எந்தவிதமான உணர்ச்சிகளை இசையில் இதுவரை கேட்டிருப்போம் ? காதல்,காமம்,ரௌத்ரம்,வெறுமை,மகிழ்ச்சி,துக்கம்,பக்தி,உன்மத்தம் என்று போய்க்கொண்டே இருக்கும்.ஆனால், இதுவரை மலச்சிக்கலுக்கான இசையை எந்தவொரு வகையிலாவது கேட்டிருக்கீர்களா ? ப்ளூஸில் அதுவும் உண்டு.மலச்சிக்கல், நகைப்புக்குரிய விஷயமாகத் தோன்றினாலும், அதிகளவு மாத்திரைகளை உட்கொள்பவர்களிடம் ஆரம்பித்து மன அழுத்தம் இருப்பவர்கள்வரை அதுவொரு பெரும் பிரச்சனை.இந்தப்பாடல் ஆரம்பிப்பதே
  
Ladies and gentlemen, most people record songs 
about love, heartbreak, loneliness, being broke... 
Nobody's actually went out and recorded a song about real pain. 
The band and I have just returned from the General Hospital 
where we caught a man in the right position. 
We name this song: "Constipation blues".
---------------------------------------------------------------------------------

அமெரிக்காவின் வடமேற்குப்பகுதியில் இருக்கும் மாகாணம் – மிசிசிபி. க்ரேட் மைக்ரேசன்(Great Migration) குறித்தும் அது எங்கிருந்து தொடங்கியது என்பது குறித்தும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம். அந்தப் புலம்பெயர்வு ஆரம்பமான முக்கிய மாகாணங்களில் ஒன்றுதான் இந்த மிசிசிபி. மிசிசிபி – யாஸு, ஆகிய இரண்டு ஆறுகளுக்கே இடையே அமைந்த பகுதி.இரண்டு ஆறுகள்:அதுவும் பல நூற்றாண்டுகளாக வெள்ளம் வடிந்து வடிந்து மிகுந்த வளங்கள் ஏறிய ஒரு பகுதி.உலகளவில் அளப்பரிய மண்வளங்கள் கொண்ட பகுதியில் இதுவும் ஒன்று. குறிப்பாக பருத்தி விளைச்சல் அமோகமாக விளைந்யும் இடம்.அதோடு பல பணப்பயிர்களும் சேர ஆரம்பகால அமெரிக்க முதலாளிகளின் எல் – டொரடோவாக இப்பகுதி திகழ்ந்தது.இடம் அருமையான இடம்தான்.ஆனால்,வேலை செய்வதற்குரிய ஆட்கள்,போக்குவரத்து வசதிக்கெல்லாம் எங்கு போவது ? இந்த நோக்கத்திற்காகவே அடிமைகளாக ஆப்ரிக்கர்கள் "அழைத்து” வரப்பட்டனர். விவசாயத்தில் இருந்து சாலை செப்பனிடுதல் தொழிற்சாலை என்று அனைத்தும் அவர்கள் மூலமாகவே செழித்து வளரத் துவங்கியது;அவர்கள் வாழ்வைத் தவிர. ஆரம்பகாலங்களில் கடுமையான வேலைகள்.கடுமை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கானது.இதிலிருந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள இருந்த ஒரே வழி இசை.இரவு நேரத்தில் தனித்தனியாகவோ சிறிய அளவிலான கூட்டத்தின் நடுவிலோ இசைக்க ஆரம்பித்தனர். 

Country Blues: 
        ஆரம்ப கால அமெரிக்க இசையின் முக்கிய வகை இது. ஏற்கனவே அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில், 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிடார் வாசிக்கப்பட்டு வந்துள்ளது.கிராமப்புற சர்ச் பாடல்களுடன் கிடார் இசைக்கப்பட்டு வந்தது.இந்த வகை ப்ளூஸ் இசையே கன்ட்ரி ப்ளூஸ் என்றழைக்கப்படுகிறது.இந்த பெயர் கூட பின்னாளில் வந்ததே.

Delta Blues: 
              இது தான் அசல் ப்ளூஸ் இசையின் பிறப்பிடம்.மிசிசிப்பி டெல்டா குறித்த நீண்ட முன்னுரை இந்த இசை வகையை கருத்தில் கொண்டே எழுதியது. மிசிசிப்பி பகுதியின் ஆப்ரிக்கர்களாயே முழுக்க முழக்க வளர்ந்த இசை.ஏற்கனவே கன்ட்ரி ப்ளூஸ் சற்றே அந்தப் பகுதிகளில் பரவியிருந்ததால், அதிலிருந்த சில கூறுகளையும், தங்களுது சொந்த நாட்டின் சில கூறுகளையும் உள்ளடக்கியதாக இந்த வகையை இசைக்கத் தொடங்கினர். அடிமைமுறை ஒழிந்தவுடன் சர்ச்கள் போன்ற இடங்களுக்கு சரளமாக செல்லத் தொடங்கினர்.அங்கு ஏற்கனவே இருந்த காஸ்பல் இசையுடன் சேர்ந்த பின்னர் நடந்த வித்தைகள் குறித்து போன பதிவில் பார்த்தோம்.அதுமட்டுமின்றி வேற பல வகைகளுக்கும் இதுதான் பிறப்பிடம். இதிலும் கிடார் தான் முக்கிய இசைக் வாத்தியம்.மிக உணர்ப்பூர்வமான இசைக்கும் தன்மை இதிலிருக்கும்.

Chicago Blues: 
         1940களில் பெருமளவில் டெல்டா பகுதியைச் சேர்ந்த ப்ளூஸ் கலைஞர்கள் சிகாகோ போன்ற பெருநகரங்கள் நோக்கி புலம் பெயர ஆரம்பித்தனர்.மட்டி வாட்டர்ஸ் கூட அதுபோல சென்றவர்தான்.அதுகாறும் தனியாக இசைத்துக் கொண்டிருந்த நிலைமாறி குழுக்கள் என்ற கட்டத்திற்கு ப்ளூஸ் நகர்ந்தது இந்த காலகட்டத்தில் தான். கிடாருடன் ட்ரம்ஸ்,பியானோ போன்ற கருவிகள் ஒன்று சேர ஆரம்பித்தன. சிகாகோ – டெக்சாஸ் – லூசியான போன்ற பகுதிகளில் இந்த வகை இசை வெகுவேகமாக வளர ஆரம்பித்தது.இதனை கூட்டாக அர்பன் ப்ளூஸ்(Urban blues) என்று அழைப்பர்.

Electric Blues:
     1950களின் மிக முக்கியமான மாற்றம் ப்ளூஸ் இசையில் நடந்தது.எலெக்ட்ரிக் இசைக் கருவிகளின் எழுச்சி.அதிலும் மிகக் குறிப்பாக எலெக்ட்ரிக் கிடாரின் வடிமைப்பில் ஏற்பட்டிருந்த அளப்பரிய மாற்றம்.ஏற்கனவே 40களின் ஆரம்பத்திலேயே எலெக்ட்ரிக் கருவிகள் வந்துவிட்டாலும் நிறைய மாறுதல் – குறிப்பாக தரத்தில், ஏற்பட்டது இந்த காலகட்டத்தில் தான். 

Rock Blues: 
           பெயரை வைத்தே ஊகிக்க முடியும்.எலெக்ட்ரிக் ப்ளூஸின் அடுத்த கட்டம் இதுதான். பல பெரிய ஆட்கள் ஸ்டீவ் ரே வான் போன்றவர்கள் இதில் விற்பன்னர்கள்.தவிர Led Zeppelin, The Rolling Stones போன்ற குழுக்களின் உந்தசக்தியாக இருந்ததும் இந்த ப்ளூஸ் தான் என்று பாத்திருக்கிறோம்..அவர்களின் ஆரம்பகால இசை ராக் ப்ளூஸ் வகையையே சாரும். இது ஐந்தும் தான் மிகமுக்கியமான ப்ளூஸ் இசை வகை.

இவைகள் தவிர, பியானோ ப்ளூஸ்(க்ளின்ட் ஈஸ்ட்வுட் ஒரு அற்புதமான பியானோ ப்ளூஸ் இசைக் கலைஞர்) – ஜம்ப் ப்ளூஸ் என்ற முக்கிய பிரிவுகளும் உள்ளன.

மொத்தமாக பார்த்தோமேயானால் பதினைந்துக்கும் மேற்பட்ட ப்ளூஸ் வகைகள் உண்டு. அணைத்து வகைகளிலும் அதன் தாளகட்டையும் வாத்தியக் கருவிகளையும் அதனை வாசிப்பு முறைகளையும் வைத்தே வேறுபடுத்துகின்றனர்.உதாரணாமாக கிடாரை அழுத்தி மீட்டினால் கன்ட்ரி ப்ளூஸ், சற்றே லாவகமாக, மீட்டும் தன்மையினை மாற்றினால் டெல்டா,பியானோவுடன் சேர்ந்து வாசிக்கும் போது பியானோ ப்ளூஸ் என்று அதனதன் தன்மையினை பொறுத்து வகைப்படுத்துகின்றனர்.ஆனால், எந்த வகை இசையாய் இருந்தாலும் அதன் தோற்றுவாய் ஒன்றே ஒன்றுதான். பொங்கிப் பிரவாகம் எடுக்கும் உணர்வுகளை கைகளின் வழியே கடத்தி கிடார் தந்திக் கம்பிகளில் பாயவிடுவது.


முக்கியமான ப்ளூஸ் ஆளுமைகள்:

ராபர்ட் ஜான்சன்(Robert Johnson):


The man who sold his soul to the devil. மிசிசிபி டெல்டா பகுதியில், ஹைவே 61 – 49 சாலையில், இருள் அடர்ந்த ஓரிரவில் ஜான்சன் அமானுஷ்ய உருவம் ஒன்றை சந்திக்க நேரிடுகிறது.அதனை சந்திக்கவே நோக்கதிற்க்காகவே அவரங்கு சென்றது.ஜான்சன் கையில் இருந்த கிடாரை வாங்கி அந்த உருவம் சில பாடலகளை மீட்டுகிறது.திரும்ப அவர் கையில் அதனை தரும்போது இருவரின் விரல்களும் சிறிது உரசுகின்றன.அன்றிலிருந்து ஜான்சன் மிகத் திறமைவாய்ந்த ப்ளூஸ் இசைக் கலைஞராக உருவெடுக்கிறார். இந்த அளப்பரிய திறமைக்கு கைமாறாக அந்த உருவத்திடம் அவர் பண்டமாற்று செய்து கொண்டது – தன் ஆன்மாவை. ஜான்சன் பற்றிய புகழ்பெற்ற நாட்டார்  கதை இது.அவரே கூட தன் பாடல்களில் இதனைக் கூறியிருக்கிறார்.பல பேரின் உந்து சக்தியாக விளங்கியவர்.27 வயதிலேயே மரணமடைந்தவர். 


மட்டி வாட்டர்ஸ்(Muddy Waters):


இவர் இல்லாது இருந்திருந்தால், ராக் n ரோலின் துவக்கம் வெகு தாமதமாக தொடங்கியிருக்கலாம்.எலக்ட்ரிக் ப்ளூஸின் ஆரம்பகால முன்னோடி.Eric Clpaton, Led Zepplein என்று இவரைத் தன் குருவாக வரிந்தவர்கள் ஏராளம். எல்விஸ் இவரது பாடல்களை(யும்) நிறைய உருவியுள்ளார்.

ஜான் லீ ஹுக்கர் (John Lee Hooker): 

The Doors குழுவினரின் ஆஸ்தான ப்ளூஸ் கலைஞர். மின்கடத்தி போன்று இவரொரு அபாரமான உணர்வுக்கடத்தி.குரல்களின் வழியே உணர்வுகள் சிந்தாமல் சிதறாமல் வெளிப்படும்.சுண்டியிழுக்கும் கிடார் இசையும் இவரது சிறப்பம்சம்.


ஹவ்லின் வூல்ப்(Howlin Wolf): 


மிகுந்த ஆண்மைத்தனமான குரல்.சரி, அதுஎன்ன பெயர் ஹவ்லின் வூல்ப்?. இவர் பாடலைக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கே புரியும்.நம்பமுடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்கள் இவரது குரலில் சர்வசாதாரணமாக வெளிப்படும்.


பி.பி.கிங்(B.B.King): 


பெயருக்கு ஏற்றார் போல 50களில் இருந்து இன்றுவரை இவர் ராஜா தான்.ஆறாவது விரலாக கிடாருடன் பிறந்தாரோ என்னவோ.விரல்கள் கிடாரின் மேல் கடலலைகள் போல நின்று விளையாடும்.பல பேரின் ஆதர்சமாக இருந்துள்ளார்.இருந்து வருகிறார்.


இது, முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லுக் கூடிய சாத்தியக்கூறு இருக்கும் ஒரு வரிசை.இன்னும் குறைந்தது ஒரு இருபது பேரையாவது சொல்லலாம். Buddy Guy, T.Bone Walker, Lead Belly, Willie Dixon, Freddie King என்று போய்க்கொண்டே இருக்கும். இவர்கள் தவிர Ray Charles மாதிரியான, ப்ளூஸில் தொடங்கி R & B, Soul music பக்கம் புலம் பெயர்ந்தவர்களையும் பற்றி சொல்ல ஆரம்பித்தால் நான்கு பதிவாவது வேண்டும்.இவர்கள் தவிர, Eric Clapton, Stevie Ray Vaughan என்று ராக் – ப்ளூஸ் வகை கலைஞர்களின் பங்கும் மகத்தானது.நிறைய அமெரிக்க வெள்ளையர்கள், ஐரோப்பியர்கள், இங்லாந்து நாட்டினர் என்று இவர்களால் ப்ளூஸின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளம். 

Stevie Ray Vaughan &  Eric Clapton

ப்ளுசை பொறுத்தவரை, ஆரம்ப காலகட்டங்களில் பெண் கலைஞர்களின் பங்கு அளப்பரியது.சொல்லப்போனால், இவர்கள் தான் முதன்முதலாக ப்ளூஸ் இசையை பரப்ப ஆரம்பித்தது.இதில் நிறைய பேர் சர்ச் வகை ப்ளூஸ் இசைச் சார்ந்தவர்கள்.ப்ளூஸ் – ஜாஸ் – நாட்டுப்புற இசை என்று கலந்துகட்டி இருக்கும்.இதில் குறிப்படத்தகுந்தவர்கள்,


Mamie Smith: 
“Queen of blues” என்றழைக்கப்பட்டவர். முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட - ஆப்ரிக்க-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த – ஒருவரின் குரல் இவரதுதான். 

Ma Rainey: 
அவர் க்வீன் என்றால், இவர் “Mother of the blues”. 

   இவர்களைத் தொடர்ந்து Bessie Smith, Ida cox என்று ஆரம்பித்து Etta James,Koko Taylor என்று ஒரு பெரும் படையே இவர்களைப் பின்தொடர்ந்தது. உற்சாகமூட்டும் பாடல்கள் நடன அசைவுகள் நாட்டுப்புற இசைக்குள் சரிவிகிதமாக கலக்கப்பட்ட ப்ளூஸ் என்று, ப்ளூஸில் பெண்களின் பங்கு மகத்தானது. 

---------------------------------------------------------------------------------

ஏற்கனவே சொன்னதுதான், ப்ளுஸ் –  it’s a state of mind. அது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஒன்றாக இருந்தது.நமது நாட்டுப்புற இசையில் எல்லாவற்றையும் பாடல் மூலமாக வெளிப்படுத்தியதைப் போன்றே அனைத்து வாழ்க்கைக் கூறுகளையும் இசையின் மூலமாகவே அவர்கள் வெளிப்படுத்தினர்.எத்துனை தான் வரிந்து வரிந்து பக்கம் பக்கமாக எழுதினாலும் ஒரு கிடாரின் மீட்டலுக்கு முன்பு அனைத்தும் ஒன்றுமே இல்லை.என்னைக் கேட்டால், இந்த பின்புலத் தகவல்கள் எதுவுமே தேவைப்படாது, ஒரே ஒருமுறையாவது ஒரு ப்ளூஸ் பாடலை ஒன்றிக் கேட்டுவிட்டால். ஏன் அவர்களது கிடார் கதறுகிறது என்று புரிந்துகொள்ள முயன்றாலே போதும், யாவும் விளங்கிவிடும்.


பிகுகள்:
1.   இத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன். 


2. ஜாஸ் குறித்த இந்தத் தொடரை இணையத்தில் இரண்டு வருடங்கள் முன்னாள் படித்தது. அட்டகாசமான ஒரு தொடர். மிகுந்த டெக்னிகல் அம்சங்கள் கொண்டது.அதேசமயம், படிக்க சுவாரசியமாக இருந்தது. நண்பர்கள் இதனை படித்துப் பாருங்கள்.நிச்சயமாக எனக்கு பயனுள்ளதாக இருந்தது போல உங்களுக்குமிருக்கும் என நம்புகிறேன்.


           
                   இதுவரை, இந்தத் தொடரை பொறுத்தவரை, ப்ளூஸ் இசை நுணுக்கம் என்ற அடிப்படையில் டெக்னிகலாக நாம் எதையும் பார்க்கவில்லை. முதல்முறையாக அதன் முக்கிய கட்டமைப்பு ஒன்றைப் பற்றிப் பார்க்கலாம்.

12 Bar Blues: 
ஏன் குறிப்பாக இந்த ஒரு நுணுக்கம் குறித்து சொல்ல நினைக்கிறேன் என்றால், ஜாஸ் இசை முதற்கொண்டு பல இசை வடிவங்களில் இந்த 12 bar ப்ளூஸின் தாக்கம் மிக அதிகம். தவிர,ப்ளூஸின் மிக மிக அடிப்படையான இசை கட்டமைப்பில் இதுவே முதன்மையானது. மேற்கொண்டு இதை தொடரும் முன்னர், கிடார் குறித்த சில அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம்.

கிடாரில் ஸ்ட்ரம்.........ம்ம்ம்......மீட்டல் என்று சொல்லலாமா, அதில் மிக அடிப்படையானது, 4/4 Strumming. அதாவது 1 - 2 - 3 - 4......1 - 2 - 3 - 4 என்ற வகையில் இருக்கும். இந்த நாலு ஸ்ட்ரம்களை ஒன்றாக ஒரு பார் (bar) என்றழைப்பர்.


கிடாரில் எத்தனை ஸ்ட்ரிங்ஸ் (நரம்புகள்) இருக்கும் ? நாலு முதல் - பதினெட்டு வரை இருக்கும். இந்த ஸ்ட்ரிங்ஸ்களில், உதாரணமாக 1-2-3-4 என்று ஸ்ட்ரமிங் செய்வார்கள். இதற்கு பெயர் கார்ட் (Chord). அதை எந்த ஸ்ட்ரிங்கில்மீட்டுவார்கள் என்பதைப் பொறுத்து 1st Chord, 3rd Chord, 5th Chord என்று கூறுவர். ப்ளூசை பொறுத்தவரை 5th Chord அதிகளவில் பயன்படுத்தப்படுவது. இதற்கு மற்றொரு பெயர் Power Chord. அந்தளவுக்கு வீரியமாக இருக்கும்.


இதை கேட்டு விடுங்கள்.கேட்டுவிட்டால், பின் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.சுலபமாக புரிந்துவிடும்.இந்த நுணுக்கம் புரிந்துவிட்டால், இன்னும் நன்றாக - ப்ளூசை மட்டுமன்றி பிறவகை இசைகளையும் ரசிக்க முடியும்.
 • ஒரு நொடி இடைவேளையில் 1 - 2 - 3 - 4 .......திரும்ப 1 - 2 - 3 -4 என்று எண்ணுங்கள். நீங்கள் பனிரெண்டு தடவை எண்ணியிருப்பீர்கள். பாடலும் முடிவுற்றிருக்கும்.சரிதானே ?
 • இப்போது மறுபடியும் அதேபோல், ஆனால் இந்தமுறை கவனமாக அந்த நோட்களை கவனியுங்கள். 
 • 1 bar (அதாவது, முதல் 1 - 2 - 3 - 4) ஒரு மாதிரி ஒலிக்கிறதா....ஆனால் அடுத்த பார்(2nd bar) நோட் மாறியிருக்கும். நீங்களே கவனித்தீர்கள் என்றால் சுலபமாக புரியும். 
 • தொடர்ந்து ரெண்டு வகையான நோட்களே ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், முற்றிலும் புதிய நோட் ஒன்று 9 பாரில் ஒலிக்கும். இந்த 9th bar வேற்றுமை தான் மொத்த 12 - bar ப்ளூஸின் சிறப்பு.


இதனை புரிந்து கொள்ள மிகச் சிறந்ததொரு உதாரணம்.......Elmore jamesஇன் Dust my broom என்ற மிகப் புகழ் பெற்ற ஒரு பாடல்.....சுடப்பட்டது: http://www.pbs.org/theblues/classroom/essays12bar.html 


---------------------------------------------------------------


ப்ளூஸ் இசை என்பது ஒரு State of mind. இந்த சொற்கள் மிகமிக முக்கியம். ஏனென்றால் பின்னாட்களில் ப்ளூஸில் இருந்து நேரடியாக கிளர்த்தேழுந்த இசை வகைகளையும் அதன் தாக்கங்கள் இருந்த இசை வகைகளையும் புரிந்து கொள்ள அடிப்படை இதுதான்.

இந்த சார்ட் நான் தயாரித்ததே.சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.இதிலிருக்கும் ஆண்டுகள், அந்தந்த இசை வகைகள் சீராக வளர ஆரம்பித்த வருடங்கள். க்ளிக் செய்து முழு அளவில் பார்த்தால் தெளிவாக இருக்கும். ஏதாவது சந்தேகம் இருப்பின், பின்னுட்டத்தில் தெரியப்படுத்தினால் நலம்.
ராக் n ரோல்:
மட்டி வாட்டர்ஸின் (Muddy waters, புகழ் பெற்ற ப்ளூஸ் கலைஞர்) பாடல் ஒன்று உண்டு. “The blues had a baby and they named it Rock & Roll”. முற்றிலும் உண்மை. இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம்.அழுத்தமான சூழ்நிலைகளில் இருந்து எப்படியாவது விடுபட்டால் போதும் என்ற நிலையில் மக்கள் இருந்தனர்.நான்கு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த ராணுவ வீரர்கள் வீடு திரும்ப ஆரம்பித்தனர்(இனிவரும் நாலைந்து வாக்கியங்களை நன்றாக கவனியுங்கள்).சட்டென்று மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது.இதனை Post World War Baby Boom என்றே அழைக்கின்றனர்.இந்த காலகட்டத்தில்(40'கள்) பிறந்த குழந்தைகளுக்கு 60களில் 18 - 20 வயதிருந்திருக்குமா? இந்த தலைமுறைதான் ராக் இசையை கொண்டு வந்தது.யோசித்துப் பாருங்கள்.தொடர்ந்து சிறுவயது முதல் ப்ளூஸ் போன்ற அட்டகாசமான தாளகட்டு கொண்ட இசை கேட்டு வளர்ந்தால் பின்னாட்களில் அவர்களின் நடவடிக்கைகளிலும் அது எதிரொலிக்குமல்லவா....அதுதான் நடந்தது.Led Zeppelin, Jimi Hendrix என்று பின்னாளில் ராக் இசையை புரட்டிப் போட்ட அனைவரும் ப்ளூஸில் இருந்தே தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.அவ்வளவு ஏன்,Rolling Stoneஸ் கூட ஆரம்பத்தில் பிறரது ப்ளூஸ் பாடல்களை மேடையில் பாடும் குழுவாகத்தான் தங்களுது பயணத்தை ஆரம்பித்தனர். எல்விஸின் பல பாடல்களில் அந்த காலகட்டத்தின் ப்ளூஸ் பாடல்களின் தாக்கத்தைக்(அல்லது தழுவலை) காணலாம். ஆக, ப்ளூஸ் நேரடியாக ராக் n ரோல்க்கும் மறைமுகமாக அதேசமயம் ஒரு அழுத்தமான காரணியாக ராக் இசைக்கும் காரணமாயிருந்திருக்கிறது.


ரிதம் & ப்ளூஸ்(R & B): 
ப்ளூஸ் இசையில் சர்ச் மியூசிகின்(Gospel Music) தாக்கம் குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ப்ளூஸ் + ஜாஸ் + காஸ்பல், இம்மூன்று இசை வடிவங்களின் கூட்டுக் கலவையாக உருவானதே R & B என்ற இசை வடிவமாகும்.காஸ்பல் இசை, அதன் துள்ளலான தாளத்திற்குப் பெயர் போனது.அதன் நேரடியான தாக்கத்தை நாம் R&B இசையில் கேட்கலாம். மேலும் ப்ளூஸ் மற்றும் ஜாஸின் அற்புதமான லயமும் சேர்ந்தே இவ்விசை உருவானது.மற்றொரு காரணத்திற்க்காகவும் R&;B மிக முக்கியாமனது. இவ்விசை, ஒரு சீரான வளர்ச்சியை அடைந்த பிறகு காஸ்பலுடன் சேர்ந்து Soul Musicகிற்கும், ஜாஸுடன் சேர்ந்து Funk Musicகிற்கும் வழிகோலியது. 


ஹிப்-ஹாப்: 
“Blues is a state of mind”, இந்த வாக்கியத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஹிப் – ஹாப்பை பொறுத்தவரை, அதை விவரிக்க வேறு சிறந்ததொரு வாக்கியம் இருக்க முடியாது.இது ராக் n ரோல் போல நேரடியாக ப்ளூஸில் இருந்து பிறக்காவிட்டாலும், ப்ளூஸ் மற்றும் அதன் கிளை இசை வடிவங்களின் தாக்கம் மிகமிக அதிகம்.அதிலும் குறிப்பாக Soul இசையின் பங்கு மிக முக்கியமானது. ஜேம்ஸ் ப்ரௌனின் (Godfather of Soul) பங்கும் இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. ஹிப்-ஹாப் மற்றும் அதன் இரட்டையரான ராப் குறித்தும் தனியாக பதிவெழுதும்(??) உத்தேசம் இருப்பதால்....இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

ஜாஸ்: 
                  ஜாஸ் – ப்ளூஸ், இரண்டும் சிலகாலங்கள் வரை ஒன்றையொன்று பற்றிப்படர்ந்தே வளர்ந்தது. ஆனால் ஜாஸின் ஆரம்பகாலங்களில் ப்ளூஸ் மிகப்பெரும் பங்காற்றியது என்பதே உண்மை.மிகமுக்கியமாக, இப்பதிவின் ஆரம்பத்தில் பார்த்தோம் அல்லவா, 12 – bar blues, ஜாஸில் கூட இது மிக முக்கியமானதொரு கட்டமைப்பு.1930கள் வரை, இரண்டு இசை வகைகளும் பெரும்பாலும் ஒன்று போலவே இருந்துவந்துள்ளது. மாறி மாறி பல நுணுக்கங்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறிக் கொண்டுள்ளன. 40களில் இருந்து ஒரு தெளிவான வேறுபாட்டுடன் பயணிக்க ஆரம்பித்தன.ப்ளூசை பொறுத்தவரையில், பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். ஆனால், ஜாஸில் வாத்தியங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும். சற்றே கடினமான இசைக் கோர்ப்புகளை தன்னகத்தே கொண்டது ஜாஸ்.அந்த காலகட்டம் முதல் ஜாஸ் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும், ப்ளூஸ் 60களில் அதன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது.ராக் போன்ற பல்வேறு இசை வகைகளின் வளர்ச்சியும் ஒரு காரணம்.மேலும், கறுப்பின மக்கள் இப்பாடல்களை ஒருவித புலம்பல்களாக கருத ஆரம்பித்தனர்.இதிலொரு முரணாக, சில காலங்கள் கழித்து வெள்ளையர்கள் இந்த இசை வகையின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டு மீண்டும் செழிப்புற வளர ஆரம்பித்தது. 


ப்ளூஸ் இசையின் தாக்கத்தை வெறும் மற்ற இசை வகைகளின் தோற்றத்திற்கு காரணமான ஒன்று என்ற அளவில் மட்டும் முடித்துவிட இயலாது.வெள்ளையர்கள் – கறுப்பினத்தவர்களுக்கான ஒரு பாலமாகவும் 50 – 60களில் ஆப்பரிக்க இசைகள் இருந்து வந்தது.அமெரிக்க நடுத்தர – அடித்தட்டு மக்களின், எந்த நாடாக – நிறமாக – புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு வடிகாலாகவும் பொழுதை கழிப்பதற்கும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தவும் இவ்வகை இசைகளைப் பார்த்தனர்.கிளப்களில் விரும்பி இசைக்கப்படும் இசையாக மாறிப்போனது.அதேசமயம் மேல்மட்ட மக்கள், ஐரோப்பிய இசை வகைகளிலேயே நாட்டம் கொண்டிருந்தனர்.கருப்பின மக்களின் இசையை ஒரு சாரர் அசூயையுடனே அணுகி வந்தனர்.ஆனால், காலப்போக்கில் இந்த நிலை மாறி - இந்த ஜாஸும் ப்ளூஸும் மிக முக்கியமானதொரு இடத்தில இருக்கின்றன.எங்கிருந்து இந்த இசை வந்ததோ, எத்தகைய மக்களின் இசையாக உருவேடுத்ததோ அந்த நோக்கத்தையே புரிந்து கொள்ளாமல் நம் நாட்டில் ப்ளூஸ் - ஜாஸ் இரண்டையும் மாட்சிமை தாங்கிய மக்களுக்குரிய இசையாக கருதும்படி செய்து விட்டனர். நமது நாட்டுப்புற இசையை ரசிக்கும் மனநிலை இருந்தால் நிச்சயம் இவ்வகை இசைகளை வெகுவாக ரசிக்க முடியும் என்பது என் கருத்து.

- தொடரும் (அடுத்த பதிவு வரை) 


பி.கு:
            இப்பொழுது முடியாவிட்டாலும், முடிந்தவரை 12 - bar இசை வகை குறித்து கேட்டுப்பாருங்கள். இசையில் ஆர்வமிருப்பின் பெரிதும் இது உதவும்.நுணுக்கம் சார்ந்து ரசித்தால்தான் ஆயிற்றா....என்று எதிர்கேள்வி எழுந்தாலும், நிச்சயம் இதுவொரு கூடுதல் விஷயம்தானே.

                                     ப்ளூஸ் இசையில் மதங்களின் தாக்கம் மிகமிக முக்கியமானது.ஆப்ரிக்க அடிமைகளின் இசையாகவே ப்ளூஸ் வளர்ந்ததினால், ஆரம்ப காலங்களில் ஆப்ரிக்க கடவுள்கள், சடங்குகள் குறித்த பல பாடல்கள் பாடப் பெற்றன.தங்களது நாட்டின் மாந்தரீக விஷயங்களையும் – உதாரணமாக: Hoodoo Magic – அவர்கள் நடைமுறையில் பயன்படுத்தியதோட மட்டுமல்லாமல்,பாடல்களிலும் அவற்றை வெளிப்படுத்தினர்.இதுபோன்ற விஷயங்கள் அவர்களது கிறிஸ்தவ எஜமானர்களையும் சர்ச்களையும் பெரிதும் கலக்கமுற செய்தது,மிக முக்கியமாக ஒருவிஷயத்திற்காக.உணர்வுப்பூர்வமான பழைய விஷயங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தால்,எங்கே கலகத்திற்கு அது வழிவகுத்து விடுமோ என்ற பயம் தான்.இதனை எப்படித் தடுப்பது ? பாடல்களை தடை செய்வது, தணிக்கை செய்வது,இன்ன வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது போன்றவற்றை நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். நம்மவர்கள் சளைத்தவர்களா...இதுபோன்ற அடக்குமுறையால் நிகழ்ந்த நன்மை,பல குறியீடுகளான விஷயங்களை(Metaphor) பாடல்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். வார்த்தைகளை மௌனமாக்கி இசையின் மூலமாகவே எல்லாவற்றையும் வெளிப்படுத்த முயன்றனர்.ஆனாலும், மனதின் அடியாழத்தில் தேங்கியிருந்த தங்கள் நாட்டின் விஷயங்களை,ஏன் மாந்தரீகம் போன்றவற்றைக் கூட, விடாமல், தொடர்ந்து பல பாடல்களில் பாடி வந்தனர். இங்குதான் மற்றொரு முக்கிய நபர் வருகிறார், சாத்தான்.

         கிறித்தவ மதத்திற்கும் சாத்தானிற்கும் உள்ள “பகை” நாம் அனைவரும் அறிந்ததே.தவிர, சாத்தன் போன்ற ஆட்கள் ஆப்ரிக்க வரலாற்றிலும் உண்டு(எந்த மதத்தில் - நாட்டில் தான் இல்லை). அடிமையாயிருந்த ஆப்ரிகர்கள் இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.சாத்தானை சபிப்பது, அதன் கொடூரங்களை சாடுவது போன்ற சாக்கில் தன் எஜாமானர்களை குத்திக் காட்ட, கேலி பேச தொடங்கினர்.

The Devil is mad & I’m glad .....
He lost the soul he thought he had........

                                                                    இந்த பாடல் வெறும் சாத்தனை மட்டுமா குறிக்கிறது? நாட்கள் செல்லச் செல்ல, இந்த சாத்தானை தங்களுது மனநிலையினை பிரதிபலிக்கவும்,பெண்களை குறிக்கவும்,உலக வாழக்கையின் அவலங்களை குறிக்கவும் பயன்படுத்தலாயினர்.இதில் இன்னொரு முக்கிய விஷயம்,கடவுள் எதிர்ப்பாளர்கள் கூட பின்னாளில் ப்ளூஸில் வரும் நாத்திக கருத்துகள் கொண்ட பாடல்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினர்.
ப்ளூஸ் இசை- ஏன் கலை சார்ந்த பல விஷயங்களை பொறுத்த வரையிலேயே ஆன்மாவை சாத்தானிற்கு விற்றேன் (Sold my soul to the devil) என்ற சொற்றொடர் மிக முக்கியமானது.9ஆம் நூற்றாண்டு முதலே இந்தப் பதம் நடைமுறையில் இருந்துள்ளது.மனிதசக்திக்கு மீறிய ஆற்றல் இருந்ததாக - எந்த துறையானாலும் – நம்பப்படும் ஆட்கள் நிறைய பேர், வயது,செல்வம்,ஏதாவது கலை நுணுக்கம போன்ற விஷயங்களில் மிதமிஞ்சிய மேதமை வேண்டி,சாத்தானிடம் தங்கள் ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அந்த நுணுக்கங்களை பெற்றுக் கொண்டனர் என்பது புராணம்(இங்கே பார்க்கவும்).

பல ஐரோப்பிய இசைக் கலைஞர்கள், இது போன்ற ஆன்மா அற்றவர்கள் என்று சொல்கின்றனர்.....அவர்களே கூட சொல்லிக் கொண்டனர்.இது குறித்து சோனட்டா இசைக் கோர்ப்புக்கள் (இங்கே கேளுங்கள்.17நிமிடம்)கூட இயற்றியுள்ளனர். இத்தாலியின் மிகப் புகழ் பெற்ற வயலினிஸ்ட் – நிக்கலோ பாகினி மற்றொரு உதாரணம். ப்ளூஸ் இசைசை பொறுத்த வரை இந்தச் சொற்றொடர்,முதல் முதலாக அதிகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டது, Clara Smith என்பவர் 1924 ஆண்டு பாடிய பாடலான "Done, Sold My Soul To the Devil" என்பதுதான்.பின்னர், இந்தப் பதத்தை பெருமளவில் பயன்படுத்தியவர் – Robert Johnson தான்(இவரைப் பற்றி – ஆளுமை பதிவில் நிறைய பார்ப்போம்). அமெரிக்காவின் Highway 61 – 49 என்ற மிசிஸிபி மாகாணத்தில் இருக்கும் (Bob Dylanன் மிகப் புகழ்பெற்ற Highway 61 – Revisited தொகுப்பு ஞாபகம் வருகிறதா?) ஹைவே ரோட்டில் ஓர் இரவில், சாத்தானை தான் சந்தித்து, தனது ஆன்மாவை விற்றுவிட்டு பதிலுக்கு அற்புதமான கிடார் வாசிக்கும் திறனை கைவரப்பெற்றதாக அவரே கூறிக் கொண்டார்(அவரது ஒரு பாடலை கீழே கொடுத்துள்ளேன்).
ப்ளூஸ் இசையை பொறுத்த வரை, அதனை போருக்கு(Civil War) முந்தைய – பிந்தைய என்றே அநேக வரலாற்றாசிரியர்கள் பிரிக்கின்றனர். தவிர, முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் ப்ளூஸ் பல்வேறு பரிமாணங்களை எடுத்தது. அதற்கெல்லாம் வித்திட்டது Gospel Music என்ற அழைக்கபட்ட சர்ச் பாடல்கள். அமெரிக்காவில் 18ஆம் நூற்றாண்டு முதலே ஆப்ரிகர்களுக்கென்று தனியாக சர்ச்கள் இருந்தன.நாளடைவில் தனித்தனியாக இசைத்துக் கொண்டிருந்த ப்ளூஸ் கலைஞர்கள் 19ஆம் நூற்றாண்டில் இந்த சர்ச்களுக்கும் சென்று இசைக்க ஆரம்பித்தனர்; மற்றவர்களுக்கு பயிற்சியும் கொடுக்க ஆரம்பித்தனர்.மேலும், சர்ச்களுக்கென்றே தனியாக குழுக்கள் ஆரம்பித்தன.இதுபோன்ற குழுக்களில் இருந்த பல ஆட்கள்,இன்னும் குறிப்பாக பெண்கள் பின்னாளில் புகழ் பெற்ற கலைஞர்களாக அறியப்பட்டனர். B.B.King போன்ற ஆட்கள் கூட சர்ச்களில் இசைத்தவர் தான். ஆனால், இதெல்லாம் “The Black Church” என்றழைக்கபட்ட ஒரு பகுதியினர்களுக்குள்ளேயே இருந்தது. வேறு சர்ச்கள் வெகு தாமதமாகவே இவர்களை “ஏற்றுக்கொண்டனர்”

1920 - 1940: உத்வேகமான காலகட்டம்:

                       ஆரம்பத்தில், வெள்ளையர்கள் மிகுந்த அசூயையுடனே இந்த இசையை அணுகினர்.எல்லாவற்றையும் விட, கறுப்பர்களின் இசைக்கு தாங்கள் மயங்குவதை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.ஆனாலும், அவர்களால் மயங்குவதை நிறுத்தவும் முடியவில்லை.அந்த இசை போதை முழுமையாக அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியது.இன்னும் சொல்லப்போனால், இந்த இசையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல வகையிலும் அதனை ஆவணப்படுத்தவும், ஒருங்கினைப்பதிலும், பதிவு செய்வதிலும் வெள்ளையர்களே பெரும் பங்காற்றினர்.இதில் குறிப்பிடத்தகுந்தவர், ஜான் லோமக்ஸ். 30’களில் இவர்தான் பெரும் முயற்சி எடுத்து பல பாடல்களை பதிவு செய்தது.ஆனால், அதிகாரப்பூர்வமாக – உலகின் முதல் ப்ளூஸ் குறிப்புகள் அடங்கிய இசைத் தொகுப்பு வெளியிடப்பட்டது 1912 ஆம், ஹார்ட் வான்ட் என்பவரின் “Dallas Blues” என்ற பாடல் தான். ஆம், 1912ஆம் ஆண்டு தான் ப்ளூஸ் என்ற வார்த்தையே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அதுவரை வாய்மொழியாகவே புழங்கி வந்தது.அதே ஆண்டில்,குறிப்புகளாக வெளிவந்த மற்றொரு முக்கிய பாடல், The Memphis Blues. அதன் காரணகர்த்தாவான W.C.Handyஎன்பவரே Father of blues என்றழைக்கப்படுகிறார்.

ஏற்கனவே பல இடங்களில் கூறியது போல முதலாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டம் ப்ளூசை பொறுத்தவரை மிக முக்கியமானது, மூன்று காரணங்களுக்காக.

1. ரெகார்டிங் என்ற இசையை பதிவு செய்யும் முறை பெருமளவில் வளர ஆரம்பித்தது.

2. புதிய புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் வரவு

3. ரேடியோ நிலையங்களின் பெருக்கும், மெல்ல மெல்ல அவர்களும் இந்த இசையை ஒலிபரப்ப ஆரம்பித்தது.

 இதெல்லாம் 1920கள் 1930கள் வரை நடந்தேறியது. அந்த காலகட்டத்தில் அமெரிக்க மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டிருந்தது.தொழில்துறை சார்ந்த வளர்ச்சி,ஐரோப்பாவில் வளர்ந்து வந்த புதிய கொள்கைகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகமும் வேகமாக சூழலத் தொடங்கிய காலம் அது.பல விஷயங்களில் மக்களின் மனநிலை மாறி வந்தாலும்,நிறக்கொள்கையில் சற்று மந்தமாகவே முன்னேறினர்.அதனால் இந்த வடிவத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டனர் என்ற சொல்ல முடியாது (இன்று வரையிலும் கூட). அதேசமயம் நிறைய மக்கள் – வெள்ளையர்கள் இதன்பால் பெரிதும் கவரப்பட்டனர் என்பதும் உண்மை. அதுமட்டுமின்றி, பல இசை வகைகளும் அக்காலகட்டத்தில் கிளர்த்தெழுந்தன. முக்கியமாக ஜாஸ்.  ஜாஸ் ஏற்கனவே தொடங்கியிருந்தாலும், 30களில் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டும் –பரஸ்பர தாக்கங்களுடனும் வேகமாக வளர்ந்து வந்தது.


1940களில் ப்ளூஸ் இசை நன்றாகவே பக்குவடைந்திருந்தது. ப்ளூஸின் பெரிய பலம் – தனித்துவம் அதன் வெளிப்படைத்தன்மை. அதன் சாட்சியாக, அந்த காலகட்டத்தில் காமம் சார்ந்த பாடல்கள் பெருமளவில் வர ஆரம்பித்தன.முக்கல் முனகல்கள் நிறைந்த பாடல்கள். பெரும்பாலான கறுப்பினத்தவர்கள் காமம் சார்ந்த பாடல்களை அவர்களின் கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடாகக் கருதினர். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்பது அவர்களது வாதம். மேலும் லெஸ்பியன் - இருபால் உறவு ஆகியவை 30களில் புகழ் பெற்றிருந்த ப்ளூஸ் ஆட்களிடம், குறிப்பாக பெண்களிடம் சகஜமாக இருந்தது. நிறைய பேர் வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தனர். இதுபோன்ற விஷயங்களை, புனித அங்கிகள் தாங்கியிருந்த பல உயர்மட்ட வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியவில்லை.கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதெல்லாம் என்ன இசை என்று ஐரோப்பிய வகை சார்ந்த இசைகளையே உயர்வுபடுத்தி பேசி வந்தனர் (நம்மூர் கதை மாதிரி இல்லை ??). ஆனாலும் பல வெள்ளையர்கள் பெரிதும் இந்த வகையினால் ஈர்க்கப்பட்டனர். கற்றுக்கொள்ளவும் தொடங்கினர்.இதனால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தேறின. ஒன்று கறுப்பினர் – வெள்ளையர் இடைவெளி குறைய ஆரம்பித்தது.மற்றொன்று பல புதிய இசை வகைகள் தோன்றக் காரணமாயிருந்தது.
டிசம்பர் 22, 1849. ருஷ்யாவின் செம்னோவ்ஸ்கி ப்ளாசா. -20 செல்சியஸ் உறைகுளிர். இருபத்தியொரு பேர் - ஒருசில உள்ளாடைகளுடன் அக்குளிரில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மூம்மூன்று பேராக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.சுடத்தயாராக துப்பாக்கியை, அவர்களை நோக்கி உயர்த்தியவாரு ஜார் மன்னனின் வீரர்கள். இரண்டாவது வரிசையில் முதல் ஆளாக அந்த இருபத்தியெட்டு வயது இளைஞன் நின்றிருக்கிறான். இந்த வரிசைக்கு வந்து சேரும் முன் - அரசாங்கத்திற்கு எதிராக துரோகமிழைத்த குற்றத்திற்காக - எட்டு மாதம் தனிமைச் சிறையில் இருந்தவன். தனிமைச் சிறை – ஒலிகளில் இருந்து கூட தனிமை. ஆம். அவன் காதில் தங்களுது நடையின் ஓசைகூட விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கால்களில் வெல்வட் துணிகளை கட்டிக் கொண்டிருந்த வீரர்கள் நிறைந்த தனிமைச் சிறை. அதிலேயே எட்டு மாதம். மரணத்தை ஒருவிடுதலையாகக் கூடக் கருதி, அந்த வரிசையில் அவன் நின்றிருக்கலாம். எல்லாம் முடியப் போகிறது என்று நினைத்து பொழுது, இதுவொரு ஒத்திகை, அனைவரின் மரண தண்டை குறைக்கப்பட்டு சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகிறது (ருஷ்யாவில் ஜார்களின் ஆட்சியில் இதுபோன்ற ஒத்திகை பழக்கம் நடைமுறையில் இருந்தது). ஆனாலும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த இளைஞன் கடும்சூழ்நிலையில், சைபீரியாவின் சிறைச்சாலையில் நான்கு ஆண்டுகளை கழிக்க நேரிடுகிறது. பின்னாளில் இந்த அனுபவங்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வெகுவாக அந்த இளைஞனை பாதிக்கிறது. அந்த இளைஞனின் பெயர் – ஃபியோதர் தஸ்தாவெஸ்கி. உலகின் ஆகச்சிறந்த எக்ஸிஸ்டென்சியலிஸ்ட்களில் ஒருவர். 

அவரை பற்றி இங்கே குறிப்பிட காரணம்? ப்ளூஸ் இசையும் ஒருவகையில் எக்ஸிஸ்டென்சியலிஸம் தான். என்னைக் கேட்டால், உலகின் முதல் ப்ளூஸ் இலக்கியவாதி – தஸ்தாவெஸ்கி. அவரது Notes from the undergorund, சற்றே நீண்டதொரு ப்ளூஸ் இசை. இந்த கருத்தை இன்னும் வலுவாக நிறுவுவதற்காகவே அவரைப் பற்றிய நீண்ட முன்னோட்டம் தேவைப்பட்டது. ப்ளூஸின் இந்த குணாதிசயத்தை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டால், மிகச் சுலபமாக அதன் வீரியத்தை புரிந்து கொள்ள முடியும். எக்ஸிஸ்டென்சியலிஸம் + ப்ளூஸ், நேற்றுதான் எதேச்சையாக இந்த தொடர்பு தோன்றியது.இணையத்தில் இதுபோன்ற தொடர்புபடுத்துதல் இருக்கின்றனவா என்று தேடிய போது, Jean Paul Sartre was, without realizing it, the first to link together the blues and existentialism என்றிருந்ததை பார்த்த போது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். கீழ்க்கண்ட விளக்கம், ப்ளூஸ் பற்றிய ஒரு மிகச் சிறந்த விளக்கமாக எனக்குப்படுகிறது. 

The blues is an impulse to keep the painful details and episodes of a brutal experience alive in one's aching consciousness, to finger its jagged grain, and to transcend it, not by the consolation of philosophy but by squeezing it from a near-tragic, near-comic lyricism

ஏற்கனவே குறிபிட்டிருந்தது போல, 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அமெரிக்காவிற்குள் ஆப்ரிக்க மக்கள் அடிமைகளாக வர ஆரம்பித்தனர்.அந்த காலகட்டத்தில் நாட்டுப்புற இசையின் வடிவமாகவே ப்ளூஸ் இருந்து வந்துள்ளது. ஆப்ரிக்கர்களின் அசரவைக்கும் தாளம் குறித்து நாம் அனைவரும் அறிவோம்.அவ்வகையான இசையினை ஓய்வு நேரங்களில் மனநெருக்கடிகளில் இருந்து விடுபடவும் தளர்ந்து விடாமல் இருக்கவும் இசைத்து வந்தனர். கையில் கிடைதவைகளை வைத்து கருவிகளை உண்டாக்கினர். மிகமுக்கியமாக விதவிதமான drumகள். அதோட ஏற்கனவே தங்கள் நாட்டில் உபயோகித்து வந்த ஒற்றை – இரட்டை நரம்பு கொண்ட - கிடார் போன்ற கருவிகளையும், சற்றே பெரிய புல்லாங்குழல் போன்ற கருவிகளையும் உபயோகிக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல அந்த கூட்டத்தினருக்கென்றே ஒரு தனிவகையான இசை கருக்கொள்ள ஆரம்பித்தது. தங்களுக்கு தோன்றியவைகளை – பெரும்பாலும் வாழ்க்கை முறையினை பற்றியவைகளாகவே இருக்கும் - பாட ஆரம்பித்தனர். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்


சட்டென்று ஒரு பொறி தட்டுமே...கிட்டத்தட்ட நமது கிராமிய இசையினை போல இல்லை ? இவர்களின் உடைகளை மட்டும் மாத்தி போட்டு கற்பனை செய்து பாருங்கள்.நமது நாட்டுபற இசையின் பல கூறுகள் இதிலிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.நமது இசையுடன் ஒப்பிட்டால், ப்ளூஸ் மிக இளைமையானதுதான் தான். ஆனாலும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது(யாராவது தெளிவுபடுத்தினால் நலம்). ப்ளூஸும் பெருமளவு வாய்மொழியாகவே வளர்ந்தது.தாளத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். மிக முக்கியாமாக வாழ்வியல் சார்ந்த விஷயங்களே மிகப் பெரும்பான்மையான பாடல்களில் வெளிப்படும்.எசப்பாட்டு என்று நாம் சொல்கிறோம் அல்லவா.....ப்ளூஸ் கூட ஆரம்பகாலங்களில் இதுபோன்ற அமைப்பினைக் கொண்டிருந்தது. Call & Response – அதாவது, சுரங்கங்களிலோ வயல்வெளிகளிலோ வேறு கடும் வேலைகளிலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு வரியைப் பாடினால், ஒரு கூட்டமே எதிர்ப்பாட்டு பாடும் (இதை எசப்பாட்டு என்றழைப்பது சரியா என்று தெரியவில்லை). இந்த அம்சத்தை நினைவில் கொள்ள வேண்டும்.ஏனென்றால் பின்னாளில் குரல்களுக்குப் பதில் இசைக் கருவிகள் "எசப்பாட்டு" பாட ஆரம்பித்தது.

   

இதுபோல மிகச் சீராகவும் பல புதிய கருவிகளின் துணையுடன் நாட்டுபுறத்தன்மையே மேலோங்கியிருந்த இந்த இசை வளர ஆரம்பித்தது. 

1861: சிவில் வார்: 

Civil War-அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகளவிலேயே மிக முக்கியமானதொரு நிகழ்வு. சிவில் வாரின் அடிநாதமே இந்த அடிமை முறைக்கு எதிரான போக்குதான். 1861 ஆம் ஆண்டு, கருப்பின மக்களிடையே ஒருவித எழுச்சி காணப்படுகிறது.இந்நிலையில் தான் தேர்தல் வேறு வருகின்றது. லிங்கன் ஜனாதிபதியாகிறார்.எல்லாம் சேர்ந்து – இன்னும் பல காரணிகளை வேறு கூறுகின்றனர் – 1861 முதல் 1865 வரை கடும் போர் நிகழக் காரணமாகின்றது. 10,30,000 பேரைக் காவு கொண்ட (மூன்றில் இரண்டு பங்கினர் நோயினாலேயே இறந்தனர். சிவில் போர் ஒரு மாபெரும் கொடுங்கதை. தனியாக பக்கம் பக்கமாகவே எழுதலாம்) இந்தப் போர் 1865 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகின்றது.அமெரிக்க கருப்பின மக்கள் இனி சுதந்திரமானவர்கள் என்று லிங்கன் அறிவித்தார். கிட்டத்தட்ட 4 மில்லியன் கருப்பின மக்கள் அந்த சமயத்தில் அடிமைகளாக அமெரிக்காவில் இருந்ததுக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.அதே ஆண்டு, லிங்கன் ஜான் வில்கீஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டது, நாம் அனைவரும் அறிந்ததே. சரியாக சொல்ல வேண்டுமானால் 1867ல், உலகின் முதல் ஆப்ரிக்க – அமெரிக்க பாடல்களைக் கொண்ட தொகுப்பான Slave Songs of the United States என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதுவொரு மிக முக்கியமானதொரு நிகழ்வு. கன்ட்ரி ப்ளூஸ்(Country Blues) இசை, முறையாக ஆவணப்படுத்தப்பட்டது அன்று முதல்தான் என்று சொல்லலாம். மற்றொரு முக்கிய விஷயம், அதுவரைக்கும் நாட்டுப்புற இசைக்கும் ப்ளூஸ் இசைக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லாமல் இருந்தது.சிவில் வார்க்கு பிந்தைய காலகட்டத்தில், குறிப்பாக முன்-1900களில் பல புதிய முறை இதில் புகுந்து கன்ட்ரி ப்ளூஸ் என்ற வடிவத்தை அடைந்தது(வகைகளைப் பற்றி பின்னர் தனிப் பதிவில் பார்க்கலாம்). முதல் முறையாக கறுப்பினத்தவர்களின் பாடல்களும் இசையும் பதிவு செய்யப்படலாயின. ஆனால் மறுபடியும் வேற வகையான தீண்டாமைமுறை உட்புகுத்தப்படுகிறது. ஜிம் க்ரோ லா’ஸ்(Jim Crow law’s). அதன் மூன்று முக்கிய சட்டங்கள்: 

 1. பொது இடங்களில்,பள்ளிகளில் என்று அனைத்து பொது வெளிகளிலும் ஆப்ரிகர்களுக்கு, மெக்சிகர்களுக்கு இன்ன பிற “நிற”த்தவர்களுக்கு தனி இடம் 

 2. ஆப்ரிகர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது 

3. கலப்பின, திருமணம் – உறவு ரெண்டும் நிச்சயமாகக் கூடாது. இந்த சட்டம் நமக்கு ஒன்று புதிதில்லை தானே.தென்னாப்ரிக்காவில் கூட ஒருஆள் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டது ஒரு ஓரத்தில் ஞாபகம் வருகிறதல்லவா.ஆக, அமெரிக்கர்களும் தீண்டாமைதாசர்கள் தான் – ஒரு காலத்தில்(?). இந்த சட்டம் வெவ்வேறு வடிவில் 1960கள் வரை நடைமுறையில் இருந்தது. ரோசா பார்க்ஸ் – பேருந்து நிகழ்ச்சி, மார்டின் லூதர் கிங், மால்கம் X, குடியுரிமை இயக்கம் எல்லாம் அதன் நீட்சிகளே.

முதலாம் உலகப் போர் & The Great Migration: இதுபோன்ற சட்டங்கள் சமூகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும் பிற நாட்டினர் அதிகளவில் அமெரிக்காவிற்கு குடியேற ஆரம்பித்ததும் இந்த காலகட்டம் தான், 1900களில்.ஏற்கனவே உள்ள குழப்பம் போதாமல் புதிதாக வந்தவர்கள் வேறு. ஆப்ரிகர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை பெருக ஆரம்பித்தது.வேலையில்லா திண்டாட்டமும் அதிகரிக்க, மெதுவாக அமெரிக்காவின் தென் மாகாணங்களில் இருந்து மக்கள் புலம் பெயரத் தொடங்குகின்றனர். 

இதற்கிடையில் முதல் உலகப் போரும் வந்து சேர, கடும் வேலையில்லா திண்டாட்டமும் சேர்ந்து கொள்கின்றது.1910 – 1930 வரை ஆறு மில்லியன் மக்கள் - அதில் 99% சதவீதம் கறுப்பின மக்கள், புலம் பெயர்ந்தாக சொல்கின்றனர். தென் பகுதிகள் இதுபோன்ற சூழ்நிலையில் இருக்க, வடக்கே இருந்த சிகாகோ, நியு யார்க், டெட்ராய்ட் போன்ற நகரங்கள் பெரு நகரங்களாக உருவெடுத்திருந்தன. ஆனால் அங்கே கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அமெரிக்கர்களே - (கார்லியோனியும் ஐரோப்பியர் தானே...)  

இந்நிலையில் ஏற்கனவே கூறியதைப் போல புதிதாக பல்வேறு நாட்டினரும், உதாரணமாக ஐரிஷ், உள்ளே வர அதுவே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கின்றது.தக்கன பிழைக்கும் – வலியதே வாழும். இந்த போராட்டம் தான். அதுகாறும் தங்கள் ஊரில் கிராமப்புறம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள், நகர சூழ்நிலைக்கு தக்கவாறு தொழிற்சாலைகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நகரச் சூழல் பல வாழ்வியல் சார்ந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உணவு – உடை – இசை என்று அவர்கள் நகரங்களின், ஐரோப்பியர்களின் கூறுகளையும் உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தனர். ப்ளூஸ் இசையை பொறுத்த வரை – மிக முக்கிய மாற்றம் - அசரடிக்கும், சுண்டியிழுக்கும், நம்மை எல்லாம் கண்டபடி கிறங்கடிக்கும் எலெக்ட்ரிக் கிடாரின் வரவு.

பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம். தென் அட்லாண்டிக் கடல் பகுதி. இரவு நேரம். அடிமைகளின் கப்பல் ஒன்று கடலை கிழித்துக்கொண்டு அமெரிக்கப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அடிமை மற்றொரு அடிமையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறான். கை – கால் விலங்குகளினால் ஏற்பட்ட காயங்களையும் மீறி கழுத்தை நெறிப்பது சிரமமாகவே இருக்கிறது. நெறிபடுபவனிடம் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் நெறிக்கச் சொன்னதே அவன்தானே. ஏன் ? தான் இறந்தால் மட்டுமே இந்த அவல சூழ்நிலையில் இருந்து விடுபட்டு மறுபடியும் தனது நாட்டிற்க்கும் வீட்டிற்கும் சென்று சேர முடியும் என்ற உறுதியான – குழைந்தைத்தனமான நம்பிக்கை. இயற்கையோட இயைந்த அவர்கள் மனது பின் எவ்வாறு சிந்திக்கும். வெற்றிகரமாக இறந்தும் விடுகிறான். சற்று நேரங்கழித்து காவலாளி ஒருவன் உள்ளே வர, இறந்தவனின் உடலைக் காண நேரிடுகிறது. உடலை எடுத்து கடலில் வீசினானா? அதான் இல்லை. நீண்ட கத்தி; ஒரே வெட்டு: தலை வேறு – உடல் வேறாக. தற்கொலை செய்து வீடு போய் சேரலாம் என்று நினைத்தால் அதைக் கூட நடக்க விட மாட்டோம் என்ற கொடூரமான புத்தி.ஆப்ரிக்க அடிமை முறை:
                        இந்த அடிமை முறை ஆதிகாலம் தொட்டே – எகிப்தியர்களால் திறம்பட தொடங்கிவைக்கப்பட்டது.பின் எட்டாம் நூற்றாண்டில் "மூர்ஸ் என்றழைக்கபட்ட வட-ஆப்ரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஸ்பெயின & போர்ச்சுகல் பகுதிகளை கைபற்றிய போது மீண்டும் அந்த பகுதிகளில் அடிமை முறை செழிப்படையத் தொடங்கியது. அதற்கு முன்னரே, பல நூற்றாண்டுகளாக “அரேபிய அடிமை வணிகமுறை உலகளவில் மிக பிரபலமாக நடைமுறையில் இருந்ததை கவனத்தில் கொள்க.

1492ஆம் ஆண்டு கிறிஸ்தவ படைகள் – யாரின் தலைமையில் என்று உங்களுக்கே தெரியும் – ஏற்கனவே ஸ்பானிய படைகள் கைப்பற்றியிருந்த க்ரானடா போன்ற பகுதிகளுடன் சேர்த்து, புதிதாக மேற்கிந்திய பகுதிகளையும் கைப்பற்றியது. அதற்கப்பிறகு உலக வரலாறே மாறியது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த கடல் பயணம் கொடுத்த தைரியமும், மிதமிஞ்சிய லாபமும் புதிய நாடுகளை நோக்கி ஐரோப்பியர்களை வெறிகொண்ட குதிரைகள் போல ஓடச் சொன்னது. சேனமில்லாமல் குதிரைகளா......இந்த ஐரோப்பிய குதிரைகளின் சேனம் – மதம். இந்த அனைத்து படையெடுப்புகளிலும் மதம் மிகப்பெரிய பங்காற்றியது.

இவ்வாறு பல புதிய நாடுகளை பிடித்தாயிற்று.குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளை.அதன் அற்புதமான வளங்களையும் இயற்கை செல்வங்களையும் பல முக்கிய பொருட்களையும் சுரண்டியாயிற்று. சுரண்டப்பட்ட அனைத்தையும் தத்தமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அவரவர் நாட்டில் ஏற்றுமதி செய்யபட்ட பொருட்களையும் பிற வசதிகளையும் வைத்து -  புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களில், உதராணமாக சுரங்கம், கடும் வயல் வேலைகள், கட்டுமான பணிகள் போன்ற தொழில்களில் வேலை செய்வதற்குரிய ஆட்களை எங்கே பிடிப்பது? அவரவர் நாட்டில் மிக சொற்ப அளவிலேயே ஆட்கள் கிடைத்தனர்.ஐரோப்பியர்களுக்கோ இதுபோன்ற கடுமையான காலநிலை நிலவும் இடங்களில் வேலை செய்து பழக்கம் இல்லை.என்ன செய்வது? யோசித்தனர்..........இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பல வகை பொருட்களை எடுத்து வந்தாகிவிட்டது.வேறு என்ன அங்கிருந்து எடுக்க முடியும் ? அபரிதமாக அங்கிருக்கும் மனித வளங்கள் தான் அவர்கள் கண்ணில்பட்டது. திடகாத்திரமான உடல். எதை சொன்னாலும் நம்பிவிடும் அறியாமை.இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாலும் அதன் சில விஷயங்களின் மீது பயம். இதுபோதாதா....

நியூ வேல்ட்(New World) பகுதிகள் என்றழைக்கபட்ட அமெரிக்க பகுதிகளை நோக்கியே பெரும்பாலான கடல் வழி அடிமை வியாபரம் அமைந்திருந்தது. முக்கோண வணிகம்(Triangle Trade) என்ற வியாபார முறை தொடங்கிற்று. கீழுள்ள படத்தைப் பார்த்தாலே நான் சொல்ல வந்துது மிகச் சுலபமாகப் புரியும்.


செனகல் போன்ற ஆப்ரிக்க கடல் பகுதிகளில் இந்த அடிமை வணிகத்திற்க்காகவே ஒன்றல்ல....ரெண்டல்ல.......அறுபது சந்தைகள் நிறுவப்பட்டன. சந்தைகளுக்கு மக்களை எங்கிருந்து பிடித்து வந்தனர்?. அனைவரையும் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துதான். ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு “அழைத்து வந்தனர்? கை விலங்கிட்டு நடைபயணமாகவே. 1000 மையில் தூரத்தை கூட நடந்தே கடந்து வந்தனர்.மிக கடுமையான பாதைகளில் இந்த கொடுமையான பயணத்தினாலேயே பாதிபேர் உயிரிழந்து விடுவர்.இந்த பயணமே சில சமயம் மாதக்கணக்கில் ஆகும். உயிர் பிழைத்திருப்பவர்களை மாட்டுக் கொட்டடி போன்ற சந்தைகளில் அடைத்து வைத்திருந்தனர்.

கடல் பயணம்:
                 கப்பல்,படகு என்றெல்லாம் அழைக்கவே தகுதியற்ற வஸ்துக்களில் தான் அனைவருக்கும் அமேரிக்கா போன்ற நாட்டை நோக்கி பயணம். கப்பலின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? கீழுள்ள படத்தைப் பாருங்கள்.ஒருவரோடு ஒருவர் கை – கால்களுடன் சேர்த்து விலங்கிடப்பட்டு, ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவரின் பிடறி மயிரின் மேல்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அளவுக்கு நெருக்கமான சூழ்நிலை.தனது மலஜலம் - ரத்தம், எது பிறரின் மலஜலம் - ரத்தம் எது என்று பிரித்தறிய முடியாத இடப்பற்றாக்குறை.இந்த அவலம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர்கள் அநேகம்.அவல சூழ்நிலையின் தாக்கத்தால் சின்னம்மை, கொடுங்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்தவர்களும் அநேகம். குறைந்தபட்சம் இருபது நாட்கள் முதல் மாதக்கணக்கில் இந்தக் கொடூரமான பிரயாணம் நீளும். இங்கே சில புள்ளி விவரங்களை பகிர விழைகிறேன்.

1.இந்த வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்ட நாடுகள் – இங்கிலாந்து,ஸ்பெயின,போர்ச்சுகல்,பிரான்ஸ்,நெதர்லாந்து

2. 16 – 18ஆம் ஆண்டின் தொடாக்கம் வரை – ஐரோப்பியர்கள், இந்த கடல் வழி வணிகத்தில் எத்தனை முறை ஈடுபட்டுள்ளனர் தெரியுமா......50,000 தடவ..

3. 15 - 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் முழுவதுமாக – இந்த கடல் பகுதியில் மட்டும் – குறைந்தபட்சம் 150 லட்சம் பேர் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 20 இருபது லட்சம் பேர் வரை கடல் பிரயானத்திலேயே உயிரிழந்து விட்டனர். ஆம்...முழுவதுமாக 150 லட்சம் பேருக்கும் மேல்.

4. ஆரம்பத்தில் போர்ச்சுகல் தான் இந்த வணிகத்தின் தாதா.பின்பு அந்த இடத்தை முறையே இங்கிலாந்தும் அமெரிக்காவும் எடுத்துக்கொண்டன

5. இந்தியாவில் இதுபோல அடிமை முறை இருந்ததா என்று யாருக்கும் கேள்வியெழ வாய்ப்பில்லை.நாம்தாம் சொந்த மக்களையே மனுதர்மம்,லொட்டு லொசுக்கு என்ற பல பேர்களில் அடிமைகளாக வைத்திருந்தோமே.

6. அதேசமயம் ஆப்ரிக்காவின் குழுக்களுக்கும் இந்த அடிமைமுறை இருந்தது, அவர்களை கொடூரமாக பலியிடும் பழக்கமும் இருந்தது என்பதும் உண்மை.


அமெரிக்காவில் ஆரம்பித்த அடிமை முறை:


1619ஆம் ஆண்டு. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம்.அமெரிக்க மண்ணில் முதல் ஆப்ரிக்க அடிமைகளைத் தாங்கிய கப்பல் கரை சேர்கிறது. அன்றிலிருந்து இரண்டு நூற்றண்டுகள், அமரிக்காவின் ஏறக்குறைய எல்லா வகையான கடினமான வேலைகளிலும் பங்கேற்று அல்லது பங்கெடுக்க வைக்கபட்டு, அந்நாட்டை முன்னேற்றியது ஆப்ரிக்கர்களே. 1808ஆம் ஆண்டு, அரசாங்கமே அடிமைகளை “இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்தது. இறக்குமதி செய்யத்தான் தடையே தவிர அடிமைமுறை ஒழியவில்லை. 1861ஆம் ஆண்டு “சிவில் வார்ஆரம்பிக்கின்றது.அமெரிக்க சரித்திரமே அதற்குப்பிறகு முற்றிலுமாக மாறியது.

ஏற்கனவே கூறியது போல, ஆப்ரிக்க நாடுகளிலும் அடிமைமுறை இருந்தாலும், பிற நாடுகளிலும் இந்த அடிமை முறை இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை முற்றிலும் மற்ற நாடுகளைவிட மாறுபட்டது.மிக கொடூரமானதொரு பழக்கம் நடைமுறையில் இருந்தது. என்ன அது ? ஒரு அடிமைக்கு பிறக்கும் குழைந்தையும்.....பிறக்கும் போதே அடிமைதான்.அந்த எஜமானனாக பார்த்து மனது வைத்தால் தான் உண்டு.இல்லாவிட்டால் அக்குழந்தையும் அதன் பிறகு வரும் தலைமுறையும் கூட அடிமைதான்.கொடூரம்.


ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யக் கூடிய மிகபெரிய கொடுமை எதாக இருக்க முடியும்......அவன் வாழ்வாதாரத்தை சிதைப்பது, உணவு இருப்பிடம் போன்ற அத்தியாவசிய விஷயங்களை மறுப்பது....இவைகளா....இவை மட்டும்தானா ? எனக்கு தெரிந்த வரையில் ஒரு மனிதனின் கலாசாரத்தை – அவனது வரலாற்றை அழித்தொழிப்பதுதான் மிகப்பெரிய கொடுமையாக இருக்க முடியும். And the americans precisely did that. முதலில் பெயரை மாற்றினர் (இதன் காரணமாகவே மால்கம் லிட்டிலாக இருந்தவர் மால்கம் சாக மாறினார்). அவர்களின் நாட்டுடன் எவ்வித தொடர்பில்லாமல் செய்தனர்.அவரது மத நம்பிக்கைகளை குழைத்தனர்.

எவ்வளவுதான் தடுக்க முயற்சித்தாலும் நமது இதய துடிப்பை நிறுத்த முடியாதல்லவா....அதுபோலவே ஆப்ரிக்கருக்கு – இசை. உலகின் மூத்த குடி – மிக பழமையான பழங்குடியினர் அவர்கள்தானே.... அதிரவைக்கும் தோல் இசை முதற்கொண்டு பல்வேறு வகை உணர்ச்சிகரமான – நேரடியான இசை அங்கிருந்ததானே பிறந்தது...சாப்பிடுவது உறங்குவது ஏன் சிறுநீர் கழிப்பது போல, இசை என்பது ஆப்ரிகர்களுக்கு வாழ்கை முறை. அப்படிப்பட்ட இனத்தை சேர்ந்த ஆப்ரிக்க அடிமைகளிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தாலும், இசையை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அடிமைகளை கொண்டு வரும் கப்பலில் இருந்தே – ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளவும், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் - இந்த இசைதான் அவர்களுக்கு வடிகால். அதுவும் 18ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில்தான் இதுபோன்ற “கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடைத்தது.


வயல்களில் வேலை பார்க்கும் பொழுது அலுப்பு தெரியாமல் இருக்கவும், தன் இயலாமை, கோபம், வருத்தம், காதல், காமம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளை வெளிப்படுத்துவும்,எல்லாவற்றையும் விட முக்கியமாக – தனது தாய்நாட்டிற்கும் தனக்குமான தொடர்பை பேணிக் காக்கவும் இசையே அவர்களுக்கு உற்று துணையானது. மலையுச்சியில் இருந்து கூக்குரலிட்டால் ஏற்படும் எதிரொலிப்பு போல, அவர்களது எண்ணங்களின் எதிரொலிப்பாக இசை மாறிப்போகிறது.இசையின் மூலமே இந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விட்டு விடுதலையாகி எங்கெங்கோ, பெயர் தெரியாத பறவைகள் போல பறந்து செல்லமுடியுமென்று நம்பினர். கிடார் - அவர்களது உற்ற தோழனானது. குடும்பத்தில் ஒரு உறுப்பினரானது. அவர்கள் பேசுவதற்கு பதிலாக தனது நரம்புகளின் மூலமாக பதிலளிக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து பிறந்ததுதான் உலகளவில் Rock n Roll, Jazz, Rhythm & Blues(R & B) போன்ற இசை வகைளுக்கு நேரடியாகவும் பிற்பாடு வந்த Rock, Ska, Reggae, Hip Hop, Rap போன்றவற்றிக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்த, சாத்தானின் இசை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட – ப்ளூஸ் இசையாகும். 


----- தொடரும் 

பி.குகள்:
 • என்னை பொறுத்தவரை, இசை - உணர்வுபபூர்வமானது. அதன் உணர்வுகள் தான் எனக்கு முக்கியம். மூன்றுவேளை அருமையாக சாப்பாடு,ராஜ குடும்பம் என்று இருந்த தாகூரை அடுத்த வேலை சோற்றுக்கே திண்டான்டம்,ஊராரின் குத்தல் பேச்சுகள்,குடும்ப சூழ்நிலை வறுமை போன்றவற்றிக்கு இடையே வாழ்ந்த பாரதியோட எவ்வாறு ஒப்பிடவது சரியா என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் இந்த விரிவான பின்னணி தகவல்கள் தெரிந்ததானலேயே அதிகப்படியாக என்னால் இந்த இசை வகையை ரசிக்க முடிந்தது.அதையும் சேர்த்து பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
 • ப்ளுஸ், தொடக்கம் - வளர்ச்சி - வகைகள் & அதன் முக்கியத்துவம் - முக்கியமான ஆளுமைகள் என்று மொத்தம் நான்கு பதிவுகளாக எழுத உத்தேசம்.
 • எனக்கு பறை ரொம்ப ரொம்ப பிடிக்கும். நமது நாட்டுப்புற இசை வகைகளுக்கும் ஆப்ரிக்க இசைக்கும் அதிலிருந்து வந்து ப்ளுஸ் இசைக்கும், எனக்கு ரொம்ப தெரியாது - பார்த்தாலே (அ) கேட்டாலே நெறைய ஒற்றுமை இருக்கிறதுதானே....அதனாலேயே இந்த வகை இசையை மிக முக்கியமானதாக எனக்குப்படுகிறது. 
 • இதில்வரும் தகவல்கள் பல மின்நூல்களை படித்தும், இணையத்தில் பல தளங்களில் இருந்து திரட்டிய தகவல்களே.அந்த வகையில் ஒரு compiler வேலையைத்தான் செய்துள்ளேன்.முடிந்தளவு தகவல்களை சரிபார்த்தே தொகுத்துள்ளேன். 
 • ஒரு தொடராக எழுத இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று தோன்றும் பொழுது - ராஜேஷ்,பாலா இவர்கள் இருவர் தான் ஞாபகத்திற்கு வந்தனர். சொல்லணும் என்பதற்காக சொல்லல.கொஞ்சம் சோர்வு தட்டும் பொழுது நிஜமாகவே இவர்களின் தொடர் பதிவு ஞாபகத்திற்கு வந்தது.1. Outdoor Excursion: Spring 1999
சில விஷயங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஆறு – பாலம் – அதில் கடக்கும் ரயில், இது போல. அதுபோன்று ஒரு சூழல். சற்றே நடுத்தர வயதான ஆட்கள், ஒரு 10-15 பேர் அங்கே குழுமியிருக்கின்றனர். இருபது வருடங்களுக்கு முன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி. அனைவரும் உற்சாகமாக பாடிக் கொண்டும் பழைய கதைகளை பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று எங்கிருந்தோ புதிதாக ஒரு ஆள், கோட் சூட்டுடன் வருகிறான். முதலில் அவனை யார் என்று தெரியாதவர்கள், பின்னர் அவன்தான் ஓங்கோ என்று கண்டுகொள்கின்றனர். அவனும் பழைய மாணவன் தான்.ஆனால் அவனை யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.அதற்காக அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவனிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போகின்றது – ஓங்கோ பாட ஆரம்பிக்கும் வரை.ஒருமாதிரியான பிறழ்ந்த மனநிலையியே அவன் இருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. திடீரென்று வெறி கொண்டு ஆற்றில் இறங்கி அக்கரையினை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். பாலத்தில் மீது ஏறி தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு கண்டபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத நண்பர்கள், தூரத்தில் ஒரு ரயில் வர ஆரம்பித்தவுடன் பதட்டமடைகின்றனர்.அவனை இறங்கச் சொல்லி கூக்குரலிடுகின்றனர்.அதனை எல்லாம் கேக்கும் மனநிலையிலே யே அவன் இல்லை.ஆனால் எதிர்பாராவிதமாக ரயில் அடுத்த தண்டவாளத்தில் கடந்து போகின்றது. தெரிந்துதான் விளையாடுகின்றான் போல என்று நண்பர்கள் சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். இருந்தாலும் அவன் கீழே இறங்கி வருவதாய் இல்லை. கொஞ்சநேரத்தில் அவன் நின்றிருக்கும் தண்டவாளத்திலேயே ரயில் வருகின்றது. அனைவரும் திடுக்கிட்டு பயங்கரமாக கூச்சலிடுகின்றனர்.அவன் வேறொரு உலகில் இருக்கும் போது எப்படி இதெல்லாம் கேக்கும்.ரயில் மிகக்கிட்ட வருகிறது. ரொம்பவும் அசுவாரசியமாக ரயிலை நோக்கி திரும்புகிறான். மிகுந்த உக்கிரமான மனநிலையில் இருக்கிறான்.ரயில் மிகவும் அருகே வந்துவிட்டது. தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொண்டு "I m going back" என்று ரயிலை நோக்கிக் கத்துகிறான்.

திரை ஸ்தம்பிக்கிறது
ஆரம்பிக்கிறது.....ஓட.....பின்னோக்கி....அப்படியே.....ரயில்.....

ஏன் அவன் தற்கொலை முடிவுக்குச் சென்றான்(அவன் இறந்தானா என்பது குறித்து எதுவும் காட்டப்படவில்லை), யாருமே அவனை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் எப்படி அங்கு வந்தான், நண்பர்கள் அவனிடம் பேசுவதை வைத்துப்பார்க்கும் போது, ஒரு சாதாரணமான மாணவன்-நண்பனாக இருந்தவன் ஏன் இந்த நிலைக்கு ஆளானான் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆறு பகுதிகளில் விடை தெரிய வருகிறது.

ஓங்கோ – என்ற ஒரு 19-20 வயது மாணவனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் கால ஓட்டத்தில் சீரழிகின்றது என்பதே படத்தின் அடிநாதம். அப்பொழுதுதான் முதல் காதல் அரும்ப தொடங்கியிருந்த காலகட்டம்(அதுதான் படத்தின் கடைசிப் பகுதியான Picnic: Fall 1979). ஒரு புகைப்படக்கலைஞனாக ஆவதே லட்சியம் என்று அலைந்து கொண்டிருப்பவன் சுகிம் என்ற மாணவியை அப்பொழுதான் சந்திக்கிறான். சிறிதுனாட்களுக்குள் ராணுவ நடவடிக்கைகளில், சக நாட்டுக்காரர்கள் போல -அவனும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தபடுகிறான்.பல கொடூரமான மனத்தாக்குதல்களை அவன் அதன்மூலம் சந்திக்க நேரிடுகிறது. உக்கிரமான மனநிலையில் அதற்குப் பிறகு அவன் நடந்து கொள்ள அந்த காலகட்டமே காரணமாகிப் போகின்றது. பாதியிலே அவன் ராணுவத்தில் இருந்து விடுபட்டாலும்கூட, மிகுந்த மனபாதிப்புகளுக்கு உள்ளாகின்றான்.அது உடனே வெளியே தெரியாவிட்டாலும் கூட நாளடைவில் மூர்க்த்தனம் சிறுகச்சிறுக கசிய ஆரம்பிக்கின்றது.


பின்பு போலீஸ் வேலை – கம்யூனிச கொள்கை கொண்ட மாணவர்கள் - சொந்தமாக தொழில் – வேண்டாவெறுப்பாக காதலித்து, கடனுக்கே என்று மணந்து கொண்ட மனைவி – அவளுக்கு இருக்கும் வேறொரு தொடர்பு – வியாபாரத்தில் ஏமாற்றிய நண்பன் – முதல் காதலியின் கணவன் என்று அவனது வாழ்கையே படத்தின் மீதி ஆறு பகுதிகள்

2. The Camera: Three days ago: Spring  1999
3. Life is beautiful: Summer  1994
4. Confession: Spring  1987
5. Prayer: Fall  1984
6. Military Visit: May  1980
7. Picnic: Fall  1979

மேற்கொண்டு ஆறு பகுதிகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த ஆறு பகுதிகளில் என்ன விஷேசம் என்றால், அனைத்துமே தனித்தனியான ஒரு சிறுகதைபோலவே இருந்தது. ஓங்கோ – என்ற மனிதனின் வரலாற்றை காலம் கச்சிதமாக ஆறு பகுதிகளாக கிழித்தெறிந்து அதனை ஒருவர் படமாக இயக்கி இருந்தால், அது இப்படமாகத் தான் இருந்திருக்கும்.கிழித்தெறியப்பட்ட அந்த வரலாற்றை எழுதியது கொரியா. ஏனென்றால் கொரியாவின் ராணுவ ஆட்சி – மாணவர் புரட்சி – பொருளாதார வீழ்ச்சி போன்ற 1980 - 2000 வரையிலான கொரியாவின் மிக முக்கிய நிகழ்வுகள் தான் ஓங்கோவை ஒருவகையில் பாதிக்கின்றது. முக்கியமாக, கட்டாய ராணுவ சேவை. விடாது துரத்தும் கொடுங்கனவு போல அந்நிகழ்ச்சிகளே அவனை உள்ளிருந்து எதையோ நோக்கி தொடர்ச்சியாக தள்ளிக்கொண்டே இருக்கின்றது. மேலும் சரியான இளமைப்பருவம் கிடைக்காமால் போவதைவிட – இளமைப்பருவம் மறுக்கப்படுவதே மிகக் கொடுமையானது. குறிப்பாக, ராணுவ ஆட்சிகள் நிறைந்த நாடுகளைச் சொல்லலாம். மாபெரும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதியாகவே ஓங்கோவை பார்க்க வேண்டியுள்ளது.

படத்தின் கடைசிப் பகுதியில் – ஆரம்பத்தில் வரும் அதேமாதிரியான பிக்னிக், அதே மாணவர்கள், அதே இடம், அதே ஓங்கோ. ஆனால், அனைவரும் இருபது வயதில். மிகவும் வெகுளினயான ஓங்கோ, சுகிம் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். அதன் பின்பு வரும் ஐந்து நிமிடக் காட்சிகள்.............புதிர் நிறைந்த ஒரு கவிதை.அதிலொரு சின்ன விஷயம் உண்டு.நான் சொல்ல விரும்பவில்லை. பார்த்துவிட்டு(?) நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்.டைரக்டர் – லீ சாங் டாங். இவரது மற்ற படங்களும் இதே போன்று வீரியத்துடனே இருப்பதாக இணையத்தில் அவரைப் பற்றி படிக்கும் போது தெரிகிறது.  இதில் ஓங்கோவாக வரும் சொல் யுங் கு பற்றி என்ன சொல்ல. 20 வருடமாக அலைபாயும் ஒருவனது வாழ்கையை இவரளவிற்க்கு வேறு யாரும் காட்டமாக திரையில் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று தெரியவில்லை. 

படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், ஓங்கோ – ரயில் – பெப்பர்மின்ட் கேண்டி. ரயில் - அனைத்து பகுதியிலுமே, முக்கிய காட்சிகளை - இரவில் நிலவை சுமந்து ஓடும் ஆற்றினைப் போல, எங்கோ எடுத்துச் செல்கின்றது. சற்றே வித்தியாசமாக பின்னோக்கி. படம் குறித்து எவ்வளவோ சொல்ல ஆசை இருந்தாலும்......வேண்டாம்....நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஹெர்சாக் – டார் – கோடார்ட் போன்றவர்களின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். ஆனால், அது எல்லாவற்றையும் விட இந்தப் படம், பார்க்கும் போதே ரொம்பவும் பாதித்துவிட்டது. Emotionally intense. பார்க்காமல் விட்டீர்கள் என்றால் பெரிய இழப்பு
When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart 
 - Bela Tarr

கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இந்தப் படம் அதையே எனக்கு ஞாபகப்படுத்தியது.


ஹங்கேரியன் ஒரு சிறிய ஊர்.பனியும் காரணமே தெரியாத பீதியும் சேர்ந்தே படர்ந்திருக்கும் ஊர். யானுஸ் வலுஸ்கா என்ற பேப்பர் போடும் ஆள்.பேப்பர் போடுவதைத் தவிர ஊரின் முக்கிய பிரமுகரான கியோர்கி எஸ்டர் என்பவர்க்கு பணிவிடை செய்யும் வேலையையும் செய்து வருகிறான். கியோர்கி Andreas Werckmeister என்ற ஹங்கேரியின் இசை கோட்பாட்டாளரின் இசை குறித்தான ஆராய்ச்சி செய்து வருகிறார். Werckmeisterன் ஹார்மனியானது இயற்கையின் முழுமையான ஒலி அளவை எட்டவில்லை, வெளிக்கொனரவில்லை. அதனடிப்படையில் அமைந்த அவரின் அனைத்து இசைக் கோர்ப்புகளுமே தவறு என்பதாகப் போகிறது அவரது ஆராய்ச்சி. கியோர்கி மனைவி அவரைப் பிரிந்து அவ்வூரின் முக்கிய போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வருகிறார். புரட்சி இயக்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு இயக்கத்தின் முக்கியமான ஆளும் கூட.


வழமை போல மிகுந்த அசுவாரசியமாக நாட்கள் நகர்கிறது. ஒருநாள் இரவில் நீண்ட நிழல்களை படரவிட்டபடி மிகப்பெரிய ராட்சஸ வண்டி ஒன்று ஊருக்குள் வருகிறது. புகழ் பெற்ற – உலகின் மிகப்பெரிய திமிங்கலமும் ப்ரின்ஸ் என்ற ஆளும் இன்னபிற விசித்திர ஜந்துக்கள் கொண்ட சர்க்கஸ் வண்டிதான் அது. திமிங்கலமும் ப்ரின்ஸும் எந்த ஊருக்கெல்லாம் இதுவரை சென்றிருந்தார்களோ அவ்விடங்கள் எல்லாம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.அதனால் சர்க்கஸ் வண்டி வந்தவுடன் மொத்த ஊரின் கலக்கமும் பலமடங்கு உயர்கிறது. ஆளாளுக்கு அதைபற்றி மட்டுமே பேசுகின்றனர்.வலுஷ்கா எங்கு சென்றாலும் யாவரும் இதைபற்றியே பேசிக்கொண்டிருப்பதும் இவனிடமும் அதைபற்றியே கேட்பதும் வாடிக்கையாகிப்போனது.


இதெல்லாம் கேட்டுக் கேட்டு வலுஷ்கா அத்திமிங்கலத்தின் பால் கடுமையாக ஈர்க்கப்படுகிறான். சர்க்கஸ் திறந்த முதல்நாளே முதல் ஆளாக திமிங்கலத்தை மிகுந்த ஆசையுடனும் ஒருவிதமான பரவசத்துடனும் காண்கிறான்.வார்த்தைகளே இல்லாத மொழியில் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.பெரும் தாக்கத்துடன் வெளியே வருகிறான்.ஆனால் ப்ரின்ஸ் மட்டும் யாருக்கும் வெளியே காமிக்கப்படவில்லை.

இந்நிலையில், கியோர்கியின் மனைவி தங்களது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கண்ணியாமாக மிரட்டல் விடுக்கிறார்.எப்படி ? தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மறுபடியும் கியோர்கியுடன் சேர்ந்து வாழ அவர் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று.அதிலேயே அவர் அரண்டு போய் அவர்களது நிர்பந்தத்திற்கு அடிபணிகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட வலுஷ்காவின் நினைவில் திமிங்கலம் தன் நீச்சலை ஜோராக அடித்துக் கொண்டிருக்கிறது.கியோர்கியிடமும் கடவுளின் எத்தகைய உயர்ந்த படைப்பு என்ற ரீதியில் அடிக்கடி சிலாகித்து பேசி வருகிறான்.


வலுஷ்கா மறுபடியும் திருட்டுத்தனமாக திமிங்கலத்தை பார்க்கச் செல்கிறான்.அந்த வண்டி ஊரின் முக்கிய சந்திப்பில் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.குளிரடைந்த அந்த இரவில் பலபேர் அங்கு குழுமியிருந்தனர்.ஒருவகையான மூர்க்கத்தனம் ஏறிய மனநிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களுக்கிடையே நழுவிச்சென்று திமிங்கலத்தைக் காண்கிறான்.இம்முறை, ப்ரின்ஸ்சை பார்க்க முடியாவிட்டாலும், தன் முதலாளியுடன் ப்ரின்ஸ் ஒரு சிறிய கூண்டினுள் இருந்துகொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளனின் உதவியுடன் தனக்கு இங்கிருந்து விடுதலை வேண்டும் - மக்கள் அனைவரும் என் பின்னாள் அணி திரள்வார்கள் - இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அடியோடு மாற்றப் போகும் புரட்சி நடக்கப்போகிறது என்று உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான்.என்னமோ ஒருவகையான ஆபத்து ஊரைத் தாக்கப்போவதாக அனைவரும் நினைத்தார்களே.........அது இதுதானோ.....

பெரும் கலக்கமுற்றவனாக ஓடத் துவங்குகிறான். இருளைக் கிழித்துக் கொண்டு தீ ஜுவாலைகள் எரிய ஆரம்பிக்கின்றன.ஒவ்வொரு ஆளாக ஒன்றுகூடுகின்றனர். ப்ரின்ஸ் அவர்களுக்கு இடையே இருக்கிறானா ? தெரியவில்லை.கூட்டம் மெல்ல நடைபோட ஆரம்பிக்கிறது.வேகம் அதிகமாகிறது.இன்னும் கொஞ்சம் வேகமாக.இன்னும் கொஞ்சம் வேகமாக. இப்போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே நடக்கிறோம். அதோ , ஆதரவற்றவர்களுக்கான மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.மிகுந்த கட்டுக்கோப்புடன் – கட்டிலில் இருக்கும் நோயாளிகளை முதியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.கண்ணில்படும் அனைத்து பொருட்களையும் – மருத்துவ உபகரணங்கள் உட்பட, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.இதை அனைத்தையும் ஒளிந்திருந்து யானுஸ் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அறையாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.அப்படி நுழைந்த ஒரு அறையில் குளியலறை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கிறது. ஆவேசத்துடன் அதை கிழித்து எரிகிறார்கள்..........அங்கே..................இதை கண்ட மொத்த கூட்டமும் அப்படியே திரும்பிச் செல்கின்றனர். ஒருவேளை மனித வாழ்கை அவ்வளவுதான் என்று உணர்ந்தவர்கள் கொண்டார்களா.

வலுஷ்கா மிகுந்த மன அழுத்தத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.தூங்காமல் இரவை ஒரு நொறுக்கப்பட்ட கட்டிடத்தில் கழித்த பின், அதிகாலையில் அங்கிருந்து வெளியேறுகிறான்.பெரிதும் கலங்கிய மனநிலையில் ஒரு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்குகிறான்.திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.

ஒரு மனநல மருத்துவமனையில் வலுஷ்கா அமர்ந்திருக்கிறான்.அருகில் கியோர்கி.அவனிடம் அளவளாவி விட்டு வெளியே வருகிறார். சதுக்கத்தை கடக்கும் போது அங்கு இதுவரை வலுஷ்கா வற்புறுத்தியும் பார்க்காத – திமிங்கலம் தனியாக உருக்குலைந்து கிடக்கிறது.விவரிக்கமுடியாத துக்கத்துடன் அதை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.


நானும் பல்வேறு நாடுகளின் சினிமாக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.ஆனால், இந்த அளவுக்கு என்னை ஒளிப்பதிவு தாக்கிய படங்கள் ரொம்ப குறைவு. ஊழிப்பெருவெள்ளம் மாதிரியான அப்படியே மொத்தமாக மூழ்கடிக்கும் வகையான ஒளிப்பதிவு இல்லை.சிறுகச்சிறுக அப்படியே உள்ளிழுத்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட பார் காட்சி ஆகட்டும், அந்த திமிங்கலம் ஊருக்குள் வரும் காட்சியாகட்டும், அந்த மாபெரும் கூட்டம் முன்னேறும் காட்சி ஆகட்டும் உண்மையாகவே அவைகளையெல்லாம் பார்த்தால் தான் நான் சொல்ல வருவது புரியும்.

கதாபாத்திரங்களின் நிழலுக்கு உயிர்வந்து கையில் கேமேராவுடன் நடமாடி இருக்கும் போல.அத்தனை நெருக்கம் + தாக்கம்.வீடு சம்பந்தமான காட்சிகளில், அழையா விருந்தாளி போல கேமெரா - கதாபாத்திரங்கள் வரும் முன்னரே வீட்டினுள்ளே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு படம் பிடித்ததைப் போல தோன்றுகின்றன.

படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.கதாபாத்திரங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாமும் அப்படத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக உள்ளிழுக்கப்படுவதாக எனக்குப்படுகிறது.கருப்பு & வெள்ளை படங்கள் என்றாலே தானாகவே ஒரு ஆழம் படத்தில் குடிகொண்டுவிடும்.அதையும் தாண்டி இவர் வைத்திருக்கும் கோணங்கள்...........

அடிக்கடி வலுஷ்கா கடவுள் குறித்து பேசுவதால், அந்த திமிங்கலத்தை கடவுள் சார்ந்த குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா................இல்லை....ஹங்கேரி ஆரம்பகாலத்தில் கடுமையான கம்யூனிசத்தின் பிடியில் இருந்தது.அந்த காலகட்டத்தில் நிலவிய அசாத்திய சூழ்நிலைகளை குறிக்கிறதா..............................கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயமாக்கலால் பல்வேறு தொழில் சிதைவுகள் ஹங்கேரியில் நிகழ்ந்துள்ளதே(அங்கு மட்டும் தானா)........அந்த காப்டலிசம் குறித்தான பார்வையா............அல்லது கியோர்கி செய்து வரும் ஆராய்ச்சி - பேதம் இருப்பதாக அவர் கருதும் இசையமைப்பு போல – சமன்குழைந்த அவ்வூர் மக்களின் வாழ்வு குறித்தானதாகவும் இருக்கலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாமலே கூட அதன் இயக்குனர் கையாண்டிருக்கலாம். அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து இவை எல்லாம் வேறுபடலாம். மேலே குறிப்பிட்டிருக்கும் டாரின் மேற்கோளை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன். (இந்த தகவல்கள், கோணங்கள் எல்லாம் பிறகு நெட்டில் தேடியபோது புலப்பட்டவைகள்).

எனக்கு இந்த படத்தின் முடிவில் அந்த திடுக்கிடும் காட்சி, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடை ஞாபகப்படுத்தியது.அப்படிப் பார்த்தால் இந்தப் படம் நம் நாட்டிற்கே பல சமயங்களில் பொருந்தும். மேற்குறிய அதே மதம் – இசங்கள் காரணமாகவே.


பெல்லா டார் (Bela Tarr) – சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர். 16வயது வரை ஒரு தத்துவவாதியாக ஆவதயே லட்சியமாக் கொண்டிருந்தவர் 17 வயதில் திடீரென்று சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இதில் இறங்கினார்.அவரைப்பற்றி கொஞ்சமே கேள்விப்பட்டுள்ளேன்.தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் டர்கொவ்ஸ்கி ஆகட்டும் பெல்லா டார் ஆகட்டும், தங்களின் படங்களில் குறியீடுகளை எல்லாம் வேண்டுமென்றே வைப்பதில்லை என்று மறுத்தவர்கள்.மேலும் டார் – ஹெர்சாக் போன்றவர்கள் ஸ்டோரி போர்டு சமாச்சாரத்தை நம்பாதவர்கள்.கேமரா...என்ன சொல்ல. Master of long takes என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் வெறும் காட்சியின் அழகியலுக்காக கேமெரா கோணங்களையும் நீண்ட காட்சிகளையும் இவர் வைப்பதாகத் தெரியவில்லை.


இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). இன்னொரு முக்கியமான விஷயம், இவருக்கும் ஹங்கேரியின் எழுத்தாளரான Lazlo Krasznarhokai உள்ள நட்பு.அவரது பல நாவல்களையே – இந்தப் படம் உட்பட – டார் படமாக்கி உள்ளார்.அப்படியே நாவலை தழுவி எடுக்காமல், ஒவ்வொரு முறையும் எழுத்தாளருடன் அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பாருங்கள்.ஆண்டுக்கணக்கில் நீண்ட காட்சியமைப்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் திட்டமிட்டு................அபாரம் போங்கள். அவரது மிக முக்கியமான திரைப்படம் Satango (Satan + Tango).கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஓடும் திரைப்படும் அது.ஏழரை மணிநேரமாக இருந்தாலும் கூட பார்வையாளர்களை மொத்தமாகத் தன்வயப்படுத்திய படம் என்று தெரிகிறது.
இனி அவரது மற்ற படங்களி தேடிப்பிடித்து பார்ப்பதுதான் என் வேலை.நேற்று இந்த படத்தைப் பார்த்து முடித்த கையோடு மற்றொரு படத்தை தரவிறக்கி விட்டேன்.மற்றவைகளும் இனி பார்க்க வேண்டும்.
 1. Family Nest (1977)
 2. The Outsider (1981)
 3. The Prefab People (1982)
 4. Autumn Almanac (1985)
 5. Damnation (1988)
 6. Satan's Tango (1994)
 7. Werckmeister Harmonies (2000)
 8. The Man from London (2007)
 9. The Turin Horse (2011)

படத்தை இங்கே தரவிறக்கலாம்: