Monday, December 26, 2011

சாத்தானின் இசை: 5 - வகைகள் & ஆளுமைகள்

எந்தவிதமான உணர்ச்சிகளை இசையில் இதுவரை கேட்டிருப்போம் ? காதல்,காமம்,ரௌத்ரம்,வெறுமை,மகிழ்ச்சி,துக்கம்,பக்தி,உன்மத்தம் என்று போய்க்கொண்டே இருக்கும்.ஆனால், இதுவரை மலச்சிக்கலுக்கான இசையை எந்தவொரு வகையிலாவது கேட்டிருக்கீர்களா ? ப்ளூஸில் அதுவும் உண்டு.மலச்சிக்கல், நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், அதிகளவு மாத்திரைகளை உட்கொள்பவர்களிடம் ஆரம்பித்து மன அழுத்தம் இருப்பவர்கள்வரை அதுவொரு பெரும் பிரச்சனை.இந்தப்பாடல் ஆரம்பிப்பதே
  
Ladies and gentlemen, most people record songs 
about love, heartbreak, loneliness, being broke... 
Nobody's actually went out and recorded a song about real pain. 
The band and I have just returned from the General Hospital 
where we caught a man in the right position. 
We name this song: "Constipation blues".


---------------------------------------------------------------------------------

அமெரிக்காவின் வடமேற்குப்பகுதியில் இருக்கும் மாகாணம் – மிசிசிபி. க்ரேட் மைக்ரேசன்(Great Migration) குறித்தும் அது எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்தும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம். அந்தப் புலம்பெயர்வு ஆரம்பமான முக்கிய மாகாணங்களில் ஒன்றுதான் இந்த மிசிசிபி. மிசிசிபி – யாஸு, ஆகிய இரண்டு ஆறுகளுக்கே இடையே அமைந்த பகுதி.இரண்டு ஆறுகள்:அதுவும் பல நூற்றாண்டுகளாக வெள்ளம் வடிந்து வடிந்து மிகுந்த வளங்கள் ஏறிய ஒரு பகுதி.உலகளவில் அளப்பரிய மண்வளங்கள் கொண்ட பகுதியில் இதுவும் ஒன்று. குறிப்பாக பருத்தி விளைச்சல் அமோகமாக விளைந்யும் இடம்.அதோடு பல பணப்பயிர்களும் சேர ஆரம்பகால அமெரிக்க முதலாளிகளின் எல் – டொரடோவாக இப்பகுதி திகழ்ந்தது.


இடம் அருமையான இடம்தான். ஆனால்,வேலை செய்வதற்குரிய ஆட்கள்,போக்குவரத்து வசதிக்கெல்லாம் எங்கு போவது ? இந்த நோக்கத்திற்காகவே அடிமைகளாக ஆப்ரிக்கர்கள் "அழைத்து” வரப்பட்டனர். விவசாயத்தில் இருந்து சாலை செப்பனிடுதல் தொழிற்சாலை என்று அனைத்தும் அவர்கள் மூலமாகவே செழித்து வளரத் துவங்கியது;அவர்கள் வாழ்வைத் தவிர. ஆரம்பகாலங்களில் கடுமையான வேலைகள்.கடுமை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கானது.இதிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள இருந்த ஒரே வழி இசை.இரவு நேரத்தில் தனித்தனியாகவோ சிறிய அளவிலான கூட்டத்தின் நடுவிலோ இசைக்க ஆரம்பித்தனர். 

Country Blues: 
ஆரம்ப கால அமெரிக்க இசையின் முக்கிய வகை இது. ஏற்கனவே அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில், 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிடார் வாசிக்கப்பட்டு வந்துள்ளது.கிராமப்புற சர்ச் பாடல்களுடன் கிடார் இசைக்கப்பட்டு வந்தது.இந்த வகை ப்ளூஸ் இசையே கன்ட்ரி ப்ளூஸ் என்றழைக்கப்படுகிறது.இந்த பெயர் கூட பின்னாளில் வந்ததே.

Delta Blues: 
இது தான் அசல் ப்ளூஸ் இசையின் பிறப்பிடம். மிசிசிப்பி டெல்டா குறித்த நீண்ட முன்னுரை இந்த இசை வகையை கருத்தில் கொண்டே எழுதியது. மிசிசிப்பி பகுதியின் ஆப்ரிக்கர்களாயே முழுக்க முழக்க வளர்ந்த இசை.ஏற்கனவே கன்ட்ரி ப்ளூஸ் சற்றே அந்தப் பகுதிகளில் பரவியிருந்ததால், அதிலிருந்த சில கூறுகளையும், தங்களுது சொந்த நாட்டின் சில கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த வகையை இசைக்கத் தொடங்கினர். அடிமைமுறை ஒழிந்தவுடன் சர்ச்கள் போன்ற இடங்களுக்கு சரளமாக செல்லத் தொடங்கினர்.அங்கு ஏற்கனவே இருந்த காஸ்பல் இசையுடன் சேர்ந்த பின்னர் நடந்த வித்தைகள் குறித்து போன பதிவில் பார்த்தோம்.அதுமட்டுமின்றி வேற பல வகைகளுக்கும் இதுதான் பிறப்பிடம். இதிலும் கிடார் தான் முக்கிய இசைக் வாத்தியம்.மிக உணர்ப்பூர்வமான இசைக்கும் தன்மை இதிலிருக்கும்.

Chicago Blues: 
         1940களில் பெருமளவில் டெல்டா பகுதியைச் சேர்ந்த ப்ளூஸ் கலைஞர்கள் சிகாகோ போன்ற பெருநகரங்கள் நோக்கி புலம் பெயர ஆரம்பித்தனர்.மட்டி வாட்டர்ஸ் கூட அதுபோல சென்றவர்தான்.அதுகாறும் தனியாக இசைத்துக் கொண்டிருந்த நிலைமாறி குழுக்கள் என்ற கட்டத்திற்கு ப்ளூஸ் நகர்ந்தது இந்த காலகட்டத்தில் தான். கிடாருடன் ட்ரம்ஸ்,பியானோ போன்ற கருவிகள் ஒன்று சேர ஆரம்பித்தன. சிகாகோ – டெக்சாஸ் – லூசியான போன்ற பகுதிகளில் இந்த வகை இசை வெகுவேகமாக வளர ஆரம்பித்தது.இதனை கூட்டாக அர்பன் ப்ளூஸ்(Urban blues) என்று அழைப்பர்.

Electric Blues:
     1950களின் மிக முக்கியமான மாற்றம் ப்ளூஸ் இசையில் நடந்தது.எலெக்ட்ரிக் இசைக் கருவிகளின் எழுச்சி.அதிலும் மிகக் குறிப்பாக எலெக்ட்ரிக் கிடாரின் வடிமைப்பில் ஏற்பட்டிருந்த அளப்பரிய மாற்றம்.ஏற்கனவே 40களின் ஆரம்பத்திலேயே எலெக்ட்ரிக் கருவிகள் வந்துவிட்டாலும் நிறைய மாறுதல் – குறிப்பாக தரத்தில், ஏற்பட்டது இந்த காலகட்டத்தில் தான். 

Rock Blues: 
           பெயரை வைத்தே ஊகிக்க முடியும்.எலெக்ட்ரிக் ப்ளூஸின் அடுத்த கட்டம் இதுதான். பல பெரிய ஆட்கள் ஸ்டீவ் ரே வான் போன்றவர்கள் இதில் விற்பன்னர்கள்.தவிர Led Zeppelin, The Rolling Stones போன்ற குழுக்களின் உந்தசக்தியாக இருந்ததும் இந்த ப்ளூஸ் தான் என்று பாத்திருக்கிறோம்..அவர்களின் ஆரம்பகால இசை ராக் ப்ளூஸ் வகையையே சாரும். இது ஐந்தும் தான் மிகமுக்கியமான ப்ளூஸ் இசை வகை.

இவைகள் தவிர, பியானோ ப்ளூஸ்(க்ளின்ட் ஈஸ்ட்வுட் ஒரு அற்புதமான பியானோ ப்ளூஸ் இசைக் கலைஞர்) – ஜம்ப் ப்ளூஸ் என்ற முக்கிய பிரிவுகளும் உள்ளன.

மொத்தமாக பார்த்தோமேயானால் பதினைந்துக்கும் மேற்பட்ட ப்ளூஸ் வகைகள் உண்டு. அணைத்து வகைகளிலும் அதன் தாளகட்டையும் வாத்தியக் கருவிகளையும் அதனை வாசிப்பு முறைகளையும் வைத்தே வேறுபடுத்துகின்றனர்.உதாரணாமாக கிடாரை அழுத்தி மீட்டினால் கன்ட்ரி ப்ளூஸ், சற்றே லாவகமாக, மீட்டும் தன்மையினை மாற்றினால் டெல்டா,பியானோவுடன் சேர்ந்து வாசிக்கும் போது பியானோ ப்ளூஸ் என்று அதனதன் தன்மையினை பொறுத்து வகைப்படுத்துகின்றனர்.ஆனால், எந்த வகை இசையாய் இருந்தாலும் அதன் தோற்றுவாய் ஒன்றே ஒன்றுதான். பொங்கிப் பிரவாகம் எடுக்கும் உணர்வுகளை கைகளின் வழியே கடத்தி கிடார் தந்திக் கம்பிகளில் பாயவிடுவது.


முக்கியமான ப்ளூஸ் ஆளுமைகள்:

ராபர்ட் ஜான்சன்(Robert Johnson):



The man who sold his soul to the devil.
மிசிசிபி டெல்டா பகுதியில், ஹைவே 61 – 49 சாலையில், இருள் அடர்ந்த ஓரிரவில் ஜான்சன் அமானுஷ்ய உருவம் ஒன்றை சந்திக்க நேரிடுகிறது.அதனை சந்திக்கவே நோக்கதிற்க்காகவே அவரங்கு சென்றது.ஜான்சன் கையில் இருந்த கிடாரை வாங்கி அந்த உருவம் சில பாடலகளை மீட்டுகிறது.திரும்ப அவர் கையில் அதனை தரும்போது இருவரின் விரல்களும் சிறிது உரசுகின்றன.அன்றிலிருந்து ஜான்சன் மிகத் திறமைவாய்ந்த ப்ளூஸ் இசைக் கலைஞராக உருவெடுக்கிறார். இந்த அளப்பரிய திறமைக்கு கைமாறாக அந்த உருவத்திடம் அவர் பண்டமாற்று செய்து கொண்டது – தன் ஆன்மாவை. ஜான்சன் பற்றிய புகழ்பெற்ற நாட்டார்  கதை இது.அவரே கூட தன் பாடல்களில் இதனைக் கூறியிருக்கிறார்.பல பேரின் உந்து சக்தியாக விளங்கியவர்.27 வயதிலேயே மரணமடைந்தவர். 

மட்டி வாட்டர்ஸ்(Muddy Waters):


இவர் இல்லாது இருந்திருந்தால், ராக் n ரோலின் துவக்கம் வெகு தாமதமாக தொடங்கியிருக்கலாம்.எலக்ட்ரிக் ப்ளூஸின் ஆரம்பகால முன்னோடி.Eric Clpaton, Led Zepplein என்று இவரைத் தன் குருவாக வரிந்தவர்கள் ஏராளம். எல்விஸ் இவரது பாடல்களை(யும்) நிறைய உருவியுள்ளார்.

ஜான் லீ ஹுக்கர் (John Lee Hooker): 

The Doors குழுவினரின் ஆஸ்தான ப்ளூஸ் கலைஞர். மின்கடத்தி போன்று இவரொரு அபாரமான உணர்வுக்கடத்தி.குரல்களின் வழியே உணர்வுகள் சிந்தாமல் சிதறாமல் வெளிப்படும்.சுண்டியிழுக்கும் கிடார் இசையும் இவரது சிறப்பம்சம்.

ஹவ்லின் வூல்ப்(Howlin Wolf): 

மிகுந்த ஆண்மைத்தனமான குரல்.சரி, அது என்ன பெயர் ஹவ்லின் வூல்ப்?. இவர் பாடலைக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.நம்பமுடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்கள் இவரது குரலில் சர்வசாதாரணமாக வெளிப்படும்.


பி.பி.கிங்(B.B.King): 


பெயருக்கு ஏற்றார் போல 50களில் இருந்து இன்றுவரை இவர் ராஜா தான்.ஆறாவது விரலாக கிடாருடன் பிறந்தாரோ என்னவோ.விரல்கள் கிடாரின் மேல் கடலலைகள் போல நின்று விளையாடும்.பல பேரின் ஆதர்சமாக இருந்துள்ளார்.இருந்து வருகிறார்.


இது, முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லுக் கூடிய சாத்தியக்கூறு இருக்கும் ஒரு வரிசை.இன்னும் குறைந்தது ஒரு இருபது பேரையாவது சொல்லலாம். Buddy Guy, T.Bone Walker, Lead Belly, Willie Dixon, Freddie King என்று போய்க்கொண்டே இருக்கும். இவர்கள் தவிர Ray Charles மாதிரியான, ப்ளூஸில் தொடங்கி R & B, Soul music பக்கம் புலம் பெயர்ந்தவர்களையும் பற்றி சொல்ல ஆரம்பித்தால் நான்கு பதிவாவது வேண்டும்.



இவர்கள் தவிர, Eric Clapton, Stevie Ray Vaughan என்று ராக் – ப்ளூஸ் வகை கலைஞர்களின் பங்கும் மகத்தானது.நிறைய அமெரிக்க வெள்ளையர்கள், ஐரோப்பியர்கள், இங்லாந்து நாட்டினர் என்று இவர்களால் ப்ளூஸின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். 

Stevie Ray Vaughan &  Eric Clapton

ப்ளுசை பொறுத்தவரை, ஆரம்ப காலகட்டங்களில் பெண் கலைஞர்களின் பங்கு அளப்பரியது.சொல்லப்போனால், இவர்கள் தான் முதன்முதலாக ப்ளூஸ் இசையை பரப்ப ஆரம்பித்தது.இதில் நிறைய பேர் சர்ச் வகை ப்ளூஸ் இசைச் சார்ந்தவர்கள்.ப்ளூஸ் – ஜாஸ் – நாட்டுப்புற இசை என்று கலந்துகட்டி இருக்கும்.இதில் குறிப்படத்தகுந்தவர்கள்,


Mamie Smith: 
“Queen of blues” என்றழைக்கப்பட்டவர். முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட - ஆப்ரிக்க-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த – ஒருவரின் குரல் இவரதுதான். 

Ma Rainey: 
அவர் க்வீன் என்றால், இவர் “Mother of the blues”. 

   இவர்களைத் தொடர்ந்து Bessie Smith, Ida cox என்று ஆரம்பித்து Etta James,Koko Taylor என்று ஒரு பெரும் படையே இவர்களைப் பின்தொடர்ந்தது. உற்சாகமூட்டும் பாடல்கள் நடன அசைவுகள் நாட்டுப்புற இசைக்குள் சரிவிகிதமாக கலக்கப்பட்ட ப்ளூஸ் என்று, ப்ளூஸில் பெண்களின் பங்கு மகத்தானது. 

---------------------------------------------------------------------------------

ஏற்கனவே சொன்னதுதான், ப்ளுஸ் –  it’s a state of mind. அது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஒன்றாக இருந்தது.நமது நாட்டுப்புற இசையில் எல்லாவற்றையும் பாடல் மூலமாக வெளிப்படுத்தியதைப் போன்றே அனைத்து வாழ்க்கைக் கூறுகளையும் இசையின் மூலமாகவே அவர்கள் வெளிப்படுத்தினர்.எத்துனை தான் வரிந்து வரிந்து பக்கம் பக்கமாக எழுதினாலும் ஒரு கிடாரின் மீட்டலுக்கு முன்பு அனைத்தும் ஒன்றுமே இல்லை.என்னைக் கேட்டால், இந்த பின்புலத் தகவல்கள் எதுவுமே தேவைப்படாது, ஒரே ஒருமுறையாவது ஒரு ப்ளூஸ் பாடலை ஒன்றிக் கேட்டுவிட்டால். ஏன் அவர்களது கிடார் கதறுகிறது என்று புரிந்துகொள்ள முயன்றாலே போதும், யாவும் விளங்கிவிடும்.



பிகுகள்:
ஜாஸ் குறித்த இந்தத் தொடரை இணையத்தில் இரண்டு வருடங்கள் முன்னாள் படித்தது. அட்டகாசமான ஒரு தொடர். மிகுந்த டெக்னிகல் அம்சங்கள் கொண்டது.அதேசமயம், படிக்க சுவாரசியமாக இருந்தது. நண்பர்கள் இதனை படித்துப் பாருங்கள்.நிச்சயமாக எனக்கு பயனுள்ளதாக இருந்தது போல உங்களுக்குமிருக்கும் என நம்புகிறேன்.
Facebookers..

4 comments :

  1. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் !!
    அதை படித்து நாங்கள் மகிழ வேண்டும் !!

    ReplyDelete
  2. திண்டுக்கலுக்கு வந்த சோதனை...... உலகப் புகழ் படவேண்டியபதிவு கமெண்ட்போடுவாரற்று கிடக்கே

    ReplyDelete
  3. இந்தப் பதிவு அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் காத்திருக்கும்

    ReplyDelete