Unconventional in every sense. சரணம் பல்லவி இத்யாதிகள் என்று வரையறுக்கவே முடியாத ஒரு பாடல். அதுவும் ஓபனிங்.....படீரென்று பெருமழை மாதிரி ஆரம்பிக்கும். ஒரு அறிகுறியும் இருக்காது. சரி......பாடல் செல்லச் செல்ல டெம்போ மாறும்.....வழக்கமான, நமக்கு பரிச்சயமான ஒரு வடிவுக்குள் வரும் என்று எதிர்பார்த்தல்.......திடீரென்று சில நொடிகளுக்கு ஒலிக்கும்  ஸின்த், நடுநடுவே உலவும் மெல்லிய கீபோர்ட் நோட். திரும்ப பழைய முறைக்கு தி....ரு....ம்....பு....ம் என்று நினைக்கும் இடத்தில், குரலின் பிட்ச் மாறும்....அதனைத் தொடர்ந்து தான் ப்யூர் மேஜிக் -  மிகச் சரியாக  3:40 - 3:45 வரை கேக்கும் அந்த ட்ரம் பீட் போன்றதொரு ஸின்த் இசை. இப்படியாக போய் கொண்டிருக்கையில், 5:24ல் ஒலிக்கும் கடம்.....பாடல் முடியப் போகும்போது முற்றிலும் வேறு ஸ்கேலில் முடியும். இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசவே சங்கோஜமாக உள்ளது. அதைக் கேட்பதே மிகச் சிறந்த வழி.

ரங்கீலா - 1995. ரஹ்மானின் முதல் ஹிந்தி பிரவேசம் என்று நினைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்னரே, 94களின் போதே, புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹ்லாணி த்ரோகால்(Drokal) என்ற படத்திற்காக ரஹ்மானை ஒப்பந்தம் செய்துவிட்டார். ரஹ்மானும் படத்திற்கான பாடல்களையும் சிலபல பின்னணி இசை வேலைகளும் முடித்திருந்தார். ஆனால், அவரது சிஸ்டம் க்ராஷ் ஆனபடியால் அனைத்தும் அழிந்து போய்விட்டது. கடைசியில் அந்தப் படமே ட்ராப் ஆனது. பின்னாளில் அதே தலைப்பில் மற்றொரு படத்தை அவர் இயக்கினர். அதுதான் தமிழில் - குருதிப்புனல். சுபாஷ் கய்ம் ரஹ்மானுடன் 93லிலேயே பணியாற்ற வேண்டியது. ஆனால் அந்தப் படமும் ட்ராப் ஆனது. ஆக, ரங்கீலாவே ரஹ்மானின் முதல் ஹிந்திப் பிரவேசமாக அமைந்தது.


ஜம்ப் கட்: 2012. ராக்ஸ்டார். Phir se ud chala. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் அவர் செய்ததன் நீட்சி என்று இதனைச் சொல்லலாம். பாடல் ஆரம்பிக்கும் விதமாகட்டும்....டெம்போவாகட்டும்.....பின்னாடி சற்றே மாறும் வடிவம் என்று, இன்னவகைதான் என்று கூறவே முடியாத ஒரு ஸ்ட்ரக்சர். நான் பாடலை முதலில் கேக்கும் போது, சரி இந்த இடத்தில் வழமையான வடிவத்திற்கு வரும் என்று யோசித்து யோசித்து.....பாடல் முடிந்தே விட்டது. இந்த மேஜிக் பிடிபட கொஞ்ச நேரம் ஆனது.
Source: rahmaniac.wordpress.com

ரஹ்மானின் பல பாடல்கள் இதுபோல சரணம் பல்லவி அதுஇது என்று கட்டுப்பாடுகள் அற்றது. ராகம் போன்ற ஒரு கட்டமைப்புகள் பலவித புதுமைகள் செய்வது ஒருபுறம் என்றால் புதிதாக ஒரு வடிவத்தையே நடைமுறைபடுத்துவது இன்னொரு வகை. பழைய காலத்து ஆசாமிகளில் சிலபேருக்கு இது புரியவே புரியாது. ஒரு ராணுவ ஒழுங்குடன் கூடிய, பல்லவி சரணம் ராகங்களின் அடிப்படையில் பாடல்களை அமைப்பது அல்லது வெஸ்டர்ன் க்ளாசிகல், இதுபோன்ற அடிப்படைகளின் வழியே உருவாவதயே "திரைப்பட இசை' என்று நம்பும் ஆட்கள். அவர்கள் ரஹ்மானின் இதுபோன்ற பாடல்களை குப்பை என்று சொல்லாவிட்டால் தான் ஆச்சரியமே.


ரஹ்மானைப் பற்றி சீரியசாக பேசும் அல்லது விவாதிக்கும் பலரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, Layering. டக்கென்று தோன்றும் ஒரு உதாரணம் - இந்தப் பாடல். இதில் ஆரம்பித்தில் வயலின் ஒரு ஸ்கேலில் ஒலிக்கும், ஸின்த் இசை ஒரு லேயராக ஆரம்பிக்கும், டெக்னோ இரண்டு ஸ்பீக்கர்களுக்கும் மாறிமாறி சென்று வர ஆரம்பிக்கும், "ஹே ஹே " என்ற ஓசை வேறு - ரஹ்மான் குரல்களையே லேயர்களாக பயன்படுத்துவதில் மாஸ்டர் - அவ்வப்போது கேக்கும்..... திரும்ப வயலின், ஆனால் இந்தமுறை முற்றிலும் வேறு ஸ்கேலில் ஆரம்பிக்கும்.....இதுவொரு மிகச்சிறிய உதாரணம். முதல் தடவை ரஹ்மானின் இசை பிடிபடாது....போகப்போகத் தான் பிடிக்கும் என்று பலரும் சொல்லக் காரணம், இதுதான். போனமுறை கேக்கும் போது இதை கவனிக்கவில்லையே என்று நாம் பல லேயர்களை தவறவிட்டு பின்னாட்களில் ரசித்திருப்போம். இதுவொன்றும் சாதாரண வேலை அல்ல. ஆரம்பகாலங்களில் ஒற்றை ஆளாக ரஹ்மான் இந்த வேலையைச் செய்திருக்கிறார்( ஒலிப்பதிவாளர் - ஹெச்.ஸ்ரீதரின் பங்கு இதில் மிக முக்கியமானது). இப்படித்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் திருப்தியாக வரும்வரை விடாமல் லேயர் ஸ்ட்ரக்சர்களை மாற்றிக் கொண்டிருப்பாராம். அப்படியும், கேசட் தயாராகப் போகும் வரை சின்னச்சின்ன விஷயங்களை விடாமல் செய்துகொண்டே இருப்பாராம்.
With Rahman. I learnt something new. Before I worked with him, I recorded with 100-125 musicians. When I sat down with Rahman, I looked for the musicians but there seemed to be none around. He just switched on his keyboard and started playing notes, adding the rhythm as he went along. Rahman has a new way of thinking. He is a singer, a lyricist, a composer, an orchestra conductor, an arranger, and a sound engineer. Except for the lyrics he does everything else in a song.

- Subash Ghai

இதுபோன்றே பிடித்த இன்னொரு இசைக் கோர்ப்பு, புதிய மனிதா - எந்திரனில் இருந்து. இந்தப் பாடலை இசை இல்லாமல் வெறும் எஸ்பிபியின் குரலை மட்டும் வைத்துக் கேட்டாலும் ஒரு உற்சாகத்தை ஆர்வத்தை உணரலாம். சிட்டி - மே மே என்று கத்தும் ஆட்டின் இசை இதில் வருவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்...பின்னணியில் வயலின்களின் சங்கமம் வேறு அட்டகாசம் போங்கள்.


Jhootha hai sahiயில் வரும், இதுவும் அதேபோன்ற வயலின் + டெக்னோ உள்ள பாடல். ஒருமாதிரியான புதிர்த்தன்மை நிறைந்த பாடலாக எனக்குத் தோன்றும். ஏன் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது. சைக்கிள் பெல், வளையல் வரிசையில் - செல்போன் போடும் கீபேட் சத்தம் உட்பட அனைத்தையும் இசையாக மாற்றியிருப்பார்.


குரல்களையே லேயர்களாக மாற்றுவார் என்று டைப்படித்துக் கொண்டிருக்கும் போது, இந்தப் பாடலை எப்படி சொல்லாமல் விடுவதா என்று ஞாபகம் வந்தது. மிகச் சரியாக 0.06 நொடியில் கேட்கும் "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்பதாகட்டும், பாடலின் ஆரம்பத்தில் வரும் "ஜும்ஜூகுஜும்ஜூகு" - அதென்ன வார்த்தை என்று இன்றுவரை என்னால் கண்டறிய முடியவில்லை - என்பதாகட்டும்,  ஹரிஹரனின் 'பபபபப்பப்ப ....சகமகப்" போன்ற வார்த்தை தெளிப்புகள், அந்த "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்' பல்வேறு வடிவங்களில் பாடல் முழுவதும் விளையாடுவதாகட்டும், கடைசி கட்டத்தில் ரஹ்மானே பாடம் அந்தப் பகுதி, கர்னாடக ஜதி சொல்லும் லேயேர், உதித் நாராயணனின் குரல் என்று குரல்களில் மட்டும் ஒரு ஏழு லேயர்களை சொல்லலாம். தவிர, பாடல் முழுவதும் ஹரிஹரனின் குரல் இரண்டு ஸ்கேலில் தான் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மிகுந்த உற்சாகத்தை (எனக்குத்) தரத் தவறுவதில்லை.

90களில், இதுபோன்ற வெவ்வேறு இசைக் கருவிகளின் சங்கமமாக இருந்த அவரின் இசைக் கோர்ப்பு 2000த்திற்கு பிறகு மாறுதலடைந்து வெவ்வேறு இசை வடிவங்களின் amalgamation என்று மாறியது. ஏலே கீச்சான் - சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம்: கன்ட்ரி இசை + ரெகே + ஆப்ரிக்க + நமது நாட்டுபுற இசையினுடைய குரல் வடிவம். பலபேர் 90களின் ரஹ்மான் என்ற பதத்தை பயன்படுத்துவது இதனால்தான் என்று தோன்றுகிறது.
உத்தேசமானதொரு கணக்கில் முப்பது ரூபாய் பெறாத குடிக்கு வாடிக்கையாளன் செய்யும் செலவு என்பத்தைந்து ரூபாய். அவனுக்கு ஊக்கத் தொகையாகக் கிடைப்பது, அனுபவிப்பது பீடிப்புகை, மூச்சு முட்டல், கொசுக்கடி, சாக்கடை நாற்றம், வாந்தி, அருவருப்பு, பகலானால் உலகத்து ஈக்கள், காறித்துப்பிய எச்சில், விருப்பம் போலத் திரிதரும் எலி, பெருச்சாளி, மூஞ்சூறு, தெறிபாச்சா, கண்டாங்கி பாச்சா, பலவகைப் பல்லிகள், காலில் உராயும் பூனைக்குட்டிகள், குரைக்காமல் வாலொதிக்கிக் கிடக்கும் சொறி பிடித்த நாய்கள்.......

வாடிக்கையாளர்களான கனரக வாகன ஓட்டிகள், சாலைப் பணியாளர்கள், கை வண்டிக்காரர், துப்புரவு தொழிலாளிகள், குறு வியாபாரிகள், சிறு தொழிற்கூடங்களில் வார்ப்பட. கடைசல், கருமான் தொழில் செய்வோர், கட்டிடத் தொழிற் கூலிகள், யாவரும் பன்றிகளுக்கும் கீழாகத் தாம் நடத்தப்படுவதை ஒரு போதையின் பொருட்டுச் சகித்துக் கொள்கிறார்கள். அவர்களது வாக்குகள் வேண்டும், வரிப்பணம் வேண்டும், உழைப்பு வேண்டும், கோஷம் வேண்டும், கூட்டம் வேண்டும், ஆனால் மனிதனாக நடத்தப்பட வேண்டா......
- நாஞ்சில் நாடன், உண்ணற்க கள்ளை

"மதம் ஒரு அபின்/Religion is the opium of the masses"......புகழ்பெற்ற ஸ்டிரியோடைப்பிக்காக பயன்படுத்தப்பட்டு  வரும்  மேற்கோள்களில் ஒன்று. சரமாரியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்படுவது. ஆனால், நிஜத்தில் மார்க்ஸ் சொன்னது   " Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people". ஆனால், ஏன் மார்க்ஸ் போதை வஸ்துவுடன் மதத்தை ஒப்பிட வேண்டும் - the expression of real suffering and a protest against real suffering. இந்தப் புத்தகத்தின் பதிப்புரையில் ஒரு நீண்ட வாக்கியம் வருகிறது... "மது தீர்ந்த காலிக் கோப்பைகள் சூன்யமானவை அல்ல. அவற்றில் நம் மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் அவலங்களையும் இழிவுகளையும் கோபங்களையும் எள்ளலகளையும் அசிங்கங்களையும் அவரவர் வசதிக்கேற்ப இட்டு நிரப்புகிறோம்". ஒரு தொடர்பை என்னால் உணர முடிகிறது. வூடி ஆலனின் Midnight in Parisல், ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்லும் " Nostalgia is denial...denial of the painful present... ". குடிப்பவர்கள் கொடுக்கும் விளக்கங்களை வைத்துப் பார்க்கும் போது குடிக்கும் இது முற்றிலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.

குடியால் ஒரு குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போனதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்,பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். தினமும் மாலை வீடு திரும்பும் போது, ஒரு ஐந்து பேராவது எங்கள் ஏரியாவில் தள்ளாடாமல் நடந்ததில்லை. குடியின் இன்னொரு முகம் - பெண்கள் & குழந்தைகள் மீதான அழுத்தம்/வன்முறை. ஒருபுறம் அரசாங்கமே ஏகத்துக்கும் டாஸ்மாக் கடைகளை திறப்பதும், சற்றே வசதியுள்ளவர்கள் கொஞ்சம் தரமான மது வகைகளை குடிப்பதும், அவர்களுக்குரிய வெளி கிடைப்பதுமாய் இருக்க - வசதியற்ற லோயர்/மிடில் க்ளாஸ் குடிமக்களின் நிலைமை தான் மிகுந்த கவலைக்குரியது. மொத்தமாக குடிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், புள்ளி விவரங்களின்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்தில் தொடங்கி பல குற்றங்கள் வரை குடியும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை. சிறுவயது முதல் குடி(பவர்கள்) மீது(ம்) ஒரு அசூயையே இருந்தது. ஆனால் அனுபவம் காரணமாக அதுமாறியது. நான் ஷார்ட் - சைட் காரணமாக கண்ணாடி அணிந்திருக்கிறேன். பவர் -2. கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் அதே பவரில் தான் கண்ணாடி அணிவார்கள்/அணிய வேண்டும் என்று நான் நினைப்பது (மொக்க உதாரணம் தான்) எவ்வளவு அபத்தமோ அதேபோன்று என் மதிப்பீடுகளை அடுத்தவரிடமும் எதிர்பார்ப்பது. அவரவர் வளர்ந்த சூழ்நிலை, வாழ்வியல் முறை, அனுபவங்கள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா....ஆனால், "ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி என்பது தனிச் சொத்து" என்பதில் எனக்கு உறுதியான பிடிப்புண்டு. பக்தி, குடி, இசங்கள் என்று எல்லாவற்றையும் பொதுவெளிக்கு கொண்டுவரும் போது என் மூக்கை தொடும் அளவுக்கு நீட்டாதீர்கள்.....நானும் உங்கள் மூக்கை தொட மாட்டேன் என்ற அளவில் என் "ஐடியாலஜி"யில் முன்னேறியிருக்கிறேன்.

நிற்க: வெறுமனே, குடிக்கும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் தான் கவலை தீர்வது போன்றதொரு உணர்வும், அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டுச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. சற்று விரிவாகப் பேசதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், இந்தப் பகுதி மந்தமாக (என் எழுத்து வன்மையின் காரணமாக ) தோன்றலாம்.

-------------------------------------------------------------------------

இந்தப் படங்கள் சிகரெட்டின் நிக்கோடின்காக கொடுக்கப்பட்டது. ஆனால், ஆல்கஹாலின் செயல்பாட்டை எளிதில் புரிந்து கொள்ள இதுவே ஏதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூளையின் அகராதியில், Pleasure = டொபமைன் (ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர்) என்று அர்த்தம். (நான் எழுதிய பதிவு எனக்கே கை கொடுத்தது குறித்து மகிழ்ச்சி). இந்த டொபமைன் பல்வேறு காரணிகளால் தூண்டப்படலாம். பிடித்த இசை, செக்ஸ், உணவு, பஞ்சி ஜம்பிங் போன்ற பல இயற்கையான காரணிகள் உள்ளன.


அதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும் போது, மூளையில் இருக்கும் மஞ்சள் கலர் செல் ஒன்று, சில நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை வெளிவிடும் (மஞ்சள் துகள்கள்). சிவப்பு குள்ளர்களின் வேலை, அளவைமீறி அத்துகள்கள் வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்வது. மஞ்சள் துணுக்குகள் அருகிலிருக்கும் டொபமைன் செல்லைத் தூண்டும். டொபமைன் சுரக்க ஆரம்பிக்கும். அது பக்கத்தில் இருக்கும் மற்றொரு பிங்க் நிற செல்லை அடையும் போது, நாம் "மகிழ்ச்சி, ஆனந்தம்,நிறைவை" உணர்கிறோம். சிவப்பு குள்ளர்கள் & டொபமைன் செல் ரெண்டும் ஒரு சில நிமிடங்களில் "போதும்....இத்தோடு நிறுத்திக் கொள்வோம்" என்றொரு உடன்படிக்கைக்கு வந்து டொபமைன் சுரப்பதை நிறுத்திவிடும். இதுதான் இயற்கையான காரணிகளால் ஏற்படும் நிகழ்வு.

இதுவே, நிகோடின் - ஆல்கஹால் - போதை வஸ்துக்களை உட்கொண்டபின் எவ்வாறு மாறுகிறது என்று பார்ப்போம்.


அதே மெக்கானிசம் தான். ஆனால், போதை வஸ்துக்கள் நேரடியாக டொபமைன் செல்களை தாக்கி - டொபமைனை சுரக்கச் செய்துவிடும். சிவப்பு குள்ளர்களின் பங்கே இதில் மிகக் கம்மி...விளைவு....இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மூளை அந்த சுகத்தை விரும்ப ஆரம்பித்துவிடும்.  (விரிவான தகவல்களுக்கு)

இங்கு ஒரு சிறிய விளக்கத்தை பார்த்தாக வேண்டும். கோகைன் போன்ற போதை வஸ்துக்கள், நேரடியாக டொபமைன் செல்களை தாக்கும். ஆனால் ஆல்கஹாலில் பல்வேறு மூலக்கூறுகள் இருப்பதால் அது நேரடியாக டொபமைன் செல்களை (கவனிக்க: நேரடியாக) தாக்குகிறதா என்பது குறித்து இன்னமும் சரிவர தெரியவரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால்,  டொபமைனை சுரக்கச் செய்வதில் ஆல்கஹாலின் பங்கு நிச்சயம் உண்டு. அதன் விளைவாகவே மிதமிஞ்சிய குடிக்குப் பிறகு ஏற்படும்  மாற்றங்களை காணலாம். ரெண்டு பெக் அடிப்பவர்கள் தொடர்ந்து அதையே அடித்துக் கொண்டிருந்தால் மூளை அதற்கு பழகிவிடும். ஆனால், அவரே கொஞ்ச கொஞ்சாமாக அளவை கூட்ட ஆரம்பித்தால்......ஆரம்பித்தது பிரச்சனை. இதுபோன்ற விளைவுகள் தான் ஏற்படும்.

ஆல்கஹாலைப் போன்ற, ஏன் அதைவிட இயற்கையாகவே போதை தரும் வஸ்துக்களும் உள்ளன. உதாரணமாக இசையை எடுத்துக் கொள்வோம். மிகத் தெளிவாக இந்தக் கட்டுரையில் இசை எவ்வாறு டொபமைனை தூண்டுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மூளை - ஆல்கஹால் தொடர்பு பற்றிய தெரிந்துகொள்ள விழைவோர்:
-------------------------------------------------------------------------

நான் இதுவரை குடித்தது இல்லை. அதுபற்றிய நினைப்பே எழுந்ததில்லை. இதுவொரு க்ளிஷேத்தனமான வாக்கியமாகத் தோன்றினாலும், சிலருக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்காது. அதுபோல இதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவ்வளவே. ஆனால், நண்பர்கள் சிலர் - "ஜாலிக்கு" போன்ற வார்த்தைகளை என்னிடம் பயன்படுத்தும் போது, 'எனக்கு ஆர்வம் இல்லை' என்பதைச் சொல்லி புரிய வைக்க கஷ்டப்பட வேண்டும்/பட்டிருக்கிறேன். அப்போது கீழ்கண்ட விஷயங்களைக் கொண்டுதான் பேச வேண்டியிருக்கும்.

ஒருவர் (கொஞ்சமாக)குடித்துவிட்டு ஒரு இசையை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். படு மோசமாக உள்ளது (அ) மிகச் சிறந்த இசை என்று ஒரு கருத்திற்கு வருகிறார். ஆனால், அது அவரது முழுத் திறனுடன் உணரந்தாரா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் மேலே சொன்னது போல, ஆல்கஹால் அவர் எடுக்கும் முடிவுகளில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும். அது எந்தளவுக்கு என்பது ஆட்களைப் பொறுத்தவரை வேறுபடலாம். ஆனால், ஆல்கஹால் இல்லாமல் அவர் எடுக்கும் முடிவுக்கும் உட்கொண்டபின் எடுக்கும் முடிவுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. அதுனால் ஒரு external stimuli என்னை அதிகாரப்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. I am & i will be the boss......அதீத மகிழ்ச்சியோ பயங்கர துக்கமோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவே நான் விரும்புகிறேன். எல்லாம் அனுபவம் தானே.

ஒரு அக்மார்க் நாத்திகர் இருக்கிறார். அதே வீட்டில் ஆத்திகரும் இருக்கிறார். இருவரும் கடும் உழைப்பாளிகள். ஆத்திகர், கடவுளை நம்பினாலும் தனது கடும் உழைப்பின் மூலமே முன்னேற முடியும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். இருவருக்கும் ஒரே சமயத்தில் பயங்கர நஷ்டம் ஏற்படுகிறது. மனப்பாரம் குறைய, ஆத்திகர் அடிக்கடி கோவிலுக்குச் செல்கிறார். நாத்திகர் - அதே காரணத்தைக் கூறி குடிக்கிறார். இரண்டிற்கும் யாதொரு வேறுபாடும்எனக்குத் தெரியவில்லை. கண்டவர்கள் தெரியப்படுத்தலாம். ஒருவருக்கு குடி - மற்றொருவருக்கு கடவுள். மார்க்ஸ் - மதம் - போதை. உடல்நிலையை கருத்தில் கொண்டு கடவுளே பரவாயில்லை என்று நான் சொல்வேன்.

என்ன இருந்தாலும் குடி என்று வரும் போது..........இப்போது என் நண்பன் ஒருவனே, மகிழ்ச்சி - கொண்டாட்டம் என்பதற்காக   குடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வெயிலில் ஒருபோதும் இறங்காத ஆள் நான். இரண்டு மணி நேரம் ஒரு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில நின்றிருக்கிறேன். அதுதான் எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலம் ஒரு படத்தைக் காண ஆவலுடன் செல்வதுதான் சிலருக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். அதுபோல என் நண்பன் குடிப்பதைக் கொண்டாட்டமாகக் கருதலாம். ஆனால்.....தன்னையும், தன்னை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்காத வண்ணம் அதை அவனால் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறதா என்பதுதானே முக்கியம். அதை மட்டும் அவனுக்கு நண்பனாக நினைவுபடுத்தத் தவற மாட்டேன்.


ஆகவே, குடியை ஒரு "escape route" போன்று முன்வைக்கும் போது, மேலே கூறியது போல் எனக்கு பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால், அதே குடியை ஒரு வாழ்க்கை முறையாக இந்தப் புத்தகம் முன் நிறுத்துகிறது - கள். மொத்தம் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். பெரியாரின் 1963, "மது ஆதரவாளர்களின் மாநாட்டு'' உரையில் ஆரம்பித்து ரெங்கையா முருகன் - ஹரி சரவணன் ஆகியோரின் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" என்ற அட்டகாசமானதொரு பழங்குடி மக்களின் குடிப் பழக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் முடிகிறது. ஏறக்குறைய அனைத்து கட்டுரைகளும் முன்வைக்கும் விஷயம் - கள்.

ஆதிகாலம் தொட்டு எவ்வாறு கள் நம்முடைய உணவின் ஒரு பகுதியாக இருந்தது, பெண்கள்/சிறார்கள் என்று அனைத்து தரப்பினரும் எவ்வாறு கள்ளை உண்டு களித்தனர் என்று மிகத்தெளிவாக சித்தரிக்கும் கட்டுரைகள் உள்ளன. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல கள்ளை/குடியைப் பற்றிய பார்வை, எவ்வாறு மாறத் தொடங்கியது போன்ற விவரணைகள் உள்ளன. குறிப்பாக, காலனிய ஆதிக்கத்தின் போது - குடி எப்படி மது "வகை"யாக மாறியது என்றும் குடிவரி போன்ற சமாச்சாரங்கள் எவ்வாறு நம் நாட்டிற்குள் வந்தது என்பது பற்றியுமான மிகநீண்டதொரு கட்டுரை தான் அ.மார்க்ஸினுடையது. இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும், சங்க இலக்கியப் பெண்களின் மதுவுண்ணல் பற்றிய பெருமாள் முருகனின் கட்டுரையும் வேறொரு பரிமாணத்தில் குடியைப் பற்றிய நமது பார்வையை விஸ்தரிக்ககிறது. கலாச்சாரம், அது சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகள் என்ற தளத்தில் இருந்து மிகவிரிவாக ஜாமலனின் குடிகலாச்சாரமும் கலாச்சார குடிகளும் பேசுகிறது.  புத்தகத்தில் எனக்கு மிகப்பிடித்த கட்டுரை(?), விக்ரமாதித்யனின் "வாழ்க்கை வாய்த்தது குடியும் வாய்த்தது கவிதையும் வாய்த்தது". ஒரு படத்தின் கச்சிதமான திரைக்கதை போன்ற சம்பவ விவரணைகள். குடி பற்றிய ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல் எல்லாவற்றையும் தாண்டி - இந்தக் கட்டுரை நிதர்சனத்தை போட்டுடைக்கிறது. ஏன் பல ஆட்களால் குடியை விட முடிவதில்லை, என்பதை போகிறபோக்கில் அணுகிவிட முடியாது. வாழ்வியல் சார்ந்த அநேக விஷயங்கள் உண்டு என்பதை இக்கட்டுரையில் கண்டுனரலாம். அதைப்போன்றே, பிரான்சிஸ் கிருபாவினது - உடன்படிக்கை புட்டி. இவை இரண்டுமே வாழ்க்கை + குடி = வாழ்க்கை என்ற, அனுபவரீதியலான கட்டுரைகள். நாஞ்சில் நாடனின் கட்டுரை தான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். எவ்வாறு 'குடி'மகன்கள் நடத்தப்படுகின்றனர் என்பது குறித்த காரசாரமான கட்டுரை. அனைவருக்கும் தெரிந்த அவரது பகடி இதில் சரளமாக ஓடுகிறது. "விக்ரமாதித்யன் பாடல் பெற்றத் தலமான" ஒரு சிறு உதாரணம். கடைசியில் இருக்கும் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" மிகக் கவனமாக பரந்துபட்ட பயணங்களுக்குப் பிறகு - ஏறக்குறைய முழு இந்தியாவையும் சுற்றி இருக்கிறார்கள் - தொகுக்கப்பட்ட கட்டுரை.

புத்தகத்தில் பல கட்டுரையும் சொல்ல விழைவது, கள்ளை மறுபடியும் விற்க அனுமதிக்கும் விஷயம். ஆனால் அதை அரசாங்கம் சாத்தியப்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே......டாஸ்மாக் குறித்து எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஏனென்றால், என் அப்பா Prohibition & Excise என்ற, வருவாய் துறையின் கீழ்வரும் துறையில் சிறுது காலம் அசிஸ்டன்ட் கமிஷனர் (கலால்) பணியாற்றியுள்ளார். மொலாசெஸில்(கரும்பில் இருந்து சீனி தயாரிக்கம் போது வரும்  பொருள்) ஆரம்பித்து, புதிய பீர் ஒயின் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி, மருத்துவமனைகளில் இருக்கும் பெத்தடின் முதற்கொண்டு - போதை லாகிரி வஸ்துக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் துறை அது. டாஸ்மாக் செயல்படும் விதம் குறித்து அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட வேண்டி இருக்கும். மேல நாஞ்சில் நாடன் சொல்லிய அனைத்தும் என் அப்பா சொல்லியிருக்கிறார். செக்கிங் போகும் போது உள்ளே நுழையவே முடியாது. குமட்டல் ஏற்படுத்தும் இடங்கள். டாஸ்மாக்கில் வேலை செய்யும் முதுகலை பட்டதாரிகள். ஒழுங்காக வராத மீதி சில்லறைகள்.  த்ரீ ஸ்டார் ஹோட்டல் பார்கள் என்றால் அதுவொரு மாதிரி.......டாஸ்மாக் பார் என்றால் அது ஒருமாதிரி. ஐயப்ப சீசனில், தனி டம்பளர். அம்புகுறி போட்டு - "டாஸ்மாக் போகும் வழி" என்று இருந்த அட்டைகள். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் திறக்க அனுமதி மறுத்த போது எம்.எல்.எல்வே நேரடியாக வந்து சண்டை போட்டது.....இப்படி பல கதைகள் எனக்குப் பரிச்சயம்.

இதுவொருபுறம் இருக்க, டாஸ்மாக் விற்பனை - டார்கெட் குறித்து ஒரு இம்சை எழும். எப்படி எப்படி எல்லாம் அதிமாக விற்பனை செய்யலாம் என்று மெட்ராஸில் மீட்டிங் வேறு. ஒருவரது மாவட்டத்தில் குறைவாக விற்பனை ஆகியிருந்தால், மூத்த அதிகாரிகள் அனைவரின் முன்னாடியும் கடிந்து கொள்வதும் நடக்கும். இப்போது இந்த டார்கெட் விவகாரம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. இதைப் படித்துப் பாருங்கள். இந்தளவுக்கு வெறித்தனமாக நடவடிக்கை எடுக்கக் காரணம்......டாஸ்மாகினால் வரும் வருமானம். இதில் வருமானம் என்று அரசு கணக்கு காண்பிப்பது, விற்பனை ஆகும் சரக்குகளின் வரியில் இருந்து கிடைப்பது (இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்). 1983ல் வெறும் 180 கோடி அளவிற்கே வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருந்த டாஸ்மாக், முப்பது ஆண்டுகளில் 100 மடங்கு "லாபம்" தரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது(link). 2011 - 12 ஆம் ஆண்டில் டாஸ்மாக் விற்பனை 18,000 கோடி. நூறு மடங்கு. வேறு துறையில் இதுபோன்ற வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதா.....கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு இதுபோன்ற "டார்கெட்" எல்லாம் வைத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோமா..... சராசரியாக ஆண்டுக்க 20% "வளர்ச்சி" இருக்கிறது. இந்த தமிழ்நாடு அரசின் வருவாய் அறிக்கையில் (பக்கம் 4) State Excise என்ற தலைப்பின் கீழ், எவ்வளவு வருவாய் வருகிறது என்று மிகத் தெளிவான தகவல்கள் உள்ளன. அதே அறிக்கைய்ல் பிற வரிகளின் மூலம் வரும் வருவாய்க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது....


இதில் மத்திய அரசுக்கும் வரியாக கணிசமான பங்கு போகும். இனிதான் மிக அதிர்ச்சிகரமான தகவல் வரப் போகிறது. 2015ஆம் ஆண்டில் - நமது நாட்டிற்கு மதுவால் ஏற்படப்போகும் மொத்த வருமானம், 1.4 லட்சம் கோடி. இப்போதைய வருவாய் 57 ஆயிரம் கோடி. ஆக கிட்டதட்ட மும்மடங்கு உயரப் போகிறுது. வருவாயில் மாநில அரசுகள் தங்களுக்கென்று எடுத்தது போக, கொடுப்பதே இவ்வளவு கோடி என்றால் - மாநிலங்களுக்கு எவ்வளவு வருவாய் வரும் ? இத்தகைய அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு நிறுவனத்தை நமது அரசுகள் மூட முன்வருமா ? ஒரு பக்கம் மானியம், இலவசம் என்று மத்திய அரசு முதற்கொண்டு மாநில அரசுகள் வரை தரும் அனைத்தயும் மறுபக்கம் இப்படியாக டாஸ்மாக் கடைகளின் மூலம் ஈடுகட்டி, ஏன் அதற்கு மேலாகவே வசூலித்துவிடுகின்றன. எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ, உலகளவில் மது உற்பத்தி செய்யும் நாடுகளில் வெகுவேகமாக நாம் முன்னேறி வருகிறோம். பார்க்க


ஒரு IMFL(Indian Made Foreign Liquors) வகை க்வாட்டார் பிராந்தியின் விலை, 80ரூ என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நிஜமான அடக்கவிலை 10ரூ கூட பெறாது என்று சொல்கிறார்கள். கோகோ-கோலா இரண்டு ரூபாய்தான், கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூவும் ஆட்கள் கூட, குடி விஷயத்தில் இதனை மறந்து விடுகின்றனர். கிட்டத்தட்ட எட்டு மடங்கு லாபம் தரும் தொழில். வெளிநாட்டு வகை மது வகைகளை விட, IMFL வகை மதுவகைகள் தான் மிக அபாயகரமானது என்று பலரும் சொல்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவர் வெளிநாட்டு மதுவகையை குடிப்பதற்கும் எட்டாயிரம் ரூபாய் வருமானம் உள்ள ஆள் IMFL குடிப்பதற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டல்லவா..... தரமானத்தை தயார் செய்தால் ஒரே பாட்டிலுடன் நிறுத்தி விடுவார்கள் என்று கருதி, அரசே தரத்தை விரும்பாமல் கூட இருக்கலாம்.

இவ்வளவு அபரிமிதமாக காசை  - எல்லா பொதுமக்களும் அனுபவிக்கக வரியாக வாரி வழங்கும் ஆட்களில், பெரும்பாலானவர்களின் நிலை பரிதாபகரமானது. அவர்கள் நடத்தப்படும் முறை அதைவிட கொடுமை. அதைத்தான் நாஞ்சில் நாடனின் கட்டுரை துல்லியாமாக விவரிக்கிறது. இதற்கு தீர்வாக கள்ளுக் கடைகளை - ஏதாவது அதிசயம் நடந்தாலன்றி - அரசாங்கம் திறந்தாலும்....இத்தகைய வருமானம் வரும்வழியை அரசாங்கம் விட்டுவிடுமா என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம், பயங்கர போதையை சுவைத்துவிட்டு, நம்மாட்களில் எத்துனை பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்பதும் கேள்விக்குறியே. ஆனால், பெருமளவில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஒரு கட்டுக்குள் அதனை கொண்டுவந்தால்....இப்போது குடித்துக் கொண்டிருக்கும் பல பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்ற நம்பிக்கையோட இதனை அணுகலாம். போதைக்காக குடிப்பது போக - சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் ஆட்கள் குடிப்பதற்கான காரணம் முற்றிலும் வேறு. அவர்களைப் போன்ற ஆட்களை அப்படியே வைத்துவிட்டு, குடிக்காதீர்கள் என்ற எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறுவது.

கள்ளைப்பற்றி பேசும் பொழுது....... 'அந்த காலத்தில்' என்றொரு பதம் சரளமாக புழங்குகிறது. அன்றிருந்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை எல்லாம் தற்காலத்திற்க்கும் ஒத்து வருமா.....போன்ற பல கேள்விகளை இந்தப் புத்தகம் எழுப்பினாலும், பின்பக்க அட்டைக் குறிப்பில் இருப்பதைப் போல "குடி பற்றிய சமூகவியல் நோக்கில் ஒரு மீள் பார்வை தேவையானதாகவும், அவசியமானதாகவும் இருக்கின்ற இந்நேரத்தில் - அதைபற்றிய விவாதத்தை மேலெடுத்துச் செல்ல இந்தத் தொகுப்பு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறோம்". சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசையும்.

------------------------------------------

இந்தப் புத்தகத்தைப் பல மாதங்கள் முன்பு படித்தது. மதுபானக் கடை படத்தைப் பார்த்து விட்டு எழுதாலாம்.......எழுதலாம்.....என்று காத்திருந்து....படம் ரெண்டே நாள் தான் எங்கள் ஊரில் ஓடியது. நண்பர் ஒருவர், ரெண்டு மாதங்கள் முன்பு மாடர்ன் சினிமா - டிவிடி போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார். கடைசியில் டிவிடியே போன வாரம் தான் இங்கு வந்தது. நாஞ்சில் நாடனின் மேலே சொன்ன கட்டுரை தான் படத்திற்கு அடிப்படை. தவிர, இந்தப் புத்தகத்தை இயக்குனர் படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். கொஞ்சம் செயற்கைத்தனமான காட்சியமைப்புகள் வசனங்கள் என்று இருந்தாலும் (சுவரில் அக்கா மாலா....கூல்ட்ரிங்க்ஸ்  செம), மிக முக்கியமானதொரு முயற்சி. மேலே நாம் பார்த்த அனைத்து கேள்விகளும் படத்திலும் வருகிறது. இந்தப் படத்தை தவறவிட வேண்டாம்.

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமலேயே இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன். இதற்கு முன்னர், ப்ரூஸ் லீ பற்றிய பதிவில் எவ்வாறு ஆரம்பிப்பது என்று மிகக் குழப்பமாக இருந்ததுண்டு. இதுவரை நான் சந்தித்த ஆட்களில் ப்ரூஸ் லீ, மைக்கல் ஜாக்சன் பற்றி ஏதேனும் பேச்சு வந்தால்.......இருவரையும் தெரியாது என்று ஒருவர் கூட சொன்னதில்லை. இதுபோன்ற ஆட்களைப் பற்றியெல்லாம் ஆரம்பிக்கும் போது, எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழுப்பம் ஏற்படுவது சகஜமே. அந்த குழப்பத்தை சாக்கிட்டு, வழக்கம் போல் சொந்தக் கதையில் இருந்து தொடங்குகிறேன்.

சிடி ப்ளேயர் என்ற உபகரணம், முதன்முதலில் எங்கள் வீட்டிற்கு வந்தது - 2003ல் தான். டிவி கூட, பரவலாக எல்லா பக்கமும் வந்த பிறகே வாங்கினோம். கேபிள், காலேஜ் சேர்ந்த பிறகே நிரந்தரமாக வீட்டில் இணைக்கப்பட்டது(ஓவரா க்ரிகெட் பாத்ததுனால லீவ்ல மட்டும் தான் கேபிள் குடுப்பாங்க...பல பேர் வீட்டிலும் அப்ப அதுதான் வழக்கம்னு நெனைக்கிறேன்). ஆக, சிடி ப்ளேயரும் சற்று தாமதமாகவே வாங்கப்பட்டது. ப்லிப்ஸ் சிடி ப்ளேயர். கூடவே Jackson's Greatest Hits என்ற வீடியோ சிடி. அதன் விலை 120 ரூ. ஒரிஜினலாக இருந்து இவ்ளோ விலை என்றால் பரவாயில்லை. அது பைரேட்டட் விசிடி(அப்பவே அப்பிடி). திண்டுக்கல்லில் பத்து வருடங்கள் முன்பு திருட்டு டிவிடி எல்லாம் அநியாய விலை.ஒரிஜினல் ஆங்கில சிடிகள் எல்லாம் அந்த ஊரில் மிகமிக அரிது(அப்படியான ஊரில் இருந்து ஒரு பதிவுலக ஆளுமை உருவாகி உள்ளது காலத்தின் கட்டாயம்). எனக்கு இந்த சிடி ப்ளேயர் இதிலெல்லாம் அப்போது ஆர்வம் இல்லை. வாங்கி வந்தது, என் அப்பா. கூடவே ஜாக்ஸனின் சிடியையும் கையேடு அவர்தான் வாங்கி வந்தார். இங்கு இன்னொன்றை சொல்லியாக வேண்டும், எந்தளவுக்கு ஜாக்ஸனின் பாடல்கள் எனக்கு பிடிக்குமோ அதைவிட அதிகமாக என் அப்பாவிற்கு பிடிக்கும். ACDCயை அதிக வால்யுமில் அலற விட்ட போது, என்னைவிட அதிகமாக ரசித்தவர் அவரே. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், தலைமுறை இடைவெளியின்றி ஜாக்ஸனின் இசையில் இருந்த துள்ளலுக்கு அனைவரும் அடிமை என்பது கவனிக்கப்பட வேண்டியது. தொடர்ந்து லூப்பில் அந்த விசிடியே ஓடிக்கொண்டிருந்தது. காலை, மாலை, இரவு என்று கணக்குவழக்கே இல்லை. அதற்கு முன்னர், கேபிள் இருந்த காலத்தில் அவ்வப்போது MTvயில் மட்டுமே ஜாக்ஸனை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, நினைத்த நேரத்தில் கேட்க முடிந்ததே பெரிய விஷயமாகப்பட்டது. என் பாட்டி கூட, "அந்த பொண்ணு பாட்ட போட்டுட்டியா " என்று கேட்கும் அளவுக்கு சிடியை போட்டு தேய்தாகிவிட்டது. அதற்குப் பின்னர் MP3, இன்டர்நெட் என்று பாடல்களை தேடிக் கேட்கும் விதம் மாறியது.


அந்த ஜாக்ஸனின் Greatest Hit's சிடியில் ஏறக்குறைய அவரது எல்லா புகழ் பெற்ற பாடல்களும் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உன்மத்தம் பிடிக்க வைக்கும் அளவிற்கு இருந்தாலும், மற்ற எல்லாவற்றில் இருந்தும் வித்தியாசமான அனுபவத்தை அழுத்தத்தை கொடுத்த பாடல் - Bad. ஜாக்சனின் குரலில் பெண்/சிறுவன் போன்றதொரு தன்மை இருக்கும். Thrillerல் கூட நல்ல "பையன்" வகையான பாடல்களை, அந்தக் குரலிலேயே பாடியிருப்பார். ஆனால் Bad பாடல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு rugged வகையான பாடலாக இருப்பதைக் கவனிக்கலாம். அதே ஆல்பத்தில் இருந்த Dirty Dianaவும் பின்னாட்களில், They Don't Care about usசிலும் அந்த ஆக்ரோஷத்தைக் காணலாம்.

1982ல் த்ரில்லர் வெளியாகிறது(இதுபோன்ற விஷயங்களை மாமூலான வார்த்தைகளைப் போட்டுத் தான் எழுத முடியும்). த்ரில்லரைப் பொறுத்தவரை, இன்று வரை உலகளவில் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆல்பம் என்பதிலிருந்து - வாங்கிய விருதுகள் வரை, சாதனைகள் அன்றி வேறொன்றும் இல்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், EPIC. கற்பனைக்கும் எட்டாத வெற்றியைக் கண்ட பின், ஜாக்ஸன் 1987ல் அடுத்த ஆல்பத்திற்கு தயாரான பொழுது – மிக தீர்க்கமானதொரு முடிவில் இருந்தார். த்ரில்லரை விட அதிகளவில் இந்த ஆல்பத்தை விற்கச் செய்வது. அறைகளின் கண்ணாடியில் 100 மில்லியன் என்று எழுதி வைத்திருந்தாராம். அதுதான் இலக்கு என்பதை நினைவுறுத்த. அப்படிப்பட்ட ஒரு ஆல்பம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி (1987 - 2012) சிலபல மாதங்கள் முன்பு, ஸ்பைக் லீயின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அட்டகாசமானதொரு டாகுமென்டரி தான் Bad 25. ஆல்பத்தைப் பற்றி மட்டுமல்லாமல் ஜாக்ஸனைப் பற்றியும் பல விஷயங்களை மிக மிக சுவாரசியமாக பதிவு செய்துள்ளனர்.


கவர் போட்டோவில் ஆரம்பித்து ஏகப்பட்ட சுவாரசியங்கள் Bad ஆல்பத்தைப் பொறுத்தவரை நடந்தேறியுள்ளன. உதாரணமாக, முதலில் ஆல்பம் கவராக வேறொரு படம் தான் முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் அது வேண்டாமென்று முடிவு செய்யப்பட்டு, இந்த ஐகானிக் படம் தேர்வு செய்யப்பட்டது. மேலே சொன்னது போல, மென்மையான/சாக்லேட் பாய் என்று சொல்வோமே, அதுபோன்ற தனது இமேஜய் அவர் மாற்ற விரும்பியதற்கு பொருத்தமாக இருந்தது இந்தக் கவர் இமேஜ். அதற்குப் பிறகு, க்வின்சி ஜோன்ஸும்(தயாரிப்பாளர்) ஜாக்ஸனும் எடுத்த முடிவுதான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை. முற்றிலும் உண்மை.


Bad பாடலுக்குப் பிறகு, வீடியோவை உருவாக்குவது என்று முடிவானது. ஜாக்ஸனின் த்ரில்லர் வீடியோ உலகம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வு, பூகம்பத்தின் aftershock போல இன்றளவும் ஏதாவதொரு வடிவில் இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், மலேசியாவில் யுவன் நிகழ்ச்சி நடந்ததை டிவியில் காண நேர்ந்தது. அதில், த்ரில்லர் ரெட் ஜாக்கட்டையே அவர் அணிந்திருந்தார். அப்படிப்பட்டதொரு வீடியோவிற்குப் பிறகு வரும் வீடியோ.......ஜாக்சனின் பரிணாமத்தை மாற்றிக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.....ஒரு rawness இருக்க வேண்டும். பாடலில் இருக்கும் ஆக்ரோஷம் அத்தனையும் வீடியோவில் வெளிப்பட வேண்டும். இத்தனைக்கும் பொருத்தமான நபர் வேறு யாராக இருக்க முடியும்.......சாட்சாத் நமது மார்டின் ஸ்கார்சேஸி தான். மைக்கல் ஜாக்ஸன் இதனை வீடியோ என்றே அழைக்க விரும்பாமல், Short Film என்று அழைப்பதையே விரும்பினார் என்றால், ஸ்கார்சேஸி அதற்கும் ஒருபடி மேலே போய், ஸ்க்ரிப்ட் எழுத – Color of money படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டரை அமர்த்தி, பல மாதங்கள் கொஞ்ச கொஞ்சமாக கான்செப்ட்டை செதுக்கி இந்த வீடியோவை உருவாகினார். இதற்கு மேல் இதுபற்றிய விஷயங்களை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். நீங்களே டாகுமென்டரியைப் பார்க்கும் பொழுது  ஸ்கார்சேஸி + ஜாக்சனின் மேதைமை புரியும்.  இந்த வீடியோ ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், ஒரே காரணம் - ஷாட்கள். ஒவ்வொன்றும் ஸ்கார்சேஸியின் ட்ரேட்மார்க் விஷயங்கள். கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து, தெருவில் ஜாக்ஸன் போகும் போது வரும் லாங் ஷாட்கள் என்று.....முழுக்க முழக்க ஸ்கார்சேஸியன்தனமான வீடியோ. என்ன மாதிரியான க்ளோஸ்-அப் காட்சிகள்....இன்றும் நினைவில் உள்ளது. அதுவரை பாடல்களுக்கனா வீடியோவில் இதுபோன்றேல்லாம் க்ளோஸ் – அப் காட்சிகள் இருந்ததே இல்லை. பாடல் ஆரம்பிக்கும் போது, ஜாக்ஸன் கையை மேல உயர்த்தும் போது ஒரு ஷாட் வரும். அட்டகாசம். என்னால் மறக்க முடியாத ஓப்பனிங்களில் ஒன்று. தொடர்ந்து கால்கள், கைகள் என்று அதுவரை பாடல்களுக்கான வீடியோக்களுக்கு இருந்த மரபை உடைத்தது ஸ்கார்சேஸி தான். கேமேராவும் ஜாக்ஸனுடன் சேர்ந்து நடனம் புரிந்திருக்கும். ஜாக்ஸனின் டான்ஸ் மூவ்கள் உருவான விதம பற்றிய அட்டகாசமான தகவல்கள் இதில் உள்ளன. West Side Story மாதிரியான படங்களில் இருந்து எவ்வாறு மூவ்களை எடுத்தக் கொண்டார் என்பது குறித்தெல்லாம் பல விஷயங்கள் இதில் உள்ளன. உபரித் தகவல், ஸ்கார்சேஸி இந்த வீடியோவை டைரக்ட் செய்த பிறகு இப்பொழுதுதான், இந்த டாகுமெண்டரிக்கா இந்த வீடியோவைப் பார்க்கிறார். இந்த ”Short Film”மை எடிட் செய்தது.........வேறு யார்.......தெல்மா ஸ்கூமேக்கர் தான்.

பின் Liberian Girlல் ஆரம்பித்து Man in the Mirror வரையிலான Bad ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும் எவ்வாறு உருவானது, அதில் நடந்த சுவாரசியங்கள், பின்னணித் தகவல்கள் என்று போகப்போக ஒரே ரகளை தான். உதாரணமாக, Smooth Criminal வீடியோவில் வரும் வொயிட் ஜாக்கட்டை மிக நேர்த்தியாக, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டிசைன் செய்தது ஜாக்ஸன் தான். Get my kenny shoes now.......அதே ஸ்மூத் க்ரிமினல் வீடியோ எதனைத் தழுவி எடுக்கப்பட்டது தெரியுமோ ?? நுவார் பதிவில் சிலாகித்து எழுதியிருந்த The Third Man தான் அந்தப் படம். நீண்ட நிழல்கள்.....நினைவிருக்கும் என்று நம்புகிறேன். "Annie are you ok ? " ஞாபகம் உள்ளதா ?? ஏகப்பட மாடுலேஷங்களில் ஸ்மூத் க்ரிமினல்  பாடலில் வருமே.......அந்த Annie யார் தெரியுமோ ??? CPR முதலுதவி சிகிச்சைக்கு ஜாக்ஸன் பயன்படுத்திய  பொம்மையின் பெயர் தான் ஆனி.........செம ட்ரிவியா அது.


உச்சஸ்தாயிலிலும் ஜாக்ஸனால் வெகு சுலபமாக பாட முடியும். ஆண்மை கலந்த குரல்.....ஸ்மூத் க்ரிமினால் மாதிரி. ஆனால் இந்த சிறுவன் மாதிரியான குரலையே அவர் விரும்பியிருக்கிறார். ஹார்ட் ராக்கிஷ் Dirty Diana, Leave me alone, They way u make me feel என்று எல்லா பாடல்களுக்கும் ஒரு குட்டி வரலாறே உள்ளது. அதேபோல், முதன்முதலில் விரலில் சொடுக்கு போடுகிறோம் இல்லையா........அதையும் ஒரு சின்ன இசைக் கோர்ப்பாகக் கருதி (ரஹ்மான் சைக்கிள் பெல்லை உபயோகித்தது ஞாபகம் வருகிறது) அதற்கு தனக்குத்தானே க்ரெடிட் கொடுத்தவர், ஜாக்ஸன் தான். Bad ஆல்பத்தில் பல சொடுக்கு "இசை" உண்டு.



மற்றொரு மறக்க முடியாத பாடல்....."Man in the mirror". ஜாக்ஸன் காந்தியைப் பற்றி விரும்பி படித்தவர். காந்தியின் "Be the Change you wish to see in the world" மேற்கோள் கூட இந்தப் பாடல் வரிகளை எழுத அவருக்கு உதவியிருக்கலாம் என்பது என் அனுமானம். மன்டேலாவை வெகுவாக மதித்தவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த man in the mirror இடம் மனவிட்டு பேசினாலே தீர்க்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. Obviuosly, நாம செய்வதைத் தான் கண்ணாடி காட்டும். அடுத்தவர்களுக்கு எதையாவது செய்யும் முன் இதை ஒருமுறை யோசித்தால் நலம். நமக்கே ஒருநாள் அது திரும்பும்.

ஜாக்ஸனை அணுகுகிறவர்களில் ரெண்டு விதமான ஆட்களை நான் பார்த்திருக்கிறேன், அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் ஜாக்ஸன் வெறியர்கள் நீங்கலாக. ஒன்று, இது வெறும் பாப் இசை தானே....இதில் அவர் ஏதோ செய்தார் என்ற அளவிலான ஆட்களும், கண்மூடித்தனமாக என்னமோ அவர் பிறக்கும் போதே ஜீனியசாக பிறந்து(ராமானுஜம், பிகாசோ போல) தானாகவே அவருக்கு எல்லாம் கைவந்தது என்று நினைப்பவர்கள். சிறுவர்களுக்குரிய எந்தவித சந்தோஷங்களும் கிடைக்காமல், கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல், மிகமிக கடுமையான ராணுவ ஒழுங்குடன் கூடிய பயிற்சியினாலயே அவர் ஜீனியஸாக மாறியவர். இந்த ஆல்பம் தாயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு அவர் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவாரம். இந்த ஆல்பம் என்று மட்டுமில்லாமல், ஏறக்குறைய எல்லா ஆல்பங்களிலும் அவரது கற்பனைக்கும் எட்டாத உழைப்பு உள்ளது. ப்ரூஸ் லீயிடமும் இந்த வெறித்தனமான உழைப்பைக் காணலாம். அதில் முக்கியமானது, மிகமிக ஒழுங்குடன் ஒரு முனிவர் தவம் செய்வதைப் போலத்தான இவர்களது உழைப்பு இருந்தது. செய்யும் வேலையின் மீது அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு, செய்நேர்த்தி. மேடை அமைப்பது முதல் இப்படிதான் இருக்க வேண்டும் என்று Industry Standards என்று சொல்வார்களே அதைச் செய்து காட்டியது அவர்தான். எவ்வளவு உயரத்திற்கு அவர் போயிருந்தாலும், கொடுங்கனவு போல் பல்வேறு பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் துரத்தி துரத்தி கடைசியில் அவரை சாகடித்தே விட்டது. விடுங்கள். அதைப்பற்றி பேச ஆரம்பித்தால் போய்க் கொண்டேயிருக்கும். மேல சொன்ன ரெண்டு விதமான ஆட்களும், ஏன் மூன்றாவது வகை ஆட்களும் கூட - இந்த டாகுமென்டரியைப் பார்த்தால், அவரின் மீதான மதிப்பு+மலைப்பு நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். பதிவெழுதுவது முதற்கொண்டு, செய்யும் வேலையை இன்னும் ரசித்து செய்ய வைக்கும்/வைத்தது.

இந்த டாகுமென்டரி அட்டகாசமாக வர இன்னொரு காரணம், ஸ்பைக் லீ. எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்(யார தான் நா அப்பிடி சொல்லல). ஜாக்ஸனின் ரசிகர் என்பதை விட, வெறியர் என்று சொல்லலாம். மால்காம் X, 25th Hour போன்றவற்றின் இயக்குனர். ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருபவர்.  சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு சர்ச்சைக்குள்ளாவார். இவருக்கும் க்வின்டினுக்கும் ஏழாம் பொருத்தம். ஜாங்கோ வரை அது தொடர்கிறது. இவரின் படங்களை, Spike lee presents, Spike Lee's film என்றெல்லாம் மாமூலாக ஆரம்பிக்க மாட்டார்...... A Spike Lee's Joint. அவ்ளோதான். ஆப்ரிக்க - அமெரிக்க இளம் தலைமுறையினர் மீதான இவரின் positive influence மிக அதிகம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், போன வாரம் வெளிவந்த இந்தப் பாடல் தான்.