The mind was dreaming. The world was its dream.

— Jorge Luis Borges

-------------------------------------------------------------------------

                                                   பெரியோர்களே, தாய்மார்களே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.ஆயிரக்கணக்கான இசங்களில் எனக்கு தெரிஞ்ச ஒரே இசம், தமிழ் சினிமா பாத்து கத்துகிட்டதுதான் – communism. இப்ப இத எழுத காரணம் – பேநாமூடி@ஆனந்த்.சும்மா இருந்த ஆள சொறிஞ்சுவுட்டது அவர்தான். பதிவினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவரே பொறுப்பு.
--------------------------------

          கண்டபடி யாரோ – என்னமோ ஒண்ணு உங்கள தொரத்துது. தப்பிச்சு ஓடிக்கிட்டேயிருக்கீங்க. விலங்குகள் – வேற்றுகிரகவாசிகள் வேற வந்து தீடீர் தீடீர்னு பயமுறுத்துதுங்க.திடுதுப்புன்னு கீழ விழுக ஆரம்பிக்கிறீங்க........ விழுகுறீங்க...........விழுகு.............றீங்க............வி..............ழு..............

                 (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........................................Snooze)


கனவுக்கு காரணம் யாரவது வாத்தியார் நேத்து உங்கள திட்டியிருக்கலாம். Cowboys & Aliens படத்த பாத்து பயந்திருக்கலாம்.உங்க ஆபிஸ்ல எதுனா பிரச்சனை இருக்கலாம்.சரி..............ஓகே.........இந்த கனவ பத்தி வாயால சொல்லிறலாம்.ஆனா அத பத்தி ஒரு கவிதையோ – கதையோ – ஓவியமோ உங்களால படைக்க முடியுமா ? முடிஞ்சா நீங்க ஒரு surrealist creator. உங்க படைப்புதான் சர்ரியலிசம்.

20ஆம் நுற்றாண்டின் ஆரம்பம். சிக்மண்ட் ஃப்ராய்டு மெல்ல மெல்ல ஐரோப்பாவில் புகழடஞ்சுகிட்டு வரார்.அதே சமயத்தில் தான் டாடாயிசம்(Dadaism) என்று சொல்லப்படுகிற ஒரு இசம் வளர்ந்துகிட்டிருந்துச்சு. டாடாயிஸ்டுகள் – ஒரு மார்க்கம் இல்ல.....பல மார்க்கமான ஆளுங்க. மனுஷங்களுக்கு கலை லொட்டு லொசுக்கு எல்லாம் எதுக்கு, தேவையேயில்லை.இதுபோன்ற சமாச்சாரங்கள் தான் போர் சண்டைகள் சச்சரவுகள் உருவாக காரணம்(அப்போது முதல் உலகப் போர் நடந்துக்கிட்டுயிருந்துச்சு). இதான் அவுங்க வாதம். Anti art- political -science movement. சுருக்கமா Dada had only one rule: Never follow any known rules (இத்த clickகி படிக்கவும்). 


அதுக்காக புகழ் பெற்ற ஓவியங்கள் மேல எதயாவது கிறுக்கி வைக்கிறது, வாஷ் பேசின்,கக்கூஸ் மாதிரி கண்டகழிய பொருட்களை வரைவது போட்டோ எடுத்து கண்காட்சி வைப்பதுன்னு அதகளம் தான் போங்க. Trash என்று அதுவரை நெனச்சிருந்த பொருட்களில் இருந்து கலையை உருவாக்குவது. இந்த இசம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இதுதான் பின்னாளில் பல இசங்கள் குறிப்பா போஸ்ட்மாடனிசம் உருவாகக் காரணம். போஸ்ட்மாடனிசத்தின் முக்கிய அம்சமே கலை – கோட்பாடு – பண்பாடு என்று நாம் இதுகாறும் நம்பும் system- கட்டமைப்பை உடைப்பதுதான. அதுனால இதுகுறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள்

                   
இதுல இருக்குற மூணு பார்ட்டையும் தயவுசெஞ்சு அனைவரும் பாத்திருங்க.ஏன்னா,பின்னாளில் பல இசங்களுக்கு அதிமுக்கியமா போஸ்ட்மாடனிசத்துக்கு இதான் காரணம்.இப்ப வரை பல்வேறு வடிவங்களில் இது இசை–சினிமான்னு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கு. 

டாடாயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆளு தான் ஆந்த்ரே பிரேதன்.பிரஞ்சு நாட்டு எழுத்தாளர் – கவி – குட்டி மனோதத்துவவாதி - இன்ன பிற. இவரைப் போன்ற பயபுள்ளைங்க எல்லாம் சேர்ந்து 1920ஆம் ஆண்டு வெளியிட்டதுதான் Les Chants Magnétiques (The Magnetic Fields). இதுலதான் Automatic writing என்ற கோட்பாடு வந்ததே. அது என்ன Automatic writingன்னு தெரிஞ்சுக்க நெனைப்பவங்க, கோணங்கியின் – பாழி படிக்கவும் (இந்த பதிவ படிச்சிட்டு அப்பறம் போய் அத படிங்க,அத படிக்க ஆரம்பிச்சா இத நீங்க மறுபடியும் படிக்க வாய்ப்பேயில்லை.).

இதே ஆந்த்ரே பிரேதன் தான் 1924ஆம் ஆண்டு La Révolution surréaliste (Surrealist Manifesto) என்ற அறிக்கையை வெளியிடுகிறார் அப்பயிருந்துதான் சர்ரியலிசம் வீறு கொண்டு கிளம்ப ஆரம்பிச்சது. 

சர்ரியலிசம்:
 நம்ம எல்லாருக்கும் ஆழ்மனம் என்று ஒண்ணு இருக்கு (அதுவும் மனசாட்சியும் ஒண்ணா...தெரியல).அதில கிளம்புற எண்ணங்களை வெளிப்படுத்துற விஷயங்கள் அனைத்துமே சர்ரியலிசம் தான்.

சிலந்தி வலை பின்னுற மாதிரி Fanatasyல இருந்து ஒரு இழை – கனவிலிருந்து ஒரு இழை – தத்துவத்திலிருந்து ஒரு இழை – புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனா அந்த வலை நிகழ்காலம் (Reality) மீது அமைந்திருக்கும். கனவும் + புதிர்த்தன்மையும் + நிகழ்காலம். இதிலிருக்கும் + தான் சர்ரியலிசம்.

              ஃப்ராய்டின் தாக்கம் பெருமளவில் இந்த விஷயங்களில் இருக்கும் (என்ன பெரிய ஃப்ராய்டு அவருக்கு முன்னமே பல விஷயங்கள நம்ப ஆளுங்க சொல்லிட்டாங்க).நம்ம subconsious mindல தோணுகிற விஷயங்கள வெளிப்படுத்தும் ஊடகம் தான் சர்ரியலிசம்.இதுல ரொம்ப முக்கியமா ஆளுங்க – டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்ற ஓவியர்கள். இதுக்கு மேல நா பேசி போரடிக்க விரும்பவில்லை.முடிஞ்சா டாலியும் – லூயி புனுவேலும் சேர்ந்து உருவாக்கிய இந்த படத்த பாருங்க. 1920லேயே பின்னி பெடலேடுத்துருக்காங்க.யாரும் தவறவிட வேண்டாம். மற்றவர்களை விட டாலியிடம் உள்ள சிறப்பு ரெண்டிலும் தேர்ந்து விளங்கியவர்.மேலும் ஓவியங்களில் optical illusion எல்லாம் கொண்டு வந்தவர். முடிஞ்சா "டாலியின் டைரிக் குறிப்புகள்" படிச்சுப் பாருங்க.ரகள.


இதுபோக பல சர்ரியலிஸ படங்கள் குறித்த நல்ல தொகுப்பு இங்க இருக்கு  Louis Bunuel  – Alexandro Jodorowsky – David Lynch போன்றவர்கள் எல்லாம் இதில் மாஸ்டர்கள்.மேற்கொண்டு ஓவியங்களை ரசிக்க.....இங்கே...


மாஜிகல் ரியலிசம்:
பேர பாத்த உடனே சொல்லிரலாம். அதே சிலந்தி வலை – அதே Fanatasy – அதே கனவு – அதே தத்துவம் – அதே புதிர்த்தன்மை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனால் படைப்பு நிகழும் உலகில் அனைத்தும் நிஜம். இதுவே சர்ரியலிசத்துக்கும் இதுக்கும் உள்ள வேறுபாடு. 

சர்ரியலிசம் – ஒரு உலகத்தை விஷயத்தை தனது ஆழ்மனம் – எண்ணங்கள் எப்புடி intrepret பண்ணுதோ அதை ஒரு படைப்பா வெளியிடுறது. மாஜிகல் ரியலிசம் – எதையும் interpret பண்ண தேவையில்லை.ஏன்னா..... அதுல “reality என்று சொல்லப்படுகிற “எதார்த்தம்இந்த மாஜிகல் விஷயங்கள் அடங்கியதுதான். அந்த உலகத்தில் மாஜிகல் விஷயங்கள் அனைத்தும் எதார்த்தும். சுளுவா உங்களுக்கே புரியும். நா மேற்கொண்டு விளக்கம் என்ற பேருல எதுனா உளறி கெடுக்காம இருக்க நெனைக்கிறேன்.

   இந்த வகை இலக்கியத்துல முக்கிய ஆசாமிகள் லத்தின் – அமெரிக்கர்கள், போர்ஹே – மார்க்வெஸ். இவர்களை தவிர கார்பெந்தியர் - மிலன் குந்த்ரா – கோய்லோ – ஜப்பானிய எழுத்தாளர்கள் – ஏன் காப்கா கூட, இவர்களையும் சொல்கிறார்கள். ஆலிஸ் இன் வோண்டர்லான்ட் கூட மாஜிகல் ரியலிசம் தான். ஆனா, இதை விட அனைத்து அற்புத  அம்சங்களும்  பெரும்பாலனா நமது கதைகளிலேயே இருப்பதுதான.இந்த லிஸ்ட் உபயோகமா இருக்கும் என்று நெனைக்கிறேன்.   மேல பொட்டிகுள்ள Inception படம் பத்தி சொல்லியிருக்குறத பத்தி இங்க படிக்கலாம். நா ரொம்ப ரசிச்சு எழுதுன பதிவு. 


Existentialism: இருத்தலியல்


இதுகுறித்து FBல நா ஒண்ணு கேட்டிருந்தேன்.அதுக்கு ராஜேஷ் சொல்லியிருந்தது – செம.... போங்க. வாய்ப்பேயில்லை. சுலபமா புரியுற விஷயத்த நீட்டி முழக்கி குழப்பி அடிக்கிறது ஒருவகை(உ.த.எ ஞாபகம் வந்தா அது தற்செயலானதே).கஷ்டமான விஷயத்த சுளுவா சொல்றது மற்றொரு வகை. சுஜாதாவிடம் எனக்கு பிடிச்ச (ஒரே)விஷயம் அதான். அதுபோல ராஜேஷ் ரொம்ப சிம்பிளா சொல்லியிருந்தார்.எனக்கு ஏற்கனவே existentialism குறித்து கொஞ்சம் தெரிந்திருந்தாலும் என்னமோ ஒரு குழப்பம் இருந்திச்சு.அதை டக்குனு அவுரு போக்கிட்டாரு.அதையும் இங்க பகிர்ந்தா எல்லாருக்கும் உபயோகப்படும் என்பதால்....

1)  Existentialism என்றால் என்ன ?

2)  ஏன் அது பெரும்பாலும் சோகமயமாகவே இருக்கு ?


3)  வெறும் சோகம் மட்டுமே வாழ்க்கை ஆயிறாது. அதுனால அதன் அடிப்படையில் இதை பார்ப்பதே தவறு என்று ஒரு கருத்து இருக்கே.
 

4) ஒவ்வொருத்தர் வாழ்வு சார்ந்த வெளிப்பாடு தான இலக்கியம்.அதுனால கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை (how the are existing or how they were existed) சோகமயமாதான இருக்கும் ?


1 . எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பதன் அடிப்படையே, மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றிய ஒரு பார்வை தான் என்பது என் கருத்து. நாம செய்யுற செயல்கள், செலக்ட் பண்ணுற வழிகள், அதுனால ஏற்படும் விளைவுகள் ஆகிய விஷயங்கள் பற்றிய ஒரு டீப் ஸ்டடி. ஆனா, இதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம் அப்படீன்னு டிஃபைன் பண்ணுற விதிகள் எதுவும் இல்லை. பொதுவா மனித வாழ்வு, துயரமாத்தானே இருக்கு? இதுக்கு சாரு ஒரு உதாரணம் கொடுத்துருக்காரு. ஒரு ராணுவ வீரன். அவனோட அம்மாவைப் பார்க்கப் பிரியப்படுறான். அப்ப, அவன் முன்னாடி ரெண்டு சாய்ஸ் இருக்கு. ஒண்ணு- நாட்டுக்காகப் போரிடுவது. இன்னொன்னு, போரை விட்டுட்டு, அம்மாவைப் போய் பார்ப்பது. ரெண்டும் சரிதான். ஆக, அவனோட முடிவு எதுவா இருக்கும்?இந்த ரீதில வாழ்வின் சாய்ஸ்கள் ,அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள், அதைப் பொறுத்து அமையும் விளைவுகள் ஆகியன பற்றிய ஒரு ஸ்டடி,எக்சிஸ்டென்ஷியலிஸம் எனப்படுகிறதுன்னு நினைக்கிறேன்.

2 . அது, பல சமயங்களில் சோகமயமா இருக்கு என்பது உண்மைதான். ஏன்? மனித வாழ்வு, அத்தனை பேருக்குமே சோகமயமாகத்தானே உள்ளது? ஒன்னை செய்யப் பிரியப்படுறோம். ஆனா அது நமக்கு அமையாம, வேற ஒண்ணுதான் கெடைக்குது. அப்ப, இந்தப் புது விஷயத்தை நாம சோகமாத்தான் எடுத்துக்குறோம். சிறுபத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டு, ஆனா அன்றாட வாழ்வில் அது முடியாம, வேற எதுலயும் இன்ட்ரஸ்ட் இல்லாம, கடைசில ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சி, பின் தற்கொலை செய்துகொண்ட மணிகண்ணன் (என்று நினைக்கிறேன்) பத்தி சாரு எழுதிருக்காரு. அதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம்.

3 . கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்வு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அந்தக் கஷ்டத்தை அவங்க எப்படி எதிர்கொண்டாங்க?காஃப்கா, தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியவர்களின் வாழ்க்கையைக் கவனிச்சா, அதுல ஒரு டக்கரான அங்கதம் இருக்கும். அது, அவங்க, தங்களைக் கஷ்டப்படுத்துகிற வாழ்க்கையை எள்ளி நகையாடுன வெளிப்பாடு.

                  ஆக, எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பது, எப்பவும் அழுவாச்சியாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை.அது,அவங்கவங்க அந்த உணர்வை வெளிப்படுத்துவதைப் பொறுத்தது.சார்லஸ் ப்யூகோவ்ஸ்கின்னு ஒரு இலக்கியவாதி இருந்தார்.அவரோட புத்தகங்களைப் படிச்சா,அவர் வாழ்க்கையை என்னமா என்ஜாய் பண்ணிருக்காருன்னு தெரியும்.ஆனா , மனிதர் சல்லிக்காசு கூட இல்லாம வாழ்ந்து செத்தவர்தான்.அவரோட நாவலான "Notes of a Dirty oldman" தான்   இப்ப படிச்சிக்கிட்டிருக்கேன்.பல இடங்களில்,அது அவரா இல்லை சாருவான்னு டவுட்டு வருது.இதுவும் எக்சிஸ்டென்ஷியலிஸம்தான். சார்த்தர் தன்னோட எக்சிஸ்டென்ஷியலிஸம் பற்றிய வியூவை,பின்னாட்களில் மாற்றிக்கொண்டுவிட்டார். ஆனா அதையும் வெளிப்படையா ஒத்துக்கொண்ட நேர்மையும் அவரிடம் இருந்தது.


                                                           
                                                  இந்த இசங்கள் பத்தி பதிவு எழுதக் காரணம், சரியோ தவறோ உக்காந்து பேசுனாதான தெரிஞ்சுக்க முடியும்.நானும் நெறய தெரிஞ்சுக்கலம்,அந்த சுயநலம்தான்.சினிமா குறித்து எப்புடி நம்ம இணையதளங்களில் இயங்குபவர்கள்,மற்றவர்களை காட்டிலும் சற்று விழிப்புடன் நெறைய உலக சினிமா குறித்து தெரிஞ்சு  இருக்காங்களோ (???), அதுமாதிரி எல்லாருமே சேர்ந்து இதுபோன்ற விஷயங்களையும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா நல்லாதான இருக்கும். அப்பறம் நாங்கலாம் தனிப்பிறவிகள் – விதிசமைப்பவர்கள்னு நாமளும் பீட்டர் வுடலாம் (Intellectual arrogance....ஹி....ஹி...). உலகத்தில ரெண்டே ரெண்டு  வகையான  ஆட்கள்தான் – வாய்ப்பு கெடைச்சவங்க, கெடைக்காதவங்க. அதுனால இதுபற்றி தெரிஞ்ச நண்பர்கள் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துக்கள சொன்னா எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்.
Film as dream, film as music. No art passes our conscience in the way film does, and goes directly to our feelings, deep down into the dark rooms of our souls.
- Ingmar Bergman

இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கான ஜாடோர் நடந்து கொண்டிருக்கிறது. உடல் துண்டு துண்டாக வெட்டப்படுகிறது. கழுகுகள் அழைக்கப்படுகின்றன.

வெட்டப்பட்ட உடல் – Mountain Patrol  குழுவைச் சேர்ந்த காவலாளி.தனியாக காவல் காத்துக்கொண்டிருக்கும் போது வேட்டைக்காரர்களால் பிடிக்கபட்டு கொல்லப்படுகிறான். Mountain Patrol. கிட்டத்தட்ட 5000அடி உயரத்தில் திபெத்திய மலைப் பகுதியில் அமைத்திருக்கும் 'பத்தாயிரம் மலைகளின் அரசன் என்றழைக்கபடும் "கோக்ஷில்" மலையின் கண்காணிப்புக் குழுவினர். இதில் முக்கிய விஷயம், அது அரசாங்கம் நியமித்த குழுவோ.....அல்லது வேறு அரசு சார்ந்த குழுவோ அல்ல.முற்றிலும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு.தொடங்கியவர் – முன்னாள் திபெத்திய படை வீரரான – ரிதாய். அப்படி ஒரு குழுவை அமைத்து மலையை கண்காணிக்கும் அளவிற்கு இவர்களை உந்தியது எது.ஆண்ட்லோப் அல்லது சிரு என்றழைக்கப்படும் அரிய வகை மான் அதிகளவில் நடமாடும் பகுதியே அது.பென்ட்லோப்ஸ் என்ற மானினத்தில் எஞ்சியிருக்கும் ஒரே இனமான சிரு உலகளவில் நடமாடும் ஒரே இடம், இந்திய – திபெத்திய – சீன – பாகிஸ்தான் மலைப் பகுதிகளில் தான். ஒருகாலத்தில் உலகளவில் பத்து லட்சம் சிருக்கள் இருந்தன. ஆனால், பேராசையுடன் கண்மூடித்தனமாக வேட்டையாடப்பட்டதால்,   நாற்பது ஆண்டுகளுக்குள்  பத்தாயிரத்திற்க்கும் கீழாக  குறைக்கப்பட்டது. ஷதூஷ் என்றழைக்கப்படும் அதன் தோலுக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டது.என்ன கொடுமை என்றால், கொல்லாமலே அதன் தோலை எடுக்க முடியுமென்றாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாத வேட்டையாடுபவர்களால் வெறித்தனமாக கொல்லப்பட்டது. அதை தடுக்க அமைக்கப்பட்டதுதான் குழு. ஒழுங்கான சம்பளம் இல்லை – உணவு இல்லை – இடம் இல்லை. இருந்தாலும் அவர்களை உந்தியது எது.விடை படத்திலேயே இருக்கிறது. 


                                                  1996. பீஜிங் நகரத்தில் இருந்து அந்த காவலாளி இறந்த நிகழ்வு குறித்து எழுத வருகிறான் பத்திரிகையாளன் கா.முதலில் அவனை ஏற்க மறுக்கும் ரிதாய், அவன் அவர்களது நோக்கத்திற்கு உதவுவதாய் கூறவே, தங்களுடன் அவனையும் வேட்டையாளர்களை பிடிக்கச் செல்லும் போது அழைத்துச் செல்கின்றார். அன்றிலிருந்து தொடங்குகிறது பல வியப்பான – விசித்திரமான – உருக்கமான – அதிர்ச்சியான அனுபவங்கள். மூன்று ஆண்டுகளாக ஒற்றை ஆளாய் தனியாக காவல் காக்கும் வீரன் -பேறுகாலத்தில் இரக்கமேயில்லாமல் கொல்லப்பட்ட மான்களின் எலும்புகள்-மலை மலையாக குவித்து வைக்கப்பட்டிருந்த மான் தோல்கள் -கைது செய்யப்பட்டவர்களுக்கும் காவலாளிகளுக்கும் இடையே நிகழும் நிகழ்வுகள் - பரிதாபத்திற்குரிய தோற்றத்தில் இருந்தாலும் எல்லாவகையான குசும்பும் செய்யும் ஒரு வேட்டைக்கார கிழவன் – மாணவனாக, செவிலியனாக இருந்து இக்குழுவிலும் வேட்டைக்கார கும்பலிலும் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் – ஒரு காதல் – கடும் பனிப் பொழிவுகள் - அனைத்திருக்கும் மேலாக, எத்தனை போராட்டங்களை சந்தித்தாலும் இழப்புகளுக்கு ஆளானாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் ரிதாய்,இந்த எல்லா பயணத்திலும் கா-வுடன் சேர்ந்து நாம் அனைவருமே பங்கேற்கிறோம். என்ன ஒரு இணக்கம்–ஒற்றுமை அக்குழுவினர்களுக்குள். பல்வேறு உயிரிழப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.இருந்தாலும் வேட்டைக்கார தலைவனை பிடித்தே தீருவது என்ற முடிவில் இருந்து பின்வாங்காத ரிதாய் உறுதியாக தன் பயணத்தை தொடருகிறார்.முடிவில் அவரும் கொல்லப்படுகிறார். எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த கா,தனது கட்டுரையின் மூலம் அப்பகுதிக்கு விடிவு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.


                                                    ஏன் உணவு இல்லாமல் – சுத்தமாக பணம் இல்லாமல் – அன்றாட வாழ்கையே கேள்விக்குறியாக இருந்த நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த குழு போராட வேண்டும்.காரணம் – இயற்கையின்பால் அவர்களுக்கு இருக்கும் நேசம்.  நாய், எலி, பல்லி, பன்றி, யானை, காக்கை, மாடு  என்று எல்லா விலங்குகளையும் பறவைகளையும் – பெயரளவில் – கடவுள்களாக வழிபடும் நம் நாட்டு ஆட்கள் இல்லை அவர்கள். யானை ஊருக்குள் புகுந்தது, இயற்கையின் கோரத் தாண்டவம் – இதெல்லாம் தான் இயற்கை பற்றிய நமது மதிப்பீடுகள். ஆனால் அவர்களுக்கு இயற்கைதான் வாழ்க்கை (இந்த இடத்தில வேதாந்தா போன்ற நிறுவனங்கள் செய்யும் அட்டூழியங்களும் நம் நாட்டில் மலைவாழ் பூர்வகுடிகள் படும் அவஸ்தையும் ஞாபகம் வந்து தொலைக்கிறது). 8500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறப்பது நமக்கு மூன்றாம் பக்க செய்தி.அவர்களுக்கு ஒரு மான் இறப்பதே கடும் துக்ககரமான நிகழ்வு.ஆனால் அதே ஆட்கள் தான் வேட்டையாடுவதிலும் உதவி புரிந்தனர். காரணம் – வறுமை.இருந்தாலும் அத்தகைய கடும் வறுமையிலும் தடம் மாறாமல் இத்தகைய முயற்சி எடுத்த அந்த குழுவினரும் ரிதாயும் எப்பேர்பட்ட மனிதர்கள்.அவர்களைப் பற்றி இப்படத்தின் மூலமாக தெரிந்து கொண்டது நிஜமாகவே நிறைவாக இருந்தது.

 
                
                                      இந்தப் படம், ஒரு சிறந்த திரைப்படத்திலிருந்து மகத்தான கலைப்படைப்பாக எனக்குத் தெரிகிறது (என்னளவில்). 2004லாம் ஆண்டு படம் வெளிவருகிறது. சீனாவில் மட்டுமல்லாமல் திரையிடப்பட்ட அனைத்து நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. விளைவு – மான் வேட்டை கடுமையாக தடை செய்யப்பட்டதுடன்,அவ்விடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் சீனா அறிவிக்கின்றது. அதுமட்டுமில்லால், ஆண்ட்லோப் மானின் தோல் விற்பனையையும் உலக நாடுகள் தடை செய்கின்றன. இதைவிட ஒரு படைப்பு என்ன செய்து விட முடியும்.

                                  படத்தை National Geographic Channel தான் தயாரித்து உள்ளது.இன்னொரு முக்கிய அம்சம், வெகு சிலரே படத்தில் தேர்ந்த நடிகர்கள். மற்ற அனைவரும் அங்குள்ள மக்களே.  படத்தின்  இயக்குனர் LuChuan . உலகளவில் சமகாலத்தின் முக்கியமான படைப்பாளியாக அறியப்படுகிறார். இதுவரை மூன்று படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.அதில் முக்கியமான படம் –  City of Life & Death (நாங்கிங் படுகொலைகளை பற்றியது)இதுபற்றி நண்பர் ஒருவர் எழுதுகிறேன் என்று சொல்லியிருப்பதால், மற்றொரு படமான "The Missing Gun" பற்றி விரைவில் எழுதுகிறேன்.இந்த இயக்குனர் எனக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டார். ஜப்பான்–கொரிய படங்களின் இயக்குனர்கள் தெரிந்த அளவிற்கு சீன இயக்குனர்கள் எனக்கு தெரியாது, Zhang Yimou (Red Sorghum, The Raod Home, House of flying daggers புகழ்) நீங்கலாக.இந்த இயக்குனரை தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

                                   இந்த படத்திற்காக படக்குழுவினர் பட்ட கஷ்டம், ரொம்பவும் உருக்கமானது. இயக்குனர் உட்பட பெரும்பாலானவர்கள் நோய்வாய்ப்பட, 32 வயதேயான படக் குழுவினர் ஒருவர் விபத்தில் இறக்கவும் நேரிடுகிறது.ஆனாலும் அனைத்தையும் கடந்து படத்தை எப்படியும் எடுத்தே தீருவது என்ற மனவுறுதி நெகிழச் செய்கிறது.அசல் கலைஞன்.


                                      ஒளிப்பதிவாளர்................என்ன சொல்ல. இன்றிரவே ஒரு சுனாமி வந்து என்ன சுருட்டிக் கொண்டு போனாலும், பல்வேறு கடைசி எண்ணங்களுக்கு மத்தியில்–இவரது காட்சிகளும் வந்து போகும். இயற்கையை இயற்கையாகவே காட்டியிருக்கிறார். வாய்பேயில்லை. என்னவொரு தாக்கம். ஒரேயொரு குறைச்சல்,எந்திரனில் மச்சு-பிச்சுவை வன்புணர்ச்சி செய்தது போல ஒரு வன்புணர்வு காட்சி வரும் என்று மிகுந்த ஜொள்களுக்கு இடையே எதிர்பார்த்தேன். ஒன்றும் வராதது,பெருத்த ஏமாற்றமே. கடைசியாக ஒன்று, இந்த படத்தில் வரும் இறப்புகள் – எந்த உயிரினமாக இருந்தாலும் – அனைத்தும் நிஜம். நடந்தவைகளே. படம் பார்க்கும் போது கண்டிப்பாக கஷ்டம் ஏற்படும் (மறுபடியும் பெர்க்மானின் மேற்கோளை படிக்க வேண்டுகிறேன்). Truth is naked & it will (should) hurt.
Has all this been staged for me?   Am I expected to play a role?  What kind of play is this?   Let's hope it's not a tragedy.                    
   
            ஒரு ரஷ்ய நாட்டினன் - அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒரு விபத்திற்குப் பிறகு என்னவென்றே புரியாத நிலையில் விழிப்படைகிறான். இனி, அவனது குரலுக்கும் நமது குரலுக்கும் மொழியில் மட்டுமே வேறுபாடு இருக்கப் போகிறது.அவனது கண்கள் வழியாகவே அங்கு நடக்கும் காட்சிகளை காணப் போகிறோம்.


அதுவொரு அரண்மனை. நிறைய கூட்டம். மக்களின் ஆடைகளை வைத்து காலம்: 1800 என்று கணிக்க வேண்டியுள்ளது. யாரும் அவன் முன்னேறிச் செல்வதை தடுக்கவில்லை.அவன் பேசுவதும் அவர்களுக்குக் கேக்கவில்லை. ஒருவேளை அவர்களின் கண்களுக்கு அவன் தெரியவில்லையோ ?அட, அவனைப் போலவே மற்றொரு மனிதனும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறான். அவன் கேப்பதற்க்கு முன்னர் – அம்மனிதன் “இது எந்த இடம் ?” என்று வினவுகிறான். அதைவிட ஆச்சரியத்திற்குரிய வகையில், தான் ரஷ்ய மொழியில் பேசுவதே வியப்பளிப்பதாக அவன் கூறுகிறான்.அவனும் இவனுடனே சேர்ந்து செல்கிறான்.........இல்லை.. இவன்தான் அவனுடன் சேர்ந்து அந்த இடத்தை சுற்றிப்பார்க்கிறான். ஓ...அடுத்த அறையில்......அவர்தான்......பீட்டர் தி கிரேட்...வழமை போல யாரையோ அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்.புது மனிதர் அக்காட்சியை காண சகிக்காமல், அடுத்த அறைக்குள் நுழைகிறார்.அங்கே நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.கேதரின் தி கிரேட் தலைமையிலான ஆட்சி போல. யாரவன் ? ஆரம்பம் முதலே அவர்களை பின்தொடர்ந்து செல்கிறானே...நண்பரே...அவனை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கிடையே அந்த அரண்மனை – ரஷ்யாவின் புகழ் பெற்ற பீட்டர்ஸ்பர்கின் ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம் என்பதை கண்டுகொள்வதில் அவர்களுக்கு பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. புது மனிதரான மார்கஸ் டி குசினுடன்
அவன் (பின்னர் அவர்கள் அருங்காட்சியகத்தின் நிர்வாகிகளோட பேசும் போது அவர் பெயர் தெரியவந்தது) தொடர்ந்து பயணிக்கும் போது பல சுவாரசியமான பேச்சுகள் நடைபெறுகிறது. அருங்காட்சியகத்தில் எந்தவொரு சிறந்த கலைப்படைப்பை பார்த்தாலும், அது பெரும்பாலும் ஐரோப்பியர்களுடையதாகவே இருக்க வேண்டும் என்ற ரீதியிலே மார்கஸ் பேசுகிறார். ஏன் ரஷ்யர்கள் ஐரோப்பிய படைப்புகளின் நகல்களாகவே தங்கள் படைப்புக்களை உருவாக்குகிறார்கள் என்று பகடி செய்ய தவறவில்லை. அதேசமயம் சிறந்த ரஷ்ய படைப்புகளை பாராட்டவும் தவறவில்லை.முன்பு பின்தொடர்ந்த ஆள் அங்கும் அவர்களைத் தொடர்கிறான்.                                           பேச்சு சுவாரசியமாக நகர்கிறது. பீட்டர் தி கிரேட் இந்நகரத்தை நிர்மாணித்ததை குறித்தும் அவரது நோக்கம் குறித்தும் காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள்.மேலும் அங்கிருக்கும் ஓவியங்களை குறித்தும் அளவளாவிய ஈடுபாட்டுடன் உரையாடுகிறார்கள்.பின்தொடர்ந்து உளவு பார்க்கும் ஆள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறான். அடுத்து பக்கம் நகர்கிறார்கள். ஈரான் மன்னர் ரஷ்ய மன்னன் நிகோலாய் Iயிடம் தனது நாட்டில் ஏற்பட்ட ஒரு சமபவத்திற்காக வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.மறு அறையில் பிரமாதமான விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே மன்னன் நிகோலாய்  2 தனது குடும்பத்தினருடன் உணவருந்துவதையும் காண்கிறார்கள். அவன் தடுத்தும் கேளாமல் மார்கஸ் ஒரு அறைக்குள் நுழைகிறார்.அங்கே லெனின்க்ராட் தடுப்பு போரில் பாதிப்படைந்த மனிதனை சந்திக்க நேர்கிறது.தனக்குத்தானே சவப்பெட்டிகளை தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறான்.அதிர்ச்சியடைந்த இருவரும் வெளியே வருகின்றனர்.

அருங்காட்சியகத்தின் நிர்வாகி இறந்து போன தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.போருக்கு பிறகு எத்தகைய சிரமமேற்ப்பட்டது என்பதை குறித்துதான் பேசிக்கொண்டிருந்தனர். அதேவேளையில் அற்புதமான இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி ஆரம்பம் ஆகின்றது.புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் கூட அதிலிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து மார்கசிடம் அவன் முன்னேறிச் செல்லலாமா என்று கேக்க.....வேண்டாம்..தான் இங்கேயே தங்க விரும்புவதாக கூறுகிறார். அவரில்லாமல் அவன் மட்டும் மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறான். ஆனால், அதே இடத்திலா என்று உறுதியாக கூற முடியாது.

பீட்டர் தி கிரேட் I ( 1672 – 1725):
இவர்தான் ரஷ்யாவின் புகழ் பெற்ற பீட்டர்ஸ்பர்க் நகரை நிர்மாணித்தவன்.எவ்வளவுக்கு எவ்வளோ திறமையானவனாக இருந்தானோ அந்தளவிற்கு கொடுமைக்காரனாகவும் இருந்தான்.சொந்த மகனே அவனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளான்.

கேதரின் தி கிரேட் II (1729 – 1796):
இந்த கதை நடைபெறும் ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம் இவரது முயற்சியால் உருவானதே. மிகுந்த கலாரசனை உள்ளவர்.ரஷ்யாவின் பல்வேறு கலைப்படைப்புகளுக்குக் காரணமாக இருந்தவர்.

ஈரான் மன்னர் ரஷ்ய மன்னன் நிகோலாய் Iயிடம் வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி:
இது ஏன் இவ்வளோ முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்நிகழ்ச்சிக்கு பிறகுதான் ஈரான் போன்ற நாடுகளின் மீது The Great Russian imperialism என்று சொல்லப்படும் ஆதிக்கம் தொடங்க அச்சாரம் அமைத்த நிகழ்வு என்பதால் .

லெனின்க்ராட் blockade:
லெனின்க்ராட் என்பது வேறொன்றுமில்லை – பீட்டர்ஸ்பர்க் நகரம் தான். இரண்டாம் உலகப் போரின் சமயம் நடைபெற்ற மிகமுக்கிய நிகழ்வு, ஜெர்மன் படைகள் இந்நகரத்தை கைபற்றும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை தழுவியது. அதற்காக ஜெர்மன் படைகள் September: 8: 1941 அன்று ஆரம்பித்த முற்றுகை எப்போது முடிவடைந்து தெரியுமா January: 27: 1944 அன்று. ஒருநாள் இல்லை – ஒரு மாதம் இல்லை – ஒரு வருடம் இல்லை, 872 நாட்கள். இத்தனை நாட்களுக்கு பிறகும் அந்நகரம் சரணடையவில்லை. கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தாக சொல்கின்றனர்.

மார்கஸ் டி குசின்:
பிரெஞ்சு நாட்டவர். பயணியாக ரஷ்யா வந்து – 1839இல் – அப்போதைய அரசர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி பகடி செய்து கட்டுரைகள் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக வேவு பார்க்கப் பட்டார். அக்காலகட்டத்தில் பீட்டரின் ஆட்சியல் உளவு பார்த்தல் உச்சத்தில் இருந்தது. எதனால் படத்தில் உளவு ஆசாமி வருகிறான் என்று இப்போது புரிந்திருக்குமே.  Empire of the Czar: A Journey Through Eternal Russia அவர் எழுதிய புத்தகம் தான். என்ன எதிர்த்தாலும் ரஷ்யாவை அதன் கட்டமைப்பிற்காக பெரிதும் விரும்பினார்.

ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம்:
                       படத்தின் ஹீரோ. உலகின் பழமையான – பெரிய அருங்காட்சியகத்தில் ஒன்று. மொத்தம் 3 கோடி கலைப் படைப்புக்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது தனியாக ஒரு ரயிலை அமர்த்தி பல படைப்புக்களை அங்கிருந்து வெளியேற்றி பத்திரப்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 300 பகுதிகள் உள்ளன. பல்வேறு உலகப் புகழ் பெற்ற கலைபடைப்புகள் உள்ளன. ரஷ்யாவின் தலைசிறந்த அருங்காட்சியகமாக இன்றும் திகழ்கிறது.

இத்திரைப்படம் குறித்து:
  • ஒரே ஷாட். Action – Cut . அவ்வளவே. மொத்தம் 96 நிமிடங்கள். தொடர்ந்து ஒரே ஷாட். எவ்வித editingம் கிடையாது.
  • ஒருசில காட்சிகளில் மட்டும் – காட்சியமைப்பு கருதி சற்றே மெருகேற்றப்பட்டவைகள், கம்ப்யூட்டர் உதவியுடன். மற்ற அனைத்தும் அப்படியே பதிவு செய்யப்பட்டவைகள்.
  • இதற்காகவே பிரத்தியேகமாக கேமெரா தயார் செய்துள்ளனர். கேமேராவை கையாண்டிருக்கும் டில்மன் பட்னரை குறித்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
  • கடும் உடல் சிரமங்களை தாண்டி அவர் நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலத்தை படத்தை பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.
அலெக்சாண்டர் சுக்ரோவ்:

                 என்ன மாதிரியான ஒரு இயக்குனர் ! நாலு வருடங்களாக பக்காவான திரைக்கதை தயார்செய்து, ஒரே நாள் மட்டுமே அனுமதி கிடைத்த அருங்காட்சியகத்தில் – முதல் மூன்று முயற்சிகள் தோல்வி அடைந்தும் – நாலாவதாக வெற்றிகரமாக இந்த மகத்தான சாதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார். மிக முக்கியமான இயக்குனர். ஹிட்லர் – லெனின் – ஜப்பானின் அரசர், இம்மூவரையும் குறித்து இவர் எடுத்துள்ள படங்கள் மிக முக்கியமான திரைப்படங்கள்.


இவரது அனைத்து படங்களுமே முக்கியமானவைகளே. குறிப்பாக Mother & Son என்ற இவரது படம் உலகப் புகழ் பெற்றது. இவரது பெயரை நண்பர்கள் எங்கு பார்த்தாலும் அத்திரைப்படத்தை வாங்குமாறு தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன்.பெரும்பான்மையான ரஷ்ய இயக்குனர்களை போல – ரசனைக்குரிய பிரமிக்கத்தக்க காட்சியமைப்புகளுக்கு சொந்தக்காரர்.இவரது இந்த பேட்டியை படியுங்கள். கலை அல்லது திரைப்படம் குறித்த இவரது பார்வை அற்புதம்.

Russian Ark:

இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது – editing இல்லை, இதுபோன்ற காரணங்களுக்காக மட்டும் எனக்கு பிடித்துப் போகவில்லை. படத்தின் தாக்கம்...என்னமாதிரியான ஒரு உணர்வலையை எழுப்பியது, அதுவே காரணம். 300 ஆண்டு கால ரஷ்யாவின் கலை – கலாச்சாரம் – மகிழ்ச்சி – சோகம் – அதிகார போதை – இசை – உற்சாக நடனங்கள் – அனைத்திலும் நானே பங்கேற்றேன். அதற்கு மற்றொரு முக்கிய காரணம், கேமெரா பார்வையாளனின் கோணத்திலேயே நகர்ந்தது. படத்தில் மொத்தமே நான்கு கேமெரா கோணங்கள் – பார்வையாளன் (நாம்), பிரெஞ்சு பயணி குசின், அவரை உளவு பார்க்கும் உளவாளி மற்றும் அருங்காட்சியகம்.இயக்குனர் அவ்வருங்காட்சியகத்தை ஒரு உயிர்ப்புள்ள விஷயமாக கருதியே அனைத்தையும் கையாண்டுள்ளார்.அனைத்து கதாபாத்திரங்களும் – போர்ஹேயின் கதையில் வருவதைப் போன்றே காலத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்திலேயே வந்து செல்கின்றனர். Realistically magical. ஆன்டன் செகாவின் கதைகளை போல.ஓவியங்களிடம் கேமெராமேனும் இயக்குனரும் ஒவ்வொரு முறையும் சாவகாசமாக உரையாடுகின்றானர். பதிலுக்கு அவ்வோயியங்கள் பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. புரிந்திருந்தால் இப்படி பதிவு எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.உங்களுக்கு ஏற்கனவே ரஷ்ய வரலாறு – இலக்கியங்கள் (என்னைப் போன்று கொஞ்சத்திலும் கொஞ்சமே தெரிந்திருந்தால் கூட போதுமானது) தெரிந்திருந்தால் நன்றாக படத்தை ரசிக்க முடியும்.

ரஷ்யாவின் பெரிய இயக்குனர்களின் படங்களில் ஒருவித உள்ளார்ந்த தேடல் இருப்பதை அனைவரும் அறிவோம்.இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.செர்கே ஐசன்டைனின் புகழ் பெற்ற ஓடாசா காட்சியமைப்பு எப்படி படிகளில் நடந்ததோ, அதைப்போன்ற இப்படமும் திரளான மக்கள் படிகளில் இறங்கி வருவதுடன் முடிவடைகிறது. ஆனால், ஒன்று editing உத்தியின் தோற்றுவாய். மற்றொன்று சமகால சினிமாவின் non-editingயின் மகத்தான சாதனை.குறிப்பாக 837 நடிகர்களுக்கு மத்தியில் எப்படி சுழன்று சுழன்று மக்கள் வெள்ளத்திற்கு இடையே எடுத்தனர் என்பதை நினைக்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது.படம் ரஷ்யாவை அதீதமாக புகழாமல் அனைத்து விஷயங்களையும் சமமாக விமர்சிக்கின்றது. ஐரோப்பிய கலாசச்சார மோகம் – பிற நாடுகளின் மீது ஆதிக்கம் – சொந்த நாட்டிலேயே அடக்குமுறை – சர்ச்களின் போக்கு போன்றவற்றையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.குசினின் எள்ளல் மிகுந்த வசனங்கள் வாயிலாக நாம் இவற்றை தெரிந்து கொள்ளலாம்.மேலும் காட்சியமைப்பே பல விஷயங்களை உணர்த்தி விடுகிறது. குறிப்பாக – கேதரின் மகாராணி பனியின் நடுவே ஊர்ந்து கொண்டே ஓடும் காட்சி – அரசாட்சி முடிவுற்று கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் மெய்மறக்கச் செய்யுமாறு படமாக்கப்பட்டிருக்கும். படத்திற்கு ஏன் ஆர்க் என்று பெயர் ? அற்புதமான கடைசி காட்சியில் கடலை காண்பிக்கும் போது உங்களுக்கு புரியும் – புரிய வேண்டும்....படம் உங்களை முழுவதும் ஈர்த்திருந்தால்.........
தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பழக்கமில்லாத சத்தம் கேட்டு விழிக்கிறீர்கள்.பார்த்தால், ஏதோவொரு பெயர் தெரியாத கடற்கரையில் இருக்கிறீர்கள். கடலுக்கு எதற்கு பெயர் ? கடல் – கடல் தான். அதுபோன்ற சூழலில் என்ன மாதிரியான மன உணர்வு உங்களுக்கு ஏற்படுமோ – அதே உணர்வு படம் முடியும் போது கடைசி காட்சியின் போது எனக்கு இருந்தது. நித்தியிடம் குண்டலினி பயிற்சிக்கு செல்பவர்களுக்கு இந்த படத்தை குறித்து சொல்ல வேண்டும். அந்தரத்தில் சுலபமாக மிதக்கலாம். கடைசியாக படம் பார்க்கும் முன் ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். Life cannot be edited.