ப்ளூஸ் இசையில் மதங்களின் தாக்கம் மிகமிக முக்கியமானது.ஆப்ரிக்க அடிமைகளின் இசையாகவே ப்ளூஸ் வளர்ந்ததினால், ஆரம்ப காலங்களில் ஆப்ரிக்க கடவுள்கள், சடங்குகள் குறித்த பல பாடல்கள் பாடப் பெற்றன.தங்களது நாட்டின் மாந்தரீக விஷயங்களையும் – உதாரணமாக: Hoodoo Magic – அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தியதோட மட்டுமல்லாமல்,பாடல்களிலும் அவற்றை வெளிப்படுத்தினர்.இதுபோன்ற விஷயங்கள் அவர்களது கிறிஸ்தவ எஜமானர்களையும் சர்ச்களையும் பெரிதும் கலக்கமுற செய்தது,மிக முக்கியமாக ஒருவிஷயத்திற்காக.உணர்வுப்பூர்வமான பழைய விஷயங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தால்,எங்கே கலகத்திற்கு அது வழிவகுத்து விடுமோ என்ற பயம் தான்.இதனை எப்படித் தடுப்பது ? பாடல்களை தடை செய்வது, தணிக்கை செய்வது,இன்ன வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது போன்றவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். நம்மவர்கள் சளைத்தவர்களா...இதுபோன்ற அடக்குமுறையால் நிகழ்ந்த நன்மை,பல குறியீடுகளான விஷயங்களை(Metaphor) பாடல்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். வார்த்தைகளை மௌனமாக்கி இசையின் மூலமாகவே எல்லாவற்றையும் வெளிப்படுத்த முயன்றனர்.ஆனாலும், மனதின் அடியாழத்தில் தேங்கியிருந்த தங்கள் நாட்டின் விஷயங்களை,ஏன் மாந்தரீகம் போன்றவற்றைக் கூட, விடாமல், தொடர்ந்து பல பாடல்களில் பாடி வந்தனர். இங்குதான் மற்றொரு முக்கிய நபர் வருகிறார், சாத்தான்.

         கிறித்தவ மதத்திற்கும் சாத்தானிற்கும் உள்ள “பகை” நாம் அனைவரும் அறிந்ததே.தவிர, சாத்தன் போன்ற ஆட்கள் ஆப்ரிக்க வரலாற்றிலும் உண்டு(எந்த மதத்தில் - நாட்டில் தான் இல்லை). அடிமையாயிருந்த ஆப்ரிகர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.சாத்தானை சபிப்பது, அதன் கொடூரங்களை சாடுவது போன்ற சாக்கில் தன் எஜாமானர்களை குத்திக் காட்ட, கேலி பேச தொடங்கினர்.

The Devil is mad & I’m glad .....
He lost the soul he thought he had........

                                                                    இந்த பாடல் வெறும் சாத்தனை மட்டுமா குறிக்கிறது? நாட்கள் செல்லச் செல்ல, இந்த சாத்தானை தங்களுது மனநிலையினை பிரதிபலிக்கவும்,பெண்களை குறிக்கவும்,உலக வாழக்கையின் அவலங்களை குறிக்கவும் பயன்படுத்தலாயினர்.இதில் இன்னொரு முக்கிய விஷயம்,கடவுள் எதிர்ப்பாளர்கள் கூட பின்னாளில் ப்ளூஸில் வரும் நாத்திக கருத்துகள் கொண்ட பாடல்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
ப்ளூஸ் இசை- ஏன் கலை சார்ந்த பல விஷயங்களை பொறுத்த வரையிலேயே ஆன்மாவை சாத்தானிற்கு விற்றேன் (Sold my soul to the devil) என்ற சொற்றொடர் மிக முக்கியமானது.9ஆம் நூற்றாண்டு முதலே இந்தப் பதம் நடைமுறையில் இருந்துள்ளது.மனிதசக்திக்கு மீறிய ஆற்றல் இருந்ததாக - எந்த துறையானாலும் – நம்பப்படும் ஆட்கள் நிறைய பேர், வயது,செல்வம்,ஏதாவது கலை நுணுக்கம போன்ற விஷயங்களில் மிதமிஞ்சிய மேதமை வேண்டி,சாத்தானிடம் தங்கள் ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அந்த நுணுக்கங்களை பெற்றுக் கொண்டனர் என்பது புராணம்(இங்கே பார்க்கவும்).

பல ஐரோப்பிய இசைக் கலைஞர்கள், இது போன்ற ஆன்மா அற்றவர்கள் என்று சொல்கின்றனர்.....அவர்களே கூட சொல்லிக் கொண்டனர்.இது குறித்து சோனட்டா இசைக் கோர்ப்புக்கள் (இங்கே கேளுங்கள்.17நிமிடம்)கூட இயற்றியுள்ளனர். இத்தாலியின் மிகப் புகழ் பெற்ற வயலினிஸ்ட் – நிக்கலோ பாகினி மற்றொரு உதாரணம். ப்ளூஸ் இசைசை பொறுத்த வரை இந்தச் சொற்றொடர்,முதல் முதலாக அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டது, Clara Smith என்பவர் 1924 ஆண்டு பாடிய பாடலான "Done, Sold My Soul To the Devil" என்பதுதான்.பின்னர், இந்தப் பதத்தை பெருமளவில் பயன்படுத்தியவர் – Robert Johnson தான்(இவரைப் பற்றி – ஆளுமை பதிவில் நிறைய பார்ப்போம்). அமெரிக்காவின் Highway 61 – 49 என்ற மிசிஸிபி மாகாணத்தில் இருக்கும் (Bob Dylanன் மிகப் புகழ்பெற்ற Highway 61 – Revisited தொகுப்பு ஞாபகம் வருகிறதா?) ஹைவே ரோட்டில் ஓர் இரவில், சாத்தானை தான் சந்தித்து, தனது ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அற்புதமான கிடார் வாசிக்கும் திறனை கைவரப்பெற்றதாக அவரே கூறிக் கொண்டார்(அவரது ஒரு பாடலை கீழே கொடுத்துள்ளேன்).
ப்ளூஸ் இசையை பொறுத்த வரை, அதனை போருக்கு(Civil War) முந்தைய – பிந்தைய என்றே அநேக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர். தவிர, முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ப்ளூஸ் பல்வேறு பரிமாணங்களை எடுத்தது. அதற்கெல்லாம் வித்திட்டது Gospel Music என்ற அழைக்கபட்ட சர்ச் பாடல்கள். அமெரிக்காவில் 18ஆம் நூற்றாண்டு முதலே ஆப்ரிகர்களுக்கென்று தனியாக சர்ச்கள் இருந்தன.நாளடைவில் தனித்தனியாக இசைத்துக் கொண்டிருந்த ப்ளூஸ் கலைஞர்கள் 19ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச்களுக்கும் சென்று இசைக்க ஆரம்பித்தனர்; மற்றவர்களுக்கு பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தனர்.மேலும், சர்ச்களுக்கென்றே தனியாக குழுக்கள் ஆரம்பித்தன.இதுபோன்ற குழுக்களில் இருந்த பல ஆட்கள்,இன்னும் குறிப்பாக பெண்கள் பின்னாளில் புகழ் பெற்ற கலைஞர்களாக அறியப்பட்டனர். B.B.King போன்ற ஆட்கள் கூட சர்ச்களில் இசைத்தவர் தான். ஆனால், இதெல்லாம் “The Black Church” என்றழைக்கபட்ட ஒரு பகுதியினர்களுக்குள்ளேயே இருந்தது. வேறு சர்ச்கள் வெகு தாமதமாகவே இவர்களை “ஏற்றுக்கொண்டனர்”

1920 - 1940: உத்வேகமான காலகட்டம்:

                       ஆரம்பத்தில், வெள்ளையர்கள் மிகுந்த அசூயையுடனே இந்த இசையை அணுகினர்.எல்லாவற்றையும் விட, கறுப்பர்களின் இசைக்கு தாங்கள் மயங்குவதை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.ஆனாலும், அவர்களால் மயங்குவதை நிறுத்தவும் முடியவில்லை.அந்த இசை போதை முழுமையாக அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியது.இன்னும் சொல்லப்போனால், இந்த இசையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல வகையிலும் அதனை ஆவணப்படுத்தவும், ஒருங்கினைப்பதிலும், பதிவு செய்வதிலும் வெள்ளையர்களே பெரும் பங்காற்றினர்.இதில் குறிப்பிடத்தகுந்தவர், ஜான் லோமக்ஸ். 30’களில் இவர்தான் பெரும் முயற்சி எடுத்து பல பாடல்களை பதிவு செய்தது.ஆனால், அதிகாரப்பூர்வமாக – உலகின் முதல் ப்ளூஸ் குறிப்புகள் அடங்கிய இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது 1912 ஆம், ஹார்ட் வான்ட் என்பவரின் “Dallas Blues” என்ற பாடல் தான். ஆம், 1912ஆம் ஆண்டு தான் ப்ளூஸ் என்ற வார்த்தையே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அதுவரை வாய்மொழியாகவே புழங்கி வந்தது.அதே ஆண்டில்,குறிப்புகளாக வெளிவந்த மற்றொரு முக்கிய பாடல், The Memphis Blues. அதன் காரணகர்த்தாவான W.C.Handyஎன்பவரே Father of blues என்றழைக்கப்படுகிறார்.

ஏற்கனவே பல இடங்களில் கூறியது போல முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டம் ப்ளூசை பொறுத்தவரை மிக முக்கியமானது, மூன்று காரணங்களுக்காக.

1. ரெகார்டிங் என்ற இசையை பதிவு செய்யும் முறை பெருமளவில் வளர ஆரம்பித்தது.

2. புதிய புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் வரவு

3. ரேடியோ நிலையங்களின் பெருக்கும், மெல்ல மெல்ல அவர்களும் இந்த இசையை ஒலிபரப்ப ஆரம்பித்தது.

 இதெல்லாம் 1920கள் 1930கள் வரை நடந்தேறியது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டிருந்தது.தொழில்துறை சார்ந்த வளர்ச்சி,ஐரோப்பாவில் வளர்ந்து வந்த புதிய கொள்கைகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகமும் வேகமாக சூழலத் தொடங்கிய காலம் அது.பல விஷயங்களில் மக்களின் மனநிலை மாறி வந்தாலும்,நிறக்கொள்கையில் சற்று மந்தமாகவே முன்னேறினர்.அதனால் இந்த வடிவத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டனர் என்ற சொல்ல முடியாது (இன்று வரையிலும் கூட). அதேசமயம் நிறைய மக்கள் – வெள்ளையர்கள் இதன்பால் பெரிதும் கவரப்பட்டனர் என்பதும் உண்மை. அதுமட்டுமின்றி, பல இசை வகைகளும் அக்காலகட்டத்தில் கிளர்த்தெழுந்தன. முக்கியமாக ஜாஸ்.  ஜாஸ் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், 30களில் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டும் –பரஸ்பர தாக்கங்களுடனும் வேகமாக வளர்ந்து வந்தது.


1940களில் ப்ளூஸ் இசை நன்றாகவே பக்குவடைந்திருந்தது. ப்ளூஸின் பெரிய பலம் – தனித்துவம் அதன் வெளிப்படைத்தன்மை. அதன் சாட்சியாக, அந்த காலகட்டத்தில் காமம் சார்ந்த பாடல்கள் பெருமளவில் வர ஆரம்பித்தன.முக்கல் முனகல்கள் நிறைந்த பாடல்கள். பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் காமம் சார்ந்த பாடல்களை அவர்களின் கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடாகக் கருதினர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்பது அவர்களது வாதம். மேலும் லெஸ்பியன் - இருபால் உறவு ஆகியவை 30களில் புகழ் பெற்றிருந்த ப்ளூஸ் ஆட்களிடம், குறிப்பாக பெண்களிடம் சகஜமாக இருந்தது. நிறைய பேர் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தனர். இதுபோன்ற விஷயங்களை, புனித அங்கிகள் தாங்கியிருந்த பல உயர்மட்ட வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியவில்லை.கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதெல்லாம் என்ன இசை என்று ஐரோப்பிய வகை சார்ந்த இசைகளையே உயர்வுபடுத்தி பேசி வந்தனர் (நம்மூர் கதை மாதிரி இல்லை ??). ஆனாலும் பல வெள்ளையர்கள் பெரிதும் இந்த வகையினால் ஈர்க்கப்பட்டனர். கற்றுக்கொள்ளவும் தொடங்கினர்.இதனால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தேறின. ஒன்று கறுப்பினர் – வெள்ளையர் இடைவெளி குறைய ஆரம்பித்தது.மற்றொன்று பல புதிய இசை வகைகள் தோன்றக் காரணமாயிருந்தது.
டிசம்பர் 22, 1849. ருஷ்யாவின் செம்னோவ்ஸ்கி ப்ளாசா. -20 செல்சியஸ் உறைகுளிர். இருபத்தியொரு பேர் - ஒருசில உள்ளாடைகளுடன் அக்குளிரில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மூம்மூன்று பேராக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.சுடத்தயாராக துப்பாக்கியை, அவர்களை நோக்கி உயர்த்தியவாரு ஜார் மன்னனின் வீரர்கள். இரண்டாவது வரிசையில் முதல் ஆளாக அந்த இருபத்தியெட்டு வயது இளைஞன் நின்றிருக்கிறான். இந்த வரிசைக்கு வந்து சேரும் முன் - அரசாங்கத்திற்கு எதிராக துரோகமிழைத்த குற்றத்திற்காக - எட்டு மாதம் தனிமைச் சிறையில் இருந்தவன். தனிமைச் சிறை – ஒலிகளில் இருந்து கூட தனிமை. ஆம். அவன் காதில் தங்களுது நடையின் ஓசைகூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கால்களில் வெல்வட் துணிகளை கட்டிக் கொண்டிருந்த வீரர்கள் நிறைந்த தனிமைச் சிறை. அதிலேயே எட்டு மாதம். மரணத்தை ஒருவிடுதலையாகக் கூடக் கருதி, அந்த வரிசையில் அவன் நின்றிருக்கலாம். எல்லாம் முடியப் போகிறது என்று நினைத்து பொழுது, இதுவொரு ஒத்திகை, அனைவரின் மரண தண்டை குறைக்கப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகிறது (ருஷ்யாவில் ஜார்களின் ஆட்சியில் இதுபோன்ற ஒத்திகை பழக்கம் நடைமுறையில் இருந்தது). ஆனாலும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இளைஞன் கடும்சூழ்நிலையில், சைபீரியாவின் சிறைச்சாலையில் நான்கு ஆண்டுகளை கழிக்க நேரிடுகிறது. பின்னாளில் இந்த அனுபவங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வெகுவாக அந்த இளைஞனை பாதிக்கிறது. அந்த இளைஞனின் பெயர் – ஃபியோதர் தஸ்தாவெஸ்கி. உலகின் ஆகச்சிறந்த எக்ஸிஸ்டென்சியலிஸ்ட்களில் ஒருவர். 

அவரை பற்றி இங்கே குறிப்பிட காரணம்? ப்ளூஸ் இசையும் ஒருவகையில் எக்ஸிஸ்டென்சியலிஸம் தான். என்னைக் கேட்டால், உலகின் முதல் ப்ளூஸ் இலக்கியவாதி – தஸ்தாவெஸ்கி. அவரது Notes from the undergorund, சற்றே நீண்டதொரு ப்ளூஸ் இசை. இந்த கருத்தை இன்னும் வலுவாக நிறுவுவதற்காகவே அவரைப் பற்றிய நீண்ட முன்னோட்டம் தேவைப்பட்டது. ப்ளூஸின் இந்த குணாதிசயத்தை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால், மிகச் சுலபமாக அதன் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும். எக்ஸிஸ்டென்சியலிஸம் + ப்ளூஸ், நேற்றுதான் எதேச்சையாக இந்த தொடர்பு தோன்றியது.இணையத்தில் இதுபோன்ற தொடர்புபடுத்துதல் இருக்கின்றனவா என்று தேடிய போது, Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism என்றிருந்ததை பார்த்த போது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். கீழ்க்கண்ட விளக்கம், ப்ளூஸ் பற்றிய ஒரு மிகச் சிறந்த விளக்கமாக எனக்குப்படுகிறது. 

The blues is an impulse to keep the painful details and episodes of a brutal experience alive in one's aching consciousness, to finger its jagged grain, and to transcend it, not by the consolation of philosophy but by squeezing it from a near-tragic, near-comic lyricism

ஏற்கனவே குறிபிட்டிருந்தது போல, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அமெரிக்காவிற்குள் ஆப்ரிக்க மக்கள் அடிமைகளாக வர ஆரம்பித்தனர்.அந்த காலகட்டத்தில் நாட்டுப்புற இசையின் வடிவமாகவே ப்ளூஸ் இருந்து வந்துள்ளது. ஆப்ரிக்கர்களின் அசரவைக்கும் தாளம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்.அவ்வகையான இசையினை ஓய்வு நேரங்களில் மனநெருக்கடிகளில் இருந்து விடுபடவும் தளர்ந்து விடாமல் இருக்கவும் இசைத்து வந்தனர். கையில் கிடைதவைகளை வைத்து கருவிகளை உண்டாக்கினர். மிகமுக்கியமாக விதவிதமான drumகள். அதோட ஏற்கனவே தங்கள் நாட்டில் உபயோகித்து வந்த ஒற்றை – இரட்டை நரம்பு கொண்ட - கிடார் போன்ற கருவிகளையும், சற்றே பெரிய புல்லாங்குழல் போன்ற கருவிகளையும் உபயோகிக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அந்த கூட்டத்தினருக்கென்றே ஒரு தனிவகையான இசை கருக்கொள்ள ஆரம்பித்தது. தங்களுக்கு தோன்றியவைகளை – பெரும்பாலும் வாழ்க்கை முறையினை பற்றியவைகளாகவே இருக்கும் - பாட ஆரம்பித்தனர். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்


சட்டென்று ஒரு பொறி தட்டுமே...கிட்டத்தட்ட நமது கிராமிய இசையினை போல இல்லை ? இவர்களின் உடைகளை மட்டும் மாத்தி போட்டு கற்பனை செய்து பாருங்கள்.நமது நாட்டுபற இசையின் பல கூறுகள் இதிலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.நமது இசையுடன் ஒப்பிட்டால், ப்ளூஸ் மிக இளைமையானதுதான் தான். ஆனாலும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது(யாராவது தெளிவுபடுத்தினால் நலம்). ப்ளூஸும் பெருமளவு வாய்மொழியாகவே வளர்ந்தது.தாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். மிக முக்கியாமாக வாழ்வியல் சார்ந்த விஷயங்களே மிகப் பெரும்பான்மையான பாடல்களில் வெளிப்படும்.எசப்பாட்டு என்று நாம் சொல்கிறோம் அல்லவா.....ப்ளூஸ் கூட ஆரம்பகாலங்களில் இதுபோன்ற அமைப்பினைக் கொண்டிருந்தது. Call & Response – அதாவது, சுரங்கங்களிலோ வயல்வெளிகளிலோ வேறு கடும் வேலைகளிலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு வரியைப் பாடினால், ஒரு கூட்டமே எதிர்ப்பாட்டு பாடும் (இதை எசப்பாட்டு என்றழைப்பது சரியா என்று தெரியவில்லை). இந்த அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும்.ஏனென்றால் பின்னாளில் குரல்களுக்குப் பதில் இசைக் கருவிகள் "எசப்பாட்டு" பாட ஆரம்பித்தது.

   

இதுபோல மிகச் சீராகவும் பல புதிய கருவிகளின் துணையுடன் நாட்டுபுறத்தன்மையே மேலோங்கியிருந்த இந்த இசை வளர ஆரம்பித்தது. 

1861: சிவில் வார்: 

Civil War-அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகளவிலேயே மிக முக்கியமானதொரு நிகழ்வு. சிவில் வாரின் அடிநாதமே இந்த அடிமை முறைக்கு எதிரான போக்குதான். 1861 ஆம் ஆண்டு, கருப்பின மக்களிடையே ஒருவித எழுச்சி காணப்படுகிறது.இந்நிலையில் தான் தேர்தல் வேறு வருகின்றது. லிங்கன் ஜனாதிபதியாகிறார்.எல்லாம் சேர்ந்து – இன்னும் பல காரணிகளை வேறு கூறுகின்றனர் – 1861 முதல் 1865 வரை கடும் போர் நிகழக் காரணமாகின்றது. 10,30,000 பேரைக் காவு கொண்ட (மூன்றில் இரண்டு பங்கினர் நோயினாலேயே இறந்தனர். சிவில் போர் ஒரு மாபெரும் கொடுங்கதை. தனியாக பக்கம் பக்கமாகவே எழுதலாம்) இந்தப் போர் 1865 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.அமெரிக்க கருப்பின மக்கள் இனி சுதந்திரமானவர்கள் என்று லிங்கன் அறிவித்தார். கிட்டத்தட்ட 4 மில்லியன் கருப்பின மக்கள் அந்த சமயத்தில் அடிமைகளாக அமெரிக்காவில் இருந்ததுக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அதே ஆண்டு, லிங்கன் ஜான் வில்கீஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டது, நாம் அனைவரும் அறிந்ததே. சரியாக சொல்ல வேண்டுமானால் 1867ல், உலகின் முதல் ஆப்ரிக்க – அமெரிக்க பாடல்களைக் கொண்ட தொகுப்பான Slave Songs of the United States என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதுவொரு மிக முக்கியமானதொரு நிகழ்வு. கன்ட்ரி ப்ளூஸ்(Country Blues) இசை, முறையாக ஆவணப்படுத்தப்பட்டது அன்று முதல்தான் என்று சொல்லலாம். மற்றொரு முக்கிய விஷயம், அதுவரைக்கும் நாட்டுப்புற இசைக்கும் ப்ளூஸ் இசைக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருந்தது.சிவில் வார்க்கு பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக முன்-1900களில் பல புதிய முறை இதில் புகுந்து கன்ட்ரி ப்ளூஸ் என்ற வடிவத்தை அடைந்தது(வகைகளைப் பற்றி பின்னர் தனிப் பதிவில் பார்க்கலாம்). முதல் முறையாக கறுப்பினத்தவர்களின் பாடல்களும் இசையும் பதிவு செய்யப்படலாயின. ஆனால் மறுபடியும் வேற வகையான தீண்டாமைமுறை உட்புகுத்தப்படுகிறது. ஜிம் க்ரோ லா’ஸ்(Jim Crow law’s). அதன் மூன்று முக்கிய சட்டங்கள்: 

 1. பொது இடங்களில்,பள்ளிகளில் என்று அனைத்து பொது வெளிகளிலும் ஆப்ரிகர்களுக்கு, மெக்சிகர்களுக்கு இன்ன பிற “நிற”த்தவர்களுக்கு தனி இடம் 

 2. ஆப்ரிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது 

3. கலப்பின, திருமணம் – உறவு ரெண்டும் நிச்சயமாகக் கூடாது. இந்த சட்டம் நமக்கு ஒன்று புதிதில்லை தானே.தென்னாப்ரிக்காவில் கூட ஒருஆள் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டது ஒரு ஓரத்தில் ஞாபகம் வருகிறதல்லவா.ஆக, அமெரிக்கர்களும் தீண்டாமைதாசர்கள் தான் – ஒரு காலத்தில்(?). இந்த சட்டம் வெவ்வேறு வடிவில் 1960கள் வரை நடைமுறையில் இருந்தது. ரோசா பார்க்ஸ் – பேருந்து நிகழ்ச்சி, மார்டின் லூதர் கிங், மால்கம் X, குடியுரிமை இயக்கம் எல்லாம் அதன் நீட்சிகளே.

முதலாம் உலகப் போர் & The Great Migration: இதுபோன்ற சட்டங்கள் சமூகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும் பிற நாட்டினர் அதிகளவில் அமெரிக்காவிற்கு குடியேற ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான், 1900களில்.ஏற்கனவே உள்ள குழப்பம் போதாமல் புதிதாக வந்தவர்கள் வேறு. ஆப்ரிகர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை பெருக ஆரம்பித்தது.வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க, மெதுவாக அமெரிக்காவின் தென் மாகாணங்களில் இருந்து மக்கள் புலம் பெயரத் தொடங்குகின்றனர். 

இதற்கிடையில் முதல் உலகப் போரும் வந்து சேர, கடும் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்து கொள்கின்றது.1910 – 1930 வரை ஆறு மில்லியன் மக்கள் - அதில் 99% சதவீதம் கறுப்பின மக்கள், புலம் பெயர்ந்தாக சொல்கின்றனர். தென் பகுதிகள் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்க, வடக்கே இருந்த சிகாகோ, நியு யார்க், டெட்ராய்ட் போன்ற நகரங்கள் பெரு நகரங்களாக உருவெடுத்திருந்தன. ஆனால் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அமெரிக்கர்களே - (கார்லியோனியும் ஐரோப்பியர் தானே...)  

இந்நிலையில் ஏற்கனவே கூறியதைப் போல புதிதாக பல்வேறு நாட்டினரும், உதாரணமாக ஐரிஷ், உள்ளே வர அதுவே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின்றது.தக்கன பிழைக்கும் – வலியதே வாழும். இந்த போராட்டம் தான். அதுகாறும் தங்கள் ஊரில் கிராமப்புறம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், நகர சூழ்நிலைக்கு தக்கவாறு தொழிற்சாலைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நகரச் சூழல் பல வாழ்வியல் சார்ந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உணவு – உடை – இசை என்று அவர்கள் நகரங்களின், ஐரோப்பியர்களின் கூறுகளையும் உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். ப்ளூஸ் இசையை பொறுத்த வரை – மிக முக்கிய மாற்றம் - அசரடிக்கும், சுண்டியிழுக்கும், நம்மை எல்லாம் கண்டபடி கிறங்கடிக்கும் எலெக்ட்ரிக் கிடாரின் வரவு.