Friday, March 15, 2013

பறவை நோக்குதல்: ஒரு அமெச்சூரின் அனுபவம்

1906/7: பொந்தின் வாயிலில் ஒரு ஆணியில் ஆண்குருவி அமர்ந்திருந்தது. உள்ளே பெட்டை முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது. அங்கு நின்றிருந்த ஒரு வண்டியின் பின்னால் இருந்து குறிபார்த்து சுட்டேன். ஆண்குருவி வீழ்ந்தது. விரைவிலயே, பெட்டை மற்றொரு ஆண்குருவியை சம்பாதித்துவிட்டது. புதுக்குருவி வாசலில் அமர்ந்து காவல் புரிந்தது. நான் அதையும் சுட்டேன். மறுபடியும் பெட்டை இன்னொரு ஆண்துணையை கொணர்ந்துவிட்டது. அதையும் சுட்டேன். அடுத்த ஒரு வாரத்தில் நான் 8 ஆண்குருவிகளை சுட்டேன். ஒவ்வொரு முறையும் அடுத்த ஆண்குருவி, தன் முறைக்காக காத்துக் கொண்டிருப்பதுபோல, இறந்த குருவியின் இடத்துக்கு வந்து சேர்ந்தது

சலீம் அலி, ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
ஒரு விசயம் தெரியலைன்னா, ஒண்ணு அதை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்… அல்லது மூடிக்கிட்டு இருக்கலாம். மூணாவதா ஒரு கேட்டகரி இருக்கு. பதிவர்ன்னா… எல்லாம் தெரிஞ்ச மாதிரி எதையாவது அடிச்சி விடணுமில்லையா? தோ…. எழுதிகினே இருக்கேன். இத்த தன்னடக்கம்னு வள்ளுவர் சொல்றார். நடிப்புனு என் மனசுக்கு படுது. உங்களுக்கு எது சௌகரியமா இருக்கோ, அத்த எடுத்துக்கோங்க.

சிரமம் பாக்காம, கூகிள்ல “பறவை நோக்குதல்“னு அடிச்சு பாருங்களேன். அங்கொன்னும் இங்கொன்னுமா சில தகவல்கள் வரும். ஆனா, சற்று விரிவா ஏதாவது லிங்க் இருக்கா…..அல்லது என்னால கண்டுபிடிக்க முடியலையா……தெர்ல. அதிலும் குறிப்பா, “பறவையின் உடற்பாகங்கள்” னு தலைப்பில் தேடுனா ஒண்ணுமே இல்ல. விக்கில “பறவை” என்ற தலைப்பில் ஒரு அட்டகாசமான கட்டுரை இருக்கு. அவ்வளவே.சரி, பறவைகள பத்தி நமக்கிருக்கும் சில்லுண்டி அறிவை வெச்சு (வழக்கம் போல) நெட்ல இருக்கும் விஷயங்கள சுட்டு குறைந்தபட்சம் ஸ்கூல் பசங்க லெவலுக்காவது ஒரு பதிவ ஏன் டைப்படிக்க கூடாதுனு பதிவர்களுக்கே உண்டான அறச்சீற்றம் காரணமா இப்பதிவை டைப்பிக் கொண்டிருக்கிறேன்.

1000 பேர் (ஹி…ஹி) இந்தப் பதிவின் தலைப்பை பாத்தாங்கன்னா, பேஜ்ஜ ஓப்பன் செய்யுறது 100 பேராகத் தான் இருக்கும். அதுல பத்து பேர் படிக்க வாய்ப்பிருக்கு (வோர்ட்ப்ரஸ்ல இதுவொரு நன்மை. டாஷ்போர்ட் திறந்த இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிரும்). எனக்கு இது ரொம்ப நல்லாவே தெரியும். எல்லாருக்கும் எல்லா துறையிலும் ஆர்வம் இருக்கணும் என்ற அவசியம் இல்லியே. புடிச்சத படிப்பாங்க. இல்லாட்டி ஸ்கிப் பண்ணிருவாங்க. அவ்ளவே. ஆனாலும் இத்த பதிவாக்க காரணம்………sharing (என்னவொரு கண்டுபிடிப்பு…..கல்வெட்டுல பொறிக்கலாம்). இத என் முதல் பதிவில் இருந்து சொல்லிகினே இருக்கேன். ஆனா, நடுவில ஹிட்ஸ் – ரெண்டு நாளிக்கு ஒரு பதிவு – நம் இருப்பை நிருபிக்க வேண்டிய கட்டாயம்னு, ஒரு வட்டத்தில் மாட்டிகிட்டேன். அதிலிருந்து வெளிய வந்து ஒரு தெளிவில் இருப்பதால்…….ஷிட்……..இந்த தகவல்கள் எல்லாம் யாருக்கு தேவ.

---------------------------------------------------------

உலகம் முழுக்க அறிவுசார் விஷயங்கள் வளர்ந்துச்சு(கிட்டு இருக்கு) என்றால், அதற்கு காரணம்….பகிர்தல். சின்ன லெவல் ஆராய்ச்சிகளில் இருந்து பெரிய அளவிலான விஞ்ஞானம் வரை, எந்தவிதத்திலாவது விஷயங்கள, ஆராய்ச்சி முடிவுகள பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எப்பவாவது,யாருக்காவது அது பயன்படும் என்ற எண்ணம் ஒரு முக்கிய காரணம் (கவனிக்க: அது மட்டுமே காரணமல்ல). எவ்ளவோ விஷயங்கள எங்கெங்கிருந்தோ வெவ்வேறு தளத்தில் இருந்து நாம் தெரிஞ்சுக்குறோம், ஆனா, பதிலுக்கு என்ன பண்றோம் ? எப்பவுமே downloading தான். uploading நடப்பதே – குறிப்பா நம்ம நாட்டில் – இல்ல. இன்டர்நெட்ட நான் உபயோகப்படுத்தாமல் இருந்திருந்தால், எண்ணிலடங்கா நல்ல விஷயங்கள நான் நிச்சயம் இழந்திருப்பேன். உதாரணமா, இப்ப டைப் அடிச்சுகிட்டு இருக்கும் தமிழ் கீபோர்ட் மென்பொருள் – இலவசமா கிடைச்சது. அத்த உருவாக்குன குழு எது ? அப்படி என்ன அவுங்களுக்கு ஆர்வம் ?…..தெர்ல. விக்கிபீடியாவுல ஏகப்பட்ட தமிழ் கட்டுரைகள் இருக்கு. அது முழுவதும் தமிழார்வத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்களால் பதிவேற்றப்பட்டது தான். ஒருசில சமயங்களில் வேலை சார்ந்த விஷயங்களிலோ,வேறு வகையான விஷயங்களிலோ இது உதவக்கூடும் என்றாலும் பெரும்பாலும் ஆர்வம் தான் அடிப்படை. தமிழை வளர்க்க, “தமிழராக இருந்தா ஷேர் பண்ணுங்க” மட்டும் போதாது. எனக்குத் தெரிந்து ரெண்டு வகையாக இதை அணுகலாம். ஒண்ணு, தமிழ் -> பிறமொழிகள் – குறிப்பா ஆங்கிலம். ரெண்டாவது, ஆங்கிலம் -> தமிழ். கலைசொற்கள் முதற்கொண்டு தமிழின் வார்த்தை வளங்கள மேம்படுத்தாம(அல்லது ஒழுங்குபடுத்தாம) வெத்து வார்தைகள வெச்சு ஜல்லியடிப்பதால் ஒரு உபயோகமும் இல்ல.

பறவைகள் பத்தி என்பதால், அதுதொடர்பாகவே ரெண்டு உதாரணங்களை பாப்போம். முதலாவது, தமிழ் -> ஆங்கிலம். இலக்கியம் முதற்கொண்டு எல்லாத்திலும் இது நடந்தாதான் தமிழ்ல செய்யப்படும் நல்ல விஷயங்கள் வெளிய தெரியும். உதாரணமா, இவர் இந்தத் தளத்தில் செய்திருக்கும் விஷயங்கள். ரெண்டாவதாக ஆங்கிலம் -> தமிழ். பறவைகள் குறித்த தமிழ் சொற்கள், பலபேரின் விடாமுயற்சியால் இப்போ கவனம்பெற்று வருகிறது. ஆனாலும் தகவல்கள், என்னைப் போன்ற ஆரம்பநிலை ஆட்களுக்கு போதுமானதாக – ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால்(of course, எல்லா துறையிலும் இதுதான் நிலை) – இல்லை என்பதுதான் யதார்த்தம். ஏன் தமிழ் பெயர்கள் முக்கியம் என்பதற்கு முகமது அலி சொல்வது:
ஒரு பறவையின் தமிழ்ப்பெயர் அதன் இயல்பைப் பற்றியும் நமக்கு தகவல் தரக்கூடும். அதாவது பறவையின் நடத்தையை விவரிக்கக் கூடும். எடுத்துகாட்டு: சோலைபாடி (Shama). அடர்ந்த சோலைக் காடுகளில் இப்பறவை கீழான மரக்கிளையில் அமர்ந்து எழுப்பும் குரலைக் கேட்பது மறக்க முடியாத அனுபவம். உலகிலேயே சிறந்த பாடும் பறவை என்ற புகழ் இதற்குண்டு. இரண்டாவது எடுத்துக்காட்டு: ஒப்போலிப் பண்பு(mimicry) கொண்ட மைனா இனத்தைச் சார்ந்த ஒரு பட்சி. மற்ற பறவைகள் எழுப்பும் ஒலி போலவே சில சமயங்களில் விலங்குகளைப் போலக் கூட ஒலியெழுப்பும் இதன் பெயர், நையாண்டிக் குருவி(Grackle)

ச.முகமது அலி, சோலைபாடியும் கானமயிலும் - வட்டமிடும் கழுகு
இப்படியாக பறவை நோக்குதல் குறித்து ஏதாவது சிறு பங்களிப்பாவது செய்யணும் என்ற ஆவல் மிகுதியில் இந்த பதிவ எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுபற்றியெல்லாம், மிக நன்றாக தெரிந்தவர்கள் - ப்ளாக் பக்கமெல்லாம் வரமாட்டார்கள் என்ற தைரியம் தான் (சினிமா மாதிரி.....). நிச்சயம் சிலருக்கு இதுவொரு அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன். எதுனா தகவல் பிழை இருப்பின் இடித்துரைத்து........திருத்தி எழுத உதவுக.

------------------------------------------------------

ஹோமோ சாபியன்ஸ் தவிர, மற்ற உயிரினங்களில் பெருவாரியான உயிரினங்களின் – ஓடுவது, நீந்துவது, ஊர்வது, தாவுதல் போன்ற சமாச்சாரங்களை ஒருமாதிரியாக – அது எப்படி இருக்கும் என்பதை செய்து பார்த்து நம்மால் உணர முடியும். ஒன்றே ஒன்றைத் தவிர – பறப்பது. ஒரு அடி, ரெண்டடிக்கு வேண்டுமென்றால் தவ்வலாம். அதற்குமேல் முடியாது. ஆக, பறப்பது – பறவைகள் குறித்த ஈர்ப்பு எல்லா காலகட்டத்திலும் மனிதர்களுக்கு உண்டு. “ஒரு ஏரோப்ளேன் புறப்படுவதை விட, ஒரு பறவை மேல எழுப்புவதை பார்ப்பதே எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது” என்ற மா.கிருஷ்ணன்.(மழைக்காலமும் குயிலோசையும்) சொல்லுவார்.சிறுவயதில்,இப்படியான பறவைகள்,விலங்குகள் குறித்தான ஈர்ப்புக்கு நானும் நீங்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்று நம்புகிறேன். வயது வளரவளர நாம் இழக்கும் பல நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. சிறுவயதில் ஒரு காக்கா சோறு உண்பதைக் கூட ரசித்து பார்த்திருப்போம்.


பறவைகளை உற்று நோக்குதல் என்பதெல்லாம் எனக்கு கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தான் எனக்கு பரிச்சயம். அதவாது, சிறகு இன்ன நிறம்,அலகு இப்படி இருக்கிறதே – என்ற அளவில் மட்டும். பறவை நோக்குதலுக்காக வெளிய சுற்றுவது போன்றவைகள் எல்லாம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். அதுவும் ஒரு சிறிய கேமரா வாங்கிய பிறகுதான். யோசித்துப் பார்த்தல், பறவைகளை பார்ப்பதைவிட, போட்டோ எடுப்பதைச் சார்ந்தே நான் ஆர்வமாக இருந்ததாக நினைவு. அதற்குமுன்னர் கண்ணில்படும் பறவைகளை நன்றாக வேடிக்கை மட்டும் பார்க்கப் பிடிக்கும். எந்தவகை பறவையாக இருந்தாலும், டிங்கு டிங்கு என்று தவ்வித் தவ்வி செல்வதை பார்ப்பது சத்தியமாக மிகவும் சந்தோசமான மனநிலைக்கு இட்டுச் செல்லும் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. இப்படியாக சும்மா பறவைகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தபொழுது, ஆறேழு ஆண்டுகள் முன்பு சலீம் அலியின் “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி(The Fall of a sparrow)” என்ற சுயசரிதையை வாசிக்க நேர்ந்து. சந்தேகமேயில்லாமல் நான் படித்த சிறந்த சுயசரிதை நூல்களில் ஒன்று. எந்தளவிற்கு ஒரு மனிதர் தனக்கு பிடித்த துறையின் மேல் உன்மத்தம் பிடித்த அலைய முடியம் என்பதை தெரிந்துகொள்ள விழைவோர், இந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்கவும் (ஆங்கிலமாக இருத்தல் நலம்….நான் தமிழ்ல தான் படித்தேன். ஆனா…..வேறொரு சமயம் ஆங்கிலப் பதிப்பை வாசித்த பொழுது…..தமிழ்லில் ஏகப்பட விஷயங்கள் மொழிப்பெயர்ப்பில் காணாமல் போயிருந்தது). Facebook தொடங்கி பல இடங்களில் சினிமா; கொஞ்சம் இலக்கியம் சார்ந்த ஆட்களை மட்டுமே தீவிர உழைப்பிற்கும் உன்மத்தத்திற்க்கும் ஈடுபாட்டிற்க்கும் உதாரணமாக காட்டுகிறோம். மிகசொற்பமாகவே (பிரபலமாக அறியப்பட்ட விஞ்ஞானிகள் நீங்கலாக) சலீம் அலி போன்ற விஞ்ஞானிகள் பற்றி பேசுகிறோம்.

இந்தியாவின் பறவை மனிதர்:

1930ல், Bombay Natural History Society(BNHS)க்கு சென்று தனக்கு ஊதியம் என்று எதுவும் தேவையில்லை….பணிகளுக்கான தொகையை மட்டும் கொடுத்தால் போதுமானது என்று கூறி, முறையான இந்திய பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை ஆரம்பித்தார். இப்போது போன்ற தொழில்நுட்பங்கள் – குறிப்பாக அதிக திறன்கொண்ட கேமராகள் – போன்ற ஒன்றுமில்லாமல், இந்தியாவில் ஒவ்வொரு ஊராக சுற்றுவது என்பதை………..யோசித்து பார்க்கவே முடியவில்லை. ஒன்றல்ல,இரண்டல்ல கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற பயணங்களை அவர் மேற்கொண்டார். தனது வாழ்வின் முக்கிய காலகட்டமான 34 – 54 வயது வரையிலான அனைத்து ஆண்டுகளையும் இதற்காவே அவர் செலவிட்டார். இடையில், 1941ல் “The Book of Indian birds” என்ற மிகமிக முக்கியமானதொரு புத்தகத்தை வெளியிட்டார். ஆரம்பகாலத்தில் பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும், பின்னாட்களில் பணம் புகழ் பெயர் என்று எல்லாம் வந்தது. ஆனாலும் பணத்தை பெருமளவில் கஷ்டப்படும் மாணவர்களுக்கான கல்வித் தொகை,பறவையியல் சார்ந்த விஷயங்கள் என்றே பயன்படுத்தினார். விருதுகளுடன் கிடைத்த பல பெரும்தொகைகளைக் கூட BNHSக்கே பயன்படுத்தினார். சாமிக்கண்ணு வின்சென்ட், ராமானுஜம்….என்ற biographical படம் எடுக்க ஏகப்பட்ட ஆட்கள் நம்மூரில் உண்டு. சலீம் அலிக்கே என்னுடைய அந்த லிஸ்டில் முதல் இடம். சலீம் அலி வெறும் பறவை ஆராய்ச்சியாளர் மட்டுமன்று, என்னைக் கேட்டால் ஒரு இலக்கியவாதி என்று கூட சொல்வேன். விஷயங்களை அவர் விளக்கும் விதமும் ஆளுமையும் அத்தகையது. அவரது ஆங்கிலம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. பல்வேறு பாடங்களில் சராசரி என்றாலும் அவரது ஆங்கிலம் பள்ளி நாட்களிலயே பிரபலம் என்பது குறித்து அவரே அந்நூலில் எழுதியிருக்கிறார்.


பறவை நோக்குதல் குறித்த பெரும் ஆர்வத்தையும் வேறொரு பரிணாமத்தையும் இந்தப் புத்தகம் என்னுள் ஏற்படுத்தியது. அதன் பின்னர், தியோடர் பாஸ்கரின் கட்டுரைகள், முகமது அலியின் கட்டுரைகள் உல்லாஸ் கரந்தின் “காணுறை வேங்கை” (மறக்க முடியாத அட்டைப் படம்) என்று கொஞ்சம் பரந்துபட்ட பார்வை வளர்ந்தது. சரி, ஏகப்பட்டது படித்தாயிற்று….ஆனால் களத்தில் இறங்கி அதனைப் பார்த்திருக்க வேண்டாமோ……..அங்குதான் நான் தவறு செய்து விட்டேன். நல்ல கேமரா இருந்தால் தான்……..புகைப்படங்கள் எடுக்க முடியும், விலங்குகளை பறவைகளை நன்றாக பார்க்க முடியும் என்று கற்பிதம் செய்து கொண்டு பல இடங்களை தவறவிட்டு விட்டேன். பெங்களூரின் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தபோது பல விஷயங்களை தவற விட்டுவிட்டோம் என்ற வருத்தம் இப்போதும் எனக்குண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்த “Winged Migration” டாகுமென்டரி அளப்பரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. இடையில், கோவையில் இருக்கும் SACONயில் கூட வேலைக்கு முயற்சித்தேன். ம்ஹும்…….அவர்கள் கொடுத்து வைத்தது அவ்ளவே.

எங்கிருந்து ஆரம்பிப்பது ?

ஒரு சாதாரண டிஜிடல் கேமரா தான்……..ஆனால் அதைவாங்கிய பிறகு, என்னைப் போன்ற சோம்பேறிக்கு பல விஷயங்கள் சாத்தியமாயிற்று. ஜூம் நன்றாக வேலை செய்யுமாதலால், குறிப்புகளாக எழுதுவதற்கு பதிலாக ஒரு புகைப்படமாக எடுத்தக் கொண்டு – உருவம் அமங்கலமாக தெரிந்தாலும் – அந்தப் பறவையைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது எளிதாயிற்று. ஆனால், நல்ல பறவை நோக்குனராக வர குறிப்புகளும் அவசியம். மனதில் அனைத்தையும் பார்த்த மாத்திரத்தில் உள்வாங்குவதே சிறந்தது. அதான் போட்டோ எடுக்கப் போகிறோமே என்றிருந்தால் பல விஷயங்களைக் கவனிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. இப்போது பதிவின் சாராம்சத்திற்குள் நுழைவோம். என்னைப் போன்ற ஆரம்ப நிலை பறவை நோக்கர் எவ்வாறு, எங்கிருந்து தொடங்குவது………இந்தக் கேள்வியே அபத்தமான ஒன்று. ஒரு விஷயம் பிடித்துப் போய்விட்டால்……இணையம் எல்லா பக்கமும் வியாபித்திருக்கும் நிலையில் தகவல்களை தெரிந்து கொள்வது சுலபம். பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டிராமல் சட்டென்று களத்தில் இறங்குவதுதான் ஒரே வழி.

எங்கிருந்து பறவை நோக்குதலை ஆரம்பிப்பது என்றால்…………………..எஸ், வீட்டிலிருந்துதான். காக்கைகளை take it for grantedடாகக் கருதி கண்டும் காணாமல் இருக்கிறோம். அதிலிருந்து கூட நாம் ஆரம்பிக்கலாம் (காக்கைகளை வைத்து நாலைந்து ஆண்டுகளுக்கு முன் – உயிர்மை அறிவியில் புனைவு போட்டிக்கு அனுப்பு ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். உயிர்மையின் நல்ல நேரம்……….அந்த முடிவைக் கைவிட்டு விட்டேன்). கீழே, பொதுவாக நகர்ப்புறங்களிலும், ஊருப்புறங்களிலும் காணும் சில பறவைகளின் புகைப்படங்கள் உள்ளன. இதில் இன்னும் 20 வகைகளை சேர்க்க முடியும். ஆனால், 3o மேல் மட்டும் கொடுக்க காரணம்………இவை மட்டுமே நான் எடுத்த புகைப்படங்கள். இதுபோல, எத்தனை வகைகள் உங்கள் வீட்டிற்கும், அருகாமையிலும் உள்ளன என்பதை ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் செலவிட்டு நினைவுபடுத்திப் பாருங்கள். இப்படி யோசித்துதான் எங்கள் வீட்டிலும், வீட்டை சுற்றியும் ஏறக்குறைய 25 வகையான பறவைகள் இருப்பதைக் கண்டு அசந்தே போனேன்.

ஆக, வெற்றிகரமாக நமது அருகாமையில் இருக்கும் பறவைகளை கண்டுகொண்டாயிற்று. அடுத்தமுறை அவற்றைக் காணும் போது, அதன் பெயர்களை சட்டென்று சொல்லும் அளவிற்கு வளந்து விட்டோம். சரி, ஆனால் இதுமட்டும் போதுமா ? வெறும் பொழுதுபோக்கிற்காக பெயர்களை அடையாலும் காணுவது முதற்படி மட்டுமே. மிதமிஞ்சிய ஆர்வம் இருப்பின், அவற்றின் வாழ்க்கை முறை குறித்து தெரிந்துகொள்ளும் ஆவல் நிச்சயம் ஏற்படும். எவ்வாறு கூடு கட்டுகிறது, எத்தனை முட்டை இடுகிறது, ஆண் – பெண் வாழ்கை முறை, கூடு கட்டுதல் குஞ்சு பொரித்தல் போன்றவற்றில் எந்த இனம் அதிக பங்காற்றுகிறது போன்ற பல விஷயங்களை நாளாவட்டத்தில் கொஞ்சகொஞ்சமாக நாம் தெரிந்து கொள்வோம் (கொள்ள வேண்டும்). மிக முக்கியமாக, புலம்பெயர் பறவைகள் பற்றியும் – குறிப்பிட்ட இனம் திடீரென்று நம்மைச் சுற்றி காணமால் போவது பற்றியும் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம். நுண்ணுயிர்கள் (Microorganisms) ஒரு இடத்தில் இருந்து திடீரென காணமல் போவதைப் பற்றியெல்லாம் விரிவான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நுண்ணுயிர்களின் படிமத்தை வைத்தும் கூட இவ்வாறான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு Micro-paleontology என்று பெயர். எதற்கு இந்த நுண்ணுயிர்கள் பற்றிய உதாரணம் என்றால், நுண்ணியிர்கள் + விலங்குகள் + பறவைகள் + மனிதர்கள் என்று எல்லாம் சேர்ந்ததுதானே நமது சூழலின் அமைப்பு. மற்ற எல்லா உயிரினங்களும் ஒருவித சமநிலைக்குள்ளாகவே தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்ளும். பூச்சி – தவளை – பாம்பு என்ற பிரமீட் குறித்தெல்லாம் பள்ளியில் படித்திருப்போம். இந்த சூழ்நிலையை முற்றாக குலைக்கும் ஒரே ஜந்து – நாம்தான். மிதமிஞ்சிய இனப்பெருக்கத்தில் ஆரம்பித்து, தமது இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இம்சை தருவதே நமது தலையாய வேலையாக உள்ளது. After all, 20000 வருடமாகத்தான் நாம் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான வருடங்களாகவே விலங்குகளும் பறவைகளும் இங்கே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

பறவைகளை அடையாளம் கண்டுகொள்ள சில வழிமுறைகள்:

ஒருவழியாக வீட்டைச் சுற்றி இருக்கும் பறவை இனங்களை கண்டுகொண்டாயிற்று. அடுத்து…….நமக்கு அருகில் இருக்கும் நீர்நிலைகளுக்கும், மரங்கள் அடர்ந்த பகுதிகளுக்கும், புதர்கள் + குட்டைகள் நிறைந்த பகுதிகளுக்கும் செல்லலாம். அதிகாலையும், மதிய நேரமும் மிக உகந்த நேரங்களாகச் சொல்லப்படுகிறது. முடிந்தால், ஒரு பைனாகுலர் + கேமெரா சகிதம், பறவைப்படங்கள் அடங்கிய புத்தகத்துடன் அதிகாலையில் செல்லலாம். இதற்குப் பிறகுதான் முக்கியாமான விஷயமே இருக்கிறது. நம்மைப் போன்ற ஆரம்ப நிலை ஆட்கள்……எவ்வாறு பறவைகளை அடையாளம் காண்பது ?தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பொதுவாக காணப்படும் பறவைகள் என்றுஒரு பட்டியல் விக்கிபீடியாவில் இருக்கிறது. நான் அதிலிருக்கும் ஒவ்வொரு புகைபடுத்தையும் டவுன்லோட் செய்து, தமிழ் + ஆங்கில பெயர்களை இமேஜ் நேம்களாக சேவ் செய்துவைத்திருக்கிறேன். கிட்டதட்ட முன்னூறு புகைப்படங்கள். அது எப்போதும் என் டேப்லட்டில் இருக்கும். அதை அடிக்கடி பார்த்துவைத்துக் கொண்டால், ஓரளவிற்கு பொதுவான பறவைகளை சட்டென்று அடையாளம் காண ஏதுவாக இருக்கும். எப்படி பறவைகளை அடையாளபடுத்துவது என்பது குறித்து சில நுட்பங்களை பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

1) அளவு & வடிவம் (Size, Shape & Silhouette)

அளவைப் பொறுத்தவரை, நாமே இதனை முடிவு செய்யலாம். ஒரு ஐந்து பிரிவாக பிரித்துக் கொள்வோம்: மிகச் சிறிய – சிறிய – நடுத்தர – பெரிய – மிகப் பெரிய. நமக்குத் தெரிந்த ஒரு பறவையினை வைத்து இதனைப் பிரிக்கலாம். உதா: காகம் (காக்கை சுமார் 35cm இருக்கும்). காக்கையை விட மிகச் சிறியதாக, காக்கை அளவிற்கு, அதனைவிட மிகப் பெரியதாக………..என்று இனம் பிரிக்கலாம். மற்றொரு முக்கிய அம்சம், வடிவம். ஆந்தை, மரங்கொத்தி போன்ற பல பறவைகளுக்கு தனித்துவமான உருவ அமைப்பு உண்டு. பார்க்க பார்க்க நாளடைவில் நமக்கு இது பரிச்சயம் ஆகிவிடும்.

2) அலகின் அமைப்பு (Beak Structure)

இது மிகமிக முக்கியமானதொரு அம்சம். இதனைக் கண்டுகொண்டாலே பாதி வேலை முடிந்தது. விக்கிபீடியாவில் மிக அழகாக தமிழில் அலகுகளைக் கொண்ட படம் இருந்தது. அலகை கண்டுகொண்டாலே மிகச் சுலபமாக இன்னவகை என்று தெரிந்து கொள்ள முடியும். கீழிருக்கும் படத்தில் தமிழ் பெயருடன் ஆங்கிலப் பெயரை இனைத்துள்ளேன்.
3) உடல் – சிறகுகள் வண்ணம் & அமைப்பு (Color, Pattern & Plumage)

ஒரு பறவையைப் பார்க்கும் போது, பெரும்பாலும் முதலில் நம் கண்ணில்படுவது அதன் வண்ணங்களே. எந்த இடத்தில் என்ன மாதிரியான நிறம் என்பதையே முதலில் கவனிக்க வேண்டும். அதன் சிறகுகளின் நிறங்கள்; எவ்வாறு அந்நிறங்கள் படந்துள்ளது; அலகு/தலையில் இருக்கும் நிறங்கள்; மார்பு/வயிறு போன்றவற்றின் நிறங்கள்; விஷேசமாக மீசை போன்ற அமைப்புகள் உள்ளனவா என்று அனைத்தும் பார்க்கப் பழகுதல் நலம். இனப்பெருக்கத்திற்கு முன், பல ஆண் பறவைகளின் நிறங்கள் பயங்கர வேறுபாட்டுடன் இருக்கும் (Breeding Plumage).

மேலே கூறியவற்றைப் செயல்படுத்த கீழுள்ள படம் மிக உதவிகரமாக இருக்கும் (இருந்தது). பறவைகளின் உடல் பகுதிகளைப் பற்றிய பெயர்களை தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பெடுக்கும் போதும், இணையத்தில் தேடும் போதும்அவை பெரிதும் உதவும்.


4) வாழிடம் (Habitat)

ஒவ்வொரு பறவைக்கும் குறிப்பான வாழிடங்கள் உண்டு. ஆந்தை என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வாழும். பெரும்பாலான மீன்கொத்திகள் நீர்நிலைகளின் அருகிலேயே வாழும். பறவை நோக்குதலில் காலப்போக்கில் நாம் இந்த விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

5) பறக்கும் முறை & பழக்கவழக்கங்கள் (Behavioral aspects)

கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) மீன்பிடிக்கும் முறை அலாதியானது. நீர்நிலைகளுக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் போது, அப்படியே அந்தரத்தில் நின்று……..கீழே மீன்கள் தெரிகின்றனவா என்பதை உறுதி செய்துகொண்டு மேலிருந்து……..சர்ர்ர்ர்ர்ரென்று இறங்கி டைவ் அடித்து தான் மீன் பிடிக்கும். அதுபோல, மரங்கொத்திக்கள் மற்ற பறவைகளிடத்தும் வேறுபட்டு, செங்குத்தாக மரங்களில் ஏறவும் இறங்கவும் செய்யும். இதுபோன்றே பல பறவைகளுக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன. பறவைகள் பறக்கும் போது, அதன் வால் எவ்வாறு திரும்புகிறது – தரையிறங்கும் பொழுதும் மேலெழும் பொழுதும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

6) அழைப்பு & கீச்சல் ( Call & Song)

அழைப்பு (Call) மிக குறுகிய அளவிலயே ஒலிக்கும். ஆண்,பெண் இரண்டுமே இடைவிடாமல் இதனை ஒலித்துக் கொண்டிருக்கும். பொதுவாக இரை,இடம்,தற்காப்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த பறவைகள் இதனை எழுப்பும். நாம் பேசும் வார்த்தைகளை போல. கீச்சல் (Song)என்பது……தொடர்ச்சியாக,அழைப்புகளைவிட நீண்டதாக, ஏற்ற இறக்கங்களோடு ஒரு ரிதமில் ஒலிக்கும். “இது என் ஏரியா…………உள்ள வராத, பெண் இனத்தை கவர” இவைகள் தான் கீச்சல்களின் முக்கிய நோக்கம். ” Why birds sings ? ” என்ற செமத்தியானதொரு டாகுமென்டரி உள்ளது. அதனை பார்க்க முடிந்தால் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மனிதர்களைப் போல, உணர்வுகளை வெளிப்படுத்தவே பறவைகள் பாடுகின்றன என்று நம்பும் ஒரு ஆளைப் பற்றிய படம்.   ( ” கீச்சல் ” – வார்த்தை பிரயோகத்தை நானே யூகத்தில் போட்டிருக்கிறேன். சரியா தவறா தெரியவில்லை………..என்று யோசித்தவாறே நெட்டில் தேடினால்…..அட, அப்படி ஒரு வார்த்தை உண்டு).

7) பறவைகளின் கால் அமைப்பு, முக்கியமாக நகங்கள்:

கழுகு, பருந்து போன்ற பறவைகளுக்களின் கால் அமைப்பு பிரத்தியேகமாக இருப்பதை நாம் கவனித்திருபோம். இதன் அடிப்படையிலும் பறவைகளை கண்டுகொள்ளலாம்.

இவைகள் தவிர, இன்னும் சில வழிமுறைகளில் பறவைகளைக் கண்டறியலாம் என்றாலும், இந்த ஆறில் மட்டுமே எனக்கு அனுபவம் உள்ளபடியால்….பிறவற்றை கூறத் தெரியவில்லை. மேலதிக தகவல்களுக்கு, இந்தத் தளத்தைப் பார்க்கலாம்.

---------------------------------------------------------

சரி, பறவைகள் பற்றி ஒன்றுமே தெரியாத ஆள் ஒருவர் இந்தப் பதிவைப் படிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் எதேச்சையாக அவர் கீழே படத்தில் இருக்கும் பறவையைக் காண நேர்கிறது. இந்த ஆறு வழிமுறைகளை வைத்து எவ்வாறு அதன் பெயரைத் தெரிந்து கொள்வது ?

1) பறவை மீடியம் சைசில் இருந்தது

2) தலையில் கொண்டை(Crest) இருந்தது

3) அலகின் அருகே சிவப்பு மீசை மாதிரி (Whisker) இருந்தது

4) கழிவாய்(Vent) அருகேயும் சிவப்பு கலர் இருந்தது.

இந்தத் தகவல்களை, India+bird+crest+red whisker+red vent என்று கூகிளில் அடித்தால் போதும் – இமேஜ் சர்ச்சில் எல்லாம் தெரிந்துவிடும். இதற்குத்தான் பறவைகளின் பாகங்களின் பெயர்களை தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். பல சமயங்களில் கைகொடுக்கும். ஆனால், இது சில சமயங்களில் கைகொடுக்காமல் போகும். அதுனாலதான் நல்ல புத்தகம் அவசியம்.

பைனாகுலர் – மிகவும் அவசியம் (ஹி…ஹி…இவ்ளோ வாய்கிழிய பேசும் என்னிடமும் பைனாகுலர் இல்லை). இந்தக் கட்டுரையில்  என்ன மாதிரியான பைனாகுலர் வாங்கலாம் என்பது பற்றி தெளிவாக கூறியிருக்கிறார்கள். பட்ஜெட் பிரச்சனை உள்ளவர்கள், Bushnell வாங்கலாம் என்று நினைகிறேன். போன வாரம் சென்னை ஸ்பென்சரில் ஒரு கடையில் பார்த்தேன். Olympus, Celestronனைக் காட்டிலும் நன்றாகவே இருந்தது. குறிப்பாக, கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும். விலை: Rs. 3900. Magnification: 7 X 35

---------------------------------------------------------

தமிழ்நாட்டில் பறவை நோக்குதலுக்கான சில இடங்கள்:
  • Important bird areas in Tamilnadu: LINK
  • இந்தத் தளத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள இடங்கள் பற்றியும் விரிவான தகவல்கள் உள்ளன.

தமிழில் பறவைகள்,காணுயிர்கள் பற்றிய சில புத்தகங்கள்:
  • பறவை உலகம்: சலீம் அலி, ஸயீக் ஃபதேஹ் அலி: National Book Trust of India (NBTH)
  • ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி: சலீம் அலி: National Book Trust of India (NBTH)
  • மழைக்காலமும் குயிலோசையும்: மா. கிருஷ்ணன்: காலச்சுவடு பதிப்பகம்
  • வட்டமிடும் கழகு: ச. முகமது அலி: சந்தியா பதிப்பகம் (85 ஆண்டுகளுக்குப் பின் என்ற, இருவரிக் காடை பற்றிய   கட்டுரையை ஒரு திரைப்படமாக எடுக்கலாம். அவ்ளோ சுவாரசியம் நிறைந்தது)
  • இன்னும் பிறக்காத தலைமுறைக்காக: சு. தியடோர் பாஸ்கரன்: உயிர்மை பதிப்பகம்
  • வானில் பறக்கும் புள்ளெலாம்: சு.தியடோர் பாஸ்கரன்: உயிர்மை பதிப்பகம்
  • கானுறை வேங்கை: உல்லாஸ் கரந்த்: காலச்சுவடு பதிப்பகம்
  • யானைகள் – அழியும் பேருயிர்: ச. முகமது அலி, க. யோகானந்த்: இயற்கை வரலாற்று அறக்கட்டளை
  • இயற்கை – செய்திகள் & சிந்தனைகள்: ச. முகமது அலி: இயற்கை வரலாற்று அறக்கட்டளை
  • பல்லுயிரியம்: ச. முகமது அலி: வாசல் பதிப்பகம்
  • பறவைகள்: அறிமுகக் கையேடு: ப.ஜெகநாதன் & ஆசை: க்ரியா பதிப்பகம்
  • தமிழ்நாட்டுப் பறவைகள்: க. ரத்னம்: மெய்யப்பன் தமிழாய்வகம் (இந்த லிஸ்ட்ல நா படிக்காத புத்தகம். சொந்தக்காரங்கள புடிச்சு பதிப்பகத்துலயே கேட்டுட்டேன். ஸ்டாக் இல்லியாம்)
  • சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்: பி.எல்.சாமி: சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம் (இந்த புக்கும் இதுவரை கிடைக்கவே இல்லை)

ஆங்கிலத்தில் பறவைகள் குறித்த சில நூல்கள்:
  • Joy of bird watching: Vishwa Mohan Tiwari: National Book Trust of India (NBTH)
  • The Book of Indian Birds: Salim Ali: Oxford University Press
  • Birds of Indian Subcontinent: Richard Grimmett, Carol Inskipp, Tim Inskipp 2nd Edition: Helm Publishing Company – இணையத்தில் பல தளங்களில் இந்த புக்கத்தான் சஜஸ்ட் செய்கிறார்கள். நானும் படித்ததில்லை

 குறிப்பிடத்தக்க இணையதளங்கள்:

Indiabirds.com – என் சாய்ஸ் இதுதான். படங்களை வைத்தே (Gallery) டக்கென்று என்ன பறவை என்று நம்மால் அடையாளம் காண முடியும். பறவைகளின் ஒலிக் குறிப்புகளும் இருப்பது இன்னொரு அட்டகாசமான அம்சம். என் தளத்தை இப்படி ஆக்கணும் என்பது தான் என் குறைந்தபட்ச லட்சியம்.

Kolkatabirds.com – அட்டகாசமான தளம். என்ன மாதிரியான பைனாகுலர், கேமரா என்பதில் ஆரம்பிச்சு ஏகப்பட்ட டிப்ஸ்கள் உண்டு. ஆனா, பறவைகளின் படங்கள் பெயர் தெரிந்தால் மட்டுமே தேட முடியும்

Myexperiencewithbirds.in - கிட்டதட்ட 200 வகை பறவைகளின் புகைப்படங்கள் + தமிழ் பெயருடன் உள்ளன. கமெண்ட்ஸ், ஹிட்ஸ் போன்றவற்றையெல்லாம் பற்றை கவலையேபடாமல் இவர் ஏகப்பட்ட படங்களை அப்லோட் செய்துள்ளார். இவரைப் போன்ற ஆட்கள் தான் இதில் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

Birding.in – மற்றோரு நல்ல தளம். இதிலும் படங்களைப் பார்த்தே சுலபமாகத் தேடலாம்

Indianaturewatch.net – பறப்பன,ஊர்வன ன்னு அனைத்திற்க்குமான தளம்.

Nerdybirders.com – பட்டாம்பூச்சிகள், தட்டான், பறவை – இப்பை எல்லாத்துக்கும் உகந்த தளம். தேடுவது சுலபம்.

Indiabutterflies.tripod.com – முழுக்க முழக்க பட்டாம்பூச்சிகளுக்கான தளம்.

Dragonflies of India : A Field Guide – 111 பதினோரு வகை இந்திய தட்டாம்பூச்சிகள் பற்றிய அருமையான களஆய்வுத் தொகுப்பு.

Theblogofindianodonata.com – இதுவும் தட்டாம்பூச்சிகள் பற்றிய நல்ல புகைப்படங்கள் அடங்கிய சைட்.

சரி, நமது ஊரில் பறவை நோக்குதலுக்குரிய இடங்கள் இருக்கானு எப்படி தெரிஞ்சுக்க……….இணையமே துணை. உதாரணமா, சென்னையை எடுத்துகிட்டா…….. Birding in chennai இந்த பேஜ்ல சென்னை + அதன் சுற்றுப்புறங்களில் பேர்ட் வாட்சிங் பகுதிகள் பத்தி டீடய்லான விஷயங்கள் இருக்கு. இதுபோலத்தான் பெங்களூர், கோவை உட்பட ஊர்களுக்கும் நெட்டில் தேடுனா தகவல்கள் கொட்டுது.

The Cornell lab of ornithology – செமத்தியான சைட். ஏகப்பட்ட தகவல்கள் இருக்கு. பேர்ட் வாட்சிங்குரிய சாஃப்ட்வேர்கள் பலது இருக்கு.

The Internet bird collection – உலகம் முழுமைக்குமான பறவைகள் பற்றிய தளம் இது. Calls & Songs, Videos இருப்பது மற்றொரு சிறப்பு.

---------------------------------------------------------

பறவை நோக்குதலின் நெறிமுறைகள் (Birding Ethics):

பறவை நோக்குதலுக்காக ஜோராக கிளம்பும் போது, மிக முக்கியமானதொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். “பறவை நோக்குதலின் நெறிமுறைகள் (Birding Ethics)” தான் அது. Fbலோ, இதுமாதிரி தளத்திலோ புகைப்படத்தைப் போட்டு பேர் வாங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து ஏகப்பட்ட வகையில் பறவைகளையும் அதன் வாழ்விடங்களையும் நாம் அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஹைவேசில் சென்று கொண்டிருக்கும் போது, டிம் செய்யாமல் வரும் வண்டிகளின் வெளிச்சம் நம் கண்களில் சில நிமிடங்களுக்கு விழுவதே நமக்கு எவ்வளவு எரிச்சலை ஏற்படுத்துகிறது……..மசினகுடி மாதிரியான இடங்களில் வாகனங்களின் ஹைட்லைட் வெளிச்சத்தை திடீரென்று ஒரு விலங்கின் கண்களில் அடித்து அதனை ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகள் பலவும் நடக்கின்றன. ப்ளாஷ் உபயோகிப்பதில் இருந்து ஏகப்பட விஷயங்களிள் கவனமாக இருக்க வேண்டும் (நான் இதுவரை பூச்சிகளில் ஆரம்பித்து பறவைகள் வரை எதற்குமே ப்ளாஷ் உபயோகித்து இல்லை). என்னெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றிய தெளிவான டிப்ஸ்கள் இங்கே உள்ளன. அவற்றுள் சில:
  • நாம்தாம் அவற்றின் எல்லைக்குள் நுழைகிறோம் என்பதை மனதில் கொண்டு கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலம். அவற்றிக்கும் ப்ரைவசி உண்டுதானே.
  • காச்மூச் என்று கத்திக் கொண்டிருப்பதும் உரக்க பேசுவதும் செல்போனிகளின் மிதமிஞ்சிய சத்தத்துடன் கூடிய ரிங்டோன்கள்…..போன்றவைகளை தவிர்க்க வேண்டும்
  • மிகமிக முக்கியமானது, அடைகாக்கும் காலங்களில் பறவைகளை எவ்விதத்திலும் நெருங்குவது தவிர்க்க வேண்டும். எரிச்சலடைந்தோ கலக்கமுற்றோ பறவைகள் முட்டையை விட்டுவிட்டு பறக்க வாய்ப்புண்டு.
  • ப்ளாஸ்டிக், பாலிதீன் போன்ற பொருட்களை காடுகளில் உபயோகிக்க கூடாது (பொதுவாகவே இவைகளை தவிர்க்க முடிந்தால் கூடுதல் +)
  • http://www.conservationindia.org/articles/photographers-ruining-hesaraghatta இதுபோன்ற பக்கித்தனமான துரத்தல்களில் ஈடுபடும் ஆட்களும் உண்டு போல. நம்மை யாராவது ஜீப்பில் இப்படி துரத்தினால் எப்படி இருக்கும் ?
---------------------------------------------------------

பறவை நோக்குதலில் ஆரம்பித்து இயற்கை சார்ந்த விஷயங்கள் ஆகட்டும், இல்லை நமது ரசனைக்குரிய விஷயங்கள் ஆகட்டும்………..எல்லாமே மனதுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உண்மையாகவே இதிலெல்லாம் நாம் பிடிப்புடன் இருந்தால்…..அடுத்தவரின் மீது வன்மம்,காழ்ப்புணர்ச்சி எல்லாம் தோன்றாது. திரும்ப ஒன்றும் செய்யமாட்டாதவர்களிடத்தில் காட்டப்படும் கோபமும் எரிச்சலும் குறையும் (வேண்டும்). சக உயிரினம் என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டால், பெண்கள் – சக மனுஷி, vice versa எல்லாம் தானாகவே புரிந்துவிடும். Romanticize செய்து சுகிசிவம் ரேஞ்சில் பேசுவதாக தோன்றினாலும் என் பார்வை இதுதான். ஆனால்,யதார்த்தம் வேறுமாதிரியாகவே உள்ளது. ரசனையை மேம்படுத்திக்கொள்ள பல புத்தகங்களைப் படிக்கிறேன், சினிமாக்களை பார்க்கிறோம்……….ஆனால் மனதில் கோபமும் வெறுப்பும் வன்மமும் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்றால், சும்மா இருத்தலே நலம். பல யோக மையங்களில் தியானம், உள்ளொளி தரிசனம் என்றெல்லாம் சொல்லி, இடங்களை வளைத்துப் போட்டு இயற்கை சூழ்நிலையை சின்னாபின்னமாக்கி என்னத்தை கண்டுனர்வார்கள் என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை. என்னைப் பொறுத்தமட்டில், ஆழ்ந்த ரசிப்புடன் செய்யபடும் அனைத்து விஷயங்களுமே தியானம் தான். இந்த பேட்டியில் கூந்தங்குளம் மக்கள் பற்றி சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள். யோகா மையங்களில் போய் விழும் மக்களிடம் இல்லாத அமைதி, தெளிவு இந்த கிராம மக்களிடம் உண்டு என்று நான் கருதுகிறேன். Over the topபாக இந்த வாக்கியம் தோன்றலாம்…….ஆனால் இதுதான் உண்மை. இயற்கை ஒரு சர்வரோக நிவாரணி. அதன் பல்வேறு பரிமாணங்களை ரசிக்கக் பழகிக் கொண்டோமேயானால் வாழ்க்கை போர் அடிக்கவே செய்யாது. எஸ், எல்லாருக்கும் கவலைகள் உண்டு…கடமைகள் உண்டு…..இழப்புகள் உண்டு. ஆனால் அதையும் மீறி கொஞ்சம் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தால்……அதுவே ஒரு மிகப்பெரிய driving forceசாக இருப்பதை, என் சொந்த அனுபவத்தில் இருந்து கூறுகிறேன்.

தமிழ்நாட்டில் காணப்படும் பொதுவான பறவைகளில் சில:

மேலே சொல்லியிருந்தது போல, புகைபடங்கள் நான் எடுத்தது. பல படங்களின் தரம் கேள்விக்குறியே. ஆனாலும் அடையாளம் கண்டுகொள்ள உதவும் என்று நினைக்கிறேன். பனங்காடை முதலான, பல பரவலான பறவைகள் இதில் மிஸ்ஸிங்.
பி.கு.கள்:
  • சின்ன பசங்களுக்கு பள்ளிகளில் இதுமாதிரி பறவை நோக்குதல் குறித்து சில இடங்களில் க்ளாஸ் நடக்குது. இதை நாமே சுளுவாக செய்யலாம்
  • பறவைகள் கணக்கெடுப்பு என்று ஒரு குறிப்பிட்ட காலங்களில் நடைபெறுகிறது. அதுபோன்றே, விலங்குகள் கனக்கெடுப்பும். அதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் என்ன வழிமுறை என்று தெரியவில்லை
  • தினமும் காலையில் அரைமணி நேரம், முடிந்தால் சாயங்கலாம் – நமது வீட்டிற்கு பக்கத்தில் தென்படும் பறவைகளில் இருந்து ஆரம்பித்தாலே கொஞ்சநாளில் பழகிவிடும்
  • பறவைகளின் பெயர்களில் ஏதாவது பிழை இருப்பின் சுட்டுக் காட்டவும்
-------------------------------------

Update: Bird Watchingக்கு பயன்படும்(ன்னு நெனைக்கிறேன்) ஈபுக்: இந்த கட்டுரை தான் ஆரம்பம். இத அடிப்படையா வெச்சு தினகரன்லயும் எழுதியாச்சு. புக்கும் போட்டாச்சு

Facebookers..

13 comments :

  1. you are great thalaives.. Keep it up

    ReplyDelete
  2. அருமை, அண்டை வீட்டாரைவிட அண்டைக் கூட்டாரை நன்கு நோக்கி நல்ல பல தகவல்களை எமக்களிப்பீராக.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  3. பதிவிற்கும் பஹிர்விக்கும் நன்றி ...............really great.....

    ReplyDelete
  4. ஷேர் பண்றது மட்டும்தான் நான் இந்த கட்டுரைக்கு பண்ணுற மரியாதையா இருக்கும். ஏன்னா கமெண்ட் பண்ற அளவுக்கு அறிவும் இல்லை. அனுபவமும் இல்லை. சோ..........ஒன்லி ஷேரிங்..

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பதிவு. தமிழில் பறவை நோக்குவதை (இணையம் பயன்படுத்தும்) வெகுசன மக்களுக்கு கொண்டு சேர்க்க எடுக்கப்பட்ட முதல் முயற்சி இதுதான். தொடர்ந்து பறவைகளை பற்றியும், அதன் வாழிடங்கள் பற்றிம் எழுதுங்கள். பல இயற்கை சார்ந்த முகநூல் பக்கங்களில் இப்பதிவை பகிர்ந்துள்ளேன். வாழ்த்துகள்

    ReplyDelete
  6. சிறிய திருத்தம்
    //அதிகாலையும், மதிய நேரமும் மிக உகந்த நேரங்களாகச் சொல்லப்படுகிறது//

    அதிகாலையும் (வெளிச்சம் வந்தவுடன் - சுமார் 9/10 மணி வரை) மாலை நேரமும் (3/4 மணி முதல் வெளிச்சம் போகும் வரை) பறவை நோக்குவதற்கு உகந்த நேரம். இவை இந்தியாவின் பகுதிகேற்ப (தட்பவெப்ப நிலைக்கேற்ப) மாறுபடலாம்!

    ReplyDelete
  7. கொழந்தMarch 16, 2013 at 1:29 AM

    நன்றி பாஸ்....எழுத இப்ப கொஞ்சம் நேரம் இருக்கு. நிறைய பேருக்கு அது இல்ல...அவ்ளோதான் வித்தியாசம்

    ReplyDelete
  8. கொழந்தMarch 16, 2013 at 1:30 AM

    எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி.... நிச்சயம் பலது எழுதி உசுர வாங்குறேன்....நா முக்கியமா நினைக்கிற பல பதிவுகளில் உங்க கமென்ட் வந்திருது...அதுக்கு ஸ்பெஷல் நன்றி

    ReplyDelete
  9. கொழந்தMarch 16, 2013 at 1:30 AM

    பொறுமையா நேரம் ஒதுக்கி படிச்சதுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்......

    ReplyDelete
  10. கொழந்தMarch 16, 2013 at 1:31 AM

    உங்க ஊர் சைட் பல வித்தியாசமான பறவைகள் இருக்கும். நீங்கதான் அடிக்கடி பிரயாணம் போறீங்களே.....கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சா நல்லா பொழுதுபோகும்

    ReplyDelete
  11. கொழந்தMarch 16, 2013 at 1:34 AM

    பாய்ன்ட் டேக்கன்...... மாலை நேரம் சொல்லணும்னு இருந்தேன்...ஆனா மறந்திருச்சு. உங்க ரெண்டு கமென்ட்க்கும் ரொம்ப நன்றி..

    // தொடர்ந்து பறவைகளை பற்றியும், அதன் வாழிடங்கள் பற்றிம் எழுதுங்கள். பல இயற்கை சார்ந்த முகநூல் பக்கங்களில் இப்பதிவை பகிர்ந்துள்ளேன். வாழ்த்துகள் //

    நிச்சயமா.......பலபேர் இத சத்தமில்லாம செஞ்சுகிட்டு இருக்காங்க...நா ப்லாக்ல உலகில் கொஞ்சம் அறிமுகம் என்பதால் கொஞ்சமா இதுவெளிய தெரியுது..

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல்கள் அருமை

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல்கள் அருமை

    ReplyDelete