Empty your mind, be formless. Shapeless, like water. If you put water into a cup, it becomes the cup. You put water into a bottle and it becomes the bottle. You put it in a teapot it becomes the teapot. Now, water can flow or it can crash ..... Be water my friend

மதுரை - 1970களிள் ஒரு நாள். ஒரு அதிரடியான திரைப்படம் மாப்ளை விநாயகரில் வெளியாகிறது.விருதுநகரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் - படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர் - மதுரைக்கு வந்து அந்தத் திரைப்படத்தைக் காண்கிறார். மிகப்பெரிய அளவிலான ஒரு தாக்கத்தை அவருள் அந்தப் படம் உண்டு பண்ணுகிறது.மறுபடியும் அந்தப் படத்தை அடுத்த நாளும் பார்க்கிறார்.ம்ஹும்...அப்படியும் ஆர்வம் அடங்கவில்லை.இதுபோல 3 - 5 - 7 - 8 என்று எட்டு முறை அந்தப் படத்தை பார்ப்பதற்காகவே விருதுநகரில் இருந்து மதுரை வந்து செல்கிறார். அவர் - என் அப்பா.அந்தப் படம் - என்டர் தி டிராகன். எங்கப்பா முதல்முதலாக அந்தப் படத்தை பார்க்கும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலை - குதூகலம் அனைத்தும் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் இப்படத்தை மறுபடியும் காணும் போது அவருக்கு இருக்கும். போன தலைமுறையை சேர்ந்த அவரைப் போன்ற ஆட்களை எந்த அளவிற்கு அப்படமும் ப்ரூஸ்லீயும் ஈர்த்திருந்தனரோ - அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் என் தலைமுறையும் - இதற்கடுத்த தலைமுறையையும் ப்ரூஸ்லீ முழுவதுமாக வசீகரித்துள்ளார். நான் எத்தனையோ ஹீரோக்களை திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் ப்ரூஸ்லீ அளவிற்கு வசீகரமான Screen- Presence உள்ள ஹீரோவை நான் பார்த்ததில்லை. இந்த கட்டுரையை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால் How Bruce Lee Changed the World  என்ற ஹிஸ்டரி சேனலின் டாகுமெண்டரியை காண நேர்ந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.


டாகுமெண்டரியின் முக்கிய நோக்கம் லீயின் பிறப்பு வளர்ப்பு, திரைப்பட வாழ்க்கை இவைகளை மட்டுமே பேசும் ஆவணப்படமாக இல்லாமல், லீயின் தனித்தன்மை - வாழ்க்கை குறித்து அவரது கோட்பாடுகள் - அவரது வாழ்க்கை முறை - முக்கியமாக லீயின் வரவால் உலகளவில் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைகளின் தாக்கம் குறித்தே.அதனாலேயே இதை ஒரு முக்கியமான டாகுமெண்டரியாக நான் கருதுகிறேன்

ஹாங்காங்கில் தன் வீட்டருகே ஒரு தெருச் சண்டையில் லீ மும்முரமாக இருந்தார்.அந்த சண்டையில் அவர் தோற்க நேரிடுகிறது.லீ முதலும் கடைசியுமாக தோற்ற சண்டை அது ஒன்றுதான்.அதற்குப்பிறகு யாராலும் எந்த சூழ்நிலையிலும் அவரை தோற்கடிக்க இயலவில்லை. தோல்வியுற்றது அவரை பெரிதும் பாதிக்கிறது. அதற்ககாகவே ஒரு குங்-ஃபூவை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்து ஒரு மாஸ்டரை நாடுகிறார். அவர்தான் Yip Man என்றழைக்கப்பட்டவராவார்.வுங் சுன் என்ற கலையின் நிபுணர்.லீயின் வாழ்வில் பெரிய மாறுதலை உண்டு பண்ணியவர்.அவர் வெறும் சண்டை முறைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் வாழ்வியல் முறை சார்ந்த தற்காப்பு கலைகளையே பெரிதும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.அவரது சொற்கள் லீயின் மனதில் வெகு ஆழமாகவே பதிந்து விட்டன. தெருச் சண்டைகளுக்காக பள்ளியில் மிகுந்த “நல்ல” பெயர். பலமுறை அவரது பெற்றோரை ஆசிரியர்கள் கூப்பிட்டு கண்டிக்க செய்தனர்.ஆனாலும் அவர் அடங்குவதாய் இல்லை.பெரிதாக ஒன்றும் படிக்கவும் இல்லை.ஆனால் இசை - நடனங்களில் சிறு வயது முதலே மிகுந்த நாட்டம் உள்ளவர்.


                       1959, தன் பதினேழு - பதினெட்டு வயதில் கையில் சொற்ப பணத்துடன் ஹாங்காங்கிலிருந்து அமெரிக்காவிற்கு வருகிறார். வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் நாடக மேற்படிப்பு மேற்கொள்கிறார். இடையே அனைத்து நாட்டின் தத்துவங்களையும் அளப்பரிய ஆர்வத்துடன் படிக்கிறார். இதற்கிடையே காதல் திருமணமும நடைபெறுகிறது. குங்-ஃபூ கற்றுக் கொடுக்கும் பள்ளியை ஆரம்பித்து ஓரளவு அந்தப் பகுதியில் பிரபலமடைய ஆரம்பிக்கிறார்.ஒரு கண்காட்சி போட்டியில் அவரைப் பார்த்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் ஒருவர் The Green Hornet என்ற ஆங்கிலத் தொடரில் நடிக்க அழைப்பு விடுக்கிறார்(இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ஒரு நிகழ்வு ரொம்பவே முக்கியமானது. அதை பிறகு பார்ப்போம்).பின்னர் படிப்படியாக முன்னேறி Enter the dragon என்ற அவரது நான்காவது படமும் வெளியானது. The rest is history. ஆனால் அந்த படம் வெளியான போது அவர் உயிருடன் இல்லை. வெறும் தற்காப்பு கலைகளுடன் மட்டும் நின்று விடாமல் நடனம், பாக்சிங் போன்றவைகளிலும்  திறமையான ஒருவராக விளங்கினார். தேடித்தேடி படிப்பதிலும் ஆர்வம் உடையவர். அவர் ஒரு Perfectionist. இதுதான் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் தான் நினைத்த மாதிரி வரும் வரை எந்த விஷயத்தையும் விடுவதில்லை. அவர் இருந்திராவிட்டால் ஹாங்காங் சினிமா வெளிய தெரிய இன்னும் பல ஆண்டுகள் கூட ஆகியிருக்கும். மேலும் அவரது தாக்கம் எந்த அளவிற்கு – எந்தெந்த துறைகளில் எல்லாம் இருந்தது என்பதை இந்தப் படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள். மேலும் ரெண்டு விரல்களாலேயே தண்டால் எடுப்பது – ஒரு குத்தில் எதிராளியை கதிகலங்கச் (One inch punch) – மின்னல் வேகத்தில் தாக்குவது என்று அவரின் திறமைகள் அதிகம். அவர் தாக்கும் வேகத்தை படம் பிடிக்க முடியாமல் 34 ஃபரேம்களாக குறைத்து படமேடுத்தனர். இதெல்லாம் கடும் உழைப்பினால் வந்தவைகள்.உழைப்பு என்றால் அளப்பரிய உழைப்பு. மனம் சொல்வதை உடல் செய்யும் உழைப்பு. விசையுறு பந்தினைப் போல ஒரு உடம்பு.The Green Hornet தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய நிகழ்ச்சி ஏற்பட்டது என்று சொன்னேன் இல்லையா...ஒரு கராத்தே போட்டிக்கு லீயை ஒருவர் சண்டைக்கு வரச் சொல்லி சவால் விட லீயும் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார்.ஆனாலும் மிகுந்த மன உளைச்சல்.ஏன்.....சண்டையில் ஜெயிக்க மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆனதே அதற்குக் காரணம்.தான் இதுவரை கற்றதை வைத்து ஒருவரை இவ்வளவு நேரங்கழித்தா தோற்கடிப்பது என்று ஒரே வருத்தம். இதுவே அவரை ஜி-குன்-டோ என்று அழைக்கப்படும் பல்வேறு வகையான மார்ஷல் ஆர்ட்களின் கலவையான ஒரு சண்டைப் பயிற்சி முறையை கண்டறியத் தூண்டியது. மேலும் உடற் பயிற்சிகளில் மேலதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மைல் அளவிற்கு ஓடுவதும், சொந்தமாக பல்வேறு உபகரணங்களை வடிவமைப்பதும் என்று பல பயிற்சிகளில் ஈடுபட்டார்.

ஜி-குன்-டோ:
ஒரு ஜென் கதை.சிறந்த வில்லாளி ஒருவன்,தான் சிறப்பான வில்லாளன் தானா என்ற சந்தேகத்தை போக்கிக்கொள்ள ஜென் குருவை நாடுகிறான்.எல்லா பயிற்சியும் முடிந்து வந்தவனிடம் "எங்கே உனது வில்லும் அம்புகளும் ?" என்று ஒருவன் கேட்க, இனி தனக்கு அது தேவையில்லை என்று கூறிச் செல்கிறான். வில் - அம்பு எதுவும் இல்லாமலேயே பார்வையாலேயே அனைத்தையும் வீழ்த்தும் ஆற்றல் உடையவனாக இருந்தான்.உண்மையான ஆற்றல் கொண்டவன் எப்போதும் தன்னை வெளிப்படுத்துவதில்லை. பலவீனமானவனும் பயந்தவனும் மட்டுமே ஆற்றல உள்ளவர்கள் போல் தங்களை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.இந்தக் கதையில் வரும் வில்லாளியைப் போன்ற மனநிலை கொண்டவர்தான் லீ.
இது போன மாதம் என் ஊரில் எதேச்சையாக கண்ணில் தட்டுப்பட்டு எடுத்தது

ஜி-குன்-டோவின் அடிப்படை கோட்பாடே மேற்ககூறிய கதையில் அடங்கியுள்ளது. The art of fighting without fighting, style without style – இதுவே அதன் சாரம்சம்.எதிராளி நம்மை தாக்குவதற்கு முன்பாகவே மனதளவில் அவர்களை தோற்கடிப்பது.இதை விட ஒரு சண்டையில் உச்சம் என்ன இருக்க முடியும். அதையும் மீறி அடிக்க வருபவரை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்த முடிகிறது என்பதும் முக்கியம்.அதற்கு ஒரு கலையை மட்டும் உபயோகிப்பது போதுமானதாக இருக்காது என்று கருதி பல கலைகளில் இருந்தும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டார். இதை நான் மேல கூறியுள்ள மேற்கோளில் காணலாம்.சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவது இந்தக் கலையின் முக்கியக் கோட்பாடாக இருந்தது. மேலும் ஜி-குன்-டோ நடைமுறை சண்டைகளில் பெரிதும் கவனம் செலுத்தியது. தேவையில்லாத சண்டைகளில் ஆற்றலை செலவழிக்கக் கூடாது என்பதும் இதன் இன்னொரு முக்கிய அம்சம்.இதை லீயின் பல சண்டை காட்சிகளில் காணலாம். முதல் அடியை பெரும்பாலும் அவர் அடிப்பது இல்லை.

இதுபோன்று தனக்கேன தனி கோட்பாடுகளுடன் வாழ்ந்தவர்தான் லீ.அதுவே அவரையும் பிற ஆக்சன் ஹீரோக்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது.வெறும் உடல் பலத்தை மட்டும் நம்பாமல் – உண்மையான கோபமும் பலமும் மனதில் இருந்தே வர வேண்டும் எனபதை அவரை பார்க்கும் யாராலும் தெரிந்து கொள்ள முடியும். Enter the dragon படம் வந்த பிறகு தமிழ்நாட்டில் எந்த மாதிரி சூழ்நிலை நிலவியது என்று அப்போது இருந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.ஏன்...அசோகமித்திரனே கூட லீயை பற்றி எழுதிய கட்டுரையை நான் படித்திருக்கிறேன். உலகளவில் அந்த படம் வந்த பிறகு அனைவரும் சட்டையில்லாமல் கண்ணாடி முன் நின்று கத்திப் பார்ப்பது வழக்கமாகிப் போனது.முக்கியமாக பெண்களும் தற்காப்புக் கலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். பல ஒல்லி உடம்பு "சுள்ளான்களுக்கு" அவர் அளித்து தாக்கம் மிக அதிகம். இன்றும் கூட லீயின் உருவம் தாங்கிய பெயர் பலகைகளை பல ஊர்களில் - குறிப்பாக மதுரையில் - பார்க்கலாம்.மைக்கல் ஜாக்சனின் மூன்-வாக்கையும் லீயை போல கண்ணாடியை பார்த்து நெஞ்சை விறைப்பாக வைத்து அழகு பார்க்காதவர்களும் – அது எந்த நாடாக இருந்தாலும் - மிகச் சில பேரே இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எந்த வேலையில் ஈடுபட்டாலும் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக ஈடுபடும் அனைவரும் ப்ருஸ் லீக்கள் தான்.

பி.குகள்:
  • அவரது முக்கிய குருவான Yip manயைப் பற்றி ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட உலகப் புகழ் பெற்ற ஹாங்காங்கின் Wong - kar -wai எடுக்கும் The Grandmasters என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவரயிருக்கிறது. தனக்குள் இருக்கும் லீயின் வெறியனுக்காக இந்த படம் என்று அவரே கூறியிருக்கிறார்.
  • இந்த வீடியோக்களையும் பாருங்கள்.Every child is an artist. The problem is how to remain an artist once we grow up.
- Pablo Picasso


                                

                                     ஒரு பிறழ்ந்த ஊர் (dystopian society). அந்த ஊர்ல ஒரு விஞ்ஞானி இருந்தார்.அதிகப்படியான அறிவுள்ள விஞ்ஞானி.அவருக்கு மனைவி குழந்தைகள்னு யாருமில்ல.இந்த சூழ்நிலை ரொம்பவும் அலுப்பா இருக்கவே....மனைவியையும் குழந்தைகளையும் தன் அறிவியல் திறமையினால பரிசோதனை கூடத்துல தயார் செய்கிறார்.பரிசோதனைல என்ன கோளாறு ஏற்பட்டுச்சோ அவர் நெனச்ச மாதிரி ஏதுவும் வரல. மனைவி வளர்ச்சியில்லாத ஒரு அடி உருவமுள்ள பெண்மணியாகவும், மகன்கள் - மரபணு நகலாக்க (Cloning) முறையில் உருவாக்கப்பட்டவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறைபாட்டுடன் இருக்கின்றனர். வெறுத்துப்போன நம்ம விஞ்ஞானி மேலும் ஒரு மூளையை மட்டும் உருவாக்கி தண்ணிதொட்டிகுள்ள வெச்சு வளர்க்க ஆரம்பிக்கிறார்.அதுவும் போதாம இன்னொரு மனிதனை - தனக்கு இருக்கிற எல்லா ஆற்றலையும் அறிவையும் கொண்டு - உருவாக்குகிறார். அந்த மனிதனின் பெயர் - கிரான்க் (இந்த கதைய படிக்கிறவர்கள் இவன ஞாபகம் வெச்சுக்கோங்க). ஒருநாள் ஏற்படும் தகராறுல கிரான்கும்,அந்த பெண்மணியும் சேர்ந்து நம்ம விஞ்ஞானி மண்டையில அடிச்சு கடலுக்குள்ள தள்ளிற்றாங்க.ஆனாலும் எப்படியோ உயிர் தப்பிக்கிறாரு,அம்னீசியா குறைபாட்டுடன்.கடலுக்கடியில என்னமோ பண்ணி வாழ்கையை ஓட்டிகிட்டிருக்கார்.அதே ஊர்ல மோசமான சயாமீஸ் இரட்டையர்கள் (Siamese Twins - உடம்பு ஒட்டியே பிறந்த இரட்டையர்கள்)இருக்காங்க.அவுங்க வேல - குழந்தைகளை நல்ல முறையில் தயார் செஞ்சு சீரும் செம்மையுமா - திருட வைக்கிறது. அந்த திருட்டு குழந்தைகளின் கும்பல்ல மியாட் என்ற தலைவி அந்தஸ்துல ஒரு பெண் குழந்தையும் இருக்கு.இந்த குழந்தைகளால, ஒருநாள் ரோட்டுல வித்த காமிச்சிகிட்டு இருக்குற ஒரு ஆள் சாக நேரிடிகிறது. செத்த ஆள்ட வேல செஞ்சுகிட்டு இருக்குறவந்தான் - ஒன் (One). எப்புடியாப்பட்ட சங்கிலில பிணச்சாலும் அத ஓடச்சுகிட்டு வெளிய வரக்கூடிய திறமை உள்ளவன்.மீச வெச்ச கொழந்த - என்ற வாக்கியத்துக்கு பொருத்தமானவன். அவுங்க கூடவே - வீட்டவிட்டு காணாம போய் இவுங்க கையில கிடச்ச-டென்ரீ என்ற சின்ன குழந்தையும் இருக்கான்.நம்ம ஒன் இந்த குழந்தை மேல உசுரயே வெச்சிருக்கான். இப்புடி போய்கிட்டு இருக்கு இவுங்க வாழ்க்கை.

தொட்டி மூளை
ஆறு க்ளோனிங்கள்


ஆங்......நம்ம கிரான்க்க ஞாபகம் வெச்சுக்க சொல்லியிருந்தேனே....அவன பத்தி ஒரு ரொம்ப முக்கியமான விஷயத்த சொல்லாம விட்டுட்டேன். இவன்ட என்ன பிரச்சனைனா,விஞ்ஞானி இவன உருவாக்குனதிலிருந்து - இவன் பிறந்ததிலிருந்து இவனுக்கு கனவுகளே வரதில்லை. கூடவே அழுகையும் வரதில்ல. அதுனால ரொம்ப வேகமாவே வயசு இவனுக்கு கூடிகிட்டு போகுது.இத எப்புடி தடுக்கன்னு யோசிச்சு...ஒருவழிய கண்டுபிடிக்கிறான். உலகத்திலேயே அற்புதமான தூய்மையான கனவுகள காணக் கூடியவர்கள் யாரா இருக்க முடியும்?குழந்தைகளைத் தவிர.அதுனால அந்த ஊர்ல இருக்குற குழந்தைகள கடத்திட்டு வந்து அவுங்க கனவை திருடப் பார்க்கிறான்.இருந்தாலும் எல்லா முயற்சியும் தோல்வி அடைஞ்சுகிட்டே வருது.ஒரு குழந்தையும் அவன் முயற்சிக்கு ஏதுவா இல்லை.


Cyclops
One & Miyat

Cyclops என்ற கண்பார்வை அற்ற கும்பல் ஒண்ணும் அந்த ஊருக்குள்ள இருக்கு. அவுங்களுக்கு "மூன்றாவது கண்" என்ற செயற்கை கண்ணை தயாரிச்சு தந்து பதிலுக்கு அவர்களை குழந்தைகள கடத்திட்டு வர பயன்படுத்திக்கிறான் நம்ம கிரான்க்.இப்புடி ஒவ்வொரு குழந்தையா அந்த ஊருலயிருந்து காணாம போய்கிட்டிருக்கு. Cyclops ஒரு தடவ நம்ம டென்ரீயவே கடத்தி கொண்டுபோயிர்றாங்க. டென்ரீய பாத்த கிரான்க் ரொம்பவே சந்தோசமாயிடுறான். ஏன்னா அவன் நெனச்ச மாதிரி-அவனின் ஆராய்ச்சிக்கு ஏத்த மாதிரி டென்ரீ இருக்கான். ஒன் - துடிச்சுப் போயிர்றான். எப்படியாவது அந்த குழந்தைய மீட்க துடிக்கிறான். அவனுக்கு இதுல திருட்டு குழந்தைகளும் குறிப்பா மியாட்டும் ரொம்பவே உதவி செய்யுறாங்க.இருந்தாலும் பல கடுமையான சோதனைகள சந்திக்க வேண்டியிருக்கு. இதற்கிடையில அம்னீசியாவால பாதிக்கபட்டிருந்த நம்ம விஞ்ஞானிக்கும் நினைவு திரும்புது. இவர்கள் எல்லாம் சேர்ந்து கிரான்க்ட இருந்து டென்ரீயயையும் பிற குழந்தைகளையும் மீட்க முடிஞ்சதா.....ஒன் - டென்ரீ கூட சேர்ந்தானா.....ஒன் மேல அளப்பரிய பாசம் வச்சிருக்கும் சிறுமி மியாட் என்னானாள்.....


உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. Stunning visualsன்னு சொல்வாங்களே........அதுக்கு உதாரணம் இதுதான். எல்லா காட்சிகளும் ஒரு தேர்ந்த சர்ரியலிச ஓவியம் போலவே இருந்தது. இந்த படத்தை குறித்து நெட்டில் படிக்கும் போது - ஒரு சிறுவனின் @ சிறுமியின் பாதி கலைந்த கனவு (Half- Remembered dream) மாதிரியே இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளது தெரிந்தது. அது நிஜமும் கூட.பெரும்பாலான குழந்தைகளுக்கு அஞ்சு வயசுக்கப்பறம் - எல்லா நாட்டிலுமே - nightmare என்று சொல்லக்கூடிய பயமுறுத்தலான கனவுகளே வருகிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. அந்த மாதிரி ஒரு nightmarish yet enjoyableஆனா ஒரு அனுபவமே இந்தத் திரைப்படம். மேலோட்டமாக இந்த படத்தை பார்த்தால் ஒரு சாதரணமான குழந்தைகள் திரைப்படம் என்றே இருக்கும். ஆனால் போகிற போக்கில் பல கேள்விகளை எழுப்பும் என்பது நிச்சயம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்பவும் அருமையான முறையில் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளோனிங்காக ஆறு பேரை வெளிப்படுத்தியவரின் நடிப்பு அபாரம். ஒன் – ஏற்கனவே நமக்கு பரிச்சயமான Ron Perlman (Hell boy) தான். கிரான்க்காக வருபவர் Daniel Emilfork.

           இந்த படத்தின் டைரக்டர்கள் Marc Caro & Jean - Pierre Jeunet. இவர்கள் இதற்கு முன்னர் எடுத்த Delicatessen படமும் சிறப்பான, இதே மாதிரி அமைப்பு கொண்ட என்ற திரைப்படம். குறிப்பாக இப்படத்தை இயக்கிய Jean - Pierre Jeunet மற்றுமொரு திரைப்படம்தான் - Amelie . Del Toro மாதிரியே இவரது படங்களும் குழந்தைகளுக்கான படங்களில் மிகுந்த தனித்தன்மை வாய்ந்தவை.

எனக்கு தெரிந்த வரை படத்தில் வரும் கிரான்க்கை விட நிறைய பெற்றோர்களது நடவடிக்கைகள் இம்சையாக இருக்குது.கிரான்க்காவது குழந்தைகளின் கனவுகளைத் திருட மட்டுமே செய்கிறான்.இங்கே பெற்றோர்கள் குழந்தைகளை கனவு காணவே விடுவதில்லையே. ஒண்ணு, ஸ்ட்ராவ போட்டு அவுங்க கனவுகளை உறிஞ்சிர்றாங்க.இல்ல,இங்க் ஃபில்லர்ல சொட்டு சொட்டா தங்களது கனவுகளை குழந்தைகளின் தலைக்குள் விடுறாங்க.குழந்தைகளுக்கும் சேர்த்தே அவுங்களே கனவு காண ஆரம்பிச்சிர்றாங்க. Materialistic வகையான கனவோ இல்ல அப்துல் கலாம் வகையான கனவுகளையோ மட்டுமே நிறைய குழந்தைகள் காண வேண்டி இருக்கு. இதுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு குழந்தைகள் வெயில்ல காஞ்ச தேங்காய் சிரட்டை மாதிரி ஆயிறாங்க.

City of lost children. நான் மேல கொடுத்துள்ள மேற்கோளை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.இந்த படத்தின் தலைப்புக்கும் அதற்கும் உள்ள தொடர்பு புரியும்.ஒருவேள நமக்குள்ள உள்ள குழந்தைத்தனம் வயது வளர வளர காணமல் போவதைத்தான் lost childrenன்னு அர்த்தப்படுத்துறாங்களோ. கிரான்க் – குழந்தை ரெண்டுமே நாமதான.வெறும் கார்டூன் படங்கள் பார்ப்பதும்,அப்பாவியா பேசுவதும் மட்டுமே குழந்தைத்தனம் ஆயிராது.யார்டையாவது சண்ட போட்டா – தூங்கும் போதே அத மறந்திட்டு – அடுத்தநாளே பழைய மாதிரி பேசிக்கும் மனசு குழந்தைகளோடது. அது வேணும். 

1940களில் ஒரு நாள்:
                        ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்....கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.

1944:
             ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.

1959:
               திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.


“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.


         தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.

பி.யூ.சின்னப்பா:

                                                  
M.T.B - ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை 
                     
பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்:


                                   
கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக  - அந்த ஏழு ஆண்டுகளிலும்  மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் - மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு "தீராக்காதலி" என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.

எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:

எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா...எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்" என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?. புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலம் என்பது கழங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்

                                                                                                                           – மனோன்மணீயம்


                                                                             
இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு - Circle of Zen - உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு - பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட - சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்" இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு யாராவது ஒரு இசை விமர்சகர் ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி.

ஏனென்றால் சாரு அவர்களே, இந்த புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ - சாரு அவர்களைத் தவிர்த்து - எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் - காதல் - இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயத்தை எழுத்தாளர்களாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

              இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் - அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்தும் தாராளமாக நீங்களும் சொல்லலாம்.

Books are narcotic
- Franz Kafka
சென்னை மக்கள் அனைவரையும் தங்கள் நினைவு நாடாக்களை 23-4-2011, ஒரு சனிக்கிழமைக்கு சுழற்றுமாறு வேண்டுகிறேன். அதற்கு முந்தைய நாள் வரை வெயில் வாட்டி எடுத்ததையும் ஆனால் அன்று மட்டும் காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததையும்,மேலும் பத்து மணி சுமாருக்கு அனைவரையும் ஒருவித சிலிர்ப்பு தாக்கியதையும்.....ஞாபகம் வருகிறதா...வேற ஒண்ணுமில்ல நா அப்ப தான் ரொம்பநாள் கழிச்சு சென்னைல காலடியெடுத்து வெச்சேன்...

ரெண்டு வேலைக்காகவே வேலூரிலிருந்து கிளம்பினேன்.நண்பர் எஸ்.கேவை பார்க்கவும், மிக முக்கியமாக புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்ப்பதும்தான் அந்த வேலைகள்.எங்கப்பா இருக்கும் வரை போய் பார்த்துட்டு வர அடிக்கடி சொல்லுவார். அப்ப முடியாம போச்சு. சரி இப்பயாவது பார்க்கணும்னு ஒரு வெறில கிளம்பிட்டேன். கலைஞர் எனக்கு தெரிஞ்சு - அவருக்கே தெரியாம - தப்பித் தவறி ஏதாவது இந்த ஆட்சில நல்லது பண்ணியிருக்காருன்னா, கண்டிப்பா இந்த நூலகத்தை அதுல ஒண்ணா சொல்லலாம். அப்படியே ஷாக் ஆயிட்டேன்.


முதல்ல ஒரு விஷயம். நூலகம் கார்பரேட் ஆபிஸ் மாதிரி இருக்கு – அதுனால என்னை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் அந்நியமாகப்பட வாய்ப்புண்டு. நம்ம கிராமப்புறங்களில் இருக்கும் நூலகங்களில், அந்த ஒடஞ்ச சேரில் உக்கார்ந்து பழகியவர்கள், குறிப்பா கொஞ்சம் வயதானவர்கள் சட்டென்று இது போன்ற பிரம்மாண்டங்களுக்கு மாறுவது சற்றே சங்கடம். இத வேறு மாதிரியாகவும் பார்க்கலாம், எத்தனை நாளைக்கு பழைய மாதிரியே நூலகங்களை வெச்சிருப்பது.புதுசா நாமளும் இதற்கு மாறிக்கலாமே.மரபுக்கவிதையை ரசித்தது போல புதுக்கவிதையையும் ரசிப்போம். இன்னும் இது ஜென் கவிதை வரை செல்வது நம் கையில் தான் உள்ளது.


தெற்காசியாவிலேயே ரெண்டாவது மிகப் பெரிய லைப்ரரி - 3.75 லட்சம் பரப்பளவு கொண்ட கட்டிடம் - ஒன்பது மாடிகள் - 5 லட்சம் நூல்கள் - கருத்தரங்கு,கலையரங்குன்னு செம கட்டமைப்பு. மேற்கொண்டு நூலக அமைப்பு பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் அறிய இங்கே சொடுக்கவும். தரைத்தளத்தில் பார்வைத் திறன் பாதிப்படைந்தோருக்காக அருமையான முறையில் ப்ரைலி வடிவப் புத்தகங்கள் உள்ளன. அதுபோக ஒலிப் புத்தகங்களும் உள்ளன.நீங்கள் யாரேனும் அத்தகைய பாதிப்படைந்தோரை சந்திக்க நேர்ந்தால் இது குறித்து கண்டிப்பாக சொன்னால் நன்றாக இருக்கும். இதே தளத்தில் சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவும் உள்ளது. ஒவ்வொரு தளமும் மூன்று பிரிவுகளாக இருக்கு

முதல் தளம் -  சத்தியமா சொர்க்கம் தான். குழந்தைகள் தளம். உள்ள நொலஞ்சா கையெழுத்து போடும் டேபிளே என் முட்டிக்கு கூட இல்ல...சரின்னு குனிச்சு கையெழுத்து போடலாம்ன்னு பார்த்தா, ஒரு அம்மா வேகவேகமா ஓடிவந்து "சார்..இது குழந்தைகளுக்கு மட்டும், சுத்தி மட்டும் வேணா பார்க்கலாம்"ன்னு ஒரு குண்ட போட்டாங்க..."நா பார்க்க தான் பெரிய ஆளு, மனதளவில் குழந்தைன்னு " எப்புடி அந்த ஆண்ட்டிக்கு புரிய வைக்க. திரும்பின பக்கமெல்லாம் கார்ட்டூன் சித்திரங்கள் - குட்டி நாற்காலிகள் - மேஜைகள் - காமிக் புத்தகங்கள் - கம்ப்யூட்டர் கேம்ஸ்கள்ன்னு எடமே ஜே..ஜேன்னு இருந்தது. ஒவ்வொரு கொழந்தையும் ஆர்வமா பல புத்தகத்த புரட்டிகிட்டிருந்து. கண்களில் அவ்வளோ சந்தோஷம், வியப்பு. இந்த பிரிவுல அடிக்கடி குழந்தைகள் நிகழ்ச்சிகளும் நடத்துறாங்க. பிரபலமான வேலு சரவணன் போன்றோரும் வந்து நிகழ்ச்சி நடத்துறாங்க. அதுபோக கதை சொல்லும் நேரம்ன்னு குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சியும் நடக்குது. அவுங்க வலைத்தளத்தில் இது குறித்து அடிக்கடி அறிவிப்பு செய்யுறாங்க.தயவுசெய்து குழந்தைகளுடன் இதுவரை அங்க போகாதவங்க ஒருமுறை இந்த தளத்திற்காகவாவது போங்க. ஒரே ஒரு குறையா நான் பார்த்தது, தமிழ் புத்தகங்கள் கம்மியாக இருந்ததுதான்.
நன்றி @ சுட்டது: http://annanootrandunoolagam.blogspot.com

ரெண்டாவது தளத்தில (தமிழ் புத்தகங்கள், செம்மொழி புத்தகங்கள்) அரிய நூல்கள்னு ஒரு பகுதி இருக்கு. செமத்தியா இருந்தது. 1850களில் வந்த நூல்கள் கூட இருந்ததன.இன்னும் பழைய நூல்கள் - அடையார் நூலகத்தில் இருப்பது - மின்நகல் எடுத்து வெச்சிருக்காங்க.தவற விடக்கூடாத பகுதி. அதே தளத்தில "ஆளுநரின் நன்கொடை நூல்கள்"ன்னு ஒரு பிரிவு இருந்திச்சு. அதுல ந.முத்துசாமி எழுதிய நூல்கள் எல்லாம் இருந்தது. பர்னாலா தமிழ் படிக்குதுன்னு அன்னக்கு தான் மச்சான்ஸ் தெரிஞ்சுது. 

அரிய நூல்கள்
அனைத்து தளங்களிலும் செமையான Roof Gardenனும் உண்டு.எல்லா தளங்களில் இருக்கும் பிரிவுகள் பத்தி அவர்கள் வலைத்தளத்திலேயே இருக்கு.பாத்து படிச்சுக்கோங்க. இப்பதான் ஒவ்வொரு புத்தகங்களா ஒழுங்கு படுத்திகிட்டிருக்காங்க.கூடிய சீக்கிரம் அதுவும் முடிந்து, அங்க போற எல்லாருக்குமே ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை இந்த நூலகம் தரும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. இதுல என்ன ஒண்ணுனா, வலைத்தளத்தில் இந்த நூலகம் குறித்து தேடிய போது பரவலாக யாரும் எழுதிய மாதிரி தெரியவில்லை. மொக்க படத்துக்கெல்லாம் அடிச்சுபிடிச்சு விமர்சனம் எழுதுறோம். இந்த மாதிரி விஷயங்களையும் அப்பப்ப எழுதுனா ரொம்ப நல்லாயிருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

நெட்டில் தேடியபோது கிடைத்தவைகள்:ஒருவேளை புத்தகங்களோ நூலகங்களோ பிடிக்காத ஆட்கள் - இருப்பாங்கன்னு தோணல - இருந்தாங்கன்னா, அவர்கள் போக வேற சில காரணங்களும் இருக்கு...
  • முழுவதும் குளிரூட்டப்பட்ட இடம் - செமத்தியான சோஃபாக்கள் - இந்த வெயிலுக்கு இதை விட இலவசமாக ஒரு அருமையான இடம் கிடைப்பது அரிது.
  • போற வரவங்கள வேடிக்கைப் பார்த்தல் - இதற்கு அழகுத் தமிழில் இன்னொரு பெயரும் இருக்கு. 
  • உங்க ஷூவோ - காலணியோ நல்ல தரமானது என்றால் அந்த புது தரையில் தாள லயத்துடன் ஒரு சத்தத்தை எழுப்பும். அத வெச்சு உங்களது ஷூவின் தரத்தை கண்டுபிடிச்சுடலாம் (சிரிக்காதீங்க. உண்மைதான்). மூன் வாக் கூட முயற்சி செய்யலாம். நா முயற்சி செஞ்சத பார்த்து ஒரு பொண்ணு வீல்ன்னு வாய பொத்திக்கிட்டு ஓடிருச்சு (அது வாயத்தான்)
  • கான்டீன் இன்னும் செயல்பட ஆரம்பிக்கல.பாத்துக்கோங்க
நன்றி @ சுட்டது: http://annanootrandunoolagam.blogspot.com
ஆகவே, பெரியோர்களே தாய்மார்களே....புத்தகத்தையோ நூலகங்களையோ பத்தி நா ஒண்ணும் புதுசா சொல்லிறப் போறதில்லை. ஒரு நூலகம் - சிறைச்சாலை, நூலகங்கள் ஒரு வத்தி குச்சி - விளக்கு இந்த மாதிரி மொக்க உதாரணங்கள் காட்டி கடுப்படிக்க விரும்பவில்லை. உங்களுக்கே தெரியும் புத்தகங்களுக்கும் நூலகங்களுக்கும் எவ்வளோ அளப்பரிய சக்தி வாய்ந்தது என்று.....ஏன் 1981ல் யாழ் நூலகத்தை எரித்தார்கள், ஏன் ஹிட்லர் அத்தனை புத்தகங்களை கொழுத்தினான்....என்னைப் பொறுத்த வரை ஒரு ஊரிலுள்ள மக்களின் மனநிலையை அங்கிருக்கும் நூலகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.நம்மூர் நூலகங்களில் பாக்யாவிற்க்கு இடமிருக்கு. மட்டற்ற மகிழ்ச்சி. ஆனா, உயிரெழுத்து, உயிர்மை, காலச்சுவடு போன்றவற்றுக்கு இடமில்லை.அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எதற்கும் இடமில்லை. மேலும் இதுவரை நான் பார்த்த நூலகங்களில் பணியாற்றுபவர்கள் புத்தகங்களின் மீது அவ்வளவு ஈடுபாடு காட்டாதவர்களாகவே இருக்கிறார்கள். தேவையேயில்லாமல் கடிந்து விழுபவர்களைக் கூட சந்தித்திருக்கிறேன்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் - புத்தகங்களில் ஆர்வமுடையவர்கள் - யாரக் கேட்டாலும் நூலகங்களை பத்தி கத கதையா சொல்லுவாங்க...எட்டு மணிக்கு நூலகம் திறந்தவுடன் பேப்பர் படிக்கவே ஒரு கூட்டம் இருக்கும். Employment News கூட வாங்க காசில்லாம நூலகங்களில் வந்து ஒருவரி விடமா படிக்கும் ஆட்கள் இன்னமும் உண்டு. அரசுத் தேர்வுகளை எழுதவேண்டி நூலகங்களே கதி என்று கிடப்பவர்களும் உண்டு.எங்கப்பா அப்படி படித்தவர்தான்.வரி விளம்பரங்களை மட்டுமே படித்துவிட்டு செல்லும் ஆட்களும் இருக்கிறர்கள். அது ஒரு தனி உலகம். சில புத்தகங்கள் அதிகப்படியான கவனம் பெறும்.சிலது வாங்கினதிலயிருந்து யாருமே தொடாம கிடக்கும். சிலது மேற்பார்வைக்கு நல்லாயிருக்கும். உள்ள.....சிலது உலகத்தை மறக்கச் செய்யும். சிலது உலகத்தை வெறுக்கச் செய்யும். எழுதினவர்களை வெறுக்கச் செய்யும் புத்தகங்கள் அநேகம்.சிலது வேறு உலகத்தை காட்டும். சிலது நாம் வாழும் உலகத்தின் நிதர்சனத்தைக் காட்டும். சில புத்தகங்கள் கண்ணாமூச்சி ஆடும்.  ஒவ்வொரு முறையும் நான் ஒளிச்சு வெச்சிட்டு வந்த புத்தகம் அடுத்த தடவை அங்கே இருந்ததில்லை.ஆனா ஒண்ணு, யாருக்குமே உபயோகமில்லாதா புத்தகம் என்று ஒன்று உலகில் இல்லவேயில்லை. நம்ம வயது ஆட்கள்ட அவுங்க ஊருல நூலகம் எங்க இருக்குன்னு கேட்டுப்பாருங்க....நிறைய பேருக்கு தெரியாது. இது நான் கண்ட உண்மை. நல்லவேள - எனக்கு எங்கப்பா இருந்தார். தப்பிச்சேன். 

எனக்கு ஒரே ஒரு வருத்தம் - எங்கப்பா இது போன்ற இடங்களை ரொம்பவே விரும்புவார். இங்க வரணும்னு ரொம்ப ஆசைப்பட்டார்.

பி.கு:  
  • பார்வை திறன் பாதிப்படைந்தவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கென்றே பிரத்தியேகமாக - அருமையான இடம் இங்குள்ளது என்பதை மறக்காமல் சொல்லுங்கள். 
  • தயவுசெய்து - இதுவரை போகாதவர்கள் - குழந்தைகளை கூட்டிகிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போக முயற்சியுங்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
  • இதிலுள்ள படங்கள் – குழந்தைகள் தளம் தவிர – நான் எடுத்தவைகள். போட்டோ எடுக்கக் கூடாது. இருந்தாலும் தெரியாம எடுத்துட்டேன்.