ஒருவழியாக அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடந்தே விட்டது. இன்செப்ஷன் படத்தை நல்ல தரமான ப்ரின்ட்டில் நேற்றுதான் பார்க்க முடிந்தது. படம் ரிலீஸ் ஆன போதே தியேட்டருக்கு அடிச்சுபிடிச்சு போனா நம்ம ராமநாராயணனின் படத்துடன் “The Last Airbenderபடத்தின் போஸ்டரே இருந்தது. இருந்தாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு கவுன்டரில் விசாரித்த போது இன்செப்ஷன் அடுத்த வாரம் தான் இங்க ரிலீஸ்  என்ற  அதிர்ச்சிகரமான தகவலைச் சொன்னார்கள். The Last Airbender டிக்கெட் இருக்கு..தரட்டான்னு இன்னொரு அதிர்ச்சிகரமான கேள்வியை கேட்டார். ஏற்கனவே அந்த படத்தின் ட்ரைலர் பார்த்திட்டே கொல்லிமலை பக்கம் ரெண்டு நாள் பதுங்கிட்டேன். இப்படியாக எனக்கும் நோலனுக்குமான சந்திப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. நேற்றுதான்(இந்த நேற்று - ரெண்டு வாரங்கள் முந்தி) திருப்தியாக நல்ல ஒரிஜினல் ப்ரிண்டில் பார்த்தேன்.


              ஏற்கனவே பல ஜாம்பவான்களும் இப்படத்தை பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி எழுதிவிட்டதால் எனக்கு படம் ஏற்படுத்திய தாக்கத்தை மட்டும் கூறுகிறேன். நான் ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். சிறிது ஏமாற்றமே மிஞ்சியது.ஒருவேளை சப்-டைட்டிலுடன் பார்த்ததால் வந்த வினையோ..Memento அளவிற்கு இந்தப் படம் என்னை ஈர்க்கவில்லை. படத்தின் முக்கிய திருப்பங்களில் ஒருவித deliberateness இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.சிறிய அளவே ஏமாற்றமே தவிர பல விஷயங்கள் கையாளப்பட்ட விதம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. குறிப்பாக நம் ஆழ்-மனதின் எண்ணங்களை நம்மால் ஒருபோதும் கட்டுக்குள் வைக்க இயலாது என்ற விஷயம். அப்பறம் இன்னொரு விஷயம்..ஏற்கனவே Paprika என்ற அனிமேஷன் திரைப்படம் இதே கதைக் கருவுடன் வந்துள்ளதாகவும்...நோலன் அதிலிருந்து சுட்டதாகவும் ஒருபேச்சிருக்கிறதே..யாராவது விளக்கினால் தேவலை..

       கனவு – என்றவுடன் எனக்கு உடனே வேறு பல விஷயங்கள் ஞாபகத்திற்கு வரும்.அதில் குறிப்பிடத்தகுந்த மூன்று விஷயங்களை இங்கே பகிர ஆசைப்படுகிறேன். இதற்கு மேலும் தெரிந்து கொள்ள நம் எஸ்.கேவைத் தொடர்புக் கொள்ளவும்.

தமிழ்மறை:
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

இதற்கு உங்களுக்கே அர்த்தம் தெரிந்திருக்கும். இதில் முக்கியமானதாக நான் நினைப்பது, இந்த குறள் உள்ள அதிகாரம் -  நிலையாமை

சல்வடோர் டாலி:

இருக்கு ஆனா இல்ல – அதாங்க Surrealism - அந்த வகை ஓவியங்களில் மிகக் கைதேர்ந்தவர். இம்சை அரசன் மாதிரி மீசை வைத்திருப்பார்.“உலகத்தின் இயக்கத்தை மீசையின் மூலமே உணர்கிறேன் என்று சொன்னவர். தன்னுடைய ஓவியங்களுக்கு கனவுகளே உந்துசக்தியாக இருப்பதாக சொன்னவர்.மக்கள் ஏன் அதிதமாக கனவு காண்பதில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டவர். புகழ் பெற்ற இயக்குனர் லூயி புனுவேலுடன் ஒரு படத்திலும் ஹிட்ச்காக்குடன் ஒரு படத்திலும்(Spellbound) சேர்ந்து பணியாற்றி உள்ளார். எனக்கு இவரைக் குறித்து மிகக் குறைவாகவேத் தெரியும். இவர் குறித்த ஒரு டாகுமெண்டரியை சு.மோகன் அவர்கள் கொடுத்துள்ளார். இன்னும் பார்க்கவில்லை. எதற்கு இவரைப்பற்றி ஆரம்பித்தேன் என்றால் இவரது இந்த ஓவியம் எப்போதுமே என்னை வசிகரித்துள்ளது. 


இந்த ஓவியத்தை எப்போது முதலில் பார்த்தேன் என்று நினைவுக்கு கொண்டு வர இயலவில்லை (இருங்க..கொஞ்சம் விட்டத்த பார்த்து யோசிக்கிறேன்...ஆங்...வாவ் 2000-ஆனந்த விகடன்). But persistence of vision is still persisting in my memory. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தைக் கூட இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். நம் கனவுகளும், ஏன் வாழ்க்கையும் கூட இதுபோல் ஒரு கரையும் வஸ்து தானே...முடிந்தால் இவரது பிற ஓவியங்களை இங்கே காணுங்கள்.அனைத்திலும் ஒரு கனவுத்தன்மை இருப்பதைக் காணலாம்.

ஜென்:
எனக்கு ஜென் கதைகள் மிகவும் பிடிக்கும்.அதில் இந்த கதை ரொம்பவும் பிடிக்கும்.

சீடன் கேட்கிறான் “என்ன ஆழ்ந்த யோசனை குருவே’”. குரு “நேற்று என் கனவில் ஒரு பட்டாம்பூச்சி வந்தது”. “இதில் என்ன வியப்பு குருவே சீடன். “ஒன்றுமில்லை.என் கனவில் பட்டாம்பூச்சியா இல்லை பட்டாம்பூச்சியின் கனவில் நானா என்பதுதான் குழப்பமே .

                                            எனக்கு ஒரு மொக்கையான எண்ணம் தோன்றுகிறது. Multiverse கோட்பாட்டை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.சூரியனின் கிரணங்கள் பூமியை அடைய 8 நிமிடங்கள் 31 நொடிகள் ஆகும். ரொம்ப தூரமான கிரகத்திலிருந்தோ...நட்சத்திரத்திலிருந்தோ இதைவிட அதிக நேரமெடுத்துக் கொள்ளும். ஒருவேளை அந்த உலகில் ஒரு பட்டாம்பூச்சி கனவு காண்கிறது – 3 நிமிடங்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ண அலைகள் பூமியை அடைய கண்டிப்பாக மாதங்கள் ஆகலாம். அதுவே 30 நிமிடங்கள் என்றால்...வருடங்கள் ஆகலாம். அதுதான் நம் வாழ்நாளோ...பட்டாம்பூச்சி உறங்குவது போலுஞ் சாக்காடு அது உறங்கி விழிப்பது போலும் நம் பிறப்பு.

சற்றே பெரிய பின் குறிப்புகள்:

  • ஒருமாதமாக செம வேலை. உடம்பு வேறு கொஞ்சம் சரியில்லை (நடந்தா கூடவே வருது). அதான் கொஞ்சம் இடைவெளி. புத்தாண்டு வாழ்த்து சொன்ன நண்பர்களுக்குக் கூட பதிலளிக்கவில்லை. புத்தாண்டு மீது அவ்வளவாக பிடிப்பில்லாததும் ஒரு காரணம். எனக்கு எப்படியோ லீவ் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்.