Wednesday, September 22, 2010

Amator - கேமரா காதலர்களுக்காக ஒரு படம்

                               முதல்முதலாக கேமராவில் நீங்க எடுத்த படம் ஞாபகமிருக்கா? கேமரான்னு ஒண்ணு கைல கிடச்சவுடன் நா பண்ண அலும்பு...நியூட்டனுடன் சேர்ந்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த மாதிரி விட்டத்த வெறிச்சு பார்க்கச் சொல்லி யாரையாவது போட்டோ எடுக்குறது, ஹென்றி ஷாரியருக்கு அப்பறம் பல நாட்கள் சிறையிலிருந்ததுக்கப்பறம் சூரியோதயத்தை பார்க்குற மாதிரி சூரியன போட்டோ எடுக்குறது, பக்கத்து வீட்டில படுத்திருக்கும் பாட்டி,காக்கா,ஆடு,புல்லு,ஏதயுமே விட்டு வைக்கல. என் தொல்லைக்கு பயந்தே Post-Apocalypseக்கு அப்பறம் இருக்கும் நகரம் மாதிரி எங்க ஏரியாவே காலியாயிருச்சு.

                                 ஆறாப்பு படிக்கும் போது முதலில் Kodak KB-10 எங்க அப்பா வாங்கிக் கொடுத்தார். அதுல எடுத்த போட்டோக்களை இங்க போடலாம்னு பார்த்தேன். பின்னாடி கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபோகும் படங்களை இப்பவே எதுக்கு வெளியில விட்டுட்டுன்னு அந்த ஐடியாவை கை கழுவிட்டேன்.இப்பவும் என்ட பெரிய கேமராலாம் ஒண்ணும் இல்ல. பிலிம் போட்டு எடுக்குற ஒரு Kodak கேமராதான். யூனிவர்சிட்டில எங்க டிபார்ட்மெண்ட் டிஜிட்டல் காமிராவில் நா தான் எடுப்பேன்.நண்பர்களுடைய டிஜிட்டல் காமிராவிலும் எடுத்திருக்கேன். ஆனா lightingக கணக்கிட்டு-அதுக்கேத்த பிலிம் உபயோகித்து-போட்டோஷாப் மாதிரியான செயற்கைத்தனமான விசயங்களை உபயோகிக்காம manual film கேமராவில எடுத்து அது பிரிண்ட் போட்டு கையில வரும் போது இருக்கும் சந்தோஷம் டிஜிட்டல் காமிராவில எடுக்கும்போது எனக்கு வரல. அமெச்சூருக்கும் கீழ ஏதாவது வார்த்தையிருந்தா அதை போட்டுட்டு = கணேஷ் = ஃபோட்டோகிராஃபி என்று புரிஞ்சுக்கோங்க. அதுனாலயே இந்தப்படம் எனக்கு மிகப் பிடித்தது. Ofcourse....படம் சினிமா கேமராவை மையமாக கொண்டுள்ள படம் என்றாலும்...படத்தின் கதாப்பாத்திரத்திற்கு சினிமா கேமராவின் மீதுள்ள ஈடுபாடு எனக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தியது. கண்டிப்பாக உங்களுக்கும் பழையத ஞாபகப்படுத்தும்.
                            எனக்கு மிகப்பிடித்த ஒரு இயக்குனர்-கிறிஸ்டோஃப் கீஸ்லோவ்ஸ்கி. அவரது புகழ் பெற்ற Three Colours படங்களை பார்க்கும் முன்னரே Amator படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.அப்ப எனக்கு கீஸ்லோவ்ஸ்கிய பற்றி ஒன்றும் தெரியாது. ஆனா படத்தின் தலைப்பு (Camera Buff) என்னைப் பார்க்கத் தூண்டியது. பார்த்திட்டு அசந்தே போனேன். எனக்கு Three Colours படத்தை விட இப்படமே மிகவும் பிடித்துள்ளது (எனக்கு குடும்ப உறவு-ஆண்-பெண் மனச் சிக்கல்கள் குறித்த படங்கள் அவ்வளவா புரியாததும் ஒரு காரணம்).ஒரு விஷயத்தின் மீது ரெண்டு வகையான ஈடுபாடு இருக்கலாம்- விருப்பம்(Passion) & வெறி(Obsession).இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கு சினிமா கேமராவின் மீது ரெண்டு கலந்த ஒரு ஈடுபாடு .

                                            பிலிப் மோஸ்க்கு ஒரு பெண் குழந்தை பிறக்கயிருக்கிறது. அதன் நடவடிக்கைகளை படம்பிடிப்பதற்க்காகத் தன் ரெண்டு மாத சம்பளத் தொகையை செலவழித்து ஒரு 8mm கேமிராவை வாங்குகிறான். எப்பொழுது முதல்முதலாக கேமிராவின் லென்ஸ் வழியாக பார்க்க ஆரம்பிக்கிறானோ அதிலிருந்து அவன் வாழ்க்கை அடியோடு மாறத்தொடங்குகிறது. கண்களுக்கு பதில் கேமிராவின் கோணத்தைக் கொண்டே அனைத்தையும் பார்க்க ஆரம்பிக்கிறான். கண்ணில் படும் அனைத்தையும், பறவைகள், நண்பர்கள், இடங்கள் என்று சகலத்தையும் தன் கேமிராவில் சிறை பிடிக்க ஆசைப்படுகிறான். இந்நிலையில் தன் நிறுவனம் 20வது நிறைவு விழாவை கொண்டாடுவதை ஒட்டி அந்நிறுவனத்தின் தலைவர் - கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் -  அவ்விழாவின் கொண்டாட்டங்களை படம்பிடிக்க அவனை அணுகுகிறார். அவன் எடுத்த சில காட்சிகளினால் நிறுவனத்தினர் அதிருப்தி அடைகின்றனர். இருந்தாலும் பிலிப் அக்குறும்படத்தை ஒரு போட்டிக்கு அனுப்பி வைக்க அவனுக்கு அதற்கு மூன்றாம் பரிசு கிடைக்கிறது. இப்பரிசு படங்களின் மீது அவனுக்குள்ள ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. ஆனால் குடும்பத்தில் இதனால் குழப்பம் தலைதூக்க ஆரம்பிக்கிறது. பின்னே..குடும்பத்தை மறந்து கேமராவும் கையுமாகவே ஒருவன் சுற்றிக்கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது. வேலையா..குடும்பமா ..சினிமாவா என்ற குழப்பத்தில் சிக்கித் தொடங்குகிறான்.  
அவன் கலந்து கொண்ட போட்டியின் மூலம் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பும், சினிமா ஆர்வலர்கள் பலரின் நட்பும் கிடைக்கிறது.அவர்கள் (அவளும்) அவனின் பட ஆர்வத்தை கிளறி விட மேலும் சில குறும்படங்களை இயக்கும் வேலையில் இறங்குகிறான்.ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் உருவ -வளர்ச்சி குறைபாடுள்ள ஒருவரின் நடவடிக்கைகளை படம் பிடிக்கிறான். இதனிடையில் மனைவியுடன் கடும் சண்டை ஏற்படுகிறது. மனைவி அவனை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது.சிதிலமடைந்த தன் நகரத்தைக் குறித்தும் ஒரு குறும்படத்தையும் இயக்குகிறான். நகர மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியாக உபயோகிக்கப்படாததும் அப்படத்தின் மூலம் தெரிய வருகிறது. படம் சிறப்பாக வந்திருப்பதைக் கண்டு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அதை ஒளிபரப்புகிறது. இந்நிலையில் அப்படத்தினால் அவன் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது. பிலிப்பும் பல உளைச்சல்களுக்கு ஆளாகி வெறுத்துப்போய் இனி படமே எடுக்கக்கூடாது என்ற முடிவோடு படம்பிடித்து வைத்திருந்த படச்சுருளை எடுத்து வெளியே எரிகிறான். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை எண்ணி மனம் நொந்தவாறு வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறான். புதிதாக வாங்கியிருந்த 16mm கேமராவைப் பார்க்கிறான். இனி அடுத்தவர்கள் கதையைச் சொன்னது போதும். தன் கதையை தானே சொல்வதென தீர்மானித்து கேமராவை தன்னை நோக்கி திருப்புவதுடன் படம் முடிவடைகிறது.


பிலிப் தன் மேலாளரிடம் விவாதிக்கும் போது திரைப்படங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறான்...படங்கள் உங்களது கொண்டாட்டங்களின் தம்பட்டமாக இருக்க வேண்டியதில்லை. அன்றாட நிகழ்வுகளை அவற்றில் இருந்து நான் உள்வாங்கியதை வெளிப்படுத்துவதே என்னளவில் சினிமா என்று விளக்கமளிக்கிறான். அதற்கு மேலாளர்..ஆட்கள் போவதையும் வருவதையும் பேசுவதையும் பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்து விடப் போகிறது..என்று கேட்கிறார். இதே கேள்வியை கீஸ்லோவ்ஸ்கியிடம் யாரவது கேட்டிருந்து ஒருவேளை இப்படத்தின் மூலம் அவர்களுக்கு பதிலளித்திருக்கிறாறோ என்னவோ. படத்தில் அவ்வளவு இயல்பு. மிக சுவாரசியமாகவே நகர்கிறது.


படம் எடுக்கப்பட்ட ஆண்டு-1979. எப்படி இப்படி ஒரு ஒளிப்பதிவு என்று சத்தியாம என்னால நம்ப முடியல(கீஸ்லோவ்ஸ்கியே வந்து துண்டப்போட்டு தாண்டுனாலும் நம்புவேணாங்கிறது சந்தேகமே). படம் முழுக்க பிலிபின் கேமரா வழியாகவே நாமும் அங்கு நடப்பதை பார்ப்பதைப் போன்ற உணர்வு நிச்சயம் வரும். எனக்கு மூன்று காட்சிகள் ரொம்ப பிடிச்சது. உருவ-குறைபாடுள்ளவரோடு அமர்ந்து பிலிப் -அவரைப்பற்றிய குறும்படத்தை பார்க்கும் காட்சி, மனைவி ரொம்ப கோபமா சண்டை போட்டுத் திரும்பும் போது பிலிபும் கோபத்துடன்-திட்டுவான்னு தான் நான் நெனச்சேன்-டக்குனு கைவிரல்கள் வழியா கேமரா கோணத்துடன் மனைவி போவதை பார்க்கும் காட்சி, கடைசியாக 16mm கேமராவை தன் பக்கம் திருப்பி அதை இயக்கம் போது (ஒரு சின்ன jerk முகத்தில் வரும்-class) அந்த 16mm கேமராவில் பிலிப்பின் எதிரொளி விழும் காட்சி. நடிப்பு - அவர் யாரென்றே தெரியவில்லை. ஆனா பார்வையாளர்களை பிலிப்பின் நடவடிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்னு ரொம்ப சுலபமாக நம்பவைத்து விடுகிறார். படத்தில் கம்யூனிஸ ஆட்சியின் அடக்குமுறைகளையும் சொல்லியிருக்காங்க. செட்டிங்க்ஸ் எவ்வித செயற்கைத்தனங்களும் இல்லாம இயல்பாயிருந்தது. நா பகிர்ந்திருக்குறது ஒரு 5% தான். கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு பல வித தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் போன மாதம் மதுரையில் வாங்கினேன். நேற்றுதான் பார்க்க முடிந்தது. பாஸ்கரன் சார் கடைல இருக்க வாய்ப்பிருக்கு. இல்லைன்னா இங்கிருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க.

பி.கு: 

Cinema is not the reflection of reality, but the reality of the reflection -- Jean Luc Godard. 

இது இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்று என்று நினைக்கிறேன்.இந்த quote குறித்து உங்கள் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து பின்னூட்டமிடவும்.
Facebookers..

11 comments :

  1. இதுக்கு கேமரா பஃப்ஃபுன்னு இன்னொரு பேரு இருக்கே,படம் வச்சிருக்கேன்,பாத்திட்டு வர்ரேன்,எழுதுனது உடனே படம் பாக்கவைக்கிறா மாதிரி இருக்கு.அருமையான அலசல்,அப்பா பதிவு எல்லாம் அன்னைக்கே படிச்சேன்,ரொம்ப நெகிழ்ச்சியாயிடுச்சி,அதுதான் ஃபார்மாலிட்டியா எதுவும் போடக்கூடாதுன்னு போயிட்டேன்.டேக்கேர்.

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=USA2E06eLj4
    முடிந்தால் இந்த எக்ஸ் ட்ரம்மர் பாருங்க,ஒளிப்பதிவு அமோகம்,ஒரு கதாபாத்திரத்தை மட்டும் எப்போதும் தலைகீழாகவே காட்டுறாங்க,ஏன்னா அவன் எப்போதும் உலகத்தை பார்க்கும் பார்வையே அப்படியாம்,சொல்றத வுட பாருங்க,இன்னும் நிறைய இருக்கு,ஆனா ரேட்டிங் படம்,கொழந்தைங்களுக்கு நஹி

    ReplyDelete
  3. இந்த படம் பார்த்துட்டு நாளானாலும் வந்து சொல்றேன்.

    ReplyDelete
  4. @கீதப்ப்ரியன்
    முழிச்சிட்டு தான் இருக்கேன்.//,கொழந்தைங்களுக்கு நஹி// அப்பனாலாம் எப்பதான் பார்க்கிறது?

    ReplyDelete
  5. Cinema is not the reflection of reality, but the reality of the reflection.

    இதுக்கு யாராவது புரிஞ்சிக்கிற மாதிரி விளக்கம் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.எனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு - ஆனா இல்ல. ஏற்கனவே பதிவுலயே கேட்டிருந்தும் யாரும் பதில் சொல்லாலதுனால கோவத்துடன் 9 மணி நேரம் பதிவுலகை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  6. ஆஹா சரவணன், சேரன் மாதிரி பழைய ஞாபகங்க்ளைத் தூண்டிவிட்டுட்டீங்களே!!

    என்னதான் தொழில்னுட்பம் வளர்ந்தாலும், Film கேமராவில் படம் பிடித்து அதன் Result-க்காகக் காத்திருக்கும் Thrill-ஐத் திருப்பிக் கொண்டுவரமுடியாது.

    ReplyDelete
  7. நானு இதைப்பத்தி நைட்டு பின்னூட்டுவேன் என்று சொல்லிக்கொள்கிறேன் ;-)

    ReplyDelete
  8. எனக்கு கூட கேமராவை வெச்சு படம் பிடிக்கணும்னு ஆசைதான். ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு இல்லை.

    ReplyDelete
  9. @சு.மோகன்
    // சேரன் மாதிரி//

    ஏன் இந்த கொல வெறி..

    மத்தபடி போன்லயே உங்க கருத்துக்களை அழகா பகிர்ந்துகிட்டீங்கலே..நன்றி

    ReplyDelete
  10. @கருந்தேள் கண்ணாயிரம்

    //நானு இதைப்பத்தி நைட்டு பின்னூட்டுவேன் என்று சொல்லிக்கொள்கிறேன்//

    நானும் நைட்டு உங்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆந்தை போல் ஆவலுடன் வழிமேல் விழி வைத்து முழிச்சிருப்பேன் என்று சொல்லிக் கொள்கிறேன் (நைட்னா 12 மணி வரைதான?)

    ReplyDelete
  11. @எஸ்.கே
    //எனக்கு கூட கேமராவை வெச்சு படம் பிடிக்கணும்னு ஆசைதான்//

    நண்பா..எல்லாருமே கேமராவை வெச்சுதான் படம்பிடிப்பாங்க(ஹி...ஹி..)

    நண்பா..உங்ககிட்ட கேமரா இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியில்லைனா இப்பலாம் பிலிம் கேமராக்கள் குறைந்த விலையிலேயே அருமையாக கிடைக்கிறது. என்ன கேட்ட டிஜிட்டல் கேமரா வாங்குவதை விட பிலிம் கேமரா பல மடங்கு சிறந்தது. நிறைய கத்துக்க முடியும். ஒரு நிறைவும் இருக்கும். ஆனா உலகம் முழுக்க இப்ப பிலிம் கேமரா உற்பத்தி பெருமளவு குறைந்து விட்டது என்று படித்த ஞாபகம்.

    ReplyDelete