Thursday, February 7, 2013

குடியின்றி அமையா(தா) உலகு

உத்தேசமானதொரு கணக்கில் முப்பது ரூபாய் பெறாத குடிக்கு வாடிக்கையாளன் செய்யும் செலவு என்பத்தைந்து ரூபாய். அவனுக்கு ஊக்கத் தொகையாகக் கிடைப்பது, அனுபவிப்பது பீடிப்புகை, மூச்சு முட்டல், கொசுக்கடி, சாக்கடை நாற்றம், வாந்தி, அருவருப்பு, பகலானால் உலகத்து ஈக்கள், காறித்துப்பிய எச்சில், விருப்பம் போலத் திரிதரும் எலி, பெருச்சாளி, மூஞ்சூறு, தெறிபாச்சா, கண்டாங்கி பாச்சா, பலவகைப் பல்லிகள், காலில் உராயும் பூனைக்குட்டிகள், குரைக்காமல் வாலொதிக்கிக் கிடக்கும் சொறி பிடித்த நாய்கள்.......

வாடிக்கையாளர்களான கனரக வாகன ஓட்டிகள், சாலைப் பணியாளர்கள், கை வண்டிக்காரர், துப்புரவு தொழிலாளிகள், குறு வியாபாரிகள், சிறு தொழிற்கூடங்களில் வார்ப்பட. கடைசல், கருமான் தொழில் செய்வோர், கட்டிடத் தொழிற் கூலிகள், யாவரும் பன்றிகளுக்கும் கீழாகத் தாம் நடத்தப்படுவதை ஒரு போதையின் பொருட்டுச் சகித்துக் கொள்கிறார்கள். அவர்களது வாக்குகள் வேண்டும், வரிப்பணம் வேண்டும், உழைப்பு வேண்டும், கோஷம் வேண்டும், கூட்டம் வேண்டும், ஆனால் மனிதனாக நடத்தப்பட வேண்டா......
- நாஞ்சில் நாடன், உண்ணற்க கள்ளை

"மதம் ஒரு அபின்/Religion is the opium of the masses"......புகழ்பெற்ற ஸ்டிரியோடைப்பிக்காக பயன்படுத்தப்பட்டு  வரும்  மேற்கோள்களில் ஒன்று. சரமாரியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்படுவது. ஆனால், நிஜத்தில் மார்க்ஸ் சொன்னது   " Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people". ஆனால், ஏன் மார்க்ஸ் போதை வஸ்துவுடன் மதத்தை ஒப்பிட வேண்டும் - the expression of real suffering and a protest against real suffering. இந்தப் புத்தகத்தின் பதிப்புரையில் ஒரு நீண்ட வாக்கியம் வருகிறது... "மது தீர்ந்த காலிக் கோப்பைகள் சூன்யமானவை அல்ல. அவற்றில் நம் மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் அவலங்களையும் இழிவுகளையும் கோபங்களையும் எள்ளலகளையும் அசிங்கங்களையும் அவரவர் வசதிக்கேற்ப இட்டு நிரப்புகிறோம்". ஒரு தொடர்பை என்னால் உணர முடிகிறது. வூடி ஆலனின் Midnight in Parisல், ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்லும் " Nostalgia is denial...denial of the painful present... ". குடிப்பவர்கள் கொடுக்கும் விளக்கங்களை வைத்துப் பார்க்கும் போது குடிக்கும் இது முற்றிலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

குடியால் ஒரு குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போனதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்,பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். தினமும் மாலை வீடு திரும்பும் போது, ஒரு ஐந்து பேராவது எங்கள் ஏரியாவில் தள்ளாடாமல் நடந்ததில்லை. குடியின் இன்னொரு முகம் - பெண்கள் & குழந்தைகள் மீதான அழுத்தம்/வன்முறை. ஒருபுறம் அரசாங்கமே ஏகத்துக்கும் டாஸ்மாக் கடைகளை திறப்பதும், சற்றே வசதியுள்ளவர்கள் கொஞ்சம் தரமான மது வகைகளை குடிப்பதும், அவர்களுக்குரிய வெளி கிடைப்பதுமாய் இருக்க - வசதியற்ற லோயர்/மிடில் க்ளாஸ் குடிமக்களின் நிலைமை தான் மிகுந்த கவலைக்குரியது. மொத்தமாக குடிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், புள்ளி விவரங்களின்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்தில் தொடங்கி பல குற்றங்கள் வரை குடியும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை. சிறுவயது முதல் குடி(பவர்கள்) மீது(ம்) ஒரு அசூயையே இருந்தது. ஆனால் அனுபவம் காரணமாக அதுமாறியது. நான் ஷார்ட் - சைட் காரணமாக கண்ணாடி அணிந்திருக்கிறேன். பவர் -2. கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் அதே பவரில் தான் கண்ணாடி அணிவார்கள்/அணிய வேண்டும் என்று நான் நினைப்பது (மொக்க உதாரணம் தான்) எவ்வளவு அபத்தமோ அதேபோன்று என் மதிப்பீடுகளை அடுத்தவரிடமும் எதிர்பார்ப்பது. அவரவர் வளர்ந்த சூழ்நிலை, வாழ்வியல் முறை, அனுபவங்கள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா....ஆனால், "ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி என்பது தனிச் சொத்து" என்பதில் எனக்கு உறுதியான பிடிப்புண்டு. பக்தி, குடி, இசங்கள் என்று எல்லாவற்றையும் பொதுவெளிக்கு கொண்டுவரும் போது என் மூக்கை தொடும் அளவுக்கு நீட்டாதீர்கள்.....நானும் உங்கள் மூக்கை தொட மாட்டேன் என்ற அளவில் என் "ஐடியாலஜி"யில் முன்னேறியிருக்கிறேன்.

நிற்க: வெறுமனே, குடிக்கும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் தான் கவலை தீர்வது போன்றதொரு உணர்வும், அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டுச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. சற்று விரிவாகப் பேசதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், இந்தப் பகுதி மந்தமாக (என் எழுத்து வன்மையின் காரணமாக ) தோன்றலாம்.

-------------------------------------------------------------------------

இந்தப் படங்கள் சிகரெட்டின் நிக்கோடின்காக கொடுக்கப்பட்டது. ஆனால், ஆல்கஹாலின் செயல்பாட்டை எளிதில் புரிந்து கொள்ள இதுவே ஏதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூளையின் அகராதியில், Pleasure = டொபமைன் (ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர்) என்று அர்த்தம். (நான் எழுதிய பதிவு எனக்கே கை கொடுத்தது குறித்து மகிழ்ச்சி). இந்த டொபமைன் பல்வேறு காரணிகளால் தூண்டப்படலாம். பிடித்த இசை, செக்ஸ், உணவு, பஞ்சி ஜம்பிங் போன்ற பல இயற்கையான காரணிகள் உள்ளன.


அதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும் போது, மூளையில் இருக்கும் மஞ்சள் கலர் செல் ஒன்று, சில நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை வெளிவிடும் (மஞ்சள் துகள்கள்). சிவப்பு குள்ளர்களின் வேலை, அளவைமீறி அத்துகள்கள் வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்வது. மஞ்சள் துணுக்குகள் அருகிலிருக்கும் டொபமைன் செல்லைத் தூண்டும். டொபமைன் சுரக்க ஆரம்பிக்கும். அது பக்கத்தில் இருக்கும் மற்றொரு பிங்க் நிற செல்லை அடையும் போது, நாம் "மகிழ்ச்சி, ஆனந்தம்,நிறைவை" உணர்கிறோம். சிவப்பு குள்ளர்கள் & டொபமைன் செல் ரெண்டும் ஒரு சில நிமிடங்களில் "போதும்....இத்தோடு நிறுத்திக் கொள்வோம்" என்றொரு உடன்படிக்கைக்கு வந்து டொபமைன் சுரப்பதை நிறுத்திவிடும். இதுதான் இயற்கையான காரணிகளால் ஏற்படும் நிகழ்வு.

இதுவே, நிகோடின் - ஆல்கஹால் - போதை வஸ்துக்களை உட்கொண்டபின் எவ்வாறு மாறுகிறது என்று பார்ப்போம்.


அதே மெக்கானிசம் தான். ஆனால், போதை வஸ்துக்கள் நேரடியாக டொபமைன் செல்களை தாக்கி - டொபமைனை சுரக்கச் செய்துவிடும். சிவப்பு குள்ளர்களின் பங்கே இதில் மிகக் கம்மி...விளைவு....இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மூளை அந்த சுகத்தை விரும்ப ஆரம்பித்துவிடும்.  (விரிவான தகவல்களுக்கு)

இங்கு ஒரு சிறிய விளக்கத்தை பார்த்தாக வேண்டும். கோகைன் போன்ற போதை வஸ்துக்கள், நேரடியாக டொபமைன் செல்களை தாக்கும். ஆனால் ஆல்கஹாலில் பல்வேறு மூலக்கூறுகள் இருப்பதால் அது நேரடியாக டொபமைன் செல்களை (கவனிக்க: நேரடியாக) தாக்குகிறதா என்பது குறித்து இன்னமும் சரிவர தெரியவரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால்,  டொபமைனை சுரக்கச் செய்வதில் ஆல்கஹாலின் பங்கு நிச்சயம் உண்டு. அதன் விளைவாகவே மிதமிஞ்சிய குடிக்குப் பிறகு ஏற்படும்  மாற்றங்களை காணலாம். ரெண்டு பெக் அடிப்பவர்கள் தொடர்ந்து அதையே அடித்துக் கொண்டிருந்தால் மூளை அதற்கு பழகிவிடும். ஆனால், அவரே கொஞ்ச கொஞ்சாமாக அளவை கூட்ட ஆரம்பித்தால்......ஆரம்பித்தது பிரச்சனை. இதுபோன்ற விளைவுகள் தான் ஏற்படும்.

ஆல்கஹாலைப் போன்ற, ஏன் அதைவிட இயற்கையாகவே போதை தரும் வஸ்துக்களும் உள்ளன. உதாரணமாக இசையை எடுத்துக் கொள்வோம். மிகத் தெளிவாக இந்தக் கட்டுரையில் இசை எவ்வாறு டொபமைனை தூண்டுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மூளை - ஆல்கஹால் தொடர்பு பற்றிய தெரிந்துகொள்ள விழைவோர்:
-------------------------------------------------------------------------

நான் இதுவரை குடித்தது இல்லை. அதுபற்றிய நினைப்பே எழுந்ததில்லை. இதுவொரு க்ளிஷேத்தனமான வாக்கியமாகத் தோன்றினாலும், சிலருக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்காது. அதுபோல இதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவ்வளவே. ஆனால், நண்பர்கள் சிலர் - "ஜாலிக்கு" போன்ற வார்த்தைகளை என்னிடம் பயன்படுத்தும் போது, 'எனக்கு ஆர்வம் இல்லை' என்பதைச் சொல்லி புரிய வைக்க கஷ்டப்பட வேண்டும்/பட்டிருக்கிறேன். அப்போது கீழ்கண்ட விஷயங்களைக் கொண்டுதான் பேச வேண்டியிருக்கும்.

ஒருவர் (கொஞ்சமாக)குடித்துவிட்டு ஒரு இசையை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். படு மோசமாக உள்ளது (அ) மிகச் சிறந்த இசை என்று ஒரு கருத்திற்கு வருகிறார். ஆனால், அது அவரது முழுத் திறனுடன் உணரந்தாரா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் மேலே சொன்னது போல, ஆல்கஹால் அவர் எடுக்கும் முடிவுகளில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும். அது எந்தளவுக்கு என்பது ஆட்களைப் பொறுத்தவரை வேறுபடலாம். ஆனால், ஆல்கஹால் இல்லாமல் அவர் எடுக்கும் முடிவுக்கும் உட்கொண்டபின் எடுக்கும் முடிவுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. அதுனால் ஒரு external stimuli என்னை அதிகாரப்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. I am & i will be the boss......அதீத மகிழ்ச்சியோ பயங்கர துக்கமோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவே நான் விரும்புகிறேன். எல்லாம் அனுபவம் தானே.

ஒரு அக்மார்க் நாத்திகர் இருக்கிறார். அதே வீட்டில் ஆத்திகரும் இருக்கிறார். இருவரும் கடும் உழைப்பாளிகள். ஆத்திகர், கடவுளை நம்பினாலும் தனது கடும் உழைப்பின் மூலமே முன்னேற முடியும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். இருவருக்கும் ஒரே சமயத்தில் பயங்கர நஷ்டம் ஏற்படுகிறது. மனப்பாரம் குறைய, ஆத்திகர் அடிக்கடி கோவிலுக்குச் செல்கிறார். நாத்திகர் - அதே காரணத்தைக் கூறி குடிக்கிறார். இரண்டிற்கும் யாதொரு வேறுபாடும்எனக்குத் தெரியவில்லை. கண்டவர்கள் தெரியப்படுத்தலாம். ஒருவருக்கு குடி - மற்றொருவருக்கு கடவுள். மார்க்ஸ் - மதம் - போதை. உடல்நிலையை கருத்தில் கொண்டு கடவுளே பரவாயில்லை என்று நான் சொல்வேன்.

என்ன இருந்தாலும் குடி என்று வரும் போது..........இப்போது என் நண்பன் ஒருவனே, மகிழ்ச்சி - கொண்டாட்டம் என்பதற்காக   குடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வெயிலில் ஒருபோதும் இறங்காத ஆள் நான். இரண்டு மணி நேரம் ஒரு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில நின்றிருக்கிறேன். அதுதான் எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலம் ஒரு படத்தைக் காண ஆவலுடன் செல்வதுதான் சிலருக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். அதுபோல என் நண்பன் குடிப்பதைக் கொண்டாட்டமாகக் கருதலாம். ஆனால்.....தன்னையும், தன்னை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்காத வண்ணம் அதை அவனால் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறதா என்பதுதானே முக்கியம். அதை மட்டும் அவனுக்கு நண்பனாக நினைவுபடுத்தத் தவற மாட்டேன்.


ஆகவே, குடியை ஒரு "escape route" போன்று முன்வைக்கும் போது, மேலே கூறியது போல் எனக்கு பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால், அதே குடியை ஒரு வாழ்க்கை முறையாக இந்தப் புத்தகம் முன் நிறுத்துகிறது - கள். மொத்தம் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். பெரியாரின் 1963, "மது ஆதரவாளர்களின் மாநாட்டு'' உரையில் ஆரம்பித்து ரெங்கையா முருகன் - ஹரி சரவணன் ஆகியோரின் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" என்ற அட்டகாசமானதொரு பழங்குடி மக்களின் குடிப் பழக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் முடிகிறது. ஏறக்குறைய அனைத்து கட்டுரைகளும் முன்வைக்கும் விஷயம் - கள்.

ஆதிகாலம் தொட்டு எவ்வாறு கள் நம்முடைய உணவின் ஒரு பகுதியாக இருந்தது, பெண்கள்/சிறார்கள் என்று அனைத்து தரப்பினரும் எவ்வாறு கள்ளை உண்டு களித்தனர் என்று மிகத்தெளிவாக சித்தரிக்கும் கட்டுரைகள் உள்ளன. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல கள்ளை/குடியைப் பற்றிய பார்வை, எவ்வாறு மாறத் தொடங்கியது போன்ற விவரணைகள் உள்ளன. குறிப்பாக, காலனிய ஆதிக்கத்தின் போது - குடி எப்படி மது "வகை"யாக மாறியது என்றும் குடிவரி போன்ற சமாச்சாரங்கள் எவ்வாறு நம் நாட்டிற்குள் வந்தது என்பது பற்றியுமான மிகநீண்டதொரு கட்டுரை தான் அ.மார்க்ஸினுடையது. இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும், சங்க இலக்கியப் பெண்களின் மதுவுண்ணல் பற்றிய பெருமாள் முருகனின் கட்டுரையும் வேறொரு பரிமாணத்தில் குடியைப் பற்றிய நமது பார்வையை விஸ்தரிக்ககிறது. கலாச்சாரம், அது சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகள் என்ற தளத்தில் இருந்து மிகவிரிவாக ஜாமலனின் குடிகலாச்சாரமும் கலாச்சார குடிகளும் பேசுகிறது.  புத்தகத்தில் எனக்கு மிகப்பிடித்த கட்டுரை(?), விக்ரமாதித்யனின் "வாழ்க்கை வாய்த்தது குடியும் வாய்த்தது கவிதையும் வாய்த்தது". ஒரு படத்தின் கச்சிதமான திரைக்கதை போன்ற சம்பவ விவரணைகள். குடி பற்றிய ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல் எல்லாவற்றையும் தாண்டி - இந்தக் கட்டுரை நிதர்சனத்தை போட்டுடைக்கிறது. ஏன் பல ஆட்களால் குடியை விட முடிவதில்லை, என்பதை போகிறபோக்கில் அணுகிவிட முடியாது. வாழ்வியல் சார்ந்த அநேக விஷயங்கள் உண்டு என்பதை இக்கட்டுரையில் கண்டுனரலாம். அதைப்போன்றே, பிரான்சிஸ் கிருபாவினது - உடன்படிக்கை புட்டி. இவை இரண்டுமே வாழ்க்கை + குடி = வாழ்க்கை என்ற, அனுபவரீதியலான கட்டுரைகள். நாஞ்சில் நாடனின் கட்டுரை தான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். எவ்வாறு 'குடி'மகன்கள் நடத்தப்படுகின்றனர் என்பது குறித்த காரசாரமான கட்டுரை. அனைவருக்கும் தெரிந்த அவரது பகடி இதில் சரளமாக ஓடுகிறது. "விக்ரமாதித்யன் பாடல் பெற்றத் தலமான" ஒரு சிறு உதாரணம். கடைசியில் இருக்கும் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" மிகக் கவனமாக பரந்துபட்ட பயணங்களுக்குப் பிறகு - ஏறக்குறைய முழு இந்தியாவையும் சுற்றி இருக்கிறார்கள் - தொகுக்கப்பட்ட கட்டுரை.

புத்தகத்தில் பல கட்டுரையும் சொல்ல விழைவது, கள்ளை மறுபடியும் விற்க அனுமதிக்கும் விஷயம். ஆனால் அதை அரசாங்கம் சாத்தியப்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே......டாஸ்மாக் குறித்து எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஏனென்றால், என் அப்பா Prohibition & Excise என்ற, வருவாய் துறையின் கீழ்வரும் துறையில் சிறுது காலம் அசிஸ்டன்ட் கமிஷனர் (கலால்) பணியாற்றியுள்ளார். மொலாசெஸில்(கரும்பில் இருந்து சீனி தயாரிக்கம் போது வரும்  பொருள்) ஆரம்பித்து, புதிய பீர் ஒயின் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி, மருத்துவமனைகளில் இருக்கும் பெத்தடின் முதற்கொண்டு - போதை லாகிரி வஸ்துக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் துறை அது. டாஸ்மாக் செயல்படும் விதம் குறித்து அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட வேண்டி இருக்கும். மேல நாஞ்சில் நாடன் சொல்லிய அனைத்தும் என் அப்பா சொல்லியிருக்கிறார். செக்கிங் போகும் போது உள்ளே நுழையவே முடியாது. குமட்டல் ஏற்படுத்தும் இடங்கள். டாஸ்மாக்கில் வேலை செய்யும் முதுகலை பட்டதாரிகள். ஒழுங்காக வராத மீதி சில்லறைகள்.  த்ரீ ஸ்டார் ஹோட்டல் பார்கள் என்றால் அதுவொரு மாதிரி.......டாஸ்மாக் பார் என்றால் அது ஒருமாதிரி. ஐயப்ப சீசனில், தனி டம்பளர். அம்புகுறி போட்டு - "டாஸ்மாக் போகும் வழி" என்று இருந்த அட்டைகள். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் திறக்க அனுமதி மறுத்த போது எம்.எல்.எல்வே நேரடியாக வந்து சண்டை போட்டது.....இப்படி பல கதைகள் எனக்குப் பரிச்சயம்.

இதுவொருபுறம் இருக்க, டாஸ்மாக் விற்பனை - டார்கெட் குறித்து ஒரு இம்சை எழும். எப்படி எப்படி எல்லாம் அதிமாக விற்பனை செய்யலாம் என்று மெட்ராஸில் மீட்டிங் வேறு. ஒருவரது மாவட்டத்தில் குறைவாக விற்பனை ஆகியிருந்தால், மூத்த அதிகாரிகள் அனைவரின் முன்னாடியும் கடிந்து கொள்வதும் நடக்கும். இப்போது இந்த டார்கெட் விவகாரம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. இதைப் படித்துப் பாருங்கள். இந்தளவுக்கு வெறித்தனமாக நடவடிக்கை எடுக்கக் காரணம்......டாஸ்மாகினால் வரும் வருமானம். இதில் வருமானம் என்று அரசு கணக்கு காண்பிப்பது, விற்பனை ஆகும் சரக்குகளின் வரியில் இருந்து கிடைப்பது (இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்). 1983ல் வெறும் 180 கோடி அளவிற்கே வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருந்த டாஸ்மாக், முப்பது ஆண்டுகளில் 100 மடங்கு "லாபம்" தரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது(link). 2011 - 12 ஆம் ஆண்டில் டாஸ்மாக் விற்பனை 18,000 கோடி. நூறு மடங்கு. வேறு துறையில் இதுபோன்ற வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதா.....கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு இதுபோன்ற "டார்கெட்" எல்லாம் வைத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோமா..... சராசரியாக ஆண்டுக்க 20% "வளர்ச்சி" இருக்கிறது. இந்த தமிழ்நாடு அரசின் வருவாய் அறிக்கையில் (பக்கம் 4) State Excise என்ற தலைப்பின் கீழ், எவ்வளவு வருவாய் வருகிறது என்று மிகத் தெளிவான தகவல்கள் உள்ளன. அதே அறிக்கைய்ல் பிற வரிகளின் மூலம் வரும் வருவாய்க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது....


இதில் மத்திய அரசுக்கும் வரியாக கணிசமான பங்கு போகும். இனிதான் மிக அதிர்ச்சிகரமான தகவல் வரப் போகிறது. 2015ஆம் ஆண்டில் - நமது நாட்டிற்கு மதுவால் ஏற்படப்போகும் மொத்த வருமானம், 1.4 லட்சம் கோடி. இப்போதைய வருவாய் 57 ஆயிரம் கோடி. ஆக கிட்டதட்ட மும்மடங்கு உயரப் போகிறுது. வருவாயில் மாநில அரசுகள் தங்களுக்கென்று எடுத்தது போக, கொடுப்பதே இவ்வளவு கோடி என்றால் - மாநிலங்களுக்கு எவ்வளவு வருவாய் வரும் ? இத்தகைய அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு நிறுவனத்தை நமது அரசுகள் மூட முன்வருமா ? ஒரு பக்கம் மானியம், இலவசம் என்று மத்திய அரசு முதற்கொண்டு மாநில அரசுகள் வரை தரும் அனைத்தயும் மறுபக்கம் இப்படியாக டாஸ்மாக் கடைகளின் மூலம் ஈடுகட்டி, ஏன் அதற்கு மேலாகவே வசூலித்துவிடுகின்றன. எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ, உலகளவில் மது உற்பத்தி செய்யும் நாடுகளில் வெகுவேகமாக நாம் முன்னேறி வருகிறோம். பார்க்க


ஒரு IMFL(Indian Made Foreign Liquors) வகை க்வாட்டார் பிராந்தியின் விலை, 80ரூ என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நிஜமான அடக்கவிலை 10ரூ கூட பெறாது என்று சொல்கிறார்கள். கோகோ-கோலா இரண்டு ரூபாய்தான், கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூவும் ஆட்கள் கூட, குடி விஷயத்தில் இதனை மறந்து விடுகின்றனர். கிட்டத்தட்ட எட்டு மடங்கு லாபம் தரும் தொழில். வெளிநாட்டு வகை மது வகைகளை விட, IMFL வகை மதுவகைகள் தான் மிக அபாயகரமானது என்று பலரும் சொல்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவர் வெளிநாட்டு மதுவகையை குடிப்பதற்கும் எட்டாயிரம் ரூபாய் வருமானம் உள்ள ஆள் IMFL குடிப்பதற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டல்லவா..... தரமானத்தை தயார் செய்தால் ஒரே பாட்டிலுடன் நிறுத்தி விடுவார்கள் என்று கருதி, அரசே தரத்தை விரும்பாமல் கூட இருக்கலாம்.

இவ்வளவு அபரிமிதமாக காசை  - எல்லா பொதுமக்களும் அனுபவிக்கக வரியாக வாரி வழங்கும் ஆட்களில், பெரும்பாலானவர்களின் நிலை பரிதாபகரமானது. அவர்கள் நடத்தப்படும் முறை அதைவிட கொடுமை. அதைத்தான் நாஞ்சில் நாடனின் கட்டுரை துல்லியாமாக விவரிக்கிறது. இதற்கு தீர்வாக கள்ளுக் கடைகளை - ஏதாவது அதிசயம் நடந்தாலன்றி - அரசாங்கம் திறந்தாலும்....இத்தகைய வருமானம் வரும்வழியை அரசாங்கம் விட்டுவிடுமா என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம், பயங்கர போதையை சுவைத்துவிட்டு, நம்மாட்களில் எத்துனை பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்பதும் கேள்விக்குறியே. ஆனால், பெருமளவில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஒரு கட்டுக்குள் அதனை கொண்டுவந்தால்....இப்போது குடித்துக் கொண்டிருக்கும் பல பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்ற நம்பிக்கையோட இதனை அணுகலாம். போதைக்காக குடிப்பது போக - சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் ஆட்கள் குடிப்பதற்கான காரணம் முற்றிலும் வேறு. அவர்களைப் போன்ற ஆட்களை அப்படியே வைத்துவிட்டு, குடிக்காதீர்கள் என்ற எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறுவது.

கள்ளைப்பற்றி பேசும் பொழுது....... 'அந்த காலத்தில்' என்றொரு பதம் சரளமாக புழங்குகிறது. அன்றிருந்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை எல்லாம் தற்காலத்திற்க்கும் ஒத்து வருமா.....போன்ற பல கேள்விகளை இந்தப் புத்தகம் எழுப்பினாலும், பின்பக்க அட்டைக் குறிப்பில் இருப்பதைப் போல "குடி பற்றிய சமூகவியல் நோக்கில் ஒரு மீள் பார்வை தேவையானதாகவும், அவசியமானதாகவும் இருக்கின்ற இந்நேரத்தில் - அதைபற்றிய விவாதத்தை மேலெடுத்துச் செல்ல இந்தத் தொகுப்பு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறோம்". சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசையும்.

------------------------------------------

இந்தப் புத்தகத்தைப் பல மாதங்கள் முன்பு படித்தது. மதுபானக் கடை படத்தைப் பார்த்து விட்டு எழுதாலாம்.......எழுதலாம்.....என்று காத்திருந்து....படம் ரெண்டே நாள் தான் எங்கள் ஊரில் ஓடியது. நண்பர் ஒருவர், ரெண்டு மாதங்கள் முன்பு மாடர்ன் சினிமா - டிவிடி போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார். கடைசியில் டிவிடியே போன வாரம் தான் இங்கு வந்தது. நாஞ்சில் நாடனின் மேலே சொன்ன கட்டுரை தான் படத்திற்கு அடிப்படை. தவிர, இந்தப் புத்தகத்தை இயக்குனர் படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். கொஞ்சம் செயற்கைத்தனமான காட்சியமைப்புகள் வசனங்கள் என்று இருந்தாலும் (சுவரில் அக்கா மாலா....கூல்ட்ரிங்க்ஸ்  செம), மிக முக்கியமானதொரு முயற்சி. மேலே நாம் பார்த்த அனைத்து கேள்விகளும் படத்திலும் வருகிறது. இந்தப் படத்தை தவறவிட வேண்டாம்.

Facebookers..

14 comments :

  1. நல்ல பதிவு கொழந்த.. இன்னும் படிக்கலை.. கொஞ்சம் நேரம் தேவைப்படும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  2. நன்றி பாஸ்....படிச்சிட்டு சொல்லுங்க..

    ReplyDelete
  3. //நல்ல பதிவு கொழந்த.. இன்னும் படிக்கலை//

    ReplyDelete
  4. one of the excellent articles I have read recently anywhere. I will (try to) post my views today.

    ReplyDelete
  5. உங்க கருத்த ஆவலுடன் எதிர்பாக்குறேன்....

    //நல்ல பதிவு கொழந்த.. இன்னும் படிக்கலை// நா எவ்ளோ நேக்கா கண்டுக்காம இருக்கேன்.....

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை. உங்கள் ஆராய்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

    ReplyDelete
  7. நீங்க இந்த புத்தகம் வாங்கி FBயில் post செய்த போதே படிக்க வேண்டுமென்று நினைத்தேன். நல்லது பதிவே போட்டு விட்டீர்கள்... புத்தகம் தாண்டியும் அதிகம் படித்திருக்கிறீர்கள்... நல்லது, இவ்வளவு விஷயங்கள் எனக்கு ஞாபகம் கூட இருப்பதில்லை...

    ReplyDelete
  8. நன்றி நண்பா...ஞாபகம் பாதி....கூகிளாண்டவர் மீதி.......

    புக் வாங்கி படிச்சு பாருங்க..செமையான கட்டுரைகள் இருக்கு

    ReplyDelete
  9. டான்ஸ்டோனிMay 10, 2013 at 3:05 PM

    பாஸ்... உங்கள அடிக்கடி “கருந்தேள்“ பக்கத்தில் பார்ப்பேன். இன்னைக்கி தான் உங்க பிளாக் பாக்குறேன். எல்லாத்தையும் சேமித்து வைத்துள்ளேன். படிச்சிட்டு கண்டிப்ப்ப்பப்பா பதில் அனுப்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  10. கொழந்தMay 11, 2013 at 1:52 AM

    படிச்சா அனுப்புங்க..... :)

    ReplyDelete
  11. குடிப்பவர்களை இதை படிக்க வைக்க முயர்ச்சிக்க வேண்டும். அப்போது தான் உங்களை போன்று எழுதுபவர்கள் அதன் மரியாததை பெற முடியும்

    ReplyDelete
  12. //ஒருவர் (கொஞ்சமாக)குடித்துவிட்டு ஒரு இசையை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். படு மோசமாக உள்ளது (அ) மிகச் சிறந்த இசை என்று ஒரு கருத்திற்கு வருகிறார்//
    -
    மன்னிக்கவும். இந்த வரியைப் படிக்கும் போது எனக்கு சாருநிவேதிகா நினைவு வந்து தொலைக்கிறது.அந்தாளும் குடிவெறியில் ஏதாவதை யுருயூபில் கேட்டுவிட்டு, இசையில் உச்சம், சிகரம், வானவே எல்லை என ,தொடர்பு கொடுப்பார். கேட்டால் "சப்" பென்றிடுக்கும், இது தான் காரணமா?

    அருமையான கட்டுரை, ஆனால் குடிகாரர் படிக்கவேண்டியது.

    ReplyDelete
  13. மிக முக்கியமாக விவாதிக்க பட வேண்டிய ஒரு விஷயம்...ஒவ்வொரு கட்டுரைக்குமான உங்கள் உழைப்பு அபாரம் ப்ரோ...

    ReplyDelete