1. Outdoor Excursion: Spring 1999
சில விஷயங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஆறு – பாலம் – அதில் கடக்கும் ரயில், இது போல. அதுபோன்று ஒரு சூழல். சற்றே நடுத்தர வயதான ஆட்கள், ஒரு 10-15 பேர் அங்கே குழுமியிருக்கின்றனர். இருபது வருடங்களுக்கு முன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி. அனைவரும் உற்சாகமாக பாடிக் கொண்டும் பழைய கதைகளை பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று எங்கிருந்தோ புதிதாக ஒரு ஆள், கோட் சூட்டுடன் வருகிறான். முதலில் அவனை யார் என்று தெரியாதவர்கள், பின்னர் அவன்தான் ஓங்கோ என்று கண்டுகொள்கின்றனர். அவனும் பழைய மாணவன் தான்.ஆனால் அவனை யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.அதற்காக அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவனிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போகின்றது – ஓங்கோ பாட ஆரம்பிக்கும் வரை.ஒருமாதிரியான பிறழ்ந்த மனநிலையியே அவன் இருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. திடீரென்று வெறி கொண்டு ஆற்றில் இறங்கி அக்கரையினை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். பாலத்தில் மீது ஏறி தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு கண்டபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத நண்பர்கள், தூரத்தில் ஒரு ரயில் வர ஆரம்பித்தவுடன் பதட்டமடைகின்றனர்.அவனை இறங்கச் சொல்லி கூக்குரலிடுகின்றனர்.அதனை எல்லாம் கேக்கும் மனநிலையிலே யே அவன் இல்லை.ஆனால் எதிர்பாராவிதமாக ரயில் அடுத்த தண்டவாளத்தில் கடந்து போகின்றது. தெரிந்துதான் விளையாடுகின்றான் போல என்று நண்பர்கள் சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். இருந்தாலும் அவன் கீழே இறங்கி வருவதாய் இல்லை. கொஞ்சநேரத்தில் அவன் நின்றிருக்கும் தண்டவாளத்திலேயே ரயில் வருகின்றது. அனைவரும் திடுக்கிட்டு பயங்கரமாக கூச்சலிடுகின்றனர்.அவன் வேறொரு உலகில் இருக்கும் போது எப்படி இதெல்லாம் கேக்கும்.ரயில் மிகக்கிட்ட வருகிறது. ரொம்பவும் அசுவாரசியமாக ரயிலை நோக்கி திரும்புகிறான். மிகுந்த உக்கிரமான மனநிலையில் இருக்கிறான்.ரயில் மிகவும் அருகே வந்துவிட்டது. தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொண்டு "I m going back" என்று ரயிலை நோக்கிக் கத்துகிறான்.

திரை ஸ்தம்பிக்கிறது
ஆரம்பிக்கிறது.....ஓட.....பின்னோக்கி....அப்படியே.....ரயில்.....

ஏன் அவன் தற்கொலை முடிவுக்குச் சென்றான்(அவன் இறந்தானா என்பது குறித்து எதுவும் காட்டப்படவில்லை), யாருமே அவனை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் எப்படி அங்கு வந்தான், நண்பர்கள் அவனிடம் பேசுவதை வைத்துப்பார்க்கும் போது, ஒரு சாதாரணமான மாணவன்-நண்பனாக இருந்தவன் ஏன் இந்த நிலைக்கு ஆளானான் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆறு பகுதிகளில் விடை தெரிய வருகிறது.

ஓங்கோ – என்ற ஒரு 19-20 வயது மாணவனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் கால ஓட்டத்தில் சீரழிகின்றது என்பதே படத்தின் அடிநாதம். அப்பொழுதுதான் முதல் காதல் அரும்ப தொடங்கியிருந்த காலகட்டம்(அதுதான் படத்தின் கடைசிப் பகுதியான Picnic: Fall 1979). ஒரு புகைப்படக்கலைஞனாக ஆவதே லட்சியம் என்று அலைந்து கொண்டிருப்பவன் சுகிம் என்ற மாணவியை அப்பொழுதான் சந்திக்கிறான். சிறிதுனாட்களுக்குள் ராணுவ நடவடிக்கைகளில், சக நாட்டுக்காரர்கள் போல -அவனும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தபடுகிறான்.பல கொடூரமான மனத்தாக்குதல்களை அவன் அதன்மூலம் சந்திக்க நேரிடுகிறது. உக்கிரமான மனநிலையில் அதற்குப் பிறகு அவன் நடந்து கொள்ள அந்த காலகட்டமே காரணமாகிப் போகின்றது. பாதியிலே அவன் ராணுவத்தில் இருந்து விடுபட்டாலும்கூட, மிகுந்த மனபாதிப்புகளுக்கு உள்ளாகின்றான்.அது உடனே வெளியே தெரியாவிட்டாலும் கூட நாளடைவில் மூர்க்த்தனம் சிறுகச்சிறுக கசிய ஆரம்பிக்கின்றது.


பின்பு போலீஸ் வேலை – கம்யூனிச கொள்கை கொண்ட மாணவர்கள் - சொந்தமாக தொழில் – வேண்டாவெறுப்பாக காதலித்து, கடனுக்கே என்று மணந்து கொண்ட மனைவி – அவளுக்கு இருக்கும் வேறொரு தொடர்பு – வியாபாரத்தில் ஏமாற்றிய நண்பன் – முதல் காதலியின் கணவன் என்று அவனது வாழ்கையே படத்தின் மீதி ஆறு பகுதிகள்

2. The Camera: Three days ago: Spring  1999
3. Life is beautiful: Summer  1994
4. Confession: Spring  1987
5. Prayer: Fall  1984
6. Military Visit: May  1980
7. Picnic: Fall  1979

மேற்கொண்டு ஆறு பகுதிகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த ஆறு பகுதிகளில் என்ன விஷேசம் என்றால், அனைத்துமே தனித்தனியான ஒரு சிறுகதைபோலவே இருந்தது. ஓங்கோ – என்ற மனிதனின் வரலாற்றை காலம் கச்சிதமாக ஆறு பகுதிகளாக கிழித்தெறிந்து அதனை ஒருவர் படமாக இயக்கி இருந்தால், அது இப்படமாகத் தான் இருந்திருக்கும்.கிழித்தெறியப்பட்ட அந்த வரலாற்றை எழுதியது கொரியா. ஏனென்றால் கொரியாவின் ராணுவ ஆட்சி – மாணவர் புரட்சி – பொருளாதார வீழ்ச்சி போன்ற 1980 - 2000 வரையிலான கொரியாவின் மிக முக்கிய நிகழ்வுகள் தான் ஓங்கோவை ஒருவகையில் பாதிக்கின்றது. முக்கியமாக, கட்டாய ராணுவ சேவை. விடாது துரத்தும் கொடுங்கனவு போல அந்நிகழ்ச்சிகளே அவனை உள்ளிருந்து எதையோ நோக்கி தொடர்ச்சியாக தள்ளிக்கொண்டே இருக்கின்றது. மேலும் சரியான இளமைப்பருவம் கிடைக்காமால் போவதைவிட – இளமைப்பருவம் மறுக்கப்படுவதே மிகக் கொடுமையானது. குறிப்பாக, ராணுவ ஆட்சிகள் நிறைந்த நாடுகளைச் சொல்லலாம். மாபெரும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதியாகவே ஓங்கோவை பார்க்க வேண்டியுள்ளது.

படத்தின் கடைசிப் பகுதியில் – ஆரம்பத்தில் வரும் அதேமாதிரியான பிக்னிக், அதே மாணவர்கள், அதே இடம், அதே ஓங்கோ. ஆனால், அனைவரும் இருபது வயதில். மிகவும் வெகுளினயான ஓங்கோ, சுகிம் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். அதன் பின்பு வரும் ஐந்து நிமிடக் காட்சிகள்.............புதிர் நிறைந்த ஒரு கவிதை.அதிலொரு சின்ன விஷயம் உண்டு.நான் சொல்ல விரும்பவில்லை. பார்த்துவிட்டு(?) நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்.டைரக்டர் – லீ சாங் டாங். இவரது மற்ற படங்களும் இதே போன்று வீரியத்துடனே இருப்பதாக இணையத்தில் அவரைப் பற்றி படிக்கும் போது தெரிகிறது.  இதில் ஓங்கோவாக வரும் சொல் யுங் கு பற்றி என்ன சொல்ல. 20 வருடமாக அலைபாயும் ஒருவனது வாழ்கையை இவரளவிற்க்கு வேறு யாரும் காட்டமாக திரையில் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று தெரியவில்லை. 

படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், ஓங்கோ – ரயில் – பெப்பர்மின்ட் கேண்டி. ரயில் - அனைத்து பகுதியிலுமே, முக்கிய காட்சிகளை - இரவில் நிலவை சுமந்து ஓடும் ஆற்றினைப் போல, எங்கோ எடுத்துச் செல்கின்றது. சற்றே வித்தியாசமாக பின்னோக்கி. படம் குறித்து எவ்வளவோ சொல்ல ஆசை இருந்தாலும்......வேண்டாம்....நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஹெர்சாக் – டார் – கோடார்ட் போன்றவர்களின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். ஆனால், அது எல்லாவற்றையும் விட இந்தப் படம், பார்க்கும் போதே ரொம்பவும் பாதித்துவிட்டது. Emotionally intense. பார்க்காமல் விட்டீர்கள் என்றால் பெரிய இழப்பு
When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart 
 - Bela Tarr

கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இந்தப் படம் அதையே எனக்கு ஞாபகப்படுத்தியது.


ஹங்கேரியன் ஒரு சிறிய ஊர்.பனியும் காரணமே தெரியாத பீதியும் சேர்ந்தே படர்ந்திருக்கும் ஊர். யானுஸ் வலுஸ்கா என்ற பேப்பர் போடும் ஆள்.பேப்பர் போடுவதைத் தவிர ஊரின் முக்கிய பிரமுகரான கியோர்கி எஸ்டர் என்பவர்க்கு பணிவிடை செய்யும் வேலையையும் செய்து வருகிறான். கியோர்கி Andreas Werckmeister என்ற ஹங்கேரியின் இசை கோட்பாட்டாளரின் இசை குறித்தான ஆராய்ச்சி செய்து வருகிறார். Werckmeisterன் ஹார்மனியானது இயற்கையின் முழுமையான ஒலி அளவை எட்டவில்லை, வெளிக்கொனரவில்லை. அதனடிப்படையில் அமைந்த அவரின் அனைத்து இசைக் கோர்ப்புகளுமே தவறு என்பதாகப் போகிறது அவரது ஆராய்ச்சி. கியோர்கி மனைவி அவரைப் பிரிந்து அவ்வூரின் முக்கிய போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வருகிறார். புரட்சி இயக்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு இயக்கத்தின் முக்கியமான ஆளும் கூட.


வழமை போல மிகுந்த அசுவாரசியமாக நாட்கள் நகர்கிறது. ஒருநாள் இரவில் நீண்ட நிழல்களை படரவிட்டபடி மிகப்பெரிய ராட்சஸ வண்டி ஒன்று ஊருக்குள் வருகிறது. புகழ் பெற்ற – உலகின் மிகப்பெரிய திமிங்கலமும் ப்ரின்ஸ் என்ற ஆளும் இன்னபிற விசித்திர ஜந்துக்கள் கொண்ட சர்க்கஸ் வண்டிதான் அது. திமிங்கலமும் ப்ரின்ஸும் எந்த ஊருக்கெல்லாம் இதுவரை சென்றிருந்தார்களோ அவ்விடங்கள் எல்லாம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.அதனால் சர்க்கஸ் வண்டி வந்தவுடன் மொத்த ஊரின் கலக்கமும் பலமடங்கு உயர்கிறது. ஆளாளுக்கு அதைபற்றி மட்டுமே பேசுகின்றனர்.வலுஷ்கா எங்கு சென்றாலும் யாவரும் இதைபற்றியே பேசிக்கொண்டிருப்பதும் இவனிடமும் அதைபற்றியே கேட்பதும் வாடிக்கையாகிப்போனது.


இதெல்லாம் கேட்டுக் கேட்டு வலுஷ்கா அத்திமிங்கலத்தின் பால் கடுமையாக ஈர்க்கப்படுகிறான். சர்க்கஸ் திறந்த முதல்நாளே முதல் ஆளாக திமிங்கலத்தை மிகுந்த ஆசையுடனும் ஒருவிதமான பரவசத்துடனும் காண்கிறான்.வார்த்தைகளே இல்லாத மொழியில் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.பெரும் தாக்கத்துடன் வெளியே வருகிறான்.ஆனால் ப்ரின்ஸ் மட்டும் யாருக்கும் வெளியே காமிக்கப்படவில்லை.

இந்நிலையில், கியோர்கியின் மனைவி தங்களது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கண்ணியாமாக மிரட்டல் விடுக்கிறார்.எப்படி ? தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மறுபடியும் கியோர்கியுடன் சேர்ந்து வாழ அவர் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று.அதிலேயே அவர் அரண்டு போய் அவர்களது நிர்பந்தத்திற்கு அடிபணிகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட வலுஷ்காவின் நினைவில் திமிங்கலம் தன் நீச்சலை ஜோராக அடித்துக் கொண்டிருக்கிறது.கியோர்கியிடமும் கடவுளின் எத்தகைய உயர்ந்த படைப்பு என்ற ரீதியில் அடிக்கடி சிலாகித்து பேசி வருகிறான்.


வலுஷ்கா மறுபடியும் திருட்டுத்தனமாக திமிங்கலத்தை பார்க்கச் செல்கிறான்.அந்த வண்டி ஊரின் முக்கிய சந்திப்பில் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.குளிரடைந்த அந்த இரவில் பலபேர் அங்கு குழுமியிருந்தனர்.ஒருவகையான மூர்க்கத்தனம் ஏறிய மனநிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களுக்கிடையே நழுவிச்சென்று திமிங்கலத்தைக் காண்கிறான்.இம்முறை, ப்ரின்ஸ்சை பார்க்க முடியாவிட்டாலும், தன் முதலாளியுடன் ப்ரின்ஸ் ஒரு சிறிய கூண்டினுள் இருந்துகொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளனின் உதவியுடன் தனக்கு இங்கிருந்து விடுதலை வேண்டும் - மக்கள் அனைவரும் என் பின்னாள் அணி திரள்வார்கள் - இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அடியோடு மாற்றப் போகும் புரட்சி நடக்கப்போகிறது என்று உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான்.என்னமோ ஒருவகையான ஆபத்து ஊரைத் தாக்கப்போவதாக அனைவரும் நினைத்தார்களே.........அது இதுதானோ.....

பெரும் கலக்கமுற்றவனாக ஓடத் துவங்குகிறான். இருளைக் கிழித்துக் கொண்டு தீ ஜுவாலைகள் எரிய ஆரம்பிக்கின்றன.ஒவ்வொரு ஆளாக ஒன்றுகூடுகின்றனர். ப்ரின்ஸ் அவர்களுக்கு இடையே இருக்கிறானா ? தெரியவில்லை.கூட்டம் மெல்ல நடைபோட ஆரம்பிக்கிறது.வேகம் அதிகமாகிறது.இன்னும் கொஞ்சம் வேகமாக.இன்னும் கொஞ்சம் வேகமாக. இப்போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே நடக்கிறோம். அதோ , ஆதரவற்றவர்களுக்கான மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.மிகுந்த கட்டுக்கோப்புடன் – கட்டிலில் இருக்கும் நோயாளிகளை முதியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.கண்ணில்படும் அனைத்து பொருட்களையும் – மருத்துவ உபகரணங்கள் உட்பட, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.இதை அனைத்தையும் ஒளிந்திருந்து யானுஸ் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அறையாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.அப்படி நுழைந்த ஒரு அறையில் குளியலறை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கிறது. ஆவேசத்துடன் அதை கிழித்து எரிகிறார்கள்..........அங்கே..................இதை கண்ட மொத்த கூட்டமும் அப்படியே திரும்பிச் செல்கின்றனர். ஒருவேளை மனித வாழ்கை அவ்வளவுதான் என்று உணர்ந்தவர்கள் கொண்டார்களா.

வலுஷ்கா மிகுந்த மன அழுத்தத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.தூங்காமல் இரவை ஒரு நொறுக்கப்பட்ட கட்டிடத்தில் கழித்த பின், அதிகாலையில் அங்கிருந்து வெளியேறுகிறான்.பெரிதும் கலங்கிய மனநிலையில் ஒரு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்குகிறான்.திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.

ஒரு மனநல மருத்துவமனையில் வலுஷ்கா அமர்ந்திருக்கிறான்.அருகில் கியோர்கி.அவனிடம் அளவளாவி விட்டு வெளியே வருகிறார். சதுக்கத்தை கடக்கும் போது அங்கு இதுவரை வலுஷ்கா வற்புறுத்தியும் பார்க்காத – திமிங்கலம் தனியாக உருக்குலைந்து கிடக்கிறது.விவரிக்கமுடியாத துக்கத்துடன் அதை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.


நானும் பல்வேறு நாடுகளின் சினிமாக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.ஆனால், இந்த அளவுக்கு என்னை ஒளிப்பதிவு தாக்கிய படங்கள் ரொம்ப குறைவு. ஊழிப்பெருவெள்ளம் மாதிரியான அப்படியே மொத்தமாக மூழ்கடிக்கும் வகையான ஒளிப்பதிவு இல்லை.சிறுகச்சிறுக அப்படியே உள்ளிழுத்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட பார் காட்சி ஆகட்டும், அந்த திமிங்கலம் ஊருக்குள் வரும் காட்சியாகட்டும், அந்த மாபெரும் கூட்டம் முன்னேறும் காட்சி ஆகட்டும் உண்மையாகவே அவைகளையெல்லாம் பார்த்தால் தான் நான் சொல்ல வருவது புரியும்.

கதாபாத்திரங்களின் நிழலுக்கு உயிர்வந்து கையில் கேமேராவுடன் நடமாடி இருக்கும் போல.அத்தனை நெருக்கம் + தாக்கம்.வீடு சம்பந்தமான காட்சிகளில், அழையா விருந்தாளி போல கேமெரா - கதாபாத்திரங்கள் வரும் முன்னரே வீட்டினுள்ளே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு படம் பிடித்ததைப் போல தோன்றுகின்றன.

படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.கதாபாத்திரங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாமும் அப்படத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக உள்ளிழுக்கப்படுவதாக எனக்குப்படுகிறது.கருப்பு & வெள்ளை படங்கள் என்றாலே தானாகவே ஒரு ஆழம் படத்தில் குடிகொண்டுவிடும்.அதையும் தாண்டி இவர் வைத்திருக்கும் கோணங்கள்...........

அடிக்கடி வலுஷ்கா கடவுள் குறித்து பேசுவதால், அந்த திமிங்கலத்தை கடவுள் சார்ந்த குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா................இல்லை....ஹங்கேரி ஆரம்பகாலத்தில் கடுமையான கம்யூனிசத்தின் பிடியில் இருந்தது.அந்த காலகட்டத்தில் நிலவிய அசாத்திய சூழ்நிலைகளை குறிக்கிறதா..............................கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயமாக்கலால் பல்வேறு தொழில் சிதைவுகள் ஹங்கேரியில் நிகழ்ந்துள்ளதே(அங்கு மட்டும் தானா)........அந்த காப்டலிசம் குறித்தான பார்வையா............அல்லது கியோர்கி செய்து வரும் ஆராய்ச்சி - பேதம் இருப்பதாக அவர் கருதும் இசையமைப்பு போல – சமன்குழைந்த அவ்வூர் மக்களின் வாழ்வு குறித்தானதாகவும் இருக்கலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாமலே கூட அதன் இயக்குனர் கையாண்டிருக்கலாம். அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து இவை எல்லாம் வேறுபடலாம். மேலே குறிப்பிட்டிருக்கும் டாரின் மேற்கோளை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன். (இந்த தகவல்கள், கோணங்கள் எல்லாம் பிறகு நெட்டில் தேடியபோது புலப்பட்டவைகள்).

எனக்கு இந்த படத்தின் முடிவில் அந்த திடுக்கிடும் காட்சி, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடை ஞாபகப்படுத்தியது.அப்படிப் பார்த்தால் இந்தப் படம் நம் நாட்டிற்கே பல சமயங்களில் பொருந்தும். மேற்குறிய அதே மதம் – இசங்கள் காரணமாகவே.


பெல்லா டார் (Bela Tarr) – சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர். 16வயது வரை ஒரு தத்துவவாதியாக ஆவதயே லட்சியமாக் கொண்டிருந்தவர் 17 வயதில் திடீரென்று சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இதில் இறங்கினார்.அவரைப்பற்றி கொஞ்சமே கேள்விப்பட்டுள்ளேன்.தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் டர்கொவ்ஸ்கி ஆகட்டும் பெல்லா டார் ஆகட்டும், தங்களின் படங்களில் குறியீடுகளை எல்லாம் வேண்டுமென்றே வைப்பதில்லை என்று மறுத்தவர்கள்.மேலும் டார் – ஹெர்சாக் போன்றவர்கள் ஸ்டோரி போர்டு சமாச்சாரத்தை நம்பாதவர்கள்.கேமரா...என்ன சொல்ல. Master of long takes என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் வெறும் காட்சியின் அழகியலுக்காக கேமெரா கோணங்களையும் நீண்ட காட்சிகளையும் இவர் வைப்பதாகத் தெரியவில்லை.


இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). இன்னொரு முக்கியமான விஷயம், இவருக்கும் ஹங்கேரியின் எழுத்தாளரான Lazlo Krasznarhokai உள்ள நட்பு.அவரது பல நாவல்களையே – இந்தப் படம் உட்பட – டார் படமாக்கி உள்ளார்.அப்படியே நாவலை தழுவி எடுக்காமல், ஒவ்வொரு முறையும் எழுத்தாளருடன் அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பாருங்கள்.ஆண்டுக்கணக்கில் நீண்ட காட்சியமைப்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் திட்டமிட்டு................அபாரம் போங்கள். அவரது மிக முக்கியமான திரைப்படம் Satango (Satan + Tango).கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஓடும் திரைப்படும் அது.ஏழரை மணிநேரமாக இருந்தாலும் கூட பார்வையாளர்களை மொத்தமாகத் தன்வயப்படுத்திய படம் என்று தெரிகிறது.
இனி அவரது மற்ற படங்களி தேடிப்பிடித்து பார்ப்பதுதான் என் வேலை.நேற்று இந்த படத்தைப் பார்த்து முடித்த கையோடு மற்றொரு படத்தை தரவிறக்கி விட்டேன்.மற்றவைகளும் இனி பார்க்க வேண்டும்.
 1. Family Nest (1977)
 2. The Outsider (1981)
 3. The Prefab People (1982)
 4. Autumn Almanac (1985)
 5. Damnation (1988)
 6. Satan's Tango (1994)
 7. Werckmeister Harmonies (2000)
 8. The Man from London (2007)
 9. The Turin Horse (2011)

படத்தை இங்கே தரவிறக்கலாம்:
நா அப்ப எட்டாப்பு படிச்சுகிட்டு இருந்தேன். படிச்ச ஸ்கூல் – எம்.எஸ்.பி, திண்டுக்கல். 6 – 12 வரை அங்கதான் படிச்சேன். ஒருகாலத்துல தொடர்ந்து வருஷாவருஷம் ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்கள உருவாக்கிகிட்டு இருந்த ஸ்கூல்.நாங்கெல்லாம் சேர்ந்த பெறகு எப்புடி உருப்புடும் ? இப்பலாம் கழுத தேய்ஞ்சு கட்டெறும்பான கததான். எங்க வுட்டேன், ஆங்....எட்டாப்பு. சுப்பிரமணியன்னு ஒரு வாத்தியார் இருந்தார்.ரொம்ப அருமையான வாத்தியார்.ஏன் அருமைனா, பாடம் நடுத்துவத தவிர, நெறைய விசயங்கள மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவுரு வீட்டில பழைய Mad, National Geographic இதழ்கள் எல்லாம் நெறைய இருக்கும்.அப்ப இருந்துதான் அந்த புத்தகங்கள் தெரிய வந்தது.அவுரு யாரையும் டியுஷன் வாங்கன்னு கூப்பிடாட்டியும் கூட வம்படியா போய் சேர்ந்தோம்.அவுரு பாடங்களை தவிர, பிற வாத்தியார்களின் பாடங்களையும் கஷ்டமாயிருக்குனு சொன்னா, அதையும் சேத்து நடத்துவார்.

ஒருதடவ இந்த தூதரகங்கள்(Embassy) பத்தி பேச்சு வந்துச்சு.அப்ப, அவர் எங்ககிட்ட நீங்க ஏதாவது தூதரகங்களுக்கு – உங்க நாட்டை பத்தி தெரிஞ்சுக்க விரும்புறோம்,அதுனால உங்க நாட்டை பத்தி எதுனா புக் அனுப்புங்க – அப்புடின்னு லெட்டர் போட்டா அவுங்க ஒரு புக் மாதிரி அனுப்பி வைப்பாங்க.கூடவே சில ஸ்டாம்ப்களும் அனுப்பி வைப்பாங்கனு சொன்னார்.மொதல்ல எனக்கொன்னும் பெருசா தெரியல.ஆனா எங்க க்ளாஸ் பசங்க நாலஞ்சு பேருக்கு நோர்வே,சீனா - அப்பறம் சிலநாடுகள் ஞாபகம் இல்ல – அங்கிருந்து ரிப்ளை வர ஆரம்பிச்சது.அவ்வளவுதான்.எதித்த பாய் கடையில போஸ்ட் கவருக்கு டிமான்ட் ஏற ஆரம்பிச்சுது.நாங்க சரமாரியா லெட்டர் போட ஆரம்பிச்சோம்.வெறும் ஸ்டாம்ப்போட வுட்டோமா...உங்க நாட்டு நாணயங்கள் எப்புடி இருக்குன்னு பார்க்க விரும்புறோம், பணம் எப்படி இருக்குன்னு பாக்க விரும்புறோம்....இந்த பிட்டுகளையும் சேர்த்தே போட்டோம்.ஒருத்தர் ரெண்டு பேருக்கு ஒருசில சில்லற காசும் வந்திச்சு.பாருங்க....அப்பவே எப்புடி நேக்கா அவுங்ககிட்ட இருந்து காச கறந்தோம்னு.ஆனா, கொஞ்சநாள்ல சுதாரிச்சுட்டாங்க.அப்பறம் வெறும் புக்கும் ஸ்டாம்ப்களும் மட்டும்.

அதுக்கு முன்னாடி சிலபல ஸ்டாம்ப்கள சேத்து – அதை சேகரிப்புன்னு சொல்ல முடியாது, கோலி குண்டு, பிலிம் துண்டு மாதிரி சேத்து வெச்சது – வெச்சிருந்தேன்.இந்த தூதரக விஷயத்துக்கு அப்பறம் திடீர்னு ஸ்டாம்ப் சேகரிக்கும் வெறி ஏறிருச்சு.எங்க போனாலும் – யார பாத்தாலும் உங்ககிட்ட எதுனா வெளிநாட்டு ஸ்டாம்ப் இருக்கான்னு கேட்டு உசுர வாங்குறதே பொழப்பா போச்சு.நெறைய ஸ்டாம்ப்கள் ஆப்படவும் செஞ்சது.அப்பத்தான் நண்பர்கள் மூலம் இந்த ஸ்டாம்ப்கள சேகரிச்சு வைக்குறதுக்குனே ஒரு புக் இருக்கு, அதோட கடையில் மொத்த விலைக்கே ஒரு ஆல்பம் மாதிரி ஸ்டாம்ப்கள் விக்குறாங்கன்னு தெரிய வந்தது. அப்ப எங்கூர்லயே பெரிய புத்தக கடை சகாய பேப்பர் ஸ்டோர்ன்னு ஒரு கடைதான்.அங்க போயி அந்த ஆல்பத்தையும் ஸ்டாம்ப் ஸ்டாக் புக்கையும் வாங்கின போது இருந்த பரவசம் இன்னும் நினைவிருக்கு. அன்னைக்கு நைட்டே உக்காந்து எல்லாத்தையும் அடுக்கி அடுத்த நாள் ஸ்கூல்ல எல்லார்கிட்டயும் காமிச்சு ஒரே கலக்கல். என்ன ஒண்ணு, கடையில மொத்தமா வாங்குனதுனால ஏதோ ஒரு குறை.நாம சேகரிக்காம சுலபமா வாங்கிட்டோமேன்னு(இப்பலாம் போஸ்ட் ஆபிஸ்களிலேயே இந்த மாதிரி ஆல்பங்கள் வந்திருச்சு). அப்பறம் என்ன கொஞ்சம் கொஞ்சமா அந்த போதை உச்சத்துக்கு போயி சுருதி குறைய ஆரம்பிச்சிருச்சு.இப்பலாம் கிட்டத்தட்ட அந்த பழக்கம் உட்டே போயிருச்சு.ஸ்டாம்ப்களோட பழைய நாணயங்களும் நெறைய வெச்சிருக்கேன். பிரிட்டிஷ் நாணயங்கள் நெறைய இருக்கு.


சரி..............இந்த ஸ்டாம்ப்கள முதல்முதல்ல எங்க – எந்த நாடு வெளியிட்டிருக்கும் ? எதுனா யூகிக்க முடியுதா........ஒருவேள நீங்க இங்கிலாந்து என்று யூகிச்சிருந்தீங்கன்னா.....கரெக்ட். 1840 ஆம் ஆண்டு மே 1 – உலகின் முதல் தபால்தலையான Penny black: க்வீன் விக்டோரியாவின் உருவம் தாங்கியது இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இங்கிலாந்து வெளியிடும் அனைத்து ஸ்டாம்ப்களையும் இங்கிலாந்து ராணிதான் அப்ரூவ் செய்ய வேண்டும்.இன்னொரு முக்கிய விஷயம், இதுவரை தான் வெளியிட்ட அனைத்து ஸ்டாம்ப்களிலும் – இன்ன நாடு – என்று அச்சடிக்காத ஒரே நாடும் இங்கிலாந்துதான்.சரி....ரெண்டாவதாக ஸ்டாம்ப்பை வெளியிட்ட நாடு, ஆச்சரியமாக – பிரேசில்.

Penny Black

தபால்தலை சேகரிப்பும் தபால்தலை வெளியிடப்பட்ட கொஞ்சநாளிலேயே தொடங்கிருச்சு.அரிதான தபால்தலைகள சேகரிக்கும் போட்டியில இங்கிலாந்தில் 1890வாக்கில் கொலை கூட நடந்திருக்காம்.ரெகுலரான தபால்தலைகள் போக ஸ்பெஷலான தபால்தலைகள ஒவ்வொரு நாடும் சிலபல சமயங்களில் வெளியிடும்.யாராவது முக்கிய ஆளுமைகள பெருமைப்படுத்த, முக்கிய நிகழ்வுகளை குறிக்க, விலங்குகள் – இயற்கை சார்ந்தவைகள், அரசியல் ரீதியிலான நிகழ்வுகள், ஏதாவது சமூக விஷயத்த ப்ரோமொட் பண்ண, விளையாட்டு – அறிவியல் போன்ற ஏறக்குறைய எல்லா துறைகளுக்கும் ஸ்டாம்ப் வெளியிடுவாங்க.நாணயங்களும் அதுபோலவே.

ஸ்டாம்ப்கள், சும்மா தபால் அனுப்ப மட்டும் பயன்படுவதில்ல.ஒவ்வொரு ஸ்டாம்ப்க்கும் ஒரு வரலாறு உண்டு.எத்தனையோ முக்கிய விஷயங்கள அதன் மூலம் தெரிஞ்சுக்கலாம். அந்தகாலத்தில் இருந்த முக்கிய ஆட்கள், முக்கிய நிகழ்வுகளின் ஆவணம் தான் தபால்தலைகள். பாக்குற ஒரே வினாடில எங்கேயோ இழுத்துகிட்டு போயிரும். ஒரு தபால்தலை எத்தனை மனிதர்கள் எத்தனை நிகழ்வுகள் எத்தனை போஸ்ட் ஆபிஸ்களை பாத்திருக்கும். உணர்ச்சிகள் நிரம்பிய எத்தனை கடிதங்கள கொண்டு போய் சேர்த்திருக்கும். நீங்ககூட உங்க வீட்டில பழைய ஸ்டாம்ப் எதுனா இருந்தா எடுத்து பாருங்க.நா சொல்றது புரியும். முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேனே, அதுக்கு உதாரணமா எங்கிட்ட இருக்குற ரெண்டு ஸ்டாம்ப்களயே பாப்போம்.

மொதல்ல இது...


ஹாங்காங் – வரலாறு சற்றே குழப்பமானது. சீனாவுக்கும் பிரிட்டிஷ்க்கும் இடையேயான முதலாம் ஓபியம் போர்க்கு (1839–42) பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அங்கு அரசாட்சி செலுத்தியது.ஒருவழியா 1997ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு தன்னாட்சி கெடச்சு சீனாவின் முதல் சிறப்பு நிர்வாகப் பகுதியாக(Special Administrative Regions) இணைந்தது.இந்த ஸ்டாம்ப் அதுகுறித்து இல்லை என்றாலும், இதுல பாத்தா பிரிட்டிஷ் முத்திரை இருக்கும். இப்ப இருக்குற ஹாங்காங் குறித்து மட்டுமே தெரிந்தவர்கள் இத பாக்கும் போது என்னடா பிரிட்டிஷ் க்ரௌன் இருக்கேன்னு ஆச்சரியப்படலாம், மேலும் அதுகுறித்து தெரிஞ்சுக்கவும் இந்த ஸ்டாம்ப் தூண்டலாம்.

ரெண்டாவது....இந்த ஸ்டாம்ப்:


எண்ணெய் கிணறுகள் பிரச்சனைல ஈராக் – குவைத் மீது 1990ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது. இது கண்டு பொங்கிய உலக பாதுகாவலன் அண்ணன் அமெரிக்கா குவைத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று பேருல உள்ள நொழஞ்சது. விளைவு – கல்ஃப் போர்.அதுக்கப்பறம் நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே. அண்ணைக்கு இருந்து இந்த எண்ணெய் வளங்கள மறைமுகா கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சார் பெரியண்ணன். ஈராக்ல அப்ப ஆட்சில இருந்தது சதாம் உசைன். அமெரிக்காவில பெரிய புஷ். இந்த கதைய ஆரம்பிச்சு போயிகிட்டே இருக்கும்.அதுனால, ஸ்டாம்ப் பத்தி மட்டும் பாப்போம். ஈராக்கின் 1990ஆம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு குறித்தே இந்த தபால்தலை


இந்த ஸ்டாம்ப் சேகரித்தல் நெறைய பேருக்கு வருமானம் ஈட்டித்தரும் விஷயமாகவும் இருக்கு.ஏன்னா, பெரும்பாலான சமயங்களில் தலைவர்களின் உருவம் – சில முக்கிய நிகழ்வுகள் தாங்கிய தபால்தலையோ நாணயமா ஒருமுறை அச்சடித்தால் திரும்ப அடிக்க மாட்டங்க.உதாரணமா இந்திராகாந்தி உருவம் பொறித்த பழைய பெரிய சைஸ் நாணயம்(எங்கிட்ட ரெண்டு இருக்கு) இப்ப நாலாயிரம் ரூபாய் வரை விலை போறதா இங்க படிச்சேன்.அதுமாதிரிதான் பல ஸ்டாம்ப்களும். அரிதான ஸ்டாம்ப்கள், நாணயங்கள என்ன விலை கொடுத்தாவது வாங்கவும் ஆட்கள் இருக்காங்க.


சரி.....எப்படி தபால்தலைகள சேகரிக்க ஆரம்பிக்க ? அது ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.சில பேர் கையில கெடச்சதெல்லாம் சேகரிப்பாங்க(என்னைய மாதிரி).சில பேர் எதுனா ஒரு குறிப்பட்ட வகை சார்ந்த – திரைப்படம், அறிவியல், விலங்கு, தலைவர்கள் – இப்படி சேகரிப்பாங்க. தவிர மெட்ராஸ் மூர் மார்கட் மாதிரியான இடங்களில் இதுபோன்ற கடைகளே உள்ளன.முக்கியாம ரெண்டே ரெண்டு விஷயங்கள் சொல்லி முடிக்கிறேன்.

1) வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் – உங்களுக்கு போர் அடிச்சா ஒருமாறுதலுக்கு, அந்தநாட்டின் ஸ்டாம்ப்கள சேகரிச்சு பாருங்க. கொஞ்சநாள்லயே அந்நாட்டின் வரலாறு, முக்கிய விஷயங்கள் கூட தெரிய வரலாம். முடிஞ்சா முயற்சி செஞ்சு பாருங்க.சுவராசியமா இருக்கும்.2)    நம்மூர் ஆளுங்களுக்கு, பெரிய போஸ்ட் ஆபிஸ்கள் அனைத்திலும் Philatelic bureau என்ற அமைப்பு இருக்கும்.அதுக்கு சந்தா கட்டினோம்னா சில முக்கிய தபால்தலைகள் வெளியிடும் போதோ ஸ்பெஷல் கவர்கள் வெளியிடும் போதோ நமக்கும் அனுப்பி வைப்பாங்க.
 1. தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.  
 2. இங்கேயும் பார்க்கலாம். 
உங்களுக்கு தெரிந்த பசங்க யாராவது இருந்தாங்கனா அவுங்க பிறந்தநாள் போன்ற விஷயங்களுக்கு இதுபோல அவுங்க பேருல சந்தா கட்டிவிட்டா அவுங்களுக்கு நல்ல ஒரு தொடக்கமா இருக்கும்.
It is not only my dreams, my belief is that all these dreams are yours as well. The only distinction between me and you is that I can articulate them. And that is what poetry or painting or literature or filmmaking is all about... and it is my duty because this might be the inner chronicle of what we are. We have to articulate ourselves, otherwise we would be cows in the field.
 

என் அறிவுக்கு எட்டிய வரை ரெண்டே ரெண்டு வகையான இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சினிமா - எடுக்கத் தெரிந்தவர்கள்; சினிமா மட்டுமே, அதுவும் சினிமாவை சினிமாவாக எடுக்கத் தெரிந்தவர்கள்.இதில் ஹெர்சாக் எந்தவகை என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இவரை நான் தெரிந்து கொண்டதை பற்றி சின்ன சுருள்.ஏற்கனவே இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.இருந்தாலும் மறுபடியும் எழுதுவதில் எனக்கு ஒன்றும் சிரமமில்லை(அது படிப்பவர்களுக்குத் தானே).உயிர்மையின் ஒரு கட்டுரையில் - ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன் – சாரு, கின்ஸ்கியின் கிட்டே கூட சிவாஜி நெருங்க முடியாது, இதை நான் சொல்லவில்லை உலக திரைப்பட மக்கள் அனைவரும் சொல்கின்றனர் என்று ரீதியில் ஒரு வாக்கியத்தை எழுதியிருந்தார்.எனக்கு பயங்கர கோபம்.சிவாஜியை இப்படியா மட்டம் தட்டுவது.யார் இந்த கின்ஸ்கி ? என்று தேடத் தொடங்கி அது ஹெர்சாக்கில் போய் நின்றது.சரி....இந்த கதை போதும்.இருங்க....மற்றொரு விஷயம்.அகுர் பற்றிய எனது பழைய பதிவில் கருந்தேள்,க.காதலன் போன்றோரது லிங்க்களை உபயோகப்படுத்தியிருந்தேன். அதில் கருந்தேள் தளத்தில் மட்டும் காப்பிரைட் அதுஇது என்று இருந்ததால் மெர்சலாகி அவர் தளத்தில் உங்க லிங்கை பயன்படுத்தியிருக்கிறேன் என்று கமென்ட் போட்டிருந்தேன்.பாருங்க.......அந்தளவிற்கு வெகுளியாக இருந்திருக்கிறேன்.இப்போது..................

சினிமா – இயக்கம் என்று யாராவது சொன்னால், தானியங்கியாக எனது மனம் இரண்டு பேரிடம் போய் நிற்கும்.ஒருவர் – ஸ்கார்சேஸி. மற்றொருவர் – ஹெர்சாக்.இரண்டு பேரின் அநேக திரைப்படங்களையும் பார்த்து விட்டேன். அலுக்காமல் சலிக்காமல் மறுபடிமறுபடியும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஹெர்சாக் அளவிற்கு versataility கொண்ட மற்றொரு இயக்குனர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை (என் அறிவு சின்னது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்). அண்டார்டிகாவில் – அமேசான் காடுகளில் – இந்தியாவின் உதய்பூரில் – இந்தோனேசியாவில் – ரஷ்யாவில் – திபெத்தில் என்று எங்கெங்கோ சுற்றிச் சுற்றிப் படம் எடுக்கிறார்.அதனால் மட்டுமே அவர் படங்கள் என்னை கவர்ந்து விடவில்லை.அந்த படங்கள் ஏற்ப்படுத்திய தாக்கம்.எப்பேர்ப்பட்ட இயக்குனராக இருந்தாலும் அதானே முக்கியம். ஹெர்சாக் பற்றி ஓரளவு எனக்கு தெரிந்தவைகளை –இணையத்தில் படித்தவைகளை வைத்து – இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

ஹெர்சாக்கின் குழந்தை பருவம், வளர்ந்த சூழல் இதெல்லாம் குறித்து தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.ஏன் என்று கொஞ்ச நேரத்தில் உங்களுக்கே புரியும். மியூனிக் நகரில் பிறந்து ஜெர்மனின் Chiemgau Alps மலைத்தொடரின் அருகில் இருந்த பவேரிய பகுதிக்கு அவர் குடும்பம் குடியேறுகின்றனர். அற்புதமான மலையும் மலை சார்ந்த சூழ்நிலையும் நிலவும் பகுதி.பனிபடர்ந்த மலைத் தொடர் – ஒளியை சிதறடிக்கும் ஓங்கி உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகள்.இதுபோன்ற சூழ்நிலையில் வளரும் எந்தவொரு மனிதனின் நினைவிலும் இயற்கை வியாபித்திருப்பது......இயற்கையே.இரண்டாம் உலகப்போர் சமயம்.ஹெர்சாக்கின் பக்கத்து வீட்டில் பெரும் குண்டு விழுந்து அவ்வீட்டார் அனைவரும் இறக்க நேரிடுகிறது.போர் குறித்த பார்வையை அவர் மனதில் இந்நிகழ்ச்சி ஆழமாக பதிக்கிறது.அவரின் படங்களில் தீர்க்கமாக இவ்விரண்டு விஷயங்களும் வெளிப்படுவதைக் காணலாம்.

12 வயதில் மறுபடியும் மியூனிக். 14 வயதில் திரைப்படங்கள் குறித்த ஒரு புத்தகத்தை படிக்க நேரிடுகிறது.முழுக்க முழுக்க சினிமாவை விரும்ப ஆரம்பிக்க அப்புத்தகம் ஒரு காரணம் என்று அவரே குறிப்பிடுகிறார்.அதற்கடுத்த ஆண்டே – 15வது வயதிலேயே, ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்து வைத்திருக்கிறார். பதினாறு – பதினேழு வயதிலேயே முதல் படத்தை இயக்கம் வேலையை ஆரம்பிக்கிறார். அதற்கு கேமெரா? மியூனிக் திரைப்பட பள்ளியில் இருந்து ஒரு 35mm கேமேராவை "எடுத்துக் கொண்டு" வருகிறார். ஊரார் மொழியில் – திருடிக்கொண்டு.அதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.

"I don't consider it theft, it was just a necessity. I had some sort of natural right for a camera, a tool to work with."

இந்த காலகட்டத்தில் தான் அவரும் – தாயாரும்(தந்தை அவர்களை விட்டுச்சென்ற பலகாலம் ஆகின்றது)வேறு வீட்டிற்குக் குடியேறுகின்றனர்.இங்குதான் மிக முக்கியமான ஒரு சந்திப்பு-அவருக்கும்,சினிமாவுக்கும்.கிளாஸ் கின்ஸ்கி அவர்கள் குடியேறிய வீட்டில் ஒரு பகுதியில் இருந்தார்.தனது முதல் படத்தை எடுப்பதற்காக அந்த காலகட்டத்தில்-வெல்டராக,பார்கிங் பகுதிகளில் வாகன ஒழுங்கமைப்பாளராக, ஏன் மெக்சிகோவின் எல்லை வழியாக டிவிகளை கடத்தும் ஆளாக -என்று பல வேலைகளில் ஈடுபடலானார்.

1964ஆம் ஆண்டு, இருபத்தி மூன்றாம் வயதில் சிறந்த திரைக்கதைக்கான கார்ல் மேயர் பரிசினை வெல்கிறார்.அந்த திரைக்கதையே அவரது முதல் முழுநீள படமாகவும் –  Signs of life(1968) பின்னர் ஆயிற்று. ஆனால் இதற்கெல்லாம் முன்னரே பத்தொன்பது வயது முதலே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்திருந்தார். Herakles (1962) - Game in The Sand (1964) - The Unprecedented Defence of the Fortress Deutschkreuz (1966) - Last Words (1968).
1969ஆம் ஆண்டு மிக முக்கியமான படமான Even dwarfs started small வெளியாகிறது. என்ன படம் அது ?உருவ குறைபாடுள்ள ஆட்கள் குறித்த கதை.ஒருவகையான ஒவ்வாத சமூக கட்டமைப்பிற்குள் சிறைப்பட்ட ஆட்கள் அதை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவதே அக்கதை. கற்பனைதான். இருந்தபோதிலும் இது போன்ற கருத்துக்கள் அவரது மற்ற படங்களிலும் விரவியிருப்பதைக் காணலாம். உண்மையான, நடிக்கத் தெரியாத உருவ குறைபாடுள்ள ஆட்களை வைத்து - நான் கடவுளில் பாலா செய்ததை விட அதிகமாகவே - 41 ஆண்டுகளுக்கு முன்னரே ஹெர்சாக் செய்து விட்டார். படத்தை பார்த்தல் ஒழிய நான் சொல்வது புரியாது.

1970 – மிக மிக முக்கிய(உலகளவிலும் கூட) இன்றளவிலும் கொண்டாடப்படும், Aguirre, the Wrath of God வெளியாகின்றது.இந்த படத்திற்காக அவர் பட்ட கஷ்டங்கள் குறித்து தனியாக பத்து பதிவே எழுதலாம்.நூறு பன்றிகளுக்கு மத்தியில் உறங்கி – சாப்பிட உணவில்லாமல் கஷ்டப்பட்டு – பல்வேறு நோய்களுக்கு மத்தியில் – ஹெர்சாகின் ஹிம்சைகளுக்கு நடுவே – ரெண்டு ஆதிவாசி குழுவினர்களுக்கு இடையே – கரைபுரண்டோடும் வெள்ளத்தைத் தாண்டி – இதுகுறித்தெல்லாம் விரிவாக My Friend Klaus Kinski டாகுமென்டரியில் காணலாம். மற்ற யாராக இருந்தாலும் இதுபோன்ற சிரமங்களுக்கு அப்பறம் மறுபடியும் அங்கே செல்லவே மாட்டார்கள். ஆனால் இவரோ, மறுபடியும் Fitzcaraldo என்ற படத்திற்காக மறுபடியும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கு திரும்புகிறார்.

Fitzcaraldo..............இந்த படத்தை பற்றி சொல்வததெற்கேல்லாம் ஒரு தனி தகுதி தேவை.அது எனக்கு சத்தியமாக கிடையாது.இருந்தாலும்,சொல்ல முயற்சிக்கிறேன். Fitzcaraldo – காட்டின் நடுவே பெரிய ஓபெரா குழுவை அமைக்க பாடுபடும் ஒருவனது கதை.ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.சரி, இதிலென்ன விஷேசம்?அமேசான் காட்டில் இரண்டு கிளை ஆறு சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஒரு சிறிய குன்று.அதற்கு இந்தப்பக்கத்தில் Fitzcaraldo குழுவினர் இருக்கிறார்கள்.தனது ரப்பர் வியாபாரத்திற்கு அந்த பக்கம் சென்றால் இன்னும் நன்றாக இருக்குமே என்று தோன்ற அதற்காக 320 டன் எடைகொண்ட அந்தக்கப்பலை மெதுவாக குன்றின் மேலே நகர்த்தி இந்த பக்கத்தில் இருந்து அந்த பக்கம் கொண்டு செல்ல திட்டமிடுகிறார், பழங்குடியினரின் உதவியுடன். இதுதெரிந்து அவரது குழுவினர் விட்டுச்செல்ல, பழங்குடியின மக்களின் உதவியுடன் அதை கடைசியில் சாதித்தும் காட்டுகிறார். Fitzcaraldoவாக, வேறு யார் இருக்க முடியும், கின்ஸ்கிதான். இந்த படத்தில் வரும் அத்தனையும் நிஜம். 320டன் கப்பல் – பழங்குடியினர் – அவர்கள் பட்டபாடு – கப்பல் பாறையில் மோதியது – அத்தனையும். பாறையில் கப்பல் மோதிய விபத்தில் கேமேராமேன் காயத்துடன் உயிர்தப்புகிறார்.இந்த படத்தை எடுத்த "வரலாறு" குறித்தே தனியாக மற்றொரு படமே உள்ளது.
இவர் 1974ஆம் ஆண்டு எடுத்த மற்றொரு அற்புதம் The Enigma of Kaspar Hauser.1810ஆம் ஆண்டு ஜெர்மனியின் நுரேம்பெர்க் நகரில் பிறந்த காஸ்பர் ஹவூர் என்ற மனிதன் பற்றிய கதை. தன் வாழ்நாளின் முதல் ஒன்றல்ல – ரெண்டல்ல – பதினேழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு தெரிந்த ஒரே ஆள் கருப்பு கோட்டுடன் அவனுக்கு உணவு வைப்பவன் மட்டுமே.இந்நிலையில் 1828ஆம் ஆண்டு, பதினேழு ஆண்டுகள் கழித்து முற்றிலும் ஒரு புதிய மனிதனால் விடுவிக்கப்படுகிறான்.சுத்தமாக ஒன்றும் காஸ்பருக்கு புரியல்வில்லை.யாரிடம் – எவ்வாறு – எப்படி நடந்து கொள்வது....ம்ஹும்...ஒன்றும் விளங்கவில்லை.அவனது இயலாமையை பயன்படுத்தி சர்க்கஸ்காரர்களால் பிடித்துச் செல்லப்படுகிறான்.ஒருவாறு எழுத – படிக்க – வேற சில வாழ்க்கை முறைகளை கற்றுக் கொள்கிறான். இருந்தாலும் கூட இசையின் மீது அளப்பரிய ஆர்வம்.உடனே கிரகிக்கும் குணம் இருக்கிறது. சில ஆண்டுகள் கழித்து ஒருசில முகம் தெரியாதவர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு - வெளியே வந்த ஐந்து ஆண்டுகளிலேயே  - இறக்கிறான். பலவேறு தளங்களில் இந்த படம் கேள்வி எழுப்புகிறது.சமூகத்தால் எப்படி இதுபோன்ற ஒரு ஆள் சீரழிக்கப்பட்டான், மனிதர்களின் பொது புத்தி என்ன இதுபோன்ற பல கேள்விகளை எள்ளலுடன் இப்படம் முன்வைக்கிறது.இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இதுவொரு உண்மைக்கதை.நிஜ காஸ்பரின் கடிதங்களை – பொருட்களையே படத்திலும் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். மேலும் காஸ்பராக நடித்த, ப்ருனோ என்பவர் கூட சிறுவயதில் இதேபோல கொடுமையை அனுபவித்தவர்.நடிப்பே சுத்தமாக வராதவர்.இருந்தாலும் அவரை நடிக்க வைப்பதால் ஒரு எதார்த்தம் வரும் என்று கருதி பெரும் சிரமங்களுக்கு அப்பறம் – ஒரு காட்சியை எடுக்கவே சிலநேரம் மாதக்கணக்கில் ஆகுமாம் – படமாக்கி இருப்பார்.

 ஒரு படத்தில் நடித்த அனைவரும் hypnotize செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா............ஹெர்சாகின் Heart of Glass (1976) படத்தில் அது நடந்திருக்கிறது.ரூபி க்ளாஸ் என்ற வித்தியாசமான கண்ணாடி தயாரிக்கும் முறை தெரிந்த அந்நகரத்தின் ஒரே ஆளும் இறக்க நேரிடுகிறது.அதுபோன்ற கண்ணாடிகள் இனி தயாரிக்க முடியாமல் அந்நகரமே பித்து பிடித்து நிலைக்கு ஆளாகின்றது(என்னயிருந்தாலும் ஊரின் பெருமை பறிபோகின்றது அல்லவா). இதுபோன்ற மனநிலையில் இருக்கும் ஊர் மக்களின் கலங்கிய மனநிலையை பிரதிபலிக்கவே அந்த ஹிப்னாடிசம்.இவரது மற்றொரு மிக முக்கியமான டாகுமென்டரி Grizzly man. பதிமூன்று ஆண்டுகள், அலாஸ்காவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் கரடிகளுடன் பழகிய திமோதி ட்ரட்வெல் பற்றிய படம்.பல தடவைகள் கரடிகளுடன் நெருங்கிப்பழகி அதை படம்பிடித்து கரடிகள் வேட்டையாடப்படுவதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.ஓரளவு கரடிகளுடன் தொட்டுப் பேசும் அளவிற்கு நெருக்கமும் வந்தது.ஆனால் முற்றிலும் எதிர்பாராதவிதமாக ஒருநாள் தன் காதலியுடன் கரடியின் நடவடிக்கைகளை படம்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு கரடியால் ரொம்பவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை பிளக்கப்பட்டு உயிரிழக்கிறார்.அவரது இறப்பு மரணக் கூச்சல் அத்தனையும் அவரது வீடியோ காமேராவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.சாகும் தருவாயில் தான் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து காதலியை தப்பிச் செல்லுமாறு கூறுவதும் பதிவாகி உள்ளது.ஏன் ஹெர்சாக் இந்த படத்தை,மனிதரை குறித்து படம் எடுக்க வேண்டும் ? திமோதி ட்ரட்வெலே ஒரு சமயம் தன் காதலியிடம் ஏதோ ஒரு உள்ளுணர்வில், தனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால்,அதையும் படமாக எடுக்க வேண்டும்.கரடிகள் குறித்த விழிப்புணர்வுக்கு அது பெரிதும் பயன்படும். அத்தகைய படம் எடுக்க ஹெர்சாக் போன்ற ஒருவராலேயே முடியும் என்று கூறியிருக்கிறார்.

இடைசொருகலாக ஒன்று.ஹெர்சாக் வளர்ந்து வந்த இந்த காலகட்டம்தான், எழுபதுகள்,  German New Wave Cinema Period என்றழைக்கபட்டது. 50களில் முடிவுற்ற Italian Neorealism, 58ல் தொடங்கி 60கள் வரை நீண்ட French New Wave ( Godard – Truffaut – Chabrol போன்றவர்களெல்லாம் அப்பொழுதுதான் பிரெஞ்சு சினிமாவை மட்டுமின்றி,உலக சினிமாவையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர்).இவைகளின் நீட்சியாக ஜெர்மன் நியு வேவை சொல்லலாம்.அப்பொழுதுதான் ஹெர்சாக் – விம் வெண்டர்ஸ் (Paris:Texas, Wings of Desire) – வோல்கர் ஸ்க்ராஃப் (குந்தர் கிராஸின் புகழ் பெற்ற நாவலான The Tin Drumமை எடுத்தவர்) – ஃபாபின்டர் (Fear Eats the Soul) போன்றவர்கள் கிளர்த்தெழுந்து வந்தனர்.1962 – 1982 வரை இந்த காலகட்டமாக கூறுகின்றனர்.

இப்படியாக பல்வேறு கதையாடல்கள் கொண்ட – கலிடோஸ்கோப்பை உருட்டினால் தெரியும் விதவிதமான வடிவங்கள், நிறங்கள் போல – படங்களையும் அதைவிட முக்கியமாக டாகுமெண்டரிகளையும் எடுக்க ஆரம்பித்தார். இவரது பரந்துபட்ட பார்வைக்கு சான்றாக – உதய்பூர் மகாராஜா குறித்த Jag Mundir – திபெத்தில் நடைபெறும் பௌத்தர்களின் புனித காலச்சக்கர சடங்கு குறித்த Wheel of Time(தலாய் லாமா உடன் ஒரு அற்புத உரையாடலும் உண்டு) – வியட்நாம் போரில் மாட்டிக்கொண்ட ஒரு ஆளை பற்றிய Little Dieter Needs to Fly (பின்னாளில் இதுவே Rescue Dawn படமாக எடுக்கப்பட்டது) – புகழ் பெற்ற ஜெர்மனிய இசைகோர்ப்பாளரான ரிச்சர்ட் வேக்னர் பற்றிய The Transformation of the World Into Music – 92ஆம் ஆண்டு கல்ஃப் போரின் பின்னணி,அதுமுடிந்து அங்கு நிலவிய சுழல், எண்ணைக் கிணறுகள் குறித்த பரந்துபட்ட பார்வை என்று மிக விலாவரியாக அலசும் Lessons of Darkness – ரஷ்யாவின் மிஸ்டிக்தன்மை குறித்தான Bells from the Deep – டாகுமென்டரிகளைக் கூறலாம்.எத்தனை வகையான தேடல் உள்ள மனிதர்.கிளாஸ் கின்ஸ்கி உடனான இவரது “நட்பு” குறித்த My Friend Klaus Kinski  டாகுமெண்டரியை யாரும் தவற விட வேண்டாம்.ஒரு இயக்குனர் எந்தளவுக்கு நடிகரின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியும், அற்புதங்களை வெளிக்கொணர முடியும் போன்றவைகளை இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஹெர்சாகின் படங்களில் நான் பார்த்த வரை மூன்று விஷயங்கள் இருக்கும்:

இயற்கை....இயற்கை......இயற்கை:

தமிழ் படங்களில் தவறாது இடம்பெறும் வன்புணர்வு காட்சி பெருமளவில் இயற்கை சார்ந்ததாகவே இருக்கும்.சமீபத்திய உதாரணம் – எந்திரன்:மச்சு பிச்சுவில் எடுக்கபட்ட கிளிமான்ஜாரோ பாடல்.என்ன மாதிரியான இடம் அது..........அதில் சங்கர் வகையறாக்கள் செய்த கொடுமை சொல்லிமாளாது. அதே இடத்தில்தான் ஹெர்சாக் அகுர் படத்தை எடுத்தார்.அதுகுறித்து My friend klaus kinski டாகுமென்டரியில் அவர் கூறுகையில் “கின்ஸ்கி எவ்வளவோ வற்புறுத்தினார்.தன் முகத்திற்கு க்ளோஸ் அப்பும், ஹாலிவூட் வகையான ஒரு ஷாட்டும் மச்சு பிச்சுவை நோக்கி வைக்குமாறு. ஆனால், எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை.நான் என்ன போஸ்ட் கார்டில் அச்சிடவா போட்டோ எடுக்கிறேன்.இயற்கையை உள்ளபடி உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது”. அவரது படங்களில் nature will be explored, not exploited. பெரும்பாலான படங்களில்(ஹாலிவுட்டில் நிறையவே) இயற்கை சுரண்டலுக்கு உள்ளாகும்.ஹாலிவுட்டை ஆதர்சமாக நினைக்கும் நம்மாட்கள் எடுப்பது மட்டும் எப்படி இருக்கப்போகின்றது.

பரந்துவிரிந்த நிலப்பரப்புகள், மேகங்கள், புல்வெளிகள், காடுகள், மரங்கள், விலங்குகள்,பறவைகள் என்று அனைத்தின் மொழியையும் கேமேராவின் வழியாக மொழிபெயர்ப்பதையே முழுநேர தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் போல. ஹெர்சாகின் இந்த இயற்கை மீதான தேடலுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தைப் போல சிறுவயதில் இயற்கை சார்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததும் கூட ஒரு காரணம்.இதுகுறித்து ஒரு பேட்டியில்

“I like the jungle against my better judgment. You see I have always functioned well when it comes to a real physical sort of filmmaking. I wouldn’t be that good in the sterile atmosphere of a studio.


கதாபாத்திரங்களின் வயப்பாட்டுத்தன்மை(Obsession):

அகுர் ஆகட்டும் – ஃபிட்ஸ்கரால்டோ ஆகட்டும் – பேட் லெப்டினன்ட் ஆகட்டும், அந்த கதைகளின் முக்கிய கதாபாத்திரம் ஒருவகையான obsessionனிலேயே இருப்பார்கள்.இது ஹெர்சாகின் ஆல்டர் – ஈகோ என்று பலரும் கூறுகின்றனர். இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அது வரும் வரை விடவே மாட்டாராம்.அது எத்தனை ஆபத்தான முயற்சியாக இருந்தாலும் கூட - தனக்கும் தன் குழுவினருக்கும் – அதிலிருந்து பின்வாங்க மாட்டார்.ஒன்றல்ல, ரெண்டல்ல – ஐந்து முறை உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. அகுர் படப்பிடிப்பிற்காக அவர் செல்ல வேண்டிய விமானத்தை தவறவிட, அந்த விமானம் பெரும் விபத்திற்குள்ளாகின்றது.பயணம் செய்த அனைவரும் இறக்க, ஒரே ஒரு பெண்மணி மட்டும் உயிர்பிழைக்கிறார்.பத்து நாட்கள் காடெல்லாம் அலைந்து கடைசியாக ஒரு கிராமத்தை அடைகிறார்.அங்கு அவர் சந்தித்த ஒரு ஆள் அகுர் படத்தில் அப்போது நடித்துக் கொண்டிருந்தார்.அவர் மூலம் ஹெர்சாகிற்க்கு இவ்விஷயம் தெரியவர, மிகுந்த ஆச்சரியம் + அதிர்ச்சி அடைந்து அவர் ஒரு படமே எடுக்கிறார். Wings of Hope.

மற்றொரு விஷயம், ஹெர்சாக் குறித்து விஷயங்களை இணையத்தில் தேடிய போது, இந்த obsession தொடர்பாக ஒரு தளத்தைக் காண நேரிட்டது.அதில் அவரையும் மற்றொரு இயக்குனரையும் ஒப்பாய்வு செய்து ஒரு கட்டுரை உள்ளது.ரெண்டு பேருக்குமே இவ்விஷயத்தில் படுபொருத்தம் போங்கள்.அவர்..................ஸ்டான்லி குப்ரிக். அந்த கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் போர், காலனியாதிக்கும் போன்ற விஷயங்களும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.


தத்துவார்த்த கூறுகள்,சமூகத்தை நோக்கி எதிர்கேள்வி எழுப்புதல்:  அனைத்தையும் மௌனமாக:

அகுர், ட்வார்ஃப், ஃப்ளூ யான்டர் போன்ற பல படங்களில் அடிநாதமாக ஒரு கேள்விக்குறி ஓடிக்கொண்டே இருக்கும்.அது நம்மை நோக்கியா இல்லை நாம் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகளா என்பதை பார்ப்பவர் மனநிலையை பொறுத்தது. அவரது படங்களில் எல்லாமே யதார்த்தமும் புனைவும் மெல்லிய மூடுபனியால் மூடப்பட்டிருக்கும்.அதை விலக்கிப் பார்க்க முற்படுவதற்க்கு பதில் அதை ஒரு கோப்பை தேனீருடன் ரசிப்பதே மிகவும் பொருத்தமாய் இருக்கும்.

ஹெர்சாக் தனது படங்களை டாகுமெண்டரி – திரைப்படம் என்று பிரித்துப் பார்க்கப்படுவதை விரும்புவதில்லை.அவரை பொறுத்த வரை அவருக்கு படம் மட்டுமே எடுக்கத் தெரியும்.அவை அந்த வகையா இந்த வகையா என்றெல்லாம் பிரிப்பது அவர் வேலை இல்லை.Passion – என்ற வார்த்தைக்கு ஜெர்மனிய அகராதியில் ஹெர்சாக் என்று அர்த்தம் இருக்குமோ என்னவோ. தேடித்தேடிப் போய் விஷயங்களை சேகரிக்கிறார்.வெறும் பணத்துக்காகவோ புகழுக்காகவோ இதெல்லாவற்றையும் ஒருவரால் செய்ய முடியாது. அதற்கெல்லாம் மேலான அளப்பரிய ஆர்வம் ஈடுபடும் செயலின் மீது இருக்க வேண்டும். மேலும் தான் கற்றுக் கொண்டவைகளை தன்னுடன் வைத்துக் கொள்ளாமல் நிறைய இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார்.நான் எழுதியதில் மிகவும் சந்தோசப்படும் பதிவுகளில் நிச்சயமாக இதுவும் ஒன்று.இது போன்ற ஒரு ஆளை குறித்து எழுதியதற்கு ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்.இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களில் ஏறக்குறைய அனைத்தையும் நான் பார்த்து விட்டேன்.அந்த படங்களை பார்த்து முடிக்கவே இத்தனை நாள் ஆயிற்று.இல்லாவிட்டால் எப்போதோ இவரைப் பற்றி எழுதியிருப்பேன். அனைவரும் தவறாது My Friend Klaus Kinski டாகுமென்டரியையாவது பார்க்க வேண்டும்.ஹெர்சாக் தவிர கின்ஸ்கி என்றொரு மகத்தான நடிகனையும் தெரிந்து கொள்ளலாம்.என் பதிவுகளை வாசிப்பவர்கள் மொத்தமே ஒரு 100 - 150 பேர்தான் இருக்கும்.அதிலும் ஒருசிலரை தவிர பெரும்பாலவர்கள் தலைப்பு -----> கமென்ட் செக்ஷன், அப்படியே போய்விடுவார்கள். மீதி படிக்கும் ஒருசிலரில் வெகுசிலராவது இந்த படத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.இதுவரை ஹெர்சாக்கை பாத்திராதவர்கள் கூட இந்த டாகுமெண்டரியிலிருந்து ஆரம்பியுங்கள். You will be hooked forever.
Facts per se are not so interesting for me. Facts do not illuminate; they create norms. The Manhattan phone directory has 4 million entries which are factually correct, but as a book it doesn't really illuminate you. I've always said we have to look beyond realism, beyond facts. We have to dig into a deeper stratum of truth which is somehow deeply inherent in cinema but which is very hard to find and to create. I'm looking for moments that are somehow illuminating.                                               2002-03 அப்பறம் தான் எனக்கு பல்வேறு இசை வடிவங்களை கேக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது.காரணம், வீட்டில கேபிள் வந்தது. அதுவும் Vh1 போன்ற சேனல்கள் அப்பத்தான் எங்க ஊர்ல தெரிய ஆரம்பிச்சது. இப்ப மாதிரி [V], MTv அப்போல்லாம் மொக்கை இல்லை. நெறைய ஆங்கில இசையும் உலக இசை குறித்தும்(கொஞ்சம் தான் என்றாலும்) ஒளிபரப்பிகிட்டு இருந்தாங்க. இப்ப தான் சுத்தம். மரண மொக்கை. சன் டிவி, கலைஞர் டிவிக்கு இணையா அந்த ரெண்டு சேனல்களையும் வெறுக்கிறேன்.விஷயத்துக்கு வரேன்.


                                 
முதல் முதலாக ப்ளாசே எனக்கு தெரிய வந்தது மேலே இருக்கும் பாடல் மூலமாகத்தான்.MTvல 2004களில் அடிக்கடி இந்த பாடலை பார்க்க நேர்ந்தது.கேட்டவுடனே எனக்கு அந்த Funky Rhythm புடிச்சு போச்சு(பாடலின் மையக்கருத்து குறித்தெல்லாம் அப்ப தெரியாது). அடுத்து நான் கேக்க நேர்ந்த ப்ளாசேயின் பாடல், Ban the police. ஒரு உலுக்கு உலுக்கின பாடல்.அப்பத்தான் எங்கப்பா மூலமா மஞ்சுநாத் என்ற ஆள் ரொம்ப ஆழமா பாதிச்சிருந்தார்.யார் இந்த மஞ்சுநாத் என்று தெரியாதவர்களுக்கு – IIMல் MBA முடித்துவிட்டு இந்தியன் ஆயில் கார்ப்ரேசனில் சேல்ஸ் மானேஜராக, பல வெளிநாட்டு வாய்ப்புகள் வந்த போதும் உறுதியாக அவைகளை மறுத்துவிட்டு இங்குதான் வேலை செய்ய வேண்டும் என்ற பிடிவாதத்துடன் வேலைக்கு சேர்ந்தார். உத்திர பிரதேசத்தில் இருக்கும் IOCஇல் 2005 சேல்ஸ் மானேஜராக சேருகிறார்.அங்கு ஏற்கனவே பல்வேறு தில்லுமுல்லுகள்.பெட்ரோல் – டீசல்களில் கண்டபடி கலப்படம். பலமுறை நடவடிக்கை எடுக்கிறார்.அதற்காக நிறைய தடவை கடுமையாக மிரட்டபடுகிறார்.இருந்தாலும் நேர்மையாக நடவடிக்கைகளை தொடர்ந்ததற்க்காக படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் உண்மையானா குற்றவாளிகளை கைது செய்வதில் மிகுந்த குழப்பம் ஏற்படுத்தியது.இதை பற்றியெல்லாம் நெட்டில் தேடித் பாருங்கள். அவர் பெயரில் ஒரு ட்ரஸ்ட் கூட இயங்குகிறது. கொலை செய்யப்படும் போது அவர் வயது – 27. என்னை விட ஒருவயதே அதிகம்.அந்த வயதில் எனக்கு அவ்வளவு மனதிடம் இருக்குமா என்று தெரியவில்லை.எங்கப்பா இந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லுவார்.அவர் வேலைக்கு சேர்ந்த புதிதில் நெறைய அமைச்சர்களுடன் சண்டை போட்டுள்ளார்.அதையும் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த பாடலில் வரும் – பில்கிஸ் பானுஜெசிகா லால் – குஜராத் கலவரம் – சஞ்சய் பாண்டேபேராசியர் சபர்வால் இவுங்கள பத்திலாம் ஓரளவுக்காவது அனைவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.


Ban the police – எங்கப்பாவும் ஒரு அரசு ஊழியர் தான்.அதுனால போலீசை – அரசு ஊழியர்களை போறபோக்குல திட்டுற ஆள் நானில்லை.எத்தனயோ நேர்மையாவங்க வளைஞ்சு குடுக்காத ஆட்களை பாத்திருக்கேன்.இருந்தாலும் அவுங்க எண்ணிக்கை கம்மியாக இருப்பதுதான் நிதர்சனம்.

இந்த பாடலில் இருந்து எந்த ப்ளாசேவின் பாடலையும் விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.வெறும் துள்ளலான பாடல்களாக மட்டுமல்லாமல் அவரின் பாடல்களில் ஒரு emotional angst இருக்கும். Rap இசையின் உச்சம் அதுதான்.அப்பறம்தான் ரஹ்மானுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய பல பாடல்கள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது. அதில் தமிழை விட ஹிந்தி பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஹ்மானின் முக்கியமான பாடலான Pray for me brotherயை எழுதியவர் இவரே.ஒரு முக்கியமான பாடலை இவரை எழுத வைக்கும் முடிவுக்கு ரஹ்மானை வரவைக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது இவர் எழுத்துத் திறமை.சில சமயம் ரொம்ப கிளிஷேதனமாக தமிழ்–ஹிந்தி பாடல்களை பாடியிருப்பதையும் மறுப்பதிற்கில்லை.இருந்தாலும் ரஹ்மானின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் நன்றாகவே இருக்கும்.ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் ஒரு செமத்தியான hip-hop styled funky பாடல். முக்கியமாக ரஹ்மானின் ஒரு சிறந்த ஆல்பமாக நான் கருதும் Connectionஇல் வரும் திருக்குறள் பாடல் நல்ல execution.


இவர் வளர்ந்து எல்லாம் ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்.அங்கிருக்கும்போது 16 வயதில் அந்நாட்டு ஜனாதிபதிக்காக தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றை பாடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறார்.பின்பு அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, 2002இல் இந்தியா வந்து, பாபாவில் ஆரம்பித்து – பின் MTvயில் பணியாற்றிவிட்டு, இன்று செமத்தியாக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.எனக்கு பிடித்த இவரது பாடல்களை கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் தரவிறக்கி கேட்டுப் பாருங்கள்.தேடித் புடிச்சு நல்ல குவாலிட்டி பாடல்கள மட்டுமே குடுத்திருக்கிறேன்.                                        ------------------------------------------------------------------------------

SuperHeavy பத்தி அடிக்கடி FBல் சொல்லியிருக்கிறேன். இந்த காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது. இதுல டேமியன் மார்லி – மைக் ஜாக்கர் – ரஹ்மான் நல்லா தெரியும். டேவ் ஸ்டுவர்ட் சிறந்த கிடாரிஸ்ட் என்ற அளவில் தெரியும். ஜாஸ் ஸ்டோன் – அப்பப்ப Vh1ல் பாத்திருக்கிறேன்.


இந்த பாடல் – perfect amalgamation of Reggae + Soft Rock. மார்லி யார் புள்ள. சொல்லவா வேணும்.இந்த பாடலை தவறாமல் கேக்க வேண்டுகிறேன்.

இந்த முயற்சி தனிப்பட்ட முறையில எனக்கு ரொம்ப முக்கியமாபடுது. உண்மைய சொன்ன, இந்த பதிவுகள், பாராட்டுக்கள் - இதெல்லாம் ஒரு போதை மாதிரி தான. இதுல சிக்குனோம்னா அவ்வளவுதான். மேற்கொண்டு யோசிக்கவுட மாட்டேங்குது. ஒருமாதிரியான intellectual terrorism - arrogance வளர ஆரம்பிக்குது (intellectualனா என்ன ?). கருத்து திணிப்பும் சேர்ந்து.

எப்ப ஒரு எழுத்தாளர் படிப்பவன "வாசகர்"ன்னு கூப்புடுறாங்களோ அப்பவே அவர்கள தன்னவிட கீழ தான் வெச்சு பாக்குறாங்க - சமீபத்துல பேயோன் டுவீட்டிருந்தார்

உலகத்திலேயே ரொம்ப புதிரான விஷயம் - Reader's Mind. ஏன்னா அவுங்களுக்கு என்னென்ன தெரியும் எவ்வளோ தெரியும் (பலசமயம் எழுத்தாளர்களைவிட அதிகமாவே தெரியும்) என்று யாருக்கும் தெரியாது. லூயி போர்ஹே சொன்னது.

நெறய ப்ளாக்ல நானும் பாத்துட்டேன், நண்பர் - நண்பர்கள்குள்ள பேசிக்கிற மாதிரி இல்லாம, ஒரு rigidness, எழுத்தாளர் - வாசகர் தன்மை இருக்கு. எனக்கு இதெல்லாம் ஒவ்வாமை. (அதுக்காக எல்லார் கூடவும் நட்பா இருக்க முடியாது). அதுபோன்ற ஒவ்வாமை வியாதி இருக்குறவங்க எல்லாம், வாங்க இத உபயோகப்படுத்திக்கலாம்.இது இப்ப பதிவு வரைக்கும் வந்திருச்சு. என் பதிவுகளில் கூட இதுபோல தெரியுதான்னு தெரியல. ஆனா, நா எப்பவும் ஒரு விஷயத்துல தெளிவா இருக்கேன். எனக்கே சிலது தெரியும் போது - எல்லாருக்கும் அது தெரிஞ்சிருக்கும்ன்னு. நெறைய சமயத்துல இதே கண்ணோட்டத்துடன் சில நண்பர்களிடம் பேசும் போது அதுவே backfire ஆகிருது. நம்மளுக்கு தெரியலன்னு கிண்டல் பண்றான்னு. அதுனாலேயே இப்பலாம் பாத்து பாத்து பேச வேண்டியிருக்கு. இதுக்கும் பதிவுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா......எப்புடியாவது சம்பந்தம் படுத்திக்கோங்க............இந்த ப்ளாக்க delete செஞ்சுட்டு அங்க மட்டும் அப்பப்ப எழுதுனா என்ன ??

சரி மேட்டருக்கு வரேன். சில பேருக்கு தனியா ப்ளாக் ஒண்ணுலாம் தொறந்த எழுத புடிக்காம இருக்கலாம். அவுங்ககிட்ட சொல்ல பல விஷயங்கள் இருக்கும். அப்புடி நெனைக்கிறவங்க இத பயன்படுத்திக்கலாம். இன்னும் கொஞ்சநாள்ல admin மாதிரி கச்சடா விஷயங்கள் இருக்கப் போறதில்ல. நேரா மெயில் பண்ணா பப்ளிஷ் தான். அப்பறம் முக்கியமா, இந்த கமெண்ட்கள். என்ன மாற்று கருத்து வேணாலும் சொல்லுங்க. ஆனா உண்மயான பேருல வந்தா நலம். சொல்ற கருத்துல உறுதியாவும் அந்த விஷயத்துல நாம நேர்மையான நிலைப்பாட்டுடன் இருந்தா, அனானி போர்வைகள் எல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து.

குலேபகாவலி:
தமிழ் படங்களில் சில டெம்ப்ளேட்தனங்கள் இருக்கும். ராயபுரம் ஏரியாவா - ரவுடிங்க, அதுக்குன்னு ஒரு பேரு வைப்பாங்க, அப்பாவி கேரேக்ட்டர்களா -அதுக்கு ஒரு பேரு, வில்லனா - அதுக்கு ஒரு பேரு, தமிழ் தீவிரவாதியா - அதுக்குன்னு ஒரு பேரு, தீவிரவாதியா - பாங்கு சத்தத்துடன் முஸ்லிம்கள காமிக்கிறது. அதே மாதிரி எப்புடி பெரியார் - காந்தி - சே - ஏன் கடவுள் கூட இங்க பெயர்ச்சொல் தான். அதுனால பேருல என்னயிருக்கு............இங்க பேரோ - பதிவரோ முக்கியமில்லை, content தான் முக்கியம். இந்த பேரு வைக்கும் போது தோனல. அப்பறம் யோசிச்ச போதுதான் இது தோனுச்சு. பேருக்கு குடுக்குற முக்கியத்துவத்த விசயங்களுக்கு குடுப்பது இல்லைன்னு தோனுது. கொஞ்சநாள் கழிச்சு இந்த பேரையும் மாத்திரலாம். இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகள். நண்பர்கள் எல்லாம் சேர்ந்துதான் முடிவெடுக்கணும்.
(தமிழக பதிவர்கள் திருச்சபை - காரணம் புரிஞ்சிருக்குமே, புனித பிம்பம் ஏற்படுத்த என்னாலான முயற்சி......ஹி...).

இப்புடி நெறைய பேர் சேர்ந்து எழுதும் போது - கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்யும் - அதையும் தாண்டி பல்வேறு டாபிக்ல நல்ல கருத்து பரிமாற்றம் இருக்கபோவது உறுதி.தனித்தனியாய இப்ப கும்மி அடிக்கிறோம். சேர்ந்து அடிச்சா ஒரே இடத்துலேயே எல்லாத்தையும் படிச்சுக்கலாம்ல. மத்தபடி - இது ஒண்ணும் இதுவந்து பதிவுலகத்தையே பொரட்டி போடும் முயற்சி - யாரும் செய்யாத முயற்சி இப்புடிலாம் சொல்ற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரன் கிடையாது. இதுக்கு மேல மொக்க போட எனக்கே போர் அடிக்குது. யாராவது, மொபையில் ஷார்ட் பிலிம் முயற்சி செஞ்சுருக்கீங்களா. அனுப்பனும்ன்னு நெனச்சா தாராளமா அனுப்பலாம். நானும் ஒண்ணு எடுக்கலாம்னு இருக்கேன்.யாரவது உதவி செய்ங்க. தனிமனித - ஜாதிய - மத - பாலின ரீதியிலான தாக்குதல்கள் இதுல கண்டிப்பா வராது. அதுமட்டும் நிச்சயம். 

சரி எப்புடி......பதிவுகள அனுப்ப ?

 • உங்க மெயில்ல இருந்து powerstarsrini.share@blogger.com க்கு மெயில் அனுப்புங்க. (இது defaultடா எல்லா ப்ளாக்ளையும் இருக்கிற Mail2blogger சமாச்சாரம் தான்)
 • சப்ஜெக்ட் என்ன குடுக்குறீங்களோ அதான் பதிவின் டைட்டிலா வரும்.
 • எதுனா இமேஜ் - வீடியோவ mailல இன்சர்ட் செய்திருந்தீங்கன்னா, எங்க இன்சர்ட் பண்ணியிருக்கீங்களோ அதுகூடசரியா வந்திருது. செக் பண்ணி பாத்தாச்சு.
அதுனால சட்டுபுட்டுன்னு எழுதி அனுப்புவோம்............