நீல் ப்லோம்கேம்ப்ன் எலிஸியம் படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் வாசிக்கும் வாய்ப்பு எனக்குகிட்டவேயில்லை. வேறு வழியில்லாமல் தொலைக்காட்சியின் குறுந்திரையில் நேற்று ஒருவழியாக வாசித்து முடித்தேன். நீல் ப்லோம்கேம்ப்ன் முந்தைய படமான மாவட்டம் - ஒன்பது (District 9), நிறவெறி மற்றும் சர்வாதிகாரம் சார்ந்த அடக்குமுறையை லாவகமாகச் தொட்டுச் சென்றது. அவரின் அடுத்தபடமென்பதால், இதிலும் இலைமறைகாயாக குறியீடுகளால் சூழப்பட்ட காட்சிகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும் என்ற உந்துதலினாலேயே ஆவலுடன் எலிஸியம் திரைப்படத்தை வாசிக்கத் தொடங்கினேன்.

வருடம் 2154 (கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் அவ்வாறே உள்ளது). உலகில் இரண்டே இரண்டு வகையான ஜாதிகள் மட்டுமே உள்ளன. உள்ளவன் - இல்லாதவன். இல்லாதவர்கள் உலவும்,வாழும் பகுதி தான் நமது பூமி. அவர்களுது வேலை - எலிசியம் என்ற சுருளமைப்புக் கொண்ட வானூர்தி நிலையத்தில்  இருக்கும் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களைம் இன்னபிற விடயங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பது. அவ்வாறான ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவருபவன் தான் படத்தின் பிரதான கதைமாந்தனான மேக்ஸ். மிகத் திறமையான மகிழ்வுந்துத் திருடனும் கூட. ஒருநாள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில், அளவுக்கதிகமான  கதிரியக்கம் அவன் மீது முழுமையாகப் பாய்ந்துவிடுகிறது. அப்படியே அவனை அங்கயே இருக்கவிட்டு, சில நேரங்கள் கழித்து தான் வந்து அள்ளிக்கொண்டுச் செல்கின்றனர். அதுவும் ஒரு இயந்திரம் தான் வந்து அவனைத் தூக்கிச் செல்கின்றது. அவ்வியந்திரமே அவனை பரிசோதித்து, இன்னும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே அவன் உயிருடன் இருப்பான் எனவும், அதுவரை வலியை சமாளிக்க ஒரு மருந்துப் புட்டியையும் வீசி எறிந்துவிட்டுச் செல்கின்றது. உடலுறுப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக பாதிக்கத் தொடங்க மிகுந்த தள்ளாட்டத்துடனும் சிரமத்துடனும் விசனத்துடனும் வெறுமையுடனும் வீடு திரும்புகின்றான். எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வான உயிர் வாழ எத்தனிக்கும் உணர்வு மேலோங்க, தனது தோழனுடன் சேர்ந்து அப்பிரதேசத்தின் முக்கிய குற்றதொழிற்முனைவோர் கூட்டமொன்றில் உதவிகோரி செல்கிறான். எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் வசதியுடைய எலிசியத்திற்கு சட்டத்திற்குப்புறம்பான வழியில் கள்ளத்தனமாக தன்னை அனுப்பும்படி கேட்கிறான். ஆனால் அக்கூட்டத்தினர் பதிலுக்கு மற்றொரு விஷயத்தை அவன் செய்து முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேட் டெமன்

இந்த இடத்தில் இருந்துதான் திரைப்படம் வேறு தளத்திற்குச் செல்கிறது. அதிகாரம்,மதம்,அரசியல்,விஞ்ஞானம் என்று பல விடயங்களும் எவ்வாறு தற்போதைய சமகாலத்தில் ஒருசிலரால் மட்டுமே கையாளப்படுகிறது, அநேக மக்களுக்கு இவ்வசதிகள் எல்லாம் மறுதலிக்கப்படுகிறது என்பதை முற்றிலும் புதிய கோணங்களின் மூலமும் குறியீடுகள் மூலமும் இயக்குனர் அனாயாசமாக நம்முன் காட்சிகளாக அடுக்கிச் செல்கின்றார். அக்கோணனங்களில் இரண்டு கோணங்களை மிகமுக்கியமானதாகச் சொல்லலாம்.

பொருள்முதல்வாதத்தின் வழி காட்சிப்படிமங்களை நகர்த்துதல் & திரிபு நிலை அரசியல்:

திரைப்படம் தொடங்கி, பெயர்கள் வரத்துவங்கும் போதே இது எப்படியான படம் என்பதை இயக்குனர் மிகத்தெளிவாக நமக்கு உணர்த்திவிடுகிறார். அதற்கு சாட்சி, கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம்.  "In Association With Media - Rights - Capital". அதாவது, ஊடகம் (Media) - உரிமைகள்(Rights) - மூலதனம் (Capital). இம்மூன்றும் எத்தகைய முரண்பாடுகள் நிறைந்த வார்த்தைகள், சமகாலத்தில் ஒவ்வொன்றும் இவ்வாறு வெவ்வேறான தளத்தில் இயங்கி மக்களின் மீது கட்டற்ற ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு கட்டியம் கூறவது போன்ற எழுத்துவடிவக்காட்சி தான் இது. இதனை வேறு வகையாகவும் கட்டுடைக்கலாம். Capital - என்பதனை மூலதனம் என்பதாகக் கொள்ளாமல், Capital - தலைநகர் என்பதாக எடுத்துக் கொண்டால், எவ்வாறு உலகின் பல நாடுகளிலும் பல்வேறு வசதிகளும் வாய்ப்புகளும் அந்நாடுகளின் தலைநகர்களிலேயே குவிந்து கிடக்கின்றன என்பதாகவும் இதனைப் பார்க்கலாம்.

ely

உலகத்தைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்திலும் உருப்பெற்றது. சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல்வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும் எதிர்த்து அடிமைச் சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கு முற்போக்கு சிந்தனை எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அச்சிந்தனையின் சில கீற்றுகளை இப்படத்தில் எடுத்தியம்பப்பட்டுளன. உதாரணமாக, மேக்ஸ் எதிர்தரப்பு ஆட்களிடம் இருந்து கடும்காயங்களுடன் தப்பி வரும் காட்சியைச் சொல்லலாம். முந்தைய தலைமுறையின் மூதாட்டி ஒருவர், மேக்ஸ்சை கட்டை வண்டியின் கீழ் ஒளிந்துகொள்ளச் சொல்வார். அந்த வண்டியின் மேல் என்ன இருக்கிறது என்பதைக் கவனித்தோமானால்..............கீழே படத்தைப் பாருங்கள்

எலிஸியம்

பண்டைய வேத காலம்தொட்டு பன்றிகளை சூத்திரர்களோட ஒப்பிட்டு பேசினர் என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அத்தைகைய பன்றிகளுகுக் கீழ மேக்ஸ் ஒளிந்து கொள்வதன் பின்னால் மிகநுட்பமான வரலாற்றரசியல் உள்ளதை ஊன்றி கவனித்தால் புரியும். அக்காட்சி முடியும் தருவாயில், மேக்ஸ் அத்துணை களோபரங்களுக்கு இடையிலும் அம்மூதாட்டிக்கு நன்றி சொல்வான். எத்துனை கொடுமைகளுக்கு இடையில் மனிதன் வாழ்ந்துவந்தாலும் அடிப்படைப் பண்புகள் இன்னனும் செத்துவிடவில்லை, அதற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் நிச்சயம் சிலமனிதர்கள் ஈடுபடுவார்கள் என்பதனை மிகஉணர்வுப்பூர்வமாக சொன்ன கட்டம் அது. திருட்டு வானூர்தியில் மக்கள் தப்பிச் செல்வது, உலகெங்கும் பல மக்கள் அகதிகளாக செல்வதை குறிப்பதாகத் தோன்றவில்லை ? இதைதான் படத்தின் இயக்குனரும்  Although set in 2154, Elysium's director has stated that it is a comment on the contemporary human condition "No, no, no. This isn't science fiction. This is today. This is now" என்று ஒரு நேர்முகத்தில் கூறுகின்றார். ஏகப்பட்ட விழுமியங்களை பட்டென்று இயக்குனரின் இப்பதில் தகர்த்தெரிகிறதல்லவா.

படேல். ஆம் இதில் எலிசியமின் தலைமைப்பொறுப்பில் ஒரு இந்தியர் தான் இருக்கிறார். அவர் பெயர்தான் படேல். இதுவரை எந்தவொரு அமெரிக்க திரைப்படத்திலும் வராத விடயம் இது. இதன் பின்னணியில் இருக்கும் நுட்ப அரசியல் குறித்தான பகடியையை உங்களது பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.  இன்று உலகம் முழுவதும் இன்னநாடென்று பிரித்தறிய முடியாவண்ணம், அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏற்றத்தாழ்வுகளை காட்சிக்கு காட்சி தெளிவாக நம் முன்வைக்கின்றார். மிகமுக்கியமான மற்றொரு விடயம்.....மருத்தவ வசதிகளும் அதன் செலவுகளும். சில நாடுகளில் அரசாங்கமே மக்களுக்குரிய மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில், வசதியுடையவர்களுக்கு மட்டுமே தரம்வாய்ந்த மருத்துவ வசதிகள் போய்ச் சேருகின்றன. அடித்தட்டு மக்களில் பல பேருக்கு அவ்வசதி கிடைப்பதில்லை என்பது கண்கூடு. இந்தியா மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளிலும் இதுதான் நிதர்சனம். இப்படி காட்சிக்கு காட்சி அடிச்சரடாக பல குறியீடுகள் திரைப்படம் முழுமைக்கும் வியாபித்திருக்கின்றன. அதனை அன்னப்பறவைப் போல், பிரித்தறிந்து கண்டுணர்ந்து கொள்வது நம்முன் இருக்கும் கடமை. எவ்வாறு பொருளாதார/அரசியல் ஏற்றத் தாழ்வுகள் உலகின் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் என்பதற்கான கட்டியம் தான் இப்படம். இணையத்தில் இப்படத்தைப் பற்றி மிகவிரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. முடிந்தால் தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

படம் எனக்குள் எதிரொலிக்கவிட்ட கேள்விகளில் சில:

1) மேக்ஸ்(Max) - லத்தீனில் இதற்குப் பொருள், மிகஉயர்ந்த - அதாவது Greatest. ஒரு சாதாரண அடித்தட்டு கதைமாந்தனுக்கு இந்தப் பெயரை இயக்குனர் வைக்கக் காரணம் ?

2) ஜோடி ஃபாஸ்டர் கதாபாத்திரத்திற்கு Delacourt என்ற பொருளாதார மேதையின் பெயரை சூட்டியது ஏன் ?

3) ஏன் மேக்ஸ்ன் பரோல் அதிகாரி - ஒரு இயந்திரமாக உள்ளது ?

4) ஏன் படத்தில் ஆங்கிலம் - லத்தீன் என்று இரு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன ? இதன் பின்னணியில் இருக்கும் மொழி அரசியல் என்ன ?

5) ஏன் எலிஸியத்தின் வான்வெளிப் பகுதி கருப்பாக உள்ளதாகக் காட்டப்படுகிறது ?

6) ஏன் இயந்திரங்கள் சிவப்பு வண்ணத்தில் உலா வருகின்றன ?

7) ஏன் கதாநாயகி இறுதிக் கட்டங்களில் தனது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடும் போது - சூரியன் உதிப்பதாகக் காட்டப்படுகிறது ?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு எனக்கு தோன்றிய விடைகளை என் முகநூல் அதாவது Facebook பக்கத்தில் காணலாம். உங்களது கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆவல்.

War crimes are defined by the winners. I am a winner. So i can make my own definitions

இது ஏதோ ஒரு சர்வாதிகாரி உதிர்த்த வார்த்தைகள் அல்ல. படத்தில் வரும் சாமான்ய கதாபாத்திரம் உதிர்க்கும் வார்த்தைகள். இந்தளவுக்கு என்னைச் சலனப்படுத்திய – வெகுவாக பாதித்த - கேள்விக்குள்ளாக்கிய படம்.....கிட்டத்தட்ட  எதுவுமே சட்டென்றுஞாபகத்திற்கு வர மறுக்கிறது. Hardest surrealistic film i've ever seen. சில படங்கள் நமது பார்வையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வல்லமை கொண்டது. சக மனிதர்கள் மீது என்ன மாதிரியான மதிப்பு வைத்திருக்கிறோம் ? என்னென்ன அளவுகோல்களின்படி அவர்களை அணுகுகிறோம் ? அடுத்தவர்களை காயப்படுத்தாமல் ஒரு idealistic மனநிலையில் வாழ்வது சாத்தியம் தானா ? என்பதில் தொடங்கி பக்கத்து தெரு - ஊர் - மாநிலம் - நாடு வரையில், மனிதன் என்ற உயிரினம் சக உயிரினத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள், அடக்குமுறைகள் வரை ஏதாவதொரு சந்தர்பத்தில் பல கேள்விகள் எழுந்தே தீரும். ரோட்டில் நடந்துபோகும் போது ஏற்படும் சிறுசிறு சம்பவங்கள் கூட சிலசமயம் பெரிய கேள்விகளுக்கு வழிவகுக்கும் அல்லவா. அதுபோன்றதொரு அனுபவமே இந்தப்படம்.

த ஆக்ட் ஆஃப் கில்லிங்

சக மனிதன்/உயிரினங்கள் மீதான வன்முறை என்பது ஆதிகாலம் தொட்டே நமது உடம்பில் ஊறிய உணர்வு. ஆனால் அன்று அதற்கான காரணங்கள் வேறாக இருந்தது. மனித இனம் வளர வளர – குறிப்பாக இனக் குழுக்கள் பெருகப் பெருக, அமைப்புகளும் கூடவே பிரச்சனைகளும் பெருக ஆரம்பித்தன. இந்தக் குழுக்களின் வாயிலாகவே, நோம் சோம்ஸ்கி சொல்வது போல – ஒரு common medium/platformமிற்கான தேவையின் காரணமாக  – சமூகம் என்ற அமைப்புத் தோன்றியது. இந்த சமூக அமைப்பிலிருந்துதான் அரசு – ஆட்சி – அதிகாரம் போன்ற வரையறைகள் தோன்றின. மனித இனம் வளர வளர இந்த அமைப்பு பல்வேறு மாறுதல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது. இது இயற்கையான ஒன்றுதானே. இதுபோன்ற பல கேள்விகளையும் நெறிமுறைகளையும் முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் மிகமுக்கிய பங்குவகித்தது(வகிக்கின்றது). அரசியலின் வாயிலாகவே அரசு – ஆட்சி – அதில் மக்களின் பங்கு போன்றவைகள் பற்றிய பார்வைகள் மாறத்தொடங்கின; இசங்களும் தோன்றின என்பது வரலாறு. இன்று, அரசியல் என்ற வார்த்தை அரசு – அதிகாரம் போன்றவைகளின் எல்லைகளைத் தாண்டி, டூத் ப்ரஷ் முதற்கொண்டு அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது. சாக்ரடீஸின் புகழ்பெற்ற வரிகளில் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது- மக்களைப்போல் ராஜ்யம். ஆனால் யாருக்காக, எந்த மக்களுக்காக இந்த ஆட்சி - அரசு - அமைப்பு எல்லாம் தோற்றுவிக்கப்பட்டதோ-மாற்றி எழுதப்பட்டதோ, அம்மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்களிடம் மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கப்பெறும் பொழுது........எவ்வாறு நடந்து கொள்வார்கள் ? இன்றளவும் யாராலும் விடையளிக்க முடியாத கேள்வி இது. மாவோ & ஸ்டாலின் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். ஹிட்லர் ஆட்சியில் இறந்தவர்களைக் காட்டிலும் இவர்கள் ஆட்சியில் இறந்தவர்கள் அதிகம்.

actofkillin1

இந்தியாவையே எடுத்துக்கொள்வோம். ஒரு மிகப்பெரிய கலகம் நடந்து அதிகாரம்/அமைப்பு எல்லாம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நம்மைக் கேட்க, கட்டுக்குள் வைத்திருக்க யாரும் இல்லை. என்ன மாதிரியான செயல்களில் ஈடுபடுவோம் ? இன்னும் விபரீதமாக யோசிப்போம். குறிப்பட்ட இன/மொழி/ஜாதி மக்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு கலகம் எழுப்பப்படுகிறது. அதனினும் மோசமாக அரசே அதனை முன்னின்று நடத்துகிறது (சீக்கியர்கள்/குஜராத் கலவரம் எல்லாம் ஞாபகம் வந்தால்....அது தற்செயலானதே). மக்களாகிய நாம் எப்படி நடந்து கொள்வோம் ?

பெல்லா தாரின் Wereckmeister harmonies, வேறொரு பரிணாமத்தில்  மேற்கூறிய கேள்விகளை எழுப்பிய படம். முன்பு நான் பார்த்து புரிந்துகொண்டதைவிட  இப்பொழுதுதான் அதன் முழுவீரியமும் புரிகிறது.


எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில், காந்தி மட்டுமே இதுகுறித்து மிகத்தீவிரமாக கேள்விகளை எழுப்பியவர். குழு மனப்பான்மை(Mob psychology) எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை பல்வேறு தளங்களில் வைத்துப் பேசியவர். மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அவர் சொன்னதுதான் - Be the change that you wish to see in the world. ஆரம்பகாலம் தொட்டே இந்தவொரு விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருந்தார். இது சரியாக புரிந்துக்கொள்ளப்படாத காரணத்தினாலேயே பலவாறு விமர்சிக்கப்பட்டார். சௌரி சௌரா நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1922 ஃபிப்ரவரி 4. காந்தியின் தலைமையில் பல மாதங்களாக ஒத்துழையாமை போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. உத்தர்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தின் சௌரி சௌரா என்றொரு பகுதி. போலீஸுக்கும் – போராட்டத்தில் பங்குபெற்ற மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்று பொதுமக்கள் இறக்க நேரிடுகிறது. கொதிப்படைந்த மக்கள், போலீஸ்ஸ்டேஷனுக்கு தீ வைத்ததில் 22 போலீஸ்காரர்கள் உயிரோடு எரிக்கப்படுகின்றனர். காந்தியை இந்நிகழ்வு வெகுவாக பாதிக்கிறது. உடனே ஒத்துழையாமை போராட்டத்தை கைவிடுகிறார்.காந்தியின் இந்த முடிவை போஸ், நேரு உட்பட பலரும் மிகக்கடுமையாக விமர்சித்தனர் (To sound the order of retreat just when public enthusiasm was reaching the boiling point was nothing short of a national calamity - Bose).

இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் ஹைகோர்டில் காந்தி தனது முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் “பம்பாய், சென்னை, சௌரி சௌரா முதலான இடங்களில் நிகழ்ந்த வன்முறை செயல்களுக்கு நான்தான் பொறுப்பு என்று அட்வகேட் ஜெனரல் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இதைபற்றி பலவாறு சிந்தித்தும், என்னையே ஆராய்ந்து பார்த்தும் நான் தெரிந்து கொண்டது, மக்கள் அஹிம்சை வழிக்கு பழகும் முன்னரே அவர்களை அவசரப்படுத்தி விட்டேன்....” என்று  ஆரம்பித்து மிகத்தெளிவாக தனது நிலைபாட்டை முன்வைக்கிறார் (இங்கே படிக்கலாம்). இன்றளவும் காந்தியின் இந்த முடிவை மிகப்பெரிய தவறாக பலரும் கூறுகின்றனர். ஆனால் காந்தி பிரிட்டிஷ் – விடுதலை – காங்கிரஸ் என்பதையெல்லாம் தாண்டி, ஒன்றில் மிகத்தெளிவாக இருந்தார். Civic responsibility – மக்களின் பொறுப்புகள். பொறுப்புணர்வு குறித்து பல இடங்களில் அவர் சொன்னதான் சாராம்சமாக இதைச் சொல்லலாம் “ஒரு நாட்டின் சுயராஜ்யம் என்பது  அம்மக்கள் ஒவ்வொருவரும் எய்தியுள்ள சுயாட்சியின் – தம்மை அடக்கியாளுதளின் மொத்தத் தொகையே  (Swaraj of a people means the sum total of the self-rule of individuals & Swaraj can only be achieved through an all-round consciousness of the masses)“. இந்த முக்கிய விஷயத்தை குழப்பாமல் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. காந்தியின் சுயராஜ்யம் -> பொறுப்புகள் பற்றிய கருத்துக்களில் மிகமுக்கியமானவைகள் சிலவற்றை இங்கே படித்துப் பார்க்கலாம். இன்னொரு இடைச்செருகல்: காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1920களில் 15 -16 வயதான, பஞ்சாபை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். காந்தி போராட்டத்தை கைவிட்டது அவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம்தான் பின்னாளில் அவர்களின் பாதையைத் தீர்மானித்தது என்றுகூட சொல்லலாம். அந்தச் சிறுவர்கள், பகத் சிங் & சுக்தேவ்

1965களின் பிற்பகுதி. இந்தோனேசியாவில் சுகர்னோவின் ஆட்சியை கலகத்தின் மூலம் ராணுவம் கைப்பற்றுகிறது. வழக்கம்போல் ஆரம்பகாலங்களில் நல்லாட்சி அதுஇது என்று பேசியவர்கள் கொஞ்சநாட்களில் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்தனர். ராணுவத்தையும் அதன் ஆட்சி முறைகளையும் விமர்சிப்பவர்கள் அனைவைரும் கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

-----------------------------------------------------------------------------------------

குறிப்பாக ஏன் கம்யூனிஸ்ட்களைக் கண்டு இவ்ளோ பயம், கோபம், வெறுப்பு ? 1960 – 1970களை உலக வரலாற்றின் மிகமிக முக்கியமான ஆண்டுகள் எனச் சொல்லலாம். மாவோ சீனாவில் மிகப் பலமாக காலூண்டியதாகட்டும், கியுபா – அமெரிக்காவிற்குமான பிரச்சனை, சே குவராவின் எழுச்சி, அல்ஜீரிய/தென் அமெரிக்க நாடுகளின் உள்நாட்டு போர், வியட்நாம் போர், மார்டின் லூதர் கிங்ன் போராட்டம் என்பதில் ஆரம்பித்து கலை – இசை – இலக்கியம் - அறிவியல் என்று எல்லாத்தளங்களிலும் மாற்றம் நிகழ்ந்த வருடங்கள் இவைகள். திரைப்படங்கள், விண்வெளி யுத்தம், ஹிப்பி’ஸ், கே உரிமைகள், பெண்ணிய சிந்தனைகள், போஸ்ட்மாடர்ன் சிந்தனைகள் உச்சத்திற்கு சென்றது என்று ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கலாம். சமகால உலக வரலாறு/அரசியலைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் 1960களைப் பற்றிப் படித்தாலே போதுமானது. ஏற்கனவே ரஷ்ய புரட்சிக்குப் பிறகு பல நாடுகளில் கம்யூனிஸ்ம் வெகுமாக மக்களை ஈர்க்கத் தொடங்கியிருந்தது. பிற்பாடு, மாவோவின் எழுச்சியும் சேர்ந்து கொள்ள ஒவ்வொரு நாடாக மாவோயிசம்/கம்யூனிஸம் பரவத் தொடங்கியது. 60களில் தென்னமெரிக்க நாடுகளிலும் க்யுபா  போன்ற நாட்டிலும் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து கொள்ள பல நாடுகள் கம்யூனிஸ ஆட்சியின் கீழ் வந்தன. இந்தியாவிலும் நம்பூத்ரிபட், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மாதிரியான ஆட்கள் தீவிரமாக களத்தில் இறங்க ஆரம்பித்தது பின்-ஐம்பதுகளில் தான்.


இந்தளவிற்கு கம்யூனிஸ்ம் பரவுவதை, யார் படுபயங்கர எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருப்பான் ? சாட்சாத் நமது பெரியண்ணன் + அவர்தம் கூட்டாளிகள் தான். பொலிவியாவில் ஆரம்பித்து எந்தெந்த நாடுகளில் எல்லாம் கம்யூனிஸம் வளருவது போல் தெரிகிறதோ அங்கெல்லாம் அதனைத் தடுக்க மிகமிக தீவிரமாக இயங்க ஆரம்பித்தனர். இதுகுறித்து அநேகமாக அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தோனேஷியாவிலும் இவர்களுது கைங்கரியம் பலமாக உண்டு. ஆனால் மிகமிக சொற்பமாகவே இந்தோனேஷியப் படுகொலைகள் உலகளவில் பேசப்பட்டிருக்கிறது. நம்மிலேயே எத்தனை பேர் இதுவரை இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம் ?

-----------------------------------------------------------------------------------------

அப்படி கம்யூனிஸ்ட்களாகக் "கண்டறியப்பட்ட" அனைவரையும் இந்தோனேஷியா ராணுவமும் அவர்களின் ஆதரவுடன் செயல்பட்ட லோக்கல் குழுக்களும் என்ன செய்தன என்பது குறித்தான தேடல்தான் இந்தப் படம். 2004ஆம் ஆண்டில் ஜோஷ்வா ஓபன்ஹைமர், இந்தோனேசியாவின் மெடான் பகுதியில் உலகமயமாக்கலின் விளைவு -> யூனியன் பிரச்சனை குறித்தான ஆவணப்படம் எடுப்பதில் முனைந்திருக்கிறார். அங்கு யூனியன் போன்ற விஷயங்களைக் குறித்து பேசவே அந்த மக்கள் அச்சப்பட.......ஏன் என்று விசாரிக்கும் போதுதான் எந்தளவுக்கு இந்தப் படுகொலையின் கோரப்பிடியில் இந்தோனேஷியா 1965ல் சிக்கியிருந்தது என்பது அவருக்கு உறைக்க ஆரம்பிக்கிறது. இதை எப்படியாவது பதிவு செய்தாக வேண்டிய கடமை தனக்கிருப்பதாக உணர்ந்தேன் என்று ஜோஷ்வா கூறுகிறார். காரணம்......அவரின் குடும்பத்தினர் நாஜிகளால் பெருமளவில் பாதிப்படைந்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தபொழுது, அச்சத்தின் காரணமாக மக்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். சரி...இவர்களை விட யார் இந்தக் கொடுமைகளை செய்தார்களோ அவர்களையே பேட்டி கண்டால் என்ன என்று தோன்றி......அவர்களை அணுகுகிறார். இந்த முக்கிய முடிவு ஆவணப்படத்தின் போக்கையே மாற்றுகிறது. எந்த படுகொலைகளைப் பற்றி பேச மக்கள் பயந்தார்களோ.......அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்கள் ஜோஷ்வாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து.....அவரை வரவேற்று எப்படி எப்படியெல்லாம் “கம்யூனிஸ்ட் புல்லுருவிகளை, அரக்கர்களை, கொலைகாரர்களை” அம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் உன்னத வேலையை செய்தோம் என்று மிகமிக விலாவரியாக, பேருவகையுடன் கூற ஆரம்பிக்கின்றனர். ஜோஷ்வா மிரட்சியுடன் இந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் கூறுகிறார் “I felt  if i had walked into Nazi Germany 40 years later....with the Nazis still running the country and the Gestapo considered national heroes”. இப்படி அவர் சந்திக்க ஆரம்பித்த நபர்கள் 1,2,3,10,20,40......என்று நீண்டுகொண்டே செல்கிறது. அப்பிடி அவர் 41வதாக சந்தித்த நபர்தான் அன்வார். தியேட்டரில் டிக்கட் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்த உங்களையும் என்னையும் போன்ற சாமான்யன். எல்விஸ் ப்ரஸ்லி, அல் பசினோவின் தீவிர ரசிகன். கம்யூனிஸ்ட்கள் என்று கண்டறியப்படும் நபர்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்ட பின்னர் ஒரு பெரிய தலைவன் நிலைக்கு உயர்கிறான்.

அன்வார்: முதலில் பிடித்து வரப்படும் நபர்களை தாறுமாறாக அடித்தே கொல்வோம். இங்குதான் ஒரு சின்ன சிக்கல். அந்த இடம் முழுக்க ரத்தவெள்ளமாக காட்சியளிக்கும். சுத்தப்படுத்தினாலும் வாடை போகாது. இந்த ரத்தவாடைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்து ஒருபுது உத்தியை செயல்படுத்தத் தொடங்கினேன்.என் வாழ்கையில் எத்தனனையோ திரைப்படக் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக்காட்சி அளவிற்கு என்னை பாதித்த காட்சிகள் மிகமிகக்குறைவு. எப்படி கொன்றேன் என்பதை சொல்லி முடித்த அடுத்தநொடி.........அன்வார் ஆடும் ஆட்டம். உலகின் எப்பேர்ப்பட்ட கலைஞனாலும் இந்தக் காட்சியின் கனத்தை இசையாகவோ, ஓவியமாகவோ, வார்த்தைகளாகவோ வடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. மனித மனம் ஏன் இத்தணை விசித்திரமாக நடந்து கொள்கிறது ? ஒரு சாதாரண டிக்கட் கிழித்துக்கொண்டிருந்த ஆசாமி. காலில் அடிபட்ட வாத்திற்காக இரக்கப்படும் ஆள்(ஹிட்லருக்கு விலங்குகள் மீது அளப்பரிய பிரியம் உண்டு).  மற்ற நேரங்களில் சாதாரண ஆட்களாகத் தான் அன்வார் போன்ற ஆட்கள் நடந்து கொள்கிறார்கள். இந்தளவுக்கு வெறி, வன்முறை எங்கிருந்து வந்தது ? எங்கே இந்த தவறு நிகழ்ந்தது ? இதற்கு யாரைக் குற்றம் சாட்ட முடியும் ?

இந்த அன்வாருக்கு சினிமா மீது பயங்கர ஆர்வம் இருப்பதால், ஜோஷ்வாவுக்கு முழுஒத்துழைப்புத் தருகிறான். அதற்கும் ஒருபடி மேலே போய், தாங்கள் செய்த விஷயங்களை திரையில் மீள்கொணர விரும்புகிறான். ஆம்...அவ்விஷயங்களையே திரைப்படமாக்க விரும்புகிறான். அதற்கான “நடிகர்களையும்”, உடை முதற்கொண்டு அனைத்தும் அவனே தேர்ந்தேடுக்கிறான். அவர்களனைவரும் ஒருவிஷயத்தில் மட்டும் தீர்க்கமாக உள்ளார்கள். எண்ண ஆனாலும் சரி, உண்மையை மட்டுமே திரையில் காண்பிப்பது. கொலையாளிகளே கொல்லப்பட்டவர்களாக திரையில் உலா வர ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமாக தாங்கள் செய்தவைகளை நடித்துக் காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் யாருடைய படத்தைப் பார்க்கிறோம், ஜோஷ்வாவினுடயதா - அன்வாரினுடையதா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. மிகப்பெரும் திகிலூட்டும் mazeற்குள் மாட்டிக்கொண்டதைப் போன்றதொரு சர்ரியலிஸ உணர்வு முழுவதுமாக நம்மைச் சூழ்ந்துவிடும். ஆரம்பத்தில் ஒன்றும் அவ்வளவு ‘சுவாரசியாமாக’த் தெரியாத காட்சிகள், அதன் வீரியம் உறைக்க உறைக்க – யாராக இருந்தாலும் பாதிக்காமல் போகாது. மனித உளவியலின் மீது ஏகத்துக்கும் கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பும் காட்சிகள். போகிறபோக்கில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்......அவ்வளவு அப்பட்டம். Naked. படத்தில் மலிவாக நமது உணர்ச்சிகளை தூண்டும் காட்சிகள் எதுவுமே இல்லை. நேரடியான வன்முறை இல்லை. ரத்தம் இல்லை. ஆனாலும் எல்லாவற்றையும் மீறிய தாக்கம் படத்தில் உண்டு. பிற்பகுதியில் அன்வாரின் அண்டை வீடுக்காரரான சுரயோனோ என்ற கதாபாத்திரம் படத்தை எடுக்க சில யோசனைகளை தெரிவிப்பார். சிரித்துக் கொண்டே...தனது வளர்ப்புத் தந்தை எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற தனது ஆற்றாமையை கொட்டித் தீர்த்துவிடுவார். இது இயக்குனருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட ஒன்று. இதை ஷூட் செய்த மூன்று வருடத்திற்குள் உடல்நலக் குறைவு காரணமாக சுரயோனோ இறந்து விடுகிறார். ஜோஷ்வா அவரது மனைவியிடம், இந்தக் காட்சியை வைப்பதா, இதைப்பற்றி எதுவும் சொன்னாரா.....என்ற கேட்டதற்கு அவர் மனைவி சொன்னது “Yes, he had this awful experience as a child, and wanted it to be seen, wanted the public to know what he went through”. இந்தப் படத்தின் அடிநாதமே இதுதான். இந்த வழிலாவது உலகத்திற்கு தாங்கள் அனுபவித்த கொடுமைகளை கொட்டித்தீர்த்துவிட வேண்டும். அன்வார் போன்ற ஆட்களும் இதையே செய்ய விரும்புகின்றனர். எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும். ஆனால் அவர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து இதனைச் செய்கிறார்கள். நிதர்சனத்தில் இருந்து தப்பிக்கும் மனநிலை. வெளிப்படையாக இதனை அவர்கள் சொல்லாவிட்டாலும் பல காட்சிகள் இதனை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அன்வாரின் சிஷ்யனாக வரும் ஹெர்மானைப் பற்றி தனிபபதிவே எழுத வேண்டும். அத்தனை விஷயங்கள் உண்டு ஹெர்மானிடம்.

actofkilling_2

படத்தைப் பற்றிய இன்னொரு மிகமுக்கியமான விஷயம், கிட்டத்தட்ட 1000 பேர் வரை கொலை செய்த அன்வாரில் இருந்து யாரையும் ஒருபக்க சார்பாக சாடுவதில்லை. நூற்றுக்கணக்கான கொலையாளிகளில் அன்வாரும் ஒருவன். அவ்வளவே. எங்கே படம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்றால்.....ஏன் ? ஏன் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்லும் பொழுது. அன்வார் போன்ற ஆட்கள் எல்லாம் - அது கம்யூனிஸ் அரசாகட்டும், எந்தவொரு அரசாகட்டும் – எல்லா அரசுகளுக்கும்/கட்சிகளுக்கும்/கொள்கைவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கும்,மசூதியை இடிக்கவும் ரயிலைக் கொளுத்தவும் குடிசைகளுக்கு தீவைக்கவும் தேவை. இதில் ஒருசிலரை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாதே. இதுவொரு மிகசிக்கலான கட்டமைப்பு. வரலாற்றை புரட்டிப் பார்த்தல் ஒருநாடு கூட இத்தகைய சிக்கல்களில் இருந்து தப்பவில்லை என்பது புரியும்.

பார்ப்பவர்களுக்கு ஏன் சில உறுத்தல்களை இந்தப்படம் ஏற்படுத்துகிறது என்றால், மறைமுகமாக நமக்கும் சகமனிதன் மீது கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களில் பங்குள்ளது என்ற உண்மை உறைப்பதனால் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். ஆப்ரிக்க வைரச் சுரங்கத்தில் வேலை பார்க்கும் ஆள் முதல் நம்மூரில் மலம் அள்ளும் ஆள் வரை, நாம் வசதியாக இருக்க ஏதாவதொரு மூலையில் ஒரு மனிதன் கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. நமக்கு இதெல்லாம் மிகநன்றாகவே தெரியும் (தெரிய வேண்டும்). இருந்தும், இப்படி மனிதாபிமான போர்வையில் பதிவுகளை எழுதிவிட்டு, நிதர்சனத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்லவே விரும்புகிறோம். இதற்குமேல், உளமார சொல்கிறேன்....இந்தப் படத்தை பற்றி சொல்ல எனக்குத் தெரியவில்லை. பார்த்துமுடித்தவுடன் பல்வேறு கேள்விகள் மட்டுமே தலை முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது. “சோளகர் தொட்டி” என்ற புத்தகத்தை என்ன காரணத்திற்காக சில பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியாமல் ஏழெட்டு வருடமாக திணறிக் கொண்டிருக்கிறேனோ....அதே காரணம் தான்.

மிகமிக முக்கியமானதொரு விஷயம், கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக "திரைப்படங்களின்" மூலமே பெருமளவில் வெறுப்புணர்வு வளர்க்கப்படுகிறது. சினிமா பொழுதுபோக்கு தானே என்ற ஜல்லித்தனமான கோஷம் எப்பொழுதுமே கடும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிமைக் குழுக்கள், இந்தோனேஷியா அரசை பகிரங்க மன்னிப்பு கேட்டக் கோரியும் அவர்களுது வரலாற்றில் இந்தப் படுகொலைகளை பதிவுசெய்யக் கோரியும் வற்புறுத்தி வருகின்றனர். இலங்கை, இந்தோனேஷியா, அர்மேனியா, போஸ்னியா என்று எந்த நாடாக வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகாட்டும்.........உண்மையான சமத்துவம் அடக்குமுறைகளில் தானே நிலவுகிறது. அதனால் இப்படத்தை பார்க்கும் போது அதன் புவியில்பரப்பைப் பற்றியெல்லாம் கவனிக்கத் தோன்றாது. எல்லாவற்றையும் தாண்டி, இந்தப் படத்தைப் பார்ப்பது நமது கடமை என்றே தோன்றுகிறது.

ருவாண்டா இனப்படுகொலை
ருவாண்டா இனப்படுகொலையில் பாதிப்படைந்த ஒரு சிறுவன்

சமீபத்தில், இந்த செய்தியை படிக்க நேர்ந்தது. Young India irony: 75% will vote but 52% support dictatorship தாங்கமுடியாத கடுப்பைக் கிளப்பிய செய்தி இது. சே குவாரா டிஷர்ட்டை அணிந்தாலே போராளி என்ற நினைப்பிருப்பவர்கள் தான் இதற்கு ஆதரவாக ஓட்டு போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். Dictatorshipன் அடிச்சுவடு கூட தெரியாத ஆட்கள் இவர்கள். ஒருபக்கம் Save tamilsல் ஆரம்பித்து காஸா வரை என்று உருக்கமாக ஃபேஸ்புக் முழுவதும் செய்திகளை பகிர்கிறார்கள். இன்னொரு பக்கம் – சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்கள். என்ன எழவு லாஜிக் என்றே புரியவில்லை. கொஞ்சம்கூட அடிப்படை புரிதல்கள் இல்லாமல் விடலைத்தனமான மனநிலையில் விஷயங்களை அணுகுவதால் ஏற்படும் விளைவுகள் இவை. ஜனநாயகம் பற்றி காந்தி சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது There is no human institution but has its dangers. The greater the institution the greater the chances of abuse. Democracy is a great institution and therefore it is liable to be greatly abused. The remedy, therefore, is not avoidance of democracy but reduction of possibility of abuse to a minimum. சை.....ஜனநாயகத்தைப் பத்தி பேசுவது தற்போது out of fashion & trendiness இல்லாத விஷயம் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன்.
மனிதன் அமைத்த எந்தவொரு நிறுவனமானாலும் அதற்குரிய ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அந்நிறுவனம் எவ்வளவு பெரிதாய் இருக்கின்றதோ அவ்வளவுக்கு அதில் ஆபத்துக்களும் மிகஅதிகம். ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய நிறுவனம். பிழைகள் நிகழ ஏரளாமான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆனால் இதற்கான பரிகாரம் ஜனநாயகத்தையே தவிர்ப்பதில் இல்லை. மாறாக அதில் நிகழும் தவறுகளை முடிந்தளவில் குறைக்கப் பார்ப்பதே ஆகும்

  • படத்தை இந்த டொராண்டல் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் - Torrent link

Yes.....there were times, I'm sure you knew
When I bit off more than I could chew
But through it all......when there was doubt
I ate it up and spit it out
I faced it all and I stood tall and did it my way
 

இதுவரையிலான நமது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க 1) வயதாகியிருக்க வேண்டும் 2) மரணப் படுக்கையில் இருக்க வேண்டும், இவைகள் தவிர வேறு வழி இல்லையா ? (நானும் "நாளை ஒரு விபத்தின் காரணமாக நான் மரணப் படுக்கையில் இருக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்" என்றுதான் இப்பதிவை ஆரம்பித்தேன். பின்பு ஏன் இந்த ஹாலிவுட்தனமான போலி உணர்வுச்சுரண்டல் என்று விட்டுவிட்டேன்). என்னைக் கேட்டால் இப்பொழுது வேண்டுமானாலும் இந்த நினைப்பு வரலாம். தன்னுணர்தல் (Self realization ?) ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ வந்தேதீரும் என்று நம்புகிறேன். வாழ்க்கை தாறுமாறாக நம்முடன் பிங்-பாங் ஆடியிருந்தால், அதனை நோக்கி தானாகவே நமது பயணம் இருக்கும்(இருக்க வேண்டும்). இந்தத் தன்னுணர்தலின் ஒரு முக்கிய பகுதியாக எனக்குப்படுவது self acceptance. இதுவரை என்னென்ன செய்தோம் என்பதை தயவுதாட்சண்யமின்றி ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.சுயபரிசோதனையின் முதற்படி. இந்த self acceptanceக்கு பாஸிடிவ் - நெகடிவ் என்று இரண்டு பக்கங்கள் உண்டு தானே. அந்த பாஸிடிவ் பக்கத்திற்கான ஒரு சிறந்த tributeடாகத்தான் இந்தப் பாடல் எனக்கு எப்பொழுதுமே தோன்றும். பெரும்பாலும் பிரபலங்களின், மிகக் குறிப்பாக சினிமா ஆட்களின் அருமைபெருமைகளை மட்டுமே மாய்ந்து மாய்ந்து பேசும் நாம், நம்முடைய - நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பாசிடிவ் அம்சங்களை பற்றி என்ன மதிப்பீடு வைத்திருக்கிறோம் ? (என்னைக் கேட்டால் எல்லாரும் ஒருவகையில் பிரமுகர்கள் தான்). இந்தப் பாடத்தை என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். செய்யும் வேலையை லயிப்புடனும் நேர்த்தியுடனும் செய்யும், "எளிய" மனிதர்களாக நாம் கருதும், எங்கள் வீட்டின் அருகே இருந்த பலரையும் சிலாகித்து அவர் பேசிய கணங்களில் இருந்து தெரிந்துகொண்ட பாடமது. தனக்கான வாழ்வை வாழத்தான் எல்லோருக்கும் ஆசை உண்டு. ஆனால் சூழ்நிலைகள், பொறுப்புகள் பலரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. ஏகப்பட்ட அசௌகரியங்களுக்கும் அனுசரிப்புகளுக்கும் விரும்பியோ விரும்பாமலோ தங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யாராக இருந்தாலும் "என்ன செஞ்சுகிட்டு இருக்கோம் ?" என்ற கேள்வி ஒரு சமயத்தில் எழாமல் போகாது. ஆனால் பலருக்கும் இந்தக் கேள்வி அன்றிரவோடு முடிந்துவிடும். அதான் சிக்கல். ஒருவித தீவிரத்துடன் இக்கேள்வியை அணுகினால்......நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ள அது உதவும் என்று நம்புகிறேன். மேற்கொண்டு இதனைப் பற்றியே ஜல்லி அடித்துக் கொண்டிருதேன் என்றால் "வாழ்வை வாழ்வது எப்படி ?" ரீதியிலான மேலாண்மை புத்தகத்தை படிக்கும் நினைப்பு வந்துவிடக்கூடும் என்பதால், நிறுத்திக் கொள்கிறேன். பேசிப்பேசி இவ்விஷயத்தின் வீரியத்தைக் குறைக்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருவோம்.

ஃப்ரான்க் சினட்ரா

பாடலில் வருவது போல, எனக்குத் தெரிந்தவரை நான் மிகப் பிடிவாதக்காரனாகவே இருந்திருக்கிறேன். என் அப்பா அடிக்கடி என்னைத் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தைகள், Impractical ideologist & Utopian (கா-த-கு-பொ-கு). ரிலையன்ஸ் கம்பனியின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், என் துறை சார்ந்த பெரிய வேலை வந்தபோது அப்ளை செய்யக்கூட மாட்டேன் என்று சண்டை பிடித்தேன். என்ஜினியரிங் சேர தாராளமான மதிப்பெண்கள் இருந்தும், ஃப்சிகிஸ் தான் சேருவேன் என்று அடம்பிடித்து சேர்ந்தேன். என் பெற்றோர் சொல்லிப் பார்த்துவிட்டு என் இஷ்டத்திற்கே விட்டு விட்டனர். இன்னும் சில விஷயங்களை சொன்னால்....படிப்பவர்களுக்கு தலைசுத்தல் எல்லாம் நேர வாய்ப்புண்டு. சமீபத்தில் கூட வேலையில்லாமல் பல மாதங்கள் இருக்க நேரிட்ட போதும், பிடித்தமாதிரி வேலை வந்தாலொழிய சேர்வதில்லை என்று முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருந்து, பல அறிவுரைகளை கேட்க வேண்டிவந்தது தனிக் கதை. இதுபோன்ற பல பிடிவாதங்களை அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். ஆனால் அதற்கான பின்விளைவுகளை (பின்விளைவு என்பதே நாம் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துதானே), குறிப்பாக என் அப்பாவின் மருத்துவ செலவினங்களின் போது நினைத்து கொஞ்சம் வருந்தியது உண்டு. ஆனால் அது கொஞ்சநேரத்திற்கு மட்டுமே. இதுவரையிலான என் வாழ்கையின் பல முக்கிய முடிவுகளை நானே எடுத்தேன் என்பதில் எனக்கொரு திருப்தி உண்டு. "தீதும் நன்றும் பிறர்தரா வாரா" என்பதில் எனக்கு அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு. இதுகுறித்து போனவாரம் கூட ராஜேஷும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் (எந்த விஷயத்திற்கு என்று நினைவில்லை. ராஜேஷ் முன்பெல்லாம் அவர் பதிவுகளில் இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த விஷயங்களை எழுதி வந்தார். இப்பொழுது வேறு கட்டத்தில் இருப்பதால், அதுபோன்ற பழக்கத்தை வழக்கொழித்துவிட்டார்/நேரமில்லை. சுயபரிசோதனை பற்றி அன்னாரிடம் பல விஷயங்கள் உண்டு). எவ்வளவு தீர்க்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நமக்கான வாழ்வை யாராலும் ஏற்படுத்தித் தரவோ/கெடுக்கவோ முடியாது. நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதத் தவறுகளும் அவர்களுது விருப்பு வெறுப்புகளுமே காரணமாக இருக்குமேயன்றி, ஒரு வெளிப்புற சக்தி இதற்கெல்லாம் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக நம்பும் கட்சி நான்(ஒரு ஃப்சிகிஸ் மாணவனுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டால் தான் ஆச்சர்யம்).பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்தப் பத்தியும்,இதற்கு முந்தைய பத்தியும் கொஞ்சம் ரொமான்டசைஸ் செய்யப்பட்டதாக தோன்றாலும். ஆனால் கொஞ்சம் பொறுமையாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.நான் சொல்ல நினைப்பது புரியும். இந்தப் பாடலை பல வருடங்களுக்கு முன் எப்போது கேட்டேனோ, அன்றிலிருந்து மனதிற்கு மிகநெருக்கமான ஒரு பாடலாக உள்ளது. மேலே வார்த்தைகளால் சொன்ன/சொல்ல முடியாத பல விஷயங்களை மிகத்தெளிவாக பூடகமின்றி இப்பாடலில் உணரலாம். இப்பொழுதுதான் இந்தப் பாடலை நீங்கள் முதன்முதலில் கேட்பதாக இருந்தால், நிச்சயம் மில்லிமீட்டர் அளவிற்காவது உங்களை அசைத்துப் பார்க்கும்.பல்வேறு பொறுப்புகள்,நிர்பந்தங்கள்,சூழ்நிலைகளில் உழன்று கொண்டிருக்கும் பலரும் தாங்களே கவனிக்க மறந்த தங்களது இன்னொரு பக்கத்தை இப்பாடல் நினைவுக்கு கொண்டுவரலாம்.


சினட்ராவின் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு ஒப்பானது. பள்ளி காலம் முதல் (ஜெயிலுக்கு போனதெல்லாம் உண்டு) பிந்தைய வாழ்க்கைவரை ஏகப்பட்ட பிரச்சனைகள், மனஅழுத்தங்களுடன் அல்லாடியவர். திருமண வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை(Ava Gardnerரை இவர் சந்தித்தது ஒரு சுவாரஸ்யமான சிறுகதைக்கு ஒப்பானது). புரிந்துகொள்ள இயலாத உணர்ச்சிகள் நிரம்பிய மனிதராகவே நண்பர்களும் உறவினர்களும் அவரைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு obsessive compulsiveவான ஒரு ஆள். பல பெண்களுடன், சிக்கலான உறவுநிலையில் இருந்தாலும் (I'm supposed to have a Ph.D. on the subject of women. But the truth is I've flunked more often than not. I'm very fond of women; I admire them. But, like all men, I don't understand them) "Fly me to the moon" போன்ற அற்புதமான காதல் பாடல்களை உணர்ச்சித் ததும்ப பாடியுள்ளார். இன்னொரு குறிப்பிடத்தக்க  விஷயம், மிகசொற்ப பாடல்களையே அவர் எழுதி பாடியுள்ளார்/சேர்ந்து எழுதியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் அவர் பாடகர் என்ற அளவிலயே நின்று விட்டார். ஆனாலும் தனது அடர்ந்த கனமான குரலில் அவர் பாடும்பொழுது, என்னமோ அவரே அனைத்து பாடல்களையும் எழுதியது போன்றதொரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

ஃப்ரான்க் சினட்ரா - எனது விருப்பத்திற்குரிய ஜாஸ்/ஸ்விங் குரல்களில் ஒன்று. பாடும் போது மிகமிக சர்வசாதாரணமாகப் பாடுவது போலத் தோன்றும். ஆனால் பாடலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள்........வாய்பேயில்லை. My way பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது பாராவில் "Flash flood" மாதிரி ஹைபிட்சில் பாடிகொண்டே சட்டென்று கீழிறங்கும். பாடும் முறையின் மீதி  இதுபோன்றதொரு அளப்பரிய ஆதிக்கம் அவருக்கு இருந்தது. அந்தக்குரலை இறுதிவரை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். பாடும் முறையைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் இதற்கென அவர் பிரத்தியேக பயிற்சி எதுவும் எடுக்காவிடினும், தாளம் - பிட்சிங் போன்றவற்றில் அளப்பரிய உள்ளுணர்வு அவருக்கு இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். Mic effects எனப்படும் மைக்கின் உதவியுடன் குரலில் ஜாலங்கள் காட்டுவதில் அவர் வித்தகர். இந்த ஜாலத்தை அவர் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, தொடர்ந்து அறுபது ஆண்டுகளாகச் செய்து வந்தார் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பே ஏற்படுகிறது.


சினட்ராவிற்கு நடிகர் என்றொரு முகமும் உண்டு. The Manchurian Canditate (டென்சல் வாஷிங்டன் நடிப்பில் இதனை ரீமேக்கினார்கள்), From here to eternity போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இதைவிட முக்கியாமான மற்றொரு விஷயம் "Rat Packs" என்ற குழுவில் இவர் + Dean Martin + Sammy Davis Jr சேர்ந்து அடித்த கூத்துகள். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பதுதான் இவர்களது வேலை. கென்னடியும் (இவரின் நெருங்கிய நண்பர்) அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவது உண்டு. Reservoir dogs முதல் Oceans 11 வரை இவர்களது தாக்கம் உண்டு.

m-ratpack2

இப்படியான சினட்ராவிற்கு இன்னொரு இருண்ட பக்கமும் உண்டு. அது மாஃபியாயுடனான தொடர்பு. J.Edgar, என்று சில வருடங்கள் முன்பு ஈஸ்ட்வுட் இயக்கத்தில் டி காப்ரியோ நடிப்பில் ஒரு படம் வெளிவந்ததே ஞாபகம் உள்ளதா....அமெரிக்க FBIயின் முதல் இயக்குனர்...அந்த எட்கர், சினட்ராவிற்கும் மாஃபியாவிற்குமான தொடர்பு குறித்து மிகவிரிவாக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியுள்ளார் (இங்கே). காட்ஃபாதர் படம்......அனைவரும் பார்த்திருப்போம். அதில் ஜானி ஃபான்டைன் என்றொரு பாடகர் கதாபாத்திரம் வருமே...இந்தக் காட்சி ஞாபகம் உள்ளதா .....அந்தக் கதாபாத்திரத்தின் அசல் - சினட்ராதான் என்று சொல்கிறார்கள். அப்படித்தான் அதலபாதாளத்தில் தனது மார்கெட் இருந்த பொழுது, From here to eternity படத்தின் வாய்ப்பைப் பெற்றதாக சொல்கின்றனர் (க்ளிக்கி படிக்கலாம்). என்னதான் முரண்பாடுகளின் மூட்டையாக சினட்ரா திகழ்ந்தாலும் அவரைப் பற்றி அவரே சொன்னதுதான் அவரின் மொத்த வாழ்கையின் பிரதிபலிப்பாக உள்ளது.

Whatever else has been said about me personally is unimportant. When I sing, I believe...I'm honest

"My way" பாடலுக்கு பல சுவாரசியமான பின்னணித் தகவல்கள் உண்டு. பால் ஆங்கா என்பவர், ஃப்ரான்சில் தான் கேட்ட கணவன் - மனைவிக்கு இடையான உறவைப் பற்றி விவரிக்கும் பாடலை மாற்றி எழுதியதுதான் "My Way". ஆரம்பத்தில் இந்தப் பாடலின் மீதி சினட்ராவிற்கு பெரியளவில் பிடிப்பொன்றும் இல்லை. பாப் தன்மை உள்ள பாடல் என்றே குறைபட்டுக் கொண்டார். இன்றளவும் உலகில் அதிகமாக Cover Versionக்கு உட்படுத்தப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. எல்விஸ் முதற்கொண்டு நினா சிமோன் வரை நூற்றுக்கணக்கான பேர் இதனை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். இதில் எனக்குப் பிடித்த ஐந்து கவர் வெர்ஷன்கள் - Elvis, Aretha Franklin, Nina Simone, Sid Vicious.....ஐந்தாவது ?? :) சஸ்பென்ஸ்.

Frank Sinatra for dummies: (Right click & download):

சினட்ராவை கேட்டிராதவர்கள், இரவு நேரத்தில் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மறக்க இயலாத ஒரு அனுபவமாக இருக்கும் (320kbpsசா தேடிபுடிச்சு லிங்க் குடுத்திருக்கேனாக்கும்)


பி கு:

என் அப்பா, என்னை utopian என்று சொல்வார் என்று மேல சொல்லி இருந்தேனே. அதுபற்றி சட்டென ஞாபகம் வந்த விஷயம் ஒன்று. இந்த வார்த்தையை முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் தாமஸ் மூர் என்ற ஆள் தான் புழக்கத்தில் விட்டது...தனது Utopia என்ற நாவலின் மூலமாக. சுருங்கச் சொல்வதென்றால், பாரதி படத்தில் பாரதியின் தந்தை சொல்வதாக ஒரு வசனம் வரும் "காலத்தை மீறி கனவு காணுதல்"....அதைபோல நிகழ்காலத்தை மீறி தனக்கென ஒரு அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு சமூகம் உண்டென்று நம்பும் ஆட்களுக்கு பெயர் தான் utopians. Dystopianனுக்கும் (George Orwell's 1984)  - Utopianனுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. Dystopian எதிர்மறையான எண்ணங்களை பெருமளவில் முன்னிறுத்தும். Utopian, அதற்கு நேரெதிர். இந்த Utopia நாவலை எழுதிய தாமஸ் மூர் பற்றி - A man for all seasons என்றொரு படம் உண்டு. முக்கியமான படம். இந்தப் படம் எனக்குக் கிடைத்தது இன்னொரு சுவாரசியமான கதை. ஆனால் படத்தை கொஞ்சம் பார்த்துவிட்டு அப்படியே விட்டுவிடேன். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்லவேளையாக இந்தப் பதிவின் போது ஞாபகம் வந்தது.A cinematographer is a visual psychiatrist......moving the audience from here to there, there to here...through a movie..... making them think the way you want them to think.....painting pictures in the dark

- Gordon Willis


1991. தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, படத்திற்காகவும் படத்தைச் சுற்றி நிகழ்ந்த விஷயங்களுக்காகவும் இன்றுவரை பேசப்படும் படம் வெளியானது. படத்தின் கதாநாயகன் 45 டிகிரி கோணத்தில் தலையை திருப்பி வைத்திருக்க, backlightடாக சூரிய ஒளி அவரது முடிகளில் பட்டுத்தெறிப்பது போன்றதொரு ஸ்டில். இன்றுவரை அந்நடிகரின் மேற்சொன்ன புகைப்படமே, சலூன் கடைகளில் ஆரம்பித்து பல இடங்களின் வாசல்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மதுரையில் அதிகளவில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன் (அது என்ன படம் என்று உங்களால் ஊகிக்க முடிந்தால்.........பின்னூட்டத்தில் சொல்லவும்). என் அப்பாவிற்கு எப்பொழுதுமே புகைபடங்கள் மீது அலாதி பிரியம் (நல்ல நிலைக்கு உயர்ந்தபிறகு பெரிய கேமரா ஒன்றை அவருக்கு வாங்கித்தர வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். தற்போது நான் எடுக்கும் - திராபையான புகைப்படங்கள்தான் என்றாலும் கூட, ஒன்றை கூட அவரிடம் காண்பிக்க முடியாது என்ற நினைப்பு ஓவ்வோருமுறை எழுவதையும் தவிர்க்கவே முடிவதில்லை. இதைபற்றி பேச ஆரம்பித்தல் புலம்பகளாகவே இந்தப்பதிவு தொடரும். இனிமேலாவது எடுத்தவுடன் விஷயத்திற்குள் வரப்பழக வேண்டும்). படத்தின் அதே ஸ்டில் போல், என்னை(ஐந்து வயது) புகைப்படம் எடுக்க விரும்பினார். முதல்நாள், சாயங்காலவேளையில் புகைப்படக்காரரின் வீட்டிற்கே சென்றோம். ஆனால் டல்லான லைட்டிங்கே இருந்தது. என்னப்பாவிற்கு அது திருப்தியாக இல்லாதபடியால் அடுத்தநாள் கொஞ்சம் சீக்கிரம் போவது என்று முடிவு செய்து, அதன்படி சென்றாகியும்விட்டது. இந்தமுறை வெகுதிருப்தியாகவே அனைத்தும் அமைய, எனது வரலாற்றில் இடம்பெறப் போகும் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அந்தப் புகைப்படத்தை பார்த்தபொழுது - அந்த லைட்டிங், கலரிங், கோணம், மெல்லிய பொன்னிறமுடிகள் என்று அந்தப்புகைப்படத்தை பார்த்தபொழுது அது கொடுத்த தாக்கத்தை/மகிழ்ச்சியை என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாது.சில கணங்கள் அப்படியே நினைவின் அடுக்குகளில் தங்கிவிடும். அதுபோன்றதொரு அனுபவம் அது. அதே அளவிற்கான தாக்கத்தை எனக்குத்தந்த திரைப்படம்: ரோஜா. வேறு எதற்காகவும் அல்ல. இசைக்காக கூட அல்ல. முழுக்க முழுக்க அதன் ஒளிப்பதிவிற்காக மட்டுமே.

பின் 70கள், 80களின் காலங்களில் இளையராஜா, பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து போன்றோரது பாதிப்பில்லாத திரைப்பட ஆர்வலர்களை தமிழ்நாட்டில் பார்ப்பது கடினம் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேயளவிற்கு, பாலு மகேந்திரா, அசோக் குமார், பி.சி.ஸ்ரீராம் என்று ஒளிப்பதிவாளர்களுகென்றே ஒரு தனிரசிகர் பட்டாளம் உருவானது இந்த காலகட்டத்தில் தான் (இன்றும் கூட இவர்களுது பெயர் திரையில் வரும்போது கைதட்டும் கூட்டம் ஒன்று உண்டு). அப்பட்டாளத்தின் முடிசூடா மன்னன், பாலு மகேந்திரா தான். அவரின் தொப்பிக்கெல்லாம் கூட ரசிகர்கள் இருந்தார்கள்(வேறு யாரை எனக்குத் தெரியும்..........என் அப்பாதான்). பார்ட்லே, கே.வி.ப்ரசாத் போன்ற ஒளிப்பதிவாளர்கள் குறித்தெல்லாம் என் அப்பா சொல்லிக் கேட்டதுண்டு. தாதா மிராஸி இயக்கத்தில் வெளிவந்த புதிய பறவையின் ஒளிப்பதிவு (கே.வி.பிரசாத்) குறித்து, அவரது சிறுவயதில் திரையில் ரசித்த காட்சிகளை சிலாகித்து கூறுவார் (பத்து வயதிற்குள் இருக்கும் சிறுவனிடம் தாதா மிராஸி, கே.வி.பிரசாத் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா என்பது சந்தேகமே. தமிழ் சினிமாவைப் பற்றி அதிகம் நான் பேசுவதில்லையே தவிர, தமிழ் சினிமாபற்றியும் அதன் ஆளுமைகள் பற்றியும் மிகஅதிகமாகவே எனக்குத் தெரியும் என்பதை சற்றே தலைக்கனத்துடன் சொல்லிக் கொள்ள விழைகிறேன்). பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் ஆரம்பிக்கும் முன் சிவாஜி சிகரெட் புகையை ஊதும் காட்சி ஆகட்டும், தண்டவாளத்தை ஒட்டி நடக்கும் காட்சிகள் ஆகட்டும், எங்கே நிம்மதி பாட்டில் வரும் நுவார் வகை ஒளிப்பதிவாகட்டும் - பழைய தமிழ் சினிமாவின் மிகத்தரமான ஒளிப்பதிவுகளில் ஒன்று என்று தாராளமாக புதிய பறவையைச் சொல்லலாம். ஸ்ரீதர் படங்களிலும் இதுபோன்றதொரு தரத்தைக் காணாலாம். குறிப்பாக, கேமரா கோணங்களை கொஞ்சம் புதுமையாக வைப்பதில் ஸ்ரீதர் வல்லவர். அசோக்குமார் (நெஞ்சத்தைக் கிள்ளாதே), பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் என்று தொடர்ந்து இயக்குனர்கள் + ஒளிப்பதிவார்களை கவனிக்க சொல்லிக் கொடுத்தது என் அப்பாதான் (எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் எந்த நடிகருக்கும் பெரிய ரசிகனாக நான் இருந்ததில்லை. ஏன் என்று இன்றுவரை தெரியவில்லை).

இப்படியாக போய்க்கொண்டிருக்க, முகத்தில் அறைந்தது போல் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது சந்தோஷ் சிவன் தான்(ரோஜா). குறிப்பாக இந்தக் காட்சி. பக்கத்தில் உக்கார்ந்து கொண்டு என் அப்பா ரன்னிங் கமென்டரி கொடுத்துக் கொண்டே இருந்தது மறக்கவே மறக்காது. ஆனால், மீண்டும் இந்தப் படங்களை/மணிரத்னத்தின் பல படங்களை இப்பொழுது பார்க்கும் பொழுது - ஒளிப்பதிவு பல இடங்களில் காட்சியின் அழகியலுக்காகவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியிலான ஒளிப்பதிவு. Style over substance. இருந்தாலும், சந்தோஷ் சிவன் + மணிரத்னம் கூட்டணியில் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பதிவுகளில் ஒன்றாக தனிப்பட்ட முறையில் நான் கருதும் படம்: இருவர். படத்தை எவ்வாறு கொண்டுசொல்வதென்ற மணிரத்னத்தினத்தின் குழப்பத்தைப்(அவரது பல படங்கள் மாதிரியே) படம் நெடுகிலும் காணலாம். பொலிடிகல் ட்ராமாவாக எடுப்பதா, புனைவாக்குவாதா, அப்பட்டமாக அப்படியே நிகழ்வுகளை காண்பிப்பதா என்று படம் சுற்றிச்சுற்றிச் செல்லும். எனது பள்ளி நாட்களில் இந்தப் படத்தை கருணாநிதி தியேட்டரில் பார்த்தார் என்ற போட்டோவுடன் கூடிய செய்தி முதல் பக்கத்தில் வந்தது நன்றாக நினைவிருக்கிறது.

இருவரை ஏன் நான் முக்கியமானதாக கருதுகிறேன் என்றால், சினிமா: விஷ்வல் மீடியம் என்ற அடிப்படையின் அத்தனை அம்சங்களையும் படத்தில் காணலாம். ஹாலிவுட்டின் வழமையான ஒளிப்பதிவு முறையினை தவிர்த்து, Deep Focus Photography அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்தியப் படம் இதுவாகத்தான் இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். மெல்ல மெல்ல எம்ஜியார், மன்னிக்க - ஆனந்தன் அதிகாரத்தை நோக்கி நகர்வது, பிரகாஷ்ராஜின் மனப்போராட்டங்கள், இருவருக்குமான நட்பு, ஈகோ என்று எல்லாவற்றையும் ஒரு தேர்ந்தமொழிபெயர்ப்பாளன் போல் ஒளிப்பதிவு பார்வையாளரிடம் கொண்டு சேர்க்கும் (பல இடங்களில் பின்னணி இசையை அதிகமாக ஒலிப்பதைக் கேட்கலாம். அதற்கு காரணம், நிறைய வசனங்கள் சென்சார் செய்யப்பட்டதே). குறிப்பிட்டு சொல்ல வேண்டியது மோகன்லால் என்ற ராட்சஷனின் நடிப்பு. பழைய ஆனந்தாக இருக்கும் பொழுது அவரது உடல்மொழியும், அதிகாரம் ஏறஏற மாறும் அவரது உடல் மொழியும் - அப்படியே எம்ஜியாரை உள்வாங்கியது போலவே இருக்கும். எம்ஜியார்ரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு அவரின் விஷேஷ உடல்மொழிகள் தெரிந்திருக்கும். படத்தில் அப்படியே மோகன்லாலிடம் அதனைப் பார்க்கலாம். படத்தில் எனக்கு மிகப் பிடித்த காட்சிகளில் இவை இரண்டும் அடங்கும். கதாபாத்திரங்களின் மனநிலையை மிகத் துல்லியமாக நமக்கு புரியவைத்து விடும். எனினும், இரண்டாவது காட்சியில் "ஏன் லேட்டா போறீங்கனு தெரியும்" போன்ற வசனங்களை தவிர்த்திருந்தால் இன்னும் முழுமை பெற்றிருக்கும்.தவறாமல் படிக்கவும்: Iruvar: a doomed masterpiece. முடிந்தால் ஒளிப்பதிவு தொடர்பான பிற பதிவுகளையும் சேர்த்தே

இயக்குனராக பாலு மகேந்திராவின் அநேக படங்கள் - சந்தியா ராகம், வீடு என்று ஒருசில படங்கள் நீங்கலாக - மீது எனக்கு ஈடுபாடில்லை . பல வெளிநாட்டு படங்களை அப்படியே மொழிமாற்றம் செய்து எடுப்பார். ஏன் இதைச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஒளிப்பதிவில் அவருக்கு நிகர் அவரே என்பதில் எனக்கு மட்டுமல்ல - பலருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன். கர்த்தருக்கு நன்றி: அவர் ஹாலிவுட் பாணியை சட்டை செய்யாமல், ஐரோப்பிய பாணியிலான ஒளிப்பதிவிலேயே உறுதியாக நின்றதற்கு. ஒளிப்பதிவை கதைசொல்லும் ஒரு முறையாக மாற்றியதில் அவருக்கு பெரும்பங்குண்டு(சந்தியா ராகம், வீடு இரண்டிலும் இதனைக் கண்கூடாக பார்க்கலாம்). ஆனால், கிட்டதட்ட அந்தப் பழக்கம் இன்று குற்றுயிரும் கொலையுயிருமாக கிடக்கிறது. ஒருசில படங்களில் இதனை முயற்சித்த மணிரத்னம் கூட கடல் படத்தில் பெருமளவு இதனைவிட்டு விலகிச் சென்றிருப்பதைக் காணலாம். பஸ்ஸில் முட்டாய் விற்பவர்கள் போல், படம் முழுக்க வசனங்களே வளவளவென்று கடல் படத்தில் வழிந்தோடியது. பாலு மகேந்திராவிடம் மிகப்பிடித்ததே, உள்ளதை உள்ளபடியே காண்பிப்பது. அவர் படத்தில் இயற்கையின் மீது கேமராவின் exploitation இருக்காது. மாறாக, exploration மட்டுமே இருக்கும். ஒளியை அவர் உள்வாங்கி வெளிப்படுத்தும் விதம் மிகஅலாதியானது. சுஜாதா கூட எழுதியிருப்பார், ஒரு தெர்மகோல் & கேமராவை வைத்துக் கொண்டு ஒரு மேஜிக்கே செய்கிறார் என்று. அதிகாலை ஒளி - pure magic. அதனை அப்படியே பிரதிபலிப்பதென்பது என்பது மிகமிக சிரமமான காரியம். வெளிநாடுகளில் சூரியனது கோணம் வேறுமாதிரி இருக்கும். அதனால் அங்கு செய்யப்படும் ஒளிப்பதிவு இங்கு எடுபடாது. ஆனால் சூரியன் நெட்டுகுத்தலாக ஒளியை உமிழும் நமது நாட்டில் பாலு மகேந்திரா செய்த வேலைகள் அசாத்தியமானது. ஒரேயொரு ஃபரேம் போதுமானது, அவரின் ஒளிப்பதிவு என்று சொல்ல. ஒருசில மாதங்கள் முன்பு, எந்த சேனல் என்று ஞாபகம் இல்லை - சேனலை மாற்றிக் கொண்டிருக்கும் போது லக்ஷ்மி (பழைய நடிகை) காட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறார். அதிகாலை என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது. அனைத்திற்கும் மேலாக லைட்டிங் + அதனை படமாக்கிய விதம், அட பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு போலயே என்று பார்த்த சில வினாடிக்குள் மூளை அனிச்சையாக முடிவு செய்துவிட்டது. ஆனால் அதனை எப்படி உறுதிப்படுத்த என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச நேரத்தில் படத்தில் கமல் வந்தார். ஆதிவாசி வேடம். இதனை வைத்து இணையத்தில் தேடிப் பார்த்தால், படத்தின் பெயர்: பொன்னி. நினைத்தபடியே ஒளிப்பதிவு பாலு மகேந்திரா தான். ஜூலி கணபதியின், "எனக்குப் பிடித்த பாடல்". ம்யூட் செய்துவிட்டு அப்பாடலைப் பார்த்தால் கூட, மழையின் ஸ்பரிசத்தை உணர முடியும். அடுத்து, பி.சி.ஸ்ரீராம். டெக்னிக்கலாக தமிழ்சினிமாவின் ஒளிப்பதிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது, குருதிப்புனல் வெளிவந்தபோது, டைட்டிலில் பி.சி.ஸ்ரீராம் என்ற பெயர்வர, விசில் சத்தம் காதைப் பிளந்தது. இருளின், நிழல்களின் காதலர். இதனாலயே, மணிரத்னம் படம் என்றாலே இருட்டு என்ற பெயர் வந்தது.
balu
எதற்கு மூன்று பக்கத்திற்கு தலைப்பிற்கு தொடர்பே இல்லாதது போன்ற விஷயங்கள் என்ற யோசனை இந்நேரம் தோன்றியிருக்குமே. நிற்க: மேல நான் சிலாகித்து சொன்ன புகைப்படம்,படங்கள் அனைத்திற்குமான பொதுவான விஷயம் - எல்லாமே ஃப்லிமில் எடுக்கபட்டவைகள். இந்த விஷயத்தில் நோஸ்டால்ஜியா கணிசமான அளவிற்கு இருந்தாலும், அதனை மீறி பல படங்களைப் பார்த்த அனுபவத்திலேயே இதனை அணுக முயல்கிறேன். ஃப்லிம் கேமரா, அடிப்படை இயற்பியலின் எளிமையான விதிகளின் கீழ் இயங்குவது. பொருட்களின் மேல் பட்டுத்தெறிக்கும் போட்டான் பொட்டலங்களை கேமராவின் உள்ளே இருக்கும் சில்வர் பூச்சு கொண்ட ஃப்லிம்கள் சிறைபிடிக்கும் ( இந்த ஃப்லிம் துண்டுகளை வைத்து நம்மில் பலபேர் படம் காட்டியிருப்போம்). இதில் உட்புகும் போட்டான் பொட்டலங்களின்(ஒளியின்) அளவைக் கூட்டி குறைத்து, வடிகட்டி, நெறிபடுத்தி, ஏகப்பட வேலைகள் செய்து ஒரு இயக்குனரின் கற்பனையை திரையில் உலாவவிடுபவர்களே ஒளிப்பதிவாளர்கள். மேலே கோர்டன் வில்லிஸ் சொன்னபடி, visual psychiatrists. தர்கொவ்ஸ்கி போன்ற ஆட்கள் ஒளிப்பதிவை தொழில்நுட்பம் என்பதையும் தாண்டி "கலை" (அவர் சொன்னதன் அர்த்தம், ஸ்டீரியோடைப்பிக்காக உபயோகப்படுத்தப்படும் 'கலை' என்ற அர்த்தத்தில் அல்ல) என்ற நிலையிலையே இதனை வைத்துப் பார்த்தனர்.

சினிமா தொடங்கிய காலம்தொட்டு, 80கள் வரை தொடர்ந்து ஒளிப்பதிவிற்கென்று ஃப்லிம் சுருள்களே பயன்படுத்தப்பட்டதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் எப்பொழுது என்பதுகளின் மத்தியில் சோனி கேமரா ரெக்காடர்களை(Camcorder) அறிமுகப்படுத்தியதோ அன்றுமுதல் ஃப்லிம் தொழில்நுட்பம் சினிமா மட்டுமின்றி, புகைப்படத் துறையிலும் கொஞ்சகொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியது. டிஜிட்டல் கேமராவின் வரவிற்குபின் - 2000ல் இருந்து ஃப்லிம் தயாரிப்பும் உபயோகப்படுத்துதலும் அதளபாதாளத்திற்கு சென்றது. புகைப்படத் துறையில் ஏறக்குறைய ஃப்லிம்களின் உபயோகம் வழக்கொழிந்துவிட்டது என்றே சொல்லலாம். சினிமாவைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் கேமராவில் படம்பிடிக்கப்படும் படங்களின் பட்ஜெட் ஃப்லிமிற்கு ஆகும் செலவைவிடக் கம்மி என்பதை உணர்ந்தனர் (ஆனால் இந்தப் விஷயத்தில் பல குழப்பங்கள் உண்டு. கிட்டத்தட்ட இரண்டும், படம் முடிந்து பார்க்கும்பொழுது Archive போன்ற விஷயங்கள் எல்லாம் சேர்த்து - ஒரேயளவிற்கான பணம் தான் செலவாகிறது என்கிறார்கள்). படங்களை டிஜிட்டல் முறையில் எடுத்தால் மட்டும் போதுமா.......அதை எவ்வாறு திரையிடுவது ? இங்குதான் டிஜிட்டல் ப்ரோஜெக்சன் என்ற முறை உள்ளுக்குள் வருகிறது. இதைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதுவதைவிட, கருந்தேள் எழுதியுள்ள இந்தப் பதிவைப் படியுங்கள். இதனை படிக்காமல் மேற்கொண்டு தொடர்ந்தால் சிலவிஷயங்கள் குழப்பமாகத் தோன்றலாம்.
இந்தக் கட்டுரையின் முக்கிய சாராம்சம், டிஜிட்டல் ப்ரோஜெக்சன் பற்றியது. டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு முந்தைய நிலைகளாக சில விஷயங்கள் உண்டு.
  •  ஃப்லிமில் ஒரு படம் எடுக்கப்பட்டு, டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தகுந்தமாதிரி மாற்றப்பட்டு -> டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறையில் திரையில் காட்டப்படும். நாம் கூட நம்மூர்களில் UFO Systems என்றெல்லாம் பார்த்திருப்போமே....அந்தமுறை.
  • டிஜிட்டல் கேமாராவில் ஒரு படம் எடுக்கப்பட்டு -> டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறையில் திரையில் காட்டப்படும்.

இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நவீன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சினிவை, டிஜிட்டல் ப்ரோஜெக்சன் உதவியுடன் திரையில் பார்ப்பதற்கும், ஃப்லிமில் எடுக்கப்ட்ட ஒரு சினிமாவை டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தக்கபடிமாற்றி திரையில் பார்ப்பதற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டு. நோலன், ஸ்பீல்பெர்க், க்வென்டின் போன்ற ஆட்கள் இரண்டாவது முறையின் பிரதான எதிரிகள். சமீபத்தில் க்வென்டின் - ஃப்லிமில்தான் படங்கள் எடுப்பேன்...இல்லாவிட்டால் படங்களில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று சொன்னதாக பல இடங்களில் படித்திருப்போம். அதுமிகத் தவறாக பலரால் புரிந்துகொள்ளப்பட்ட செய்தி. அவர் சொன்னது, ஃப்லிமில் எடுத்தபடங்களை டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு தக்கபடி மாற்றுவது சகிக்கவில்லை. தரம் குறைகிறது. பழைய அனலாக் முறையிலான ப்ரோஜெக்சனில் தான் தனது படங்களைக் காட்ட விருப்பம். ஆனால் தற்போதைய ஹாலிவுட்டில் அதற்கான சூழ்நிலை குறைந்துகொண்டே வருகிறது என்பதே அவர் சொன்னதின் சாராம்சம். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை.

கன்வர்ட் செய்யப்படும்போது தரம் சற்றே அடிபடுவதை டிஜிட்டல் ப்ரோஜெக்சனின் ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் ப்ரோஜெக்சனில், 2K- 4K resolutionகளை (போனமாதம் புதிதாக 8K அறிவிக்கப்பட்டுள்ளது) மிக எளிதாக ஒரு 35/70mm கடந்துவிடும்......ஆனால் முக்கிய விஷயம் (அ) விடயம் ஃப்லிம் மிகநல்ல முறையில் இருக்க வேண்டும். பழைய, மங்கிய ஃப்லிம் என்றால் ஏகத்துக்கும் பிரச்சனைகள் உண்டு. இந்த டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறைப்படி மாற்றப்பட்டபோது ஏற்பட்ட தரமாற்றத்தை நானே சிலமுறை திரையில் பார்த்திருக்கிறேன். கண்களில் விளக்கெண்ணெயய் விட்டதுபோல கொஞ்ச மசமச என்று காட்சிகள் தெரியும். பக்காவாக மாற்றம் செய்யப்படும்போது தரமாற்றம் கொஞ்சம் குறைவாகவே ஏற்படும். தவிர, 4K என்பது - சற்று யோசித்துப் பார்த்தால், இப்போதெல்லாம் 1080Pகளில் டிவிக்களிலே படம் பார்க்கிறோம். அதனைவிட நாலு மடங்கு அதிகத்திறன் தான், ப்லிமில் எடுத்து டிஜிட்டல் ப்ரோஜெக்சனில் மாற்றப்படும் படங்களில் கிடைக்கும். இணையத்தில் பல இடங்களில் இதுகுறித்து படித்த பொழுது, சற்று அருகே உட்காந்திருப்பவர்களுக்கு பிக்ஸல்கள் கூட துல்லியமாக தெரிகிறது என்ற குற்றச்சாட்டை காணமுடிகிறது. ஆனால் நமது நாட்டில் அவ்வளவு பக்கத்தில், சின்ன திரையரங்குகள் கம்மி என்பதால் இந்த வித்தியாசம் நமக்குப் புலப்படுவதில்லை. இதைதான் டாரண்டினோ (I can't stand digital filmmaking, it's TV in public), பால் தாமஸ் ஆன்டர்சன், நோலன் போன்ற பல ஆட்கள் சொல்லிவருவது.

----------------------------------------------------------------------------------

இங்கு, IMAX(Image MAXimum) பற்றி சொல்லியாக வேண்டும். சென்னை, கோவையில் கூட imax இருப்பது உங்களுக்கு தெரியுமா ? சந்தேகம் இருப்பின், IMAXன் இந்தியத் தளத்தைக் காணவும். ஆனால் அசல் ஐமேக்ஸ் என்பது 76அடி ஸ்க்ரீன் உள்ள தியேட்டர். யோசித்துப் பாருங்கள். 76அடி. ஹைதிராபாத்தில் இருக்கும் பிரசாத் ஐமேக்ஸ் உலகின் மிகப்பெரிய 3d ஐமேக்ஸ் தியேட்டர் ஆகும். ஆனால் சென்னை -  கோவை போன்ற இடங்களில் இந்த அளவா என்று தெரியவில்லை. சமீபத்தில் உலகின் பல இடங்களில் 76 அடிக்குப் பதில், சிலபல வேலைகள் செய்து 28அடி ஸ்க்ரீனில் ஐமேக்ஸ் இதுபோல் தனது பெயரைப்போட்டு ஏமாற்றுகிறது என்ற கடும்குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. பெங்களூரில் இருக்கும் ஐமேக்ஸ் எந்த வகை என்று தெரியவில்லை. டிக்கட் விலை, 600ரூ என்று கேள்விபட்டேன். ஆனாலும் போகலாம் என்று கிளம்பி - இந்தக் குழப்பத்தால் விட்டுவிட்டேன்

[caption id="attachment_974" align="aligncenter" width="895"]ஐமேக்ஸ் Source: IMAX or LieMax[/caption]
----------------------------------------------------------------------------------

கீழே உள்ள படத்தைப் பார்த்தால், 2015ஆம் ஆண்டுகள் கிட்டத்தட்ட பழைய ப்ரோஜெக்சன் முறை மிகமிக சொற்ப அளவிலேயே இருக்கும் என்பது கண்கூடு. கடந்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கும் வெகுவேகமாக பழைய அனலாக் முறை டிஜிட்டல் ப்ரோஜெக்சன் முறைக்கு மாற்றப்பட ஒரு படமே பிரதான காரணம் என்றால் நம்ப முடிகிறதா ? அவதார். அவதார் படத்திற்காகவே அவசரஅவசரமாக உலகெங்கும் ஏராளமான தியேட்டர்கள் டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு மாறின (மாறாவிட்டால், அடுத்தடுத்து அந்தத் தியேட்டர்களுக்கு ஹாலிவுட் படங்கள் கிடைக்காது. ஹாலிவுட்டின் வழமையான monopoly கொள்கைகளில் தலையாயது இது). ஏனென்றால் அவதார் 3Dயில் நம்மைத் திணறத் திணற மூழ்கடிப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம். அதை டிஜிட்டல் ப்ரோஜெக்சன் இல்லாமல் பார்ப்பது சாத்தியமே இல்லை. ஆச்சரியமான இன்னொரு விஷயம், ஸ்பீல்பெர்க் ஃப்லிமில் படம் எடுப்பதையே விரும்பும் ஆசாமி என்பது. நோலன், டரண்டினோ போன்ற ஆட்கள் பற்றி பலபேருக்கு தெரிந்திருக்கும் என்று நினைகிறேன். பால் தாமஸ் ஆன்டர்சனின் சமீபத்திய படமான The Master முழுக்க முழுக்க 70mmயில் எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஃப்லிம்கள் சார்பாக வாதாடிக்கொண்டிருப்பவர், ஸ்கார்சேஸி. ஆனால் அவரே முதன்முறையாக - Hugoவிற்காக - டிஜிட்டலில் எடுக்கவேண்டி வந்தது குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருந்தார்.

chart-film

இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழும். இவ்வளவு சிரமப்பட்டு ஃப்லிமில் எடுத்து டிஜிட்டல் ப்ரோஜெக்சனுக்கு மாற்றுவதற்குப் பதில், நேரடியாக டிஜிட்டல் கேமராவில் எடுக்கலாமே. அதுதான் இப்போது வெகுவேகமாக உலகம் முழுக்க பரவி வருகிறது. எவ்வளவு தூரம் இதற்கு ஆதரவு இருக்கிறதோ, அதேஅளவுக்கு எதிர்ப்பும் உண்டு. எதிர்ப்பாளர்கள் டெக்னிகல் ரீதியாக சொல்லும் பிரதான காரணங்கள் ஒன்று, கறுப்பு நிறம் ஒருசுற்று மங்கிப் போய் க்ரே நிறமாகத் தெரிகிறது, Contrast, Depth, Texture, Shadow retaining capacity என்று பல விஷயங்களில் டிஜிட்டல் சற்று காலைவாரிவிடுகிறது என்பதாகும். அதிலும் குறிப்பாக, Dynamic Range - கறுப்பு முதல் க்ரே வரை ஏராளமான shades உள்ளது நமக்கும் தெரியுமல்லவா, அதுபோன்ற ரேன்ஜ்களை டிஜிட்டல் கேமராக்கள் சரியாக உள்வாங்காது என்ற (நிரூபிக்கப்பட்ட) குற்றச்சாட்டும் உண்டு. அனுபவரீதியாக சொல்லும் குற்றச்சாட்டுகள், பல சமயங்களில் எடுத்ததில் ஏதும் தவறிருப்பின் போஸ்ட் ப்ரோடக்சனில் பார்த்துக் கொள்ளலாம், எத்தனை டேக் வேண்டுமென்றாலும் அனுமதிக்கலாம், என்று சில விஷயங்களில் அசட்டையாக இருந்துவிட நேர்கிறது. Spontaneity - ஒரு விஷயம் படக்கென்று நடக்கும் பொழுது, மிகநவீன டிஜிட்டல் கேமராக்கள், ரீபூட் ஆகவே சில நிமிஷங்கள் எடுத்துக் கொள்கிறது.

இதைப்பற்றி ஹெர்ஸாக் கூறியுள்ளதைப் பாருங்கள் "We used the RED camera for My Son, My Son, What Have Ye Done. It's an immature camera created by computer people who do not have a sensibility or understanding for the value of high-precision mechanics, which has a 200-year history. It's terrible: Whenever you have to reboot the camera, it takes 4½ minutes or so. It drove me insane, because sometimes something is happening and you can't just push the button and record it. An assistant cameraman said this camera would be ideal if we were filming the National Library in Paris, which has been sitting there for centuries. But everything that moves faster than a library is a problem for the RED" . என்னவொரு நக்கல். இத்தனைக்கும் ஹெர்ஸாக் "The Cave of Forgotten dreams"சை டிஜிட்டலில் தான் எடுத்தார். கதை அப்படி. மேலும், ஆரம்ப காலங்களில் கலர் கரெக்சன் என்ற வேலையெல்லாம், நீண்டநெடிய வேலையாக இருந்தாலும் - ஓரளவிற்கே செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் வந்ததால், படத்தின் மீதான ஒளிப்பதிவாளர்களின் தாக்கம் சற்று மட்டுப்பட்டிருப்பது போல் உணர்வதாக பல ஒளிப்பதிவாளர்கள் சொல்கிறார்கள். கலரிஸ்ட் என்ற தொழில்நுட்ப ஆட்களின் கை இங்கு ஓங்கிவிடுகிறது என்பது அவர்களது வாதம். ஹெர்ஸாக் போன்ற ஐரோப்பிய, தென்னமெரிக்க நாடுகளின் மாஸ்டர்ஸ்களை விடுங்கள். ஹாலிவுட்டின் பல இயக்குனர்களே ஸ்டூடியோக்களின் நெருக்கடிக்கு இடையேயும் டிஜிட்டலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது குறித்து பேசி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படங்களுக்கு செய்தது என்ன ?

"கலை.....மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளிஅள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது"......இந்த ரீதியிலேயே திரைப்படங்களை ஐம்பதுகள் வரை ஏராளமானோர் அணுகிவந்தனர். பத்தொன்பதாம் நூற்றண்டின் தொடக்கம் முதலாகவே கலை,ரசனை போன்றவைகள் பற்றிய கோட்பாடுகளும் கருத்துகளும் வெகுவேகமாக மாறத் தொடங்கியது ( இந்தப் பதிவில் இந்த விஷயங்கள் குறித்து சிலவற்றைக் காணலாம்). எது கலை ? எது "நல்ல" சினிமா ? எது யதார்த்தம் ? போன்ற அடிப்படைக் கேள்விகள் எல்லாம்  நாப்பதுகள் தொடங்கி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளே இந்த வேலையில் முழுவீச்சுடன் ஈடுபடலாயின. Dadaism, The Lost Generation, Surrealism, Post modernism, Beat Generation என்று வெவ்வேறு வகையான கோட்பாடுகள்(?)  நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டிருக்க, அது அத்தனையும் திரைப்படங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. குறிப்பாக, ப்ரான்ஸ் + அதன் நியு வேவ் (இதுபற்றி ஒரு முக்கிய ஆளுமை இந்த வீடியோவில் பேசியிருக்கும் விடயங்கள் சிறப்பானவை. தவறாமல் பார்க்கவும் ).

----------------------------------------------------------------------------------

இந்திய ரயில்வே தான் உலகின் மிகப்பெரிய கழிப்பறை.  இந்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். பொழது புலரும் அந்த அற்புதமான லைட்டிங்கில், ஒரு பெண்மணி தண்டவாளத்தில் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார். சூரியன் தனது பொன்நிறக் கிரணங்களால் அந்தப் பெண்மணியின் முடியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறான். அதே பொன்னிற ஒளி அந்த மலத்தின் மேலும் விழுந்து கொண்டிருக்கிறது. அழகியல் சார்ந்ததே கலை என்று யோசிக்கும் ஒருஆள் இந்தக் காட்சியை எவ்வாறு படமோ புகைப்படமோ எடுப்பார் ? அல்லது அவர் கலை, அழகியல் என்பதையெல்லாம் எவ்வாறு வரையறுத்து வைத்திருப்பார் ? மனிதக் கழிவை இன்னொரு மனிதனே அள்ளுவது மாபெரும் தேசிய அவமானம். இதனை படம்பிடிக்கும் போது, கேமரா கோணங்களை எவ்வாறு வைப்பது ? பின்னணி இசையை எவ்வாறு தீர்மானிப்பது (தமிழ் சினிமாவில் இப்படியொரு காட்சி வருங்காலத்திலாவது வந்தால், சர்வநிச்சயமாக பின்னணியில் வயலின் கதறும்). இதை மேலும் மேலும் எழுதிக் கொண்டே போக விரும்பவில்லை. எனது தனிப்பட்ட கருத்துகளை இப்போதே கொட்டிவிட விரும்பவில்லை. அதற்கு இன்னும் பல பதிவுகள் உள்ளது.

----------------------------------------------------------------------------------

போலித்தனமான கதாபாத்திரங்கள், அவர்தம் உருவங்கள், காட்சியின் அழகியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு, நாடகத்தன்மை நிறைந்த வசனங்கள் என்று ஐம்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்துப்பார்த்து சலித்த கூட்டத்தினர் (ப்ரான்சுவா த்ரூஃபோ, கோதார்த், சாப்ரால் போன்ற ஆட்கள்) கடும் விமர்சனங்களை அக்காலகட்ட படங்களின் மீது முன்வைத்தனர். ஒருகட்டத்திற்குப் பிறகு, தாங்களே திரைப்பட இயக்குனர்களாகவும் பட்ஜெட் தயாரிப்பாளர்களாகவும் வலம்வரத் தொடங்கினர். அவர்கள் செய்த மிகப்பெரிய மாற்றம், திரைப்படங்களுக்கான - அதுகாறும் நம்பப்பட்டு வந்த இலக்கணங்களை (சிறிது) மாற்றியது. அசலான தெருக்கள், மாந்தர்களில் ஆரம்பித்து ஒளிப்பதிவிலும்(இயற்கையான லைட்டிங் போன்ற பல விஷயங்களில்) ஒருவித நம்பகத்தன்மையை கொண்டுவந்தனர். குறிப்பாக, ஒரே இடத்தில கேமராவை வைப்பதற்குப் பதில், handheld கேமராக்களின் துணை கொண்டு கதாபாத்திரங்களின் கூடவே ஓடி, பார்வையாளருக்கும் அந்தச் சூழ்நிலையின் தாக்கத்தை வரவழைக்க முயன்றனர். இதில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி, த்ரூஃபோவின் ஜூல்ஸ் அன் ஜிம்மில் வரும் இந்தக் காட்சி(ஆனால் பிற்காலங்களில் இதே த்ரூஃபோ எந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்தாரோ அதேபோன்றதொரு வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டது பரிதாபம்). கோதார்த் வேறு உலகம். முடிந்தால் தனிப் பதிவாக எழுத விருப்பம்.


இதுமாதிரியான திரைப்படங்கள் ஒருபக்கம் வந்துகொண்டிருக்க, டாகுமென்டரி ஸ்டைலில் எடுக்கபட்ட படங்கள் பின் - 60களிலும், 70களிலும் பெருமளவு வரத்தொடங்கின. இதில் ஜெர்மன் இயக்குனர்களின் பங்கு மகத்தானது. ஹெர்ஸாக், ஃபாவ்ஸ்பைன்டர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருந்தது. இதேகாலகட்டத்தில், மிகச்சரியாக சொல்வதென்றால் தென்அமெரிக்க நாடுகளின் சினிமா முற்றிலும் வேற வகையான யதார்தத்தை பதிவுசெய்யத் தொடங்கியது (முன்வைக்கத் தொடங்கியது என்று எழுதி, பதிவுசெய்யத் தொடங்கியது என்று மாற்றி விட்டேன்). உள்நாட்டு கலகங்கள், போர்கள், புரட்சிகள் என்று சகலத்தையும் பதிவாக்கினர். பெருமளவு 8mm, 16mm பழைய ஃப்லிம்களே பயன்படுத்தப்பட்டன. Handheld கேமராக்கள் மட்டுமே ஒரு வழி. பல நேரங்களில் படம் பிடித்தவர் உயிர் இழந்திருப்பார். ஆனால் அவரின் கேமரா ஃப்லிம்மை மட்டும் எடுத்து படமாக்கிய வரலாறெல்லாம் உண்டு. இதுபோன்ற குழப்பமான அரசியல் சூழ்நிலைகளை பதிவு செய்ய இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் கேமராவே மிகச் சிறந்த வழி. ஜாஃபர்  பனாஹியின் "This is not a film" போல் ஒரு கலக திரைப்படத்தை (டிஜிட்டல் கேமரா + கொஞ்சம் ஐஃபோனைப் பயன்படுத்தி, எடுக்கப்பட்ட இப்படத்தை பென் டிரைவில் காப்பி செய்து கேக்கிற்குள் வைத்து இரானில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட படம்) ப்லிம் கொண்டு எடுப்பது எல்லாம் சாத்தியமேயில்லை.

90களில் மேற்சொன்ன ப்ரெஞ்சு ஆட்களைப் போன்ற, டென்மார்க்கைச் சேர்ந்த சில இளைஞர்கள் - அப்போதைய சினிமாவின்பால் எரிச்சல் கொண்டு ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். Dogme 95. அந்த இயக்கத்திற்கு என்று சில கட்டளைகளை ஏற்படுத்துகின்றனர் - The Vow of Chastity. அந்த பத்து கட்டளைகளின், ஒன்பதாவது கட்டளை " The film format must be Academy 35mm " என்பதாகும். இந்த இயக்கத்தின் மிகமுக்கியமான இயக்குனர், லார்ஸ் வான் ட்ரையர். இந்த இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக்கவும். அந்த கட்டளைகளில், 35mm என்பதற்குப் பதில் 9oகளின் மத்தியில் வெளிவந்த சோனி டிஜிட்டல் கேசட் ரிக்கார்டர்களை பயன்படுத்துவது என்று முடிவாயிற்று. தாமஸ் வின்டர்பெர்கின் The Celebration (கீதப்ரியன் விமர்சனம் பார்க்க) முதல் டாக்மா 95 படமாக வெளிவருகிறது. அதில் ஒளிப்பதிவராக பணியாற்றியது யார் தெரியுமா ? ஆன்டனி டாட் மென்டில். ஸ்லாம்டாக் மில்லியனருக்காக ஆஸ்கர் வாங்கினாரே அவரேதான் (இன்னொரு செய்தி, டிஜிட்டல் கேமராவில் எடுக்கபட்ட ஒரு படத்திற்கு முதன்முதலாக ஆஸ்கர் கொடுக்கபட்டது - ஸ்லம்டாக் மில்லியனருக்காகத் தான். எத்தனை வீரியம்மிக்க ஒளிப்பதிவு என்று படம் பார்த்தவர்கள் அறிவோம். இந்த விஷயத்தில், சுவாரசியமான பல தகவல்கள் உண்டு. அதனை கீழிருக்கும் டாகுமென்டரியில் காணலாம்).

டாக்மா படம்களைப் பொறுத்தவரை, கேமரா கோணங்களும் அலைதலும் முற்றிலும் வழமையான பாணிக்கு நேரெதிராக இருக்கும். ஒருவித யதார்த்தத்தை இதன்மூலம் முன்வைக்க நினைத்தனர். ஆனால் என்று இதுபோன்ற shaky candid camera உத்தியை ஹாலிவுட் பயன்படுத்தத் தொடங்கியதோ, அன்றுமுதல் இதுவெறும் தொழில்நுட்பம் என்றஅளவிலேயே மாறிப்போனது. எப்படி சொல்வது...........ம்ம்ம்ம்ம்ம்ம்.....சே குவேராவை புரிந்துகொண்டு ஒரு பெருமையுடன் அவரது உருவம் தாங்கிய டிஷர்ட்டை அணிவதற்கும் வெறும் fashionக்காக அணிவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா. அதேதான் இங்கும். லார்ஸ் வான் ட்ரையர் இன்றுவரை டிஜிட்டல் கேமராவில் மட்டுமே படம்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாமஸ் வின்டர்பெர்க் ஒருசில படங்களுடன் காணாமல் போய்விட்டார். டிஜிட்டல் பற்றி முடிவாக  கோதார்த் சொன்னதையே இங்கு தருகிறேன் " The so-called 'digital' is not a mere technical medium, but a medium of thought. And when modern democracies turn technical thought into a separate domain, those modern democracies incline towards totalitarianism "

டாக்மா 95ல் ஆரம்பித்து, ஏராளமானா ஆட்களை பொறுத்தவரை - டிஜிட்டல் சினிமா என்றால் என்ன ? சுருங்கச் சொல்வது என்றால் - கட்டற்ற சுதந்திரம். சினிமாவிற்கான கட்டமைப்பை உடைக்கும் வலிமை. ஒருகாலத்தில், யாருடைய தயவும் இல்லாமல் நினைத்ததை படமாக்க வேண்டுமென்றால் - பணம் இருந்தால் ஒழிய - மிகமிகக் கடினம். முக்கியமாக ஃப்லிம் போன்ற கச்சா பொருட்களை சேகரிப்பதே பெரும்பாடு. இங்குதான் ஸ்டூடியோ - தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - போன்றவர்கள் உள்ளே வருகிறார்கள். இவர்களை மீறி படம் எடுப்பது சிரமமான காரியம். ஒரு இயக்குனராக தங்களது சுயம் - இவர்களால் தங்களது படங்களில் இல்லாமல் போய்விட்டதே என்று - வருந்திய புகழ்பெற்ற (இந்தியாவும் சேர்த்து) இயக்குனர்கள் உண்டு. ஆனால் டிஜிட்டல் கேமரா வந்து பிறகு ? அதனது சாத்தியங்களை யோசித்துப்பார்த்தால் மலைப்பாகவே உள்ளது. பார்வையாளர்கள் என்பதெல்லாம் ரெண்டாம்பட்சம். தான் சொல்லநினைத்ததை ஸ்க்ரீனில் அந்த இயக்குனரால் வெற்றிகரமாக பிரதிபலிக்க முடியுமேன்பதே எவ்வளவு பெரிய விஷயம். அந்த இயக்குனருக்கு அதை திரையில் பார்க்கும் பொழுது எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும். ஆனால் நமது ஊரில் இந்த ட்ரெண்ட் சற்று பின்தங்கியே உள்ளது. நிறைய மக்களிடம் போய்ச்சேர வேண்டும் என்பதையே பிரதானமாக வைத்து யோசிக்கும்பொழுது சில சிக்கல்கள் எழத்தான் செய்யும். இன்று டிஜிட்டல் கேமரா என்ற வஸ்து இல்லாவிட்டால், மாற்று சினிமாவின் பல கதவுகள் திறக்கப்படாமலேயே போயிருக்கும். இவைகள் தவிர, தொழில்ரீதியாக - பல அனுகூலங்கள் உள்ளன. உதாரணமாக, கீழே இருக்கும் டாகுமென்டரியில் டேவிட் லின்ச் சொல்லும் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது. "ப்லிமில் எடுக்கப்படும்போது, நடிகர்கள் - விலை உயர்ந்த ப்லிம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வுடனே நடிக்க வேண்டியிருக்கிறது. ஒருவித பதட்டத்தை நடிகர்கள் மனதில் அது உருவாக்க வாய்ப்புள்ளது" என்கிறார். டிஜிட்டல் என்றால் எத்தனை டேக் வேண்டுமென்றாலும் எடுக்க முடியும் தானே. மேலே சொன்ன சிலபல விஷயங்களை இந்த டாகுமென்டரியில் இருந்தே எடுத்தது. இந்தப் பதிவு ஒரு அளப்பரிய தாக்கத்தை (ஹி..ஹி) உங்களிடம் ஏற்படுத்தி இருந்தால், உடனே கீழிருக்கும் டாகுமென்டரியை பார்க்கவும். ஒளிப்பதிவின் மேல் ஆர்வம் இருப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதைத்தவிர, மிக சொற்பமாகவே ஒளிப்பதிவை பற்றிய டாகுமேண்டரிகள் உள்ளன. அவற்றுள் எனக்குப்பிடித்த மற்றொரு டாக்குமென்டரி: Cinematographer Style. விட்டோரியோ ஸ்டராரோ & கோர்டன் வில்லிஸ் இருவரின் வார்த்தைகளுக்காவும் எத்தனைமுறை வேண்டுமென்றாலும் இதனைக் காணலாம்.

இறுதியாக, படம் டிஜிட்டலில் எடுக்கப்படுகிறதோ ப்லிமிலோ - ஒன்று மட்டும் தான் நிலைக்கும். அது படத்தின் உள்ளடக்கம் (Content).  அதை எப்படி சொல்லியிருக்கிறார்கள், எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, இந்த விஷயம் இரண்டாவதே. வெறும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் படங்களில் இதனை எல்லாம் யாரும் எதிர்பார்க்கப்போவது இல்லை. இன்றைய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ப்லிம்களில் தான் பெரும்பாலும் எடுக்கப்படுகிறது என்று நினைகிறேன். ஆனால் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட பல படங்களின் தரம் த்ராபையாகவே உள்ளது. தொழில்நுட்பம் என்பதைத் தாண்டி - ஒளிப்பதிவு என்று வரும்போது, தமிழ் சினிமா காட்சியின் அழகியலுக்கே இன்னமும் முக்கியத்துவம் தந்துகொண்டிருகிறது. "நல்ல" ஒளிப்பதிவு என்பதைத் தாண்டி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய படம் என்று பார்த்தால் ஞாபகம், சமீபத்தில் அப்படி எந்தப் படமும் வந்த ஞாபகம் இல்லை. ஒளிப்பதிவையும் ஒரு கதாபாத்திரமாக கதைசொல்லியாக மாற்றும் ஆட்கள் இங்கு குறைவே. "இந்த ஷாட் செமையா இருக்கு" என்று மக்களை சொல்லவைப்பதைத் தாண்டி ஒளிப்பதிவாளர்கள்/இயக்குனர்கள் யோசிப்பதில்லையோ அல்லது விரும்புவதில்லையோ என்று தோன்றுகிறது. ஹாலிவுட் முதற்கொண்டு இந்தப் பிரச்சனை தான். இயக்குனர்களின் Visual Sense எந்தளவிற்கு உள்ளது என்பதே பல சமயங்களில் இதனைத் தீர்மானிக்கும் என்பதையும் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால், என்னதான் அட்டகாசமான ஒளிப்பதிவு என்றாலும் - Road to perdition போல், இயக்குனர் சரியில்லையென்றால் படத்தினால் ஒரு தாக்கமும் ஏற்படாது. இன்னொரு விஷயம், ஒளிப்பதிவாளர்கள் எங்கிருந்து பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பது. முக்கியாமாக ஓவியர்களிடம் இருந்து. மைக்கல் பாலஸ், Gangs of newyork படத்திற்காக - ஸ்கார்சேஸி ரெம்பரான்ட் வரைந்த ஓவியங்களின் பாணியில் காட்சி அமைய வேண்டும் என்பதற்காக ரெம்பரான்ட் பற்றிய புத்தகத்தை பாலஸிடம் படிக்கக் கொடுத்தாராம். அதேபோல், ஒளிப்பதிவில் லைட்டிங் - ஓவியங்கள் பற்றி இங்கு அக்குவேறாக அலசி ஆராயப்பட்டுள்ளது.

அதில் Godfatherரோட கரவாஜியோவின் ஓவியங்களை ஒப்பிடு செய்வதைப் பார்க்கலாம். திரைப்பட ஒளிப்பதிவு என்பது - திரைப்படங்கள் பார்ப்பதோடு முடிந்துவிடுவது இல்லை. பின்னால் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆரண்ய காண்டம் - படத்தைப் பற்றி சாரு நிவேதிதா (விண் டிவி என்று நினைவு) - ஒளிப்பதிவு ரெனேசான்ஸ் (Renaissance) காலத்தியலானது என்று கூறினார். தமிழில் ஒளிப்பதிவாளர்கள் அந்தளவிற்கு ஒளிப்பதிவை முன்னெடுத்துச் செல்கிறார்களா......எவ்வாறு ஒரு திரைப்படத்தை அணுகிறார்கள் என்பது பற்றியெல்லாம் விரிவான பதிவுகள் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. ஒளிப்பதிவாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளிலும் ஒப்புக்கே என்று ஒருசில கேள்விகளை கேட்டு அவர்களை மேற்கொண்டு பேசவிடுவதில்லை. பாலு மகேந்திரா,சந்தோஷ் சிவன் போன்ற ஆட்களிடம் கூட பெரும்பாலும் திராபையான கேள்விகளே கேட்கப்படுகிறது.


எனக்குப் மிகப்பிடித்த ஒளிப்பதிவாளர்கள் (இந்தியா நீங்கலாக):

ஏகப்பட்ட ஆட்கள் இருந்தாலும் மிகப்பிடித்த என்ற அளவில். இதனை வைத்துதான் பதிவை எழுதுவதாக இருந்தது. ஆனால் எங்கெங்கோ சென்றுவிட்டது

Asakazu Nakai - இவரும் குரோசாவாவும் இணைத்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் ஒளிப்பதிவும் பிடிக்கும். குரோசாவா படங்களின் ஒளிப்பதிவு யாருக்குத்தான் பிடிக்காது.

Sven Nykvist (ஸ்வன் நைகிஸ்ட்) - இங்க்மார் மெர்க்மானின் அனைத்து படங்களின் ஒளிப்பதிவாளர் இவரே. இவரில்லாமல் பெர்க்மான் படங்கள் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமா என்பது சந்தேகமே

Vadim Yusov (வாதிம் யூஸோ) - இந்தப் பதிவை எழுத இவரே காரணம். தர்கோவ்ஸ்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். தர்கோவ்ஸ்கி தனது கடைசி படமான The Sacrificeயில் ஸ்வன் நைகிஸ்டுடன் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது

ic

Vittorio Storaro (விட்டோரியோ ஸ்டராரோ) - பெர்ட்டுலூசியின் பிரதான ஒளிப்பதிவாளர்.

Roger Deakins (ரோஜர் டீகின்ஸ்) - பல uniqueகான கோணங்களை கையாளுவதில் கில்லாடி

Raoul Coutard (ராவ்ல் கோதார்த்) - இயக்குனர் கோதார்த்தின்/ த்ரூஃபோவின் பல படங்கள் இவரின் கண்வண்ணமே. குறிப்பாக, handheld ஷாட்களில் இவருக்கு நிகர் இவரே

Gordon Willis (கோர்டன் வில்லிஸ்) - The Prince of darkness என்ற பெயரும் உண்டு (விக்கி). ஒளிப்பதிவு ஆர்வலர்களால் The Godfather படத்தை மறக்கவே முடியாது. மூன்று பாகத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர் இவரே. ஆனால் இவருக்கு கடைசி வரை எந்தப் படத்திற்கும் ஆஸ்கர் கிடைக்கவில்லை. Wikipedia: In the seven-year period up to 1977 Willis was the director of photography on six films that received among them 39 Academy Award nominations, winning 19 times, including three awards for best picture. ஏன் ? மேல நான் ஹாலிவுட் /தமிழ் ஒளிப்பதிவு - இயக்குனர்களது விஷ்வல் சென்ஸ் பற்றி நான் சொல்லியிருப்பவற்றிக்கு என்னைத் திட்டும் முன் இவரை நன்றாக திட்டவும். ஏனென்றால் அதில் பல விஷயங்களை இவரிடமிருந்தே நான் சுட்டது. ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவு தரத்தை/படங்களை ஏகத்துக்கும் கிண்டல் செய்த ஆசாமி இவர்.

Conrad Hall (கான்ராட் ஹால்) - இவரின் பிந்தைய படங்களை விட ஆரம்பகால படங்களே மிகப் பிடிக்கும்

Michael Ballhaus (மைக்கல் பாலஸ்) - ஸ்கார்சேஸியுடன் இவர் பணிபுரிந்த அனைத்து படங்களுமே மிகப் பிடிக்கும். அவைகள்

Christopher Doyle (க்ரிஸ் டாயல்) - இவரின் பெயரைச் சொன்னவுடன் மற்றொரு பெயர் நினைவுக்கு வர வேண்டும். வாங் கர் வொய். அவரின் - சமீபத்திய The Grandmasters, மற்றும் இரண்டு படங்கள் நீங்கலாக - எல்லா படத்திருக்கும் இவரே ஒளிப்பதிவாளர். இருவரின் கூட்டணி பிரிந்ததில் என்னைப் போல் பலருக்கும் அல்லது பலரைப் போல் எனக்கும் வருத்தமே.

10

Emmanuel Lubezki (இமான்யுல் லுபெஸ்கி) - டெல் டோராவுடன் பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். எனக்கு இவரின் Children of men மிகப்பிடித்த ஒன்று

Janusz Kaminski (ஸ்பீல்பெர்கின் எல்லாம் படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு), Michael Chapman (Taxi Driver, மிகமிக குறிப்பாக Raging Bull), Fred Kelemen (இயக்குனர் பெல்லா டாரின் படங்களில் பணிபுரிந்தவர்), Robert Richardson (Platoon, Shutter Island) என்று சொல்லிக் கொண்டே போகலாம். கடைகளில் டிவிடிகள் வாங்கும் போது, முதலில் இயக்குனரைப் பார்ப்பேன். தெரியாத ஆள் என்றால் அடுத்து - ஒளிப்பதிவாளர் தான். அதற்கடுத்துதான் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் பார்ப்பது. அந்தளவிற்கு ஒளிப்பதிவின் மீது ஈடுபாடு உண்டு. பிடித்த ஒளிப்பதிவாளர்கள் - அவர்களுது படங்கள் என்று எழுத நினைத்து, செலுலாய்ட்  - ப்லிம் என்று தடம் மாறிச் சென்றுவிட்டதாக உணர்கிறேன். பரவாயில்லை. இது முன்னோட்டமாக இருந்துவிட்டு போகட்டும். ஒவ்வொரு ஒளிப்பதிவாளர் பற்றி தனிப்பதிவாக பின்னர் எழுதலாம் என்று உத்தேசம்.

உதவிய பல தளங்களில் முக்கியமானவைகள்:
  • Film art: Cinematography - Link
  • Observations on film art - Link
  • The Impact of Digital Technology upon the Filmmaking Production Process - Link
  • Film vs Digital photography - Link
Tommy, the moment I first saw Angela's eyes, I knew it. I knew it was love, I knew I was fucked. And lo and behold, I was. So, Tommy, the moment after you kill her.....please, shoot her fucking eyeballs out.
The Story of the quaker:
க்வேக்கர்ஸ் (ஒருவித சமயக் குழு) அமைப்பை சேர்ந்த ஒரு க்வேக்கரின் பெண் குழந்தை காணாமல் போகிறது. சிலநாட்கள்கழித்து பயங்கரமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக அக்குழந்தையை மீட்டேடுக்கின்றனர். கொன்றவன் தாங்கமுடியாத குற்றவுணர்ச்சி காரணமாக சரியாக ஒரு வருடம் கழித்து போலீசில் சரணடைகிறான். தன்னை தூக்கில் போடுமாறு கெஞ்சிக் கேட்டும், கோர்ட் அவனுக்கு ஆயுள் தண்டனை மட்டும் விதிக்கிறது.

பதினேழு வருடங்கள் கழிகிறது. மதம் அவனை ஆட்கொள்கிறது. திருந்திய ஆன்மாவாகிறான். ஆனால் அவன் ஜெயிலுக்குள்கூட எங்கு சென்றாலும் - வெளியே உடற்பயிற்சி செய்வது மாதிரியான வேலைகளின்போது, வாசலுக்கு வெளியே அந்த க்வேக்கர் நின்றுகொண்டு அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருபப்தைக் உணருகிறான். நடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவடைகிறது. ஊழியம் செய்து குறைகாலத்தை ஒப்பெற்றலாம் என்ற முடிவு செய்கிறான்.ஆனால்.......அந்த க்வேக்கர் விடாமல் பகல் - இரவு என்று பாராமால் அவனது வீட்டிற்கு வெளியே நின்று அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். உடல்ரீதியாக அவனுக்கு எந்தவித அச்சுறுத்தலயும் அவர் கொடுக்கவில்லை.ஆனால் மனரீதியாக அவனை சாகடிக்க ஆரம்பிக்கிறார். பைத்தியம் பிடிக்கும் முனைக்கு அவனைத் தள்ளுகிறார். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் நினைப்பு ஒரு கொடுங்கனவு போல அவனை போகும் இடமெல்லாம் துரத்த ஆரம்பிக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல........பதினோரு வருடங்களுக்கு இந்த சித்திரவதையை அவன் அனுபவிக்கிறான். ஓரிரவில், தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே நரகத்தில் இடம் என்பதை க்ரிஸ்தவ நூலில் இருந்து தெரிந்துகொள்கிறான். தனக்கு இந்த தண்டனைதான் சரியானது....மேலும் நரகத்திற்கு போனால் இந்த க்வேக்கர் அங்குவரமாட்டான் அல்லவா என்பதாக........கத்தியால் ஜன்னலின் முன்னமர்ந்து அந்தக் குவேக்கரின் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொள்கிறான். உயர் பிரியப் போகும் அந்த கடைசி வினாடிகளில் அவன் பார்த்தது............குவேக்கர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதைத்தான்காட்ஃபாதரில் வரும் மோ க்ரீன் போலல்லாமல் நிஜ வாழ்கையில் யாராவது நேரடியாக கண்ணில் சுடப்பட்டு இறந்திருக்கிரார்களா.............என்று வெகுசுவாரசியமாக இருவர் பேசிக் கொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது (பின்னணியில் வரும் பாடலைக் கவனிக்கவும்). எந்தளவுக்கு சுவாரசியமாக என்றால்........சரியாக மூன்றாவது நிமிடத்தில் - இருவரின் மூளையும் "பொழக்" என்று கேமராவில் தெறிக்கும் அளவிற்கு - பின்னாடி ஒரு ஆள் வந்து துப்பாக்கியை எடுப்பதைக் கூட கவனிக்கதா அளவிற்கான சுவாரசியம். இந்த இடத்தில் தான் சைக்கோ - 1 என்ட்ரி கொடுக்கிறார்.

Marty (படத்தின் இயக்குனர் Martin McDonagh) ஒரு கதாசிரியன். ஒரு படத்திற்கான வேலையை தொடங்க வேண்டிய நிலையில், கற்பனை வறட்சியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறான். குடிப்பழக்கம் வேறு நாளுக்குநாள் அதிகமாக......குடிகாரன் என்ற பெயர் வேறு கிடைக்கத் தொடங்குகிறது. ஒருவழியாக தனது திரைக்கதைக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கிறான்: Seven Psychopaths. மார்ட்டியின் நண்பன், பில்லி பிக்கில். தனது நட்பை நிரூபித்தே ஆகவேண்டும் என்று எல்லா சமயங்களிலும் கங்கணம் கட்டிக் கொண்டலைபவன். இந்த பில்லி பிக்கிலின் இன்னொரு நண்பன், ஹன்ஸ் கீஸ்லாவ்ஸ்கி. இருவரின் தொழில்: நாய்க் கடத்தல். நல்ல வசதியான நாய்களாகப் பார்த்து - கடத்தி - கண்டுபிடித்தது போல திரும்ப கூட்டிக் கொண்டு போய் பரிசுத் தொகையை வாங்குவதுதான் இவர்கள் வேலை.

மார்ட்டி, தனது திரைக்கதையான Seven Psychopaths பற்றி பில்லியிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கிறான். புத்தமத சைக்கோ தான் படத்தின் பிரதானம், வழமையான ஹாலிவுட் ஜல்லியடிப்புகளற்ற, எந்நேரமும் கைகளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சுத்தும் ஆட்களற்ற (சுருள்: In Bruges படக்கதை) திரைக்கதையை எழுதுவதே தனது விருப்பம். படம், பிற்பகுதியில் மெர்குரியைப் போல வெகுஇயல்பாக அன்பு & அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றவாறேல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான். திடீரென பில்லி, "Jack of diamonds" என்ற சீரியல் சைக்கோ கொலைகாரன் பற்றி பேப்பரில் வந்த செய்தியை மார்ட்டியிடம் காண்பிக்கிறான். இந்த சைக்கோவிற்கென்று ஒரு கொள்கை உள்ளது: மற்ற சீரியல் கில்லர்களை மட்டுமே இந்த சீரியல் கில்லர் கொல்வான் என்று பில்லி கூறுகிறான். இந்த கில்லரின் கொள்கைப் பிடிப்பினால் கவரப்பட்டு, மார்ட்டி இவனையே தனது தனது திரைக்கதையின் முதல் சைக்கோவாக முடிவு செய்கிறான். இதற்கிடையில், Dognapperசான பில்லியும் ஹன்ஸும் Costello என்பவனது ஷி ஷூ (Shih Tzu, படம் முழுக்க ஷிட் ஷூ என்றே சொல்வார்கள்) வகை நாயான bonnyயை கடத்திவிடுகின்றனர். இந்த காஸ்டெல்லோ ஒரு/பல மார்க்கமான பேர்வழி. சுருக்காமாக, மார்ட்டியின் திரைக்கதையில் - சைக்கோ: 3.

இதுவொரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நண்பனுக்காக ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கும் பில்லி புத்திசாலித்தனமாக (?) ஒரு காரியம் செய்கிறான். அது..............அடுத்தநாள் கையில் முயல் குட்டியுடன், ஒரு சைக்கோ கொலைகாரன் பிக்கிலின் வீட்டிற்கே வந்தாகியாயிற்று. அவனது கதையைக் கேட்ட, மார்ட்டி அவனையும் அவனது மனைவியையும் முறையே சைக்கோ: 4 & 5 என்று தனது திரைக்கதையில் பாத்திரங்களாக்க தீர்மானிக்கிறான். இந்த சைக்கோ, வீட்டில் இருந்து கிளம்பும் முன் மார்ட்டியிடம் இருந்து ஒரு உறுதிமொழியை வாங்கிக் கொள்கிறான். அஃதாவது: படத்தின் முடிவில், தனது தொலைப்பேசி நம்பரை திரையில் ஓடவிட வேண்டும். அதைப் பார்த்து, பிரிந்து போன தனது மனைவி (சைக்கோ: 5) தன்னை தொடர்புகொள்ளக்கூடும் என்பதுதான் அது. இதற்கிடையில், காஸ்டெல்லோ ஹன்ஸ் & பிக்கிலின் நாய் திருட்டு வேலையை அறிந்து ஹன்ஸின் மனைவியைப் பார்க்க கான்சர் வார்டுக்குச் செல்கிறான். __________________________________________________________________________________________________________________________________________________________________கோடிட்ட இடங்களில், ஹன்ஸின் மனைவியின் கதி என்னானது, மீதி இரண்டு சைக்கோகள் யார், படத்தைப் பாருங்கள்..... இதுமாதிரியான படவிமர்சனங்களின்(?) இறுதியில் வாசிப்பவர்களைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகளைப் போட்டு - இதற்குமேல் எதைச் சொன்னாலும் சுவாரசியம் போய்விடும் ஆபத்து இருப்பதால், இத்துடன் முடித்துக் கொள்கிறேன் - என்பதையும் சேர்த்து நிரப்பிக் கொள்ளுங்கள்

ஏன் கதாபாத்திரங்கள், நாயின் பெயர் முதற்கொண்டு நான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றால்..........மீண்டும் அந்தப் பெயர்களை பாருங்கள் - costello, bonny, bickle, Kieslowski, Marty, Jack the diamonds இந்தப் பெயர்கள் எல்லாம் பார்க்கும் போது ஏதேனும் பொறிதட்டுகிறதா ? வெல்.......by default, நான் ஒரு பிரபல பதிவர் என்பதால் படம் பார்க்கும் போதே பெயர்களின் பின்னணி புரிந்துவிட்டது. சிரமப்பட்டு விக்கி லிங்க்களை க்ளிக் செய்து கொண்டிருக்கவில்லை. In Bruges என்ற படத்தை நம்மில் பலபேர் பார்த்திருப்போம். மிகஅட்டகாசமான characterization உள்ள திரைப்படம் (காலின் ஃபெரலின் ஐயர்லாந்த் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்குமல்லவா). மிகஇயல்பான ப்லாக் காமெடி வசனங்கள் அந்தப் படத்தில் நிறைந்திருக்கும். அந்தப் படத்தின் இயக்குனரான Martin McDonaghயின் அடுத்த படம் தான் இது. இதுவும் அதேபோன்ற, ப்லாக் காமெடி வகைப் படம் தான். ஆனால் திரைக்கதை முற்றிலும் வேறானது. இது எவ்வாறு post modern படமாக உள்ளது என்றால்............

1) போஸ்ட் மாடர்ன் படங்கள் என்றால் வெறும் டேவிட் லின்ச் வகைப் படங்கள் மட்டும் தான் என்ற பொதுக்கருத்து இங்கே உண்டு. டாரண்டினோ முதற்கொண்டு ஹெர்சாக் வரை வெவ்வேறு விதமாக போஸ்ட் மாடனிசம் படங்களில் வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

2) கோலாஜ்(Collage) ஞாபகம் இருக்கிறதா.....................பள்ளி, கல்லூரிகளில் எல்லாமே முயற்சித்திருப்போமே................. அதுபோன்ற கூறுகளை போஸ்ட் மாடனிசத்தில் பார்க்கலாம். வெவ்வேறு வகையான விஷயங்களை ஒன்றாக்கி ஒருவடிவத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி. அதைப்போலவே இந்தப் படத்தில் (ஏன் எல்லா டாரண்டினோ படங்களிலும் தான்) பின்னணி இசையாக - முற்றிலும் அந்நியமான சூழ்நிலையில் - பாப் பாடல்களை ஒலிக்க விடுவதாகட்டும்; இதுவே ஒரு திரைப்படம் - அந்தத் திரைப்படத்திற்குள் பிற திரைப்படங்களை, குறிப்பாக கதாபாத்திரங்களை நுழைப்பது (Reservoir Dogs - Madonna) என்று.......ஒரு பாப் ஆர்ட் போலவே இதுபோன்ற படங்கள் இருக்கும். நமக்கு பரிச்சயமான பல சீரியல் கில்லர்கள் - Zodiac போல - படத்தில் வந்து போகிறார்கள். தகிஷி கிடானோவின் Violent Cop படத்தைப் பார்த்துக் கொண்டே பில்லியும் மார்ட்டியும் பேசிக் கொண்டிருக்கும் ரகளையான காட்சி ஒன்று உண்டு3) (Self)Parody & Black Comedy - டாரண்டினோ பல படங்களில் வந்து வெடித்துச் சிதறுவதோ, குத்துப்பட்டு சாவதோ இதில் சேர்த்தி. ஏனென்றால், இதுபோன்ற காட்சிகள் - இயக்குனர், முக்கியமானவர், கேப்டன் ஆஃப் த ஷிப், மிகமுக்கியாமான வேடத்தில் பேரரசு, ரவிகுமார் மாதிரி - வரப்போகிறார் என்று நமது நினைப்பை de-construct (இந்த வார்த்தையை உபயோகப்படுத்தாட்டி பின்நவீனத்துவ பதிவு இல்லை என்றாகி விடும்) - என்ற நமது நினைப்பை சிதறடிக்கிறது அல்லவா. இந்தப் படம் முழுக்க ஏராளமான ப்லாக் காமெடி விரவிக்கிடக்கிறது. அதுபோக இயக்குனர், தனது படங்கள், ஹாலிவுட் என்று ஆரம்பித்து ப்ரிட்டைன், யுஎஸ்ஏ என்று எல்லா நாடுகளையும் நக்கல் விடுகிறார்.

4) Irony - இயக்குனர் காந்தியின் ரசிகர் போல. In Brugesயிலும் காந்தி பற்றி வசனங்கள் வரும். இதில் அதையும் சேர்த்து, ஒரு சைக்கோவின்(Zodiac) வீட்டில் காந்தியின் புகைப்படமிருக்கும்.நான் வெகுவாக ரசித்த காட்சி அது. அதைபோலவே லூதர் கிங் போன்ற ஆட்களைப் பற்றிய வசனங்கள். எங்கே இது நகைமுரணாக மாறுகிறது என்றால், இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் காட்சியிலோ அதற்கடுத்த காட்சியிலோ வன்முறை வெடிக்கும். அதுவும் இருவரையும் சிலாகித்து கூறும் ஆளே வன்முறையில் இறங்குவார். அதேபோன்ற ஏன் கீஸ்லாவ்ஸ்கி என்ற பெயரை வைக்க வேண்டும் ? கீஸ்லாவ்ஸ்கியின் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். குறைந்தபட்சம், A short film about killing படத்தை பார்த்திருந்தால் சுளுவாக இதன் பின்னணி புரிந்துவிடும்.

இந்தப் படத்தில் வன்முறையை சிலாகிக்கவில்லை. மாறாக மேல சொல்லியிருந்த "படம், பிற்பகுதியில் மெர்குரியைப் போல வெகுஇயல்பாக அன்பு & அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் " என்ற விஷயத்தை முன்னிறுத்துகிறது. அதை கடைசி கட்டங்களில் வரும் வசனங்களிளும் நிகழ்ச்சிகளிலும் கொஞ்சம் கவனித்தோமானால் புரிந்துவிடும்.5) இதுதான் மிகமுக்கியமானது. தனியாக இதுவொரு படமா.........அல்லது மார்ட்டியின் திரைக்கதையை படமாக பார்க்கிறோமா......அல்லது அந்தத் திரைக்கதை எவ்வாறு தயாரானது என்பது பற்றிய படமா...என்று மோபியஸ் வளைவு போல எங்கு நுழைந்து எங்கே வெளியேறுகிறது என்றே தெரியாது. இந்தக் கோணத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கியிருக்கலாம். சற்று மேலோட்டமாக முடிந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

இயக்குனரிடம் ஆரம்ப காட்சியில் அந்த அடியாட்கள் பேசிக் கொள்ளும் காட்சியில் ஆரம்பித்து பல இடங்களில் டாராண்டினோவின் தாக்கம் வெகுவாகத் தெரிகிறது. ஆனால் டாராண்டினோவின் கதாபாத்திரங்கள் சிலசமயங்களில் comicalலாக ஏதையாவது செய்து எரிச்சலூட்டுவார்கள். ப்லாக் காமெடியின் மற்றொரு முக்கியமான ஆட்களான - கோயன் ப்ரதர்ஸ் படங்களின் கதாபாத்திரங்களும் அப்படியே. சில வேளைகளில் சிவாஜியைப் போன்ற ஓவர் ஆக்ட் செய்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் அதுபோன்ற விஷயங்கள் இல்லாமல், subtlety படம் முழுவதும் தொடர்கிறார்கள். குறிப்பாக, க்றிஸ்டோஃபர் வால்கனின் பூடகமான நடிப்பு எனக்குப் பிடித்திருந்தது. சாம் ராக்வெலை Confessions of a Dangerous Mindயில் இருந்தே பிடிக்கும். நல்லவேளையாக காலின் ஃபெரல் அடக்கி வாசித்திருக்கிறார். வழக்கமான மொன்னைத்தனம் இல்லாதது பெரிய ஆறுதல். கடைசியாக இந்தப் படம், ஒரு மிகச் சிறந்த படமா.......என்றால், ஏதோவொன்று குறைவதைப் போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் எங்குமே தொய்வில்லாமல்.....ஜாலியாக ரசிக்கலாம். படத்தில் ஆறு சைக்கோகளை மட்டுமே காமிப்பார்கள். அந்த ஏழாவது சைக்கோ ? நம்மைத்தான் சொல்கிறாரோ...... romanticize செய்யப்பட்ட ஹாலிவுட் அபத்த வன்முறைப் படங்களை ரசிக்கிறீர்களே...என்றே நம்மை நக்கல் விடுகிறாரோ என்னவோ.