எனது இத்தனை ஆண்டுகால சினிமா வரலாற்றில் First day First show பார்த்த ஒரே படம், The Dark Knight

- பிரபல  (கல்ட்)பதிவர்  கொழந்த 

பேட்மேன் பத்தி ஒரு நாலு பதிவாவது எழுதுனும் என்ற முடிவுல இருந்தேன். "உனக்கு எதுக்கு இந்த கருந்தேள் வேல எல்லாம் ?"  ஹேராம் ஹேமமாலினி குரலில் ஒரு அசரிரீ. அப்புடியே வுட்டுட்டேன். இதுவெளிய சொல்லிக்கிற காரணம் என்றாலும், நிஜக்காரணம் - எனக்கு பேட்மன் காமிக்ஸ் எல்லாம் கடந்த மூன்று வருடங்களாகத் தான் பரிட்சயம். கவனிக்க, பரிட்சயம். படிக்க ஆரம்பிச்சது என்னவோ போன வருஷத்தில் இருந்துதான். அதுனால கூட்டதுல கோவிந்த போடுறேன் பேர்வழி, எங்க இந்த படத்த பத்தி குறைந்தபட்சம் ஒரே ஸ்டேடஸ் கமென்ட் கூட போடாட்டி facebookல நம்மள என்ன நெனைப்பாங்கன்னு நானும் எனது "இருப்பை" நிரூபிக்க எழுதுறேன்னு  அபத்தமாக, சரியாக தெரியாதை எழுத விரும்பவில்லை. ராஜேஷ் மாதிரியான ஆட்கள் எழுதுறதே சரியாக இருக்கும்(அவர் வீட்டு புக் ஷெல்ப்ல ஒரு முழு வரிசையும் காமிக்ஸ் தான்).

ஆனால், பேட்மேனின் எல்லா படங்களையும் பல கார்டூன்களையும் - இதை வாசிக்கும் பெரும்பாலானவர்கள் போல - பல முறை பார்த்துள்ளேன். அந்தப் படங்களை மட்டும் பார்த்திருந்து, இதுதான் பேட்மேன் - ஙஞனநமணவென்று கவட்டையை கவ்விப் பிடிக்கும் அளவிற்கு டைட்டான உடையுடன் சுவர்களுக்கு இடையே சிரமப்பட்டு தவ்விக்கொண்டிருக்கும் ஒருஆள் என்ற அளவில் மட்டும் தெரியும். அப்பொழுது பேட்மேனுக்கு பெரிய ரசிகன் எல்லாம் கிடையாது. 2007. The Dark Knight பட ட்ரைலர் வெளியானது. ஒரு உலுக்கு உலுக்கியது என்றால் மிகையில்லை. குறிப்பாக ஜோக்கர் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும். ஏன் ட்ரைலர் அத்தனை மிரட்சிக்கு உட்படுத்தியது ?. அதுவரை - Batman beginsசை அப்போது நான் பார்த்திருக்கவில்லை - நான் திரைப்படங்களில் பார்த்த பேட்மேன், குழந்தைத்தனமான காட்சிகள், (எனக்குதான் அப்படி தோணுதோ) ரொம்பவும் காமிக்தனமான சண்டைகள் என்றே இருக்கும். டிம் பர்டனின் பேட்மேன் ரசிக்கக் கூடியதுதான். ஆனால், காட்சிக்கு காட்சி காமிக்ஸ் போலவே இருக்கும். அதுவும் பேட்மேன் ராபின்(Joel Schumacher) எல்லாம் சகிக்க முடியாத அளவிற்கு கொடுமை. அதனால் டார்க் நைட் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. பின்பு எத்தனை தடவை டார்க் நைட் பார்த்தேன் என்ற கணக்கே இல்லை. மற்ற எல்லா காமிக் ஹீரோக்களின் படங்களை விடவும் நோலனின் படம் ஏராளமான ஆட்களுக்கு பிடிக்க காரணம்....அதன் darkness. Batman begins'ல் அட்டகாசமான ஒரு ப்ளாட்ஃபாரமை ஏற்படுத்திய பிறகு, டார்க் நைட் படம் முழுக்கவே உளவியல் ரீதியிலான "சண்டை (?)" காட்சிகளாகவே நோலன்கள் கையாண்டிருப்பர்.

இந்த பதிவு முழுக்க முழக்க எப்படி, நோலனின் பேட்மேன் ஒரு சினிமா ரசிகனாக என்னை பாதித்தது(தெரிஞ்சு  யாருக்கு என்ன ஆகப்போகுது) என்பது குறித்தும் பேட்மேனின் உளவியல் குறித்ததும், ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆசையில் எழுதுவது Full stop 

பேட்மேனது சைக்காலஜி பற்றிய ஒரு பட்டையைக் கிளப்பும் டாகுமெண்டரி இது. இதிலிருக்கும் சிலபல விஷயங்களைத்தான் கீழே நீட்டி முழக்கி சொல்லியிருப்பேன். மற்ற காமிக் ஹீரோக்களுக்கும் பேட்மேனுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரியும். தவிர, நோலனின் பேட்மேன் எப்படி பல வகைகளில் ஸ்பெஷலாக இருக்கிறது என்பது குறித்தும் அலசுகிறது. எப்படியும் இதற்கு  பிறகு பதிவை யாரும் வாசிக்க போவதில்லை.அதனால், இந்த டாகுமென்டரியை பார்க்காதவர்கள், உடனேயே தரவிறக்கி பாருங்கள். இன்னும் மேலதிகமாக வெள்ளியன்று பேட்மேனை ரசிக்கலாம்.



Fear & Guilt:

சிறுவன் ப்ரூஸ் வெய்ன் , தவறி ஒரு குகைக்குள் விழ நேரிடுகிறது. விழுந்த அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாமல் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்பவனின் முகத்தை உரசியவாறு ஆயிரக்கணக்கான வவ்வால்கள் அவனது தலைக்கு மேல பறக்கின்றன. நிச்சயமாக, எந்தவொரு சிறுவனின் மனதிலும் இதுபோன்றதொரு சூழ்நிலைய eternal fear ஒன்றை ஏற்படுத்திவிடும். 
-----------------------------------------
இந்த விபத்து நடந்த சிறிது காலத்திற்கு பிறகு, ப்ரூஸ் வெய்ன், தனது பெற்றோர்களுடன் "Mask of the Zorro" மேடை நாடகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான். நாடகத்தில் கறுப்பு முகமூடியுடன் ஆட்கள் நடமாடுவதும், கயிறிலிருந்து இறங்குவதுமான காட்சிகள், வவ்வால்கள் முகத்தை உரசியதையே ஞாபகப்படுத்த - அந்த இடத்தைவிட்டு கிளம்பலாம் என்று பெற்றோரை கிளப்புகிறான். வெளிய வருபவர்கள், ஒரு வழிப்பறித் திருடனால் ப்ரூஸ் வெய்னின் கண் முன்னரே கொலை செய்ப்படுகின்றனர்.

மேலிருக்கும் இரண்டு காட்சிகளையும் Batman begins படத்தில் மிக நேர்த்தியாக நோலன் வெளிப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்ததே.

தனது பெற்றோர்கள் தனது கண் முன்னரே இறந்ததும், அதற்கு - அவர்களை வெளியே அழைத்து வந்த தாம்தான் காரணம், தன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும்படி ஆகிவிட்டதே என்றும், அவர்களை வெளிய அழைத்து வர - தனது பயமே காரணம் என்றும் - ப்ரூஸ் வெய்ன் குற்றஉணர்வில் தவிக்க ஆரம்பித்தது அன்றுமுதல் தான். சூப்பர்மேனில் இருந்து (காதலி) ஸ்பைடர்மேன் வரை(uncle இறப்பது) இந்த குற்றஉணர்வை எல்லா காமிக்ஸ் ஹீரோக்களின் வாழ்விலும் காணலாம்.இந்த குற்றஉணர்வு - சூப்பர் ஹீரோக்களை மட்டுமின்றி நம்மைப் போன்ற ஆட்களையும் வெகுவாக பாதிக்கப் கூடியதுதானே. வேட்டைநாய் போல் வாழ்நாள் முழுவதும் அது துரத்திக் கொண்டே இருக்கும். ப்ரூஸ் வெய்ன்க்கும் அதுதான் நடந்தது. 

இடையில், கோதம் நகரின் முதன்மைக் குடிமகனான தாமஸ் வெய்னுக்கும் அவரது மனைவிக்குமே பாதுகாப்பு இல்லாத பொழுது, நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அந்நகரின் மக்கள் கலவரமடைய ஆரம்பிக்கின்றனர். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடடைய தொடங்கியிருந்தது. ஊழல் மெல்ல மெல்ல மலிவுற ஆரம்பித்திருந்தது. அதனோடு தாமஸ் வெய்ன் மரணமும் சேர்ந்துகொள்ள, முற்றிலுமாக அனைத்தும் மாறத் தொடங்கியது. பல ஆண்டுகள் கழித்து நடக்கும் நீதிமன்ற விசாரணையின்போது தனது பெற்றோரை கொன்றவனை பழிவாங்கும் நோக்கத்துடன் செல்லும் ப்ரூஸ், அவனை மற்றொரு கும்பல் சாகடிப்பதை கண்ணுற நேரிடிகிறது. குற்றவாளி அவன் இல்லை - இந்த நகரமே அந்த சூழ்நிலைக்கு அவனைத் தள்ளியது, சரி செய்ய வேண்டியது இந்நகரத்தையே என்று முடிவுக்கு வருகிறான். இதற்கு அவன் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவது எப்படி என்பதை நாம் அனைவரும் Batman begins மூலம் அறிவோம்.

ப்ரூஸ் வெய்ன் இதற்கு பின்னர் எடுக்கும் இரண்டு முடிவுகள்தான் எனக்கு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான  ஆட்களுக்கு பேட்மேனை பிடிக்கக் காரணாமாக இருக்க முடியும். இதை எல்லாம் செய்ய ஒரு அடையாளம் தேவை என்றான பிறகு, எதனை தேர்ந்தெடுப்பது ? மிகத் துணிச்சலான ஒரு முடிவு. பயத்தை பயத்தின் மூலம் எதிர்கொள்ளுதல். (உளவியலில் இதுவொரு வகையான ட்ரீட்மெண்ட்). படத்தில் மிகமிக அற்புதமாக இது காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக வசனங்கள். காமிக்ஸில் இது அவ்வளவு விஸ்தாரமாக காமிக்கப்படவில்லை என்றாலும்Year Oneல் ஒரு அட்டகாசமான காட்சி வரும். ப்ரூஸ், இதுபற்றிய யோசனையில் இருக்கும் பொழுது, ஜன்னலை உடைத்துக் கொண்டு ஒரு வவ்வால், அவனது தந்தையின் சிலையின் மீது உட்காரும். அதகளமாக வரையப்பட்டிருக்கும்.



இரண்டாவது, குற்றஉணர்வினால் ஒடிந்து போகாமல். அதனையே அடிப்படையாகக் கொண்டு - ஓகே, தனது பெற்றோரின் சாவிற்கு அந்த ஒரு ஆள் மட்டுமே காரணமல்ல, இந்நகரத்தின் சீர்கேடடைந்த மனிதர்களே காரணம் என்ற முடிவிற்கு வருகிறான். 

இந்த முடிவை எடுத்தபின்னால், கன்னாபின்னாவென்று யாரையும் பேட்மேன் கையாளுவதில்லை. அவனாக வகுத்துக் கொண்ட சட்டதிட்டங்கள் உள்ளன. (யாரையும் கொல்வதில்லை என்பது குறித்து நிறைய கருத்துகள் உள்ளன). அந்த சட்ட திட்டங்களின் எல்லைக்கே அவனை இட்டுச் சென்று ஒரு கதாபாத்திரம் உண்டென்றால், அது ஜோக்கர் மட்டுமே.

ஜோக்கர் - ஆலன் மூரின் The Killing Joke ஜோக்கரைப் பற்றிய பின்புலத்தை தெளிவாக விளக்குகிறது. இந்த ஆலன் மூர் என்பவரே, ஒரு அல்டாப் பேர்வழி. V for Vendetta, From hell என்ற பல புகழ்பெற்ற காமிக்ஸ்களை உருவாக்கியவர். இவரது காமிக்ஸ்கள் பலவற்றையும் சற்று கூர்ந்து நோக்கினால், நகரம் - அதனது மனிதர்கள் - அவர்களது சமூகம் குறித்த சிக்கலான தொடர்புகள் குறித்து விவரணைகள் நிறைந்திருக்கும். அவரைப் பற்றிய ஒரு அட்டகாசமான டாகுமென்டரி, The mindscape of Allan moore. ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகரும் தவறவே விடக்கூடாத டாகுமென்டரி இது.




அவர் ஒரு பேட்டியின் போது சொன்னதே "psychologically Batman and the joker are mirror images of each other". 

மற்ற எல்லா கதாபாத்திரங்களை விட ஜோக்கர் மட்டும் ஏன் மிக சிக்கலான ஆள் என்றால், மற்றவர்கள் பணம், அதிகாரம், இத்யாதிகள் என்ற ரீதிலேயே யோசிப்பார்கள். வெகுசிலர், பேட்மேனை தோற்கடித்து அவனைவிட தாங்கள் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முனைவார்கள். ஆனால், ஜோக்கர் இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு சிந்திக்கும் ஆள் ஆயிற்றே. அவனுக்கு விளையாட சரிக்கு சமமாக ஒருஆள் தேவை. பேட்மேனின் மொத்த valueகளையும் போகிறபோக்கில் கேள்விக்குள்ளாக்கியது ஜோக்கர் மட்டுமே. இந்த ஒரு காட்சி மட்டுமே போதும் இருவரைம் பற்றி புரிந்து கொள்ள. 



உளவியல் ரீதியாக மிகப்பெருமளவில் பேட்மேன் மீது ஆதிக்கம் செலுத்தியது ஜோக்கர் தான். உறவு சார்ந்த இழப்புகள், வலிகள் என்பதோட மட்டுமல்லாமல், பேட்மேனை போலீசிடம் இருந்து ஓடுமாறு செய்ததும் அவனே (Dark Knight க்ளிமேக்ஸ்). இதுமிக முக்கியமான திருப்பம். பல இழப்புகளை சந்தித்தாலும், எப்படியாவது நகரத்தை சீர் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை - யாருக்காக இதெல்லாம் செய்கிறானோ அவர்களைக் கொண்டே வில்லன் என்றழைக்கப்பட வைப்பது. அவனது identityயே முற்றிலுமாக மாறிப்போகிறது. நோக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. வேறெந்த சூப்பர் ஹீரோவும் இந்தளவிற்கு தாக்குதலுக்கு ஆளானதில்லை. அதனாலேயே பேட்மேன் சூப்பர் ஹீரோ ஸ்தானத்தில் இருந்து நமது மனதுக்கு நெருக்கமான ஆள்போல் மாறிவிடுகிறான். தவிர, தனது இந்த கேரக்டரை மறைப்பதற்காக ப்ரூஸ் வெய்ன் கூட போலித்தனமான பல வேலைகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மற்றொரு identity crisis. 


இவ்வளவு வலிமையான - தனது அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, மற்றொரு அடையாளம் ப்ளேபாய்தனமாக பார்க்கப்படுகிறது, தன்னால் பல பேர் உயிரிழப்பது, கோர்டனின் குடும்பத்தாருக்கு ஆபத்து ஏற்படுவது, காதலியின் இறப்பு, டென்ட்யின் இறப்பு, அதைவிட two faceசாக அவனது மனமாற்றம், தாம் ஏதற்காக போராடுகிறோமா அது சிதைந்து விடுமோ என்ற பயம் -  உளவியல் ரீதியிலான தாக்குதலை Dark Knightல் பேட்மன் மீது தொடுத்த ஜோக்கரை விட Dark Knight Risesல் யாரும் பெரிதாக ஏதேனும் செய்ய முடியாம என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உடல்ரீதிலான தாக்குதலாகவே பெருமளவில் இருக்க வாய்ப்புண்டு. இதுவொரு பக்கம் இருந்தாலும், டார்க் நைட், பல emotional conflictsகளை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்திய படம். ரியலிஸ்டிக்தன்மையுடன் கூடிய பல காட்சியமைப்புகள் - Batman beginsல் கூட காமிக்ஸ்தனமான சில சண்டைக்காட்சிகள் இருந்தன, இப்படத்தில் அது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது -  CG திணிப்பு இல்லாமை, எப்பொழுதுமே ஒருவித பதட்டத்தில் பார்வையாளர்களை வைத்திருத்தல் என்று நம்மை முழுவது உள்ளிழுக்குமாறு அப்படம் இருந்தது. காமிக்சை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதை எல்லாம் தாண்டி - The Dark Knight, முற்றிலும் வேறு தளத்தில் இயங்கிய படம். பேட்மேனையும் ஜோக்கரையும் மாஃபியாகளாக யோசித்துப்பார்த்தால், Godfatherக்கு இணையானதொரு படமாக நிச்சயம் டார்க் நைட் இருந்திருக்கும். நான் கட்டியம் கட்டிக் கூறுக்கிறேன் - Dark Kinght Rises உட்பட - இனி காமிக்ஸ் ஹீரோக்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் எந்தவொரு படமும் Dark Knight அளவிற்கு வரவே முடியாது. Almost perfect.  அந்த மேஜிக் மீண்டும் Dark Knight Rises படத்தில் நிகழுமா ? 




பி.கு:
  • Batman Unmasked: The Psychology of the Dark Knight, டாகுமெண்டரி டவுன்லோட் செஞ்சாச்சா ? ஒரு தபா பாத்துருங்க. 
  • இப்ப, கருந்தேளின் இந்த பதிவகள இந்த ஆர்டர்ல திரும்ப ஒருக்கா படித்தால் உத்தமம்.
  • வெள்ளியன்று வவ்வால் மனிதனின் இந்த குணாதிசயங்கள மனசுல வெச்சுகிட்டு படத்த பார்க்கும் போது, இன்னும் நல்லா ரசிக்க முடியும் என்பது என் கருத்து. 
  • Facebookல ராஜேஷ் ஷேர் செஞ்சிருந்து...நம்ம இலுமி எழுதியது....
          1. http://illuminati8.blogspot.in/2010/07/batman-begins-revelation.html

          2. http://illuminati8.blogspot.in/2010/07/killing-joker-18.html

          3. http://illuminati8.blogspot.in/2010/08/dark-knight-at-war.html

அட்டகாசம். இதையும் சேர்த்து மொத்தமா படிச்சா - எனக்கே புரியும் போல இருக்கே - அல்லாம் சுளுவா புரியும்.

இந்த பதிவுல இருக்குற அனைத்து விஷயங்களும் ஏறக்குறைய எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.ஆனாலும் இத பதிவா எழுதுறது எனக்கென்ன பெருமையா....கடம.எப்புடியோ பேட்மேன் பத்தி நானும் ஒரு பதிவு போட்டுட்டேன். ஒரு முக்கிய புள்ளியா இனி என்னை இந்த உலகம் அங்கீகரிச்சிரும். அடுத்து, அந்த படத்தின் டிக்கட்டை போட்டோ புடிச்சு போடணும். அத வெள்ளிக்கிழம செய்றேன்.