல்லும் பிரதான காரணங்கள் ஒன்று, கறுப்பு நிறம் ஒருசுற்று மங்கிப் போய் க்ரே நிறமாகத் தெரிகிறது, Contrast, Depth, Texture, Shadow retaining capacity என்று பல விஷயங்களில் டிஜிட்டல் சற்று காலைவாரிவிடுகிறது என்பதாகும். அதிலும் குறிப்பாக, Dynamic Range - கறுப்பு முதல் க்ரே வரை ஏராளமான shades உள்ளது நமக்கும் தெரியுமல்லவா, அதுபோன்ற ரேன்ஜ்களை டிஜிட்டல் கேமராக்கள் சரியாக உள்வாங்காது என்ற (நிரூபிக்கப்பட்ட) குற்றச்சாட்டும் உண்டு. அனுபவரீதியாக சொல்லும் குற்றச்சாட்டுகள், பல சமயங்களில் எடுத்ததில் ஏதும் தவறிருப்பின் போஸ்ட் ப்ரோடக்சனில் பார்த்துக் கொள்ளலாம், எத்தனை டேக் வேண்டுமென்றாலும் அனுமதிக்கலாம், என்று சில விஷயங்களில் அசட்டையாக இருந்துவிட நேர்கிறது. Spontaneity - ஒரு விஷயம் படக்கென்று நடக்கும் பொழுது, மிகநவீன டிஜிட்டல் கேமராக்கள், ரீபூட் ஆகவே சில நிமிஷங்கள் எடுத்துக் கொள்கிறது.

இதைப்பற்றி ஹெர்ஸாக் கூறியுள்ளதைப் பாருங்கள் "We used the RED camera for My Son, My Son, What Have Ye Done. It's an immature camera created by computer people who do not have a sensibility or understanding for the value of high-precision mechanics, which has a 200-year history. It's terrible: Whenever you have to reboot the camera, it takes 4½ minutes or so. It drove me insane, because sometimes something is happening and you can't just push the button and record it. An assistant cameraman said this camera would be ideal if we were filming the National Library in Paris, which has been sitting there for centuries. But everything that moves faster than a library is a problem for the RED" . என்னவொரு நக்கல். இத்தனைக்கும் ஹெர்ஸாக் "The Cave of Forgotten dreams"சை டிஜிட்டலில் தான் எடுத்தார். கதை அப்படி. மேலும், ஆரம்ப காலங்களில் கலர் கரெக்சன் என்ற வேலையெல்லாம், நீண்டநெடிய வேலையாக இருந்தாலும் - ஓரளவிற்கே செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் வந்ததால், படத்தின் மீதான ஒளிப்பதிவாளர்களின் தாக்கம் சற்று மட்டுப்பட்டிருப்பது போல் உணர்வதாக பல ஒளிப்பதிவாளர்கள் சொல்கிறார்கள். கலரிஸ்ட் என்ற தொழில்நுட்ப ஆட்களின் கை இங்கு ஓங்கிவிடுகிறது என்பது அவர்களது வாதம். ஹெர்ஸாக் போன்ற ஐரோப்பிய, தென்னமெரிக்க நாடுகளின் மாஸ்டர்ஸ்களை விடுங்கள். ஹாலிவுட்டின் பல இயக்குனர்களே ஸ்டூடியோக்களின் நெருக்கடிக்கு இடையேயும் டிஜிட்டலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறித்து பேசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படங்களுக்கு செய்தது என்ன ?

"கலை.....மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளிஅள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது"......இந்த ரீதியிலேயே திரைப்படங்களை ஐம்பதுகள் வரை ஏராளமானோர் அணுகிவந்தனர். பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கம் முதலாகவே கலை,ரசனை போன்றவைகள் பற்றிய கோட்பாடுகளும் கருத்துகளும் வெகுவேகமாக மாறத் தொடங்கியது ( இந்தப் பதிவில் இந்த விஷயங்கள் குறித்து சிலவற்றைக் காணலாம்). எது கலை ? எது "நல்ல" சினிமா ? எது யதார்த்தம் ? போன்ற அடிப்படைக் கேள்விகள் எல்லாம்  நாப்பதுகள் தொடங்கி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளே இந்த வேலையில் முழுவீச்சுடன் ஈடுபடலாயின. Dadaism, The Lost Generation, Surrealism, Post modernism, Beat Generation என்று வெவ்வேறு வகையான கோட்பாடுகள்(?)  நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டிருக்க, அது அத்தனையும் திரைப்படங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. குறிப்பாக, ப்ரான்ஸ் + அதன் நியு வேவ் (இதுபற்றி ஒரு முக்கிய ஆளுமை இந்த வீடியோவில் பேசியிருக்கும் விடயங்கள் சிறப்பானவை. தவறாமல் பார்க்கவும் ).

----------------------------------------------------------------------------------

இந்திய ரயில்வே தான் உலகின் மிகப்பெரிய கழிப்பறை.  இந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். பொழது புலரும் அந்த அற்புதமான லைட்டிங்கில், ஒரு பெண்மணி தண்டவாளத்தில் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார். சூரியன் தனது பொன்நிறக் கிரணங்களால் அந்தப் பெண்மணியின் முடியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறான். அதே பொன்னிற ஒளி அந்த மலத்தின் மேலும் விழுந்து கொண்டிருக்கிறது. அழகியல் சார்ந்ததே கலை என்று யோசிக்கும் ஒருஆள் இந்தக் காட்சியை எவ்வாறு படமோ புகைப்படமோ எடுப்பார் ? அல்லது அவர் கலை, அழகியல் என்பதையெல்லாம் எவ்வாறு வரையறுத்து வைத்திருப்பார் ? மனிதக் கழிவை இன்னொரு மனிதனே அள்ளுவது மாபெரும் தேசிய அவமானம். இதனை படம்பிடிக்கும் போது, கேமரா கோணங்களை எவ்வாறு வைப்பது ? பின்னணி இசையை எவ்வாறு தீர்மானிப்பது (தமிழ் சினிமாவில் இப்படியொரு காட்சி வருங்காலத்திலாவது வந்தால், சர்வநிச்சயமாக பின்னணியில் வயலின் கதறும்). இதை மேலும் மேலும் எழுதிக் கொண்டே போக விரும்பவில்லை. எனது தனிப்பட்ட கருத்துகளை இப்போதே கொட்டிவிட விரும்பவில்லை. அதற்கு இன்னும் பல பதிவுகள் உள்ளது.

----------------------------------------------------------------------------------

போலித்தனமான கதாபாத்திரங்கள், அவர்தம் உருவங்கள், காட்சியின் அழகியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, நாடகத்தன்மை நிறைந்த வசனங்கள் என்று ஐம்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்துப்பார்த்து சலித்த கூட்டத்தினர் (ப்ரான்சுவா த்ரூஃபோ, கோதார்த், சாப்ரால் போன்ற ஆட்கள்) கடும் விமர்சனங்களை அக்காலகட்ட படங்களின் மீது முன்வைத்தனர். ஒருகட்டத்திற்குப் பிறகு, தாங்களே திரைப்பட இயக்குனர்களாகவும் பட்ஜெட் தயாரிப்பாளர்களாகவும் வலம்வரத் தொடங்கினர். அவர்கள் செய்த மிகப்பெரிய மாற்றம், திரைப்படங்களுக்கான - அதுகாறும் நம்பப்பட்டு வந்த இலக்கணங்களை (சிறிது) மாற்றியது. அசலான தெருக்கள், மாந்தர்களில் ஆரம்பித்து ஒளிப்பதிவிலும்(இயற்கையான லைட்டிங் போன்ற பல விஷயங்களில்) ஒருவித நம்பகத்தன்மையை கொண்டுவந்தனர். குறிப்பாக, ஒரே இடத்தில கேமராவை வைப்பதற்குப் பதில், handheld கேமராக்களின் துணை கொண்டு கதாபாத்திரங்களின் கூடவே ஓடி, பார்வையாளருக்கும் அந்தச் சூழ்நிலையின் தாக்கத்தை வரவழைக்க முயன்றனர். இதில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி, த்ரூஃபோவின் ஜூல்ஸ் அன் ஜிம்மில் வரும் இந்தக் காட்சி(ஆனால் பிற்காலங்களில் இதே த்ரூஃபோ எந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்தாரோ அதேபோன்றதொரு வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டது பரிதாபம்). கோதார்த் வேறு உலகம். முடிந்தால் தனிப் பதிவாக எழுத விருப்பம்.


இதுமாதிரியான திரைப்படங்கள் ஒருபக்கம் வந்துகொண்டிருக்க, டாகுமென்டரி ஸ்டைலில் எடுக்கபட்ட படங்கள் பின் - 60களிலும், 70களிலும் பெருமளவு வரத்தொடங்கின. இதில் ஜெர்மன் இயக்குனர்களின் பங்கு மகத்தானது. ஹெர்ஸாக், ஃபாவ்ஸ்பைன்டர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. இதேகாலகட்டத்தில், மிகச்சரியாக சொல்வதென்றால் தென்அமெரிக்க நாடுகளின் சினிமா முற்றிலும் வேற வகையான யதார்தத்தை பதிவுசெய்யத் தொடங்கியது (முன்வைக்கத் தொடங்கியது என்று எழுதி, பதிவுசெய்யத் தொடங்கியது என்று மாற்றி விட்டேன்). உள்நாட்டு கலகங்கள், போர்கள், புரட்சிகள் என்று சகலத்தையும் பதிவாக்கினர். பெருமளவு 8mm, 16mm பழைய ஃப்லிம்களே பயன்படுத்தப்பட்டன. Handheld கேமராக்கள் மட்டுமே ஒரு வழி. பல நேரங்களில் படம் பிடித்தவர் உயிர் இழந்திருப்பார். ஆனால் அவரின் கேமரா ஃப்லிம்மை மட்டும் எடுத்து படமாக்கிய வரலாறெல்லாம் உண்டு. இதுபோன்ற குழப்பமான அரசியல் சூழ்நிலைகளை பதிவு செய்ய இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் கேமராவே மிகச் சிறந்த வழி. ஜாஃபர்  பனாஹியின் "This is not a film" போல் ஒரு கலக திரைப்படத்தை (டிஜிட்டல் கேமரா + கொஞ்சம் ஐஃபோனைப் பயன்படுத்தி, எடுக்கப்பட்ட இப்படத்தை பென் டிரைவில் காப்பி செய்து கேக்கிற்குள் வைத்து இரானில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட படம்) ப்லிம் கொண்டு எடுப்பது எல்லாம் சாத்தியமேயில்லை.

90களில் மேற்சொன்ன ப்ரெஞ்சு ஆட்களைப் போன்ற, டென்மார்க்கைச் சேர்ந்த சில இளைஞர்கள் - அப்போதைய சினிமாவின்பால் எரிச்சல் கொண்டு ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். Dogme 95. அந்த இயக்கத்திற்கு என்று சில கட்டளைகளை ஏற்படுத்துகின்றனர் - The Vow of Chastity. அந்த பத்து கட்டளைகளின், ஒன்பதாவது கட்டளை " The film format must be Academy 35mm " என்பதாகும். இந்த இயக்கத்தின் மிகமுக்கியமான இயக்குனர், லார்ஸ் வான் ட்ரையர். இந்த இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக்கவும். அந்த கட்டளைகளில், 35mm என்பதற்குப் பதில் 9oகளின் மத்தியில் வெளிவந்த சோனி டிஜிட்டல் கேசட் ரிக்கார்டர்களை பயன்படுத்துவது என்று முடிவாயிற்று. தாமஸ் வின்டர்பெர்கின் The Celebration (கீதப்ரியன் விமர்சனம் பார்க்க) முதல் டாக்மா 95 படமாக வெளிவருகிறது. அதில் ஒளிப்பதிவராக பணியாற்றியது யார் தெரியுமா ? ஆன்டனி டாட் மென்டில். ஸ்லாம்டாக் மில்லியனருக்காக ஆஸ்கர் வாங்கினாரே அவரேதான் (இன்னொரு செய்தி, டிஜிட்டல் கேமராவில் எடுக்கபட்ட ஒரு படத்திற்கு முதன்முதலாக ஆஸ்கர் கொடுக்கபட்டது - ஸ்லம்டாக் மில்லியனருக்காகத் தான். எத்தனை வீரியம்மிக்க ஒளிப்பதிவு என்று படம் பார்த்தவர்கள் அறிவோம். இந்த விஷயத்தில், சுவாரசியமான பல தகவல்கள் உண்டு. அதனை கீழிருக்கும் டாகுமென்டரியில் காணலாம்).

டாக்மா படம்களைப் பொறுத்தவரை, கேமரா கோணங்களும் அலைதலும் முற்றிலும் வழமையான பாணிக்கு நேரெதிராக இருக்கும். ஒருவித யதார்த்தத்தை இதன்மூலம் முன்வைக்க நினைத்தனர். ஆனால் என்று இதுபோன்ற shaky candid camera உத்தியை ஹாலிவுட் பயன்படுத்தத் தொடங்கியதோ, அன்றுமுதல் இதுவெறும் தொழில்நுட்பம் என்றஅளவிலேயே மாறிப்போனது. எப்படி சொல்வது...........ம்ம்ம்ம்ம்ம்ம்.....சே குவேராவை புரிந்துகொண்டு ஒரு பெருமையுடன் அவரது உருவம் தாங்கிய டிஷர்ட்டை அணிவதற்கும் வெறும் fashionக்காக அணிவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா. அதேதான் இங்கும். லார்ஸ் வான் ட்ரையர் இன்றுவரை டிஜிட்டல் கேமராவில் மட்டுமே படம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமஸ் வின்டர்பெர்க் ஒருசில படங்களுடன் காணாமல் போய்விட்டார். டிஜிட்டல் பற்றி முடிவாக  கோதார்த் சொன்னதையே இங்கு தருகிறேன் " The so-called 'digital' is not a mere technical medium, but a medium of thought. And when modern democracies turn technical thought into a separate domain, those modern democracies incline towards totalitarianism "

டாக்மா 95ல் ஆரம்பித்து, ஏராளமானா ஆட்களை பொறுத்தவரை - டிஜிட்டல் சினிமா என்றால் என்ன ? சுருங்கச் சொல்வது என்றால் - கட்டற்ற சுதந்திரம். சினிமாவிற்கான கட்டமைப்பை உடைக்கும் வலிமை. ஒருகாலத்தில், யாருடைய தயவும் இல்லாமல் நினைத்ததை படமாக்க வேண்டுமென்றால் - பணம் இருந்தால் ஒழிய - மிகமிகக் கடினம். முக்கியமாக ஃப்லிம் போன்ற கச்சா பொருட்களை சேகரிப்பதே பெரும்பாடு. இங்குதான் ஸ்டூடியோ - தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - போன்றவர்கள் உள்ளே வருகிறார்கள். இவர்களை மீறி படம் எடுப்பது சிரமமான காரியம். ஒரு இயக்குனராக தங்களது சுயம் - இவர்களால் தங்களது படங்களில் இல்லாமல் போய்விட்டதே என்று - வருந்திய புகழ்பெற்ற (இந்தியாவும் சேர்த்து) இயக்குனர்கள் உண்டு. ஆனால் டிஜிட்டல் கேமரா வந்து பிறகு ? அதனது சாத்தியங்களை யோசித்துப்பார்த்தால் மலைப்பாகவே உள்ளது. பார்வையாளர்கள் என்பதெல்லாம் ரெண்டாம்பட்சம். தான் சொல்லநினைத்ததை ஸ்க்ரீனில் அந்த இயக்குனரால் வெற்றிகரமாக பிரதிபலிக்க முடியுமேன்பதே எவ்வளவு பெரிய விஷயம். அந்த இயக்குனருக்கு அதை திரையில் பார்க்கும் பொழுது எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். ஆனால் நமது ஊரில் இந்த ட்ரெண்ட் சற்று பின்தங்கியே உள்ளது. நிறைய மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதையே பிரதானமாக வைத்து யோசிக்கும்பொழுது சில சிக்கல்கள் எழத்தான் செய்யும். இன்று டிஜிட்டல் கேமரா என்ற வஸ்து இல்லாவிட்டால், மாற்று சினிமாவின் பல கதவுகள் திறக்கப்படாமலேயே போயிருக்கும். இவைகள் தவிர, தொழில்ரீதியாக - பல அனுகூலங்கள் உள்ளன. உதாரணமாக, கீழே இருக்கும் டாகுமென்டரியில் டேவிட் லின்ச் சொல்லும் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. "ப்லிமில் எடுக்கப்படும்போது, நடிகர்கள் - விலை உயர்ந்த ப்லிம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வுடனே நடிக்க வேண்டியிருக்கிறது. ஒருவித பதட்டத்தை நடிகர்கள் மனதில் அது உருவாக்க வாய்ப்புள்ளது" என்கிறார். டிஜிட்டல் என்றால் எத்தனை டேக் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும் தானே. மேலே சொன்ன சிலபல விஷயங்களை இந்த டாகுமென்டரியில் இருந்தே எடுத்தது. இந்தப் பதிவு ஒரு அளப்பரிய தாக்கத்தை (ஹி..ஹி) உங்களிடம் ஏற்படுத்தி இருந்தால், உடனே கீழிருக்கும் டாகுமென்டரியை பார்க்கவும். ஒளிப்பதிவின் மேல் ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதைத்தவிர, மிக சொற்பமாகவே ஒளிப்பதிவை பற்றிய டாகுமேண்டரிகள் உள்ளன. அவற்றுள் எனக்குப்பிடித்த மற்றொரு டாக்குமென்டரி: Cinematographer Style. விட்டோரியோ ஸ்டராரோ & கோர்டன் வில்லிஸ் இருவரின் வார்த்தைகளுக்காவும் எத்தனைமுறை வேண்டுமென்றாலும் இதனைக் காணலாம்.

இறுதியாக, படம் டிஜிட்டலில் எடுக்கப்படுகிறதோ ப்லிமிலோ - ஒன்று மட்டும் தான் நிலைக்கும். அது படத்தின் உள்ளடக்கம் (Content).  அதை எப்படி சொல்லியிருக்கிறார்கள், எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த விஷயம் இரண்டாவதே. வெறும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் படங்களில் இதனை எல்லாம் யாரும் எதிர்பார்க்கப்போவது இல்லை. இன்றைய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ப்லிம்களில் தான் பெரும்பாலும் எடுக்கப்படுகிறது என்று நினைகிறேன். ஆனால் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட பல படங்களின் தரம் த்ராபையாகவே உள்ளது. தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி - ஒளிப்பதிவு என்று வரும்போது, தமிழ் சினிமா காட்சியின் அழகியலுக்கே இன்னமும் முக்கியத்துவம் தந்துகொண்டிருகிறது. "நல்ல" ஒளிப்பதிவு என்பதைத் தாண்டி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய படம் என்று பார்த்தால் ஞாபகம், சமீபத்தில் அப்படி எந்தப் படமும் வந்த ஞாபகம் இல்லை. ஒளிப்பதிவையும் ஒரு கதாபாத்திரமாக கதைசொல்லியாக மாற்றும் ஆட்கள் இங்கு குறைவே. "இந்த ஷாட் செமையா இருக்கு" என்று மக்களை சொல்லவைப்பதைத் தாண்டி ஒளிப்பதிவாளர்கள்/இயக்குனர்கள் யோசிப்பதில்லையோ அல்லது விரும்புவதில்லையோ என்று தோன்றுகிறது. ஹாலிவுட் முதற்கொண்டு இந்தப் பிரச்சனை தான். இயக்குனர்களின் Visual Sense எந்தளவிற்கு உள்ளது என்பதே பல சமயங்களில் இதனைத் தீர்மானிக்கும் என்பதையும் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் அட்டகாசமான ஒளிப்பதிவு என்றாலும் - Road to perdition போல், இயக்குனர் சரியில்லையென்றால் படத்தினால் ஒரு தாக்கமும் ஏற்படாது. இன்னொரு விஷயம், ஒளிப்பதிவாளர்கள் எங்கிருந்து பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பது. முக்கியாமாக ஓவியர்களிடம் இருந்து. மைக்கல் பாலஸ், Gangs of newyork படத்திற்காக - ஸ்கார்சேஸி ரெம்பரான்ட் வரைந்த ஓவியங்களின் பாணியில் காட்சி அமைய வேண்டும் என்பதற்காக ரெம்பரான்ட் பற்றிய புத்தகத்தை பாலஸிடம் படிக்கக் கொடுத்தாராம். அதேபோல், ஒளிப்பதிவில் லைட்டிங் - ஓவியங்கள் பற்றி இங்கு அக்குவேறாக அலசி ஆராயப்பட்டுள்ளது.

அதில் Godfatherரோட கரவாஜியோவின் ஓவியங்களை ஒப்பிடு செய்வதைப் பார்க்கலாம். திரைப்பட ஒளிப்பதிவு என்பது - திரைப்படங்கள் பார்ப்பதோடு முடிந்துவிடுவது இல்லை. பின்னால் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆரண்ய காண்டம் - படத்தைப் பற்றி சாரு நிவேதிதா (விண் டிவி என்று நினைவு) - ஒளிப்பதிவு ரெனேசான்ஸ் (Renaissance) காலத்தியலானது என்று கூறினார். தமிழில் ஒளிப்பதிவாளர்கள் அந்தளவிற்கு ஒளிப்பதிவை முன்னெடுத்துச் செல்கிறார்களா......எவ்வாறு ஒரு திரைப்படத்தை அணுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் விரிவான பதிவுகள் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. ஒளிப்பதிவாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளிலும் ஒப்புக்கே என்று ஒருசில கேள்விகளை கேட்டு அவர்களை மேற்கொண்டு பேசவிடுவதில்லை. பாலு மகேந்திரா,சந்தோஷ் சிவன் போன்ற ஆட்களிடம் கூட பெரும்பாலும் திராபையான கேள்விகளே கேட்கப்படுகிறது.


எனக்குப் மிகப்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் (இந்தியா நீங்கலாக):

ஏகப்பட்ட ஆட்கள் இருந்தாலும் மிகப்பிடித்த என்ற அளவில். இதனை வைத்துதான் பதிவை எழுதுவதாக இருந்தது. ஆனால் எங்கெங்கோ சென்றுவிட்டது

Asakazu Nakai - இவரும் குரோசாவாவும் இணைத்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் ஒளிப்பதிவும் பிடிக்கும். குரோசாவா படங்களின் ஒளிப்பதிவு யாருக்குத்தான் பிடிக்காது.

Sven Nykvist (ஸ்வன் நைகிஸ்ட்) - இங்க்மார் மெர்க்மானின் அனைத்து படங்களின் ஒளிப்பதிவாளர் இவரே. இவரில்லாமல் பெர்க்மான் படங்கள் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே

Vadim Yusov (வாதிம் யூஸோ) - இந்தப் பதிவை எழுத இவரே காரணம். தர்கோவ்ஸ்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். தர்கோவ்ஸ்கி தனது கடைசி படமான The Sacrificeயில் ஸ்வன் நைகிஸ்டுடன் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது

ic

Vittorio Storaro (விட்டோரியோ ஸ்டராரோ) - பெர்ட்டுலூசியின் பிரதான ஒளிப்பதிவாளர்.

Roger Deakins (ரோஜர் டீகின்ஸ்) - பல uniqueகான கோணங்களை கையாளுவதில் கில்லாடி

Raoul Coutard (ராவ்ல் கோதார்த்) - இயக்குனர் கோதார்த்தின்/ த்ரூஃபோவின் பல படங்கள் இவரின் கண்வண்ணமே. குறிப்பாக, handheld ஷாட்களில் இவருக்கு நிகர் இவரே

Gordon Willis (கோர்டன் வில்லிஸ்) - The Prince of darkness என்ற பெயரும் உண்டு (விக்கி). ஒளிப்பதிவு ஆர்வலர்களால் The Godfather படத்தை மறக்கவே முடியாது. மூன்று பாகத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர் இவரே. ஆனால் இவருக்கு கடைசி வரை எந்தப் படத்திற்கும் ஆஸ்கர் கிடைக்கவில்லை. Wikipedia: In the seven-year period up to 1977 Willis was the director of photography on six films that received among them 39 Academy Award nominations, winning 19 times, including three awards for best picture. ஏன் ? மேல நான் ஹாலிவுட் /தமிழ் ஒளிப்பதிவு - இயக்குனர்களது விஷ்வல் சென்ஸ் பற்றி நான் சொல்லியிருப்பவற்றிக்கு என்னைத் திட்டும் முன் இவரை நன்றாக திட்டவும். ஏனென்றால் அதில் பல விஷயங்களை இவரிடமிருந்தே நான் சுட்டது. ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவு தரத்தை/படங்களை ஏகத்துக்கும் கிண்டல் செய்த ஆசாமி இவர்.

Conrad Hall (கான்ராட் ஹால்) - இவரின் பிந்தைய படங்களை விட ஆரம்பகால படங்களே மிகப் பிடிக்கும்

Michael Ballhaus (மைக்கல் பாலஸ்) - ஸ்கார்சேஸியுடன் இவர் பணிபுரிந்த அனைத்து படங்களுமே மிகப் பிடிக்கும். அவைகள்

Christopher Doyle (க்ரிஸ் டாயல்) - இவரின் பெயரைச் சொன்னவுடன் மற்றொரு பெயர் நினைவுக்கு வர வேண்டும். வாங் கர் வொய். அவரின் - சமீபத்திய The Grandmasters, மற்றும் இரண்டு படங்கள் நீங்கலாக - எல்லா படத்திருக்கும் இவரே ஒளிப்பதிவாளர். இருவரின் கூட்டணி பிரிந்ததில் என்னைப் போல் பலருக்கும் அல்லது பலரைப் போல் எனக்கும் வருத்தமே.

10

Emmanuel Lubezki (இமான்யுல் லுபெஸ்கி) - டெல் டோராவுடன் பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். எனக்கு இவரின் Children of men மிகப்பிடித்த ஒன்று

Janusz Kaminski (ஸ்பீல்பெர்கின் எல்லாம் படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு), Michael Chapman (Taxi Driver, மிகமிக குறிப்பாக Raging Bull), Fred Kelemen (இயக்குனர் பெல்லா டாரின் படங்களில் பணிபுரிந்தவர்), Robert Richardson (Platoon, Shutter Island) என்று சொல்லிக் கொண்டே போகலாம். கடைகளில் டிவிடிகள் வாங்கும் போது, முதலில் இயக்குனரைப் பார்ப்பேன். தெரியாத ஆள் என்றால் அடுத்து - ஒளிப்பதிவாளர் தான். அதற்கடுத்துதான் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் பார்ப்பது. அந்தளவிற்கு ஒளிப்பதிவின் மீது ஈடுபாடு உண்டு. பிடித்த ஒளிப்பதிவாளர்கள் - அவர்களுது படங்கள் என்று எழுத நினைத்து, செலுலாய்ட்  - ப்லிம் என்று தடம் மாறிச் சென்றுவிட்டதாக உணர்கிறேன். பரவாயில்லை. இது முன்னோட்டமாக இருந்துவிட்டு போகட்டும். ஒவ்வொரு ஒளிப்பதிவாளர் பற்றி தனிப்பதிவாக பின்னர் எழுதலாம் என்று உத்தேசம்.

உதவிய பல தளங்களில் முக்கியமானவைகள்:
  • Film art: Cinematography - Link
  • Observations on film art - Link
  • The Impact of Digital Technology upon the Filmmaking Production Process - Link
  • Film vs Digital photography - Link